நாகம்மையார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நாகம்மையார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 20 பிப்ரவரி, 2025

நாகம்மையார் குழந்தைகள் இல்லம்







வாசமுள்ள வாடாமல்லிக்கு வயது50




கடவுளை மற, மனிதனை நினை என்று சொன்ன செல்வந்தருக்கு உணவு இருந்தும் உண்ண முடியாத உணர்வு, தண்ணீர் இருந்தும் தாகம் தீர்க்க முடியாத தா(க்)கம் போன்ற உணர்வுகள் ஏற்பட, தாய், தந்தையின்றி, ஆதரவற்ற பெண் குழந்தைகள் படும் துயரங்களையெல்லாம் கண்ணால் கண்டதே காரணமாக இருந்தது. அந்த உணர்வுகளைப் போக்க, மனிதநேயம் என்னும் கேடயத்தைக் கொண்டு, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் சார்பில் 1959 ஆம் ஆண்டு திருச்சி, பெரியார் மாளிகையில் ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்காக இல்லம் ஒன்றை உருவாக்கி, தனக்குள் இருந்த தாக்கத்தைப் போக்கிக் கொண்டார் பகுத்தறிவுப் பகலவன் தந்தைபெரியார் அவர்கள். 13 பெண் குழந்தைகளோடு செயல்பட்டு வந்த இல்லத்தில், ஆதரவற்ற பெண் குழந்தைகளின் சேர்க்கை எண்ணிக்கை பெருகிக் கொண்டே வந்ததால் அரசின் உதவி கட்டாயத் தேவை என்கிற நிலைக்கு இவ்வில்லம் வந்துவிட்டது. அந் நாளில் அரசின் உதவி தேவை என்றால், இல்லம் அனாதை என்ற பெயரோடு செயல்பட வேண்டுமென்பது அரசு விதிமுறையாகும்.

அதனால் 1961 ஆம் ஆண்டு முதல் அரசு நிதி உதவியுடன் நாகம்மையார் அனாதைப் பெண் கள் இல்லமாக தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதுபோன்ற அனாதை இல்லங்களில் சேர்க்கப்படும் பிள்ளைகள், பள்ளி வயது என்று சொல்லப்படும் 6 வயது முதல் 18 வயதிற்குள் இருந்தது. பள்ளியில் சேர்ந்து படித்தால் மட்டுமே அரசு நிதி உதவி வழங்கப்படும் என்பது நிதியுதவி விதி முறைகளில் உள்ள நிபந்தனையாகும்.

இவ்வில்லக் குழந்தைகளைப் பராமரிக்கும் பெரும் சுமையை, அன்னை மணியம்மையார் அவர்கள் சுகமாக ஏற்றுக் கொண்டு, நடத்தி வருவதை அறிந்த மருத்துவத்துறை அதி காரிகள், மருத்துவர்கள் பலர் மருத்துவமனைகளில் கைவிடப்பட்ட 30 நாட்கள் முதல் 3 மாதமான குழந்தைகள் மற்றும் ஆதரவற்ற பெண் குழந்தைகளை அம்மா அவர்களிடம் ஒப்படைக்கத் தொடங்கினார்கள். அப்படி ஒப்படைக்கப்பட்ட 6 வயதிற்குக் குறைவாக உள்ள குழந்தைகளை இவ்வில்லத்தில் சேர்த்து வளர்க்க அரசு விதிமுறைகளில் இடமில்லை. இத்தகைய குழந்தைகளைப் பராமரிக்க பெரியார் மணியம்மை குழந்தைகள் காப்பகம் எனத் தனியாக உருவாக்கப்பட்டு, 6 வயதிற்கும் குறைவான குழந்தைகள் வளர்க்கப்பட்டனர். தாய், தந்தையற்ற இக்குழந்தைகளுக்கெல்லாம் பெயருக்கு முன்னால் ஈ.வெ.ரா.ம (ஈ.வெ.ராம சாமி மணியம்மை) என்ற முதல் எழுத்துகள் சேர்க்கப்பட்டு பதிவேடுகளில் அவர்களின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டன.

இந்தக் கைக்குழந்தைகளையெல்லாம் வளர்க்க, தனது தோளையே தொட்டிலாக்கி, நெஞ்சையே பஞ்சணையாக்கி இன்று அரசு விளம்பரத்தோடு செய்து வரும் தொட்டில் குழந்தைத் திட்டத்தை அன்றே அம்மா அவர்கள் விளம்பரமின்றி தனி ஒரு ஆளாக இருந்து செய்து காட்டி, தரணி போற்றும் தாயாகப் போற்றப்பட்டார்கள்.

எந்த ஒரு சூழ்நிலையிலும், இக்குழந்தை களுக்கெல்லாம் தாய், தந்தை இல்லையே என்ற ஏக்க உணர்வு வந்துவிடக்கூடாது என்பதில், அய்யாவும், அம்மாவும் மிகவும் கவனமாக இருந்ததுடன், இக்குழந்தைகளின் படிப்பு, வளர்ப்பு இவற்றில் அம்மா அவர்கள் மிகவும் கவனமாக ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்து வரும் போது, சில நேரங்களில் சில குழந்தைகளின் செயல்பாடுகளால், மிகவும் ஆத்திரப்பட்டு, கடுமையாக நடந்து கொள்ள வேண்டிய நிலையும் வந்திருக்கிறது. பிறகு அடுத்தவர்கள் யாரும் உங்களைப் பற்றி தகாத வார்த்தையைக் கொண்டு தவறாகப் பேசி விடக்கூடாது என்பதற்காகத்தான், நான் கடுமையாக நடந்து கொண்டேன் என்றும், நமக்குப் பொன்னும் பொருளும் சிறப்பல்ல, நாம் பொருள்பட வாழ்வதுதான் சிறப்பு என்று கூறி, ஆசை, பேராசை, இவைகளுக்கு அர்த்தம் தெரியக்கூடாது என்பதிலும், எளிமை, சிக்கனம், ஒற்றுமை, சுறுசுறுப்பு, கடின உழைப்பு இவைகளுக்கெல்லாம் உதாரணமாக நாம் தான் இருக்க வேண்டுமென்றும் சொல்லி வளர்த்தும், வாழ்ந்தும் காட்டிய தோடல்லாமல், இக்குழந்தைகள் இல்லாத சுற்றுப்பயணமே இல்லை என்கிற அளவிலும், சுற்றுப்பயணத்தில் கழகக் கண்மணிகளால் வழங்கப்பட்டு வந்த அன்பளிப்புகள் மற்றும் அனைத்தையும் இவ்வில்லக் குழந்தைகளுக்கே கொடுத்து மகிழ்ந்து மனநிறைவு பெற்றார் அந்த மாட்சிமை பொருந்திய அன்புத் தாய்.


ஒருமுறை இல்லத்திலிருந்து ஒரு பெண் தப்பிச் சென்றுவிட்டார். தேடிக் கண்டு பிடிப்பதில் துப்பறியும் நிபுணர்கள் கூட சமயங்களில் தோற்றுவிடுவார்கள். ஆனால் எதிலும் தோற்றுப்போகாத அம்மா அவர்களோ, அப்பெண்ணை மிக விரைவிலேயே தேடிக் கண்டுபிடித்து, அப்பெண் இருக்கும் முகவரிக்குத் தனி நபரை அனுப்பி, அப் பெண்ணைக் கேட்டு வரச் செய்தார்கள். அப்பெண் சென்று தஞ்சம் அடைந்த இடமோ, மாவட்ட ஆட்சியரின் வீடு. அந்தத் தம்பதி யர்களோ, அப்பெண்ணைத் திருப்பித் தர முடியாது என்று ஆவேசமாகச் சொல்லி, அப்பெண்ணை அழைத்து வரச் சென்றவரை திருப்பி அனுப்பி விட்டார்கள். அம்மாவின் கோபமோ எல்லை கடந்துவிட்டது. உடனடியாக வழக்கறிஞர்களை வரவழைத்து, அடுத்த கட்ட நடவடிக்கைக்குத் தயாராகி, உடும்புப் பிடியாக இருந்து நீதிமன்றம் வரை சென்று அப்பெண்ணை மீட்டு வந்த பிறகு தான் அந்த வீரத்தாய்க்கு உறக்கம், பசி, நிம்மதி எல்லாமே வந்தது. அம்மாவின் சாதனைகளில், சரித்திரச் சாதனையாக 6 வயது கூட நிரம்பாத அந்தப் பிஞ்சுக் குழந்தைகளின் கரத்தால், பெரியார் திடல் நுழைவு வாயிலில் அமைந் திருக்கும் 7 அடுக்கு கொண்ட அந்தப் பிரம் மாண்டமான கட்டடத்தைத் திறந்து வைக்க வைத்து, 8 ஆவது அதிசய சாதனையை நிகழ்த்தி, சிறார்களையும் சிகரத்தில் ஏற்றி, சிகரத்தைத் தொட்ட அந்த மாபெரும் தாய் ஒரு வரலாற்றுத் தாயாக மதிக்கப்பட்டார்.

மொத்தத்தில், கோழி தன் குஞ்சுகளைப் பாதுகாப்பது போல பாதுகாத்தும், தோட்டத்தில் பூத்துக்குலுங்கும் பூக்களின் மீது யாருடைய விரலும் பட்டு விடக்கூடாது என்பதில், கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொண்ட தோட்டத்தின் காவல்காரராகக் கடமையாற்றிய அந்தக் கண்ணியமான தாயை என்னவென்று சொல்லத் தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கும் இந்நேரத்தில், 01.10.1974 உண்மை இதழில் அம்மா அவர்களாலேயே எழுதப்பட்டுள்ளதை மீண்டும் நினைவுபடுத்த வேண்டிய தருணம் வந்து விட்டது.

இதோ அம்மாவின் எழுத்தோவியம்:

"இத்தனை ஆண்டுக் காலம் ஆகியும் இதுவரை எப்படிப்பட்ட கருத்தையும் நான் வெளியிட்ட தில்லை. எனக்கு என்று எந்த விதமான ஆசையையும் எண்ணத்தையும் ஏற்படுத்திக் கொண்டதும் இல்லை; எனக்கென்று இருந்த ஒரே ஒரு அன்புப் பிடிப்பையும் இழந்து விட்டு அனாதை போல் தன்னந்தனிமையாய் விடப் பட்டு இருக்கிறேன். என்னைப் புரிந்து கொண்டு, எனக்கு அன்பும் ஆதரவும் அவ்வப் போது காட்டுவதற்கு அருகில் ஒருவரும் இல்லாமலும், அதுபோன்றே எனக்குச் சிற்சில சமயங்களில் ஏற்படும் துயரத்தையும்,- துக் கத்தையும் வாய்விட்டு மனம் திறந்து சொல் வதற்குக் கூட ஒருவருமே இன்றித் தனிமையான சூழ்நிலையில் இருக்கும் படியான ஒரு துயர நிலை ஏற்பட்டுவிட்டது. இப்படிப்பட்ட ஒரு தன்மை எனக்கு என்றேனும் ஒருநாள் வரக்கூடும் என்று முன்னதாகவே தெரிந்து கொண்டு தானோ என்னவோ என் அருமைத் துணைவர் என்னைத் தனிமையில் இருக்க விடாமல் இருப்பதற்காகத்தான், என்னிடம் திக்கற்ற தாய், தந்தையற்ற கன்னித் தாய்மார்கள் கண்கலங்கி ஈன்று என்னிடம் ஒப்படைக் கப்பட்ட சின்னஞ்சிறு சிறார்களையும் நூற்றுக் கும் மேற்பட்ட அனாதைக் குழந்தைகளையும் துணையாக வைத்துவிட்டு, அவர்களை ஆளாக்கும் பொறுப்பினையும் என்மீது சுமத்திவிட்டு எனக்குப்பின் உன் வேலைகளை ஓய்வு ஒழிவு இல்லாமல் செய்வதற்காக இவர்களை விட்டு இருக்கிறேன் எதைப் பற்றியும் கவலைப்படாமல் யாரும் இல்லையே என்றும் நினைக்காமல் இவர்களைப் பரா மரித்து, என் ஆசையை, எண்ணத்தை, கொள்கையை நிறைவேற்று என்று சொல் லாமல் சொல்லி அந்த அனாதைக் குழந்தை களோடு ஒன்றாக என்னையும் ஒரு அனாதை யாக (ஆனால் வளர்க்கும் செவிலியாக) விட்டு விட்டுப் போய்விட்டார் என்றே எண்ணு கிறேன். அவர்களைக் கொள்கைப்பிடிப்புள்ள செம்மல்களாக - தந்தையின் கொள்கைகளான பகுத்தறிவு, கடவுள் நம்பிக்கை ஒழிப்பு, மூடப்பழக்கங்களை முறியடித்தல் ஆகிய வைகளை உலகெங்கும் பரப்பிடும்படியான திறமைமிக்க திறமைசாலிகளாக, அறிவின் சிகரங்களாக ஊக்கமும், உழைப்பும், நாணயமும் மிக்கவர்களாக வளர்த்து ஆளாக் கும் பணியினை எல்லாப் பணியிலும் முதன் மையானதாகக் கொண்டு செயல்பட என்னை முழுமையாக ஆளாக்கிக் கொண்டு வருகிறேன்"

என்று உண்மை இதழில் குறிப்பிட்டுள்ளார்கள்.

அதன்படியே, இவ்வில்லக் குழந்தைகளை வளர்த்து, ஆளாக்கி, தான் வளர்த்த செல் வங்கள் எவ்விதத்திலும் சோடை போய்விடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்து, வாழ்க்கை முழுவதும் இல்லக் குழந் தைகளுக்காகவே வாழ்ந்து, தனது வாழ் நாளிலேயே 3 பெண்களுக்குத் திருமணம் முடித்து, அடுத்து சில பெண்களுக்குத் திருமண ஏற்பாடுகளையும் செய்து, இறக்கை இழந்த பறவைகளுக்கு இறக்கையாக, கிளை இழந்த மரங்களுக்கு தாங்கி நிற்கும் பூமியாக, ஆதரவை இழந்த குழந்தைகளுக்கு அணைக்கும் கரமாக இருந்த தன்னலம் கருதாத, தன்மானம் பாராத துணிச்சல் மிக்க அந்த உத்தமத்தாய், இன்று, சென்னை பெரியார் திடல் முகப்பில், இரண்டு கைகளிலும், இரண்டு குழந்தைகளுடன் சிலையாக, - இல்லையில்லை எல்லோருடைய இதயத்துடிப்பாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது தான் உண்மை வாழ்க அம்மா!- அய்யா!

அம்மாவிற்குப் பிறகு...

பெற்றோர்களுக்கு அடுத்தபடியாக குடும்பத்தையும், குடும்ப உறுப்பினர்களையும் பாதுகாக்கும் பொறுப்பை, குடும்பத்தில் உள்ள மூத்த அண்ணன் தான் கவனிக்க வேண்டும் என்கிற கட்டாயத்திற்கு வந்துவிட்ட, அம்மா வின் விருப்பத்திற்கிணங்க, பெரியார் அறக் கட்டளையின் செயலாளராகப் பொறுப்பேற்ற, இவ்வில்லத்துக் குழந்தைகள் அன்போடு அண்ணா என்றழைக்கும் போதெல்லாம், நேசக்கரம் நீட்டி, பாசமொழி பேசி, அவர்களுள் ஒருவராக, அக்குழந்தைகளின் அன்புக்குரிய அண்ணனும், பெரியாரின் போர்ப் படைத்தளபதி தமிழர் தலைவரான கருப்பு மெழுகுவத்தி, மானமிகு கி.வீரமணி அவர்கள், குடும்பம் என்னும் கப்பலுக்கு மாலுமியாக இருந்து ஆற்றி வரும் பெரும் பணிகள் அவரது தூய தொண்டுள்ளத்து உணர்வுகளுக்கு உரைகல்லாகும்.

அந்த வகையில் பொறுப்பேற்றதுமே தனது முதல் பணியாக விதிமுறைகள் தெரிந்திருந்தும், அதையும் மீறி, அனாதை என்ற வார்த்தைக்குத் தான் அரசு உதவி என்றால், அப்படியான உதவி தேவையில்லை, ஊர் முழுவதும் சுற்றி, எனது இரண்டு கைகளால் கையேந்தி, இவ்வில்லப் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கும் மனோதைரியம் எனக்கு இருக்கிறது என்று சொல்லி, நாகம்மையார் அனாதைப் பெண்கள் இல்லம் இனி நாகம்மையார் குழந்தைகள் இல்லம் என்பதாகச் செயல்படும் என அறிவித்து, அங்கே கலங்கரை விளக்காக உயர்ந்து நிற்கிறார் அண்ணன்.

தனது இமாலயப் பணிச்சுமைகளில், ஒரு சிறிய சுமையை சுமை சிறிதாக இருந்தாலும் அதன் பாரம் மிகவும் கடினமானது அதாவது, இவ்வில்லத்தின் குழந்தைகளைப் பராமரிக்கும் பொறுப்பை, அய்யா - அம்மா அவர்களோடு கூடவே இருந்து, அய்யாவின் தனிச் செயலாள ராய் இருந்து அரும்பெரும் தொண்டினை யாற்றிய, இல்லக் குழந்தைகளால், பாசத்தோடு புலவர் அண்ணா என்றழைக்கப்பட்ட புலவர்.கோ.இமயவரம்பன் அவர்கள் இவ்வில் லத்திற்குத் தாளாளராகவும், குழந்தைகளுக்குக் காப்பாளராகவும், நியமிக்கப்பட்டார். அவரும் அப்பொறுப்பிலிருந்து சிறிதும் பிறழாமல், தனக்கென ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ளாமல், இல்லக் குழந்தைகளுக்காகவே, தனது வாழ்வை அர்ப்பணித்து, தனது கடைசி மூச்சு வரை, இவ்வில்லக் குழந்தைகளுக்குத் தாய், தந்தை மற்றும் அண்ணனாக இருந்து இக்குழந் தைகளின் மனதில் நீங்கா இடத்தில் வரையா ஓவியமாக வாழ்கிறார்.

அதன்பிறகு, மீண்டும் இவ்வில்லக் குழந்தைகளின் வளர்ச்சி, படிப்பு, எதிர்காலம் போன்ற கடமைகளுக்கு, பல நெருக்கடிகளுக் கிடையே ஆளாகி, எதிலும் எதிர்நீச்சல் போட்டே பழகிய, சவால்களுக்குச் சற்றும் சளைக்காமல் சாதிக்கும் வல்லமை கொண்ட ஆசிரியர் அண்ணன் அவர்கள், 1980 ஆம் ஆண்டு அய்யாவின் நூற்றாண்டு விழாவினை யொட்டி, விவசாயம் செய்து வந்த, பெரியார் தோட்டத்தை, பெரியார் நூற்றாண்டுக் கல்வி வளாகமாகப் பெயர் மாற்றம் செய்து, பெரியார் மாளிகையில் இயங்கி வந்த இல்லத்தை மாற்றம் செய்ததால், இடநெருக்கடிக்கு ஆளான இல் வில்லக்குழந்தைகள் தங்குவதற்கு, பேருள்ளம் கொண்ட நன்கொடையாளர்கள் பலரின் உதவியை நாடி, ஏறக்குறைய ரூ. 50 இலட்சத்தில் மிகவும் பாதுகாப்பான, எழில் நிறைந்த இடத் தில் சகல வசதிகளுடன், 2 அடுக்குக் கொண்ட தனிக்கட்டடம் ஒன்றை உருவாக்கி அச்சிறப்பு மிகு கட்டடத்தை முன்னாள் இந்தியப் பிரதமர் சமூக நீதியின் சின்னம் மாண் புமிகு வி.பி.சிங் அவர்களைக் கொண்டு திறந்து வைத்து, வரலாற்றுச் சாதனையைப் படைத்தார்.
- ஆர். தங்காத்தாள் காப்பாளர், நாகம்மையார் குழந்தைகள் இல்லம் - "விடுதலை" 9-1-2009

ஞாயிறு, 30 ஜூன், 2024

இலக்கியத்தரம் மிக்க இணையிலா இரங்கலுரை – சிகரம்

 



 மே 1-15, 2024

1933ஆம் ஆண்டு மே மாதம் 11ஆம் தேதி உடல் நலம் பாதிக்கப்பட்டு – சிறப்பான சிகிச்சையளிக்கப்பட்டும் பலனின்றி இரவு 7:45 மணியளவில் நாகம்மையார் மரணமடைந்தார்.

அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த ஆயிரக்கணக்கானோர் வந்தனர். கையில் தடியுடன் வாசலில் நின்ற பெரியார் யாரும் அழக்கூடாது; அழுவதானால் உள்ளே போகக்கூடாது என்று கேட்டுக்கொண்டார். அடுத்த நாள் காலை நாகம்மையார் உடல் எரியூட்டப்பட்டது. அன்று மாலையே ஈ.வெ.ரா. பிரச்சாரத்திற்காக வெளியூர் சென்றுவிட்டார். அதனால் பாசம் இல்லையென்று பொருள் அல்ல. பகுத்தறிவு வழிச்சென்றார்.

மூன்று நாட்கள் கழித்து தன் மனைவி குறித்து ஈ.வெ.ரா. ஒரு தலையங்கம் எழுதினார். அது ஈ.வெ.ராவின் உள்ளமும் உணர்வும் எத்தகையது என்பதை உலகிற்கும் காட்டிற்று.

“எனதருமைத் துணைவி ஆருயிர்க் காதலி நாகம்மாள் 11.05.1933ஆம் தேதி மாலை 7.45 மணிக்கு ஆவி நீத்தார். இதற்காக நான் துக்கப்படுவதா? மகிழ்ச்சி அடைவதா? நாகம்மாள் நலிந்து மறைந்தது எனக்கு லாபமா? நஷ்டமா? என்பது இதுசமயம் முடிவு கட்ட முடியாத காரியமாய் இருக்கிறது.

எப்படி இருந்தாலும் நாகம்மாளை மணந்து வாழ்க்கைத் துணையாகக் கொண்டு 35 வருஷ காலம் வாழ்ந்துவிட்டேன். நாகம்மாளை நான்தான் வாழ்க்கைத் துணைவியாகக் கொண்டு இருந்தேனேயல்லாமல் நாகம்மாளுக்கு நான் வாழ்க்கைத் துணையாக இருந்தேனா என்பது எனக்கே ஞாபகத்திற்கு வரவில்லை. நான் சுயநல வாழ்வில் மைனராய், காலியாய், சீமானாய் இருந்த காலத்திலும், பொதுநல வாழ்வில் ஈடுபட்டு தொண்டனாய் இருந்த காலத்திலும் எனக்கு வாழ்வின் ஒவ்வொரு துறையின் முற்போக்குக்கும் நாகம்மாள் எவ்வளவோ ஆதாரமாய் இருந்தாள் என்பது மறுக்க முடியாத காரியம். பெண்கள் சுதந்திர விஷயமாகவும் பெண்கள் பெருமை விஷயமாகவும் பிறத்தியாருக்கு நான் எவ்வளவு பேசுகிறேனோ, போதிக்கிறேனோ அதில் நூற்றில் ஒரு பங்கு வீதமாவது என்னருமை நாகம்மாள் விஷயத்தில் நான் நடந்துகொண்டிருந்தேன் என்று சொல்லிக்கொள்ள எனக்கு முழு யோக்கியதை இல்லை.

ஆனால், நாகம்மாளோ பெண்ணடிமை விஷயமாகவும் ஆண் உயர்வு விஷயமாகவும் சாஸ்திர புராணங்களில் எவ்வளவு கொடுமையாகவும் மூர்க்கமாகவும் குறிப்பிட்டிருந்ததோ அவற்றில் ஒன்றுக்குப் பத்தாக நடந்துகொண்டிருந்தாள் என்பதையும் அதை நான் ஏற்றுக்கொண்டிருந்தேன் என்பதையும் மிகுந்த வெட்கத்துடன் வெளியிடுகிறேன்.

நாகம்மாள் உயிர் வாழ்ந்ததும், வாழ ஆசைப்பட்டதும் எனக்காகவே ஒழிய தனக்காக அல்ல என்பதை நான் ஒவ்வொரு விநாடியும் நன்றாய் உணர்ந்து வந்தேன். இவைகளுக்கெல்லாம் நான் சொல்லக்கூடிய ஏதாவது ஒரு சமாதானம் உண்டென்றால் அது வெகு சிறிய சமாதானமேயாகும்.
அதென்னவென்றால், நாகம்மாளின் இவ்வளவு காரியங்களையும் நான் பொதுநல சேவையில் ஈடுபட்டபிறகு பொதுநல காரியங்களுக்கும் சிறப்பாக சுயமரியாதை இயக்கத்திற்குமே பயன்படுத்தி வந்தேன் என்பதுதான். நாகம்மாள் நான் காங்கிரசில் இருக்கும்போது மறியல் விஷயங்களிலும் வைக்கம் சத்தியாக்கிரக விஷயத்திலும், சு.ம.இயக்கத்திலும் ஒத்துழைத்து வந்தது உலகம் அறிந்ததாகும்.

ஆகவே, நாகம்மாள் மறைந்தது எனக்கு ஓர் அடிமை போயிற்றென்று சொல்லட்டுமா? ஆதரவு போயிற்றென்று சொல்லட்டுமா? இன்பம் போயிற்றென்று சொல்லட்டுமா? உணர்ச்சி போயிற்றென்று சொல்லட்டுமா? ஊக்கம் போயிற்றென்று சொல்லட்டுமா? எதுவும் விளங்கவில்லையே!

எது எப்படி இருந்தபோதிலும் நாகம்மாள் மறைவு ஓர் அதிசய காரியமல்ல. நாகம்மாள் இயற்கையெய்தினாள். இதிலொன்றும் அதிசயம் இல்லை. நாகம்மாளை அற்ப ஆயுள் காரியென்று யாரும் சொல்லிவிட முடியாது. நாகம்மாளுக்கு 48 வயதே ஆனபோதிலும் அது மனித ஆயுளில் பகுதிக்கே சிறிது குறைவான போதிலும் இந்திய மக்களில் சராசரி வாழ்நாளாகிய இருபத்தி மூன்றரை வயதுக்கு இரட்டிப்பென்றே சொல்லவேண்டும். செத்தால் சிரிக்க வேண்டும்; பிறந்தால் அழ வேண்டும் என்கின்ற ஞானமொழிப்படி, நாகம்மாள் செத்ததை ஒரு துக்க சம்பவமாகவும் ஒரு நஷ்ட சம்பவமாகவும் கருதாமல் அதை ஒரு மகிழ்ச்சியாகவும் லாபமாகவும் கருத வேண்டுமென்றே நான் ஆசைப்படுகின்றேன். ஆசைப்படுவது மாத்திரமல்லாமல் அதை உண்மையென்றும் கருதுகிறேன்.

எப்படியெனில், எனது வாழ்நாள் சரித்திரத்தில் இனி நிகழப்போகும் அத்தியாயங்களோ சிறிது விசேஷ சம்பவங்களாக இருந்தாலும் இருக்கலாம். அதை நாகம்மாள் இருந்து பார்க்க நேரிட்டால் அந்த அம்மாளுக்கு அவை மிகுந்த துக்கமாகவும் துயரமாகவும் காணக்கூடியதாய் இருக்கும் என்பதில் சிறிதும் சந்தேகம் இருக்காது. அத்துடன் அதைக் கண்டு சகியாத முறையில் நானும் சிறிது கலங்கக்கூடும். ஆதலால் நாகம்மாள் மறைவால் எனக்கு அதிக சுதந்திரம் ஏற்பட்டதுடன் குடும்பத் தொல்லை ஒழிந்தது என்கின்ற உயர்பதவியையும் அடைய இடமேற்பட்டது.

இது நிற்க, நாகம்மாள் மறைவை நான் எவ்வளவு மகிழ்ச்சியான காரியத்திற்கும், லாபமான காரியத்திற்கும் பயன்படுத்திக் கொள்கின்றேனோ அந்த மாதிரி எனது மறைவையோ, எனது நலிவையோ நாகம்மாள் உபயோகப்படுத்திக் கொள்ளமாட்டாள். அதற்கு நேரெதிரிடையாக்குவதற்கே உபயோகித்துக் கொள்வாள். ஆதலால் நாகம்மாள் நலத்தைக் கோரியும் நாகம்மாள் எனக்குமுன் மறைந்தது எவ்வளவோ நன்மை.

என்னருமைத் தோழர்கள் பலருக்கு நாகம்மாள் மறைவு ஈடுசெய்ய முடியாத நஷ்டமென்று தோன்றலாம். அது சரியான அபிப்பிராயம் அல்ல. அவர்கள் சற்று பொறுமையாய் இருந்து இனி நடக்க இருக்கும் நிகழ்ச்சிகளைக் காண்பார்கள். ஆனால், அவர்களும் என்னைப் போலவே நாகம்மாள் மறைவு நலமென்றே கருதுவார்கள். நாகம்மாளுக்குக் காயலா ஏற்பட்ட காரணமே எனது மேல்நாட்டுச் சுற்றுப்பிரயாணம் காரணமாய் ஒரு வருஷகாலம் பிரிந்து இருந்திருக்க நேர்ந்த பிரிவாற்றாமையே முக்கிய காரணம். இரண்டாவது, ரஷ்ய யாத்திரையினால் எனக்கு ஏதோ பெரிய ஆபத்து வருமென்று கருதியது.

மூன்றாவதாக, நமது புதிய வேலைத் திட்டங்களை உணர்ந்தபின், ஒவ்வொரு நிமிஷமும் தனக்குள் ஏற்பட்ட பயம் ஆகிய இப்படிப்பட்ட அற்ப காரணங்களே அவ்வம்மைக்குக் “கூற்றாக” நின்றது என்றால், இனி இவற்றைவிட மேலானதான பிரிவு, ஆபத்து, பொருளாதாரக் கஷ்டம் முதலியவை உண்மையாய் ஏற்படயிருக்கும் நிலை அவ்வம்மைக்கு எவ்வளவு கஷ்டமாய் இருக்கும் என்று நினைத்துப் பார்க்கும் தோழர்கள் நாகம்மாள் மறைவுக்கு வருந்த மாட்டார்கள் என்றே கருதுகிறேன். இரண்டு மூன்று வருஷங்களுக்கு முன்பு இருந்தே நான் இனி இருக்கும் வாழ்நாள் முழுதையும் (சங்கராச்சாரியார் போல)- (அவ்வளவுக்கு ஆடம்பரத்துடன் அல்ல)- (பண வசூலுக்காக அல்ல)- சஞ்சாரத்திலேயே சுற்றுப்பிரயாணத்திலேயே இருக்க வேண்டுமென்றும் நமக்கென்றும் ஒரு தனி வீடோ அல்லது குறிப்பிட்ட இடத்தில் நிரந்தர வாசமோ என்பது கூடாதென்று கருதி இருந்ததுண்டு. ஆனால், இதற்கு வேறு எவ்விதத் தடையும் இருந்திருக்கவில்லையென்றாலும் நாகம்மாள் பெரிய தடையாக இருந்தாள். இப்போது அந்தத் தடை இல்லாது போனது ஒரு பெரிய மகிழ்ச்சிக்குரிய காரியமாகும். ஆதலால், நாகம்மாள் முடிவு நமக்கு நன்மையைத் தருவதாகுக.

– ’குடிஅரசு’ தலையங்கம் 14.5.1933

இதை இரங்கல் உரை என்பதா? காதல் காவியம் என்பதா? பகுத்தாய்வின் உச்சநிலை என்பதா? எழுத்தாண்ட விதத்தில் இலக்கியச் சிகரம் என்பதா? என்னவென்று சொல்வது என்று நமக்கே அலைவெய்தும் அற்புத எழுத்தோவியம் இது! அவரின் அன்பு கசியும் உள்ளத்தை அடையாளங்காட்டிய அரிய தடயம் இது.
இறந்ததற்கு யாரும் அழக்கூடாது என்று அவர் பகுத்தறிவின்பாற் செயற்பட்டாலும், அவர் நாகம்மையார் மீது கொண்டிருந்த அளப்பரிய பற்றும், காதலும் தனக்காக நாகம்மையார் செய்த தியாகங்களும் அவரின் உள்ளத்தைக் கசிந்துருகச் செய்தன என்பதை உணர்வு ததும்ப எவ்வளவு சிறப்பாகக் கூறியுள்ளார் பாருங்கள்!
ஈ.வெ.ராவிற்கு அவரது தங்கை மகள் இராசாத்தியை (வயது-17) மணம் முடிக்க தாயார் வற்புறுத்தினார். வேறு சில பெண்களும் முன் வந்தனர். ஆனால் ஈ.வெ.ரா. எல்லாவற்றையும் மறுத்துவிட்டார்.
ஈ.வெ.ரா. எவ்வளவுதான் நம்மையும் அவரையும் தேற்றினாலும் அவரது அன்பு உள்ளம் நாகம்மாளை நாடி வாடியே நின்றது! மனிதநேயத்தின் மறுவடிவமாயிற்றே அவர்!
குறிப்பு : “கூற்று” என்று அவர் மேற்கோளில் கூறியுள்ளது எமன் நம்பிக்கை அவருக்கு இல்லை. உலக வழக்கை எடுத்தாள்கிறேன் என்று கூறவே என்பதைக் கருத்தில் கொள்க. 

சனி, 15 ஏப்ரல், 2023

நாகம்மையாரும் வைக்கம் போராட்டமும்

 

 

மே 1-15,2022

(அன்னை நாகம்மையார் நினைவு நாள் 11.5.1933)



1924ஆம் ஆண்டு மே மாதம் 23ஆம் தேதி வைக்கம் சத்தியாக்கிரகத்தில் பங்குபெற, நாகம்மையார் தோழர் எஸ்.இராமநாதன் அவர்களுடன் தமிழகத்துப் பெண்களைச் சேர்த்துக் கொண்டு ஈரோட்டில் இருந்து வைக்கம் வந்து சேர்ந்தார். வைக்கம் என்பது ஒன்றும் ஈரோட்டின் அருகே உள்ள ஊர் அல்ல. எர்ணாகுளம் வந்து வைக்கம் செல்ல வேண்டும். அன்றைய நாளில் இன்று போல் போக்குவரத்து வசதிகள் அவ்வளவு அதிகம் இல்லை. இன்னும் சொல்லப்போனால், கேரள மாநிலத்து வைக்கம் அந்நிய நாடு போல. மொழி, உணவு, உடை அத்தனையிலும் வேறுபட்ட பகுதி. திருவாங்கூர் அரசரின் ஆளுமைக்கு உட்பட்ட பகுதி. பெரியாருக்கு என்று உறவினர் எவரும் அங்கு இல்லை.

நாகம்மையார், எஸ்.ஆர்.கண்ணம்மாள், திருமதி நாயுடு, திருமதி சாணார், திருமதி தாணுமலைப் பெருமாள் பிள்ளை ஆகியோர் தடையை மீறி சத்தியாக்கிரகத்தில் கலந்துகொள்ளப் புறப்பட்டுச் சென்றனர். தடையை அகற்ற முயன்ற நேரத்தில் இன்ஸ்பெக்டர் சர்மா, பெரியாரின் துணைவியாரிடம் நீங்கள் எந்த ஜாதி என்று கேட்டார். இந்தப் போராட்ட அணிக்குத் தலைமை தாங்கிய பெரியாரின் துணைவியார் நாகம்மையார் “எங்களில் யார் எந்த ஜாதி என்று பார்த்து தாழ்த்தப்பட்ட ஜாதியினரை மட்டும் அறிந்து அனுமதி மறுக்கலாம் என்று பார்க்கிறீர்களா? நாங்கள் அதற்காக இங்கு வரவில்லை. எல்லோரும் இந்த வீதிகளில் செல்ல அனுமதிக்க வேண்டும்’’ என்று கூறினார்.

தந்தை பெரியார் திரு.வி.க.வினால் ‘வைக்கம் வீரர்’ எனப் பெயர் பெற்றார் எனில் இதன் பின்னணியில் ஊக்க சக்தியாகத் திகழ்ந்தவர் நாகம்மையார் என்பதை மறந்துவிட முடியாது.

“இந்தியாவிலேயே முதன்முதலில் அரசியல் போராட்டக் களத்தில் குதித்துச் சிறைவாசம் ஏற்ற முதல் பெண்மணி நாகம்மையாரே ஆவர். கஸ்தூரிபா காந்திக்கும் இப்பெரும் புகழ் கிட்டியது கிடையாது. புறநானூற்று வீரத்தாய்மார்களுக்கு ஏற்றிச் சிறப்பிக்கப் பெறும் அத்தனை உயர் பண்புகளும் அம்மையாரிடம் நிறைந்து காணப்பட்டன. கற்ற கல்வி சொற்பமானாலும், கணவர் வழி நின்று கற்றுக் கொண்டது ஏராளம். தொடக்கத்தில் எல்லாப் பெண்களையும் போல் பண்டைய வழிமுறைகளையே பின்பற்றி வந்த நாகம்மையார் அவையெல்லாம் தம் கணவருக்கும் பிடிக்காதவை என்பதைப் படிப்படியே உணர்ந்து தாமே நிறுத்திக் கொண்டார். சமுதாயக் கொள்கைகளில் மட்டுமின்றி, அரசியல் கொள்கைகளிலும் கணவரையே அடியொற்றி நடைபோட்டார்.’’

[தந்தை பெரியார் வாழ்க்கை வரலாறு, கருணானந்தம் தமிழ்க் குடிஅரசு பதிப்பகம், பதிப்பு 2007, பக்கம் 2]

«««

1924ஆம் ஆண்டில் திருவாங்கூர் சமஸ்தானத்தில் வைக்கத்தில் போராட்டம் நடத்தி அந்த சமஸ்தான ஆட்சியிலும் திரு.ராமசாமி கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பொழுது நாகம்மையார் அவர்கள் திருவாங்கூர் சமஸ்தானம் முழுவதும் மூலை முடுக்கெல்லாம், ஒரு சிறிதும் பின்வாங்காது பிரச்சாரம் செய்து பொதுமக்களின் உணர்வைத் தட்டி எழுப்பினார் அப்போது அவர்,

“என் கணவர் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் இந்த மாதம் முதல் தேதி திருவனந்தபுரம் சிறையிலிருந்து விடுதலையானார். இன்று காலை 10:00 மணிக்கு (11.9.1924) மறுபடியும் இராஜத் துரோகக் குற்றத்துக்காகக் கைது செய்யப்பாட்டிருக்கின்றார். இரண்டு வருஷத்திற்குக் குறைவில்லாத காலம் தண்டனை கிடைக்கக் கூடிய பாக்கியம் தமக்குக் கிடைத்திருப்பதாய்ச் சொல்ல என்னிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டுவிட்டார்.

அவர் திரும்பத் திரும்பத் தேச ஊழியத்தின் பொருட்டுச் சிறைக்குப் போகும் பாக்கியம் பெற வேண்டுமென்றும், அதற்காக அவருக்கு ஆயுள் வளர வேண்டும் என்றும் கடவுளையும், மகாத்துமா காந்தியையும் பிரார்த்திக்கின்றேன்.

அவர் பாக்கியில் வைத்துவிட்டுப் போவதாக நினைத்துக்கொண்டு போகிற வைக்கம் சத்தியாக்கிரக விஷயத்தில் வேண்டிய முயற்சிகள் எடுத்து அதைச் சரிவர அகிம்சா தருமத்துடன் நடத்த அனுகூலமான முடிவுக்குக் கொண்டு வரவேண்டுமாய் என் கணவரிடம் அபிமானமும், அன்பும் கொண்ட தலைவர்களையும், தொண்டர்களையும் பக்தியோடு பிரார்த்தித்துக் கொள்கின்றேன்’’ என்றார்.

 – நாகம்மாள்

[ ‘நவசக்தி’, 12.9.1924, பக்கம் 8, ஈரோடு]

எனவே, வரலாற்றுச் சிறப்புமிக்க வைக்கம் போராட்டத்தில் பெண்களை வழிநடத்திச் சென்று, பெரியார் மேற்கொண்ட அறப்போரை, வெற்றி பெறச் செய்தவர் அன்னை. அவர் ஏற்றிய போராட்ட தீபம் அணையாமல் தொடர்ந்து ஒளிவீசச் செய்தவர் நாகம்மையார்.

காங்கிரசு இயக்கத்தில் தந்தை பெரியார் அன்று இருந்த வேளையில் அன்னை நாகம்மையார் வைக்கம் கோவிலுக்கு உள்ளே நுழையக் கூடாது என்று தேவஸ்தானத்தவர் விதித்த தடையை மீறி பெண் தொண்டர்களுடன் நுழைந்த துணிச்சல் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. அன்னை நாகம்மையாரின் இந்த அறப்போர் பங்கேற்பும், மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்டது. ‘மனிதனை நினை’ என்ற பெரியாரின் கொள்கையின் செயல் வடிவம் இது.

பெரியார் ‘வைக்கம் வீரர்’ என்று சிறப்பிக்கப் பெற்றார் என்றால், ஒவ்வொரு ஆண் மகனின் வெற்றிக்குப் பின்னும் பெண் ஒருத்தி இருப்பாள் எனும் வாசகம் இந்த வைக்கம் வீரரைப் பொருத்தமட்டில் நிறைவேறச் செய்த வைக்கம்  வீராங்கனை நாகம்மையார் ஆவார். நாகம்மையாரின் பணிகளில் உழைப்பின் மேன்மை, அச்சமின்மை, விடாமுயற்சி ஆகியன எதிரொலிப்பதைக் காண்கிறோம்.

அரசியலில் சமத்துவமும், பொருளாதார விடுதலையும் இணைந்து வரும்போதுதான் தீண்டாமை அடியோடு ஒழியும் என்பது பெரியாரின் கொள்கைச் சிந்தனை. 20 மாதங்கள் ஏறக்குறைய நடைபெற்ற வைக்கம் அறப்போரில் வெற்றி முகட்டை நோக்கி இடையறாது ஏறிப் பயணம் செய்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் தந்தை பெரியார் மட்டுமல்லாது அவருடைய வாழ்விணையர் வீரத்தாய் நாகம்மையாரும் ஆவார்.

எனவேதான் பெரியார், “நாகம்மாள் நான் காங்கிரசிலிருக்கும்போது மறியல் விஷயங்களிலும், வைக்கம் சத்தியாக்கிரக விஷயத்திலும் சுயமரியாதை இயக்கத்திலும் ஒத்துழைத்து வந்தது உலகம் அறிந்ததாகும்” என்று ஒரே வரியில் கூறிவிட்டார்.ஸீ

ஞாயிறு, 5 மார்ச், 2023

பெரியார் குடும்பத்துப் பெண்கள்தான்!

 

1924ஆம் ஆண்டு மே மாதம் 23ஆம் தேதி! வைக்கம் சத்தியாகிரகத்தில் பங்கு பெற 5 பெண்கள் வந்தனர். நாகம்மையார் (பெரியார் துணைவியார்), எஸ்.ஆர்.கண்ணம்மாள் (பெரியாரின் தங்கை), திருமதி நாயுடு, திருமதி சாண்ணார், திருமதி தாணுமலைப் பெருமாள் பிள்ளை ஆகியோர் தடையை மீறி சத்தியாகிரகத்தில் கலந்து கொள்ள புறப்பட்டுச் சென்றனர். தடை விதிக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட இடத்துக்குச் சென்றனர். தடையை அகற்ற முயன்ற நேரத்தில் இன்ஸ்பெக்டர் சர்மா, பெரியாரின் துணைவியாரிடம் நீங்கள் எந்த ஜாதி என்று கேட்டார். இந்தப் போராட்ட அணிக்கு தலைமை தாங்கியவர் பெரியாரின் துணைவியார், போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் “எங்களில் யார் எந்த ஜாதி என்று பார்த்து; தாழ்த்தப்பட்ட ஜாதியினரை மட்டும் அறிந்து அனுமதி மறுக்கலாம் என்று பார்க்கிறீர்களா? நாங்கள் அதற்காக இங்கு வரவில்லை. எல்லோரும் இந்த வீதியில் செல்ல அனுமதிக்க வேண்டும்’’ என்று நாகம்மையார் கூறினார்.

மீனவர்கள் மீன் கூடையைத் தூக்கிக் கொண்டு போகக் கூட இங்கே அனுமதிக்கும்போது, மனிதர்கள் நடமாட ஏன் அனுமதி மறுக்க வேண்டும் என்று பெரியாரின் சகோதரி கேட்டார். தடையை மீற வந்த பெண்கள் அந்த இடத்தை விட்டு அகல மறுத்து பல மணி நேரம் அதே இடத்திலே இருந்தனர்.

இறுதியாக பிச்சு அய்யங்கார் என்ற போலீஸ் கமிஷனர் வந்தார். “பெண்கள் என்பதற்காக தனிச் சலுகை எதுவும் காட்ட வேண்டாம்; ஆண்களை எப்படிநடத்துவீர்களோ அப்படியே இவர்களையும் நடத்துங்கள்’’ என்று இன்ஸ்பெக்டர் சர்மாவுக்கு உத்தரவிட்டார்.

- மலையாள தினசரி கேரள கவுமதி 1924 மே மாதம் 23ஆம் தேதி வெளியிட்ட செய்தி.

(குறிப்பு: கிளர்ச்சியில் பங்கு கொண்ட பெண்களை எப்படி நடத்துவது என்று இன்ஸ்பெக்டர் கேட்டிருப்பதன் மூலம், இந்தக் கிளர்ச்சியில் முதலில் பங்கு பெற்றவர்கள் தந்தை பெரியார் குடும்பத்து பெண்கள்தான் என்பது விளங்குகிறது.)

செவ்வாய், 21 மே, 2019

சுயமரியாதை சுடரொளி : அன்னை நாகம்மையாரும் சுயமரியாதை இயக்கமும்


முனைவர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன்


பெரியாரின் வாழ்வில் நாகம்மையாரின் பங்கு நினைத்துப் போற்றுதற்குரியது. நம்மில் பலர் அரியாத காலத்தது. நாம் அறிந்துகொள்ள வேண்டியதில் அன்னை நாகம்மையாரின் வாழ்க்கை வரலாறு என்றாலும் சரி, அன்னை மணியம்மையாரின் வாழ்க்கை வரலாறு என்றாலும் சரி, இருவரின் வாழ்க்கை வரலாறும் தனிப்பட்ட இரண்டு பெண்மணிகளின் வாழ்க்கை வரலாறு அன்று. அது பெரியாரின் வாழ்க்கை வரலாறு. திராவிட இயக்கத்தின் வரலாறு. இரண்டு பெண்மணிகளும் -_ துணைவியர் ஆயினும் சமுகத் தொண்டாற்றிய ஒரு மாபெரும் தலைவரின் தொண்டர்கள். இன்னும் சொல்லப்போனால் _ அடிமைகள். அவரால் ஆக்கப்பட்டவர்கள் அல்லர். அவருடைய தொண்டுக்குத் தங்களை அடிமைப்படுத்திக் கொண்டவர்கள்.

தாய் அளித்த விருந்தோம்பல்

இயக்க வீரர் எண்ணற்றோருக்கு மலர்ந்த முகத்தோடும் இனிய சொற்களோடும் பல வகை உணவுகள் வழங்கி, அவர்களின் உணர்வுகளை ஒழுங்குபடுத்தி, ஊக்கத்திற்கு உரமிட்டவர் அன்னை நாகம்மையார் என்று சாத்தான்குளம் ராகவன் என்னிடம் 40 ஆண்டுகளுக்கு முன் பகிர்ந்துகொண்டது நினைவில் நிழலாடுகிறது. “நான், மாயவரம் நடராசன் எல்லாம் சாப்பிட்டுக் கொண்டிருப்போம் பெரியார் இல்லத்தில். அம்மா அன்பொழுகப் பரிமாறுவார்கள். அப்பொழுது பெரியார், கையில் கடை சாவியை எடுத்துக்கொண்டு எங்களைப் பார்த்துக்கொண்டு செல்வார். அம்மாவின் பிள்ளைகளாதலால் அவரோடு முரண்டு பிடித்திருந்தாலும் அய்யாவின் வீட்டில்தான் உணவு.’’

அக்காலத்தில் சுயமரியாதைத் திருமணம், கலப்பு மணம், விதவை மணம் செய்யத் துணிந்து முன்வந்தோர் பலரை அன்னையார் தம் இல்லத்திலேயே சில காலம் வைத்திருந்து அரவணைத்து, ஊக்கமளித்து, பிறகு அவர்கள் விரும்பும் ஊர்களில் தனிக்குடித்தனம் வைத்துச் சில நாள்கள் ஆறுதலாக உடனிருந்துவிட்டு திரும்புவார் என்றால் அந்தத் தாயுள்ளம் யாருக்கு வரும்?

சாமி சிதம்பரனார் திருமணச் செய்தி ஒரு சான்று.

சுயமரியாதை இயக்க வளர்ச்சியில் அன்னையார்

தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்க வரலாற்றை வரைவோர் அன்னை நாகம்மையாரின் பங்களிப்பைக் குறிப்பிடத் தவறிவிடுகின்றனர். தந்தை பெரியாருடன் தன்மான இயக்கம் கண்ட காலத்தில் கூட உடனுழைத்தவரும், அய்யாவுடன் ரஷ்யநாடு சென்ற வந்தவருமான எஸ்.ராமநாதன் எழுதியவை இவை:

“அவர் தமது கணவரின் எல்லா முயற்சிகளிலும் மிகுந்த உற்சாகத்துடன் ஒத்துழைத்ததே சுயமரியாதை இயக்க வெற்றிக்குக் காரணமாகும். மூடக் கொள்கைகளினின்று மக்களை விடுவிக்கும் பொருட்டு அவர், தமிழ்நாடு, கேரளம், மலாய் ஆகிய இடங்களில் உள்ள எல்லா ஜில்லாக்களிலும் -சுற்றுப் பிரயாணம் செய்திருக்கிறார். அவர் ஒரு பிரசங்கியல்ல; ஆனால் அவர் பிரசன்னமாயிருக்கும் ஒவ்வொரு கூட்டத்திலும் பெண்கள் தீவிரமாகக் கலந்துகொள்வார்கள். அவர் எல்லோரையும் அன்புடன் உபசரிப்பார். அவருக்கு மகப்பேறு இல்லை; ஆனால் பொதுஜன நன்மைக்காக வேலை செய்து எல்லா இளைஞர்களையும், பெண்களையும் தம் சொந்தப் பிள்ளைகளாகப் பாவித்து வந்தார். அவர் தமது சிறந்த கொள்கைகளுக்காக வேலை செய்தவர்களுக்கெல்லாம் ஒரு தாயாக இருந்தார். அவர்களுடைய சொந்த சவுகரியங்களை அவர் தாமே நேராகக் கவனித்து வந்தார். சமூகப் போராட்டத்தில் வீட்டை இழந்தவர்களுக்கு அவர் அபயம் அளித்தார்.

ஆக, சுயமரியாதை இயக்கம் வெற்றி பெறுவதற்கும். அதில் ஏராளமான பெண்கள் தாராளமாய்க் கலந்து கொள்வதற்கும் அன்னை நாகம்மையாரே காரணமாவார். பெரியாரையும், அன்னையையும் மனிதத் தன்மையற்ற முறையில் திட்டிக் கடிதங்கள் பல வரும். இருவரையும் பொதுக்கூட்டங்களில் கொலை செய்து விடுவதாகக்கூட, மிரட்டல் வரும். கடிதங்கள் வரும். அய்யா ஆண் பிள்ளை; அஞ்சமாட்டார் என்றால், அம்மா அவரைவிட ஒருபடி மேல். எதற்கும், எந்த மிரட்டலுக்-கும் அஞ்சுவதில்லை.

சிங்கப்பூர் ஏட்டின் தலையங்கம்

“சிங்கப்பூர் முன்னேற்றம்’’ எனும் ஏடு எழுதிய தலையங்கத்தில் “ஈரோட்டு ராமன் தோற்றுவித்த சுயமரியாதை இயக்கம் உலகப் புகழ்பெற்று, நாளை உலக இயக்கமாக மாறப் போவதற்கும் உறுதுணையாய் நின்றது அன்னை நாகம்மாளன்றோ!

இயக்கம் காரணமாய் அருமையான உற்றார், பெற்றோர்களையும், உறவின் முறையார்களையும் இழந்த இளைஞர்களுக்கெல்லாம் அறுசுவை உண்டி அன்புடன் அளித்து ஆதரித்தது அன்னை நாகம்மாளன்றோ! காளையர்க்கும், கன்னியர்க்கும் கலங்காது ஊக்கமளித்தது அன்னை நாகம்மாளன்றோ!’’ என்று குறிப்பிட்டது.

அன்னையார் நாவன்மை பெற்றவர் இல்லை. படித்தவர் இல்லை. ஆயினும் அவரிடம் நிறைந்திருந்த தர்க்க சாமர்த்தியமும், விஷய விளக்கமும், திடசித்தமும், அன்பும், அருளும் பலரையும் தலைவணங்கச் செய்தது.

‘குடிஅரசு’ பதிப்பாளர்

சுயமரியாதை இயக்கத் தலைமைப் பத்திரிகையான ‘குடிஅரசு’ 09.01.1927 முதல் அன்னையின் பெயரால் வெளிவந்தது. அதில் வெறும் புகழுக்காக ஒப்புக்காக அவர் பெயர் இடம் பெறவில்லை. அன்னை அவர்களின் உயிரும் உடலுமே ‘குடிஅரசு’ பத்திரிகை எனலாம். 1929ஆம் ஆண்டு குடிஅரசைச் சென்னைக்கு மாற்றும்பொழுது தம் உயிரையே கொள்ளை கொடுத்துவிட்டதாக அன்னையார் பரிதவித்தார். அன்னையின் விருப்பப்படியே ‘குடிஅரசு’ சென்னையில் வெகுநாள் நிலைத்திடாமல் மீண்டும் ஈரோட்டிற்கு வந்தது. அன்னைக்குப் படிப்பில்லை. ஆனால் பிறரைப் பத்திரிகைகளைப் படிக்கச் சொல்லிக் கேட்பார். ‘குடிஅரசு’ சிறப்புற்று விளங்க வேண்டும் என்பது அன்னையின் மிகுந்த அவா. அதனால் அன்னை ‘குடிஅரசு’க்காக அறிக்கை விடத் தவறவில்லை.

நாகம்மையாரின் அறிக்கை

24.04.1932இல் “ஈ.வெ.ரா. நாகம்மாள் பிரிண்டர் அண்டு பப்ளிஷர்’’ எனும் பெயரில் வெளியிட்ட அறிக்கை இது.

“நமது பத்திரிகையின் ஆசிரியர் தோழர் ஈ.வெ.இராமசாமி அவர்கள் மேல்நாட்டுச் சுற்றுப் பயணத்தின் பொருட்டு புறப்பட்டுச் சென்று சுமார் நான்கு மாதங்களாகின்றன. இந்த நான்கு மாதங்களாக நமது குடிஅரசுக்குக் கட்டுரைச் செல்வத்திலும், பொருட்செல்வத்திலும் ஒரு சிறிதும் வறுமை தோன்றாதபடி இரண்டையும் வழங்கி ஆதரித்து வந்த நமது இயக்கத் தோழர்களாகிய கட்டுரையாளர்களுக்கும் வாசகர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்த வாரம் நமது பத்திரிகைக்கு எட்டாவது ஆண்டு பிறக்கப் போவதால் நமது இயக்கத் தோழர்களாகிய கட்டுரையாளர்களுக்கும் வாசகர்களுக்கும் சிறந்த கட்டுரைகளை வழங்கியும், எண்ணற்ற சந்தாதாரர்களைச் சேர்த்துக் கொடுத்தும் பத்திரிகையின் வளர்ச்சியில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.’’

அன்னையின் மலாய் நாட்டுப் பயணம்

‘சிங்கப்பூர் தமிழ் முரசு’ அன்னையின் மலாய் நாட்டு வருகை குறித்து எழுதியவை இவை:

“அவர்களின் மலாய் நாட்டு விஜயத்தால் மலாய் நாட்டு மக்கள் எல்லாம் அவருக்கு அறிமுகமானார்கள். மலாய் நாட்டில் சுயமரியாதை இயக்கம் அதிதீவிரமாய்ப் பரவியிருந்ததைப் பார்த்த அன்னையார் அடைந்த களிப்பு அளப்பரியது. சிங்கப்பூருக்கு வந்திருந்து திரும்புங்கால் அவர்களுக்கு விருப்பமான தேவையான மலாய் நாட்டுப் பொருள் என்ன வேண்டுமென்று நாம் கேட்டதற்-கு “நீங்கள் எல்லாம் இம்மலாய் நாட்டில் சுயமரியாதை இயக்கத்தைப் பரப்பியிருப்பதே நான் விரும்பும் பொருள்’’ என்று அன்னையார் சொல்லிய வார்த்தைகள் இன்றும் நமது செவியில் ஒலித்துக் கொண்டிருக்கிறது என்று எழுதியது.

ஆனால், 1931இல் அய்யா மேல்நாட்டுச் சுற்றுப் பிரயாணம் செய்தபோது அன்னையை அழைத்துச் செல்லாதது உடல்நலிவை ஏற்படுத்தியது. ஆயினும் அவர்கள் சுயமரியாதை இயக்கத்தையும், குடிஅரசு பத்திரிகையையும் தளர்வின்றி நடத்தினார். பெரியார் சுற்றுப் பயணத்திலிருந்த சுமார் பத்து மாதங்களும் சுயமரியாதை இயக்கமானது அதற்கு முன்செய்த வேலையைவிட அதிகம் வேலை செய்தது. இதற்குக் காரணம் நாகம்மையார் அவர்கள் இயக்கத் தோழர்களுக்கு அளித்த உற்சாகம்.

“நாகம்மாளுக்குக் காயலா ஏற்பட்ட காரணமே எனது மேல்நாட்டுச் சுற்றுப் பிரயாணம் காரணமாய் ஒரு வருஷ காலம் பிரிந்து இருந்திருக்க நேர்ந்த பிரிவாற்றாமையே முக்கியக் காரணம். இரண்டாவது ரஷ்ய யாத்திரையினால் எனக்கு ஏதோ பெரிய ஆபத்து வரும் என்று கருதியது. மூன்றாவதாக நமது புதிய வேலைத் திட்டங்களை உணர்ந்த பின் ஒவ்வொரு நிமிஷமும் தனக்கு ஏற்பட்ட பயம் ஆகிய இப்படிப்பட்ட அற்ப காரணங்களே அவ்வம்மைக்கு ‘கூற்றா’கின்றது என்றால் இனி இவற்றைவிட மேலானதான பிரிவு, ஆபத்து, பொருளாதாரக் கஷ்டம் முதலியவை உண்மையாய் ஏற்பட இருக்கும் நிலை அவ்வம்மைக்கு எவ்வளவு கஷ்டமாய் இருக்கும் என்று நினைத்துப் பார்க்கும் தோழர்கள் நாகம்மாள் மறைவிற்கு வருந்த மாட்டார்கள் என்றே கருதுகிறேன்’’ என்றே அய்யா எழுதினார்.

பெரியாரின் வாழ்க்கைத் துறைகள் எல்லாவற்றிலும் ஒத்துழைத்து அன்னையார் வெற்றியளித்தார்கள்.

நாகம்மையார் ஒரு வாரகாலம் உடல்நிலை சரியில்லாது ஈரோடு லண்டன் மிஷன் மருத்துவமனையில் டாக்டர் போலோரிட் அவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தார். நாகம்மையாரை மருத்துவமனையில் சென்று பார்த்து வந்தவர்களில் ஆர்.கே.சண்முகம், இரத்தினசபாபதி, முருகேச முதலியார் முதலானவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.

ஆயினும் 11ஆம் தேதி மாலை 4 மணிக்கு இனி தாங்காது எனும் நிலையில் மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு அழைத்து வரப்பட்டார். வந்ததும் கடைசியில் செய்யக்கூடிய சிகிச்சைகளைச் செய்து பார்த்தும் இரவு 7.45 மணிக்க அன்னையாரின் உயிர் உடல் கூட்டிலிருந்து பிரிந்தது.

- உண்மை இதழ், 1-15.5.19

செவ்வாய், 26 ஜூன், 2018

அன்னை நாகம்மையார்

பெரியார் பேருரையாளர் அ.இறையன்



சேலம் மாவட்டம் தாதம்பட்டியில் திரு.ரெங்கசாமி திருமதி. பொன்னுத்தாய் ஆகியோரின் மகளாய்ப் பிறந்து, அந்தக் காலத்திலேயே விடாப்பிடியாக நின்று தந்தை பெரியாரவர்களை மணம் புரிந்து கொள்ளுவதில் வெற்றியடைந்த அன்னை நாகம்மையார், துணைவி எனும் சொல்லுக்குரிய அத்தனை விளக்கங்களுக்கும் ஏற்ப, துணையாகத் திகழ்ந்தார்.

தொடக்கத்தில்அய்யா அவர்களின் புரட்சியான சுயமரியாதைக் கருத்துக்களை முழுமையாக ஒப்புக் கொண்டு நடப்பதில் அன்னையார் தயக்கம் காட்டினாரென்றாலும், சில காலத்திற்குள் உண்மைகளை ஆழமாக உணர்ந்து தெளிவடைந்து, பின்னர் தம் வாழ்நாள் முழுவதையும் சுயமரியாதை இயக்க வளர்ச்சிக்கென்றே ஒப்படைத்துக் கொண்டார்.

படிப்படியாக மேடைப்பேச்சு நிகழ்த்தும் அளவுக்கு ஆற்றல் பெற்றுவிட்ட அம்மையார், தம் துணைவரின் அண்ணன் திரு.ஈ.வெ.கி. அவர்கள் தலைமை தாங்கிய உண்மை நாடுவோர் சங்கத்தில் ‘தோழர் கிருஷ்ணசாமி’ என்று விளித்து கூடியிருந்த மகளிருக்கெல்லாம் பேரதிர்ச்சியை விளைவிக்கக்கூடிய அளவுக்குப் புரட்சிப் பெண்மணியாக உயர்ந்துவிட்டார்!

“நாகம்மாள் உயிர் வாழ்ந்ததும், வாழ ஆசைப்பட்டதும் எனக்காகவே ஒழிய தனக்காக அல்ல’ என்றும், “எனக்கு வாழ்வின் ஒவ்வொரு துறையின் முற்போக்குக்கும் நாகம்மாள் எவ்வளவோ ஆதாரமாய் இருந்தார்’’ என்றும் தந்தை பெரியார் அவர்களே பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்க வீரர் எண்ணற்றோருக்கு மலர்ந்த முகத்தோடும் இனிய சொற்களோடும் பல்வகை உணவுகள் வழங்கி, அவர்களின் உணர்வுகளை ஒழுங்குபடுத்தி, ஊக்கத்திற்கு உரமிட்ட அன்னையை நன்றியுடன் பாராட்டி மகிழாத தொண்டர் எவரும் இல்லை.

அக்காலத்தில் சுயமரியாதைத் திருமணம், கலப்பு மணம், விதவை மணம் செய்யத் துணிந்து முன்வந்தோர் பலரை அன்னையார் தம் இல்லத்திலேயே சில காலம் வைத்திருந்து அரவணைத்து, ஊக்கமொழிகள் உரைத்து, பிறகு அவர்கள் விரும்பும் ஊர்களில் தனிக்குடித்தனம் வைத்து சில நாட்கள் ஆறுதலாக உடனிருந்துவிட்டு ஊர் திரும்புவார்.

இயக்க நடவடிக்கைகளிலும் தம்மை ஈடுபடுத்திக் கொள்ள அம்மையார் தவறவில்லை. சுயமரியாதை மாநாடுகளில் பெரும் பங்காற்றி நிறையத் திராவிட மகளிரைக் கவர்ந்திழுத்து இயக்கத்திற்குக் கொணர்ந்தார் சுயமரியாதை மணங்களைத் தலைமையேற்று நடத்தி வைத்தார்.

தந்தை பெரியாரவர்கள் தொடங்கிய ‘குடிஅரசு’ என்னும் சுயமரியாதை இயக்க இதழ் வெளியார் அச்சகத்தில் அச்சாகிய நிலை மாறி, முதன்முறையாக ‘உண்மை விளக்கம்’ எனும் சொந்த அச்சகத்தில் 9.1.1927 முதல் அம்மையாரைப் பதிப்பாளராகக் கொண்டு வெளியிடப்பட்டது. அப்பொறுப்பினைத் திறம்பட அவர் நிறைவேற்றினார்.

அய்யா அவர்கள் அய்ரோப்பியச் சுற்றுப்பயணம் சென்றிருந்தபோது சுயமரியாதை இயக்க இதழான ‘குடிஅரசு’ வெற்றியாக நடந்து வர அம்மையார் பெரும் அக்கறை காட்டினார். 24.4.1932இல் ‘ஈ.வெ.ரா.நாகம்மாள் பிரிண்டர் அண்டு பப்ளிஷர்’ எனும் பெயரில், “நமது பத்திரிகையின் ஆசிரியர் தோழர் ஈ.வெ.இராமசாமி அவர்கள் மேல்நாட்டுச் சுற்றுப் பிரயாணத்தின் பொருட்டுப் புறப்பட்டுச் சென்று சுமார் நான்கு மாதங்களாகின்றன; இந்த நான்கு மாதங்களாக நமது ‘குடிஅரசு’க்குக் கட்டுரைச் செல்வத்திலும், பொருட் செல்வத்திலும் ஒரு சிறிதும் வறுமை தோன்றாதபடி இரண்டையும் வழங்கி ஆதரித்து வந்த நமது இயக்கத் தோழர்களாகிய கட்டுரையாளர்களுக்கும் வாசகர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அடுத்த வாரம் நமது பத்திரிகைக்கு எட்டாவது ஆண்டு பிறக்கப்போவதால் நமது இயக்கத் தோழர்களாகிய கட்டுரையாளர்களும் வாசகர்களும் சிறந்த கட்டுரைகளை வழங்கியும், எண்ணற்ற சந்தாதாரர்களைச் சேர்த்துக் கொடுத்தும் பத்திரிகையின் வளர்ச்சியில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டுகிறேன்’’ என்பதாக அம்மையார் வெளியிட்ட அறிக்கை அவர்தம் இயக்க ஈடுபாட்டிற்குச் சிறந்ததோர் எடுத்துக்காட்டாகும்.

அய்யா அவர்களின் கீழைநாட்டுச் சுற்றுப் பயணத்தின்போது அம்மையாரும் உடன் சென்று இயக்கக் கொள்கைகள் பரப்பும் நடவடிக்கைகளில் பங்கு கொண்டார். காங்கிரஸ் கட்சியில் அய்யா ஈடுபட்டுத் தொண்டாற்றி வந்தபோது, கள்ளுக்கடை மறியற்போரை நிறுத்திவிடுவது என்பது என் கையில் இல்லை; அது ஈரோட்டில் உள்ள இரண்டு பெண்களிடந்தான் இருக்கிறது’’ எனக் காந்தியாரோலேயே புகழப்படும் அளவுக்கு எப்படி அன்னையார் தீவிரப்பணி புரிந்தாரோ, வைக்கம் போரில் அய்யா சிறைசென்ற காலத்தில்  தீண்டாமைக் கொடுமைகளைப் பற்றி அம்மையார் எவ்வாறு நாடெல்லாம் சுற்றிக் கருத்துகளைப் பரப்பினாரோ, அவ்வாறே சுயமரியாதை இயக்கக் கொள்கைகளைப் பரப்புவதிலும் முனைப்போடு பணி மேற்கொண்டார். சிங்கப்பூர் சென்று திரும்பும்வேளை அங்கு வதிந்த தன்மான வீரர்கள் அம்மையாரிடம், “தங்கட்குத் தேவையான, விருப்பமான மலாய் நாட்டுப் பொருள்கள் என்னென்ன?’’ என்று பரிவோடு கேட்டு முன்வந்தபோது, “நீங்களெல்லாம் இங்கே சுயமரியாதை இயக்கத்தைப் பாடுபட்டுப் பரப்பியிருக்கிறீர்களே, அதுவே எனக்கு அருமையான பொருள்’’ என்று கூறிப் பரிசுப் பொருட்களை வேண்டாது, கொள்கை பரவுதலில் நாட்டம் காட்டிய அன்னையின் செய்கை நமக்கு எத்தனையோ உணர்த்தவல்லது. தாம் ஈன்ற ஒரே மகவும் மறைந்த பிறகு அய்யா அவர்களின் தொலைநோக்கான விருப்பத்திற்கிசைந்து இயக்கத் தொண்டர்களையே தம் பிள்ளைகளாக வரித்துக்கொண்டு அவர்களால் ‘அன்னை’யென்று மதிக்கப் பெறும் உயர் நிலையை எய்தினார்.

எனவேதான் அவர் 11.5.1933 அன்று மறைவுற்ற காலை, “உணர்ச்சி போயிற்று என்று சொல்லட்டுமா? ஊக்கம் போயிற்று என்று சொல்லட்டுமா? எல்லாம் போயிற்று என்று சொல்லட்டுமா?’’ என்று கழிவிரக்கத்துடன் எழுதினார் தந்தை பெரியாரவர்கள்.

அம்மையார்தம் பிரிவுக் கட்டத்தில்கூடப் புரட்சிக்கு மூலமானார். அதாவது நெருங்கின உறவினர் முதல் உற்ற இயக்கப் பெருங்குடும்பத்தினர்வரை  எல்லோரும் ‘அழுதல்’ என்னும் நாகரிகமற்ற வழக்கை விட்டொழிந்து அமைதியாக விருக்கும் பண்பாட்டைக் கடைப்பிடித்தனர். 1933இல் இது மிகவும் பெரும் புரட்சிதானே!

நம் அன்னையாருடன் பொதுவுடைமைக் கொள்கைத் தந்தை காரல் மார்க்சின் துணைவியார் ஜென்னிமார்க்ஸ் ஒப்பிடத் தகுந்தவர் எனலாம்.

அய்யா அவர்களின் ஒவ்வோர் அசைவுக்கும் துணையாக இயங்கிய அம்மையார் பொதுத்தொண்டு புரியும் மகளிர்க்கு வழிகாட்டும் ஒளியாவார்! அன்னை நாகம்மையார் வாழ்க!

    நூல்: சுயமரியாதைச் சுடரொளிகள்

-  உண்மை இதழ், 1-15.5.18

அன்னை நாகம்மையார்

பெரியார் பேருரையாளர் அ.இறையன்



சேலம் மாவட்டம் தாதம்பட்டியில் திரு.ரெங்கசாமி திருமதி. பொன்னுத்தாய் ஆகியோரின் மகளாய்ப் பிறந்து, அந்தக் காலத்திலேயே விடாப்பிடியாக நின்று தந்தை பெரியாரவர்களை மணம் புரிந்து கொள்ளுவதில் வெற்றியடைந்த அன்னை நாகம்மையார், துணைவி எனும் சொல்லுக்குரிய அத்தனை விளக்கங்களுக்கும் ஏற்ப, துணையாகத் திகழ்ந்தார்.

தொடக்கத்தில்அய்யா அவர்களின் புரட்சியான சுயமரியாதைக் கருத்துக்களை முழுமையாக ஒப்புக் கொண்டு நடப்பதில் அன்னையார் தயக்கம் காட்டினாரென்றாலும், சில காலத்திற்குள் உண்மைகளை ஆழமாக உணர்ந்து தெளிவடைந்து, பின்னர் தம் வாழ்நாள் முழுவதையும் சுயமரியாதை இயக்க வளர்ச்சிக்கென்றே ஒப்படைத்துக் கொண்டார்.

படிப்படியாக மேடைப்பேச்சு நிகழ்த்தும் அளவுக்கு ஆற்றல் பெற்றுவிட்ட அம்மையார், தம் துணைவரின் அண்ணன் திரு.ஈ.வெ.கி. அவர்கள் தலைமை தாங்கிய உண்மை நாடுவோர் சங்கத்தில் ‘தோழர் கிருஷ்ணசாமி’ என்று விளித்து கூடியிருந்த மகளிருக்கெல்லாம் பேரதிர்ச்சியை விளைவிக்கக்கூடிய அளவுக்குப் புரட்சிப் பெண்மணியாக உயர்ந்துவிட்டார்!

“நாகம்மாள் உயிர் வாழ்ந்ததும், வாழ ஆசைப்பட்டதும் எனக்காகவே ஒழிய தனக்காக அல்ல’ என்றும், “எனக்கு வாழ்வின் ஒவ்வொரு துறையின் முற்போக்குக்கும் நாகம்மாள் எவ்வளவோ ஆதாரமாய் இருந்தார்’’ என்றும் தந்தை பெரியார் அவர்களே பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்க வீரர் எண்ணற்றோருக்கு மலர்ந்த முகத்தோடும் இனிய சொற்களோடும் பல்வகை உணவுகள் வழங்கி, அவர்களின் உணர்வுகளை ஒழுங்குபடுத்தி, ஊக்கத்திற்கு உரமிட்ட அன்னையை நன்றியுடன் பாராட்டி மகிழாத தொண்டர் எவரும் இல்லை.

அக்காலத்தில் சுயமரியாதைத் திருமணம், கலப்பு மணம், விதவை மணம் செய்யத் துணிந்து முன்வந்தோர் பலரை அன்னையார் தம் இல்லத்திலேயே சில காலம் வைத்திருந்து அரவணைத்து, ஊக்கமொழிகள் உரைத்து, பிறகு அவர்கள் விரும்பும் ஊர்களில் தனிக்குடித்தனம் வைத்து சில நாட்கள் ஆறுதலாக உடனிருந்துவிட்டு ஊர் திரும்புவார்.

இயக்க நடவடிக்கைகளிலும் தம்மை ஈடுபடுத்திக் கொள்ள அம்மையார் தவறவில்லை. சுயமரியாதை மாநாடுகளில் பெரும் பங்காற்றி நிறையத் திராவிட மகளிரைக் கவர்ந்திழுத்து இயக்கத்திற்குக் கொணர்ந்தார் சுயமரியாதை மணங்களைத் தலைமையேற்று நடத்தி வைத்தார்.

தந்தை பெரியாரவர்கள் தொடங்கிய ‘குடிஅரசு’ என்னும் சுயமரியாதை இயக்க இதழ் வெளியார் அச்சகத்தில் அச்சாகிய நிலை மாறி, முதன்முறையாக ‘உண்மை விளக்கம்’ எனும் சொந்த அச்சகத்தில் 9.1.1927 முதல் அம்மையாரைப் பதிப்பாளராகக் கொண்டு வெளியிடப்பட்டது. அப்பொறுப்பினைத் திறம்பட அவர் நிறைவேற்றினார்.

அய்யா அவர்கள் அய்ரோப்பியச் சுற்றுப்பயணம் சென்றிருந்தபோது சுயமரியாதை இயக்க இதழான ‘குடிஅரசு’ வெற்றியாக நடந்து வர அம்மையார் பெரும் அக்கறை காட்டினார். 24.4.1932இல் ‘ஈ.வெ.ரா.நாகம்மாள் பிரிண்டர் அண்டு பப்ளிஷர்’ எனும் பெயரில், “நமது பத்திரிகையின் ஆசிரியர் தோழர் ஈ.வெ.இராமசாமி அவர்கள் மேல்நாட்டுச் சுற்றுப் பிரயாணத்தின் பொருட்டுப் புறப்பட்டுச் சென்று சுமார் நான்கு மாதங்களாகின்றன; இந்த நான்கு மாதங்களாக நமது ‘குடிஅரசு’க்குக் கட்டுரைச் செல்வத்திலும், பொருட் செல்வத்திலும் ஒரு சிறிதும் வறுமை தோன்றாதபடி இரண்டையும் வழங்கி ஆதரித்து வந்த நமது இயக்கத் தோழர்களாகிய கட்டுரையாளர்களுக்கும் வாசகர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அடுத்த வாரம் நமது பத்திரிகைக்கு எட்டாவது ஆண்டு பிறக்கப்போவதால் நமது இயக்கத் தோழர்களாகிய கட்டுரையாளர்களும் வாசகர்களும் சிறந்த கட்டுரைகளை வழங்கியும், எண்ணற்ற சந்தாதாரர்களைச் சேர்த்துக் கொடுத்தும் பத்திரிகையின் வளர்ச்சியில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டுகிறேன்’’ என்பதாக அம்மையார் வெளியிட்ட அறிக்கை அவர்தம் இயக்க ஈடுபாட்டிற்குச் சிறந்ததோர் எடுத்துக்காட்டாகும்.

அய்யா அவர்களின் கீழைநாட்டுச் சுற்றுப் பயணத்தின்போது அம்மையாரும் உடன் சென்று இயக்கக் கொள்கைகள் பரப்பும் நடவடிக்கைகளில் பங்கு கொண்டார். காங்கிரஸ் கட்சியில் அய்யா ஈடுபட்டுத் தொண்டாற்றி வந்தபோது, கள்ளுக்கடை மறியற்போரை நிறுத்திவிடுவது என்பது என் கையில் இல்லை; அது ஈரோட்டில் உள்ள இரண்டு பெண்களிடந்தான் இருக்கிறது’’ எனக் காந்தியாரோலேயே புகழப்படும் அளவுக்கு எப்படி அன்னையார் தீவிரப்பணி புரிந்தாரோ, வைக்கம் போரில் அய்யா சிறைசென்ற காலத்தில்  தீண்டாமைக் கொடுமைகளைப் பற்றி அம்மையார் எவ்வாறு நாடெல்லாம் சுற்றிக் கருத்துகளைப் பரப்பினாரோ, அவ்வாறே சுயமரியாதை இயக்கக் கொள்கைகளைப் பரப்புவதிலும் முனைப்போடு பணி மேற்கொண்டார். சிங்கப்பூர் சென்று திரும்பும்வேளை அங்கு வதிந்த தன்மான வீரர்கள் அம்மையாரிடம், “தங்கட்குத் தேவையான, விருப்பமான மலாய் நாட்டுப் பொருள்கள் என்னென்ன?’’ என்று பரிவோடு கேட்டு முன்வந்தபோது, “நீங்களெல்லாம் இங்கே சுயமரியாதை இயக்கத்தைப் பாடுபட்டுப் பரப்பியிருக்கிறீர்களே, அதுவே எனக்கு அருமையான பொருள்’’ என்று கூறிப் பரிசுப் பொருட்களை வேண்டாது, கொள்கை பரவுதலில் நாட்டம் காட்டிய அன்னையின் செய்கை நமக்கு எத்தனையோ உணர்த்தவல்லது. தாம் ஈன்ற ஒரே மகவும் மறைந்த பிறகு அய்யா அவர்களின் தொலைநோக்கான விருப்பத்திற்கிசைந்து இயக்கத் தொண்டர்களையே தம் பிள்ளைகளாக வரித்துக்கொண்டு அவர்களால் ‘அன்னை’யென்று மதிக்கப் பெறும் உயர் நிலையை எய்தினார்.

எனவேதான் அவர் 11.5.1933 அன்று மறைவுற்ற காலை, “உணர்ச்சி போயிற்று என்று சொல்லட்டுமா? ஊக்கம் போயிற்று என்று சொல்லட்டுமா? எல்லாம் போயிற்று என்று சொல்லட்டுமா?’’ என்று கழிவிரக்கத்துடன் எழுதினார் தந்தை பெரியாரவர்கள்.

அம்மையார்தம் பிரிவுக் கட்டத்தில்கூடப் புரட்சிக்கு மூலமானார். அதாவது நெருங்கின உறவினர் முதல் உற்ற இயக்கப் பெருங்குடும்பத்தினர்வரை  எல்லோரும் ‘அழுதல்’ என்னும் நாகரிகமற்ற வழக்கை விட்டொழிந்து அமைதியாக விருக்கும் பண்பாட்டைக் கடைப்பிடித்தனர். 1933இல் இது மிகவும் பெரும் புரட்சிதானே!

நம் அன்னையாருடன் பொதுவுடைமைக் கொள்கைத் தந்தை காரல் மார்க்சின் துணைவியார் ஜென்னிமார்க்ஸ் ஒப்பிடத் தகுந்தவர் எனலாம்.

அய்யா அவர்களின் ஒவ்வோர் அசைவுக்கும் துணையாக இயங்கிய அம்மையார் பொதுத்தொண்டு புரியும் மகளிர்க்கு வழிகாட்டும் ஒளியாவார்! அன்னை நாகம்மையார் வாழ்க!

    நூல்: சுயமரியாதைச் சுடரொளிகள்

-  உண்மை இதழ், 1-15.5.18