செவ்வாய், 24 செப்டம்பர், 2019

மதுரை ஜில்லா சுயமரியாதை மகாநாடு வெங்கிடுசாமி படத்திறப்பு விழா: ஈ.வெ.ரா. விளக்கம்

(வாசக நேயர்களே,


ஊன்றிப் படித்துப் பயன்பெற வேண்டிய முக்கியப் பகுதி இது.


இதுபற்றி தங்களது கருத்தினை சுருக்கமாக எழுதி அனுப்புமாறு வேண்டுகிறோம்.


திராவிடர் இயக்கம் - 80 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்நாடு அரசியல் களத்தின் முக்கிய நிகழ்வுகள் - வரலாறு பற்றிய காலக்கண்ணாடியாக - திராவிடத்தின் தேவைக்கான நுண்ணாடியாக இது அமையும் ஒன்று. இதற்கான தேவை - பயன் - நுகர்வு பற்றிய உங்கள் கருத்துக்கள் பெரிதும் வரவேற்கப்படுகிறது. - ஆசிரியர்)


 

மதுரை ஜில்லா சுயமரியாதை மகாநாட்டில் காலம் சென்ற மதுரை சுயமரியாதை இயக்கத் தோழர் வெங்கிடுசாமி அவர்கள் திருஉருவப்படத்தை தோழர் ஈ.வெ.ராமசாமி அவர்கள் திறந்து வைக்கையில் பேசியதாவது:-

தலைவர் அவர்களே! தோழர்களே!

இன்று இம்மகாநாட்டில் காலஞ்சென்ற நமது தோழர் வெங்கிடுசாமி அவர்கள் உருவப்படத்தைத் திறந்து வைக்கும் பணியாற்றுவதை நான் ஒரு மகிழ்ச்சியின் காரியமாகவே கொள்கிறேன்.

இந்தச் சமயத்தில் இப்பணியைச் செய்யும் யாரும் திறந்து வைக்கப்படும் உருவத்தினரைப் பற்றி சில வார்த்தைகள் கூறுவது இயல்பேயாகும். தோழர் வெங்கிடசாமி அவர்கள் இவ்வூர் வாசி. அவரைப்பற்றி இவ்வூர் வாசிகளாகக் கூடியிருக்கும் இப்பெரிய கூட்டத்திற்கு உங்களுக்குத் தெரியாத எதை நான் கூறப் போகிறேன். நான் ஏதாவது சொல்லுவது என்பது 'அப்பன் வீட்டுப் பெருமையை அண்ணனுக்கு தங்கை எடுத்துச் சொல்ல முயற்சித்தது போல தான் முடியும் என்றாலும் நான் இது சமயத்தில் தோழர் வெங் கிடுசாமியைப் பற்றி மாத்திரம் அல்லாமல் இம் மாதிரியான படத்திறப்பு விழா முதலியது போன்ற காரியங்களை நாம் ஏன் செய்கிறோம் என்பதைப் பற்றியும் சிறிது கூற ஆசைப் படுகிறேன். ஏனெனில் இம் மாதிரி மகாநாடுகளில் நாம் அடிக்கடி பல பெரியார்களது படத்திறப்பு விழா நடத்து கிறோம். அன்றியும் வழிபாட்டை மறுக்கிறவர்களான நாம் இம் மாதிரி உருவப்பட திறப்பு ஏன் செய்கிறோம் என்பதற்கும் சமாதானம் சொல்ல வேண்டியது அவசியமாகும்.

உருவப்படத் திறப்பின் நோக்கம்


நாம் உருவப்படத் திறப்பு விழா நடத்துவது என்பது பூஜை செய்யவோ, தேங்காய் பழம் ஆராதனை செய்து விழுந்து கும்பிட்டு பக்தி செய்து நமக்கு வேண்டியதைக் கோரி பிரார்த்தனை செய்யவோ, நாம் செய்த செய்யும் பாவத்தை மன்னிக்கும்படி கேட்கவோ அல்ல என்பதை முதலில் தெரிவித்துக் கொள்ளுகிறேன். அப்படிப்பட்ட சக்தி இருப்பதாக கருதிக் கூட நாம் எந்தப்பட திறப்பு விழாவும் செய்வதில்லை. மற்றும் எப்படிப்பட்ட படத்திற்கு பூஜை செய்யும்படியோ, கோவில்களிலோ, தேர், ரதம், விமானம், சப்பரம் ஆகியவை களிலோ வைத்து ஊர்வலம், ஆராதனை செய்யும்படி காலித் தனம் செய்வதற்கு ஆகவும் அல்ல. ஆனால் மற்றெதற்கு என்றால் மனித சமூகநலனுக்கு சுயநல மில்லாமலும், மற்றவர் களிடமும் எவ்வித கூலியோ புகழோ, பிரதிப் பிரயோஜனமோ பெறாமலும் தன் முயற்சியால் தன் பொருளால் தன் பொறுப் பென்று கருதி தொண்டாற்றி வந்த பெரியார்களின் குணாதி சயங்களையும், தொண்டையும் எடுத்துச் சொல்வதன் மூலம் மற்றும் பலரும் அக்காரியத்தைப் பின்பற்ற வேண்டும் - பின்பற்ற மாட்டார்களா? என்பதற்கு ஆகவே தான் - மனித சமூக நலனுக்குப் பிரதிப் பிரயோஜனம் கூலி இல்லாமல் மக்கள் பாடுபட வேண்டும் என்கின்ற மேலான குணத்தைப் பிரச்சாரம் செய்வதற்கு ஒரு சாதனமாக வேதான் இக்காரியத்தைச் செய்கிறோம்.

தியாகர், பானகல் தன்மை


நாம் அடிக்கடி தியாகராயர், பானகல் அரசர், நடராஜன் முதலியவர்கள் படத் திறப்பு விழா செய்கின்றோம், எதற்காக? அவர்களது கொள்கை, எண்ணம், தொண்டு ஆகியவைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என்பதற்கு ஆகத்தான். மற்றபடி இவர்கள் எல்லாம் ஆழ்வார்கள், நாயன்மார்கள், பல தேசியத் தலைவர்கள் என்பவர்களைப் போன்று மக்களுக்கு மோட்சம் காட்டும் பக்தியைப் பற்றி பிரசாரம் செய்து பாமர மக்களை ஏமாற்றி புகழ் பெற்றவர்களோ செத்த பின் கடவுளானவர் களோ, கடவுளுடன் கலந்தவர்களோ அல்ல. பாமரர்களிடம் பேரும், புகழும் பெற்ற மகான்களுமல்ல. தங்களைக் கோவிலிலும், பூஜை வீட்டிலும், வைத்து பூஜிக்கும்படியான மாதிரியில் நடந்து கொண்டவர்களுமல்ல. அவர்கள் வெகு தைரியமாய் பழைய பழக்க வழக்கங்களையும், மூட மக்களிடமும், சுயநல சூழ்ச்சிக்காரர்களிடமும் மிகவும் செல்வாக்கு பெற்று இருக்கும் பழைய கொள்கைகளையும், உணர்ச்சிகளையும், தகர்த்தெறிந்து மக்களுக்கு சமத்துவ உணர்ச்சியையும், மனிதத் தன்மையையும் உதிக்கப் பாடுபட்டவர்கள், அப்படிப் பாடுபட்ட எவரும் அவர்களது வாழ்நாள்களில் கஷ்டப்படும் பாமர மக்களால் தூற்றப்பட்டும், துன்பப்படுத்தப்பட்டவர்களாகவே இருப்பார்கள்.

சீர்திருத்தக்காரர்கள் பட்டபாடு


உதாரணமாக கிரீஸ் தேசத்து சாக்ரடீஸ் என்பவர் எந்தக் காரியத்தையும் அறிவால் ஆராய்ச்சி செய்து பார்க்க வேண்டும் என்று சொன்னதற்காக விஷம் கொடுத்து கொல்லப்பட்டார். கவுதம புத்தர் என்பவர் ஆரியப் புரட்டுகளை எதிர்த்ததற்காக எவ்வளவோ கஷ்டப்பட்டார், யேசு கிறிஸ்து விக்கிரகாராதனை, கோவில் பூஜை முதலியவைகளை எதிர்த்துப் பிரசாரம் செய்ததற்கு ஆக சித்திரவதை செய்து கொல்லப்பட்டார். முகமது நபி அனேக மூடப் பழக்க வழக்கங்களையும், பல தெய்வ உணர்ச்சியையும் பெண் கொடுமையையும் எதிர்த்து பல நல்ல கொள்கைகளைப் பிரச்சாரம் செய்ததற்கு ஆக பல சங்கடப்படுத்தப்பட்டார். அப்படிப்பட்டவர்களும் மற்றும் அது போன்ற பல புதிய அபிப்பிராயம் சொன்னவர்களும் அவர்களது ஆயுள் காலத்தில் இது போல் எவ்வளவு துன்பப்படுத்தப்பட்டு எவ்வளவு கஷ்டப்படுத்தப்பட்டு, எவ்வளவு தொல்லை படுத்தப்பட்டு இருந்தாலும் இன்று அவர்கள் கோடானு கோடி மக்களால் அவர்களது அபிப்பிராயங்களோடு மதிக்கப் படுகிறார்கள். கோடிக் கணக்கான பேர்களால் பின்பற்றப் படுகிறார்கள். அது போலவே தான் முற்கூறப்பட்ட பெரியார்களும், நாங்களும் இன்று எங்கள் அபிப்பிராயங்கள் எவ்வளவு தான் வெறுக்கப்பட்ட போதிலும் பாமர மக்க ளாலும், சுய நல சூழ்ச்சிக்காரர்களாலும் எவ்வளவு தான் வெறுக்கப்பட்டு தொல்லைகள் விளைவிக்கப்பட்டு அல்லல் பட்டாலும் பிற்காலத்தில் எங்கள் தொண்டு மக்களுக்கு மிக்க பயன்தரக் கூடியதாயும், பாராட்டக் கூடியதாயும் மக்களை ஞானவழியில் நடத்தக் கூடியதாயும் இருக்கும் என்கின்ற நம்பிக்கையுடையவர்களாக இருக்கிறோம். இல்லாவிட்டால் இவ்வளவு தொல்லைகளுடன் எங்களுக்கு எவ்விதத்திலும் சுயநலமற்ற இந்தத் தொண்டை பெரும்பான்மையான மக்களுடைய இவ்வளவு வெறுப்பிற்கிடையில் துணிந்து ஆற்ற முனைந்திருக்க மாட்டோம்.

புகழப்பட்டோர் கதி


நாங்கள் பாமர மக்களால் வெறுக்கப்படுவதாலேயே எங்கள் தொண்டின் மேன்மையை உணருகிறோம். பாமர மக்கள் மதித்து பக்தி செலுத்தி புகழும்படியாக நடந்து கொண்டவர்களுடைய எப்படிப்பட்ட தொண்டும் அபிப் பிராயமும் அவர்களது வாழ்நாளுக்குப் பின் பயன்பட்டதாக எங்களுக்கு ஆதாரமே கிடைக்கவில்லை. அப்படிப் பட்டவர்களால் மனித சமூகம் திருத்தப்பாடு அடைந்ததாக எவ்வித ருஜுவும் இதுவரை கிடைத்ததில்லை. நாமறிய ஒரு காலத்தில் திலகர் புகழப்பட்டார், பெசண்டம்மையார் புகழப்பெற்றார், காந்தியும் புகழப்படுகிறார். சரித்திரத்தில் எத்தனையோ ஆச்சாரியார்கள், நாயன்மார்கள், ஆழ் வார்கள், சுவாமிமார்கள் எனப்பட்ட எத்தனையோ பேர் புகழப்பட்டதாகவும் பார்க்கிறோம். இவர்களில் பலர் தெய்வீகம் கற்பிக்கப்பட்டார்கள். பலர் தெய்வங்களாகவும் கருதப்பட்டிருக்கிறார்கள். ஆனால் இவர்களாலெல்லாம் ஒரு காதொடிந்த ஊசியளவு பயன் மக்களுக்கு ஏற்படுகிறதா? ஏற்பட்டதா? ஏற்படும் என்கின்ற குறியாவது காண்கின்றதா? இவர்கள் எல்லாம் புராணங்களுக்கு புதிய உரை எழுதுகிற உரையாசிரியர்கள் போல் தோன்றி பாமரர்களுடைய பக்திக்கும், பூஜைக்கும் பாராட்டுதலுக்கும் ஆளாகி முட்டாள் தனத்துடனும் அல்லது பாமர மக்களை ஏமாற்றிப் பொய், புகழ் பெற்று வருகிறோமே என்கின்ற உணர்ச்சியுடனும் தானே செத்தார்கள் சாகின்றார்கள், சாகப்போகின்றார்கள் என்று சொல்லவேண்டி இருக்கிறதே தவிர கண்கண்ட பயன் என்ன என்று பாருங்கள்.

இன்று உண்மையில் மனித சமூகத்திற்கு ஏதாவது புதிய மாறுதல் உணர்ச்சி அல்லது புரட்சிகரமான சுதந்திரம், விடுதலை, சமத்துவம், சுயமரியாதை என்பதான உணர்ச்சி தோன்றி இருக்குமானால் அவை அனைத்தும் ஒரு காலத் திலோ, நேற்றோ, இன்றோ கல்லடிப்பட்டு, கொல்லப்பட்டு, கையடிப்பட்டு, தொல்லைப்பட்டு உயிர் துறந்த, உயிர் வாழ்கின்ற - வெறுக்கப்பட்ட மக்களாலே என்பது ஆராய்ந்து பார்க்கின்ற எவருக்கும் சுலபத்தில் புலப்படும்.

தேசீய வாலிபர்கள் யோக்கியதை


இன்று தியாகராயரையும், நாயரையும் பனகாலரசரையும் தூற்றுகின்ற வாலிபர்களை எனக்குத் தெரியும். அவர்களுக்குத் தேசிய வீரர் பட்டம் இருப்பதும் எனக்குத் தெரியும். ஆனால் அவர்கள் தாய், தகப்பன்மார்கள் நாயிலும் பன்றியிலும் கீழான ஜந்துவாய் மதித்து நடத்தப்பட்டதையும் அது எப்படி மாறி அவர்கள் வயிற்றில் பிறந்தவர்கள் தேசிய வீர வாலிபர்கள் ஆனார்கள் என்பதும் அவர்கள் அறியார்கள். இன்றைய தேசீய வாலிபர்கள் பலர் கருத்தரிப்பதற்கு முன் பாகவே அவர்களில் பலர் அறிவு பெறுவதற்கு முன்பாகவே தியாகராயரும், நாயரும், பனகால் அரசரும் புரட்சி செய்து மனிதத் தன்மை உணர்ச்சியை கிளப்பிவிட்டு உயிர் துறந்து விட்டார்கள். ஆதலாலேயே அது தெரிய முடியாத வாலி பர்கள் இன்று தங்கள் பிறவி யோக்கியதையே இப்படித்தான் இருந்தது என்று கருதி தலைகீழாக நடக்கிறார்கள். பலர் தெரிந்திருந்தும் தாங்கள் கீழ் மக்களாய் இருத்திவிடப்பட்ட உணர்ச்சியில் கீழ்மை புத்தி கொண்டு நன்றி மறந்த மக்களாய் நடந்து கொள்ளுகிறார்கள். எப்படியானாலும் இந்த சில மக்களுக்கு அறிவு இல்லாததாலோ நன்றி காட்டும் குணம் இல்லாததாலோ அப்பெரியார்களுடைய பெருமையும் அருந்தொண்டுகளும் பயனற்றதாக ஆகிவிடும் என்று சொல்ல முடியாது.

வெங்கிடுசாமி பெருமை


அப்பெரியார்கள் எல்லாம் மக்களின் தன்மை உயர வேண்டுமென்று கருதி தொண்டாற்றியவர்களே ஒழிய மக்கள் தங்களை போற்றிப் புகழ்ந்து பூஜிக்க வேண்டுமென்று கருதியவர்கள் அல்ல. ஆதலால் அப்பெரியவர்களை ஞாபகப்படுத்தி அவர்கள் தன்மையை மற்ற மக்கள் உணர்ந்து அம்மாதிரியான உள்ளம் பெற்று மனித சமூகத்துக்கு தொண் டாற்ற முற்பட வேண்டும் என்பதற்காகவே அவர்களது உருவப்படத் திறப்பு விழாக்கள் என்ற பெயர் வைத்து இவற்றை எடுத்துக் கொள்ளுகிறோம். அந்த முறையில் நமது தோழர் வெங் கிடுசாமி அவர்களும் குறிப்பிடத் தக்கவராவர். வெங்கிடுசாமி உண்மை சுயமரியாதை வீரர். 1926-முதலே சுயமரியாதை சங்கம் வைத்து உழைத்தவர். அப்போதே சுயமரியாதை திருமணம் செய்து கொண்டவர். சங்கத்துக்கு தாராளமாய் பணம் கொடுத்து உதவி வந்தவர். ஒவ்வொரு கொள்கையையும் அனுபவத்தில் பிறருக்கு செய்து காட்டி யவர். அவரது மனைவியார் ஒரு காலத்தில் ஏதோ ஒரு பஜனைக் கூட்டத்தின் காலில் விழுந்து கும்பிட்டு பிரசாதம் வாங்கியதற்கு ஆக பல மாதம் ''திருநீலகண்டராய் இருந்து மனைவிக்கு உண்மை ஞானம் ஏற்பட்ட பின்பு கணவரானவர். அவர் காலமான பின்பு உண்மையிலேயே மதுரையில் சுயமரியாதை சங்கம் சரியாக வேலை செய்யவில்லை. சுயமரியாதை உணர்ச்சியும் வீறு கொண்டெழவில்லை. இதிலிருந்தே அவர் எவ்வளவு அவசியமானவரும் உண்மை கவலையுள்ளவருமாய் இருந்தார் என்பதும் விளங்கும். இதனைக் கேட்டபின் அவரைப் பின்பற்றி பல தோழர்கள் வெளிப்படுவார்கள். அதனால் இயக்கத்துக்கு மேன்மை உண்டாகி மக்களுக்கு நன்மை பயக்கும் என்பதற்கு ஆகவே இப்படத் திறப்புவிழா நடத்துகிறேன் என்று கூறி படத்தைத் திறந்து வைத்தார்.

- விடுதலை, 19.3.1938
- விடுதலை நாளேடு, 13 .9 .19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக