வியாழன், 12 செப்டம்பர், 2019

பெரியார் அவர்களின் கருத்துக்களுக்கு பார்ப்பனப் பேரறிஞர்களின் ஒப்பம் - 9

முன்ஷி - பிர்லா - ராதாகிருஷ்ணன் - வெங்கட்ராம சாஸ்திரியார் ஆராய்ச்சி நூலில் காணும் உண்மைகள் விடுதலையின் விளக்கம்:-

10.9.2019 அன்றைய தொடர்ச்சி...


சாப்பாட்டுத் தேவர்கள்


பிராமணா போஜனப் பிரியா என்ற வாசகம் எப்போது யாரால் எதனால் ஏற்பட்டதென்ற வரலாறு இதுவரை புலனாகவில்லை. இந்த மொழிக்கு ஆதாரம் இந்த முன்ஷி ஆராய்ச்சி நூல் காட்டுகிறது.

அதாவது, தேவரின் கருணையை - அருளைப் பெறச் சிறந்த வழி - உபாயம் அத்தேவருக்கு நல்ல சாப்பாடு படைப்பது தான் என்ற வேதக் கோட்பாட்டைச் சுட்டிக்காட்டியுளர் முன்ஷீக்கள்.

இத்துடன் நன்றி செலுத்தலாகக் காணிக்கைகள் அர்க்கியங் களும் தரப்பட்டனவாம்.

மற்றும், மக்கள் உள்ளத்தில் பார்ப்பனர் தேவரடியார் - ஆண் டவனுக்கு அடிமை என்ற உணர்ச்சியும் ஏற்படுத்தப்பட்டது; இதன் விளைவாக மக்கள் தங்களிடமிருந்த பண்டம் பொருள்களை ஆண்டவனுக்கே உரிமையாக்கிவிடச் செய்யும் துறவுப்பான்மையும் ஏற்படச் செய்யப்பட்டது.

பணப்பறி


முற்றிய பக்தியின் சிறப்பு, தம்மிடமுள்ள சொத்துக்களைத் துறத்தல் என்ற கோட்பாடு நுழைக்கப்பட்டது. துறக்கப்பட்ட இந்தச் சொத்துக்கள் யாருக்கு? பணக்காரர்களை மிரட்டிப் பணம் பறித்து பார்ப்பனருக்குத் தருவதே சமஸ்கிருத வேத மந்திரங்களின் குறிக்கோளென இந்நூலாசிரியர்களே முன்பகுதியில் கருத்துத் தெரிவித்துளரே பறிக்கப்பட்ட பணம் பார்ப்பனப் புரோகிதர்களுக்கே தரப்படுமென்றும், பிற இன ஏழை எளியவர்களுக்கல்லவென்றும், ரிக் வேதம் ஏழைகள் பால் கருணை காட்டுவது பற்றி யாதொன்றும் குறிப்பிடவில்லை என்றும் இந்த வேதகால ஆராய்ச்சி நூலே விளக்கம் தந்துள்ளது. எனவே, துறவு கொண் டவர்களின் சொத்துகளும் தேவனுக்கு அதாவது தேவரின் வாரிசுதாரரான பூதேவர்களுக்கு உரிமையாகிவிடும். எனவே, இதுவும் புரோகிதர் சுகவாழ்வுத் தந்திரமேயாகிறது.

இவ்விதம் ஆண்டவனுக்கு அர்ப்பணம் செய்வதால் சிறந்த பேரின்பம் கிடைக்கும் என்று ரிக் வேதத்திலும் தீட்டி வைத்துக் கொண்டுள்ளனர். ஆனால், அந்த இன்பம் இந்த மண்ணுலக மானிடவுடலிலே இந்த வாழ்க்கை நிலவரத்திலே காணவியலாதெனவும் கூறி, செத்தபின் அதாவது இந்தவுடல் மண்ணோடு மண்ணாகிய பின் அடையும் இன்பமே மோட்சம் என்றும் கூறித் தங்கள் சுயநல சுகவாழ்வுத் துறைக்குப் பாதுகாப்பும் தட்டிக் கழிக்கச் சாக்குப் போக்குத் தந்திரமும் அந்த வேத விதிகளில் சேர்த்துக் கொண்டுள்ளனர்.

யாகம் ஏமாற்றுவித்தை


ஆண்டவனுக்கு அர்ப்பணித்துப் பொருள்கள் எல்லாவற்றையும் வேதியர்களே உண்டு ஏப்பம் விட்டால், அவற்றைக் கொடுத்த பாமர - மவுடீக மக்களும் கூடச் சந்தேகிப்பரே! பசித்த வயிறாவது இவ்விதம் எண்ணவும் துணிவுடன் கேட்கவும் தூண்டிவிடலாம். எனவே, காணிக்கை அளித்த பக்தர் கண்காண ஏதாவது தந்திரம் செய்யவேண்டுமென்ற நோக்கத்தால்தான் ஹோமம், யாகம் என்ற பெயரில் நெருப்பு வளர்த்து, சில பண்டங்களை அதில் சொரிந்து அவற்றைத் தேவர்களுக்கு அனுப்பிவிட்டதாகக் கண்துடைப்பு நாடகம் - கண் கட்டு வித்தை நடத்தி வந்துள்ளனர். பெரும் பகுதிப் பண்டங்களை அவர்கள் உரிமையாக்கிக் கொள்வதற்கும் பண்டங்களைத் தந்த மக்கள் ஆட்சேபிப்பரே என்ற உட்கருத்தால் பிரசாதம் என்ற பெயரில் சிறு பகுதியை அப்பக்தர்களுக்குக் கிள்ளிக் கொடுப்பர் சுண்டைக்காய் அளவில். இவ்விதம் கிள்ளிக் கொடுக்கும் பண்டத்துக்கு அவிர்ப்பாகம் (தேவ அவிசு தேவப் பிரசாதம்) என்றும் பற்பல பெயர்களும் இட்டனர்.

இந்தத் தேவப் பிரசாதத்தை பட்டினி வயிற்றுடன் பட்டினி மயக்க நிலவரத்தில் பக்தியோடு வாங்கிப் பக்தியோடு விழுங்கிவிட வேண்டும் மருந்தை விழுங்குவது போல்; மனவேறுபாடு, முகவேறுபாடு கொண்டால் தெய்வக் கோபம், சாபம், பாபம் - நரகம் என்ற அடுக்குச் சொற்களைக் கொண்டு அச்சுறுத்தல் ஒத்திகை நாடகம் நடக்கும்.

தேவரைத் திருப்திப்படுத்தும் உணவை அவர்களிடம் சேர்ப்பதற்காகத்தான் யாகங்கள் என வேத நூல் விளக்கம் தருகிறது. அதாவது, இந்த யாகத் தீயின் மூலம் தேவர் களுக்குச் சாப்பாடு அனுப்புகிறார்களாம்.

சூரியனுக்குப் பிரியமான உணவு சூரியனின் வாகனம் என்று எண்ணமிட்டு அஸ்வமேத யாகம் செய்கின்றனராம். தேவர் களைக் கொழுக்க வைக்க இப்பூலோக மக்களை உண்ணா விரதமிருக்கச் செய்து அவர்கள் பொருளை வாங்கிக் கொள்வதுபோல, சூரியனின் குதிரைகளுக்குச் சக்தியூட் டவும் இந்த யாகம் செய்யப்படுவதாகவும் எண்ணப்படுகிறது. இந்த யாகத்தின் போது பாடப்படும் சுலோகங்கள் பிற் காலத்தில் பற்பலரால் ஆக்கப்பட்டுள்ளன. மனிதருக்குப் பிரியமான உணவைத் தேவருக்கும் அளித்து மகிழ்விக்கத் தான் மனிதர் சாப்பிடும் சாப்பாடும் யாகத்தீ மூலம் அனுப்பப்படுகிறதாம்.

அதிலும் சுயநலம்


மன்னர்கள் ஆட்சி ஏற்பட்டபின் இந்த யாகங்கள் அதிகரித்தன; நாட்டு நலத்துக்கென்றும் மன்னர் பெருவாழ்வுக்கென்றும் யாகங்கள் கற்பனை செய்யப்பட்டன. மற்றும் அந்த அஸ்வமேத யாகம் என்பதை மன்னர்கள் ஏன் செய்கிறார்கள்? எவ்வகையில் செய்கிறார்கள்? இதை நுணுகிப் பாருங்கள். அசுவமேத யாகம் செய்வதன் நோக்கம் பல நாடுகளுக்கு மன்னர் - மன்னர் (சக்ரவர்த்தி) ஆவதாகும். இது மன்னரின் வெறும் நாட்டாசைக் குறிக்கோள் மாத்திரம் கொண்டதென எண்ணுவதற்கில்லை. இந்த யாகத்தை செய்பவர், செய்யத் தூண்டுபவர் வேதியர்கள்.

எனவே, இந்த யாகத்தில் இந்த வேதியர்களின் நலமும் முக்கிய குறிக்கோளாக இருக்கத்தான் வேண்டும். யாகத்தால் ஏராளமான பண்டமும் பணமும் இந்த யாக வேதியருக்குப்படி கிடைப்பது மேலளவு பலன். ஆனால், அடிப்படை நோக்கம் காரணம் வேறொன்று இருக்கத்தான் வேண்டும். அதாவது, இராமாயண - பாரத நோக்கமே இதிலுமுள்ளது. அதாவது ஆரியத்தை வேத மதக் கோட்பாடுகளைப் பார்ப்பனீயத்தை - வேத குலத்தாரின் ஆதிக்கத்தை எதிர்ப்பவர்களை ஒடுக்குவதும் மன்னர்களைக் கொண்டு வேதியர் எதிரிகளை அடக்கி, வேதக் கோட்பாடுகளுக்கு அடிமையாக்குவதும் இதன் உள்நோக்கமெனத் தெளிவாகிறது.

உபநிஷத்துகள்


உபநிஷத்துகள் என்ற சொல்லுக்கு அர்த்தம், ஒருவருடைய பக்கத்திலமர்ந்து கேட்கக்கூடிய விஷயங்கள் என்பதாகும். இதனை வேதாந்தம், வேதத்தின் முடிவு என்பர்.

வேதம் கற்றபின் கற்கக்கூடியவை என்றும், வேதக் கருத்துக்களைக் கொண்டவை என்றும் இதற்கு விரிவுரை கூறுகின்றனர்.

வேதத்திற்கும் இந்த உபநிஷத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று இந்நூல் சுட்டிக்காட்டுகிறது (பக்கம் 468) எனவே, பிற்காலத்தில் வேதத்திற்கு முடிவு, அதாவது வேதங்கள் மதிப்பாரற்றுப்போன போது, இந்த உபநிஷத்துக்களை வேதியர்கள் உற்பத்தி செய்திருக்க வேண்டும் என்பதும் இவைகளும் புராணக் கதைகளின் இனத்தைச் சேர்ந்த வையே என்றும் எண்ணச் செய்கிறது. இதற்குமுன் ஆரிய வேதியர் கைக்கொண்டிருந்த வேதச் சடங்குகளை எதிர்க்கும் கருத்துக்களும் இந்த உபநிஷத்துக்களில் உள்ளன என்றும் சுட்டிக்காட்டப்படுவதால், வேதக் கோட்பாடுகள் செல்லாக் காசான காலத்தில், நாட்டுமக்களின் கருத்துக்களைத் தழுவி இந்த உபநிஷத்துக்கள் பிற்காலத்தில் தொகுக்கப்பட்டவை என்பது தெளிவாகிறது.

அக்காலத்திலும் எதிர்ப்பு


மற்றும், க்ஷத்திரியர்கள் (அரச மரபினர்) இந்த உபநிஷத் கோட்பாடுகளில் அதிக பங்கு கொண்டாரெனத் தெரிவதால் இது வேதிய எதிர்ப்புக் கோட்பாட்டியல் நூலாகவும் இருக்கவேண்டும் என்பதும் பார்ப்பனீய ஆதிக்கத்தை அக்காலத்து மன்னர்களும் எதிர்த்து, தங்களைச் சிறப்பித்துக் கொள்ளும் தன்மானவுணர்ச்சியும் கொண்டிருந்தாரெனவும் எண்ணச் செய்கிறது. சாதி வேற்றுமைக் கோட்பாடுகளை, மனித சக்திக்குப் புறம்பான கொள்கைகளை ஒதுக்கியும் இந்த உபநிஷக் கொள்கைகள் இருப்பதானது, பழைய வேதிய மதத்திற்குப் பிற்காலத்தில் கடும் எதிர்ப்பு இருந்த தென்பதற்கு ஆதாரமாகிறது. புராணங்களும் இதேபோல் வேத மதத்தையும் ஆரிய வேதியர் ஆதிக்கத்தையும் எதிர்த்து அரசமரபினர் சிறப்பையும் ஆதிக்கத்தையும் சிறப்பித்தும் தொகுக்கப்பட்ட கதைகளெனவும் முற்பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இப்போது உள்ள அச்சுப் பிரதிகளான உபநிஷத்துக்களிலும், இதிகாசங்களிலும், புராணங்கள் என்பவற்றிலும், வேதத்தையும் வேதியரையும சிறப்பித்துக் கூறப்பட்டுள்ள பகுதிகளும் சாதி வேறுபாட்டுப் பகுதிகளும் பிற்கால இடைச்செருகல் வேலையாக இருக்கலாமென்பது மேற்காட்டிய கருத்தால் அறியக்கிடக்கிறது..

- செவ்வாய்கிழமை தொடரும்

- விடுதலை நாளேடு, 12 .9 .19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக