தீண்டாமை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தீண்டாமை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 15 டிசம்பர், 2018

சென்னை அய்.அய்.டி.யில் உணவுக்கூடம் - கைகழுவும் இடங்களிலும் சைவ - அசைவத்துக்குத் தனித்தனி இடங்களாம்! மாணவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு

நவீன 'சேரன்மாதேவி' உருவாகிறதா?




சென்னை, டிச.15 சென்னை அய்.அய்.டி.,யில் உணவுக்கூடம், கைகழுவும் இடங்களில்கூட சைவம் - அசைவம் என்ற பேரில் தனித்தனி இடங்களாம். பெரியார் - அம்பேத்கர் வாசகர் வட்டம் இதுகுறித்துப் புகார் தெரிவித்துள்ளது. மாணவர்கள் கிளர்ச்சிக்கும் தயாராகி விட்டனர்.

சென்னை அய்அய்டியில் ஜாதித் தீண்டாமைக் கொடுமை தலைவிரித்தாடி வருகிறது. பார்ப்பனர்களின் ஆதிக்க வெறியில்மத்தியஅரசின்மனிதவள மேம்பாட்டுத்துறையின்கீழ் இயங்கி வரும் கல்வி நிறுவனத்தில் பேராசிரியர்கள் பணி நியமனங்களில்  முறையாக இடஒதுக்கீடு கொள்கை நடை முறைப்படுத்தப்படுவதில்லை. பேராசிரியர்கள் பணியிடங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான பணியிடங் களில் மண்டல் குழு பரிந்துரையின்படி 27 விழுக்காடு பின்பற்றப்படவில்லை. மத்திய அரசின் கல்வி நிறுவனமே சமூகநீதிக்கு எதிராக  உள்ளது.

உயர்கல்வி பயிலும் பார்ப்பனரல்லாத மாணவர்களுக்கு குறிப்பாக வகுப்பு வாதங்களை எதிர்க்கின்ற பெரியார் -- அம்பேத்கர் வாசிப்பு வட்டத்தின் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் எழுச்சியுடன் எதிர்த்து போராடும் நிலை ஏற்பட்டு வந்துள்ளது. மாட்டிறைச்சி விருந்து நடத்திய மாணவர்கள்மீது தாக்குதல்கள் நடந்துள்ளன. உயர்கல்வி மாணவர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றன.

1960 ஆம் ஆண்டுக்குமுன் அமெரிக்காவின் நிலை...




இந்தியா 58 ஆண்டுகள் பின்தங்கியுள்ளதோ...!


ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பான ஏபிவிபியின் வன்முறைகள் அவ்வப் போது வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

தற்பொழுது உணவுக்கூடத்தில் மரக்கறி உணவு உண்பவர்கள் என்றும், இறைச்சி உணவு உண்பவர்கள் என்றும் பாகுபடுத்திடும் போக்கு திணிக்கப்பட்டு, தீண்டாமை கடைப்பிடிக்கின்ற அவல நிலைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

பெரியார் அம்பேத்கர் வாசிப்பு வட்டம் கண்டனம்

சென்னை அய்.அய்.டி. தொழில்நுட் பக்கல்லூரியில் உணவுக்கூடத்தில் தீண்டாமை பின்பற்றப்படுவதாக பெரியார் அம்பேத்கர் வாசிப்பு வட்டத்தை சேர்ந்த அக்கல்லூரி மாணவர்கள் (APSC)) புகார் தெரிவித்துள்ளனர்.

சென்னை அய்.அய்.டி. தொழில்நுட்பக் கல்லூரியின் உணவுக் கூடத்தில் சைவ உணவு மற்றும் அசைவ உணவு சாப்பிடுபவர்களுக்குதனி நுழைவுவாயிலும் அதேபோல வெங்காயம், பூண்டு, உருளைக்கிழங்கு போன்ற பொருட்களை கலக்காத உணவுகளை சாப்பிடு பவர்களுக்கு வேறொரு வழியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதேபோலசைவ,அசைவஉணவு சாப்பிடுபவர்களுக்குத் தனியாக கைக் கழுவும் இடமும் மற்றும் வாஷ் பேஷி னும் அமைக்கப்பட்டுள்ளதாக பெரியார் அம்பேத்கர் வாசிப்பு வட்டம் புகார் தெரிவித்துள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டில் இதே போன்ற ஒரு திட்டத்தை சென்னை அய்.அய்.டி. நிர்வாகம் அமல்படுத்தியது. அதற்கு மாணவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. குறிப்பாக பெரியார் அம்பேத்கர் வாசிப்பு வட்டம் அதை கடுமையாக எதிர்த்தது. இதனால் அந்த திட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில் மீண்டும் உணவுக் கூடத்தில் தீண்டாமையை கடைப் பிடிக்கும் வகையில் அசைவ, சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு தனித்தனி நுழைவுவாயிலை சென்னை அய்.அய்.டி. நிர்வாகம் ஏற்படுத்தியுள்ளது. இதற்கான அறிவிப்புகளும் உணவுக்கூடத்துக்குச் செல்லும் கதவுகளில் ஒட்டப்பட்டுள்ளது.

உணவு சாப்பிடுபவர்களில் வேறு பாடு பார்ப்பது மட்டுமில்லாமல், சைவ மற்றும் அசைவ உணவுகளை சமைப்பதற்கு தனித்தனி பாத்திரங்கள் பயன்படுத்தப்படுவதாக அங்கு படிக்கும் மாணவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து சென்னை அய்அய்டி நிர் வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் இயங்கிவரும்கல்வி நிறுவனமாகிய மும்பை அய்.அய்.டி.யிலும் இதேபோன்ற அவலநிலை கடந்த ஜனவரியில் ஏற்பட்டு மாணவர்களின் எதிர்ப்பு வெடித்துக்கிளம்பியது.

தற்பொழுது அதே அய்.அய்.டி. நிறுவனத்தின் சென்னைக் கல்லூரியில் மரக்கறி உணவு உண்பவர்கள், இறைச்சி உண்பவர்கள் என்று மாணவர்களிடையே பாகுபாட்டைத் திணித்து, கல்வி பயிலும் ஆய்வு மாணவர்களின் கவனத்தை திசைதிருப்பி, வகுப்புவாதத்தைத் திணிக்கும் முயற்சியில் அய்அய்டி நிறுவனம் இறங்கியுள்ளது வேதனைக்குரியது.

- விடுதலை நாளேடு, 15.12.18

வெள்ளி, 27 ஏப்ரல், 2018

பஞ்சமர்களுக்கு டிக்கட்டு இல்லை. .

இது கமிஷனுக்குத் தெரிய வேண்டாமா?


12.02.1928-குடிஅரசிலிருந்து...

மதுராந்தகத்தில் சமீபத்தில் நடந்த நாடகத்திற்காக போடப்பட்ட ஒரு துண்டு விளம்பரத்தின் அடியில் பஞ்சமர்களுக்கு டிக்கட்டு கொடுக்கப்பட மாட்டாது; பிராம்மண ஸ்திரீகளுக்கு தனி இடம் ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதற்குக் காரணம் அந்த ஊர் சேர்மன் இந்த நிபந்தனையின் பேரிலேயே நாடகக் கொட்டகைக்கு லைசென்சு கொடுத் திருக்கிறாராம் - துண்டு விளம்பரம் நமது பார்வைக்கு வந்திருக்கிறது.

கூத்தாடிப் பெண்களும் கூத்தாடி ஆண்களும் கூத்தாடுகிற இடத்தில்கூட ஆதிதிராவி டர்கள் போகக் கூடாது என்பதும், அங்கு கண்ணே! பெண்ணே! என்று பேசிக் கொண்டு மூக்கையும் காதையும் கன்னத்தையும் கடித்துக் கொண்டு விளையாடு வதைப் பார்க்கப் போகும் பார்ப்பனப் பெண்களுக்கும்கூட தனி இடம் ஒதுக்கித் தருவது என்பதும் பார்ப்பன ஆதிக்கத்தைக் காட்டுகின்றதா இல்லையா என்று கேட்பதோடு இது சைமன் கமிஷனுக்குத் தெரியவேண்டாமா? என்று கேட்கின்றோம்.

சங்கராச்சாரி மடத்து ஸ்ரீமுகம்
12.02.1928- குடிஅரசிலிருந்து... 

பொட்டுக் கட்டுவதை ஒழிக்க வேண்டும் என்று ஸ்ரீமதி முத்துலட்சுமி அம்மாள் அவர்களால் கொண்டுவரப்பட்ட மசோதாவானது இந்து மதத்திற்கு விரோத மென்றும் அதை இந்துக்கள் நிறைவேற்ற விடக் கூடாது என்றும் ஸ்ரீ சங்கராச் சாரியார் மடத்தில் தீர்மானம் செய்து சிஷ்ய கோடிகளுக்கு வினியோகிக்கப்பட்டு இருக் கின்றதாம். இந்த மாதிரியான இந்து மதத்தின் பெருமையைக் கமிஷனுக்குத் தெரிவிக்க வேண்டாமா?

- விடுதலை நாளேடு, 27.4.18


புதன், 18 ஏப்ரல், 2018

பார்ப்பன உத்தியோகஸ்தரது ஜாதித்திமிர்

குடியரசு தரும் அரிய தகவல்கள் - 6

பார்ப்பன உத்தியோகஸ்தரது ஜாதித்திமிர்

கன்னியாகுமரிப் பகுதி திருவாங்கூர் சமஸ்தானத்தில் இருந்தபோது, அங்கு ஜமாபந்தி எனப்படும் வழக்கு விசாரணைக்காக கன்னியாகுமரி வந்தபோது, விசாரணைக்கு வந்த பார்ப்பன மாஜிஸ்திரேட் பொதுவாக ஜமாபந்தி நடத்தப்படும் சத்திரத்தில் நடந்தால் தாழ்த்தப்பட்டோர் வந்துவிடுவார்கள் என்பதால், விசாரணை நடைபெறும் இடத்தை காவல் நிலையத்திற்கு மாற்றினார். இந்தக் கொடுமையைக் கண்டித்து ‘குடிஅரசு’ வெளியிட்ட செய்திக் கட்டுரை.

கன்னியாகுமரி

பத்மனாபபுரம் டிவிஷன் அசிஸ்டண்டும் அடிஷனல் ஜில்லா மாஜிஸ்திரேட்டுமான திரு.எம்.எச்.வீரராகவ அய்யர் ஜமாபந்தி அலுவலாக அன்று கன்னியாகுமாரி முகாம் செய்திருந்தார். அன்று விசாரணைக்கு வைத்திருக்கும் வழக்குகளிலுள்ள கட்சிகள் பலர் காலை 10 மணி தொட்டே சத்திரத்தில் கூட ஆரம்பித்தார்கள்.  ரெவன்யூ உத்தியோகஸ்தர் பலர் சத்திரத்திலுள்ள பல அறைகளில் சுறுசுறுப்பாக வேலை பார்த்துக் கொண்டி ருந்தனர். கோர்ட் சாதாரணமாகக் கூடுகிற அறையில் வழக்கம்போல எல்லா ஏற்பாடுகளு மாயிருந்தன. கடைசியாக மாஜிஸ்திரேட் அவர்களும் வந்தார்கள். திடீரென்று “இன்று தொட்டு கச்சேரி விசாரணை அருகிலுள்ள போலீஸ் டேஷனில் நடைபெறும்’’  என்று ஆணை பிறப்பித்தார். போலீசாரும், சேவகர்களும் மேஜைகளையும், நாற்காலி களையும் கணப்பொழுதில் சத்திரத்திலிருந்து அப்புறப்படுத்தினார்கள். கச்சேரியும் சிறிதும் இடவசதியில்லாத போலீஸ் ஸ்டேஷனில் நடந்தது.

திரு. அய்யருக்கு முன்னிருந்த மாஜிஸ்திரேட்டுகள் வழக்கமாகவே சத்திரத்திலேயே தங்கள் கோர்ட்டை நடத்தி வந்தார்கள். இன்னும் 1 மணி வரையிலும் சத்திரத்திலேதான் கோர்ட் நடைபெறுமென்று எல்லோரும் எண்ணியிருந்தனர். எனவே இந்த விசேஷமான மாற்றத்திற்குக் காரணம் ஏதேனுமிருக்க வேண்டுமென்று நிச்சயித்துக் கொண்டு கோர்ட்டுக்கு வந்திருந்த சில நண்பர்களிடம் விசாரித்துப் பார்த்தேன். உண்மை தெரிந்தது. ஜாதித் திமிர் நிறைந்த இந்தப் பார்ப்பன உத்தியோகஸ்தருக்கு எல்லா வகுப்பினரும் சத்திரத்தில் வருவது பிடிக்க வில்லை. சத்திரம் ஜாதி இந்துக்களுடைய உபயோகத்திற்கென்று கட்டப்பட்டிருக்கிறதாம். (ஆனால் சத்திரத்திலேயே தொங்கவிடப் பட்டிருக்கும் அறிக்கையில் இந்து யாத்திரீகர் களுடைய அவசியத்திற்கென்றுதான் வரையப் பட்டிருக்கின்றது. ஜாதி இந்துக்களுக் கென்றில்லை) தாம் கச்சேரி நடத்துவதால் எல்லோருக்கும் பிரவேசனம் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிடுமேயென்று மனம் புழுங்கினார். தம் கச்சேரியைப் போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றிவிட்டார். இன்று இங்கு வந்திருந்த வக்கீல் நண்பரொருவரிடமிருந்து இது சம்பந்தமாக இன்னொரு செய்தி கிடைத்தது -_ நேற்று சுசீந்திரம் சத்தியாக்கிரக கேஸ்கள் விசாரணைக்கு வந்தன. சர்க்கார் தரப்பு வக்கீல் திரு. சக்கரபாணி அய்யர் அவர்கள் வராததால் நாளது புரட்டாதி 10ஆம் தேதிக்கு ஒத்திபோடப்பட்டன. கோர்டில் வைத்து பிரதிவாதிகளிடம் மாஜிஸ்திரேட் 10ஆம் தேதி கன்னியாகுமரி சத்திரத்தில் விசாரணை நடைபெறுமென்றார். கொஞ்சம் பொறுத்து திடீரென்று “சத்திரத்தில் எல்லோருக்கும் பிரவேசனம் இல்லையே! ஏதானாலும் கன்னியாகுமரிக்கு வாருங்கள். போலீஸ் ஸ்டேஷனிலாவது கச்சேரி கூடலாம்’’ என்று சொன்னாராம்.  நேற்று தாம் செய்து கொண்ட முடிவைத்தான் திரு. அய்யர் நிறைவேற்றி வைத்திருக்கிறார். இந்த நாகரிக காலத்திலும் திரு. அய்யர் புதிதாகத் தீண்டாதாருக்குத் துரோகம் செய்ய முனைகிறார். இவருக்கு முன்வேலை பார்த்த மாஜிஸ்திரேட்டுகள் திரு. பத்மனாபன் தம்பி, திரு. ஆண்டிப் பிள்ளை முதலியவர்கள் இந்தச் சத்திரத்திலேயே கச்சேரி நடத்தி வந்திருக்கிறார்கள். வழக்கத்திற்கு மாறாக நடக்க மாட்டோமென்று நெஞ்சிற் தட்டிக் கொள்ளுகிற அரசாங்கத்தின் உத்தியோஸ்தர் தீண்டாதாருடைய உரிமைக்கு உலைவைக்க மட்டும் வழக்கத்தை மீறத் தயங்குவதில்லை யென்னும் உண்மையை நிரூபித்து விட்டார்.

தாழ்த்தப்பட்ட வகுப்பினர் திருவிதாங்கூரில் இத்தகைய மனப்பான்மையை உடைய பார்ப்பன உத்தியோகஸ்தர்களிடம் எவ்வளவு நியாயம் சம்பாதித்துக் கொள்ளக் கூடுமென்பதை வாசகர்களே அறிந்து வேண்டுவன செய்வார்களாக, ஏழைகளின் சொல் அம்பல மேறுவதில்லை. திருவிதாங்கூர் அரசாங்கம் பார்ப்பனரது அம்பலம்.

‘குடிஅரசு’

- செய்திக்கட்டுரை - 11.10.1931

(தொடரும்...)

- உண்மை இதழ், 16-31.1.18