முரசொலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முரசொலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 16 டிசம்பர், 2024

வைக்கம் வீரருக்கு விழா அதனால்தான் அவர் பெரியார்!- முரசொலி’ – 11.12.2024

 

விடுதலை நாளேடு
தமிழ்நாடு

வைக்கத்து வீரர் என யாரைச் சொன்னோம்?

‘வை கத்தி!’ தீண்டாமைக் கழுத்தில் என்று
வரிப்புலியாய்க் களம் சென்று வாகை சூடி
வைத்து மக்கள் தந்த பட்டமன்றோ வைக்கம் வீரர்!

– என்று எழுதினார் தமிழினத் தலைவர் கலைஞர்! அத்தகைய பெருமைமிகு பெரியாருக்கு வைக்கத்தில் மாபெரும் நினைவுச் சின்னத்தை எழுப்பி நாளை 12ஆம் தேதியன்று திறந்து வைக்க இருக்கிறார் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

வைக்கத்தில் ஏற்கெனவே இருந்த நினைவகமானது புதுப்பிக்கப்பட்டுள்ளது. கூடுதல் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. அறிவாசான் பெயரில் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதனைத்தான் தமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் அவர்களும், கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன்அவர்களும் இணைந்து திறந்து வைக்கிறார்கள்.

வைக்கம் போராட்டம்

வைக்கம் போராட்டம் என்பது 1924ஆம் ஆண்டு நடைபெற்றது. இது நூற்றாண்டு விழா ஆண்டு. நூற்றாண்டு விழாவைச் சிறப்பாகக்கொண்டாடிய தமிழ்நாடு அரசு, வைக்கத்தில் உள்ள நினைவுச் சின்னத்தைமறுசீரமைப்பு செய்யவும் திட்டமிட்டது. எட்டு கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் முடிவுற்று திறப்பு விழாக் காண்கிறது வைக்கம். வெற்றி விழா காணப்போகிறது பெரியாரின் போராட்டம்.

30 மார்ச் 1924 அன்று வைக்கம் போராட்டம் தொடங்கியது. வைக்கம் மகாதேவர் கோவில் தெருவில் அனைத்து சமூகத்தவரும் நடந்து செல்ல வழிவகை வகுத்த போராட்டம்தான் ‘வைக்கம் போராட்டம்’ ஆகும்.
குன்னப்பி (புலையர்), பாஹுலயன் (தீயர்), கோவிந்த பணிக்கர் (நாயர்) கொண்ட குழுவினர், மாலை அணிவிக்கப்பட்டு முன்னோக்கிச் சென்றனர். அம்மூவரும் காவல் துறையால் கைது செய்யப்பட்டனர். மறுநாள், ஒரு நாயர், இரண்டு ஈழவர் கொண்ட மூவர் குழுவினர் தடைப்பகுதியை அணுகினர். கைது செய்யப்பட்டு திருவனந்தபுரம் சிறைக்கு அனுப்பப்பட்டனர். இச்செய்தியானது காந்தியாருக்கு தந்தி மூலம் தெரிவிக்கப்படுகிறது. போராட்டத்தைச் சிறிது காலம் தள்ளி வைக்கலாம் என்று அவர் தந்தி அனுப்புகிறார். ஆனால் அதனை கே.பி.கேசவ மேனன் ஏற்கவில்லை. கே.பி.கேசவமேனன், டி.கே.மாதவன் ஆகியோர் தடை செய்யப்பட்ட பகுதியை நோக்கி நடந்து சென்று கைதாகினர். ஆறுமாத சிறைத்தண்டனை பெற்றனர்.

இதைத் தொடர்ந்து ஏ.கே.பிள்ளை, கே.வேலாயுத மேனன், கே.கேளப்பன், ஜார்ஜ் ஜோசப், கே.ஜி.நாயர், செபாஸ்டியன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறைத் தண்டனை பெற்றனர். அடுத்து வழிநடத்த தந்தை பெரியாரை அழைக்கிறார்கள். அவர் ஏப்ரல் 13 அன்று வைக்கம் வருகிறார்.

தந்தை பெரியார் தலைமையில்

கோயிலின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் நடந்த போராட்டத்துக்குப் பெரியார் தலைமை வகித்தார். கோவை அய்யாமுத்து உள்ளிட்ட பலரும் தமிழ்நாட்டில் இருந்து வருகிறார்கள். பஞ்சாப் மாநிலத்தில் இருந்து அகாலிகள் வருகிறார்கள். போராட்டம் மிகத் தீவிரமாகிறது. இந்த நிலையில் கேரளாவைச் சேர்ந்தவர்கள் மட்டுமே போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும், மற்ற மாநிலத்தவர் கலந்து கொள்ளக் கூடாது என்றும், மாற்று மதத்தவர் கலந்து கொள்ளக் கூடாது என்றும் காந்தியார் கட்டுப்பாடுகள் விதிக்கிறார். ஆனால் அதனை சத்தியாக்கிரகிகள் ஏற்கவில்லை.

கோட்டயம் மாவட்டத்துக்குள் நுழைய பெரியாருக்கு தடை விதிக்கப் பட்டது. அதை மீறிச் சென்றார், கைது செய்யப்பட்டார். மே 22 ஆம் தேதி கைதான தந்தை பெரியார் ஜூன் 21இல் விடுதலை செய்யப்பட்டார். வெளியில் வந்தவர், மீண்டும் போராடினார். ஜூலை 18 அன்று இரண்டாவது முறையாகக் கைது செய்யப்பட்டார் பெரியார். ஆகஸ்ட் 31இல் விடுதலை செய்யப்பட்டார்.

காந்தியார் வருகை

1925ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9 ஆம் தேதி காந்தியார் வைக்கம் வந்தார். சத்தியாகிரக ஆசிரமத்தில் சத்தியாகிரகிகளைச் சந்தித்துப் பேசினார். உயர் வகுப்பு பிரதிநிதிகளையும் சென்று சந்தித்தார். மூன்று திட்டங்களை வைத்தார். அதனை உயர் வகுப்பினர் ஏற்கவில்லை. உயர் ஜாதிக்குழு அவற்றை நிராகரித்தது. திருவிதாங்கூர் மகாராணியின் பிரதிநிதியையும் காந்தியார் சந்தித்தார். நாராயண குருவையும் காந்தியார் சந்தித்தார். குருவுடனான சந்திப்பின்போது பெரியார், ராஜாஜி, வ.வே.சு. அய்யர் ஆகியோர் உடன் இருந்தனர். ராணியையும் சந்தித்தார் காந்தியார். 1925 மார்ச் 18 தடைகள் நீக்கப்பட்டு சாலைகள் திறந்து விடப்பட்டது. இதுதான் வைக்கம் போராட்டச் சுருக்கம் ஆகும்.

வைக்கம் போராட்ட (1924-1925) காலத்தில் 114 நாட்கள் தந்தை பெரியார் அங்கு இருந்திருக்கிறார். இரண்டு முறை கைது செய்யப்பட்டு மொத்தம்74 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். அனைத்துச் சாலைகளும் திறந்து விடப்பட்டதால், போராட்டங்களை நிறுத்துவது என்று முடிவெடுக் கப்பட்ட 17.11.1925 அன்றும் பெரியார் வைக்கத்தில் இருந்தார். வெற்றி விழா பொதுக்கூட்டத்தில் பங்கெடுத்தார். ஆனாலும் இந்த வெற்றிக்கு தான் மட்டுமே காரணம் என்று சொல்லிக் கொண்டவர் அல்ல பெரியார்!

வெற்றிக்குக் காரணம்

1933ஆம் ஆண்டு கொச்சியில் நடந்த தொழிலாளர் மாநாட்டில் தந்தை பெரியார் பங்கெடுத்தார். அப்போது பெரியாருக்கு முன் பேசிய சிலர், வைக்கம் போராட்டத்தின் வெற்றிக்கு தந்தை பெரியார்தான் காரணம் என்று பேசினார்கள். இறுதியாகப் பேசிய தந்தை பெரியார் சொன்னார்:

“என்னைப் பற்றிப் பேசிய சிலர் வைக்கம் சத்தியாகிரகத்தைப் பற்றிச் சொன்னார்கள். அதை நடத்துவித்ததும், அது வெற்றியாய் முடிவு பெறக் காரணமாய் இருந்ததும் நானே ஆவேன் என்று பேசினார்கள். அதையும் ஒப்புக் கொள்ள முடியாமைக்கு நான் வருந்துகிறேன்.

வைக்கம் சத்தியாகிரகத்தில் பெயரளவுக்கு என் பெயர் அடிபட்டாலும், அதன் உற்சாகமான நடப்புக்கும், வெற்றிக்கும் வாலிப தோழர்களுடைய வீரம் பொருந்திய தியாகமும், சகிப்புத் தன்மையும் கட்டுப்பாடுமே காரணமாகும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.” (‘குடிஅரசு’ – 1.10.1933) என்று பேசினார் பெரியார்.
அதனால்தான் அவர் பெரியார்!

– நன்றி: ‘முரசொலி’ – 11.12.2024

‘‘அதனால்தான் அவர் பெரியார்’’ வைக்கம் வீரருக்கு விழா (2)

தந்தை பெரியார்

அன்றைய காங்கிரசு கமிட்டித் தலைவரான பெரியார், இராஜாஜிக்கு கடிதம் எழுதி வைத்து விட்டுத்தான் வைக்கம் சென்றார். ‘நான் திரும்பி வரும் வரையில் கமிட்டி வேலைகளைப் பார்த்துக் கொள்ளவும்’ என்று சொல்லி விட்டுத் தான் சென்றார். இராஜாஜியும் வழி அனுப்பி வைத்தார். கைது செய்யப்பட்ட பெரியார் சிறையில் சித்திரவதைக்கு உள்ளானதைக் கண்டு, ‘தீரரைத் தமிழ்நாடு போற்றுகிறது’ என்றும் இராஜாஜி அறிக்கை வெளியிட்டார். அவரது தியாகத்தை முதலில் பாராட்டிய இராஜாஜியே, பின்னர் கடுமையாகக் கண்டித்து அவரை தமிழ்நாட்டுக்குத் திரும்பி வரச் சொன்னார். ஆனால் பெரியார் அதனை ஏற்கவில்லை. இறுதி வரை உறுதியாகப் போராடினார். முடிவில் பேச்சுவார்த்தை நடக்கும் போது பெரியாரை கழட்டி விட்டார்கள். முழுப் பெருமையும் அவருக்கு போய்விடக் கூடாது என்பதில் சிலர் எச்சரிக்கையாக இருந்தார்கள். ஆனாலும் வைக்கம்வெற்றி விழா கூட்டத்தை பெரியார், நாகம்மையாரை வைத்தே கேரள சீர்திருத்தவாதிகள் நடத்தினார்கள்.

அப்போது என்ன நடந்தது என்பதை இதோ பெரியாரே சொல்கிறார்…

“திருவிதாங்கூர் ராணியோடு காந்தியார் பேசினார். அப்போது ராணி, ‘நாங்கள் ரோடுகளைத் திறந்துவிட்டு விடுகிறோம். ஆனால், அதைத் திறந்து விட்டவுடன் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் கோயிலுக்குள் போக உரிமை வேண்டும் என்று கேட்டு ரகளை செய்தால் என்ன செய்வது? அதுதான் தயங்குகிறோம்’ என்று கேட்டுள்ளார்.

உடனே காந்தியார், அரசாங்க விடுதியில் தங்கியிருந்த என்னை வந்து சந்தித்தார். ராணி சொன்னதைச் சொல்லி ‘என்ன சொல்லுகிறாய்? இதை ஒப்புக் கொண்டு விடுவது நல்லது’ என்றார். நான் சொன்னேன், “Public ரோடு திறந்து விடுவது சரி! ஆனால், அதை வைத்துக் கொண்டு கோயிலைத் திறந்து விடும்படி கேட்க மாட்டோம் என்று நாம் எப்படி உறுதியளிப்பது? கோயில் பிரவேசம் என்பது காங்கிரசின் இலட்சியமாக இல்லாவிட்டாலும் – எனது இலட்சியம் அதுதானே, கோயிலை எப்படி விட்டுக்கொடுக்க முடியும்? வேண்டுமானால் ராணிக்கு ஒரு வார்த்தை சொல்லுங்கள்; ‘இப்போதைக்கு இது மாதிரி கிளர்ச்சி எதுவும் இருக்காது. கொஞ்ச நாள் அதுபற்றி மக்களுக்கு விளங்கும்படி பிரச்சாரம் செய்து, கலவரத்திற்கு இடமிருக்காது என்று கண்டால்தான் கிளர்ச்சி ஆரம்பிக்கப்படும், என்று சொல்லுங்கள்’ என்று நான் சொன்னேன்.

திங்கள், 27 மே, 2024

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா ஓர் அரிமா நோக்கு-1


பிற இதழிலிருந்து… 

விடுதலை நாளேடு,
Published May 21, 2024

சுயமரியாதை இயக்கத்திற்கு நூற்றாண்டு விழா தொடங்கிவிட்டது. அந்த இயக்கம் எந்த நாளில் தோற்றுவிக்கப்பட்டது என்கிற வினாவுக்கு எம்மைப் பொறுத்தவரை பெரியாரின் குடிஅரசு வாரஏடு தொடங் கப்பட்ட நாளான 2.05.1925அய் தான் சொல்வோம். ஓர் ஏடு இயக்கமாக முடியும் என்பதற்குப் பெரியதொரு எடுத்துக்காட்டு குடி அரசு ஏட்டின் பணிகளே ஆகும். அந்த ஏட்டிற்கும் இது நூற்றாண்டு விழாத் தொடக்கம். குடிஅரசு ஏடு 05.11.1949 ஆம் தேதியிட்ட இதழோடு நிறுத்தப்பட்டுவிட்டது. சுமார் கால் நூற்றாண்டு காலம் நடந்த குடிஅரசு ஏடு பல விவாதங்களை நடத்தி இருக்கிறது. எண்ணற்ற சாதனைகளைப் புரிந்து இருக் கிறது. அதாவது சுய மரியாதை இயக்கம் அவற்றை நிகழ்த்தி இருக்கிறது.

தந்தை பெரியார் பொறுப்பில் தொடங்கிய குடிஅரசு ஏடு மட்டுமல்லாமல் சிறிது காலம் நீதிக்கட்சியின் திராவிடன் ஏட்டையும் அவர் பொறுப்பேற்று நடத் தினார். இதோடு அவர் புரட்சி, ரிவோல்ட், பகுத்தறிவு, ஜஸ்டிசைட், விடுதலை போன்றவற்றையும் நடத்தினார். இவையெல்லாம் சுயமரியாதை இயக்கத்தின் எரியீட்டிகளே ஆகும். இந்த ஒவ்வொரு ஏட்டின் தோற்றத் திற்குப் பின்னும் சுயமரியாதை இயக்கத்தின் வரலாற்று நிகழ்வுகள் பின்னிப் பிணைந்து இருக்கின்றன.

சுயமரியாதை இயக்கத் தொடக்கத்தைப்பற்றி பெரியார் அதன் தொடக்க ஆண்டைக் குறிப்பிடாமல், “சமுதாய தொண்டு செய்கிற ஸ்தாபனத்திற்குச் சுய மரியாதை இயக்கம் என்று ஏன் பெயர் வைக்க வேண்டி வந்தது என்றால் மக்களுக்கு உண்மையை எடுத்துச் சொல்ல வேண்டும். அவர்களின் மனமாற்றத் தன் மையை எடுத்துக்காட்ட வேண்டும் என்பதற்காக முதலில்,‘Self Respect Propaganda Institution’ என்று ஆங்கிலப் பெயரில் ஆரம்பிக்கப்பட்டது” என் கிறார். அவர் ஆற்றிய 15.03.1970 திருச்சி சொற்பொழிவில் இக்கருத்துச் சொல்லப்பட்டு இருக்கிறது.
சிலர் பெரியார் காங்கிரஸிலிருந்து வெளியேறிய நாளையும் சென்னை மாகாண 10ஆவது பார்ப்பனர் அல்லாதார் மாநாட்டின் தீர்மானம் நிறைவேறிய நாளையும் சுயமரியாதை இயக்கம் தோன்றிய நாளாகச் சொல்வர். நாம் (கட்டுரையாளர்) இதனையெல்லாம் ஏற்றுக் கொள்ளவில்லை. பெரியார் தொடங்கிய குடிஅரசு ஏட்டின் முதல் தலையங்கத்திலேயே ‘சுயமரியாதை’ வற்புறுத்தப்படுவதால் நாம் அதனையே சுயமரியாதை இயக்கம் தோன்றிய நாளாகக் கொள் கின்றோம். அவ்வளவே.

சுயமரியாதை இயக்கம் சமய சீர்த்திருத்த இயக்கம் போல் தோன்றி, தன்னை அதன் அடுத்த கட்டத்தில் நாத்திக இயக்கமாய் அது பிரகடனப்படுத்திக் கொண் டது. இந்தப் பிரகடனத்தை வெளியிட தந்தை பெரியார் 47 ஆண்டுகளை எடுத்துக் கொண்டார். இதற்காக யாரும் அதிர்ச்சி அடையத் தேவையில்லை. பெரியார் சிந்தனை வளர்ச்சியின் போக்கும் அதன் ஈவும் அது. இதை விளக்கினால், ‘சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு’ எனும் பெரியார் முழக்கத்தின் உட்பொருளை அறிய லாம். சுயமரியாதைக் கொள்கையைப் பயின்றால் அதனை உணரலாம்.

சுயமரியாதை இயக்கம் இன்றும் திராவிடர் கழகமாக மாபெரும் நிறுவனமாக இயங்கி வருகிறது. இதற்கு இரண்டு கட்டங்கள் உண்டு. முதற்கட்டம் 1925-1944; இரண்டாவது கட்டம் 1944க்குப் பிறகு-அதாவது இன்று வரை, ‘சுயமரியாதை இயக்கம்’ திராவிடர் கழகமாகி விட்டது. ஆனால் ‘சுயமரியாதை’ எனும் சொல்லின் மீது ‘காதலாகி கசிந்துருகிய’வர் பெரியார். ஆகையினால் அவர் ‘The Periyar Self – Respect Propaganda Institution – Tiruchirapalli’  எனும் பெயரில் 1952 இல் அந்நிறுவனத்தை பதிவு செய்து இருக்கிறார். எனவே சுயமரியாதை இயக்கம் சட்டப்படியான பதிவி லும் இருக்கிறது.

சுயமரியாதை இயக்கம் பதிவு குறித்து ஒரு முன்னு ரையே எழுதும் அளவுக்குச் செய்திகள் உண்டு. இந் நிறுவனத்தின் பெயரால்தான் ஏராளமான கொள்கை விளக்க ஏடுகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இந் நிறுவனத்தின் சார்பாகவும் தற்போது கூட்டங்கள், கருத் தரங்குகள், ஆய்வுரைகள், மாநாடுகள் என நடத்தினால் அந்தப்பெயர் இன்னும் விளங்கி வருவதை மக்க ளுக்குஉணர்த்தலாம் என்பது எமது எண்ணம். ‘சுய மரியாதை இயக்கம்’ என்கிற பெயரால், எமக்குத் தெரிய சில சிந்தனையாளர்களால் இருமுறை இவ்வமைப்பு தோற்றுவிக்கப்பட்டு செயல்படாமல் ஆகிவிட்டது என்பதையும் இச்சமயத்தில் நினைவுகூருவது தவறா காது.

இந்திய பூபாகத்தில் எத்தனையோ சீர்திருத்த இயக்கங்கள் தோற்றுவிக்கப்பட்டு இருக்கின்றன. அவை செயல்பட்டும் இருக்கின்றன. இன்று அவை இல்லை. அவற்றுள் சில ஆவணங்களாகவும் வெறுங் கட்டடங்களாகவும், அலுவலகமாகவும், அமைப்புகள் இருந்ததற்கான அடையாளங்களாகவும் இருந்து வருகின்றன. விசாரித்து அறிய வேண்டியவைகளாகவும் உள்ளன. ஆனால் சுயமரியாதை இயக்கம் என்கிற நிறுவனம்-அமைப்பு-ஸ்தாபனம் அவை போன்றதன்று. கொள்கையில், இயங்குவதிலும் அமைப்பில் பெரிதும் மற்ற சீர்த்திருத்த நிறுவனங்களிலிருந்து அடிப்படை அம்சங்களிலேயே சுயமரியாதை இயக்கம் வேறுபாடு உடையதாகும். இதைப் போன்றதொரு அமைப்பை, மற்றொன்றைக் காட்ட முடியாது என்றே நாம் சொல்ல வருகின்றோம்.

சுயமரியாதை இயக்கத்தின் முதற் கட்டத்தில் (1925-1944) அதன் பணிகள் தமிழ்நாட்டை மட்டுமன்று – இந்தியாவையே புரட்டிப்போட்டது. 1935 வரை அதன் வேகம்-பணி அனைத்துத் துறையிலும் ஊடுருவியது. பெரியாரின் குடிஅரசு காந்தியாரையும் காங்கிரசையும் 1927 வரை ஆதரித்தது. பிறகு ஆதரவை முழுமையாக நிறுத்திக் கொண்டது. காந்தியாரையும் காங்கிரசையும் சுயமரியாதை இயக்கம் கடுமையாக விமர்சனம் செய்தது.
நீதிக்கட்சியை அதன் ஒற்றை வரி அரசியல் முழக் கத்திற்காகவும் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்திற்காகவும் சுயமரியாதை இயக்கம் ஆதரித்தது. அந்தக் கட்சி 1926லேயே காணாமல் போயிருக்கும். அது இருக்க வேண்டியதன் அவசியத்தை சுயமரியாதை இயக்கம் தனது வழிகாட்டுதல்கள் மூலம் நீதிக்கட்சியைக் காத்து நின்றது. அதன் தலைவர்கள் சுயமரியாதை இயக்கத்தின் தாலுக்கா, மாவட்ட, மாகாண மாநாடுகளில் பங்கேற்ற னர். உரையாற்றினர். நீதிக்கட்சியும் சுய மரியாதை இயக்கமும் ஒரே அமைப்போ என்று நினைக்கும்படி இருந்தது. ஆனால் அவை இரண்டும் ஒரே அமைப்பு கள்- இல்லை, வெவ்வேறானவை.

1892க்கும் 1925க்கும் இடைப்பட்டட காலத்தில் சென்னை மாகாணத்தில் நிரம்ப ஜாதி சங்கங்கள் தோன்றின. இவற்றின் வளர்ச்சி நீடித்தது. சுயமரியாதை இயக்கக் காலத்தில் இந்த அமைப்புகள், மேலும் வளர்ந் தன. இவ்வமைப்பினர் சுயமரியாதை இயக்கத்தினரை குறிப்பாகப் பெரியாரைப் பேச அழைத்தனர். அந்தந்த வகுப்புக்குரிய தேவைகள் அதிகமாயின. பெரியார் சுயமரியாதை இயக்கத்தின் சார்பில் பேசுகிறபோது அவர்களின் பலம் பலவீனம் ஆகியவற்றை எடுத்துக் கூறி வகுப்பை முன்னேற்றக் கல்வியின் அவசியத்தை எடுத்துரைத்தார். பார்ப்பனரல்லாத அனைத்து வகுப்புக் கூட்டங்கள், மாநாடுகளில் பங்கு வகித்த பெரியார் குடிஅரசிலும் இவற்றைப் பற்றி எழுதினார்.

செய்திகளையும் கருத்துகளையும் வெளியிட்டார். இந்த அமைப்புகள் எல்லாம் ஒன்றுபட வேண்டியதன் அவசியத்தைக் குடிஅரசின் தலையங்கத்தின் மூலம் வலியுறுத்தினார்.
பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதார், தாழ்த்தப்பட் டோர் எனும் பகுப்பைத் திராவிட இயக்கம் உருவாக்க வில்லை. முதலில் இது எங்குத் தொடங்குகிறது என்றால், 1870-1871 ஆண்டு கல்வித் துறை அறிக்கையில் இந்த பகுப்புகள் இடம் பெறத் தொடங்குகின்றன. பார்ப்பனர் கள் ஏனைய இந்துக்கள்(Brahmins.other Hindus). என்றும் 1873-1874இல் பார்ப்பனர்கள் இந்துக்கள் அற்ற (Brahmins, Hindu not Brahmins) என்றும் இடம்பெற்றுள்ளன. இத்தொடர்களின் தாக்கத்தினால் ‘The Madura Country’ எனும் நூலை எழுதிய ஜே.எச்.நெல்சன் அந்த, நூலில் ‘Non-Brahmin’ என்று பார்ப்பனர் அல்லாத மக்களை எழுதினார்.

இது பயன்பாட்டிற்கு வந்தது. இது பிரிட்டிஷ் அரசின் நிர்வாக வசதிக்கும் பார்ப்பனர் அல்லாத வகுப்பாரை ஒன்று திரட்டவும் அரசுக்கும் அமைப்புகளுக்கும் உதவியாயிற்று. மேலும் பார்ப்பனர் வளர்ச்சி மற்ற வகுப்பாரிலிருந்து தனித்தும் ஆளுமை மிக்கதாயும் பிறப்பின் வழி சமூகத்தின் அத்தனை நலன்களை அவர்கள் மட்டுமே அனுபவிக்க உரியவர்கள் என்ற நிலையை மிக அப்பட்டமாக வெளிப்படுத்தின. அப்போது இந்த ‘Non- Brahmin’ என்கிற பார்ப்பனர் அல்லாதார் எனும் சொல் பார்ப்பனர் தவிர்த்த இதர வகுப்பாரை ஒருங்கிணைக்கப் பயன்பட்டது. சுயமரி யாதை இயக்கம் இச்சொல்லைப் பயன்படுத்தி மக்களை முன்னேற்றக் கூடிய வகையில் மாபெரும் தூண்டு கோலாய் இருந்தது.

வட இந்தியாவில் இந்து-முஸ்லிம் வேறுபாடுதான் அரசியலாக இருந்தது. இன்றும் அதே நிலை அங்கே தொடருகிறது. தென்னிந்தியாவில் பார்ப்பனர்-பார்ப் பனர் அல்லாதார் என்பது அரசியலாக இருந்தது. அதற்குக் காரணம் மக்களின் வாழ்நிலைதான்! காங்கிரசிலிருந்து வெளியேறிய பெரியார் அதற்கு எதிராக நீதிக்கட்சியை கொள்கை வழி ஆதரித்தார். சுயமரி யாதை இயக்கத்தை ‘மிக வலுவாக’ எதிர் நிறுத்தினார். அரசியலில் அறிவுரை வழங்குவதிலும் போராட்ட வழியிலும் முன்னின்ற சுயமரியாதை இயக்கத்தை மக்களும் அரசியல் வாணர்களும் பெரிதும் கவனிக்கத் தொடங்கினர்.
சுயமரியாதை இயக்கம் சமூகத்தின் எல்லாத் துறை யினரையும் மிகக் கடுமையாக விமர்சனம் செய்தது.

இந்துமதம், அதன் வர்ணாசிரமம், அதற்கும் மேலான பார்ப்பனரின் ஆதிக்கம் குறித்து காந்தியாரிடம் கலந்துரையாடல் நடத்தினார் பெரியார். அதனால் அவர் நிறைவடையவில்லை. ஆகவே அவர் தம்மை ‘அழிவு வேலைக்காரன்’ என்று பிரகடனப்படுத்திக் கொண்டார். சுயமரியாதை இயக்கத்தைக் கருவியாக்கிக் கொண்டார். களத்தில் இறங்கினார். பார்ப்பனரின் சமூக மேலாண்மையை அப்புறப்படுத்த சுயமரியாதை இயக்கம் பணியாற்றியது. ஆகவே அது பார்ப்பனர் அல்லாதாரின் திருமணங்களில் புரோகிதரை நீக்கிய முறையை அறிமுகப்படுத்தியது. குழந்தைக்குப் பெயர் சூட்டுதல் முதல் மரணம் வரை சுயமரியாதை இயக்கம் ஒரு வழிகட்டுதலை வழங்கியது.

கடவுள், மதம், வேதங்கள், ஸ்மிருதிகள், உபநிடதங்கள், இதிகாசங்கள், புராணங்கள் ஆகியவற்றை மிகக் கடுமையாக விமர் சனம் செய்தது சுயமரியாதை இயக்கம். அவை பார்ப் பனர் அல்லாதாரை அடிமையாக வைத்து இருக்கிறது. சுயசிந்தனை இல்லாமல் ஆக்கியிருக்கிறது என்பதை எடுத்துரைத்தது.
மேலும் பார்ப்பனர் அல்லாதார் ஜாதிப்பெயரைப் போட்டுக் கொள்ளவோ பயன்படுத்தவோ கூடாது. வீட்டு விழாக்களுக்கோ திருமணங்களுக்கோ பார்ப் பனப் புரோகிதர்களை அழைக்கக் கூடாது. தாழ்த்தப் பட்டோருக்குச் சமநிலை வழங்குங்கள், அவர்களைக் கோவிலுக்குள் சென்று வழிபட அனுமதியுங்கள், எல்லா மக்களையும் சாலைகள், கிணறுகள், குளங்கள் ஆகிய வற்றைப் பயன்படுத்த அனுமதியுங்கள் எனச் சுயமரியாதை இயக்கம் குரலெழுப்பியது. அதற்காகப் போராட்டங்களை நடத்தியது.

இதுவன்றி, பஞ்சாங்கம், சோதிடம், இராகுகாலம், எமகண்டம், சகுனம், சடங்கு, பல்லி பலன், விளக்கு வைத்துப் பார்த்தல், வெற்றிலையில் மையிட்டு கணித் தல், பில்லி, சூன்னியம், ஆவேசங் கொண்டு ஆடிக் குறிச் சொல்வது, குச்சி கொண்டு கரம் பார்த்துக் குறி சொல்வது, சடங்குக்காய் மொட்டைப் போடுதல், மீசை எடுத்தல், கணவரை இழந்த பெண்களை சம்பிரதாயம் எனும் பெயரால் கொடுமைகளுக்கு ஆளாக்குதல், மணிக்கட்டில் விதவிதமான கயிறு கட்டுதல், ஜாதியை வெளிப்படுத்த கயிறு கட்டிக் கொள்ளுதல், மந்திரம் சொல்வது-அதன் மூலம் ஏமாற்றுவது என இப்படிச் சமூகத்தில் என்னென்ன அவலங்கள் இருக்கின்றனவோ அவற்றையெல்லாம் பட்டியலிட்டது சுயமரியாதை இயக்கம்.

இதன் மூலம் ஒரு பய உணர்வே வாழ்க் கையில் கிளப்பிவிடப்படுகிறது-ஏமாற்றுக்காரர்கள் பிழைப்ப தற் கான வழிகளே இவை. இவற்றைக் கண்டு மக்கள் அச்சப்படத் தேவையில்லை எனச் சுயமரி யாதை இயக்கம் அவர்களை நெறிப்படுத்தியது.
1928-ஆம் ஆண்டிலிருந்து சுயமரியாதைத் திரு மணங்கள் நடைபெறுகின்றன. இதற்கு நல்ல வர வேற்புக் கிடைத்தது. திருமணங்கள் மற்றும் நீத்தார் வழிபாடுகள் நிகழ்ச்சிகளில் புரோகிதர்கள் நீக்கப் பட்டனர். திருச்சியில் தமிழ்நாடு புரோகிதர் மறுப்புக் கழகம் உருவாக்கப்பட்டது. புதியதோர் சுயமரியாதை உலகம் காண பெரியார் 1927-1928இல் மநு ஸ்மிருதியைக் கொளுத்தினார்.

1942-1944லிலும் இது தொடர்ந்தது. சுயமரியாதைத் திருமணங்கள் குறித்து ‘மெட்ராஸ் மெயில்,’
“சுயமரியாதை இயக்கம் பார்ப்பனர் அல்லாதாரை விழிப்படையைச் செய்து இருக்கிறது. சுயமரியாதை எழுச்சிக் கொள்ளச் செய்துவிட்டது. பார்ப்பனச் சகோதரர்களைப் போலவே அவர்களையும் சமமாக எண்ண வைத்துள்ளது என்பதை எங்கும் காண முடிகிறது. திருமணங்களையும் சடங்குகளையும் பார்ப்பனர்களின் உதவியின்றி பார்ப்பனர் அல்லாதாரைக் கொண்டே செய்து கொள்ளும் நிலையைச் சுயமரியாதை இயக்கம் உருவாக்கிவிட்டது.”
என்று குறிப்பிட்டு இருக்கிறது. இவை 28.12.1926, 02.07.1928, 13.05.1940 எனத் தேதியிட்ட மெயில் நாளேட்டில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. எந்தத் தலைவர்கள் வீட்டுத் திருமண நிகழ்வைச் சுட்டிக்காட்டி இதை மெட்ராஸ் மெயில் குறிப்பிடுகிறது என்பதுதான் முக்கியம்.

– நன்றி: முரசொலி, 20.5.2024

ஞாயிறு, 3 டிசம்பர், 2023

வைக்கம் வீரர் வாழ்க! 'முரசொலி' தலையங்கம் - 1.4.2023

பிற இதழிலிருந்து...

  

வைக்கம் வீரர் வாழ்க! 

'முரசொலி' தலையங்கம் - 1.4.2023

வைக்கம் மகாதேவர் கோவில் தெருவில் அனைத்து சமூகத்தவரும் நடந்து செல்ல வழிவகை வகுத்த போராட்டம் தான் 'வைக்கம் போராட்டம்' ஆகும். 1924 ஆம் ஆண்டு மார்ச் 30 ஆம் நாள் இது தொடங்கியது.

அந்த வெற்றிப் போராட்டம் நடந்து 100 ஆண்டுகள் ஆகின்றன. வரிசையாக கேரளத் தலைவர்கள் அனைவரும் கைதான நிலையில் ஏப்ரல் 13 ஆம் நாள் தந்தை பெரியார் அவர்கள் அங்கு செல்கிறார். இறுதிவரையில் போராடுகிறார். வெற்றி பெறுகிறார். 'வைக்கம் வீரர்' என்று தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர் களால் அப்போதே போற்றப்பட்டார். உண்மை யான பட்டமாக இருந்தால் அது 100 ஆண்டுகள் நிலைக்கும் என்பதன் அடையாளமாக இருக் கிறது ‘வைக்கம் வீரர்' என்ற பட்டம்!

கேரளாவில் 74 நாட்கள் சிறை வைக்கப் பட்டார் பெரியார். அரசியல் கைதிகளுக்குஉரிய மரியாதை தரப்படாமல் கொடுமைப்படுத்தப் பட்டார். இந்தப் போராட்டம் நடந்தபோதே பெரியாரின் தியாகம் போற்றப்பட்டது. "சிறை உடையை அவர் அணிகிறார். இரும்பு விலங்குகள் போடப்பட்டிருக்கிறார். தனிமைச் சிறையில் மற்ற சத்தியாகிரக சிறைவாசிகளி லிருந்து ரொம்ப தூரத்தில் வைக்கப்பட்டி ருக்கிறார். இவ்வளவுக்குப் பிறகும் ஈ.வெ.ராமசாமி மிகுந்த உற்சாகத்துடன் இருக்கிறார் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. அவ ருடன் நன்றாகப் பழகியிருக்கிறேன். அவருடன் பல காலம் சேர்ந்து வாழ்ந்திருக்கிறேன். எனக்கு அவரைத் தெரியும். அவர் ஒரு தளர்வுறாத ஆன்மா. செல்வ வளத்தின் மகிழ்ச்சியையும் பதவிகளையும் வெறுத்து ஒதுக்கித் தள்ளிவிட்டு கடினமான இந்தப் பாதையை அவர் தேர்ந் தெடுத்துள்ளார். பெரும்பாலான நம்மைப் போல அல்ல. உண்மையிலேயே” என்று ‘சுதேச மித்திரன்' இதழில் எழுதி இருக்கிறார் மூதறிஞர் இராஜாஜி அவர்கள்.

கேரளத் தலைவர்களில் ஒருவரான கே.பி.கேசவமேனன் அவர்கள், "ஈ.வெ.ரா. அவர்களுக்கு இருக்கக் கூடிய நாட்டுப்பற்று இந்த நாட்டில் இன்னொருவருக்கு இருக்க முடியுமா? இந்த கேரள நாட்டு மக்கள் அனுபவிக்கிற கொடுமையை நீக்க வேண்டும் என்பதற்காக எவ்வளவு துன்பத்தையும் அனுப விக்கலாம் என்று ஒரு தலைவர் வந்தாரே, அதைப் பார்த்து இந்த மாநிலத்து மக்களுக்கு வெட்கம் ஏற்படவில்லையா? கேரளாவின் முதிர்ந்த அனுபவமிக்க தலைவர்கள் தங்கள் சாய்வு நாற்காலியைத் தூக்கியெறிந்துவிட்டு தங்கள் பங்கைச் செலுத்த இப்போதாவது முன் வர வேண்டாமா?” என்று எழுதினார்.

இந்த வீரமிகு போரில் பெரியாருடன் அவர் மனைவி நாகம்மாளும், தங்கை கண்ணம்மாளும் சேர்ந்து போய் போராடினார்கள். ஒடுக்கப்பட்ட சமூகத்துப் பெண்களை அழைத்துக் கொண்டு அந்தச் சாலையில் நடந்துபோனார் நாகம்மாள். அவரையும் அவருடன் சென்ற அய்ந்து பெண்களையும் தடுத்து நிறுத்திய காவலர்கள், "நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் ஜாதி என்ன என்று சொல்லுங்கள்” என்று கேட்டனர்.

"நாங்கள் ஜாதியைச் சொன்னால் தாழ்த்தப் பட்ட சமூகத்தவர்களை மட்டும் உள்ளே விடாமல் தடுத்து விடுவீர்கள். அதனால் நாங்கள் சொல்ல மாட்டோம்” என்றார் நாகம்மையார். யாரையும் உள்ளே விட மாட்டோம் என்று தடுத்தார்கள் காவலர்கள். “எங்களைக் கைது செய்யுங்கள்” என்றார் நாகம்மாள்.

“உங்களைக் கைது செய்ய ஆட்சியாளர்கள் உத்தரவிடவில்லை, அதனால் கைது செய்ய மாட்டோம்” என்று காவலர்கள் சொன்னார்கள். எனவே சீர்திருத்தக் கருத்துகளை ஊர் ஊராகப் போய் பரப்புரை செய்தார்கள் நாகம்மையாரும் கண்ணம்மாளும். "பலத்த மழை பெய்த போதும் நாகம்மாள் அந்த இடத்தை விட்டுப் போகாமல் நின்று போராடினார்” என்று 'சுதேசமித்திரன்' நாளிதழ் எழுதுகிறது.

“வீட்டின் ஒரு மூலையில் பேடெனப் பதுங்கிக் கிடந்த நம் அம்மையார், தீண்டாமை எனும் பேயரை வெட்டி வீழ்த்துவான்வேண்டி வைக்கம் சத்தியாகிரகப் போரில் புகுந்து சிறை சென்று அரசாங்கத்தை நடுங்கச் செய்ததுடன் அமையாது வாகை மாலையும் சூடினார்” - என்று நாகம்மையாரின் தியாகத்தை எழுதினார் தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர்கள்.

கேரள பல்கலைக் கழகப் பேராசிரியர் டாக்டர் டி.கே.இரவீந்திரன் வைக்கம் போராட்ட ஆவணங்களை மய்யமாக வைத்து மிகப்பெரிய ஆய்வு நூலை எழுதினார். Eight Furlongs of Freedom - என்பது அந்த நூலின் தலைப்பு ஆகும். அதில், “ஈ.வெ.ராமசாமியின் தலைமை இந்த இயக் கத்துக்கு புத்துயிர் ஊட்டியது” என்று எழுதி இருக்கிறார்.

இத்தகைய தியாகத்தால் கிடைத்தது வைக்கம் வெற்றி. கேரளாவைச் சேர்ந்தவர்கள் தவிர மற்றவர்கள் பங்கெடுக்கக் கூடாது, மாற்று மதத்தவர்கள் இதில் பங்கேற்கக் கூடாது என்று பல்வேறு கட்டுப்பாடுகளை காந்தியார் போட் டாலும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று பெரியார் பரப்புரை செய்தது அதன் வெற்றியை உறுதி செய்தது. 'சேர்த்தலை' என்ற இடத்தில் பெரியார் பேசி முடித்ததும், 'நாங்களும் பங்கேற்கிறோம்' என்று 100 பெண்கள் பெயர் கொடுத்தார்கள். அத்தகைய எழுச்சியை உரு வாக்கினார் பெரியார்.

வைக்கம் போராட்ட வெற்றி விழா 29.11.1925இல் நடந்த போது அதில் கலந்து கொள்ள பெரியாருக்கும் நாகம்மையாருக்கும் அழைப்பு வந்திருந்தது. பெரியாரைத் தலைமை வகிக்கச் சொன்னார்கள். ஆனால், தலைமை வகிக்க மறுத்து, வாழ்த்திப் பேசினார் பெரியார். “உரிமையை மறுத்த அரசாங்கமே இப்போது நம்மை கையைப் பிடித்து அழைத்துச் செல்கிறது. இதுதான் சத்தியாகிரகத்துக்கு ஏற்பட்ட மகிமை. பலாத்காரப் போராட்டம் நடத்தியிருந்தால் கூட இந்த வெற்றியை இவ்வளவு சீக்கிரம் பெற்றிருக்க மாட்டோம்' என்று பேசினார் பெரியார். இத்தகைய வெற்றியின் 100ஆம் ஆண்டுத் தொடக்கம் இது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களும் இணைந்து இந்த விழாவை நடத்துவது சிறப்பிலும் பெரும் சிறப்பு. இணைந்து போராடினோம். இணைந்து கொண் டாடுவோம்!

நன்றி: 'முரசொலி'  

செவ்வாய், 18 பிப்ரவரி, 2020

பெரியார் - மரணத்திற்குப் பின்னும் நிலைத்து வாழ்கிறார்; வாழ்வார்!முரசொலி தலையங்கம்

'முரசொலி' தலையங்கம் [28.1.2020]

பெரியார் - மரணத்திற்குப் பின்னும் நிலைத்து வாழ்கிறார்; வாழ்வார்!

1971-ஆம் ஆண்டு பெரியாரின் சேலம் மாநாடு தமிழ்நாட்டின் 'பெரு'மக்களாலும், ஏடுகளாலும் மறுமதிப்பு செய்யப்பட்டு, மறுவாசிப்புக்கு உட்படுத்தப் பட்டன - மறுமதிப்புகள் ஒப்பாய்வுக்குரியன. ஒரு கனவானின் அந்த மாநாட்டு விமர்சனம் அத்தகைய தாய் இருந்தது. அதையொட்டி உத்திரமேரூர் அருகே பெரியாரின் சிலை சேதப்படுத்தப்பட்டு இருக்கிறது. ஒரு நபர் கைதும் செய்யப்பட்டிருக்கிறார். இதற்கு யார் காரணம்? எவர் காரணம்? இதன் பின்புலம் என்ன என்று நாம் தெரியாதவர்கள் இல்லை.

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பெரியாரைத் ‘தங்கத் தேரில் அறிவின் தேக்கம்' என்பார். அவர் ‘இடித்தாலும் வானம், எரிந்தாலும் மின்னல், அடித்தாலும் சூறை அனல்தான், பிடித்தாலும் குன்றான இவ்வீரன் குன்றான் - நிலைகுலையான்' என்றும் சொல்வார். பெரியார், வர்ணாசிரமத்தின் 5, 4 ஆம் படிகளுக்கான மக்களின் வழிகாட்டி, பஞ்சம, சூத்திர ஜாதிகளின் புருஷரில் உத்தமன் அவர்; அதாவது நமக்குப் புரு ஷோத்தமன்! நம் மக்கள், தொகையில் பெரும்பான் மையினராய் இருந்தும் மவுடீகிகளாய் இருக் கிறார்களே, என்று வருந்தியவர் அவர்.

பெரியார் அவர்தம் வாழ்நாளில் கிளர்ச்சி, போராட்டம், சிறை என்பதைத் தவிர வேறெதுவும் அவருக்குத் தெரியாது. பஞ்சம, சூத்திர மக்கள் உயர்வுக்குத் தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர். அதற்காக அவர் அறிமுகம் இல்லாத மக்களுக்குப் பரிந்துரைக் கடிதம் கொடுத்தவர்; உயர்த்தியவர். ஓயாமல் அம்மக்களுக்காகச் சுற்றுப்பயணம் செய் தவர். சொல்லடிகளுக்கு - கல்லடிகளுக்குக் கவலைப் படாதவர். தாக்குதல்களை ஏற்று இறுதி வரை - மரண பரியந்தம் வரை பொது வாழ்வைத் தொடர்ந்தவர்.

கடைசிக் கட்டத்தில் படுக்கையில் கிடந்த போதும் 'ஒரு நிகழ்ச்சிக்குத் தேதியைக் கொடுத்து விட்டேன், அதில் கலந்து கொண்டு விட்டு மருத்துவமனைக்கு திரும்பி விடுகிறேன்' என்று மருத்துவரிடம் அனுமதி கோரியவர். ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொள் ளுங்கள் என வெள்ளைக்கார ஆளுநர் இருமுறை அழைத்தபோதும் மறுத்தவர். அதிகார ஆசை இல் லாதவர். அதிகாரத்தில் இருப்பவரை தம்வயப்படுத்தி மக்களுக்கு உரிமைகளைப் பெற்றுத் தந்தவர்.

இந்திய சமூக அமைப்பில் நாம் எங்கே சிக்கி இருக்கிறோம் என்பதைக் கண்டறிந்து நமக்குச் சொன்னவர். நமக்கு வழங்கப்பட்ட இடத்தையும், அதற்குரிய உண்மையான பொருளையும் எடுத்துக் காட்டியவர். வெகுமக்களாக இருக்கிற நாம் - பொருள் உற்பத்தியில் ஈடுபட்டு உழைக்கிற நம் சக்தியை அறியாத ஆதிக்கவாதிகளுக்கு அதன் உன்னதத்தைத் தமது பரப்புரையின் மூலம் எடுத்தோதி திடுக்கிட வைத்தவர். ஒருகட்டத்தில் ‘வெளியேறு' என்று ஒரு பிரகடனத்தை முன்வைத்தவர்.

நமது எதிரிகள் எத்தகையவர்கள் என்பதை கிரிப்ஸ் தூதுக்குழுவுக்கு எடுத்துரைத்தவர். எங்கள் அரசியல் அதிகாரத்தை உங்கள் பார்வையின் கீழ் வைத்துக் கொண்டு எங்கள் இன மக்களைக் காப்பாற்றுங்கள் எனத் தீர்மானத்தின் மூலம் வெள்ளையனைக் கோரியவர். நமது சுதந்திரத்தை ஆதித்தாய் தீயை காப்பாற்றியது போல காக்க முயன்றவர். நான் ஏதாவது தவறு செய்து இருந்தால் - 'அவிசாரி' போயிருந்தால் உங்களுக்காகச் செய்து இருப்பேனே தவிர எனக்காக அல்ல என்று பகிரங்கமாக சொன்னவர்.

சமூகம் ஏற்றுக் கொண்ட முறைகளும், மரபுகளும் 'சமன்மைக்கு’ எதிராக உள்ளன, ஆகவே, அவற்றை ஏற்றுக் கொள்ள மறுத்து அதனை அழிக்க முற்பட்ட வர் தம்மை 'அழிவு வேலைக்காரன்' என்று தமது பொதுப்பணியை விமர்சனம் செய்தவர். வேத, உபநிடத, இதிகாச, புராண, இலக்கியங்கள் எதுவும் மக்கள் வாழ்க்கைக்கு ஆக்கம் தருவதாக இருக்க வேண்டும். அதன் அறிவுரைகள் உண்மைக்கு மாறா னதாக - மனித குலத்திற்கு எதிராக இருக்குமானால் அவற்றை நிராகரியுங்கள் என்று அறிவைக் கொளுத்தியவர்.

பெரியார் தமது பரப்புரையின் போது இறுதியில் 'நான் சொல்வதாலேயே இதை எல்லாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று இல்லை. நான் சொல் வதைச் சீர்தூக்கி ஆராய்ந்துப் பாருங்கள், உண்மை இருப்பின் ஏற்று கொள்ளுங்கள்' என்றே சொன்னார். பெரியார் ஆட்சி அதிகாரம் இல்லாத ஒரு மனிதராக இருந்தவர், அவருடைய எச்சங்களாகப் பெரியார் இயக்கங்கள் இருக்கின்றன. அவரின் கொள்கையை அவர்கள் பரப்பி வருகிறார்கள், பெரியார் இறந்து 47 ஆண்டுகள் ஆகி விட்டன, ஆனால், அவரின் கொள் கைகளோ அல்லது அவரின் பணிகள் பற்றியோ பேசப்படும்போது ஆதிக்க சக்திகள் துடிதுடித்துப் போகின்றன.

ஏடுகளும், ஊடகங்களும், பேரிரைச்சல் இடு கின்றன. ஒரு குறிப்பிட்ட சாரார்கள் அதிகமாகப் பேசுகிறார்கள். பெரியார் கூறாததை, அவர் இயக்கம் செய்யாததைத் திரித்துச் சொல்கிறார்கள். அதற்குப் புதுப் பொருளைக் கற்பிக்கிறார்கள். வானமே இழந்து விழுமளவுக்கு அவர்கள் பேரொலி எழுப்பினாலும் நம் பக்கம் வெற்றி சங்கநாதம் ஊதப்படுகிறது. போர் முரசம் அதிருவது போல் பஞ்சம, சூத்திர மக்கள் மரித்தும் வாழும் அம்மானுடனுக்காக - அவரின் கொள்கைக்காக அணிவகுத்து நின்று விட்டார்கள்.

படை, இரண்டு அணிகளாக நிற்கின்றன. எள்ளும் பச்சையரிசியுமாக, பளிச் சென்றுத் தெரிகிறது. ஆக, ஒரு கனவான் இப்போது பெரியார் நடத்திய நிகழ்ச்சியைப் பற்றி தப்பும் தவறுமாகப் பேசியதன் விளைவு - எவனோ ஒருவன் உத்திரமேரூர் பக்கம் பெரியாரின் சிலையை உடைத்துள்ளான். அதைச் சில மணி நேரங்களில் சரி செய்துவிட்டார்கள் என்று செய்தி வருகிறது. அந்தக் கனவான் முரசொலி ஏட்டையும் பேசினார். தி.மு.க.காரன் கையில் வைத்திருப்பான் முரசொலி ஏடு - என்று பேசினார். அடுத்து ‘அறிவாளி' வைத்திருக்கும் ஏடொன்றின் பெயரைச் சொன்னதன் விளைவு - முரசொலியை வைத்திருப்பவர் யார் என்று பொருள் ஆகிறது - அந்தக் கனவானின் பேச்சுப்படி! ஆகவே, 'திமிர் வாதக்காரர்களை' தோற்றுவிப்பதற்கு நமது எதிரி களுக்கு ஒரு காரணம் இருக்க வேண்டும்.

நம்மை தஸ்யூக்கள், தாசர்கள், கருப்பர்கள், சூத்திரர்கள், அசுரர்கள் எனத் தொடங்கி 'திராவிடப் பொறுக்கிகள்' வரை ஏசி முடித்து இருக்கிறார்கள். அதாவது ‘இன' இழிவுப்படுத்தி இருந்தார்கள்; படுத்தியும் வருகிறார்கள். பின்னர் ‘ராட்சசர்கள்' வேறு; ‘அசுரர்கள்’ வேறு என்றார்கள். அசுரர்கள் ராட்சசர்கள் அல்ல என்றனர். அசுரர்கள் தேவர்களுக்குப் பகைவர் என்றனர். இவர்கள் இருவகை தேவர்களுக்கும் பகைவர்கள் என்றனர். அதே ஆட்டத்தை ‘அந்தக் காலத்திற்குப்’ பிறகு இந்தக் கனவான் மூலமாக நமது அரசியல் எதிரிகள் ‘இந்தக் காலத்தில்' மீண்டும் தொடங்கி இருக்கின்றனர்,

1971 - தேர்தலின்போது பெரியார் மாநாட்டின் ஊர்வலப் பிரச்சினையைக் கிளப்பினார்கள். இப் போது இன்னும் ஓர் ஆண்டில் தேர்தல் வரப் போகிறது, இப்போதும் அதே முழக்கத்தை அதே பாணியில் கிளப்பி இருக்கிறார்கள். நம்மை தமிழக மக்களிடமிருந்து அந்நியப்படுத்த ஓர் ஆதிக்கச் சக்தி தன் முயற்சியை ஒரு கனவானின் வழி தொடங்கி இருக்கிறது. நம் முன்னோர் வகுத்த சூத்திரம் வேலை செய்ய தொடங்கிவிட்டது. பெரியாரின் பிறந்த நாளைக் கொண்டாடாத ஆட்சியாளர்கள்கூட கனவானை எதிர்க்கிறார்கள்.

நாம் ஜனநாயக யுகத்தில் இருக்கிறோம். நம் ஆசான்மார்கள் ‘அவர்களை'ப் பற்றி எல்லாவற்றை யும் நமக்குக் கற்பித்துச் சென்று இருக்கிறார்கள். முதன்முதலில் மான்கொம்பைக் கூர்தீட்டி எழுத்து களைப் பானை ஓட்டில் எழுதிய இனம் - நம் இனம்! சிந்து முதல் வைகையை தாண்டி ஏழ்பனை நாடு களும் நம் நாடுகளாக இருந்தவை. இந்தப் பரம் பரையில் வந்தவன் முரசொலிதான் வைத்திருப்பான்; அது அவனின் வெற்றி வேற்கை! (வேல் +கை),

பெரியாரும், அவர் கொள்கையும் அவர் மரணத்திற்குப் பின்னும் பேசப்படுகிறது என்பது தொடர் நிகழ்மை; ஏனெனில் ‘சநாதனம்' இருக்கும் வரையும் அந்நிகழ்மை இருந்தே தீரும். ஆகவே பெரியார் மரணத்திற்குப் பின்னும் நிலைத்து வாழ்கிறார்; வாழ்வார்! முரசொலியும் ஒலித்துக் கொண்டே இருக்கும்.

- விடுதலை நாளேடு 28 120