கவிஞர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிஞர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 24 நவம்பர், 2024

கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களுக்கு ‘பெரியார் பேருரையாளர்’ சிறப்பு அளிப்பு! – கி.வீரமணி

 

கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களுக்கு ‘பெரியார் பேருரையாளர்’ சிறப்பு அளிப்பு! – கி.வீரமணி

2024 அய்யாவின் அடிச்சுவட்டில் நவம்பர் 16-30

இயக்க வரலாறான தன் வரலாறு (351)

டி.கே.கைலாசம் நினைவு அறக்கட்டளை சொற்பொழிவு நிகழ்ச்சியில் உரையாற்றுகிறார் ஆசிரியர்

அன்று மாலை 5.30 மணிக்கு பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் சார்பில் அருப்புக்கோட்டை டி.கே. கைலாசம் நினைவு அறக்கட்டளை (நிறுவனர்: கைலாசம் அவர்களின் மகன் டி.கே.சுப்பிரமணியம்- ஓய்வு பெற்ற ஆசிரியர்)யின் சார்பில் ‘பெரியார் பேருரையாளர்’க்கான சிறப்புச் சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சிராப்பள்ளி பெரியார் நூற்றாண்டுக் கல்வி வளாகத்தில் சிறப்புடன் நடைபெற்றது.

பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் பேராசிரியர் ப.சுப்பிரமணியம் வரவேற்று உரையாற்றினார்.
திருச்சி- கி.ஆ.பெ.விசுவநாதம் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முனைவர் ஆர்.இராசேந்திரன் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தார்.
திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் பெரியார் பேருரையாளருக்கான சிறப்புரையை நிகழ்த்தினார்.
திருச்சி பெரியார் மாளிகை வளாகம் ‘‘சுயமரியாதைச் சுடரொளி’’ டி.டி.வீரப்பா மன்றத்தில் இரண்டாவது சொற்பொழிவுக் கூட்டம் 17.1.2006 செவ்வாய் காலை 10.30 மணியளவில் எமது தலைமையில் நடைபெற்றது.

பெரியார் பெருந்தொண்டர்களுக்குப் பாராட்டு (திருச்சி)

 

பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் பேராசிரியர் ப.சுப்பிரமணியம் அறிமுகவுரை ஆற்றினார். லால்குடி மாவட்ட திராவிடர் கழகச் செயலாளர் ஆல்பர்ட் வரவேற்புரை ஆற்றினார். நிகழ்ச்சிக்கு நாம் தலைமை வகித்தோம்.

திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் ‘‘தந்தை பெரியார் காணும் உலகம் – நெறிகளும் – தீர்வுகளும்’’ என்ற தலைப்பில் ஒரு மணி நேரம் பெரியார் பேருரையாளருக்கான சிறப்புச் சொற்பொழிவை நிகழ்த்தினார்.

தொடர்ந்து நாம் தந்தை பெரியார் அவர்களின் உயர் எண்ணங்களை ஆய்வுரையாக நிகழ்த்தினோம்.

எமது தலைமை நிறைவுரைக்கு முன்பாக அருப்புக்கோட்டை டி.கே.கைலாசம் நினைவு சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்திய திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கலி.பூங்குன்றன் அவர்களுக்கு ‘பெரியார் பேருரையாளர்’ என்கிற சிறப்புத் தகுதியை அறிவித்துப் பாராட்டி பொன்னாடை போர்த்தி பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் சார்பில் ரூ.1,000 வழங்கினோம். இந்தச் சிறப்புக்கு முழு தகுதியுள்ள கலி.பூங்குன்றன் அவர்கள் சிறந்த எழுத்தாளர், கவிஞர், சிறந்த பெரியாரின் மாணவர் என்று பாராட்டினோம். அன்று மாலை திருச்சியில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க 80ஆம் ஆண்டு விழாவில் மூத்தபெரியார் பெருந்தொண்டர்களுக்கு நினைவுப் பரிசளித்துப் பாராட்டினோம்.

-கட்டுரையின் ஒருபகுதி....

ஞாயிறு, 12 மார்ச், 2023

தமிழ்நாடு அரசின் தந்தை பெரியார் விருது, கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களுக்கு வழங்கப்பட்டது!

 

கழகத் துணைத் தலைவருக்கு தமிழ்நாடு அரசின் தந்தை பெரியார் விருது!

தமிழ்நாடு அரசு சார்பில் தந்தை பெரியார் விருதினை திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களுக்கு முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் வழங்கினார். உடன் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், தா.மோஅன்பரசன், பி.கே.சேகர்பாபு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் (அரசு விழா, சென்னை வள்ளுவர் கோட்டம், - 16.1.2023)

 பெரியார் விருதினைப் பெற்றுக்கொண்டவுடன், அடையாறு சென்று ஆசிரியர் அவர்களைச் சந்தித்தார் கழகத் துணைத் தலைவர்.  ஆசிரியர் அவர்கள் கழகத் துணைத் தலைவருக்கும், அவரது வாழ்விணையர் சி.வெற்றிச்செல்விக்கும் இணைந்து பொன்னாடை போர்த்தி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். உடன் ஆசிரியர் அவர்களின் வாழ்விணையர் மோகனா வீரமணி, தமிழ்நாடு அரசின் மக்கள் தொடர்பு அதிகாரி ராமஜெயம் ஆகியோர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருது, தங்கப்பதக்கம், காசோலை ஆகியவற்றை வழங்கி சிறப்பித்தார்!

சென்னை. ஜன. 17 திராவிடர் கழக துணைத் தலைவருக்கு தந்தை பெரியார் விருதை தமிழ்நாடு அரசின் சார்பில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கி சிறப்பித்தார்

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 2022 ஆம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் 16-01-2023 அன்று காலை 8:30 மணிக்கு நடைபெற்றது. குறித்த நேரத்தில் முதலமைச்சர் வருகை தந்தார். இந்நிகழ்வில் 2022 ஆம் ஆண்டுக்கான 10 ஆன்றோர் பெருமக்களுக்கு தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்தன. இவ்விருதானது தகுதி உரை, பொன்னாடை, ஒரு சவரன் தங்கப்பதக்கம், ரூ.2 லட்சத்திற்கான காசோலை ஆகியவற்றைக் கொண்டது. 

தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. நிகழ்வில் மாண்புமிகுவாளர்களான இளைஞர் நலம் மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சென்னை பெருநகர மேயர் ஆர். பிரியா, ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் நா. எழிலன் ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர். முன்னதாக இவர்களுக்கு நிகழ்ச்சியின் சார்பில் வள்ளுவர் சிலை வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

தமிழறிஞர்கள் பதின்மருக்கு விருதுகள்!

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களுக்கு தந்தை பெரியார் விருது, இரணியன் நா.கு. பொன்னுசாமி அவர்களுக்கு அய்யன் திருவள்ளுவர் விருது, எஸ்.வி.ராஜதுரை அவர்களுக்கு அண்ணல் அம்பேத்கர் விருது உபயதுல்லா அவர்களுக்கு பேரறிஞர் அண்ணா விருது, ஈ.வெ.கி.எஸ். இளங்கோவன் அவர்களுக்கு பெருந் தலைவர் காமராஜர் விருது, ஆ.இரா.வெங்கடாசலபதி அவர்களுக்கு மகாகவி பாரதியார் விருது, வாலாசா வல்லவன் அவர்களுக்கு பாரதிதாசன் விருது, நாமக்கல் பொ.வேல்சாமி அவர்களுக்கு திரு.வி.க. விருது, கவிஞர் மு.மேத்தா அவர்களுக்கு கி.ஆ.பெ.விசுவநாதம் விருது, முனைவர் இரா.மதிவாணன் அவர்களுக்கு தேவநேயப் பாவாணர் விருது உள்ளிட்ட 10 விருதுகள் முதலமைச்சரால் வழங்கப்பட்டன.

தந்தை பெரியார் விருது!

”2022 ஆம் ஆண்டிற்கான தந்தை பெரியார் விருது கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் சமூகநீதிக்கு பாடுபடுகிறவர்களை சிறப்பிக்கும் பொருட்டு இந்த விருது வழங்கப்படுகிறது.  முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால், கவிமாமணி பட்டம் வழங்கி சிறப்பிக்கப்பட்டவர்; தந்தை பெரியார் தன்மானப் பேரவையை உருவாக்கியவர்; தந்தை பெரியாரின் கொள்கைகான சமூக நீதி, ஜாதி மறுப்பு, சுயமரியாதை, பெண் உரிமைகளை உறுதியுடன் செயல்படுத்த வேண்டுமென்று முனைப்புடன் 60 ஆண்டுகளாக செயல்பட்டு  வருகிறார்கள். இந்த அரிய பணிகளைப் பாராட்டி சிறப்பிக்கிறது தமிழ்நாடு அரசு” என்ற தகுதியுரை வாசிக்கப்பட, துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் மேடையேறி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கரங்களால் பொன்னாடை, தங்கப்பதக்கம் அணிவிக்கப்பட்டு, தகுதியுரை ரூ.5 லட்சத்துக்கான காசோலை ஆகியவை வழங்கப்பட்டன.

தொண்டு நிறுவனங்களுக்கு நிதியுதவி!

வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள் திட்டத்தின் கீழ் 5 தொண்டு நிறுவனங்களுக்கு நிதி உதவி வழங்கி சிறப்பிக்கப் பட்டது. நீலகிரியைச் சேர்ந்த இண்டியா பிராஜக்ட் பார் அனிமல் அண்ட் ரிசர்ச் தொண்டு நிறுவனம், சென்னையைச் சேர்ந்த அனிமல் கேர் ஃபர்ஸ்ட் தொண்டு நிறுவனம், சென்னையைச் சேர்ந்த மெட்ராஸ் அனிமல் ரெஸ்கியூ சொசைட்டி தொண்டு நிறுவனம், பிரித்திவி அனிமல் வெல்பேர் சொசைட்டி தொண்டு நிறுவனம், சென்னையைச் சேர்ந்த வைரவா பவுண்டேஷன் தொண்டு நிறுவனம் என கால்நடை பராமரிப்பு துறையின் சார்பாக முதல் முறையாக மொத்தம் 5 தொண்டு நிறுவனங்களுக்கு முதல் தவணையாக 2, 13, 77,250 ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது. தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் செய்தித்துறை இயக்குநர் அரசு இணைச் செயலாளர் நன்றி கூறினார்.

இறுதியில் நாட்டுப்பண் இசைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, விருது பெற்ற அறிஞர் பெருமக்களுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குழு ஒளிப்படம் எடுத்துக்கொண்டார்.

 கவிஞரை உச்சி முகர்ந்த ஆசிரியர்!

தொடர்ந்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரிடம் திட்டத்தில் ஒரு மாறுதல் செய்து தனது வீட்டில் விடுவதற்கு  முன் அடையாறு சென்று தமிழர் தலைவரை காண வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அவர்கள் உடனே சம்மதித்தனர். அவ்வாறே அடையாறு ஆசிரியர் இல்லம் சென்று தான் பெற்ற விருதைக்காட்டி நெகிழ்ந்தார் கவிஞர். ஆசிரியர் தானே பெற்றது போல மகிழ்ந்து, துணைத் தலைவர், வெற்றிச்செல்வி இருவருக்கும் ஒருசேர ஆடையணிவித்து மரியாதை செய்தார். பின்னர் வழங்கப்பட்ட தகுதியுரையை ஊன்றிப்படித்து மகிழ்ந்தார். அப்போது ஆசிரியரை சந்திக்க வருகை தந்திருந்த வி.ஜி.பி சந்தோசம் அவர்கள், கவிஞ ருக்கும், வெற்றிச் செல்விக்கும் ஒருசேர ஆடையணிவித்து தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். உடன்: கி. ராகுலன், முனைவர் சுடரொளி, காரல் ஆகியோர் இருந்தனர்.

கலந்து கொண்டு சிறப்பித்த தோழர்கள்!

பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், துணைப் பொதுச் செயலாளர் இன்பக்கனி, மாநில அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், மகளிர் பாசறை மாநில அமைப்பாளர் சே.மெ.மதிவதனி, வெற்றிச்செல்வி பூங்குன்றன், பொதுக்குழு உறுப்பினர் பூவை செல்வி, மாணவரணியின் மாநிலப் பொறுப்பாளர் செ.பெ.தொண்டறம், தென்சென்னை மாவட்ட செயலாளர் பார்த்தசாரதி, சரவண ராஜேந்திரன், ஆவடி மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடிவேல், வை. கலையரசன், ஆவடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைச் செயலாளர் கார்த்திகேயன், பெரியார் மாணாக்கன், ஆவடி தோழர்கள் வஜ்ரவேல், ஆ.வெ.நடராஜன், பெரியார், அண்ணா, கலைஞர் பகுத்தறிவு பாசறை ஒருங்கிணைப்பாளர் கோபால், பார்த்திபன், வெற்றி, துணைத் தலைவர் குடும்பத்தினர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விருதாளர்கள், அன்னார்களது குடும்பத்தினர் ஆகி யோருக்கு காலைச் சிற்றுண்டியாக பொங்கல், வடை வழங்கப்பட்டது.

செவ்வாய், 21 டிசம்பர், 2021

திராவிடர் கழகத் தலைவர் - தமிழர் தலைவருக்குப் “பகுத்தறிவுப் போராளி” என்ற பட்டம்

“பகுத்தறிவுப் போராளிக்கு!” நம் வணக்கம்

கவிஞர் கலி.பூங்குன்றன்

பெரியார் பன்னாட்டு அமைப்பின் ஏற்பாட்டில் உலக திராவிடர் மகளிர் மாநாடு  - காணொலி மூலம் நமது அருமைத் தலைவர் - திராவிடர் கழகத் தலைவர் - தமிழர் தலைவருக்குப் “பகுத்தறிவுப் போராளி” என்ற பட்டத்தை அளித்து மகிழ்ந்தது.  (12.12.2021) இரவு 8.30க்குத் தொடங்கி 12.05 மணி வரை)

பட்டம் பெற்ற தலைவர் மகிழ்ந்ததைவிட உலகெங்கும் வாழும் தமிழர்கள் - திராவிடர்கள் சுயமரியாதைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், பகுத்தறிவாளர்கள், மனிதநேயர்கள், மனித உரிமை விரும்பிகள் ஒவ்வொருவரும் தங்களுக்குக் கிடைத்த பட்டமாக, விருதாகக் கருதி மகிழ்ச்சியின் உச்சியில் திளைத்தார்கள்.

என்ன காரணம்? தந்தை பெரியார் என்ற மேருமலை தன் மூச்சுக்கு நிரந்தர விடுப்பு அளித்த நிலையில், திராவிடர் கழகம் என்ற அமைப்பு இருக்குமா - துலங்குமா? என்ற நினைப்பில் இருந்தவர்கள்  - இருக்கக் கூடாது - தொலைந்து போகட்டும் என்று தம் இஷ்ட மித்திர தெய்வங்களை எல்லாம் நேர்த்திக் கடன் இருந்து கும்பிட்டுக் கிடந்தவர்கள் ஒரு பக்கம்.

‘அய்யோ, அய்யாவின் இயக்கம் மரணித்தால் நம் கெதி என்னாவது! நம் மக்களுக்குக் கழிப்பின்றி நமக்காகக் குரல் கொடுக்கும் இயக்கம் எது? இனத்தைப் பாதுகாத்திட இறப்பையும், இன்முகத்துடன் ஏந்தி வரவேற்கும் வலிமை மிக்க அளவில் வேறு இயக்கம் ஏது! ஏது?

அரசியல் அபிலாசை என்னும் மயக்கத்தின் வட்டத்திற்குள் சிக்கி வாய்பிழந்து நிற்காமல் “நின்ற சொல்லர்” என்பதற்கேற்ப இரும்பென உறுதியாகக் களத்தில் நிற்கும் கழகம் எது?

சமூகநீதிக்கு ஊறு என்றால் சாய்ந்து படுக்காமல், சடுதியில் சமர்க்களம் புகும் கழகம் எ(ஏ)து? என்ற எண்ணத்தில் அஞ்சியோர் உண்டு.

தந்தை பெரியார் மறைந்த நிலையிலும் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, “கழகம் கலையாது - இணையாது தனித்தன்மையுடன் இயங்கும் செயல்படும்” என்று செவிளில் அறைந்தது போல துப்பாக்கியிலிருந்து ரவை புறப்பட்டது போல பதில் கூறிய தலைவர் அன்றோ நம் தலைவர் வீரமணி.

திருச்சியிலே பொதுக்குழு கூடி (6.1.1974) எடுத்த தீர்மானத்தின் சூளுரை என்ன?

“தந்தை பெரியார் விட்டுச் சென்ற பணிகளை, அவர்கள் போட்டுத் தந்த பாதையில் எந்தவித சபலங்களுக்கும் ஆளாகாமல் வென்று முடிப்போம்!” என்று எடுத்த சூளுரை-

இன்று வரை, ஏன் நாளையும், எதிர் காலத்திலும் உயிர்த்துடிப்போடு நின்றதே - நிற்கிறதே - நிற்குமே!

அய்யாவின் ஓராண்டு நினைவையொட்டி (25.12.1974) ‘இராவணலீலா’ என்னும் இனமான விழாவை நடத்தி இந்தியாவையே திரும்பிப்பார்க்கச் செய்தாரே - தலைவர் அன்னை மணியம்யை£ர்.

அம்மா உடல்நலம் பாதிக்கப்பட்ட காலக்கட்டம்,  நெருக்கடி நிலைப் பிரகடனப்படுத்தப்பட்டு - கழகத்தின் பொதுச்செயலாளரான ஆசிரியரை மிசா கைதியாக ஓராண்டு சிறைக்கூடத்திலே பூட்டி, கழகத்தை கலகலக்கச் செய்யலாம் என்று காகப்பட்டர் பரம்பரையினர் செய்த சூழ்ச்சியும் சுக்கல் நூறாக ஆக்கப்பட வில்லையா?

தணிக்கை என்ற பெயரால் ‘விடுதலை’யின் விலா எலும்பைக் குத்தி - குடலைக் கிழித்து மாலையாகச் சூட்டிக்கொள்ளலாம் என்று மார்தட்டினார்களே - அவர்களின் வியூகத்தையும் வீழ்த்தி ‘விடுதலை’ தன் பெயருக்கேற்ப வீரநடை போடவில்லையா?

நெருக்கடி - தணிக்கையின் பெயரால் ‘விடுதலையை’ வீழ்த்தலாம் என்ற வீண்கனவைக் கண்டார்களே  - அந்தத் தலைவர் ஆசிரியர்  வீரமணி தலைமை சால் வலிமையால் அளப்பரிய ஆற்றலால் எட்டுப்பக்கத்தில் வண்ண வண்ணமாக எண்ணங்களை சுமந்து உலகத் தமிழர்கள் மத்தியில் வீர உலா நடத்தவில்லையா ‘விடுதலை’?

சென்னையில் ஒரு பதிப்பு என்றால் தந்தை பெரியாரின் தலைமையகமான திருச்சியில் இன்னொரு பதிப்பையும் விரிவாக்கம் செய்யவில்லையா? மளமளவென வெளியீடுகளை பல மொழிகளிலும் குவித்துக் கொண்டு இருக்கவில்லையா? முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்களே இந்த சாதனையை வெகுவாகப் பாராட்ட வில்லையா?

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், நமது தலைவர் வீரமணி அவர்கள் விடுதலைக்கு ஆசிரியர் பொறுப்பை ஏற்கவில்லை என்றால் ‘விடுதலை’ வார ஏடாக மாறி இருக்குமே! நினைத்தாலே நம் நெஞ்சமெல்லாம் நடுங்குகிறது. அதனைத் தடுத்தாட்கொண்டு தந்தை பெரியார் கட்டளையை ஏற்று 59 ஆண்டு காலம் ஆசிரியர் என்ற உலக கின்னஸ் சாதனையை நிகழ்த்திய ஒன்று போதுமே - தலை குனிந்து அவருக்கு நன்றியோடு வணக்கம் செலுத்துகிறோம்!

வருமான வரித்துறையின் மூலம் பெரியார் அறக்கட்டளையை நசுக்கி விடலாம் என்று நரியார்கள் திட்டமிட்ட நிலையில், நீதிமன்றத்தின் (Income tax apppelate tribunal) படிக்கட்டுகளில் ஏறி, நியாயத்தின் - நேர்மையின்  - உண்மையின் ஒளியை விளக்கி, முழுக்க முழுக்க ஆதிக்கக் கம்பி வேலியாக இருந்த அந்த அரணை உடைத்து - “எதிர்காலத்தில் இயக்கத்தை இவர் காப்பார்” என்று அய்யா வைத்த நம்பிக்கையை நாணயமாகக் காப்பாற்றிக் கம்பீரமாக வெற்றிப் புன்னகையுடன் வெளிவந்தாரே நமது தலைவர் ஆசிரியர்.

இந்த ஒன்றுக்காக எவ்வளவுப் பாராட்டுகளைக் குவித்தாலும் தகுமே! - தகுமே! நன்றி! நன்றி!!

எண்ணிக்கையில் அகல் விளக்காக இருந்த கல்வி நிறுவனங்கள் இன்று ... சூரியனாக வானளவு வளர்ந்து சுடர் விடவில்லையா?

சமூகநீதியின் சரித்திரம் தான் என்ன? தந்தை பெரியாரின் உழைப்பால் 49 விழுக்காடு தமிழ்நாட்டில் நிலவிய இடஒதுக்கீடு இன்று 69 விழுக்காடாக வலிமையான கூட்டப் பாதுகாப்போடு விண்மீனாக ஜொலிக்கிறதே!  தந்தை பெரியார் என்னும் தத்துவ ஆசான் தோள் உரத்தின் மீது நின்று சாதித்துக் காட்டிய சாதனைக்கு சொந்தக்காரர் இவர் இல்லையா?

1940இல் திருவாரூரில் நடைபெற்ற நீதிக்கட்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் - ஒன்றிய அரசின் துறைகளிலும் இடஒதுக்கீடு தேவை என்பது  - அரை நூற்றாண்டுக்குப் பிறகு அது செயல் மலராகப் பூத்துக் குலுங்குகிறதே! இதற்காக திராவிடர் கழக தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தலைமையில்  இந்தியத்துணைக் கண்டம் முழுவதும் 42 மாநாடுகள் என்பது சாதாரணமா?, 16 போராட்டங்களை - பிரதமர் வீட்டு முன் மறியல், நாடாளுமன்றத்தின் முன் மறியல் என்று முன்னுதாரணம் இல்லாத வகையில் நடத்திக் காட்டியது யார்?

‘வீரமணியைப் பார்க்கும் பொழுதெல்லாம் சமூகநீதி உணர்ச்சியைப் பெறுகிறேன்’ என்று சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அகம் மலர்ந்து புகழ்மாலை சூட்டியதை நேரில் கண்டு களித்த கருஞ்சட்டையினர் இன்னும் உண்டே! (1.10.1994)

எதைச் சொல்ல, எதை விட?

உலகத் திராவிட மகளிர் மாநாடு நமது தலைவருக்குப் “பகுத்தறிவுப் போராளி” என்ற பட்டம் அளித்தது - ஏதோ பாராட்ட வேண்டும் என்ற பாவனையால் அல்ல.

எத்தனை எத்தனைப் பெண்கள் விடுதலை மாநாடுகள்! விதவைப் பெண்களுக்கு பூச்சூட்டல் கண்டு உலகப் பூப்பாகமே அதிர்ந்ததே!

அம்பேத்கர் பிறந்த நாளில் தாலி நீக்கம் நாட்டையே குலுக்கியது (14.4.2015). வழக்கில் வெற்றியும் கண்டோமே!

‘இளைஞர்களே, நீங்கள் திருமணம் செய்து கொள்வதாக இருந்தால் விதவைகள் என்று சொல்லப்படும் பெண்களையே மணமுடிப்பீர்’ என்ற குரல் கொடுத்ததும், தீர்மானம் நிறைவேற்றியதும் திராவிடர் கழகம் அல்லாமல் வேறு எந்த அமைப்பு? தலைமையக பெரியார் திடலில் சுயமரியாதைத் திருமண நிலையம் மூலம் அன்றாடம் புரட்சிகரமாகத் திருமணங்கள் நடந்த வண்ணம் உள்ளதே!

விதவைப் பெண்கள் தரிசு நிலம் என்று கூறிய காஞ்சி சங்கராச்சாரியாரை எதிர்த்து காஞ்சி மடம் முன் கழக மகளிர் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் கண்டனக் குரலை எழுப்ப வில்லையா?

ஆண்களுக்கான உரிமை பெண்களுக்கும் வேண்டும். செல்வி, திருமதி என்ற சொற்களைத் தூக்கி எறிக! தன் பெயருக்குப் பின்னால் கணவன் பெயரை எதற்கு இணைக்க வேண்டும்?

துணைவரை இழந்த பெண்கள் திருமணத்திற்கு தலைமையேற்க வேண்டும் என்ற புரட்சித் தீர்மானங்கள் எல்லாம் நிறைவேற்றப்பட்டன, திராவிடர் கழக மாநாடு அல்லாமல் வேறு எங்கே, எங்கே?

ஜாதி மறுப்புத் திருமணம், மத மறுப்புத் திருமணம், காதல் திருமணம் பெருக வேண்டும்; தக்க வயதடைந்த ஆணும் பெண்ணும் இணைவதில் அடுத்தவர்கள் குறுக்கிட உரிமை ஏது? என்றெல்லாம் புரட்சிக் குரல் கொடுத்தவர்தான் எவர்?

பெண்களே தீக்குண்டத்தில் இறங்கி, கடவுள் மறுப்பை முழங்கி பூமியை அதிரச் செய்யவில்லையா?

கையில் தீச்சட்டி ஏந்தி ‘தீச்சட்டி இங்கே மாரியாத்தாள் எங்கே?’ என்று கருப்புடை தரித்த கழக மகளிர் உரக்கக் கொடுத்த முழக்கம், உறங்கியவர்களையும் திடுதிப்பென எழுந்து ஓடி வந்து பார்க்கச் செய்யவில்லையா?

சட்டப்பேரவை தேர்தலிலும், நாடாளுமன்ற தேர்தலிலும் பெண்களுக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கிடு என்பதற்காக தலைவர் வீரமணி தலைமையில் திராவிடர் கழகம் நடத்திய மாநாடுகள், கருத்தரங்கங்கள், பேரணிகள், போராட்டங்கள் கொஞ்சமா? நஞ்சமா?

சேலத்தில் 23, 24.1.1971 நாட்களில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட மாநாட்டில் ஒரு முக்கிய தீர்மானம்.

“ஒருவன் மனைவி மற்றவனை விரும்புவது என்பதைக் குற்றமாக்கக்கூடாது” என்ற தீர்மானத்தைத் திரித்து “ஒருவன் மனைவியை மற்றவன் அபகரித்துக் கொள்ளலாம்“ என்று வெளியிட்ட ‘இந்து’ ஏட்டை எதிர்த்து, ஆசிரியர் வீரமணி அவர்கள் வழக்குரைஞராக உயர்நீதிமன்றத்தில் வாதாடவில்லையா? இந்து ஏடு மன்னிப்புக் கேட்டதுண்டே!

1938இல் சென்னையில் மகளிர் மாநாடு நடத்தி “பெரியார்’ என்ற பட்டம் கொடுத்துப் பெருமை பெற்றார்கள்.

இன்று அவரது சீடருக்குப் “பகுத்தறிவுப் போராளி” என்ற பட்டம் தந்து பெருமைப் பெற்றுவிட்டனர்.

தமிழர் தலைவர் தலைமையேற்று இயக்கத்தை எழுச்சியுடன் நடத்துகிறார் என்பதற்கான அத்தாட்சிதான் உலக திராவிடர் மகளிர் மாநாட்டின் புகழ் பூத்த செயல்!

இதற்கு முன்பும் பல விருதுகள் இவரைத் தேடி வந்ததுண்டு.

“இனமானப் பேரொளி” இது நாகையில் பெண்கள் மாநாட்டில் அளிக்கப்பட்டது (1993).

“பாரத் ஜோதி” என்ற விருதைக் கொடுத்து பாராட்டியது. புதுடில்லி குளோபல் பொருளாதாரக் கவுன்சில் (2000 ஆண்டு). “பேரறிவாளர்” விருதினை வழங்கியது மியான்மர் சுயமரியாதை இயக்கம்.

“ஆக்ஸ்போர்டு தமிழ் விருது” வழங்கிக் குதூகலித்தது- ஆக்ஸ்போர்டு தமிழ்ச்சங்கம்.  “பெரியார் ஒளி” வழங்கியது கழகத்தின் மூன்றாவது துப்பாக்கியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (2010 ஆம் ஆண்டு)

கோவை கே.ஜி.அறக்கட்டளை “ஆயிரமாண்டில் செயலாற்றல் மிக்க தலைவர்” என்ற விருது வழங்கிப் பாராட்டியது.

“வாழ்நாள் சாதனையாளர்” விருது வழங்கியது சென்னை லயோலா கல்லூரி.

“கவுரவ டாக்டர்” பட்டம் வழங்கியது காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் (2003ஆம் ஆண்டு).

“கருத்துக்கனல்” என்ற விருது வழங்கி பெருமைப் பெற்றது மலேசிய திராவிடர் கழகம்.

2009 ஆம் ஆண்டிற்கான “கலைஞர் விருதினை” வழங்கிக் கவுரவித்தது ‘முரசொலி’ அறக்கட்டளை (2009 ஆம் ஆண்டு)

காஞ்சியில் திமுக சார்பில் அண்ணா நூற்றாண்டு விழாவில் “தந்தை பெரியார் விருது” வழங்கி உச்சி மோந்தது (2009).

“தந்தை பெரியார் சமூகநீதி விருது” வழங்கி கவுரவித்தது தமிழ்நாடு அரசு (1996ஆம் ஆண்டு).

“மனித நேய வாழ்நாள் சாதனையாளர் விருது” வழங்கியது அமெரிக்க மனித நேய அமைப்பு (Humanist Association)  வாசிங்டன் (22.9.2019).

தஞ்சையில் எடைக்கு எடை தங்கம் கொடுக்கப்பட்டது (1.2.1998). அதில் உருவானதுதான் திராவிடர் கழக அறக்கட்டளை (DK Trust).

புதுக்கோட்டையில் எடைக்கு எடை வெள்ளி - அது பெரியார் அறக்கட்டளைக்குச் சென்றது.

இவற்றை எல்லாம் அணி அணியாகப் பெற்ற - அறிஞர் அண்ணாவால் 11 வயதில் “திராவிடர் கழகத்தின் திருஞான சம்பந்தர்” என்று வருணிக்கப்பட்ட - ஆசிரியர் என்றாலே வீரமணி என்று உலகமறிந்த பெருமகனார் ஒவ்வொரு முறையும் என்ன சொன்னார்?

இந்த விருதுகள் எல்லாம் என் ஆசானுக்கு, அறிவுலகத் தந்தை அய்யாவுக்கு அளிக்கப்பட்டது என்று சொன்னது மேம்போக்கான சொற்கள் அல்ல, அவரின் ஒவ்வொரு அசைவையும் உணர்ந்தவர்கள் இதனை அறிவார்கள்.

இவற்றையெல்லாம் இயக்கமே உயிர் மூச்சு என்று எந்தவித எதிர்ப்பார்ப்புமின்றிப் பாடுபடும் இயக்கத் தொண்டர்களுக்கு அர்ப்பணம் என்று அடக்கமாகவே சொல்லி வந்திருக்கிறார். வாசிங்டனில் “வாழ்நாள் சாதனையாளர் விருது” வழங்கி சிறப்பிக்கப்பட்டபோது கூட, இயக்கப் பொறுப்பாளர்களை மேடைக்கு அழைத்து, அந்த விருதினைப் பெற்ற பெரும் பண்பை எங்கே தேடி அலைய முடியும்?

அடக்கமும், நேர்மையும், உழைப்பும் நெருக்கடியான ஒரு  காலகட்டத்தில் நிமிர்ந்த செயல்பாடும்தான் உண்மை மனிதன் என்பதற்கு அடையாளம்.

இந்த அணிகலன்கள் நம் தலைவருக்குப் பஞ்சமே இல்லை.

இன்னொன்றையும் தவறாது சொல்லுவார் - என்மீது “நீங்கள் சாற்றும் புகழுக்கான தகுதியை வளர்த்துக் கொள்வேன்” என்றும் கூறுவார்.

1944ஆம் ஆண்டிலேயே ‘ஜஸ்டிசைட்’ ஏடு இவரை அடையாளம் காட்டியது (“Self Respect Bombers).

எந்த ஒரு உரிமையையும் அதற்கான விலையைக் கொடுத்து பெற வேண்டும் என்ற இலக்கணத்துக்கு இலக்கியமும் இவரே, இதுவரை 55 முறை சிறையும்  - கைதும் நடந்துள்ளன.

உடலில் கத்தி படாத இடமில்லை (அறுவைச் சிகிச்சையில்)  - உயிர்க்குக் குறி வைக்கப்பட்டன பல முறை!

நெருப்பாற்றில் அல்ல - கந்தகக் கடலில் நீச்சல்போட்ட நிஜமான மனிதத்துவம் நிரம்பிய நிறைகுடம் இது!

“இந்த நிலையில் சுயநலமில்லது வீரமணியைப் போல் எத்தகைய பொருள் ஊதியத்தையும் கருதாமல், பொதுத் தொண்டு செய்ய ஒருவர் வந்தார், வருகிறார், வரக்கூடும் என்பது உவமை சொல்லக் கூடாத ஒரு மாபெரும் காரியம் என்றே சொல்ல வேண்டும்” (‘விடுதலை’, 6.6.1964) என்றாரே தந்தை பெரியார்! இதைவிட நமது தலைவர் ஆசிரியருக்கு எத்தனை விருதுகளும், கிரீடங்களும் தாவி வந்தாலும் ஈடாகாதே!

தந்தை பெரியாரே அவரது சீடர் வீரமணியின் தோளைப் பற்றி ‘விடுதலை’ ஆசிரியர் நாற்காலியில் அமர வைத்தாரே அடடே, இந்தப் பேறு யாருக்குக் கிட்டும்?

“யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும்!” என்ற தன்னம்பிக்கைத் தணலை கழகத்தோழர்களிடம் வழங்கிய தலைவர் மானமிகு வீரமணி.

“உலகத்தைப் பெரியார் மயம் ஆக்குவோம்“ என்ற சூளூரை உன்னதமானது! மத மாச்சரியத்தால் மனித ரத்தம் உடைப்பெடுத்து ஓடும் ஒரு காலகட்டத்தில், மதமற்ற ஓர் உலகு தேவைப்படுகிறது - அது பெரியார் என்ற தத்துவ மாமருந்தின் மூலம் தான் கிடைக்கும் என்பார்.

“உங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்ற இறுதி மூச்சுவரை உழைப்பேன்!” என்று தமது நன்றி அறிவிப்பில் ஓங்கி ஒலித்துள்ளார்.

அந்தப்பயணத்தில் நம்மை நாம் இணைத்துக் கொள்ளும் போது தான் நாமும் பெருமைப்பட முடியும்!

பெரியார் பன்னாட்டு அமைப்புக்கு நன்றி - பன்னாடுகளிலிருந்து பல மொழி பேசும் மகளிரால் நம் தலைவருக்கு அளிக்கப்பட்ட பட்டமளிப்பு விழாவில் அவர்கள் மழையெனப் பொழிந்த கருத்துக்களை வருணிக்க

வார்த்தைகளுக்குத் தெம்பு இல்லை - இல்லவே இல்லை!

நமது தலைவர் மூலம் “பெரியார் உலகம்” படைக்கப்பட வேண்டும் என்ற ஆதார கருதி அவர்களது உரையில் மிளிர்ந்தது. நன்றி! நன்றி!

திங்கள், 17 ஜூன், 2019

இயக்குநர் தோழர் பா.ரஞ்சித் அவர்களின் பார்வைக்கு

*- கவிஞர் கலி.பூங்குன்றன் -*

முற்போக்குக் கொள்கை உடைய திரைப்பட இயக்குநர் தோழர் பா.ரஞ்சித் அவர்களின் பேட்டி ஒன்று  தி எக்னாமிக் டைம்ஸ் ஏட்டில் (2018 நவம்பர்: 25 டிசம்பர்:1) வெளிவந்துள்ளது.

ஜாதி அமைப்பு முறையின் அடிவேர் வரை சென்று அலசி எடுத்திருக்கிறார். அதன் பார்ப்பன மூலத்தையும் அடையாளம் கண்டு தோலுரித்துத் தொங்க விடுகிறார்.

அன்றாட வாழ்க்கையில் ஜாதியின் தாக்கங்களைத் தங்குத் தடையின்றி விமர்சனக் கோடாரியால் பிளந்து தள்ளியுள்ளார்.

நாட்டில் நடைபெறும் ஜாதிய வாதம் -  தாழ்த்தப்பட்டவர்கள் மீதான வன்முறைகள் பற்றி எல்லாம் பொறுப்புணர்ச்சியுடனும், வேதனைக் குமுறலுடனும் விளாசித் தள்ளி யுள்ளார். பாராட்டுகள்.

அதே நேரத்தில் பெரியார் இயக்கம் பற்றி அவர் விமர்சித்துள்ள பகுதிகள் நமது விமர்சனத்துக்கு உட்பட்டவையாகும்.

பெரியார் இயக்கம் என்பது பார்ப்பனரல் லாதோர் மற்றும் பார்ப்பனர்களுக்கிடை யேயான போராட்டம் என்றுதான் கூறலாம். பார்ப்பனர்கள் கைகளில் இருந்து பார்ப்பனரல் லாதார் கைகளுக்கு அதிகாரங்கள் வந்த பிறகு அவர்கள் பார்ப்பனர்களுக்குத் துணை போகும் செயலில் இறங்கி விட்டார்கள் என்று ஓரிடத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பார்ப்பனரல்லாதார் என்று சொல்லும் போது அதில் ஆண்டாண்டுக் காலமாக ஒடுக்கப்பட்ட - தாழ்த்தப்பட்ட மக்களும் இடம்பெற மாட்டார்களா?

அண்ணல் அம்பேத்கர் பார்ப்பனர்களை எதிர்க்கவில்லையா - அவர்கள் மூலக்கருத்தை மூர்க்கமாக தாக்கவில்லையா? பார்ப்பனர் களை எதிர்த்த வரிசையில் தாழ்த்தப்பட்ட வர்கள் மட்டும்தான் என்று பொருள் கொள்ள முடியுமா?  அதன் பலன் யாரிடம் போய் சேர்ந்தது என்பதை இயக்குநர் இரஞ்சித் போன்றவர்கள்  விளக்குவது நல்லது.

பெரியார் இயக்கத்தால் நடத்தப்பட்ட பார்ப்பன எதிர்ப்புப் போராட்டங்களால் பிரச்சாரத்தால்  தாழ்த்தப் பட்டவர்களுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை என்பதுதான் தோழர் இரஞ்சித்தின் கருத்தா?

வைக்கத்தில் தந்தைபெரியார் நடத்திய போராட்டமும் சேரன்மாதேவியில் நடத்திய போராட்டமும் தாழ்த்தப் பட்டவர்களை நீக்கித்தானா?

வைக்கத்தில் பெரியார் நடத்திய போராட்டம் தாழ்த்தப்பட்டவர்களுக்கான உரிமைப் போராட்டத்தை மகத்தில் நடத்திட அண்ணல் அம்பேத்கருக்குத் தூண்டு கோலாக   இருந்தது என்று அம்பேத்கர் வாழ்க்கை வரலாற்றை எழுதிய தனஞ்செய் கீர் குறிப்பிடவில் லையா? தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தனித் தொகுதி கேட்டுப் போராடி வெற்றி பெற்றார் அண்ணல் அம்பேத்கர்.அதன் பலன் கிடைக்காமல் போனதற்குக் காந்தியார்தான் காரணம். அதனை எதிர்த்து காந்தியார் உண்ணாவிரதம் இருந்தார். அண்ணல் அம் பேத்கருக்கு கடும் நெருக்கடி கொடுக்கப் பட்டது. அய்ரோப்பிய நாடுகளில் சுற்றுப் பயணத்தில் இருந்த தந்தை பெரியார். ஒரு காந்தியாருடைய உயிரை விட ஆறு கோடி தாழ்த்தப்பட்ட மக்களின் உயிர் உங்கள் கைகளில் இருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள் என்று தந்தி கொடுத்தது யாருடைய உரிமைக்காக?

பறையன் பட்டம் போகாமல் உங்களுடைய சூத்திரப் பட்டம் போய்விடும் என்று கருதுவீர்களானால் நீங்கள் வடிகட்டின முட்டாள்களேயாவீர்கள் (குடிஅரசு, 11.10.1931) என்று பிற்படுத்தப்பட்ட மற்றும் முன்னேறிய மேல்ஜாதி மக்களான சூத்திரர்களுக்கு சாட்டை அடி கொடுத்தவர் தந்தை பெரியார் அல்லவா?

தாழ்த்தப்பட்ட குடியிருப்புகளுக்குச் சென்று சுயமரியாதைத் திருமணங்களை நடத்தி வைத்து உணவுண்டு - சூத்திர பஞ்சம மக்கள் என்ற பார்ப்பன வருணா சிரமத்தால் பிளவுண்டு கிடந்த மக்களி டையே  இணைப்புப் பாலத்தை ஏற்படுத் தியது பெரியார் இயக்கம் தானே - ஒரு எடுத்துக்காட்டு

கேள்வி: தந்தை பெரியார் அவர்களோடு தாங்கள் இணைந்து பணியாற்றிய நிகழ்ச்சிகள் பற்றிக் கூறுங்கள்.

பதில்: நான் ஏராளமான சுயமரியாதைத் திருமணங்களுக்கு தலைமை தாங்கி நடத்தி இருக்கிறேன்.  பெரியார் அவர்கள் கலந்து கொண்ட திருமணங்களிலும் கலந்து கொண்டு பேசி இருக்கிறேன்.

சென்னை பெரம்பூரில் பெரியார் தலை மையில் ஒருசுயமரியாதைத் திருமணம் நடைபெற்றது. கடுமையான மழை, தாழ்த்தப்பட்டோர் பகுதி... ஒரே சேறும் சகதியுமாகி விட்டது. திருமணம் முடிந்து சாப்பிட்டுப் போகச் சொன்னார்கள். நான் ஏதோ சமாதானம் சொல்லி சாப்பிடவில்லை. பெரியார் என்ன செய்தார் தெரியுமா? மேலே இருந்த ஓலையைக் கீழே எடுத்துப் போட்டு அப்படியே உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்து விட்டார். பெரியார் எந்தவித ஏற்றத்தாழ்வும் பார்க்க மாட்டார். (நீதிக்கட்சி பவளவிழா மலரில் மீனாம்பாள் சிவராஜ்பேட்டி -1992 பக்கம் 125)

திராவிடர் கழகத்திற்கே பள்ளன் கட்சி, பறையன் கட்சி என்று தானே பெயர் சூட்டப்பட்டது.

தங்களை தாழ்த்தப்பட்டவர்களை விட உயர் வானவர்கள்  என்று மமதை கொண்டிருந்தவர்களின் மண்டையில் அடிக்கும் வண்ணம் பஞ்சமன் என்பதை விட சூத்திரன் என்பது தான் கேவலம், சூத்திரன் என்றால் வேசி மகன்,  பஞ்சமன் என்றால் அவர்கள்தான், அவர்கள் அப்பா அம்மாவிற்கு முறையாக பிறந்தவன் என்று முகத்தில் அடித்துச் சொன்னவர் தந்தை பெரியார். (குடிஅரசு - 16.6.1929)

மனித வாழ்க்கையின் நன்மைகளை உத்தேசித்தும், ஜீவகாருண்யத்தைப் முன் னிட்டும், தேச முன்னேற்றத்துக்காகவும் பொறுத்தும் நம் நாட்டில் பெரும் பகுதியினர் மீது சுமத்தப்பட்டுள்ள தீண்டாமை என்னும் கொடிய தடையை விலக்க பொது ஜனங்களிடையே இடைவிடாது பிரச்சாரம் செய்து அவர்களைக் கண்விழிக்கச் செய்ய வேண்டும் என்று தந்தை பெரியார் அவர்களே இரண்டாவது சென்னை மாகாண தீண்டாமை விலக்கு மாநாட்டில் முன்மொழிந்தார் (குடியரசு 17.2.1929).

ஆண்டாண்டுக் காலமாக தீண்டத் தகாதவர்கள் என்று ஒதுக்கப்பட்ட ஒடுக் கப்பட்ட மக்களின் தீண்டாமை கொடு மையை வெறும் சட்டத்தால் ஒழித்து விட முடியாது -  மக்கள் மத்தியில் சிந்தனை மாற்றத்தை செய்தாக வேண்டுமே. அதன் முன்னணி ஆயுதமாக இருப்பது பிரச்சாரமே அதனை ஒரு நூற்றாண்டு காலமாக செய்து வருவது பெரியார் இயக்கம் இல்லையா? இதுபோல் எந்த மாநிலத்திலாவது பத்தில் ஒன்று நடந்திருக்கிறது என்று சவால் விட்டு கேட்க முடியுமே!

சென்னைத் தீண்டாமை விலக்கு மாநாடு, (10.2.1929)

கள்ளக்குறிச்சி - தென்னார்க்காடு மாவட்ட ஆதிதிராவிடர் மாநாடு (16.6.1929)

சென்னை ஆதிதிராவிடர் மாநாடு (21.7.1929)

இராமநாதபுரம் ஆதிதிராவிடர் மாநாடு (25.8.1929)

திருநெல்வேலி தீண்டாமை விலக்கு மாநாடு (10.6.1931)

சேலம் ஆதிதிராவிடர் மாநாடு (16.5.1931) லால்குடி தாலுகா ஆதிதிராவிடர் மாநாடு (7.6.1931)

திருச்சி ஆதிதிராவிடர் மாநாடு (5.7.1931)

கோவை ஆதிதிராவிடர் மாநாடு (5.7.1931)

தஞ்சை ஜில்லா ஆதிதிராவிடர் மாநாடு (4.7.1931) கோவை ஆதிதிராவிடர் மாநாடு (7.12.1931)

லால்குடி தீண்டப்படாதவர் மாநாடு (7.2.1932)

அருப்புக்கோட்டை தாலுகா தாழ்த்தப் பட்டோர் மூன்றாவது மாநாடு 28.8.1932

லால்குடி தாலுகா ஆதிதிராவிடர் கிறித்துவர் மாநாடு (7.5.1933)

சென்னை தாழ்த்தப்பட்ட கிறித்துவர் மாநாடு (7.8.1933)

தஞ்சை ஜில்லா மூன்றாவது ஆதிதிராவிடர் மாநாடு (9.7.1935)

சீர்காழி ஆதிதிராவிடர் மாநாடு (10.7.1935)

சேலம் ராசிபுரம் ஆதி திராவிடர் மாநாடு (29.9.1935)

திருச்செங்கோடு ஆதிதிராவிடர் மாநாடு (7.3.1936)

பெரியகுளம் தாலுகா தேவேந்திரகுல மாநாடு (3.81936)

சேலம் ஜில்லா ஆதிதிராவிடர் மாநாடு (2.9.1936)

சிதம்பரம் ஆதிதிராவிடர் மாநாடு (6.5.1937)

ஆம்பூர் ஆதிதிராவிடர் மாநாடு (4.7.1937)

திருச்செங்கோடு தாலுகா ஆதிதிராவிடர் மாநாடு (8.7.1937) அருப்புக்கோட்டை தாழ்த்தப்பட்டோர்  மாநாடு 3.1.1938 இப்படியாக அடுக்கிக் கொண்டே போகலாம்.

தீண்டாமை ஒழிப்பு, பொதுவுரிமை, கல்வி வேலைவாய்பில் இட ஒதுக்கீடு - இவற்றை உள்ளடக்கிய தீர்மானங்கள் தான் ஒவ்வொரு மாநாட்டிலும்- பிரச்சாரமோ அடைமழை! அடைமழை!! இவையெல்லாம் வீண் போகவில்லை. ஏய், டேய், போடா, வாடா என்ற சொல் பிர யோகங்கள் புதையுண்டுப் போகவில்லையா? சூத்திரச்சி வந்து விட்டாளா என்று இன்று கேட்க முடியுமா?

பெயருக்குப் பின்னால் ஜாதி வால் தொங்குவது அறவே ஒழிந்து போனது தமிழ்நாட்டில்தான் என்றால் இதற்கு வித்திட்டது பெரியார் இயக்கம் அல்லவா?

நீதிக்கட்சி ஆட்சியில் தானே இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது தாழ்த்தப் பட்டவர்களுக்கு உட்பட.(1928)

" எந்தப் பொது சாலையிலோ, தெருவிலோ, அது எந்தக் கிராமத்திலோ அல்லது நகரத்திலோ இருந்தாலும் அதில் எந்த இனத்தைச் சேர்ந்த மனிதனாய் இருந்தாலும் நடப்பதற்கு உள்ள உரி மையை யாரும் தடுக்க முடியாது என் பதையும், எந்த அரசாங்க அலுவலகமாக இருந்தாலும், அல்லது கிணறு, குளம் போன்றவைகளாய் இருந்தாலும், அல்லது பொது வர்த்தகம் நடைபெறும் இடமாய் இருந்தாலும், இவைகளில் எல்லாம் ஜாதி இந்துக்களுக்கு என்னென்ன உரிமைகள் இருக்கின்றனவோ, அவ்வளவு உரிமை களும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உண்டு என்பதையும் சென்னை அரசாங்கம் ஒப்புக்கொண்டு, அதைத் தீர்மானமாக நிறைவேற்றி, எல்லா மாநகராட்சி, நகராட்சி, பஞ்சாயத்து மற்றும் அரசாங்கத்தில் உள்ள எல்லா இலாகாக்களுக்கும் அனுப்பப் பட்டது (அரசு ஆணை எண் 2660 உள்ளூர் மற்றும் மாநகராட்சி 25.9.1924) 1936 வாக்கில் இந்த வகையில் 9614 பள்ளிகள் வழிக்குக் கொண்டு வரப்பட்டன.

நீதிக்கட்சி ஆட்சியில் பனகல் அரசர் பிரதமராக இருந்த போது கொண்டு வரப்பட்ட ஆணை இது! தாழ்த்தப்பட்டவர்கள் பேருந்துகளில் அனுமதி, பள்ளிகளில் அனுமதியெல்லாம் நீதிக்கட்சி ஆட்சியில் தான். தொழிலாளர் துறை என்பது முழுக்க முழுக்க தாழ்த்தப் பட்டவர்களின் முனற்னேற்றத்திற்கே!

இவையெல்லாம் பழைய கதை என்று சொல்லலாம் - தந்தை பெரியார் அவர்களின் இறுதி மூச்சு அடங்கும் வரை உரிமை மறுக்கப்பட்ட மக்கள் பக்கமே தன் சிந்தனைகளையும், செயல்களையும் அர்ப்பணித்தார். கோயில் கருவறைக்குள்  தாழ்த்தப் பட்டவர்கள் போகக்கூடாதா? அவர்கள் அர்ச்சனை செய்ய மறுப்பது ஏன் என்ற களத்தில் நின்று தானே இறுதி மூச்சையும் துறந்தார். இன்று அது செயல்பாட்டுக்கு வந்து விட்டதே. முதலில் மனிதனுக்குச் சுயமரியா தையை ஊட்டுவது,  மூட நம்பிக்கைகளி லிருந்து விடுதலை செய்து பகுத்தறிவுப் பாதையில் திருப்புவது, எதைக் கொடுத் தாலும் கல்வியைக் ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கொடுக்கக் கூடாது என்ற வர்ணாசிரம கோட்பாடுக் கோட்டையை உடைத்து, கல்வி வேலைவாய்ப்புகளில் உரிய பங்கு பெறுவது என்பது தாழ்த்தப் பட்டவர்களுக்கும் பெரியார் இயக்கத்தின் பங்களிப்பு இல்லாமல் வேறு எங்கிருந்து குதித்தது?- இவை எல்லாம் அதிகார பங்கேற்பதற்கான உந்துதல் இல்லையா?

சென்னை உயர்நீதிமன்றத்தில் தாழ்த்தப் பட்டவர்கள் ஏன் நீதிபதியாக வர வாய்ப் பில்லை என்ற தந்தை பெரியாரின் கேள்விக்கு விடைத்தானே ஒரு ஜஸ்டிஸ் வரதராஜன்.

*தந்தை பெரியாரின் அழைப்பு*

(வகுப்புவாரி உரிமைக்காக தந்தை பெரியார் காங்கிரசை விட்டு வெளியேறுவதற்குக் காரணமான காஞ்சிபுரம் மாநாட்டிற்காக "குடிஅரசு"  இதழில் தந்தை பெரியார் வெளியிட்ட அறிக்கை)

காஞ்சிபுரத்தில், 31 ஆவது ராஜீய மகாநாடு நாளது நவம்பர் மாதம் 21, 22ந் தேதிகளான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னை 'நவசக்தி', ஆசிரியர் ஸ்ரீமான். திரு. வி.கல்யாணசுந்தர முதலியாரவர்கள் அக்ராசனத்தின் கீழ் கூடும்.

அது சமயம் சர்வகக்ஷியார்களும் மடங்கிய பிராமணரல்லாதார் மகாநாடொன்றும் கூடும். பிராமணரல்லாதார் முன்னேற்றத்தில் கரிசனமுள்ள தமிழ்நாட்டுப் பிராமணரல்லாதார் அனைவரும் வந்திருந்து, தங்களது முன்னேற்றத்திற்கான ஒரு திட்டத்தைக் காணவும், அதைச் சரிவர அமுலுக்குக் கொண்டு வரவும் ஏற்பாடு செய்ய வேணுமாய்க் கேட்டுக் கொள்ளுகிறேன்.

இது விஷயத்தில் ஒவ்வொருவரும் தங்கள் ராஜீய அபிப்பிராய பேதங் காரணமாகவாவது, சொந்த அசவுகரியங் காரணமாகவாவது அலக்ஷியமாய்   இருந்துவிடாமல் கண்டிப்பாய் வரவேண்டுமாய் மறுபடியும் வினயத்துடன்  கேட்டுக் கொள்ளுகிறேன்.

தீண்டாமையை ஒழிக்கவேண்டியது பிராமண ரல்லாதாருக்கு மிகவும் முக்கியமானதொரு கடனாகும். ஏனெனில், தீண்டாதார் களின் முன்னேற்றந்தான் பிராமண ரல்லாதார்களின் முன்னேற்றமாகும். தீண்டாதார்களின் துன்பந்தான் பிராமணரல் லாதாரின் துன்பமாகும். தீண்டாமை ஓழிவதன் முலமாய்த்தான் பிராமணரல்லாதார் கடைத் தேறமுடியும். தீண்டாமை ஒழிவதன் மூலமாய்த்தான் நாடு சுயராஜ்யமடையும். ஆதலால், தீண்டாமை விலக்கில் கவலையுள்ளவர்களும், தீண்டாதாரென்று சொல்லப்படுபவரும் அவசியம் காஞ்சிபுரத்திற்கு வந்து அதற்கென்று, ஓர் மகாநாடு கூட்டி காரியத்தில் பலன் தரத்தக்க திட்டங்களைக் காண வேண்டுமாயும் கேட்டுக் கொள்ளுகிறேன்.

ஈ.வெ.ராமசாமி
ஈரோடு, 15.11.1925

தாழ்த்தப்பட்டவர்கள் மீது எந்த அளவு கவலையும், அக்கறையும் கொண்டிருந்தார் என்பதற்கு வேறு எடுத்துக் காட்டும் தேவையோ?

அவர்தானே உச்ச நீதிமன்றத்திற்குள்ளும் நுழைந்த முதல் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நீதிபதியு  கூட! சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரே நேரத்தில் 10 தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நீதிபதிகள் வருவதற்கான கால்கோள் விழாவை நடத்தியது யார்? அது அதிகாரப் பகிர்வின் கீழ் வராதா?

தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த இளவரசன், திவ்யா என்ற பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்ட நிலையில் - தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த நத்தம் பழைய கொண்டாம்பட்டி, அண்ணா நகர், புதிய கொண்டாம்பட்டி, வாழ் தாழ்த்தப்பட்ட மக்களின் குடியிருப்புகளைக் ஜாதி வெறியர்கள் கொளுத்தி சாம்பலாக்கிய நிலையில் (7.11.2012) உடனடியாக பாதிக்கப் பட்ட பகுதிக்கு திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அவர்களின் தலைமையில் கழகப் பொறுப் பாளர்கள் நேரில் சென்று ஆறுதல்  கூறியதுடன் உடனடியாக அங்கு ஜாதி ஒழிப்பு மாநாட்டை அனைத்து கட்சியின ரையும் அழைத்து நடத்தியது திராவிடர் கழகம் தானே. (9.12.2012)

ஓசூர் அருகே சூடைக்காந்தப் பள்ளியைச் சேர்ந்த ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட  நந்திஷ் சுவாதியை பெற்றோர் களே தீவைத்து எரித்துக் கொன்ற கொடூர நிலையில் (13.12.2018) வரும் 30ஆம் தேதி ஜாதி -தீண்டாமை ஒழிப்பு மாநாடு திராவிடர் கழகத்தின் சார்பில் ஓசூரில் நடத்தப்பட உள்ளதே.

இவையெல்லாம் அலட்சியப்படுத்தப்பட வேண்டி யவை என்று கண்டிப்பாக இயக்குநர் தோழர் ரஞ்சித் சொல்ல மாட்டார் என்று நமக்கு உறுதியாகவே தெரியும்.

எல்லாம் முடிந்து விட்டது - சமத்துவமும், சகோதரத்துவமும் கைகோர்த்து விட்டன என்று யாரும் மார்தட்டவில்லை. ஆயிரம் ஆயிரங்காலத்து வருணாசிரமம் நம் மக்களின் மூளையில் விலங்காக பூட்டப்பட்டு விட்டது.

மூளையில் மாட்டப்பட்ட விலங்கை அவ்வளவு எளிதாக விலக்க முடியாது.  அதே நேரத்தில் நாம் தோல்வி அடைந்துவிட்டோம் என்ற தாழ்வு மனப்பான்மை  தேவையில்லை. நடந்திருக்கின்ற மாற்றங்களை  பரிகசிப்பதோ,  உதாசீனப்படுத்துவதோ,  ஆரோக்கிய மானதுமல்ல! மகத்தான உழைப்பும், தியாகமும்,  இந்த மாற்றத்தின் வேரில் குருதியாகக் கொட்டப்பட்டுள்ளது. இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஜாதியைப் பாதுகாக்கும் பகுதியை நீக்க வேண்டும் என்று கூறி, ஜாதியைப் பாது காக்கும் சட்டப் பகுதியை எரித்து மூன்றாண்டு காலம் வரை சிறைத்தண்டனை ஏற்ற 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திராவிடர் கழக கருஞ்சட்டைக் குடும்பத்தினரைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள் இரஞ்சித் அவர்களே!

நமது ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியிலேயே கூட உயர்வு தாழ்வு, மேல் - கீழ்நிலை இருக்கத்தானே செய்கிறது. இட ஒதுக்கீடே எங்களுக்கு வேண்டாம் என்றும், நாங்கள் ஜாதியில்  உசத்தி - தேவேந்திரர் என்று சொல்லு பவர்களும் நம்மிடத்தில் இருக்கத் தானே செய்கிறார்கள்.

இவர்களையும் நாம் எதிர்க்க வேண்டிய கெட்ட வாய்ப்பையும் நினைக்க வேண்டிய தருணம் இது.

அதனால் அண்ணல் அம்பேத்கர் தோற் றுப் போய்விட்டார் என்று விரக்திக்காதை எழுதி விடலாமா?

ஜாதி அமைப்பின் பலமே அண்ணல் அம்பேத்கர் கூறிய  GRADED IN EQUALITY என்பதுதான்; ஏணிப் படிக்கட்டு முறைதான். மனித சமத்துவம் ஊட்டும் கல்விமுறை கொணர்வது,  பகுத்தறிவு, விஞ்ஞான சிந்த னைகளை வளர்ப்பது என்கிற முறையிலே மாற்றங்கள் கொண்டு வர தாழ்த்தப் பட்டவர்களும், பிற்படுத்தப்பட்டவர்களும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும். இருவரும் வலதுகரம், இடதுகரம் என்று அண்ணல் அம்பேத்கர் கூறியதை கவனத்தில் கொள்ள வேண்டும். தந்தை பெரியார் பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் போராட்டத்தைத் தொடங்கி அவர் நினைத்த அளவில் இல்லையென்றாலும் எதிரிகள் மிரளும் அளவிற்கு மகத்தான வெற்றி பெற்றுள்ளார் என்பது தான் வரலாறு.

234 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ள தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரண்டே இரண்டு பார்ப்பனர்கள் தான் உறுப்பினர்கள். இந்த நிலை இந்தியாவில் எந்த மாநிலத்தில் உண்டு - சற்றே எண்ணிப் பார்க்கவேண்டும்! நண்பர்கள் யார், பகைவர்கள் யார்? என்பதைத் தெரிந்து கொள்வதில் கூட இன்னும் தயக்கமும் குழப்பமும் இருப்பது எந்த வகையிலும் நியாயமாகாது!

பெரியார் இயக்கம் பார்ப்பன அல்லாதோர் மற்றும் பார்ப்பனர்களுக் கிடையேயான போராட்டம் என்றுதான் கூறலாம். பார்ப்பனர்களில் இருந்து பார்ப் பனர் அல்லாதாவர்களுக்கு அதிகாரங்கள் வந்த பிறகு அவர்கள் பாரப்பனர்களுக்குத் துணைப் போகும் செயலில் இறங்கி விட்டார்கள். ஜாதியை எதிர்த்துப் போராட முன் வரவில்லை. அதிகாரத்தின் சுவையில் மூழ்கி விட்டார்கள். பார்ப்பனீயத்தை அழிக்க வேண்டுமென்றால் பார்ப்பனிய சிந்தனையை ஒழிக்க வேண்டும். பார்ப்பனர்களின் கைகளில் இருந்து அதிகாரத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டு தாங்கள் பார்ப்பனியக் கொள்கை களைக் கடைப்பிடிக்கத் துவங்கி விட்டனர். பார்ப்பனர்  - பார்ப்பனர் அல்லாதோர் போராட்டம் தற்போது தாழ்த்தப்பட்ட மற்றும் நடுநிலை ஜாதியினருக் கிடையேயான போராட்டமாகி விட்டது. என்றெல்லாம் பொத்தாம் பொதுவாக இயக்குநர் இரஞ்சித் குற்றப் பத்திரிகை படிப்பது சரிதானா?

திமுக சார்பில் ஆட்சிக்கு வந்த கலைஞர் அப்படி என்ன உயர்ந்த ஜாதிப் பட்டியலில் இடம் பெற்றவர்தானா? கதர் சட்டைக்குள் கறுப்புச் சட்டை என்று பார்ப்பனர்களால் அடையாளம் காட்டப்பட்ட காமராசர் அப்படியென்ன பெரிய ஜாதி?

கலைஞரையும் சரி, காமராஜரையும் சரி பார்ப்பனர்கள் ஏற்றுக் கொண்டு விட்டனரா - இன்று வரை கூட? கலைஞர் வீட்டில் தாழ்த்தப்பட்ட சமூக மருமகள்கள் வரவில்லையா? - அது ஒரு நம்பிக்கை ஏற்படுத்தாதா? அரசியல் தேர்தல் பதவி பக்கம் செல்லாத திராவிடர் கழகம் ஜாதி - தீண்டாமை ஒழிப்பு - மூடநம்பிக்கை ஒழிப்புப் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தி தன் ஆயுளையே ஒப்படைத்துக் கொண்டு பணியாற்றுகிறதே!  திராவிடர் கழகத்தினரிடமிருந்து ஸ்டாலின் விலகி இருக்க வேண்டும் என்று பார்ப்பன ஏடுகள் இலவசமாக அறிவுரை சொல்லுவது எந்த அடிப்படையில்?

வெறும் விமர்சனம் செய்யும் இடத்தில் உட்கார்ந்து கொண்டு  எதை வேண்டு மானாலும் பேசலாம். நாங்கள் களத்தில் நிற்பவர்கள். அத்தகையவர்களை நோக்கி களங்கமான கற்களை வீசுவது - யாருக்கோ தான் பயன்படும்.

கல்வி, வேலைவாய்ப்பில் வளர்ச்சி என்பதே ஒரு வகையான அதிகார மேல்நிலைதான். முதல் அமைச்சர் நாற்காலியில் வந்தால் தான் ஏற்கமுடியும் என்பதல்ல. ஒரு பாலகிருஷ்ணன் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக வந்த நிலையில் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை வழக்கில் சமூக நீதியான தீர்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். வழக்கின் கட்டைத் தொட்டுக்கூட பார்க்கவில்லை என்பதற்காக வருத்தப்படலாம் அவ்வளவுதான் - அதற்குமேல் விமர்சிக்கலாமா? விமர்சன கர்த்தாக்கள் கீழே இறங்கி வரட்டும், கைகோக்கட்டும் - வரவேற்கிறோம்.

பெரியார் இயக்கத்தின் பெரும் பணியை கொச்சைப்படுத்துவது, பெரியார் சிலையை உடைப்பவர்களுக்கும், இந்துத்துவா சக்திகளுக்கும்தான் தீனிப் போட உதவும். தோழர் இரஞ்சித் போன்றவர்கள் பெரியார், அம்பேத்கர் சிந்தனைகளை உள்வாங்கி நடைபோடட்டும்.

ஏற்கெனவே தலித் அல்லாதார் கூட்டணியை உண்டாக்க முயற்சித்தவர்கள் கரங்களை வலுப்படுத்தி விடக்கூடாது. தோழர் இரஞ்சித்துக்கு வாழ்த்துகள்.

*நன்றி : "விடுதலை" ஞாயிறு  மலர்  இதழ் 08.12.2018*