வெள்ளி, 6 செப்டம்பர், 2019

நகைச்சுவை அரசு கிருஷ்ணன் ஒரு புரட்சியாளர்



தாய்மார்களே! தோழர்களே! நகைச் சுவை அரசு கிருஷ்ணன் அவர்களே! இன்று நடந்த இந்த கிந்தனார் சரித்திரக் கதையைக் கண்டு களித்தீர்கள். உங்களது மகிழ்ச்சியை சிரிப்பை அடிக்கடி காட்டி னீர்கள். நமது நகைச்சுவை அரசு கிருஷ் ணன் அவர்கள் ஒரு மேதாவி, அதோடு அவர் ஒரு வள்ளல் என்றும் சொல்ல வேண்டும். அவர் தன்னால் கூடிய அளவுக்குமேல் பொதுநலத்துக்கு உதவி வருகிறார். இம்மாதிரியான பொதுநலத் துக்கு நடத்தும் கச்சேரிகளுக்கு அவர் வழக்கமாக வாங்கும் அளவைவிட மிகக் குறைந்த அளவுக்குச் சென்று கதை நடத்திக் கொடுக்கிறார். அவர் சமீபத்தில் சென் னையில் நடந்த சந்திரோதய நாடகத்தில் பேசும்போது, நான் ஏராளமாக பணம் சம்பாதித்தேன். ஆனால் அதில் பெரும் பாகம் பொது நலத்துக்கு உதவி விட்டேன் அதாவது பல லட்ச ரூபாய் சம்பாதித்தேன். இப்போது அரை லட்ச ரூபாய் சுமார் தான் என்னிடம் இருக்கிறது. மற்றவை பொது நலத்துக்கு உதவி வந்தேன் என்று சொன்னார். அந்த முறையிலேயே நமது கழகத்துக்கும் உதவி இருக்கிறார்.

இவர் தனது தொழிலில் ஒரு மேதாவி என்றாலும், அதை நடத்தும் முறையில் ஒரு பெரிய புரட்சியாளர் என்றே சொல்ல வேண்டும். அதுவும் லெனின் செய்தது போன்ற புரட்சி என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் நாடகத்துறையிலும், கதைத் துறையிலும், இசைத்துறையிலும் ஒரு பெரிய புரட்சி ஏற்படுத்தி இருக்கிறார்.

அதாவது, இந்த முத்துறையிலும் இதுவரை ஈடுபட்டிருந்த புலவர்கள், நிபு ணர்கள் பெரும்பாலோர் தங்கள் தொழிலை மக்களுக்கு முட்டாள்தனமும் மூடநம்பிக் கையும் ஏற்படுவதற்கு அனுகூலமாக நடத்தி வயிறு வளர்த்தும் பணம் திரட்டியும், பெருமை பெற்றும் நாட்டுக்கும் திராவிட மக்களுக்கும் கேடு உண்டாக்கும் துரோகி களாக நடந்து வருகிறார்கள். மக்களுக்குள் சிலருக்காவது சுயமரியாதை உணர்ச்சி இல்லாததால் இப்படிப்பட்டவர்களின் ஈன வாழ்வு இன்னமும் நம் நாட்டில் நடந்து வருகிறது. சமிபத்தில் சென்னையில் நடந்த சந்திரோதயத்தில் தலைமை வகித்த போது இது விஷயத்தில் எனக்குள்ள மனவேத னையை காட்டிக் கொண்டேன். அதை சிலர் நான் பல புலவர்கள்மீது கோபப்பட்டுக் குறை கூறினதாகப் பொருள் கொண் டார்கள். அப்படி அவர்கள் கருதியதற்கு வருந்துகிறேன். கோபமென்று கருதினாலும் சரி என்றே வைத்துக் கொள்வோம். அக் கோபம் சரியானதா? தப்பானதா? சரி யென்று பட்டால் இவர்கள் அதைத் தணிக்க வேண்டாமா? தப்பு என்று பட்டால் முக் கலையும் அந்த வழியில் செல்லுவது தர்மமா?

ஆனால், நம் அருமை கிருஷ்ணன் அவர்கள் அக்கோபத்துக்கோ வேதனைக் கோ இடம் கொடாமல் தனது தொழிலை வெகு தூரத்திற்கு மாற்றி, புரட்சி செய்து மற்ற மக்களுக்கு வழிகாட்டியாகவும் ஆகிவிட்டார். முக்கலை திருத்தச் சரித்திரத் தில் கிருஷ்ணன் பெயர் பொன்னினால் பொறிக்கப்படும். நந்தன் கதையும், கிந்தன் கதையும் நடந்திராத பொய்க்கதை என் பதில் உங்களில் பகுத்தறிவாளிகளுக்கு சிறிதும் சந்தேகமே இருக்காது. ஆனால் நந்தன் கதை, நாடகம், சினிமா நடத்து கிறவர்கள் பொய்க் கதை நடத்துவதோடு மக்களுக்கு முட்டாள்தனமும், மானமற்ற தனமும், மூடநம்பிக்கையும் ஏற்படும் படியாக நடத்தி தங்கள் சுயநல வயிறு வளர்க்கிறார்கள். நம் கிருஷ்ணன் அவர்கள் கிந்தன் கதை நடத்துவதில் கதை பொய் யானாலும் அதை மக்களுக்கு மானமும், அறிவும், முற்போக்குணர்ச்சியும் ஏற்படும் படி செய்து, அதன் வருவாயில் பெரும் பாகம் பொது நலத்துக்கு உதவுகிறார்.

ஆகவே, புலவர்களால் அறிஞர்களால், மேதாவிகளால் நாட்டுக்கு கேடு பயப்பதற்கு நந்தன் கதைக்காரர்கள் பயன்படுவதும், நாட்டுக்கு மேன்மையும், அறிவும், மானமும் உண்டாவதற்கு கிந்தன் கதைக்காரர் பயன்படுவதும் பார்த்தே நாடு கேடு அடை வதற்கு புராணங்களும், புலவர்களும் காரணம் என்பதையும், நாடு முன்னேற்ற மடைவதற்கு, கிருஷ்ணன் போன்ற அறிஞர்களும், பகுத்தறிவு புலவர்களும் காரணம் என்பதையும் நீங்கள் அறிந்து கொள்ளலாம். இவ்வளவு பெரிய புரட்சி கரமான காரியம் செய்யவும், அதில் வெற்றி பெறவும் நம் கிருஷ்ணனுக்கு அபார சக்தி ஒன்றும் இல்லை. ஆனால் அவரிடம் ஏதாவது அபார சக்தி இருக்கிறதென்றால் அவருக்கு தன்னலம் இல்லை; பண ஆசைப் பிசாசுக்கு அவர் மனம் அடிமைப் படவில்லை. மற்றவர்கள் என்ன சொல்லு வார்கள் என்ற கவலை அவருக்கு இல்லை. இதுபோலவே எவனொருவன் தன்னல மில்லாமல், பயமில்லாமல் தொண்டாற்ற முயலுகிறானோ அவன் வெற்றி பெறுவான் என்பதோடு, ஒரு புரட்சி வீரனுமாவான் என்பதற்கு நமது கிருஷ்ணன் அவர்களே எடுத்துக்காட்டாகும். அவருக்கு திராவிட கழகத்தின் சார்பாக எனது மனமார்ந்த நன்றியும் திராவிட மக்கள் சார்பாக எனது பாராட்டுதலும் வணக்கமும் உரியதாகுக.

இன்று இங்கு நடத்திய இந்த காலட் சேபத்தை பாராட்டுவதன் அறிகுறியாக  கிருஷ்ணனுக்கு பூமாலை சூட்டுவதற்கு பதிலாக இந்தப் பொன்மாலையைச் சூட்டு இந்தப் பொன் பதக்கத்தையும் திராவிடர் கழகம் சார்பாக அவருக்கு அணிகிறேன்.

(03.09.1944 அன்று கோவை ஜில்லா திராவிடர் கழகத்துக்கு ஈரோட்டில் ஒரு கட்டடம் ஏற்படுவதற்கு நிதி திரட்ட நகைச்சுவை அரசு என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களது கிந்தனார் காலட்சேபம் கச்சேரி ஈரோட்டில் நடைபெற்றது. அதில் தலைமை ஏற்று பெரியார் ஈ.வெ.ராமசாமி ஆற்றிய சொற்பொழிவு)

குடிஅரசு -  09.09.1944

- விடுதலை ஞாயிறு மலர், 31 .8 .19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக