சுயமரியாதைஇயக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுயமரியாதைஇயக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 24 செப்டம்பர், 2019

மதுரை ஜில்லா சுயமரியாதை மகாநாடு வெங்கிடுசாமி படத்திறப்பு விழா: ஈ.வெ.ரா. விளக்கம்

(வாசக நேயர்களே,


ஊன்றிப் படித்துப் பயன்பெற வேண்டிய முக்கியப் பகுதி இது.


இதுபற்றி தங்களது கருத்தினை சுருக்கமாக எழுதி அனுப்புமாறு வேண்டுகிறோம்.


திராவிடர் இயக்கம் - 80 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்நாடு அரசியல் களத்தின் முக்கிய நிகழ்வுகள் - வரலாறு பற்றிய காலக்கண்ணாடியாக - திராவிடத்தின் தேவைக்கான நுண்ணாடியாக இது அமையும் ஒன்று. இதற்கான தேவை - பயன் - நுகர்வு பற்றிய உங்கள் கருத்துக்கள் பெரிதும் வரவேற்கப்படுகிறது. - ஆசிரியர்)


 

மதுரை ஜில்லா சுயமரியாதை மகாநாட்டில் காலம் சென்ற மதுரை சுயமரியாதை இயக்கத் தோழர் வெங்கிடுசாமி அவர்கள் திருஉருவப்படத்தை தோழர் ஈ.வெ.ராமசாமி அவர்கள் திறந்து வைக்கையில் பேசியதாவது:-

தலைவர் அவர்களே! தோழர்களே!

இன்று இம்மகாநாட்டில் காலஞ்சென்ற நமது தோழர் வெங்கிடுசாமி அவர்கள் உருவப்படத்தைத் திறந்து வைக்கும் பணியாற்றுவதை நான் ஒரு மகிழ்ச்சியின் காரியமாகவே கொள்கிறேன்.

இந்தச் சமயத்தில் இப்பணியைச் செய்யும் யாரும் திறந்து வைக்கப்படும் உருவத்தினரைப் பற்றி சில வார்த்தைகள் கூறுவது இயல்பேயாகும். தோழர் வெங்கிடசாமி அவர்கள் இவ்வூர் வாசி. அவரைப்பற்றி இவ்வூர் வாசிகளாகக் கூடியிருக்கும் இப்பெரிய கூட்டத்திற்கு உங்களுக்குத் தெரியாத எதை நான் கூறப் போகிறேன். நான் ஏதாவது சொல்லுவது என்பது 'அப்பன் வீட்டுப் பெருமையை அண்ணனுக்கு தங்கை எடுத்துச் சொல்ல முயற்சித்தது போல தான் முடியும் என்றாலும் நான் இது சமயத்தில் தோழர் வெங் கிடுசாமியைப் பற்றி மாத்திரம் அல்லாமல் இம் மாதிரியான படத்திறப்பு விழா முதலியது போன்ற காரியங்களை நாம் ஏன் செய்கிறோம் என்பதைப் பற்றியும் சிறிது கூற ஆசைப் படுகிறேன். ஏனெனில் இம் மாதிரி மகாநாடுகளில் நாம் அடிக்கடி பல பெரியார்களது படத்திறப்பு விழா நடத்து கிறோம். அன்றியும் வழிபாட்டை மறுக்கிறவர்களான நாம் இம் மாதிரி உருவப்பட திறப்பு ஏன் செய்கிறோம் என்பதற்கும் சமாதானம் சொல்ல வேண்டியது அவசியமாகும்.

உருவப்படத் திறப்பின் நோக்கம்


நாம் உருவப்படத் திறப்பு விழா நடத்துவது என்பது பூஜை செய்யவோ, தேங்காய் பழம் ஆராதனை செய்து விழுந்து கும்பிட்டு பக்தி செய்து நமக்கு வேண்டியதைக் கோரி பிரார்த்தனை செய்யவோ, நாம் செய்த செய்யும் பாவத்தை மன்னிக்கும்படி கேட்கவோ அல்ல என்பதை முதலில் தெரிவித்துக் கொள்ளுகிறேன். அப்படிப்பட்ட சக்தி இருப்பதாக கருதிக் கூட நாம் எந்தப்பட திறப்பு விழாவும் செய்வதில்லை. மற்றும் எப்படிப்பட்ட படத்திற்கு பூஜை செய்யும்படியோ, கோவில்களிலோ, தேர், ரதம், விமானம், சப்பரம் ஆகியவை களிலோ வைத்து ஊர்வலம், ஆராதனை செய்யும்படி காலித் தனம் செய்வதற்கு ஆகவும் அல்ல. ஆனால் மற்றெதற்கு என்றால் மனித சமூகநலனுக்கு சுயநல மில்லாமலும், மற்றவர் களிடமும் எவ்வித கூலியோ புகழோ, பிரதிப் பிரயோஜனமோ பெறாமலும் தன் முயற்சியால் தன் பொருளால் தன் பொறுப் பென்று கருதி தொண்டாற்றி வந்த பெரியார்களின் குணாதி சயங்களையும், தொண்டையும் எடுத்துச் சொல்வதன் மூலம் மற்றும் பலரும் அக்காரியத்தைப் பின்பற்ற வேண்டும் - பின்பற்ற மாட்டார்களா? என்பதற்கு ஆகவே தான் - மனித சமூக நலனுக்குப் பிரதிப் பிரயோஜனம் கூலி இல்லாமல் மக்கள் பாடுபட வேண்டும் என்கின்ற மேலான குணத்தைப் பிரச்சாரம் செய்வதற்கு ஒரு சாதனமாக வேதான் இக்காரியத்தைச் செய்கிறோம்.

தியாகர், பானகல் தன்மை


நாம் அடிக்கடி தியாகராயர், பானகல் அரசர், நடராஜன் முதலியவர்கள் படத் திறப்பு விழா செய்கின்றோம், எதற்காக? அவர்களது கொள்கை, எண்ணம், தொண்டு ஆகியவைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என்பதற்கு ஆகத்தான். மற்றபடி இவர்கள் எல்லாம் ஆழ்வார்கள், நாயன்மார்கள், பல தேசியத் தலைவர்கள் என்பவர்களைப் போன்று மக்களுக்கு மோட்சம் காட்டும் பக்தியைப் பற்றி பிரசாரம் செய்து பாமர மக்களை ஏமாற்றி புகழ் பெற்றவர்களோ செத்த பின் கடவுளானவர் களோ, கடவுளுடன் கலந்தவர்களோ அல்ல. பாமரர்களிடம் பேரும், புகழும் பெற்ற மகான்களுமல்ல. தங்களைக் கோவிலிலும், பூஜை வீட்டிலும், வைத்து பூஜிக்கும்படியான மாதிரியில் நடந்து கொண்டவர்களுமல்ல. அவர்கள் வெகு தைரியமாய் பழைய பழக்க வழக்கங்களையும், மூட மக்களிடமும், சுயநல சூழ்ச்சிக்காரர்களிடமும் மிகவும் செல்வாக்கு பெற்று இருக்கும் பழைய கொள்கைகளையும், உணர்ச்சிகளையும், தகர்த்தெறிந்து மக்களுக்கு சமத்துவ உணர்ச்சியையும், மனிதத் தன்மையையும் உதிக்கப் பாடுபட்டவர்கள், அப்படிப் பாடுபட்ட எவரும் அவர்களது வாழ்நாள்களில் கஷ்டப்படும் பாமர மக்களால் தூற்றப்பட்டும், துன்பப்படுத்தப்பட்டவர்களாகவே இருப்பார்கள்.

சீர்திருத்தக்காரர்கள் பட்டபாடு


உதாரணமாக கிரீஸ் தேசத்து சாக்ரடீஸ் என்பவர் எந்தக் காரியத்தையும் அறிவால் ஆராய்ச்சி செய்து பார்க்க வேண்டும் என்று சொன்னதற்காக விஷம் கொடுத்து கொல்லப்பட்டார். கவுதம புத்தர் என்பவர் ஆரியப் புரட்டுகளை எதிர்த்ததற்காக எவ்வளவோ கஷ்டப்பட்டார், யேசு கிறிஸ்து விக்கிரகாராதனை, கோவில் பூஜை முதலியவைகளை எதிர்த்துப் பிரசாரம் செய்ததற்கு ஆக சித்திரவதை செய்து கொல்லப்பட்டார். முகமது நபி அனேக மூடப் பழக்க வழக்கங்களையும், பல தெய்வ உணர்ச்சியையும் பெண் கொடுமையையும் எதிர்த்து பல நல்ல கொள்கைகளைப் பிரச்சாரம் செய்ததற்கு ஆக பல சங்கடப்படுத்தப்பட்டார். அப்படிப்பட்டவர்களும் மற்றும் அது போன்ற பல புதிய அபிப்பிராயம் சொன்னவர்களும் அவர்களது ஆயுள் காலத்தில் இது போல் எவ்வளவு துன்பப்படுத்தப்பட்டு எவ்வளவு கஷ்டப்படுத்தப்பட்டு, எவ்வளவு தொல்லை படுத்தப்பட்டு இருந்தாலும் இன்று அவர்கள் கோடானு கோடி மக்களால் அவர்களது அபிப்பிராயங்களோடு மதிக்கப் படுகிறார்கள். கோடிக் கணக்கான பேர்களால் பின்பற்றப் படுகிறார்கள். அது போலவே தான் முற்கூறப்பட்ட பெரியார்களும், நாங்களும் இன்று எங்கள் அபிப்பிராயங்கள் எவ்வளவு தான் வெறுக்கப்பட்ட போதிலும் பாமர மக்க ளாலும், சுய நல சூழ்ச்சிக்காரர்களாலும் எவ்வளவு தான் வெறுக்கப்பட்டு தொல்லைகள் விளைவிக்கப்பட்டு அல்லல் பட்டாலும் பிற்காலத்தில் எங்கள் தொண்டு மக்களுக்கு மிக்க பயன்தரக் கூடியதாயும், பாராட்டக் கூடியதாயும் மக்களை ஞானவழியில் நடத்தக் கூடியதாயும் இருக்கும் என்கின்ற நம்பிக்கையுடையவர்களாக இருக்கிறோம். இல்லாவிட்டால் இவ்வளவு தொல்லைகளுடன் எங்களுக்கு எவ்விதத்திலும் சுயநலமற்ற இந்தத் தொண்டை பெரும்பான்மையான மக்களுடைய இவ்வளவு வெறுப்பிற்கிடையில் துணிந்து ஆற்ற முனைந்திருக்க மாட்டோம்.

புகழப்பட்டோர் கதி


நாங்கள் பாமர மக்களால் வெறுக்கப்படுவதாலேயே எங்கள் தொண்டின் மேன்மையை உணருகிறோம். பாமர மக்கள் மதித்து பக்தி செலுத்தி புகழும்படியாக நடந்து கொண்டவர்களுடைய எப்படிப்பட்ட தொண்டும் அபிப் பிராயமும் அவர்களது வாழ்நாளுக்குப் பின் பயன்பட்டதாக எங்களுக்கு ஆதாரமே கிடைக்கவில்லை. அப்படிப் பட்டவர்களால் மனித சமூகம் திருத்தப்பாடு அடைந்ததாக எவ்வித ருஜுவும் இதுவரை கிடைத்ததில்லை. நாமறிய ஒரு காலத்தில் திலகர் புகழப்பட்டார், பெசண்டம்மையார் புகழப்பெற்றார், காந்தியும் புகழப்படுகிறார். சரித்திரத்தில் எத்தனையோ ஆச்சாரியார்கள், நாயன்மார்கள், ஆழ் வார்கள், சுவாமிமார்கள் எனப்பட்ட எத்தனையோ பேர் புகழப்பட்டதாகவும் பார்க்கிறோம். இவர்களில் பலர் தெய்வீகம் கற்பிக்கப்பட்டார்கள். பலர் தெய்வங்களாகவும் கருதப்பட்டிருக்கிறார்கள். ஆனால் இவர்களாலெல்லாம் ஒரு காதொடிந்த ஊசியளவு பயன் மக்களுக்கு ஏற்படுகிறதா? ஏற்பட்டதா? ஏற்படும் என்கின்ற குறியாவது காண்கின்றதா? இவர்கள் எல்லாம் புராணங்களுக்கு புதிய உரை எழுதுகிற உரையாசிரியர்கள் போல் தோன்றி பாமரர்களுடைய பக்திக்கும், பூஜைக்கும் பாராட்டுதலுக்கும் ஆளாகி முட்டாள் தனத்துடனும் அல்லது பாமர மக்களை ஏமாற்றிப் பொய், புகழ் பெற்று வருகிறோமே என்கின்ற உணர்ச்சியுடனும் தானே செத்தார்கள் சாகின்றார்கள், சாகப்போகின்றார்கள் என்று சொல்லவேண்டி இருக்கிறதே தவிர கண்கண்ட பயன் என்ன என்று பாருங்கள்.

இன்று உண்மையில் மனித சமூகத்திற்கு ஏதாவது புதிய மாறுதல் உணர்ச்சி அல்லது புரட்சிகரமான சுதந்திரம், விடுதலை, சமத்துவம், சுயமரியாதை என்பதான உணர்ச்சி தோன்றி இருக்குமானால் அவை அனைத்தும் ஒரு காலத் திலோ, நேற்றோ, இன்றோ கல்லடிப்பட்டு, கொல்லப்பட்டு, கையடிப்பட்டு, தொல்லைப்பட்டு உயிர் துறந்த, உயிர் வாழ்கின்ற - வெறுக்கப்பட்ட மக்களாலே என்பது ஆராய்ந்து பார்க்கின்ற எவருக்கும் சுலபத்தில் புலப்படும்.

தேசீய வாலிபர்கள் யோக்கியதை


இன்று தியாகராயரையும், நாயரையும் பனகாலரசரையும் தூற்றுகின்ற வாலிபர்களை எனக்குத் தெரியும். அவர்களுக்குத் தேசிய வீரர் பட்டம் இருப்பதும் எனக்குத் தெரியும். ஆனால் அவர்கள் தாய், தகப்பன்மார்கள் நாயிலும் பன்றியிலும் கீழான ஜந்துவாய் மதித்து நடத்தப்பட்டதையும் அது எப்படி மாறி அவர்கள் வயிற்றில் பிறந்தவர்கள் தேசிய வீர வாலிபர்கள் ஆனார்கள் என்பதும் அவர்கள் அறியார்கள். இன்றைய தேசீய வாலிபர்கள் பலர் கருத்தரிப்பதற்கு முன் பாகவே அவர்களில் பலர் அறிவு பெறுவதற்கு முன்பாகவே தியாகராயரும், நாயரும், பனகால் அரசரும் புரட்சி செய்து மனிதத் தன்மை உணர்ச்சியை கிளப்பிவிட்டு உயிர் துறந்து விட்டார்கள். ஆதலாலேயே அது தெரிய முடியாத வாலி பர்கள் இன்று தங்கள் பிறவி யோக்கியதையே இப்படித்தான் இருந்தது என்று கருதி தலைகீழாக நடக்கிறார்கள். பலர் தெரிந்திருந்தும் தாங்கள் கீழ் மக்களாய் இருத்திவிடப்பட்ட உணர்ச்சியில் கீழ்மை புத்தி கொண்டு நன்றி மறந்த மக்களாய் நடந்து கொள்ளுகிறார்கள். எப்படியானாலும் இந்த சில மக்களுக்கு அறிவு இல்லாததாலோ நன்றி காட்டும் குணம் இல்லாததாலோ அப்பெரியார்களுடைய பெருமையும் அருந்தொண்டுகளும் பயனற்றதாக ஆகிவிடும் என்று சொல்ல முடியாது.

வெங்கிடுசாமி பெருமை


அப்பெரியார்கள் எல்லாம் மக்களின் தன்மை உயர வேண்டுமென்று கருதி தொண்டாற்றியவர்களே ஒழிய மக்கள் தங்களை போற்றிப் புகழ்ந்து பூஜிக்க வேண்டுமென்று கருதியவர்கள் அல்ல. ஆதலால் அப்பெரியவர்களை ஞாபகப்படுத்தி அவர்கள் தன்மையை மற்ற மக்கள் உணர்ந்து அம்மாதிரியான உள்ளம் பெற்று மனித சமூகத்துக்கு தொண் டாற்ற முற்பட வேண்டும் என்பதற்காகவே அவர்களது உருவப்படத் திறப்பு விழாக்கள் என்ற பெயர் வைத்து இவற்றை எடுத்துக் கொள்ளுகிறோம். அந்த முறையில் நமது தோழர் வெங் கிடுசாமி அவர்களும் குறிப்பிடத் தக்கவராவர். வெங்கிடுசாமி உண்மை சுயமரியாதை வீரர். 1926-முதலே சுயமரியாதை சங்கம் வைத்து உழைத்தவர். அப்போதே சுயமரியாதை திருமணம் செய்து கொண்டவர். சங்கத்துக்கு தாராளமாய் பணம் கொடுத்து உதவி வந்தவர். ஒவ்வொரு கொள்கையையும் அனுபவத்தில் பிறருக்கு செய்து காட்டி யவர். அவரது மனைவியார் ஒரு காலத்தில் ஏதோ ஒரு பஜனைக் கூட்டத்தின் காலில் விழுந்து கும்பிட்டு பிரசாதம் வாங்கியதற்கு ஆக பல மாதம் ''திருநீலகண்டராய் இருந்து மனைவிக்கு உண்மை ஞானம் ஏற்பட்ட பின்பு கணவரானவர். அவர் காலமான பின்பு உண்மையிலேயே மதுரையில் சுயமரியாதை சங்கம் சரியாக வேலை செய்யவில்லை. சுயமரியாதை உணர்ச்சியும் வீறு கொண்டெழவில்லை. இதிலிருந்தே அவர் எவ்வளவு அவசியமானவரும் உண்மை கவலையுள்ளவருமாய் இருந்தார் என்பதும் விளங்கும். இதனைக் கேட்டபின் அவரைப் பின்பற்றி பல தோழர்கள் வெளிப்படுவார்கள். அதனால் இயக்கத்துக்கு மேன்மை உண்டாகி மக்களுக்கு நன்மை பயக்கும் என்பதற்கு ஆகவே இப்படத் திறப்புவிழா நடத்துகிறேன் என்று கூறி படத்தைத் திறந்து வைத்தார்.

- விடுதலை, 19.3.1938
- விடுதலை நாளேடு, 13 .9 .19

செவ்வாய், 12 பிப்ரவரி, 2019

சுயமரியாதைத் தலைவர்

28.12.1930 - குடிஅரசிலிருந்து...

சுயமரியாதைச் சங்கத்தின் தலைவர் உயர்திரு. கீ.றி.கி  சவுந்திர பாண்டியன் அவர் கள் ராமநாதபுரம் ஜில்லா போர்டு தலைவர் பதவியை கண நேரத்தில் ராஜினாமா செய்து உண்மைச் சுயமரியாதைக்கு உதாரணமாய் விளங்கிவிட்டார். திரு. பாண்டியன் அவர்கள் அந்த தானத்தை ஒருபோதும் விரும்பினதேயில்லை. அவரது நண்பர்களின் வலியுறுத் தலுக்காகவும், ஒரு கொள்கைக்காகவும் அதாவது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நன்மை செய்வதற்காகவுமே அதை ஒரு ஆயுதமாக ஒப்புக் கொண்டது முதல் அந்த வேலையை மிக்க நீதியுடனும், பொறுப்புடனும், சுயமரியா தையுடனும் யாருடைய தயவு தாட்சண்யத் திற்கும் கட்டுப்படாமல், தனக்குச் சரியென்று தோன்றியபடி நடந்து வந்தார்.

முக்கியமாய் ஒடுக்கப்பட்ட சமுகத்தாருக் கும் தாழ்த்தப்பட்ட சமுகத்தாருக்கும் தன்னால் கூடியவரையில் அதன் மூலம் நன்மை செய்து வந்தார். பணக்காரர் ஏழை என்கின்ற வித் தியாசமில்லாமல் அதிகாரத் தையும், சலு கையையும் பிரயோகித்து வந்தார். பணக் காரர்கள் குற்றத்தை எடுத்துச் சொல்லுவதிலும், அவர்களின் பணத்திமிரான காரியங்களைக் காண்பதிலும், சிறிதும் பின் வாங்காது, ஜாதித் திமிர்காரரைக் கண்டிப்பது போலவே தைரிய மாய் கண்டித்து நடவடிக்கை நடத்தி வந்த தோடு அவர்களுக்கு அடிக்கடி புத்தி புகட்டி யும் வந்தார். அப்பதவியின் மூலம் சுயமரி யாதைக் கொள்கையை பல விஷயங்களில் நடை முறையில் நடத்திக் காட்டினார். தனக் கென்று வேறு தொழில் ஒன்றும் வைத்துக் கொள்ளாமல் தனது முழு நேரத்தையும் அதிலேயே செலுத்தி வந்தார். இவை மாத்திர மல்லாமல் எந்த நிமிஷத்திலும் நாளைக்கும் அந்த வேலையில் இருக்க வேண்டும் என்றாவது மறுபடியும் அதை அடைய வேண்டு மென்றாவது கருதாமல் ஒவ்வொரு நிமிஷமும் அந்தப் பதவியை அலட்சியமாய் கருதிக் கொண்டே நடுநிலையிலிருந்து பிசகாமல், தான் செய்ய வேண்டிய காரியங் களை துணிவுடன் செய்து வந்தார். (இவ்வளவு காரியங் களும் சர்க்கார் நியமனத் தின் மூலம் அப்பதவி கிடைத்ததினா லேயேதான் செய்ய முடிந்தது என்பதையும் குறிப்பிட்டு விடுகின்றோம். ஏனெனில் தேர்தல் மூலம் பதவி பெற்றிருந்தால், அங்கத்தினர்களுக்கு விலை கொடுத்தோ, வியாபாரம் பேசியோ அடிமைப்பட்டோ அடைந்திருக்க வேண்டு மாதலால் இவ்வளவு சுயேச்சை யோடும் சுயமரியாதையோடும், நாணயத்தோடும், நீதியோடும் இருந்திருக்கவே முடியாது. இப்படிப்பட்ட ஒரு பெருமையும் நீதியும் வாய்ந்த கனவானின் நிர்வாகம் சிலருக்காவது தங்கள் நம்பிக்கைக்குப் பாத்திரமில்லாமல் போவதில் ஆச்சரிய மொன்றுமில்லை. அதுமாத்திரமல்லாமல் பார்ப்பனரல்லாதார் இயக்க அரசியல் வானம் கருத்து அடித்த சண்ட மாருதத்தால் பொதுக் கட்டுப்பாடு நாணயம் ஆகியவைகள் சின்னாப் பின்னப் பட நேர்ந்து. சுயநலமும், பேராசையும் நாட்டில் தாண்டவ மாடியதின் பயனாய் நடந்த நிகழ்ச்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானங் களுக்கு அதிகமான தலைவிரி கோலம் ஏற்பட்டு அதைச் சுலபமாய் யாரும் கையாளும்படி செய்துவிட்டது.

ஆகவே அது உசிதா உசிதமில்லாமல் கையாளப்படும்படியாக ஆனதும் அதிசிய மல்ல. இந்த நிலையில் சிலர் ராமநாதபுரம் ஜில்லா போர்டு தலைவர் மீது அதை பிரயோ கிக்கக் கருதி அது வெளிப்பட்டால் தங்களுக்கு ஆமோதிக்கவும், ஆதரிக்கவும் கூட நபர்கள் கிடையாதென நினைத்து வெகு பத்திரமாக இரகசியத்திலேயே ஏற்பாடு செய்து திடீ ரென்று கொண்டு வந்திருப்பதாகத் தெரிகின் றது. இத் தீர்மானம்  வருமென்று தெரிந்திருந் தால், உடனே முன்னமேயே ராஜினாமா செய்திருப்பார். வெறும் மந்திரி சம்மதமான கட்சி காரணமாய் இத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது தவிர திரு. பாண்டியன் அவர்கள் நிர்வாகத்தைப் பற்றி சிறிதாவது அதிருப்தி அடைந்து அதனால் கொண்டு வரப்பட்டது என்று யாராலும் சொல்லமுடியாது. அவரது நிர்வாகத்தில் யாரும் எந்தச் சமயமும் மீட்டிங்கில் அதிர்ப்தி பட்டதாக காட்டினதே கிடையாது.

உதாரணமாக சமீபத்தில் ராமநாதபுரம் ஜில்லா கலெக்டர் திரு. மெக்வீன் அவர்கள் மீட்டிங்கில் ஒரு காரியத்தில் பிரசிடெண்டின் நடவடிக்கைக்கு அதிர்ப்தி காட்டி ஒரு தீர்மானம் கொண்டு வந்தபோது, அதை ஆதரிக்கவோ ஆமோதிக்கவோ கூட அந்த கூட்டத்தில் ஒரு மெம்பரும்  இல்லை. ஜில்லா கலெக்டரை அனுசரித்துப் பேசக்கூட ஆளில்லை இதுவரை எந்தப் பத்திரிகை களாவது அவரது நிர்வாகத்தை ஆட்சே பித்தோ, அதிர்ப்தி காட்டியோ அல்லது கட்சிவாதம் நடந்ததாகவாவது காட்டியோ ஒரு வரியும் எழுதப்பட்டதாக சொல்ல முடியாது. அவர் நிர்வாக நேர்மைக்கு ஒரு சிறிய உதாரணம் வேண்டுமானால் ஒன்றைக் காட்டுவோம். அதாவது எந்த மோட்டார் காரராவது தீண்டப்படாத மக்கள் என்ப வரை  ஏற்றிச் செல்ல மறுத்தால் அந்த லைசென் கேன்சல் செய்யப்படும் என்று உத்தரவு போட்டார். பள்ளிக்கூட விஷயங் களில்  தாழ்த்தப்பட்ட மக்களைச் சேர்க்காத பள்ளிக்கூட உபாத்தியாயர் களையெல்லாம் மாற்றியும், தண்டித்தும் சர்வசாதாரணமாக எல்லாப் பள்ளிக் கூடங்களிலும் யாரும் படிக்கும்படியாய் செய்தார். நாட்டுக்கோட்டை நகரத்தார் விஷயங்களில் பணக்காரர்களை விட சாதாரண மக்களிடமே அதிகநேசம் வைத்தும் சீர்திருத்த வாலிப உலகத்திற்கு உற் சாகத்தை தந்து அவ்வகுப்பில் அநேகருக்குப் பணமே எல்லாம் செய்யவல்லது என்கின்ற உணர்ச்சியை மாற்றி, அன்பைப் பெருக்கி வந்தார்.. வைதிகர்களிடமும் பணக்காரர் களிடமும் பேசும் நேரம்மெல்லாம் தனக்கு மிக்க கஷ்டமாக இருப்பதாகவே இருக்கும். வாலிபர்களிடமும், சாதாரண மக்களிடமும், தாழ்த்தப்பட்ட மக்களிடமும் பேசும் நேரத் தையே மிக்க உற்சாகமாகக் கருதுவார். இப்படிப்பட்ட குணமுள்ளவர் ஆட்சியில் வைதிகர்களுக்கும், செல்வந்தர்களுக்கும், பிரபுத்தனக்காரருக்கும் அதிருப்தி ஏற்பட் டதும் நம்பிக்கை இல்லை என்று சொல்ல வேண்டி வந்ததும் திரு. பாண்டியன் அவர் களுக்கு ஒரு நற்சாட்சிப் பத்திரமாகும். இதன் மூலம் மற்ற மெம்பர்கள் போர்டிலிருந்து சீர்திருத்த உலகத்திற்கும், சுயமரியாதை உலகத்திற்கும், சமதர்ம உலகத்திற்கும் தொண்டு செய்ய திரு. பாண்டியனை உத வியது ஒரு பெரிய உப காரமேயாகும். ஆதலால் இந்த நிலை ஏற்பட்ட தற்கு நாம் உண்மையாகவே மகிழ்ச்சி யடைகின்றோம்.

(தொடரும்)
-  விடுதலை நாளேடு, 9.2.19

புதன், 30 மே, 2018

உலகமெங்கும் சுயமரியாதை இயக்கம்

07.10.1928 - குடிஅரசிலிருந்து...

சுயமரியாதை இயக்கம் நம் தமிழ்நாட்டில் மாத்திரம் இருப்பதாக சிலர் கருதிக் கொண்டு இருக்கின்றார்கள். இதை தப்பான எண்ணம் என்றே சொல்லுவோம். உலகத்தில் இது சமயம் எங்கு பார்த்தாலும் உண்மை உழைப்பாளிகளும் வீரர்களும் இந்தக் காரியத்தைத்தான் செய்து வருகின் றார்கள். இந்த இயக்கத்தினால்தான் ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் நாட்டை விடுதலை அடையச் செய்தும் வருகின்றார்கள். ஆனால் இது கஷ்டப்படவும், நஷ்டப் படவும் துணிந்தவர் களாலும், உண்மை வீரம் உடைய வர்களாலும் மாத்திரம் ஆரம்பிக்கக்கூடிய காரியமானதால் சுயநலத்திற்காக பொதுநல சேவையில் ஈடுபட்டிருப்பதாக வேஷம் போடுகின் றவர்கள் இக்காரியத்தைச் செய்ய முடியாததுடன் வேறொருவர் செய்வது என்பதையும் அவர்களால் சகித்துக் கொண்டிருக்க முடியாது. ஏனெனில் மக்களுக்கு உண்மையான காரியத்தில் கவலை ஏற்பட்டு அதில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டால் போலி களுக்கு இடமில்லாமல் போவதுடன் அவர்களது வாழ்க் கைக்கே ஆபத்தாய் முடிந்து விடும். ஆதலால் அப்படிப் பட்டவர்கள் சுயமரியாதை இயக்கத்தைத் தாக்க வேண்டிய வர்களாகி விடுகின்றார்கள். எனவே எவ்வளவு தான் சுய நலமிகளால் இவ்வியக்கம் தாக்கப்பட்டாலும், ஒழிக்க எவ்வளவு தான் சூழ்ச்சி முறைகள் கையாளப்பட்டாலும் அந்த முயற்சிகள் சூரியனை கைகொண்டு மறைத்து உலகத்திற்கு வெளிச்சம் இல்லாமல் செய்து விடலாம் என்கின்ற முட்டாள் தனமான முயற்சிக்கு சமானமாக முடியுமே அல்லாமல் வேறல்ல,

சுயமரியாதை இயக்கம் இப்போது ஒவ்வொரு நாட்டிலும் வீறு கொண்டுஎழுந்து தாண்டவமாடுகின்றது. பம்பாய் மாகாணத்தில் கொஞ்சகாலமாக பெருத்த கிளர்ச்சிகள் நடந்து வருகின்றன. அதாவது சென்ற இரண்டு வருசத்திற்கு முன்பே அங்கு புரோகிதக் கொடுமையை ஒழிக்க சட்ட சபைக்குப் பல தீர்மானங்கள் வந்தன. ஜாதித்திமிரை ஒழிக்க பூனாவில் பெருத்த கிளர்ச்சிகள் நடந்து பல கேசுகளும் ஏற்பட்டு பல பெரியார்களும் சிறை சென்றனர். பம்பாயில் சென்ற வருஷத்தில் பாதிரிமார் களையும் முல்லாக்களையும் குருமார்களையும் ஒழிக்க வேண்டும் என்று வாலிப மகாநாடுகளில் பேசினார்கள். மற்றும் ஜாதித் திமிர் கொண்டவர்களுக்கு வண்ணார், நாவிதர் என்பவர்கள் தங்கள் தொழிலைச் செய்வதில்லை என்று தீர்மானித்துக் கொண்டார்கள். பள்ளிக்கூடங்களில் பிள்ளைகள் எல்லோரும் அதாவது எல்லா வகுப்புக்காரர் களும் ஒரே பாத்திரத் தில் தண்ணீர் எடுத்துக் கொள்ள உரிமை இருக்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொண் டார்கள்.

மத்திய மாகாணத்தில் கோவிலுக்குள் இந்துக்கள் என்பவர்களில் உள்ள எல்லா வகுப்பாரும் போகலாம் என்று தீர்மானித்து அந்தப்படியே சில இடங்களில் நடந்து வருகின்றார்கள்.

கல்கத்தாவில் மகமதிய மாணவர்கள் தாடி வளர்ப்பதை மத சம்பந்தத்தில், இருந்து பிரித்து விட வேண்டு மென்று பலாத்கார சண்டை போட்டுக் கொண் டார்கள். சமீப காலத்தில் பஞ்சாப் மாகாணத்தில் சீக்கியர்கள் தங்களுடைய மத ஆரம்பகாலம் முதல் வெகு முக்கியமானதாகக் கருதி வந்த காரியங்களில் ஒன்றாகிய க்ஷவரம் செய்து கொள்ளக் கூடாது, தலைமயிரைக் கத்தரிக்கக் கூடாது என்கின்ற கொள்கையை அடியோடு மாற்றி தலைமயிர் வெட்டிக் கொள்ள வேண்டும் என்று கிளர்ச்சி செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.

கடைசியாக கல்கத்தாவில் நம் நாட்டு சுயமரியாதை இயக்கத்தைப் போலவே - ஏன் இதைவிட அதிவேகமாகவும் என்று கூட சொல்லும்படியான - ஒரு பெரிய இயக்கத்தை ஆரம்பித்து விட்டார்கள். அதன் கொள்கைகள் நமது சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகளைவிட வேகமுள்ளதாய்க் காணப்படுகின்றன. அதாவது,

ஜாதி வித்தியாசத்தை ஒழிப்பது,

மூடப்பழக்க வழக்கங்களை ஒழிப்பது,

குருமார்கள், ஆச்சாரியார்கள், புரோகிதர்கள் முதலிய வர்களின் ஆதிக்கங்களை ஒழித்து பகுத்தறிவை விளக்குவது, பெண்கள் அடிமையை ஒழித்தும் ஜாதிக்கட்டுப்பாட்டை ஒழித்தும் கலப்பு விவாகம் முதலி யவைகளை ஆதரிப்பது, முதலாளிகளின் ஆதிக் கத்தை ஒழித்து தொழிலாளர் களுக்கு உரிமை அளிப்பது,

மிராசுதாரர்களின் ஆதிக்கத்தை ஒழித்து விவசாயிகளுக்கு உரிமை அளிப்பது.

பொது வாழ்வில் ஏழை பணக்காரன் என்கின்ற பாகுபாட்டையும் உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி என்கின்ற வித்தியாசத்தையும் ஒழித்து யாவருக்கும் சமத்துவத்தை அளிப்பது.

இவ்வளவும் போதாமல் நாட்டின் சொத்துக்களை எல் லோருக்கும் சரிசமமாய்ப் பங்கிட்டுக் கொடுக்க வேண்டும் என்னும் கொள்கையையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கின் றார்கள்.

அதோடு மாத்திரமல்லாமல் அதன் தலைவர் திரு சுபாஷ் சந்திரபோஸ் என்பவர் இவற்றை நிறைவேற்ற அரசியல் சங்கங்களிலிருந்து பிரிந்து தனியாய் நின்று முயற்சி செய்ய வேண்டும் என்று சொல்லி விட்டதுடன் இவைகள்தான் உண்மையான விடுதலைக்கு மார்க்கம் என்று சொல்லி இவ்வியக்கத்திற்கு உண்மையான பூரண விடுதலை இயக்கம் என்று பெயரும் கொடுத்திருக்கின்றார்.

வெகு சீக்கிரத்தில் இதன் பிரச்சாரம் ஆரம்பிக்கப்படுமாம். இதைப் பார்த்தவர்கள் நமது சுயமரியாதை இயக்கத்தை மிதவாக இயக்கம் என்றுதான் சொல்லுவார்கள். இப்படி இருந்தாலும் சுயமரியாதை இயக்கத்தை மிக மோசமான இயக்கம் என்றும் மிக வேகமான இயக்கம் என்றும் சொல்லுவதுடன் நம் மீது பழி சுமத்துகின்றவர்களுக்கும் குறையில்லை. மத விஷயங்களில் கல்கத்தா இயக்கத்தை விட வேகமாக ஆப்கானிஸ் தானமும் துருக்கியும் போய்க் கொண்டிருப்பது எல்லோரும் அறிந்ததேயாகும். அதாவது ஆப்கன் அமீர் அவர்கள் தன் சீர்திருத்தக் கட்டளைக்கு விரோதமாய் பேசுகின்றவர்களை யெல்லாம் மாஜி கவர்னர் உள்பட மௌல்விகள் உள்பட சிறையில் எல்லோரையும் அடைக்கின்றார்.

துருக்கியோ அரசாங்கத்திற்கும் மதத்திற்கும் சம்பந்த மில்லை என்று விளம்பரப்படுத்தி விட்டது.

ருஷியாவோ வைதீக கொள்கைகளை உடையவர்களை யெல்லாம் கைது செய்து வருகின்றது. அதாவது சமீபத்தில் அங்கு சூரியனையும் சந்திரனையும் தெய்வமாக வணங்குபவர்களையெல்லாம் போலிசார் கைது செய்து வருகின்றார்கள்.

இதே ருஷியாவில் கொஞ்ச காலத்திற்கு முன்பு பள்ளிக்கூடங்களில் மதத்தைப் பற்றியும், கடவுளைப் பற்றியும் பிள்ளைகளுக்கு கற்பிக்கக் கூடாது என்று உபாத்தியாயர்களுக்கு உத்திரவு போட்டது எல்லோருக்கும் ஞாபகம் இருக்க லாம். அதுமாத்திரமல்லாமல் அங்குள்ள கோவில்களை இடித்ததும் ஞாபக மிருக்கலாம்.

நமது நாட்டைச் சுற்றியுள்ள இடங்களில் இவ்வளவு காரியங்கள் நடக்கின்ற போது நமது நாட்டில் இன்னமும் புராணக் காரரும், புரோகிதர்களும், பூசாரிகளும் பொதுநலத்தின் பேரால் வாழ்வை நடத்தும் வயிற்றுப் பிழைப்புக்காரர்களும் ஆதிக்கம் செலுத்துகின்றார்கள். என்றால் நம் நாட்டு வாலிபர்களுக்கு கண்ணும் காதும் இருக்கின்றதா இல்லையா என்று கேட்கின்றோம்.

சமுதாயத் தொண்டில் முதலானதும் முக்கிய மானதுமான ஜாதியொழிப்பை எடுத்துக் கொண்டால் இராமனின் முதல் செய்கையும் கடைசிச் செய்கையும் ஜாதியைக் காப்பாற்றப் பிறந்து, ஜாதியைக் காப்பாற்றி விட்டுச் செத்ததேயாம். நம் நாட்டில் சமுதாயச்

சீர்திருத்த வேலையோ, ஒழுக்கம் பற்றிய பிரச்சார வேலையோ, பகுத்தறிவுப் பிரச்சார வேலையோ ஓர் அளவுக்காவது நடக்க வேண்டு மானால் இராமாயணம் முதலில் ஒழிக்கப்படல் வேண்டும். - தந்தைபெரியார்

- விடுதலை நாளேடு, 19.5.18