ஆனந்த விகடன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆனந்த விகடன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 26 மார்ச், 2019

அரசியல் மணி என்னும் அணையா விளக்கு!

சுகுணா திவாகர்




தமிழக அரசியல் வரலாற்றை எழுதும் யாராலும் தவிர்க்க முடியாத பெயர் மணியம்மை. தி.மு.க என்னும் அரசியல் கட்சி உருவாகக் காரணமாக இருந்தவர், தமிழகத்தில் முதன்முதலாக ஓர் இயக்கத்துக்குத் தலைமை தாங்கிய பெண், உலகளவில் ஒரு நாத்திக இயக்கத்துக்குத் தலைமை தாங்கிய பெண் என்னும் சிறப்புகள் மணியம்மைக்கு உண்டு. இத்தகைய வரலாற்றுச்சிறப்புமிக்க மணியம்மையின் நூற்றாண்டு விழா இந்த ஆண்டு தொடங்குகிறது.

1920, மார்ச் 10-இல் வேலூரில் கனகசபை - பத்மாவதி தம்பதிக்குப் பிறந்தவர் காந்திமதி. கனகசபையும், பத்மாவதியும் பெரியாரின் கொள்கைகளில் பற்று கொண்டவர்கள். கனகசபையின் நண்பர், தனித்தமிழ் ஆர்வலர் கு.மு.அண்ணல்தங்கோ காந்திமதிக்கு 'அரசியல் மணி' என்னும் பெயரைச் சூட்டினார். கே.அரசியல்மணி என்பது கே.ஏ.மணி என்றாகி, 'மணியம்மையார்' என்று காலத்தில் நிலைத்தது. 1943-இல் அரசியல்மணியின் தந்தை இறந்தார். ஒரு மாதத்திலேயே இயக்கப்பணிகளில் தன்னை முழு வதுமாக ஈடுபடுத்திக் கொண்டார் மணியம்மை.

பேச்சாளராக, கட்டுரையாளராக, போராட்டங்களில் பங்கெடுப்பவராக மணியம்மையின் இயக்க வாழ்க்கை அமைந்தது. திராவிடர் கழகக் கொடியின் தத்துவம், பெண்ணுரிமை, அண்ணல் அம்பேத்கர் என்று பலவிஷயங்கள் குறித்துப் பேசியிருக்கிறார் மணியம்மை. சமஸ்தானங்கள் தொடங்கி சித்தர் பாடல்கள் வரையிலான பல விஷயங்கள் குறித்துக் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். 'கந்தபுராணமும் இராமாயணமும் ஒன்றே' என்னும் அவரது கட்டுரையின் முதல் பாகம் 1944-இலும் இரண்டாம் பாகம் 1947-இலும் 'குடியரசு' இதழிலும் வெளியாகி, பிறகு சிறுவெளியீடாகவும் வெளியானது. கந்தபுராணம், இராமாயணம் என்னும் இரு புராணங்களுக்கு இடையிலான ஒற்றுமைகளைப் பட்டியலிட்டு, கந்தபுராணத்தைப் பார்த்து எழுதப்பட்டதே கம்பராமாயணம் என்ற கருத்தை முன்வைத்தார் மணியம்மை. 1946-இல் 'விடுதலை' இதழின் அச்சிடுபவர் மற்றும் வெளியிடுபவராக மணியம்மை, பெரியாரால் நியமிக்கப்பட்டார். 'விடுதலை' இதழில் வெளியான தலையங்கம் மற்றும் கட்டுரைகளுக்காகப் பலமுறை நீதிமன்ற நடவடிக்கைகளுக்கும் உள்ளானார்.

1948-இல் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்தபோது கும்பகோணத்தில் கைதானார். 'உங்கள் மதம் என்ன?' என்ற நீதிபதியின் கேள்விக்கு 'எனக்கு மதம் கிடையாது' என்றும் 'உங்கள் சாதி என்ன?' என்ற கேள்விக்கு 'திராவிடச் சாதி' என்றும் பதிலளித்து, சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். பிராமணாள் கபேவுக்கு எதிரான போராட்டத்திலும் கைதானார். இப்படித் தொடர்ச்சியாக இயங்கிவந்த மணியம்மையாரின் முக்கியமான பணிகள் பெரியார் உடல்நலத்தைப் பேணுவதும், அவர் பேச்சு களைக் குறிப்பெடுத்து 'விடுதலை'யில் வெளியிடுவதும். பெரியாரின் பெரும்பாலான புத்தகங்கள் அவர் மேடைப் பேச்சுகளைத் தொகுத்து வெளியிடப்பட்டவையே. அந்தவகையில் மணியம்மையாரின் இந்தப் பணி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.

பெரியாரைப் பொறுத்தவரை சாதி, மதம், கடவுள், மொழிப்பற்று, நாட்டுப்பற்று என்று எந்தக் கட்டுப் பாடுகளும் இல்லாமல் வாழ்ந்ததைப் போலவே, உணவுக் கட்டுப்பாடும் இல்லாமல் வாழ்ந்தார். வாழ்நாளின் இறுதிவரை மாமிச உணவை அவர் கைவிடவில்லை. தொண்டர்கள் கொடுக்கும் உணவை ஆசையாகச் சாப்பிட்டுவிட்டு, பிறகு அவதிப்படுவார். அவர் மனம் இளைஞனுக்குரிய வேகத்துடனும், சுதந்திர உணர் வுடனும் இருந்ததே தவிர, அவரது உடல், மூப்பையும், இயலாமையையும் நினைவுபடுத்திக்கொண்டேயிருந்தது. அப்படிப்பட்ட பெரியாரைக் கண்டிப்புடனும் கரிசனத் துடனும் பேணி வந்தார் மணியம்மை.



பெரியாரின் பழைய காங்கிரஸ் நண்பர் கோவை அய்யாமுத்து ஒருமுறை ரயிலில் கண்டு அவருக்கு பிரியாணி, மட்டன் சாப்ஸ், ஆம்லேட் எல்லாம் வாங்கித் தந்துவிடுகிறார். பிறகு அதை அறிந்த மணியம்மை பெரியாரைக் கண்டிக்கிறார். இரவு ரயில் பயணத்தில் பெரியாரும், மணியம்மையும் வெவ்வேறு ரயில் பெட்டிகளில் பயணித்தாலும் ஒவ்வொரு ஸ்டேஷனிலும் ரயில் நிற்கும்போதெல்லாம் 'பெரியார் எந்தப் பிரச்சினை யுமின்றித் தூங்கிக்கொண்டிருக்கிறாரா?' என்பதை மணியம்மை வந்து வந்து பார்த்ததைக் கோவை அய்யா முத்து, தன் 'நான் கண்ட பெரியார்' நூலில் பதிவுசெய்கிறார்.

பெரியாரைப் பொறுத்தவரை, அவருடைய பணிகள், அவரே சொன்னதைப்போல 'செங்குத்தான மலையில் தலைகீழாக ஏறுவதைப்போன்றது'. பொதுமக்கள் ஆதரவு இருக்காது; பொதுப்புத்திக்கு எதிரான கருத்துகளைச் சொல்லவேண்டியிருக்கும்; அரசு நெருக்கடி இருக்கும்; அடிப்படைக் கொள்கைகளுக்காக நிலைப்பாடுகளை மாற்றி, பொதுவெளியில் விமர் சனத்துக்குள்ளாக நேரிடும். இவற்றையெல்லாம் புரிந்துவைத்திருந்த பெரியார், தன் காலத்துக்குப் பின், தன் சாதி ஒழிப்பு, சுயமரியாதை, பகுத்தறிவுப்பணிகள் தொடர வலிமையான பொருளியல் அடித்தளம் அவசியம் என்று கருதினார். பிறப்பிலேயே பணக்காரராக இருந்தாலும் மாலை அணிவிக்க, புகைப்படம் எடுக்க பொதுமக்களிடம் பணம் வசூலித்து, சிறுகச் சிறுகச் செல்வம் சேர்த்தார். தனக்குப்பிறகு இயக்கப்பணிகளுக் காகச் சேர்த்த சொத்தைக் காப்பாற்றுவதற்கு நம்பிக் கையான ஒருவர் வேண்டும் என்று நினைத்தார்.

அந்தக்காலகட்டத்தில் பெண்குழந்தைகளுக்குச் சொத்துரிமை கிடையாது என்பதால் மணியம்மையைத் தத்து எடுத்து சொத்துகளுக்கு வாரிசு ஆக்க முடியாது. எனவே சட்ட நிர்பந்தத்தின் அடிப்படையில் பெரியார் மணியம்மையைத் திருமணம் செய்துகொண்டார். 'இது சட்ட ஏற்பாடுதானே தவிர, வழக்கமான நடைமுறையில் உள்ள பொருளின்படியான திருமணம் அல்ல. மணியம்மை வாழ்நாள் அடிமையும் அல்ல' என்றார் பெரியார். ஆனால் 'இது பொருந்தாத் திருமணம்' என்று திராவிடர் கழகத்திலேயே எதிர்ப்புக்குரல்கள் எழுந்தன. ஏற்கெனவே கறுப்புச்சட்டை அணிவது, சுதந்திர நாள் துக்க நாளா, இன்பநாளா என்னும் முரண்பாடு, தேர்தல் அரசியலில் ஆர்வம் ஆகிய வற்றால் பெரியாருடன் முரண் பட்ட அண்ணா, மணியம்மை திருமணத்தை முன்னிட்டு திராவிடர் கழகத்திலிருந்து வெளியேறி தி.மு.க-வை உருவாக்கினார். உண்மையில் பெரியார் திருமணம் செய் யாமல் இருந்திருந்தால் மணி யம்மை திருமணம் செய் திருப்பாரா என்பதே கேள்விக் குறிதான். 18 வயதுக்குள்ளா கவே பெண்களுக்குத் திருமணம் நடக்கும் அக் கால கட்டத்தில் 30 வயது வரை திருமணம் செய்யாமல் இயக் கப்பணிகளில் ஈடுபட்டுவந்தார் மணியம்மை. பெரியார், மணியம்மையைத் திருமணம் செய்தது சரியா, தவறா என்பதைவிட, பெரியார் மணியம்மைமீது அளவுகடந்த நம்பிக்கை வைத்திருந்தார் என்பது உண்மை.

தலைவரின் மனைவி என்பதற்காக அவருக்குத் தனிச்சலுகைகள் ஏதும் தரப்படவில்லை. பெரியார் மேடையில் பேசிக்கொண்டிருப்பார். மணியம்மை மேடைக்கு எதிரில் தரையில் கோணிப்பை விரித்து, புத்தகங்கள் விற்றுக்கொண்டிருப்பார். 'பெரியாருக்கு மாலைகள் குவியல் குவியலாய் வரும். ஒரு மாலை யையும் அவர் மணியம்மைக்கு அணிவிக்கச் சொல்ல வுமில்லை. மணியம்மையும் அதை எதிர்பார்த்ததில்லை. ஏதுமற்ற வேலைக்காரிபோல் சுவடி விற்றுக் கொண்டிருந்தார்' என்று உணர்வுபூர்வமாகப் பதிவு செய்கிறார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.

1957-இல் பெரியார் அரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தை அறிவித்தார். ஆயிரக்கணக்கான தோழர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். பெரியாரும் சிறையில்.  மணல்மேடு வெள்ளைச்சாமி, பட்டுக் கோட்டை ராமசாமி  என்னும் இரு தோழர்கள் சிறை யிலேயே மரணமடைந்து அங்கேயே புதைக்கப்பட்டனர். வெளியிலிருந்த மணியம்மை அப்போதைய முதல்வர் காமராசர், உள்துறை அமைச்சர் பக்தவச்சலத்திடம் பேசி புதைக்கப்பட்ட சடலங்களைத் தோண்டியெடுத்து, ஊர்வலமாகக் கொண்டுசென்று அந்தப் போராளிகளின் தியாகத்துக்கு உரிய மரியாதை செய்தார். 1967-இல் பம்பாயில் சிவசேனாவால் தமிழர்கள் தாக்கப்பட்டபோது, பெரியார் சிவசேனை எதிர்ப்புக்குழுவை உருவாக்கினார். அதில் மணியம்மையும் ஓர் உறுப்பினர்.

வரலாறு மாறியது. 1967-இல் ஆட்சியைப் பிடித்தபிறகு தி.மு.க-வுக்கும், பெரியாருக்குமிடையில் நெருக்கம் ஏற்பட்டது. எந்த அண்ணா மணியம்மை திருமணத்தை விமர்சித்தாரோ, அதே அண்ணாவே, 'அய்யாவை முப்பது ஆண்டுகள் பேணிப் பராமரித்துக் காப்பாற்றியவர் மணியம்மை' என்று புகழாரம் சூட்டினார். அண்ணாவின் தளபதியான கலைஞருக்கு சென்னையில் சிலை வைத்தவரும் மணியம்மைதான். கலைஞர் முதல்வரான போது ஈரோட்டில் இருந்த பெரியாரின் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற விரும்பினார். அரசு எடுத்துக்கொள்ள அந்த இல்லத்தைக் கொடுத்த மணியம்மை, அதற்கு 'தந்தை பெரியார் - அண்ணா நினைவகம்' என்றே பெயர் சூட்டினார். அந்த இல்லத் தில்தான் அண்ணா 'விடுதலை'யின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றினார்.

1973-இல் பெரியார் மறைவுக்குப் பின் திராவிடர் கழகத்தின் தலைவரான மணியம்மைதான், தமிழகத்தின் முதல் பெண் தலைமை என்று சொல்லலாம். 'ராமாயணம் ஆரிய - திராவிடப் போராட்டம்' என்பது திராவிடர் இயக்கத்தின் கருத்து. 'வடநாட்டில் ராமலீலா நடத்தி நம்மை இழிவுபடுத்துகிறார்கள். நாம் ராவணலீலா நடத்தவேண்டும்' என்று 50களின் இறுதியிலேயே பேசினார். 1974-இல் ராவணலீலா நடத்தி பெரியாரின் எண்ணத்தை நிறைவேற்றினார் மணியம்மை. இந்திரா காந்தி அரசு நெருக்கடிநிலையைக் கொண்டுவந்தபோது இந்தியா முழுவதும் சமூக, ஜனநாயக இயக்கங்கள் நெருக்கடிக்கு உள்ளானதைப் போல திராவிடர் கழகமும் பல சோதனைகளுக்குள்ளானது. நடிகவேள் எம்.ஆர்.ராதா, கி.வீரமணி உள்ளிட்ட இயக்கத்தவர்கள்  சிறைப்படுத்தப்பட்டனர். பெரியார் திடலில் இருந்த எம்.ஆர்.ராதா மன்றம், வெளிநிகழ்ச்சிகளுக்கு வாட கைக்கு விடுவதற்குத் தடை விதிக்கப்பட்டது. 'விடு தலை'யில் தந்தை பெரியார் என்று குறிப்பிடக்கூடாது என்று  நிபந்தனை விதிக்கப்பட்டது. 'நாங்கள் அரசியல் கட்சியல்ல, சமுதாய இயக்கம்' என்று அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் பிரம்மானந்த ரெட்டியைச் சந்தித்துப் பேசினார் மணியம்மை. ஆனால் 'தி.மு.க-வை ஆதரிக்கமாட்டேன் என்று தெரிவிக்க வேண்டும்' என்று விதிக்கப்பட்ட நிபந்தனையை ஏற்க மறுத்தார் மணி யம்மை. நெருக்கடி நிலையை அறிவித்த இந்திராகாந்தி தமிழகம் வந்தபோது கறுப்புக்கொடிப் போராட்டத்தை அறிவித்துக் கைதானார்.

பெரியாரை 95 ஆண்டுகள் வரை வாழ்வதற்குப் பேணிப் பராமரித்துவந்த மணியம்மை 60 ஆண்டு களைக்கூட முழுமை செய்யவில்லை. 1978, மார்ச் 16 அன்று மரணமடைந்தார். அதே ஆண்டு செப்டம்பர் 17-ஆம் நாள் பெரியாரின் நூற்றாண்டு விழா தொடங்கியது. ஆனால் அதைக் காண்பதற்குள் மணியம்மையார் மறைந்துவிட்டார்.

இன்றும்கூடப் பொதுவாழ்க்கையில், அரசியல் கட்சிகளில் பெண்கள் தலைமைப்பொறுப்புக்கு வருவதற்கு எத்தனையோ நெருக்கடிகளை, அவதூறுகளைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. ஆனால் எதிர்ப்புகளை மட்டுமே தொடர்ச்சியாகச் சந்திக்கும் ஒரு சமுதாய இயக்கத்துக்குத் தலைமைப் பொறுப்பில் இருந்து போராளியாய் விளங்கிய மணியம்மை, உண்மையிலேயே மாற்று அரசியல் மணிதான்.

நன்றி: 'ஆனந்த விகடன்' 27.3.2019

- விடுதலை நாளேடு, 22.3.19

திங்கள், 18 மார்ச், 2019

பெரியாரின் ஆயுளை நீட்டிக்கச் செய்த பெண்மணி மணியம்மை!



``பெரியாருடன் குற்றாலத்திலும் ஈரோட்டிலும் ஒரு மாத காலமிருந்தேன். அவர் உடல்நிலை மிகப்பல வீனமாகவும் நாளுக்கு நாள் மெலிவாகியும் வருகிறது. அவர் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. அவருக்குப் பின் இயக்கக் காரியங்களைப் பார்க்கத் தகுந்த முழு மாதக் காலமும் முழுக் கொள்கைக்காரர்களும் கிடைப்பார்களா என்ற கவலையிலேயே இருக்கிறார்.

1943ஆம் ஆண்டு 'குடிஅரசு' ஏட்டில் மணியம்மை எழுதியதில் உள்ள வரிகள் இவை. இந்த வரிகளில் தென்படுவது மணியம்மையின் உண்மையான அக்கறை. அந்த அக்கறைதான் 1973ஆம் ஆண்டு வரை, சுமார் 30 ஆண்டுகளுக்குப் பெரியாருடன் பயணித்து, அவரை நன்கு கவனித்துக்கொண்டும் இயக்க வேலைகளைப் பார்க்கவும் வைத்தது. மணியம்மை போன்ற அர்ப்பணிப்பு மிக்க ஒருவரை நாம் காண்பது அரிது.

1920-ம் ஆண்டு, மார்ச் மாதம் 10-ஆம் நாள், வேலூரில் பிறந்தவர் காந்திமதி (மணியம்மையின் இயற்பெயர்). அவரின் அப்பா கனகசபை விறகுக் கடை வைத்திருந்தார். அம்மா, பத்மாவதி. வேலூர், கொசப்பேட்டை, அரசு பெண்கள் இடைநிலைப் பள்ளியில் படித்தார். காந்திமதியின் அப்பா, பெரியார் ஆதரவாளர். பெரியார் அந்தப் பகுதிக்கு வந்தால், இவர்களின் வீட்டில்தான் தங்கும் அளவுக்குப் பழக்கம் உண்டு. காந்திமதியின் அப்பா, பெரியாருக்கு அடிக்கடி கடிதம் எழுதும் பழக்கம் கொண்டவர்.

அப்படி ஒருமுறை, `உடல்நிலையைக் கவனித்துக்கொள்ளுங்கள் என்று எழுதியிருந்தார். அதற்குப் பெரியார் எழுதிய பதில் கடிதத்தில், `` `எல்லோரும் தூர இருந்தபடி உடம்பை ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள்ளுங்கள் என்கிறார்கள். ஆனால், கூட இருந்து உதவிசெய்ய யாருமில்லை. என்னவோ, என் காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறேன் என்று எழுதி யிருந்தார். அது கனகசபையை என்னவோ செய்தது, மகள் காந்திமதியை பெரியாரிடம் அழைத்துவந்து, `இந்தப் பெண் கூட இருந்து தொண்டு செய்யட்டும் என்று கூறினார். 1943-ஆம் ஆண்டில் கனகசபை இறந்துவிட, எவ்வித வைதிக சடங்குகளும் இன்றி, தமிழ்ப் பாடல்களைப் பாட வைத்து இறுதிக் காரியங்கள் நடத்தினார் கனகசபையின் நண்பரான அண்ணல் தங்கோ.

அந்த நிகழ்ச்சிக்கு பெரியாரும் வந்திருந்தார். அதன்பின், முழுநேரமாக காந்திமதி பெரியாரிடம் வந்துசேர்ந்தார். அவரை, குலசேகரபட்டினம் தமிழ்க் கல்லூரியில் தமிழ் வித்துவான் படிப்பில் சேர்த்தார். காந்திமதிக்கு அண்ணல் தங்கோ இயக்கப் பேராக அரசியல்மணி என்று பெயர் வைக்கிறார். பத்திரிகைகளில் கே.ஏ.மணி என்று எழுதுகிறார். பின்னாளில் மணியம்மை என்றழைக்கப்படுகிறார். இந்தச் சமூகத்தில் நிலவும் மூட நம்பிக்கைகளுக்கு எதிராகவும் எளிய மக்கள் முன்னேறுவதற்குத் தடையாக இருப்பவற்றை எதிர்த்துப் போராடும் பெரியாருக்குப் பக்கபலமாக இருக்கிறார். அதே நேரம் திராவிட இயக்கப் பணிகளிலும் முழு வீச்சில் களம் கண்டுவந்தார்.

அவரின் செயல்பாடுகளால், இயக்கத்தில் மாநிலப் பொறுப்பும் `விடுதலை பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பும் வந்தடைகின்றன. 1948-ஆம் ஆண்டில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்துக்கு அரசுத் தடை விதித் தாலும், அதை மீறி போராடிய மணியம்மை கும்ப கோணத்தில் கைது செய்யப்பட்டார். அப்போது அவரிடம், உங்கள் மதம் எது என்ற கேள்விக்கு, `எனக்கு எந்த மதமும் கிடையாது என்றும் `உங்கள் ஜாதி என்ற கேள்விக்கு, `திராவிட ஜாதி என்றும் தெரிவித்தார். நீதிபதி தண்டனை அளித்ததும், அதை மகிழ்ச்சியுடன் ஏற்பதாகச் சொன்னார். பெரியாரின் கூட்டங்களில், புத்தகங்களை விற்பனை செய்து, அதற்கான கணக்கு வழக்குகளை மிகச் சரியாக ஒப்படைப்பவர் மணியம்மை. மேலும், பெரியார் பேசுவதைக் குறிப்பெடுத்துக்கொண்டு, அதை சுவாரஸ்ய மான கட்டுரையாக்குவதிலும் திறமை மிக்கவர். ஒரு கட்டத்தில் பெரியாரின் உடல்நிலை சரியில்லாமல் போய்க் கொண்டிருக்க, இயக்கத்தை வழிநடத்தும் ஒருவரைத் தேர்வு செய்ய வேண்டும் என நினைத்தார். மணியம் மைதான் அதற்குத் தகுதியானவர் என்றதும், வாரிசாக்க அப்போதைய சட்டம் இடம் அளிக்காததால், திருமணம் செய்துகொண்டார். அதைச் சட்டப்படியான ஒரு ஏற்பாடு அவ்வளவுதான் என்றே பெரியார் குறிப்பிடுகிறார். இந்தத் திருமணத்தால், மணியம்மை பலரிடமிருந்து வசைச் சொற்களைக் கேட்க வேண்டியிருந்தது. ஆயினும் தனது செயலில் சமூகத்துக்கான நியாயம் இருப்பதால், அவை எதுவுமே அவரை வீழ்த்திவிட வில்லை.

பெரியாரின் உடல்நிலையின்மீது எப்போதும் கவனத்தோடு இருப்பார். மருத்துவரின் ஆலோசனைப் படியே உணவுகளை வழங்குவார். பெரியாரின் நண்பர்கள், தொண்டர்கள் ஆசையோடு அவருக்குச் சாப்பிடக் கொடுத்தாலும், கண்டிப்போடு தவிர்க்க வைத்துவிடுவார். ஒருமுறை, மணியம்மைக்குத் தெரியாமல் பெரியாருக்குப் பிரியாணியை அவர் நண்பர் தந்துவிட, உடலுக்கு என்னவாகுமோ என்று பதறிப்போனார். இன்னும் சொல்லப் போனால் ஒரு குழந்தையைப் பார்த்துக் கொள்வதைப் போல, பெரியாரைக் கவனித்துக்கொண்டார். பெரியாரும் மணியம்மையை அம்மா என்றே அழைத்தார்.

ஒருமுறை பெரியார், ``இந்த வயதிலும் நான் சாகாமல் இருக்கிறேன் என்றால், இந்த அம்மாவால் என்பது யாருக்கும் தெரியாது. எனது உடம்புக்கு ஏற்ற உணவைப் பக்குவப்படி கொடுப்பது, உடை மாற்றுவது எல்லாம் இந்த அம்மாதான் என்று மணியம்மையைப் பற்றிச் சொல்கிறார் என்றால், மணியம்மையின் பணி எவ்வளவு அர்ப்பணிப்பு மிக்கதாக இருந்திருக்க வேண்டும். சுயமரியாதைத் திருமணங்களையும் முன்னின்று நடத்தியிருக்கிறார் மணியம்மை. பெரியார் சிறையிலிருந்தபோது, திருச்சி பெரியார் மாளிகையைப் புதுப்பிக்க அனுமதிகேட்டார். வீண் செலவு எதற்கு என்பதாக நினைத்த பெரியாருக்கு, முறையாகப் பராமரிக்க வேண்டிய தேவைகளைக் கூறி அனுமதிப் பெற்று புதுப்பித்தார். இப்படிப் பல விஷயங்களைத் தாமே முன்வந்து செய்துமுடித்தார். `குடியரசு இதழில் `இளந்தமிழா புறப்படு போருக்கு எனும் கட்டுரையை வெளியிட்டதற்காக அரசு அவரை ஒரு மாதம் சிறையில் அடைத்தது.

பெரியாரின் மறைவு வரை, அவர் இயங்குவதற்கு உறுதுணையாக, சமூகத் தொண்டாற்றுவதற்கு பேருத வியாக இருந்தார் மணியம்மை. திருச்சியில், இவர்கள் தொடங்கிய குழந்தைகள் இல்லத்தில் வளர்ந்த ஒவ்வொரு குழந்தையையும் நேசித்து அவர்களின் எதிர்காலம் வரை யோசித்து, செயல்பட்டு உடன்நின்றார். கழகப் பணிகளி லும் அந்தத் தீவிரம் கொஞ்சமும் குறையவில்லை. 1974-ஆம் ஆண்டு, பெரியார் திடலில், ராவண லீலா கொண்டாடத் திட்டமிட்டார். அதற்குப் பல முனைகளி லிருந்து எதிர்ப்புகள் வந்தன. அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதி சார்பிலும் விழாவைக் கைவிடச் சொல்லிக் கேட்டனர். அனைத்தையும், `இது பெரியார் மேற்கொள்ள இருந்த பணி என்று கூறி, வெற்றிகரமாக விழாவை நடத்தி முடித்தார். அதற்காக வழக்கு போடப் பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார். தம் வாழ்வில் ஒவ்வொரு நாளையும் இந்தச் சமூக முன்னேற்றத்துக்காக மட்டுமே அர்ப்பணித்த மணியம்மை, 1978-ஆம் ஆண்டு மறைந்தார். இது மணியம்மையின் நூற்றாண்டு. இந்தத் தருணத் தில் அவரின் உழைப்பை, சேவையை நினைவுகூர்வோம்.

- வி.எஸ்.சரவணன்

-  'ஆனந்த விகடன்', 10.3.2019
- விடுதலை நாளேடு, 14.3.19

வியாழன், 26 ஜூலை, 2018

சமத்துவம் அவ்வளவு பலவீனமானதா?

பிற இதழிலிருந்து

இந்த வார "ஆனந்த விகடன்" - பேட்டி: த.கதிரவன்

படம்: சொ.பாலசுப்ரமணியன், ஓவியம்: பிரேம் டாவின்ஸி



 

சமீபகாலமாகவே சர்ச்சைகள் சுற்றிவருகின்றன திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியை. அவர் ஒரு திருமணத்தில் மணமக்களுக்குத் தாலி எடுத்துக் கொடுத்த வீடியோ, "வீரமணி பேரனின் திருமணம்" என்று சமூக வலைதளங்களில் பரவியது. அது ஓய்ந்த சில நாள்களிலேயே கும்பகோணம் "திராவிட மாணவர் கழகப் பவள விழா" மாநாட்டில், கி.வீரமணி, சாரட்டில் பயணித்ததும் சர்ச்சை யானது.  அவரைச் சந்தித்துப் பேசினேன்.

"சமூக நீதி, சமத்துவம் பேசும் கி.வீரமணி, தொண்டர் களிடையே சாரட் வண்டியில் பயணித்து வந்தது சரி தானா?"

"குதிரை வண்டியில் நான் ஏறி வந்ததால், குதிரைக்கு வலி வந்துவிட்டது என்று சொன்னால்கூட அதில் அர்த்தம் இருக்கிறது. ஆனால், இவர்களுக்கு ஏன் வலி வந்தது என்றுதான் எனக்குப் புரியவில்லை. திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரையில், பேரணி, ஊர்வலம், முழக்கங்கள் எல்லாமே ஒரு வகையான பிரச்சார உத்தி. ஜாதி ஒழிப்புப் போராட்டத்துக்காகச் சிறைசென்ற பெரியார் விடுதலை யானபோது, சிதம்பரத்தில், தேரில் வைத்து ஊர்வலமாக அழைத்துவரப்பட்டார். அந்தக் காட்சியை வர்ணித்துதான் "அவர்தாம் பெரியார்" பாடலை இயற்றினார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.

இப்போது குடந்தையில், 75 ஆவது ஆண்டைக் கொண்டாடும் மாணவர் கழகத்தின் பவளவிழா மாநாட்டில், அய்யாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். 'பொது ஒழுக்கத்தோடு நடப்போம்‘, `சொந்த சாதியில் திருமணம் செய்துகொள்ள மாட்டோம்‘ என்பது உள்ளிட்ட 10 உறுதிமொழிகள் மாநாட்டில் எடுக்கப்பட்டன. கட்டுப்பாட்டுடன் திரண்டெழுந்த இந்த மாணவர் எழுச்சி பற்றிய சிறப்புச் செய்திகளை எல்லாம் மறைக்கவே ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் திட்ட மிட்டு சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார்கள்.  "பல்லக்கில் பவனி வந்தார்" என்று மோசடியாகச் சித்திரித்து பரவ விட்டுள்ளனர்.

1995 ஆம் ஆண்டு, கன்ஷிராம், மாயாவதி தலைமையில், உத்தரப்பிரதேசத்தில் "பெரியார் மேளா" கொண்டாடப் பட்டது. இந்தியா முழுக்கப் பரவிய இந்தச் செய்தியைப் பின்னுக்குத் தள்ள வேண்டுமென்றே, அப்போது 'பிள்ளை யார் பால் குடிக்கிறார்' என்று கிளப்பிவிட்டார்கள். இதை யடுத்து, 'பிள்ளையார் பால் குடிக்க முடியுமா? பால் குடித்தது உண்மையா? பால் குடித்தது சரியா?‘ என்றெல்லாம் விவா திக்க ஆரம்பித்துவிட்டார்கள். எனவே, இது காலங்காலமாக அவர்கள் செய்துவரும் உத்தி; காலாவதியான உத்தி!"

"ஜமீன், ராஜாக்களின் அடையாளமான சாரட் வண்டி யில், சமத்துவத்தை வலியுறுத்தும் இயக்கத் தலைவரே தோழர்களுக்கு மத்தியில் பயணித்து வந்தது குறித்து முற்போக்காளர்கள் சிலரும் விமர்சிக்கிறார்களே..?"

"குதிரை வண்டியில் ஏறிவந்தாலே, சமத்துவம் போய் விடுமா? சமத்துவம் அவ்வளவு பலவீனமானதா?அப்படி 'வீக்'கானதாகத்தான் சமத்துவம் இருக்கிறதென்றால், அப்படி யொரு சமத்துவமே இருக்கக்கூடாது. காவல்துறையில், அணிவகுப்பு நடக்கிறது, அரசியல் கட்சியினர் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்துகின்றனர்... அப்போதெல்லாம் தலைவர்கள் காரில் அமர்ந்தவாறேதான் பார்வையிடு கின்றனர். நான் காரில் அமர்ந்து செல்லும்வழியிலேயேகூட தோழர்கள் எனக்கு வணக்கம் தெரிவிக்கிறார்கள்; நானும் பதில் வணக்கம் வைக்கிறேன். எனவே, இது ஒரு சாதாரண நிகழ்வுதான்.

சமத்துவம் என்பது எதில் வரவேண்டும்... உத்தியோகத் தில், பேச்சில், சுடுகாட்டில் என்று சமத்துவம் வரவேண்டிய இடங்கள் எவ்வளவோ இருக்கின்றன. திராவிடர் கழகம் அளவுக்கு சமூக நீதிக்காகப் போராடுகிற இயக்கம் வேறு எங்கேயிருக்கிறது? எனவே, இதில்போய் சமத்துவத்தைத் தேடுவதென்பது, அவர்களுக்குச் சரியான பார்வை இல்லை என்பதைத்தான் காட்டுகிறது!"

"ஆன்மிக விஷயங்களில் ஆர்வம் காட்டிய துரை முருகன், கோ.சி.மணிக்கு எதிராக ஆவேசம் காட்டிய திரா விடர் கழகம்., மு.க.ஸ்டாலின், சிறீரங்கம் கோயிலுக்குச் சென்று வந்தது குறித்து எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்க வில்லையே...?

"அது உண்மையில்லீங்களே... ஒரு திருமண விழாவை நடத்திவைக்கத்தானே ஸ்டாலின், சிறீரங்கம் சென்றார். அங்கேயுள்ள பார்ப்பனர்கள்தான், வலியவந்து 'பூரண கும்ப மரியாதை' கொடுப்பதாகச் சொல்லி அவருக்குப் பொட்டு வைத்திருக்கிறார்கள். அதையும்கூட ஸ்டாலின், உடனே அழித்துவிட்டார். இப்போது, அதையும் வைத்துப் பிரச்சாரம் பண்ணுகிறார்கள். ஸ்டாலினே முன்வந்து ஏதாவது கோயி லுக்குப் போனதாக ஏதேனும் செய்திகள் இருக்கிறதா... சொல் லுங்கள்... நான் கண்டிக்கிறேன்!"

"சிறீரங்கம் கோயிலை ஸ்டாலின் வாகனத்திலேயே வலம் வந்ததாகவும், யானைக்கு கரும்பு, வெல்லம் கொடுத்துப் பரிகாரம் செய்ததாகவும் செய்திகள் வெளி யாகி யிருக்கின்றனவே...?"

"பரிகாரம் செய்வதற்காக ஸ்டாலின் அங்கே போக வில்லை. அது தேவையும் இல்லாத விஷயம். 'ஸ்டாலின், கோயிலுக்குள் சென்றார்... கும்பிடு போட்டார்... அர்ச்சனை செய்தார்‘ என்று சொல்லுங்கள்... நான் கண்டிக்கத் தயாராக இருக்கிறேன். ஏனெனில், கண்டிப்பதற்கு நாங்கள்  யோசிப்பதே இல்லை.

பா.ஜ.க-வோடு தி.மு.க கூட்டு வைத்தபோது, அதனை நாங்கள் ஏற்கவில்லையே... தி.க-வைப் பொருத்தவரையில், தவறு செய்தால் தயவு தாட்சண்யத்துக்கு இடமே கிடையாது. இன்னும் சொல்லப்போனால், பெரியாராவது மடத்துக்குப் போயிருந்தபோது குன்றக்குடி அடிகளார் வைத்த பொட் டினை உடனே அழித்துவிடாமல், கொஞ்சம் தாமதமாகத் தான் அழித்தார். ஆனால், ஸ்டாலினோ உடனே பொட் டினை அழித்து, தான் எவ்வளவு சிறந்த கொள்கையாளர் என்பதைக் காட்டி விட்டாரே...!"

"ஸ்டாலின், குங்குமத்தை அழித்த சம்பவம் இந்து மதத்தினரைப் புண்படுத்தாதா?"

"ஒரு விஷயத்தை ஏற்காதவரிடம் போய் அதே விஷயத் தைச் செய்வதென்பது அறிவுடைமையா? குன்றக்குடி அடிகளார் அழைத்ததின் பேரில், ஒருமுறை மடத்துக்குச் சென்றார் பெரியார். அங்கே வரவேற்பு முறையில் ஒன்றாகப் பெரியாருக்குத் திருநீறு பூசப்பட்டது. ஆனால், இங்கே ஸ்டாலின், 'தனக்குப் பூரண கும்ப மரியாதை செய்ய வேண்டும்' என்று யாரையும் அழைக்கவே இல்லையே... ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காகப் போயிருந்தவரை ஒரு குழப்பு குழப்பிவிட வேண்டும் என்பதற்காக, பார்ப்பனர்களே வலியப்போய் பூரண கும்ப மரியாதை செய்திருக்கின்றனர். ஆனால், அவர்களது முயற்சி எதுவும் 'டேக் ஆஃப்' ஆகவில்லை. எனவே, ஸ்டா லின், குங்குமத்தை அழித்துக்கொண்டதுதான் இப்போது செய்தியாகியிருக்கிறது. இது பாராட்டப்படக் கூடியதுதான்!"

"தாலி அகற்றும் விழா நடத்துகிற கி.வீரமணி, தன் பேரன் திருமணத்தைத் தாலி கட்டி நடத்தியிருப்பதாகச் செய்திகள் பரவியதே?"

"1,500 பேர் முன்னிலையில் நடந்த திருமணம் அது. அப்படியொரு சம்பவமே அங்கு நடைபெறவில்லை. எனவே, இந்தச் செய்தியில், துளியளவும் உண்மையில்லை. ஆனாலும், திரும்பத் திரும்ப இப்படியொரு பொய்ச் செய்தியைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் இதழான 'விஜயபாரத'த்தில், இந்தச் செய்தி வந்தவுடனேயே வக்கீல் நோட்டீஸ் அனுப்பி, இப்போது வழக்குப் போடவும் தயாராகியிருக்கிறோம்."

"தாலி அகற்றும் விழாவில் பிரச்சினை ஏற்பட்டபோது திராவிடர் விடுதலைக்கழகம், ம.க.இ.க. போன்ற அமைப் புகள் உங்களுக்குத் துணைநின்றன. ஆனால், இதற்குச் சில மாதங்கள் கழித்து, 'பெரியார் தொகுப்பு' தொடர்பாக நீங்கள் கொளத்தூர் மணிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினீர்களே... இது தோழமைச் சக்திகளிடம் விரிசலை ஏற்படுத்தாதா? "

"இது தவறான கருத்து... அப்படி எந்த நோட்டீஸும் அனுப்பப்படவில்லை. பெரியார் புத்தகம் அச்சடிப்பது தொடர்பாக ஏற்கெனவே ராமகிருஷ்ணன் மீது தொடுத் திருந்த வழக்குதான் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக் கிறது. சில இளைஞர்கள், இந்தப் பக்கம் வருகிறார்கள். அதற்காக இதுபோன்ற திட்டமிட்ட தகவல்கள் பரப்பப்படு கின்றன... அவ்வளவுதான்!"

"அரசியலில், ரஜினியின் ஆன்மிகத்தையும், கமல் ஹாசனின் பகுத்தறிவையும் எப்படிப் பார்க்கிறீர்கள்?"

"தேர்தல் மார்க்கெட்டில் அதிக விலை போவது எது என்ற பிரச்சினையில், இவர்கள் இரண்டு பேருக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதாவது, 'நான் பகுத்தறிவாளர் என்றாலும்கூட, என்னுடன் இருப்பவர்கள் அனைவருமே பகுத்தறிவாளர்கள் என்று சொல்லமாட்டேன்' என்று பின்வாங்கிவிட்டார் கமல்ஹாசன். ஏனெனில், தேர்தலில் வாக்கு வாங்கும்போது, பகுத்தறிவை வலியுறுத்த முடியாது என்பது அவருக்குத் தெரிந்துவிட்டது. இதையே ரஜினிகாந்த் மாற்றிப் போட்டுவிட்டார். அதாவது, மதவாதம் என்று சொன்னால், மாட்டிக்குவாங்க பி.ஜே.பி எனக் கருதி, ஒண்ணும் புரியாத, இல்லாத ஒன்றை இருப்பதாகக் கற்பனை செய்து 'ஆன்மிகம்' என்று சொல்கிறார். இதனால் அவரும் குழம்பி, அடுத்தவர்களையும் குழப்புகிறார். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, இது பெரியார் மண். இங்கே மாய மான் வேட்டையெல்லாம் எடுபடாது!"

"திராவிடர் கழகத்துக்கு தலித்தை தலைவராகக் கொண்டு வர முடியுமா? என்று எஸ்.வி.சேகர் கேட்கிறாரே....?"



"தி.க-வைப் பொருத்தவரையில், இங்கே ஆதி திராவிடர், மீதி திராவிடர், பாதி திராவிடர் என்பதெல்லாம் கிடையாது. இங்கே இருப்பவர்களுக்கு சாதி, மதம் கிடையாது என்பதுதான் தி.க-வின் அடிப்படையே. இங்கே தலித்துகள் இவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்று நான் சொன்னால், அந்தத் தோழர்களை நான் கொச்சைப்படுத்துவதாகாதா...! இங்கே தலித்துகள் இருக்கிறார்களா இல்லையா என்று நாங்கள் மற்றவர்களுக்குக் கணக்கெடுத்து சொல்லவேண்டிய அவசியமும் இல்லை. கொள்கை உறுதி, உழைப்பு ஆகியவற்றைக் கணக்கிட்டே தோழர்கள் பொறுப்புக்கு வருகிறார்கள். அதனால், இங்கே இருக்கிறவர்களுக்குத் தெரியும்... எந்தவிதமான பொறுப்புகளில் நடத்தப்படுகிறார் கள் என்று!"

"உங்கள் மகன் அன்புராஜை, தி.க பொதுச் செயலாள ராகக் கொண்டுவந்ததின் மூலம், இங்கேயும் வாரிசு அரசியலைக் கொண்டு வந்துவிட்டீர்களே....?"

"ஜெயேந்திரர் போனவுடன், விஜயேந்திரருக்கு பட்டம் சூட்டப்பட்டது" என்று சொல்வதற்கு தி.க ஒன்றும் மடம் கிடையாது. இது தெளிவானதொரு அமைப்பு. இங்கே செயற்குழு, பொதுக்குழு எல்லாமே இருக்கின்றன.

அன்புராஜ், ஏற்கெனவே பொதுக்குழு உறுப்பினராக இருந்திருக்கிறார். தோழர்கள் விரும்பியதன் அடிப்படையில், நான்கு பொதுச்செயலாளர்களுள் ஒருவராக அன்புராஜும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் அவ்வளவுதான். என் மகன் என்பதாலேயே அவர் தகுதிக்குறைவுக்கு உள்ளாக்கப் படுவதும் கிடையாது; அதே காரணத்தினாலேயே அவருக்கு அதிகத் தகுதி இருக்கிறது என்று முன்னே வந்து நிறுத்தப்ப டுவதும் இங்கே கிடையாது."

"வாழ்நாள் முழுக்க ஓய்வின்றி, மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தவர் பெரியார். ஆனால், இப்போதைய திராவிடர் கழகம் பெரியார் திடலைத் தாண்டி பிரச்சாரங்கள் செய்வ தில்லையே?"

"அதிகமான எண்ணிக்கையில் பொதுக்கூட்டங்களை நடத்துகின்ற இயக்கம் திராவிடர் கழகம்தான். மாதத்தில், 25 நாட்கள் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொள்கிறேன். தெருமுனைக் கூட்டங்கள், மாநாடுகள், உலகளாவிய அளவில் 'விடுதலை' நாளேடு விநியோகம், இணையத்தில் 'பெரியார் வலைக்காட்சி' மூலமாக உடனுக்குடன் செய்தி ஒளிபரப்பு என தீவிரமாகவே கழகப் பணியாற்றி வருகி றோம். அதனால்தான் பஞ்சாபிலேயே, 'பெரியார் வாழ்க' என்ற முழக்கம் எழுந்திருக்கிறது. இப்போதுகூட அமெ ரிக்காவில், சுபவீ போன்றோர் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பகுத்தறிவுக் கருத்துகளைப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

'திராவிடம் 2.0' என்ற தலைப்பின்கீழ் பெரிய அளவில் பிரச்சாரங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ராமாய ணத்துக்கு எதிரான பிரச்சாரத்தையே நாங்கள்தானே முழு மையாக செய்துவருகிறோம்! எனவே பெரியார் காலத்தில், தமிழக அளவில் இருந்த பகுத்தறிவுப் பிரச்சாரம்... இன்றைக்கு உலகளாவிய நிலைக்கு மாறியிருக்கிறது!"

நன்றி: "ஆனந்த விகடன்", 1.8.2018

- விடுதலை நாளேடு, 26.7.18