செவ்வாய், 24 செப்டம்பர், 2019

தந்தை பெரியாரிடம் கற்றதும் - பெற்றதும்...!

பகுத்தறிவுப் பகலவன் என்று பார் போற்றும் தந்தை பெரியாரின் 141 ஆவது ஆண்டு பிறந்த நாளில் வெளியிட, தந்தை பெரியார் அவர்களுடன் நீண்ட காலம் தொண்டாற்றியவர் என்ற முறையில், உங்களது பல்வேறு அனுபவங்கள், பெரியாரிடம் நீங்கள் கற்றுக்கொண்ட பாடங்கள் என்பவற்றையே ஒரு கட்டுரையாக ஆக்கி எங்களுக்குத் தாருங்கள்'' என்று தினத்தந்தி' ஆசிரியர் அவர்கள் கேட்டுக்கொண்டதையொட்டியே இக்கட்டுரை.


கி.வீரமணி,


தலைவர், திராவிடர் கழகம்




நாளை (செப்டம்பர் 17ந் தேதி) தந்தைபெரியார் பிறந்த நாள்.

1943 இல் கடலூர் முதுநகரில் நான் 10 வயது சிறுவனாக இருந்தபோது, என்னை கல்வியிலும், கழகத்திலும் பக்குவப் படுத்திய எனது ஆசிரியர் ஆ.திராவிடமணி அவர்கள் - அறிஞர் அண்ணா அவர்கள் 1942 இல் தொடங்கிய திராவிட நாடு' வார ஏட்டிற்கு கடலூர் தோழர்கள் - வாசகர்கள் சார்பில் ரூ.பாய் 112 திரட்டியதை - ஒரு பொதுக்கூட்டம் போட்டு அறிஞர் அண்ணாவிடம் அளிக்கப்பட்டது; அந்த மேடையில் மேசைமீது என்னை ஏற்றி, அவர் எழுதிக் கொடுத்ததை மனப்பாடம் செய்து பேச வைத்தார். அதுதான் எனது கன்னிப் பேச்சு - மேடை அரங்கேற்றமும்கூட!

வாரம் தவறாமல் விடுதலை', குடிஅரசு', திராவிட நாடு' ஏடுகளை மாணவர்களாகிய நாங்கள் படிப்போம். கழகக் கொள்கை விளக்கங்களை - படிப்பு - டியூஷன் சொல்லிக் கொடுக்கும் வாய்ப்பில் எனது ஆசிரியர் எங்களுக்குச் சொல்லிக் கொடுத்து, பக்குவப்படுத்தினார்!

சாரங்கபாணி என்று என் வீட்டார் எனக்கு வைத்த பெயரை, வீரமணி' என்று மாற்றி வைத்தார் எனது ஆசிரியர்.

'தென்னாற்காடு மாவட்ட திராவிடர் மாநாடு'


அடுத்த ஆண்டில், தென்னாற்காடு மாவட்ட திராவிடர் மாநாடு' என்ற தலைப்பில், கடலூரில் திருப்பாதிரிப்புலியூரில் காலை முத்தய்யா டாக்கீஸ் என்ற திரையரங்கில் மாநாடு - தந்தை பெரியார் திறப்பாளர், அறிஞர் அண்ணா மற்றும் தலைவர்கள் கலந்துகொண்டு பேசிய மாநாடு.

29.7.1944 அன்று,

தந்தை பெரியாரைப்பற்றிப் படித்தும், எனது ஆசிரியர் சொல்லியும் அறிந்த எனக்கு ஒரு மகிழ்ச்சி யான வாய்ப்பு - முதல் நாள் இரவே வந்து திருப்பாதிரிப் புலியூரில் ஒரு சத்திரத்தில் தங்கியிருந்த தந்தை பெரியாரிடம் என்னை அழைத்துச் சென்று, அறிமுகப் படுத்தினார் டார்ப்பிடோ ஏ.பி.ஜனார்த்தனம் அவர்கள். அன்னை கே.ஏ.மணியம்மையார் அய்யாவுடன் இருந்தார்.

நான் கண்டு பயந்த ஒருவர் காட்டிய பாசம்தான், இறுதிவரை நீடித்தது; நிலைத்தது!


அய்யாவைப் பார்த்தவுடன் ஒரு பயம் கலந்த மரியாதை, சிங்கத்தைப் பார்த்து பயந்தும், மகிழ்ந்தும் உள்ள ஒரு சிறுவனின் மனநிலை. அய்யா அன்புடன் என்னை அழைத்து அருகில் நிறுத்தி, என்னைப்பற்றிய விவரங்கள் கேட்டு, நல்லா படியுங்கள்!' என்று கூறி அனுப்பினார். என் வாழ்வின் திருப்பமும், மட்டற்ற மகிழ்ச்சியும் அடைந்த நாள். அன்று நான் கண்டு பயந்த ஒருவர் காட்டிய பாசம்தான், இறுதிவரை நீடித்தது; நிலைத்தது - எனக்குப் பேறாய் கிடைத்தது!

அன்றைய மாநாட்டில் இரண்டு முக்கிய நிகழ்வுகள் என்னை இந்தக் கொள்கையிலும், இயக்கத்திலும் கட்டிப்போடக் காரணமாய் அமைந்தன.

ஒன்று, முற்பகல் மாநாட்டில் நான் மேசைமீது ஏற்றி நிறுத்தப்பட்டு, அய்யா, அண்ணா மற்றும் இயக்க முக்கி யஸ்தர்கள், தோழர்கள் சுமார் ஆயிரம் பேருக்குமேலே கூடிய கூட்ட அரங்கில், பேசினேன் - உற்சாகக் கை தட்டல்கள் என்னை பயமறியாத இளங்கன்றாக ஆக்கியது.

அடுத்துப் பேசிய அறிஞர் அண்ணா என் பேச்சைக் குறித்து, இப்போது பேசிய இந்த சிறுவன், வைதீக மேடையில்  இப்படிப் பேசினால், பார்வதி பாலை உண்ட திருஞானசம்பந்தன் என்று கூறியிருப்பார்கள் அவர்கள்; அவன் உண்டது பெரியாரின் பகுத்தறிவுப் பால்; இளம் வயதிலேயே இப்படித்தான் பகுத்தறிவுப் பால் மாணவச் சிறுவர்கள் முதற்கொண்டு ஊட்டப்படவேண்டும்'' என்றார். அன்று முதல் பலர் - திராவிட இயக்கத்தின் திருஞான சம்பந்தன்'' என்று இன்றுகூட அண்ணா சொன்னதை நினைவூட்டியே வருகிறார்கள்.

எவ்வித பதற்றமுமின்றி அந்த எதிர்ப்பை அய்யா எதிர்கொண்ட விதமும், அவர்மீது எனக்கு ஒரு தனி ஈர்ப்பை ஏற்படுத்தியது


மாநாட்டில் அடுத்து தந்தை பெரியார் பேசிக் கொண்டு வரும்போது, ஒருவர் அய்யாவைப் பார்த்து இராமசாமி நாயக்கரே  உம் பேச்சை நிறுத்தும்' என்று கூச்சலிட்டார். எல்லோரும் ஆத்திரப்பட்டதை அய்யா அமைதிப்படுத்திவிட்டு, என்ன சந்தேகம் கேளுங்கள், பதில் கூறுகிறேன்' என்று தொடர்ந்து ஒன்றரை மணிநேரம் பேசியது எனது பிஞ்சு உள்ளத்தில் அந்த வீரமும், எவ்வித பதற்றமுமின்றி அந்த எதிர்ப்பை அய்யா எதிர்கொண்ட விதமும், அவர்மீது எனக்கு ஒரு தனி ஈர்ப்பையே விதைத்துவிட்டது!

இப்படி ஒரு துணிவுள்ள தலைவரா? அவமானத்தைக்கூட எதிர்கொண்ட  முறை வியப்பானது!


மாலை கடலூர் மஞ்சை நகர் மைதானத்தில் பொதுக்கூட்டம் - பல்லாயிரக்கணக்கில் மக்கள் பெருந் திரள் - அய்யா பேசி முக்கால் மணிநேரத்தில் அடை மழை! கூட்டம் அத்துடன் முடிவுற்று, கைரிக்ஷாவில் தந்தை பெரியாரை திருப்பாதிரிப்புலியூர் தொடர் வண்டி நிலையத்திற்கு அழைத்து வருகிறோம் நாங்கள். மாணவர்கள், தோழர்கள் உடன் வந்தனர். கெடிலம் ஆற்றுப்பாலம் (பழையது) ஒரே இருட்டு - மின்சாரம் நின்றுவிட்டது. பாம்பு, பாம்பு'' என்று யாரோ பாம்பைப் போட்டனர். அதைப் பொருட்படுத்தாது ரிக்ஷா இழுத்த தோழர் தொடர்ந்தார். பிறகு அய்யா ரிக்ஷாவைத் திருப்பச் சொன்னார். சிறிது தூரம் ரிக்ஷா சென்றதும், மீண்டும் திருப்பச் சொன்னார். டார்ச் லைட்டுகள்தான் வெளிச்சம் - தொடர் வண்டி நிலையத்தில் வந்து தங்க வைக்கப்பட்டார் - தொடர் வண்டி வர நேரம் நிறைய இருந்தது. சென்னைக்குப் பயணமாகிறார். அருகில் நின்றிருந்த தோழர்களிடம் உற்சாகத்துடன் பேசினார் அய்யா - நான் ஏன் ரிக்ஷாவை திருப்பச் சொன்னேன் என்று நீங்கள் யாரும் கேட்கவில்லையே!'' என்று அய்யா கூறிவிட்டு, தனது தோல் கைப்பெட்டியைத் திறந்தார் - மீண்டும் மின்சாரம் வந்துவிட்டது - அதிலிருந்து இரண்டு செருப்புகளைக் காட்டினார். ஒன்று என் மடியில் வந்து விழுந்தது; ஒரு செருப்புப் போட்டவனுக்கு மற்றொரு செருப்புப் பயன்படாது என்பதால், ரிக்ஷாவை திருப்பச் சொன்னேன்; இன்னொரு செருப்பையும் வீசுவான் என்று எதிர்பார்த்தேன், அது இரண்டு பேருக்கும் நல்லதுதானே'' என்றார்.

அய்யோ இப்படி அய்யாவுக்கு ஆகிவிட்டதே நம்மூரில்!'' என்ற கோபம் எனது ஆசிரியர், தோழர் களுக்கு, எங்களுக்கு ஏற்பட்டது என்றாலும், எனது உள்ளத்தில் இப்படி ஒரு துணிவுள்ள தலைவரா? அவமானத்தைக்கூட அவர் எதிர்கொண்ட முறை வியப்பானதாக உள்ளதே என்று மலைப்பு ஏற்பட்டது. எனது ஆசிரியரும், தோழர்களும் அய்யாவை அனுப்பிவிட்டு, பேசியது என்னை மேலும் சிந்திக்க வைத்தது!

அடுத்த சில வாரங்களில் சேலத்தில் 1944 இல் திராவிடர் கழக பெயர் மாற்றப்பட்ட நீதிக்கட்சி மாநாடு. அதற்கும் எங்களை எங்கள் ஆசிரியர் அழைத்துச் சென்றார்; தந்தை பெரியாரைத் தலைவராகக் கொண்ட தோழர்களின் உணர்ச்சிக் கடல் என்னைப் போன்ற வர்களின் உள்ளத்தில் பசுமையாகப் பதிந்தது.

தலைமை என்றால் தந்தை பெரியார்தான் என்ற விதை மிக வேகமாக மேலும் என் உள்ளத்தில் வளர்ந்தது.

1945, 46 ஆம் ஆண்டுகளில் ஈரோட்டில் திராவிட மாணவர்கள் கோடை விடுமுறைப் பயிற்சி; இரண்டு, மூன்று வாரங்களுக்குத் தந்து பல மாவட்டங்களுக்கு அவர்களை பயிற்சிக் களத்திற்கு அனுப்புவதுபோல் செய்ததில் என்னை சேலம் மாவட்டம், கோவை மாவட்டத்திற்கு, தஞ்சை மாவட்டத்திற்கு அனுப்பி, 1945-46 ஆகிய ஆண்டுகளில் பங்கேற்கச் செய்ததில் மேலும் பிடிப்பும், பரப்புரை பயிற்சியும் வளர்ந்தது!

ஒழுங்கு, கட்டுப்பாட்டை எங்களுக்குப் போதிப்பார்!




தந்தை பெரியார் அவர்கள், எதையும் வீணாக்கக் கூடாது; செல்லும் ஊர்களில் சிக்கனமாகவும், எளிமை யாகவும் ஏற்பாடு செய்யும் கழகத் தோழர்களை சங்கடத்திற்கு ஆளாக்கக் கூடாது. எந்த நிகழ்ச்சி யானாலும் ஒப்புக்கொண்டு விட்டால் கட்டாயம் சென்று கலந்துகொள்ளவேண்டும் என்ற ஒழுங்கு, கட்டுப்  பாட்டை எங்களுக்குப் போதிப்பார்கள்!

ஒருமுறை, அய்யாவிடமிருந்து கடலூருக்குத் தந்தி, சேலத்திற்கு உடனே புறப்பட்டு வந்து என்னை சந்தி யுங்கள்'' என்று. அதன்படி கடலூரிலிருந்து சென்றேன்; அன்னை மணியம்மையார் அவர்களும் சொன்னார், அய்யாவுக்கு 102 டிகிரி காய்ச்சல் - வயிற்றுப் போக்கும் உள்ளது. சேலம் மாவட்டச் சுற்றுப்பயணத்தில் 3, 4 ஊர்கள் - அரூர் பகுதியில் பொதுக்கூட்டங்களை அய்யா தள்ளி வைக்க விரும்பவில்லை; நீங்கள் பேசினால், பிறகு கொஞ்ச நேரம் அய்யாவும் பேசி, முடித்துவிடலாம்; ஏற்பாடு செய்த தோழர்களுக்கு ஏமாற்றம் ஏற்படாமல் இருக்கும் என்பதற்காகத்தான் உங்களை வரவழைக்கச் சொன்னார்'' என்றார்.

அதன்படி அடுத்த நாள் அய்யாவின் உடல்நலம் சற்று குணமடைந்தது. ஜூரம் குறைந்தது. சோர்வு, அசதி என்றாலும் வேனில் புறப்பட்டோம்.

தனக்குத்தானே சமாதானம் அடைந்தார்!


அய்யா எதையும் மறைத்துப் பேசவே மாட்டார். என்ன நினைக்கிறாரோ அதை தமது தோழர்களிடம் வெளிப்படையாகவே கூறத் தயங்கமாட்டார்!

கோவை மில் ஒன்றில் ஒரு லட்சம் ரூபாய் டெபாசிட் செய்து வட்டியை இயக்கத்தின் செலவுகளுக்குப் பயன்பட வழி செய்தேன். அம்மில் அதிபர் இன்சால் வெண்ட் கொடுத்துவிட்டார். அதை நினைத்ததும் எனக்கு ஒரு அதிர்ச்சி - அதுவும் எனது சுகவீனத்திற்கு ஒரு காரணமாக இருக்கலாம்'' என்றவர், சிறிதுநேர அமைதிக்குப் பின், அவரே அந்தக் கவலையிலிருந்து நீங்கிய நிலை பளிச்சிட்டதைப்போலச் சொன்னார், உம் அவர்கள் பல ஆண்டுகளாகத் தந்த  ஆண்டு வட்டியே இழந்த ஒரு லட்சத்திற்குமேல் வந்திருக்கும். பரவாயில்லை'' என்று தனக்குத்தானே சமாதானம் அடைந்தார்!

கூட்டங்களில் ஒரு மணிநேரம், ஒன்றரை மணிநேரத்திற்குக் குறைவில்லாமல் பேசினார். அவரது உடல்நலக் குறைவு, மக்களைப் பார்த்தவுடன் ஏற்கெனவே மனதிலிருந்த தொகை இழப்பு எல்லாம் மறைந்துவிட்டதைக் கண்டு  வியப்படைந்தோம்!!

பொதுத் தொண்டு என்று வந்துவிட்டால் தனிப்பட்ட நட்டம் எல்லாம் அய்யாவுக்கு ஒரு பொருட்டல்ல என்பதைப் புரிந்துகொண்டோம் - இதிலிருந்து!

தயவு தாட்சண்யம் பாராமல்  கண்டிக்கவும் தயங்கமாட்டார்!


தனது தோழர்களுடன் செல்லும்போது, உபசரிக்கும் விருந்தினர் அய்யாவுடன் வந்த தோழர்களுக்குப் பரிமாறுவதையும், தான் சாப்பிடும்போதும்கூட ஒரு பார்வையிடுவார்.

யாராவது இலையில் அல்லது தட்டில் மிச்சம் வைத்தால், அதை தயவு தாட்சண்யம் பாராமல் கண்டிக்கவும் தயங்கமாட்டார்!

அய்யாவை, கஞ்சன், கருமி'' என்றெல்லாம் கூறுபவர்கள், அவரை அறிந்துகொள்ளத் தவறியவர்கள். அல்லது மேம்போக்காக நுனிப்புல் மேய்பவர்கள் என்றுதான் கூறவேண்டும்.

தனது முழுச் சொத்தையும் பொது அறக் கட்டளையாக்கி, அதில் தனது சொந்த பந்தங்களை இடம்பெறச் செய்யாது - பொதுமக்களுக்கே ஆக்கி வைத்த தலைவர் வேறு யார்?

எதற்குச் செலவழிக்கவேண்டுமோ அதற்குத் தாராளமாய்ச் செலவு செய்வார்; ஆடம்பரம், தேவைக்கு அதிகமாகச் செலவழித்துத் தகுதிக்கு மீறி வாழுவது பொதுத் தொண்டர்களுக்கு ஏற்றதல்ல என்பதை வகுப்பில் பாடம் எடுப்பதுபோல் உணர்த்துவார்கள்.

மற்றவர்களுக்குக் கிடைக்காத ஒரு அரிய வாய்ப்பு என்னை அவர்கள் விடுதலை'க்கு ஆசிரியராக நியமித்தபோது, வரவேற்கிறேன்' என்ற தலைப்பில் இரண்டு அறிக்கைகளை விடுத்தது மட்டுமல்லாது, விடுதலை'யை  அவரது ஏகபோகத்திற்கே விட்டு விடுகிறேன்'' என்றும் எழுதினார். அந்த நாளில் சிந்தா திரிப்பேட்டையில் இருந்த விடுதலை' அலுவலகத்திற்கு அழைத்து வந்து, என்னை நாற்காலியில் அவருக்கு எதிரில் அமர வைத்தார்; அதுபோலவே, எனது பணிகளை இறுதிவரை ஊக்கமூட்டி, உற்சாகப்படுத்தி னார்களே தவிர, ஒருநாள்கூட கண்டித்ததே இல்லை.

ஆசிரியர்' என்ற அடைமொழி அய்யா தந்தது; பயன்படுத்தியது. பெரியார் திடலில் வந்து தங்கும் போதுகூட, ஆசிரியர் வந்துவிட்டாரா?' என்றுதான் கேட்பார். இது எனக்குப் பெருமையைத் தர அல்ல - ஒரு பொறுப்பை ஒருவரை நம்பி கொடுத்துவிட்டால், அப்பொறுப்பில் உள்ளவர்களுக்கு நாம் மரியாதை தந்தால்தான், மற்றவர்கள் அவரை மதிப்பதோடும், ஒழுங்காக ஒத்துழைப்பு நல்கவும் ஆன சிறந்த நிர்வாக முறையும்கூட என்பதால்தான். பிறர் கற்கவேண்டிய பாடம் இது!

ஒரு தடவை, பல ஆண்டுகள் அய்யாவை தெரிந்த பணி செய்யும் ஒரு தோழர் அலுவலகத்தில் ஏதோ சம்பள உயர்வு கேட்க அய்யாவிடம் சென்று பேச்சைத் தொடங்கியவுடன், தந்தை பெரியார், நீங்கள் என்னை வந்து சந்திப்பதற்குமுன் ஆசிரியரிடம் சென்று அனுமதி பெற்று வந்திருக்கிறீர்களா?'' என்று கேட்டு, திருப்பி அனுப்பியதை, அந்த நண்பரே பிறகு என்னிடம் கூறி, தனது தவறான நிலைக்கு வருத்தம் தெரிவித்தார்!

தேரான் தெளிவும் தெளிந்தான்கண் அய்யுறவும்

தீரா விடும்பை தரும்

(குறள் 510)

என்ற குறளுக்கு ஏற்ப, இவரது தலைமை ஆளுமையில் அவர்கள் ஒருவரை நம்பி பொறுப்புக் கொடுத்துவிட்டால், பிறர் சொல்வதைக் கேட்டு, நம்பி தன் கருத்தை உடனடியாக மாற்றிக்கொள்ளவோ, அதை வைத்து அவசரப்பட்டு நடவடிக்கை எடுக்கவோ முன்வரமாட்டார்கள்.

மனிதர்களை சரியாக எடைபோடத் தவறமாட்டார்!


சக தோழர்கள் தவறுகள் செய்தாலும்கூட, அய்யா சொல்வார், நாம் இன்னும் கொஞ்சம் Long Margin    கொடுத்துப் பார்ப்போம் - திருந்துகிறாரா'' என்று!

மீறி ஏதாவது நடந்தால்கூட, ஒரே வார்த்தையில் ஒரு விளக்கத்தைத் தருவார்கள்.

அது அவரவர் ஜீவ சுபாவம்; எப்படி அதை மாற்ற முடியும்? நாம் புரிந்துகொள்ளாதது நமது தவறே ஒழிய, அவர் தவறல்ல'' - ஒரு அருமையான தத்துவ விளக்கம்போல் கூறுவார்கள்!

எதையும் ஆழமாகக் கவனிப்பார்;  மனிதர்களை சரியாக எடைபோடத் தவறமாட்டார்!

ஒருமுறை நான், அய்யாவிடம் ஆதாரமில்லாமல் அவதூறு பரப்புகின்றனர் சிலர் என்று (பொறுப்பேற்ற சில மாதங்களுக்குப் பிறகு) கூறிக்கொண்டிருந்தபோது, என்னை அறியாமல் கண்ணீர் வந்தது. அதைக் கவனித்துவிட்டு, என்னை அமைதிப்படுத்தும் வகையில் சொன்னார்,

அடப் பைத்தியக்காரா, உன்னை பெரிய புத்திசாலி என்று நினைத்தேன் - நீங்கள் இதற்கெல்லாம் மன வருத்தம் அடையலாமா? மற்றவர்கள் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறார்கள், பேசுகிறார்கள் என்று கவலைப்படுபவர்களால் எதையும் சரியாகச் செய்ய முடியாது. (பைத்தியக்காரா என்பது அவரது வாஞ்சை பொங்கும் சந்தர்ப்பங்களில் அவர் வாயிலிருந்து வரும் சொற்கள் ஆகும்!) நான் என்ன உன்னைப்பற்றி நினைக்கிறேன் என்பதைப்பற்றி மட்டும் யோசித்துப் பார்; மற்றவர்கள் என்ன பேசினால், எழுதினால் என்ன?'' என்று கூறியது மிகப்பெரிய அறிவுரை - அனுபவத்தின் முத்திரையோடு முகிழ்ந்த அறிவுரை அல்லவா!

 

அறிவு நாணயம் - சொல் தவறாமை!




அய்யாவிடமிருந்து எவரும் கற்றுக்கொள்ள வேண்டிய மற்றொரு முக்கிய பாடம் - அறிவு நாணயம் - சொல் தவறாமை!

ஒருமுறை ஈரோட்டில் அவரது சொத்து ஒன்றிற்கு மாத வாடகை 300 ரூபாய் தருவதாக ஒருவர் கூற, அய்யா அப்போதுள்ள ஊர் நிலவரம் அறியாமல், பழைய மதிப்பீட்டையே வைத்து அத்தொகைக்கு அய்யா ஒப்புக்கொண்டு விட்டார். ஆனால், அதன்பிறகு ஈரோட்டில் அவரது பொறுப்பாளராக இருந்து வந்த அவரது தங்கை மகன் திரு.எஸ்.ஆர்.சாமி வந்து, என்னய்யா நீங்கள் எங்களைக் கலந்தாலோசிக்காமல் இப்படி குறைந்த தொகைக்கு ஒப்புக்கொண்டு விட்டீர்கள். மற்றவர்கள் மாத வாடகை 1000 ரூபாய் தரத் தயாராக உள்ளனர். அதனால், ஒப்பந்தம் எழுத்துமூலம் போடாததினால், புதியவருக்கே கொடுக்கலாம், தவறில்லை'' என்று கூறினார். ஆனால், பிடிவாதமாக அய்யா அதை ஏற்க மறுத்துவிட்டார்.

எப்போது நான் வாக்குக் கொடுத்து சரி என்று சொல்லிவிட்டேனோ, இப்போது கூடுதல் தொகைக்காக வாக்குத் தவறுவது நாணயக்கேடு ஆகாதா? ஒருபோதும் சம்மதிக்கமாட்டேன்'' என்று கூறி, பழையவருக்கே அதைக் கொடுத்தார். அவர்தாம் பெரியார்!

இப்படி எத்தனையோ நிகழ்வுகள் அரசியலிலும் உண்டு. எங்களுக்கு அச்சம்பவங்கள் பாடங்களாக என்றும் அமையும்.

பரிந்துரைக் கடிதங்களை சம்பந்தப்பட்டவர்களைப் பார்த்துத் தருவதற்கு என்னிடம் தருவார்கள். கல்லூரியில் இடம், வேலை வாய்ப்புகளுக்குக் கடிதம் கொடுப்பார்கள் - எவருக்கும் உதவுவதில் பின்வாங்கவே மாட்டார். அப்படி உதவி கேட்பவர்கள், பழம் முதலியன கொண்டு வந்தால், வாங்கவே மாட்டார்கள். திருப்பி விடுவார்கள். மற்றபடி அன்பாக யார் எதைக் கொடுத்தாலும், அதை வாங்கி, மலை வாழைப்பழம் என்றால் ஒரு சீப்பில் ஒன்றைப் பிய்த்து, அவர் எதிரிலேயே சாப்பிட்டு, கொடுத்தவரை மகிழ்ச்சிக்குள்ளாக்கி, தானும் மகிழ்வார்!

சில நேரங்களில் சென்னை வந்தபோது, நான் இன்னாருக்கு ஆக கடிதம் கொடுத்தேன், அது என்னவாயிற்று? நடந்ததா? தகவல் ஏதும் தெரியுமா?'' என்று கேட்பார்.

அய்யாவிடம், அது உடனே நடந்துவிட்டது, அவரிடம் நானும் தெரிவித்தபோது, அய்யாவிடம் நானே சொல்லி விடுகிறேன்'' என்று என்னிடம் சொல்லிவிட்டுப் போனார் அய்யா'' என்றவுடனே, பரவாயில்லை; அவர் வரவில்லை. கிடைக்காமல் இருந்தால் வந்திருப்பார், மீண்டும் சொல்லுங்கள் என்று; கிடைத்தால் நம்மாட்கள் வரமாட்டார்கள், அதுதான் மக்களின் சுபாவம்'' என்று சாதாரணமாகக் கோபம், எரிச்சல் இன்றி சிரித்துக்கொண்டே சொல்வார்!

இதுவும் பொதுவாழ்வில் உள்ளவர்கள் கற்றுக்கொள்ளவேண்டிய பாடம் அல்லவா?

தான் யாருக்கு உதவி செய்தாலும்,  அதை விளம்பரப்படுத்தவே மாட்டார்


அய்யா அடிக்கடி சென்று சில கழக முக்கியஸ் தர்கள் வீட்டில் தங்கி, ஊருக்குத் திரும்புவது வாடிக்கை. அவர்கள் பெரும் வாய்ப்பாகக் கருதி, அய்யாவை உபசரிப்பார்கள். ஆனால், அய்யா பெரியார், அம்மா மணியம்மையார் இருவரும் அதை ஈடுசெய்யும் வகையில் முக்கிய பொருள் களை அவ்வப்போது வாங்கிச் சென்று விளம்பர மின்றி செய்துவிட்டு திருப்தி அடைவார்கள்!

தான் யாருக்கு உதவி செய்தாலும், அதை விளம்பரப்படுத்தவே மாட்டார். ஏன் சில நேரங் களில் அருகில் உள்ள அன்னை மணியம்மையார் போன்றவர்களுக்குக்கூடத் தெரியாமல், உதவி செய்வார். பிறகு செக் - கவுண்ட்டர் ஃபாயில் கணக்கு வரும்போது அவர்களுக்குத் தெரிய வரும், அது இயல்பு.

என்னிடம் ஒரு ரயில்வே அட்டவணை - 3 மாதத்திற்கொருமுறை அப்போது ரயில்வே துறை வெளியிட்ட ரயில்வே கைடு' - கால அட்டவணை பற்றிய தகவல் தொகுப்பு இருந்தது. அய்யாவுடன் சுற்றுப்பயணத்தின்போது வாங்கினேன் பல ஆண்டுகளுக்கு முன்பு. அந்த ரயில்வே கைடை' அய்யா நீங்கள் வைத்துக்கொள்ளுங்கள்' என்றேன் நான், உடனே அய்யா அவர்கள், நாலணாவை வற்புறுத்தித் தந்தார். இலவசமாக எதையும் எளிதில் பெற்றுக்கொள்ளமாட்டார்.

இலசவமாகக் கொடுத்தால், படிக்கமாட்டார்கள்!




அய்யாவின் பிறந்த நாளையொட்டி அவர்களது கருத்து விளக்கங்களைத் தொகுத்து, சிந்தனை விருந்து' என்ற தலைப்பில், 16 பக்கங்கள் கொண்ட ஒரு நூலைத் தயாரித்தோம். அட்டையின் பின்பக்க விளம்பரம்மூலம் அதன் அடக்கச் செலவு சரியாகிவிட்டது; எனவே, வீட்டுக்கு வீடு, கடைக்குக் கடை கொடுத்துப் பரப்ப ஒரு லட்சம் பிரதிகள் அச்சிட்டு, அய்யாவிடம் காட்டினோம்; இதனை இலவசமாக மக்களுக்குத் தரப்போகிறோம் என்று கூறியவுடன், தந்தை பெரியார் எங்களைப் பாராட்டவில்லை; மாறாக, இலசவமாகக் கொடுத்தால் படிக்கமாட்டார்கள், மக்கள், வாங்கிக் கிழித்து, வேறு பயன்பாட்டிற்கே அதனை உபயோகப்படுத்துவர்; இலவசம் என்றால், நம் மக்கள் ஒரு கையால் என்ன, இரண்டு கைகளாலும்கூட வாங்குவர்; அதனால் 10 காசு வாங்கிக்கொண்டு கொடுங்கள், படிப்பார்கள். உங்கள் நோக்கம் நிறைவேறும்'' என்றார்!

அதுவும் எங்களுக்குச் சரியான பாடம்தானே!

அதுமட்டுமா?

எங்களுக்கு வழிகாட்டும்  கலங்கரை வெளிச்சங்கள்!


யாரைப்பற்றியும், எதுப்பற்றியும் அவரது நுண்மாண் நுழைபுலம் - ஆழ்ந்த பட்டறிவு - கனிவும், செறிவும் உடையது என்பதை நான் பார்த்து, அனுபவித்து, மகிழ்ந்து கற்றுக்கொண்ட பாடங்கள் எத்தனையோ உண்டு.

இன்றும் தனி வாழ்விலும் சரி, பொதுவாழ்விலும் சரி என்னை  - என்னைப் போன்ற எண்ணற்ற தோழர்களை, குடும்பங்களை நெறிதவறாத வாழ்வு - நாணயம் கெடாத, நன்றியை எதிர்பாராது பணி செய்யும் வாய்ப்பாக எங்களுக்கு அவை வழிகாட்டும் கலங்கரை வெளிச்சங்களாக உள்ளது!

நன்றி என்பது பயன்பட்டவர்கள் காட்ட வேண்டிய பண்பே தவிர, உதவி செய்தவர்கள் எதிர்பார்க்கக் கூடாத ஒன்று; எதிர்பார்த்தால் அது சிறுமைக் குணமேயாகும்'' - இப்படி 1933 குடிஅரசி'ல் எழுதியது எத்தகைய ஆழமான அறிவுரை; அதை எழுதியதோடு நிற்காமல், அதை இறுதிவரை கடைப்பிடித்து ஒழுகி, மற்றவர் களுக்குப் பாடமானார்.

ஒருமுறை எனக்கு ஏற்பட்ட விசித்திர அனுபவம். அய்யா என்னை அழைத்து மிகப்பெரிய பொறுப்பில் இருந்த ஒருவரிடம் சென்று, நான் சொல்வதை அப்படியே அவரிடம் கூறுங்கள். அவருக்கு அது பயனளிக்கும்'' என்று கூறினார்கள். நான் எனது சிறுகுறிப்பு ஏட்டில் அந்த வாசகங்களை அப்படியே எழுத்து மாறாமல் குறித்துக்கொண்டு, அவரைத் தனியே சந்தித்து, அய்யா கூறிவரச் சொன்னதை அப்படியே சொன்னேன். அவரும், அதைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்தார்; இன்ப அதிர்ச்சியோடு அய்யாவுக்கு நன்றியும் சொல்லச் சொன்னார்!

நீங்கள் யாரை வேண்டுமானாலும் பகைத்துக் கொள்ளுங்கள் - அதை நாம் எதிர்கொண்டு சமாளித்துவிடலாம்; ஆனால், நண்பர்களாகப் பழகுபவர்களை மாத்திரம் மிகவும் கவனமாகப் பார்த்து தேர்வு செய்து பழகுங்கள்; இன்றேல் விரும்பத்தகாத விளைவுகள் ஏற்பட்டு, பிறகு அது வேதனையைத் தரும்.''

பொதுவாழ்வில் பெரிய பொறுப்பில் உள்ளவருக்குத் தந்தை - தலைவர் என்ற நிலையில் இருந்தவர் எத்தகைய பயனுறு அறிவுரையை அளித்தார் பார்த்தீர்களா?

அன்றும், இன்றும், என்றும்  துணை நிற்கின்றன!


என்னை செதுக்கிக் கொள்ள இந்தப் பாடங்கள், அன்றும், இன்றும், என்றும் துணை நிற்கின்றன.

எனக்கு சொந்த புத்தி கூட வேண்டாம்; பெரியார் தந்த புத்தி போதும்' என்று ஒருமுறை கூட்டத்தில் நான் பேசியதற்கு, பகுத்தறிவாளர்கள் இப்படிப் பேசலாமா?'' என்ற கடும் விமர்சனம் எழுந்தது. அதற்கு நான் அளித்த பதிலை இங்கே பதிவு செய்தால், அதே கேள்வியை இப்போதும் கேட்கத் துடிப்போருக்கும்கூட அது சரியான விளக்கம் ஆகும்.

என் சொந்த புத்திக்கு உள்ள பகுத்தறியும் தன்மையைவிட, பெரியார் தந்த புத்திக்குக் கூடுதல் திறன் உண்டு; என் சொந்த புத்திக்கு சபலங்கள், பலவீனங்கள் உண்டு. பெரியார் தந்த புத்திக்கு அது அறவே கிடையாது; ஆகவே, அதைப் பயன்படுத்துவது மிகவும் பாதுகாப்பானது - பொதுத் தொண்டுக்கு மிகவும் உகந்தது'' என்றேன்.

தந்தை பெரியார் கூறியது  நூற்றுக்கு நூறு உண்மை!


இளமை முதலே தந்தை பெரியார் தொண்ட னாக, பெரியாரின் வாழ்நாள் மாணாக்கனாக இருந்துவரும் அரிய வாய்ப்பினால், தனி வாழ்க்கை யில் தவறான பழக்க வழக்கங்களில் ஈடுபடவோ, முறையற்ற சூழ்நிலைகளில் சிக்கிக் கொண்டதோ கிடையாது. எங்களைப் பொறுத்தவரை, சுயமரியாதை வாழ்வு சுகவாழ்வு' என்று தந்தை பெரியார் கூறியது நூற்றுக்கு நூறு உண்மையாகும்!

அய்யாவிடம் 70 ஆண்டுகளுக்குமேல் கற்ற - பெற்ற பாடங்கள் உற்ற  துணையாக என்றும் வழிகாட்டும்!


இப்படி எத்தனை எத்தனையோ, பல்கலைக் கழகப் படிப்பும், பட்டங்களும் தராத பாடங்கள் எங்களை - இந்த இயக்கத்தை கட்டுப்பாடு காத்து, உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும்'' இரட்டை வேடதாரிகளாக இல்லாது, பேசுவதும், செயல்படுவதும் சுயமரியாதை, பகுத்தறிவு வாழ்க்கை நெறி என்பதையே அடித்தளமாக வாழ்ந்து வருவதற்கு அய்யாவிடம் 70 ஆண்டுகளுக்குமேல் கற்ற - பெற்ற பாடங்கள் உற்ற  துணையாக என்றும் வழிகாட்டும்!

வாழ்க பெரியார்!

வளர்க பகுத்தறிவு!!

- நன்றி: 'தினத்தந்தி' 16.9.2019

- விடுதலை நாளேடு, 16. 9 .19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக