வியாழன், 26 ஜனவரி, 2017

சுயமரியாதை இயக்கத்தின் பலன்



3.11.1929- குடிஅரசிலிருந்து...
ராமேஸ்வரம் கோயில் தேவஸ்தான சம்பந்தமான ஒரு உத்தியோக அறிக்கையில் சுயமரியாதை இயக்கம் தோன்றிய பிறகு, கோயில் வரும்படி குறைந்து வருகின்றது. ஆதலால் முன்போல இனிவரும்படி எதிர்பார்க்க முடியாது என்று காணப்பட்டிருக்கின்றது.
மற்றும் ரிஜிஸ்திரேஷன் இலாகா வருஷாந்திர ரிப்போர்ட் ஒன்றில் இப்போது ரிஜிஸ்டர் கல்யாணங்கள் அதிகப்பட்டு வருவதால், கல்யாணங்களை ரிஜிஸ்தர் செய்ய ஒவ்வொரு இடத்திலும், அதிகமான ரிஜிஸ்டிரார்களை நியமிக்க வேண்டும் என்று குறிக்கப்பட்டிருக்கின்றது. வைதிகக் குடுக்கைகளுக்கும், புராண அழுக்கு மூட்டைகளுக்கும், வருணாச்சிரம புராணங் களுக்கும் அடியோடு பொதுமேடைகள் இல்லாமல் செய்து விட்டது.
காஞ்சிபுரம் சங்கராச்சாரி மடத்தில் இருந்து வந்த பள்ளிக் கூடத்தில் தீண்டப்படாத வர்களைச் சேர்த்துக் கொள்ளாததற்காக கிராண்டு மறுக்கப்பட்டு பள்ளிக்கூடம் மூடப்பட்டுவிட்டது.
சென்னைப் பச்சையப்பன் காலேஜில் தீண்டப் படாதவர்களை சேர்த்துக் கொள்ளப்பட்டுவிட்டது. அருப்புக் கோட்டை நாடார் பள்ளிக் கூடத்திலும் சேர்த்துக் கொள்ளப்பட்டாய்விட்டது. திருப்பதி தேவஸ்தான சமஸ்கிருதப் பள்ளிக் கூடத்தில் பார்ப்பன ரல்லாதார்களை சேர்த்துக் கொள்ளவேண்டுமாய் சர்க்கார் உத்தரவு போட்டு அந்தப்படி சேர்த்துக் கொண்டும் ஆய்விட்டது.
பெண்களுக்கு மூன்றாவது பாரம்வரை சம்பளம் இல்லாமல் சொல்லிக் கொடுப்பதாக சர்க்கார் ஒப்புக் கொண்டு அந்தப்படி அமலிலும் வந்துவிட்டது.
பெண்களுக்குப் போதனை முறைப் பாடசாலைகள் முக்கிய தாலுகாக்கள் தோறும் ஏற்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டு வேலை நடந்து வருகின்றது.
விதவைகள் ஆசிரமம் வெளி ஜில்லாக்களில் ஏற்படுத்த யோசனைகளும் ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன. இவ்வள வும் அல்லாமல் முனிசிபாலிடிக்குச் சம்பந்தப்பட்ட பொதுக் கிணறுகளில் தீண்டப்படாதார் உட்பட எல்லோரும் தண்ணீர் எடுக்கலாம் என்றும் யாராவது ஆட்சேபித்தால் 50 ரூபாய் அபராதம் என்றும் சட்டம் செய்தாகிவிட்டது. ஜில்லா போர்டு, தாலுகா போர்டு சம்பந்தப்பட்ட கிணறுகளுக்கும் அதே மாதிரி சட்டம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது.
பதினாறு வயதிற்குட்பட்ட பெண்களுக்குக் கல்யாணம் செய்யக் கூடாது என்றும், பதினெட்டு வயதுக்கு மேற்படாத கல்யாணமில்லாத பெண்களை புணரக் கூடாது என்றும் சட்டம் செய்தாகிவிட்டது. விதவைகள் சொத்துரிமைக்கும், பெண்கள் சொத்துரிமைக்கும் சட்டங்கள் கொண்டு வரப்படப் போகின்றன.
சாமிபேரால் பெண்களுக்குப் பொட்டுக் கட்டி விபசாரி களாக்கப்பட்டுவருவதை நிறுத்தச் சட்டங்கள் செய்யப்பட்டு விட்டன.
பட்டணங்களில் விபசார விடுதிகளை ஒழிக்கச் சட்டம் செய்யப்படுகின்றது. இப்படியாக இன்னும் அநேக விஷயங்கள் இந்தியா முழுவதும் புற்றில் இருந்து ஈசல்கள் புறப்படுவதுபோல தினத்திற்குத்தினம் புதிதாக இந்த இரண்டு வருஷத்தில் ஏற்பட்டுக் கொண்டு வருகின்றதை கண்ணில் பார்த்துக் கொண்டு வருகின்றோம்.
இன்னமும் அடுத்த வருஷத் துவக்கத் தில், சில விஷயங்களுக்கு சத்தியாக்கிரகம் என்பவைகள் தாராளமாய் நடைபெறக் கூடிய நிலைமைக்கு நாடு வந்து விடும் என்கின்ற பலமான நம்பிக்கை நமக்குண்டு என்பதையும் தைரியமாய் வெளிப்படுத்துகின்றோம். அன்றியும் அதற்குள் பார்ப்பனர்கள் சாரதா சட்டத்தை மீறி செய்யப் போவதாய்க் கூறும் சத்தியாக்கிரகம் பார்ப்பனர்கள் இப்போது சொல்லுகின்ற படி நடக்குமானால், அதுவும் நமது சுயமரியாதை இயக்கத்தின் பலன் என்பதோடு அதை நம்மவர்கள் நடத்தப்போகும் சத்தியாக்கிரகத்திற்கு அனுகூலமாய் தேசத்தில் உணர்ச்சி உண்டாக்கவும் கூடும்.


திருப்பதி வெங்கடாசலபதியின் நன்றி கெட்ட தன்மை!

24.11.1929- குடிஅரசிலிருந்து...

திருப்பதி வெங்கடாசலபதி என்னும் கடவுளால் நமது நாட்டிற்கு உள்ள நஷ்டத்தைப் பற்றி சென்ற வாரம் தெரியப்படுத்தி இருந்தோம். அதாவது, மக்களுக்கு வருஷத்தில் சுமார் ஒரு கோடி ரூபாய் போல் செலவு ஆவதைப் பற்றியும் சுமார் 7,8 கோடி ரூபாய் சொத்து வீணாகிறது என்பது பற்றியும் எழுதி இருந்தோம்.
தேசத்துக்கு இவ்வளவு நாசத்தை உண்டாக்கி இவ்வளவு பூஜையும், உற்சவத்தையும், நகையையும், வாகனங் களையும், பூமியையும், கட்டிடங்களையும், ஜமீன்களையும் அனுபவித்துக் கொண்டி ருக்கும் கடவுள் சற்றாவது யோக்கியப் பொறுப்பின்றியும், நன்றி அறிதலின்றியும் நடந்து கொள்வதைக் கண்டால் அந்த மாதிரிக் கடவுளை நமது நாட்டில் வைத்திருப்பது முட்டாள்தனமும் பேடித்தனமும் ஆகும் என்பதே நமது அபிப்பிராயம்.
ஏனெனில், இவ்வளவு போக, போக்கியத்தையும் அனுபவித்துக் கொண்டு அந்தக் கடவுளின் வேலையை பார்த்து வருபவரும், கடவுளுக்கே தந்தை என்றும் மகன் என்றும் சொல்லத் தகுந்தவருமான மகந்து என்பவருக்குப் பைத்தியம் பிடிக்கச் செய்து, அவருடைய சிஷ்யர்களையும் ஜெயிலில் அடைக்கச் செய்து போலீசாரால் மகந்துவைப் பிடித்து சென்னை பைத்திய சிகிச் சைக்குப் பலாத்காரமாய் கொண்டு போகும்படி செய்திருக்கின்றதென்றால் வெங்கிடாசலபதி கடவுளின் நன்றிகெட்ட தன்மைக்கு வேறு சான்று என்ன வேண்டும்?
(தந்தை பெரியார் அவர்களது நகைச்சுவை உணர்வையும் நையாண்டி ஆற்றலையும் இக்கட்டுரை விளக்குகிறது - ஆசிரியர் கி. வீரமணி)
-விடுதலை,10.9.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக