வைக்கம் போராட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வைக்கம் போராட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 16 டிசம்பர், 2024

வைக்கம் போராட்டத்தில் நாகம்மையாரும், கண்ணம்மாவும்!

 


விடுதலை
பகுத்தறிவுக் களஞ்சியம்

‘1924ஆம் ஆண்டு மே மாதம் 23ஆம் தேதி வைக்கம் சத்தியாக்கிரகத்தில் பங்குபெற அய்ந்து பெண்கள் வந்தனர். நாகம்மையார், எஸ்.ஆர். கண்ணம்மாள், திருமதி நாயுடு, திருமதி சாணார், திருமதி தாணுமாலயப் பெருமாள் பிள்ளை ஆகியோர் தடையை மீறிச் சத்தியாக்கிரகத்தில் கலந்துகொள்ளப் புறப்பட்டுச் சென்றனர். தடைவிதிக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட இடத்துக்குச் சென்றனர். தடையை அகற்ற முயன்ற நேரத்தில் இன்ஸ்பெக்டர் சர்மா, பெரியாரின் துணைவியாரிடம் ‘‘நீங்கள் என்ன ஜாதி?’’ என்று கேட்டார். இந்தப் போராட்ட அணிக்குத் தலைமை தாங்கிய பெரியாரின் துணைவியார், ‘‘எங்களில் யார் எந்த ஜாதி என்று பார்த்து தாழ்த்தப்பட்ட ஜாதியினரை மட்டும் அறிந்து மற்றவர்களை அனுமதிக்கலாம் என்று பார்க்கிறீர்களா? நாங்கள் அதற்காக இங்கு வரவில்லை எல்லோரும் இந்த வீதியில் செல்ல அனுமதிக்க வேண்டும்’’ என்று நாகம்மையார் கூறினார்.

தடையை மீறி வந்த பெண்கள் அந்த இடத்தை விட்டு அகல மறுத்து பல மணிநேரம் அதே இடத்திலேயே இருந்தனர்.
இறுதியாகப் பிச்சு அய்யங்கார் என்ற போலீஸ் கமிஷனர் வந்தார். பெண்கள் என்பதற்காகத் தனிச் சலுகை எதுவும் காட்ட வேண்டாம். ஆண்களை எப்படி நடத்துவீர்களோ அப்படியே இவர்களையும் நடத்துங்கள் என்று இன்ஸ்பெக்டர் சர்மாவுக்கு உத்தரவிட்டார். கிளர்ச்சியில் பங்குகொண்ட பெண்களை எப்படி நடத்துவது என்று இன்ஸ்பெக்டர் கேட்டிருப்பதன் மூலம் இந்த கிளர்ச்சியில் முதலில் பங்குபெற்றவர்கள் பெரியாரின் குடும்பத்து பெண்கள் என்பது விளங்குகிறது’ (தந்தை பெரியார் 100ஆம் ஆண்டு பிறந்த நாள் மலரில் வந்ததாக வளர்மதி தன் நூலில் இப்பகுதியை மேற்கோளாகக் காட்டியிருக்கிறார்).

நாகம்மையார் வைக்கத்தில் இருந்தவாறு தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வந்தார். பிரச்சாரங்களை நிகழ்த்தி வந்தார். சிங்கோலி, முட்டம், கொல்லம், மய்ய நாடு, நெடுங்கனா, திருவனந்தபுரம், கோட்டாறு முதலிய இடங்களில் பிரச்சாரம் செய்திருக்கிறார். வைக்கம் போராட்டத்தில் நாகம்மையாரின் பங்களிப்பினை அவர் மறைந்தபோது தனது இரங்கல் அறிக்கையில் தந்தை பெரியார் குறிப்பிட்டு இருக்கிறார். நாகம்மையாரின் படத்திறப்பு விழாவில் பேசிய திரு. வி.கல்யாணசுந்தரனார், “வீட்டின் ஒரு மூலையில் பேடெனப் பதுங்கிக் கிடந்த நம் அம்மையார் தீண்டாமை எனும் பேயை வெட்டி வீழ்த்துவான் வேண்டி வைக்கம் சத்தியாக்கிரகப் போரிற் புகுந்து சிறை சென்று அரசாங்கத்தை நடுங்கச் செய்ததுடன் அமையாது வாகை மாலையும் சூட்டினார்” என்று பேசியிருக்கிறார்.

திராவிட இயக்க வேர்கள் நூலில்
க.திருநாவுக்கரசு

பெரியார் சிறையில் கொடுமையாக நடத்தப்படுவதைக் கண்டித்து ராஜகோபாலாச்சாரியார் வெளியிட்ட அறிக்கை

 



பகுத்தறிவுக் களஞ்சியம்

தற்போது திருவனந்தபுரம் மத்தியச் சிறையில் சத்தியாக்கிரக கைதியாக இருக்கும் இவி. ராமசாமி நாயக்கர் உணவு மற்றும் தங்குமிடம் போன்ற விஷயங்களில் சாதாரண தண்டனைக் கைதியாக நடத்தப்படுவதாக நம்பகமான தகவல்கள் எனக்கு வருகின்றன. சிறை உடையை அவர் அணிகிறார்; இரும்பு விலங்குகள் போடப்பட்டிருக்கிறார். தனிமைச் சிறையில் மற்ற சத்தியாக்கிரக சிறைவாசிகளிலிருந்து ரொம்ப தூரத்தில் வைக்கப்பட்டிருக்கிறார் என்று தெரிகிறது.

இவ்வளவுக்குப் பிறகும் நாயக்கர் மிகுந்த உற்சாகத்துடன் இருக்கிறார் என்பதைச் சொல்லவேண்டியதில்லை. அவருடன் நன்றாகப் பழகியிருக்கிறேன்; அவருடன் பல காலம் சேர்ந்து வாழ்ந்திருக்கிறேன்; எனக்கு அவரைத் தெரியும். அவர் ஒரு தளர்வுறாத ஆன்மா. செல்வ வளத்தின் மகிழ்ச்சிகளையும் பதவிகளையும் வெறுத்து ஒதுக்கித்தள்ளிவிட்டு கடினமான இந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்து வந்துள்ளார், பெரும்பாலான நம்மைப் போல அல்ல உண்மையிலேயே. தம்மைத் தூய்மைப்படுத்தும் இந்தச் செயல்களை அவர் வரவேற்கிறவர். எனவே பெரிதும் நாம் வருந்தவேண்டியதில்லை.

உயர்ந்த பதவியும் அந்தஸ்தும் கொண்டவர்களை இப்படிக் கடுமையாகத் திருவாங்கூர் அரசாங்கம் நடத்த விரும்பாமல் இருக்கலாம். ஆனால், பதவியும் அந்தஸ்தும் என்பது ஆங்கிலேயர் என்பதாயும், பெயருக்குப் பின்னால் ஒட்டிக்கொண்டிருக்கும் பட்டங்களாலுமே அது கணக்கீடு செய்யப்படுகிறது.

கடைசியாகத் திருவனந்தபுரத்தில் இருக்கும்போது, வைக்கம் சிறைக் கைதிகள் நடத்தப்படும் விதம் குறித்து பார்க்க வாய்ப்பு கிடைத்தது. புகார் சொல்ல எதுவும் இல்லை. உண்மையில் நாகரிகமாக அவர்கள் நடத்தப்படுவதாக நான் பெருமை அடைந்தேன். ஒரு நல்ல உயர்ந்த நோக்கத்திற்காக இந்திய சமஸ்தானத்தில் சிறை செல்ல நேர்ந்தவர்கள் நடத்தப்பட்டமுறை நன்றாக இருந்தது. பிரிட்டிஷ் இந்தியாவில் நேரும் அனுபவங்களுக்கு முற்றிலும் மாறானது அது. ஆனால், நாயக்கர் விஷயத்தில் ஏதோ காரணங்களுக்காக திருவாங்கூர் தவறு செய்துவிட்டதாகவே தோன்றுகிறது. நாயக்கரின் தகுதியைப் பற்றிய அறியாமை அதற்கு ஒரு பகுதி காரணமாக இருக்கலாம். ஆனால், அதற்காக அதை மன்னிக்க முடியாது.

இருக்கலாம். ஆனால், அதற்காக அதை மன்னிக்க முடியாது.

நாயக்கர் அவர்கள் மாவட்டத்தை விட்டு வெளியேறும்படி கேட்டுக் கொள்ளப்பட்டார். மிகுந்த அமைதியுடன் அவர் அதை மதிக்கவில்லை. இந்தத் தண்டனை முற்றிலும் சட்ட விரோதமானது. வன்முறையைத் தூண்டவோ அதைப் போன்ற எதையும் செய்யாமலோ இருக்கும்போது, கீழ்ப்படியாமை மட்டுமே குற்றவியல் விசாரணைக்கு உட்படுத்தப்படும் காரணமாக இருக்க முடியாது. எந்த சட்ட நடைமுறையாக இருந்தாலும் வெளியேற்ற ஆணையின் நோக்கம், குற்றவாளி தன் பாதுகாப்பில் இருக்கும்போது மட்டுமே செயற்படுத்த வேண்டும் என்று நினைக்கிறேன், நான் தவறாகவும் இருக்கலாம்.

அவரைக் கடுங்காவல் சிறைத் தண்டனையில் வைத்திருப்பதும் இரும்பு விலங்கிட்டிருப்பதும் அவருக்குச் சிறை உடை அணிவித்திருப்பதும், மற்ற சத்தியாக்கிரக கைதிகள் சரியாகப் பெற்றுள்ளவைகளை அவருக்கு மறுப்பதும் முழுமையாக நியாயப்படுத்த முடியாதவை. சிறையில் இருக்கும் தமிழ்நாடு காங்கிரசுக் கட்சியின் தைரியமிக்க தலைவருக்கு என் பாராட்டுக்கள்.”

– ராஜகோபாலாச்சாரியார்
– ‘தி இந்து’ – 27.8.1924

வைக்கம் போராட்டம் பற்றி காமராசர்

 


விடுதலை
பகுத்தறிவுக் களஞ்சியம்

முதலமைச்சர் காமராசர் 08.04.1961 அன்று திருச்சி வரகனேரியில் பெரியார் நகர் வாயிலைத் திறந்து வைத்தார்.

திருச்சி நகரசபைத் தலைவர் ஏ.எஸ்.ஜி. லூர்துசாமி (பிள்ளை! காமராசரை வரவேற்றுப் பள்ளத் தெரு என்றிருப்பதை மாற்றி, `பெரியார் நகர் எனப் பெயரிட கவுன்சில் தீர்மானித்ததாகவும் அதைத் திறந்து வைக்குமாறும் கேட்டுக் கொண்டார்.

காமராசர் அந்த வாயிலைத் திறந்து வைத்துப் பேசுகையில்.

”என் மதிப்பிற்குரிய பெரியார் பெயரை வைத்துள்ளீர்கள் ‘பள்ளத் தெரு’ என்ற பெயரை மாற்றிப் பெரியார் பெயரை வைத்தது பொருத்தமே ஜாதி பேதமற்ற சமுதாயத்தைக் காண. பாடுபட்டு வருபவர் நமது ஈரோட்டுப் பெரியார்தான்! எனவே, இந்த நகருக்குப் பெரியார் பெயரை வைத்தது பொருத்தமே! பெரியார் காங்கிரசின் தலைவராகவும் காரியதரிசியாகவும் இருந்தார். அப்போதே அவர் ஜாதிகளை ஒழிக்க வேண்டுமென்றார்.

“பெரியார் காங்கிரசிலிருந்தபோது ஜார்ஜ் ஜோசப் விருப்பப்படி கேரளத்தில் போராடினார். வைக்கம் என்னும் ஊரில் ஜாதி இந்துக்கள் தாழ்த்தப்பட்டவர்களைத் தெருவிலும் நடக்க விடாதபடி கொடுமை செய்து வந்தனர். பெரியார் சத்தியாக்கிரகம் ஆரம்பித்தார். அப்போது நான் ஒரு சிறிய தொண்டன்தான். பெரியாருக்கு அப்போது என்னைத் தெரியாது; அவர் பெரிய தலைவர். இப்போதும் அவரை எனக்குத் தெரியாது. ஏதோ நான் அவரைப் பார்த்திருக்கிறேன். வைக்கம் நகரில் தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்தை நடத்தியதற்காகத் தமிழ்த் தென்றல் திரு.வி.க. ‘வைக்கம் வீரர்’ என்று பெரியாருக்குப் பட்டத்தைச் சூட்டினார். தள்ளாத வயதிலும் ஜாதி ஒழிப்புக்கும் பாடுபட்டு, தன் வாழ்நாளிலேயே அதைக் காண வேண்டுமென்று எதிர்பார்த்திருக்கிறார் பெரியார்” என்று மனம் திறந்து பாராட்டினார்.

வெள்ளி, 1 டிசம்பர், 2023

வைக்கம் போராட்ட வெற்றி என்பது ஏற்றத் தாழ்வுகள் எங்கு தலைதூக்கினாலும் அவற்றை எதிர்கொண்டு வெற்றி பெறுவதற்கான உத்வேகத்தைக் கொடுக்கும் ஒப்பற்ற இலட்சியத் திருநாள்! தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை


 தந்தை பெரியார் தலைமையில் நடைபெற்ற வைக்கம் போராட்டத்தின் வெற்றி விழா- வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் (1925) இந்நாள்!

வைக்கம் போராட்ட வெற்றி விழாவை எல்லா வகையிலும் சிறப்பாக நடத்திவரும் நமது முதலமைச்சருக்குப் பாராட்டுகள்!

தமிழர் தலைவர்  ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை

1

வைக்கத்தில் தீண்டாமையை ஒழிக்க தந்தை பெரியார் தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டு, அதன் வெற்றி விழா நடத்தப்பட்ட நாள் இந்நாள் (1925). ஏற்றத் தாழ்வுகள் எந்த வடிவத்தில் தலை தூக்கினாலும், அதனைத் தரைமட்டமாக்க உறுதி ஏற்கும் உன்னத வரலாற்றுத் திருநாள் இந்நாள் என்று  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். 

அவரது அறிக்கை வருமாறு:

கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், வைக்கத் திலுள்ள மகாதேவர் கோயிலைச் சுற்றி அமைந்துள்ள தெருக்களில் ஒடுக்கப்பட்டவர்கள் நடப்பதற்குத் தடைவிதிக்கப்பட்டிருந்ததை நீக்கக் கோரி நடந்த வைக்கம் போராட்டத்தில், கேரளத் தலைவர்களின் அழைப்பின் பேரில்  தந்தை பெரியார் வைக்கம் சென்று, அந்தப் போராட்டத்திற்குத் தலைமை ஏற்றார். பின்பு பல நாட்கள் அங்கு தங்கியிருந்து போராட்டத்தை  ஒருங்கிணைத்து, அனைத்து மக்களிடமும் வைக்கம் போராட்டம் குறித்து தமது சீர்திருத்த, சமூக நீதிக் கருத்துகள் மூலம் பிரச்சாரம் செய்து, வைக்கம் போராட்டத்தை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். 1923 மார்ச் மாதம் தொடங்கிய வைக்கம் போராட்டம் நடைபெற்று நூறு ஆண்டுகள் ஆகின்றன.

“வைக்கம் போராட்டம் தொடங்கி நூறாண்டுகள் நிறைவு செய்ததையொட்டி, தமிழ்நாடு அரசின் சார்பில் 2023ஆம் ஆண்டு மார்ச் 30-ஆம் நாள் தொடங்கி ஓராண்டு காலம் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்” என்றும், போராட்டத்தின் வரலாற்றையும், வெற்றியை யும் பொதுமக்கள் மற்றும் மாணவ - மாணவியர்களுடன் சேர்ந்து கொண்டாடும் வகையில், தமிழ்நாடு சட்ட மன்றப் பேரவையில் 30.3.2023 அன்று விதி 110-இன் கீழ் 11 அறிவிப்புகளையும் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து, கடந்த  ஏப்ரல் ஒன்றாம் நாள் கேரளாவில் உள்ள வைக்கத்தில், தமிழ்நாடு முதல மைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் கேரளா மாநில முதல மைச்சர் பினராயி விஜயன் ஆகியோர் கலந்து கொண்ட வைக்கம் சத்தியாகிரக போராட்டத்தின் நூற்றாண்டு விழாவில்,  எழுத்தாளர் பழ.அதியமான் எழுதிய ‘‘வைக்கம் போராட்டம்'' நூலின் மலையாள மொழிப் பெயர்ப்பு வெளியிடப்பட்டது. 

இன்றைய தினமான நவம்பர் 29 ஆம் நாள், 1925 ஆம் ஆண்டு வைக்கம் போராட்டத்தின் வெற்றிவிழா வைக்கத்தில் கொண்டாடப்பட்ட நாளாகும். அந்த விழாவிற்குத் தந்தை பெரியார் தலைமையேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.  அன்னை நாகம்மையாரும் அந்த வெற்றி விழாவில் பங்கேற்றார். 

இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க நாளினை நினைவு கூரும் வகையில் இன்றையதினம் எழுத்தாளர் பழ.அதியமான் எழுதிய வைக்கம் போராட்டம் நூலின் கன்னட மொழிபெயர்ப்பு நூலை முதலமைச்சர் வெளி யிட,  நான் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பைப் பெற்றதற் கான மகிழ்ச்சியையும், நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறேன். பேராசிரியர் சிறீதரா மேற்பார்வையில் செல்வகுமார் இந்நூலினை  மொழிபெயர்த்துள்ளார்.  கவுரி மீடியா டிரஸ்ட் நிறுவனத்தோடு இணைந்து தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் இந்நூலை வெளியிட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தலைமைச் செய லாளர் சிவ் தாஸ் மீனா,  பள்ளிக்கல்வித் துறை செயலா ளர் ஜெ. குமரகுருபரன்,  வைக்கம் போராட்டம் நூல் ஆசிரியர் பழ.அதியமான், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேலாண்மை இயக்குநர் திருமதி. இரா. கஜலட்சுமி,  மொழிபெயர்ப்புப் பிரிவு இணை இயக்குநர் டாக்டர். சங்கர சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தியத் துணைக் கண்ட வரலாற்றில் வைக்கம் தீண்டாமை ஒழிப்புப் போராட்டம் திருப்புமுனைக் கானது. ‘மகத்' என்ற இடத்தில் பொதுக் குளத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் தண்ணீர் எடுக்கும் உரிமைப் போராட்டத்தை அண்ணல் அம்பேத்கர் நடத்தியது என்பது தந்தை பெரியார் நடத்திய வைக்கம் போராட் டத்தின் தாக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றும் சுசீந்திரம் கோவில் நுழைவுப் போராட்டம், குருவாயூர் கோவில் தீண்டாமை ஒழிப்பு ஆகியவற்றிற்கு உந்து சக்தியாக அமைந்த தனிப்பெரும் உரிமைக் குரல் செயலி ஆகும்!

வைக்கம் போராட்டத்துக்கும், பெரியாருக்கும் சம் பந்தமில்லை என்று கொஞ்சம்கூட அறிவு நாணயமின்றி எழுதும், பேசும் பேர்வழிகள் - வரலாற்றைத் திரிக்கும் திரிபுவாதிகள் இதற்குப் பிறகாவது நிறுத்திக் கொள்ளவேண்டும்.

வைக்கம் போராட்டம் என்பது ஏற்றத்தாழ்வுகள் எந்த வடிவத்தில் தலை எடுத்தாலும், அவை ஒழிக்கப் படவேண்டும் என்ற இலட்சியத்தைப் பறைசாற்றும். அதற்காக எந்த விலையையும் கொடுக்கவேண்டும் என்ற உத்வேகத்தைக் கொடுக்கும் வெற்றிக்கான உந்து சக்தியாகும்!

வைக்கம் நூற்றாண்டு விழாவை எல்லா வகையிலும் வரலாற்றுச் சிறப்போடு நடத்தும் - சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மானமிகு மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் நெஞ்சம் நிறைந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தீண்டாமை - அதற்கு ஆணிவேரான ஜாதியை ஒழிக்க நம்மை நாமே ஒப்படைத்துக் கொள்ள இந்நாளில் உறுதியேற்போம்!

வாழ்க வைக்கம் வீரர் பெரியார்!

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
29.11.2023

வெள்ளி, 5 மே, 2023

வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழா: ஓராண்டு முழுவதும் வைக்கம் வீரர் பெரியாருக்கு விழா!

  

தமிழ்நாடு அரசு திட்டங்கள் - முதலமைச்சர் அறிவிப்பு

என்னென்ன திட்டங்கள்?

9

வைக்கம் போராட்டம் தொடங்கிய மார்ச் 30 ஆம் நாளில், வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவைத் தமிழ் நாடு அரசு தொடங்கவுள்ளது. வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நிகழ்ச்சிகள், 2023 ஆம் ஆண்டு, மார்ச் 30ஆம் நாள் தொடங்கி, ஓராண்டு முழுவதும் நடத்தப்படும்.  போராட்டத்தின் வரலாற்றையும், நோக்கத்தையும்,  வெற்றியையும் பொதுமக்களும் மாணவர்களும் தெரிந்து கொள்ளும் வகையில் பல்வேறு முன்னெடுப்புகள் செய்யப்படும்.

வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா, பின்வரும் நிகழ்ச்சிகளை உள்ளடக்கியதாக இருக்கும் என்பதையும் இந்த மாமன்றத்தில் தெரிவிக்க விரும்புகிறேன்.

1. வரும் ஏப்ரல் 1, 2023 அன்று, கேரள அரசால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா” நிகழ்ச்சியில், மாண்புமிகு கேரள முதலமைச்சர் திரு. பினராயி விஜயன் அவர்களோடு நானும் சிறப்பு அழைப் பாளராகப் பங்கேற்கிறேன்.  வைக்கம் போராட்டம் நடை பெற்ற இடத்தில் தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட நினைவுத்தூணுக்கு மரியாதை செலுத்துகிறோம்.

2. தமிழ்நாட்டில் மிக முக்கியமான ஆய்வாளர்களில் ஒருவரான பழ.அதியமான் அவர்கள் எழுதிய “வைக்கம் போராட்டம்” என்ற தமிழ் நூலின் மலையாள மொழி பெயர்ப்பு வெளியிடப்படுகிறது.

3. தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் மற்றும் கேரளாவில் உள்ள டி.சி.பதிப்பகம் ஆகிய வற்றின் கூட்டு வெளியிடாக இது வெளியிடப்படவுள்ளது.  இந்த நூலின் தெலுங்கு, கன்னடம், ஆங்கிலப் பதிப்புகளும் விரைவில் வெளியிடப்படும்.

4. இந்த ஆண்டு நவம்பர் 29 அன்று, தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய இருமாநில முதலமைச்சர்கள் மற்றும் பல்வேறு ஆளுமைகள் பங்கேற்கக்கூடிய வகையில், வெகு சிறப்பான நிகழ்ச்சி ஒன்று தமிழ்நாடு அரசால் நடத்தப்படும். 

5. எல்லை கடந்து சென்று வைக்கத்தில் போராடிய பெரியார் அவர்களை நினைவுகூரும் வகையில், பிற மாநிலங்களில் ஒடுக்கப்பட்டவர்கள் நலனுக்காகப் பாடு பட்டு, குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் ஆளுமை கள் அல்லது நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் “வைக்கம் விருது” சமூகநீதி நாளான செப்டம்பர் 17 ஆம் நாளன்று தமிழ்நாடு அரசால் வழங்கப்படும். 

6. கேரள மாநிலம் வைக்கத்தில் அமைந்துள்ள பெரியார் நினைவிடத்தை நவீனமுறையில் மறுசீரமைக்கவும், பெரியார் தொடர்பான நினைவுப் பொருட்கள் கூடுதலாக இடம் பெறுவதற்கும் 8 கோடியே 14 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். 

7. தந்தை பெரியார் கைது செய்யப்பட்டு முதன்முதலாக சிறை வைக்கப்பட்டிருந்த ‘அருவிக்குட்டி’ கிராமத்தில் பெரியார் நினைவிடம் ஒன்று புதிதாக உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

8. வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நினைவாக சிறப்பு நினைவு அஞ்சல் தலை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும். 

9. தமிழ்நாட்டின் முக்கிய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் வைக்கம் போராட்டம் தொடர்பான கருத் தரங்குகள் நடத்தப்படும். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் வினாடி-வினா உள்ளிட்ட போட்டிகளை நடத்திப் பரிசுகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஓராண்டு முழுவதும்...

10. வைக்கம் போராட்ட நூற்றாண்டு குறித்த விழிப் புணர்வை மாணவர்களுக்குக் கொண்டு சேர்க்கக்கூடிய வகையில், 64 பக்க நூல் ஒன்று கொண்டுவரப்படும். அது தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் மூலமாக வெளியிடப்பட்டு, விற்பனை செய்யப்படும்.  இந்த நூல், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒலிப்புத்தகமாகவும் வெளியிடப்படும். 

11. வைக்கம் போராட்ட நூற்றாண்டு குறித்த சிறப்புக் கட்டுரைகள் பலவற்றை பல்வேறு அறிஞர்களிடமிருந்து பெற்று தொகுத்து வைக்கம் போராட்ட நூற்றாண்டு மலர் ஒன்று ‘தமிழரசு’ பத்திரிகை மூலம் கொண்டு வரப்படும்.

இவை அனைத்தும் வரும் ஓராண்டு காலத்திற்குள் படிப்படியாக நிறைவேற்றப்படும்.

10

சென்னை, மார்ச் 30- வைக்கம் போராட்ட தள நாயகர் தந்தை பெரியார் செயற்கரும் செயல்கள் குறித்து ஓராண்டு முழுவதும் தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் வெகு சிறப்புடன் நிகழ்ச்சிகள் நடத்தும் என்று சட்டப்பேரவையில் இன்று (30.3.2023) வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பினைப் பிரகடனப்படுத்தினார் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

மாண்புமிகு முதலமைச்சர்:  மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இன்று வரலாற்றிலே ஒரு முக்கியமான நாள்.  1924 ஆம் ஆண்டு, மார்ச் 30 அன்று, மாபெரும் சமூக சீர்திருத்தத்திற்கு அடையாளமாக விளங்கும் வைக்கம் போராட்டம் தொடங்கியதன் நூற்றாண்டு தொடக்க நாள் இன்று.  (மேசையைத் தட்டும் ஒலி)  

அத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நாளில் வைக்கம் போராட்டம் வெற்றி பெற காரணமாக இருந்த பகுத்தறிவுப் பகலவன் வைக்கம் வீரர் தந்தை பெரியாரைப் போற்றும் விதமாக, (மேசையைத் தட்டும் ஒலி) வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பு ஒன்றை விதி 110-ன்கீழ் மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களின் அனுமதியோடு, இந்த மாமன்றத்தில் வெளியிடுவதை என் வாழ்வில் கிடைத்தற்கரிய நல்வாய்ப்பாக எண்ணி மகிழ்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி)

தந்தை பெரியார் அவர்களைப் பற்றி முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் எழுதிய கவிதை வரிகள் சிலவற்றை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.  

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, 

வங்கத்துத் தாகூர் போல் தாடியுண்டு

பொங்குற்ற வேங்கை போல்

நிமிர்கின்ற பார்வை உண்டு


செங்குன்றத் தோற்றம் உடலில் உண்டு

வெண் சங்கொத்த கண்களிலே

விழியிரண்டும் கருவண்டு

அதில் சாகும்வரை ஒளி உண்டு!

பம்பரமும் ஓய்வுபெறும் சுற்றியபின் 

இவரோ, படுகிழமாய்ப் போன பின்னும்

பம்பரமாய்ச் சுற்றி வந்தார்; (மேசையைத் தட்டும் ஒலி)

எரிமலையாய்ச் சுடுதழலாய்

இயற்கைக் கூத்தாய்

எதிர்ப்புகளை நடுங்கவைக்கும் இடி ஒலியாய்

இன உணர்வுத் தீப்பந்தப் பேரொளியாய்

இழிவுகளைத் தீர்த்துக்கட்டும் கொடுவாளாய்

இறைவனுக்கே மறுப்புச் சொன்ன இங்கர்சாலாய்

எப்போதும் பேசுகின்ற ஏதென்ஸ் நகர் சாக்ரடீசாய்

ஏன் என்று கேட்பதிலே வைரநெஞ்ச வால்டேராய்

எம்தந்தை பெரியாரும் வாழ்ந்திட்டார்.

இவை முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களைப் பற்றி எழுதிய கவிதை வரிகள்.

தி.மு.க. ஆட்சியே தந்தை பெரியாருக்குக் காணிக்கை

திராவிட முன்னேற்றக் கழகம் முதன்முறையாக, 1967 ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோது, ‘இந்த ஆட்சியே தந்தை பெரியாருக்குக் காணிக்கை’ என்றார்  பேரறிஞர் அண்ணா.  (மேசையைத் தட்டும் ஒலி) உடனடியாக பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் முதலானோர், திருச்சி சென்று பெரியாரைத்தான் முதன்முதலில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்கள். இப்போது ஆறாவது முறை ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கும் திராவிட முன்னேற்றக் கழக அரசும், இப்போது தந்தை பெரியார் காட்டிய சமூக முன்னேற்றப் பாதையில்தான் பயணிக்கிறது.  

“ஈ.வெ.இராமசாமி என்கிற நான், திராவிட சமுதாயத்தைத் திருத்தி, உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப் போல, மானமும், அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டை மேற்போட்டுக் கொண்டு, அதே பணியாய் இருப்பவன்.  இதைச் செய்ய எனக்கு யோக்கியதை இருக்கிறதோ, இல்லையோ, இந்த நாட்டில் அந்தப் பணியைச் செய்ய யாரும் வராததினால், நான் அதை மேற்போட்டுக் கொண்டு, தொண்டாற்றி  வருகிறேன்” என்று அறிவித்து, 95 வயது வரை, இந்த நாட்டுக்காகவும், இந்த நாட்டு மக்களுக்காக சமூகநீதியை நிலைநிறுத்திடவும் அவர் நடத்திய சுயமரியாதைப்  போராட்டங்கள் பற்பல.  அவற்றில் மிக முக்கியமான போராட்டம்தான் வைக்கம் போராட்டம். 

சமூக சீர்திருத்த வரலாற்றில் முக்கிய இடம்!

1924-1925 ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்த வைக்கம் போராட்டம் என்பது, இந்தியாவின் சமூக சீர்திருத்த வரலாற்றில் முக்கிய இடம் பெற்றது; இந்தியாவின் கோயில் நுழைவுப் போராட்டங்கள் அனைத்திற்கும் முன்னோடியாகத் திகழ்ந்தது; ஒடுக்கப்பட்டவர்கள் சமத்துவ உரிமையைப் பெறுவதில் முதற்படியாக அமைந்தது என்று சொன்னால், அது மிகையல்ல. 

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், வைக்கத்தில் உள்ள மகாதேவர் கோயிலைச் சுற்றிலும் அமைந்துள்ள தெருக்களில், ஒடுக்கப்பட்டவர்கள் நடப்பதற்கு இருந்த தடைகளை நீக்கக் கோரி நடந்ததுதான் வைக்கம் போராட்டம்.  1924 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30 ஆம் நாள், கேரளத் தலைவர் டி.கே.மாதவன் அவர்களால் தொடங்கப்பட்டது அந்தப் போராட்டம்.  அந்தப் போராட்டம் தொடங்கிய சில நாட்களிலேயே, அதே பகுதியைச் சேர்ந்த முக்கியமான காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டார்கள். தலைவர்கள் இன்றி போராட்டம் தவித்தது. இந்தச் சூழலில், கேரளத் தலைவர்களின் அழைப்பின் பேரில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக அப்போது இருந்த தந்தை பெரியார் அவர்கள், வைக்கம் சென்று, அந்தப் போராட்டத்திற்குத் தலைமை ஏற்றார். பல நாட்கள் அங்கு தங்கியிருந்து போராட்டத்தை ஒருங்கிணைத்தார். வெகுமக்களிடம் அந்தப் போராட்டம் குறித்து பரப்புரை செய்து, போராட்டத்தை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். போராட்டக் காலத்தில் இரண்டு முறை பெரியார் கைது செய்யப்பட்டார்.  முதல்முறை, ‘அருவிக் குட்டி’ என்ற ஊரின் காவல் நிலையச் சிறையில், ஒருமாத காலம் சிறை தண்டனை அனுபவித்தார். இரண்டாம் முறை வழங்கப்பட்ட நான்குமாதக் கடுங்காவல் தண்டனையை, திருவனந்தபுரம் சிறையில் கழித்தார். மற்றவர்கள் அனைவரும் அரசியல் கைதிகள் போல நடத்தப்பட்டார்கள். ஆனால் தந்தை பெரியார் அவர்களின் கையிலும், காலிலும் விலங்கு போடப்பட்டு, கழுத்தில் மரப்பட்டை அணிவிக்கப்பட்டு வைக்கப்பட்டு இருந்தார்.  சாதாரண கைதியைப் போலவே தந்தை பெரியார் நடத்தப்பட்டார். 

சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதும், உடனே திரும்பாமல், வைக்கம் சென்று மீண்டும் போராடினார் தந்தை பெரியார்.  வைக்கம் போராட்டத்தில் ஈடுபட்டு 74 நாட்கள் சிறையில் இருந்தார்; 67 நாட்கள் அங்கேயே தங்கி போராடினார்; மக்களைத் திரட்டினார்.  ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேல் நடைபெற்ற வைக்கம் போராட்டம், 1925 நவம்பர் 23 ஆம் நாள் முடிவுக்கு வந்தது. 1925 நவம்பர் 29 ஆம் நாள் பெரியார் தலைமையில் வைக்கத்தில் வெற்றி விழாவும் நடைபெற்றது. ‘வைக்கம் வீரர்’ என்று பெரியாரைப் பாராட்டினார் ‘தமிழ்த் தென்றல்’ திரு.வி.க. அவர்கள்.  'திருவனந்தபுரம் சிறையில் இருக்கும் தீரரைத் தமிழ்நாடு பாராட்டுகிறது' என்று சுதேசமித்திரன் இதழில் எழுதினார் மூதறிஞர் ராஜாஜி அவர்கள்.

போராட்டக்காரர்களுக்கும், மன்னருக்குமான பேச்சுவார்த்தையை நடத்திய அண்ணல் காந்தியடிகள் அவர்கள், தந்தை பெரியாரையே உடன் அழைத்துச் சென்றார்.  கோயில் தெருவில் அனைவரும் நடக்கலாம் என்ற உரிமையைப் பெற்றுத்தந்த வெற்றி விழாவுக்கு, தந்தை பெரியாரும், நாகம்மையாரும் அழைக்கப்பட்டார்கள்.  1929 ஆம் ஆண்டு மகர் போராட்டத்தைத் தொடங்கிய அண்ணல் அம்பேத்கர் அவர்கள், தனக்கு ஊக்கமளித்த போராட்டமாக வைக்கம் போராட்டத்தையே குறிப்பிடுகிறார்.  இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க வைக்கம் போராட்டம் நடந்து 100 ஆண்டுகள் ஆகின்றன.  இன்று வரையில் வைக்கம் போராட்டம் என்பது சமூகநீதி வரலாற்றில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்!

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, எளிய மக்களுக்காக எல்லைகளைக் கடந்து போராடி, வரலாற்றில் இத்தகைய புரட்சிகளை நிகழ்த்தி வெற்றி கண்ட தந்தை பெரியார் அவர்களின் நினைவைப் போற்றவும், சமூகநீதிக் கருத்துகளைத் தொடர்ந்து வலியுறுத்தவும், “வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா” நிகழ்ச்சிகளை, தமிழ்நாடு அரசு சிறப்பாக நடத்தத் திட்டமிட்டுள்ளது என்பதை இந்த மாமன்றத்தில் அறிவிப்பதில் உண்மையிலேயே நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.   (மேசையைத் தட்டும் ஒலி)

ஒரு சீர்திருத்த இயக்கம், அரசியல் பரிணாமம் பெற்று, ஆட்சியைப் பிடித்து,  பேசிய கொள்கைகளை நிறைவேற்றும் சட்டங்களை இயற்றும் தகுதியை அடைந்தது, இந்திய அரசியல் வரலாற்றில் திராவிட இயக்கத்துக்குக் கிடைத்திருக்கக்கூடிய மிகப் பெரிய  பெருமை.  அத்தகைய பெருமைமிகு திராவிட மாடல் ஆட்சி நடந்து கொண்டு இருக்கும்போது, வைக்கம் நூற்றாண்டு விழா வருவது பொருத்தமான ஒன்று.    சாதாரண இராமசாமியாக இருந்தவர் தந்தை பெரியாராக வளரக் காரணமான போராட்டக் களம் அது.  அத்தகைய சமூக சீர்திருத்த நோக்கம் கொண்டவர்களாக இன்றைய இளைய சமுதாயம் திகழ, இதுபோன்ற கடந்தகால வரலாறுகளை நாம் நினைவூட்டிக் கொண்டே இருக்க வேண்டும்.

பெரியார் தமிழ்நாட்டுக்கு மட்டும் 

சொந்தமானவர் அல்ல!

பெரியார் என்பவர், தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் மட்டும் சொந்தமானவர் அல்ல; அவர் மொழி கடந்தவர்; நாடு கடந்தவர் என்பதை அவரது கருத்துகளின், செயல்களின் மூலம் நிரூபித்துக் காட்டியவர்.  சுயமரியாதை, பகுத்தறிவு, சமதர்மம், சமூகநீதி, இன உரிமை ஆகியவை உலகளாவிய கொள்கைகள்.  நேற்றைய கிளர்ச்சிக்கும், இன்றைய  முயற்சிக்கும், நாளைய வளர்ச்சிக்கும் அடிப்படையானவை தந்தை பெரியாரின் கருத்தியல்கள்.  அத்தகைய சுயமரியாதைச் சமதர்மப் பாதையில் நமது திராவிட மாடல் அரசு தொடர்ந்து செயல்படும் என்பதைத் தெரிவித்து, அமைகிறேன்.  (மேசையைத் தட்டும் ஒலி)

-இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

முதலமைச்சரின் அறிவிப்பை வரவேற்ற 

அனைத்துக் கட்சியினர்!

வைக்கம் அறப்போராட்ட நூற்றாண்டு விழா முதலமைச்சர் அறிவிப்புக்கு சட்டப்பேரவையில் அனைத்துக் கட்சியினர் வரவேற்பு.

வைக்கம் அறப்போராட்ட நூற்றாண்டு விழா தமிழ்நாடு அரசு சார்பில் கொண்டாடப்படுவது குறித்து சட்டமன்றத்தில் இன்று (30.3.2023) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சட்டமன்ற விதி 110இன்கீழ் அறிவிப்பு வெளியிட்டு பேசியதை வரவேற்று தி.வேல்முருகன் (தவாக), ஈ.ஆர்.ஈசுவரன் (கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி), பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா (மமக), சதன்திருமலைக்குமார் (மதிமுக), இராமச்சந்திரன் (சிபிஅய்), நாகை மாலிக் (சிபிஎம்), சிந்தனைசெல்வன் (விசிக), நயினார் நாகேந்திரன் (பாஜக), கோ.க.மணி (பாமக). ஒ.பன்னீர்செல்வம் (மேனாள் முதலமைச்சர்), ப.தனபால் (அதிமுக), செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் வழிமொழிந்து நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்து உரையாற்றினர்.