திங்கள், 22 மார்ச், 2021
குழந்தைத்_திருமண_தடுப்புச்_சட்டம்
சனி, 25 ஏப்ரல், 2020
வீரமணி-மோகனா திருமணத்தில் புதுமை - தாம்பூலத்திற்குப் பதில் புத்தகம்
தந்தை பெரியார் அன்னை மணியம்மையார் ஆகியோருடன் கி.வீரமணி & மோகனா.
பேரன்புமிக்க தாய்மார்களே! பெரியோர்களே! நண்பர்களே! இன்றைய தினம் மணமக்களாகிய செல்வர்கள் வீரமணி-மோகனா ஆகியோர்களது வாழ்க்கைத் துணை ஒப்பந்தத்தை முன்னிட்டு இங்கே கூடியிருக்கின்றோம்.
மணமகன் வீரமணி அவர்களை உங்கள் எல்லோருக்கும் நன்றாகத் தெரியும். அவர் இளம் வயது முதலே நம்முடைய கழகப் பற்று, கொள்கைப் பற்று ஆகியவைகளில் ஈடுபட்டு மிகவும் உழைத்துக் கொண்டு வருபவர்.
செல்வி மோகனா அவர்களைப் பற்றி விளக்கினால் நீங்கள் தெரிந்து கொள்வீர்கள். மோகனா அம்மை நண்பர் சிதம்பரம்- ரெங்கம்மாள் ஆகியோர்களுடைய அருமை மகள்.
நண்பர் சிதம்பரம்-ரெங்கம்மாள் ஆகியோர் நமது திருச்சி நகரம் தேவதானத்தில் சுமார் 24, 25 ஆண்டுகளுக்கு முன்பு கலப்பு மணம் செய்து கொண்டவர்கள். நண்பர் சிதம்பரம் காரைக்குடியை அடுத்த கோட்டையூரிலே பெரிய செல்வந்தர். தன வைசியர் குலம் என்று சொல்லுகின்ற நாட்டுக்கோட்டைச் செட்டியார் வகுப்பைச் சேர்ந்தவர்கள்.
ரெங்கம்மையார் திருவண்ணாமலை ரெட்டியார் வகுப்பைச் சேர்ந்தவர்கள். அவர்கள் கலப்பு மணம் என்பதோடு மறுமணம் என்பதையும் சேர்த்து 25 ஆண்டுகளுக்கு முன்பாக மணம் செய்து கொண்டவர்கள்.
அவர்களுடைய மூத்த மகன் மலேசியாவிலே பெரிய தொழில் செய்து கொண்டிருக்கின்றார். இதிலே வேடிக்கையான ஒரு சங்கதியைச் சொல்லவேண்டுமானால், வேடிக்கைதான் அது மற்றபடி இலட்சியமாகச் சிந்திக்கக் கூடியது அல்ல. இவர்களுடைய இந்தத் திருமணம் 4 குழந்தைகளைப் பெற்று, நல்ல வயதுக்கு வந்து வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கின்ற பொழுது, ஒரு விவகாரத்திலே இந்தத் திருமணம் செல்லாது என்று உயர் நீதிமன்றத்திலே தீர்ப்பு வழங்கினார்கள்! அதனாலே அவர்களுக்கு ஒரு பாதகமும் இல்லை. அதை அவர்கள் இலட்சியம் செய்யவும் இல்லை. அது பாட்டுக்கு அது இருந்தது. இது பாட்டுக்கு இது நடந்து கொண்டிருந்தது. சுயமரியாதைத் திருமணம், செல்லாது என்று சொன்ன காரணம் ரொம்ப வேடிக்கையானது. சுயமரியாதைத் திருமணம் சாஸ்திரப்படியும் நடக்கவில்லை; சட்டப்படியும் நடக்கவில்லை; ஒரு வரைமுறைப்படியும் நடக்கவில்லை; ஆனதினாலே, இது செல்லாது! என்று சொன்னார்கள்.
திருமணத்தில் என்ன முக்கியமான காரியங்கள் நடக்க வேண்டுமோ, அது நடந்துதான் இருந்தது. திருமணத்தில் என்ன நடக்க வேண்டுமென்று இருக்கின்றதோ, அதற்கு மாறான விரோதமான காரியங்கள்தான் நடந்திருக்கின்றன.
இன்ன மாதிரி இருக்க வேண்டும். இன்ன முனிவர் சொல்ல வேண்டும். அந்தச் சுலோகங்-களை எல்லாம் அந்த ஜட்ஜ்மென்ட்டிலே எடுத்துப் போட்டிருக்கின்றார்கள். ஆகவே அந்த மாதிரியான ஒரு நிலைமை இருந்தாலும் அவர்கள் இன்பத்திலே, செல்வத்திலே, எல்லாவற்றிலுமே மிக்க திருப்திகரமாகவே நடந்து வந்திருக்கின்றார்கள்.
அவர்களுடைய திருமணம் எப்படி அந்தக் காலத்திலே ஒரு கலப்பு மணமாக நடைபெற்றதோ அதே மாதிரியாகவே தம்முடைய பெண்ணுக்கும் கலப்பு மணமாகவே நடத்த வேண்டுமென்று ஆசைப்பட்டு அவர்கள் தெரிவித்தார்கள். அவர்களுக்குத் திருமணமாகி 25 வருடங்கள் ஆகியிருந்த போதிலும் கூட அன்றைய காலத்திலிருந்தே அவர்களை எனக்குத் தெரியும்.
காரைக்குடியில் நடைபெற்ற ஒரு மகாநாட்டிற்கு அய்யா சிதம்பரம் அவர்கள்தான் வரவேற்புக் கழகத் தலைவர் ஆர்.கே.சண்முகம் அவர்கள் அப்பொழுது தலைமை வகித்தார். 1930க்கு முன்னாலே உள்ள காலம் அது. அந்த மகாநாட்டிலேயிலிருந்து கொள்கைப் பிடிப்போடு இருந்தார்கள். அதனால்தான் கலப்பு மணம் செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்கள். பற்றுதல் என்றால் பிடிவாதமான பற்றுதலுடன் அந்தக் கொள்கைகளைக் கடைப்பிடித்து வந்தார்கள். இந்த மாதிரியாகவே கலப்பு மணம் நடத்த வேண்டும் என்ற ஆசை இருந்தது. அது போலவே அவர்கள் கேட்டார்கள்.
அப்பொழுது வீரமணி அவர்கள் என் ஞாபகத்திற்கு வந்தார். தனக்கு ஒரு திருமணம் ஆகப்போகின்றது என்று வீரமணி நினைக்கவே இல்லை. அந்த மாதிரி இருக்கும்பொழுது வீரமணி அவர்களிடத்திலே திடீர் என்று இந்த சங்கதியைச் சொன்னேன். வீரமணி திடுக்கென்று கேள்விப்பட்டவுடன் பதில் சொல்லாமல் இருந்தார்.
நான் சொன்னேன். அய்யா, உங்களுக்கு நல்ல வாய்ப்பு என்று நினைக்கிறேன். வசதி உள்ள இடம். அதற்கு வீரமணி பதில் சொன்னார். வசதி இருக்கிறதோ இல்லையோ, அதைப் பற்றி எனக்குக் கவலையே இல்லை. இப்படியே சொன்னார். அய்யா சொல்லுகிறீர்கள் அம்மா சொல்லுகிறீர்கள் என்பதற்காக நீங்கள் என்ன சொன்னாலும் கேட்பேன் என்று சொன்னார். சரி, அப்படியே வைத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னேன். அப்பொழுது அய்யா சிதம்பரம் அவர்கள் ஊரில் இல்லை. மலேயாவில் இருக்கின்றார். ரெங்கம்மையார் சொன்னார்கள். நீங்கள் சொன்னால் ஒத்துக்கொள்வார் பரவாயில்லை என்று சொன்னார்கள். ஒரு வழியாக வீரமணி அவர்கள் ஒப்புதல் கொடுத்தார்கள் என்று தெரிந்த உடனே அம்மையார் அவர்கள் அவரது கணவரிடத்திலே இதைத் தெரியப்படுத்தினார்கள். உடனே கப்பலில் ஏறி வந்தார்கள். அவசரமாக முடிவுகளை எல்லாம் எடுத்தார்கள்.
திருமணத்தைக் கூடுமானவரை சுருக்கமாக நடத்த வேண்டும் என்பது என்னுடைய ஆசை இல்லை. என்னுடைய சுபாவம் அப்படி! எந்தக் காரியமாக இருந்தாலும், எதுவாக இருந்தாலும் சுருக்கமாகத்தான் நடத்த வேண்டும் என்பது என்னுடைய சுபாவம். அந்த முறையில் நடத்த வேண்டுமென்றுதான் நான் ஆசைப்பட்டேன். ஆனால் முடியவில்லை. தள்ளமுடியாத நிலையில் கொஞ்சம் நீண்டு விட்டது. எனக்குக் கொஞ்சம் கஷ்டம்தான். ஆனாலும் நல்லபடியாகத் திருப்தியாக முடிந்தது.
ஒருத்தருக்குத் திருப்தி இல்லாவிட்டாலும் இன்னொருத்தருக்காவது திருப்தி இருக்கின்றதே என்று சொன்னால் வரவு செலவு சரியாகப் போய்விட்டது என்று அர்த்தம். நாம் ஒரு கமிட்டி போட்டால், மகாநாடு போட்டால் எப்படி நடக்குமோ அப்படித்தான். வேறே ஒன்றும் அதிசயமானது ஒன்றும் இல்லை.
நம்முடைய கழகத் தோழர்கள் அடிக்கடி சந்திக்க என்ன இருக்கின்றது? வழி வேறு இருக்கின்றதா? ஒன்றும் கிடையாது. தேர்த் திருவிழாவிற்குப் போவதில்லை. மகாநாட்டில் தான் சந்திப்போம்.
மகாநாடு நடத்த வேண்டும் என்று யாராவது கேட்டால் மகாநாடு நடத்தி, அதிலே என்ன பேசி, அதிலே என்ன தீர்மானம் போடுகிறோமோ, அவைகளைப் பத்தாயிரம் பேர் - இலட்சம் பேர் கூடும்படியான கூட்டங்களில் பேசிக் கொண்டேயிருக்கின்றோம். மகாநாடு கூட்டினாலே 4,000, 5,000 பேர் வந்தாலே அதிகம். 10,000 பேர் 20,000 பேர் வரவேண்டுமென்றால் நான்கு வருடம், அய்ந்து வருடத்திற்கு ஒரு முறை கூட்ட வேண்டும். மகாநாட்டிலே இயக்கக் காரியமாக, இயக்கக்காரர்களைச் சந்திக்கும் ஒரு வாய்ப்பு. அதுதான் உண்மையிலேயே முக்கியம். அந்த முறையிலேயே இயக்கத் தோழர்களை எல்லாம் சந்திக்கும்படியான ஒரு வாய்ப்பு. அன்பர்களையும், நமது மரியாதைக்குள்ளவர்களையும் சந்திக்க ஒரு நல்ல வாய்ப்பு என்கிற முறையிலே கொஞ்சம் தாராளமாக இதை நடத்துகின்றோம். இதை எல்லாம் பார்ப்பதற்கு ரொம்ப மகிழ்ச்சி.
இந்தத் திருமணத்திலே ஒரு சின்ன புதிய முறையைப் புகுத்தியிருக்கின்றேன். திருமணத்திற்கு வந்தவர்களை எல்லாம் பாராட்டித் தாம்பூலம் கொடுப்பது முறை. தாம்பூலத்திலே வெற்றிலை பாக்கு விலை ஒரு அணாவுக்குக் குறையாது. சின்னத் தேங்காயாக இருந்தாலும் 2 அணா விலை இருக்கும் பழம் கொடுப்பார்கள். இப்பொழுது ஏறக்குறைய பெரிய மனிதர்கள் எல்லாம் மலைப்பழம் கொடுப்பது வசதியாகப் போய்விட்டது. ஆக 2 பழம் எடுத்துக் கொண்டால் ஒன்றரை அணா. அதுவும் எல்லாவற்றையும் சேர்த்துச் செய்தால் நான்கரை அணா ஆகின்றது.
அதுவும் நண்பர் சிதம்பரம் அவர்கள் செட்டியார் என்கிற முறையிலே செய்வார்களே-யானால் ஒரு வெற்றிலை பாக்கு தாம்பூலத்திற்கு மூன்று ரூபாய் இருக்கும்; இரண்டு ரூபாய்க்குக் குறையாது. ஆப்பிள் இரண்டு, மூன்று போடுவார்கள். வெற்றிலை ஒரு வாரத்திற்கு ஆகிறாற்போலப் போடுவார்கள். ஆக இரண்டு, மூன்று ரூபாய்க்கு ஆகும். வாங்கிட்டுப் போகிறவர்களும் ஒரு ரூபாய், ஒன்றரை ரூபாய்க்கு விற்று விடுவார்கள். அந்த மாதிரி எல்லாம் இல்லாமல் நாமும் ஏதாவது கொடுத்த மாதிரி இருக்கட்டும். அதுவும் ஏதாவது பயன்படுகிற மாதிரி இருக்க வேண்டும் என்கிற முறையிலே ஒரு எண்ணம் தோன்றியது. கழக சம்பந்தமான ஏதாவது ஒரு புத்தகம் அந்த விலைகளுக்குள்ளேயே கணக்குப் பார்த்து ஆளுக்கு ஒன்று கொடுக்கலாமா என்று ஒரு எண்ணம் தோன்றியது.
வீரமணியே சொன்னார். அய்யா எத்தனையோ திருமணத்திற்குத் தலைமை வகித்துச் சிறப்புரை எல்லாம் ஆற்றியிருக்-கிறீர்கள். இது திருமண சம்பந்தமாக இருக்கின்றது. அந்தப் பேச்சுகளில் பத்து, இருபது பேச்சுகளைப் புத்தகமாகப் போட்டுவிட்டு, அதற்குப் பெயரை வேண்டுமானால் வாழ்க்கைத் துணை நலம் என்ற தலைப்புப் போட்டுப் புத்தகமாகக் கொடுக்கலாம் என்று சொன்னார்.
கோவிலுக்குப் போகிறவர்கள் எப்படிச் சர்க்கரையை எடுத்து வாயில் போட்டுக் கொள்வார்களோ அது மாதிரிதான் இது. மற்றபடி திருமணம் சாதாரணமானது தான். பகலிலே ஒன்றும் விருந்தில்லை. திருமணத்திற்கு வந்தவர்கள் அவரவர்கள், ஆங்காங்கே சாப்பிட்டுக் கொண்டார்கள். ராத்திரிக்கு ஏதோ விருந்து ஏற்பாடு பண்ணுகிறோம்.
சிதம்பரம் அவர்களும், ரெங்கம்மாள் அவர்களும் இயக்கத்திற்குத் தொண்டாற்றுமாறு பாடுபட வேண்டும். அவர்கள் பெண்ணைக் கொடுத்ததன் மூலம் நம்முடைய இயக்கத்திற்குப் பயன்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம். அதே மாதிரிதான் வீரமணி அவர்களும் நமது இயக்கத்திற்குப் பயன்படும்படியான முறையிலே தொண்டாற்ற வேண்டும். ஒற்றுமையாகத் துணையாக இருந்தால் நல்லது என்று ஆசைப்படுகின்றோம்.
மற்றப்படி இந்த அறிமுகப் பேச்சோடு மணமக்களுக்கு இந்த வாழ்க்கைத் துணை ஒப்பந்தங்களை எடுத்துச் சொல்லி, அதை நிறைவேற்ற உங்கள் சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன். மணமக்கள் வாழ்க்கை ஒப்பந்த விழாவை இப்பொழுது நடத்திக் கொள்கிறார்கள். அதற்குப் பிறகு மணமக்களை வாழ்த்திப் பல அறிஞர்கள் பேசுவார்கள்.
நண்பர் உயர்திரு பாரதிதாசன் அவர்கள், சேர்மன் இரத்தினசாமி (பிள்ளை) அவர்கள், உயர்திரு சண்முகநாதன் அவர்கள், சுப்பையா அவர்கள், நரசிம்மன் அவர்கள், முத்துக் கண்ணப்பர் அவர்கள், வெள்ளையன் அவர்கள் இன்னும் பல அறிஞர்கள் பேசுவார்கள். பொறுமையாக இருந்து கேளுங்கள்.
மணமக்கள் வாழ்க்கை ஒப்பந்தத்தை எடுத்துச் சொல்லி இந்த நிகழ்ச்சியின் அறிகுறியாக மணமகளுடைய உருவம் பொறித்த மோதிரத்தை மணமகள் மணமகனுக்கு அணிவிப்பார். மணமகன் உருவம் பொறித்த மோதிரத்தை மணமகன் மணமகளுக்கு அணிவிப்பார். நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது என்று உங்கள் சார்பாகக் கேட்டுக் கொண்டு மணமக்கள் இப்பொழுது உறுதிமொழி கூறுவார்கள்.
-------------------
நூல்: தென்னாட்டுத் திருநாள் -- “உண்மை” நவம்பர் 1-15 2014
அனுப்பி உதவியவர்:- தமிழ் ஓவியா (oviyathamizh@gmail.com)
- கீற்று இணையதளம்
செவ்வாய், 21 ஏப்ரல், 2020
பெரியார் மணியம்மை திருமணத்தில்...
வெள்ளி, 22 மார்ச், 2019
மராட்டிய மாநிலம் புனே நகரில் ஜாதியற்ற, சடங்குகளில்லாத எளிமையாக நடைபெற்ற திருமண விழா
மராட்டிய மாநிலம் புனே நகரில் சச்சின் ஆஷா சுபாஷ், ஷர்வாரி சுரேகா அருண் ஆகியோரின் திருமணவிழா 26.1.2019 அன்று எவ்வித மதச் சடங்குகளும், ஆடம்பரமு மில்லாமல் மிகவும் எளி மையாக நடைபெற்றது. குடியரசு நாளில் அர சமைப்புச்சட்டம் வலியுறுத் தும் மதச்சார்பின்மை, சமத் துவத்துவக் கொள்கை களுடன் நடைபெற்றது.
நாட்டின் 70ஆவது ஆண்டு குடியரசு நாளில் போராளிகளாக இருவர் அமைதிப்புரட்சியாக சத்யசோதக் வழியில் இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்துள்ளனர்.
மகாத்மா ஜோதிராவ் புலே உருவாக்கிய சத்யசோதக் அமைப்பின் சார்பில் நடத்தப்படுகின்ற திருமணத்தில் புரோகிதர் கிடையாது. மதச் சடங்குகள் கிடையாது.
மதம், ஜாதி, வகுப்பு மற்றும் ஆடம்பரங்கள் ஏதுமில்லாமல் நடைபெறுகின்ற திருமணங்கள் குறித்து நாடுமுழுவதும் பேசப்பட்டு வருகிறது. திருமண இணையர் இருவரும் மராட்டிய மாநிலத்தில் சமூக தொண்டாற்றி வருபவர்களாக உள்ளனர். அதனாலேயே பழக்க, வழக்கங்களைத் தவிர்த்து, ஜாதியற்ற திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு சமூக நிகழ்ச்சிகளில் சந்தித்துக்கொண்டார்கள். அதன்படி கருத்தொருமித்து முன்னுதாரணமாக திருமணத்தை செய்துகொள்ள முடிவெடுத்தனர்.
நூலகங்களுக்கு புத்தகக் கொடை அளிப்பு
சச்சின் ஆஷா சுபாஷ் கூறியதாவது:
“எங்கள் திருமணம் எளிமையாக நடைபெற்றது. அழைப்பிதழைக்கூட நாங்கள் அச்சடிக்கவில்லை. தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, சமூக ஊடகங்களின் வாயிலாகவே நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் அழைப்பு விடுத்தோம். எங்கள் திருமணத்தில் ஆயிரம் பேர் கலந்துகொண்டு, 1200 புத்தகங்களை வழங்கினார்கள். பலவகைகளாக உள்ள புத்தகங்களை கிராமப்புற நூலகத்துக்கு அளித்துள்ளோம்” என்றார்.
அதுமட்டுமில்லை. ஜாதியை பெயருக்குப்பின்னால் சேர்க்காமல் விட்டுவிட்டதாகவும், அவர்களின் குடும்பத்தினரும் ஜாதி அடிப்படையிலான பழக்கங்களை கடைப்பிடிக்காமலிருக்கும் படி செய்துவிட்டதாகவும் கூறினார்கள்.
நானும், என் இணையரும் எங்கள் பெயருக்குப்பின்னால் வரக்கூடிய ஜாதிப்பெயரை சேர்க்காமல் தவிர்த்துவிட்டோம். அதுகுறித்து எங்கள் குடும்பத்தினருக்கும் கூறவில்லை.
அரசமைப்புச்சட்டத்தின் அடிப்படையில்
நடைபெற்ற திருமணம்
இந்துமதச்சடங்குகள் ஏதுமில்லாத திருமணமாக நடைபெற்றது. சச்சின் கூறுகையில், கன்னியாதானம் போன்றவற்றில் நம்பிக்கை எங்களுக்கு இல்லை. ஆகவே, அதுபோன்ற சடங்குகள் நடைபெறாமல் பார்த்துக்கொண்டோம்.
வழக்கமான சதாப்தி எனும் மதச்சடங்குகளுக்கு மாற்றாக, அரசமைப்புச்சட்டம் வலியுறுத்திக் கூறுகின்ற தத்துவங்களுடன் சமத்துவம், வளர்ச்சி, சமநீதி, உளப்பூர்வமான கடின உழைப்பு, ஒருவருக்கொருவர் மரியாதை அளித்தல் உள்ளிட்ட ஏழு பண்புகளைக் கடைப்பிடித்திட உறுதி பூண்டோம்.
பழங்கால மூடநம்பிக்கைகளை விலக்கி, நவீன முறையில் கல்வித்தகுதி, வருவாய் ஈட்டுதல் மற்றும் பிற ஒப்புமைகளுடன் இணையர் பொருத்தப்பாடுகள் கவனத்தில் கொள்ளப்பட்டன.
விழாவில் கலந்துகொண்டவர்களுக்கு பரிசுப்பொருளாக ஷர்வாரி எழுதிய புத்தகம் அளிக்கப்பட்டது. அப்புத்தகத்தில் அவர்களின் திருமண முறைகுறித்து விளக்கப்பட்டுள்ளது.
புனே நகரில் ராஷ்டிரிய சேவா தள அரங்கில் திருமண விழா நடைபெற்றது. மராட்டிய மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் முக்கிய சமூக செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர். மணமக்களான இருவரும் சமுக முன்னேற்றத்துக்காக தனித்தனியே தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள்.
சுபாஷ், ஷர்வாரி இணையரின் திருமண விழா சடங்குகளின்றி, ஜாதியற்ற திருமணமாக நடைபெற்று மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக அமைந்தது.
- விடுதலை ஞாயிறு மலர், 2.3.19
வெள்ளி, 16 நவம்பர், 2018
தாலியில்லாமல் திருமணங்களை நடத்தும் ஊர்கள்!
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே கோட்டைபூண்டி பஞ்சாயத்து உள்ளது. இங்கு செக்கடி குப்பம், கோட்டுவன் குப்பம், அதியந்தல், கோவில்புறையூர் ஆகிய ஊர்கள் உள்ளன.
இந்த கிராமங்களில் 5 ஆயிரம் குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். 50 வருடத்துக்கு முன்பு இந்த உலகளவில் திருமணத்தின்போது பெண்களுக்கு தாலி கட்டும் பழக்கம் இருந்து வந்தது.
இந்நிலையில் மேல்மலையனூருக்கு பெரியார் வந்து பேசினார். அப்போது அவர் பெண்களை அடிமைகளாக நடத்தக்கூடாது. திருமணத்தின்-போது பெண்களுக்கு தாலி அணிவிப்பது அவர்களை அடிமைப்படுத்தும் செயலாகும். எனவே திருமணத்தின்போது தாலி கட்டக்கூடாது என்று கூறினார்.
இது அந்த ஊர்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து அந்த ஊர்களில் 50 வருடங்களாக சுயமரியாதை திருமணங்கள் நடைபெற்று வருகின்றன. திருமணத்தின்போது வரதட்சணை வாங்குவது இல்லை. ஜாதி பாகுபாடு பார்ப்பதில்லை. மணப்பெண்ணுக்கு தாலி அணிவிப்பது இல்லை. பெரியார் கொள்கைப்படி திருமண ஒப்பந்தம் மட்டும் செய்து கொள்கின்றனர்.
அந்த பகுதியில் 1968-ஆம் ஆண்டு அர்ச்சுனன் என்பவருக்கும், தனியரசு என்ற பெண்ணுக்கும் முதன் முதலாக சுயமரியாதை திருமணம் நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து அந்த பகுதியில் தொடர்ந்து சுயமரியாதை திருமணம் நடைபெற்று வருகிறது.
அர்ச்சுணன், தனியரசு தம்பதியருக்கு ஒரு மகன் பிறந்தான். அந்த குழந்தைக்கு பெரியார் என்று பெயர் சூட்டினார்கள். அவர் தற்போது அந்த பகுதியில் பள்ளி ஒன்று நடத்தி வருகிறார். பெரியாரின் கொள்கையை தீவிரமாக செயல்படுத்தி வருகிறார்.
அந்த பகுதியில் அதிகளவில் சாராயம் விற்கப்பட்டது. இதனால் பல குடும்பங்கள் பாதிப்படைந்தன. இதையடுத்து அந்த பகுதியில் சாராயத்தை ஒழித்துள்ளார்கள்.
மேலும் அந்த பகுதியில் பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழ் பெயர் சூட்டுகிறார்கள். விடுதலை விரும்பி, மதியழகன், தமிழ்ச்செல்வன் என்பன உள்பட பல்வேறு பெயர்களை சூட்டுகின்றனர்.
பெரியாரின் கொள்கையை பின்பற்றி
சுயமரியாதை திருமணம் நடத்தி வரும் இந்த கிராம மக்கள் மற்றவர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டு.
ஊருக்கு ஓர் அர்ச்சுனன் இருந்தால் இந்த மாற்றத்தை உருவாக்கலாம். பெரியாரின் கொள்கைகளை இந்த மாற்றத்திற்கு எருவாக்கலாம்.
- மஞ்சை வசந்தன்
- உண்மை இதழ், 1-15.11.18
வெள்ளி, 29 ஜூன், 2018
புதியமுறை சீர்திருத்த மணம்
31.05.1931 - குடிஅரசிலிருந்து...
சீர்திருத்தத் திருமணம் என்றும், சுயமரியாதைத் திருமணம் என்றும் சொல்லப் படுபவைகள் எல்லாம் எனது கருத்துப்படி பழைய முறையில் உள்ள அதாவது தெய்வீக சம்பந்தம், சடங்கு, இருவருக்கும் சம உரிமையில்லாத கட்டுப்பாடு, நியாய வாழ்க்கைக்கு அவசியமில்லாத, இயற்கைத் தத்துவத்திற்கு முரணான நிபந்தனைகள் ஆகியவைகளில் இருந்து விடுபட்டு நடைபெறும் திருமணங் களேயாகும். சுயமரியாதை இயக்கத்திற்குப் பின் இத்திருமண விஷயத்தில் அநேகவித சீர்திருத்த மணங்கள் நடைபெற்றிருக்கின்றன.
அதாவது பார்ப்பனப் புரோகிதமில்லாத அர்த்தமற்ற, அவசியமற்ற சடங்குகள் இல்லாத புரோகிதமேயில்லாத, ஒரே நாளில் ஒரே மணியில் நடைபெறக்கூடிய வீண் செலவு இல்லாத முதலிய மாதிரியிலும் மற்றும் கலப்பு மணங்களும், விதவை மணங்களும், குழந்தைகளுடன் விதவை மணங்களும், ஒரு கணவன் ஒரே காலத்தில் இரு பெண்களை வாழ்க்கைத் துணைவர் களாய் ஏற்றுக் கொண்ட மணங்களும், மனைவியைப் புருஷன் ரத்து செய்துவிட்டு வேறு பெண்ணை செய்து கொண்ட மணங்களும் மற்றும் கிறிஸ்துவ மதத்தில் ஒரு மனைவி ஏற்கெனவே இருக்க அதைத் தள்ளிக் கொண்ட திருமணமும் மற்றும் பொட்டுக்கட்டி தாசித் தொழிலில் ஈடுபட்ட பெண்கள் பொட்டுகளை அறுத்துவிட்டுச் செய்து கொண்ட மணமும் இப்படியாகப் பலவித சீர்திருத்த மணங்கள் இதுவரை நடைபெற்று வந்திருக்கின்றன.
ஆனால், இந்தத் திருமணம் என்பதானது இதுவரை நடந்த சீர்திருத்தத் திருமணங்களையெல்லாம்விட ஒருபடி முன்னேறிய திருமணம் என்பதை உங்களுக்குத்
தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்றைய மணமகளாகிய திருமதி. சுலோசனா ஏற்கெனவே திருமணம் நடந்து அந்தம்மையினுடைய கணவனார் இப்பொழுது நல்ல நிலையிலும் உத்தியோகத் திலும் இருந்து கொண்டிருக்கிறார்.
அப்படியிருக்க இந்தம்மைக்கு இப்போது முதல் புருஷன் இருக்கவே அவரிடமிருந்து விலகி, இது இரண் டாவதாகச் செய்துகொள்ளும் சீர்திருத்தத் திருமணமாகும். இந்தத் திருமணம் முதல் புருஷனுடைய சம்மதப்படியே நடைபெறுவதாகும். பெண்ணின் தகப்பனாரும் மற்ற நெருங்கிய பந்துக்களுடையவும் முழு சம்மதத்துடனேயே இது நடைபெறுகின்றது.
பெண்ணின் தகப்பனார் இப்பொழுது 500,600ரூபாய் சம்பளத்தில் சர்க்கார் உத்தி யோகத்தில் இருப்பதாக அறிகிறேன்.
பெண்ணின் தகப்பனார் பெண்ணுக்கு இந்த நகைகள் போட்டிருப்பதல்லாமல் இந்த மகாநாட்டுச் செலவு, கல் யாணச் செலவு, மற்ற செலவு ஆகியவைகள் அவராலேயே செய்யப்படுகிறது.
பெண்ணின் சிறிய தகப்பனார் நேரில் இருந்து எல்லாக் காரியங்களையும் நடத்துகின்றார். அதனால்தான் இந்தத் திருமணம் இதுவரை நடந்த சீர்திருத்தத் திரு மணங்களை யெல்லாம் விட ஒருபடி முன்னேறிய திருமணம் என்று சொன்னேன். மணமகன் திரு. பொன்னம்பலம் அவர்களைப் பற்றி உங்களுக்கு ஒன்றும் சொல்ல வேண்டியதில்லை. அவர் சைவ வேளாளர் வகுப்பு என்பதைச் சேர்ந்தவராயிருந்தாலும் அவற்றையெல்லாம் அடியோடு ஒழித்து எவ்வித ஜாதிமத பேதமில்லாமல் சகலத்திற்கும் துணிந்து சுயமரியாதைத் தொண்டாற்றிவருபவர்.
பெண் சிறீவைணவ என்று சொல்லப்படுவதும் சாத்தாதார் என்று சொல்லப்படுவதுமான வகுப்பைச் சேர்ந்திருந்தவர். அவற்றை யெல்லாம் அடியோடு விட்டு விட்டதுடன், இத்திருமணவிஷயத்தில் அப்பெண்ணுக்கு வேறு யார் யாரோ எவ்வளவோ சூழ்ச்சிகள் செய்து பெரும் பழிகள் கூறி, அதன் புத்தியைக் கலைத்தும் அதற்கெல்லாம் முற்றிலும் ஏமாறாமல் தைரியமாய் இருந்து இத்திருமணத் திற்கு இசைந்தனர்.
ஆகவே, இத்திருமணமானது நாம் விவாக முறையில் என்னென்ன விதமான கொள்கைகளை நமது இயக்கத்தின் மூலமாக பிரச்சாரம் செய்கின்றோமோ அவைகளில் முக்கியமானதொன்றென்றும், ஆண் பெண் விவாக விஷயத்தில் ஏற்படும் சீர்திருத்தமே நமது நாட்டை ஏன் உலகத்தையே சமதர்ம மக்களாகச் செய்யக்கூடிய ஒரு முக்கியக் கருவியாக இருக்கும் என்றும் கருதுகிறேன்.
(24.5.1931இல் நடைபெற்ற திருவாளர் பொன்னம்பலனார் - சுலோசனா மணவிழாவில் ஆற்றிய உரை)
- விடுதலை நாளேடு, 23.6.18