புரட்டு இமாலய புரட்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புரட்டு இமாலய புரட்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 27 நவம்பர், 2019

கணக்கு வழக்கு எங்கே? - 2 (27)

தந்தை பெரியார்

பெரியார் திறந்த பல்கலைக் கழகம் 9-3-1985, 10-3-1985 ஆகிய இருநாள்களிலும் சென்னையில் அறிஞர் பெரு மக்கள் பங்கேற்ற சமஸ்கிருதமயம் - ஆதிக்கம் (Sanskritisation) பற்றிய ஒரு கருத்தரங்கத்தை நடத்தியது. அதில் ஆராய்ச்சி பூர்வமான கருத்துரைகள் எடுத்து வைக்கப்பட்டது.

சமற்கிருத மயமாக்கப்பட்டமை எனும் பொருள் பற்றிய கருத்தரங்கில் பேராசிரியர் இராம.சுப்பிரமணியன் உரை வருமாறு:

சென்ற வாரத் தொடர்ச்சி

இந்நூற்பாவுக்குச் சான்று காட்டவந்த நன்னூலுரையா சிரியர்களுள் ஒருவரும் நான்கெழுத்திற்கு மேற்பட்ட தமிழ்ச் சொல்லினைச் சான்று காட்டிலர்.

அணி, அறம், அகலம், அருப்பம், தருப்பணம், உத்திரட்டாதி-பகாப்பதம்.

கூனி, கூனன், குழையன், பொருப்பன், அம்பலவன், அரங்கத்தான், உத்திராடத்தான், உத்திரட்டாதியான்-பகுபதம்.

இவை நன்னூலுக்குப் பேருரை (விருத்தியுரை) எழுதிய சிவஞான முனிவர் காட்டியவை. இவற்றுள் பகாப்பதத்துள் அகலம்வரை தமிழ், பகுபதத்துள் பொருப்பன்வரை தமிழ்.

அகலம் என்பது நான்கெழுத்தாலாயது; அகல்+அம் எனப் பிரித்துக் காணின் மூன்றெழுத்து, ஈரெழுத்தாய் நிற்கும்.

பொருப்பன் என்பது பொருப்பு+அன் எனும் இரு சொற்புணர்ச்சி; பொருப்பு நான்கெழுத்தாலாயது. ஏனைய உரையாசிரியர் சான்றுகளை விரிப்பின் பெருகும்.

பதம் என்பது வடசொல், மொழி, சொல், கிளவி என்பன தமிழ். இம்மூன்றனையும் இன்று பதம், பதம் பார்த்து வருகிறது.

தொல்காப்பியர் ஓரெழுத்தொரு மொழி, ஈரெழுத்தொருமொழி, தொடர்மொழி எனச் சுட்டுகிறார். ஈண்டுத் தொடர்மொழி என்பது மூவெழுத்து மொழியினையும், நான்கெழுத்து மொழியினையும் சுட்டும்.

ஓரெழுத் தொருமொழி ஈரெழுத் தொருமொழி

இரண்டிறந் திசைக்கும் தொடர்மொழி உளப்பட

மூன்றே மொழிநிலை தோன்றிய நெறியே

என்பது தொல்காப்பியர் திருவாக்கு.

ஆ, கா, நா - ஓரெழுத்தொருமொழி

மணி, வரகு, கொற்றன் - ஈரெழுத்தொருமொழி

கணவிரி (அலரி) - நாலெழுத்தொருமொழி

அகத்தியனார் - அய்யெழுத்தொருமொழி

திருச்சிற்றம்பலம் - ஆறெழுத்தொருமொழி

பெரும்பற்றப்புலியூர் - ஏழெழுத்தொருமொழி இவை உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர் அந்நூற்பாவிற்குக் காட்டும் சான்றுகள். இவற்றுள் நாலெழுத்தொருமொழிவரை தமிழ் ஏனையவை பகுத்தற்குரியன.

ஆ, மணி, வரகு, கொற்றன் இவை உரையாசிரியர் இளம்பூரணர் காட்டும் சான்றுகள். நான்கெழுத்துச் சொல்லுக்கு மேற்காட்டாமை இவரது தமிழ் மரபை உணர்ந்து உரை எழுதும் திறத்தைக் காட்டுகிறது.

மேற்கண்ட விளக்கங்களால் நான்கெழுத்திற்கு மேம்பட்ட தமிழ்ச்சொல் இல்லை என்பது தெளிவாகப் புலனாகிறது.

இந்நிலையில் இலக்கியமும் இலக்கணமும் எவ்வாறு தமிழ்ச் சொற்களாக இருக்க முடியும்? அவை தமிழ்ச் சொற்கள் அல்லவே அல்ல; வடமொழிச் சொற்கள்.

லக்ஷியம் எனும் வடமொழியின்

தற்பவம் இலக்கியம்.

லக்ஷணம் எனும் வடமொழியின்

தற்பவம் இலக்கணம் ;

(தற்பவம் - தன்னிலிருந்து தோன்றியது) இவற் றைத் தமிழெனக் கொண்டு மனம் போன போக்கில் விளக்கம் காண்பது ஏற்புடைத்தன்று.

இலக்கணம் எனும் சொல் தொல்காப்பியத்தில் இடம் பெற்றிருப்பதைக் கொண்டு அது தமிழ்ச்சொல் என வாதிடுதல் பொருந்துவதன்று. தொல்காப்பியர் காலத் திற்கு முன்பே வடமொழி மயமாக்கும் பணி தொடங்கப்பட்டதன் விளைவு அது.

அவ்வாறாயின் இலக்கிய இலக்கணம் எனும் தொடருக்கு ஈடாய்த் தமிழ்த் தொடர் ஒன்று இருக்க வேண்டுமல்லவா?

அத்தொடர் யாது ?

கணக்கு வழக்கு என்பதே அத்தொடர்

அக்கணக்கு வழக்கு எங்கே? -

அன்னை மொழியின் அருமையை உணராது அயல்மொழிக்கு ஆக்கம் தேடக் கருதிய பண்டைக்கால உரையாசிரியர் சிலரால் அத்தொடர் தன்னிடத்தை இழந்து, பிளவுபட்டுத் தன் பொருளை மட்டும் விடாது, கரந்து நிலவுகிறது.

பதினெண்கீழ்க்கணக்கு, பதினெண்மேற்கணக்கு எனும் தொடர்களின் கண்வரும் கணக்கு என்பதும்,

காணக்காயர் எனும் சொற்கண் நிற்கும் கணக்கு என்பதும்,

-"கணக்கினை

முற்றப்பகலும் முனியா(து) இனிதோதிக் கற்றலின்

கேட்டலே நன்று"

எனும் பழமொழிப் பாடல் தொடர்க்கண் வரும் கணக்கு என்பதும்,

கணக்கறிந்தும் விடுவானோ கண்டாய் என் தோழி எனும் வள்ளலார் தொடர்க்கண் வரும் கணக்கு என்பதும் எப்பொருளைச் சுட்டுகின்றன?

கருதுதல்-கருத்து, கருதுதற்குரிய நூல் எனும் பொருளைச் சுட்டுகின்றன. இலக்கியத்தைச் சுட்டுகிறது என்றால் தெளிவாகப் புரியும். அந்த அளவிற்கு வடமொழி, நம்மைத் தன்மயமாக்கிவிட்டது.

"எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்

கண்ணென்ப வாழு முயிர்க்கு"

எனும் திருக்குறட்கண்ணும்

"எண்ணு மெழுத்தும் கண்ணெனத் தகும்

எண்ணெழுத்திகழேல்"

எனும் முதுமொழிகளின் கண்ணும் இடம் பெற்றுள்ள எண் என்பதும் கணக்கையே உணர்த்தும்.

கண் என்பது கணக்கு என்பதன் வேர்ச்சொல்;

கண் - கருது

எண் - எண்ணுதல் - கருதுதல்

கருதுதற்கு-எண்ணுதற்கு-சிந்தித்தற்கு உரியதாய்த் திகழ்வது கணக்கு.

இலக்கியம் எனும் வடமொழி மயத்தால் கணக்கு இவ்வாறு கரந்து மறைந்து திரிந்து வருகிறது; என்னே தமிழ் நிலை ?

ஏவல் கண்ணிய (கண்ணிய - கருதிய)

கண்ணிய மரபு

கண்ணிய நிலைத்தே கண்படை கண்ணிய கண்படை

கபிலை கண்ணிய வேள்வி

காலம் கண்ணிய ஓம்படை

காமம் கண்ணிய நிலைமைத்து

கண்ணிய புறனே

முதலாய தொடர்களுள் கண்ணிய (கண்) எனும் சொல்லினைக் கருது-கருத்து எனும் பொருளில் தொல் காப்பியர் கையாண்டுள்ளமையைக் காண்க. மேலும் பல இடங்களிலும் இவ்வாறு கையாண்டுள்ளதைப் புலவர் உலகம் நன்கறியும்.

வழக்கு - வழங்கு - வழங்குவது வழக்கு வழங்குதலால் அமையும் மொழியின் அமைதியே வழங்கு, வழக்கு, இயல், மரபு முதலாயவை ஒரு பொருட் சொற்கள்.

இயல் என்பது இலக்கணம் எனும் பொருளில் வழங்கி வந்த சொல்லாகும். எழுத்தியல், பிறப்பியல், புணரியல் முதலாய பல இடங்களில் இடம் பெற்றிருக்கும் இயல் என்பதற்கு இளம்பூரணர். நச்சினார்க்கினியர், பேராசிரியர், சங்கரநமச்சிவாயர் முதலாயவர்களை உள்ளிட்ட உரையாசிரியப் பெருமக்கள் அனைவரும் இலக்கணம் என்றே உரை காண்கின்றனர்.

இயல் (இயல்பு)-மொழியின் இயல்பு-மொழி இயல்பாய் அமைந்த நிலை.

வழங்கியல் மரபு

வழக்கத்தான

வழங்கியல் மாவென் கிளவி

வழக்கு வழிப்பட்டன

முதலாய தொடர்களுள் வழக்கு (வழங்கு) எனும் சொல்லினை இயல் (இலக்கணம்) எனும் பொருளில் தொல்காப்பியர் கையாண்டுள்ளமையைக் காண்க.

இக்கருத்துணராது இயல் என்பதற்கு சிறு பகுதி (ஊயயீவநச) என்று பொருள் காண்பது பொருந்து வதன்று. ஆறுமுக நாவலரும் தொல்காப்பிய நூற்பாக் களைக் குறிப்புரையுடன் வெளியிட்ட இளவழகனாரும். அப்பொருள் இருப்பதாகச் சுட்டுதல் ஏற்புடைத்தன்று. அதற்கு ஒத்து எனும் சொல்லொன்று இருப்பதை அவர்கள் அறியாதவர்களல்லர்.

கணக்கு வழக்கு எனும் தொடர் இலக்கிய இலக் கணம் எனும் வடமொழி மயத்தால் கரந்துறைந்து, கரைந்து வருதலைப் போல, படலம், பால் எனும் தமிழ்ச் சொற்கள் அதிகாரம் எனும் வடமொழி மயத்தில் கரைந் துறைகின்றன. இவைபோன்றே எத்துணையோ தூய தமிழ்ச்சொற்கள் தம்மிடத்தை வடமொழிச் சொற்கள் கைப்பற்றிக் கொள்ள, வாழவழியின்றி, ஏங்கிக் கரந்து நின்று தவிக்கின்றன. அவற்றையெல்லாம் வெளிக் கொணர்தல் தமிழ் மக்களின் தலையாய கடமையாகும்.

- விடுதலை நாளேடு 19 11 19

செவ்வாய், 12 நவம்பர், 2019

சமற்கிருத மயமாக்கப்பட்ட தமிழிலக்கணம் (2) - 24

பேராசிரியர் பெ. திருஞானசம்பந்தன்

பெரியார் திறந்த பல்கலைக் கழகம் 9-3-1985, 10-3-1985 ஆகிய இருநாள்களிலும் சென்னையில் அறிஞர் பெரு மக்கள் பங்கேற்ற சமஸ்கிருதமயம் - ஆதிக்கம் (Sanskritisation) பற்றிய ஒரு கருத்தரங்கத்தை நடத்தியது. அதில் ஆராய்ச்சி பூர்வமான கருத்துரைகள் எடுத்து வைக்கப்பட்டது.

சமற்கிருத மயமாக்கப்பட்டமை எனும் பொருள் பற்றிய கருத்தரங்கில் பேராசிரியர் பெ.திருஞானசம்பந்தன் உரை வருமாறு:

பிரயோக விவேக ஆசிரியர் சுப்பிரமணிய தீட்சிதர் தாம் இயற்றிய நூலின் சிறப்பியல்பையும் பயனையும் கூறுமிடத்து தொல்காப்பியனாரும் நன்னூலாரும் கூறிய வடமொழி இலக்கணம் பெற்ற தற்சமந் தற்பவமாகத் தத்தம் நூலுள்ளே எழுத்திற்கும் சொல்லிற்கும் காரணக்குறி இடுகுறியாகிய யோகரூட நாமங்களைச் சிறுபான்மை கூறினார். அவ்வாறு சிறுபான்மை கூறாது, யாம் இந்நூலுட் பெரும்பான்மையும் தற்சமம் தற்பவங்களாற் கூறினாம். இப்பெரும்பான்மையும் கூறியது, வடமொழிக்கும் தமிழ்மொழிக்கும் இலக்கணம் ஒன்று என்பதறியாது சம்ஞாபேதத்தாலும் பாடை வேற்றுமையாலும் இகழ்ந்து வேறென்பாரை நோக்கி என்க. இந்நூல் செய்ததற்கும் இதுவே பயன் என்று விளக்குகிறார். ஆகவே, இவர் அகத்தியத்திற்கும் தொல்காப்பியத்திற்கும் முதனூல் பாணினி இயற்றிய அஷ்டாத்யாயியும் இந்திரன் ஆக்கிய இலக்கணமும் என்று கொண்டார். சென்ற நூற்றாண்டில் கால்டுவெலும் இன்றைய நூற்றாண்டில் பர்ரோ, எமனோ, சுநீதிகுமார் சாட்டர்ஜி முதலான பல்வேறு ஆரிய திராவிட மொழியாய்வாளர்களும் இக்கூற்று முற்றிலும் தவறானது என்பதைத் தெள்ளிதின் நிலை நாட்டிவிட்டதை நீங்கள் அறிவீர்கள். இன்னும் சொல்லப்போனால் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு இக்கருத்தைச் சிவஞானமுனிவர் தெளிவாகக் கூறிவிட்டார் என்பதை நாம் காண்கிறோம்.

காரகத்திற்குரிய பெயர்களுள் கருத்தா, கருமம், கரணம், அவதி, ஆதாரம் என்ற வடமொழிப் பெயர்களையே எடுத்தாள்கிறார். ஆறாம் வேற்றுமையைக் காரகமாகக் கொள்பவன் என்ற பொருளில் வரும் நான்காம் வேற்றுமைக்குரிய காரகத்தை மட்டும் கோளி என்ற தமிழ்ச் சொல்லாகக் குறிப்பிடுகிறார்.

வடமொழியில் ஆண், பெண், அலி என்ற முப்பாலிலும் வரும் சொல் ஏழு வேற்றுமைகளையும், ஒருமை, இருமை, பன்மை என்ற மூன்று எண்களையும் கொண்டு உறழ 63 வடிவங்களைப் பெறுகின்றன. இவற்றிற்கொப்பத் தமிழிலும் 64 வடிவங்கள் உளவாக ஆசிரியர் கருதுகின்றார். பெயர் உருபு எட்டுடன் வேற்றுமை உருபு எட்டையும் உறழ்ந்து இவ்வெண்ணைப் பெறுகிறார். வினையியலில் துமந்தம், துவாந்தம் என்பவற்றைத் தமிழ்ச் சொற்களோடு தொடர்புபடுத்திக் காட்டுகிறார்.

இலக்கணக்கொத்து ஆசிரியர் சாமிநாத தேசிகர் தமிழிலும் வடமொழியிலும் வல்லவர். இவரது இலக்கணக் கொத்து வடமொழி இலக்கணத்தை உட்கொண்டு அமைந்துள்ளது. இவரது தீவிர வடமொழிப்பற்று இவரை வடநூலை விட்டுத் தனியே தமிழ் நடவாது என்று கூறும் அளவிற்கு அமைந்துள்ளது. 17-ஆம் நூற்றாண்டில் அவர் காலத்தில் நிலவிய வடமொழிச் செல்வாக்கு, அய்ந்தெழுத்தால் (ற, ன, ழ, எ, ஒ) ஒரு பாடை என்று அறையவும் நாணுவர் அறிவுடையோரே என்று அவர் கூறும் அளவிற்கு மிகுந்திருந்தது. வடநூலார் சந்தியக்கரம் என்பதை இணையெழுத்து என்றும் ஏகவாக்கியம் பின்னவாக்கியம் என்பனவற்றை ஒரு தொடர், பல தொடர் எனவும் மொழிபெயர்த்துக் கூறியுள்ளார்.

தொன்னூல் விளக்க ஆசிரியரான வீரமாமுனிவர் பொருளதிகாரத்தில் விரித்துரைக்கப்படும் பொருளாகத் தொல்காப்பியல் கூறிய அகம், புறம் என்பவற்றை விடுத்து அறம், பொருள், இன்பம், வீடு என்று கொண்டார். அதற்கு அவர் கூறும் காரணம்-பொருணூல் தந்த செந்தமிழுணர்ந்தோர் மற்றை யாவும் ஒழிய அகப்பொருள் எனச் சிற்றின்பம் ஒன்றையும், புறப்பொருள் எனப் படைச்சேவகம் ஒன்றையும் விரித்துரைத்தார். அங்ஙனம் பொதுப்படாது உரைத்த நூல் சிறுபான்மையாகையான் இங்ஙனம் அறம் முதல் நான்கிற்கேற்ப பொது நூலாக இவ்வதிகாரம் முடியும் எனவே கொள்க என்பதாகும். இப்படி வடநூலார் மரபையொட்டித் தண்டி முதலாயினோர் கூறியவாறு நால்வகைப் புருடார்த்தங்களே அகமும் புறமுமாம் என்பதோடமையாது இப்பொருள், வழக்கு, தேற்றம், தோற்றம் என மூவகைப்படும் என்றும், வடநூலார் இவற்றை ஆசாரம், விவகாரம், பிராயச்சித்தம் என்பர் என்றும் கூறினார். பொருளிலக்கணம் கூறவந்த வீரமாமுனிவர் மிருதி நூலில் கூறப்பட்டவற்றைக் கூறுவது வியப்பாகும். புறத்திணை ஒழுக்கத்தைக் கூற முற்பட்டவர், வேதநூல், நீதிநூல், மனு நூல் முதலிய நூல் வழி விலக்கியனவும் விதித்தனவும் எடுத்துக்காட்டித் தன் பொருள் தோன்ற விளக்கல் நூற்புறத்திணையாம் என்றாலும் வடநூற் கருத்துகளை மரபுக்குப் புறம்பாக இலக்கண நூலில் அமைப்பது பொருத்தமாகப்படவில்லை.

ஆரிய மொழிகளைத் தமிழிடத்துரைக்குங்காலைப்  பொதுவெழுத்தால் வரும் பதமே சிறப்புடைத்து; அல்லன வருதல் சிறப்பன்று என்ற மரபு வழிப்பட்ட கருத்தை ஏற்றுக் கொள்கிறார். தமிழிலக்கணக் குறியீட்டுச்  சொற்களுக்கு ஒத்த தன்மை உடைய வடசொற்களைத் தருவதை ஆங்காங்கு காண்கிறோம். வடநூலார் பகாப்பதத்தை ரூடம் என்பர் (சூ.46) விகுதியை பிரத்தியயம் என்பர் (சூ, 84). அநீதி, அனாதி, நிராயுதன், நிருவிகல்பம் முதலான எதிர்மறை வடசொற்கள் தமிழில் பயில்வதால் அவற்றிற்குரிய வடமொழி இலக்கணத்தை 87ஆம் சூத்திரத்தில் தருகிறார். எனினும் ஒரு சில இடங்களில் தவறான செய்திகளையும் தருகின்றார் - அடைமொழியை வடநூலார் அவ்வியயம் என்பர் (93) தந்திரம் என்னும் வடமொழியை நூலென்று வழங்குவது தமிழ் வழக்கெனக் கொள்க என்றாற் போல்வன சில.

ஏறக்குறைய இருநூறு ஆண்டுகளுக்கு முன் தோன்றிய சிவஞான சுவாமிகள் வடமொழியையும் தமிழ் மொழியையும் கற்றுத் தெளிந்தவர். வடமொழித் தத்துவ நூல்களையும் தருக்க நூல்களையும் கற்றவர். அப்படிக் கற்றுத் தெளிந்த காரணத்தால்தான் அவருக்கு முன் வந்த இலக்கணக் கொத்து, பிரயோக விவேகம் போன்ற இலக்கண நூலாசிரியர்களைப் போலன்றி இவ்விரு மொழிகளும் இன்றைய மொழி நூலார் கூறுவதுபோல, வேறுபட்ட ஆரிய, திராவிட மொழியினங்களைச் சார்ந்தவை என்பதை இவர் தொல்காப்பியப் பாயிர விருத்தியில் பின்வருமாறு தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். அய்ந்திரம் நோக்கித் தொகுத்தான் எனின், தமிழ்மொழிப் புணர்ச்சிக்கட்படும் செய்கைகளும், குறியீடுகளும், வினைக்குறிப்பு, வினைத்தொகை முதலிய சில சொல்லிலக்கணங்களும், உயர்திணை அஃறிணை முதலிய சொற்பாகுபாடுகளும் அகம், புறம் என்னும் பொருட்பாகுபாடுகளும், குறிஞ்சி, வெட்சி முதலிய திணைப்பாகுபாடுகளும், அவற்றின் பகுதிகளும், வெண்பா முதலிய செய்யுளிலக்கணமும், இன்னோரன்ன பிறவும் வடமொழியிற் பெறப்படாமையானும்,

இரு மொழியறிவைப் பெற்றவராகலின் ஆங்காங்கு ஒப்புநோக்கு முறையில் சில கருத்துக்களைக் கூறிச் செல்கிறார். இத்தகைய ஒப்பாய்வு தெளிவைத்தரும்.

எடுத்துக்காட்டாக அதங்கோட்டாசாற்கு அரில்தபத் தெரித்து, என்ற வரியில் தெரிவித்து என நிற்கப்பாலது தெரித்து என விவ் விகுதி தொக்கி நின்றது.

இங்ஙனம் வருவனவற்றை வட நூலார் அந்தர் பாவிதணிச் என்பர். பாயிரத்தின் சிறப்பியல்பைக் கூறும்போது யாப்பு, முதலிய பொருள், கேட்போர், பயன் இந்நான்கையும் வடநூலார் ஆனந்தரியம், விடயம், அதிகாரிகள், பிரயோசனம் என்று கூறுவர் என்கிறார். முத்தமிழ் இலக்கணம் அகத்தியரால் ஆக்கப்பட்டது ஏன் என்பதை விளக்கும்போது அவரது மற்றொரு கருத்தைக் காண்கிறோம் - சோதிடம் முதலிய பிற கலைகளெல்லாம் ஆரியத்தினும் தமிழினும் ஏனைய மொழிகளினும், வேறுபாடு இன்றி ஒப்ப நிகழ்தலின், அவற்றை வேறு விதிக்க வேண்டாமையானும், இயல், இசை, நாடகம் என்னும் மூன்றும் தமிழ் நிலத்துச் சில வேறுபாடு உடைமையின் அவற்றை வேறு விதிக்க வேண்டுதலானும், அதுபற்றி அகத்தியத்துள் இம்மூன்றுமே எடுத்தோதினார்.(2)

அகர இகரம் அய்காரமாகும், அகர உகரம் ஔகாரமாகும் என்ற சூத்திரங்கள் வடமொழி மரபை உளத்தில் கொண்டு போலும், சிவஞான முனிவர் இச்சூத்திரங்கள் சந்தியக்கரங் களை உணர்த்துகின்றன என்று கொண்டார்.

இக்கூற்றை மறுத்து, வேங்கடராஜுலு ரெட்டியார் அவர்கள் தொல்காப்பியம் எழுத்து அதிகார ஆராய்ச்சி என்ற நூலில், இவை சந்தியெழுத்தின் இயல்பினைக் கூறுவனவாயின். ஆசிரியர், இவற்றைத் தனியெழுத்துக்களின் இயல்பினைக் கூறும் நூன்மரபில் வைத்திருப்பார். அவ்வாறன்றி, மொழியிலுள்ள எழுத்துக்களின் இயல்பினைக் கூறும் மொழி மரபில் இவற்றை வைத்திருத்தலின், மொழியிலுள்ள அய்காரத்திற்கு அ, இ என்பது வரும் என்றும் ஔ காரத்திற்கு அ, உ என்பது வரும் என்றுமே அவர் கருத்துக் கொண்டார் என்பது அறியப்படும் என்று கூறியுள்ளார்.

அகரத்திம்பர் தோன்றும் என்னும் சூத்திரத்தின் பொருள் அகர இகரமேயன்றி அவற்றோடு யகர மெய்யும் சேர்ந்து அய்காரமாகும். அகர உகரமே யன்றி அவற்றோடு வகர மெய் சேர்த்து ஔகாரமாகும் என்றும் சிவஞான முனிவர் கூறியுள்ளார். இதற்கு அடிப்படையாக அவருக்கு அமைந்தது, அய்காரத்தில் யுகரமும் ஔகாரத்தில் வகரமும்; கலந்துள்ளன என்பது வடமொழி இலக்கண மாபாடியக்காரரான பதஞ்சலியாருக்கு உடன்பாடு என்பதாகும்.

-  விடுதலை நாளேடு 7 11 19

வெள்ளி, 8 நவம்பர், 2019

தமிழர் திருவிழாக்கள் சமற்கிருத மயமாக்கப்பட்டமை திருக்கார்த்திகையும் தீபாவளியும் - 22

தமிழண்ணல் டாக்டர் இராம. பெரியகருப்பன் (தமிழியல்துறைத் தலைவர், மதுரை காமராசர் பல்கலைக் கழகம்)

பெரியார் திறந்த பல்கலைக் கழகம் 9-3-1985, 10-3-1985 ஆகிய இருநாள்களிலும் சென்னையில் அறிஞர் பெரு மக்கள் பங்கேற்ற சமஸ்கிருதமயம் - ஆதிக்கம் (Sanskritisation) பற்றிய ஒரு கருத்தரங்கத்தை நடத்தியது. அதில் ஆராய்ச்சி பூர்வமான கருத்துரைகள் எடுத்து வைக்கப்பட்டது.

சமற்கிருத மயமாக்கப்பட்டமை எனும் பொருள் பற்றிய கருத்தரங்கில் தமிழண்ணல் டாக்டர் இராம.பெரியகருப்பன் உரை வருமாறு:

29.10.2019 அன்றைய தொடர்ச்சி...

மழைகால் நீங்கிய மாக விசும்பில்

குறுமுயல் மறுநிறம் கிளர மதிநிறைந்து

அறுமீன் சேரும் அகலிருள் நடுநாள்

மறுகுவிளக் குறுத்து மாலை தூக்கிப்

பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய

விழவுடன் அயர வருகதில் அம்ம

(அகம் - 141)

தெருவில் வரிசையாக விளக்கேற்றுவதை மறுகு விளக் குறுத்து என்கின்றார் நக்கீரர். இன்றும் தெருவில் முற்றம், வாசலிலும் மதிற்சுவர்கள் மேலும் தானே வரிசை வரிசையாக விளக்கேற்றிவைக்கிறோம். எல்லோரும் கொண்டாடும் மகிழ்ச்சி விழா என்பது இதிலும் சுட்டப்படுகிறது. பாலை வழியில் பொருள் வயிற்பிரிந்ததன் காதலர், நல்ல சகுனம் நேர்வதாலும் இனிய கனவுகள் தோன்றுவதாலும் கார்த்திகை விழாவைத் தன்னுடன் கொண்டாட விரைவில் வருவாராக! என்று தனது விழைவைத் தலைவி வெளிப்படுத்துகிறாள். கணவன், மனைவி இருவரும் உடனிருந்து கொண்டாடும் விழாவாக இது குறிக்கப்படுவது, இன்றும் தீபாவளியில் இளம் மணமக்களை உடனழைத்துக் கொண்டாடும் போக் கினை நினைவூட்டுகிறது.

இன்று நாம் காணும் விழாக்களில் இந்தியநாடு முழுவதும் பற்பல வகுப்பாரும் ஒருங்கு கொண்டாடும் விழாவாகத் தீபாவளி காணப்படுகிறது. பாலை பாடிய பெருங்கடுங்கோ பிறிதொரு பாடலில் திருக்கார்த்திகையைப் பெருவிழா என்றே குறிப்பிடுகின்றார்.

அருவி ஆன்ற உயர்சிமை மருங்கில்

பெருவிழா விளக்கம் போலப் பலவுடன்

இலையில மலர்ந்த இலவமொடு

நிலையுயர் பிறங்கல் மலையிறந் தோரே

(அகம், 185)

இது முருகனுடன் தொடர்புடைய விழாவாக இருப்பது போலவே குறிஞ்சி நிலமலைகளுடனும் தொடர்புடைய விழாவாகத் திகழ்ந்தது என்பதற்கும் இலக்கியச் சான்றுகள் உள. திருவண்ணாமலைக் கார்த்திகைதீபம் இன்று ஓங்கிய சிறப்புடையது. முத்தொள்ளாயிரத்தில் ஆபுகு மாலை அணி மலையில் தீயேபோல் என்று சொக்கப்பனை கொளுத்தப் படும் சிறப்புச் சுட்டப்படும். குன்றின் மேலிட்ட விளக்கு என்ற பழமொழி இவ்விழாவினின்றும் பிறந்ததேயாகும். சமண சமயக் காப்பியமாகிய சீவக சிந்தாமணியிலும் இக் குன்றின் மேல் வைக்கும் திருக்கார்த்திகை விளக்கு உவமை யாகக் கூறப்படுகிறது.

தார்ப்பொலி தருமதத்தன் தக்கவாறுரைப்பக் குன்றில்

கார்த்திகை விளக்கிட்டன்ன கடிகமழ் குவளைப் பைந்தார்....

கோங்கம்பூ, இலவம்பூக்களுடன் செங்குவளைப் பூக் களும் கார்த்திகை விளக்கு வரிசையுடன் பொருத்திப் பார்க் கப்படுகின்றன. களவழி நாற்பதிலும், கார்த்திகைச் சாற்றின் கழிவிளக்கைப் போன்றனவே என இவ்விளக்குவமை உளது (சாறு-விழா).

கொண்டாடும் கால ஒற்றுமை

திருக்கார்த்திகை, தீபாவளி இரண்டும் பெயரொற்றுமை வேறு சில ஒற்றுமைகளினாலேயே ஒன்றாகிவிடுமா?

தீபாவளி அய்ப்பசி மாத அமாவாசையை ஒட்டியும், திருக்கார்த்திகை அதைத் தொடர்ந்துவரும் கார்த்திகை மாதப் பவுர்ணமியை ஒட்டியும் கொண்டாடப்படுகின்றன.

தீபாவளியும் திருக்கார்த்திகையும் 1974, 1975 ஆகிய இரண்டு ஆண்டுகளிலும் எவ்வெத் தேதிகளில் கொண்டா டப்பட்டன?

தீபாவளி 1974  13-11-74  ஆனந்த,    உவாநாள்

அய்ப்பசி  27  ஒட்டியது

திருக்கார்த்திகை  1974  28-11-74   ஆனந்த,  நிறைமதி நாள்

கார்த்திகை  13   ஒட்டியது

தீபாவளி  1975 2-11-75  இராட்சச,  உவாநாள்

அய்ப்பசி 16 ஒட்டியது

திருக்கார்த்திகை 1975 19-11-75  இராட்சச,  நிறைமதி

கார்த்திகை  13  ஒட்டியது

இரண்டு விழாக்களுக்கும் இடைவெளி பதினைந்து, பதினாறு நாட்களேயாதல் காண்க.

1984இல் 23-10-84-ரக்தாட்சி, அய்ப்பசி 7-உவாநாளை ஒட்டித் தீபாவளி கொண்டாடப்பட்டது. அடுத்த நிறைமதி அதே அய்ப்பசியில் வந்துவிட்டதால் திருக்கார்த்திகை 6-12-84 ரக்தாட்சி, கார்த்திகை 21இல் நிறைமதி நாளை ஒட்டிக் கொண்டாடப்பட்டது. அதனால் இடைவெளி ஒரு மாதமாகி விட்டது. மீண்டும் 1985இல் இவ்விரு விழாக்களும் கொண் டாடப்படப் போகின்ற நாட்கள் காண்க :

தீபாவளி 1985, 11-11-85 குரோத, அய்ப்பசி 26 உவாநாளை ஒட்டி

திருக்கார்த்திகை 1985, 26-11-85 குரோத, கார்த்திகை 11 நிறைமதியை ஒட்டி

இடைவெளி பதினைந்து நாட்களேயாதல் அறியலாம். இவ்வாறு ஒவ்வொரு முறையும் அய்ப்பசி அமாவாசையை ஒட்டித் தீபாவளியும், தொடர்ந்து வரும் திருக்கார்த்திகைப் பவுர்ணமியில் திருக்கார்த்திகையும் ஏறத்தாழப் பதினைந்து, இருபது நாட்களுக்குள் கொண்டாடப்பட்டு வருகின்றன. முதல் உவாநாள், அடுத்த நிறைமதியை ஒட்டி இவை வருவதால், இவைகளிடை ஒற்றுமை ஏதும் இருக்குமோ என்ற அய்யம் எழுகிறது.

தமிழர்களின் மாதக்கணக்கு

தமிழர்கள் முழுமதியை வைத்தே மாதங்களைக் கணக் கிட்டனர். ஒவ்வொரு முழுமதியும் ஒருமாத நடுவாகக் கருதப்பட்டது. அற்றைத் திங்கள் என்றும், தொல்லைத் திங்கள் என்றும் கடந்த மாதம் குறிக்கப்பட்டது. கண்ணுக்குத் தெரியும் மூன்றாம் பிறையைக் கண்டதும் புதிய மாதம் பிறந்தமையையும் நாள் வளர்ச்சியையும் எண்ணத் தலைப் பட்டனர். எண்ணாள் பக்கத்துப் பிறை எனும்போது எட்டா வது வளர்பிறை நாள் குறிக்கப்பட்டது. இத்தகைய முறையில் மதியானது நட்சத்திரங்களைச் சாரும் முறையை வைத்து நாட்கள் குறிக்கப்பட்டன. சிலப்பதிகாரத்தில், வடநாட்டில் கங்கைக்கரையிலிருந்த காலத்தில், சேரன் செங்குட்டுன் ஒருமுறை வானத்தை நோக்கியபோது, அருகிலிருந்து கணிவஞ்சி நீங்கி எண்ணான்கு திங்கள் ஆயின என்றான். 32 மாதங்கள் கழிந்தமை அன்று அவ்வாறு உணர்த்தப்பட்டது.

கார்த்திகைக்கு முதலிடம்

இரண்டாம் சந்திரகுப்த மவுரியன் காலத்தில் (கி.பி. 6ஆம் நூற்றாண்டு) வராகமிகிரர் என்ற வானநூல் அறிஞர் தோன்றி இந்திய நாட்டுக் காலக் கணிப்பில் குறிப்பிடத்தக்க சில மாறுதல்களைச் செய்தார் என்பர்.

அதற்கு முன்பு 27 நட்சத்திரங்களையும் கொண்டு, கார்த் திகை முதலாக எண்ணுகிற பழக்கம் இருந்தது. மணிமேகலை யில்,

இருதிள வேனில் எரிகதிர் இடபத்து

ஒருபதின் மேலும் ஒருமூன்று சென்றபின்

மீனத்து இடைநிலை மீனத்து அகவ யின்

போதித் தலைவனொடு பொருந்தித் தோன்றும்

(11:40-44)

என்று புத்தர் தோன்றிய வைகாசி விசாக நட்சத்திரம் கூறப்படுகிறது. புத்தர் வடநாட்டில் பிறந்தார், அவர் பற்றிய கதையும் அங்கிருந்து பெறப்பட்டதே. இதில் இருந்து இளவேனில் என்பது சித்திரை - வைகாசி மாதங்கள் அடங்கியது. இரு மாதங்கள் கொண்டது. இருது இருழூஇருது ழூருது. வடமொழியில் இது ருதுவென வழங்கும். இரண்டு-ரெண்டு ஆவதுபோல் இருது ருதுவாகியிருக்க வேண்டும். தமிழர் ஆண்டுக் கணக்கு மேட-இராசியில் தொடங்கிய தாதல் வேண்டும். மேடம் என்பது யாடு, ஆடு என்றெல்லாம் தமிழில் கூறப்படும். அதிலிருந்துதான் யாண்டு, ஆண்டு என்பன மூக்கொலி பெற்றுப் பிறந்தன என்பர். பன்னீராட் டைப் பருவத்தாள், ஏழரையாட்டைச் சனி என்ற வழக்காறு களும் காணலாம். வருடை என்பதும் மலையாடு என்றே பொருள்படுமென்றும் அதிலிருந்து பிறந்ததுதான் வருடம் என்றும் டாக்டர் தே.ஆண்டியப்பன் கருதுவார். மேற்கண்ட மணிமேகலை அடிகளில் எரிகதிர் இடபம் என்பது சூரியன் வந்து நின்ற இடபராசி. அது வைகாசி மாதத்தைச் சுட்டும். 27நட்சத்திரங்களில் முன் பதின்மூன்றுக்கும் பின் பதின்மூன் றுக்கும் இடைப்பட்டது விசாகம் என்பது அடுத்த இரண்டடி கட்கும் தரப்பட்டுள்ள பொருள். கார்த்திகை முதலாக எண்ணினால்தான் பதினான்காவதாக விசாகம் வரும். இன்றைய வராகமிகிரர் முறை அசுவனி முதலாக எண்ணு கிறது. அதன்படி, எண்ணினால் பதினாறாவதாகத்தான் விசாகம் வரும். எனவே, மணிமேகலை குறிப்பிடும் முறை வராகமிகிரருக்கு முற்பட்டது என்பது போதரும்.

தமிழர்களும் முன்பு கார்த்திகை நட்சத்திரம் முதலாக மாதத்தை எண்ணினார்களோ என்ற அய்யத்தைக் கார் நாற்பது ஏற்படுத்துகிறது. அதில் கண்ணங்கூத்தனார் கீழ்வருமாறு குறிப்பிடுகிறார்:

நலமிகு கார்த்திகை நாட்டவர் இட்ட

தலைநாள் விளக்கில் தகையுடைய வாகிப்

புலமெலாம் பூத்தன தோன்றி; சிலமொழி

தூ தொடு வந்த மொழி

இதில் தோன்றிப் பூக்கள் எங்கும் பூத்துக் காட்சியளிப்ப தற்குக் கார்த்திகை விளக்குகள் உவமை கூறப்பட்டுள்ளன. மேலும், கார்த்திகை நாள் இதன்கண் தலைநாள் எனக் குறிக்கப்பட்டிருத்தலால் அதுவே மாதத் தொடக்க நாளாக இருந்தது போலும் என்பர்.

இன்று ஞாயிறு முதலாக வாரத்திற்கு ஏழுநாளாக எண்ணுகிறோம். முன்பு வாரக்கணக்கு இன்றி, மாதத்திற்கு 27 நட்சத்திரங்களுக்கும் 27நாட்கள் எனக் கொண்டு கார்த்திகை முதலாக எண்ணப்பட்டது என்பர் திரு. ந.ரா. முருகவேள். இன்று திங்கள், செவ்வாய் என்று நாட்பெயர் களைக் குறிப்பிடுவதுபோல முன்பு மகம், ஆதிரை, கார்த் திகை என்று நாட்களைக் குறிப்பிட்டனர். தமிழில் நாள் என்பதே நட்சத்திரத்தைக் குறிக்கும். நம் உரையாசிரியர்கள் மகத்திற்கொண்டான். ஆதிரையில் வந்தான், கார்த்திகையில் பெற்றான் என்பது போலக் காட்டும் எடுத்துக்காட்டுகளால் இதை உணரலாம் என்பர் டாக்டர் இரா. சாரங்கபாணி. கார்த்திகை நட்சத்திரம் மாதத் தொடக்க நாளாக இருந்ததுபோலக் கார்த்திகை மாதம் ஆண்டுத் தொடக்கமாக இருந்ததும் உண்டு.

வராகமிகிரரின் புதிய கணக்கு

இவ்வாறு நட்சத்திரங்களைக் கொண்டு கணிக்கப்படுகிற சூரிய மாத முறை மாற்றி, வராகமிகிரர் சாந்திரமாத முறை யைப் புகுத்தினார். அவர் சந்திரனை மய்யமாக்கிக் கொண்டு வளர்பிறை, தேய்பிறைத் திதிகளை ஆதாரமாக்கி மாதக் கணக்கை வகுத்தார். அவர் கணக்கிற்கும் பழைய கணக்கிற் கும் ஒப்பிட்டபோது பழைய கணக்கில் 15 நாட்கள் கூடுத லாவது புலனாகிறது. எனவே, அப்பதினைந்து நாட்களைத் தள்ளிவிட்டு அவர் கணக்கிட்டதால், அவருடைய மாத முறை 15 நாட்கள் முன்னே போய்விட்டன. வடநாட்டில் வராகமிகிரர் முறையே பின்பற்றப்படுகிறது. திரு. எல்.டி. சுவாமிக்கண்ணு இவ்வாறு பதினைந்து நாட்கள் ஏன் தள்ளப்பட்டன என்ற காரணத்தை விளக்கியுள்ளார் சாந்திர மாதமுறைக்குத் திதி அடிப்படை. திதியும், நாளும் 64 என்ற எல்லையில் சிறிது வேறுபட்டன. திதி 64 கொண்டதற்கு நாளும் 64 என அமையாமல் சிறிது குறைந்து 63.001412384 மட்டுமே வருவதால், இவ்வாறு ஏற்படும் குறைவு, பலநூறு ஆண்டுகள் கழித்து நோக்கினால், 15 நாட்கள் குறையு மென்றே, வராகமிகிரர் அப்பதினைந்து நாட்களைத் தள்ளிவிட்டார். வராகமிகிரருக்குப் பிறகு வடநாட்டில் சாலி வாகன சகாப்தம் என்ற புதியமுறை பின்பற்றப்பட்டது. அதன்படி நமக்கு ஆனந்த ஆண்டு (1974- 75) நடந்தபோது, அங்கு சகஆண்டு 1896 நடைபெற்றது; இப்போது நமக்கு ரக்தாட்சி ஆண்டு (1984-85) நடக்கும்போது, அங்கு சாலி வாகன ஆண்டு அல்லது சகஆண்டு 1906 நடக்கின்றது. இதுபோலவே மாதக்கணக்கிலும் நமக்கும் வடநாட்டவர் கட்கும் சுமார் 15 நாட்கள் வரை இடைவெளியுளது. அஃதா வது வடநாட்டில் ஒவ்வொரு மாதமும் பதினைந்து இருபது நாட்கள் முன்னதாகவே பிறந்து விடுகிறது.

மாதங்கள் மாறியமை

1974-1975 பிரமாதீச, ஆனந்த ஆண்டுகளில்

நமக்கு மார்கழி 7 நடக்கும்போது அங்கு புஷ்யம் (தை) என்ற அடுத்த மாதம் பிறந்து விட்டது. நமக்குப் பங்குனி 9 நடக்கும்போது அங்கு சைத்திரம் (சித்திரை) என்ற அடுத்த மாதம் பிறந்துவிட்டது.

நமக்கு அய்ப்பசி 6 நடக்கும்போது அங்கு கார்த்தீகம் (கார்த்திகை) என்ற அடுத்த மாதம் பிறந்துவிட்டது.

1984-ராட்சச ஆண்டு

நமக்கு அய்ப்பசி 7 நடக்கும் போது அங்கு கார்த்தீகம் என்ற அடுத்த மாதம் பிறந்துவிட்டது.

இவற்றிலிருந்து ஏறத்தாழ 22 அல்லது 23 நாட்கள் முன்னதாக அவர்களுக்கு மறுமாதம் பிறந்து விடுவது புலனாகிறது.

ஒருகணம் இப்போது சிந்தியுங்கள். நாம் கார்த்திகை மாதத்தில் கொண்டாடும் திருக்கார்த்திகையைத்தான் அவர் கள் இரண்டு, மூன்று வாரம் முன்னதாகத் தீபாவளியாகக் கொண்டாடுகிறார்கள்.

1984இல் அல்லது ராட்சச ஆண்டில் இங்கு அய்ப்பசி 7இல் (23-11-84) தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடினார் கள். வடக்கேயும் அதே நாளில்தான் கொண்டாடினார்கள்.

ஆனால், அவர்கள் அவர்களுக்குரிய கார்த்தீகம் மாதத் தில் முதல்நாள் தீபாவளியைக் கொண்டாடினார்கள். 1985இல் அல்லது குரோத ஆண்டில் இங்கு அய்ப்பசி 26இல் (11-11-85) தீபாவளியைக் கொண்டாடும்போது, வடக்கேயும் கார்த்தீகம் 20ஆம் நாள் அதாவது அதே நாளில் - தீபாவளி யைக் கொண்டாடுவர்.

முடிவுகள் :

இவற்றிலிருந்து பல அடிப்படை உண்மைகள் புலனா கின்றன :

1. நாம் நம் கணக்குப்படி கார்த்திகை மாதத்தில் தான் (பவுர்ணமியை ஒட்டி) திருக்கார்த்திகையாகிய விளக்கீடு விழாவைக் கொண்டாடுகிறோம்.

2. வடக்கே அவர்களும் அவர்கள் கணக்குப்படி கார்த்தீகம் என்ற கார்த்திகை மாதத்தில்தான் (அமாவா சையை ஒட்டி) தீபாவளியைக் கொண்டாடுகின்றனர். அஃ தாவது அவர்களுக்கும் இது திருக்கார்த்திகையே - விளக்கீட்டு விழாவேயாகும். கார்த்தீக மாதத்தில் கொண் டாடுவதை நினைவு கொள்க.

3.  இங்கு முழுநிலவு நாளை ஒட்டியும் அங்கு உவா நாளை ஒட்டியும் கொண்டாடப்படும் வேறுபாடு கருதத் தக்கது.

4. நாம் நம்முடைய திருக்கார்த்திகையையும் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகட்கு மேலாகக் கொண்டாடி வருவ துடன், அவர்களைப் பின்பற்றி அவர்கள் கொண்டாடும் தீபாவளியையும் வேறெனக் கருதிப் பிற்காலந்தொட்டுக் கொண்டாடத் தொடங்கியுள்ளோம். இதனால் பண்டிகை நமக்கு இரண்டாகிவிட்டது.

5. இதனால் நாம் ஒன்றைப் புத்தாடை பூண்டு, வெடி வைத்து, இனிப்புண்டு மகிழ்ச்சிப் பெருக்கைக் காட்டுவதற் குரிய ஒன்றாகவும், மற்றதை விளக்கு வைத்துக் கொண்டா டும் விழாவாகவும் வேறுபடுத்திக் கொண்டுள்ளோம். முன் னதற்கு நரகாசுரன் கதையைக் கூறி திருமாலை வழிபடும் விழாவாகவும், பின்னதற்கு முருகன் கதையைக் கூறி அவனது பெருமையைப் போற்றி வழிபடும் விழாவாகவும் பின்னணி கூறியும் இவற்றை வேறுபடுத்த முயன் றிருக்கிறோம்.

6. முருகனுக்குரியது கார்த்திகை நட்சத்திரம். வடநாட் டவர்கள் கார்த்திகை மாதத்திலேயே இதைக் கொண் டாடுவதால், என்னதான் நரகாசுரன் கதையைக் கூறினாலும் அவர்களுக்கும் தொன்மை மிக்க காலத்தில் முருகன் தொடர்பாலேயே இவ்விழா தோன்றியிருக்க வேண்டும் என்பது வெள்ளிடைமலை. மேலும் கார்த்திகை மாதத்தின் திருக்கார்த்திகை நாளை மாதத் தொடக்கமாகவும் ஆண்டுத் தொடக்கமாகவும் கருதிய காலம் ஒன்றுண்டு என்பதைக் கார் நாற்பதால் முன்பு கண்டோம். வடநாட்டவர் தீபாவ ளியை ஆண்டுப் பிறப்புப்போல் கொண்டாடி, கடைகளுக் குப் புதுக்கணக்கு எழுதி வருவதை அறிவோம். சித்திரை முதல்நாள் புதுக்கணக்கு எழுதும் தென்னாட்டு மரபை ஒத்தது இதுவாகும்.

7.  தெற்கே அய்ப்பசி அமாவாசையை ஒட்டித் தீபாவளியைக் கொண்டாடினாலும் தீபாவளிக்கு மறுநாள் அமாவாசைக்குப் பிறகு, முருகனுக்குரிய சஷ்டி விரதம் தொடங்கி விடுகிறது. இக்கடும் விரதம் ஆறாம் நாள் முடிகிறது. அய்ந்தாம் நாள் முருகன் கோயில்கள் அனைத் திலும் சூரசம்மாரம் திருவிழா நடக்கிறது. முருகன் சூரனை வென்றதைக் கொண்டாடும் மக்கள்-நோன்பிருந்து விரதம் செலுத்தும் இக்கந்தர் சஷ்டி விழா, தீபாவளியைத் தொடர்ந்து வருவதால் தீபாவளிக்கும் முருகனுக்கும்கூடத் தொடர்புண் மையைச் சிந்திக்க வேண்டும். திருக்கார்த்திகை முருகனின் பிறந்தநாள் (நட்சத்திரம்) என்பர். சேர நாட்டில் மன்னர் களுக்கு அவர்கள் - பிறந்த நாளின் பெயரே பெயராதலும் சுவாதித் திருநாள், மூலந்திருநாள் என அழைக்கப்படுதலும் அப்பிறந்த நாட்கள் பெருமகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்ட மையும் கருதத்தக்கன. இவ்வகையில் முருகனின் பிறந்தநாள் விழாவாகவும் வெற்றி விழாவாகவும் இத்திருநாட்கள் கொண்டாடப்பட்டுப் பலநூறு ஆண்டுகளாக மாறியும் வேறுபட்டும் அடிப்படையில் ஒற்றுமைப்பட்டும் விளங்கி வருகின்றன.

8. முருகனின் பிறந்தநாள் (நட்சத்திரம்) ஆறு புள்ளியிட்ட கோலம்போல் அழகுற விளங்கும். அது விளக்கு வரிசைபோல் இருப்பதால், விளக்கு வரிசைகளை வைத்து வழிபடும் மரபு தோன்றியிருக்க வேண்டும். வடநாட்டவரும் விளக்கு வரிசையை வைத்தே வழிபடுவது, இதன் தொன்மை அடிப்படை முருக வழிபாடே என்பதை நிலை நிறுத்தும்.

9. கார்த்திகைத் தீபத்தன்று அல்லது அடுத்தநாள் சகல விஷ்ணுதலங்களிலும் கார்த்திகைத்தீபம் என்ற குறிப்பைப் பஞ்சாங்கம், நாட்காட்டிகளில் காணலாம். அதற்க டுத்த நாள் சிவாலயதீபம் எனவும் சுட்டப்படுகிறது. திருக் கார்த்திகை விழாவைத் திருமால் வழிபாட்டுடன் இணைத்து, நரகாசுரன் கதையைக் கொண்டுவந்ததற்கும் ஏதேனும் ஓர் அடிப்படை இருந்திருக்க வேண்டும். முல்லைக்குத் தெய்வம் மாயோன்; குறிஞ்சிக்குத் தெய்வம் சேயோன் முல்லையும் குறிஞ்சியும் ஒன்றையடுத்தொன்றாக அமைந்த நிலங்கள். இதனால் இவ்விரு வழிபாடுகளும் இணைய நேர்ந்த இடங்கள் பலவாகும். பரிபாடலிலும் இவ்விரு தெய்வங்கட்கே மிகுதியான பாடல்கள் காணப்படுகின்றன.

10. இவ்விழாவின் தோற்றம் வளர்ச்சியை உற்று நோக்கும்பொழுது, முதலில் தமிழ் மயப்படுத்துதல், திராவிட மயமாக்குதல்தான் நடந்துளது; பிறகுதான் சமற்கிருதமயமாக் கப்படுதல் நிகழ்ந்துளது. அங்ஙனம் சமற்கிருதமயமாக்கி னாலும் முன்னைய திராவிட மரபுகளை முற்றிலுமாக மறைக்க முடியவில்லை. இங்ஙனமிருக்கவும் உலக ஆய்வு கள் பலவும் மேற்பரப்பைக்கண்டு முடிவுகூறும் ஆய்வு களாகவே விளங்கி வருகின்றன.

இந்திய நாடு முழுமையும் சென்று, பல்வேறு மொழி களைப் பேசும் பல்வேறு மாநிலங்களிலும் ஊடுருவி ஆராய்ந்தால் இந்த ஒரு விழாவைப்பற்றி மேலும் பல உண்மைகள், தொல்பொருள் ஆய்வில் கண்டெடுக்கும் மெய்ம்மைகள்போல் கிடைக்கப்பெறும். சமற்கிருத மயமாக் கப்பட்டமை என்பது உள்ளீட்டிலன்று என்ற உண்மையும் உறுதிப்படும்.

- விடுதலை நாளேடு 31 10 19

வியாழன், 31 அக்டோபர், 2019

தமிழ் முப்பால் மரபும்,வடமொழி நாற்பால் மரபும் - 20

டாக்டர் தி. முருகரத்தனம் உரை

பெரியார் திறந்த பல்கலைக் கழகம் 9-3-1985, 10-3-1985 ஆகிய இருநாள்களிலும் சென்னையில் அறிஞர் பெருமக்கள் பங்கேற்ற சமஸ்கிருதமயம் - ஆதிக்கம் (Sanskritisation) பற்றிய ஒரு கருத்தரங்கத்தை நடத்தியது. அதில் ஆராய்ச்சி பூர்வமான கருத்துரைகள் எடுத்து வைக்கப்பட்டது.

சமற்கிருத மயமாக்கப்பட்டமை எனும் பொருள் பற்றிய கருத்தரங்கில், டாக்டர் தி. முருகரத்தனம் உரை வருமாறு.

செவ்வாய்க்கிழமை (22.10.2019) தொடர்ச்சி...

ஆதலால், தென்மொழி வடமொழி அடங்கிய இந்திய மரபில் முப்பால்மரபு 5, 6ஆம் நூற்றாண்டுவரையிலான காலத்திலும், அதன்பின் நாற்பால் மரபும், வழக்கிற்கு வந்தன எனத் தெளிவாகிறது. இவ்வாறு முப்பால் மரபு, நாற்பால் மரபாக மாறியது என அறியலாம். இலக்கிய வரலாற்றில் ஏற்பட்ட ஒரு மரபு மாற்றமாக மட்டுமே இது தோன்றவில்லை. இந்திய மக்களின் சிந்தனைப் போக்கில் ஏற்பட்ட ஒரு பெரு மாற்றத்தின் விளைவே இது எனக் கொள்ளவேண்டும். அந்த மாற்றம் ஓர் அடிப்படையான மாற்றமாகும். இந்திய மக்கள் சிந்தனைப் போக்கினையும், வாழ்க்கைப் போக்கினையும் அதுமாற்றி அமைத்த மாற்றமாகவும் கருதலாம். இதனைச் சிறிது விளக்கமாகக் காணலாம்.

7. நாற்பாலின் நோக்கம் :

அறம், பொருள், இன்பம் என முப்பால் மரபு வழங்கிய தொடக்கக் காலத்தில் முப்பொருள்களும் ஒரே சீரான சிறப்புப் பெற்றன; ஒரே சீரான அழுத்தம் பெற்றன. அதாவது வாழ்க்கைக்கு அறம் தேவை; அது போலவே பொருளும் தேவை; அதுபோலவே இன்பமும் தேவை. மூன்றுமே சீராகத் தேவைப்படும் என்பது அக்காலத்தின் கொள்கை. மக்கள் அறத்தின் வழி நடந்து பொருளை ஈட்டி இன்பம் துய்த்தலை வாழ்க்கையாகக் கொண்டனர் என இதனால் அறியலாம்.(1)

ஆனால், முப்பால் மரபோடு வீட்டுப்பால் சேர்க்கப்பட்ட போது நான்காவது பாலாகிய வீட்டுப்பாலே சிறந்தது என வும், மற்றவை அத்துணைச் சிறப்பு இல்லாதவை எனவும், வீட்டுப்பாலே குறிக்கோள் எனவும், மற்றவை மூன்றும் கருவிகள் எனவும் விளக்கங்கள் தரப்பட்டன. இதன்பொருள் என்னவென்றால் இவ்வுலக வாழ்க்கைக்கு உரிய அறம், பொருள், இன்பம் புறக்கணிக்கப்பட்ட மறுமைவாழ்வுக்குரிய வீடு போற்றப்பட்டது என்பதாகும். அதாவது சமூகக் கருத்தாக இருந்த முப்பால், சமயக் கருத்தாகக் கொள்ளத்தக்க நாற்பாலாக உற்ற மாற்றமே இது என்பதாகும். இந்த மாற்றமே மக்கள் வாழ்க்கையிலும் சிந்தனையிலும் ஏற்பட்ட மாற்ற மாகும். உலக விருப்பக் கொள்கையிலிருந்து உலக மறுப்புக் கொள்கைக்கு இந்திய மக்கள் வந்ததாகக் கொள்ள வேண்டும்.

இந்த மாற்றம் ஏற்பட்ட காலம். இந்து சமயம் தன் சாத்தி ரங்களாலும், காவியங்களாலும், தத்துவங்களாலும், வருணா சிரம தர்மம் எனும் சமூக அமைப்பாலும், உருவமும் உறுதி யும் பெற்ற காலம் ஆகும். அதாவது ஆரியப் பண்பாடு இந் திய நாட்டுப் பண்பாட்டின் பல கூறுகளையும் தன்மயமாக்கித் தன் மேன்மைக்கும் நலத்திற்கும் பயன்படுத்திக் கொண்ட காலமாகும்.

இக்காலத்தில் முப்பால் மரபு, பிராமணியமய மாக்கப்பட்ட அதாவது ஆரியமயமாக்கப்பட்ட வாழ்க்கைத் தத்துவமாக தரப்பட்டது. முப்பால் மரபில் இந்த உலக வாழ்க்கை வற்புறுத்திப் பேசப்பட்டது; சமய வாழ்க்கை சிறப்பாக இடம் பெறவில்லை. இந்நிலையில் இந்திய வரலாற்றுப் பேராசிரியர் பாசாம் போன்றவர்கள், 'அர்த்தமும், காமமும்' உலோகாயதக் கருத்துக்கள் கொண்டுள்ளன என எடுத்துக்காட்டுவதை கருத்தில் கொள்ளவேண்டும்(2) உலோகாயதத் தத்துவக் கருத்துக்களும் இவ்வுலக வாழ்வை வற்புறுத்தும் கருத்துக் களும் நீக்கப்பட்டு மறுவுலக வாழ்வை வற்புறுத்தும் சமயக் கருத்துக்கள் புகுத்தப்பட்டு, வகுக்கப்பட்ட மரபே நாற்பால் மரபாகும். பண்டை அறம் பொருள் இன்பங்களுக்கு அடிப் படையான, இவ்வுலகத்துக்கான கருத்துக்கள் ஆரியர் அல்லாத இந்திய மக்களுக்கும் குறிப்பாகத் திராவிட மக்க ளுக்கும் உரியவையாக இருந்திருக்கலாம். இந்திய நாட்டின் வாழ்க்கைக்குரிய எத்தனையோ தத்துவக் கருத்துக்களும், சமூகக் கருத்துக்களும், இலக்கிய மரபுகளும், கதைகளும் ஆரியமயமாக்கப்பட்டமை போன்றே இம்முப்பால் மரபும் ஆரிய மயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையினையே வட மொழியில் நாம் காணுகின்றோம். தமிழகத்திலும் இது பரப்பப்பட்டது.

நாற்பால் மரபின் அடிப்படையான கருத்து. நான்காவ தான வீட்டுப்பாலே சிறந்ததாகும் என்பது, மற்ற மூன்று பால் களும் புறக்கணிக்கத்தக்கன என்பதும் ஆகும்.

“ஈதல்அறம்; தீவினைவிட்டு ஈட்டல் பொருள்;

காதலிருவர் கருத்தொருமித்து ஆதரவு இட்டதே இன்பம்;

பரனை நினைத்து இம்மூன்றும் விட்டதே வீடு'

என்னும் அவ்வை பாட்டு இதனை எடுத்துக்காட்டும்.

ஆரிய மரபு இப்பெருமாற்றத்தினை-இவ்வடிப்படை மாற்றத்தினை, மெல்ல மெல்லச் செய்ததாகத் தெரிகிறது. முப்பால் மரபினை அது முற்றிலும் கைவிடவும் முடிய வில்லை. காரணம் அதன் பெருமை போற்றத்தக்கது. அதன் தேவை தவிர்க்க முடியாதது. ஆயினும் இம்முப்பால் மர பினை முழுவதுமாக ஏற்றுக்கொள்ளவும் இயலவில்லை! ஆகவே அது அதனை மாற்றி அமைத்தது; நான்காவது பாலே சிறந்தது எனக் காட்டும் அப்பணியினை நிறை வேற்றியது. முப்பாலினையே போற்றி முப்பால் எனவே பெயரிட்டு வள்ளுவர் செய்த திருக்குறளின் உரையாசிரியர் பரிமேலழகர் முப்பால்களையும் தாழ்த்தி இருப்பதைக் காணலாம். அம்முனிவரால் உணர்த்தப்பட்ட அம்மூன்றினுள் ஏனைப்பொருளும் இன்பமும் போலாது அறன், இம்மை மறுமை வீடு என மூன்றையும் பயத்தலான் அவற்றின் வலியுடைத்து, இல்லறத்தின் வழிப்படுவனவாய பொருள் இன்பங்களுள் இருமையும் பயப்பதாகிய பொருள் கூறுவான் எடுத்துக்கொண்டார், அப்பொருளைத் துணைக் காரணமாக உடைத்தாய் இம்மையே பயப்பதாய இன்பம் கூறுவான் எடுத்துக்கொண்டார் என்னும் பரிமேலழகரின் உரைக் கருத் துக்கள் ஆரிய மரபின் இயல்பினை எடுத்துப் பேசுகின்றன.

8. அய்யம்

முப்பால் மரபினை நாற்பால் மரபாகத் தன்மயமாக்கினும் ஆரிய மரபு எப்போதும் அய்யக கண்கொண்டே முப்பாலை நோக்கி வந்திருக்கின்றது. நான்கு பால்களிலும் எது சிறந்தது என்னும் வாதங்களில் அது புலனாகிறது.

மகாபாரதத்தின் சாந்தி பருவத்தில் இது பற்றிப் பேசப் படும் ஓரிடம் குறிப்பிடத்தக்கது. பாரதப் போர் முடிவுற்றுப் பாண்டவர்கள் வெற்றி நிலை நாட்டியபோது எங்கும் பேர ழிவு இருப்பது தெரிந்தது. அசுவத்தாமன் பாண்டவர்களு டைய நண்பர்களை முறையில்லாத வகையில் கொன்று குவித்திருந்தான். இப்பேரழிவினைக் கண்டு பாண்டவர்கள் அய்வரும் கசிந்து கண்ணீர் மல்கினர். இந்த உலகில் எது தான் மேற்கொள்ள வேண்டிய குறிக்கோள் என்பது பற்றி அவர்கள் விதுரருடன் கூடி ஆராய்ந்தனர். அறமா, பொருளா, இன்பமா எது? விதுரர் அறமே சிறந்தது என அதற்குரிய காரணங்களைத் தந்து பேசினார். அர்ச்சுனன் பொருளேப் போற்றத்தக்க பொருள் எனப் பெரிதாக எடுத்துப் பேசினான். பீமன் இன்பமே சிறந்தது என விரித்துப் பேசினான். நகுலனும் சகாதேவனும் முப்பால்களுமே அளவுடன் மேற்கொள்ளத் தக்கவை எனப் பேசினர். தர்மர் மனநிறைவு பெறவில்லை. இங்கே அறம் பொருள் இன்பம் என்னும் முப்பால் பற்றி மட்டுமே விரிவாகப் பேசப்பட்டிருக் கின்றது. நான்காம் பாலைப் பற்றி பேச்சு இல்லை. (தி.மு. குறள்நெறி)

இக்கருத்துக்கள் முப்பால்பற்றி ஆரிய மரபு அய்யம் கொண்டிருந்தது என்பதையும், அதனை ஏற்றுக்கொள்ளத் தயங்கியது என்பதனையும் தெளிவாகக் காட்டுகின்றன. ஆதலால் அதனுடன் நான்காம் பாலைச் சேர்த்து அதற்கு முதன்மை இடம் தந்து முப்பாலை அது இழிவுபடுத்தியது. அதாவது, இம்முப்பொருள்களையும் கருவிகளாக்கி வீட்டுப் பாலைக் குறிக்கோளாக வைத்தது. இதுவே வடமொழியாக் கத்தின் இறுதிப் பணியாயிற்று. மகாபாரதம் இன்றுள்ள நிலை யில் பிராமணியத்தால் தன் தேவைக்கேற்ப மாற்றி எழுதப் பட்டது என அறிஞர்கள் சுட்டுவதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.(3)

திருவள்ளுவரது நூலில் நாம் முப்பாலே காண்கின்றோம். அவர் முப்பாலில் எப்பால் சிறந்தது என எப்போதும் ஆராய்ச்சி மேற்கொள்ளவில்லை. அவர் எதனையும் கருவியாக்கவில்லை. எதனையும் முடிவாக்கவில்லை. இந்த உலக வாழ்க்கைக்கு எல்லாமே தேவை என்பது அவர் கருத்து போலும். அவர் மரபே தமிழ் மரபு எனக் கொள் ளலாம். உலகச் சிந்தனையாளர் ஆல்பர்ட் ஷ்வைட்சர் இவ்வாறே கருதுகிறார்.(4)

இம்முப்பால் மரபு தமிழ் மரபு என்றே நாம் கொள்ளலாம். காரணம் இந்தியா முழுவதிலும் எல்லாக் காலங்களிலும் தோன்றிய நூல்களில் அறம் பொருள் இன்பம் எனும் மூன்றனையும் எடுத்து ஒரே ஆசிரியரால், ஒரே நூலால் செய்யப்பட்டது இத்தமிழ்த் திருக்குறளே. வடமொழியில் முப்பால் மரபு தொடக்கக் காலத்தில் (கி.மு. 400 முதல் கி.பி. 400 வரை) ஆங்காங்கே சுட்டப்பட்டிருந்தாலும் தர்ம சாத்திரங்களும், அர்த்த சாத்திரங்களும், காமசாத்திரங்களும் தனித்தனியாகத் தோன்றி வளர்ந்து இருந்தாலும் அவை அனைத்தையும் ஒன்றாகக் கண்டு விளக்கிய நூல் ஒன்றாயினும் அங்குத் தோன்றவில்லை. திருக்குறள் ஆசிரியர் முப்பாலைப் பற்றி எழுதுகின்றபோது முப்பாலும் வாழ்க் கைக்கு இன்றியமையாதவை எனப் பார்க்கும் ஒரு விரிந்த பார்வை அவரிடத்து அமைந்திருப்பதை நாம் காணலாம்.

வடமொழியில் இம்முழுப் பார்வை, குறைப் பிறவியா கவே அமைந்துள்ளது. அது முழுமை பெறவில்லை. தமிழ் மரபே முழுமைப் பெற்றது. ஆதலால் முப்பால் மரபுக்கு உரியவர்கள் தமிழர்களே எனலாம். தம் முப்பால் மரபினைத் தமிழர்கள் மறந்துவிட்டு, ஆரிய மொழி மயமாக்கப்பட்ட, நாற்பால் மரபினைத் தம் மரபாகப் போற்றி மயங்குகின்றனர். தமிழ் மக்கள் இனியேனும் மயக்கம் தெளிவீராக!

NOTES

(1)  ‘The Sutras lay equal stress on the three ends of  life, i.e. Dharma, Artha and Kama, but are absolutely Silent on Moksha’

- India of  Vedic Kalpa Sutras

- by Ramgopal, P. VIII.

‘A balanced outlook on life is recommended in the Sutras which lay equal stress on the three ends of life, i.e. righteous conduct (Dharma), acquisition of wordly objects (Artha) and their enjoyment (Kama)....

- Ibid. P. 482.

(2)          A.L. Basham, The Wonder That was India.

(3)          ‘The Mahabharata is frequently more secular than religions in tone; the work had its origin in lays composed to commemorate the deeds of a great warrior and may have been connected in some way with the royal sacrifice. Many of  the incidents go far back into the remote Vedic period. Transition from one story to another is often confused and awkward. These lays were later worked over by the priests, who expanded the meaning of the ballads, linked them together with prose narration, and interpolated treatises on ethical and theological problems. The major brahman modifications and additions probably date from about the second and first centuries B.C.

- Dre. Kmeier, Charles, Kingship and

Community in Early India, P. 131-132.

(4)          ‘So a natural and ethical world and life affirmation of this kind was present among the people of India at the beginning of our era although nothing of it can be found in Brahmanism, Buddhism and Bhagaved-Gita Hinduism. It gradually penetrates into Hindu through the great religious teachers who had sprung from the lower castes and lived among and felt with the people’.

- Schweitzer Albert, Indian Thought

and its Development, P. 201.

- விடுதலை நாளேடு, 24.10.19

தமிழ் முப்பால் மரபும்,வடமொழி நாற்பால் மரபும் - டாக்டர் தி. முருகரத்தனம் உரை

சமஸ்கிருதம் உலகின் ஒரே அறிவியல் மொழியாம்!

- புலவர் பா.வீரமணி -

இந்தியாவிலேயே சமஸ்கிருதம்தான் ஒரே அறிவியல் மொழி (இந்து, 12.8.2019) என்று கூற நாணி, உலகிலேயே என்று கூறியிருப்பதில் மத்திய மனித வள துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியாலின் அட வாடித்தனமும், சர்வதிகாரப்போக்கும் முண்டியடுத்து வெளிப்பட்டுள்ளது. இப்போது அவரது கூற்று எத்துணை உண்மை என்பதை இனி நோக்குவோம்.

சமஸ்கிருதத்தில் பரந்து விரிந்த புலமை கொண்ட வர் இராஜாராம் மோகன்ராய் ஆவர். அவர் பன் மொழி அறிஞர். உருது, அரபு, பாரசீகம் போன்ற மொழிகளையும் ஆழ்ந்து கற்றிருப்பதுடன், பவுத்தம், சமணம், இஸ்லாம், கிறித்துவம் போன்ற சமயங்களை யும் ஆழக்கற்றவர், வேதங்களையும், உபநிடதங்க ளையும் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தவர். சமஸ்கிருத்தை வேர் முதல் உச்சிவரை உணர்ந்தவர். சமஸ்கிருதம், பெரும் இலக்கியங்களையும், இதிகாசங் களையும் பெற்றிருந்தாலும், அதன் சமுதாயப் பயன் என்னவென்பதை அவர் அடையாளம் காட்டியிருப்பதுதான் மிக முக்கியமானது. அவர் காலத்தில் வங்காளத்தில், கிழக்கிந்தியக் கம்பெனி யார் சமஸ் கிருதப் பள்ளிகளைக் கூடுதலாகத் திறக்கத் திட்ட மிட்ட போது, கவர்னர் ஜெனரலாக இருந்த ஹாம் ஹெர்ஸட் பிரபுக்கு ஒரு கடிதத்தை 11.12.1823 அன்று அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில் சமஸ்கிருதத் தைப் பற்றிக் கீழ்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

“இந்தியாவில் நெடுங்காலமாக வழக்கத்தில் இருந்து வருகிற கல்வியறிவைப் பரப்புவதற்கு இந்துப் பண்டிதர்களைக் கொண்டு சமஸ்கிருதப் பள்ளிகளை அரசினர் நிறுவி வருகின்றனர். இத்தகைய கல்விக் கூடம் இலக்கண நுட்பங் களையும் அப்பாலைத் தத்துவ வேறுபாடுகளையும் இளைஞர்களின் மனத் தில் பெருஞ்சுமையாக ஏற்றி வைக்குமே ஒழிய சமு தாயத்திற்கு எவ்வகையிலும் அவை பயன்படா. அப் பள்ளிகளில் பயிலும் மாணவர் ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பு அறியப்பட்டவை எவையோ அவற்றை அறி வதுடன், கற்பனைக் கோட்டையில் வாழ்ந்த மக்கள் சிலருடைய பயனற்ற சொற்சிலம்பு வாதங்களையுமே தெரிந்துகொள்வர். இத்தகைய கல்வி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நெடுங்காலமாகக் கற்பிக்கப்பட்டு வருகிறது. இதே முறையில், இந்நாட்டு மக்களை அறியாமை இருளில் ஆழ்ந்து கிடக்கச் செய்வது பிரிட்டீஸ் சட்டமன்றத்தின் நோக்கமாக இருக்கு மானால், சமஸ்கிருதக் கல்விமுறையே அதற்குப் போதுமானதாகும். குடிமக்களுடைய கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும் என்பது அரசின் குறிக்கோளாக இருக்குமானால், அது மிகவும் முற்போக்கு இயல்பும், அறிவு நலமும், கனிந்த பயிற்சி முறையும் கொண்டதாக அமைய வேண்டும். அம்முறையில் கணக்கியல், இயற் கைத் தத்துவம், வேதியல், உடற்கூற்று இயல் முதலியவற்றோடு மற்றும் பயன்தரும் அறிவியல், கலைகளைப் பயிற்றுவிப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

ஆதாரம் - இராஜாராம் மோகன்ராய் - எழுதியவர் - சவுமியேந்திரநாத் தாகூர் - 1972 - பக் - 41- சாகித்திய அகாதெமி

- நன்றி: 'முகம்' மாத இதழ், அக். 2019

பெரியார் திறந்த பல்கலைக் கழகம் 9-3-1985, 10-3-1985 ஆகிய இருநாள்களிலும் சென்னையில் அறிஞர் பெருமக்கள் பங்கேற்ற சமஸ்கிருதமயம் - ஆதிக்கம் (Sanskritisation) பற்றிய ஒரு கருத்தரங்கத்தை நடத்தியது. அதில் ஆராய்ச்சி பூர்வமான கருத்துரைகள் எடுத்து வைக்கப்பட்டது.

சமற்கிருத மயமாக்கப்பட்டமை எனும் பொருள் பற்றிய கருத்தரங்கில், டாக்டர் தி. முருகரத்தனம் உரை வருமாறு.

1. உறுதிப் பொருள்கள் முதற்பொருள்கள் :

இந்திரன் முதலிய இறையவர் பதங்களும், அந்தம் இல் இன்பத்து அழிவு இல் வீடும் நெறி அறிந்து எய்துதற்குரிய மாந்தர்க்கு உறுதி என உயர்ந்தோரால் எடுக்கப்பட்ட பொருள் நான்கு, அவை அறம், பொருள், இன்பம், வீடு என்பன, என முப்பாலுக்கு உரை வகுத்த பரிமேலழகர் தன் உரையினைத் தொடங்குகிறார். அதாவது, உறுதிப் பொருள் கள் என்பன மக்களின் வாழ்க்கைக் குறிக்கோள்; மக்கள் அடையவேண்டியவை; மக்கள் மேற்கொள்ள வேண்டி யவை; மக்கள் பின்பற்ற வேண்டியவை ஆகும். இவற்றை முதற்பொருள் எனவும், ஊதியம் எனவும், பண்டைக்காலத் தமிழ் அறிஞர்கள் குறிப்பிட்டனர். ஊதியம் என்பதும் அறம் பொருள் இன்பங்களை எனப் புறநானூற்றுப் பழைய ஆசிரியர் ஓரிடத்தில் விளக்குகிறார். (காண்க: புறநா. 28). இவற்றை ஆங்கிலத்தில்,‘Human Ideals’ or ‘Human Values’ or ‘Human Aims’ or Ends of  Life’.... எனக் குறிப்பிடுவர். மக்கள் வாழ்க்கைக்கு உறுதியாகின்ற காரணத் தினால் அவை உறுதிப்பொருள்கள் என வழங்கப்பட்டன. இவ்வுறுதிப் பொருள்கள் ஏறத்தாழ ஈராயிரம் ஆண்டுகளாக இந்திய மக்களின் சிந்தனையிலும், செயலிலும் இடம்பெற்று இயங்கியும் இயக்கியும் வந்துள்ளன. இவ்விந்திய மக்கள் சமயங்கள், தத்துவங்கள், கலைகள் ஆகியவற்றிலும் இவை பரக்க இடம் பெற்றன. இவை வடமொழியில் புருஷார்த் தங்கள் என வழங்கப்படும். புருடர்களுக்கு அர்த்தமாவது, மக்கட்செல்வம் என்பது இதன் பொருளாம்.

2. தமிழில் முதற்பொருள்கள் :

தமிழ் இலக்கிய இலக்கணத் தொடக்கக் கால முதற் கொண்டு இவை பற்றிய கருத்துக்கள் தமிழரிடையே காணப்படுகின்றன. தொல்காப்பியரின் பொருளதிகாரத்தில்,

இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு

அன்பொடு புணர்ந்த அய்ந்தினை மருங்கின்

(தொல். களவு. 1)

எனவும்,

அந்நிலை மருங்கின் அறமுதல் ஆகிய

மும்முதற் பொருட்கும் உரிய என்ப

(தொல். செய்யுள் 411)

எனவும் கூறப்படுகின்றது. தொல்காப்பியம் இவற்றை மும்முதற் பொருள்கள் எனப் பொருள் பொதிந்த தொடரால் குறிப்பிடுகின்றது. புறநானூறு :

சிறப்புடை மரபின் பொருளும் இன்பமும்

அறத்து வழிபடூஉம் தோற்றம் போல (புறம். 31)

எனவும்,

அறனும் பொருளும் இன்பமும் மூன்றும்

ஆற்றும் பெரும நின் செல்வம் (புறம், 28)

எனவும் கூறுகின்றது.

கி.பி. 6ஆம் நூற்றாண்டினதாகக் கருதப்படும் பெருங்கதை,

அறம் பொருள் இன்பம் என்ற மூன்றிலும்

(4:7:140) எனக் குறிப்பிடுகின்றது.

இம்மூன்று உறுதிப்பொருள்களையே வள்ளுவரின் முப்பால் எனும் நூல் விளக்கி வரைகின்றது.

இவற்றைத் தொடர்ந்து சிலப்பதிகாரம், புறப்பொருள் வெண்பாமாலை, பன்னிருபடலம் முதலானவை இம்மும் முதற் பொருள்களைப்பற்றி பேசுகின்றன. இடைக்காலத்துக்கு முந்திய நூல்கள் தேவாரங்கள், திவ்வியப் பிரபந்தங்கள், நன்னூல் முதலான இலக்கியங்கள் ஆகியவையும் இவை பற்றி ஆங்காங்கே குறிப்பிட்டுச் செல்கின்றன.

3. வடமொழியில் முதற்பொருள்கள் :

இங்ஙனமே ஏறத்தாழ கி.மு. 4ஆம் நூற்றாண்டு முதற் கொண்டே வடமொழிச் சாத்திரங்களும், இலக்கியங்களும் இம்மும்முதற் பொருள்கள் பற்றிக் குறிப்பிட்டுப் பேசுகின்றன. இக்காலத்திற்குரிய கல்ப சூத்திரங்கள், மனுஸ்மிருதி, கவுடலீ யம், வாத்சாயனம், மகாபாரதம், இராமாயணம், காளிதாசர் நூல்கள் ஆகியவை இவ்வுறுதிப்பொருள்களைப் பற்றியும் பேசுகின்றன. இவற்றிற்கு முன்னால் தோன்றிய வேதங் களிலும், பிராமணங்களிலும், உபநிடதங்களிலும் இவ்வுறுதிப் பொருள்கள் பற்றிய கருத்துக்கள் இல்லை. கி.பி.யின் தொடக் கத்திலிருந்தே புருஷாத்தங்களைப் பற்றிய கருத்துக்கள் வடமொழியில் பரவலாகப் பேசப்பட்டன.

4. யாருக்கு உரியன?

ஆதலால் இவ்வுறுதிப் பொருள்-முதற்பொருள்கள்-பற்றிய கருத்துக்கள் ஏறத்தாழ ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்தியா முழுவதிலும் தோன்றிய பலமொழி இலக்கியங்களில் இடம்பெற்று வந்துள்ளமை தெளிவாகிறது. வடமொழி, தென்மொழி மரபுகளில் தொடக்கக் கால முதலே இக்கருத்துக்கள் இடம் பெற்றதால் இக்கருத்துக்களை வட மொழிக்குரியனவா? (அல்லது) தமிழ் மொழிக்குரியனவா? (அல்லது) ஆரியர்க்குரியனவா? (அல்லது) தமிழர்க்குரிய னவா? என வரையறுத்தல் கடினமாக உள்ளது. இக்கருத் துக்கள் இந்திய மக்கள் அனைவருக்கும் பொதுவாக உரிய கருத்துக்கள் எனக் குறிப்பிடலாம் போலும். இக்கருத்துக் களைப் போன்றே ஆன்மாவைப் பற்றிய கருத்துக்களும், பல்பிறப்புக்களைப் பற்றிய கருத்துக்களும், கர்மா பற்றிய கருத்துக்களும் இந்திய மக்கள் அனைவர்க்கும் உரிய கருத் துக்கள் என அறிஞர்கள் கருதுகின்றனர். அவர்கள் இவற்றை ‘National Stock’ எனக் குறிப்பிடுவர். (மாக்சு மூலர், சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் முதலானோர் இவர்கள்.)

5. மும்முதற்பொருளின் காலம் :

தென்மொழி மரபும், வடமொழி மரபும் தம் தொடக் கக் காலத்தில் முப்பால் பற்றியே பேசுகின்றன. தமிழ் மரபு மும்முதற்பொருள் எனப் பேசுவது முன்னர் சுட்டிக் காட்டப்பட்டது. வடமொழியில் இது 'திரிவர்க்கம்' எனப் படுகிறது. தமிழ்மொழியில் இம்முப்பால் மரபினைத் தொல்காப்பியம், சங்கத்தொகை நூல்கள், இரட்டைக் காப்பியங்கள், பெருங்கதை ஆகியவற்றின் காலம் வரை யில் காணமுடிகிறது. வடமொழியில் கல்ப சாத்திரங்கள், மகாபாரதம், இராமாயணம், மனுஸ்மிருதி, கௌடல்யம், வாத்சாயனம், காளிதாசர் நூல்கள் ஆகியவற்றில் இம் முப்பால் மரபினையே காண முடிகிறது. ஒவ்வொரு மொழி மரபிலும் இக்காலம், தொடக்க முதல் கி.பி. 5ஆம் நூற்றாண்டு வரை எனக் கொள்ளலாம்.

6. நாற்பால் மரபு தோன்றல் :

இக்காலத்திற்குப் பின்னர்த் தமிழில் தோன்றிய சமய இலக்கியங்களான தேவாரம், திவ்வியப் பிரபந்தம் முதலான வற்றில் நாற்பால்மரபு பேசப்படுகிறது. கி.பி. 8ஆம் நூற்றாண் டினராகிய திருமங்கையாழ்வார்,

"......... ............. ........... ............ ............. ................. .............. அம்மறைதான்

மன்னும் அறப்பொரு ளின்பம்வீடு என்றுலகில்

நன்னெறி மேம்பட்டன நான் கன்றே

எனவும், ஏறத்தாழ அவர் காலத்தவராகிய மாணிக்கவாசகர்,

அருந்தவர்க்கு ஆழின்கீழ் அறம்முதலா நான்கினையும்

இருந்தவருக்கு அருளுவது

எனவும், கி.பி. 7 - ஆம் நூற்றினராகிய திருஞான சம்பந்தர்,

அழிந்தசிந்தை அந்தணாளர்க்கு அறம்பொருள் இன்பம்வீடு

மொழிந்த வாயான் முக்கணாதி...."

எனவும் நாற்பால் பற்றிப் பேசுதல் காணலாம்.

அதாவது, இந்தக் காலம்தொட்டு நாற்பால் மரபு. கல்வியின் பயனும் பண்புமாக அமைந்துவிட்டது. 12 - ஆம் நூற்றாண்டில் தோன்றிய தமிழ்த் தண்டி ஆசிரியர், நாற் பொருள் பயக்கும் நடைநெறித்து ஆகி எனவும், நன்னூல் ஆசிரியர் அறம் பொருள் இன்பம் வீடு அடைதல் நூற்பயன் எனவும் குறிப்பிடும் நிலை தோன்றியது.

- வியாழக்கிழமை (24.10.2019) தொடரும்

- விடுதலை நாளேடு, 22.10.19