ஞாயிறு, 29 ஜனவரி, 2017

நாயக்கர் சிறைபட்டார்


குடிஅரசு ஆசிரியர் ஈவெராமசாமி நாயக்கர் சிறை தண்டனைப் பெற்றிருக்கும் விவரத்தை மற்றொரு விடத்தில் காணலாம். சென்ற அக்டோபர் மாதம் குடிஅரசு பத்திரிகையில் வெளியான தலையங்கம் ராஜத்துரோகமுள்ளதென்ற குற்றத்திற்காக கோயமுத்தூர் ஜில்லா மாஜிஸ்திரேட் இவ் வழக்கை விசாரித்து நாயக்கருக்கு 6 மாதம் வெறுங்காவலும், ரூபாய் 300/- அபராதமும் விதித்திருக்கிறார்.
நாயக்கர் தமிழ்தேசத்திற்கு செய்துள்ள ஊழியத்தை ஒருவரும் மறந்திருக்கமுடியாது. பெரும் தன்வந்தராகவும், ஈரோடு முனிசிபல் சேர்மன், தாலுக்கா, ஜில்லா போர்டுமெம்பர் ஆகிய பதவிகளை வகித்து உல்லாசமாயிருந்த ராமசாமி நாயக்கர் 1915ஆம் வருடம் முதற்கொண்டு, தேசீய இயக்கத்தில் ஈடுபட்டார்.
கோயமுத்தூர் ஜில்லா மகாநாட்டிற்கும், சென்னை மாகாணச் சங்க மகாநாட்டிற்கும் 1915, 1917 ஆகிய வருடங்களில் வரவேற்புத் தலைவராயிருந்து நாயக்கர் செய்த சேவைகளை யாரும் அறிவார்கள், பிறகு காங்கிரசில் சேர்ந்து ஒத்துழையாமைப் போராட்டத்தில் முன் அணியில் நின்று அவர் தொண்டாற்றி யதை நாம் எடுத்துக் காட்ட வேண்டியதே இல்லை.
1924ஆம் ஆண்டில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு தலைவராகவும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் மெம்பராகவும் இருந்து நாயக்கர் நல்ல வேலைகளைச் செய்துள்ளார். தீண்டாமையைத் தொலைக்க, வைக்கத்தில் சக்தியாகிரகம் செய்து சிறைப்பட்ட பாக்கியம் பெற்ற தமிழ்த் தலைவர் நாயக்கர் ஒருவரே யாவர்.
அரசியல் போராட்டத்தில் அவர் சிறைப்பட்டு கோயமுத்தூர் சிறையில் 1922-ஆம் ஆண்டில் தவம் செய்தார். பிறகு காங்கிரசிலிருந்து விலகி வரதராஜலுநாயுடு உள்பட எல்லா தேசியவாதிகளையும் எதிர்த்து பிரச்சாரம் செய்ததும், சுயமரியாதை இயக்கத்தை அவர் தோற்றுவித்ததும் யாவருக்கும் தெரிந்த விஷயமே யாகும். ஐரோப்பாவில் யாத்திரை செய்து ருஷியாவை தரிசித்ததின் பயனாக பொதுஉடமைக் கொள்கையில் இன்று வெகு தீவிரமாக இறங்கியிருக்கின்றார்.
அவருக்கும், நமக்கும் மாறுபட்ட கருத்துகள் என்ன விருப்பினும், நமக்கு நியாயமென்று பட்ட கருத்துகளை அஞ்சாது வெளியிடுவதில் நாயக்கர் முத்ல் ஸ்தானம் பெற்றவரென்பதை ஒருவரும் மறுக்க முடியாது. சமய-சமூக-அரசியல் துறைகளில் நாயக்கர் செய்துள்ள தியாகமும், ஊழியமும் அவர் பட்டுள்ள கஷ்டங்களும் இத்தேசத்தினர் ஒரு நாளும் மறக்க முடியாதென்பதே நமது கருத்தாகும்.
பலவித ரோகங்களுக்குட்பட்டு, வயது சென்ற இக்காலத்தில் அவரை சிறைக்கனுப்பியது சர்க்காருக்கு அழகல்லவென்றே கூறலாம். கண்மூடித்தனமான பழைய ஆட்சிமுறைகள் முறிந்து, புதிய அரசியல் அமையப்போகும் இச்சந்திகாலத்தில், அரசாங்கத்தை தூஷித்ததாக ஒருவர் மீது குற்றம் சாட்டுவதும், அதற்காக தண்டிப்பதும் சிறுபிள்ளைத்தனமேயாகும்.
காலதேச வர்த்தமானத்தை அறிந்து நடந்துகொள்ளும் நல்லறிவு சர்க்காருக்கு என்றுதான் உண்டாகுமோ தெரியவில்லை, ராமசாமி நாயக்கரையும், அவருக்குத் துணையாகவிருக்கும், அவருடைய சகோதரி கண்ணம்மாள் அவர்களையும் மனப்பூர்வமாக வாழ்த்துகிறோம்.
(தமிழ்நாடு தலையங்கம், ஜனவரி 1934)
-விடுதலை,11.7.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக