மணியம்மையார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மணியம்மையார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 22 ஜூலை, 2024

அன்னையாரின் தியாக வாழ்க்கை – தன் நிலை விளக்கம்

 



ஞாயிறு மலர்

என்னைப் பற்றி சில வார்த்தைகள் பெருமைக்காகவோ, அகம்பாவத்திற்காகவோ இவை என்று எடுத்துக் கொள்ளாமல் அய்யாவின் தொண்டு புரிவதே வாழ்நாள் இலட்சியம் என்று ஒப்படைத்த ஒரு சிறிய ‘ஜீவனின் உள்ளக்கிடக்கை என்பதாக நமது தோழர்கள் நினைத்தால்தான் நான் சொல்வதின் உண்மை நன்கு புரிய முடியும்.

தந்தை பெரியார் அவர்களிடம் நான் வந்து அடைந்தது எந்தவிதமான பலனை எதிர்பார்த்தோ, பணத்திற்கு ஆசைப்பட்டோ, பெருமை, ஆடம்பர, உல்லாச வாழ்வு வாழ்வதற்கோ, என் குடும்ப முன்னேற்றம் கருதியோ அல்லது வேறு எந்தவிதமான பலனையும் லாபத்தையும் எதிர்பார்த்தோ வந்தவளல்ல, அல்லவே அல்ல!

என் குடும்பத்தைப் பொறுத்தவரையில் பெரும் பணக்காரத் தன்மையில் இல்லை என்றாலும், போதிய கவுரவமும் – மதிப்பும் கொண்ட நடுத்தர நிலையில், கஷ்டம் இன்னதென்று தெரிந்துகொள்ள முடியாத தன்மையில் இருந்து வந்ததுதான். வாழ்க்கைக்குப் போதிய வசதியான அளவிற்கு ஏதோ கொஞ்சம் இருந்தாலும் மனக்குறை இல்லாது, மற்றவர்களின் ஆதரவையும் எதிர்பார்க்காது வாழத் தகுதியுடைய நிலையில் இருந்ததுதான். சிறுவயது முதல் என் தந்தையாரால் சுயமரியாதை கருத்துபட வளர்க்கப்பட்டு தந்தை பெரியார் அவர்கள் அடிக்கடி எங்கள் இல்லத்தில் தங்குவதில் அவரோடு பழகி, அவரது கருத்துக்களாலும் கொள்கையாலும் கவரப்பட்டதால், என் தந்தையார் மறைவுக்குப் பிறகு நான் ஒரு திடமான முடிவுக்கு வந்து அய்யா அவர்களின் தொண்டுக்கு நம்மால் ஆனதை செய்யலாம் என்ற முடிவுக்கு வந்து, இயக்கத்தில் தீவிரப் பணிபுரியச் சேர்ந்தவளே தவிர வேறில்லை. 1948லிருந்து என்னை அறிந்தவர்களுக்கு நன்கு தெரியும் – அன்று முதல் இன்று வரை என் செயல்கள். நடவடிக்கைகள், வாழுகின்ற முறைகள், அய்யா மறைவிற்குப் பிறகும், என் போக்கு. தன்மை – இவைகளெல்லாம் எப்படிப்பட்டவை என்று என்னைப் பொறுத்தவரையில் என்றும் ஒளிவு மறைவு இல்லாத ஒரே சீரான தன்மையில் தான் இருந்து வருகிறேன். எந்தவிதமான புதிய மாற்றங்களுக்கும் அவசியமில்லை என்பதையும் உணருகிறேன்.

தந்தை பெரியார் அவர்கள் தனது இயக்க இலட்சியங்கள் – கருத்துக்கள். பணிகள் தொடர்ந்து நடைபெறவேண்டும் என்பதற்காக செய்துள்ள ஏற்பாடுகள். நாட்டு மக்களிடத்தில் அவர் கொண்டுள்ள உண்மையான அன்பின் பிடிப்பையும் ஆழத்தையும் பிரதிபலிக்கிறது தனக்கென என்று ஒன்றும் வைத்துக் கொள்ளாமல் பொது நன்மைக்கே. பயன்படும் வகையில் தக்க முறையில் ஏற்பாடு செய்து தனக்குப் பின்னால் பயனுறும் வகையில் செய்துள்ள அந்நற்செயல் மற்ற எவரும் சாதாரணமாய் நினைத்துப்பார்க்கவே முடியாத ஒன்றாகும். அப்படிப்பட்ட தன்னலமற்ற தியாகமும் அன்பு உள்ளமும் கொண்ட ஒரு உத்தமரின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு வாழ்நாள் முழுவதும் பணிபுரிய வந்த என்னை சில ஆண்டுகளுக்குப் பிறகு இயக்கத்திற்காக ஒரு ஏற்பாடு என்ற கவலையினால் தனது வாழ்க்கைத் துணைவி என்று. எதிர்ப்பு ஏளனம் இவற்றைப் பொருட்படுத்தாமல் அறிவித்தார்கள்.
சில சமயங்களில் சுபாவ குணத்தால் எனக்கும் பிடிவாதம், அர்த்தமற்ற கோபம் இவைகளால் ஏற்படுகிற தொல்லைகளை எல்லாம் அன்போடு சகித்து, அவர் சகித்து அரவணைத்து ஏற்றுக்கொண்டு, தனது மனநிலைக்கு ஒத்தவாறு என்னையும் மாற்றி அமைத்துப் பக்குவமான நிலையை அடையச் செய்தார்கள்.
அவர்களது காலத்திற்குப் பிறகு எனக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கருதி எனக்குத் தெரியாமல் சில ஏற்பாடுகளைச் செய்து வைத்திருந்தது பல ஆண்டுகள் கழித்தே எனக்குத் தெரிய வந்தது.

அந்த ஏற்பாட்டின்படி எனக்குத் தனிப்பட்ட வாழ்வுக்கென ஏற்பாடு செய்யப்பட்ட, கிடைத்துள்ள சொத்துக்களையும், அதன் மூலம் வரும் வருமானங்களையும், அய்யா அவர்கள் காட்டிய வழியிலேயே அய்யா அவர்களைப் போன்றே, பொது மக்களுக்கே உபயோகப்படும் தன்மையில், நான் நல்ல வண்ணம் சிந்தித்து ஒரு ஏற்பாட்டினைச் செய்வது என்ற திடமான முடிவுக்கு வந்து, சென்ற 1974ஆம் ஆண்டு செப்டம்பர் 24ஆம் சேதி “Periyar Maniammal Educational and Charitable Society” என்ற பெயரால் ஒரு அறக்கட்டளை (Trust) ஏற்படுத்தி தக்கபடி. முறையாக. சட்டரீதியாக அதற்குச் செய்யவேண்டிய காரியங்களைச் செய்து முடித்து விட்டேன்.
தலைவர் பெரியார் அவர்கள் பிறந்த வீட்டை. (அது எனக்கே உரியதாய் சட்டப்படி இருந்தபோதிலும்) என்றென்றும் அவர் வீடாகவே’ வைத்திருக்க ஒரு அரிய வாய்ப்பு ஏற்பட்டது.

சென்ற ஆண்டு சென்னையில் நடைபெற்ற அய்யா அவர்களது 96ஆவது பிறந்தநாள் விழாவின் போது, தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர். ஈரோட்டில் அய்யா அவர்கள் பிறந்த இல்லத்தை தமிழ்நாடு அரசுக்கு அளிக்கும்படியும், அதை அரசு சார்பான நினைவுச் சின்னமாக நிறுவ தமது அரசு முடிவு செய்துள்ளது என்றும் அறிவித்து கேட்டுக் கொண்டதே அவ்வாய்ப்பாகும். அந்த மேடையிலே நான். நமது முதலமைச்சர் அவர்களிடம் அந்த வீட்டை ஒப்படைப்பதாக அறிவித்தேன்.
நமது தமிழ்நாடு அரசு அதை ஏற்றுக்கொண்டு, தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் அவர்களால் அய்யா நினைவுச் சின்னமாக அழகுபடச் செய்யப்பட்டு, மக்கள் பார்த்து மகிழும் வண்ணம், காலம் உள்ள அளவு நிலைத்து நிற்கும்படியான அரும் பெரும் ஏற்பாடுகளை எல்லாம் செய்து இருக்கிறார்கள். பொதுமக்கள் பார்வைக்கு அய்யா அவர்களின் பிறந்த நாளில் திறந்து வைக்கப்படுகிறது.

(‘விடுதலை’ – 23.9.1975)

அன்னையாரின் தலைமை தாங்கும் ஆளுமைக்கு ஓர் எடுத்துக்காட்டு


 தந்தை பெரியார் அறிவித்த ஜாதி ஒழிப்பு போராட்டமான அரசமைப்புச் சட்ட எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு திருச்சி சிறையிலிருந்த பட்டுக்கோட்டை இராமசாமி, மணல்மேடு வெள்ளைச்சாமி ஆகிய இரு கழக வீரர்கள் உணவுக் கோளாறு, அதிக ரத்தவயிற்றுப் போக்கினால் சரியான சிகிச்சை அளிக்காததால் மாண்டனர். அவர்களை காவல் துறையினர் சிறைக்கு உள்ளேயே புதைத்து விட்டனர். அவர்களது உறவினர்களுக்குக் கூட உடல்களை தரவில்லை! இந்தச் செய்தி அறிந்த மணியம்மையார் அவர்கள் கொதித்தார். அவசரமாக திருச்சி செல்ல முயன்றோம்.

நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்கள் பிளைமவுத் கார் வைத்திருந்தார். அவரும் வந்தார். அவருடைய காரில் அம்மாவும், நானும் உடனே திருச்சி சென்றோம். அம்மா இதனை அறிந்தவுடன் எப்படியும் இதற்கு பரிகாரம் தேடிட உடனே முனைந்தார். அதே காரில் சென்னை திரும்பி, மருத்துவமனையிலிருந்த அய்யாவை சந்தித்தார். அய்யா ஆணைப்படி, அன்றைய முதலமைச்சர் காமராசரை அவரது இல்லத்தில் நேரே சந்தித்து “இது தர்மமா? இறந்த எங்கள் தோழர்களின் உடல்களைக் கூட எங்களிடம் ஒப்படைக் காமல் உள்ளேயே அனாதைப் பிணங் களைப்போல் புதைத்து விடுவதா?” என்றெல்லாம் கொதித்துக் கேட்டவுடன், அவர் மிகவும் அதிர்ச்சியுடன், “அம்மா! நான் உடனே தவறை சரிப்படுத்தச் சொல்கிறேன், சங்கடப்படாதீர்கள்” என்று சமாதானம் சொன்னார். அம்மா திருச்சி திரும்புவதற்கு முன் பெரியார் மாளிகை முன் பெரிய கூட்டம். அவர்களை நானும் மற்ற இயக்கத் தோழர்களும் சமாதானப்படுத்தி வைத்திருந்தோம்.

சிறை அதிகாரிகள் பெரியார் மாளிகைக்கு வந்து ‘இருவர் உடலையும் வாங்கிக் கொள்ளுங்கள்‘ என்றார்கள். நாங்கள் அவர்களது உறவினர்களை அழைத்துச் சென்று வாங்கி வந்து பெரியார் மாளிகையில் மரியாதை செலுத்தும் வகையில் பார்வைக்கு வைத்திருந்தோம். அம்மா சென்னையிலிருந்து திரும்பிய பின்பே இறுதி ஊர்வலம்; அடக்கம் என்றோம். புதைக்கப்பட்ட அவ்விருவரது உடல்கள் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு, சிறை அதிகாரிகளால் எங்களிடம் ஒப்படைக்கப்பட்டது! சிறை நிர்வாகத்தின் இச்செயலைக் கண்டித்து கழகத் தோழர்கள், பொதுமக்கள் ஆத்திரம் கொப்பளிக்க அலை அலையாய் பெரியார் மாளிகை முன்பு சேர்ந்து கொண்டேயிருந்தனர்.
காவல் துறை அதிகாரிகளுக்கு நிலைமை கட்டுக்கடங்காது சென்று விடுமோ என்ற அச்சம் உலுக்கியதால், அவர்கள் உடனே உடல்களை எடுத்துப் பக்கத்தில் உள்ள இடுகாட்டில் அடக்கம் செய்து விடுங்கள் என்று, வழக்குரைஞர் வேதாச்சலனாருக்கு வற்புறுத்தலைத் தந்தனர். அவரும் தலை அசைத்து காவல் துறையினரின் குரலாகிவிட்டார். கழக தோழர்களோ உடன்படவில்லை. நானும் மற்ற தோழர்களும், பிடிவாதமாக அம்மா திரும்பி வந்த பிறகே இறுதி ஊர்வலம்.

அதுவும் காவிரிக் கரை சுடுகாட்டு மைதானம் வரை ஊர்வலம் நகர் முழுவதும் செல்லும் என்றோம். ஒரே பரபரப்பு. கொந்தளிப்பு. அம்மா வருவதற்குள் வேதாச்சலனாரின் நெருக்கடி வற்புறுத்தலால் ஊர்வலம் புறப்பட்டு திருச்சி தில்லை நகர் திருப்பம் வரும் போது அம்மா வந்துவிட்டார். எனக்கு நிம்மதி பெருமூச்சு. கடமை இனி அவருடையது. அவரது தலைமையில் ஊர்வலம் மிகப் பிரமாண்டமாக காந்தி நகர் மார்க்கெட் வழியே பெரிய கடைவீதி வழிச் செல்ல முயன்ற போது தலைமை காவல் அதிகாரி உட்பட வந்து தடுத்தனர். அம்மாவோ இசையவில்லை. ‘அனைவரும் அப்படியே உட்காருங்கள்’ என்றார். அதைக்கண்டு காவல் துறையினர் நெருங்கி அவர்களைத் தடுக்காமல் விட்டுவிட்டனர். இறுதி ஊர்வலம் நேரே சுடுகாட்டினை அடைந்தது. பல லட்சக்கணக்கான மக்கள் ஜாதி ஒழிப்பு வீரர்களுக்கு சாலையில், -கடை வீதியில், இருமருங்கிலும் நின்று மரியாதை செலுத்தினர்.
அது திருச்சி வரலாற்றில் ஒரு குறிப்பிட்டதொரு மனித உரிமைப் போராட்ட நிகழ்ச்சி. அன்னை மணியம்மையார் எப்படிப்பட்ட வீராங்கனை என்பதை உலகறியக்கூடிய வாய்ப்பும் தலைமை தாங்கக்கூடிய தனித்தகுதியும் அவருக்கு உண்டு என்பதை இக்கட்டான அந்த நிலைமையை சமாளித்த விதமே காட்டியது.


ஆசிரியர் கி.வீரமணி,
அய்யாவின் அடிச்சுவட்டில், பாகம் – 1

அம்மாவின் கண்டிப்பான கவனிப்பு

 



அய்யாவை எவ்வளவு பொறுப்பாக அம்மா அவர்கள் கவனித்துக் கொண்டார்கள் என்பதற்கு ‘வடமேற்குடியான்’ என்பவர் 1974இல் ‘உண்மை’ ஏட்டில் எழுதியுள்ள இந்தத் தகவல்கள் சான்றாகின்றன.

“சுமார் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் ஒரு முறை திருவாரூர் பொதுக் கூட்டத்திற்குப் பெரியார் வந்திருக்கிறார். அவருக்கு உடல்நிலை சரியில்லை. வயிற்றுக் கோளாறு. இதையறியாத நண்பர்கள் உப்புமா தருகிறார்கள். பெரியாரும் வேண்டாமெனச் சொல்ல மனமின்றி அள்ளி வாயில் போடுகிறார். அதைப் பார்த்துவிட்டு மணியம்மையார் ஓடிவந்து வாயில் போட்டதைத் துப்பும்படி கெஞ்சுகிறார். அய்யா குழந்தையைப் போல் அடம் பிடிக்கிறார். அம்மா தாய் போல் கடிந்து கொள்கிறார். அவர் துப்பும் வரை விடவில்லை. பிறகு மருத்துவர் சொன்னபடி சூடான பானம் கொண்டு வந்து கொடுக்கிறார்.”

இது போலப் பெரியாரைக் கண்காணித்து வந்த அன்னையார் கழகத் தொண்டர்கள், அய்யாவை எவ்வாறு ‘அய்யா’ என்றோ ‘தந்தை பெரியார்’ என்றோ குறிப்பிடுகிறார்களோ அதுபோலவே அம்மாவும் அய்யா அவர்கள், பெரியார் அவர்கள் என்றே குறிப்பிட்டார். என் கணவர் என்று எப்போதாயினும் தவிர்க்கவியலாத சூழ்நிலையில் தான் குறிப்பிட்டிருப்பார்.

அம்மா குறித்து ‘நெஞ்சுக்கு நீதி’யில் கலைஞர்


தி.மு.க. செயற்குழுக் கூட்டத்தை, பொருளாளர் பேராசிரியர் முன்னின்று கூட்டி விட்டார். பொறுப்புகளிலிருந்து விலகிய நானும், நாவலரும் அந்த செயற்குழுக் கூட்டத்தில் முதலில் கலந்து கொள்ளவில்லை. என்னையும் நாவலரையும் கலந்து பேசச் செய்திடும் முயற்சிகள் திராவிடர் கழகத் தலைவர் அன்னை மணியம்மையார் அவர்களாலும், தளபதி வீரமணி அவர்களாலும் எடுக்கப்பட்டு பெரியார் திடலில் நாங்கள் இருவரும் கலந்து பேசினோம்.

இளமைக் காலந்தொட்டு இலட்சியப் பிணைப்பால் ஆழமாக வேரூன்றி இருந்த நட்பு எங்கள் இருவரையும் கண்ணீர் வடிக்கச் செய்தது. பேராசிரியர் அவர்கள் மற்றும் தி.மு.க. மூத்த தலைவர்களான மன்னை நாராயணசாமி, அன்பில் தர்மலிங்கம், சி.வி.எம்.அண்ணாமலை ஆகியோர் அன்று மேற்கொண்ட மிகச் சிரமமான பணி வெற்றி அளித்து, நானும் நாவலரும் செயற்குழுக் கூட்டத்திற்குச் சென்றோம். எங்களின் பதவி விலகல்களை திரும்பப் பெற வேண்டுமெனச் செயற்குழு தீர்மானம் நிறைவேற்றியது. செயற்குழு முடிவை அறியவும், எங்கள் அறிவிப்பைக் கேட்கவும். சென்னை அரசினர் தோட்டம் சட்டமன்ற தி.மு.க. அலுவலகத்திற்கு முன்னால் பல்லாயிரம் பேர் திரண்டு இருந்தனர். அந்தக் கூட்டத்தின் மத்தியில் ஒரு மேசையைத் தூக்கிப் போட்டு அதில் ஏறி நின்று நானும், நாவலரும் பேசினோம்.

(‘நெஞ்சுக்கு நீதி’ கலைஞர் மு.கருணாநிதி மூன்றாம் பாகம் – பக்கம் 91 )

அம்மா குறித்து அண்ணா கூறினார்


 “அய்யாவைக் கடந்த முப்பது ஆண்டுகளாகக்

கட்டிக் காத்து அவரை நோயின்றி
உடல் நலத்தோடு பாதுகாத்து
வரும் பெருமை அந்த அம்மாவைச் சாரும்”
இவ்வாறு சொல்வதன் காரணத்தையும் அண்ணா கூறுகிறார் இங்கே:
“அய்யா அவர்களுக்கு ஒரு வயிற்று வலி மிகவும் தொடர்ந்து இருந்தது. மணியம்மையாரின் பத்திய உணவு, பாதுகாப்புதான் அய்யாவை அதிலிருந்து விடுவித்தது மட்டுமல்லாது அய்யா அவர்கள் இவ்வளவு ஆற்றல் பெற்று வாழவும் வைத்திருக்கிறது.”
“அய்யா அவர்களிடம் நான் வந்து சேர்ந்தபோது இப்போது எனக்கு எனன் வயதோ அதே வயதுதான் அப்போது அய்யாவுக்கு – இப்போது எனது உடலில் என்னென்ன கோளாறுகள் உள்ளதோ அதையும்விட அதிகமான கோளாறுகள் அய்யாவுக்கு இருந்தன.

உலகில் “நாத்திக இயக்கத்தை தலைமையேற்று நடத்திய முதல் பெண்” – அன்னை மணியம்மையார்



                                                                       முனைவர்

                                                          அதிரடி க.அன்பழகன்

மாநில அமைப்பாளர்,
கிராமப் பிரச்சாரக்குழு, திராவிடர் கழகம்

தொன்மைத் திராவிடர் இனத்தின் உயர் நாகரிகமும் – உன்னத வாழ்வியலும் – ஏற்றமிகு பண்பாடும் – எழுச்சிமிகு சிறப்புகளும் சீர்கெடக் காரணமான ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பை எதிர்கொண்டு, களங்கண்டு, போராட உதித்த திராவிடர் இயக்கத்தின் உயிர்க்காற்றாய் – ஒப்பற்ற இலட்சியக் கொள்கையின் ஊற்றாய் தோன்றிய தந்தை பெரியாரின் கொள்கை வழிநின்று – அய்யாவின் நிழலாக பணியாற்றி – அய்யாவிற்குப் பின் அவரிடத்தை தலைமை ஏற்று நடத்திய திராவிடர் இயக்கத்தின் தாய் அன்னை மணியம்மையரின் 105ஆம் ஆண்டு பிறந்த நாள் 10.3.2024.

நூற்றாண்டு கண்ட இயக்கமாம் திராவிடர் இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான அன்னை மணியம்மையார் நூற்றாண்டு கடந்து 105ஆவது பிறந்த நாள் காண்கிறார்.
வேலூரில் தந்தை பெரியாரின் பெருந்தொண்டர் திரு.கனகசபை – பத்மாவதி ஆகியோரின் மகளான காந்திமதி என்ற பெண்தான் பின்னாளில் கே.அரசியல் மணி என்றும், கே.ஏ.மணி என்றும் அழைக்கப்பட்டார். திரு.கனகசபை அவர்களின் குடும்ப நண்பர் “அண்ணல் தங்கோ” அவர்கள்தான் இவருக்கு பெயர் மாற்றம் செய்தார்.
தநதை பெரியார் தனக்கு உதவியாளராக பணியாற்ற – உடல் நலம் மற்றும் கழகப் பணிகளை கவனிக்க ஒருவர் முழு நேரப் பணியாளராக தேவைப்படுகிறார் என்ற செய்தியறிந்த கழகத் தொண்டர் கனகசபை தனது மூத்த மகள் மணியம்மையாரை (கே.அரசியல் மணி) பெரியாரிடம் ஒப்படைத்தார்.

தந்தை பெரியார் தனது இயக்கத்தின் எதிர்காலப் பணி சிறப்புடன் தொய்வின்றி நடைபெற – தனது சொத்துகளை அறக்கட்டளையாக்கி அதன் வழி இயக்கம் இலக்கு நோக்கி இயங்கிடச் செய்ய விரும்பினார். தனது வாழ்விணையர் நாகம்மையாரும் – அவர்களுக்குப் பிறந்த பெண் மகவும் மறைவுற்ற சூழலில், அன்னை மணியம்மையாரை தனது சட்டப்படியான வாரிசாக்கி – அதன் மூலம் தனது சொத்துகள் யாவையும் இரத்த உறவு சொந்தங்களுக்குச் சேராமல் பாதுகாத்து இயக்கச் சொத்தாக்கினார். இலட்சியப் பணிக்கு சொந்தமாக்கினார்.
திருமணம் என்ற ஏற்பாட்டால் நடைபெற்ற இக்காரியம் ஒரு இயக்கத்தின் தொடர் பணிக்கு வித்தானது. ஆனால், அன்னை மணியம்மையார் மிகப் பெரும் இழிவுப் பட்டங்களை சுமந்திட இடமானது. அவையனைத்தையும் தாங்கிக் கொண்டு தான் ஏற்றுக் கொண்ட தத்துவத்தின் தலைவருக்கு – திராவிடர் இனம் மானமும் அறிவும் பெற போராடும் ஒரு புரட்சியாளர்க்கு பணி செய்யும் வாய்ப்பும் – அவரது பேரியக்கத்திற்கு காப்பாளராக இருக்க தனக்குக் கிடைத்திட்ட மிகப் பெரும் பொறுப்பும் பெருமைக்குரியது என்றெண்ணி பணி தொடர்ந்தார்.
தந்தை பெரியாரை காப்பதில் ஈன்ற தாயாகவும் – நலம் பயப்பதில் செவிலித் தாயாகவும் ஈடற்ற தொண்டு செய்து தொண்டின் சிகரமாக விளங்கினார் அன்னை மணியம்மையார்.
தாய் – தந்தை இல்லாத நிர்க்கதியாய் விடப்பட்ட குழந்தைகளை எடுத்து வளர்த்து ஆளாக்கி – அறிவூட்டி வாழ்வில் ஒளி பெற குழந்தைகள் காப்பகம் உருவாக்கி அய்யாவின் மனித நேயத் தொண்டிற்கு மகுடம் சூட்டினார். தொண்டறத்தின் உச்சந் தொட்டார்.

அய்யாவின் மறைவிற்குப் பிறகு இயக்கத்திற்கு தலைமை ஏற்கும் பெரும் பொறுப்பேற்றார். அய்யாவின் வேண்டுகோளை ஏற்று இயக்கம் காக்க “திருமணம் என்ற ஏற்பாட்டிற்கு” தன்னை ஒப்படைத்திட்ட அன்னை – அய்யாவின் மறைவிற்குப் பிறகு இயக்கத்திற்கு தலைமையேற்று காக்கும் அரணாகவும் – இயக்கத் தொண்டர்களை இயக்கிடும் ஈடில்லாத் தலைமையாகவும் விளங்கினார்.

அம்மா தலைமையேற்ற காலத்தின் அளவு சில ஆண்டுகள்தான் என்றாலும் – வரலாற்றுச் சிறப்புமிக்க களங்கள் கண்ட காலமாக இயக்க வரலாற்றில் நிற்கிறது.
ஆரியக் கூட்டம் இராமலீலா எனும் பேரால் திராவிடப் பேரரசர் இராவணன் மற்றும் கும்பகர்ணன் முதலானோர் உருவப் பொம்மைகளை தீயிட்டுக் கொளுத்திடும் கொடுமை கண்டு கொதித்தெழுந்த அன்னை மணியம்மையார் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் – பெரியார் திடலில் இராவண லீலாவை நடத்தி இராமன். இலட்சுமணன் முதலானோர் உருவப் பொம்மைகளை தீயிட்டுக் கொளுத்தி – இனமானம் காத்திடும் களமாடி – இந்திய ஒன்றியத்தின் இரத்த ஓட்டத்தையே நிறுத்திக் காட்டிய பேராற்றல் மிக்க வீராங்கனை அன்னை மணியம்மையார் ஆவார்.

அய்யா உயிருடன் வாழ்ந்த காலத்தில் 1957இல் ஜாதியை ஒழிக்க – ஜாதியை அங்கீகரிக்கும் அரசியல் சட்டப் பிரிவை கொளுத்திட பெரியார் ஆணையிட்ட போர்க்களத்தில் கலந்துகொண்டு சிறையேகி சிறையிலேயே மறைந்திட்ட பட்டுக்கோட்டை இராமசாமி – மணல்மேடு வெள்ளைச்சாமி ஆகியோரின் புதைக்கப்பட்ட உடல்களை போராடிப் பெற்று திருச்சி மாநகரில் மிகப் பெரும் வீர வணக்கப் பேரணி நடத்தி, இந்தியாவையே திணறடித்த வீராங்கனை அன்னை மணியம்மையார்.
அய்யா மறைவிற்குப் பின் தன் பெயரிலிருந்த பெரியார் கொடுத்திட்ட விவசாய நிலங்களை விற்று – அறக்கட்டளையில் சேர்த்து – தஞ்சையில் இயங்கிடும் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி தொடங்கிட காரணமானவர்தான் நம் அன்னை மணியம்மையார். அதன் நீட்சியாகத்தான் நமது இயக்கத்தின் அறப்பணி – கல்விப்பணி பல்கலைக்கழகமாக இன்று ஓங்கி வளர்ந்து உயர்கல்வியில் உயர்ந்து நிற்கிறது.

தந்தை பெரியாரின் பெரும்பணியை தன் அரும்பணியால் சிறக்கச் செய்த – பெரியாரை பல்லாண்டு காலம் வாழச் செய்த பேராற்றல் கொண்ட வீராங்கனை அன்னை மணியம்மையாரின் 105ஆம் பிறந்த நாளில், பெரியார் வழி நடந்திட்ட அவரது தொண்டறம் வென்றிட சூளுரைப்போம்.

அன்னை மணியம்மையாரும் – கஸ்தூரிபா காந்தியும் – கோரா

 



காந்தியாரின் இந்திய விடுதலைப் போராட்ட வாழ்க்கையில் கணிசமான பங்கு வகித்தவர்கல்தூரிபா காந்தி என்பதை வலியுறுத்தும் புத்தகம் ஒன்று வெளிவந்துள்ளது. ‘கஸ்தூரிபாவின் வாழ்க்கை’ என்ற தலைப்பிலான இந்த ஆங்கிலப் புத்தகத்தை தென்னாப்பிரிக்காவில் பிறந்த அவரது பெயரன் அருண்காந்தி என்பவர் எழுதியுள்ளார். 295 ரூபாய் விலையுள்ள ‘பெங்குவின்’ இந்தியா வெளியிட்டுள்ள இப்புத்தகம் குறித்த அதுல் சதுர்வேதி என்பவரின் அறிமுகக் கட்டுரையை ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளேடு 30.7.2000 ஞாயிறு சிறப்பிதழில் வெளியிட்டுள்ளது.

வரலாறு போற்றும் பெருமகன்களின் வெற்றிக்குப் பின்னணியாக அவர்தம் துணைவியர் இருந்தாலும். இன்னாரின் துணைவி இவர், இவர்களுக்கு இத்தனை பிள்ளைகள் என்பது தவிர வேறு எந்தக் குறிப்பும் இடம் பெறுவதில்லை. பண்டித நேருகூட இதற்கு விதி விலக்கல்ல என்று குறிப்பிடும் கட்டுரையாசிரியர்.

தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்தபோது அந்த நாட்டு மக்கள் பார்சி இனத்தவரை மட்டுமே நாகரிகமானவர்களாகக் கருதினர் என்பதற்காக பார்சி பாணியில் உடையணிந்தது – இன வேற்றுமையை எதிர்த்து கணவரது கட்டளைப்படி சிறைச்சாலை ஏகியது – தீண்டத் தகாதாருடன் அமர்ந்து உணவருந்தியது – சம்பாரனில் காந்தியாருடன் இணைந்து மக்களிடையே சேவையாற்றியது – 1918இல் கைரா எனும் கிராமத்திலுள்ள பெண்களுக்கு சத்தியாகிரகத்தின் தத்துவங்களை எடுத்துரைத்தது – கூட்டங்களில் பேசி நிதி திரட்டியது – பிற்படுத்தப்பட்ட இனமான ராணிபராஜ் சமுதாயத்தினரின் இரண்டாவது மாநாட்டுக்குத் தலைமை ஏற்று அவர்களை குடிப் பழக்கத்தை விட்டொழிக்க வைத்து – கதர் நூற்பை ஏற்க வைத்தது.
1930இல் அரசியல் சீர்திருத்தங்களுக்கான ராஜ்கோட் சத்தியாகிரகத்தில் பங்கேற்றது. 1942 ஆகஸ்ட் 9ஆம் தேதி, கைதாகி விட்டதால் உரை நிகழ்த்த முடியாமல் போன காந்தியாருக்குப் பதிலாக, பொதுக் கூட்டமொன்றுக்குச் செல்லும்போது தானும் கைதானது. இரண்டாண்டுகளுக்குப் பின்னர் புனே நகரில் காவலில் இருந்தபோது முடிவடைந்தது – போன்ற செய்திகள் அப்புத்தகத்தில் இடம் பெற்று நீண்ட காலப் புறக் கணிப்புக்குப் பின்னர் கடைசியாக கஸ்தூரிபாவுக்குத் தரப்பட வேண்டிய அங்கீகாரம் அவரது பெயரனாலேயே தரப்பட்டு விட்டது என கட்டுரையாளர் முத்தாய்ப்பு வைத்திருக்கிறார்.

கஸ்தூரிபா காந்திக்குக் கிடைத்துள்ள மிக மிகக் காலந்தாழ்த்த அங்கீகாரத்தைப் பார்க்கும்போது அறிவுலக ஆசான் – இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற மனிதநேயக்காரர் தந்தை பெரியார் பெண்ணுலகுக்கும் பெண்ணுரிமைக்கும் தந்த முக்கியத்துவமும், பெண்தான் ஒரு குடும்பத்திற்கும். ஒரு சமுதாயத்திற்கும், ஏன் ஓர் இயக்கத்துக்கும் தலைமை தாங்க ஏற்றவர் என்பதை தன் வாழ்நாளிலேயே உலகுக்கு எடுத்துக் காட்டியவர் என்பதை அறிய, பெரியார் தொண்டர்களாகிய நமது உள்ளங்களெல்லாம் பூரிக்கிறது.
கள்ளுக்கடை மறியல் – ஒத்துழையாமை இயக்கம் இரண்டையும் நிறுத்துங்கள் என காங்கிரசார் கோரிக்கை வைத்தபோது அது என் கையில் இல்லை – தமிழ்நாட்டில் உள்ள இரண்டு பெண்மணிகள் (நாகம்மையாரும் கண்ணம்மையாரும்) இடம்தான் உள்ளது என்று பதிலளித்தவர் காந்தியார். அதுவும் 1920களிலேயே.
அய்யாவுக்குப் பின், கழகத்தைத் தலைமையேற்று வழிநடத்தியவர் மணியம்மையார் அல்லவா? அதுவும் 1975, தொடக்கம் 1978ஆம் ஆண்டு முடிய உள்ள இடைப்பட்ட காலத்தில் அம்மா அவர்கள் அவசர நிலையைச் சந்தித்தார்கள். ‘இராவண லீலா’ நடத்தி வடபுலத்தை அலற வைத்தார்கள்.

1973 டிசம்பர் 24ஆம் தேதி அய்யா மறைவுக்குப் பின்னர் கழகத் தலைமைப் பொறுப்பு ஏற்பு.

1974 – டிசம்பர் 25ஆம் நாள் சென்னை பெரியார். திடலில் ‘இராவண லீலா’ நடத்தி கைது – கழக சார்பில் வழக்குத் தொடுக்கப்பட்டது.

1976 செப்டம்பர் 9ஆம் நாள் இராவண லீலா வழக்கில் அம்மாவுக்கும் தோழர்களுக்கும் ஆறு மாத சிறை. அதே ஆண்டில் செப்டம்பர் 16ஆம் நாள் பெரியார் பிறந்த நாள் விழாவிற்கு முதல் நாள், திடீரென்று கைது செய்யப்பட்டு, இரண்டு நாள் கழித்து விடுதலை.

1977 ஏப்ரல் 25ஆம் நாள் இராவண லீலா வழக்கில் அம்மாவுக்கும் தோழர்களுக்கும் விடுதலை.
அதே ஆண்டு அக்டோபர் 30 அன்று தமிழ்நாடு வந்த மேனாள் பிரதமர் இந்திரா காந்திக்குக் கருப்புக்கொடி காட்டியதற்காகக் கைது.

1978 மார்ச் மாதம் 16ஆம் நாள் மாரடைப்பு நோயால் முடிவு என அன்னை மணியம்மையார் அவர்களின் போராட்ட வரலாறு தமிழ்நாட்டுப் பத்திரிகைகளால் பதிவு செய்யப்பட்டு, தமிழ்நாட்டு மக்களால் பரவலாக நன்கறியப்பட்ட செய்திகளாகும்.

தன் வாழ்நாளிலும் தனது காலத்துக்குப் பிறகும் பெண்களுக்கு உரிய இடத்தைக் கொடுத்த பெருமை தந்தை பெரியார் ஒருவருக்குத்தான் உண்டு!

திங்கள், 8 ஜூலை, 2024

அரசியல் மணி என்னும் அணையா விளக்கு!

 

அன்னை மணியம்மையார் நூற்றாண்டு தொடக்க சிறப்புக் கட்டுரை : 

ஏப்ரல் 16-30 2019

சுகுணா திவாகர்

தமிழக அரசியல் வரலாற்றை எழுதும் யாராலும் தவிர்க்க முடியாத பெயர் மணியம்மை. தி.மு.க என்னும் அரசியல் கட்சி உருவாகக் காரணமாக இருந்தவர், தமிழகத்தில் முதன்முதலாக ஓர் இயக்கத்துக்குத் தலைமை தாங்கிய பெண், உலகளவில் ஒரு நாத்திக இயக்கத்துக்குத் தலைமை தாங்கிய பெண் என்னும் சிறப்புகள் மணியம்மைக்கு உண்டு. இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க மணியம்மையின் நூற்றாண்டு விழா இந்த ஆண்டு தொடங்குகிறது.

1920, மார்ச் 10-இல் வேலூரில் கனகசபை _- பத்மாவதி தம்பதிக்குப் பிறந்தவர் காந்திமதி. கனகசபையும், பத்மாவதியும் பெரியாரின் கொள்கைகளில் பற்று கொண்டவர்கள். கனகசபையின் நண்பர், தனித்தமிழ் ஆர்வலர் கு.மு.அண்ணல்தங்கோ காந்திமதிக்கு ‘அரசியல் மணி’ என்னும் பெயரைச் சூட்டினார். கே.அரசியல்மணி என்பது கே.ஏ.மணி என்றாகி, ‘மணியம்மையார்’ என்று காலத்தில் நிலைத்தது. 1943-இல் அரசியல்மணியின் தந்தை இறந்தார். ஒரு மாதத்திலேயே இயக்கப்பணிகளில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டார் மணியம்மை.

பேச்சாளராக, கட்டுரையாளராக, போராட்டங்களில் பங்கெடுப்பவராக மணியம்மையின் இயக்க வாழ்க்கை அமைந்தது. திராவிடர் கழகக் கொடியின் தத்துவம், பெண்ணுரிமை, அண்ணல் அம்பேத்கர் என்று பல விஷயங்கள் குறித்துப் பேசியிருக்கிறார் மணியம்மை. சமஸ்தானங்கள் தொடங்கி சித்தர் பாடல்கள் வரையிலான பல விஷயங்கள் குறித்துக் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். ‘கந்தபுராணமும் இராமாயணமும் ஒன்றே’ என்னும் அவரது கட்டுரையின் முதல் பாகம் 1944-இலும், இரண்டாம் பாகம் 1947-இலும், ‘குடிஅரசு’ இதழில் வெளியாகி, பிறகு சிறு வெளியீடாகவும் வெளியானது. கந்தபுராணம், இராமாயணம் என்னும் இரு புராணங்களுக்கு இடையிலான ஒற்றுமைகளைப் பட்டியலிட்டு, கந்தபுராணத்தைப் பார்த்து எழுதப்பட்டதே கம்பராமாயணம் என்ற கருத்தை முன்வைத்தார் மணியம்மை. 1946-இல் ‘விடுதலை’ இதழின் அச்சிடுபவர் மற்றும் வெளியிடுபவராக மணியம்மை, பெரியாரால் நியமிக்கப்பட்டார். ‘விடுதலை’ இதழில் வெளியான தலையங்கம் மற்றும் கட்டுரைகளுக்காகப் பலமுறை நீதிமன்ற நடவடிக்கைகளுக்கும் உள்ளானார்.

1948-இல் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்தபோது கும்பகோணத்தில் கைதானார். ‘உங்கள் மதம் என்ன?’ என்ற நீதிபதியின் கேள்விக்கு ‘எனக்கு மதம் கிடையாது’ என்றும் ‘உங்கள் சாதி என்ன?’ என்ற கேள்விக்கு ‘திராவிடச் சாதி’ என்றும் பதிலளித்து, சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார். பிராமணாள் கபேவுக்கு எதிரான போராட்டத்திலும் கைதானார். இப்படித் தொடர்ச்சியாக இயங்கிவந்த மணியம்மையாரின் முக்கியமான பணிகள் பெரியார் உடல்நலத்தைப் பேணுவதும், அவர் பேச்சுகளைக் குறிப்பெடுத்து ‘விடுதலை’யில் வெளியிடுவதும். பெரியாரின் பெரும்பாலான புத்தகங்கள் அவர் மேடைப் பேச்சுகளைத் தொகுத்து வெளியிடப்பட்டவையே. அந்த வகையில் மணியம்மையாரின் இந்தப் பணி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.

பெரியாரைப் பொறுத்தவரை ஜாதி, மதம், கடவுள், மொழிப்பற்று, நாட்டுப்பற்று என்று எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லாமல் வாழ்ந்ததைப் போலவே, உணவுக் கட்டுப்பாடும் இல்லாமல் வாழ்ந்தார். வாழ்நாளின் இறுதிவரை மாமிச உணவை அவர் கைவிடவில்லை. தொண்டர்கள் கொடுக்கும் உணவை ஆசையாகச் சாப்பிட்டுவிட்டு, பிறகு அவதிப்படுவார். அவர் மனம் இளைஞனுக்குரிய வேகத்துடனும், சுதந்திர உணர்வுடனும் இருந்ததே தவிர, அவரது உடல், மூப்பையும், இயலாமையையும் நினைவுபடுத்திக் கொண்டேயிருந்தது. அப்படிப்பட்ட பெரியாரைக் கண்டிப்புடனும் கரிசனத்துடனும் பேணிவந்தார் மணியம்மை.

பெரியாரின் பழைய காங்கிரஸ் நண்பர் கோவை அய்யாமுத்து ஒருமுறை ரயிலில் கண்டு அவருக்கு பிரியாணி, மட்டன் சாப்ஸ், ஆம்லேட் எல்லாம் வாங்கித் தந்துவிடுகிறார். பிறகு அதை அறிந்த மணியம்மை பெரியாரைக் கண்டிக்கிறார். இரவு ரயில் பயணத்தில் பெரியாரும், மணியம்மையும் வெவ்வேறு ரயில் பெட்டிகளில் பயணித்தாலும் ஒவ்வொரு ஸ்டேஷனிலும் ரயில் நிற்கும்போதெல்லாம் ‘பெரியார் எந்தப் பிரச்சினையுமின்றித் தூங்கிக் கொண்டிருக்கிறாரா?’ என்பதை மணியம்மை வந்து வந்து பார்த்ததைக் கோவை அய்யாமுத்து, தன் ‘நான் கண்ட பெரியார்’ நூலில் பதிவுசெய்கிறார்.

பெரியாரைப் பொறுத்தவரை, அவருடைய பணிகள், அவரே சொன்னதைப்போல ‘செங்குத்தான மலையில் தலைகீழாக ஏறுவதைப் போன்றது’. பொதுமக்கள் ஆதரவு இருக்காது; பொதுப் புத்திக்கு எதிரான கருத்துகளைச் சொல்ல வேண்டியிருக்கும்; அரசு நெருக்கடி இருக்கும்; அடிப்படைக் கொள்கைகளுக்காக நிலைப்பாடுகளை மாற்றி, பொதுவெளியில் விமர் சனத்துக்குள்ளாக நேரிடும். இவற்றையெல்லாம் புரிந்து வைத்திருந்த பெரியார், தன் காலத்துக்குப் பின், தன் சாதி ஒழிப்பு, சுயமரியாதை, பகுத்தறிவுப் பணிகள் தொடர வலிமையான பொருளியல் அடித்தளம் அவசியம் என்று கருதினார். பிறப்பிலேயே பணக்காரராக இருந்தாலும் மாலை அணிவிக்க, புகைப்படம் எடுக்க பொதுமக்களிடம் பணம் வசூலித்து, சிறுகச் சிறுகச் செல்வம் சேர்த்தார். தனக்குப் பிறகு இயக்கப் பணிகளுக்காகச் சேர்த்த சொத்தைக் காப்பாற்றுவதற்கு நம்பிக்கையான ஒருவர் வேண்டும் என்று நினைத்தார்.

அந்தக் காலகட்டத்தில் பெண் குழந்தைகளுக்குச் சொத்துரிமை கிடையாது என்பதால் மணியம்மையைத் தத்து எடுத்து சொத்துகளுக்கு வாரிசு ஆக்க முடியாது. எனவே சட்ட நிர்பந்தத்தின் அடிப்படையில் பெரியார் மணியம்மையைத் திருமணம் செய்து கொண்டார். ‘இது சட்ட ஏற்பாடுதானே தவிர, வழக்கமான நடைமுறையில் உள்ள பொருளின் படியான திருமணம் அல்ல. மணியம்மை வாழ்நாள் அடிமையும் அல்ல’ என்றார் பெரியார். ஆனால் ‘இது பொருந்தாத் திருமணம்’ என்று திராவிடர் கழகத்திலேயே எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன. ஏற்கெனவே கறுப்புச் சட்டை அணிவது, சுதந்திர நாள் துக்க நாளா, இன்பநாளா என்னும் முரண்பாடு, தேர்தல் அரசியலில் ஆர்வம் ஆகியவற்றால் பெரியாருடன் முரண்பட்ட அண்ணா, மணியம்மை திருமணத்தை முன்னிட்டு திராவிடர் கழகத்திலிருந்து வெளியேறி தி.மு.க.வை உருவாக்கினார். உண்மையில் பெரியார் திருமணம் செய்யாமல் இருந்திருந்தால் மணியம்மை திருமணம் செய்திருப்பாரா என்பதே கேள்விக்குறிதான். 18 வயதுக்குள்ளாகவே பெண்களுக்குத் திருமணம் நடக்கும் அக்கால கட்டத்தில் 30 வயது வரை திருமணம் செய்யாமல் இயக்கப் பணிகளில் ஈடுபட்டு வந்தார் மணியம்மை. பெரியார், மணியம்மையைத் திருமணம் செய்தது சரியா, தவறா என்பதைவிட, பெரியார் மணியம்மைமீது அளவுகடந்த நம்பிக்கை வைத்திருந்தார் என்பது உண்மை.

தலைவரின் மனைவி என்பதற்காக அவருக்குத் தனிச் சலுகைகள் ஏதும் தரப் படவில்லை. பெரியார் மேடையில் பேசிக் கொண்டிருப்பார். மணியம்மை மேடைக்கு எதிரில் தரையில் கோணிப்பை விரித்து, புத்தகங்கள் விற்றுக்கொண்டிருப்பார். ‘பெரியாருக்கு மாலைகள் குவியல் குவியலாய் வரும். ஒரு மாலையையும் அவர் மணியம்மைக்கு அணிவிக்கச் சொல்லவுமில்லை. மணியம்மையும் அதை எதிர்பார்த்ததில்லை. ஏதுமற்ற வேலைக்காரிபோல் சுவடி விற்றுக் கொண்டிருந்தார்’ என்று உணர்வுபூர்வமாகப் பதிவு செய்கிறார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.

1957-இல் பெரியார் அரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தை அறிவித்தார். ஆயிரக்கணக்கான தோழர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். பெரியாரும் சிறையில்.  மணல்மேடு வெள்ளைச்சாமி, பட்டுக் கோட்டை ராமசாமி  என்னும் இரு தோழர்கள் சிறையிலேயே மரணமடைந்து அங்கேயே புதைக்கப்பட்டனர். வெளியிலிருந்த மணியம்மை அப்போதைய முதல்வர் காமராசர், உள்துறை அமைச்சர் பக்தவச்சலத்திடம் பேசி புதைக்கப்பட்ட சடலங்களைத் தோண்டியெடுத்து, ஊர்வலமாகக் கொண்டு சென்று அந்தப் போராளிகளின் தியாகத்துக்கு உரிய மரியாதை செய்தார். 1967-இல் பம்பாயில் சிவசேனாவால் தமிழர்கள் தாக்கப்பட்டபோது, பெரியார் சிவசேனை எதிர்ப்புக்குழுவை உருவாக்கினார். அதில் மணியம்மையும் ஓர் உறுப்பினர்.

வரலாறு மாறியது. 1967-இல் ஆட்சியைப் பிடித்த பிறகு தி.மு.க-வுக்கும், பெரியாருக்கு மிடையில் நெருக்கம் ஏற்பட்டது. எந்த அண்ணா மணியம்மை திருமணத்தை விமர்சித்தாரோ, அதே அண்ணாவே, ‘அய்யாவை முப்பது ஆண்டுகள் பேணிப் பராமரித்துக் காப்பாற்றியவர் மணியம்மை’ என்று புகழாரம் சூட்டினார். அண்ணாவின் தளபதியான கலைஞருக்கு சென்னையில் சிலை வைத்தவரும் மணியம்மைதான். கலைஞர் முதல்வரான போது ஈரோட்டில் இருந்த பெரியாரின் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற விரும்பினார். அரசு எடுத்துக்கொள்ள அந்த இல்லத்தைக் கொடுத்த மணியம்மை, அதற்கு ‘தந்தை பெரியார் – அண்ணா நினைவகம்‘ என்றே பெயர் சூட்டினார். அந்த இல்லத்தில்தான் அண்ணா ‘விடுதலை’யின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றினார்.

1973-இல் பெரியார் மறைவுக்குப் பின் திராவிடர் கழகத்தின் தலைவரான மணியம்மைதான், தமிழகத்தின் முதல் பெண் தலைமை என்று சொல்லலாம். ‘ராமாயணம் ஆரிய-திராவிடப் போராட்டம்’ என்பது திராவிடர் இயக்கத்தின் கருத்து. ‘வடநாட்டில் ராமலீலா நடத்தி நம்மை இழிவு படுத்துகிறார்கள். நாம் ராவணலீலா நடத்த வேண்டும்‘ என்று 50களின் இறுதியிலேயே பேசினார் பெரியார். 1974-இல் ராவணலீலா நடத்தி பெரியாரின் எண்ணத்தை நிறைவேற்றினார் மணியம்மை. இந்திராகாந்தி அரசு நெருக்கடி நிலையைக் கொண்டுவந்தபோது இந்தியா முழுவதும் சமூக, ஜனநாயக இயக்கங்கள் நெருக்கடிக்கு உள்ளானதைப் போல திராவிடர் கழகமும் பல சோதனைகளுக்குள்ளானது. நடிகவேள் எம்.ஆர்.ராதா, கி.வீரமணி உள்ளிட்ட இயக்கத்தவர்கள்  சிறைப்படுத்தப்பட்டனர். பெரியார் திடலில் இருந்த எம்.ஆர்.ராதா மன்றம், வெளிநிகழ்ச்சிகளுக்கு வாடகைக்கு விடுவதற்குத் தடை விதிக்கப்பட்டது. ‘விடுதலை’யில் தந்தை பெரியார் என்று குறிப்பிடக் கூடாது என்று  நிபந்தனை விதிக்கப்பட்டது. ‘நாங்கள் அரசியல் கட்சியல்ல, சமுதாய இயக்கம்‘ என்று அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் பிரம்மானந்த ரெட்டியைச் சந்தித்துப் பேசினார் மணியம்மை. ஆனால் ‘தி.மு.க-வை ஆதரிக்கமாட்டேன் என்று தெரிவிக்க வேண்டும்’ என்று விதிக்கப்பட்ட நிபந்தனையை ஏற்க மறுத்தார் மணியம்மை. நெருக்கடி நிலையை அறிவித்த இந்திராகாந்தி தமிழகம் வந்தபோது கறுப்புக்கொடிப் போராட்டத்தை அறிவித்துக் கைதானார்.

பெரியாரை 95 ஆண்டுகள் வரை வாழ்வதற்குப் பேணிப் பராமரித்து வந்த மணியம்மை 60 ஆண்டுகளைக்கூட முழுமை செய்யவில்லை. 1978, மார்ச் 16 அன்று மரணமடைந்தார். அதே ஆண்டு செப்டம்பர் 17-ஆம் நாள் பெரியாரின் நூற்றாண்டு விழா தொடங்கியது. ஆனால் அதைக் காண்பதற்குள் மணியம்மையார் மறைந்துவிட்டார்.

இன்றும்கூடப் பொதுவாழ்க்கையில், அரசியல் கட்சிகளில் பெண்கள் தலைமைப் பொறுப்புக்கு வருவதற்கு எத்தனையோ நெருக்கடிகளை, அவதூறுகளைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. ஆனால் எதிர்ப்புகளை மட்டுமே தொடர்ச்சியாகச் சந்திக்கும் ஒரு சமுதாய இயக்கத்துக்குத் தலைமைப் பொறுப்பில் இருந்து போராளியாய் விளங்கிய மணியம்மை, உண்மையிலேயே மாற்று அரசியல் மணிதான்.

நன்றி: ‘ஆனந்த விகடன்’ 27.3.2019

வியாழன், 4 ஜூலை, 2024

தியாகமே வடிவான திராவிடத்தாய் நூற்றாண்டு நிறைவு விழா!

 

முகப்புக் கட்டுரை : தியாகமே வடிவான திராவிடத்தாய் நூற்றாண்டு நிறைவு விழா!

மார்ச் 1-15, 2020

மஞ்சை வசந்தன்

திராவிட இயக்கத்தின் மாபெரும் தலைவர் தந்தை பெரியாரின் வாழ்வே அர்ப்பணிப்பு வாழ்வு! அவருக்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்தவர் அன்னை மணியம்மையார் அவர்கள்.

சராசரி பெண்ணின் கனவுகள் கற்பனைகளை-யெல்லாம் புறந்தள்ளி, உலகின் மாபெரும் தலைவர் தந்தை பெரியார் அவர்களுக்கு உற்ற துணையாய், பெற்றதாயினும் உற்ற தாயாய், பணிப் பெண்ணாய், தந்தை பெரியாருக்குப் பின் இயக்கத்துக்கு தலைமை-யேற்ற தலைவராய், தனக்குப் பின்னும் சரியான தலைவரை இந்த இயக்கத்திற்கு அளித்த தொலைநோக்குடைய ஆற்றலாளராய். இந்தியா சந்தித்த அவசர நிலை காலத்தில் அஞ்சாது, அயராது, நெஞ்சு நிமிர்த்தி இயக்கம் நடத்தி, இயக்கம் காத்து, இந்தியாவே அதிர்ந்து பார்க்க இராவணலீலா நடத்திய சுயமரியாதைச் சுடரொளியாய், இனமானம் காத்த இணையில்லா பெண்மணியாய் சரித்திரத்தில் சாதனைப் பதிவுகளைச் செய்தவர் அன்னை மணியம்மையார் அவர்கள்.

பெரியாருடன் சந்திப்பு

வேலூரைச் சேர்ந்த கனகசபை என்னும் ‘பெருந்தகையார்’ பெரியாரின் நல்ல நண்பர்களில் ஒருவர். இவருக்கும் பத்மாவதி அம்மையாருக்கும் மகளாக 1920ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10ஆம் நாள் பிறந்தவர்தான் மணியம்மையார். பெற்றோர் இட்ட பெயர் காந்திமதி. தனித்தமிழ் ஆர்வலர் கு.மு.அண்ணல் தங்கோ காந்திமதி என்னும் பெயரை, அரசியல்மணி என்று மாற்றம் செய்தார்.

அம்மையாரின் தந்தை கனகசபை பெரியாருக்கு நலம் விசாரித்து கடிதம் எழுதுவது உண்டு. ஒருமுறை பெரியாரிடம் இருந்து பதில் கடிதம் வந்தது. “எல்லோரும் தூர இருந்தபடி உடம்பை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளுங்கள் என்கிறார்கள். ஆனால், கூட இருந்து உதவி செய்ய யாருமில்லை. என்னமோ என் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறேன்’’ என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இதனைப் படித்த கனகசபை துடித்துப் போனார்.

அதன் விளைவு 1943ஆம் ஆண்டு முதல் அம்மையார், பெரியாரின் அணுக்கச் செயலாளராக, தொண்டராகப் பணியாற்றத் தொடங்கினார். ஏற்கெனவே பெரியாரின் கொள்கைகளாலும் பேராட்டம் நிறைந்த வாழ்க்கையாலும் ஈர்க்கப்பட்ட அவர் இந்தப் பணியினை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டார்.

பெரியார் மற்றும் இயக்கம் தொடர்பான வரவு _ செலவுக் கணக்குகளை கவனித்துக் கொள்வது, பெரியாரின் சொற்பொழிவுகளுக்குத் தேவையான குறிப்புகளை எடுத்துத் தருவது, பெரியாரின் சொற்பொழிவுகளைக் குறிப்பெடுப்பது, கூட்டங்களில் புத்தகங்கள் விற்பது – இதுதான் அம்மையாரின் பிரதான பணியாக இருந்தது.

இளம் வயதில் முதியவர்க்குத் தாயானவர்

பெரியாருக்கு உடல் நலம் குன்றியபோது, உணவு அளிப்பது, சரியான நேரத்தில் மருந்து மாத்திரைகளைக் கொடுப்பது போன்ற பணிகளைச் செய்தார். இதுபற்றி பின்னாளில் மணியம்மையார்,

“அவர் தொண்டுக்கு முழுக்க, முழுக்க என்னை ஆளாக்கி, அவர் நலத்தை கண்ணெனப் பாதுகாக்க ஒரு தாயாக என்னைப் பாவித்துக் கொண்டு, அவரை ஒரு சிறு குழந்தையாகவே மனதில் நிறுத்தி அந்தக் குழந்தைக்கு ஊறு நேராவண்ணம் பாதுகாப்பதிலேயே மகிழ்ச்சி கொண்டேன்” என்று குறிப்பிட்டார்கள்.

இளம்வயதில் ஒரு முதியவருக்குத் தாயானது அம்மையாரைத் தவிர, வேறு யாராக இருக்க முடியும்?

பெரியாருக்கு உதவியாளர் என்கிற வட்டத்துக்குள் நின்று விடாமல் மிகச்சிறந்த சொற்பொழிவாளராக, எழுத்தாளராக அம்மையார் விளங்கினார். நாகம்மையாருக்குப் பிறகு பெரியாருக்குப் பின்னால் பெண்களைத் திரட்டுவதில் பெரும்பங்கு கொண்டார். 1944ஆம் ஆண்டு ‘குடிஅரசு’ ஏட்டில் “இரண்டும் ஒன்றே’’ என்னும் தலைப்பில் கந்த புராண இராமாயண ஆராய்ச்சிக் கட்டுரை எழுதினார்.

மேலும், நாட்டு நடப்புகள் குறித்த தனது கருத்துகளை அவ்வப்போது “குடிஅரசு’’வில் வெளியிட்டு வந்தார். 1948ஆம் ஆண்டு மொழி உரிமைப் போர் நடந்தது. கும்பகோணத்தில் நடந்த போராட்டத்துக்கு அம்மையார் தலைமை தாங்கினார். தடையை மீறியதாகக் கைது செய்யப்பட்ட அம்மையார் பாபநாசம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் வேலூர் சிறையில் மூன்று மாதம் தண்டனை அனுபவித்தார். 1949ஆம் ஆண்டு சென்னையில் இந்தி எதிர்ப்பு மறியலை தலைமை தாங்கி நடத்தினார்.

பெரியார்-மணியம்மையார் திருமணம்

இதே ஆண்டில் ஜூலை 9ஆம் நாள் தந்தை பெரியார் மணியம்மையாரை பதிவுத் திருமணம் செய்துகொண்டார். இதுவரை அரசியல்மணி என்று அழைக்கப்பட்ட அம்மையாரை ஈ.வெ.ரா. மணியம்மை என்று பெயர் மாற்றினார் பெரியார்.

பெரியார், மணியம்மையாரைத் திருமணம் செய்து கொண்டது நாடு முழுவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. விமர்சனங்கள் எழுந்தன. பெரியார் எதிர்ப்பாளர்கள் இதனைக் கொச்சைப்படுத்தி எழுதியும், பேசியும் வந்தனர். ஆனால், பெரியார் இதைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. தான் எடுத்த முடிவில் மிகத் தெளிவாக இருந்தார். தனது திருமணம் பற்றி அவர் இப்படிக் கூறினார்.

“மனைவி வேண்டும் என்பதற்காக நான் திருமணம் செய்து கொள்ளவில்லை. இயக்க நலனை பொதுத் தொண்டைக் கருதி எனக்கொரு துணை வேண்டு மென்று என்னுடைய பாதுகாப்புக்காக, என்னுடைய வசதியை உத்தேசித்து, ஒரு ஸ்திரீயை சட்டப்படி எனக்கு உதவியாளராக, உற்ற நண்பராக இருக்க வசதி செய்துகொள்கிறேன்” என்றார்.

சில காலத்திற்குள் விமர்சனங்களும், சர்ச்சைகளும் ஓய்ந்து மறைந்து போயின.

திருமணத்திற்குப் பிறகு அம்மையார் தீவிர இயக்கப் பணியில் ஈடுபடத் தொடங்கினார். 1954ஆம் ஆண்டு பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் ஆயுள் செயலாளராக பெரியாரால் நியமிக்கப்பட்டார். அதோடு ‘விடுதலை’ இதழின் பதிப்பாசிரியராகவும்,  வெளியீட்டாளராகவும் பணியாற்றினார்.

1958ஆம் ஆண்டு “இளந்தமிழா புறப்படு போருக்கு’’ என்ற கட்டுரையைப் பிரசுரித்ததற்காக, அரசு வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கில் மணியம்மையாருக்கு பதிப்பாசிரியர் என்கிற வகையில் 100 ரூபாய் அபராதம் விதித்தது நீதிமன்றம். ஆனால், அம்மையார் அபராதத்தை கட்ட மறுத்து 15 நாள் சிறைத் தண்டனை அனுபவித்து, தான் ஒரு சிறந்த தன்மானமிக்க பத்திரிகையாசிரியர் என்பதை நிரூபித்தார்.

தந்தை பெரியார் சிறையில் இருந்த காலத்தில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, இயக்கத்தை வழிநடத்தினார். பெரியார் ஜாதி ஒழிப்பு போராட்டம் நடத்தியபோது, 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அப்போது இயக்கத்தை வெளியில் இருந்து நடத்தும் பொறுப்பை பெரியார் மணியம்மையாரிடம் ஒப்படைத்திருந்தார் .

இந்தப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்த பட்டுக்கோட்டை இராமசாமி, மணல்மேடு வெள்ளைச்சாமி என்னும் இரு தோழர்கள் சிறையிலேயே வீரமரணம் அடைந்தார்கள். இதில் ஒருவர் சடலத்தைக் கொடுத்த நிருவாகம், இன்னொருவர் சடலத்தைக் கொடுக்க மறுத்தது. இதனால் கோபம் கொண்ட அம்மையார் சென்னைக்குப் புறப்பட்டுச் சென்று அப்போதைய முதல்வர் காமராசர் மற்றும் உயர் அதிகாரிகளைச் சந்தித்துப்பேசி இருவர் சடலத்தையும் பெற்றார். ஒருவர் உடலை சிறைக்குள்ளேயே புதைத்து விட்டார்கள்.

இருந்தாலும் தோண்டியெடுத்து வாங்கி பிரமாண்ட ஊர்வலம் நடத்தி நல்லடக்கம் செய்தார்.

திருச்சியில் பெரியார் கல்வி நிலையங்-களையும், மகளிர் காப்பகத்தையும் தொடங்கி அதன் நிருவாகத்தை அம்மையார் கையில் ஒப்படைத்தார். அவர் ஆற்றிய பணிகளால் இன்று அந்த நிறுவனங்கள் ஆல்போல் வளர்ந்துள்ளன. காப்பகத்தில் சேர்க்கப்பட்ட அனாதைக் குழந்தைகளின் நல்வாழ்வுக்காக அக்காலத்திலேயே ஒரு பெருந்தொகையை வங்கியில் போட்டு வைத்தார்.

தந்தை பெரியாரின் இறப்புக்குப் பின்…

1974ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 6ஆம் நாள் மணியம்மையார் திராவிடர் கழகத்தின் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். ஒரு மிகப் பெரிய சமூக சீர்திருத்த இயக்கத்துக்கே ஒரு பெண் முதல் முறையாகத் தலைமையேற்றார். “அய்யா (பெரியார்) அவர்கள் ஒவ்வொன்றிற்கும் நல்ல வழிமுறைகள், செயல் திட்டங்கள், கொள்கை விளக்கங்கள், பயிற்சிகள் நமக்கு தந்து விட்டுச் சென்றிருக்கிறார்கள். அதன் படியே ஒரு நூலிழை கூடப் பிறழாமல் இயக்கம் நடக்கும்“ என்று மணியம்மை உறுதியளித்து அதன்படியே தனது பணியினைத் தொடர்ந்தார்.

கிடப்பில் போடப்பட்டிருந்த ‘அனைவரும் அர்ச்சகராகலாம்’ என்னும் சட்டமன்றத் தீர்மானத்தை நிறைவேற்றக்கோரி, தான் தலைமைப் பொறுப்பேற்ற மூன்றே மாதத்தில் மிகப்பெரிய மறியல் போராட்டத்தை நடத்தினார். இந்தப் போராட்டத்தின் தொடர்ச்சியாக, டெல்லி வந்த மத்திய அமைச்சர் ஒய். பி. சவானுக்கு கருப்புக் கொடி காட்டினார்.

மணியம்மையாரின் புகழ் இந்தியா முழுவதும் பரவ ஒரு மிகப்பெரிய போராட்டம் காரணமாக இருந்தது. வடநாடுகளில் ‘இராவண லீலா’ என்னும் மிகப்பெரிய நிகழ்ச்சி ஒன்று ஆண்டு தோறும் நடைபெறும். இராமாயண காவியப்படி, தீயவனான இராவணனின் உருவப் பொம்மைகளை எரித்து கொண்டாடுவார்கள். இராவணன் திராவிட மன்னன், மாவீரன் என்பது திராவிடர் கழகத்தின் கருத்து. எனவே, இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்று திராவிட கழகம் கோரி வந்தது. 1974ஆம் ஆண்டு இந்த நிகழ்ச்சியில் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியும், குடியரசு தலைவர் பக்ருதின் அலி அகமதுவும் கலந்து கொள்வதாக இருந்தது. இது அம்மையாருக்குக் கோபத்தை உண்டாக்கியது. இருவரும் இதில் கலந்து கொள்ளக்கூடாது என்று கடிதம் எழுதினார். மீறிக் கலந்து கொண்டால் திராவிட மக்கள் தமிழ்நாடு முழுவதும் இராமனின் உருவப் பொம்மைகளை தீயிட்டுக் கொளுத்துவார்கள் என்று எச்சரித்தார்.

மணியம்மையாரின் கோரிக்கையை அவர்கள் நிராகரித்து விட்டனர். போராட்டம் அறிவித்த நிலையில் மணியம்மையாருக்கு உடல்நலம் குன்றியது. மருத்துவமனையில் அனுமதிக்கப்-பட்டார். இருந்தாலும் தளராத மனத்தோடு 1974ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதி இராமன், சீதை லட்சுமணன் உருவ பொம்மைக்குத் தம் கைகளாலேயே தீ மூட்டினார். தடையை மீறி இந்தப் போராட்டம் நடைபெற்றதால் அம்மையார் கைது செய்யப்பட்டார். 6 மாதம் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.

நெருக்கடி காலத்தில், ஆசிரியர் உள்பட திராவிட இயக்கத்தவர் மிசா கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்ட நேரத்தில், அன்னையார் அவர்கள், இயக்கத்திற்குத் தலைமை தாங்கி, விடுதலைக்கு தரப்பட்ட நெருக்கடியையும் சமாளித்துக் கொண்டு, இயக்கத்தைக் காப்பாற்றினார்.

உள்துறை அமைச்சராக இருந்த பிரம்மானந்த ரெட்டியாரை நெருக்கடி நிலை காலத்தில் சந்தித்தார் அன்னை மணியம்மையார்.

‘‘எதற்காக எங்கள் தோழர்களை சிறையில் வைத்திருக்கிறீர்கள்; அவர்கள் என்ன குற்றம் செய்தார்கள்? அதற்கான காரணத்தைச் சொல்லுங்கள்’’ என்று உரிமையோடு கேட்கிறார்கள். அவர்களுடைய சந்திப்பு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது.

உள்துறை அமைச்சர், ஆளுநரைப் பார்க்கிறார். அன்றைய ஆளுநராக இருந்தவர்  மோகன்லால் சுக்காடியா, இராஜஸ்தானிலிருந்து வந்தவர். ஆளுநர் அவர்கள், ‘‘திராவிடர் கழகத் தோழர்களை விடுதலை செய்வதற்கு நாங்கள் உத்தரவு போடுகிறோம். ஆனால், ஒரு நிபந்தனை; அந்த நிபந்தனைக்கு நீங்கள் கட்டுப்பட்டால், அவர்களை அடுத்த நிமிடமே விடுதலை செய்கிறோம்’’ என்று சொல்கிறார்.

‘‘என்ன, சொல்லுங்கள்?’’ என்று அம்மா அவர்கள் கேட்கிறார்.

‘‘கலைஞர் கருணாநிதி தலைமையில் இருக்கின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆதரிக்கமாட்டோம், என்று ஒரு அறிக்கை விடுங்கள்; அதுபோதும்’’ என்றார்.

உடனே அம்மா அவர்கள் சிங்கம் போன்று எழுந்தார்; ‘‘நாங்கள் கொள்கையில் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ள மாட்டோம்; எங்கள் தோழர்கள் எத்தனை ஆண்டுகாலம் வேண்டுமானாலும் சிறையிலேயே இருக்கட்டும்; அங்கேயே மடிந்து போகட்டும்; எங்களுக்கு அதைப்பற்றிக் கவலையில்லை. எடுத்த நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வது எங்களுடைய வேலையல்ல’’ என்று சொல்லி, பெரியாரின் குரலாக அந்தக் குரல் ஒலித்தது; ஒரு வீர முழக்கம் ஒலித்தது. இது பல பேருக்குத் தெரியாத செய்தி!

ஒரு மாபெரும் தலைவனின், தத்துவ ஞானியின் உடலையும், உயிரையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும், அவர் உருவாக்கிய இயக்கத்தைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும், அவரது கொள்கையைப் பரப்ப வேண்டிய பணி, அவர் தொடங்கி வைத்த சமுதாயப் பணிகளைத் தொய்வின்றி நடத்த வேண்டிய கடமை, இதுதவிர உரிமைகளுக்கான போராட்டங்கள் என்று தன் வாழ்க்கையையே போராட்டமாக அமைத்துக்கொண்ட மணியம்மையார் 1978ஆம் ஆண்டு மார்ச் 16ஆம் நாள் காலமானார்.

மணியம்மையார் தந்தை பெரியாரைக் காத்தார். அவரது இயக்கத்தைக் காத்தார். தமிழ் இனத்தைக் காத்தார். சாதாரண உதவியாளராகத் தனது வாழ்வைத் தொடங்கி ஒரு இயக்கத்தின் தலைவியாக வாழ்ந்தபோதும் தனக்கென்று அவர் எதனையும் சேர்த்து வைத்துக் கொண்டதில்லை. தந்தை பெரியார் அவருக்குத் தனிப்பட்ட முறையில் எழுதி வைத்த சொத்துகளைக் கூட அவர் இயக்கத்தின் பொதுச் சொத்தாக மாற்றினார்.

அவரது மறைவுக்குப் பின் ஒவ்வோர் ஆண்டும் அன்னையார் பிறந்த நாளில் அவரது நினைவை நாம் போற்றி அவர் பெயரால் எத்தனையோ மக்கள் நலத் தொண்டுகளைச் செய்து வந்தாலும்,  10.3.2020 அன்று நடைபெறவுள்ள நூற்றாண்டு நிறைவு விழாவும் வரலாற்றுச் சிறப்புடையது ஆகும்.

எந்த வகையிலும் பிறவிப் பேதம் என்பது அழிக்கப்படவேண்டும் என்கிற நோக்கில் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கிய தந்தை பெரியார் அவர்கள், ஜாதி ஒழிப்பை மட்டும் மய்யப்படுத்தவில்லை. அதைவிட முக்கியமாக, ஆண் எஜமானன் _- பெண் அடிமை என்னும் பிறவிப் பேதத்தையும் நீக்கவேண்டும் என்று  பாடுபட்டார்கள். அதை தன் வாழ்நாள் முழுவதும் முதன்மைப் பணியாகக் கொண்டு செயல்பட்டவர் அன்னை மணியம்மையார் அவர்கள்.

உலகத்தில் அதிகமான இகழ்ச்சி; அதிகமான ஏளனம்; மிகக் கேவலப்படுத்தப்பட்ட சொற்கள்; இவை அத்தனையும் மிகப்பெரிய இடத்தில் இருந்துகூட இவரைநோக்கி வந்ததுண்டு.  அத்தனையையும் தந்தை பெரியார் அவர்கள் எப்படி ஏற்றுச் சந்தித்தாரோ _ சாதித்தாரோ  அதைப்போல, அத்தனையையும் அன்னை மணியம்மையார் அவர்கள் ஏற்றுக்கொண்டு, சாதனை புரிந்தார்கள்.

‘‘முப்பது ஆண்டுகளுக்கு முன்னால், அய்யாவிற்கு வயிற்று வலி ஏற்பட்டது; அய்யாவினால் சரியாக உணவு உண்ண முடியாமல் சங்கடப்படுவார்; அப்படிப்பட்ட அய்யாவை இவ்வளவு காலம் காத்தவர் மணியம்மையார்’’ என்று முதலமைச்சர் அண்ணா அவர்கள், ஆசிரியர் அவர்களிடம் கூறியுள்ளார்கள்.

‘‘இனிமேல் நான் ரொம்ப நாளைக்கு இருக்கமாட்டேன்’’ என்று “விடுதலை’’யில் தந்தை பெரியார் எழுதினார். ஆனால், அதற்குப் பிறகு அய்யா அவர்கள் 50 ஆண்டுகாலம் வாழ்ந்தார். காரணம், அன்னை மணியம்மையார் அவர்கள், தன்னுடைய வாழ்வையே அய்யாவுக்காக அர்ப்பணித்தார்கள். அதன் காரணமாகத்தான், அம்மா அவர்கள் 60 வயதைத் தாண்ட முடியாமல் மறைந்து போனார்கள்.

தன் உடல் நலிவுற்ற நிலையிலும் அய்யாவைப் பாதுகாக்கவேண்டும் என்று முயற்சி எடுத்தார்களே தவிர, தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டும் என்று நினைக்காதவர் அம்மா. அது சமுதாயத்திற்காக; தனக்காக அல்ல. எந்த நோக்கத்திற்காக அவரிடம் சென்றாரோ, அது நடைபெற-வேண்டும் என்பதற்காக.

இப்படிப்பட்ட சரித்திர சாதனைக்குரிய அன்னையாரின் நூற்றாண்டு நிறைவு விழாவை சிறப்புடன் கொண்டாட ஒன்று திரள வேண்டியதும், அவரது தொண்டுப் பணியைத் தொடர வேண்டியதும் திராவிட இனத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரின் கடமையாகும். குறிப்பாக இளைய தலைமுறையின் இன்றியமையாக் கடமையாகும்!