புதன், 4 செப்டம்பர், 2019

சேலம் திராவிடர் கழக பவள விழா மாநாட்டில் தமிழர் தலைவர் எழுச்சியுரை

சமூக நீதி, பொது உரிமை, மாநில உரிமைகள் பெறும் அணியோடு சேர்ந்து இருங்கள் சிறைச்சாலை அழைத்தால் தமிழ்நாடே சிறைச்சாலை ஆகும்

உண்மை இனத் தொண்டுக்கு அடையாளம் நம் வாழ்வையும் - உடலையும் ஒப்படைத்து விட வேண்டும்


சேலம் திராவிடர் கழக பவள விழா மாநாட்டில் தமிழர் தலைவர் எழுச்சியுரை




சேலம், செப்.1 சமூகநீதி, பொது உரிமை, மாநில உரிமைக்காக சிறைச்சாலை அழைத்தால் நாடே சிறைச்சாலை ஆக வேண்டும்.- உண்மையிலேயே இனத் தொண்டு செய்பவர்களுக்கு அடையாளம் அத்தொண்டால் ஏற்படும் இன்னலுக்கும், துன்பத்திற்கும் அவனது வாழ்வையும், உடலையும் ஒப்படைத்து விட்டவனாக இருக்க வேண்டும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

27.8.2019 அன்று  மாலை சேலத்தில் நடைபெற்ற திராவிடர் கழகப் பவள விழா மாநாடு - பொதுக்கூட்டத்தில்  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார். அவரது உரை வருமாறு:

"அண்ணாதுரை தீர்மானம்''


எழுச்சியோடும், பெருமிதத்தோடும், எந்த சேலத்தில் வரலாறு படைத்த அண்ணா அவர்கள் பெயராலே அமைந்த அண்ணாதுரை தீர்மானம்'' என்ற பெயராலே, நீதிக்கட்சி என்று அழைக்கப்பட்ட தென்னிந்திய நல உரிமைச் சங்கம் திராவிடர் கழகமாக மாற்றப்பட்டதோ அந்த சேலத்தில், பவள விழா நிகழ்ச்சி - 75 ஆண்டுகள் நிறைந்திருக்கின்ற இந்த வரலாற்று நிகழ்ச்சியில், எத்தனை எத்தனை சோதனைகள், அதை சாதனைகளாக மாற்றிய எத்தனை எத்தனை இயக்கத்துப் பணிகள் இவற்றை எல்லாவற்றையும் இன்றைக்கு இருந்து காணுவதற்கு, அறிவாசான் தந்தை பெரியார் நம்மோடு இல்லையே - பேரறிஞர் அண்ணா அவர்கள் நம்மோடு இல்லையே - பாராட்டிப் போற்றி வந்த பழைமை லோகம் ஈரோட்டு பூகம்பத்தால் இடியுது பார்!'' என்று இதே சேலத்தில், ஈரோட்டிலே கவிதை எழுதினாரே, அந்த முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் இன்று நம்மிடையே இல்லையே - இப்படி பல பேர் நம்மிடையே இல்லையே என்ற ஏக்கத்தில் இருக்கிற நமக்கு, அவர்கள் இல்லாமல் இல்லை - இதோ நம்மிடத்திலே, எங்களிடத்திலே அவர்கள் எல்லாம் இருக்கிறார்கள் என்று காட்டி, நமக்கு நம்பிக்கை நட்சத்திரமாக, நமக்கு மட்டுமல்ல, நாட்டுக்கே என்று சொல்லும்பொழுது, தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, இந்திய திருநாட்டிற்கே வழிகாட்டக்கூடிய எங்கள் அருமை சகோதரர் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் ஒப்பற்ற தளபதி, களங்களில் வெற்றி பெற்று, இறுதிப் போரிலும் நாம்தான் வெற்றி பெறுவோம் என்று சொல்லக்கூடிய - அந்த உணர்வை ஊட்டி வரும் எங்கள் அருமைத் தளபதி, அன்பு சகோதரர், திராவிட முன் னேற்றக் கழகத்தினுடைய வரலாற்றுப் பொன்னேட்டில் சாதனைகளை செய்யக்கூடிய அருமை சகோதரர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களே,

பேராசிரியர் அய்யா காதர்மொய்தீன்


இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பாக எனக்குமுன் உரையாற்றிய அகில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைப்பின் தேசிய தலைவர் மானமிகு பேராசிரியர் அய்யா காதர்மொய்தீன் அவர்களே,

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பான வகையில் ஒரு அருமையான உரையை ஆற்றிய இந்திய மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் அன்பிற்கும் பெருமிதத்திற்கும் உரிய அருமை சகோதரர் தோழர் பாலகிருஷ்ணன் அவர்களே,

திராவிட இயக்கத்தின் போர் வாள்


திராவிட இயக்கத்தின் போர் வாள் என்று நாங்கள் பெருமையோடு சொல்லக்கூடிய அந்தப் போர்வாள் உறையிலிருந்து வெளியேதான் வந்திருக்கிறது, உறையில் இல்லை. ஆனால், அதேநேரத்தில், எங்களால் வலுக் கட்டாயமாக கொஞ்சம் ஓய்வெடுக்கச் சொல்லியிருக் கிறோம். ஏனென்றால், பின்னாளில் சுழற்றுவதற்கு வாளுக்கு வாய்ப்பு இருக்கவேண்டும் அல்லவா! அதற்காகத்தான் அந்த வாளுக்கு மிகப்பெரிய அளவிற்கு வர இயலவில்லை என்றாலும், அவர்கள் உள்ளமெல்லாம், இனமானப் பேராசிரியர் வாழ்த்துச் செய்தியில் சொன்னதைப்போல, இந்த சேலத்தில் இருக்கிறது என்றாலும், அதை அப்படியே பிரதிபலித்த ம.தி.மு.க. அவைத் தலைவர் தொழிற்சங்கத் தலைவர் அன்பிற்குரிய அருமை சகோதரர் திருப்பூர் தோழர் துரைசாமி அவர்களே,

எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன்


மிகப்பெரிய அளவில் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு, லண்டன் மாநகரில் இன்றைக்கு இருக்கவேண்டியவர்; ஆனாலும், திராவிடர் கழக பவள விழா மாநாடு என்று சொல்லும்பொழுது, திராவிடர் கழகம் வேண்டுகோள் விட்டால், அதனை ஆணையாகக் கருதக்கூடியவர் எங்கள் எழுச்சித் தமிழர் என்ற பெருமைக்கு என்றைக்கும் நாம் ஆளாகியிருக்கிறோமே, அந்த உணர்வை அடிப்படையாகக் கொண்டிருக்கின்ற அன்பு சகோதரர் விடுதலை சிறுத்தைகளின் ஒப்பற்ற தலைவர், எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களே,

அருமை சகோதரர் ராஜேந்திரன்


இவ்வளவு பெரிய மாநாட்டினை ஏற்பாடு செய்த நேரத்தில், மழை வந்து இதையெல்லாம் பாழ்படுத்தி விடுமோ என்று நினைத்த நேரத்தில், அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாதீர்கள், இயற்கையை வெல்லக்கூடிய சக்தி இந்த இயக்கத்திற்கு உண்டு; எங்கள் தோழர்களுக்கு உண்டு என்று காட்டுவதற்கு இதோ பிரம்மாண்டமான ஏற்பாடுகளை ஒரு நொடியில் செய் கிறோம் என்று சொல்லக்கூடிய ஆற்றல் வாய்ந்த மாவட்ட செயலாளர் அருமை சகோதரர் ராஜேந்திரன் அவர்களே,

இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பிக்கின்ற அருமை நண்பர்கள், அருமைத் தோழர்களே, அருமை சகோதரி யார் சுப்புலட்சுமி ஜெகதீசன் அவர்களே, தோழர் பொன் முடி அவர்களே, அதேபோன்று சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன் அவர்களே,

சேலத்து சிங்கம் இல்லை என்றாலும், அந்த சிங்கத்தின் குட்டி இருக்கிறது என்பதற்கு அடையாளமாக இருக்கக் கூடிய வீரபாண்டி ராஜா அவர்களே,

அதேபோல, செயல்வீரர், கலைஞருக்கு சிலை திறந்து வைத்துவிட்டு, அடுத்தபடியாக இங்கே வந்து நம்முடைய நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கக்கூடிய மிகப்பெரிய செயல்வீரராகத் திகழ்ந்து கொண்டிருக்கக்கூடிய அருமை நண்பர் சேலம் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் அவர்களே,

மற்றும் மேடையிலும், எதிரிலும் இருக்கக்கூடிய எண்ணற்ற திராவிட இயக்கப் பொறுப்பாளர்களே, எனதருமை இயக்கக் குடும்பத் தோழர்களே, நண்பர்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சுயமரியாதைச் சுடரொளிகளுக்கு வீர வணக்கம்!


இந்த மேடை, இந்த சேலத்தில் திராவிடர் கழகம் என்று கட்டப்பட்ட நேரத்தில், இந்த மேடையைக் கட்டுவதற்கு நீதிக்கட்சியாக இருந்த காலத்திலிருந்து, மிகப்பெரிய அளவிற்கு வாய்ப்புகளை மாற்றியிருக்கக் கூடிய ஒரு பெரிய வாய்ப்பு என்னவென்று சொன்னால், ஒரு பெரிய வரலாறு உண்டு. இளைய தலைமுறையினர் தெரிந்துகொள்ளவேண்டும். அன்று இளைஞராக இருந்து இந்த மாநாட்டில் பங்கேற்று இன்றைக்கு சுயமரியாதைச் சுடரொளிகளாக இருக்கின்றவர்களுக்கெல்லாம் வீர வணக்கத்தை செலுத்தி எங்கள் உரையை இந்தப் பவளவிழாவில் தொடங்கவேண்டும்.

சேலம் இரத்தினசாமி பிள்ளை அவர்கள்; தந்தை பெரியாருக்கு உற்ற நண்பராக என்றைக்கும் இருந்தவர்.

அதேபோல, தோழர் இராஜாராம் அவர்களுடைய தந்தையார் கஸ்தூரி பிள்ளை அவர்கள். இவர்கள் எல்லாம் நீதிக்கட்சிக் காலத்துத் தலைவர்கள்; நீதிக்கட்சியினுடைய வாரிசுகள். குகை ஜெகதீசனார் அவர்கள்; அதுபோலவே, இராஜா ராமலிங்கம் அவர்கள், எம்.என்.நஞ்சய்யா அவர்கள்.

அதைவிட, நீதிக்கட்சியும், சுயமரியாதை இயக்கமும் இணைந்த தோழர் சேலம் சித்தையன் அவர்கள்.

அதுபோலவே, சேலம் நடேசன் அவர்கள். இப்படி வரிசையாக சொல்லிக் கொண்டே போனால் பட்டியல் நீளும்.

பெரியார் நடத்திய மாநாட்டின் வரவேற்புக் குழுத் தலைவர்  பேராசிரியர் டி.வி.சொக்கப்பா அவர்கள்.

திராவிடர் கழகப் போராட்டத்தில் பங்கேற்று பலமுறை சிறைச்சாலைக்குச் சென்ற தோழர் பச்சைமுத்து அவர்கள், தனபால் அவர்கள், சா.திரு. அழகரசன் அவர்கள், சிவதாபுரம் சித்தையன் அவர்கள், வடிவேலு அவர்கள், சொக்கலிங்கம் அவர்கள், வெங்கடாசலம் அவர்கள், நாகப்பன் அவர்கள், சி.என்.நடராசன், லிங்கசாமி, மரகதம் மாரியப்பன், முருகேசன், தண்டாயுதம், தமிழ் அமுதன், அப்பாய், அம்மாப்பேட்டை முத்து, அம்மாபேட்டை முனுசாமி, பொன்னம்மா அர்த்தநாரி, கிருஷ்ணராஜ், சாம்பமூர்த்தி, சோலப்பன் அவர்கள் எல்லாம் திராவிடர் கழகத்தில்.

திராவிட முன்னேற்றக் கழகத்தில் எடுத்துக்கொண்டு பார்ப்போமேயானால்,

இராஜாராம் ஒருபக்கத்தில் இருந்தாலும், இ.ஆர். கிருஷ்ணன் அவர்கள். அவர்களுக்கெல்லாம் அடுத்த படியாக, சேலத்து சிங்கம் என்று கருதப்படும் நம்முடைய வீரபாண்டியார் அவர்கள்.

'பெரியார்' திரைப்படம்


பெரியார்' திரைப்படம் வந்த நேரத்தில், வீரபாண்டியாருடைய பணி இருக்கிறதே - அவரே போய் டிக்கெட் கவுண்டரில் போய் நின்று, ஒவ்வொருவரும் பெரியார் திரைப்படத்தைப் பார்க்கவேண்டும் என்று அவர்கள் சொன்னார்கள். வீரபாண்டியாருடைய வீரம் என்றைக்கும் இன்றைக்கு இந்த மண்ணிலே தங்கியிருக்கக்கூடியது.

இதுபோன்று எத்தனையோ தோழர்களை சொல் லலாம்; எடுத்துக்காட்டிற்காக ஒன்றிரண்டு பெயர்களை நான் சொன்னேன். ஏனென்றால், இத்தகையவர்களின் பெயர்களை சொன்னால், அந்தப் பட்டியல் நீண்டு, அதுவே என்னுடைய நேரத்தை எடுத்துக்கொள்ளும்.

அத்தகையவர்களுடைய உழைப்பு, அவர்களுடைய தொண்டு, அதன் காரணமாகக் கட்டப்பட்டிருக்கின்ற மேடை.

திராவிடர் கழகம் - திராவிட முன்னேற்றக் கழகமும் இரட்டைக் குழல் துப்பாக்கி என்று அண்ணா அவர்கள் சொன்னார்களே, அது எவ்வளவு உண்மை என்று இந்தப் பவள விழா மாநாடு காட்டுகிறது.

அண்ணா காலத்தில், இரட்டைக் குழல்; ஆனால், எங்கள் காலத்தில் அது இரட்டைக் குழல் அல்ல; இன்னும் பல குழல்கள் சேர்ந்து, ஒரு வெடிக்கக்கூடிய துப்பாக்கியாக இருக்கிறது என்று சொல்லக்கூடிய அளவிற்கு இந்த மேடை கட்டப்பட்டு இருக்கிறது.

'பெரியார் வாழ்க!


நாடாளுமன்றத்தில் முழக்கம்!


அதன் காரணமாகத்தான், இந்திய நாடாளுமன்றமே அதிர்ந்தது; அங்கே ஜெய்ராம்' என்ற முழக்கம் கொடுத் தார்கள்; அதற்குப் பதிலடியாக நம்முடைய உறுப்பினர்கள்  பெரியார் வாழ்க', அண்ணா வாழ்க, கலைஞர் வாழ்க, டாக்டர் அம்பேத்கர் வாழ்க, திராவிடம் வெல்க, தமிழ் வாழ்க என்று சொன்னார்கள். நாடாளுமன்றத்தையே அதிர வைத்தார்கள்.

அந்த அதிர வைத்ததற்குக் காரணமான கர்த்தா இதோ அமைதியாக அமர்ந்திருக்கின்ற எங்கள் அருமைத் தளபதி அவர்கள்.

எனவே,  இந்தப் பவள விழா ஒரு சரித்திரம் படைக்கக்கூடிய பவள விழா.

இந்தப் பவள விழாவில் எத்தனையோ கருத்துகளை சொல்லலாம்; நான் அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளப் போவதில்லை.

நமக்கெல்லாம் தன்மானத்தை உருவாக்கினார்கள்


ஒரே ஒரு செய்தியை சொல்லுகிறேன்.

நம்முடைய தலைவர் தந்தை பெரியார்; பேரறிஞர் அண்ணா; பெருந்தலைவர் காமராசர்; முத்தமிழ் அறிஞர் கலைஞர், தோழர் ஜீவா இப்படி பல தலைவர்கள் எல்லாம் அரும்பாடுபட்டு, நமக்கெல்லாம் தன்மானத்தை உருவாக்கினார்கள்.

திராவிடர் சமுதாயத்தைத் திருத்தி

மானமும், அறிவும் உள்ள மக்களாக இந்த மக்களை ஆக்கவேண்டும்; அதுதான் என்னுடைய ஒரே பணி'' என்று தந்தை பெரியார் அவர்கள் சொன்னார்.

அதுமட்டுமல்ல, நமக்கு மட்டுமல்ல, உலக மானுடத்திற்கே பதில் சொன்னார்கள்.

மனிதன் என்பவனுக்கு அழகு எது? ஒப்பனை அல்ல.

மானமும், அறிவும்

மனிதர்க்கு அழகு!

நான்கே வார்த்தையில் சொன்னார்.

கடலில்லா சேலம் மாநகரில்


கருங்கடல் - செங்கடல்!


அதுதான் திராவிட இயக்கம்; அதுதான் இந்த மேடை; அதுதான் மதச்சார்பின்மை; அதுதான் இந்த மாபெரும் மக்கள் கடல்; சேலத்தில் கடல் இல்லை, ஆனால், இதோ இருக்கிறது கருங்கடல், செங்கடல் எல்லாக் கடலும் இங்கே வந்திருக்கின்றன.

காரணம், எல்லோரும் அழைத்தோம். எல்லோரும் அழைத்தோம் என்றாலும், நேற்று எங்கள் தளபதி அழைத்த அழைப்பு இருக்கிறதே, அது சாதாரணமான அழைப்பல்ல.

இந்த இயக்கம் எப்படிப்பட்டது?

பெரியாருக்குப் பிறகு, அண்ணாவுக்கு பிறகு கலைஞர்

எவனடா சொன்னான், வெற்றிடம் இருக்கிறது, வெற்றிடம் இருக்கிறது என்று.

வெற்றிடமா? இல்லை, நீ இங்கே வந்து செல்ல வேண்டிய கற்றிடம் இது. அதுதான் முக்கியம்.

எங்களிடத்தில் வா! கற்றுக்கொண்டு போ!

ஆகவே, அப்படிப்பட்ட உணர்வுகள் இங்கே இருக்கக்கூடிய இந்தக் காலகட்டத்தில், நம்முடைய தலைவர்கள் அரும்பாடுபட்டு, நீதிக்கட்சி, திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், பொதுவுடைமைக் கட்சிகள் எல்லோரும் இணைந்து ஒவ்வொரு காலகட்டத்திலும் அரும்பாடுபட்டது இட ஒதுக்கீடு, சமூகநீதிக்காக. அந்த சமூகநீதிதான் அடிப்படை.

பெரியார் அவர்கள், காஞ்சிபுரத்தில் நடைபெற்ற காங்கிரசு மாநாட்டிலிருந்து வெளியேறி சுயமரியாதை இயக்கம் கண்டார்கள் என்று சொன்னால், சமூகநீதிக்காக. தென்னிந்திய நல உரிமைச் சங்கம் உருவாக்கப்பட்டது சமூகநீதிக்காக.

தந்தை பெரியார் காலத்தில், முதலாவது அரசமைப்புச் சட்டத் திருத்தம்


அவர்கள் உருவாக்கினார்கள் - நாம் அதை மேலும் முன்னெடுத்துச் சென்றோம். தலைவர் தந்தை பெரியார் காலத்தில், முதலாவது அரசமைப்புச் சட்டத் திருத்தம்.

பெரியார் இல்லையே என்று ஆரியம் கொக்கரித்தது. இட ஒதுக்கீட்டை நாம் எப்படியாவது கபளீகரம் செய்து விடலாம் என்று அப்பொழுது நினைத்தது; ஆனால், அண்ணா, கலைஞர் இவர்கள் எல்லாம் இருந் தார்கள். நாங்கள் இணைந்தோம் அந்த நேரத்தில். பொருளாதார அடிப்படை என்று இப்பொழுது 10 சதவிகித இட ஒதுக்கீடு என்று படமெடுத்து ஆடுகிறதே, ஒரு பாம்பு - அதற்கு ஒரு அடித்தளம் இருப்பதைப்போல, எம்.ஜி.ஆர். அவர்களை விட்டே, கொண்டு வந்து ஆரியம் மகிழ்ந்தது.

தவறை திருத்திக் கொண்ட எம்.ஜி.ஆர். 31 சதவிகிதத்தை 50 சதவிகிதமாக்கினார்!


நம் கையைக் கொண்டே நம் கண்களைக் குத்துவ தைப்போல, எம்.ஜி.ஆர். ஆட்சியைக் கொண்டே - பெரியாருக்குக் காணிக்கை என்று சொன்ன, அந்த வழியில் வந்த, அண்ணாவின் பெயரை வைத்துக் கொண்டிருக்கின்ற ஒரு ஆட்சியில், பெரியார் நூற் றாண்டில், 9 ஆயிரம் ரூபாய் வருமான வரம்பு என்று கொண்டு வந்த நேரத்தில், அதனை எதிர்த்து முறிய டித்தோம். அதனுடைய விளைவு, அவருடைய தவறை திருத்திக் கொண்டார். அந்த வகையில் அவர் பாராட்டுக்குரியவர். தவறை திருத்திக் கொண்டதோடு மட்டுமல்ல, அதற்கு வட்டியாகவே 31 சதவிகித இட ஒதுக்கீட்டை 50 சதவிகிதமாக்கினார்.

அதற்குப் பிறகு, இந்த இயக்கம் போராடியது. வகுப்புரி மையில் கை வைத்தால், இங்கு யாரும் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள்.

இந்த நாடு, இது பெரியார் மண்! பெரியார் மண்'' என்று சொல்கிறார்களே, "இது என்னய்யா பெரியார் மண்! இது பெருமையா?" என்று சிலர் கேட்கிறார்கள்.

அந்த "அறிவாளிகளுக்கு" நாங்கள் சொல்லிக் கொள்கிறோம். எப்படி இது பெரியார் மண் தெரியுமா? இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலாவது 69 சதவிகித இட ஒதுக்கீடு - தாழ்த்தப்பட்டவர்களுக்கு, பிற் படுத்தப்பட்டவர்களுக்கு, மலைவாழ் மக்களுக்கு, மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு உண்டா?

அதுவும் அரசியல் சட்டப்பாதுகாப்போடு கூடிய 9 ஆவது அட்டவணை பாதுகாப்பு என்று அரசியல சட்டத்தில் இருக்கக்கூடிய பாதுகாப்பு எந்த மாநிலத்தி லாவது உண்டா?

திராவிட மண் - திராவிட இயக்க பூமி - பெரியார் மண்!


தமிழ்நாட்டில் மட்டும்தான் உண்டு. காரணம், இது திராவிட மண் - திராவிட இயக்க பூமி - பெரியார் மண் - சமூகநீதி மண் என்பது.

எனவே, அப்படிப்பட்ட இந்த சமூகநீதி மண்ணுக்கு - இன்றைக்கு சோதனைகள் - அறைகூவல்கள் வந்திருக்கின்றன.

அரசமைப்புச் சட்டத்தின் முதல் திருத்தம், அரச மைப்புச் சட்டத்தில் 73 ஆவது திருத்தம் - அதுவும் பெரியார் இல்லாதபோது, அண்ணா இல்லாத போது - அதற்குப் பிறகு, மிகப்பெரிய வாய்ப்பு.

அதேகாலத்தில், கலைஞர் அவர்கள் ஆட்சிக்குப் போன அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, மத்திய அரசு கல்வி நிறுவனங்களான அய்.அய்.டி., அய்.அய்.எம். போன்ற நிறுவனங்களில், இட ஒதுக்கீடு இல்லை என்று சொன்னபொழுது, அதற்கும் இட ஒதுக்கீடு உண்டு என்று 93 ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தம்.

மூன்று அரசமைப்புச் சட்டத் திருத்தத்தை உருவாக்கியது இந்தப் பெரியார் மண் - திராவிட இயக்கம் என்பதை மறந்துவிடாதீர்கள்.

அவற்றுக்கெல்லாம் இப்பொழுது சோதனை ஏற்பட்டு இருக்கிறது - இந்த ஆட்சியிலே!

சொன்னார்களே, 35 நாள்கள் நாடாளுமன்றம் நடந்தால்; 37 மசோதாக்கள் நிறைவேற்றப்படுகின்றன என்று அவர்கள் மார்தட்டிக் கொள்கிறார்கள்.

அப்படிப்பட்ட இந்தக் காலகட்டத்தில், இப்பொழுது இந்தப் பவள விழா மாநாட்டில் நம் முன்னால் இருக்கக் கூடிய மிகப்பெரிய பிரச்சினை - நம்முடைய முன்னோர்கள், நம்முடைய தலைவர்கள் அரும்பாடுபட்டு, போராடிப் பெற்றுத் தந்த அந்த சமூகநீதி, நம் கண்முன்னால் அழிக்கப்படுவதை பார்த்துக் கொண்டிருக்கப் போகிறோமோ?

இதுதான் இன்றைக்குக் கேள்வி

இதுதான் இந்த மாநாட்டில் நமக்கு முன்னால் இருக்கக்கூடிய கோடானு கோடி மக்கள் - இங்கே நம்முடைய தலைவர்கள் அரும்பாடுபட்டு, போராடிப் பெற்றுத் தந்த அந்த சமூகநீதி, நம் கண்முன்னால் அழிக் கப்படுவதை பார்த்துக் கொண்டிருக்கப் போகிறோமோ?

இதுதான் இன்றைக்குக் கேள்வி

இதுதான் இந்த மாநாட்டில் நமக்கு முன்னால் இருக் கக்கூடிய கோடானு கோடி மக்கள் - இங்கே மட்டுமல்ல இந்தியாவிலுள்ள எல்லா பரப்பிலும் இருக்கக்கூடிய மக்களுக்காகவும் சேர்ந்ததுதான் மண்டல் கமிசன்; சேர்ந்ததுதான் இட ஒதுக்கீடு.

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்




எனவே, அப்படிப்பட்ட சூழ்நிலையில், இதோ ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் சொல்லுகிறார்,

இன்றைக்கு மீண்டும் விவாதிக்கவேண்டும் - இட ஒதுக்கீடு தேவையா? எடுத்துவிடலாமா? என்று.

நாக்கிலே தேனைத் தடவுவார்கள் அவர்கள். அது தான் ஆரியத்தினுடைய சூழ்ச்சி, லாவகம்.

ஆரியம் நேரிடையாக அதனை எதிர்த்து நிற்காது. விவேகத்தால் அவர்கள் வென்றதே கிடையாது - சூழ்ச்சியால், தந்திரப் பேச்சாமல்தான் வென்றிருக்கிறார்கள். அதைத்தான் அண்ணா அவர்கள் ஆரிய மாயை'' என்று அழகாக எடுத்துக்காட்டினார்கள்.

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் சொல்கிறார்,

"R.S.S. Chief Pitches for conversation on reservation in harmonious atmosphere"

மிகவும் சுமூகமான ஓரிடத்தில், நமக்கு மிக அழகாகக் கொண்டு வந்து செய்வார்கள். கிடாவை வெட்டுவதற்கு முன்பாக, அதற்கு ஒரு மாலை போடுவார்கள் பாருங்கள், அதுதான் இந்த "harmonious atmosphere".

அதேபோன்றதுதான், இன்றைக்கும் நம்முடைய பகுத்தறிவு, சமூகநீதியை ஒழிப்பதற்காக அவர்கள் சொல் வார்கள். இது அவர்களுடைய கொள்கைகளில் ஒன்று. இது புதிதல்ல. தங்களுக்கு மிருக பலம் கிடைத்திருக்கிறது நாடாளுமன்றத்தில் என்பதற்காக மட்டுமல்ல நண் பர்களே!

இதோ 2015 ஆம் ஆண்டில் அவர் பேட்டி கொடுக் கிறார். அதில் வெளிப்படையாக சொல்கிறார்,

Revised the  Reservation System

பீகாரில் தேர்தல் நடைபெறுகிறது மூன்றாண்டுகளுக்கு முன்பு -அங்கே போய் இதனை சொன்னார். அங்கே லாலுபிரசாத் இருந்தார்; நிதிஷ்குமார் அப்பொழுது லாலுபிரசாத் அவர்களோடு இருந்தார். சொன்னால் தீர்ந்துவிடுவீர்கள் என்று சொன்னவுடன், மோகன் பாவகத் கருத்தை தலைகீழாக மாற்றிப் பேசினார்.

ஆனால், இப்பொழுது பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது. அதைத்தான் நீங்கள் நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும்.

பெரியாரின் இராணுவம் என்பது இராணுவக் கட்டுப்பாட்டையும் தாண்டிய ஒன்று


எனவே, இந்தப் பவள விழா மாநாடு இருக்கிறதே, இது சாதாரண மாநாடு அல்ல; கேளிக்கை மாநாடு அல்ல.

ஊர்வலத்தில், கருஞ்சட்டைப் பேரணி கட்டுப்பாடாக நடந்தது. காவல்துறை நண்பர்களுக்குக்கூட முதலில் சந்தேகம். ஆனால், பெரியாரின் இராணுவம் என்பது இருக்கிறதே - இராணுவக் கட்டுப்பாட்டையும் தாண்டிய ஒன்று என்று இந்த நகரம் பார்த்தது.

யாருக்காவது ஒரு சிறு அசவுகரியம், செல்ல இடைஞ்சல்  உண்டா?

எங்கள் கிளர்ச்சிகளால், திராவிடர் கழகக் கிளர்ச்சி களால் பொதுச் சொத்துக்கு நாசம் உண்டா? பொது அமைதிக்குப் பங்கம் உண்டா என்றைக்காவது?

என்றைக்கும் கட்டிப் பிடித்த கரமாகத்தான் எங்களுடைய கரங்கள் இருக்கும்!


நாங்கள் சிறைச்சாலைக்குப் போயிருப்போமே தவிர, எங்கள் தளபதி போன்றவர்கள் இளைஞராக இருந்த நேரத்தில், மிசா கைதியாக சிறைச்சாலையில் அடிபட்டு தள்ளியபொழுது என்மேல்தான் வந்து விழுந்தார்; நானும் மிசா கைதியாக இருந்தேன். அன்றைக்குக் கட்டிப் பிடித்த கரம் - என்றைக்கும் கட்டிப் பிடித்த கரமாகத்தான் எங்களுடைய கரங்கள் இருக்கும்.

அதனை நன்றாக நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். அதுதான் இந்த இயக்கம்  - கொள்கைக் குடும்பம் - எங்களுக்கு ரத்த உறவைவிட - கொள்கை உறவுதான் மிகவும் முக்கியம்.

அதனால்தான், எங்களுடைய ஒருபக்கத்தில் திருமா-

இன்னொரு பக்கத்தில் அய்யா காதர்மொய்தீன்

இன்னொரு பக்கத்தில் பாலகிருஷ்ணன் -

இன்னொரு பக்கத்தில் எங்களுடைய தளபதி

இன்னொரு பக்கத்தில் நம்முடைய திருப்பூரார் துரைசாமி.

இப்படி எல்லோரும் நாங்கள் ஒன்றாக இருப்பதற்குக் காரணம், கொள்கை உறவு.

எனவே  நண்பர்களே, இப்பொழுது தோன்றியிருக்கிற இந்த இடர்ப்பாடு எல்லா துறைகளிலும்தான்.

இது அவர்களுடைய அடிப்படைக் கொள்கை. அரசி யல் சட்டத்தைத் தூக்கி எறிந்துவிட்டு, அந்த இடத்தில் மனுதர்மத்தைக் கொண்டு வரவேண்டும் என்பதுதான்.

முதன்முதலில் இட ஒதுக்கீட்டை உருவாக்கியதே மனுதர்மம்தான்!


ஆனால், முதன்முதலில் இட ஒதுக்கீட்டை உருவாக்கி யவனே, மனுதான். மனுதர்மத்தில்தான். படிப்பது எங்கள் வேலை - அடிமையாக இருப்பது உங்கள் வேலை என்று இட ஒதுக்கீட்டை உருவாக்கியதே மனுதர்மம்தான்.

எனவேதான், மனித தர்மத்திற்கும் - மனுதர்மத்திற்கும் போராட்டம்;

குலதர்மத்திற்கும் - சமதர்மத்திற்கும் போராட்டம்.

இந்தப் போராட்டம்தான் இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்தக் காலகட்டத்தில், அரசியல் வெற்றிகள் பெற்ற தமிழகத்தை வியப்போடு பார்க் கிறார்கள்.

அடுத்தபடியாக, தமிழகத்தில் இட ஒதுக்கீட்டை அறவே அழிக்கப்படவேண்டும் என்று சொல்லி, சமூக நீதிக்கு அவர்கள் சவால் விட்டால், அந்த சவால்களை நாம் ஏற்றுக்கொள்வோம். காலையில், 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றன.

கோல்வால்கரின் 'ஞானகங்கை!'


அவர்களுடைய கொள்கையை செய்கிறார்கள்; ஜாதியைக் காப்பாற்றவேண்டும் என்பதுதான் அவர்களு டைய கொள்கை. சொன்னாரே, சகோதரர் எழுச்சித் தமிழர், இதோ என்னுடைய கைகளில் இருப்பது ஞான கங்கை' ஆர்.எஸ்.எஸ். தலைவரான கோல்வால்கருடைய புத்தகம் இது. இதற்குப் பெயர் ஞானகங்கை - இப்பொழுது கங்கையையே சுத்தப்படுத்தவேண்டும்; அதற்காக 2 ஆயிரம் கோடியை செலவுபடுத்தினார்கள்; அப்பொழு தும் சுத்தப்படுத்த முடியவில்லை. கங்கையே சுத்தமாக இல்லை - பிறகு இந்த ஞானகங்கை எப்படி இருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள்.

இதுதான் மத்திய அரசாங்கத்தில் வரப்போகிற அடுத்த திட்டம். இந்தக் கொள்கைதான். அதற்காகத்தான் நான் இதனை சொல்கிறேன். இல்லையானால், அவருடைய புத்தகத்தை தூசித் தட்டி எடுக்கவேண்டிய அவசியம் நமக்கில்லை. இதைத்தான் அவர்கள் செய்துகொண்டிருக் கிறார்கள்.

இதை எதிர்க்கின்ற ஒரே சக்தி - மூன்றாவது கட்சியாக இருந்தாலும், திராவிட முன்னேற்றக் கழகமும், நம்முடைய கூட்டணிக் கட்சிகளும், நம்முடைய நாடாளுமன்ற உறுப் பினர்கள்தான் அங்கே போயிருக்கிறார்கள். இந்தியாவே இப்பொழுது கலகலத்துப் போயிருக்கிறது.

திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய வியூகம் எப்படிப்பட்டது!


தளபதி ஸ்டாலின் என்பவர் எப்படிப்பட்டவர் என் பதை இப்பொழுதுதான் அவர்கள் புரிந்துகொண்டிருக்கி றார்கள். அவர்களுடைய வியூகம், திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய வியூகம் எப்படிப்பட்டது என்பதைப் புரிந்துகொண்டிருக்கிறார்கள்.

இதோ பேசுகிறார் ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல் வால்கர்,

நம்முடைய சமுதாயத்தின் மற்றொரு விசேஷ அம்சம் நான்கு வருண அமைப்பாகும். இன்று அது ஜாதிவாதம் என்று கூறி, கேலி செய்யப்படுகிறது. வருண அமைப்பு என்று கூறுவதே கேவலமானது என்று நம் மக்கள் எண்ணுகின்றனர். இந்த நால் வருண அமைப்பில் உருவாகிய சமுக அமைப்பினையே, சமுக சமநீதிக்குப் புறம்பானது என்று தவறாக எண்ணுகின்றனர்.

அடுத்தது,

இன்றைக்கு இந்து சமுதாயத்தின் வருண அமைப்பு முறை தெரியாமல், உரு தெரியாத அளவிற்குக் கெட்டு விட்டது. காலப் போக்கில் தீய சக்திகளால் வருண முறை பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த ஜாதி முறையை இன்றைக்குக் கண்டிக்கும் கூட்டத்தின் போக்கினாலேயே, ஜாதிமுறை கட்டுப்பாடு இன்றைக்கு இறுகிவரக் காணு கின்றோம்.

ஆரியம் - திராவிடம் வேறுபாடு!


"ஜாதியை ஒழிக்காதே - வருணாசிரமத்தைக் காப்பாற்று" என்பது ஆரியம், ஆர்.எஸ்.எஸ்.

"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்பதுதான் திராவிடம்.

எனவே, ஆரியம் - திராவிடம் என்பதற்கு அகரா தியைப் புரட்டிக் கொண்டிருக்கவேண்டிய அவசியம் இல்லை.

பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கிய பொழுது, "அனைவருக்கும் அனைத்தும்" என்றார்.

யாதும் ஊரே - யாவரும் கேளீர் என்பதுதான் திரா விடம்.

அதேநேரத்தில், அவர்களுடைய நிலை என்ன? இந்த இயக்கம் ஏன் தேவைப்படுகிறது? வெறும் அரசியல் களத்தில் வெற்றி பெற்றால் மட்டும் போதுமா? அதற்கு அடித்தளமாக நாம் எதிலே கவனமாக இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் இந்த பவள விழா மாநாடு. நீங்கள் போகும்போது, அந்த உணர்வோடு திரும்பவேண்டும். கோல்வால்கர் "ஞானகங்கை" நூலிலிருந்து இன் னொரு பகுதி, (பக்கம் 171)

"நமது தேசிய மொழிப் பிரச்சினைக்கு வழிகாணும் முறையில், சமஸ்கிருதம் அந்த இடத்தைப் பெறும் வரையில், சவுகரியத்தை ஒட்டி இந்தி மொழிக்கு அந்த இடத்தை நாம் தர வேண்டியிருக்கும்.'' அழகாக எழுதினார், நம்முடைய தளபதி அவர்கள், பவள விழா மாநாடு எங்களுக்குப் பயிற்சிக் களமாக இருக்கும்'' என்று. இதிலிருந்து நாம் அந்தப் பயிற்சியைத் தெரிந்துகொண்டு, களத்தை நோக்கி நாம் கிளம்பத் தயாராகவேண்டும்.

இன்னும் போர் முடியவில்லைதான் நண்பர்களே - களங்களில் தான் வெற்றி பெற்றிருக்கிறோம் -அறப்போரில் வெற்றி பெற்றாக வேண்டும். வெற்றி பெறுவோம் - வெல்வோம் என்பது உறுதி!

செம்மொழி தமிழ் - முத்தமிழ் அறிஞர் கலைஞர் இல்லையென்றால், சமஸ்கிருதத்திற்கே கூட செம்மொழித் தகுதி வந்திருக்காது. முதலில் ஏற்கெனவே சமஸ்கிருதம் செம்மொழி தகுதி பெற்றிருந்தது என்று புளுகிக் கொண் டிருந்தார்கள். தமிழுக்கு செம்மொழித் தகுதி கிடைத்த வுடன்தான், சமஸ்கிருதத்திற்கு செம்மொழித் தகுதி கிடைத்தது.

136 கோடி மக்கள் தொகையில், வெறும் 24,500 பேர்தான் சமஸ்கிருதம் பேசுகிறார்கள்!


ஆனால், அவர்களுடைய மொழியில், சமஸ்கிருதம் தேவபாஷை. 136 கோடி மக்கள் இருக்கின்ற இந்தியாவில், அவர்களே புதிய கல்விக் கொள்கையில் கொடுத்திருக் கின்ற புள்ளி விவரம், வெறும் 24 ஆயிரத்து 500 பேர்தான் சமஸ்கிருதம் பேசுகிறார்கள். ஆனால், எங்கள் செம்மொழி தமிழ் மொழி இருக்கிறதே, உலகம் முழுவதும் பல நாடுகளில் ஆட்சி மொழிகளாக இருக்கிறது. அதை நினைத்துப் பெருமைப்படுகிறோம்

ஆனால், அவர்களுடைய அகராதியில், அவனுடைய மொழி தேவமொழி - நம்முடைய மொழி நீஷபாஷையாம்.

தமிழனுக்கு மானம் உணர்ச்சி இருந்தால், தமிழில் பெயர் வைக்கவேண்டாமா? தமிழர்களுக்கு உணர்வு இருக்கவேண்டாமா?

எனவே, மொழி வெறுப்பல்ல நண்பர்களே, நம்மு டைய மானம், நம்முடைய அறிவு இவைகள் காப்பாற்றப் படவேண்டும்.

நம்முடைய தலைவர்கள் பெற்றுத் தந்த அந்த உரி மைகளை நாம் பாதுகாக்கவேண்டும். அதிகப்படுத்தா விட்டாலும், குறைந்தபட்சம் பாதுகாக்கவேண்டும். அத னைப் பாதுகாக்க நாம் தயாராவோம் என்பதுதான்.

தொடங்குவது நாங்கள் - முடிப்பது அவர்கள்!


என்னுடைய உரை தலைமை உரை; அடுத்து வரப்போகிற தளபதி உரை நிறைவுரை. தொடங்குவது நாங்கள் - முடிப்பது அவர்கள் என்ற அளவில் இந்த லட்சோப லட்சம் திரண்டிருப்பார்கள் என்பதில் சந்தேக மில்லை.

இதோ பெரியார் பேசுகிறார்,

திராவிடர் கழகம் என்று மாற்றிய இந்த சேலத்தில்,

அடுத்த ஆண்டு திருச்சியில் மாநாடு நடத்தினார். அப்பொழுது பெரியார் ஒரு செய்தியை சொன்னார்.

பெரியார் பேசுகிறார், கேளுங்கள்!


அந்த செய்தியோடு என்னுடைய தலைமை உரையை நிறைவு செய்கிறேன்.

தோழர்களே! துணிவு கொள்ளுங்கள், சாகத் துணிவு கொள்ளுங்கள். உங்கள் சொந்த வாழ்வு நலத்தையும், மானத்தையும் விட்டுத் தொண்டாற்றத் துணிவு கொள் ளுங்கள். இதுதான் இன்றைய திராவிட வாலிபர் கழக ஆண்டு விழாவில், இனி வெகுகாலம் வாழப்போகும் மக்களாகிய உங்களுக்குச் சாகப்போகும் கிழவனாகிய நான் வைத்துவிட்டு போகும் செல்வமாகும்.

மனிதன் பிறந்தவன் என்றைக்காவது சாகப் போகிறான்; கொள்கைக்காக சாகட்டுமே -  லட்சியத்திற்காக விலை கொடுக்க சாகட்டுமே - நோயால் சாவதைவிட, விபத்தால் சாவதைவிட, லட்சியத்திற்காக சாவது பெருமையல்லவா! லட்சியத்திற்காக செத்தவர்கள் செத்தவர்கள் அல்ல; வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் - சாக்ரடீசைப்போல, பெரியாரைப்போல, அண்ணாவைப் போல, காமராசரைப் போல, மார்க்சைப் போல கலைஞ ரைப் போல வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். இவர்கள் எல்லாம் இன்றைக்கு நம்மோடு இருக்கிறார்கள் என்றால், உருவத்தாலா? தத்துவத்தால்தான்).

இளைஞர்களே, நீங்கள் கேளிக்கைகளில் ஈடுபடா தீர்கள்.சில புதுப் புது பந்தயங்களை குதிரைகள்மீது கட்டு வார்கள், மத்தியில் இருந்து - சில சினிமாக் குதிரைகளை இப்பொழுது பந்தயம் கட்டலாம் என்று நினைக்கிறார்கள்; எச்சரிக்கையாக இருங்கள். காலையில் நிறைவேற்றப்பட்ட 25 தீர்மானங்களில் அதுவும் ஒரு தீர்மானம். எந்தக் குதிரை வந்தாலும், இந்தப் பந்தயக் குதிரைகளின் முன் னால், அந்தக் குதிரைகள் வெல்ல முடியாது என்பதை நாம் நிரூபித்திருக்கிறோம். மீண்டும் அவசியம் வந்தால், நிரூபித்துக் காட்டத் தயாராக இருக்கிறோம்.

உன் சொந்த மானத்தை விட்டாகிலும், உன் இன ஈனத்தை ஒழிப்பதற்குத் தொண்டு ஆற்று.

உன் இனத்தின் இழிவை, ஈனத்தைப் போக்க உன் சொந்த மானத்தையும் பலிகொடு.

இனத்தின் மானத்தைக் காக்க எவ்வகைத் துன்பத் தையும் பொறுத்துக்கொண்டு தொண்டாற்றத்தக்க குடி மகன் இல்லாத இனம் வேர்ப் பற்றில்லாத மரம்போல்,  கோடரிகொண்டு வெட்ட வேண்டிய அவசியம் இல்லாத மரம்போல்  தானாகவே விழுந்துவிடும். தன் இனத்திற்கு உண்மையான தொண்டாற்றுபவனுக்கு அடையாளம் என்ன வென்றால் அத்தொண்டால் ஏற்படும் இன்ன லுக்கும், துன்பத்திற்குமே அவனது வாழ்வையும், உட லையும் ஒப்புவித்து விட்டவனாக இருக்க வேண்டும்.

இது நான் சொல்வதல்ல, குறள் வாக்கியமாகும்".

எச்சரிக்கை! பெரியாரின் எச்சரிக்கை! பவள விழா நேரத்தில் பெரியார் தொண்டர்களின் எச்சரிக்கை! நாம் எடுக்கவேண்டிய சூளுரை.

தமிழ்நாடே சிறைச்சாலையாகட்டும் - நம்முடைய உரிமைகளைக் காப்பாற்றுவோம்!


எனவே நண்பர்களே!

நீங்கள் இந்தப் போராட்டத்தில், மாநில உரிமைகளைப் பெற்றுத் தருவதில்,  மொழி உரிமைகளைப் பெற்றுத் தருவதில், சமூகநீதி உரிமைகளைப் பெற்றுத் தருவதில் அணியோடு இருங்கள் - சிறைச்சாலை அழைத்தால், தமிழ்நாடே சிறைச்சாலையாகட்டும் - நம்முடைய உரிமைகளைக் காப்பாற்றுவோம்!

வாழ்க பெரியார்!

வாழ்க திராவிடர் இயக்கம்!

நன்றி, வணக்கம்!

வாழ்க திராவிடர் இயக்கம்!


வெல்க திராவிடர் இயக்கம்


இதற்கு ஒத்துழைத்த அத்துணை தோழர்களுக்கும் தனித்தனியே பாராட்டு சொல்வதைவிட, அத்துணை பேருக்கும் தலைதாழ்ந்த நன்றியை, உங்கள் தோழன், உங்கள் தொண்டன், ஒரு 11 வயது சிறுவனாக இருந்துவிட்டு, இன்றைக்கும் 86 வயது, என்றைக்கும் இளைஞனாகவே இருந்துகொண்டு இருக்கிற ஒருவன் உங்களுக்கு சொல்கின்ற வார்த்தை இதுதான்!

நன்றி, வணக்கம்!

வாழ்க திராவிடர் இயக்கம்!

வெல்க திராவிடர் இயக்கம்!

இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

- விடுதலை நாளேடு, 1. 9. 19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக