சனி, 7 செப்டம்பர், 2019

கேரள மாநிலம் கட்டப்பனையில் வரலாற்றுச் சிறப்புமிக்க நினைவுத் தூண்

அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (220)

கேரள மாநிலம் கட்டப்பனையில் வரலாற்றுச் சிறப்புமிக்க நினைவுத் தூண்


கி.வீரமணி


“கேரளத்தில் எட்டாத உயரத்தை எட்டிய கட்டப்பனை’’யில் தந்தை பெரியார் சிலை திறப்பு விழா, 31.12.1985 அன்று கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் கட்டப்பனை நகரில் “நாராயண குரு தர்மபரிபாலன யோகம்’’ கிளையின் சார்பாக நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு உரையாற்றினேன்.

ஏழடுக்கு கொண்ட இந்த கோபுரத்தின் அடித்தளத்தில்(Ground Floor) நாராயண குரு சிலை, முதல் அடுக்கில் தந்தை பெரியார் முழு உருவ வெண்கலச் சிலை, பிற அடுக்குகளில் பிற தலைவர்களின் சிலைகள் வைக்கப்பட்டிருந்தது. இந்த விழாவில் நான் கலந்துகொண்டு தந்தை பெரியார் சிலையைத் திறந்து வைத்தேன். இந்நிகழ்விற்குத் தலைமையேற்ற கேரள மாநில தொழில்துறை அமைச்சர் சிவதாசனுக்கு மாலை அணிவித்து அய்யா நூல்களை (ஆங்கில மற்றும்  மொழிபெயர்ப்பு நூல்களையும்) வழங்கி உரை நிகழ்த்தினேன். அதில், தந்தை பெரியார் அவர்கள் எந்தக் காலத்திற்கும், எல்லா மண்ணுக்கும் ஏற்புடைய ஒப்பற்ற சிந்தனையாளர் என்பதை நிலைநிறுத்திய அரிய நிகழ்வில் கலந்து கொண்ட மகிழ்ச்சியுடன் உரையாற்றுகிறேன் என்று குறிப்பிட்டேன். 1985ஆம் ஆண்டின் கடைசி நாள் தந்தை பெரியார் மீது அவர் வழி அணுப் பிசகாமல் எழுச்சி நடைபோடும் கேரளத்து ஒடுக்கப்பட்ட மக்கள் வைத்திருக்கும் அளவற்ற மதிப்பையும் அசைக்க முடியாத நம்பிக்கையும் வெளிஉலகத்திற்கு எடுத்துக்காட்டிய நாள்.

தந்தை பெரியார் சிலையை திறந்து வைக்கும்

ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்

கட்டப்பனை! ஆம், அதுதான் வரலாற்றுச் சிறப்புமிக்க அவ்வூரின் பெயர்! பெரிய ஊர் அல்ல. ஆனால், பெரியாரின் கொள்கைகளை மதிக்கக் கற்ற ஊர். அந்த ஊரில் அவ்வளவு மக்கள் கூடியதை பார்த்ததே இல்லை என்று அங்கிருந்த மக்கள் பேசிக்கொண்டது சாட்சியாகும். எலப்பாறை சி.ஏ.தேவகிக்குட்டி, நெடுங்கண்டம் வீ.பாண்டியரசு, பச்சடி சீறீதரன், ஏ.குஞ்சன் உள்பட பல கேரள முன்னணித் தோழர்கள் எங்களை வரவேற்றனர்.

கட்டப்பனையில் எழுப்பப்பட்டுள்ள நினைவுத் தூண், சிலைகள் அமைப்பும் ஏற்பாடகளும் கேரளத்தில் ஒடுக்கப்பட்டோர் உயர்வுக்காக உழைத்துவரும் எஸ்.என்.டி.பி. (SNDP) இயக்கத்தினர் செய்தவை. ஸ்ரீநாராயண குரு தர்ம பரிபாலன யோகம் என்ற அதன் முழுப்பெயர். கட்சி சார்பற்ற சமூக, பண்பாட்டு அமைப்பாக இயங்கி வருகிறது. வைக்கம் போராட்டத்தில் தந்தை பெரியார் அவர்களோடு தோளோடு தோள் நின்ற ஸ்ரீநாராயண குரு (1854_1928)வின் வழிகாட்டுதலோடு டாக்டர் பல்பு (1858_1950) எனும் ஈழவ சமுதாயத் தலைவரால் 1903இல் நிறுவப்பட்ட அமைப்பாகும்.

நாராயண குரு

எஸ்.என்.டி.பி (SNDP) அமைப்பு உருவாக்கியுள்ள நினைவுத் தூண் (அல்லது கோபுரம்) கட்டப்பனையின் நட்ட நடுவில் பீடுற நிமிர்ந்து நிற்கிறது. அதன் உயரம் 171 அடி “குருதேவர் கீர்த்தி ஸ்தம்பம்’’ என்று மலையாளத்தில் அழைக்கப்படுகிறது. ஏழடுக்கு மாடி கொண்டது. நில மட்டத்தில் நாராயண குரு அமர்ந்திருக்கும் சிலையும், முதல் மாடியில் கம்பீரமாக நிற்கும் தந்தை பெரியார் அவர்களின் முழு உருவ வெள்ளை நிற வெண்கலச் சிலை அமைக்கப்பட்டிக்கிறது. அடுத்த மாடியில் சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் அவர்கள் சிலைவடிவில் நிற்கிறார்கள். அதற்கு அடுத்த மாடியில் மலையாளத்துப் புரட்சிக்கவிஞர் குமாரன் ஆசான் (1872_1924) வைக்கம் போராட்டம் உருவாக அடிப்படைக் காரணமாக இருந்த வழக்கறிஞர் டி.கே.மாதவன் இருவரது சிலைகள் இணைந்துள்ளன.

டாக்டர். பல்பு

பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் எங்கெங்கு இருந்தாலும் ஒன்று சேர வேண்டும் என்ற நோக்கில் நாராயண குரு பின்பற்றிய வழி அது. உச்சிமாடியில் மீண்டும் நாராயண குருவின் சிலை. ஆனால், அங்கு அவர் நிற்கும் தோற்றத்தில் அமைந்துள்ளது.

எட்டாண்டுக் காலமாக லட்சக்கணக்கில் பணம் செலவிடப்பட்டு நினைவுத் தூண் எழுப்பப்பட்டுள்ளது. நான் அங்கு செல்லுவதற்கு இரண்டு நாட்கள் முன்புதான் முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் நினைவுத் தூணினை திறந்துவைக்க அடுத்தடுத்த நாள்களில் சிலைகள் திறந்துவைக்கும் விழா நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. கடவுளின் பெயராலும், சாஸ்திரங்களின் பெயரால் கொத்தடிமைகளாகக் காலங்காலமாக ஒடுக்கப்பட்டுக் கிடந்த எளிய மக்கள் ஏற்றம் பெறத் தம் வாழ்நாள் முழுவதும் போராடிய ஏந்தலின் எழில்மிகு உருவச் சிலையினை அமைத்த கேரள மக்களையும் எஸ்.என்.டி.பி  (SNDP) அமைப்பினரையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். (அரசியல் உள்ளே நுழைந்தால் முந்தைய பலம் குன்றியுள்ளது.)

தந்தை பெரியாரின் தொண்டுக்கு மரியாதை என்று தந்தை பெரியாரின் சிலையை எங்களைக் கொண்டு திறக்க வேண்டும் உறுதியாக இருந்ததன் மூலம் நம் வழிமுறைக்கு மரியாதை என்பது மற்றொன்று.  கூட்டத்தில் முன் வரிசையில் அமர்ந்திருந்த ஒரு பேராசிரியர் குறிப்பிட்டதுபோல, “இரட்டை அங்கீகாரம்’’ (Double Recognition)அது.

-  கட்டுரையின் ஒரு பகுதி

- உண்மை இதழ், பெப்ரவரி 16- 28. 19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக