புதன், 4 செப்டம்பர், 2019

பார்ப்பனீயத்தை ஒழிப்பதே நமது லட்சியம் காங்கிரஸ் மத ஸ்தாபனமான கதை

தோழர் அண்ணா துரை விளக்கம்




(வாசக நேயர்களே,


ஊன்றிப் படித்துப் பயன்பெற வேண்டிய முக்கியப் பகுதி இது.


இதுபற்றி தங்களது கருத்தினை சுருக்கமாக எழுதி அனுப்புமாறு வேண்டுகிறோம்.


திராவிடர் இயக்கம் - 80 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்நாடு அரசியல் களத்தின் முக்கிய நிகழ்வுகள் - வரலாறு பற்றிய காலக்கண்ணாடியாக - திராவிடத்தின் தேவைக்கான நுண்ணாடியாக இது அமையும் ஒன்று. இதற்கான தேவை - பயன் - நுகர்வு பற்றிய உங்கள் கருத்துக்கள் பெரிதும் வரவேற்கப்படுகிறது. - ஆசிரியர்)


 

நாமக்கல்லில் 12.12.1937ஆம் தேதி நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டின் தலைவர் சென்னை தோழர் சி.என்.அண்ணாத்துரை  அவர்களின் தலைமைப் பிரசங்கம் வருமாறு:-

அன்புள்ள தோழர்களே!

உங்கள் தாலுகா மாநாட்டில் தலைமை வகிக்கும் கவுரவத்தை எனக்கு அளித்ததற்காக நான் மனமார்ந்த வந்தனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்தடுத் துக் கூட்டப்படும் நமது மகாநாடுகளின் ஜெயபேரிகை, தோழர்களிடையே பெருத்த உற்சாகத்தை உண்டாக்கி யிருக்கிறது. இலட்சியங்களை சடுதியில் அடைவதென் பது எந்த இயக்கத்திலும் சுலபமான காரியமல்ல. அதி லும் நமது இயக்க இலட்சியங்களோவெனின், பல ஆண்டுகள் போர் புரியினும் மேலும் மேலும் போர்க் களமே நமது கண்முன் தெரியும்படியான நிலையைத் தரவல்லது. தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்கு முன்பு ஆரம்பித்து வெற்றியோ தோல்வியோ அடைந்து, வெற்றி கண்டால் ஆனந்தத் தாண்டவமாடுவதும், தோல்வி நேரிடின் கொட்டாவி விட்டுத் தூங்கப் போவ தும், அரசியல் கட்சியின் இலட்சணமாக இருக்கிறது. நமது இயக்கமோ அரசியலுடன் நேரடியான சம்பந்தம் வைத்துக் கொள்ளாது சமூக மாற்றத்தையே குறியாகக் கொண்டது. சமூகத்தின் நிலையை மாற்றக்கூடிய நிகழ்ச்சிகள் எது நேரிடினும், அது எக்காரணம் பற்றி நடப்பினும் அதனைச் சமாளிக்க வேண்டியவர்கள் நாம். மற்றைய எந்த இயக்கமும் கொண்டிராத லட்சி யத்தை நாம் கொண்டுள்ளோம்.

இரத்த ஆறுகள் ஓடின!


நாம் சமுதாயத்திலே, சமத்துவம், சகோதரத்துவம், விடுதலை நிலவ வேண்டுமென ஆசைப்படுகிறோம். பல நூற்றாண்டுகளாக நம் நாட்டில் இந்நிலை இல்லை என்பதைச் சரித்திரம் கூறுகிறது. மக்கள், சமத்துவம், சகோதரத்துவம், விடுதலை பெறுவதென்பது சுலபத் திலே தீர்த்து விடக்கூடியதன்று. இந்த இலட்சியங்களின் சாயல்களைப் பெறுவதற்கு, அய்ரோப்பிய நாடுகளில், புரட்சிகள் நடந்து இரத்த ஆறுகள் ஓடியிருக்கின்றன. மக்களிடை சமத்துவம் நிலவுவதென்றால் அதைத் தடைப்படுத்தும் கொள்கைகள் அழிக்கப்பட வேண் டும்; அந்தக் கொள்கைகளைக் கொண்ட இயக்கங் களுடன் போரிடத்தான் வேண்டும். அந்தப் போரின் அவசியத்தை மக்களிடையே எடுத்துக் கூறி, அதில் ஈடுபடக்கூடிய அளவு பக்குவம், பலம் இவைகளைப் பெறும்படியாக மக்கள் தயார் செய்யப்பட வேண்டும். சுருங்கக் கூறின், அப்படை அணிவகுப்பு நமது முதற் பணி. அதில் நாம் ஓரளவிற்கு வெற்றி பெற்றுவிட்டோம். நாம் கண்ட வெற்றிக்குப் பிறகு, அது நமக்கு சர்வ சாதாரணமாகத் தோன்றக்கூடும். அலட்சியமாகவும் அதை நோக்கக் கூடும். ஆனால் புராதனத்தையே புனிதமெனக் கருதும் இந்நாட்டிலே புதிய அறிவுப்படை திரட்டப்படுவதென்றால் அது, ஒரு ஒப்பற்ற வெற்றி என்பதை யார் மறுக்க முடியும்?

சுயமரியாதை இயக்கம் தோன்று முன்பு:


நமது சு,ம. இயக்கம் தோன்று முன்பு, நம் நாட்டிலே எத்தனையோ இயக்கங்கள், கிளர்ச்சிகள், கட்சிகள் இருந்து வந்தன, அவைகளிற் பல மாண்டன. சில உரு மாறி விட்டன. மற்றும் சில நாதியற்றுப் போய்விட்டன.

நம் நாட்டில் தோன்றிய கிளர்ச்சிகளிலே சில அரசி யல் போக்குடையன. வேறு பல மத, சமுதாய சீர்திருத் தக் குறி கொண்டவையாகும். ஆனால் எந்த இயக்கமும் அரசியலது அன்றிச் சமுதாயத் துறையினது ஆயினும் அவைகளிடையே ஒரு பொது நோக்குக் காணக் கிடக்கும். அது என்னெனின், பழைமையில் ஆர்வம். அரசியலிலே பெரும் பங்கெடுத்துக் கொண்ட பெசண்ட் இயக்கம், புராதன இந்தியச் சிறப்பையும், புராதன வாழ்க்கையின் மேன்மையுமே போதித்து வந்தது. புராதன மேன்மை, எனின் அது ஆரிய மேன் மை என்பதில் அய்யமில்லை. ஆரிய மேன்மையின் உச்சி, வர்ணாச்சிரமம், கொள்கை இதுவாயின், இந்த இயக்கத் தலைவியாரோ, தேவியின் அம்சம், லோக மாதா என்று கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதனுடைய வேலைத் திட்டத்திலும் பெரிதும் மதச்சடங்குகளே நிலவின. கடைசியில் அரசியல் காரியம் ஓய்ந்து பெசண்ட்டின் இயக்கம் கதம்ப மத இயக்கமாகவே மாறிவிட்டது. அதே நிலைக்குத்தான் காங்கிரசும் வந்துகொண்டிருக்கிறது. அதனைப் பிறகு விளக்கமாகக் கூறுகிறேன். சமுதாயச் சீர்திருத்தங்களுக் கெனத் தோன்றிய சமாஜங்கள், கூடங்கள் யாவும் பெரிதும் மதப்பற்றையே தலையாகக் கொண்டிருந்தன. மதப் போர்வை இருந்தால், மக்கள் தாராளமாகத் தங்கு தடையின்றி அவ்வியக்கங்களில் சேரவும் அவைக ளிலே மட்டற்ற நம்பிக்கை வைக்கவும் ஏதுவாயிற்று. ஆனால் பரந்து விளங்கிய அவ்வியக்கங்கள், சமுதாயத் திலே, பிரமாதமான மாறுதலைச் செய்து காட்டவில்லை. ஏனெனில், பெரிய மாறுதல்களிலே மக்களுக்கு ஆர் வம் எழும். வகையிலே அறிவுச்சுடர் புகவில்லை. மதத் திலே லயித்துள்ள எந்த இயக்கத்தாலும், மாற்றத்தை, மனப் புரட்சியை உண்டாக்க முடியாது. புதிய தத்து வார்த்தங்கள், புதிய குருக்கள், விருத்தியுரைகள் ஏற் படலாம். ஏதாவதொரு மதத்திற்கு சற்றே முரணான திட்டம் ஏற்படினும் அதற்காக, ஏதேனும் ஒரு பழம் ஏட்டை எடுத்து, புதிய அர்த்தம் சொல்ல வேண்டி வந்ததே தவிர சமூகக் கோளாறுகளை ஒழிக்க, முதலில் கோளாறுகளின் காரணங்களைப் பட்டவர்த்தனமாக எடுத்துக் கூறும் விதத்திலே அந்த இயக்கங்கள் வரவில்லை.

முதல்தரமான மனப்புரட்சி:


இந்நிலையில்தான், நமது இயக்கம் தோன்றிச் சமூகக் கோளாறுகள் எழும்பிய விதத்தை வலியுறுத்தி, மதத்தின் பேரால் மக்கள் வஞ்சிக்கப்படுவதையும், புராணத்தின் ஆதரவால் மூடச் சடங்குகள், பழக்க வழக்கங்கள் மக்களின் உடல், பொருள் ஆவியை உறுஞ்சுவதையும், வருணாச்சிரமக் கொடுங்கோன்மை உண்டானதையும், இவைகளின் காரணமாக ஆரிய வகுப்பின ராகிய பிராமணர் எனும் சமூகம் மதத்தின் தரகர்களாகவும் கல்வியிலே ஞானாசிரியர்களாகவும் சமுதாயத்திலே உயர்ந்தோராகவும் அரசியலிலே, ஆக் கவும் அழிக்கவும், வல்லவர்களாகவும் இருப்பதையும் பிராமணீய ஒழிப்புதான், சமுதாய சமத்துவத்திற்கு முதற்படி என்பதையும், சமூகம் புதுப்பிக்கப்படவேண் டுமானால், இந்தப் பழமை அழிக்கப்பட வேண்டுமென் பதையும் அச்சம் தயை தாட்சணியமின்றி எடுத்துக் காட்டிற்று. இதுவே தமிழ்நாட்டில் ஏற்பட்ட முதல் மனப்புரட்சி.

பிராமணீயத்தை விரட்டவே


சமுதாயத் துறையிலே, பிராமணீயம் செய்து வைத் துள்ள கேடுகள் அரசியலிலும் ஏற்பட்டன. இதனைக் கண்கூடாக, காங்கிரசிலே கண்ட பிறகே, நமது இயக்கத் தலைவர் சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்தார்.

அரசியலிலே வெள்ளையன் வெடிகுண்டுகள் வைத்துக் கொண்டு நம்மை அடிமைப்படுத்தினான், சமுதாயத்திலே வேதங்களைக் காட்டி, விதிகளைக் கூறி, பிராமணர் மற்றையோரை அடிமை கொண்டுள் ளனர், இத்தகைய அடிமைத் தனத்திலுள்ளவர் தொகையே இங்கு அதிகம். ஆகவே இத்தகையோர் அன்னியரை விரட்ட விடுதலைப் போர் தொடுத்துப் பயனில்லை என்பதைத் தோழர் ஈ. வெ. ரா. எடுத்துக் காட்டினார். வெளிநாட்டு விரோதியை விரட்டி அடிக் கும் சக்தி நமக்கு வேண்டுமானால், இங்கு அடிமைப் படுத்துவோர் இருக்கலாகாது என்றார். வெள்ளையனை ஒட்டிச் சுய ஆட்சி பெற வேண்டுமென்ற ஆவலில் அதிக மக்கள் பங்கு எடுத்துக்கொள்ள வேண்டுமானால் அதே விடுதலை ஆர்வம் இங்கு முதலில் எழ வேண்டும் என்றார். இங்கு அக்ரகாரத்தையும் உள்ளடக்கிய ஊர்களிலே வசித்துக்கொண்டு, இங்கு வெளியே செல்ல வேண்டுமானால், பூனைக்கும் பல்லிக்கும் பயந்துகொண்டு, இங்கு விதவையை மணந்து கொண்டால் ஆண்டவன் ஆணையை மீறியதாகும் என்ற மனோபாவத்தை வைத்துக்கொண்டு, எங்கள் ஊரை ஆட்டிவைக்கும் நீங்கள் யார்? போங்கள் இந்த நாட்டை விட்டு என்று நாம் எங்ஙனம் வெள்ளையனைச் சொல்ல முடியும்? சொன்னாலும் அவன் எங்ஙனம் போவான்? பழைய ஏடுகளுக்கே பல நூற்றாண்டுகளாக அடிமைப் படுத்தப்பட்ட நம்மை, சமுதாயத்தில் சிறுபான்மையினர், ஆயுத பலமின்றி, "ஆன்ம பலத்தாலேயே ஆயிரக்கணக்கான வருஷங் களாக அடிமைப்படுத்திய நம்மை, பிறப்பினாலேயே ஒருவன் நமக்கு மேலானவன் - பூசுரன் - என்ற மனோபாவத்தை வளர்த்துக்கொண்ட நம்மை, வெள் ளைக்காரனின் பீரங்கிப் படை அடிமைப்படுத்தியதிலே ஆச்சரியமொன்றுமில்லை. ஆகவே, அடிமை மனப் பான்மையை வளர்க்கும் எதுவாயினும் அதை எதிர்த் துப் போரிட வேண்டிய அவசியம் நமக்கு ஏற்படுகிறது. அக்காரணம் பற்றியே நாம் காங்கிரசைக் கண்டித்து வந்தோம். மூடநம்பிக்கை விடுதலைக்குப் பாடுபடும் நாம் தேச விடுதலையில் அக்கறை கொள்ளாதிருப் போமா? நமது இயக்கத் தலைவரும் அன்பர்கள் பல ரும், காங்கிரஸ் ஏற்படுத்திய பல அக்கினிப் பரீட்சை யிலும் தேறியவர்கள்தான். தாமும் மற்றையோரும் உழைப்பினும் கொள்கையின் குற்றத்தினால் நாட்டா ருக்கு ஒருவித பலனும் ஏற்படாது பாழாய்ப் போவதை உணர்ந்தனர்.

பகுத்தறிவே ஆயுதம்


ஆகவே, நாம் பகுத்தறிவையே ஆயுதமாகக் கொண்டு, இந்திய. மத ஏகாதிபத்தியத்துடன் கடின மான போர் துவக்கினோம். நமது எதிரிகள், புராணங் களையும் பழைய பழக்க வழக்கங்களையும் ஆயுதங் களாகக் கொண்டு நம்மைத் தாக்கினர். நாம் மக்கள் சமூக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது என்றோம். அவர்கள் உயர்வு தாழ்வு, மத சாஸ்திர புராண இதிகாச ஆதாரம் பெற்று நெடுநாட்களாக இந்த நாட்டிலே நிலவிச் சக்கரவர்த்தி களாலும் ஒப்புக் கொள்ளப்பட்டுக் காப்பாற்றப்பட்டு வந்தது என்றனர். அறிவு, ஆராய்ச்சி, அனுபவம் இவை களையே உறுதுணையாகக் கொண்டு சமூக வாழ்வை நடத்த வேண்டுமென்று நாம் கூறினோம். - மனு சொன்னபடி நடப்பதே மதக் கட்டளை என்றனர் அவர் கள். நாம் அடிமை மனப்பான்மையை வளர்க்கும் புராண ஆபாசங்களையும், வகுப்பு எதேச்சதிகாரத்தை வளர்க்கும் சாஸ்திரக் கொடுமையையும் விளக்கினோம். அந்தப் பணியில் தீவிரமாக ஈடுபட்டதில், மக்கள் மனதில் அதிலும் இளைஞர்கள் மனதில் நமது இயக்கம் நன்கு பதிந்துவிட்டது. எவ்வளவு தீவிரமான கொள் கையாக இருப்பினும், அதை வரவேற்க ஆரம்பித்தது வாலிப -உலகம். சமதர்மத்தைப் போதித்தோம்; வாலிப உலகம் பூரிப்படைந்தது. இந்நிலையிலே, தமிழ்நாட்டு அரசியல் உலகிலே மாற்றங்கள் ஏற்படச் செய்தது.

- விடுதலை, 13.12.1937

- விடுதலை நாளேடு, 30.8.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக