செவ்வாய், 20 டிசம்பர், 2016

சமூக நீதி தளத்தில், திராவிடர் இயக்கத்தின் முதல் ஆவணம்

டிசம்பர் 20 (1916)

சமூக நீதி தளத்தில், திராவிடர் இயக்கத்தின் முதல் ஆவணம்:

திராவிடர் இயக்கத்தின் முதல் ஆவணமாகக் கருதப்படும், ‘பார்ப்பனரல்லாதார் அறிக்கை’ வெளியிடப்பட்ட நாள் இன்று.

ஆம்; ஒரு நூற்றாண்டுக்கு முன்பு, 1916-ல்  இதேநாளில்தான்,  தென்னிந்திய நல உரிமைச் சங்கம் எனும் நீதிக்கட்சியின் சார்பில் அதன்சிறப்புமிகு  தலைவரான சர்.பிட்டி. தியாகராயர், பார்ப்பனரல்லாதார்  அறிக்கையை வெளியிட்டார்.

ஆயிரம் ஆண்டுகால  சூத்திர, பஞ்சம வரலாற்றில்,  மனுஸ்மிரிதி ஆட்சி காரணமாகஅமைந்த  இருண்ட, இழிவு  வாழ்க்கையை நீதிக்கட்சியின்  அறிக்கைதான்,  வெளிச்சம்போட்டு  காட்டியது.

தமிழகத்தின் அரசியல், சமூக, பொருளாதார மேம்பாட்டிற்கும்,  சீர்திருத்தத்திற்கும்  வழிகோலிய இந்த  அறிக்கையை ஒடுக்கப்பட்ட மக்கள்  ஒவ்வொருவரும்படித்திட வேண்டும்.

1913-ஆம் ஆண்டில் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் முன்பாகச் சாட்சியம் கொடுத்த அன்றைய சென்னை நிருவாக சபை அங்கத்தினரான ஆங்கிலேயர் சர் அலெக்சாண்டர் கார்டியூ, சென்னை மாகாணத்தில் அன்றைய அரசு அலுவல்களில் 1892 முதல் 1904-ஆம் ஆண்டுவரை, பார்ப்பனர்களின் ஆதிக்கம் இருப்பதை, பல்வேறு துறைவாரியாக புள்ளி விவரங்களுடன் விரிவாக எடுத்துரைத்தார்.

1914-ஆம் ஆண்டின் புள்ளிவிவரப்படி, பல்கலைக்கழகத்தில் பதிவு செய்த பட்டதாரிகளின் மொத்த எண்ணிக்கை 650. இதில், 452 பட்டதாரிகள் பார்ப்பனர்கள். 124 பேர், பார்ப்பனரல்லாதார், 74 பேர் இதர வகுப்பார் என்பதை சட்டமன்றத்தில் பதில் அளிக்கப்பட்டது.

இந்த புள்ளிவிவரங்களை எடுத்துக்காட்டி, பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை இந்திய அளவில் வெளிக்கொணர்ந்த முதல் அறிக்கை, 1916, டிசம்பர் 20-ல் வெளியிடப்பட்ட  அறிக்கைதான்.

பார்ப்பனரல்லதார் செய்திட வேண்டிய பணிகளையும். அறிக்கை சிறப்பாக எடுத்துரைத்தது.

“பார்ப்பனரல்லாதார், முதலில் தங்களுக்குத் தாங்களே உதவி புரிந்து கொள்ள முன்வர வேண்டியது அவசியமாகும். பரந்த, நிரந்தர அடிப்படையில், அவர்கள் கல்வி, சமுதாயம், அரசியல், பொருளாதாரம் ஆகிய துறைகளில் முன்னேற்றமடைவதற்கு அவசியமான எல்லாச் செயல்களையும் மேற்கொள்ள வேண்டும். வருங்காலத்தில், நம் நாட்டு மக்களின் எதிர்காலம் வளமுள்ளதாக அமையும் என்பதில் அய்யமில்லை.

ஆனால் நாட்டையும், சமுதாயத்தையும் வளமுள்ளதாக உருப்பெறச் செய்வதென்பது கடினமான வேலை என்பதையும் மறந்துவிட முடியாது. நமது ஒவ்வொரு குடியும், பார்ப்பனரல்லாத சமுதாய முன்னேற்றத்தைத் தன் கடமையாகக் கொண்டும், குறிக்கோளாகக் கொண்டும், சிறுகச் சிறுக, ஆனால், உறுதியுடன் தொண்டாற்றி வருதல் வேண்டும். இன்னும் கொஞ்ச காலத்துக்காவது ஒவ்வொரு சமூகமும், தன்னை முன்னேற்றிக் கொள்வதில் அதிக கவனம் செலுத்தி வரவேண்டியது அவசியமாகும். எந்த ஒரு சமூகமும் மற்ற சமூகத்துக்குக் கீழ்பட்ட சமூகமாகவோ, அதனுடன் சரி உரிமை அற்ற சமூகமாகவோ நினைக்கப்படவும் நடத்தப்படவும் கூடாது. ஒவ்வொரு சமூகமும் சுயமதிப்புடனும், கவுரவத்துடனும் விளங்கி, நாட்டின் பொது முன்னேற்றத்துக்கும் நலனுக்கும் ஒன்றுபட்டுச் செயலாற்ர வேண்டும்”. இவ்வாறு நீதிக் கட்சி வெளியிட்ட பார்ப்பனரல்லாதார் அறிக்கையின் முடிவில் கூறப்பட்டுள்ளது.

இன்று சமூக நீதிக்கு, தமிழகம், அனைத்து மாநிலங்களுக்கும் வழிகாட்டியாக இருப்பதற்கு, 20.12.1916 அன்று திராவிடர் இயக்கமாம், நீதிக்கட்சி வெளியிட்ட, பார்ப்பனரல்லாதார் அறிக்கை தான் முதல் காரணம் என்பதை இன்றைய இளைய சமுதாயம் அறிந்து கொண்டு, அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டிய கடமைகளை நிறைவேற்றிட முன் வர வேண்டும்.
-விடுதலை,20.12.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக