வியாழன், 5 செப்டம்பர், 2019

சேலம்: பவள விழா முற்பகல் மாநாட்டில் தமிழர் தலைவர் கர்ச்சனை!

ஜாதியை ஒழித்து சமதர்மத்தை சமைப்பதே கழகத்தின் கொள்கை

நாளை நாங்கள் இல்லாமல் போனாலும் இளைஞர்களே, அந்த சமத்துவக் கொடியை உயர்த்திப் பிடியுங்கள், பிடியுங்கள், சாதியுங்கள்!


சேலம்: பவள விழா முற்பகல் மாநாட்டில் தமிழர் தலைவர் கர்ச்சனை!




சேலம், செப்.5  ஜாதியை ஒழித்து சமத்துவத்தை சமைப்பதுதான் திராவிடர் கழகத்தின் கொள்கை; அதை சாதிக்கும்வரை நம் போராட்டம் தொடரும்; ஒருக்கால் நாங்கள் அந்தக் காலகட்டத்தில் இல்லாமல் போனால், இளைஞர்களே,  அந்த இலட்சியக் கொடியை உயர்த்திப் பிடித்து அதனை சாதித்துக் காட்டுங்கள் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

27.8.2019 அன்று  காலை சேலத்தில் நடைபெற்ற திராவிடர் கழகப் பவள விழா மாநாடு - பொதுக்கூட்டத்தில்  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

95 வயது நிறைந்த இளைஞர் பெரியார் பெருந்தொண்டர் பொத்தனூர் க.சண்முகம்


மிகுந்த எழுச்சியோடு நடைபெறக்கூடிய திராவிடர் கழக பவள விழா (75 ஆம் ஆண்டு) மாநாட்டின் தலை வரும், கழகத் துணைத் தலைவருமான மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே, வரவேற்புரை யாற்றிய பழனி.புள்ளையண்ணன் அவர்களே, முன் னிலை ஏற்றிருக்கக்கூடிய மற்ற தோழர்களையெல்லாம் விளித்ததாக நேரத்தைக் கருதி அவர்கள் கருதிக் கொள்வார்கள் என்று நான் உரிமை எடுத்துக்கொண்டு அவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.

இந்த மாநாட்டினை திறந்து வைத்த முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் 95 வயது நிறைந்த இளைஞர் பொத்தனூர் க.சண்முகம் அய்யா அவர்களே,

கொடியேற்றிய திராவிட மாணவர் கழகத்தின் மாநில செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்களே,

தந்தை பெரியார் படத்தினைத் திறந்து வைத்த முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் ராசகிரி கோ.தங்கராசு அவர்களே,

சுயமரியாதைச் சுடரொளி படத்தினைத் திறந்த முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் 95 வயது தாண்டிய ஆத்தூர் தங்கவேலு அவர்களே,

திராவிடர் கழக வரலாற்று நூலினை


வெளியிட்டு சிறப்பான உரை!


அதேபோல, திராவிடர் கழக வரலாற்று நூல் என்ற சரித்திர நூலினை வெளியிட்டு, சிறப்பான அருமையான ஒரு உரையை உள்ளடக்கிய திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் தோழர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களே,

நம்முடைய அன்பான அழைப்பினை ஏற்று இங்கே வருகை புரிந்த, நம்முடைய குடும்பத்தைச் சார்ந்த என்று உரிமை எடுத்துக்கொண்டு சொல்லலாம்; சுயமரியாதைப் பாரம்பரியத்தில் வந்த ஒரு சகோதரர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் அருமைத் திரு.கே.எஸ்.அழகிரி அவர்களே,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தோழர் இரா.முத்தரசன் அவர்களே,

மனிதநேய மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்களே,

கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு அவர் களே, கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திர சேகரன் அவர்களே,

குடும்பம் குடும்பமாக திராவிடர் கழக பவள விழா மாநாட்டிற்கு வந்திருக்கிறீர்கள்


கருத்தரங்கத்தில் பேசிய பேராசிரியர் காளிமுத்து அவர்களே, முனைவர் அன்பழகன் அவர்களே, மேடையில் வீற்றிருக்கக்கூடிய, எதிரில் இருக்கக்கூடிய அனைத்து இயக்கங்களைச் சார்ந்த பெருமக்களே, தோழர்களே, கழகக் குடும்பத்தவர்களே உங்கள் அனை வரையும் கொஞ்சம் வரவேற்புரை என்று முன்னாலே இருந்தாலும், உங்களின் தொண்டன், தோழன், நீங்கள் குடும்பம் குடும்பமாக திராவிடர் கழக பவள விழா மாநாட்டிற்கு வந்திருக்கிறீர்கள் உங்கள் அனைவருக்கும் வணக்கம் கூறுவதோடு, தலைவர் உள்பட அனை வரையும் வருக! வருக!! வருக!! என்று வரவேற்பதும் என்னுடைய கடமைகளில் தலையாய கடமையாக இருக்கிறது.

இது ஒரு வரலாறு படைக்கக்கூடிய ஒரு நிகழ்வு. நண்பர்கள் இங்கே சொன்னார்கள்.

1944 - 2019 இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்கிறேன்!


என்னுடைய இந்த சிந்தனை என்பது 1944  இல் என்கிறபொழுது, அன்றைக்கு இருந்த சூழல், இன்றைக்கு இருக்கிற சூழல் இரண்டையும் நான் ஒப்பிட்டுப் பார்க் கிறேன்.

தந்தை பெரியார் அவர்களுடைய தலைமை என்ப தையே மாற்றவேண்டும் என்ற பெரிய முயற்சியை எடுத்த நேரத்தில், தஞ்சை மாவட்டத் தோழர்களும், தென்னார்க்காடு மாவட்டத் தோழர்களும், மற்ற தோழர் களும், இயக்கத் தோழர்களும் ஆவேசம் கொண்டார்கள்.

பசுமரத்தாணிபோல, பசுமையான நினைவுகள்


நான் 11 வயது சிறுவன்; எனக்கு பசுமரத்தாணிபோல, பசுமையான நினைவுகள் எல்லாம் நினைவில் இருக் கின்றன.

சேலத்தில் இருக்கக்கூடிய மிகப்பெரிய பொருட்காட்சி மைதானம் - அதற்கு விக்டோரியா மைதானம் என்று பெயர். அங்கேதான் பெரிய பந்தல் போடப்பட்டிருந்தது. அப்பொழுது கருப்புச் சட்டை கிடையாது; திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றப்பட்ட பிறகுதான் கருப்புச் சட்டை. அதேபோன்று திராவிடர் கழகத்தினுடைய கொடியாகிய கருப்பு சிவப்பு என்பது பின்னாளில்தான் உருவானது.

நீதிக்கட்சிக் கொடியான சிவப்புக்கொடி - வெள்ளையில் தராசு; இன்னொரு பக்கத்தில் புலி வில் கயல் தமிழ்க்கொடி. இவைகளையெல்லாம் வைத்துக் கொண்டு அங்கே இருந்தோம். அந்த மாநாட்டில் ஏற்பட்ட ஒரு திருப்பம் என்ன என்பதையெல்லாம் நினைத்துப் பார்க்கிறேன்.

இன்றைக்கு, அய்யா இல்லை, அம்மா இல்லை; அவர்களுக்குப் பிறகு இந்த இயக்கம் இருக்காது என்று பலர் நினைத்த நேரத்தில், இந்த இயக்கம் இருக்கிறது என்றால், அதற்குக் காரணம் நான் அல்ல தோழர்களே, இயக்கத்தில் உள்ள ஒவ்வொரு தொண்டரும், தோழரும் குடும்பம் குடும்பமாக இருப்பதுதான்! பெரியார் பிஞ்சுகள் வரை. இதில் வயது இடைவெளி இல்லாமல், அத்தனை பேரும் இருக்கிறீர்கள்!!

அய்யா அவர்கள், சேலம் தீர்மானத்தை முன்பே தயாரித்தார். நீதிக்கட்சியினுடைய அமைப்பையே மாற்றினார்கள். இங்கே சொன்னார்களே, பதவிக்குப் போகாதவர்களாக இருக்கக்கூடிய நீங்கள் - இவ்வளவு பேர் இங்கே வந்திருக்கிறீர்களே என்று ஆச்சரியப் பட்டார்கள். பஞ்சாயத்து போர்டு தேர்தலில் கூட நிற்கக் கூடாது என்று நீங்கள் தடை செய்திருக்கிறீர்களே என்றார்கள்.

திராவிடர் கழகத்தின் சிறப்பு!


ஆம்! அதுதான் இந்த இயக்கத்தினுடைய சிறப்பு. அதற்குத்தான் இந்தப்  பவள விழாவில் நன்றி சொல்லவிருக்கிறேன். இளைஞர்கள் வருகிறார்கள்; அந்த இளைஞர்களிடம், நீங்கள் எல்லாம் நாடாளு மன்றத்திற்குப் போகலாம்; நீங்கள் எல்லாம் சட்ட மன்றத்திற்குப் போகலாம் என்று சொல்லி, அவர் களை அழைக்கவில்லை; எங்களோடு பின்னால் வந்தால், உங்களை அழைத்துப் போவேன்; நிச்சய மாக! எங்கே அழைத்துப் போவேன்? சிறைச் சாலைக்கு அழைத்துப் போவேன். அவ்வளவுதான்!

நம்முடைய சமுதாய விடுதலைக்காக - சமுதாய உரிமைக்காக - தவறுகள் செய்துவிட்டு அல்ல. சமுதாயத்தில் இருக்கிற தவறுகளை சரிப்படுத்த வேண்டும் என்பதற்காக நாம் சிறைச்சாலைக்குப் போகவேண்டும்.

ஜாதியை ஒழிக்க, தீண்டாமையை ஒழிக்க, பெண்ணடிமையை ஒழிக்க என்பதற்காக நாம் எந்த விலையையும் கொடுப்போம் என்பதுதான் மிகமிக முக்கியம்.

அதற்குப் பிறகும் இளைஞர்கள் வருகிறார்கள்; ஆனால், அந்த இளைஞர்களைக் கொஞ்சம் குழப் பலாம் என்று சிலர் நினைக்கிறார்கள்; பல நேரங்களில் மயக்க பிஸ்கெட்டுகளையெல்லாம் கொடுக்கிறார்கள்.

அதுவும் ஒரு வேடிக்கை என்னவென்றால், துரை.சந்திரசேகரன் மற்ற நண்பர்கள் இங்கே பேசும்பொழுது சொன்னார்கள்.

‘‘செருப்பொன்று போட்டால்


சிலை ஒன்று முளைக்கும்!''


அய்யா அவர்கள் காலத்தில் இருந்த எதிர்ப்பு என்பது கடுமையான எதிர்ப்பு. கடலூரிலேயே அவர்மீது செருப்பைப் போட்டார்கள். அந்த செருப்புப் போட்ட இடத்தில்தான், இன்றைக்குப் பெரியார் சிலையாக எழுந்து நிற்கிறார்.

‘‘செருப்பொன்று போட்டால் சிலை ஒன்று முளைக் கும்'' என்று கவிதை எழுதினார் கவிஞர் கருணானந்தம் அவர்கள்.

முதலமைச்சராக இருந்த கலைஞர் அவர்கள்தான், அய்யா அவர்களை வைத்துக்கொண்டே அந்த சிலையைத் திறந்து வைத்தார்.

கடலூர் மஞ்சள் நகர் மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் உரை யாற்றிக் கொண்டிருந்தபொழுது, மலத்தை நிரப்பி அவர் மீது முட்டையை அடித்த நேரத்தில்கூட, அதனைத் துடைத்துவிட்டுக்கூட அவர் பேசவில்லை; நீண்ட சால்வையைப் போர்த்திக்கொண்டு மூன்று மணிநேரம் பேசினார்.

இன்றைக்கும்  - அன்றைக்கும்


ஒரே ஒரு வேறுபாடு


இந்த இயக்கம் 75 ஆண்டுகாலம் இந்த அளவிற்கு வந்திருக்கிறது என்று சொன்னால், இன்றைக்கும்  - அன்றைக்கும் ஒரே ஒரு வேறுபாடுதான்.

பெரியார் காலத்தில் இருந்த அன்றைய எதிரிகள் கடுமையான எதிரிகள், பலமான எதிர்ப்புகள், எதிர்நீச்சல் அடித்தார்கள் என்று சொன்னாலும், ஒரு ஒரே வேறுபாடு என்னவென்று சொன்னால், அவர்கள் நாணயமான எதிரிகள்.

நம்முடைய எதிரிகளை சரியாக அடையாளம் கண்டுகொள்ளவேண்டும்


இன்றைக்கு இருக்கிற எதிரிகள் வெகு சூழ்ச்சியான எதிரிகள்.

சூழ்ச்சி என்றால், இளைஞர்களைக் குழப்புவது, மக்களைக் குழப்புவது.

போர்க் களத்தில் வெற்றி பெறவேண்டுமானால், ஒன்றை நாம் தெளிவாகத் தெரிந்துகொள்ளவேண்டும். நம்முடைய எதிரிகளை சரியாக அடையாளம் கண்டு கொள்ளவேண்டும்.

எதிரிகளை சரியாக அடையாளம் கண்டுகொள்வது மட்டுமல்ல நண்பர்களே, நம்முடைய தத்துவங்கள், கொள்கைகளையெல்லாம் விளக்குவதைவிட, மிக முக்கியமாக கவனிக்கவேண்டியது என்னவென்று சொன்னால், மிக ஆழமான ஒரு செய்தி. ஒவ்வொரு மனிதனுக்கும், அவன் எப்படிப்பட்டவன் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டுமானால், நல்ல வாய்ப்பாக, அவனுடைய அடிப்படையைப் புரிந்து, அவர்கள் தெளிவாக, கருவிகள், காரணங்கள் என்னவென்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

லட்சியங்களை மட்டும் அடைவதைப்பற்றி பேசு வதைவிட, அதனை அடைவதற்கான வழிமுறைகள் என்ன? அதற்குக் கொடுக்கவேண்டிய விலைகள் என்ன?

இதைத்தான், பெரியார் காலத்தில் அவர்கள் தொடங்கிய போராட்டத்தில், அவர்கள் பணி முடிப்போம் என்று நாங்கள் உறுதி எடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

கொள்கைக்காக நாம் சர்வபரி தியாகம் செய்யக்கூடியவர்களாக மாறுவோம்


திராவிடர் கழக பவள விழா மாநாட்டிற்கு குடும்பம் குடும்பமாக வந்திருக்கின்ற தோழர்களே, மாலையில் எந்த அளவிற்கு வாய்ப்பு இருக்கும் என்று தெரியாது.

உங்களை அன்போடு வேண்டிக்கொள்கிறேன், உங்கள் தொண்டன், உங்கள் தோழன், உங்களைத் தவிர வேறு எந்த உறவுகள் எங்களுக்குக் கிடையாது என்பதை உறுதியாக வைத்துக்  கொண்டிருக்கின்ற எங்களைப் போன்றவர்கள், உங்களை அன்போடு கேட்டுக்கொள் வதெல்லாம்,  இந்தக் கொள்கைக்காக நாம் சர்வபரி தியாகம் செய்யக்கூடியவர்களாக மாறுவோம்.

பெரியார் காலத்தில், அன்னை மணியம்மையார் அவர்கள் காலத்தில், ஏன் நம்முடைய காலத்தில் என்றெல்லாம் நாம் பேசுவதைவிட, ஜாதி ஒழிந்ததா? பெண்ணடிமை நீங்கியதா? மூடநம்பிக்கை அழிந்ததா?

சூளுரை எடுக்கின்ற மாநாடுதான்,


இந்தப் பவள விழா மாநாடு!


இந்தக் கொள்கைகளைச் சொன்னார்கள் அல்லவா! இந்தக் கொள்கைகளைக் கொண்ட ஒரு காரியத்தில் நாம் பெரு அளவிற்கு வெற்றி பெற்றிருக்கிறோம். பல களங்களில் வெற்றி பெற்றிருக்கிறோம்; பல தளங்களில் வெற்றி பெற்றிருக்கிறோம். ஆனால், போரில் வெற்றி பெற்றோமா என்று பார்க்கின்றபொழுது, இந்த அறப் போரில் நாம் வெற்றி பெற்றே ஆகவேண்டும். அதற்கு சூளுரை எடுக்கின்ற மாநாடுதான், இந்தப் பவள விழா மாநாடு.

அதற்காக எந்த விலையையும் கொடுப்போம். இப்பொழுது உள்ள எதிரிகள், நமக்கு பேச்சுரிமை இல்லாமல், அடக்குமுறைகளையெல்லாம் அவர்கள் நம்மீது ஏவிப் பார்க்கலாம்.  அதற்கும் தயாராகத்தான் என்றைக்கும் நாங்கள் இருக்கிறோம்; என்றைக்கும் சிறைச்சாலைக்குப் போவதற்குத் தயாராக இருக்கிறோம். அடக்குமுறைகளை சந்திப்பதற்குத் தயாராக இருக்கி றோம்.

நம்முடைய எதிரிகள் நாணயமற்ற எதிரிகள் என்று சொல்லும்பொழுது நண்பர்களே, ஒன்றை உங்களுக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

வரலாற்றைப் பற்றி அழகாகச் சொல்லும்பொழுது பேராசிரியர் சுப.வீ. அவர்கள் சொன்னார்கள்.

‘அண்ணாதுரை தீர்மானம்'


தந்தை பெரியார் அவர்கள், பார்ப்பனர் அல்லாதார் என்ற எதிர்மறைப் பெயரை மாற்றி, திராவிடர் கழகம் என்று பெயர் வைத்த நேரத்தில், அண்ணா அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அண்ணா அவர்களே அந்தத் தீர்மானத்தை முன்மொழிய வேண்டும் என்று ‘அண்ணாதுரை தீர்மானம்'  என்று பெயர் வைத்தார். அதை அச்சடித்தது ‘குடிஅரசு' அலுவலகத்தில்.

ஆனால், இளைஞர்களை முன்னிலைப்படுத்த வேண்டும்; அதுமட்டுமல்ல, அண்ணா போன்ற ஈர்ப் புள்ள இளைஞர்கள் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் தன்னுடைய தோழர்களை, தன்னுடைய தோள்மீது தூக்கி நிறுத்தி, உலகத்திற்குக் காட்டினார். அப்படிப்பட்ட தலைமை தந்தை பெரியார் அவர்களுடைய தலைமை!

இளைஞர்கள் எச்சரிக்கையாக


இருக்கவேண்டும்


திராவிடர் கழகம் என்று பெயர் வைத்துக் கொண்டிருக்கிறார்களே, அப்படியென்றால், தமிழர்களுக்கு வேறுபட்டவர்களா இவர்கள் என்றெல்லாம் பேசிக்கொண்டு, குழப்பவாதிகள் சிலர் வருகிறார்கள்.

இந்த இடத்தில் இளைஞர்கள் உள்பட அனைவரும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். நம்முடைய இன எதிரிகள் ‘பல மாயமான்களைத்' தயாரித்து நமது இயக்கத்தைப் பலவீனப்படுத்த, நம்முடைய உணர்வையே மூலதனமாக்கி ஏமாற்றிட முயலுகிறார்கள், எச்சரிக்கை!

நான் சொல்வதைவிட, இதோ நம்முடைய அறிவாசான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள் வழிகாட்டுவதைப்போல சொல்கிறார்கள்.

பெரியார் பேசுகிறார், கேளுங்கள்!


மிகவும் எளிமையான விளக்கம் - பெரியார் சொல்கிறார்.

‘‘தமிழர்கள் என்பது மொழிப் பெயர். திராவிடர் என்பது இனப் பெயர். தமிழ்ப் பேசும் மக்கள் யாவரும் ‘தமிழர்' என்ற தலைப்பில் கூட முடியும். ஆனால், தமிழ்ப் பேசும் அத்துணை பேரும் திராவிடர் ஆகிவிட முடியாது. இனத்தால் திராவிடனான ஒருவன், எந்த சமயத்தைச் சார்ந்தவனாக இருந்தாலும், எந்த மொழி பேசுபவனாக இருந்தாலும், அவன் ‘திராவிடன்' என்ற தலைப்பில் சேருவான். ஆகையால், திராவிட மொழி தமிழ் என்கிற காரணத்திற்காக, தமிழ் பேசும் திராவிடன் அல்லாத ஒருவன், மொழி காரணமாக மட்டுமே தன்னை திராவிடன் என்று கூறிக்கொள்ள முடியாது.’’

‘‘தமிழர் என்றால், பார்ப்பானும் தன்னை தமிழர் என்று கூறிக்கொண்டு, நம்முடன் கலந்துகொண்டு மேலும் கெடுக்கப் பார்ப்பான். திராவிடன் என்றால், எந்தப் பார்ப்பானும் தன்னை திராவிடன் என்று கூறிக்கொண்டு, நம்முடன் சேர முற்படமாட்டான். அப்படி முன்வந்தாலும், அவனுடைய ஆச்சார அனுஷ்டானங்களையும், பேத உணர்ச்சியையும் விட்டு, திராவிடப் பண்பை ஒப்புக்கொண்டு அதன் படி நடந்தாலொழிய, நாம் அவனை திராவிடன் என்று எளிதில் ஒப்புக்கொள்ளமாட்டோம்'' என்று சொன்னார்.

‘திராவிடன்' என்று


தமிழ்ப் பத்திரிகைக்குப் பெயர்


இங்கே அழகாக சொன்னார் கழக துணைத் தலைவர்.

நீதிக்கட்சிக் காலத்திலேயே தமிழில் பத்திரிகை ஆரம்பிக்க வேண்டும் என்று நினைத்தார்கள். ‘திராவிடன்' என்று தமிழ்ப் பத்திரிகைக்குப் பெயர் வைத்தார்கள்.

‘ஆந்திர பிரகாசினி' என்று தெலுங்கில் பெயர் வைத்தார்கள்.

மொழி என்று வந்தால் வேறு; ஆனால், தமிழன் என்று சொன்னால், தமிழன் என்று பெயர் வைக்க வில்லை; இனத்தின் பெயர்தான் ஆக்கப்பூர்வமாக ‘திராவிடன்' என்று வைத்தார்கள். அச்சகத்திற்குப் பெயரே திராவிடன் அச்சகம்தான்; பத்திரிகைக்குப் பெயரே திராவிடன் என்பதுதான். திராவிடன் என்பது இருக்கிறது அது ஒரு பண்பாட்டின் அடையாளம்.

அது யாரையும் ரத்தப் பரிசோதனை செய்வதில்லை. ‘‘ரத்தப் பிரிவில் எல்லோரும் கலந்துவிட்டார்களே, இப் பொழுது என்னங்க, ஆரியம் - திராவிடம் என்று சொல்கிறீர்கள்'' என்று சிலர் புரியாமல் கேட்கலாம்.

இதோ என்னுடைய கைகளில் இருப்பது மனுதர்மம். இந்த மனுதர்மத்தைத்தான், அம்பேத்கர் தலைமையில் இயற்றப்பட்ட அரசமைப்புச் சட்டத்தைத் தூக்கி எறிந்து விட்டு, இன்றைக்கு அரசமைப்புச் சட்டமாக்கவேண்டும் என்று சொல்கிறார்கள்.

தங்களுக்கு இருக்கின்ற பெரும்பான்மையைப் பயன் படுத்திக் கொண்டு, அதனை செய்தால் வியப்பேது மில்லை.

அந்த மனுதர்மத்திலேயே, சூத்திரர்கள் எல்லாம் திராவிடர்கள் என்று சொல்லப்பட்டு இருக்கிறது!

அப்படி என்றால், பார்ப்பனரல்லாதாருக்கு வேறு பெயர் வைக்கவேண்டும்; சூத்திரர்கள் என்று சொன் னால், நமக்கு அவமானம் அல்லவா!

நம்முடைய பிறவி இழிவு அல்லவா!


மனுதர்மத்தில் என்ன எழுதி வைத்திருக்கிறார்கள்? நம்முடைய பிறவி இழிவு அல்லவா என்றார் பெரியார்.

எனவேதான், திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றப்பட்டு, இன்றைக்கு 75 ஆண்டுகாலம் ஆகியி ருக்கிறது என்று சொன்னால், இதில் எந்தக் குழப்பத் தையும், இளைஞர்களோ, மற்றவர்களோ, இந்த இயக்கத்தை நோக்கி வரக்கூடியவர்களோ, தமிழன் வேறு - திராவிடன் வேறு என்றெல்லாம் பிரித்துக் கொண்டிருக்கக்கூடாத - ஏமாற்றுக்காரர்கள் - எப்படி சினிமாக் கவர்ச்சியினால் ஏமாறாதீர்கள் என்று போட் டோமோ, அதேபோல, திராவிடன் - தமிழன் என்று குழப்பக்கூடியவர்களும், ஆரியத்தினுடைய மாயமான் கள் என்பதை மறந்துவிடாதீர்கள்; ஏமாந்துவிடாதீர்கள்.

"வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்

வைத்தூறு போலக் கெடும்."

ஆகவேதான், வருமுன்னாலே எச்சரிக்கை செய்வது எங்களுடைய வேலை. இளைஞர்கள் திசை தடுமாறக் கூடாது. பெரியார் ஒருவர்தான் பதிலாக இருக்க முடியும்.

பெரியார், அம்பேத்கரை


ஏன் குறி வைக்கிறார்கள்?


மற்றவர்களைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல், பெரியார் சிலையை ஏன் குறி வைக்கிறார்கள்? ஏன் அம்பேத்கர் சிலையைக் குறி வைக்கிறார்கள்?  இவர்கள் எல்லாம் ஆரியக் கொள்கையை எதிர்த்தவர்கள்; அதற் காகத்தான் இவர்களுடைய சிலைகளைக் குறி வைக் கிறார்கள். எனவே, அவர்களைப் புரிந்துகொள்ளுங்கள்.

அடுத்தபடியாக இன்னொன்று, நம்முடைய ஜவாஹி ருல்லா அவர்கள் இங்கே சொன்னார்கள்.

பண்பாட்டுப் படையெடுப்பு கூடாது என்று நாம் சொல்வது இருக்கிறதே, நமக்குள்ள அடிப்படை உரிமை. அது சிறுபான்மையினராக இருந்தாலும், அவர்களுடைய உரிமையைக் காக்கவேண்டிய இந்த அரசமைப்புச் சட்டத்தினுடைய கடமை.

அரசமைப்புச் சட்டத்தின் 29 ஆம் பிரிவு


இதோ அரசமைப்புச் சட்டத்தில் உள்ள பிரிவு 29.

Any section of the citizens residing in the territory of India or any part thereof having a distinct language, script or culture of its own, shall have the right to conserve the same.

இதன் தமிழாக்கம்:

‘‘இந்தியாவின் எந்தப் பகுதியிலேனும் வசிக்கின்ற குடிமக்களின் எந்த ஒரு பிரிவினரும் தமக்கென்று பிரத்யேகமான மொழியையோ, எழுத்து வடிவத்தையோ, பண்பாட்டையோ கொண்டவர்களாக இருந்தால் அவற்றைப் பேணிக்காக்கும் உரிமை அவர்களுக்கு உண்டு.''

எனவே, திராவிடர் கழகம் நடத்துகின்ற போர், அரசியல் போராட்டமல்ல; பதவிக்கான போராட்டமல்ல. முழுக்க முழுக்க மானத்திற்கான, உரிமைக்கான போராட்டமாகும். அதைத்தான் இங்கு தெளிவாக சொல்ல விரும்புகிறோம்.

இந்த நேரத்தில் ஒன்றை சொல்லுகிறேன்; அதிக நேரத்தை எடுத்துக்கொண்டு, தலைவர்களைக் காக்க வைக்க விரும்பவில்லை. எஞ்சியதை மாலையில் சொல்லிக் கொள்ளலாம்.

நேற்றைய தினம் வெளிவந்துள்ள ஆங்கில ‘இந்து' பத்திரிகையில்,

75 years of carrying the legacy of Periyar
DK remains relevant in the Dravidian movement


பெரியாருடைய பாரம்பரியத்தில், 75 ஆண்டுகாலம் தொடர்ந்து எடுத்துக் கொண்டு வந்ததைப்பற்றி ஒரு அற்புதமான செய்திக் கட்டுரை வெளியிடப்பட்டு இருக்கிறது.

‘துக்ளக்' ஆசிரியர் குருமூர்த்தி


அந்த செய்திக் கட்டுரையில், நம்முடைய கழக துணைத் தலைவர் கவிஞர் அவர்களையும், அதேபோல, கழகப் பிரச்சார செயலாளர் அருள்மொழி அவர்களை யும், (அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதினால், அவர்கள் இம்மாநாட்டில் கலந்துகொள்ள வாய்ப்பில் லாததால், அவர் திறந்து வைக்கவேண்டிய அன்னை மணியம்மையார் உருவப் படத்தினை நான் திறந்து வைக்கவேண்டிய நிலை ஏற்பட்டது) பேட்டி கண்டு, பெண்ணடிமைபற்றியெல்லாம் பேசி, நம்முடைய கருத்துகளை அழகாகப் பதிவு செய்திருக்கிறார்கள். நமக்கு மாறுபட்டவர்களிடமும், எதிரிகளிடமும் கருத்து களைக் கேட்கவேண்டும் என்று அவர்கள் நினைத்து, இவர்களுக்கு எதிராக இருக்கக்கூடியவர்களின் மதிப்பீடு என்ன இந்த 75 ஆண்டுகாலத்தில் என்று நினைத்து அவர்கள் ஒருவரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

அவர் யார் என்றால், ‘துக்ளக்' ஆசிரியர் குரு மூர்த்தியை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அருமையான வரை தேர்ந்தெடுத்ததற்காக ‘இந்து' பத்திரிகைக்கு நன்றி.

ஜாதி இருக்கவேண்டும் என்பதை வெளிப்படையாகச் சொல்லக் கூடியவர்கள்!


திராவிடர் கழகத்திற்கு, எங்களுக்கு, கொள்கை களுக்கு நேர் எதிரான, தத்துவ ரீதியாக ஆர்.எஸ்.எஸ். எங்களுக்குக் கொள்கை எதிரி; ஜாதி, வருணதர்மம் இருக்கவேண்டும் என்பதை வெளிப்படையாகச் சொல்லக் கூடியவர்கள்.

பொது மொழி, சமஸ்கிருதத்தைத் தவிர வேறு மொழி பொது மொழியாக இருக்கக்கூடாது என்று சொல்லிக் கொண்டிருக்கக் கூடியவர்கள்.

இப்படிப்பட்ட கொள்கைகளைக் கொண்டிருப்ப வரைப் பார்த்து, திராவிடர் கழகம் 75 ஆண்டு விழா கொண்டாடுகிறதே, அது வெற்றி பெற்றிருக்கிறதா? என்று கேட்டவுடன்,

அவர் சொல்கிறார், அவை தோல்வி அடைந்திருக் கின்றன என்று.

ஏன் தோல்வி அடைந்திருக்கிறது என்று காரணம் சொல்கிறார்.

RSS ideologue and Thuglak Editor S. Gurumurthy, however, disagreed. “My study is that any movement born in anger is contextual. It will lose its value once its leadership sees and acquires power and becomes soft. Then, the movement dissipates and becomes irrelevant. This rule is valid for communism and the DK.” The DK movement, according to him, failed because though its anger was against Brahmins, it wrongly targeted Gods. “It was defeated by Gods. But its effect is that it made the Brahmins less dependent on the State and other castes for their survival,” he argued. “Its result is a huge minus and it has stunted T.N. - the intellectual leader of India and the world -by dividing and engaging intellectuals in short-term issues,” he said.

இதன் தமிழாக்கம் வருமாறு:

ஆர்.எஸ்.எஸ். கொள்கைவாதியும், ‘துக்ளக்‘  ஏட்டின் ஆசிரியருமான எஸ்.குருமூர்த்தி மேற்குறிப் பிட்ட கூற்றை ஒப்புக்கொள்ளவில்லை.

இதுபற்றி அவர் கூறியதாவது:

‘‘கோப உணர்ச்சியின்பால் தோற்றுவிக்கப்பட்ட எந்த இயக்கமும் அந்தக் காலச் சூழ்நிலைக் கார ணத்தின் அடிப்படையிலானதே. அதன் தலைமை அதிகாரத்திற்கு வந்த பின்னர் மென்மையான போக்கினைக் கடைப்பிடித்து இயக்கத்தின் தேவை யும் இல்லாமல் போய்விடுகிறது. அதன் பின்னர் அந்த இயக்கம் சிதைந்து, பொருத்தப்பாடு இல்லாமல் போய்விடுகிறது. இந்த நிலைமை கம்யூனிசத்திற்கும், திராவிடர் கழகத்திற்கும் பொருந்தும்.''

‘‘திராவிட இயக்கமானது பார்ப்பனர்கள்மீது கொண்ட கோபத்தின் காரணமாக கடவுளைத் தாக்கி தோல்வி அடைந்துவிட்டது. கடவுளே தோற்கடித்து விட்டார். இதன் பாதிப்பில் தங்களைத் தக்க வைத்துக்கொள்ள பார்ப்பனர்கள் அரசையும், பிற ஜாதியினரையும் சார்ந்து இருப்பது குறைந்துள்ளது. இதனால் மாபெரும் இழப்பு அரசுக்கு ஏற்பட்டு விட்டது; தமிழ்நாட்டு வளர்ச்சியை மட்டுப்படுத்தி விட்டது. அறிவுஜீவிகளை (பார்ப்பனர்களை) பிரித்து அவர்களை குறுகிய காலத் தேவைக்கு மட்டும் பயன்படுத்தியதாலும், தமிழ்நாடு, இந்தியாவின், உலகின் அறிவார்ந்தோர் பகுதி என்பது மறைந்துவிட்டது.''

மேலும் தமிழர் தலைவர் தமது உரையில்,

திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் இரட்டைக் குழல் துப்பாக்கியாக இருக்கிறதே! பெரியார் ஏன் அன்றைக்கு 1944 இல் அண்ணாதுரை தீர்மானம் என்று கொண்டு வந்தார்? அண்ணா அவர்கள் அரசியலுக்குப் போனார் என்றால், கொள்கையை விட்டுக் கொடுக்கவேண்டிய அவசியம் வரும் என்பதற்காகத்தான், அய்யா அவர்கள் தனி அமைப்பே வைத்திருந்தார். நல்ல வாய்ப்பாக இன எதிரிகள், ஆரி யம் ஏமாந்தது. அது என்னவென்றால், அண்ணாவைப் பயன்படுத்தி இந்த இயக்கத்தை அழிக்கலாம் என்று நினைத்தார்கள்!!

ஆரியத்தையே ஏமாற்றிய


ஒருவர் உண்டு!


ஆனால், வரலாற்றில் ஒரு பெரிய திருப்பம் என்றால், ஆரியம் மற்றவர்களைத்தான் ஏமாற்றி இருக்கிறது. ஆரியத்தையே ஏமாற்றிய ஒருவர் உண்டு என்றால், அவர்தான் அறிஞர் அண்ணா அவர்கள். அவர் அதனைப் பயன்படுத்திக் கொண் டார். அவர், ஆரியத்திற்குப் பயன்படவில்லை. அண்ணாவிற்கு ஆச்சாரியார் பயன்பட்டார்.

தி.மு.க. தலைவர் தளபதியின் அறிக்கை!

அதனுடைய விளைவுதான், இன்றைக்கு இரட்டைக் குழல் துப்பாக்கி. நேற்றுகூட தி.மு.க. தலைவர் தளபதி அறிக்கை கொடுத்தார். பவள விழா மாநாடுதான் எங்களின் பயிற்சி பாசறை -  அந்தப் பயிற்சிக் களத்தில் நாங்கள் ஈடுபடுவோம் என்று சொல்லியிருக்கிறார்.

திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் இரட்டைக் குழல் துப்பாக்கிகள். ஆகவே, அந்த இயக்கம் அரசியலைப் பார்த்துக் கொள்ளும். இந்த இயக்கம் அதற்குப் பாதுகாப்பாக - இப்படிப் பட்ட ஒரு அற்புதமான ஒரு அணியை அமைப் பதன்மூலமாக ஒரு பெரிய திருப்பத்தை உருவாக்கும் பணியை சிறப்பாக செய்வோம்.

எனவே, இதனுடைய அடிப்படையை புரியாமல், எதிரான ஒரு கருத்தை ‘துக்ளக்' குருமூர்த்தி சொல்லி யிருக்கிறார்.

இதே சேலத்தில், 1971 இல் இராமனைக் காட்டி, இராமனை அவமானப்படுத்தினார்கள் என்று பிரச்சாரம் செய்து, திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக்கு எதிராகப் பிரச்சாரம் செய்தார்கள்.

திராவிட முன்னேற்றக் கழக வரலாற்றிலேயே, 184 இடங்களைப் பெற்றது - இதே சேலத்தில் இராமன் கைகொடுக்கவில்லை.

பெரியார் காலத்தில் ‘இராமனை தேர்தல் பிரச்சி னையாக்கி'னார்கள் தேர்தல் நடைபெறுகின்ற நேரத்தில். அப்பொழுதும் வெற்றி பெற்றது திராவிட முன்னேற்றக் கழகம்.

அன்று இராமனும் கைகொடுக்கவில்லை -


இன்று கிருஷ்ணனும் கைகொடுக்கவில்லை!


இப்பொழுது, பெரியார் இல்லை; வீரமணி. நடந்து முடிந்த தேர்தல்களில், கிருஷ்ணனைக் காட்டி வெற்றி பெறலாம் என்று நினைத்தார்கள். முன்பு இராமன்தான் கைகொடுக்கவில்லை, கிருஷ்ணனாவது கைகொடுப் பானா என்று நினைத்தார்கள். பரிதாபமாக கிருஷ்ணனும் கைகொடுக்கவில்லை.

கடவுள்கள் வெற்றி பெற்றார்களா குருமூர்த்திகள் பதில் கூறட்டும்!

காஞ்சி வரதரை அழைத்து வந்து கூட்டம் சேர்த்துக் காட்டுகிறார்கள். ‘டாஸ்மாக்' கடைகளில் ஏராளமான கூட்டம் என்பதால், மதுவிலக்குப் பிரச்சாரம் செய்ய வெட்கப்பட வேண்டுமா? மேலும், அதன் பணி தேவைப் படுகிறது என்பதுதான் பொருள்.

ஆகவே, குருமூர்த்திகள் போன்று இருக்கக்கூடிய ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சார்ந்தவர்கள் சொல்கின்ற கருத்தும் உண்மையல்ல என்று சொல்லக்கூடிய அள விற்கு, எங்களுடைய பயணம் என்றைக்கும் தொடரும். இந்தப் பயணம் சாதாரணமான பயணமல்ல. இது லட்சியப் பயணம்.

ஜாதியற்ற சமுதாயத்தை - பேதமற்ற சமுதாயத்தை உருவாக்குவோம்!


எங்கள் நீச்சல் சாதாரண நீச்சல் அல்ல; எதிர்நீச்சல். எனவேதான், எதிர்நீச்சல் அடித்துப் பழக்கப்பட்ட நீங்கள், என்றைக்கும் தயாராக வாருங்கள்;

எந்த விலையும் கொடுத்து

ஜாதியை ஒழிப்போம்,

சமத்துவத்தை உருவாக்குவோம்,

மதவெறியை நீக்குவோம்,

மனிதநேயத்தை உருவாக்குவோம்,

பெண்ணடிமையை போக்குவோம்,

புதிய சமுதாயத்தை உருவாக்குவோம்

பவள விழா அல்ல -

நூற்றாண்டுக்குள்

ஜாதியற்ற சமுதாயத்தை

பேதமற்ற சமுதாயத்தை

உருவாக்குவதில் நாங்கள் இருக்கிறோமோ இல் லையோ - இளைஞர்களே, நீங்கள் அந்தக் கொடியை, அந்தச் சுடரை ஏந்தி, அந்தப் பயணத்தைத் தொடருங்கள், தொடருங்கள் என்று கேட்டு, வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறுகிறேன்.

இறுதியாக ஒன்று, மாலை 4 மணிக்கு பேரணி தொடங்கவிருக்கிறது. எல்லா தோழர்களும் அந்தப் பேரணியில் குடும்பம் குடும்பமாகக் கலந்துகொள்ள வேண்டும். கட்டுப்பாடோடு நடந்துகொள்ளவேண்டும். இராணுவக் கட்டுப்பாட்டைவிட, பெரியார் இராணுவத் தினுடைய கட்டுப்பாடு என்பது மிகமிக முக்கியமானது.

நம்முடைய ஊர்வலங்களில் காவல்துறையினருக்கு வேலையே இருக்காது


எப்பொழுதுமே, நம்முடைய மாநாடுகளில், நம்மு டைய கூட்டங்களில், நம்முடைய ஊர்வலங்களில் காவல்துறையினருக்கு வேலையே இருக்காது. அவர்கள் அமைதியாக நம்முடனே வருவார்கள்.

எனவே, உங்களை அன்போடு கேட்டுக்கொள்வது, குறிப்பிட்ட முழக்கங்களை குறிப்பிட்ட தோழர்கள் சொல்வார்கள்; எனவே, அவர்கள் சொல்கின்ற வாச கங்களைத் தவிர, வேறு எந்த வாசகங்களையும் யாரும் முழங்கக்கூடாது என்பதை உரிமையோடு உங்கள் தொண்டன், உங்கள் தோழன் கேட்டுக்கொள்கிறேன்.

நம்முடைய பவள விழா வெற்றி - தலைசிறந்த வெற்றி. அந்தப் பேரணியினுடைய வெற்றி என்பதையும், பேரணி முடிந்தவுடன் மாலையில், தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் பொதுக்கூட்டம் நடை பெறவிருக்கிறது. மற்ற தலைவர்களும் அப்பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்ளவிருக்கிறார்கள்.

எல்லோரும் உரையாற்ற நேரம் கிடைத்திருக்காது; ஆகவேதான், காலை, மாலை என்று பிரித்து மாநாட் டினை நடத்துகின்றோம். இந்தப் பவள விழாவின் அடுத்த கட்டமாக மாலையில் சந்திப்போம். இயற்கை ஒத்துழைக்கும் என்று நினைக்கிறேன். இனிமேல் அதைப்பற்றி கவலையில்லை; மழை பெய்தாலும் கூட்டம் நடைபெறும்.

கட்டுப்பாடோடு பேரணியை நடத்தி, வெற்றிகரமாக ஆக்கவேண்டும். அது நம்முடைய கடமை. இது வரையில் நாம் நடத்திய பேரணிகள், தஞ்சையில் நடைபெற்ற மாநில மாநாட்டிலும் சரி, அதற்கு முன் குடந்தையில் நடைபெற்ற திராவிட மாணவர் கழக மாநாட்டிலும் சரி கட்டுப்பாடோடு நடைபெற்றிருக்கிறது. எனவே, ஒத்துழைக்கவேண்டும் என்று கேட்டு,

என்னுடைய தலைதாழ்ந்த நன்றி


வாய்ப்பளித்த உங்களுக்கும், நீண்ட நேரம் இருந்த நம்முடைய தலைவர்களுக்கும் என்னுடைய தலை தாழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டு என்னுரையை முடிக்கிறேன்.

நன்றி, வணக்கம்!

வாழ்க பெரியார்!

வளர்க திராவிடர் கழகம்.

- வாழ்க திராவிடர் இயக்கம்!

நன்றி, வணக்கம்!

இவ்வாறு திராவிடர் கழகத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

 - விடுதலை நாளேடு, 5.9.19


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக