குடந்தை மாணவர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குடந்தை மாணவர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 11 ஜூலை, 2018

குடந்தையில் திராவிட மாணவர் கழக பவள விழா மாநாடு!- சங்கொலி

**ஆ. வந்தியத்தேவன்**


மதிமுக  அமைப்புச் செயலாளர்




தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்னும் நீதிக்கட்சிக்கு "அண்ணாதுரை தீர்மானத்தால்" சேலத்தில் 27.08.1944 அன்று திராவிடர் கழகம் என பெயர் சூட்டப்பட்டது என்பது நாடறிந்த வரலாறு. ஆனால், அதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பே குடந்தையில் கல்லூரி மாணவர்கள் திராவிட மாணவர் கழகம் என்ற அமைப்பினை துவக்கி தன்மான இயக்கத்தைத் துவக்கிய தனிச் சிறப்பினை தக்க வைத்துக் கொண்டார்கள். குடந்தையில் காவிரிக் கரையில் இருந்த அரசினர் கலைக் கல்லூரி யில், பார்ப்பன மாணவர்களுக்கு தனி தண்ணீர்ப் பானையும், மற்ற மாணவர்களுக்கு தனி தண்ணீர்ப் பானையும் வைக்கப்பட்டு இருந்தது. இன்டர்மீடியட் எனும் இடைநிலை வகுப்பு முதலாண்டு மாணவரான, கதர்ச் சட்டை அணிந்த சம்பந்தம் "பிராமணாள்" பானையிலிருந்து தண்ணீர் எடுத்து குடித்ததற்காக அவருக்கு ஒரு ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து மாணவர்கள் போர்க்கொடி உயர்த்தி வெற்றி பெற்றார்கள்.

பல கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் உ.வே.சாமிநாத அய்யர் நினைவு தங்கப்பதக்க போட்டியில் குடந்தையில் இதே கல்லூரியில், பேச்சுப் போட்டியிலேயே கலந்து கொள்ளாத ஒருவரை அனுப்ப நிர்வாகம் எடுத்த முயற்சியையும் தமிழின மாணவர்கள் எதிர்த்து முறியடித்தார்கள். தமிழிசை விழா நடத்துவதற்கும் வந்த அடக்கு முறையை தூள் தூளாக்கினார்கள், மாணவர்கள்!

இத்தகைய பெருமைமிகு மாணவர்கள்தான் திராவிட மாணவர் கழகம் என்ற அமைப்பைத் துவக்கினார்கள். எஸ்.தவமணிராசன் - தலைவர், கருணானந்தம் - துணைத் தலைவர், பழனிவேல் - செயலாளர், சொக்கப்பா - பொருளாளர் என நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இந்த மாணவர் சேனையை 01.12.1943 அன்று துவக்கி வைத்தார் பேரறிஞர் அண்ணா!

இந்த மாணவர் பாசறையின் மாநாடு, திராவிட மாணவர் கழக மாநில மாநாடு என்ற பெயரில் குடந்தைவாணி விலாச சபாவில் 1944, பிப்ரவரி 19, 20 ஆகிய நாட்களில் நடை பெற்றது. மாநாட்டிற்காக தந்தை பெரியார் அவர்கள் வாழ்த்துச் செய்தி அனுப்பி இருந்தார். தி.மு.கழகத்தின் இன்றைய பொதுச்செயலாளர் (அன்றைய மாணவர்) பேராசிரியர் க.அன்பழகன் அந்த வாழ்த்துச் செய்தியை மாநாட்டில் படித்தார்.

கான்பகதூர் கலிபுல்லா, பேராசிரியர் முத்தையா ஆகியோர் தலைமையில் நடைபெற்ற மாநாட்டின் திறப்பாளர் தமிழ்ப் பொழில் ஆசிரியர் கோ.சி.பெரியசாமி, வரவேற்புரை எஸ்.தவமணிராசன். பேரறிஞர் அண்ணா, நாவலர் இரா.நெடுஞ் செழியன், ஏ.பி.ஜனார்த்தனம், இரா.செழியன், இளம்வழுதி, மா.நன்னன், புதுக்கோட்டை சமதான திவான் தாருல் இஸ்லாம் என தலைவர்கள் பலரும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு முழக்கமிட்டார்கள்.

இத்தகைய சரித்திரச் சம்பவங்கள் நடந்து 75 ஆண்டுகள் கடந்த நிலையில் திராவிட மாணவர் கழகத்தின் பவள விழா மாநாட்டினை அதே குடந்தையில் 08.07.2018 அன்று திராவிடர் கழகம் நடத்துவது என்பது பாராட்டுக்குரியது. இன்று, புதிய குலக்கல்வித் திட்டத்தை புகுத்திட சதி ஆலோசனை நடக்கிறது. நீட்' எனும் தடை யால் தமிழின மாணவர்கள் புறக்கணிக்கப்பட்டு உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள். இந்த சமூக அநீதி ஒருபுறம் கிடக்க, ஆதிக்க இந்தியை வீழ்த்திட அணி திரண்டு வந்த மாணவர்களின் இன்றைய இளம் தலைமுறையினர் பட்டாக் கத்திகளை ஏந்திக் கொண்டு கல்லூரி வாயிலில் ஆட்டம் போடுகிறார்கள்.

இதைப் பற்றி எல்லாம் சிறிதளவும் கவலைப்படாத மத்திய பாஜக அரசு கல்வித்துறையில் இந்துத்வா கொள்கைகளைத் திணிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. மோடி அரசு கல்வித்துறையை காவி மயமாக்கிவிட்டது. தீனா நாத் பத்ரா என்ற ஆர்.எஸ்.எஸ். சிந்தாந்தவாதியை பாடங்கள் தேர்வு செய்யும் குழுவின் தலைவராக அரசு அமர்த்தியுள்ளது. சுதர்சன் ராவ் என்ற மற்றொரு ஆர்.எ.ஸ்.எ.ஸ்.காரர் இந்திய வரலாற்று ஆய்வுக் குழுவின் தலைவராக நியமிக்கப் பட்டுவிட்டார். இதன் விளைவாக புராணக் கட்டுக்கதைகளை, வர்ணா சிரம கொள்கைகளை பாடத்திட்டத்தில் புகுத்தி காவி மயமாக்கும் பணியை ஆரவாரமின்றி செய்து வருகிறது பாஜக அரசு.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மனுதர்ம கொள்கைகளை 11 அம்ச திட்ட மாக்கி அதனை செயல்படுத்துமாறு பாஜக அரசுக்கு கட்டளை இடுகிறது. கல்வியை இந்திய மயமாக்குதல், பாரதியக்காரன் (Bharathiyakaran) என்ற காவிக் கொள்கைகளை பாரதிய ஷிஷான் மண்டல் என்ற அமைப்பு மத்திய அரசின் கல்வித்துறைக்கு அனுப்பியுள்ளது.

ஆர்.எஸ்.எஸ். தலைவர்களில் ஒருவரான நானாஜி தேஷ்முக் அவர்களின் பிறந்தநாளான அக்டோபர் 11 முதல் இந்த திட்டத்தினை மத்திய மனித வள மேம் பாட்டுத்துறை செயல்படுத்த போகிறதாம். சாணக்கியரின் நீதி சாஸ்திரம், பரத முனிவரின் நாட்டிய சாஸ்திரம், சுக்கிர நீதி சாஸ்திரம் முதலானவைகளை சமஸ்கிருத மொழியில் இளம் தலை முறையினரிடம் பரப்புவதே இதன் நோக்கம். நாராயணகுரு, ஜோதி பாபுலே ஆகியோரின் கருத்துக் களை பரப்புகிறோம் என்கிற முகமூடியில் இந்து ராஷ்டிர கொள்கைகளைத் திணிக்கும் நயவஞ்சகமாக நரித்தன மாக பாஜக நடுவண் அரசு செயலில் ஈடுபட்டு வருகிறது. பாஜக ஆளும் மணிப்பூரில் 12ஆம் வகுப்பு மாண வர்களுக்கான தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி இது:

'திராவிடனிசம்' என்ற பெயரால் வகுப்புவாதக் கருத்து பரவலாக பரவி இருக்கும் மாநிலம் எது? என்பதே வினா. அதற்கான விடையை தேர்வு செய்ய வேண்டும். (அ) பஞ்சாப் (ஆ) தமிழ்நாடு (இ) மகாராஷ்டிரா (ஈ) உத்தரப்பிரதேசம் என்ற விடை களில் தமிழ்நாடு என்பதுதான் சரியான விடையாம்!

திராவிட இன வெறுப்பை மணிப்பூர் வரை கொண்டு சென்று பிஞ்சு உள்ளங்களில் நஞ்சை பாய்ச்சிக் கொண்டிருக்கிறது பாஜக அரசு. தமிழ கத்தை ஆளும் எடப்பாடி அரசு கொத்தடிமை யாகவே மாறி இந்தக் கொடுமைகளுக்கும், அக்கிரமங்களுக்கும் பச்சைக் கொடி காட்டிக் கொண்டிருக்கிறது.

இந்த சூழலில் மாணவர்களிடம் நம் திராவிட இயக்கக் கொள்கைகளை பதிய வைக்க, மறு மலர்ச்சியை உருவாக்கிட, மறுமலர்ச்சி தி.மு.கழகம் இந்த ஆண்டு "பெரியார் - அண்ணா" எனும் தலைப் பிலான பேச்சுப் போட்டிகளை பொறுப்புடன் நடத்திக் கொண்டிருக்கிறது.

தாய்க் கழகமாம் திராவிடர் கழகம் குடந்தையில் திராவிட மாணவர் கழக பவள விழா மாநாட்டினை ஜூலை 8 அன்று எழுச்சியுடன் நடத்துகிறது. மாணவர் பட்டாளத்தை அணிதிரட்டி, அவர்களை திராவிடர் இயக்க தீரர்களாக வார்ப்பிக்க, திராவிடர் கழகம் நடத்த உள்ள திராவிட மாணவர் கழக பவள விழா மாநாடு சிறக்கவும், வாகை சூடவும், திராவிட இயக்கத்தின் பரிணாம வளர்ச்சியாக - அரசியல் அணியாக முழு வீச்சில் களமாடும் மறுமலர்ச்சி தி.மு.கழகம் வாழ்த்து மலர்களைத் தூவி வரவேற்கிறது! பாராட்டுகிறது!!

நன்றி: சங்கொலி' 13.7.2018

-  விடுதலை நாளேடு, 7.7.18

குடந்தை திராவிட மாணவர் கழக மாநாட்டுச் சிந்தனை

**- ஓர் அரிமா நோக்கு**




குடந்தை நகராட்சி சார்பில் தந்தை பெரியாருக்கு வரவேற்பு அளித்த காட்சி (9.9.1956)




கோ. இலட்சுமணன்


15.04.1978 மாலை குடந்தையில் (கும்பகோணத்தில்) நடைபெற்ற திராவிட மாணவர் கழக கமிட்டிக் கூட்டத்தில்  நான் (ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்) கலந்து கொண்டு உரையாற்றினேன். அதில் திராவிடர் மாணவர் கழகம் தோன்றக் காரணம் மற்றும் காரண மானவர்கள் ஆகியவற்றைத் தெளிவாக எடுத் துரைத்தேன்.  அதிலிருந்து விடுதலையில் பதிவான சில முக்கியப் பகுதிகளை மட்டும் குறிப்பிட்டுள்ளேன். (விடுதலை 17.5.1978, பக்கம் 3)

இந்த திராவிட மாணவர் கழகம் தோற்றுவிக்கக் காரணமாக இருந்த நண்பர்கள் சிலர் இன்னும் இருக்கின்றார்கள். இன்னும் இந்த உணர்வுடனேயே இருக்கின்றார்கள். அவர்கள் எங்கிருந்தாலும் இந்த உணர்ச்சி குன்றாதவர்களாகவே காட்சி அளிக்கின்றார்கள் என்பதைப் பார்க்கின்றோம்.

தண்ணீர்ப் பானை சம்பவத்திற்கு மூலகாரணமான நண்பர் தவமணிராசன் அவர்கள் சிவகாசியில் கூட்டுறவு வங்கி ஒன்றில் செயலாளராக இருந்து ஓய்வு பெற்ற அதிகாரியாக இன்னமும் இருக்கின்றார். (பிறகு சில ஆண்டுகள் கழித்து மறைந்தார்.)

அவர் அய்யா, அம்மா ஆகியோரிடத்தில் மிக்க அன்புள்ளங் கொண்டவராக இருந்து வந்தவர் ஆவார். அடிக்கடி அவர்களைக் கண்டு அளவளாவியவர் ஆவார்.

சென்ற வாரம் அவரை சென்னையில் சந்திக்க நேர்ந்தபோது சென்னையில் நடக்க இருக்கின்ற மாணவர் பயிற்சி முகாமுக்கு தாங்கள் வரவேண்டும், முகாமைத் தொடங்கிவைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். அவரும் வருவதாக மகிழ்வுடன் ஒத்துக் கொண்டு உள்ளார்.

நமது மாணவர்களுக்கும் இப்படிப்பட்டவர்களைப் பார்க்கக்கூடிய வாய்ப்பும், சரித்திரச் சான்றுகளுக்குச் சம்பந்தப்-பட்டவர்களை நேரில் காணும் வாய்ப்பும் கிட்டினால் மாணவர்களுக்கும், மற்றவர்-களுக்கும் மிக்க மகிழ்ச்சியையும், பயனையும் அளிக்கும் என்பதில் அய்யம் இல்லை.

அதேபோல இந்தக் குடந்தை கல்லூரியிலே தண் ணீர்ப் பானைப் போராட்டம் நடந்தபோது அதில் மிகத் தீவிரமாக இருந்தவர்களில் ஒருவர்தான் அன்று மாநிலங்களவையில் (தி.மு.கழக சார்பில்) உறுப்பினராக இருந்து மிகத் துடிப்புடனே செயல்பட்டு வருகின்ற அருமை நண்பர் ஜி.லட்சுமணன் எம்.பி. அவர்கள் ஆவார்.

அவர் ஆழமாக வரலாற்றுச் சுவடிகளை எல்லாம் படித்தவர். குடந்தை அரசினர் கல்லூரியில் பார்ப்பனர் களுக்குத் தனி தண்ணீர்ப் பானை, மற்றவர்களுக்குத் தனிப் பானை வைத்திருந்ததனால், தண்ணீர்ப் பானைத் தகராறு ஏற்பட்ட விவரங்களை எல்லாம் எடுத்துச் சொன்னால் மிகவும் பயன் உள்ளதாக அமையும். இன் றைக்கு டில்லியில் அவர் இல்லத்திற்குக்கூட பெரியார், அண்ணா இல்லம் என்றுதான் பெயர் வைத்து உள்ளார்.

மிகச் சோதனையான கட்டம் கடந்த காலத்தில் ஏற்பட்ட போதுங்கூட அவர் பயந்து ஓடி ஒதுங்கிவிட வில்லை. தாம் பெற்ற பதவியைப் பிறருக்கு அடகு வைக்காமல் இருந்தார் என்றால், காரணம் அவர் திராவிடர் மாணவர் கழகத்தில் ஆரம்ப காலத்திலே பெற்ற கொள்கைப் பிடிப்பும், சுயமரியாதை உணர்வுமே யாகும்.

இவர்கள் மட்டும் அல்ல; இன்னும் பல நண்பர்கள் இன்னும் இதே உணர்வுடனே இருந்துகொண்டு வரு கின்றார்கள்.

மாணவர் கழகம் என்பது கொல்லரது உலைக் கூடத்திலே இரும்பினைக் காய்ச்சி அடித்துப் பொருள்களைத் தக்க வடிவமைப்போடு உருவாக்குவது போல மாணவர் கழகம் அய்யா அவர்களின் இயக்கம் என்ற உலைக்கூடத்தில் எவ்வளவுக்கு எவ்வளவு அடிபடுகின்றார்களோ (பக்குவப்படுகின்றார்களோ) அவ்வளவுக்கவ்வளவு அவர்கள் இயக்கத்திற்கு வாளாய், கேடயமாய்  மற்ற போர்க் கருவிகளாய் பயன்பட முடியும். பயன்பட வேண்டும்.

எல்லாவிதமான சோதனைகளையும் தாங்கக்கூடிய பரிபக்குவத்தை மாணவ நண்பர்கள் இந்தக் கட்டத்தில் நன்கு பெற வேண்டும்.

வெறும் ஆவேசமாகப் பேசிவிடுவதன் மூலம் மட்டுமே நாம் காரியத்தைச் சாதித்துவிட முடியாது. அறிவுப்பூர்வமாகச் சிந்தித்துச் செயலாற்ற வேண்டியது தான் நமது மாணவர்களின் பணியாக இருத்தல் வேண்டும். மற்ற இயக்கங்களிலும் மாணவர்களிடையே ஆவேசம் இருக்கும். திடீர் என்று ஒரு காரியத்தைச் சுலபமாக ஆரம்பித்து விடுவார்கள். ஆனால் எப்படி முடிப்பது? யாரால் முடிப்பது? எங்கு கொண்டுபோய் விட்டுவிடும் என்பதே தெரியாத அமைப்புகளாகத்தான் அவை  சொந்த சிந்தனையை இணைத்து இயங்கும்.

ஆனால், நம்முடைய அமைப்பு அப்படிப்பட்ட நல்ல காரியங்களைத் தொடங்குவதற்கு முன்பு அறிவுப் பூர்வமாக நன்கு சிந்தித்து அதன் பிறகே காரியத்தில் இறங்கச் செய்யும்.

சுருங்கச் சொன்னால் நம் கிளர்ச்சி என்றால் நம் மாணவர்களுக்காகச் செய்கின்ற கிளர்ச்சியே தவிர, மாணவர்களைக் களத்தில் இறக்கி விடுகின்ற கிளர்ச்சி யினை நாம் என்றுமே செய்ய மாட்டோம்.

மாவோவின் புரட்சியையும் மிஞ்சியது அய்யாவின் புரட்சி


சீனத்தின் கலாச்சாரப் புரட்சி, மாவோவின் கலாச்சாரப் புரட்சி பற்றியும் நான் அறிந்துள்ளேன். ஆனால், தந்தை பெரியார் அவர் களுடைய கலாச்சாரப் புரட்சி 1925லேயே முகிழ்த்தது. பல நூற் றாண்டுகளாக சமுதாயத்தில் நடைபெற்று வந்த மூடநம்பிக்கைத் திருமணத்திற்கு மாறாக பார்ப்பானை அழைக்காமலும், மூடநம்பிக்கையினை நீக்கியும் திருமணத்தைச் செய்து வைக்கத் தொடங்கி, அதற்கு ஏற்பட்ட எதிர்ப்புகளை எல்லாம் சமாளித்து, அது ஆண்டுதோறும் பல்லாயிரக் கணக்கில் நிகழும்படிச் செய்து, சட்டம் அதைச் செல்லாது என்று தீர்ப்பு அளித்த பிறகும்கூட, சட்டத்தைப் பற்றி சமுதாயம் கவலைப் படாமல் எத் தனையோ பத்தாயிரக்கணக்கான திரு மணங்கள் நடந்து வந்திருக்கின்றன.

சீனப் புரட்சியை ஆங்கிலத்தில் எழுதினார்கள். பல நாடுகளிலும் பரப்பினார்கள். நமது கலாச்சாரப் புரட்சியை நாம் ஆங்கிலத்தில் எழுதவில்லை. நாம் வெளிநாடுகளில் பரப்பவும் இல்லை. இச்செய்தி மட்டும் வெளிநாடு களுக்குப் போய் இருந்தால் இதுவே அகில உலகத்திலும் மற்றவர்கள் சிந்தனைக்கும் மேலானது, தனித் தன்மை யானது? தந்தை பெரியார் அவர்களுடைய சிந்தனை, பெரியார் இயக்கத்தின் சாதனை என்று போற்றப்பட்டு இருக்கும். இதனை இளம் உள்ளங்களும் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

மார்க்ஸ் தமது தத்துவத்தினைச் சொல்வதற்கு முன்னால் பிரிட்டிஷ் மியூசியம் என்ற நூலகத்திலே பல நூற்றுக்கணக்கான புத்தகங்களிடையே பல மாதங்கள் அங்கு உட்கார்ந்து கொண்டு ஆராய்ந்து படித்துப் படித்துத்தான் தமது தியரியை எழுதினார். மற்றவர்கள் சொன்ன கருத்துகளை அய்யா சொல்லவில்லை. அய்யா சொன்ன கருத்தை இன்னாரும் சொல்லி இருக்கின்றார்; அதுவும் இவ்வளவு காலந்தாழ்ந்து சொல்லி இருக்கின்றார் என்பதைக் காட்டத்தான் பயன்படும். எனவே அய்யா சொல்லாத கருத்துகளே கிடையாது. எல்லாவிதமான பிரச்சினைகளுக்கும், சந்தேகங்களுக்கும் அய்யா அவர்கள் நூல்களிலுள்ள கருத்துகளிலே விடை கிடைக்கும்.

மாணவர்களைப் பிரச்சாரப் படையாக முன்னிறுத்திப் பயன்படுத்திக் கொள்வோமே தவிர, அவர்களைக் களப்பலியாகக்கூடிய காரியத்தை என்றைக்குமே செய்யாதவர்கள் நாங்கள்.

"உண்மை", (1.3.2015) (அய்யாவின்

அடிச்சுவட்டில்... 125ஆம் தொடர்)

- விடுதலை நாளேடு, 5.7.18

வியாழன், 5 ஜூலை, 2018

75 ஆண்டுகளாக அணையாத தீ! கோவி. #லெனின்

#நக்கீரன்இதழில்

Periyar
75 ஆண்டுகளாக அணையாத தீ!
கோவி. #லெனின் 



பானையில் தண்ணீர் இருந்தது. தாகம் மிகுந்த மாணவர் அந்தத் தண்ணீரை ஒரு குவளையில் எடுத்து குடித்துவிட்டார். அவ்வளவுதான்.. பிரளயமே ஏற்பட்டுவிட்டது. கடும் வார்த்தைகளால் அந்த மாணவரை வறுத்து எடுத்துவிட்டனர் வருணாசிரமத்தின் காவலர்கள்.

“உங்களை மாதிரி ஆளுங்க குடிக்கத்தான் தனியா ஒரு பாணை இருக்குதே.. எங்களவா பானையில உள்ள ஜலத்தை ஏண்டா மொண்டு குடிச்சே..” என சம்பந்தத்தை கண்டித்ததுடன், அபராதமும் விதிக்கப்பட்டது. இது நடந்தது, அரசாங்கம் நடத்தும் கல்லூரியில்! ஆண்டு, 1943.

காவிரியாற்றை ஒட்டி அமைந்துள்ள கும்பகோணம் அரசு கல்லூரி விடுதியில்தான் இந்த நிலை. உயர்சாதியினரான பிராமண சமுதாய மாணவர்களுக்குத் தனி தண்ணீர் பானை. மற்ற சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஒரு பானை. இந்த சம்பந்தத்தை அறியாமல் சம்பந்தம் என்ற கதர்ச் சட்டை அணிந்த மாணவர், தன்னைப் போன்ற சமூகத்தினர் தண்ணீர் எடுத்துக் குடிக்க வேண்டிய பானைக்குப் பதில், உயர்வகுப்பாருக்கான பானையிலிருந்து தண்ணீர் குடித்ததால், விடுதிக் காப்பாளர் கணேச அய்யரால் ‘விசாரணை’க்குட்படுத்தப்பட்டு, அபராதமும் விதிக்கப்பட்டது.

அதே கல்லூரியில் பி.ஏ. வகுப்பில் படித்துவந்த மாணவர் எஸ்.தவமணிராசனுக்கு இந்தத் தகவல் தெரிய வந்தது. தனது நண்பர் டி.மகாலிங்கத்துடன் சென்று சம்பந்தத்தை சந்தித்தவர், “அபராதம் கட்ட வேண்டாம் நண்பா.. என்ன நடந்தாலும் எதிர்கொண்டு உரிமையைக் காப்போம்” என்றார் உறுதியாக. மாணவர்களை அணி திரட்டினர். அவர்களின் போராட்டக் குணத்தால், அபராதத்தை ரத்து செய்தார் கல்லூரி முதல்வர் கே.சி.சாக்கோ.

ஆரியத்துக்கு எதிராக திராவிட மாணவர்கள் சுயமரியாதை உணர்வுடன் பெற்ற இந்த முதல் வெற்றியின் தொடர்ச்சியாக, கும்பகோணத்தில் நாடகம் நடத்திய எம்.ஆர்.ராதாவையும், சிதம்பரத்தில் திராவிட நாடு இதழ் வளர்ச்சிக்காக இயக்கப் பிரச்சார நாடகம் நடத்திய அறிஞர் அண்ணாவையும் மாணவர்கள் சந்தித்தனர். கும்பகோணம் அரசு கல்லூரிக்கு அழைத்தனர். அந்த அழைப்பினை ஏற்று 1.12.1943 அன்று திராவிட மாணவர் கழகத்தை கும்பகோணத்தில் தொடங்கி வைத்தார் அண்ணா.

75 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட திராவிட மாணவர் கழகத்தின் தலைவராக தவமணிராசனும் துணைத் தலைவராக கருணானந்தமும், செயலாளராக பழனிவேலும், பொருளாளராக சொக்கப்பாவும் பொறுப்பேற்றனர். தடுக்கி விழுந்தால் திருக்கோவில்களில்தான் விழவேண்டும் என்கிற அளவுக்கு ஆன்மிகம் தழைத்த நகரான கும்பகோணத்தில் ஆரியத்தின் தாக்கம் இன்று வரை உண்டு. அந்த மண்ணில்தான், முக்கால் நூற்றாண்டுக்கு முன், அண்ணாவை அழைத்து திராவிட மாணவர் கழகத்தை உருவாக்கியவர்கள், அடுத்ததாக பெரியாரையும் அழைத்தனர்.

ஆளுயர மாலை அணிவித்து பெரியாருக்கு வரவேற்பு அளித்து விருந்து தந்தது கல்லூரி நிர்வாகம் இலக்கிய மன்றத்தில் 2 மணி நேரம் உரையாற்றிய பெரியார்,  தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் குறித்து தனது தொலைநோக்குப் பார்வையை முன்வைத்தார். (இன்று கணினி பயன்பாட்டில் பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தம் மிக முக்கிய பங்காற்றி, இளைய தலைமுறையினருக்குத் துணை நிற்கிறது)

குடந்தை கல்லூரியில் தமிழ்த் தாத்தா உ.வே.சா நினைவாக பேச்சுப் போட்டிக்கு வழங்கப்படும் தங்கப் பதக்கத்தை, போட்டியில் பங்கேற்காத மேல் சாதி மாணவருக்கு கிடைக்கச் செய்ய நிர்வாகத்தினர் செய்த சதித் திட்டத்தை முறியடித்தது திராவிட மாணவர் கழகம். கீர்த்தனைகள் பாடுவது மட்டுமே இசைக் கச்சேரி என்றிருந்த நிலையில், கல்லூரித் தமிழ் மன்றத்தின் சார்பில் இசை விழாவை ஏற்பாடு செய்னர் திராவிட மாணவர்கள். இதற்கு மேலசாதியைச் சேர்ந்த கல்லூரி ஆசிரியர்களும் நிர்வாகத்தினரும் எதிர்ப்பு தெரிவித்த போதும், போராட்டக் களம் கண்டு, பூட்டப்பட்ட கல்லூரி விழா மண்டபத்தைத் திறக்கச் செய்து, அதில் தமிழ் இசைக் கருவிகள் ஒலிக்க இசை நிகழ்ச்சி நடத்திக் காட்டினர். கல்லூரியில் சமஸ்கிருதம் ஒலித்த மேடைகளை தமிழால் நிறைத்தனர் மாணவர்கள்.

திராவிட மாணவர் கழகத்தின் மாநில மாநாடு குடந்தை வாணி விலாச சபாவில் 1944ல் நடந்தது. அறிஞர் அண்ணா, புதுக்கோட்டை சமஸ்தான திவான் தாருல் இஸ்லாம், நாவலர் இரா.நெடுஞ்செழியன், பேராசிரியர் க.அன்பழகன், கே.ஏ.மதியழகன், இரா.செழியன், மா.நன்னன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். மாணவர்கள் இணைந்து உருவாக்கிய அமைப்புக்கு பெரியாரின் ஆதரவு தொடர்ந்து கிடைத்தது.


குடி அரசு' இதழில் எழுதிய அறிக்கையில், "அன்புள்ள மாணவர்களே.. பிற்காலம் உங்களுடையது. உங்கள் வயிற்றுப் பிழைப்புக்கோ, வாழ்வுக்கோ வகை செய்துகொள்வதற்கு மாத்திரமல்ல. நாட்டைப் பாருங்கள். நாட்டில் உங்கள் இன நிலைமையைப் பாருங்கள். கோழைகளையும்- தன்னல வீரர்களையும் நல்லுரு வாக்குங்கள். பெண் மக்களை ஆண்மையுள்ளவர்களாக ஆக்குங்கள். கீழ்மக்களை-தீண்டப்படாதவர்கள் என்ப வர்களை மேன் மக்களாக ஆக்குங்கள். இவை உங்களால் முடியும். கண்டிப்பாக முடியும். அதுவும் இப்போதே முடியும்" எனத் தெரிவித்திருக்கிறார் பெரியார்.

குடந்தை கல்லூரி மாணவர்கள் திராவிட மாணவர் சங்கத்தை உருவாக்கிய இதே காலகட்டத்தில்தான், திருவாரூரில் தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றத்தினை கலைஞர் மு.கருணாநிதி தன் மாணவப்பருவத்தில் தொடங்கி புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் வாழ்த்துக் கவிதையைப் பெற்றார். அந்த  மன்றத்தின் ஆண்டு விழாவில் சொல்லின் செல்வர் ஈ.வெ.கி.சம்பத், நாவலர் நெடுஞ்செழியன், கே.ஏ.மதியழகன், கி.வீரமணி உள்ளிட் டோர் பங்கேற்றனர். மாணவப் பருவத்தில் விதைக்கப் பட்ட விதைதான் ஓர் அரசியல் பேரியக்கத்திற்கு அடித்தளமானது.

மாணவர்கள் தங்கள் சுயநலத்துக்காகவும், வெற்று ஆடம்பரத் துக்காகவும் கத்தி-அரிவாள் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு பேருந்திலும் ரயிலிலும் வன்முறை விளையாட்டில் ஆர்வம் காட்டும் இன்றைய நிலையில், திராவிட மாணவர் கழகத்தின் பவள விழா(75ஆம் ஆண்டு) கும்பகோணத்தில் ஜூலை 8ந் தேதி நடைபெறுகிறது. திராவிடர் கழகம் முன்னெடுக்கும் இந்த விழா, அன்றைய மாணவர்களைப்போல இன்றைய மாணவர்கள் மேற்கொள்ள வேண்டிய சமுதாயப் பணிகளை நினைவூட்டுவதாக அமையும்.

மாட்டுக்கறி தின்றதற்காக மனித உயிர்களைப் பறிக்கும் மதவெறி சக்திகள் தலைவிரித்தாடுவதுடன், கச்சநத்தம்-சந்தையூர் என சாதிக் கொடுமைகளுக்கான சாட்சியங்களும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. தேர்தல் அரசியல் லாபத்தை மட்டுமே கருதுவோரால் ஒருபோதும் மனித குலத்தின் முழுமையான விடுதலையை நோக்கிப் பயணிக்க முடியாது.

சமூக அக்கறை கொண்ட இளைய சமுதாயம்தான் அதற்கானப் பயணத்தை உறுதியாகத் தொடர முடியும். முக்கால் நூற்றாண்டுக்கு முன் மூட்டிய தீ, இப்போதும் இருள் அகற்றும் தீப்பந்தமாக சுடர் விடுகிறது. அதனை ஏந்தப் போகின்ற கைகள் எவை?

-  விடுதலை நாளேடு, 5.7.18