வெள்ளி, 6 செப்டம்பர், 2019

கலகம் பறந்தது... கழகம் பிறந்தது




(சேலத்தில் 1944இல் நடை பெற்ற நீதிக் கட்சி மாநாடு இயக்க வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது. நீதிக்கட்சி திராவிடர் கழகம் என்ற பெயர் மாற்றம் மட்டுமல்ல; பதவிப் பக்கம் தலைவைத்துப் படுக்கக் கூடாது என்ற பதவிப் பறிமுதல் தீர்மானமும் அம்மாநாட்டில் தான் நிறைவேற்றப்பட்டது. தந்தை பெரியார் தலைமை யால்தான் இந்த மாற்றங்கள் ஏற்பட்டன என்று கூறி, தந்தை பெரியாரை தலைமையிடத்தி லிருந்து வீழ்த்த வேண்டும் என்று பதவிப் பிரியர் களும் சுயநலவாதிகளும் செய்த சூழ்ச்சிகள் - அவற்றைச் சுக்கல் சுக்கலாகத் தந்தை பெரியார் நொறுக்கி எறிந்து வீரநடை போட்டு வந்த மாட்சி களைச் சுருக்கமாக இக்கட்டுரை விளக்கும்.)



இலட்சிய நாட்டம் என்பது தந்தை பெரியாரின் இரத்த ஓட்டம். காங்கிரஸ் வாதியாக, கதர் மூட் டைத் தூக்கியாக அவர் இருந்திருக்கலாம். அதே நேரத்தில் நீதிக் கட்சி ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட நல்ல திட்டங்களை நெஞ்சில் கறையின்றி கைதட்டி ஆதரித்தவரும் அவரே. 1924 டிசம்பரில் திருவண்ணாமலையில் தமிழ் நாடு 30ஆவது காங்கிரஸ் மாநாடு. மாநாட் டின் தலைவர் தந்தை பெரியார்தான். அம் மாநாட்டில் அரிமா சிலிர்த்தது - சிங்கநாதம் எழுப்பியது.

‘’தென்னிந்தியாவில் ஹிந்து - முஸ்லீம் ஒற்றுமை குலையாதிருப்பினும் ஹிந்துக்க ளுக்குள் ஒற்றுமை குறைந்து வருவது உண்மை. முதலாவது பிராமணர்- பிராமண ரல்லாதார் நிலையைச் சிறிது சிந்திப்போம். ஒரு மதத்தைச் சேர்ந்த இவர்களுக்குள் வேற்றுமையுணர்வு தோன்றுவானேன்? வேற்றுமைக்கு அடிப்படையான காரணங் கள் இருத்தல் வேண்டும். அக்காரணங்களை உணர்ந்து ஒற்றுமைக்கு உழைக்க தேச பக்தர்கள் முயல வேண்டும்.

காங்கிரஸ்வாதியாக இருந்த டாக்டர். நாயர் திடீரென ஒரு கட்சியைத் தோன்று விக்கக் காரணங்களாய் நின்றவைகள் எவைகளோ அவைகள் இன்னும் நிற்கின் றனவா இல்லையா? என்பதை நேயர்கள் கவனிப்பார்களாக. அக்காரணங்கள் அழிந்து விட்டதாக எனக்குத் தோன்ற வில்லை. அவைகள் தமிழ்நாட்டில் ஊர்ந்து கொண்டிருக்கும்வரை தமிழ் நாட்டில் பிராமணர் பிராமணரல்லாதார் ஒற்றுமை நிலவுவதலரிதே. தேச சேவையில் ஈடு பட்டுத் தமிழ்நாட்டுக் காங்கிரசில் காரியதரி சியாகவும் தலைவராகவும் இருந்து பெற்ற அனுபவத்தைக் கொண்டே நான் இங்கே பேசுகிறேன்’’. (‘நவசக்தி’ 21-11-1924).

காங்கிரஸ் மாநாட்டுக்குத் தலைமை தாங்கி கதர்ச் சட்டையும், கதர் வேட்டியும் அணிந்து கொண்டே தென்னிந்திய நல வுரிமைச் சங்கமாகிய நீதிக்கட்சி எடுத்து வைக்கும் பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் பிரச்சினையில் இருக்கும் நியாயத்தை நெடுங்குரலில் நிமிர்ந்து சொல்லுகிறார் என்றால் - அந்த நெஞ்சுக்கு நீதியின் பெயர்தான் பெரியார்! - கொள்கை உரத் துக்குப் பெயர்தான் பெரியார்!

சுயமரியாதை இயக்கத்தை நடத்திக் கொண்டிருந்த நிலையிலே 1935இல் ஜஸ்டிஸ் கட்சிக்கு அய்யா அவர்களால் அனுப்பப்பட்ட வேலைத்திட்டம், அக்கட்சி யால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. நீதிக்கட்சி யின் நிகரற்ற வைரத்தூணாம் பொப்பிலி அரசரின் பங்கு இதில் மிக முக்கியமாக இருந்தது.

ஜரிகைத் தொப்பிகளாய் அங்கவஸ்திர மடி கலையாத அரசியல்வாதிகளின் கூடார மாக இருந்த ஜஸ்டிஸ் கட்சிக்குள் புரட்சிப் பொறிக்கு அடிஎடுத்துக் கொடுத்தாகி விட்டது.

இந்தி எதிர்ப்புப் போராடத் தீயில் குதித்து சுரணையற்றுக் கிடந்த திராவிட மக்களிடத்திலே சுயமரியாதை நெருப்பைக் கிளப்பி சூடுபறக்கச் செய்தவரும் அவரே!

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் கார ணமாக சிறைக் கோட்டம் சிரித்த முகத் துடன் அந்த சிறைக்கஞ்சாச் சிங்கத்தை வரவேற்றது.

சிறையிலோ பெரியார்! நீதிக்கட்சியின் 14ஆவது மாநில மாநாடு சென்னையில் கூடிற்று. அதுவரை பெரியார், நீதிக்கட்சி யின் சாதாரண உறுப்பினர்கூட அல்ல. ஆனாலும் அந்த மாநாடு (29-12-1938) சிறைப் பறவைப் பெரியாரை தன் கட்சியின் தலைவராத் தேர்ந்தெடுத்தது.

தலைமைக்காகவும் பதவிப் பெரு மைகளுக்காகவும் ‘எதையும் இழக்கத் தயாராக இருக்கும் இவ்வுலகில் தந்தை பெரியார் தப்பிப் பிறந்த விதிவிலக்கான மாமனிதர். பதவிகளைப் பவனிவரும் பல்லக்காகக் கருதுபவர் அல்ல பெரியார் - மாறாகப் பொறுப்புச்சுமை என்று கருதும் பொறுப்புமிக்கவர் அவர்

அதனால்தான் என்னவோ அந்தப் பொறுப்புகள் எல்லாம் அவரைத் தேடிச் சேர்ந்து ‘பதம் பெற்றன!

தந்தை பெரியாரிடத்திலே நீதிக்கட்சி வந்து விட்டது என்றால் ஜரிகை மேனி குலையாத அரசியலுக்கு இடம் இருக்க முடியுமா? பட்டம் பதவிப் பறவைகளுக்குப் பசுமை சோலையாகக் கட்சி அளிக்க முடியுமா?

வந்ததுதான் வந்தது 1944 வந்தது! சேலத்தில் நடைபெற்ற 16ஆவது மாநில மாநாடு, அதுவரை இருந்துவந்த மிட்டா மிராசுதார் - ஜமீன்தார் - ஜரிகைக் குல்லாக் கள் - பட்டம் பதவிவாலாக்கள் - இவர்க ளுக்கு இனி இயக்கத்தில் இடமில்லை என்பதை வரையறுக்கும் மாநாடாக வரலாற்றில் நிலைக்கும்படி செய்துவிட்டார் தந்தை பெரியார். பெரியாரிடம் இயக்கம் இடம்பெயர்ந்து சென்றுவிட்டது. இனி புரட்சிப் பூகம்பம்தான் - எப்படியும் பெரி யாரிடம் இருந்து இயக்கத்தை மீட்க வேண் டும் அல்லது பெரியாரை இயக்கத்தைவிட்டு அகற்ற வேண்டும் - இதைத் தவிர வேறு மார்க்கமில்லை என்று மாடிவீட்டு அரசி யல்வாதிகள் முடிவுகட்டினார்கள். 1940 ஆகஸ்டில் திருவாரூரில் கூடிய நீதிக்கட்சி யின் 15ஆவது மாநில மாநாட்டிலேயே முடிவுசெய்யப்பட்ட தீர்மானம் - அடுத்த மாநில மாநாடு சேலத்தில் என்று. ஆனாலும் மாநாட்டைச் சுலபத்தில் சேலத்தில் நடத்த முடியவில்லை. நான்கு ஆண்டுகள் கழிந்த நிலையிலும்கூட, மாநாட்டை நடத்தவிட வில்லை. 26.11.1943இல் சேலத்தில் நீதிக்கட்சி யின் நிர்வாகக்குழுக் கூட்டம் கூடியது. சேலத்தில் மாநில மாநாட்டை நடத்துவது என்றும் வரவேற்புக்குழுத் தலைவர் சேலம் சேர்மன் பி.இரத்தினசாமிபிள்ளை, செயலா ளர் சேலம்‘ வக்கீல் நெட்டே, எ.கணேசசங் கரன் என்றும் அறிவிக்கப்பட்டனர் என் றாலும் மாநாட்டை நடத்துவதற்கான அறி குறி இல்லை. இதற்கிடையில் மாநாட்டை மதுரையில் நடத்திவி டுகிறோம். அனுமதி தாருங்கள் என்று பட்டிவீரன்பட்டி சவுந்தர பாண்டியனார், தந்தை பெரியாரிடமே கேட்டார்கள். சேலம் மாநாட்டுக் குழுவின ரிடம் ‘என்ன சொல்லுகிறீர்கள்? நீங்கள் நடத்தப் போகிறீர்களா? இல்லை மதுரை யில் நடத்திக் கொள்ள அனுமதி கொடுக் கட்டுமா?’ என்று தந்தை பெரியார் சேலம் மாநாட்டு நிர்வாகிகளைக் கேட்ட போது, ‘இல்லை. இல்லை; நாங்கள் சேலத்தில் நடத்திவிடுகிறோம்‘ என்று உறுதி அளித் தார்கள். 10 நாள்வரை எதுவும் நடக்க வில்லை . மறுமுறையும் தந்தை பெரியார் சேலம் சென்றார். அப்பொழுது சில தோழர் கள் ‘ஒரு தேதியைக் குறிப்பிட்டு கமிட்டிப் போட்டு வரவேற்புக்குழு அமைத்துவிட லாம், யார் வந்தாலும் வராவிட்டாலும் நாம் நடத்தலாம்‘ என்று சொல்ல, அதையும் ஏற் றுக்கொண்டு தந்தை பெரியார் அப்படியே செய்தார்கள். அதன்படி 10.2.1944 அன்று தந்தை பெரியார் சேலம் சென்றார்கள். நூற் றுக்கணக்கான தோழர்கள் வந்திருந்தார் கள். ஆனாலும் வரவேற்புக் குழுத்தலைவ ரும், மாநாட்டுச் செயலாளர்களும் வர வில்லை  இரண்டு மணிநேரம் காத்திருந்து பார்த்துவிட்டு அவர்கள் வராததால் சேலம் குகை பிரபல வணிகர் ஜெகதீசன் அவர்கள் தலைமையில் மாநாட்டு நடவடிக்கையைத் துவக்குவது என்று முடிவுசெய்து மூன்று புதிய செயலாளர்களும் கூட்டத்தில் அறி விக்கப்பட்டார்கள். ரூபாய் 2000 வரை வசூலுக்கும் அக்கூட்டத்திலேயே ஏற்பாடு செய்யப்பட்டுவிட்டது.

நிலைமை வேறுவிதமாகப் போகிறது என்பதை உணர்ந்த முன்னாள் வரவேற்புக் குழுத் தலைவரும், செயலாளர்களும் அன்று இரவு 11 மணிக்கு தந்தை பெரியார் தங்கியிருந்த இடத்துக்கு வந்து, கூட்டத் துக்கு வராமல் போனதற்கு ஏதேதோ கார ணங்களைக் கூறி, தாங்களே பொறுப்பேற்று மாநாட்டை நடத்திக் கொடுப்பதாக மீண் டும் உறுதி கொடுத்தார்கள்.

மறுநாள் பத்திரிகைகளில் மாநாடு 20.8.1944 அன்று நடக்கும் என்றும் மாநாட் டுத் தலைவர் ஈ.வெ.ரா. என்றும் கொடி ஏற்றவும், மாநாட்டைத் திறந்துவைக்கவும் தோழர்கள் அண்ணாதுரை, டாக் டர் ஏ.கிருஷ்ணசாமி, குமாரராஜா, இராமச்சந்திர ரெட்டியார் ஆகியோர்கள் கேட்கப்பட்டி ருப்பதாகவும், செய்தி வந்தது, இரண்டு நாள் பொறுத்து கொடி யேற்றுபவர் சண்டே அப்சர்வர் பி.பாலசுப்பிரமணியம், திறந்து வைப்பவர். கி.ஆ.பெ.விசுவநாதம் என் றும் செய்தி வெளிவந்தது; மாநாட்டுத் தலைவர் பெயரும் போடப்படவில்லை. ஆர்.கே. சண்முகம் அல்லது சவுந்தரபாண்டியனார் (மாநாட்டுக்குத் தலைமை வகிக்க ஏற்பாடுகள் நடைபெற்றன. மாநாட்டுத் தேதி மறுபடியும் மாற்றப்பட்டு 27.8.1944 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப் பட்டது. ஆனால் இவற்றைப் பற்றி எல்லாம் தந்தை பெரியார் அவர்கள் சிறிதும் பொருட்படுத்தவில்லை.

இதற்கிடையே மாநாட்டு வரவேற்புக் குழு உறுப்பினர்கள் சிலரும், மாநாட்டுச் செலவுக்குப் பணம் பொறுப்பு ஏற்றுக் கொண்ட சிலரும் ஈரோடு சென்று தந்தை பெரியாரைச் சந்தித்து நிலைமைகளை நேரில் விளக்கிக் கூறினார்கள். ‘’மாநாட்டு நடைமுறை ஒழுங்காக இல்லை; கலகத் துக்குத் தயார் செய்கிறார்கள். மாநாட்டை நிறுத்திவிடட்டுமா? நாங்கள் என்ன செய்வது என்று கேட்டார்கள். ‘’உங்களுக்கு அதைப்பற்றி எல்லாம் கவலை வேண்டாம். அவர்கள் இஷ்டப்படி நடத்திக் கொள் ளட்டும். எப்படியாவது மாநாடு நடக்க வேண்டும். நீங்கள் ஒப்புக்கொண்டது போல் பணம் கொடுத்து விடுங்கள். என் னைப்பற்றிக் கவலைப்படாதீர்கள்’’ என்று தந்தை பெரியார் அவர்கள் அவர்களிடத் தில் சொல்லி அனுப்பிவிட்டார்கள்.

அதன்பிறகு வேறு வழியின்றி தந்தை பெரியார் அவர்களையே மாநாட்டின் தலை வராகவும், கொடியேற்ற பி.பாலசுப்ரமணி யம், திறந்துவைக்க கி.ஆ.பெ. விசுவநாதம் ஆகியோரையும் பத்திரிகைகளில் விளம் பரப்படுத்திவிட்டார்கள்.

மாநாட்டுத் தலைவராகத் தந்தை பெரியார் அறிவிக்கப்பட்டு இருந்தாலும் முறைப்படி மாநாட்டு வரவேற்புக்குழு சார்பாகத் தந்தை பெரியார் அவர்களுக்கு அழைப்பு இல்லை, ஆனாலும் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் பாசஞ்சர் இரயிலில் தந்தை பெரியார் சேலம் வந்து சேர்ந்தார்கள்.

27.8.1944 அன்று காலை ஊர்வலம் புறப்பட்டது. ஊர்வலம் மாநாட்டுத் தலைவர் பெரியார் அவர்கள் தங்கி இருந்த இடத்திலிருந்து புறப்படாமல், சவுந்தரபாண் டியன் அவர்கள் தங்கி இருந்த இடத்திலி ருந்து புறப்படுவது என்று ஏற்பாடு செய் திருந்தார்கள். (சண்டே அப்சர்வர் ஏட்டில் மறுநாள் இதை வைத்து மாநாட்டுத் தலை வரை மட்டம் தட்டும் பாணியில் செய்தி வெளி யிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்).

கட்சித் தோழர்களுக்குப் பெரும்பாலும் நடை பெற்றுவரும் சூதுவாதுகள், சூழ்ச்சி கள் எல்லாம் தெரியவே செய்தன. இரட் டைக் குதிரை பூட்டிய, பெரியதொரு கோச் வண்டியில் தந்தை பெரியார், சவுந்தரபாண் டியனார், வரவேற்புக்குழுத் தலைவர் சேலம் ரத்தினசாமிபிள்ளை ஆகியோர் மேடையில் அமர்த்தப்பட்டனர். மாநாட் டுத் திறப்பாளர் கி.ஆ.பெ.யும், கொடி ஏற்று பவர் பி.பாலசுப்பிரமணியமும் அவ்வண்டி யில் உட்கார வைக்கப்பட்ட பொழுது, கட்சித் தோழர்களும் பொது மக்களும் எதிர்ப்புக்குரல் கொடுத்தனர். தந்தை பெரி யார் அவர்கள் தலையிட்டு அமைதிப்படுத் தினார்கள். ஊர்வலத் துவக்கத்திலேயே 20 ஆயிரம் மக்கள் பெருந்திரளாகக் கூடிவிட் டனர்.

5 ஜோடி பாண்டு செட்டு, 10 ஜோடி மேளம், 100 ஜோடி தப்பட்டை, 40 கொம்பு கள், தொண்டர் கள் பவனிவந்த 40 குதிரை கள், 2 யானைகள் புடைசூழ ஊர்வலம் காலை 10.30 மணிக்கு போர்ப்படை போலப் புறப்பட்டது. கடைவீதிக்கு ஊர்வலம் வந்த போது கூட்டம் இருமடங்காகிப் பிரவாகித் தது) பெண்கள் ஆயிரக்கணக்கில் அணி வகுத்து சென்றனர்.

தஞ்சாவூர் மாவட்ட திராவிட சுயமரியா தைத் தோழர்களின் முழக்கம் தனித்தன்மை யோடு காணப்பட்டது. ‘’பெரியாரே எங்கள் தலைவர்! சூழ்ச்சியாவும் வீழ்ச்சி அடைக!’’ என்று அச்சிடப்பட்ட துண்டறிக்கைகள் பல்லாயிரக்கணக்கில் பொதுமக்களிடம் வழங்கப்பட்டன)

‘’பெரியார் வாழ்க!


‘திராவிடர் கழகம் ஓங்குக!’


‘பாண்டியன் வாழ்க!’


‘துரோகிகள் ஒழிக!’’


‘சதிகாரர்கள் ஒழிக!’’ என்ற முழக்கங்கள் விண்ணைப் பிளந்தன. ஊர்வலம் 11.30 மணிக்கு மாநாட்டுக் கொட்டகையை அடைந்தது. மாநாட்டுப் பந்தலுக்குள் எல்லோரும் நுழைய முடியாதபடி மாநாட்டு நுழைவு வாயிலில் கூர்க்காக்கள் நிறுத்தப் பட்டு இருந்தனர்.

பிரதிநிதி டிக்கெட் வேண்டுமென்றால் ஒவ்வொரு பிரதிநிதியும் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என்றும் அவ்விண்ணப் பத்தின் மீது டிக் கெட்ட கொடுக்க யோசிக் கப்படும் என்றும் என்னென்ன ஏற்பாடுகள். எல்லாமே சூழ்ச்சியுடன் பின்னப்பட்டு இருந்தன. இதன் நோக்கம் தங்கள் ஆதரவா ளர்களே பெரும்பாலும் மாநாட்டுப் பந்த லுக்குள் இருக்கவேண்டும் என்பதாகும்.

இதனால் பெரும் கலவரம் மூண்டு விட்டது. நிலைமை கட்டுக்கு அடங்க வில்லை. சவுந்தரபாண்டியன் தமக்கு உதவு வார் என்று மனப்பால் குடித்திருந்த மாநாட்டு நிர்வாகிகள் பெரும் ஏமாற்றத்தை அடைந்தனர். பாண்டியனார் மாநாட்டு நிர்வாகிகளின் போக்கைக் கண்டித்து விட்டார்.

கட்சித் தோழர்களின் கட்டுக்கடங்காத கோப அனலைத் தாங்க முடியாத மாநாட்டு நிர்வாகிகள் தோல்வியால் சுருண்டனர். கூர்க்காக்கள் விரட்டப் பட்டனர். வழக்கம் போல பிரதிநிதிகள் டிக்கெட்டுகள் வழங்கப் பட்டன.

மாநாடு துவங்கியது. சண்டே அப்சர்வர் பி.பாலசுப்பிரமணியம் கழகக் கொடியை ஏற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார். அவ்வளவுதான்! கட்சித் தொண்டர்கள் ஆவேசமாகப் பொங்கி எழுந்தனர். கடுமையான கண்டன சொற்களை வீசினர். வரவேற்புக் குழுத்தலைவர் சமாதானப் படுத்திப் பேசினார். கடைசியில் தந்தை பெரியார் கை அமர்த்தியதும் ஆணைக்குக் கட்டுப்பட்டு மக்கட்கடல் அடங்கியது.

பி.பா. அவர்களின் ஆங்கிலப் பேச்சின் முடிவில் க.அன்பழகன் (இன்றைய திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர்) தமிழில் மொழி பெயர்த்தார். பி.பா.வின் பேச்சு முழு வதும் சரணாகதிப் படலமாகவே இருந்தது.

‘’பெரியார் தமிழ்நாட்டின் கார்ல்மார்க்ஸ் நானாவது ஈ.வெ.ரா.வை எதிர்ப்பதாவது!’’ என்கிற தோரணையில் அவர் பேச்சு அமைந்தது. அதன்பின் மாநாட்டுத் திறப்பா ளர் கி.ஆ.பெ. எழுந்தார். மீண்டும் கூட்டத் தில் அமளி - சத்தம். அய்யாவின் கை அசைவிலது மீண்டும் அடங்கியது. கி.ஆ. பெ.யும் பி.பா.பாணியில் பேசினார். பெரி யார் சர்வாதிகாரியாகக்கூட இருப்பதை ஆதரிப்பவன் நான் என்று பேச ஆரம்பித்து விட்டார். ஜாடை மாடையாக சில கிண்டல் சொற்களைப் பேசியபோது, கூட்டத்தில் பலர் எழுந்தே எச்சரித்தனர். உடனே பெரியாருக்குப் புகழ்மாலை தொடுக்கத் துவங்கிவிட்டார். வரவேற்புக்குழுத் தலை வரின் பேச்சும் அதே பாணியில்.

மாநாட்டில் பேசிய திருவத்திபுரம்‘ சண்முகம் அவர்கள், இங்கு பேசியவர்கள் பேசியபடி நடந்து கொள்ள வேண்டும்; மேடையோடு இது இருந்துவிடக் கூடாது, வீடுவரை இருக்கவேண்டும் என்று எச்சரித் தார். மாநாட்டில் தோழர்கள் நெட்டோ, சவுந்தரபாண்டியனார், ராவ் சாகிப் துரை சாமி பிள்ளை, கணேசசங்கரன் ஆகியோ ரும் உரை ஆற்றினார்கள்.

தந்தை பெரியார் மாநாட்டுத் தலைமை உரை ஆற்ற முன்வந்தார்கள். மக்கள் மத்தியில் ஆனந்த வெள்ளம் - உணர்ச்சி யின் கொந்தளிப்பு! மக்களின் உணர்ச்சி கண்டு தந்தை பெரியார் நெகிழ்ந்தார். கலங்காத கண்களும் ‘கலங்கின - ஆம், அது மகிழ்ச்சி கண்ணீர். மக்கள் தம் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை நினைத்து நீரூற்றாய்க் கிளர்ந்த கண்ணீர்!

‘’தோழர்களே! - அந்த ஒரு வார்த்தை தான் வந்தது! மக்கள் மெயம்மறந்தனர். அடுத்து ‘’என் அருமை இளைஞர்களே!” - என்ற சொற்கள்.

‘’பெரியார் வாழ்க!” ‘’பெரியாரே எங்கள் தலைவர்!’’ ‘’சூழ்ச்சியாளர் ஒழிக! “சுயநல வாதிகள் ஒழிக! ‘’சமய சஞ்சீவிகள் ஒழிக!

என்று உணர்ச்சி எரிமலை வெடித்து அனல் குழம்பைக்கக்கியது.

‘’அமைதி! அமைதி!! என்று சொல்லிக் கை அமர்த்தினார். தலைவரின் சொல் கேட்டு தங்களை அமைதிப்படுத்திக் கொண்டனர். எனது அன்பான பாண்டியன் (சவுந்தரபாண்டியனார்) அவர்களே! - இது தந்தை பெரியாரின் அடுத்த அன்புச் சொல்! அவ்வளவுதான். பாண்டியனாரின் கண்கள் தாரை தாரையாக நீரை வடித்தன.

‘தந்தை சொல் மிக்கதோர் மந்திர மில்லை’ என்று எதற்கோ சொல்லி இருக் கலாம். தந்தை பெரியாரின் சொல்லுக்குத் தான் அந்த ஆற்றல்!

தந்தை பெரியார் அவர்களிடத்தில் மக்கள் வைத்திருந்த அந்த அன்பு பாசம் பிணைப்பு என்ப தும், மரியாதை - பற்றுதல் என்பதும் உலக வரலாறு கண்டிராத ஒன்றாகும். எந்த சபையில் அவர் அமர்ந் தாலும் அவர் ராஜாதி ராஜாதான்!

மாநாடு வெற்றிகரமாக முடிவடைந்த தற்குப் பிறகும் பொறாமைக்காரர்களின் தந்திரம் அடங்கவில்லை. குறும்புத்தன மான சில நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள். தோழர்கள் பி.இரத்தினசாமி, சி.ஜி. நெட்டோ , ஏ.கணேசசங்கரன் ஆகியோர் கையொப்பமிட்டு பத்திரிகைகளில் அறிக்கை கொடுத்தனர். வந்தனோபசாரம் இல்லாததால் மாநாடு ஒத்திவைத் ததாக அர்த்தம் என்றெல்லாம் அந்த அறிக்கை யில் கூறி இருந்தனர். உண்மை என்ன வென்றால் இராவ் சாகிப் எஸ்.துரைசாமி பிள்ளை வந்தனோபசாரம் சொன்னார் என்பதுதான் உண்மை என்று, இவர்களது அறிக்கைக்கு மறுப்பாக எஸ்.வி. லிங்கம் 2.9.1944 நாளிட்ட ‘குடிஅரசில் சேலம் மாநாடும் எதிரிகளின் கையாளும் என்ற தலைப்பில் அறிக்கை யொன்றை வெளி யிட்டார்.

சென்னையில் புதுக் கட்சி கூட்டம்

சென்னையில் 17.9.1944 அன்று அதிருப் தியாளர்கள் 20, 30 பேர் பி.இராமச்சந்திர ரெட்டி தலைமையில் கூடினார்கள். கூட்டத் திற்காக வந்தவர்களையும் உள்ளே அனு மதிக்கவில்லை . ‘’யாவரும் வரவேண்டும்‘’ என்று விளம்பரப்படுத்தி இருக்கி றீர்களே என்று அவர்கள் திருப்பிக் கேட்டதற்கு, அத்தகைய நோட்டீஸ்களைத் தாங்கள் அடிக்கவே இல்லை என்று சத்தியம்‘ செய்து விட்டார்கள்.

சேலம் தீர்மானம் தென்னிந்திய நல உரிமைச் சங்க நிர்வாகக் கமிட்டியைக் கட்டுப்படுத்தாது என்றும், பெரியார் ஈ.வெ.ரா. ஜஸ்டிஸ் கட்சி உறுப்பினரே இல்லையென்றும், ஒரு மாநாடு கூட்டிக் கட்சிக்குப் புதுத் தலைவரைத் தேர்ந் தெடுக்க வேண்டும் என்றும், அதுவரை பி.இராமச்சந்திர ரெட்டியார் அவர்களே தலைவராக இருந்து நடத்த வேண்டும் என் றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆனால் திரு.இராமச்சந்திர ரெட்டியாரோ அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. தந்தை பெரியாரைப் பற்றி ஏ.பி.பாத்ரோ குறை கூறியதற்கும் அவர் மறுப்புத் தெரிவித்து, ஈ.வெ.ரா.விடம் எனக்கு அதிக மதிப்பு உண்டு; இக்கட்சியைத் துவக்கி நடத்திய டாக்டர் நாயர், சர்.தியாகராயர் பனகலரசர், பொப்பிலி அரசர் ஆகியவர்களைப் போலவே பெரியார் அவர்களையும் மதிக் கிறேன். அவர் செய்த நன்மைகள் மறக்க முடியாததாகும் என்று கூறிவிட்டார்.

சோறு போட்டு உதை வாங்கிய கதை

அதோடு சும்மா இருக்கக் கூடாதா? டாக்டர் அம்பேத்கர் சென்னை வந்தார். இந்த மாஜிகட்சிக்காரர்கள் அம்பேத்கர் அவர்களை அழைத்து ஒரு விருந்து கொடுத்து, அவரின் அங்கீகாரத்தைப் பெற்று நடமாடவேண்டும் என்று திட்டம் வகுத்தனர். அதன்படி விருந்தில் கலந்து கொண்டுவிட்டு சேலம் மாநாட்டையும், அதன் தீர்மானங்களையும் புகழ்ந்துவிட்டு தலைவரைக் குறைகூறுவது நல்ல காரிய மல்ல; அது கூடாது, என்று புத்திமதி கூறி விருந்து ஏற்பாடு செய்தவர்களுக்கு சவுக் கடி கொடுத்துவிட்டு விடைபெற்றுச் சென் றார் அண்ணல் அம்பேத்கர்..

இந்தச் செய்தியை “சோறு போட்டு உதை வாங்கிய கதை” என்று தலைப்பிட்டு ‘குடிஅரசு’ (30.9.1944, பக். 3, 4) வெளி யிட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து அண்ணல் அம்பேத்கர் அவர்கள் தந்தை பெரியார் அவர்களை சென்னையில், தந்தை பெரி யார் இல்லத்தில் சந்தித்து, சேலம் மாநாட்டு முடிவுகளைப் பெரிதும் பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

- (ஆதாரம்: ‘குடிஅரசு’ 30-9-1944, பக்.5)

- விடுதலை ஞாயிறு மலர், 24 .8 .2019

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக