வெள்ளி, 6 செப்டம்பர், 2019

மதுரை ஜில்லா இரண்டாவது சுயமரியாதை மகாநாடு

பிரிட்டானிய-பிராமணிய அடிமைத்தனத்தை ஒழிப்பதே சுயமரியாதை லட்சியம்


தலைவர் ம.ரெ.திருமலைசாமி விளக்கம்


(வாசக நேயர்களே,


ஊன்றிப் படித்துப் பயன்பெற வேண்டிய முக்கியப் பகுதி இது.


இதுபற்றி தங்களது கருத்தினை சுருக்கமாக எழுதி அனுப்புமாறு வேண்டுகிறோம்.


திராவிடர் இயக்கம் - 80 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்நாடு அரசியல் களத்தின் முக்கிய நிகழ்வுகள் - வரலாறு பற்றிய காலக்கண்ணாடியாக - திராவிடத்தின் தேவைக்கான நுண்ணாடியாக இது அமையும் ஒன்று. இதற்கான தேவை - பயன் - நுகர்வு பற்றிய உங்கள் கருத்துக்கள் பெரிதும் வரவேற்கப்படுகிறது. - ஆசிரியர்)


 

என்றாலும் சுயமரியாதைக்காரர் ஒவ்வொரு வரும் ஜஸ்டிஸ் கட்சியை ஆதரிக்கப் பின் வாங்குவதில்லை, இதிலிருந்து பார்த்தால் சுயமரியாதைக்காரனை விலக்கி இனி ஜஸ்டிஸ் கட்சி இருப்பதற்கில்லை என்பதை உணர லாம். ஆகவே ஜஸ்டிஸ் கட்சி நம்மது, அதிலிருக்கும் புண் ணாக்கு மூட்டைகளையும் புளிக்கோதுகளையும் விலக்கி யாவது புனிதப்படுத்த வேண்டியது சுயமரியாதைக்கார்களின் கடமை. இதை இது சமயம் உங்களுக்கு ஞாபகமூட்டுவது என் கடமை என்றுணர்கிறேன்,

தோல்வி கற்பிக்கும் பாடம்


நம்மால் ஆதரிக்கப்பட்டு வந்த ஜஸ்டிஸ் கட்சி 15 ஆண்டுகளுக்கு மேல் அரசாங்கத்தை நடத்தியது. அப்போதிருந்த அரசியல் ரெட்டை ஆட்சி. சர்க்கார் ஆசாமிகளிடம் நிதி, போலீஸ், ரிவனியூ முதலிய அதிகாரங்களும் மந்திரிகளிடம் சில சாதாரண அதிகாரங் களுமிருந்தன. அப்போது, மந்திரிகளே சுயேச்சையாக எதையும் செய்ய முடியாது, வரியைக் குறைப்பதோ, வருமானத்தை அதிகரிப்பதோ, பணச்செலவிடுவதோ இப்போதுள்ள மாதிரி அந்தக்காலத்தில் மந்திரிகள். வசமில்லை. பொதுஜன நன்மைக்காக ஏதாவது செலவிடு வதென்றால் சர்க்கார் மெம்பர்கள் தயவிருந்தாலன்றி எதுவும் முடியாது. காரணம் அப்போதிருந்த அரசியல் தத்துவம் அந்த மாதிரியானது. அப்படியிருந்தும், அந்தக் காலத்தில் கூட, நம் ஜஸ்டிஸ் மந்திரிகள் அளவற்ற நன்மைகளைச் செய்து காட்டினார்கள். இந்து மத தர்ம பரிபாலனச் சட்டம், ஜனநாயகத்துவம் நிறைந்த ஸ்தல ஸ்தாபனச் சட்டம், கைத்தொழில் சகாயச் சட்டம், கல்வி சீர்திருத்தச்சட்டம், இனாம் நிலங்களில் குடிகளுக்குப் பாத்யதை உண்டாக்கியச்சட்டம், வகுப்புவாரி உரிமை உத்திரவு, மதுவிலக்குப் பிரச்சாரப் பரிக்ஷார்த்தம் முதலியவைகளெல்லாம் நம் ஜஸ்டிஸ் கட்சி மந்திரிகள் காலத்திலும் ஜஸ்டிஸ்கட்சி ஆதரவிலும் புதிதாகச் செய்யப்பட்டவை. இது வல்லாமல் அவர்கள் செய்த சிறு சிறு நன்மைகளை அளவிட முடியாது. அப்படியிருந்தும் சென்ற பொதுத் தேர்தலில் அடியோடு முறியடிக்கப் பட்டார்கள். இதற்குக் காரணம் நமது அரசியல் சத்துருக்கள் செய்த பொய்ப்பிரசார மட்டுமல்ல. நம் மந்திரிகள் செய்த நன்மைகள் இன்னின்னவை என்று ஜனங்களுக்கு விளக்கிச் சொல்லாமல் சொல்ல முடியாமல் போனதேயாகும். ஜஸ்டிஸ் கட்சியின் தோல்வியால் அவர்கள் பிராமணரல்லாதாருக்கும் பொதுவாக சகல ஜன சமூகத்துக்கும் செய்த நன்மைகளை எதிரிகள் புகுந்து அழிப்பதற்கு ஏதுகரமாய் விட்டதானாலும், அப்படித் தோற்றதும் ஒருவித நன்மைக்கென்றே எடுத்துக் கொள்ள வேண்டியது தான். ஜஸ்டிஸ் கட்சி தோல்விய டையாதிருந்தால் காங்கிரஸ் கட்சியின் புளுகுணித் தனங்களும் அக்கிரமங்களும் வெள்ளையனுக்குக் கைகட்டிச் செய்யும் சேவமுகம் மழுங்கத்தனமும் வெளிக்கு வர வகை ஏற்பட்டிருக்காது. நம் மந்திரிகளின் மூலம் காங்கிரஸ் கட்சி நிர்வாக அறிவைப் பெற்றுக்கொண்டது. போல, காங்கிரஸ் மந்திரிகளின் மூலம் ஒரு கட்சியோ தனி மனிதனோ அதிகாரத்துக்கு வந்ததும் அந்த ஸ்தானத்தை சாஸ்வதப்படுத்திக் கொள்ள என்னென்ன தகிடுதத்தம் செய்கிறான் என்பதை நம்மவர் தெரிந்துகொள்ளுவதற்கும் சவுகரியம் ஏற்பட்டது. அதோடு நம்முடைய நிலைமையை நாமே நினைத்துப் பார்ப்பதற்கும் தலைவர்களின் கவலையற்ற தன்மையைச் சுட்டிச் சொல்வதற்கும் இது ஓர் அரிய சந்தர்ப்பமாக உண்டாயிற்று.

மந்திரிகள் பொறுப்பு?


சரணாகதி மந்திரிசபைக்குப் பொறுப்பும் கடமையும் கொஞ்சங்கூட இல்லை. ஆகவே இருக்கிறவரையில் செப்படி வித்தை காட்டியாவது பொது ஜனங்களின் அபிமானத்தை அடைய வேண்டுமென்ற குறியைத் தவிர தேச நிர்வாகத்தில் அவர்களுக்கு நாணயம்கொஞ்சங் கூட இல்லை.

கடன் நிவாரணச் சட்டம், மதுவிலக்குத் திட்டம் முதலியனவெல்லாம் என்ன? வார்த்தையளவில் எல்லார் மனதையும்  கவரத்தக்கவை தான். ஆனால் செயலளவில், உப்புக்கும் உதவாதவை. தேச வருமானத்தை ஈடு வைத்துக் கடன் வாங்கி வரவு செலவுத் திட்டத்தை அழகுபடுத்திக் காட்டலாம். அந்தக் கடனைக் கட்டும் காலம் வரையில் காங்கிரஸ் மந்திரிசபை நிச்சயமிருக்குமென்ற நம்பிக்கை யிருந்தாலல்லவா, அவர்கள் நின்ற வரையில் நெடுஞ்சுவர், விழுந்தால் குட்டிச் சுவராகட்டும் என்று பொறுப்பற்று நடக்க மாட்டார்கள். கடன் கட்டக்கூடிய காலத்தில் நிச்சயம் நாமிருக்கமாட்டோம் என்று அவர்களே உணர்ந்திருக்கும் போது கடன் வாங்கும் அதிகாரத்தை உபயோகிப்பதற்குச் சொல்லவேண்டுமா? கடன் கட்டும் கஷ்டத்தை அனுபவிக்கப்  போகிறவர்கள் நம்முடைய கட்சியாரே, ஏனென்றால் அடுத்தபடியாக ஏற்படப்போவது நம்முடைய மந்திரிசபையே. இதை தேசமும் உணர்வதில்லை கவர்னரும் கவலை செலுத்துவதில்லை.

அரசியல் கைதிகள் விடுதலை.


அரசியல் கைதிகளை விடுவிக்கப்போகிறோம் என்று சொன்னார்களல்லவா? அதையாவது நாணயத்தோடு செய்தார்களாவென்று பாருங்கள். எவரெவர், நீண்ட நாள் சிறையிலிருக்கவேண்டிய வாய்தா அதிகமாயிருக்கிறதோ அவர்களை முதலில் விடுவிக்காமல், விடுதலை காலம் நெருங்கியவர்களாகப் பார்த்துப் பொறுக்கித் திறந்து விடுகிறார்கள் ஆகவே அரசியல் கைதிகள். விடுதலை என்பது ஹம்பக் நம்பர் ஒன்று,

கதர், ஆற்றங்கரை மரம்


கதருக்கு சர்க்கார் நிதியை வினியோகிக்கிறார்கள். அது எதற்கு? கதர், தம் கண்ணுக்குப் பிறகு நிற்காது என்று காந்தியாரே ஒப்புக்கொண்டிருக்கிறார். ஆற்றங்கரை மரமாயிருக்கும் கதருக்குப் பொதுப் பணத்தை குறையிடுவது அக்கிரமமல்லவா? ஒருவிதப் பிரயோசனமுமின்றி மறைந்து போவதோடு, மக்களையும் சோம்பேறிகளாக்கக்கூடியது கதர் துணி. இதுவும் அவர்களுக்குத் தெரியும், தெரிந்தே தான் செய்கிறார்கள். கதர் காங்கிரஸ் ஸ்தாபனத்தைச் சேர்ந்த இலாகாவென்பதை நான் குறிப்பிட வேண்டியதில்லை, அதிகார தோரணையில் காங்கிரஸ் பிரசாரம் செய்வதற்கு, லைசன்ஸ் அளிப்பதற்காக கதர் இலாகாவுக்குப் பொருளதவி செய்தார்களேயன்றி, கதரால் 'ஏழைகள் தரித்திரம் நீங்கி விடும் என்கிற நம்பிக்சையாலல்ல,

கல்வி இலாகாவால் காங்கிரஸ் பிரசாரம்


இந்தி படித்த கோவில்காளைகள் ஜீவனத்துக்கு வகையற்று நாடோடிகளாய்த் திரிகின்றன. இவைகள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜந்துக்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். கல்வி இலாகாவை காங்கிரஸ் பிரசாரத்துக்கு உபயோகப்படுத்துவ தற்காகவே ஹிந்தியை ஏற்படுத்தி யிருக்கிறார்கள்.

மதுவிலக்கு ஹம்பக்


போன வருஷம் சேலம் ஜில்லாவை தேடிப்பிடித்தார்களே. படாடோபக் காட்சிக்காகவல்லாமல், வாஸ்தவமாகமே குடியை ஒழிக்க வேண்டுமென்ற நல்லெண்ணமிருந்தால், இந்த சரணாகதி மந்திரி சபை செய்ய வேண்டியதென்ன? கள்ளுக்கடைகள் எந்தெந்த ஜில்லாக்களில் அதிகமாயிருக்கின்றனவோ, எங்கெங்கே குடியால் கேடுகள் அதிகமாய் உண்டாகின்றதோ அந்த ஜில்லாக்களிலல்லவா சட்டத்தை அமுலுக்குக் கொண்டு வந்திருக்க வேண்டும். அது தான் போகட்டும், சேலத்தை அடுத்திருக்கும் ஜில்லாக் களில் ஏற்படுத்துவது தானே கிரமம். இப்படிச் செய்வதை விட்டு ரெண்டுங் கெட்டதனமாய் கடப்பை, சித்தூர் ஆகிய ரெண்டு வறண்ட ஜில்லாக்களைத் தேடிப்போன  காரணம் என்ன? போன வருஷம் ஒரு ஜில்லாவில் மதுவை விலக்கி னோம்; இந்த வருஷம் ரெண்டு ஜில்லா என்று,   எண்ணிக் கையைப் பெருக்கிக் காட்டுவதற்காகத்தானே யல்லாமல் வேறில்லை. கடப்பை ஜில்லாவிலிருக்கும்  தென்னை, பனை, ஈச்சை மரங்களின் எண்ணிக்கை தஞ்சை ஜில்லாவில் ஒரு தாலூக்காவிலுள்ள தென்னை மரங்களின் எண் ணிக்கைக்குங் குறைவானது. கடப்பைக்குக் கொஞ்சம் மேல்தரம் சித்தூர், ரெண்டிலும் கொலையும் திருட்டும் பெரும்பாலும் பஞ்சத்தால் நடக்கின்றனவேயன்றி குடி வெறியாலல்ல. கலால் வருமானமும் அவை இரண்டிலும் சொற்பம். இவற்றைக் கொண்டு யூகித்தால் நாங்களும் மது விலக்கை ரெண்டு ஜில்லாவில் ஏற்படுத்தி விட்டோம்' என்று கித்தாப்பு கூறிக் கொள்வதற்காக அந்த ரெண்டு ஜில்லாவையும் பொறுக்கி எடுத்திருக்கிறார்கள் என்பதை உணரலாம்.

ஆலயப் பிரவேசம் என்னாச்சு


ஆலயப் பிரவேசப் பிரச்சினையை காங்கிரஸ் கட்சிதான் அங்குரார்ப்பணம் செய்ததென்று அக்கட்சியரர் கூசாமல் சொல்லிக் கொள்கிறார்கள். பெருமை நம் சுயமரியாதைக் காரர்களுக்கே கிடைக்க வேண்டும். போனால் போகட்டும். அவர்களே அதன் புகழை அனுபவிக்க விட்டு விடுவோம். காங்கிரஸ் பட்ஜட் "ஆச்சாரியாரின் அறிவு மிகுந்த பட்ஜட்" - "ஸி.ஆரின் திறமை யான பட்ஜட்" என்று வாய்பறை கொட்டும் கங்காணிக்கூட்டம், ஆலயப்பிரவேச சம்பந்த மாய் ஆச்சாரி யாரின் உதடு கூட அசையாமலிருப்பதைக் குறிப்பிடா திருப்பதேன்? இப்படிப் பட்ட ஒரு கூட்டத்தோடு ஷெடியூல் வகுப்பு அசம்பிளி அங்கத்தினர்கள் ஒட்டிக் கொண்டிருப்பது மானங் கெட்ட இனமென்பதைத் தவிர வேறென்ன சொல்லலாம்.

பாட்லி வாலா கதை


அசம்பிளி சபை நடவடிக்கைகளைத் தெரிந்தவர்கள், பாட்லி வாலா தண்டனை விஷயமாய் இந்த மந்திரிசபை எவ்வளவு  கேவலமான மார்க்கத்தைக் கடைப்பிடித் திருக்கிறதென்று உணர்ந்திருக்கலாம். ஆழந்தெரியாமல் காலைவிட்ட கதையாக பாட்லிவாலாவைக் கைது செய் யும்படி உத்திரவிட்டு விட்டார்கள். எதிர்ப்புப் பலப்பட்டது. காங்கிரஸ் காரியக்கமிட்டிக்கும் விஷயம் எட்டிற்று. அங்கு தம்மைக் கண்டிப்பார்களென்று பயந்து தோழர் ஆச்சாரிக்கு அழைப்பு வந்தும் காரியக்கமிட்டிக் கூட்டத்துக்குப் போகவில்லை. பாட்லி வாலாவை விட்டு விட்டால் கவுரவம் போய் விடுமே என்கிற ஜம்பம் ஒருபக்கம்; சட்டப்படி தண்டித்தால் எதிர்ப்பு அதிகரிக்குமேஎன்ற அச்சம் இன்னோர் பக்கம். இவ்விரண்டுக்கு மத்தியில் அகப்பட்டுத்தவித்தார். கனம் ஆச்சாரி. முடிவில் குறைந்த அளவு தண்டனை கொடுக்கும்படி பப்ளிக் பிராசிக்யூட்டர் மூலம் விசாரணை அதிகாரிக்குச் சொல்லியிருந்தாராம். இது எப்பேர்க் கொத்த களவாணித்தனம் பாருங்கள்.

தொடரும்

- விடுதலை, 16.3.1938

- விடுதலை, 6.9.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக