சட்ட எரிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சட்ட எரிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 12 மே, 2024

அரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தில் ஆதிக்க சக்திகளின் ஆட்டம்!


கி.தளபதிராஜ்

6

ஒப்பாரும் மிக்காரும் இல்லாத உலகத் தலைவர் தந்தை பெரியார், மானுடத்தின் மாண்பு காக்க தன் வாழ்நாள் முழவதும் போராடியவர். தமிழர்களின் சூத்திரப் பட்டம் ஒழிய, இன இழிவு நீங்க தன் வாழ்வையே போராட்டக் களமாக மாற்றிக் கொண்டவர். பெரியார் நடத்திய போராட்டங்களிலேயே முதன்மையானது சட்ட எரிப்புப் போராட்டம். ஜாதியைப் பாதுகாப்பதாகச் சொல்லி இந்திய அரசியல் சட்டத்தை எரித்து சவக்குழிக்கு அனுப்பச் சொன்னார். பல்லாயிரக்கணக்கான கழக தோழர்கள் பல ஆண்டு சிறைப்பட்டு சித்திரவதைப்பட்டதும் - பல தோழர்கள் தங்கள் இன்னுயிரை ஈந்ததும் இந்தப் போராட்டத்தில் தான். சட்ட எரிப்புப் போராட்டத்தின் மூலம் பெரியார் தன் இயக்கத்திற்கு முடிவுரை எழுதுகிறார் என்றார்கள். 

இந்திய அரசியல் சட்டத்தை எரிக்கும் போராட்டத்தை தந்தை பெரியார் அறிவித்தபோது தமிழ்நாட்டில் காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. சட்டத்தை எரித்தால் என்ன தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பது  அந்தச் சட்ட நடைமுறையிலேயே இல்லாதது ஆட்சியாளர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது. பார்ப்பன சக்திகள் படமெடுத்து ஆடின. இந்திய ஒன்றிய அரசும் பார்ப்பன லாபியும் கொடுத்த அழுத்தத்தில் புதிதாக ஒரு சட்டத்தை இயற்ற தமிழ்நாடு அரசு முனைந்தது.

தேசிய அவமதிப்பு தடைச்சட்ட மசோதா விவாதம்

அரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தில் கலந்துகொள்ள இருந்த தோழர்களை சந்திப்பதற்காக பெரியார் சென்னையிலிருந்து ரயில் மூலம் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். பெரியார் தன் சுற்றுப் பயணத்தை தொடங்கிய அதே நாளில் நவம்பர் 11 ஆம் தேதி தேசிய அவமதிப்புத் தடைச்சட்ட மசோதா சட்ட மன்றத்தில் விவாதத்திற்கு வந்தது. 

விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய அண்ணா, "ஜாதியை ஒழிப்பது இந்த அரசாங்கத்தின் கடமை என்று பத்து நாள்களுக்கு முன்பு நேரு அவர்களே சொன்னார்களே! அந்த அடிப்படையில் பெரியாரைச் சந்தித்துப் பேசினால் அவரை விட தனிப்பட்டவர்களிடத்தில் மரியாதை காட்டுகிறவர், அவரை விட தாட்சண்யத்திற்கு கட்டுப்படக் கூடியவர், அவரைவிட எதிரியின் மனப்பான்மையை அறிந்து தன் மனப்போக்கை மாற்றிக் கொள்ளக்கூடிய ஒருவரை நீங்கள் தமிழ்நாட்டிலேயே பார்க்க முடியாது. சட்டங்களைச் செய்வதினால் பலன் இல்லை.

தேசியக்கொடி அவமதிக்கப்பட்டால் அது தன் நெஞ்சில் புண்ணை ஏற்படுத்தும் என்று அமைச்சர் அவர்கள்  கருதுவது போல், பெரியாரை அடக்குவதற்காக நீங்கள் கடுமையான சட்டம் கொண்டு வந்தால் மனம் புண்படுபவர்கள் இன்று தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் இருக்கிறார்கள் என்பதை அமைச்சரவை தயவு செய்து தெரிந்து கொள்ள வேண்டும் என்று நான் பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்! " என்றார்.  (அண்ணா தந்தை பெரியார் அவர்களிடமிருந்து பிரிந்திருந்த காலகட்டம் அது )

தேசிய அவமதிப்பு தடைச்சட்ட மசோதா நிறைவேறியது

தேசிய அவமதிப்புத் தடைச்சட்ட  மசோதா நீண்ட விவாதத்திற்குப் பின் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த புதிய சட்டத்தின் படி, காந்தி பட எரிப்பு, சிலை சேதப்படுத்தல், தேசியக் கொடி எரித்தல், அரசியல் சட்டப்  புத்தகத்தை எரித்தல், வேறு வகையில் அவமானம் இழைத்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவதை தேசிய அவமதிப்பாகக் கருதி மூன்று ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்டும். இச்சட்டப்படிக் கருதப்படும் குற்றங்களைச் செய்ய முயற்சித்தாலும் குற்றம் செய்ததாகவே கருதப்படும். 

சட்டமன்றத்தில் புதிதாக நிறைவேற்றப் பட்ட சட்டத்தை தந்தை பெரியார் அவர்களோ, கழகத் தோழர்களோ ஒரு பொருட்டாகவே கருதவில்லை. 'யானைக்கு முள்வேலி கட்ட முயற்சி!'  'தடியனைக் காப்பாற்றும் பொடியன்!' 'பயமுறுத்தல் சட்டம்!' 'உலகிலேயே எங்கும் கண்டறிய முடியாத நூதனச் சட்டம்!' என்றெல்லாம் தலைப்பிட்டு கிண்டலடித்து எழுதியது விடுதலை! போராட்டத்திற்கான ஆயத்த பணிகளில் தலைவரும் தொண்டர்களும் முன்பை விட தீவிரமாக இறங்கினர். 

பெரியார் கைது

தமிழ்நாடு முழுவதும் நவம்பர் 26 ஆம் தேதி நடைபெறப்போகும் சட்ட எரிப்புப் போராட்டத்திற்கு தோழர்கள் தயாராகி கொண்டிருந்தார்கள். அதற்கு முதல்நாள் 25ஆம் தேதி திருச்சி - சிறீரங்கத்தில் ஒரு பொதுக்கூட்டம். தந்தை பெரியார் சிறப்புரை. அந்தக் கூட்டத்தை முடித்துக் கொண்டு சென்னை புறப்படுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. நவம்பர் 25 மாலை திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையிலிருந்து சிறீரங்கம் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள தயாராகிக் கொண்டிருந்தார் பெரியார். மாலை 6.40 மணிக்கு பெரியார் மாளிகை வந்த காவல்துறை கண்காணிப்பாளர் எஸ்.சோலை அவர்கள் அரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தில் கலந்து கொள்வதை தடுப்பதற்காக தங்களை கைது செய்கிறோம் என்று சொல்லி பெரியாரை வேனில் அழைத்துச்சென்றார்.  சிறீரங்கம் கூட்டத்தில் திருச்சி நகர தலைவர் தி.வீரப்பா தலைமையேற்க கடலூர் வீரமணி (தற்போதைய கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்), வடவேற்குடி திருஞானசம்பந்தம், ஏ.எம்.ஜோசப் ஆகியோர் பேசினர். தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றத் தொடங்கிய போதுதான் பெரியார் கைது செய்யப்பட்ட செய்தி கிடைத்தது. சில மணி நேரங்களில் பெரியார் கைது செய்யப்பட்ட செய்தி தீயாய் பரவ தமிழ்நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

பெரியார் மீண்டும் கைது

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டு ஒரு சில நாட்களில் வெளிவர,  காந்தியார் பட எரிப்பு, நேரு பட எரிப்பு, இந்திய தேசிய யூனியன் பட எரிப்பு என அடுத்தடுத்து போராட்டங்களை அறிவிக்கப் போவதாக எச்சரித்தார் பெரியார். அதனைத்தொடர்ந்து டிசம்பர் 14 ஆம்தேதி பெரியார் மீண்டும் கைது செய்யப்பட்டார். மூன்று குற்றப்பிரிவுகளின் கீழ் ஒவ்வொரு பிரிவிற்கும் 6 மாதங்கள் வீதம் ஒன்றரை ஆண்டு காலம் தண்டனை விதிக்கப்பட்டது

பெரியார் கைது செய்யப்பட்ட நிலையில் அன்னை மணியம்மையார் அவர்கள் கழகப் பொறுப்பாளர்களுடன் சிறைபட்ட கழகத் தோழர்களை தொடர்ந்து சந்தித்து ஆறுதல் கூறி வந்தார். கடலூர் வீரமணி (தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி) அவர்கள் அம்மா அவர்களுடன் தொடர்ந்து பயணித்தார். நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்களும் சிறைச்சாலைகளுக்குச் சென்று தோழர்களை சந்தித்தார். 

மூன்று மாதம் முதல் மூன்று ஆண்டுகள் வரை சிறைக்கொட்டடியில் சித்ரவதை அனுபவித்த தோழர்களின் கதை இரத்தக் கண்ணீர் வரவழைக்கக்  கூடியவை. நோய்வாய்ப்பட்டு சிறையிலேயே மாண்ட தோழர்கள்! குடும்பத்தையே நிர்க்கதியாய் நட்டாற்றில் விட்டு விட்டு சூத்திரப் பட்டம் ஒழிய சிறை சென்ற சிங்கங்கள்! பெற்றோரை, பெற்ற மகனை, உற்றார் உறவினரைப் பறி கொடுத்து அவர்கள் முகத்தைக் கூட பார்க்க முயற்சிக்காமல் வைராக்கியத்துடன் சிறைத் தண்டனையை அனுபவித்த தீரர்கள்! சிறை வாழ்க்கை முடிந்து விடுதலையான சில நாட்களிலேயே நோய்வாய்ப்பட்டு மறைந்து போன மறவர்கள்! என நெஞ்சை உலுக்கும் செய்திகள் சொல்லி மாளாது. திராவிடர் கழகத்தைத் தவிர பெரியார் தொண்டர்களைத் தவிர இப்படியொரு மேன்மையான இயக்கத்தை அகில உலகத்திலும் வேறு எங்கும் காண முடியாது.

சட்ட எரிப்புப் போரில் 

உயிர் நீத்த தோழர்கள்

பட்டுக்கோட்டை இராமசாமி, மயிலாடுதுறை அடுத்த மணல்மேடு வெள்ளைச்சாமி, லால்குடி நன்னிமங்கலம் கணேசன், திருச்சி வரகநேரி சின்னச்சாமி, 14 வயதே நிரம்பிய திருச்சி வாளாடி பெரியசாமி ஆகிய அய்ந்து தோழர்களும் சிறைக் கொடுமை தாங்காது சிறையிலேயே மாண்டனர்.

சிறையில் நோய்வாய்ப்பட்டு கடும் உடல்நலப் பாதிப்புடன் விடுதலை செய்யப் பட்ட மன்னார்குடி காரைகோட்டை இராமய்யன், கோயில் தேவராயன்பேட்டை மு.நடேசன், திருவையாறு மஜீது, இடையாற்று மங்கலம் நாகமுத்து, மயிலாடுதுறை அடுத்த பொறையாறு என்.தங்கவேலன், இடையாற்று மங்கலம் தெய்வானை அம்மாள், மயிலாடுதுறை அடுத்த மாதிரிமங்கலம் ரத்தினம், திண்டிவனம் பூங்கோதை, சென்னை புதுமனைக்குப்பம் எம்.கந்தசாமி, திருச்சி சி.ஆர்.எஸ்.மணி, டி.ஆர்.எஸ்.வாசன், அரியலூர் கண்டராதித்தம் சிங்காரவேலு, மயிலாடுதுறை அருகே மணல்மேடு அப்பாதுரை, கீழ்வாளாடி பிச்சை ஆகியோர் சிறையிலிருந்து வெளிவந்த ஒருசில நாட்களிலேயே தங்கள் இன்னுயிரை இழந்தனர்.

மறைவுற்ற தோழர்களின் உடலைக் கொடுக்க மறுத்த சிறை நிர்வாகம் 

சட்ட எரிப்புப் போராட்டத்தில் முதல் பலியான பட்டுக்கோட்டை இராமசாமி, மணல்மேடு வெள்ளைச்சாமி ஆகியோரின் உடலை ஒப்படைக்க மறுத்தனர் சிறை அதிகாரிகள்! தந்தை பெரியார் அவர்களோ சிறையில்! வெகுண்டெழுந்தார் அன்னை மணியம்மையார்! சிறை நிர்வாகத்தை எதிர்த்து கடும் கண்டனக்குரல் எழுப்பினார். நிர்வாகம் மசியவில்லை. இனி அவர்களிடம் பேசிப் பயனில்லை என்பதை அறிந்து கி.வீரமணி, எம்.ஆர்.ராதா ஆகியோருடன் சென்னை சென்று முதலமைச்சர் காமராஜர் அவர்களை சந்தித்தார். பெரும்போராட்டத்திற்குப் பின் அழுகிய நிலையில் இருவரின் உடல்களும் ஒப்படைக்கப்பட்டது. 

திருச்சி புத்தூர் பெரியார் மாளிகை யிலிருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. அன்னை மணியம்மையார் அவர்கள் ஊர்வலத்தில் நடந்தே சென்றார்கள். கழகத் தோழர்கள் பல பகுதிகளிலிருந்தும் திரண்டு வந்து பெருமளவில் கலந்து கொண்டு இறுதி மரியாதை செலுத்தினர். இயக்க மூத்த முன்னோடிகள் அந்த நிகழ்வை மிகவும் உணர்ச்சி வயப்பட்டு விவரிக்கையில் கேட்போர் உள்ளம் உறைந்து போகும்.

பெரியாரின் ஜாதி ஒழிப்புக் களம் சட்ட எரிப்புப் போராட்டத்தோடு நின்று விட வில்லை. ஜாதி ஒழிப்புக்கென பிரத்தியேக மாநாடுகளை, போராட்டங்களை தொடர்ந்து நடத்தினார்.  கருவறை நுழைவுப் போராட்டத்தை அறிவித்தார். சாகும் தருவாயிலும் சென்னை தியாகராயர் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தனது இறுதிப் பேருரையில் கூட 'உங்களை சூத்திர மக்களாக விட்டு விட்டுச் சாகப் போகிறேனே!' என்று உணர்ச்சி மேலிட உரைத்தார். பெரியார் மறைந்தார்! பெரியார் பணி தொடர்கிறது! பெரியார் பணி முடிப்போம்!

8

மயிலாடுதுறை வட்டத்தில் சட்ட எரிப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைசென்ற தோழர்களுடன் தந்தை பெரியார்


வியாழன், 25 ஜனவரி, 2024

26.11.1957இல் (ஜாதி ஒழிப்பு) அரசமைப்புச் சட்ட எரிப்பு போராட்டத்தில் சிறை சென்றவர்கள் திராவிடர் கழகம், இலால்குடி (கழக) மாவட்டம்


செவ்வாய், 14 நவம்பர், 2023

அகில இந்தியாவையும் உலுக்கிய 'அரசியல் சட்ட' எரிப்புப் போராட்டம்!


கி.தளபதிராஜ்

11

"மனிதன் மனிதனாக வாழ வேண்டும் என்பதே திராவிடர் கழகத்தின் முதன்மையான கொள்கை. அதாவது எந்த மனிதனும் எனக்குக் கீழானவன் அல்ல. அது போலவே எவனும் எனக்கு மேலானவனும் அல்ல. ஒவ்வொரு மனிதனும் சுதந்திர மாகவும் சமத்துவமாகவும் இருக்க வேண்டும் என்பதே அதன் பொருள். இந்த நிலை ஏற்பட ஜாதி ஒழிய வேண்டும்!" என்ற பெரியார், தன் வாழ்நாள் முழுவதும் ஜாதி ஒழிப்புக்காக போராடினார்.

"மனிதனுக்கு மனிதன் தொடக் கூடாது; கண்ணில் படக் கூடாது; தெருவில் நடக்கக் கூடாது; கோயிலுக்குள் போகக் கூடாது; குளத்தில் தண்ணீர் எடுக்கக் கூடாது என்கிறவை போன்ற கொள்கை தாண்டவ மாடும் ஒரு நாட்டை பூகம்பத்தால் அழிக்காமலோ, எரிமலையின் நெருப்புக் குழம்பால் எரிக்காமலோ, சமுத்திரம் பொங்கி முழுகச் செய்யாமலோ, பூமிப் பிளவில் அமிழச் செய்யாமலோ, சண்ட மாருதத்தால் துகளாக்காமலோ விட்டிருப்பதைப் பார்த்த பிறகும் கூட, கடவுள் ஒருவர் இருக்கிறார் என்றும், அவர் நீதிமான் என்றும், சர்வ தயாபரர் என்றும் யாராவது சொல்ல வந்தால் அவர்களை என்னவென்று நினைப்பது?" என்றார்.

காங்கிரசில் இருந்தபோதே 1924ஆம் ஆண்டு கேரள மாநிலம் வைக்கத்தில் தீண்டாமைக் கொடுமைக்கு எதிராக போராடி வெற்றிகண்டார் பெரியார். அந்தப் போராட்டமே இந்தியாவில் நடைபெற்ற முதல் சமூக நீதிப்போராட்டமாக  வரலாற்றாய்வாளர்கள் குறிக்கின்றனர். அதே காலகட்டத்தில் சேரன்மாதேவியில்  வ.வே.சு.அய்யர் நடத்திய குருகுலத்தில் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் பேதப் படுத்தப்பட்டதை அறிந்து அதற்கு எதிராகவும் போர்க்கொடி தூக்கினார் பெரியார். ஜாதியின் பெயரால் உரிமை மறுக்கப்பட்ட பெரும்பான்மை மக்களுக்கு வகுப்புவாரி உரிமை கோரி காங்கிரசை விட்டே வெளியேறினார்.

பிள்ளையார் சிலை உடைப்புப் போராட்டமானாலும், இராமர் பட எரிப்பானாலும், புராண, இதிகாச, மனுதர்ம பிரதிகள் கொளுத்தப்பட்டதானாலும் அனைத்தும் ஜாதி ஒழிப்பிற்காகவே அவரால் நடத்தப்பட்டது. ஜாதி ஒழிய வேண்டுமானால் இந்தக் கடவுள், மதம், சாஸ்திரம், புராணம் ஒழிய வேண்டும்: ஒழிக்கப்பட வேண்டும் என்றார். ஜாதியின் மூல வேரை தேடித் தேடி அழிக்க முயன்ற பெரியார், அது எந்த வடிவில் வந்தாலும் அதை அழித்தொழிப்பதையே தனது தலையாய பணியாய் மேற்கொண்டார்.

1857இல் பார்ப்பனர்களால் தூண்டப்பட்ட சிப்பாய் கலவரம் முடிவுற்ற நிலையில், காங்கிரஸ் கொடுத்த அழுத்தத்தில் 'மத சம்பிரதாய விஷயங்களில் பிரிட்டீஷ் அரசு இனி தலையிடாது!' என விக்டோரியா மகாராணி வாக்குறுதி அளித்தார். இதையே குரங்குப் பிடியாய் பிடித்துக் கொண்ட பார்ப்பனர்களும், காங்கிரசில் இருந்த பிற்போக்கு சக்தியினரும், பல்வேறு சீர்திருத்தத் திட்டங்களுக்குத் தொடர்ந்து முட்டுக்கட்டைப் போட்டு வந்தனர். 'மத விஷயங்களில் தலையிடுவதில்லை!' என்ற கொள்கை, காந்தி - இர்வின் ஒப்பந்தத்திற்குப் பிறகு 1931ஆம் ஆண்டு கராச்சியில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிலும் தலை தூக்கியது.

காங்கிரசிலிருந்து வெளியேறி சுயமரியாதை இயக்கத்தை நடத்தி வந்த பெரியார் தனது குடிஅரசு பத்திரிகையில் பிரிட்டீஷ் அரசின் பார்ப்பன ஆதரவுப் போக்கையும், அதற்குக் காரணமாக விளங்கிய காங்கிரசையும் கடுமையாக விமர்சித்தார்.

1947இல் இந்தியா சுதந்திரம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. "வெள்ளைக்காரனிடமிருந்து ஆட்சி பார்ப்பனர்களின் கைக்கு மாறியிருக்கிறது. வெள்ளையன் வெளியேறிய இந்தியாவில் ஜனநாயகத்தை (Democracy) எதிர்பார்க்க முடியாது. இனி பார்ப்பனநாயகம் (Brahminocracy) தான் கோலோச்சும்!"  என்ற பெரியார் 1947 சுதந்திர நாளை துக்க நாளாக அறிவித்தார். 

பெரியார் எச்சரித்தபடியே அனைத்தும் நடந்தது. 1942 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட கிரிப்ஸ் தூதுக்குழுவைத் தொடர்ந்து 1946இல் இந்தியாவிற்கு வந்த விக்டோரியா மகாராணியின் அமைச்சரவை தூதுக் குழுவும் இந்தியாவிற்கெனத் தனியானதொரு அரசியல் நிர்ணயசபையை உருவாக்கப் பரிந்துரை செய்தது. அதன்படி அரசியல் நிர்ணயசபைக்கான தேர்தல் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்குவதற்காக இராஜேந்திரப்பிரசாத் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில் வரைவுக்குழு உறுப்பினர்களாக டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர், கோபால்சாமி அய்யங்கார், அல்லாடிகிருஷ்ணமூர்த்தி, கே.எம்.முன்ஷி, போன்றோர் இடம் பெற்றனர். 1950 ஜனவரி 26 ஆம் தேதி இந்திய அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது.

இந்திய அரசியல் சட்டம் உருவாகிக் கொண்டிருந்த கால கட்டத்திலேயே, ஜாதிக்கொரு நீதி என்ற இந்து லா வை எடுத்துவிட உறுதி வேண்டும் என்று எழுதினார் பெரியார்.

1931இல் தந்தை பெரியார் அவர்களால் கடும் விமர்சனத்திற்கு உள்ளான கராச்சி பிரஜா உரிமைத் திட்டம் நகல் எடுக்கப்பட்டதுபோல் மீண்டும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 25, 26 பிரிவுகள் அமைந்தன. அதோடு 13, 19, 368, 372(1) ஆகிய பிரிவுகளும் ஜாதி ஆதிக்கத்தை வலியுறுத்துவதாக அமைந்தது கண்டு வெகுண்டார் பெரியார். 

1956ஆம் ஆண்டு மயிலாடுதுறை மணல்மேட்டில் பிப்ரவரி 17ஆம் நாள் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், "சட்டத்தின் மூலம் ஜாதி ஒழிய வேண்டும். சட்டத்தில் உள்ள ஜாதிப் பாகுபாடுகள் எல்லாம் ஒழிந்தால்தான் கொஞ்சம் அயர்வேன். பார்ப்பனத்தி நமக்குப் பெண்டாட்டி மட்டுமல்ல. வைப்பாட்டியாக இருந்தாலும் அவருக்குச் சொத்து கொடுக்க வேண்டும். ஆனால் பாப்பானுக்கு நம் ஜாதிப் பெண் பெண்டாட்டியாக இருந்தால் கூட கணவனிடம் சொத்து கேட்க உரிமை இல்லை. இப்படிப்பட்ட சட்டத்தை வைத்துக் கொண்டு ஜாதியை ஒழிக்க முடியுமா? முதலில் இந்த சட்டத்தை கொளுத்தி விட்டுப் பிறகு நேரு, 'ஜாதி ஒழிய வேண்டும்!' என்று சொன்னால் அதை ஒருவாறு உண்மை என்று நம்பலாம்." என்றார் பெரியார். (குடிஅரசு : 05.03.1956)

13

சட்ட எரிப்பு போராட்டத்திற்கு முன் பெரியார் நடத்தியது 'பிராமணாள்' பெயர் பலகை அழிப்புப் போராட்டம். சென்னையில் நடைபெற்றுவந்த பிராமணாள் பெயர் அழிப்புப் போராட்டம் குறித்து பேசிய பெரியார், "இதுவரை ஜாதியை ஒழிக்க வேண்டுமென்ற முயற்சியில் 700 பேர் வரை சிறைக்குப் போய்விட்டார்கள். இதைப்பற்றி சர்க்காரோ, சம்பந்தப்பட்டவர்களோ ஏதும் கவனித்ததாகத் தெரியவில்லை. இனியும் ஆயிரம் பேர்வரை அனுப்பினாலும் இந்த நிலைதான் என்ற எண்ணம் எனக்கு வந்துவிட்டது. ஆகவே வேறு வழி என்ன என்பதைச் சிந்திக்க வேண்டியவர்களாக நாம் இருக்கிறோம்.

அடுத்த மாதம் 3 ஆம் தேதி தஞ்சையில் திராவிடர் கழக மாநாடு கூடப்போகிறது. அங்கு மிகவும் தீவிரமான தீர்மானங்கள் செய்யப்படலாம். மாநாட்டிற்கு முன்பே நம்மைப் பிடித்து அடைத்தாலும் அடைக்கலாம். அல்லது நமது தீர்மானங்கள் ஏற்பட்டவுடன் அந்தச் சாக்கை வைத்துப் பிடித்தாலும் பிடித்து அடைக்கலாம். எப்படி இருந்தாலும் இன்றைய தேக்க நிலையை 'நாம் ஒரு வெட்டுக் கொடுத்துத்தான் நமது பகடைக்காயை' நகர்த்த வேண்டியவர்களாக இருக்கிறோம்!' என தன் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தினார். (விடுதலை 28.10.1957)

பெரியார் தன் வாழ்நாளில் நடத்திய போராட்டங்களிலேயே மிகக் கடுமையானதும் பல்லாயிரக் கணக்கான தோழர்கள் தங்கள் குடும்பத்தைத் துறந்து மூன்று மாதம் முதல் மூன்றாண்டுகள் வரை சிறைக்கொட்டடியில் சிறைபட்டு சித்திரவதைப்பட்டதும், சிறையிலேயே சிலர் தங்கள் இன்னுயிரை இழந்ததும், விடுதலையான சில நாட்களிலேயே பல தோழர்கள் நோய்வாய்ப்பட்டு மாண்டதுமான மிகப் பெரிய இழப்புக்கு ஆளான ஒப்புவமை இல்லாத ஒரு போராட்டம் தான் அரசியல் சட்ட எரிப்புப் போராட்டம். 

சாகத் துணிவு கொள்ளுங்கள்!

அரசியல் சட்டத்தை எரிக்கும் போராட்டத்தை அறிவித்தபோது பெரியாருக்கு வயதோ 79!  சென்னை வண்ணை நகரில் அக்டோபர் 14 ஆம் தேதி நடைபெற்ற பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் மிக நீண்ட விளக்க உரையாற்றிய பெரியார் தோழர்கள் உயிர் கொடுக்கவும் தயாராக வேண்டும் என்று கர்ஜித்தார்.

தஞ்சை ஸ்பெஷல் மாநாடு

நவம்பர் 3 ஆம் தேதி தஞ்சையில் நடைபெற்ற ஸ்பெஷல் மாநாட்டில், "ஒரு மனிதன், நான் ஏன் பிறவியில் தாழ்ந்தவன்? என்று கேட்கக் கூடாது; கேட்க உரிமை இல்லை என்றால் இது என்ன சுயராஜ்யம்? நீங்கள் சிந்திக்க வேண்டும். எனது 40 ஆண்டு பொது வாழ்க்கையில் ஒருவனைக் கூட உதைத்ததில்லை. குத்தியது இல்லை. ஒருவனுக்குக் கூட ஒரு சிறு காயம் கூட ஏற்படுத்தியதில்லை. கலவரம் இல்லாமல், நாசம் இல்லாமல் எவ்வளவு தூரம் நடக்கலாமோ அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது என்று விரும்பி அதன்படி நடப்பவன். வெட்டாமல் குத்தாமல் காரியம் சாதிக்க முடியாது என்ற நிலைமை வருமானால் சும்மா இருந்தால் நான் மடையன் தானே? வேறு வழி இல்லை என்றால் என்ன செய்வது? நான் ஏன் சூத்திரன்? நான் ஏன் வைப்பாட்டி மகன்? நான் ஏன் கீழ் ஜாதி? இதற்குப் பரிகாரம் வேண்டுமென்றால், குத்துகிறேன் என்றான் - வெட்டுகிறேன் என்றான் என்றால் குத்தாமல் வெட்டாமல் இருப்பதுதான் தப்பு என்றுதானே எண்ண வேண்டியுள்ளது."  என்றார் பெரியார்.

ஜாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டத்தை திருத்த அரசுக்கு 15 நாள் வாய்தா கொடுத்து தஞ்சை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, சட்ட எரிப்புப் போராட்டத்திற்கு கழகத் தோழர்களையும், பொதுமக்களையும் தயார்படுத்தும் பணி முழு வீச்சில் தொடங்கியது. போராட்டத்தில் ஈடுபட ஆர்வமுள்ள தோழர்களின் பட்டியல் விடுதலையில் தினந்தோறும் வெளிவந்தது. போராட்டத்திற்கான அவசியத்தை விளக்கி விடுதலையில் தலையங்கங்களும் கட்டுரைகளும் வந்தவண்ணம் இருந்தது. 

"தோழர்களே! நான், மூன்று ஆண்டுகளுக்கோ, பத்து ஆண்டுகளுக்கோ, நாடு கடத்தலுக்கோ, தூக்குக்கோ மற்றும் பிரிட்டிஷ்காரன் காங்கிரஸ் கிளர்ச்சியின் போது கையாண்ட எந்த விதமான கொடிய தீவிரமான அடக்குமுறைகளை நம் மீதும், கழகத்தின் மீதும் பிரயோகித்தாலும் கூட அவைகளுக்கு பயப்பட்டு என் லட்சியத்தையோ திட்டத்தையோ மாற்றிக் கொள்ளப் போவதில்லை! கழகத் தோழர்களே! தீவிர இலட்சியவாதிகளே! நீங்கள் மூன்று ஆண்டு தண்டனைக்குப் பயந்துவிட வேண்டியதில்லை; பயந்து விடவும் மாட்டீர்கள். சட்டத்தை பார்த்துப் பயந்துவிட்டதாக பேர் வாங்காதீர்கள்! ஆகவே இஷ்டப்பட்டவர்கள் தஞ்சை மாநாட்டு தீர்மானத்தை நிறைவேற்ற பெயர் கொடுங்கள்!" என்ற பெரியாரின் அறிவிப்பு கொட்டை எழுத்தில் விடுதலையில் வெளிவந்தது. (விடுதலை : 8.11.1957)

பெரியார் அவர்கள் தன் மீது போடப்பட்ட வழக்கில் சிறைப்படுத்தப் படுவோம் என அறிந்து அதற்கு முன் போராட்ட வீரரர்களை சந்திக்க ரயிலில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். எரிக்கப்பட வேண்டிய அரசியல் சட்டங்கள் சிறு தொகுப்பாக பல்லாயிரக் கணக்கில் அச்சடித்து பெரியார் பயணத்தின் போது வழங்கப்பட்டது. அதற்கும் காலணா வீதம் விலை நிர்ணயித்திருந்தார். தோழர்கள் போட்டி போட்டுகொண்டு வாங்கிச் சென்றனர். 40,000 ற்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்றுத் தீர்ந்தது. 

சாம்பலை அமைச்சருக்கு அனுப்புங்கள்

"சட்டத்தைக் கொளுத்துங்கள்! சாம்பலை அமைச்சருக்கு அனுப்புங்கள்! சட்டத்தை நிறைவேற்றிவிட்டதன் மூலம் அரசாங்கத்தினர், 'ஜாதியைக் காப்பாற்றித்தான் தீர வேண்டும்!' என நமக்கு சவால் விட்டிருக்கின்றனர். இந்தச் சவாலை எதிர்த்து சட்டத்தைக் கொளுத்தா விட்டால் நீங்கள் மனிதர்கள் தானா? சட்டத்தைக் கொளுத்தி சாம்பலை சட்டம் செய்த அமைச்சருக்கு  அனுப்பி வையுங்கள்! சட்டம் கொளுத்திய மக்கள் இந்த நாட்டில் இருக்கிறார்கள் என்பதை அதன் மூலமாவது கொஞ்சம் தெரிந்து கொள்ளட்டும்!" என்றும் பெரியார் அறிவித்தார்.

சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் பெரியார்

தமிழ்நாடு முழுவதும் சட்ட எரிப்புப் போராட்டம் நடைபெறும் இடங்கள் விடுதலையில் வெளியிடப்பட்டது. சென்னையில் எழும்பூர் பெரியார் திடலில் 26.11.1957 செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறும் திராவிடர் கழக பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்களும் மற்ற கழகத் தோழர்களும் கலந்து கொண்டு பேசுவார்கள். கூட்ட முடிவில் அரசியல் சட்டம் கொளுத்தப்படும் என்ற செய்தி 24 ஆம் தேதி விடுதலையில் வந்தது. 25 ஆம் தேதி மாலை திருச்சியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெரியார் கைது செய்யப்பட்டார். 

இந்திய அரசியல் சட்டம் தீக்கிரை!

திட்டமிட்டபடி இந்திய அரசியல் சட்டம் தமிழ்நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் கொளுத்தப்பட்டது. வயது வித்தியாசமின்றி ஆண்களும், பெண்களும், நிறைமாத கர்ப்பிணிகளும், கைக் குழந்தைகளோடு தாய்மார்களும் குடும்பம் குடும்பமாக பல்லாயிரக் கணக்கில் சட்டத்தை எரிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறையில் இடமின்றி கைது செய்ய இயலாமல் பல இடங்களில் கைதை தவிர்த்தது காவல்துறை. கைது செய்ய மறுக்கப்பட்டவர்கள் அருகருகே வேறு வேறு இடங்களுக்குச் சென்று சட்ட நகலைக் கொளுத்தி மீண்டும் கைதாக முயற்சித்தனர். திருச்சியில் மட்டுமே 3000க்கும் மேற்பட்டோர் சட்டத்தை எரித்தனர்! தமிழ்நாடு காவல் துறை கைது எண்ணிக்கையை எவ்வளவோ குறைக்க முயற்சித்து கடைசியில் 2718 என கணக்கு காண்பித்தது.

சிறையில் நான்காயிரம் தன்மான வீரர்கள் 

இன்று மாலை வந்த கணக்குப்படி திருச்சி மத்திய சிறையில் மட்டும் சட்ட எரிப்பில் கைதான வீரர்கள் 1940 பேர் இருக்கிறார்கள். இது தவிர திருச்சி மாவட்டம் பூராவிலும் உள்ள சப்ஜெயல்களிலும் சட்ட எரிப்பில் கைதானத் தோழர்கள் உள்ளனர். கடலூர், கோவை, வேலூர், சென்னை முதலிய ஊர் மத்திய சிறைகள் ஒவ்வொன்றிலும், ஒவ்வொரு மாவட்ட சப் ஜெயில்களிலும் கருஞ்சட்டை வீரர்கள் உள்ளனர். சரியான கணக்கு வந்தால் சுமார் நாலாயிரம் பேர் இருக்கக்கூடும் (விடுதலை : 4.12.1957)

சட்ட எரிப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்ற வீரர்களின் பட்டியல்  விடுதலையில் பக்கம் பக்கமாக தொடர்ந்து பத்து நாட்களுக்கு மேல் வெளியிடப்பட்டது. அடுத்தடுத்து வந்த கட்டுரைகள் போராட்ட வெற்றியை சிறப்பாக பதிவு செய்தது.

வெள்ளி, 26 நவம்பர், 2021

ஜாதி ஒழிப்புக்கான சட்ட எரிப்பு நாள்

*நவம்பர் 26 (1957):*
*ஜாதி ஒழிப்புக்கான சட்ட எரிப்பு நாள்:*

1957-ஆம் ஆண்டு, நவம்பர் 3-ஆம் தேதி, தஞ்சையில் திராவிடர் கழகத்தின் ஸ்பெஷல் (தனி) மாநாட்டை தந்தை பெரியார் அவர்கள் நடத்தினார்கள். லட்சக்கணக்கில் அந்த மாநாட்டில் மக்கள் கலந்து கொண்டார்கள். இந்திய அரசமைப்புச் சட்டத்தில் மதம், ஜாதிகளைக் காப்பாற்றும் பகுதிகளைச் சுட்டிக் காட்டி, (13(2); 25(1); 26, 29(1)(2) 368) இப்பகுதிகளை அரசு நீக்க 15 நாட்கள் கெடு விதித்து கீழ்கண்டவாறு பெரியார் தீர்மானம் நிறைவேற்றுகிறார்:

“இந்த நாட்டுப் பெருங்குடி மக்களுக்கு அமைப்பு, சாதி, மதம், ஆகியவை காரணமாக நீதி, சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் அளிக்கப்படாததாயிருப்பதால், இவைகளை முன்னிட்டு இந்த அரசியல் சட்டம் இந்நாட்டுப் பெருங்குடி மக்களுக்குக் கேடானது என்று கருதுவதால் இக்கேடுகளுக்கு ஒரு தெளிவான பரிகாரமோ, விளக்கமோ இன்று முதல் 15 நாள் வாய்தாவுக்குள் இந்த அரசாங்கம் மக்களுக்கு அளிக்காவிட்டால், இந்த அரசியல் சட்டத்தை எதிர்த்து ஒழிக்கும் முயற்சியின் அறிகுறியாக 1949 நவம்பர் 26 ஆம் தேதி அன்று அரசியல் சட்ட பிறப்பு நாள் வைத்து இந்த நவம்பர் மாதம் 26 ஆம் தேதியன்று மாலையில் இந்த நாட்டிலுள்ள ஒவ்வொரு பார்ப்பனரல்லாத திராவிடராலும் இச்சட்டம் நெருப்பிலிட்டுக் கொளுத்தத்தக்கது என்று இம்மாநாடு பொது மக்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறது” என்ற தீர்மானத்தை லட்சக்கணக்கான மக்களின் ஆதரவோடு நிறைவேற்றி, அரசிற்கு பகிரங்கமாக அறிவித்தார்.

பெரியாரின் கோரிக்கையை அரசு நிறைவேற்றாத நிலையில், அரசியல் சட்டம் உருவான நவம்பர் 26-ஆம் அதே தேதியன்று 1957-ல் தமிழகம் முழுவதும், பெரியார் தொண்டர்கள் அரசியல் சட்டத்தை கொளுத்தினார்கள். அதற்கு முதல் நாளே, 25.1.1957 அன்று திருச்சியில் தந்தை பெரியார் கைது செய்யப்பட்டு சிறையிலிடப்பட்டார்.

அரசியல் சட்டத்தை எரிப்பவர்களுக்கு எந்த தண்டனையும் அதுவரை இல்லாத நிலையில், அரசியல் சட்டத்தை எரிப்போம் என பெரியார் அறிவித்தவுடன், எரித்தால் மூன்று ஆண்டுகள் சிறை என்று தமிழ்நாட்டில் பெரியார் போராட்ட அறிவிப்புக்குப் பிறகு அன்றைய காங்கிரசு அரசு அவசரமாக சட்டம் கொண்டு வந்தது. (The Tamil Nadu Act No.XIV of 1957 - The Prevention of Insults to National Honour Act, 1957 – 18.11.1957).

ஆனால், சட்டத்தைக் கண்டு பெரியார் தொண்டர்கள் எவரும் பயப்படவில்லை. தமிழ் நாடெங்கும் 10 ஆயிரம் கருஞ்சட்டைத் தோழர்கள் ஜாதியைப் பாதுகாக்கும் அரசமைப்புச் சட்டத்தின் பகுதியைக் கொளுத்தி அதன் சாம்பலை அரசுக்கு அனுப்பி வைத்தனர்.

அரசினால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்கள் மூவாயிரம் பேர்; ஆறு மாதம் முதல் மூன்றாண்டு வரை கடும் தண்டனையை சிரித்த முகத்துடன் ஏற்றுக் கொண்ட அந்த போராளிகள், நீதிமன்றத்தில் எதிர் வழக்காடவில்லை.

தந்தை பெரியார் கூறியபடியே, (விடுதலை 23-11-1957),

"நான் சாதி ஒழிப்புக் கிளர்ச்சிக்காரன். இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஜாதிக்கும், அதை உண்டாக்கிய மதத்துக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. அரசமைப்புச் சட்டம் தமிழர் நலனுக்காக வகுக்கப்படவுமில்லை; அச்சட்டத்தைத் திருத்தக் கூடிய வசதி தமிழர்களுக்கு இல்லை.

ஆதலால் என் எதிர்ப்பைக் காட்டிக் கொள்ளும் அறிகுறியாக இச்சட்டத்தைக் கொளுத்தினேன். இப்படிக் கொளுத்துவதற்கு எனக்கு உரிமையுண்டு. இதனால் எந்த உயிருக்கும், எந்தப் பொருளுக்கும் சேதமில்லை. ஆதலால் நான் குற்றவாளியல்ல. இந்த நீதிமன்ற நடவடிக்கையில் நான் கலந்து கொள்ள விரும்பவில்லை. நான் எதிர்-வழக்காட விரும்பவில்லை. நான் குற்றவாளி என்று கருதப்பட்டால் அதற்குரிய தண்டனையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளத் தயாராயிருக்கிறேன்."

என பெருமிதத்துடன் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தனர். சிறை புகுந்தனர்.

மன்னிப்பு கேட்டால் விடுதலை தருவதாக சொல்லியும், சவர்க்கார் போல மன்னிப்பு கடிதமெல்லாம் தந்து விடுதலையாகவில்லை. சிறுவர், பெண்கள், முதியவர்கள் என அனைவரும் தண்டனை காலத்தை முழுவதுமாக அனுபவித்தனர்.

*சிறைக்குள்ளேயே அய்ந்து தோழர்கள் மரணமடைந்தனர்; விடுதலையான ஒரு மாதத்துக்குள்ளேயே பல தோழர்கள் மரணத்தை தழுவினர்; ஜாதி ஒழிப்புப் போராட்டத்தில் பெரியார் இயக்கம் கொடுத்த களப்பலி 18 பேர்!*

ஜாதி ஒழிப்புக்காக இந்திய வரலாற்றில் பெரியாரும் அவர்தம் இயக்கமும் நடத்திய போராட்டத்திற்கு இணையாக எவரும் நடத்திடவும் இல்லை; இத்தகைய எண்ணிக்கையில் சிறை தண்டனை பெற்றதும் இல்லை; நீதிமன்றத்தில் துணிவுடன் அறிக்கை கொடுத்ததும் இல்லை.

இத்தகைய நெஞ்சுரத்தோடு இந்திய வரலாற்றில் போராட்டத்தில் ஈடுபட்ட இயக்கம், பெரியார் இயக்கத்தைத் தவிர வேறு எந்த இயக்கமும் இல்லை என்பதை இன்றைய தலைமுறை அறிந்து கொள்ள வேண்டும்.

இன்றைக்கு சாதி நெருப்பை சாதிவெறியை தூண்டுகிறவர்களை, அடியாள் வேலைக்கு வா என தைரியமாக அழைக்க துணிகிறவர்களை இனங்கண்டு எதிர்க்கவேண்டும்; புறக்கணிக்கவேண்டும்.

1957 நவம்பர் 26-ல் ஜாதி ஒழிப்புப் போரில் ஈடுபட்ட அந்த போராளிகளின் தியாகத்தைப் போற்றி, ஜாதி ஒழிப்புப் போராட்டத்தை முன்னெடுக்க இன்றைய நாளில் உறுதி ஏற்போம்.

#ஜாதிஒழிப்புசட்டஎரிப்புநாள் #நவம்பர்26

kudanthaikaruna: https://www.blogger.com/blogger.g…

G.Karunanidhy

வியாழன், 29 நவம்பர், 2018

சட்ட எரிப்பு - ஒரு சரித்திரக் காவியம் (3)

"திராவிட இயக்கமும், கம்யூனிஸ்டும் இணைந்து ஜாதி, மதவாத சக்திகளை முறியடிப்போம்!"


கலி. பூங்குன்றன்ரம்




ஜாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பகுதிகளைக் கொளுத்தும் போராட்டம் தந்தை பெரியார் கட்டளைப்படி 1957 நவம்பர் 26 அன்று நடைபெற்ற நாளை நினைவு கூரும் வகையில் சென்னையில் பெரியார் திடல் - நடிகவேள் எம்.ஆர். இராதா மன்றத்தில்  ஜாதி - தீண்டாமை ஒழிப்பு மாநாடாக நடைபெற்றது. மாநாட்டில் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தோழர் இரா. முத்தரசன் பங்கு கொண்டு சிறப்பான கருத்துகளை எடுத்து வைத்தார். அவ்வுரையில் மின்னிய சிந்தனை முத்துகள் சில.

தோழர் இரா. முத்தரசன் பெரியார் திடலில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் வரலாற்றுச் சிறப்புடன் - பின்னணி யுடன் நடைபெற்று வருகின்றன.

வேறு யாரும் சிந்திக்காதவற்றை முன்னிலைப் படுத்தி நடைபெறும் நிகழ்ச்சிகளாக அவை அமைகின்றன. எவ்வளவோ நாகரிகம், நவீனங்கள் எல்லாம் பேசப்படுகின்றன. அப்படிப்பட்ட ஒரு கால கட்டத்தில் ஆணவக் கொலைகளும் இன்னொரு பக்கத்தில் நடந்துகொண்டு தானிருக்கின்றன - அப்படியென்றால் நாம் பெருமைப்பட்டுக் கொள் ளும் அந்த நாகரிகமும், நவீனமும் எத்தகையது? பாராட்டத்தக்கதுதானா என்ற வினாவை எழுப் பினார் அந்தப் பாட்டாளி இயக்கத் தோழர்.

எந்தக் காலத்திலோ, யார் சூழ்ச்சியாலோ உருவாக்கப்பட்ட இந்த ஜாதி இன்னும் உயிர் வாழ்வது வெட்கக் கேடு.  இதிகாசங்களையும், வேதங்களையும் பெருமையாகப் பேசுகிறோம். உண்மையிலே பெருமைப்பட அவற்றில் என்ன இருக்கிறது என்பதை தந்தை பெரியார் ஒரு முக் கால் நூற்றாண்டுக் காலம் எடுத்துக் கூறியிருக்கிறார்.

எடுத்துக்காட்டாகக் கீதையையே எடுத்துக் கொள்வோம். போர்க் களத்தில் நிற்கும் அர்ஜுனன் போர் செய்யத் தயங்குகிறான். என் எதிரே உற்றார், உறவினர்கள் இருக்கிறார்கள் அவர்கள் மறைந்து விடுவார்கள் என்பதோடு அவன் நிற்கவில்லை.  போர் செய்யத் தயங்குவதற்கு அர்ஜூனன் கூறும் காரணங்கள் என்னென்ன?

யுத்தம் செய்யும்போது ஆட வர்கள் மரணம் அடைவார்கள். அதனால் ஏராளமான பெண்கள், விதவையாகி விடுவார்கள். இதனால் வருணக் கலப்பு ஏற்பட்டு விடும் - குல தர்மம் அழிந்து விடும் என்று அர் ஜுனன் சொல்லுவதாகக் கீதை சொல்லுவதை தோழர் முத்த ரசன் எடுத்துக் கூறினார்.

கீதை என்பதே வருணக் காப்பு நூல்தானே!

"நான்கு வருணங்கள் என் னால் உண்டாக்கப்பட்டவை. அவரவர்களுக்குரிய கருமங்களை அவரவர் மீறாமல் செய்ய வேண்டும் அதனை மாற்றிச் செயல்பட வைக்க அந்த வருண தரும உற்பத்தியாளனாகிய என்னால்கூட முடியாது" (கீதை அத்தியாயம் 4 - சுலோகம் 13).

காந்தியாரைப் படுகொலை செய்த நாதுராம் கோட்சேகூட இந்தக் கீதையின் சுலோகங்களை எடுத்துக் கூறித்தான் தனது செயலுக்கு 'நியாய தர்மம்' கற்பித்தான்.

பஞ்சாப் உயர்நீதிமன்றத்தின் மேனாள் நீதிபதி ஜி.டி. கோஸ்லா "மகாத்மாவின் கொலை" (The Murder of Mahatma) என்ற நூலில் குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

"கோட்சே பகவத் கீதையைப் படித்திருந்தார்; அதன் பெரும்பாலான சுலோகங்களை மனப் பாடமாகப் படித்திருந்தார். நல்ல குறிக்கோளை அடைவதற்காகச்  செய்யப்படுகின்ற வன்செயல் களை நியாயப்படுத்துவதற்கு அவற்றை மேற் கோளாகக் காட்டுவதில் அவர் விருப்பம் கொண்டி ருந்தார்" (பக்கம் 274) என்று குறிப்பிட்டுள்ளார்.

இவர்களின் கீதை ஒரு மகாத்மாவையே கொலை செய்தது. தோழர் இரா. முத்தரசன் அவர்களின் உரை இதனைத்தான் உள்ளடக்கமாகக் கொண்டதாக அமைந்திருந்தது.

2018இலும் ஜாதி தீண்டாமை ஒழிப்பைப் பற்றிப் பேச வேண்டிய அவல நிலையை நொந்துகொண்ட தோழர் முத்தரசன் அவர்கள் இந்தப் பிறவிக் கொடுமையை ஒழித்துக் கட்ட கம்யூனிஸ்டுகளும், திராவிடர் கழகமும், திராவிட இயக்கமும் ஒன்று பட்டுப் போராட வேண்டும் - இந்த கைகோர்ப்பு வலிமையாகத் தொடர வேண்டும் என்ற கருத்தை முத்தாய்ப்பாக வைத்தபோது பார்வையாளர்கள் மத்தியில் பலத்த கரஒலி.

1952 பொதுத் தேர்தலில் தந்தை பெரியார் கம்யூனிஸ்டு கட்சியை ஆதரித்தார். நல்ல வெற் றியும் பெற்றது - ஆட்சி அமைக்க வாய்ப்பும்கூட இருந்தது. ஆனால் சூழ்ச்சிகள் காரணமாக அந்த வாய்ப்புப் பறி போனதையும் நினைவுப்படுத்திய தோழர் முத்தரசன் அவர்கள் மீண்டும்  நம்மிடையே ஒருங்கிணைப்புத் தொடர வேண்டும் என்று கூறி நவம்பர் 26  சட்ட எரிப்புப் போராட்டத்தில் ஈடு பட்டு வீர மரணம் அடைந்த தோழர்களுக்கு இந் தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் சார்பில் வீர வணக் கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

தோழர் கே. பாலகிருஷ்ணன்

இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் மாநில செயலாளர் தோழர் கே. பாலகிருஷ்ணன் இம்மாநாட்டில் பங்கேற்று மக்கள்முன் சவாலாக தோன்றி நிற்கும் மதவாத, ஜாதிய சக்திகளை முறியடிப்போம் என்று சூளுரை புகன்றார்.

60 ஆண்டுகளுக்குமுன் ஜாதியைப் பாது காக்கும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பகு தியைக் கொளுத்தும் போராட்டத்தை அறிவித்து அதில் பல ஆயிரம் தோழர்கள் பங்கேற்றுச் சிறை சென்ற தியாக வரலாற்று நாளிது. சிறையில் பலரும் மாண்டனர் என்பதெல்லாம் ஜாதி ஒழிப்புச் சரிதத்தில் முக்கியமானதாகும்.

தந்தை பெரியாரைப் பொறுத்தவரை அவர் ஒரு வாழ்நாள் போராளி. ஒவ்வொரு நாளும் பிரச்சாரம் - போராட்டம் என்பதே அவரின் வாழ்க்கைப் பயணமாக அமைந்திருந்தது. மனுதர் மத்தை, பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்து அவர் உதிர்த்த ஒவ்வொரு சொல்லுமே ஒவ்வொரு போர் ஆயுதமாகும்.

இன்னும் ஜாதிப் பாம்பு சாகவில்லை; ஜாதி ஆணவக் கொலைகள் நடைபெறுவது வெட்கக் கேடு.

பரியேறும் பெருமாள் படத்தில் ஒரு காட்சி. மேல் ஜாதிக்காரன் பகுதிக்குக் கீழ் ஜாதிக்காரன் வீட்டு நாய் செல்லக் கூடாதாம், இது ஒரு சரியான சமுதாயப் படை எடுப்பு.

பெற்றோர்களே தாங்கள் பெற்றெடுத்த - பாசத்தோடு வளர்த்த பெண்ணைக் கொலை செய் கிறார்களே! ஜாதியால் மனிதன் மிருகமாக மாறி விடுகிறான்.

முற்போக்கு சக்திகளுக்கு அதிக வேலை காத்திருக்கிறது. அன்று 1932களில் தந்தை பெரியார் ருசியா சென்று வந்தபிறகு ஈரோட்டிலே தந்தை பெரியாரும், சிங்காரவேலரும் சந்தித்து உருவாக்கிய ஈரோட்டுத் திட்டம் போல - இந்தக் கால கட்டத் திலே கம்யூனிஸ்டுக் கட்சிகளும், திரா விடர் கழகமும், திராவிட இயக்கங்கள் மூன்றும் இணைந்து போராட்டத் திட்டத்தை வகுத்துச் செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். வடக்கே அயோத்தி பிரச்சினையையும், தெற்கே சபரி மலையையும் இந்த இந்துத்துவ மதவாத சக்திகள் கைகளில் எடுத்துக் கொண்டுள்ளன; ஆட்சி சாதனைகளை சொல்ல வக்கற்றவர்கள், மத வாதத்தைக் கையில் எடுத்துக் கொண்டுள்ளனர்.

கம்யூனிஸ்டு கட்சியும், திராவிட இயக்கமும் இணைந்து முறியடிப்போம் என்று தோழர் கே. பாலகிருஷ்ணன் முழக்கமிட்டார்.

 -  விடுதலை நாளேடு, 29.11.18

சட்ட எரிப்பு -ஒரு சரித்திரக் காவியம் (2)

நேருவின் பேச்சும் - தந்தை பெரியாரின் பதிலும்


கலி.பூங்குன்றன்


ஜாதி - தீண்டாமையை எதிர்த்து தந்தை பெரியார் நடத்திய போராட்டம்தான் 1957 நவம்பர் 26 இல் தந்தை பெரியார் அறிவித்து நடத்திய இந்திய அரசமைப்புச் சட்ட எரிப்புப் போராட்டமாகும்.

பேரா.சுப.வீரபாண்டியன்




அந்நிகழ்ச்சியில் பங்கு கொண்ட திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள்.

அரசமைப்புச் சட்டத்தை எரிக்கலாமா என்று தந்தை பெரியாரை நோக்கி எழுப்பிய வினாக்களுக்குத் தந்தை பெரியார் சுடச் சுட அளித்த பதில்களைக் கோடிட்டுக் காட்டினார்.

நீங்கள் கதர்த் துணியை எரிக்கவில்லையா? ஆண்டுதோறும் ராம் லீலா என்ற பெயரில் திராவிட வீரன் இராவணனைக் கொளுத்துவதில்லையா?

கொளுத்துவது ஒரு போராட்ட வடிவம் - அவ்வளவுதான் என்று சொன்ன தந்தை பெரியாரின் பதிலை யாரே மறுக்க முடியும்?

அரசமைப்புச் சட்டத்தில் சிற்பி அண்ணல் அம்பேத்கர் நாடாளுமன்ற மாநிலங்களவையில் 1953 செப்டம்பர் 3 ஆம் தேதி பேசியதை நினைவூட்டினார் பேரா.சுப.வீ.

அண்ணல்  அம்பேத்கர் என்ன பேசினார்? இதோ:

‘Sir my friends tell me that I made the constitution. But I am quiet prepared to say that I shall be the first person to burn it out. I do not want it. It does not suit any body.

எனது நண்பர்கள், நான்தான் அரசியல் சட்டத்தை ஏற்படுத்தினேன் என்று சொல் கிறார்கள்.

நான்தான் அதை நெருப்பிலிட்டுப் பொசுக் குவதிலும் முதன்மையானவனாக இருப்பேன்.

நான் அதை முற்றிலும் வெறுக்கிறேன்.  அது யாருக்கும் பொருத்தமானதும் அல்ல" என ஆந்திர மசோதாபற்றிய விவாதம் மாநிலங் களவையில் நடந்தபோது டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் முழங்கினார் (3.9.1953 இல்).

இன்றைய இளைஞர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு முக்கியமான தகவலும் சுப.வீ. அவர்களின் உரையில் இருக்கிறது. அந்தத் தகவல் அன்றைய பிரதமர் ஜவகர்லால் நேரு பேசியது.

தந்தை பெரியார் ஜாதியைப் பாதுகாக்கும் அரசமைப்புச் சட்டத்தின் பகுதியைக் கொளுத்தும் போராட்டத்தை அறிவித்தார் அல்லவா! திருச்சிக்கு வந்த பிரமதர் நேரு பேசிய பேச்சுதான் அது.

திராவிடர் கழகத் தலைவரானாலும், திராவிடர் கழகத்தவர் களானாலும் சரி, எங்களுடைய அரசியல் சட்டம் பிடிக்காவிட்டால், அவர்கள் தங்கள் மூட்டை முடிச்சுகளுடன் இந்நாட்டை விட்டு வெளியேறி எந்த நாட்டுக்கு வேண்டுமானாலும் போகட்டும்; அதைத் தாராளமாக வரவேற்கிறேன்'' என்று பேசினார்.

நேருவின் பேச்சு குறித்து தந்தை பெரியார் கொடுத்த பதிலடி என்ன தெரியுமா?

நேருவின் இந்தப் பேச்சுக்கு கெட்டிக்காரத்தனத் தையோ, துணிவையோ, வீரத்தையோ பொருத்த வேண்டியதில்லை. தமிழனின் மானமற்ற தன்னல ஈனப் பிழைப்பும், கோழைத்தனமும், நாட்டைக் காட்டிக் கொடுத்து வயிறு வளர்க்கும் தன்மையும்தான் காரணமாகும்'' என்றார் தந்தை பெரியார்.

இதன் பொருள் - தமிழனிடம் தன்மான உணர்வும், துணிவும் இருந்திருக்குமேயானால், நேருவுக்கு இப்படியெல்லாம் பேசத் துணிவு வராது என்பதே! அப்பொழுதுகூட நேருவின்மீது சீற்றம் கொள் வதைவிட, தமிழனின் ஈனத்தன்மையை எண்ணிதான் வேதனைப்படுகிறார். தமிழனுக்குத் தன்மான உணர் வையும், துணிவையும் ஊட்ட வேண்டும் என்ற உணர்வும் இதனுள் இருப்பதை அறிய முடிகிறது.

சட்டமன்றத்தில் அண்ணாவின் விவாதங்கள்!


ஜாதியைப் பாதுகாக்கும் சட்டப் பிரிவைக் கொளுத்தும் போராட்டத்தை தந்தை பெரியார் அறிவித்துவிட்டார். அவசர அவசரமாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்படுகிறது. அந்த விவாதத்திலே அண்ணா அவர்கள் பங்கு கொண்டு தெரிவித்த கருத்துகளைப் பேராசிரியர் சுப.வீ. எடுத்துச் சொன்னார்.

விவாதம் என்றால் சாதாரணமானதல்ல. அனல் பறக்கக் கூடியவை அவை. அந்த நேரத்திலே அண்ணா என்ன பேசினார்?

அது தேவையற்ற சட்டம் என்று அண்ணா விவாதம் செய்கிறார். (இவ்வளவுக்கும் அந்தக் காலகட்டத்தில் திராவிடர் கழகமும் - தி.மு.க.வும் எதிர்நிலையில் இருந்த சூழல்).

"பாட்னா நகரத்தில் கிளர்ச்சி செய்யப்பட்ட நேரத்தில் காந்தியார் படத்தைக் கொளுத்தியிருக் கிறார்கள். நேருவுக்குக் கொடும்பாவி கட்டி இழுத்திருக் கிறார்கள். அரசியல் சட்டத்தைக் கிழித்திருக்கிறார்கள். இன்னும் சொல்லப் போனால் நீங்களே அரசியல் சட்டத்தை ஏழு ஆண்டுகளுக்குள்ளாக பத்துத் தடவை கொளுத்தியிருக்கிறீர்கள்."

"அரசியல் சட்டத்தைக் கொளுத்தும் காரியத்தைத் தான் ரொம்ப நாகரிகமாகப் பத்துத் தடவை திருத்தியிருக்கிறீர்கள். ரொம்பப் புனிதமானது என்று போற்றப்படுகிற அந்தச் சட்டம் உங்களாலேயே திருத்தப்படுகிறது என்றால் என்ன? கொளுத்தப்பட்டது என்றுதான் ஆகிறது'' என்று அவையிலே எடுத்து வைத்தார் அண்ணா.

அதோடு நிறுத்தவில்லை அண்ணா அவர்கள்.

நீங்கள் சட்டத்தை நிறைவேற்றவிட்டாலும், 10 ஆயிரம் பேர் அந்தச் சட்டத்தை மீறி, மூன்றாண்டு அல்ல முப்பதாண்டல்ல சிறையில் இருக்கத் தயங்கமாட்டார்கள். நான் உங்களைப் பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன்.''

(தந்தை பெரியார் பற்றியும் திராவிடர் கழகத் தோழர்கள் பற்றியும் அண்ணாவின் உயர் மதிப்பீடு இது.)

பெரியார் அவர்கள் செயலுக்குப் பின்னால் இருக்கிற நோக்கத்தை தயவு செய்து ஆராய்ந்து பாருங்கள். அந்த நோக்கத்தை வெளிப்படுத்துகிற பெரியாருடைய பழைய கால நடவடிக்கைகளை, உங்களுக்குள்ள தொடர்புகளையும் ஒருகணம் எண்ணிப் பாருங்கள்'' என்று ஜாதி ஒழிப்புக் கொள்கை நோக்கில் விவாதங்களை அடுக்கிச் சென்றார் அண்ணா.

மேலும் அண்ணா கேட்டார், 'காமராசரை எப்படி யெல்லாம் பாராட்டுகிறார் பெரியார்?

காமராசரின் அருங்குணங்களையெல்லாம் எடுத்துக் கூறுகிறார் பெரியார். சாதனைகளையெல்லாம் விளக்கிக் கூறுகிறார். அப்படிப்பட்ட பெரியாரை காமராஜர் ஏன் நேரில் சந்திக்கக் கூடாது? என்றும் கூடக் கேட்டுப் பார்த்தார் அண்ணா.

புதிய சட்டம் இப்பொழுது தேவையில்லை - தேவையெல்லாம் காமராஜர் - பெரியார் சந்திப்புதான் என்று ஆலோசனையையும் தந்தார் சட்டப் பேரவையில் அறிஞர் அண்ணா.

உள்துறை அமைச்சர் பக்தவத்சலம் அவர்களைப் பார்த்து அறிஞர் அண்ணா சொன்னார்,

சட்டத்தைக் கொளுத்தினால் மக்கள் நெஞ்சில் புண்ணை ஏற்படுத்தும் என்று அமைச்சர் சொன்னார். பெரியாரை அடக்குவதற்காக நீங்கள் கடுமையான சட்டம் கொண்டு வந்தால் மனம் புண்படுபவர்கள் இன்று தமிழகத்தில் லட்சக்கணக்கில் இருக்கிறார்கள் என்பதை அமைச்சரவை தயவு செய்து தெரிந்து கொள்ள வேண்டும் என்று நான் பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று அண்ணா அவர்கள் சொன்னார்.

பேராசிரியர் சுப.வீ. அவர்களின் உரையில் ஒளி தரும் இந்த வரலாற்றுப் பரல்களை கோடிட்டு காட்டினார். சுப.வீ. அவர்களின் உரையில் முத்தாய்ப்பான ஒன்று - தந்தை பெரியார் அறிவித்த போராட்டம், அது தொடர்பான சட்டம்பற்றி சட்டமன்றத்தில் விவாதம் நடந்தபோது முதலமைச்சர் காமராஜ் அவையில் இருந்தார், ஆனாலும் எதுவும் பேசவில்லை. அண்ணா விவாதித்தார். இதில்  பெரியார், அண்ணா, காமராஜ் ஆகியோரை எந்தப் பார்வையில் பார்க்கவேண்டும். அவர்களின் உள்ளக்கிடங்கு எத்தகையது  என்ப தையும் நுட்பமாகக் கோடிட்டுக் காட்டினார் பேரா. சுப.வீ. அவர்கள்.

(நாளையும் தொடரும்)
-  விடுதலை நாளேடு, 28.11.18

சட்ட எரிப்பு - ஒரு சரித்திரக் காவியம்

சட்ட எரிப்பு - ஒரு சரித்திரக் காவியம்

கலி. பூங்குன்றன்ரம்




ஒவ்வொரு நாளும் நாட்காட்டியில் ஒரு தாளைக் கிழிக்கிறோம். சில நாள்கள்தான் நம்மை பிரமிக்கச் செய்கின்றன. வீர வணக்கம் செலுத்தக் கூடிய நாட்களாக அமைகின்றன.

அத்தகு நாள்களில் கம்பீரமாக நம் நினைவில் நிற்கக் கூடிய, வீர வணக்கம் செலுத்தக் கூடிய நாள்தான் நவம்பர் 26. என்ன சிறப்பு? இந்திய அரசமைப்புச் சட்டத் தின் சில பிரிவுகளைக் கொளுத்தச் சொல்லி தந்தை பெரியார்  அவர்களால் கட்டளையிடப்பட்ட நாள்! எந்தெந்த பிரிவுகள்?

13(2), 25(1), 26, 29(1)(2) 368 - இந்தப் பிரிவுகள் ஜாதியை மதத்தின் பேரால் கெட்டியாகப் பாது காக்கக் கூடியவை.

ஒரு சுதந்திர நாட்டில் ஜாதியைப் பாதுகாக்கும் இந்தப் பகுதிகளைக் கொண்ட  அரசமைப்புச் சட்டம் இருக்கலாமா? ஜாதி இருக்கும் நாட்டில் சுதந்திரம் இருக்குமா? சுதந்திர நாட்டில் பிராமணன் -  சூத்திரன் என்ற பேதம் ஏன்? பேதத்தை ஒழிப்பது தானே உண்மையான சுதந் திரம்? என்ற வினாவை எழுப்பினார் தந்தை பெரியார்.

தஞ்சையிலே ஜாதி ஒழிப்பு (தனி) மாநாடு கூட்டி, இரண்டு இலட்சத்துக்கும் அதிகமானோர் கூடிய அந்த மக்கள் கடலின் முன் ஓர் அறிவிப்பை - தீர்மானத்தைக் கொடுத்தார் அறிவுலக ஆதவனாம் நம் தந்தை பெரியார் (3.11.1957).  "15 நாட்கள் வாய்தா தருகிறேன் மத்திய அரசுக்கு. அதற்குள் ஜாதியைப் பாதுகாக்கும் இந்தப் பகுதிகளை நீக்க வேண்டும். இல்லையேல் பட்டப் பகலில் முன் கூட்டியே  அறிவித்து விட்டு ஜாதியைப் பாதுகாக்கும் அரசமைப்புச் சட்டத்தின் - இந்தப் பகுதிகள் கொளுத்தப்படும்" என்று அறிவித்தார்.

உலகில் அதுவரை எவரும் கேள்விப்படாத அறிவிப்பு அது. நாடே கிடுகிடுத்தது - அக்கிர காரம் அலறியது. ஆரிய ஏடுகள் ஆத்திர நெருப்பை அள்ளி வீசின.

நேரு தலைமையில் அமைந்த மத்திய அரசு என்ன செய்தது? ஒரு மாபெரும் மாநாட்டில், இலட்சக்கணக்காக கூடிய மக்கள் சமுத்திரத்தின் முன் - பெருமையும் சீலமும் மிகுந்த மாபெரும் தலைவர் - தந்தை என்று ஓர் இனத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தலைவர் தலைமையிலே நடைபெற்ற மிகப் பெரிய மாநாட்டில் ஒரு தீர் மானம் நிறைவேற்றப்பட்டது என்றால் - நடப் பது  மக்களாட்சி என்றால் என்ன செய்திருக்க வேண்டும்? அமைச்சரவையைக் கூட்டிப் பரிசீலனை செய்திருக்க வேண்டுமல்லவா?

நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நியாயம் குறித்து அலசி ஆராய்ந்திருக்க வேண்டாமா?

மாறாக அவர்களின் புத்தி எங்கே போய் மேய்ந்ததாம்? சட்டத்தைக் கொளுத்தினால் என்ன தண்டனை என்று ஆய்வு செய்தார்கள்.

என்ன வேடிக்கை தெரியுமா தோழர்களே? சட்டத்தை கொளுத்தினால் என்ன தண்டனை என்று  சட்டத்திலேயே இடமில்லை.

இப்படி ஒரு தலைவர் வருவார் - இப்படி யொரு அறிவிப்பைக் கொடுப்பார் என்று எவரும் கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள் போலும்.

சென்னை மாநில சட்டப் பேரவையில் அவசர அவசரமாக ஒரு சட்ட முன்வடிவு கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

அது குறித்துத் தந்தை பெரியார் கலங்க வில்லை. கருஞ்சட்டைத் தோழர்களும் பின் வாங்கவும் இல்லை.

அதுகுறித்துத் தந்தை பெரியார் அறிக்கை ஒன்றினை வெளியிட்டார்.

"மூன்று ஆண்டுக்கோ,

பத்து ஆண்டுக்கோ,

நாடு கடத்தலுக்கோ, தூக்குத் தண்டனைக்கோ, ஆளாக்கப்பட்டாலும் மற்றும், பிரிட்டிஷ் காரன், காங்கிரசுக் கிளர்ச்சியின்மீது கையாண்ட எந்த விதமான கொடிய, தீவிரமான அடக்கு முறைகளை நம்மீதும், கழகத்தின்மீதும் பிரயோ கித்தாலுங்கூட, அவைகளுக்குப் பயப்பட்டு என் இலட்சியத்தையோ, திட்டத்தையோ, மாற்றிக் கொள்ளப் போவதில்லை.

கழகத் தோழர்களே! தீவிர இலட்சிய வாதிகளே! நீங்கள் மூன்று ஆண்டு தண்டனைக்குப் பயந்துவிட வேண்டியதில்லை. பயந்துவிட மாட்டீர்கள்! சட்டத்தைப் பார்த்துப் பயந்து விட்டதாகப் பெயர் வாங்காதீர்கள்! ஆகவே, இஷ்டப்பட்டவர்கள் (விருப்பப்பட்டவர்கள்) தஞ்சை மாநாட்டுத் தீர்மானத்தை நிறைவேற்ற - பெயர் கொடுங்கள்!"

- ஈ.வெ.ரா. (விடுதலை', 11.11.1957)

போராட்டத்தில் ஈடுபடவிருக்கும் தோழர்களின் பட்டியல் 'விடுதலை'யில் வந்து கொண்டே இருந் தது. குடும்பம் குடும்பமாக போட்டிப் போட்டுக் கொண்டு பட்டியலில் இடம் பிடிக்க முயன்றனர்.

'விடுதலை'யிலே ஒரு பெட்டிச் செய்தி வந்தது அது என்ன தெரியுமா?

சட்டத்தைக் கொளுத்துங்கள்! சாம்பலை மந்திரிக்கு அனுப்புங்கள்!!

"சட்டத்தை நிறைவேற்றிவிட்டதன் மூலம் அரசாங்கத்தினர் "ஜாதியைக் காப்பாற்றித்தான் தீர வேண்டும்" என நமக்கு சவால் விட்டு இருக்கின்றனர். இந்த சவாலுக்கு நீங்கள் சட்டம் கொளுத்தாவிட்டால் மனிதர்கள்தானா?

சட்டம் கொளுத்தி சாம்பலை சட்டம் செய்த மந்திரிக்கு அனுப்பிக் கொடுங்கள்!

சட்டம் கொளுத்தின மக்கள் இந்த நாட்டில் இருக்கிறார்கள் என்பதை அதன்மூலம் கொஞ்சமாவது தெரிந்து கொள்ளட்டும்!"

- ஈ.வெ.ரா. (விடுதலை', 14.11.1957)

தந்தை பெரியார் இரயில் சுற்றுப் பயணம் செய்தார். முக்கியப் பொறுப்பாளர்கள் பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டனர்.

ஆம் நவம்பர் 26 வந்தது - வந்தே விட்டது - தமிழ்நாடெங்கும் 10 ஆயிரம் பேர் கொளுத்தினர்! கொளுத்தினர்!!

முதல் நாள் (25.11.1957) சிறீரங்கம் பொதுக் கூட்டத்தில் பேசி விட்டு, மறுநாள் சென்னையில் சட்டத்தைக் கொளுத்தவிருந்த தந்தை பெரியாரை, 25.11.1957 மாலை - சிறீரங்கம் பொதுக் கூட்டத்திற்குப் புறப்படத் தயாராக இருந்தபோது முன்கூட்டியே கைது செய்தது காவல்துறை.

தமிழ் நாடெங்கும் 10 ஆயிரம் கருஞ்சட்டைத் தோழர்கள் ஜாதியைப் பாதுகாக்கும் அரசமைப்புச் சட்டத்தின் பகுதியைக் கொளுத்தி அதன் சாம்பலை அரசுக்கு அனுப்பி வைத்தனர்.

நீதிமன்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட பொழுது யாரும் எதிர் வழக்காடவில்லை. அதே நேரத்தில் சட்டத்தை எரித்த தோழர்கள் என்ன கூற வேண்டும்  என்பதையும் அறிக்கை மூலம் தெரிவித்தார் தந்தை பெரியார்.

"நான் சாதி ஒழிப்புக் கிளர்ச்சிக்காரன். இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஜாதிக்கும், அதை உண் டாக்கிய மதத்துக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டி ருக்கிறது. அரசமைப்புச் சட்டம் தமிழர் நலனுக்காக வகுக்கப்படவுமில்லை; அச்சட்டத்தைத் திருத்தக் கூடிய வசதி தமிழர்களுக்கு இல்லை.

ஆதலால் என் எதிர்ப்பைக் காட்டிக் கொள்ளும் அறிகுறியாக இச்சட்டத்தைக் கொளுத்தினேன். இப்படிக் கொளுத்துவதற்கு எனக்கு உரிமையுண்டு. இதனால் எந்த உயிருக்கும், எந்தப் பொருளுக்கும் சேதமில்லை. ஆதலால் நான் குற்றவாளியல்ல. இந்த நீதிமன்ற நடவடிக்கையில் நான் கலந்து கொள்ள விரும்பவில்லை. நான் எதிர்-வழக்காட விரும்பவில்லை. நான் குற்றவாளி என்று கருதப் பட்டால் அதற்குரிய தண்டனையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளத் தயாராயிருக்கிறேன்."

பெரியார் அறிக்கை: (விடுதலை 23-11-1957)

சிறை செல்லுமுன் தந்தை பெரியார் என்ன சொன்னார்?


"நவம்பர் 25ஆம் தேதி நடக்கும் விசாரணையில் எனது முச்சலிக்கா பாண்டு கேன்சல் ஆகி என்னைச் சிறைப்படுத்தும்படியான நிலைமை பெரும்பாலும் ஏற்படலாம். இந்தச் சமயத்தில் பொது மக்களுக்கு ஏதாவது சொல்லவேண்டியது அவசியமாகும். நான் சிறைப்படுத்தப்பட்டு விட் டேன் என்பதாலேயோ அல்லது பொது மக்கள், அரசமைப்புச் சட்டத்தைக் கொளுத்துவார்கள் என்கிற எண்ணத்தால் அதைத் தடுக்க அரசாங் கத்தார் ஏராளமான மக்களைக் கைதுசெய்து விட்டார்கள் என்ற எண்ணத்தாலேயோ, புதிய சட்டத்தின்படி நீண்டநாள் தண்டிக்கப்படநேரிடும் என்ற அச்சத்தினாலேயோ யாரும் அதாவது கொளுத்த வேண்டியது அவசியந்தான் என்று கருதுகிறவர்கள், எந்தவிதமான தயக்கமும் இல் லாமல் அரசியல் சட்டத்திலிருந்து பொறுக்கி எடுத் துப் போட்டிருக்கிற, நமக்குக் கேடான நாலைந்து பிரிவுகளைக் கொண்ட பிரசுரத்தொகுப்பைக் கொளுத்தியே தீரவேண்டியது முக்கியமான காரியம் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

இதைவிட முக்கியமான காரியம் ஒன்றை வணக்கமான வேண்டுகோளாகத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். அதை அவசியம் ஒவ்வொரு வரும் கவனிக்கவேண்டியதும், என்னை ரிமாண்டு (சிறையடைப்புச்) செய்வதனாலேயோ மற்றும் இப்பொழுது செஷன்சில் (மாவட்ட நீதிமன்றம்) நடைபெறும் வழக்கின் பெயரால் என்னை நீண்டநாள் அரசாங்கத்தார் தண் டனைக்குள்ளாக்கி விடுவதாலேயோ பொது மக்கள் யாரும் ஆத்திரப்படுவதற்கோ, நிலை குலைந்து விடுவதற்கோ ஆளாகாமல் மிக்க மகிழ்ச்சியோடு அச்சேதியை வரவேற்க வேண்டும். எந்தவிதமான கலவரமோ, பலாத் காரமோ, பார்ப்பன சமுதாயத்தை சேர்ந்த ஆண்களுக்கோ, பெண்களுக்கோ, குழந்தை களுக்கோ, துன்பம், வேதனை உண்டாக்கக் கூடியதான எப்படிப்பட்ட பலாத்காரமான செய்கையையும், நஷ்டம் உண்டாக்கக் கூடியதான செய்கையையும் அதாவது ஆயுதப் பிரயோகமோ, அடிதடியோ, நெருப்புக் கொளுத் துதலோ முதலிய ஒரு சிறுகாரியம் கூட நடத்தாமலும், நடைபெறாமல் இருக்கும்படியும் ஒவ்வொருவரும் நடந்துகொள்ள வேண்டும். நான் ஆயுதப் பிரயோகம் செய்யவேண்டும் என்றும், அக்கிரகாரங்கள் கொளுத்தப்பட வேண்டும் என்றும் சொன்னதும், சொல்லி வரு வதும் உண்மை. ஆனால் அவை இப்பொழுது அல்ல. அதற்கான காலம் இன்னும் வரவில்லை. வரக்கூடாதென்றே ஆசைப்படுகிறேன். அப்படிப்பட்ட காரியங்களில் ஈடுபடுவதற்குக் காலம் எப்போது வரும் என்றால் அரசியல் சட்டத்தைக் கொளுத்துவது முதலிய இன்னும் நான்கைந்து கட்டங்கள் நடத்தி, அவைகளால் ஒன்றும் பயனில்லை, வெற்றிக்கு அவை பயன் படவில்லை என்று கண்டு, பலாத்காரத்தைத் தவிர வேறு வகையில்லை என்ற முடிவுக்கு வந்தபிறகுதான் நாம் அவற்றில் இறங்க வேண் டியவர்களாக இருக்கிறோம்.

ஆதலால் இந்த என்னுடைய தாழ்மையான வேண்டுகோளை ஒவ்வொருவரும் கருத்தில் வைக்க வேண்டும்

இப்பொழுது எனக்கு ஏற்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் தண்டனையானது நம் முடைய அடுத்த திட்டங்களுக்கு வலுவான ஆதரவுகளையும், உணர்ச்சியையும், ஊக்கத் தையும், துணிச்சலோடும், வேகத்தோடும், ஈடு படுவதற்கு தூண்டுதலை உண்டாக்குவதற்கு வலிமையான சாதனமாக அமையும். பொது மக்கள் மீது எனக்குப் பலமான செல்வாக்கு (ஆதிக்கம்) இருக்கிறது என்று அரசாங்கமும், இந்தியாவிலுள்ள மற்ற மக்களும் எண்ணியி ருக்கிற ஒரு எண்ணத்திற்குப் பாதகம் ஏற்படாமல் பொதுமக்கள் நடந்துக் கொள்ள வேண்டு மென்றால் நான் மேலே வேண்டிக்கொண்டு இருக்கிறபடி எந்தவிதமான தண்டனைக்குப் (ஏற்பட்டால்) பிறகு பொது மக்களிடையில் மேற்சொன்னபடி எந்த விதமான கலவரமும், செய்கையும் ஏற்படாமல் இருக்க வேண்டிக் கொள்ளுகிறேன்; அதிகாரி களிடத்தில், போலீஸ்காரர்களிடத்தில், மரியாதை யாகவும், கட்டுப்பாடாகவும் நடந்துக் கொள்ள வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்."

- ஈ.வெ.ரா. ('விடுதலை' - 26.11.1957)

இப்படி அறிக்கை வெளியிட்ட  ஒரு தலைவரை வரலாறு கண்டதுண்டா? இதனை சொல்லுக்குச் சொல்  - வரிக்கு வரி ஏற்றுக் கொண்டு நடந்து கொண்ட கட்டுப்பாட்டின் கவசம் பொதுத் தொண் டின் புடம் போட்ட தொண்டர்களாம் பத்தரை மாற்றுத் தங்கங்களைத் தான் வரலாறு சந்தித்த துண்டா?

(தொடரும்)

-  விடுதலை நாளேடு, 27.11.18