வியாழன், 3 டிசம்பர், 2020

ஆசிரியர் மீது நடத்தப்பட்ட தம்மம்பட்டி தாக்குதல்

சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த தம்மம்பட்டியில் 28.8.1987 அன்று இரவு  பொதுக்கூட்டமும், மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தம்மம்பட்டியைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணிக்காரர்கள் 27.8.1987 மாலை தம்மம்பட்டி காவல் நிலையத்திற்குச் சென்று திராவிடர் கழகத்தினர் பொதுக்கூட்டமும், ஊர்வலமும் நடத்தக் கூடாது _ அனுமதிக்கக் கூடாது என்று சொல்லியும் உள்ளனர். இதனை காவல்துறை மறுத்து திராவிடர் கழகத்தினர் முறையான அனுமதி பெற்றுத்தான் ஊர்வலமும் பொதுக்கூட்டமும் நடத்துகிறார்கள். அவற்றை தடை செய்ய முடியாது என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.

இதைக்கேட்ட ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணிக்காரர்கள் அடி ஆட்களை தயார் செய்து கொண்டு வந்து மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலத்தின் உள்ளே புகுந்து பொதுமக்களை கடுமையாகத் தாக்கியுள்ளனர். இந்த வன்முறை மாலை 6.30 மணி அளவில் நடைபெற்றது. ஊர்வலத்தில் கலந்துகொண்ட கழகத் தோழர்களும் கடுமையாகத் தாக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் ஆத்தூர் அரசினர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பொதுக்கூட்ட மேடையைத் ‘தீ’ வைத்து எரித்தனர்.

இதற்கிடையில் ஆத்தூரிலிருந்து கார் மூலம் (எம்.எஸ்.எம்.1751) புறப்பட்டு தம்மம்பட்டி பொதுக்கூட்டத்திற்கு வந்துகொண்டிருந்தேன். காரில், சிங்.குணசேகரன், தாமோதரன், ஆத்தூர் முருகேசன், அக்கிச்செட்டிபாளையம் செல்லமுத்து உள்ளிட்டோர் என்னுடன் பயணம் செய்தனர்.

6.45 மணிக்கு உடையார்பாளையம் மெயின் ரோட்டிலுள்ள பாலத்தருகே வந்தபோது ஒரு கும்பல் திடீரென்று நான் வந்த காரை மடக்கி கடுமையான ஆயுதங்களாலும், கற்களாலும் தாக்கி, சூழ்ந்துகொண்டு காரை தாக்கினார்கள். “அடி! கொல்லு!’’ என்று ஆவேசமாகச் சத்தம் போட்டுக் கொண்டு கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு குறி வைத்துத் தாக்கினர். “இந்து மதத்தைத் தாக்கிப் பேசுவானுங்கடா! வீரமணியைக் கொல்லுங்கடா!’’ என்று துரத்தியபடியே காரை அடித்து நொறுக்கினார்கள்.

கார் டிரைவர் வெகு சாமர்த்தியமாக வண்டியைப் பின்னாலே கொண்டு வந்து திருப்பி வெகு விரைவாக தம்மம்பட்டி காவல் நிலையத்திற்கு முன் கொண்டு வந்து நிறுத்திவிட்டார். அன்று கார் டிரைவரின் சாமர்த்தியம்தான் என்னை ஆர்.எஸ்.எஸ். காலிகளிடமிருந்து மயிரிழையில் உயிர் தப்பிக்க வைத்தது.

காவல் நிலையத்தில் சேலம் மாவட்ட தி.க. துணைத் தலைவர் ஆத்தூர் முருகேசனும், தம்மம்பட்டியைச் சேர்ந்த தோழர் செயராமனும் புகார் கொடுத்தனர்.

ஊரில் பதட்டநிலையும், பரபரப்பும் ஏற்பட்டது. எப்படியும் பொதுக்கூட்டத்தில் பேசிவிட்டுத்தான் இந்த ஊரை விட்டுப் புறப்படுவேன். மேடை இல்லாவிட்டாலும் ஒலிபெருக்கி இல்லாவிட்டாலும் பேசி விட்டுத்தான் செல்வேன் என்று, மிகத் திரளாக கூடியிருந்த பொதுமக்களிடையே 75 நிமிடம் உரையாற்றிவிட்டு அங்கிருந்து 11.45 மணிக்கு பொதுக்கூட்டத்தை முடித்துக்கொண்டு புறப்பட்டேன்.

என் மீது காட்டுமிராண்டித் தாக்குதல் நடத்துவது 3ஆவது முறையாகும், இம்முறை உயிருக்குக் குறி வைத்தனர். இதையெல்லாம் முறியடித்துவிட்டுத்தான் இன்றுவரை என் பயணம் தொய்வின்றி பெரியார் போட்டுத்தந்த பாதையில் தொடர்கிறது.

கழகத் தோழர்கள் அனைவரும் சட்டத்திற்கு உட்பட்டு கத்தி வைத்துக் கொள்ள வேண்டும்

என்னைப் பார்த்து, ‘வணக்கம்’ என்று கூறும்போது கத்தியோடுதான் ‘வணக்கம்’ என்று கூறவேண்டும்.

இனி யாரையும் நம்பி நாம் வாழ முடியாது, வாழக் கூடாது! என்று 31.8.1987 அன்று ‘தம்மம்பட்டி கலவரம்’ குறித்து மன வேதனையுடன் கழகத் தோழர்களுக்கு அறிக்கையின் மூலம் வேண்டுகோள் விடுத்தேன்.

- அய்யாவின் அடிச்சுவட்டில் கட்டுரையின் ஒரு பகுதி

- உண்மை இதழ், ஜூன், 15 -30 .19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக