வைக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வைக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 18 மார்ச், 2025

ஜாதிவாரியாக இல்லாமல் அனைவரும் வைக்கம் மகாதேவர் கோயிலுக்குள் ஒன்றாகப் பூஜை(அடுத்த கட்ட நகர்வு)

 

தந்தை பெரியாரின் வைக்கம் போராட்டத்தின் அடுத்த கட்ட பரிணாமம்

விடுதலை நாளேடு

இந்தியா

ஜாதிவாரியாக இல்லாமல் அனைவரும் வைக்கம் மகாதேவர் கோயிலுக்குள் ஒன்றாகப் பூஜை

கொச்சி, மார்ச் 12 வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் வகையிலும், வைக்கம் மகாதேவர் கோவிலைச் சுற்றியுள்ள பொதுவெளிகளுக்கு அனைத்து ஒடுக்கப்பட்ட சமூகத்தினரும் செல்ல தடையிருந்ததை எதிர்த்து நடைபெற்ற அறவழிப் போராட்டத்தை நினைவுகூரும் விதமாகவும், ஜாதி அமைப்புகள் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தி வரும் ‘‘வடக்கும்புரத்து பாட்டு சடங்கில்’’ ஜாதி வரிசைப்படி நடக்கும் பூஜைகளை முடிவுக்குக் கொண்டு வரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவை அனைத்து சமூகத்தினரும் ஒன்றிணைந்து எடுத்துள்ளனர்.

திருவிழாக்களின் போது, பெண்களும், சிறுமிகளும் எண்ணெய் விளக்குகள் மற்றும் பூக்களைச் சுமந்து செல்லும் ‘தலப்பொலி’ என்ற சடங்கு ஊர்வலத்திலும், நீண்ட கைப்பிடியுடன் கூடிய எண்ணெய் விளக்கைச் சுமந்து செல்லும் ‘குத்துவிளக்கு’ என்ற சடங்கு ஊர்வலத்திலும் பங்கேற்கும் உரிமையை கோவில் நிர்வாகம் ஜாதி வாரியாகப் பிரித்து வைத்தது. தற்போது வடக்கும்புரத்து பாட்டு ஏற்பாட்டுக் குழு அனைத்து ஜாதியினரையும் ஊர்வலத்தில் பங்கேற்க அனுமதிக்க முடிவு செய்துள்ளது.
கொடுங்கல்லூர் பரணி எனப்படுகின்ற நாளில் 12 நாள் திருவிழா தொடங்குகிறது. இந்த ஆண்டு, திருவிழா ஏப்ரல் 2 அன்று தொடங்கி ஏப்ரல் 13 அன்று நிறைவடையும்.

வைக்கம் மகாதேவர் கோவிலில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் கொச்சலும்மூடு கோவில் என்ற சிறிய கோவில் உள்ளது. கொடுங்கல்லூர் பகவதியின் சிலை ‘குத்துவிளக்கு’ ஏந்திய 64 பெண்களின் பெரிய ஊர்வலத்தில் மகாதேவர் கோவிலுக்கு அழைத்துச் செல்லப்படும். ஊர்வலம் கோவிலுக்குள் நுழைந்த பிறகு, பாரம்பரிய நாட்டுப்புற பாடல்களுக்கிடையே அம்மனின் உருவப்படம் தரையில் வண்ணங்களில் வரையப்படும். ஏற்ெகனவே, நாயர் சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்கு ‘குத்துவிளக்கு’ ஊர்வலத்தில் நான்கு நாள்கள் பங்கேற்க உரிமை வழங்கப்பட்டிருந்தது, மேலும் தீவரா சமூகத்திற்கு இரண்டு நாள்கள் ஒதுக்கப்பட்டிருந்தது. ஈழவர், புலையர், விஸ்வகர்மா மற்றும் வணிக வைசிய சமூகம் போன்ற சமூகங்களுக்கு தலா ஒரு நாள் ஒதுக்கப்பட்டிருந்தது.

‘‘இந்த ஆண்டு நாங்கள் அனைத்து ஜாதி அமைப்புகளையும் தொடர்பு கொண்டு, ஜாதிப் பாகுபாடின்றி அனைத்துப் பக்தர்களின் பங்கேற்பை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தி னோம். அவர்கள் ஒத்துழைக்க ஒப்புக் கொண்டனர். எனவே, 12 நாள்களிலும் அனைத்து சமூகத்தைச் சேர்ந்த பெண்களின் பங்கேற்பை உறுதி செய்ய நாங்கள் அவர்கள் அனைவருக்கும் கடிதங்கள் அனுப்பினோம்,” என்று ஏற்பாட்டுக் குழு செயலாளர் பி.சுனில் குமார் தெரிவித்துள்ளார்.


திங்கள், 16 டிசம்பர், 2024

தந்தை பெரியாரின் போராட்ட பங்களிப்பு பற்றி ஆங்கிலேய அதிகாரி (வைக்கம்)

 


விடுதலை நாளேடு
பகுத்தறிவுக் களஞ்சியம்

இந்தியாவின் பொது ஆளுநருக்குச் சென்னை மாகாணத்தில் pana (Agent to the Governor-General, Madras). இ.காட்டன் எனும் அய்சிஎஸ் அதிகாரி. அவர் சென்னை அரசாங்கத் தலைமைச் செயலருக்கு 1924 ஏப்ரல் 21இல் எழுதிய மடலில் உள்ள வரிகள்:

‘சத்தியாக்கிரக இயக்கத்திற்கு திருவாங்கூருக்கு வெளியில் உள்ளவர்களின் உதவி கிடைக்கா திருந்தால் அது வெகு நாட்களுக்கு முன்பே பிசுபிசுத்துப் போயிருக்கும். ஆனால், வைக்கம் அறப்போருக்குச் சென்னையிலிருந்து நிதியாகவும் தலைமைப் பொறுப்பு என்ற வகையிலும் கிடைத்த ஆதரவு அபரிமிதமாகவும், மனதில் படும்படியாகவும் இருந்தது. ஈவெ ராமசாமி நாயக்கரின் தலைமை இயக்கத்திற்குப் புத்துயிர் ஊட்டியது. கேரளாவிற்குப் புறப்படுவதற்கு முன் தமிழக மக்களுக்கு அவர் விடுத்த உணர்ச்சி மிக்க வேண்டுகோள் தமிழ்நாட்டு மக்களின் உள்ளங்களில் ஆழப் பதிந்தது’ பெரியாரின் அறிக்கையைத் தமது மடலில் கொடுத்துவிட்டு, மேலும் காட்டன் எழுதுகிறார்: ‘வைக்கத்தைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் திருவாங்கூரின் மற்ற இடங்களிலும் அவர் பேசியவை மக்களின் உள்ளங்களை ஆழமாகத் தொட்டன. அவருடைய தீர்க்க மான தர்க்க முறையில் அமைந்த வாதங்கள், தடுமாற்றமுள்ளவர் கனைச் சத்தியாக்கிரகத்திற்குச் சார்பாக மாற்றியதுடன் எதிர்த்தவர்களையும் அவ்வாறே ஆக்கியது. சத்தியாக்கிரகத்திற்குச் சில நாட்கள் தலைமை ஏற்றார், பின்பு கிராமங்களுக்குச் சென்று அதன் கொள்கைகளையும் குறிக்கோள்களையும் பிரச்சாரம் செய்தார். அடுத்துக் காங்கிரஸ் குழுவோடு சேர்ந்து வெவ்வேறு இடங்களுக்குச் சென்றார் ராமசாமி நாயக்கருடைய பேச்சு மக்கள் எளிதில் பதியக் கூடியதாகவும், காரசாரமான ஆற்றல் பெற்றதாகவும், திருவாங்கூர் அரசாங்கத்தின் கவுரவத்தைக் குலைப்பதாகவும் இருந்தது எனவே அவர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்” என்று எழுதுகிறார்.

-கு.வெ.கி.ஆசான் எழுதிய “வைக்கம் போராட்டம் ஒரு விளக்கம்” நூலில் இருந்து

வைக்கம் வீரருக்கு விழா அதனால்தான் அவர் பெரியார்!- முரசொலி’ – 11.12.2024

 

விடுதலை நாளேடு
தமிழ்நாடு

வைக்கத்து வீரர் என யாரைச் சொன்னோம்?

‘வை கத்தி!’ தீண்டாமைக் கழுத்தில் என்று
வரிப்புலியாய்க் களம் சென்று வாகை சூடி
வைத்து மக்கள் தந்த பட்டமன்றோ வைக்கம் வீரர்!

– என்று எழுதினார் தமிழினத் தலைவர் கலைஞர்! அத்தகைய பெருமைமிகு பெரியாருக்கு வைக்கத்தில் மாபெரும் நினைவுச் சின்னத்தை எழுப்பி நாளை 12ஆம் தேதியன்று திறந்து வைக்க இருக்கிறார் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

வைக்கத்தில் ஏற்கெனவே இருந்த நினைவகமானது புதுப்பிக்கப்பட்டுள்ளது. கூடுதல் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. அறிவாசான் பெயரில் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதனைத்தான் தமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் அவர்களும், கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன்அவர்களும் இணைந்து திறந்து வைக்கிறார்கள்.

வைக்கம் போராட்டம்

வைக்கம் போராட்டம் என்பது 1924ஆம் ஆண்டு நடைபெற்றது. இது நூற்றாண்டு விழா ஆண்டு. நூற்றாண்டு விழாவைச் சிறப்பாகக்கொண்டாடிய தமிழ்நாடு அரசு, வைக்கத்தில் உள்ள நினைவுச் சின்னத்தைமறுசீரமைப்பு செய்யவும் திட்டமிட்டது. எட்டு கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் முடிவுற்று திறப்பு விழாக் காண்கிறது வைக்கம். வெற்றி விழா காணப்போகிறது பெரியாரின் போராட்டம்.

30 மார்ச் 1924 அன்று வைக்கம் போராட்டம் தொடங்கியது. வைக்கம் மகாதேவர் கோவில் தெருவில் அனைத்து சமூகத்தவரும் நடந்து செல்ல வழிவகை வகுத்த போராட்டம்தான் ‘வைக்கம் போராட்டம்’ ஆகும்.
குன்னப்பி (புலையர்), பாஹுலயன் (தீயர்), கோவிந்த பணிக்கர் (நாயர்) கொண்ட குழுவினர், மாலை அணிவிக்கப்பட்டு முன்னோக்கிச் சென்றனர். அம்மூவரும் காவல் துறையால் கைது செய்யப்பட்டனர். மறுநாள், ஒரு நாயர், இரண்டு ஈழவர் கொண்ட மூவர் குழுவினர் தடைப்பகுதியை அணுகினர். கைது செய்யப்பட்டு திருவனந்தபுரம் சிறைக்கு அனுப்பப்பட்டனர். இச்செய்தியானது காந்தியாருக்கு தந்தி மூலம் தெரிவிக்கப்படுகிறது. போராட்டத்தைச் சிறிது காலம் தள்ளி வைக்கலாம் என்று அவர் தந்தி அனுப்புகிறார். ஆனால் அதனை கே.பி.கேசவ மேனன் ஏற்கவில்லை. கே.பி.கேசவமேனன், டி.கே.மாதவன் ஆகியோர் தடை செய்யப்பட்ட பகுதியை நோக்கி நடந்து சென்று கைதாகினர். ஆறுமாத சிறைத்தண்டனை பெற்றனர்.

இதைத் தொடர்ந்து ஏ.கே.பிள்ளை, கே.வேலாயுத மேனன், கே.கேளப்பன், ஜார்ஜ் ஜோசப், கே.ஜி.நாயர், செபாஸ்டியன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறைத் தண்டனை பெற்றனர். அடுத்து வழிநடத்த தந்தை பெரியாரை அழைக்கிறார்கள். அவர் ஏப்ரல் 13 அன்று வைக்கம் வருகிறார்.

தந்தை பெரியார் தலைமையில்

கோயிலின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் நடந்த போராட்டத்துக்குப் பெரியார் தலைமை வகித்தார். கோவை அய்யாமுத்து உள்ளிட்ட பலரும் தமிழ்நாட்டில் இருந்து வருகிறார்கள். பஞ்சாப் மாநிலத்தில் இருந்து அகாலிகள் வருகிறார்கள். போராட்டம் மிகத் தீவிரமாகிறது. இந்த நிலையில் கேரளாவைச் சேர்ந்தவர்கள் மட்டுமே போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும், மற்ற மாநிலத்தவர் கலந்து கொள்ளக் கூடாது என்றும், மாற்று மதத்தவர் கலந்து கொள்ளக் கூடாது என்றும் காந்தியார் கட்டுப்பாடுகள் விதிக்கிறார். ஆனால் அதனை சத்தியாக்கிரகிகள் ஏற்கவில்லை.

கோட்டயம் மாவட்டத்துக்குள் நுழைய பெரியாருக்கு தடை விதிக்கப் பட்டது. அதை மீறிச் சென்றார், கைது செய்யப்பட்டார். மே 22 ஆம் தேதி கைதான தந்தை பெரியார் ஜூன் 21இல் விடுதலை செய்யப்பட்டார். வெளியில் வந்தவர், மீண்டும் போராடினார். ஜூலை 18 அன்று இரண்டாவது முறையாகக் கைது செய்யப்பட்டார் பெரியார். ஆகஸ்ட் 31இல் விடுதலை செய்யப்பட்டார்.

காந்தியார் வருகை

1925ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9 ஆம் தேதி காந்தியார் வைக்கம் வந்தார். சத்தியாகிரக ஆசிரமத்தில் சத்தியாகிரகிகளைச் சந்தித்துப் பேசினார். உயர் வகுப்பு பிரதிநிதிகளையும் சென்று சந்தித்தார். மூன்று திட்டங்களை வைத்தார். அதனை உயர் வகுப்பினர் ஏற்கவில்லை. உயர் ஜாதிக்குழு அவற்றை நிராகரித்தது. திருவிதாங்கூர் மகாராணியின் பிரதிநிதியையும் காந்தியார் சந்தித்தார். நாராயண குருவையும் காந்தியார் சந்தித்தார். குருவுடனான சந்திப்பின்போது பெரியார், ராஜாஜி, வ.வே.சு. அய்யர் ஆகியோர் உடன் இருந்தனர். ராணியையும் சந்தித்தார் காந்தியார். 1925 மார்ச் 18 தடைகள் நீக்கப்பட்டு சாலைகள் திறந்து விடப்பட்டது. இதுதான் வைக்கம் போராட்டச் சுருக்கம் ஆகும்.

வைக்கம் போராட்ட (1924-1925) காலத்தில் 114 நாட்கள் தந்தை பெரியார் அங்கு இருந்திருக்கிறார். இரண்டு முறை கைது செய்யப்பட்டு மொத்தம்74 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். அனைத்துச் சாலைகளும் திறந்து விடப்பட்டதால், போராட்டங்களை நிறுத்துவது என்று முடிவெடுக் கப்பட்ட 17.11.1925 அன்றும் பெரியார் வைக்கத்தில் இருந்தார். வெற்றி விழா பொதுக்கூட்டத்தில் பங்கெடுத்தார். ஆனாலும் இந்த வெற்றிக்கு தான் மட்டுமே காரணம் என்று சொல்லிக் கொண்டவர் அல்ல பெரியார்!

வெற்றிக்குக் காரணம்

1933ஆம் ஆண்டு கொச்சியில் நடந்த தொழிலாளர் மாநாட்டில் தந்தை பெரியார் பங்கெடுத்தார். அப்போது பெரியாருக்கு முன் பேசிய சிலர், வைக்கம் போராட்டத்தின் வெற்றிக்கு தந்தை பெரியார்தான் காரணம் என்று பேசினார்கள். இறுதியாகப் பேசிய தந்தை பெரியார் சொன்னார்:

“என்னைப் பற்றிப் பேசிய சிலர் வைக்கம் சத்தியாகிரகத்தைப் பற்றிச் சொன்னார்கள். அதை நடத்துவித்ததும், அது வெற்றியாய் முடிவு பெறக் காரணமாய் இருந்ததும் நானே ஆவேன் என்று பேசினார்கள். அதையும் ஒப்புக் கொள்ள முடியாமைக்கு நான் வருந்துகிறேன்.

வைக்கம் சத்தியாகிரகத்தில் பெயரளவுக்கு என் பெயர் அடிபட்டாலும், அதன் உற்சாகமான நடப்புக்கும், வெற்றிக்கும் வாலிப தோழர்களுடைய வீரம் பொருந்திய தியாகமும், சகிப்புத் தன்மையும் கட்டுப்பாடுமே காரணமாகும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.” (‘குடிஅரசு’ – 1.10.1933) என்று பேசினார் பெரியார்.
அதனால்தான் அவர் பெரியார்!

– நன்றி: ‘முரசொலி’ – 11.12.2024

‘‘அதனால்தான் அவர் பெரியார்’’ வைக்கம் வீரருக்கு விழா (2)

தந்தை பெரியார்

அன்றைய காங்கிரசு கமிட்டித் தலைவரான பெரியார், இராஜாஜிக்கு கடிதம் எழுதி வைத்து விட்டுத்தான் வைக்கம் சென்றார். ‘நான் திரும்பி வரும் வரையில் கமிட்டி வேலைகளைப் பார்த்துக் கொள்ளவும்’ என்று சொல்லி விட்டுத் தான் சென்றார். இராஜாஜியும் வழி அனுப்பி வைத்தார். கைது செய்யப்பட்ட பெரியார் சிறையில் சித்திரவதைக்கு உள்ளானதைக் கண்டு, ‘தீரரைத் தமிழ்நாடு போற்றுகிறது’ என்றும் இராஜாஜி அறிக்கை வெளியிட்டார். அவரது தியாகத்தை முதலில் பாராட்டிய இராஜாஜியே, பின்னர் கடுமையாகக் கண்டித்து அவரை தமிழ்நாட்டுக்குத் திரும்பி வரச் சொன்னார். ஆனால் பெரியார் அதனை ஏற்கவில்லை. இறுதி வரை உறுதியாகப் போராடினார். முடிவில் பேச்சுவார்த்தை நடக்கும் போது பெரியாரை கழட்டி விட்டார்கள். முழுப் பெருமையும் அவருக்கு போய்விடக் கூடாது என்பதில் சிலர் எச்சரிக்கையாக இருந்தார்கள். ஆனாலும் வைக்கம்வெற்றி விழா கூட்டத்தை பெரியார், நாகம்மையாரை வைத்தே கேரள சீர்திருத்தவாதிகள் நடத்தினார்கள்.

அப்போது என்ன நடந்தது என்பதை இதோ பெரியாரே சொல்கிறார்…

“திருவிதாங்கூர் ராணியோடு காந்தியார் பேசினார். அப்போது ராணி, ‘நாங்கள் ரோடுகளைத் திறந்துவிட்டு விடுகிறோம். ஆனால், அதைத் திறந்து விட்டவுடன் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் கோயிலுக்குள் போக உரிமை வேண்டும் என்று கேட்டு ரகளை செய்தால் என்ன செய்வது? அதுதான் தயங்குகிறோம்’ என்று கேட்டுள்ளார்.

உடனே காந்தியார், அரசாங்க விடுதியில் தங்கியிருந்த என்னை வந்து சந்தித்தார். ராணி சொன்னதைச் சொல்லி ‘என்ன சொல்லுகிறாய்? இதை ஒப்புக் கொண்டு விடுவது நல்லது’ என்றார். நான் சொன்னேன், “Public ரோடு திறந்து விடுவது சரி! ஆனால், அதை வைத்துக் கொண்டு கோயிலைத் திறந்து விடும்படி கேட்க மாட்டோம் என்று நாம் எப்படி உறுதியளிப்பது? கோயில் பிரவேசம் என்பது காங்கிரசின் இலட்சியமாக இல்லாவிட்டாலும் – எனது இலட்சியம் அதுதானே, கோயிலை எப்படி விட்டுக்கொடுக்க முடியும்? வேண்டுமானால் ராணிக்கு ஒரு வார்த்தை சொல்லுங்கள்; ‘இப்போதைக்கு இது மாதிரி கிளர்ச்சி எதுவும் இருக்காது. கொஞ்ச நாள் அதுபற்றி மக்களுக்கு விளங்கும்படி பிரச்சாரம் செய்து, கலவரத்திற்கு இடமிருக்காது என்று கண்டால்தான் கிளர்ச்சி ஆரம்பிக்கப்படும், என்று சொல்லுங்கள்’ என்று நான் சொன்னேன்.

வைக்கம் போராட்டத்தில் தந்தை பெரியார்’’ – நூற்றாண்டு நிறைவு விழாவில் பதாகைகள், சுவரொட்டிகள்

 


இந்தியா


தமிழ்நாடு முதலமைச்சரும் – கேரள முதலமைச்சரும் இணைந்து நினைவகம்-பெரியார் சிலை- நூலகம் உருவாக்கம் வரலாற்றுச் சாதனைகளே! -தமிழர் தலைவர் ஆசிரியரின் நெகிழ்ச்சிமிகு அறிக்கை




ஆசிரியர் அறிக்கை, திராவிடர் கழகம்

* தந்தை பெரியார் தலைமையில் வைக்கத்தில் நடந்த ஜாதி – தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்தின் நூற்றாண்டு வெற்றி விழா! (1924-2024)

* சமூகக் கொடுமைகளை எதிர்த்து நடத்தப்படும் போராட்டங்கள் காலத்தைக் கடந்து, அடுத்த தலைமுறைக்கும் பாடங்களாக எடுத்துச் சொல்லும்!
* வைக்கம் போராட்டத்தின் வெற்றி அதற்கொரு நற்சாட்சியமாகும்!
இந்தச் சாதனைகளுக்குக் காரணமான அனைவருக்கும் தமிழ் கூறும் நல்லுலகத்தின் சார்பில் நன்றி! நன்றி!! நன்றி!!!
தமிழர் தலைவர் ஆசிரியரின் நெகிழ்ச்சிமிகு அறிக்கை

ஆசிரியர் அறிக்கை, திராவிடர் கழகம்

ஜாதி, தீண்டாமையை எதிர்த்து வைக்கத்தில் தந்தை பெரியார் தலைமையில் நடந்த போராட்டம் வெற்றி பெற்ற நூற்றாண்டையொட்டி, வைக்கத்தில் எழுப்பப்படும் நினைவுச் சின்னங்களுக்குக் காரணமாக இருந்த தமிழ்நாடு மற்றும் கேரள மாநில அரசுகளுக்கும், முதலமைச்சர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:
நூறாண்டு நிறைவைக் காணும் முதல் ஜாதி – தீண்டாமை, பாராமை, நெருங்காமை போன்ற சமூக அநீதிகளுக்கு எதிராக வெடித்த வைக்கம் ‘சத்தியா கிரகத்தினை’யொட்டி, நாளை (12.12.2024) காலை கேரள மாநிலம் வைக்கத்தில் நடைபெறவிருக்கும் விழா நமது ‘திராவிட மாடல்’ ஆட்சியின் ஒப்பற்ற முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களது சீரிய, வரலாற்றுச் சாதனையாக காலம் உள்ளவரை கல்வெட்டுகளாக நிலைத்திருக்கும்!
வைக்கம் போராட்டத்தின் வெற்றியைக் குறிக்கும் வகையில், தமிழ்நாடு அரசும் – கேரள மாநில அரசும் இணைந்து நடத்தும் மூன்றாவது விழா – நாளை நடப்பது!

வைக்கம் போராட்டத்தின் வெற்றியைக் குறிக்கும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களும், கேரள முதலமைச்சர் மாண்புமிகு பினராயி விஜயன் அவர்களும் இணைந்து நடத்திடும் வைக்கம் சத்தியாகிரக வெற்றியின் மூன்றாவது விழா இது!
1. ஓராண்டுக்கு முன் கேரள மாநிலம் வைக்கத்தில் தொடக்க விழா!
2. சென்னையில் நிறைவு விழா (சென்னை பெரியார் திடலில், தந்தை பெரியார் நினைவிடத்தில் – தமிழ்நாட்டில், எளிய முறையில்).
3. இப்போது (12.12.2024) வைக்கத்தில் சிலை புத்தாக்கம், நினைவகம், நூலகம் திறப்பு விழாக்கள் (மீண்டும் கேரளத்தில்).
அரசியலைத் தாண்டி, அகிலம் வியக்கும் அற்புதத் திருவிழா – பெருவிழா!
1924 இல் கேரள பெருமக்களால் தொடங்கி, தந்தை பெரியார் தலைமையில் அவர்களும், தமிழ்நாடு போராளிகளான அன்னை நாகம்மையார், கண்ணம்மை யார், கோவை சி.ஏ.அய்யாமுத்து, நாகர்கோவில் டாக்டர் நம்பெருமாள் போன்றவர்கள் பங்கேற்றனர்.
(பெருந்தலைவர் காமராஜர் தனது இளவயதில் அதில் கலந்துகொள்ளச் சென்று, தனது வீட்டாரால் மீட்டு அழைத்துக் கொண்டு போகப்பட்டவர் என்பதை அவரே வெளியிட்டுள்ளார்கள்)

அடக்குமுறைகளை எதிர்த்து
ஓராண்டு முழுவதும் நடத்தப்பட்ட போராட்டம்!
ஓராண்டு காலம் தொடர்ந்து நடைபெற்ற அந்த அறப்போராட்டத்தின் இறுதிவரை, அடக்குமுறை, துன்புறுத்தல்கள் போன்றவை ஏவப்பட்டன.
கேரளத்தில் டி.கே.மாதவன் அவர்களின் முன்னெ டுப்பினால் தொடங்கப்பட்டு, ஜார்ஜ் ஜோசப், குரூர் நீலகண்டன் நம்பூதிரி, கே.பி.கேசவமேனன், டி.ஆர்.கிருஷ்ணசாமி அய்யர் போன்ற பலரும், ஏராளமான ‘சத்தியாகிரகிகளும்’ போராடினர்.
அண்ணல் காந்தியார் தொடக்கத்தில் இதற்கு இணக்கமாக இல்லாவிட்டாலும், வைதீக நம்பூதிரி யார்களிடம் – அவர்களது ஜாதி, தர்ம சம்பிரதாயத்தை மதித்தே கட்டடத்திற்கு வெளியே அமர்ந்தே பேசிய சமரசமும் தோற்றுப் போன பின்பு, தந்தை பெரியார் தலைமைக்குப் பின்னரே, அது வீறுகொண்ட போராட்டக் களமாகி, ஓராண்டு சளைக்காமல், பல்வேறு தடைகளைத் தாண்டி கள வெற்றிகளைப் பறித்தது!
தந்தை பெரியாரின் ஆயுளை முடிக்க எதிரிகள் நடத்திய ‘சத்ரு சங்கார யாகம்’
இடையில் தந்தை பெரியார் ஆரம்பித்ததை முடிக்க வைதீகபுரி வர்ணாசிரமவாதிகளின் ‘சத்ரு சங்கார யாகம்’ எல்லாமும் நடந்து, அது பலிக்காமல், மன்னர் மறைந்த பரிதாபம் ஏற்பட்ட பிறகு பொறுப்பேற்ற, ராணியாரின் அருமுயற்சியினால் வைக்கம் போராட்டத்திற்குப் பல கட்ட வெற்றிகளாக – தெருவில் நடக்கும் உரிமையை அம்மக்கள் பெற முடிந்தது என்பது வரலாற்றில் வைர வரிகள் ஆகும்!

இதற்கான நினைவுச் சின்னமாக முதல் கட்டத்தில் 1994 ஆம் ஆண்டு ஜெயலலிதா அவர்கள் முதல மைச்சராக இருந்த அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில், வைக்கத்தில் தந்தை பெரியாருக்கு சிலை எழுப்பி, நினைவக ஏற்பாட்டினை 30 ஆண்டுகளுக்குமுன் (31.1.1994) வைக்கத்தில், எனது (கி.வீரமணி) தலைமையில், அன்றைய கல்வி அமைச்சர் நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் திறந்து வைத்தார்கள். அன்றைய அரசின் செய்தி ஒளிபரப்புத் துறை அமைச்சர் தென்னவன் அவர்கள் வரவேற்க, கேரள மாநில அமைச்சர்கள் பலரும், தலைவர்களும் பங்கேற்றனர்!
நினைவகம், பெரியார் சிலை, நூலகம் என்று பொலிவுடன் நினைவுச் சின்னங்கள்!

அந்த நினைவகம் – சிலை – சிதிலமடைந்த நிலையில், இன்றைய நமது ‘திராவிட மாடல்’ ஆட்சியின் முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களது அரசு, இதில் தக்க முனைப்பு காட்டி – உரிய நிதி ஒதுக்கி, விரிவாக்கம் செய்து, பொலிவுடனும் அமைத்து, நாளை (12.12.2024) கேரள முதலமைச்சர் மாண்பமை திரு.பினராயி விஜயன் அவர்கள் தலைமையில் நினைவகத்தையும், விரிவாக்கப்பட்ட நூலகத்தையும் திறப்பு விழா நடத்திடவிருக்கும் நிலையில், தந்தை பெரியாரின் திராவிடர் (தாய்) கழகத்துக்கு உரிய பெருமையும், பிரதிநிதித்துவமும் தருவது முக்கியம் என்ற பெரு நோக்கோடு, நம்மையும் (கி.வீரமணி) அழைத்து, முன்னிலை ஏற்கச் செய்துள்ளதைப் பாராட்டி, நன்றி செலுத்த வார்த்தைகளே இல்லை.

ஆசிரியர் அறிக்கை, திராவிடர் கழகம்

தமிழ்கூறும் நல்லுலகத்தின் சார்பில் நன்றி!
‘‘நன்றி என்பது பயனடைந்தவர்கள் காட்டவேண்டிய பண்பு” என்றாரே நம் அறிவாசான் தந்தை பெரியார். அதனை நாம், தமிழ்நாடு முதலமைச்சர், அமைச்சர் பெருமக்கள், அரசு அதிகாரிகள் அனைவருக்கும், அதேபோல, கேரள முதலமைச்சர் மாண்புமிகு பினராயி விஜயன் அவர்களுக்கும், அவரது அமைச்சர்கள், அரசு அதிகாரிகளுக்கும் தமிழ்கூறும் நல்லுலகத்தின் சார்பில், கனிந்த நன்றியை உரித்தாக்குகின்றோம்.
இது ஒரு குறிப்பிட்ட மாநில மக்களின் வெற்றி – நன்றிக்குரிய சின்னங்களின் திறப்பு விழா என்று கருதி, இதன் முக்கியத்துவத்தை அறியாமல் சுருக்கிவிடக் கூடாது!
சமூகக் கொடுமைகளை எதிர்த்து நடத்தும் போராட்டங்கள் காலம், எல்லைகளைக் கடந்து, இனிவரும் தலைமுறைகளுக்கும் உணர்த்தக் கூடியவை!

1. சமூகக் கொடுமைகள், அநீதிகள், ஜாதி, தீண்டாமை போன்ற சமூகப் புற்றுநோய்களை அகற்ற – ‘‘மண் எல்லை பார்க்காமல், களமாடத் தயாராகுங்கள்; மானிடப் பரப்பே – மனித உரிமைப் போருக்கான எல்லைகள்” என்ற அரிய வலராற்றுப் பாடத்தை இவ்விழாக்கள் உலகுக்கும், இன்றுள்ள இளைய – இனிவரும் தலைமுறைகளுக்கும் பறைசாற்றுகின்றன!
2. அறப்போராட்டங்களை அடக்குமுறைகளும், ஒடுக்குமுறை அதிகாரங்களும் ஒருபோதும் அடக்கி வெற்றி கொள்ள முடியாது என்ற பாடத்தைக் கற்கவேண்டியவர்களுக்குக் கற்றுத்தரும் வரலாற்றுக் காட்சிப் படிப்பினை வகுப்புகளாகும்!
3. கடமையாற்றும் முற்போக்கும் ஆட்சிகள் எப்படி சமூக வரலாற்றுப் போராட்டங்களை அங்கீகரித்து வரலாற்று ஆவண அங்கீகாரங்களாக படைக்கும்; வருங்கால சந்ததிகளுக்கான களப் பாசறை முகாம்க ளாக்கும், புதியதோர் சமத்துவ, சுயமரியாதை புது உலகைப் படைக்க மாநில எல்லைகளையும், அரசியலையும் ஒதுக்கி, மானிட உரிமைகளுக்கே முன்னுரிமை என்ற பாடம் போதிக்கும்; அதற்கு உணர்வுகளின் ஒத்துழைப்பு வடிவம் இப்படித்தான் இருக்கும் என்பதற்கு, தக்கதோர் சான்றாவணமாகும் – இந்தத் திறப்பு விழாக்கள் என்ற சிறப்பு விழாக்கள்!
மீண்டும் அனைவருக்கும்
நன்றி! நன்றி!! நன்றி!!!
அனைவருக்கும் நன்றி! நன்றி!! நன்றியைக் காணிக்கையாக்குகிறோம்.
வைக்கம் நினைவிடத்தின் ஒரு பகுதியை திருமதி ஜானகி எம்.ஜி.ஆர். அவர்கள் அன்ப ளிப்பாக அளித்துள்ளார் என்பது பாராட்டி நினைவு கூரத்தக்கதாகும்.
அத்துணைப் பேருக்கும் எமது கனிவு மிகுந்த நன்றியைக் காணிக்கை ஆக்குகிறோம்.

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை 
11.12.2024 

ஞாயிறு, 12 மே, 2024

வைக்கம் நூற்றாண்டு: பெருகும் பெரியார் பெருமை!


ராஜன் குறை கிருஷ்ணன்

பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுடில்லி.

9

வைக்கம் என்பது கேரள மாநிலத்தில் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர். தாலுக்கா தலைநகர். இந்த ஊரில் உள்ள மகாதேவர் ஆலயத்தைச் சுற்றியுள்ள வீதிகளில் ஈழவர்கள், தாழ்த்தப்பட்டோர் நடமாட தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்தத் தடையை எதிர்த்து ஒரு சத்தியாகிரக போராட்டம் நூறாண்டு களுக்கு முன் 1924ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் கேரளத் தலைவர்களால் முன்னெடுக்கப்பட்டது. அறு நூற்று மூன்று நாட்கள் நடந்த இந்தப் போராட்டம், வெற் றிகரமாக தடை நீக்கப்பட்டவுடன் நிறைவடைந்தது.

இரண்டு முதலமைச்சர்கள்

5

வைக்கம் போராட்ட நூற்றாண்டு தொடக்க விழா வுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் தமிழ்நாட்டு முதல்வர் ஸ்டாலினை அழைத்தார். தமிழ் நாட்டு முதல் வர் சென்று கலந்துகொண்டார். இரண்டு முதல்வர்கள் நாட்டில் மீண்டும் தலையெடுக்கும் மதவாத சக்திகளை முறியடிக்க உறுதி பூண்டார்கள். திராவிட, பொதுவு டைமை சித்தாந்த ஒருங்கிணைப்பின் வெளிப்பாடாக, முற்போக்கு இயக்கங்களின் ஒருமிப்பாக இந்த நிகழ்வு அமைந்தது சிறப்பானது.

இவ்வாறு தமிழ்நாட்டு முதல்வரை அழைக்க முக்கிய காரணம், தமிழ்நாட்டிலிருந்தும் பலர் அந்தப் போராட்ட த்தில் பங்கெடுத்தது. அதில் மிக முக்கிய பங்கினை செலுத்தியவர் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவராக அந்த ஆண்டு பதவி வகித்த பெரியார். வைக்கம் போராட்டத்துக்கு அவர் செய்த தீரமிக்க பங்களிப்புக்காக அவர் “வைக்கம் வீரர்” என்று அழைக் கப்பட்டார்.  

அக்காலத்தில் அவரை ஈ.வெ.ராமசாமி நாயக்கர் என்றே குறிப்பிட்டார்கள். அவர் ஜாதிப்பட்டத்தை துறந்ததுடன், தமிழ்நாட்டில் யாருமே ஜாதிப் பெயரை பயன்படுத்துவதைத் தவிர்க்கும் சூழலையும் உருவாக் கினார். அவருடைய தன்னலமற்ற தொண்டுக்காக பெரியார் எனப் பெண்கள் மாநாட்டில் அழைக்கப் பட்டார். அந்தப் பெயரே இன்று அவரைக் குறிப்பிடும் பெயராக விளங்கி வருகிறது.  

பெரியார் பங்கேற்பு

பெரியாரின் வைக்கம் பங்கேற்பு அவரை ஜாதீய ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிரான செயல்பாடுகளில் கூர் மைப்படுத்தியது. அதன் பிறகுதான் அவர் காங்கிரஸி லிருந்து விலகி சுயமரியாதை இயக்கம் கண்டார். ஏறத்தாழ அரை நூற்றாண்டுக் காலமாக பார்ப்பனீய, ஜாதீய கருத்தியலுக்கு எதிரான கடுமையான, ஓய்வில்லாத பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

பெரியாரின் அந்த இயக்கமே தமிழ்நாட்டில் திராவிட இயக்கத்தை மக்கள் பேரியக்கமாக காலப்போக்கில் வடிவமைத்து, இன்று திராவிட மாடல் ஆட்சி என இந்தியாவே வியந்து நோக்கும் வரலாற்று திசைவழியை தீர்மானித்தது என்றால் மிகையாகாது. அதனால்தான் முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாடு அரசும் வைக்கம் நூற்றாண்டு விழாவை இந்த ஆண்டு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடும் என அறிவித்துள்ளார்.

வைக்கம் போராட்டம்

வைக்கம் போராட்டத்தின் முக்கியத்துவம் என்பது என்னவென்றால் முதன் முறையாக இந்தியாவில் நவீன அரசியல் சக்தி பார்ப்பனீய சனாதன சக்திகளை, தர்ம சாஸ்திர ஒடுக்குமுறைகளை நேரடியாகப் போராட்டக் களத்தில் சந்தித்தது என்பதுதான்.

நவீன அரசியலின் அடிப்படை பாரதியின் வார்த்தைகளில் “எல்லோரும் ஓர் இனம், எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓர் நிறை, எல்லோரும் இந் நாட்டு மன்னர்” என்பதாகும். பார்ப்பனீயம், சனாதனம் என்பது என்னவென்றால் அது பிறப்பின் அடிப் படையில் வர்ணங்களையும், ஜாதிகளையும் பிரித்து உயர்வுதாழ்வு கற்பிப்பதாகும்.

வைக்கம் போராட்டத்தின் வரலாற்றை விரிவாக ஆராய்ந்து பழ.அதியமான் “வைக்கம் போராட்டம்” என்ற அருமையான நூலை எழுதியுள்ளார். இந்த நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அது மலையாள மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. பெரியாரின் முக்கிய பங்களிப்பினை சிறப்புற வெளிப்படுத்தும் அந்த நூலில், ஒரு சுவாரஸ்ய மான பகுதி உள்ளது.

காந்தியாரின் கண்டனம்

அது என்னவென்றால் வைதிகர்கள் எனப்படும் சனாதன சக்திகளுடன் காந்தியார் 1925 மார்ச் 10 அன்று இந்தன் துருத்தில் தேவன் நீலகண்டன் நம்பியாத்ரி இல்லத்தில் சந்தித்து உரையாடிய சம்பவம். அந்த உரையாடலில் காந்தியார் ஓர் இடத்தில் முக்கியமான கருத்தைக் கூறுகிறார். ஜாலியன் வாலாபாக்கில் இந்தியர்களைக் கொன்று குவித்த ஜெனரல் டயர் எவ்விதமான மனப்போக்கில் இயங்கினானோ, அதே மனப்போக்கில்தான் ஒடுக்கப்பட்ட ஜாதியினர் கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளில் நடக்கக் கூடாது என்று கூறுகிறீர்கள் என காந்தியார் சொல்கிறார்.

ஜெனரல் டயர் இந்தியர்களை ஆங்கிலேயர்களுக்கு சமமான மனிதர்களாக மதிக்கவில்லை. அதேபோலத் தான் பார்ப்பனீய மனோபாவமும், ஒடுக்கப்பட்ட ஜாதிகளை சமமான மனிதர்களாகவே நினைப்பதில்லை. இதை நாம் பார்ப்பனீய மனோபாவம், ஆரிய சிந்தனை என்று சொல்ல முக்கிய காரணம் சமஸ்கிருத நூல்களில் தான் இந்தக் கருத்துகள் வலுவாக எழுதப்பட்டு இந்தியா முழுவதும் பரப்பப்பட்டது என்பதால்தான். மக்களின் இறை நம்பிக்கையை பயன்படுத்திக் கொண்ட பூசாரி வர்க்கம், இதை கடவுளின் சித்தமாக மக்களிடையே பரப்பியது.

உதாரணமாக காந்தியாரிடம் வாதிடும் நம்பூதிரி, முற்பிறவியில் செய்த பாவத்தினால்தான் ஒருவர் தாழ்ந்த ஜாதியில் பிறக்கிறார். அதனால் கடவுளின் எண்ணப்படி அவர்களுக்கு உரிமைகளை மறுப்பது தான் சரியானது என வாதிடுகிறார். பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பிறவியே ஒரு தண்டனை தான், அதை அவர்கள் அனுபவிக்க வேண்டும் என் பதுதான் கடவுளின் எண்ணம் என்பதே பார்ப்பனீயத் தின் பார்வையாகும். அதையே அனைவரும் ஏற்கும் படி பரப்பியதைத்தான் பார்ப்பனீய கருத்தியல் மேலாதிக்கம் (Brahmin Hegemony)  என்று அழைக்கிறோம்.

வைக்கம் வீரர்

6

இந்தக் கருத்தியல் மேலாதிக்கத்துக்கு எதிராகத்தான் பொங்கியெழுந்தார் பெரியார். ஆனால், அவர் பண்டிதர்களிடம் உரையாடிக் கொண்டிருக்கவில்லை. வைக்கத்திலும் சரி, அதன் பிறகும் சரி, நேரடியாக பாமர மக்களிடம் சென்றார். அவர்களுக்குப் புரியும் எளி மையான மொழியில் இந்தக் கருத்தியலில் அடங்கியுள்ள சூதினை எடுத்துச் சொன்னார். பார்ப்பனர்களின் புராணங்களை கேலி செய்தார். கடவுள் நம்பிக்கைக்கு சவால் விடுத்தார்.

பெரியாரை வைக்கம் வீரர் என்பது வைக்கம் சத்தியாகிரகத்தில் அவர் என்ன பங்களித்தார் என்பதற் காக மட்டுமல்ல. அவர் வைக்கத்தில் ஏந்திய தீப்பந் தத்தை, சுயமரியாதை சுடரொளியை அதன் பிறகு அரை நூற்றாண்டுக் காலம் தொடர்ந்து விடாமல் ஏந்தி வந்தார் என்பதற்காகவும், தொடர்ந்து பார்ப்பனீய, ஜாதீய, சனாதன கருத்தியலுக்கு எதிராக நவீன முற் போக்கு சிந்தனையை தளராமல் உயர்த்திப்பிடித்தார் என்பதற்காகவும்தான்.  

பார்ப்பனீயத்தின் வெறுப்பு

சூத்திர, பஞ்சம மக்களுக்கு பிறப்பே அவர்கள் முற்பிறவியில் செய்த பாவத்துக்கு தண்டனைதான் என்றும், தீண்டாமைக் கொடுமைகளை, சமூக விலக்கங் களை அவர்கள் அனுபவிப்பதுதான் கடவுளின் சித்தம் என்றும் கூறிய பார்ப்பனீயம் எவ்வளவு கடுமையான வெறுப்பை உழைக்கும் மக்கள் மீது செலுத்தியது என்பதை இன்று யாரும் பேசுவதில்லை. இன்றைக்கும் அந்த வெறுப்பு ஜாதீயவாதிகள் மனதிலே கனன்று கொண்டுதான் இருக்கிறது.

பெரியார் அத்தகைய உறைநிலை வெறுப்பை, மனிதனை மனிதனே கீழமைப்படுத்தும் வெறுப்பை, பெண்களை ஆண்கள் கீழ்மைப்படுத்தும் வெறுப்பை கடுமையாக இகழ்ந்தார், அந்த வெறுப்புக் கருத்தியலை எதிர்த்துப் போராடினார் என்பதற்காக பெரியாரை பார்ப்பன வெறுப்பாளர் என்று இன்றும் கூசாமல் சொல்கின்றனர்.

இன்றுவரை இந்து மத சாமியார்கள், குருமார்கள், பண்டிதர்கள் எனப்படுபவர்கள் வர்ண தர்மம் என்பது தவறான கற்பனை, நவீன காலத்துக்குப் பொருந்தாது, பிறப்பினால் யாரும் எந்த சமூக அடையாளத்தையும் பெற முடியாது என்று அறிவித்துள்ளார்களா?

இன்றும் கூட பிறப்பிலேயே ஒருவர் பார்ப்பனர், மற்றொருவர் இந்தந்த ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்ற நம்பிக்கையைத்தானே ஆதரிக்கின்றனர்? அவ்வாறு பிறப்பிலேயே அடையாளம் இருக்க வேண்டும் என்றுதானே அகமணமுறையை தீவிரமாக ஆதரிக் கின்றனர்? இன்றும் இந்தியாவின் அதிகார மய்யங்களில் பார்ப்பன, பனியா குடும்பங்கள்தானே ஆதிக்கம் செலுத்துகின்றன?

ஏற்றத் தாழ்வு

திருவள்ளுவர் தெள்ளத் தெளிவாக சொன்னாரே “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா / செய்தொழில் வேற்றுமை யான்” என்று, அதுதான் இந்து மத தர்மமும் என்று திட்டவட்டமாகக் கூற முடியுமா? முடியாது. ஏனெனில் முற்பிறவியில் செய்த செயல்களின் பலனாகவே இந்தப் பிறவி அமைகிறது. எனவே பிறவியிலேயே ஏற்றத்தாழ்வு தீர்மானிக்கப்படுகிறது என்பதே பார்ப்பனீய சிந்தனை. இதைத்தான் நம்பூதிரி காந்தியிடம் வைக்கத்தில் சொன்னார். இன்றும் பலர் நம்புகிறார்கள்.

பிறவியே தண்டனை என்பதால் பலவித தீண்டாமைக் கொடுமைகளை, சமூக விலக்கங்களை சூத்திர வர்ணத்தவரும், பஞ்சமரும் அனுபவித்துதான் தீர வேண்டும் என்றும் முற்பிறவியில் செய்த புண்ணியங்களுக்குக் கொடுக்கப்பட்ட பரிசுதான் பிராமணப் பிறவி என்றும் அதனால் அவர்களை உயர்ந்தவர்களாக நடத்த வேண்டும் என்பதுதான் தர்ம சாஸ்திரம். அதை எழுதியது பார்ப்பனர்கள்தான்.

உண்மையில் பெரியார் வெறுப்பை விதைக்க வில்லை. கடுமையாகப் பேசினாலும், மூட நம்பிக்கை களைக் களைந்து சிந்திக்கும் ஆற்றலை உருவாக்கவே பேசினார். சுயமரியாதை கொடுத்த வலிமையில் ஒடுக்கப்பட்டவர்கள் பார்ப்பனர்களை எதிர்கொண்டு கேள்வி கேட்டார்களே தவிர, யாரும் பார்ப்பனர்களை வெறுக்கவில்லை. சுயமரியாதை என்பதே ஒருவர் தன்னுடைய சிந்திக்கும் ஆற்றலுக்கு மரியாதை அளிப்பதுதான்.

சிந்திக்கச் சொன்னவர் பெரியார்

7

வைக்கம் நூற்றாண்டு விழாவை ஒட்டிய இன்னொரு குறிப்பிடத்தக்க நிகழ்வு இரண்டு உலகப் புகழ் பெற்ற ஆளுமைகள் இணைந்து பெரியாரை சிறப்பிக்கும் வகையில் ஒரு கர்னாடக இசைப்பாடலை வெளியிட்டிருப்பதுதான். ஒருவர் இந்த பாடலை பாடிய கர்னாடக இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா. மற்றொரு வர் இந்த பாடலை எழுதிய எழுத்தாளர் பெருமாள் முருகன்.

இந்தப் பாடலின் சிறப்பு என்னவென்றால் பெரியா ரின் இயக்கத்தை வெறுப்பியக்கமாகச் சித்திரிக்கும் இந்துத்துவ சக்திகளை மறுத்து பெரியாரின் இயக்கத்தை அறிவியக்கமாக அறிமுகம் செய்வதுதான். “சிந்திக்கச் சொன்னவர் பெரியார், சொந்த புத்தியைக் கொண்டு சிந்திக்கச் சொன்னவர் பெரியார்” என்ற பாடலின் பல்லவி எப்படி பெரியார் தமிழ் அறிவொளிக்காலத்தின் சுடரொளி என்பதை தெளிவாக்கும் வண்ணம் அமைந்துள்ளது.

ஜாதிப் பிரிவினைகள் ஏன்

சாத்திர விதிமுறைகள் ஏன்

ஆதிக்க நடைமுறை ஏன்

அநீதித் தீண்டாமை ஏன்

பாதிக்கப்படுவோர் யார்

பலனடைந்து வாழ்வோர் யார்

ஏதும் அற்றோர் யார்

ஏமாற்றிப் பிழைப்பவர் யார்

மோதி உடைத்து முழுதாய் இங்கே

மாற்றம் காண முருகாய் எதையும்

சிந்திக்கச் சொன்னவர் பெரியார்

என்ற பாடல் வரிகள் மிகத் தெளிவாய் வைக்கத்தில் தொடங்கிய பெரியார் இயக்கத்தின் அடிப்படைகளை விளக்கிவிடுகின்றன.

பெரியார் பெருமை

இந்தப் பாடலின் முக்கியத்துவம் என்னவென்றால் இரண்டு முக்கியமான புலங்களை சார்ந்தவர்கள் பெரியாரின் பெருமையை பாடியுள்ளதுதான். ஒன்று நவீன தமிழ் இலக்கியப் புலம். நவீன தமிழ் இலக்கியம் என்ற புலம் திராவிட இயக்க இலக்கியம், பொதுவு டைமை இயக்க இலக்கியம், ஜனரஞ்சக இலக்கியம் ஆகியவற்றிலிருந்து வேறுபட்ட ஒரு நுட்ப மொழி இலக்கிய புலமாகும்.

இந்தப் புலத்தினை சார்ந்தவர்கள் பலர் காந்திய வாதிகளாக, தேசியவாதிகளாக இருப்பார்கள். முற்போக் காளர்களாக இருப்பார்கள். நவீன சிந்தனைகளை ஆதரிப்பார்கள். மேல் நாட்டு இலக்கியங்களை, சிந்தனையாளர்களை கொண்டாடுவார்கள். ஆனால் பெரும்பாலும் பெரியாரை கொண்டாடுபவர்களாக இருக்க மாட்டார்கள். காரணம் என்னவென்றால், பெரியார் கடுமையான மொழியை பயன்படுத்தினார், பாமரர்களுக்கான மொழியைப் பேசினார் என்பதுதான்.

இந்தப் புலத்தினை சார்ந்த எழுத்தாளரும், தமிழ் இலக்கிய பேராசிரியருமான பெருமாள் முருகன் பெரும் இலக்கிய சாதனைகளுக்குச் சொந்தக்காரர். இவருடைய நாவல்கள் பல்வேறு உலக மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு வருகின்றன. பன்னாட்டு அங்கீகாரமும், விருதுகளும் இவரைத் தேடி வருகின்றன. அப்படியான ஓர் எழுத்தாளர் பெரியாரின் இயக்கத்தை வியந்து கொண்டாடும்படியான கருத்தாழம் மிக்க பாடலை எழுதியுள்ளது சிறப்பு.

அதைவிட அபூர்வமான நிகழ்வு கர்னாடக சங்கீத புலம் சார்ந்தது. கர்னாடக சங்கீதம், பரத நாட்டியம் ஆகிய இரண்டையுமே இசை வேளாளர்கள், பிற பிற்பட்ட சமூகத்தினரிடமிருந்து சுவீகரித்துக் கொண்ட பார்ப்பன சமூகம் இருபதாம் நூற்றாண்டில் அவர்களது கலாச்சார அடையாளமாகவே இவற்றை நிறுவுவதில் பெருமளவு வெற்றி பெற்றது எனலாம். குறிப்பாக சென்னையில் டிசம்பர் மாதம் நடக்கும் இசை விழா என்பது பார்ப்பன சமூக விழாவாகவே கடந்த நூறாண்டுகளில் உருவெடுத்துள்ளது எனலாம்.

அத்தகைய கர்னாடக சங்கீத புலம்சார்ந்த பாரம் பரியமான குடும்பத்தில் பிறந்தவர் டி.எம்.கிருஷ்ணா. தத்துவவாதி ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியால் ஈர்க்கப்பட்ட அவர் இப்படி இசையானது ஒரு ஜாதியின் வட்டத் திற்குள் சுருக்கப்படுவதை ஏற்கவில்லை. அதனால் கர்னாடக இசையை மக்களிடையே எடுத்துச் செல் வதை ஓர் இயக்கமாக மேற்கொண்டார். துணிகரமாக ஜாதீய மனோபாவத்தை எதிர்த்துப் பேசினார். அவரு டைய முற்போக்கான கலாச்சார முயற்சிகளுக்காக மகஸேஸே விருது பெற்றார்.

பெரியாரின் அறிவியக்கம்

8
அடுத்த கட்டமாக கர்னாடக இசைப்பாடல்கள் இறைவனைத்தான் பாட வேண்டும் என்ற விதியையும் தகர்க்க முற்பட்டார். சூழலியல் குறித்த அக்கறையை வெளிப்படுத்தும் தமிழ் தனிப்பாடல்கள், பல்வேறு பொருட்களை குறித்த தமிழ் தனிப்பாடல்கள் என்று பாடி வெளியிட்டார். இந்து மத தெய்வங்களைத்தான் பாட வேண்டுமா என கிறிஸ்துவையும், அல்லாவையும் குறித்தும் பாடினார்.  இதுபோன்ற முயற்சிகளுக்காக இந்துத்துவ சக்திகளின் எதிர்ப்பினை ஈட்டினார்.  

இசை என்பது ஒரு சாராரின், ஒரு மதத்தின், ஜாதியின் பிடிக்குள் இருக்கக் கூடாது என்பதற்காக தன் கலை வாழ்க்கையை அர்ப்பணித்தவர் கிருஷ்ணா. சமீபத்தில் புதுடெல்லி அசோகா பல்கலைக்கழகத்துடன் இணைந்து அசோகர் கல்வெட்டு வரிகளையும் பாடி வெளியிட்டார்.

இத்தகைய முற்போக்கு சிந்தனை கொண்ட இசைக்கலைஞர் வைக்கம் நூற்றாண்டை முன்னிட்டு பெரியார் குறித்த பெருமாள் முருகன் பாடலைப் பாடி வெளியிட்டிருப்பது பாராட்டுக்குரியதாகும். பெரியாரின் அறிவியக்கம் என்பது ஜாதீயக் கருத்தியலுக்கு எதிரானது, ஏற்றத்தாழ்வுக்கு எதிரானது என்பதை அனைத்து தரப்பினரும் ஏற்பதும், கொண்டாடுவதும் அவசியமானதாகும்.

இதனை முன்னிட்டே ஆசிரியர் வீரமணி டி.எம். கிருஷ்ணாவை, எழுத்தாளர் வ.ராமசாமி குறித்து அண்ணா கூறிய வார்த்தைகளில் “அக்ரகாரத்தின் அதிசய மனிதர்” என்று கூறியுள்ளார்.

வைக்கம் நூற்றாண்டில் பெருகும் பெரியார் பெருமையைக் கொண்டாடுவோம். சனாதான சக்திகளின் மீட்புவாத அரசியலை முறியடிப்போம்.

நன்றி: ‘மின்னம்பலம்' (இணையதளம்)


பொதுவாழ்வில் வித்தியாசம் இருக்கக் கூடாது’’


Published September 23, 2023, விடுதலை ஞாயிறு மலர்

“மலையாளத்தாரை வெறி பிடித்தவர்கள் என்று கொள்ளாமல் வேறு எவ்வாறு அவர்களை மதிக்கக் கூடும்?’’ என்று துறவியான விவேகானந்தரையே பேச வைத்திருக்கிறது என்றால் நூறு ஆண்டுகளுக்கு முன் கேரளாவில் எப்படிப்பட்ட அவல நிலை இருந்திருக்க வேண்டும்?

கேரள மாநிலம். கோட்டயத்திலிருந்து 32 கி.மீ. தூரத்தில் இருக்கிற வைக்கத்தில் வேம்பநாடு ஏரிக்கரையில் இருக்கிறது பழைமையான மகாதேவர் கோவில். 

உள்ளே இருப்பது சிவபெருமான் தான். மலையாளத்தில் ‘வைக்கத்தப்பன்’ என்று அழைக்கிறார்கள். நவம்பர், டிசம்பர் மாதங்களில் இங்கு நடக்கும் திருவிழா விசேஷம்.

அப்போது திருவிதாங்கூர் ராஜாவின் சமஸ்தான ஆட்சி. மகா ராஜாவின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக வைக்கம் கோவிலைச் சுற்றிலும் பந்தல் போட்டிருந்தார்கள். அதையொட்டி இருந்த நீதிமன்றத்திற்கு முன்னாலும் பந்தல் அலங்காரம்.

அந்த நீதிமன்றத்தில் நடந்த வழக்கு ஒன்றிற்காக ஆஜராக வந்த மாதவனை அவருடைய சமூகத்தைச் சுட்டிக்காட்டி நீதிமன்றத்திற்குள் நுழையத் தடை விதிக்கிறார்கள் உயர்ஜாதிக்காரர்கள்.

அந்த இழிவு தான் பொறி. எதிர்த்துக் கலகக் குரல்கள் எழுந்தன.

அன்றைக்கிருந்த காங்கிரஸ் தலைவர்கள் உட்படப் பலர் கூடிப் பேசினார்கள். சத்தியாகிரகப் போராட்டம் நடத்துவது என்று தீர்மானித்தார்கள். நடத்தினார்கள். நடத்தியவர்கள் கைதானார்கள்.

இதெல்லாம் நடந்தது 1924 ஏப்ரல் மாதத் துவக்கத்தில். அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த ஈ.வெ.ராமசாமி பெரியாருக்குக் கைதானவர்கள் கடிதம் எழுதுகிறார்கள்.

சுற்றுப்பயணத்தில் இருந்த பெரியார் ஈரோட்டுக்குத் திரும்பிச் சிலரை அழைத்துக் கொண்டு நேரே வைக்கத்திற்குக் கிளம்பிவிட்டார்.

பெரியாருக்கு ஏற்கெனவே அறிமுகமானவராக திருவிதாங்கூர் ராஜா இருந்தாலும், அவர்கள் தரப்பில் கொடுக்கப்பட்ட வரவேற்பை மறுத்தார் பெரியார்.

பொதுக்கூட்டங்களில் தெருவில் சில சமூகத்தினர் நடக்கக் கூடத் தடை விதித்திருப்பதை எதிர்த்துக் கடுமையாகப் பேசினார்.

போராட்டம் வலுவடைந்தது. போராடுவதற்குத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பெரியார் உட்படப் போராடியவர்கள் கைது செய்யப்பட்டு அருவிகுத்தி என்கிற ஊரில் சிறை வைக்கப்பட்டார்கள்.

இருந்தாலும் வெளியே போராட்டம் தொடர்ந்தது. பெரியாரின் மனைவி நாகம்மாளும், தங்கை கண்ணம்மாளும் போராட்டத்தில் கலந்து கொண்டார்கள். போராட்டம் தீவிரமானது.

ஒரு மாதத்தில் பெரியார் விடுதலை ஆகி வெளியே வந்ததும் போராட்டம் இன்னும் வலுக்கிறது. “பெரியார் அங்கே தலைமை தாங்கும்போது நான் கூட்டத்திலிருந்த சாதாரணத் தொண்டன்’’ என்று பின்னாளில் பதிவு செய்திருக்கிறார் காமராஜர்.

ஈழவ சமுதாயத்தின் பெரும்தலைவரான நாராயணகுரு, ’’ஒருவன் தீண்டுவதனால் இன்னொருத்தனின் பரிசுத்தம் கெடுமானால், அந்தப் பரிசுத்தம் அழியட்டும்’’ என்று சொல்லக்கூடிய அளவுக்குப் போனார்.

அதற்குள் மறுபடியும் பெரியாரைக் கைது செய்து திருவனந்தபுரம் சிறையில் அடைக்கிறார்கள். அவருடைய காலில் விலங்கு, தலையில் குல்லா, கழுத்தில் கைதி எண் எழுதப்பட்ட மரச்சட்டம்.

“இப்படி வைத்திருப்பது நியாய விரோதம். திருவனந்தபுரம் சிறையில் இருக்கும் தீரரைத் தமிழ்நாடு பாராட்டுகிறது’’ என்றார் ராஜாஜி. (சுதேசமித்திரன்- 28.8.1924)

போராட்டம் வலுத்த நிலையில் ராஜாஜி கடிதம் எழுதியபிறகு காந்தியார் வைக்கத்திற்கு வந்தார்.

ராணியைச் சந்தித்தார். நாராயணகுருவைச் சந்தித்தார். தடை விதித்திருந்த உயர்ஜாதியினரை அழைத்துப் பேசினார்.

கடைசியில் ராணியின் உத்தரவுக்குப் பிறகு 1925ஆம் ஆண்டில் சில சமூகத்தினருக்குத் தெருவில் நடப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது. அதன் பிறகு கோவிலுக்குள் நுழைவதற்கான தடையும் நீக்கப்பட்டது.

சுதந்திர உணர்வுடன் அதுவரை உரிமை மறுக்கப்பட்ட தெருக்களில் ஒடுக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் ஆரவாரத்தோடு பேரணியாகச் சென்றபோது அதற்குத் தலைமை தாங்கியவர் பெரியார்.

இன்று வரை வைக்கம் பற்றிய சர்ச்சைகள் ஒருபுறம் நீடித்துக் கொண்டிருந்தாலும், கேரள அரசின் முயற்சியோடு வைக்கத்தில் 1994 ஜனவரியில் நினைவகம் எழுப்பி அவருடைய பங்களிப்பின் அடையாளமாக அவருடைய சிலையும் அமைக்கப்பட்டிருக்கிறது.

அன்றைக்குச் சக மனிதனை படுகேவலமாகத் தாழ்த்திய அவலம் தொடர்ந்தபோது அதை எதிர்த்து “பொது வாழ்வில் வித்தியாசம் இருக்கக் கூடாது’’ என்று கலகக் குரலை உயர்த்திப் போராடி, சிறைப்பட்டவரை காலத்தின் இன்னொரு கரையில் நின்று வசதியாக விமர்சிப்பது மிக எளிது.

இன்றைய இலக்கிய முலாம் பூசிய எந்தச் சொற்களை விடவும், அன்றைய செயல் தான் வலிமையானது.

அப்படிச் சமூகத்தின் தேவையை உணர்ந்து நின்றதால் தான் பெரியார் போராட்டம் நடத்திய அதே வைக்கம் மண்ணில் அவருக்கு நினைவகமும், சிலையும் எழுந்திருக்கிறது.

அவை எல்லாமே பிறர் வலியைத் தன்வலியாக உணர்ந்தவருக்கு அளிக்கப்பட்ட காலங்கடந்த அங்கீகாரத்திற்கான எளிய அடையாளங்கள்.

நன்றி: ‘குமுதம்’, 25.10.2017

வெள்ளி, 23 பிப்ரவரி, 2024

வைக்கம் நூற்றாண்டு – வரலாற்றுச் சுவடுகள்

 Published August 26, 2023, விடுதலை நாளேடு

“வைக்கம் போராட்டம்” நடைபெற்று 100 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அந்த போராட்டம் இரவில் முடிவு செய்து காலையில் நடந்து முடிந்ததல்ல. சமத்துவத்தைக் கோரிய அப்போராட்டத்திற்கான சூழலை உருவாக்கிய பல ஜீவன்கள் பல ஆண்டுகள் பாடுபட்டனர். அதன் பின்னர் தந்தை பெரியார் தலைமையில் போராட்டம் இரண்டாண்டுக் காலம் நடைபெற்று அது வெற்றி பெற்ற வரலாற்றை நாள்வாரியாக தொகுத்து அளிக்கப்படுகிறது.

“வைக்கம்” என்பது வெறும் ஊரின் பெயரல்ல; அது அடையாளம், தாழ்த்தப்பட்டோர் சம உரிமை பெறும் முயற்சியில் கடந்த முதல் படி. கேரள ஈழவ மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை தந்தை பெரியார் கேரளர்களின் அழைப்பின் பேரில் சென்று சமூகநீதியின் அடையாளமாக இருமுறை சிறை சென்றார். நான்கு மாதக் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டார். வைக்கத்தில் 141 நாளில் 74 நாள் சிறையில் இருந்தார். தான் மட்டும் அல்ல; தம் துணைவியாரையும், தங்கையையும் அப்போராட்டத்தில் ஈடுபடுத்தி வெற்றி பெற்ற வரலாறே இவைகள்…

வைக்கம் போராட்ட வரலாறு

6 பிப்ரவரி 1924

கொல்லம், சுயராஜ்ய ஆசிரமத்தில் தீண்டாமை விலக்குக் குழுவின் கூட்டம் நடைபெற்றது. சுதந்திர நடமாட்டத்துக்கும், கோயில் நுழைவுக்கும் ஆதரவாகத் தீவிர பிரச்சாரம் செய்வது எனத் தீர்மானிக்கப்பட்டது.

29 பிப்ரவரி 1924

தீண்டாமை விலக்குக் குழு சார்பில் காங்கிரஸ் கட்சி வைக்கத்தில் பொதுக்கூட்டம் நடத்தியது.

30 மார்ச் 1924

வைக்கம் போராட்டம் தொடங்கியது. குன்னப்பி (புலையர்), பாஹுலேயன் (தீயர்), கோவிந்த பணிக்கர் (நாயர்) கொண்ட குழுவினர், மாலை அணிவிக்கப்பட்டு முன்னோக்கிச் சென்றனர். அம்மூவரும் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர். இன்று ஞாயிறு, தொடங்கிய நாள் தவிர, மற்ற ஞாயிற்றுகிழமைகளில் சத்தியாகிரகம் நடைபெறவில்லை.

31 மார்ச் 1924

ஒரு நாயர், இரண்டு ஈழவர் கொண்ட மூவர் குழுவினர் தடைப்பகுதியை அணுகினர். கைது செய்யப்பட்டு திருவனந்தபுரம் சிறைக்கு அனுப்பப்பட்டனர்.

1 ஏப்ரல் 1924

கே.பி. கேசவ மேனன் அனுப்பியிருந்த சத்தியாகிரகத் தொடக்கம் பற்றிய செய்திகள் அடங்கிய தந்தியை காந்தியார் பெறுகிறார். சத்தியாகிரகிகள் இன்னும் சிறிது காலம் பிரச்சாரம் செய்யவும் சமாதானப் பேச்சுக்குத் தயார் செய்து கொள்ளவும் ஏதுவாகச் சிறிதுகாலம் போராட்டத்தைத் தள்ளி வைக்கலாம் என காந்தியார் யோசனை அளித்தார்.

7 ஏப்ரல்

இரண்டு நாட்கள் நடந்து பின்னர் ஆறு நாட்கள் நிறுத்தி வைக்கப்பட்ட போராட்டம் இன்று மீண்டும் துவங்கியது. கே.பி. கேசவ மேனன், டி.கே. மாதவன் தடைப்பகுதியை நோக்கி நடந்து சென்று கைதாகினர். ஆறுமாத சிறைத்தண்டனை பெற்றனர்.

9 ஏப்ரல்

ஏ.கே. பிள்ளை, கே. வேலாயுத மேனன், கே. கேளப்பன் கைது செய்யப்பட்டு சிறைத்தண்டனை பெற்றனர்.

10 ஏப்ரல்

இன்று முதல் சத்தியாகிரகிகளைக் கைது செய்வதில்லை. என்று காவல்துறை முடிவு செய்தது. சத்தியாகிரகிகள் பட்டினிப் போராட்டம் தொடங்கினர்,

11 ஏப்ரல்

ஜார்ஜ் ஜோசப், கே.ஜி.நாயர், செபாஸ்டியன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறைத்தண்டனை பெற்றனர்.

13 ஏப்ரல் 

பெரியார் வைக்கம் வந்தார்.

14 ஏப்ரல்

பட்டினிப் போரை நிறுத்துங்கள் என்ற காந்தியாரின் செய்தி சத்தியாகிரகிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது. கோயிலின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் நடந்த போராட்டத்துக்குப் பெரியார் தலைமை வகித்தார். வரதராஜுலு நாயுடு தன் ஆதரவைத் தந்தி மூலம் தெரிவித்தார்.

15 ஏப்ரல்

அய்யாமுத்து வருகை

17 ஏப்ரல்

எஸ்.சீனிவாச அய்யங்கார் வைக்கத்தில் குறிப்பிட்ட வீதிகளைச் சுற்றிப்பார்த்தார்.

21 ஏப்ரல்

டி.ஆர். கிருஷ்ணசாமி அய்யர் கைது.

29 ஏப்ரல்

நாராயண குருவிற்குச் சொந்தமான இடத்திற்குச் சத்தியாகிரகிகள் குடிபெயர்ந்தனர், காந்தியார், வெளியாட்கள் போராட்டத்தில் கலந்துகொள்ள தடைவிதித்தார்.

3 மே

இலவச உணவு அளிக்க அகாலியர் வைக்கம் வருகை.

8 மே

சிரத்தானந்தர் சத்தியாகிரகத் தலைவர்களுடன் சந்திப்பு.

13 மே

கோட்டயம் மாவட்டத்தில் நுழைய பெரியாருக்குத் தடை.

22 மே

பெரியார் முதன்முறை கைது.

26 மே

ராஜாஜி வைக்கம் வருகை.

21 ஜூன்

சத்தியாகிரகிகளின் ராட்டினங்களைக் காவல்துறை கைப்பற்றியது.  பெரியார் அருவிக்குட்டி சிறையிலிருந்து விடுதலை.

ஜூன் – ஆகஸ்ட்

மழை பெய்து வைக்கம் வெள்ளத்தால் நிரம்பியது. சத்தியாகிரகிகள் கழுத்தளவு நீரில் நின்று போராடினர். காவல்துறையினர் படகுகளில் காவலிருந்தனர்.

சத்தியாகிரகத்திற்கு ஆதரவாய் மக்கள் திரண்டனர்.

13 ஜூலை

நாகம்மையார் போராட்டத்தில் கலந்துகொள்ளல்.

18 ஜூலை

பெரியார் இரண்டாம் முறை கைது.

7 ஆகஸ்ட்

மகாராஜா காலமானார், துக்கம் அனுசரித்து போராட்டம் மூன்று நாளைக்கு நிறுத்திவைக்கப்பட்டது.

31 ஆகஸ்ட்

பெரியார், கேபி. கேசவமேனன் உள்ளிட்ட சத்தியாகிரகிகள் திருவனந்தபுரம் மத்திய சிறையிலிருந்து விடுதலை.

1 செப்டம்பர்

சேதுலட்சுமி பாய் பொறுப்பு அரசியாக (Maharani Regent) பதவி ஏற்றார். இன்று சத்தியாகிரகம் இல்லை.

28 செப்டம்பர்

நாராயண குரு சத்தியாகிரக ஆசிரமத்திற்கு வருகை.

2 அக்டோபர்

ஈழவர் தலைவரும், திருவாங்கூர் சட்டசபை நியமன உறுப்பினருமான என். குமாரன் வைக்கம் கோயில் தெருக்களை எல்லா ஜாதியினருக்கும் திறந்துவிடவேண்டும் எனச் சட்டசபையில் தீர்மானம் கொண்டுவந்தார்.

1 நவம்பர்

கோயில் தெருக்களில் தீண்டாதாரை அனுமதிப்பதற்குத் தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்று தெரிவிப்பதோடு அதற்கு அரசு அனுமதியளிக்கக் கோரும் நோக்கத்துடன் உயர்ஜாதியினர் ஒரு பேரணிக்கு ஏற்பாடு செய்தனர். சத்தியாகிரகிகளுக்கு ஆதரவான சவர்ணர்களின் இந்த ஊர்வலம் வைக்கத்திலிருந்து சமஸ்தான தலைநகரான திருவனந்தபுரத்திற்குப் புறப்பட்டது. மன்னத்து பத்மநாபன் இதன் தலைவர். திருவனந்தபுரத்தின் தெற்குப் பகுதியிலிருந்து இத்தகைய இன்னொரு ஊர்வலம் சுசீந்திரத்திலிருந்து புறப்பட்டு தலைநகரம் நோக்கி வந்தது. இதன் தலைவர் எம்பெருமாள் நாயுடு- இன்று சத்தியாகிரகம் இல்லை.

11 நவம்பர்

உயர் ஜாதியினரின் பேரணிகள் திருவனந்தபுரத்தை அடைந்தன.

12 நவம்பர்

மகாராணி ரீஜண்டிடம், 12 பேர் அடங்கிய குழுவினர் பெரிய மகஜரை அளித்தனர். கோயில் தெருக்களை அனைவருக்கும் திறந்துவிட ஆதரவு தெரிவித்து 25,000 ஜாதி இந்துக்கள் அதில் கையொப்பம் இட்டிருந்தனர். மாலை திருவனந்தபுரம் கடற்கரையில் பெரும் பொதுக்கூட்டம். இன்றும் சத்தியாகிரகம் இல்லை.

7 பிப்ரவரி 1925

சுதந்திர நடமாட்டத்திற்கென சட்டசபையில் 2 அக்டோபர் 1924இல் கொண்டு வரப்பட்ட தீர்மானம் விவாதத்திற்குப் பிறகு இன்று வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. 22 – 21 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் அது தோற்றது. அரசாங்கம் இதன் பின்னணியில் இருந்தது எனச் சந்தேகிக்கப்பட்டது.

9 மார்ச்

காந்தியார் வைக்கம் வந்தார்.

10 மார்ச்

காந்தியார் சத்தியாகிரக ஆசிரமத்தில் சத்தியாகிரகிகளைச் சந்தித்துப் பேசினார், மதியம் 2:30 மணிக்கு உயர் ஜாதியினரைச் சென்று சந்தித்தார், மூன்று திட்டங்களை முன்னுரைத்தார். உயர் ஜாதிக்குழு அவற்றை நிராகரித்தது.

12 மார்ச்

காந்தியார் மகாராணி ரீஜண்டை வர்க்கலையில் சந்தித்தார். பிறகு நாராயண குருவையும் காந்தியார் சந்தித்தார். குருவுடனான சந்திப்பின்போது பெரியார், ராஜாஜி, வ.வே.சு.அய்யர் உடன் இருந்தனர்.

13 மார்ச்

காந்தியார் ராஜமாதாவைத் திருவனந்தபுரத்தில் சந்தித்தார். அப்போது பெரியார் திருவனந்தபுரத்தில் இருந்ததாக உறுதிப்படுத்த இயலாத தகவல் உண்டு.

17 மார்ச்

காந்தியாரை உயர் ஜாதிக்குழு சந்தித்து, சங்கர ஸ்மிருதியை ஆதாரமாகத் தந்தது. காந்தியார் வள்ளத்தோல் சந்திப்பு வைக்கத்தில் நிகழ்ந்தது.

18 மார்ச்

காந்தியார் வைக்கத்திலிருந்து புறப்பட்டார். அரசு விருந்தினராக காந்தியார் திருவாங்கூரில் சுற்றுப்பயணம் செய்தபோது உடனிருந்தவர் காவல்துறை ஆணையாளர் பிட் ஆவார். அவரிடம் நடத்திய பேச்சுவார்த்தை அடிப்படையில் வைக்கம் கோயில் பாதையில் மார்ச் 1924 முதல் ஏற்படுத்தப்பட்டிருந்த தடைகளை நீக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஏப்ரல்: திருவாங்கூர் அரசாங்கம் 1924 மார்ச் 24ஆம் தேதி பிறப்பித்த தடை உத்தரவைத் திரும்பப் பெற்றது.

24 ஜூன்

சத்தியாகிரக செயலாளர் கே.கேளப்பன் அறிக்கை.

17 நவம்பர்

தீண்டாமை விலக்குக் குழு தீர்மானம்

23 நவம்பர்

பல மாதங்களாக நடைபெற்ற பேச்சு வார்த்தைகளையடுத்து அரசாங்கம் கோயிலைச் சுற்றியிருந்த மூன்று பாதைகளை அனைவருக்குமெனத் திறந்துவிட்டது. ஒரு துணைப் பாதையையும் உருவாக்கிக்கொண்டது. இது தீர்வு எனப்பட்டது (தேதி ஆதாரம்: மேரி எலிசபெத் நூல்)

29 நவம்பர்

பெரியார் தலைமையில் கேளப்பன் ஏற்பாட்டில் வைக்கத்தில் வெற்றி விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.