வியாழன், 5 செப்டம்பர், 2019

பெரியார் அவர்களின் கருத்துக்களுக்கு பார்ப்பனப் பேரறிஞர்களின் ஒப்பம் - 7

தந்தை பெரியார்


முன்ஷி - பிர்லா - ராதாகிருஷ்ணன் - வெங்கட்ராம சாஸ்திரியார் ஆராய்ச்சி நூலில் காணும் உண்மைகள் விடுதலையின் விளக்கம்:-

3.9.2019 அன்று தொடர்ச்சி...

அசுரர்பற்றிய உண்மை


அசுரர் என்றால் கெட்ட குணங்களைக் கொண்டவர்க ளென ராமாயணம் முதலிய சில புராணங்களில் சித்தரிக்கப் பட்டுள்ளன. இது துவேஷத்தால் கூறப்படுவதேயாகும். தேவர்களைவிட அசுரர்களே நாகரிகத்தில் சிறந்தவர்களாக இருந்தனர் என்று ஆரியர் மத நூலான பிராமணங்கள் என்பதில் பலவிடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. மற்றும், வேதங்களிலும் பல புராணங்களிலும் தேவர்களின் அண்ணன்மாரே அசுரர் எனக் காணப்படுகிறது.

வேதம் - பாடல் திரட்டு


ரிக் வேதம் வீரர் வரலாறோ, சரித்திர வரலாறோ அல்ல. கடவுளுக்குப் பலியிடும்போது வேதியக் குழுவினர் பாடி வந்த பாடல்களின் தொகுப்பே இந்த ரிக்வேதம் என்பது. சாமவேதமோ வெறும் இசைப்பாடல்; யஜுர்வேதம் மந்திரங் களின் (ஆள் பெயர்) தொகுப்பு; யாகத்தின் போது உச்சரிக்கப் படுவன.

அதர்வண வேதம் சாதாரண மக்கள் கொண்டிருந்த கொள்கைகளையும் நம்பிக்கைகளையும் எடுத்துக்காட்டு வது. பிற்காலத்தில் இது பிராமண மதத்தில் சேர்க்கப்பட்ட தாகும். ஆரிய வேத மதம் நீண்ட காலம் நீடித்திருக்கவில்லை என்றும், பின்னர் இந்த நாட்டு மக்களுக்கு ஏற்பப் பலவித மாறுபாடுகளைக் கொண்டு இறுதியில் இந்து மதத்தில் கலந்துவிட்டதென்றும் தெரிகிறது.

ஆரிய மதப் பிரசாரகர்கள்


ஆரியர்கள் (பார்ப்பனர்) திராவிட மக்களைக்கொண்டே திராவிடர்களை ஒடுக்கும் தந்திரத்தை மேற்கொள்ளுபவர் களென்றும், ஆரியர்களுக்கு உதவியாகவும் ஆரியர் (பார்ப் பனர்) சிறப்புப் பெறத் துணைவர்களாகவும், பார்ப்பனர்களின் தாசானுதாசர்களாகவும், அடியார்க்கு அடியார்களாகவும் இருந்த திராவிடர்களே, ஆழ்வார்களாகவும், நாயன்மார் களாகவும் ஆக்கப்பட்டனர் என்றும் விடுதலையிலும் பெரியாரவர்களும் பன்முறை எடுத்துக்காட்டியிருப்பது நினைவிருக்கலாம். இந்த உண்மையை இந்த நூலாசிரியர் களும் ஆமோதிக்கின்றனர். அதாவது, இராமனும் கிருஷ்ணமும் ஆரிய மதத்தை தென்னாட்டிலும் கிழக்கு வட்டாரங்களிலும் பரப்ப உதவி புரிந்ததால்தான் இவர்கள் பிற்காலத்தில் அவதார புருஷர்களாகப் பார்ப்பனரால் ஆக்கப் பட்டனர் என்கின்றனர். கிருஷ்ணனும் ஒரு அசுரனே (சூத்திரனே) என்றும் ஒப்புக்கொள்ளப்படுகிறது. ஒரு அசுரன் (சூத்திரன்) கடவுள் அவதாரமாக்கப்பட்டது ஆரிய மதப் பிரசாரகனானதால்தான் என்பது தெளிவாகிறது. இதேபோல் இராமனும் பார்ப்பான் அல்ல. அரசகுலத் தலைவன். இவனும் ஆரிய மதத்தைத் தென்னாட்டில் பரப்ப ஆரியப் பார்ப்பனரென்ற முனிவர்களுக்கு உதவி புரிந்ததால்தான் அவதார புருஷனாக்கப்பட்டான். பிராமணர்களுக்குதவியாக வும் முன்னணியாகவும் சென்று க்ஷத்திரியர் என்ற ஆரிய அரசகுலத்தார் தென்னாட்டில் வாள் முனையால் ஆரியத் தைப் பரப்பினர். இந்த க்ஷத்திரியரைத் தொடர்ந்து வந்த பார்ப்பன முனிவர், பின்னர் தென்னாட்டில் தங்கி ஆரியக் கலாச்சாரத்தைத் தென்னாட்டு மக்களிடையே பரப்பினார் (பக்கம் 314).

ஆரிய அரசர்களின் ஆதரவும் பாதுகாப்பும் இல்லாதிருந் தால் பிராமணர்களுக்குச் (பிராமணர் மத ஏடுகள்) சக்தியற் றுப் போயிருக்கும். ராமன் போன்றோர்களின் படையெடுப் பினால் தான் பிராமண மதம் தென்னாட்டில் வேர்பற்ற வழி ஏற்பட்டது. ஆரியக் கலாச்சாரத்தை இராமன் தென்னாட்டில் பரப்பி நடத்திய படை எடுப்புப் பற்றிய வரலாறே இராமாய ணம் (பக்கம் 315).

உடன்பிறப்புத் துரோக நாடகம்


தென்னாட்டில் ஆரியக் கலாச்சாரத்தைப் பரப்பவந்த பார்ப்பனர்களில் (முனிவர்) முக்கியமானவர் அகஸ்தியர். இவர் இராமர் படையெடுப்புக்குப் பல்லாண்டுகளுக்கு முன்பே தென்னாட்டை அடைந்து, இராமர் படையெடுப் புக்கு வழிகோலியவர் என ஆராய்ச்சி நூல்கள் பகருகின்றன. இராமாயணம் நெடுக உடன் பிறந்தார் துரோக நாடகமாகத்தா னுள்ளது. அதாவது, திராவிட வீரர்கள் ஒழிக்கப்பட்டுள்ளனர்.

அண்ணன் தம்பிகளான வாலியையும் சுக்ரீவனையும் மோதவிட்டு, வாலியை ஒழித்துக்கட்டிச் சுக்ரீவனைத் தனக் குத் தாசனாக்கிக் கொண்டான் ஆரியப் பிரசாரகனான இராமன்.

அடுத்தபடி வாலியின் (சுக்ரீவன் ஆக்கிரமித்துக் கொண்ட திராவிட மக்கள்) படையைக்கொண்டே இலங்கை மீது படையெடுப்பு நடந்து, இலங்கையிலும் தம்பி விபீஷண னைத் தனக்குத் துரோகக் கையாக்கிக் கொண்டு இராமன், இராவண மாவீரனை ஒழித்தான். அண்ணனை அயலான் ஒழிக்க உதவி புரிந்ததற்காக அந்த விபீஷணனுக்கு ஆழ் வார் என்ற பட்டமளித்தனர் பார்ப்பன மதத்தரகர்கள். ஆழ் வாரென்றால் என்ன அர்த்தம் என்று தெளிவுபடவில்லை பக்தியில் ஆழ்ந்தவர்களென்கின்றனர் வைஷ்ணவர்கள்; பிராமண மதக்கோட்பாடுகளில் தமிழ்நாட்டை ஆழ்த்தியவர் கள் என்பது ஒருவாறாகப் பொருந்துமெனலாம்.

பாகவதம்


வைஷ்ணவ மதக்காரர்களின் உயிர்நூல் பாகவதம் என்பது இராமாயணமும் பாரதமும் வெறும் சண்டை வரலாறுகளானதுபோல், இந்தப் பாகவதம் நெடுக கிருஷ் ணனின் காதல் விளையாட்டு விவரங்களைக் கொண்ட நூலாகவுள்ளது. உலக நலனுக்காக, மக்கள் முன்னேற்றத் துக்காக இந்த நூலில் என்ன சீர்திருத்தக் கொள்கைகள் உள்ளனவென்பது புலனாகவில்லை. ஆயினும், வேத மதத்தார்களின் துறவுக் கொள்கையைச் செல்லாக் காசாக்கி, இல்லறச் சிறப்பை மக்கள் உணரத் தீட்டப்பட்ட நூல் பாகவ தம் எனின் ஒருவாறாகப் பொருந்தும். இந்தக் கிருஷ்ணனைப் பற்றிய வரலாறுகளும் ஒன்றுக்கொன்று இணைந்ததாக இல்லை.

துவாரகைக் கிருஷ்ணன் வேறு; பாகவதக் கிருஷ்ணன் வேறு; பாரதக் கிருஷ்ணன் வேறு என்றே ஆராய்ச்சியில் அறியக்கிடக்கிறது. கிருஷ்ணனும் ஒரு அசுரனே; அதாவது ஆரியனல்லாதவன், ஆரியருக்கு முன்குடிகளான மக்களைச் சேர்ந்தவனெனவும் இந்நூலாசிரியர் கருதுகிறார். கிருஷ்ணன் ஆரியப் பார்ப்பான் அல்லன் என்பது தெளிவு. ஏனெனில் அவன் யாதவர் குலத்தினன்.

அவதாரமா?


ஆரியனல்லாத கிருஷ்ணன் ஆரியவேதியரால் எப்படி அவதார புருஷன் ஆக்கப்பட்டான் எனக் கேள்வி எழுகி றது. இவனும் விபீஷணனாகி, ஆரிய மதப் பிரசாரங்களுக்கு ஆரிய வேதக் கோட்பாடுகளை - பிராமண மதக்கொள்கை களை இந்நாட்டில் பரப்பும் போர் நடத்தியதால்தான் இவனும் அவதாரமாக்கப்பட்டான் என்பதும் இந்நூலில் காணக்கிடக்கிறது.

கிருஷ்ணன், துவாரகையையடைந்து இயற்கை வணக்க முறையைப் பரப்பி வந்தான் என்றும் இந்நூலில் குறிப் பிடப்பட்டுள்ளது. (பக்கம் 299) இதிலிருந்து இந்தக் கிருஷ் ணன் வேறு, பாரதக் கிருஷ்ணன் வேறு என்று சந்தேகிக்கச் செய்கிறது. பாரதம் நடப்பதற்கு முன்பே கிருஷ்ணன் அவ தாரமாக்கப்பட்டிருப்பதாகவும் இந்நூல் சுட்டிக்காட்டுகிறது.

பாகவதத்தையும், கிருஷ்ணன் இயற்கை மதப்பிரசாரகன் என்பதையும் கவனிக்குமிடத்து, இந்தத் துவாரகைக் கிருஷ் ணன் பிராமண மத எதிர்ப்பாளனாகவுமிருக்கலாமெனச் சந்தேகிக்கச் செய்கிறது. அப்படியிருக்க இவன் அவதார புருஷனாக்கப்பட்டதன் ரகசியம் என்ன?

பிராமண மத எதிர்ப்பாளரான புத்தரை, எப்படி விஷ்ணு வின் அவதாரமென உரிமை கொண்டாடுகிறார்களோ அதேபோலத்தான் இந்தக் கிருஷ்ணனின் அவதார ரகசியமும் இருக்க வேண்டுமென எண்ணச் செய்கிறது.

அப்படியாயின், கீதை யாரால், எப்போது உண்டாயிற் றெனக் கேள்வி பிறக்கலாம்.

கீதையின் முன்னுரையில் (துவக்க அத்தியாயத்தில்) ஒரு முனிவர் தன் சீடனுக்கு இந்த கீதையைச் சொல்வது போல அமைந்துள்ளது. எனவே, இந்த முனிவர் அல்லது வேறொருவர் பிற்காலத்தில் இந்தக் கீதையை எழுதிப் பாரதத்துடன் சேர்த்திருக்க வேண்டுமெனக் கீதையின் முதல் அத்தியாயம் எண்ணச் செய்கிறது.

கண்ணன் திருவிளையாடலும் பொய்


பாகவதத்திலுள்ள தெய்வங்களையும் இந்து முன்ஷியார் ஆராய்ச்சி நூல் பொய்யாக்குகிறது.

அதாவது, சிறு குழந்தையான கிருஷ்ணன், கங்கை ஆற்றிலிருந்த பல தலைகளைக் கொண்ட பாம்புடன் சண்டை போட்டு அடக்கி அதை அதன் குடும்பத்துடன் விரட்டினான் என்கிறது பாகவதக்கதை. வைதீகக் குழுவினரான இக்கழகத்தார் தொகுத்துள்ள இந்த வேதகால ஆராய்ச்சி நூலில், கிருஷ்ணன் பிறந்த சில ஆண்டுகளில் நரிகளின் தொல்லைக்குப் பயந்து யாதவர்கள் கோகுலத்தை விட்டுப் பிருந்தாவனத்திற்குக் குடியேறினர். அங்கிருந்த நாக சாதித் தலைவனான காளிங்கன் என்பவனைக் கிருஷ் ணன் அடக்கி, அக்காளிங்கனையும் அவனுடைய இனத் தாரையும் வேறிடத்துக்குச் செல்லச் செய்து யாதவர்களை அங்குக் குடியேறச் செய்தான். (பக்கம் 280) மற்றும் அங்குள்ள மக்கள் இந்திர யாக முறையைக் கைவிடச் செய்து இயற்கை வணக்க முறையைக் கைக்கொள்ளச் செய்தான் என்றுள்ளது.

கிருஷ்ணனை அவதாரமாக்கியது மகாபாரதத்திற்கு முன்னே நிகழ்ந்திருப்பதாக இந்நூல் கருதுகிறது (பக்கம் 299).

பார்ப்பனர் - அரச மரபினர் சச்சரவு


பார்ப்பனர்களைவிட நாடாளும் குலத்தோர் (க்ஷத்திரியர்) உயர்ந்தவர் எனக் காட்டத்தான் புராணக் கதைகள் தீட்டப் பட்டதாகச் சிலர் கருதுகின்றனர். ஆனால், இக்கதைகளைத் தீட்டியோர் முனிவர் என்ற ஆரியப் பார்ப்பன வேதிய குலத்தவராதலின், ஆளும் மரபினர் சிறப்பைக் கூறுவது போல், அச்சிறப்பின் மறைவிலே ஆரியமதக் கோட்பாடு களையும் வேதியர் சிறப்புகளையும் நுழைத்தனர் என்பதே பொருத்தமாகும். ஏனெனில், அரசன் எவ்வழியோ அவ்வழிக் குடிகள் என்ற மெய்மொழிப்படி, அரசர் வரலாறுகள் மூலம் ஆரியக் கொள்கைகளை திராவிட மக்களிடையே பரப்பினர் என்பதே உண்மையாகலாம்.

மற்றும், இம்மகாபாரதம் உண்மை சரித்திர வரலாறா என்பதையும் இந்த நூலாசிரியர்கள் சந்தேகிக்கின்றனர். பிற்கால வேத நூல்களில் மகாபாரதம் பற்றிய குறிப்பு இல்லை என்றும், இப்போது கிடைக்கப்பெறும் மகாபாரதம் பிற்காலத் தொகுப்பு என்றும், இவர்களும் ஒப்புக் கொள் கின்றனர். இராமன் கிருஷ்ணனைப் பற்றிய வரலாறு யாதாயி னும் ஆரிய கலாச்சாரத்தை இந்தியாவெங்கும் பரப்ப இந்தியாவில் ஆரியர் குடியேற வழிசெய்த, ஆரியப் போர் வீரர்கள் இவர்கள் என்பதில் சந்தேகமில்லை என்கிறது இந்நூல் பக்கம் (315).

பரசுராமன்


மேற்குக் கரையோரங்களில் முக்கியமாக பம்பாய், கொங்கணம், மராட்டா, துளுவம், கேரள வட்டாரங்களில் ஆரியத்தைப் பரப்பியவன் பரசுராமன்.

கி.மு. 6ஆவது நூற்றாண்டு வாக்கில் அதாவது பாணினி காத்யாயனா என்ற சமஸ்கிருத இலக்கணப்புலவர்கள் காலத்தில்தான் தென்னாட்டாருடன் தொடர்பு கொண்ட தாகத் தெரிகிறதென்கின்றனர் இந்நூலாசிரியர்கள். எனவே, இராமாயண புராண காலங்களில் இலங்கைவரை ஆரியர் ஆதிக்கம் கொண்டதாக இராமாயணப் புலவர்கள் கூறுவது ஆதாரமற்றதாகிறது. இராமாயணமும் கட்டுக் கதையாகிறது.

ராட்சதர் - அரசர், நைத்தியர், தானவர், நாகர் ஆகிய இனத்தவர் ஆரியப்படையெடுப்பைத் தடுத்துக் கடும்போர் நடத்திய மக்கள் ஆவர். வேதகால ஆரியரும் இவர்களை மனிதர்களாகத்தான் வர்ணித்துள்ளனர். பின்னர், புராணக் கதைகளைப் புனைந்தவர்களே, இனத்துவேஷத்தால் இழிவுதொனிக்கும் முறையிலும், பல்பொருள் சொற்களிலும் வர்ணித்துள்ளனர் என இவ்வாராய்ச்சி நூலில் காணப்படுகிறது.

மந்திரம் என்றால், தேவனைத் துதி செய்யாது அத்தேவ னிடம் வரம் கேட்கும் பாக்கள் என்று யாஸ்கா என்பவர் எழுதியிருக்கிறார். (பக்கம் 34).

ரிக் வேதப் பாக்களைத் தொகுத்தவர்கள் புரோகிதர்களே என்றும், அந்த உரிமையிருந்ததென்றும் இந்நூலில் காண் கிறது. எனவே, வேதங்கள் என்பன புரோகிதர்களின் கைச் சரக்கு - எழுத்துச் சித்திரங்களேயாகின்றன.

மற்றும், வேத ஆரியர்கள் எல்லோரும் ஒரு மாதிரியான மொழி பேசவில்லை என்பதும் விளக்கப்படுகிறது.

பணம் பறிக்கப் பயமுறுத்தும் பாக்கள்


மந்திரங்கள் என்பன புரோகிதர்கள் பணக்காரர்களிட மிருந்து பணத்தைப் பிடுங்கிப் பார்ப்பனருக்குக் கொடுக்கக் கையாண்ட பயமுறுத்தல் பாடல்கள் என்று இந்நூலில் விளக்கம் தரப்பட்டுள்ளது. (பக்கம் 342).

இதனால்தான் வேத பாடல்களில் கடுமையான, காரசார மான சொற்கள் புகுத்தப்பட்டுள்ளனவாம்!

இவ்விதம், பணக்காரர்களை அச்சுறுத்திப் பிடுங்கப்படும் பணம் பார்ப்பனர்க்கேயாகும்; ஏழைகளுக்குத் தரப்பட வில்லை என்றும் ஏழைகளிடம் உண்மையான பரிவு, அனு தாபம் காட்டும் பண்புகள் ரிக்வேதத்தில் இல்லை என்றும் இந்நூலில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. மற்றும், வேதப் பாடல்கள் எல்லாம் வெறும் சடங்குமுறைப் பாடல் தொகுப் பேயென்கின்றனர்.

தெய்வத்தைப் புகழ்ந்து தலைதடவி அருள்பிச்சை கேட்பதே வேதத்தின் குறிக்கோள்.

யமதர்மராஜனைப் பற்றியோ, மோட்ச நரகத்தைப் பற்றியோ ஆதி வேதத்தில் குறிப்புக் காணோம் என்பதால், இவை பிற்காலத்துப் பார்ப்பன புரோகிதர்களின் பிழைப்புக் காகப் புனையப்பட்ட கட்டுக்கதையாகிறது.

நாலாயிரப் பிரபந்தம் - நாயன்மார் பாடல்கள் ஆகிய வற்றிலுள்ளது போன்றே ரிக் வேதத்திலும் காதல் துறைப் பாடல்களும் கலந்துள்ளன. தெளிவுறக் கூறுமிடத்து மத சம்பந்தமற்ற பாடல்களும் ரிக் வேதத்தில் அதிகமுள்ளன.

ரிக் வேதத்தில் பிறவிச் சாதிப் பிரிவு பற்றி யாதொரு குறிப்பும் காணோம். மனுதர்ம சாஸ்திரம், கீதை முதலியவற் றில் தான் பிறவிச் சாதிச் செய்திகள் காணப்படுகின்றன. எனவே, பிற்கால பிராமண மதத்தினர்களின் கற்பனையே இந்தச் சாதி வேறுபாடு என்பது வெட்டவெளிச்சமாகிறது. ஆரியர்களும் நரபலிக் கோட்பாட்டினராக இருந்துள்ளனர். ஆயினும், பிற்காலத்தில் மனிதர்களுக்குப் பதிலாக மிருகங்களைப் பலியிட்டனர்.

மற்றும், ஆரியர்கள் ஒரே கடவுள் கொள்கை கொண்ட வர்களல்லர்; ஒவ்வொரு குடும்பமும் தத்தமக்கு ஒவ்வொரு தெய்வத்தைக் கற்பனை செய்து கொண்டும், தத்தமது விருப்பப்படி ஏதோ சந்தப்பாடல்களைப் பாடியும் அந்தத் தெய்வத்திடம் தங்கள் வறுமை நீங்க வரமிருந்து வந்துளர். ரிக்வேதமும் ஒரு தனி முதல் கடவுள் கொள்கை கொண்ட தல்ல.

எது கடவுள்?


ஒவ்வொரு ரிஷி என்பவரும், ஒவ்வொரு தெய்வத்தை உண்டு பண்ணிக் கொண்டனர். ரிஷிகளுக்குள் சச்சரவும் கருத்து வேற்றுமையும் ஏற்படும்போதெல்லாம் ஒவ்வொரு புதுத்தெய்வம் உற்பத்தி செய்யப்பட்டுவிடும். ஒவ்வொரு வரும் மற்றவரின் தெய்வத்தைக் குறைகூறி வசைபாடி இழிவுபடுத்திப் பேசிச் சச்சரவு இட்டுக்கொள்வர். இவ்விதம் ரிஷிகளுக்குள் ஏற்பட்ட சண்டையே தெய்வங்களுக்குள் ஏற்பட்ட சண்டையாகப் புராணங்களில் கற்பனை செய்யப் பட்டுள்ளது. இவற்றால் ரிக் வேதம் உண்டான வரலாறும் எப்படியென்று காணமுடியாதுள்ளது என்று இந்நூல் குறிப்பிடுகிறது. இதிலிருந்து இந்த ரிக் வேதம் ஒரு வேத வியாசராலோ கடவுளாலோ ஆக்கப்பட்டதென பார்ப்பனர் கூறுவது ஆதாரமற்றதாகிறது. பற்பல காலங்களில் பற்பல தலைமுறைகளில் பற்பலர் தத்தமது விருப்புக்கும் அறிவுக்கு மேற்ப ஆக்கிய பிரார்த்தனைப் பாடல்களின் தொகுப்பே இந்த வேதங்கள் என்பது தெளிவு.

- செவ்வாய்க்கிழமை தொடரும்

- விடுதலை நாளேடு, 5. 9. 19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக