செவ்வாய், 2 ஜூன், 2020

தலைமை - தத்துவம் - இயக்கம்! திராவிடர் கழகத்தை மய்யப்படுத்தி பேராசிரியர் அருணன்! - 16

June 2, 2020 • Viduthalai • 
அரசியலமைப்புச் சட்ட எரிப்புப் போராட்டம்

தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் மாநில தலைவரும், தமிழ்நாட்டின் சிறந்த சமூக வரலாற்று ஆய்வாளருமான எழுத்தாளர் பேராசிரியர் அருணன் அவர்களின் "காலந்தோறும் பிராமணியம்" எட்டு தொகுதிகளும் மிக அரிய சமூக வரலாற்றுப் பெட்டகங்கள் ஆகும். அதில் தந்தை பெரியார் - திராவிடர் கழகம் பற்றிய அவரது கண்ணோட்டம் கருத்துப் பதிவுகளாக வெளிவந்துள்ளன. அவற்றை நாம் இங்கே தொடர் கட்டுரைகளாகத் தருவதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
சிலவிடங்களில் மாறுபட்ட கருத்துக்கள் கூறப்பட்டிருப்பினும் அத்தகைய அய்யங்களைப் போக்கி, தெளிவுபடுத்தி, புரிதலை ஏற்படுத்துதல் நமது கடமை என்ற உணர்வோடும், பெருமிதத்தோடும் இத்தொடரினை நமது வாசக நேயர் களுக்குப் பயன்பட வெளியிடுகிறோம் - வரலாற்று மீள் பார்வை இதன் மூலம் கிடைக்கிற ஒரு வாய்ப்பு நமக்குக் கிட்டுகிறது! நன்றி...
- ஆசிரியர், 'விடுதலை'

இந்திப் பெயர் அழிப்பு போராட்டத்தை அரசு கண்டு கொள்ளாதப் போக்கை உணர்ந்த பெரியார் உத்தியை மாற்றிக் காட்டினார். 1955 ஆகஸ்டு 1 அன்று இந்திய தேசியக் கொடி எரிப்புப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தார். இப்போது அரசாங்கத்திற்கு வந்தது சிக்கல். ஏற்கெனவே பத்தாயிரத்திற்கு மேற்பட்டோர் போராட்டத் திற்குப் பெயர் கொடுத்திருந்தார்கள். அவர்களைக் கைது செய்து வழக்குப் போட வேண்டும் அல்லது மொழி விஷ யத்தில் அரசாங்கம் இறங்கி வர வேண்டும். காமராஜரை தீவிரமாக ஆதரித்துக் கொண்டிருந்தார் பெரியார். தனது ஆதரவாளர் மீது நடவடிக்கை எடுப்பதைத் தவிர்க்க தமிழகத்தில் இந்தி இனி தேர்வுக்குரிய பாடமாக இருக்காது என்று அறிவித்தார் முதல்வர் காமராஜர். அதாவது இந்தி படிப்பார்கள் மாணவர்கள், ஆனால் பரீட்சை எழுத மாட்டார்கள். 1967 வரை இந்த நிலை இருந்தது, அண்ணா முதல்வரானதும் அதுவும் ஒழிந்தது. இப்படி பிராமணியத்தின் மொழிக் கொள்கைக்குத் தமிழகத்தில்தான் சரியான அடி கிடைத்தது.
ராமன்படம் எரிப்புப் போராட்டம்
1956ல் ராமன் படத்தை எரித்துப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் பெரியார். ராவணன் கொடும்பாவியை வடக்கே எரிப்பார்கள். இவர் போட்டியாக ராமன் படத்தை எரித்தார். ராவணனை சகல கேடுகளின் பிம்ப மாக ஆக்கி, அவனது எரிப்பை நியாயமான செயலாகப் பொதுப் புத்தியில் ஏற்றி வைத்திருந்தார்கள் பிராமணிய வாதிகள். இவரோ அதை மாற்றப் பார்த்தார். பல நூறு ஆண்டுகளாகச் சொல்லி சொல்லி வைத்து நிலை நிறுத்தப்பட்ட விஷயத்தை இவர் சிதைக்க முனைந்தார். வால்மீகி ராமாயணத்திலிருந்து ராமனின் உண்மை முகத்தை வெளிப்படுத்தப் பார்த்தார். இதே ஆண்டில் அவர் பேசிய பேச்சு இது
“ராமாயணம் அவரவர் ஜாதிகளையும் பிரிவுகளையும் தானே காட்டுகிறது? ஒரு இடத்தில் அனுமார் ராமன் காலில் விழுகிறான். ராமன் அனுமானைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு மன்னிப்புக் கேட்கிறான். நீயோ ஒரு பிராமணன், நான் ஷத்திரியன். என் கால்களில் நீ வந்து விழலாமா? இந்தப் பாவத்தை நான் எங்கே போய்த் தீர்ப்பேன் என்று கூறுகிறான். ராமன் அயோத்தியிலிருந்த காட்டுக்குப் புறப்படும் சமயம் ‘என் பணத்தையும் சொத்துக்களையும், என்னிடத்தில் இப்பொழுது இருக்கும் மாடுகளையும் கொண்டு வாருங்கள். முழுவதையும் பிராமணருக்குக் கொடுத்து விடுகிறேன்’ என்பதாகச் சொல்கிறான். சீதை ‘என் நகைகள் முழுவதையும் கொண்டு வாருங்கள். பிராமணனுக்குக் கொடுத்துவிட்டுப் போனால் புண்ணியம்‘ என்பதாகச் சொல்லுகிறாள். சூர்ப்பனகை ‘என்னைத் திருமணம் செய்து கொள்’ என்று கேட்கும்பொழுது ‘நீ ஒரு ஜாதி, நான் ஒரு ஜாதி. எப்படித் திருமணம் செய்து கொள்வது? என்று கூறுகிறான். ஒரு இடத்தில் தாடகை மகனை லட்சுமணன் கொன்றுவிட்டு ராமனிடம் இந்தப் பாவத்திற்கு என்ன செய்வேன் என்று வருத்தப்பட்டுக் கொள்கிறான். அதற்கு ராமன் ‘சூத்திரனைத்தானே கொன்றாய்? அதனால் பாவமில்லை, கவலையை விடு’ என்று கூறுகிறான். சம்பூகன் ஒரு சூத்திரன். தவம் செய்ய உரிமையில்லை என்று ராமன் கூறி கண்டங்கண்டமாக வெட்டி விடுகிறான். இப்படி எங்கு பார்த்தாலும் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் வருணா சிரம தர்மம் தாண்டவமாடுகிறது. இப்படி இருக்கும் ராமா ணயத்தைக் கொளுத்த வேண்டும் என்று சொல்வதில் என்ன தப்பு?”
ராமன் பெயரைச் சொல்லி பின்னாளில் பிராமணிய வாதிகள் மிகப்பெரிய கலவரங்களை உருவாக்கி, அரசி யல் ஆதாயம் அடைந்ததை நினைக்கும் போது அந்தப் புனித பிம்பத்தை உடைக்க தன்னால் முடிந்த அளவுக்குப் பெரியார் முயன்றது வரலாற்றில் குறிக்கத் தக்கது. இத்தகைய துணிச்சலான செயலை இந்தியாவில் வேறு யாரும் அவரது காலத்தில் செய்ததாகத் தெரியவில்லை.
“பிராமணாள் ஹோட்டல்” ஒழிப்பு
அந்த நாளில் ஹோட்டல் என்றாலே பிராமணர்களால் பிராமணர்களுக்காக நடத்தப்படுபவையாகவே இருந் தன. பெயரும் “பிராமணாள் ஹோட்டல்” என்பதாகவே இருந்தது. சுதந்திரத்திற்குப் பிறகு சட்டபூர்வமாகத் தீண் டாமை ஒழிக்கப் பட்டிருந்தாலும், சகல ஜாதியினருக்கும் உணவு விற்போம் என்று சொல்லி கடை நடத்த உரிமம் பெற்றிருந்தாலும் பெயர் என்னவோ “பிராமணாள் ஹோட்டல் ”தான்! இது வெளிப்படையான பிராமணிய மாக இருந்தது. இப்படி பெயர் இருக்கக் கூடாது, அதை நீக்க வேண்டும் என்று சொல்லி 1957ல் மறியல் போராட்டம் நடத்தினார் பெரியார். இங்கே மாமிச உணவு கிடைக்காது, மரக்கறி உணவே கிடைக்கும் என்பதைச் சுட்டவே இந்தப் பெயர் என்றார்கள் ராஜாஜி உள்ளிட்ட பிராமணிய வாதிகள். அப்படியென்றால் மரக்கறி உணவுக் கடை என்றே போடலாமே என்று பதில் அறிக்கை விடுத்தார் பெரியார். அந்த அறிக்கையில் (9-5-1957 விடுதலை) இப்படிக் குறிப்பிட்டார். “இப்போது இங்கு உரிமை பற்றிய தகராறு இல்லை, சொல்லைப் பற்றிய தகராறுதான் இருக்கிறது. அந்தச் சொல் மற்றவர்களை (திராவிடரை) இழிவு படுத்துவதாக இருக்கிறது என்று சொன்னால் ஏன் அதை மாற்றிவிடக் கூடாது என்றுதான் கேட்கிறேன்? இதற்காக ஏன் தகராறு நடக்க வேண்டும்? இந்தத் தகராறை விஷமத்தனம் என்று கூறுவதானால் இதை எதிர்ப்பதை அயோக்கியத்தனம் என்றுதானே கூற வேண்டும்? ஓட்டல் முதலாளிகளும், பார்ப்பனப் பத்திரி கைகளும் பிராமணாள் என்று போட்டுக் கொள்ளத் தங்களுக்கு உரிமை இருக்கிறது என்பதாக ஒரு வார்த் தையும் சொல்லவில்லை, ஒரு குறிப்பும் காட்டவில்லை. அதனால் அதை எடுத்துவிடச் சொல்லுவது சட்ட விரோ தமோ, உரிமை விரோதமோ ஆவதில்லை”.
இதுவும் வெற்றிகரமாக முடிந்த ஒரு போராட்டமாகும். தமிழ்நாட்டில் அநேகமாக அனைத்து “பிராமணாள் ஹோட்டல்களும்” விரைவில் மறைந்தன, அதாவது அந்தப் பெயர் மறைந்தது. சென்னை திருவல்லிக் கேணியில் ஒரு ஹோட்டல் முதலாளி மட்டும் மிகப் பிடி வாதமாக இருந்தார். அங்கு விடாமல் தி.க.வினர் பன் னாட்கள் மறியல் செய்து, கைதானார்கள். முதலில் மறியல் செய்தது பெரியார். சுமார் 1500 பேர் வரைக் கைதாகி மாதக்கணக்கில் சிறைத்தண்டனை பெற்றார்கள்.
அரசியலமைப்புச் சட்ட எரிப்புப் போராட்டம்
ஜாதிக்குப் பாதுகாப்பளிக்கும் இந்திய அரசியல மைப்புச் சட்டப் பகுதியை, அச்சட்டம் நிறைவேற்றப்பட்ட நவம்பர் 26ல் எரிப்பது என்று முடிவு செய்தார் பெரியார். 1957 நவம்பர் 26ல் நடைபெற்ற இந்த எரிப்புப் போராட் டத்தில் சுமார் பத்தாயிரம் தி.க.வினர் பங்கு கொண்டார்கள். அதில் 2884 பேர் கைது செய்யப்பட்டார்கள். இவர்களுக்கு மாதக்கணக்கு முதல் ஆண்டுக்கணக்கு வரை தண்டனை தரப்பட்டது. சிறையிலே இருவர் உயிர் இழந்தனர், நோயுடன் விடுதலையாகி சில நாட்களிலேயே 20 பேர் மாண்டார்கள். நீண்டகாலத் தண்டனை பெற்றதால் வாழ் வில் பலர் நலிவுற்றார்கள். ஜாதி ஒழிப்புக்காக இப்படியொரு போராட்டம் நடத்தி, இத்தனை பேர் சிறையில் வாடியது இதுவே இந்தியாவில் முதல் நிகழ்வாக இருக்கலாம்.
“இந்த அரசமைப்புச் சட்டத்தில் ஜாதிக்குப் பாதுகாப்பு தந்திருக்கிறான். அடிப்படை உரிமைகள் என்ற பகுதியில் அவனவன் ஜாதிப்படி வாழ, ஜாதியைக் காப்பாற்றிக் கொள்ள, ஜாதியை நிலைக்க வைக்க அரசாங்கம் பாது காப்பளிக்கிறது. இந்தச் சட்டத்தை ஏற்படுத்தியவன் காங்கிரஸ்காரன்தான். அதுவும் நமக்கெல்லாம் வோட் வராததற்கு முன்னே ....... இந்திய அரசமைப்புச் சட்டக்குழு உறுப்பினர்கள் - 1) அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் (பார்ப்பனர்) 2) டி.டி. கிருஷ்ணமாச்சாரி (பார்ப்பனர்) 3) என். கோபாலசாமி அய்யங்கார் (பார்ப்பனர்) 4). கே.எம். முன்ஷி (பார்ப்பனர்) 5) டாக்டர் அம்பேத்கர் (ஆதி திராவிடர்) 6) முகமது சாலுல்லா (முஸ்லிம்)... ‘சூத்திரர்’ என்று கூறப்படுகின்ற மக்களின் பிரதிநிதிகள் அறவே இல்லாமல், 6 பேர்களில் 4 பேர் பார்ப்பனர்களாகவே கொண்டு மற்றும் இரு இனத்தின் பிரதிநிதிகளுக்கும்கூட விலை கொடுத்துவிட்டு செய்து கொண்டதுதான் இந்திய அரசமைப்புச் சட்டம் என்ற இந்த அரசியலமைப்பாகும்“
அப்படியெல்லாம் அந்த இரு இனங்களுக்கு கூடுதல் சகாயம் தரப்படவில்லை என்பதை அறிவோம். ஆனால் சூத்திரர்களுக்கு - பிற்படுத்தப்பட்டோருக்கு - துரோகம் இழைக்கப்பட்டது என்பது உண்மைதான். திருத்தியமைக் கப்பட்ட நகல் அரசியலமைப்புச் சட்டத்தை எழுதியது இந்த ஆறு பேர்தான், அதில் நால்வர் பிராமணர்கள் என்பது உண்மைதான். ஆனால், அரசியல் நிர்ணய சபையின் ஒப்புதலோடுதான் இது சட்டமானது. இதில் “அடிப்படை உரிமைகள்” எனும் பகுதியில் இந்தியக் குடிமக்களுக்கு மத உரிமை தரப்பட்டுள்ளது என்பதையும், சரத்து 26இல் ஒவ்வொரு மதப் பிரிவும் “தனது மத விவகாரங்களைப் பொறுத்தவரை தானே நிர்வகித்துக் கொள்ளலாம்“ என்று கூறப்பட்டுள்ளது என்பதையும் அறிவோம். இது சகல மதங்களுக்கும் பொருந்தக் கூடியது. சிக்கல் எதில் வந்தது என்றால் இந்து மதத்தைப் பொறுத்தவரை அதன் ஓர் அம்சமாகச் சாதியத்தை நீதி மன்றங்கள் ஏற்றது. அப்படித்தான் பிராமணர்கள் மட்டுமே அர்ச்சகர்கள் ஆக முடியும் என்பதை அவை அங்கீகரித்து வந்தன. இதை மாற்ற அரசியலமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் செய்ய வேண்டியிருந்தது அல்லது உரிய விளக்கங்கள் தர வேண்டியிருந்தது. இதன்பால் மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த எரிப்புப் போராட்டத்தை நடத்தினார் பெரியார்.
.- தொடரும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக