சமஸ்கிருதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சமஸ்கிருதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 17 மார்ச், 2020

சமஸ்கிருதம் உயிருள்ளதா? -56

குடிஅரசு,  08.09.1940-லிருந்து...

12.3.2020  அன்றைய தொடர்ச்சி

எனவே, ஆரியவர்க்கத்தார் தங்கள் நிலையை உயர்த்த, தங்கள் செல்வாக்கைப் பாதுகாக்க இந்த 20ஆம் நூற்றாண்டிலே, இவ்வாறு பச்சையாக சரித்திரத்திற்குப் புறம்பானதும், தங்களுக்கு அதைக்குறித்து சிறிதும் அறிவோ, ஞானமோ, இல்லாததுமான காரியத்தை சொல்லத் தயங்கவில்லையானால், அந்நாளில் சூதுவாதற்ற நம்மவர்களை - திராவிடர்களை என்னென்ன சொல்லி ஏய்த்திருக்க வேண்டும் என்று எண்ணிப் பார்க்கக் கோருகிறோம்.

இதுவரை மூர்த்தியார் தங்கள் சமஸ்கிருத மொழியின் பெருமைகளைக் குறித்துக் கூறியதைக் கவனித்தோம். இனி தோழர் சி. ராஜகோபாலாச்சாரியார் என்ன சொல்லுகிறார் என்பதை சிறிது கவனித்தால் ஆரிய ஆதிக்கத்தை நிலைநிறுத்த எத்தகைய முறையைக் கையாளுகிறார்கள் என்பது புலனாகும் என்று கருதுகின்றோம். சென்ற மாதம் 31ஆம் தேதியில் திருநெல்வேலி எம்.டி.டி. இந்து காலேஜ் சமஸ்கிருத ஆரம்ப விழாவில் தோழர் சி. ராஜகோபாலாச்சாரியார் “சமஸ்கிருதத்தின் பெருமை களைக் குறித்துப் பேசுகையில் சமஸ்கிருதம் இறந்துபோன பாஷையென்று சொல்வதைக் கண்டிக்கிறேன். சமஸ்கிருதம் உயிருள்ளது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

சமஸ்கிருதம், ஆரிய மொழி (இது நாம் சொல்லும் பெயரல்ல. ஆங்கில இலக்கணாசிரியர்களே சமஸ்கிருதம் ஆரிய வர்க்கத்தைச் சேர்ந்தது என வகுத்திருக்கின்றனர்) இறந்துபோன மொழியென்றும், ஆரிய துவேஷிகளோ, பார்ப்பன துவேஷி களோ, சுயமரியாதைக்காரர்களோ, ஜஸ்டிஸ் கட்சிக்காரர்களோ சொல்லுவதாக யாரும் எண்ணவேண்டாம். மொழி ஆராய்ச்சியாளர்களே, மொழிக்கு இலக்கணம் எழுதினவர்களே அவ்வாறு  கூறியிருக்கின்றனர். எம்மொழி பழைய எழுத்துச் சுவடியில் அதாவது எழுத்து வழக்கில் மட்டுமிருக்கிறதோ அதற்கு இறந்த மொழியென்றும், எம்மொழி எழுத்து வழக்கிலும் பேச்சு வழக்கிலுமிருக்கிறதோ அதற்கு உயிருள்ள மொழிகள் எனவும், ஆராய்ச்சியாளர் வகுத்திருக்கின்றனர். ஆங்கிலத் தில் அதைக் குறித்து எழுதியிருப்பதை  அப்படியே வாசகர்களுக்கு சமர்ப்பிக்கிறோம். அதாவது,

“A living language is one which is used in common speech. A language which has ceased to be spoken but is found in writings of the Past is a Dead Language. Sanskrit and Latin are dead Languages " என எழுதப்பட்டிருக்கிறது.

இறந்த மொழிக்கு உள்ள லட்சணம், இன்னது இந்த லட்சணத்தை உடைய மொழிகள், இறந்த மொழிகள் என்று சொல்லுகையில், “நான் அவ்வாறு சமஸ்கிருதத்தை இறந்த மொழியென்று சொல்லுவதைக் கண்டிக்கிறேன். சமஸ்கிருதம் இறந்த மொழியன்று” என்று சொல்லி காரணம் கூறாமல் ஆத்திரப்பட்டுக் கண்டிக்க முன்வருவதை அறிவுலகம் ஏற்றுக்கொள்ளுமா? என்று கேட்கிறோம்.

இதுவரை சமஸ்கிருதம் இறந்த மொழி என்று சொல்லப்பட்டு வந்திருக்க, அதைப்பற்றிச் சிறிதும்கவலை கொள்ளாது, இன்று மட்டும்  இவர் இவ்வாறு ஆத்திரங்கொள்ளக் காரணம் என்ன என்றால், திராவிடர்கள் விழிப்படைந்து விட்டார்கள், சமஸ்கிருதம் இறந்த மொழியென்று சொல்லி வருவது மறைக்கப்படாவிட்டால், “இறந்த மொழியாகிய சமஸ்கிருதம் இந்நாட்டிற்கு என்ன அவசியம்? அதற்கு ஏன்  ஒவ்வொரு  உயர்தரக் கலாசாலைகளிலும் தனிப் பண்டிதரும் அதற்கு கரிக்குலத்தில் அதாவது பாடத் திட்டத்தில் தனி இடமும் கல்லூரிகளில் சமஸ்கிருத பேராசிரியர்களும் என்று கருதி அதை ஒழித்து விடுவார்கள்” என்ற அச்சத்தைத் தவிர, வேறு என்னவாயிருக்க முடியும் என்று கேட்கிறோம்.

அதோடு நின்றார் இல்லை ஆச்சாரியார். சமஸ்கிருதம் தெரியாத இந்தியனுக்கு எந்நாட்டிலும் மதிப்பில்லை எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இது எவ்வளவு விஷமுள்ள ஆணவமான பேச்சு என்பதை எண்ணிப்பார்க்கக் கோருகிறோம். இந்தியன் என்று சொல்லிக் கொள்ள விரும்புகிறவன் உலகத்தினரால் மதிக்கப்படவேண்டும் எனக் கருதினால்தானே சமஸ்கிருதம் தெரிந்திருக்கவேண்டும். அதனால்தான் திருவாரூர் ஜஸ்டிஸ் மாநாட்டில் திராவிடன் தன்னை இந்தியன் என்று சொல்லிக்கொள்ளக் கூடாதென்றும், தன்னை இந்து என்று சொல்லிக்கொள்ளக் கூடாதென்றும் தீர்மானம் நிறைவேற்றப் பட்டிருக்கிறது.

எனவே, ஆச்சாரியார் வாதப்படி இந்தியன் என்று எவன் தன்னைச் சொல்லிக் கொள்ளுகிறானோ, எவன் தன்னை உலகோர் மதிக்க வேண்டுமென எண்ணுகிறானோ அவன்தான் சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டுமென்பதும், திருவாரூர் மாநாட்டு தீர்மானப்படி, திராவிடர் என்று சொல்லிக் கொள்கிற வனுக்கு சமஸ்கிருதம் தெரியவேண்டிய அவசிய மில்லையென்பதும் நன்கு விளங்கும்.

இதிலிருந்தாவது ஆரியவர்க்கத்தினர், தங்கள் மொழி யைக்  குறித்து எவ்வளவு உயர்வு கொண்டிருக்கின்றனர் என்பதையும், தமிழ் மொழியையோ அல்லது வேறு மொழி களையோ குறித்து எவ்வளவு தாழ்வு கொண்டிருக்கின்றனர் என்பதையும், எண்ணிப் பார்க்கவே கோருகிறோம். கடைசியாக, ஆரியத்திற்கு இந்நாட்டிலே சாவுமணி அடித்தாய் விட்டது என்பதை ஆரியவர்க்கத்தினர் நன்கு உணர்ந்து கொண்டுவிட்டனர் என்பதையும், அதன் காரணமாக சரித்திரத்திற்கும், உண்மைக்கும் புறம்பானதும் பொருத்தமற்றதுமான காரியங்களைச் சொல்லி எப்படியாவது ஆரிய ஆதிக்கம் நிலைக்க அருமுயற்சிகள் எடுத்து வருகிறார்கள் என்பதையும், இப்பொழுதே திராவிடர்கள் விழிப்பாயிருந்து மக்களுக்கு அவ்வப்போதே உண்மையை விளக்கி, சரித்திர ஆதாரங்களை எடுத்துக்காட்டி ஆரிய சூழ்ச்சியை வெளிப்படுத்த வேண்டுமென்பதும் விளங்குகிறது அல்லவா? என்று கேட்கிறோம்.

இதைச் செய்ய ஒவ்வொரு திராவிடரும் முன் வருவார்களாக

- விடுதலை நாளேடு 17 3 20

வெள்ளி, 13 மார்ச், 2020

சமஸ்கிருதம் உயிருள்ளதா?

குடிஅரசு,  08.09.1940-லிருந்து...

இந்தி மொழி கட்டாயப் பாடமாக திராவிட நாட்டில், காங்கிரஸ் (ஆரிய) மந்திரிகளால் புகுத்தப்பட்ட காலையில், இந்தி ஆரிய வர்க்க மொழியென்றும், அம்மொழி கட்டாயப் பாடமாக சிறுவர்களுக்குக் கற்பிக்கப்படுமேயாகில், திராவிடச் சிறுவர்கள், எதிர் காலத்தில், திராவிடக் கலை, நாகரிகம், பழக்கம், வழக்கம் ஆகியவைகளை மறந்து ஆரியத்திற்கே அடிமையாய் விடுவார்கள் என்றும், மக்களின் வாழ்க்கையைத் திருத்துவதற்கு ஒரு ஒழுங்குபடுத்துவதற்கு கல்வியைத் திருத்தியமைத்தால் போதும் என்றும், அதை இன்று ரஷ்யா, ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளில் கண்கூடாகப் பார்க்கலாம் என்றும், எனவே, இந்திமொழி கட்டாயப் பாடமாக புகுத்தக்கூடாதென்று கூறி மறுத்து வந்தது எவ்வளவு உண்மையானது என்பதை  சமீபகாலமாக இந்(திராவிட) நாட்டிலுள்ள ஆரிய வர்க்கத்தினர் சாஸ்திரிகளும், ஆச்சாரிகளும் பேசிவருவதும், அறிக்கைகள் விடுவதும் நன்கு விளக்கும்.

ஆரிய ஆதிக்கத்தை ஆரிய செல்வாக்கை இந்நாட்டை விட்டு விரட்டியடிக்க, குழி தோண்டிப் புதைக்க திராவிடர்கள் விழிப்படைந்து விட்டார்கள். தூங்கினவன் தொடையில் கயிறு திரிப்பது இனி செல்லாது என்பதை உணர்ந்துதான் ஆரிய வர்க்கத்தார், அதை நிலைநிறுத்த வேறு வழி செய்தால் பலிக்காது என்று கருதி மொழியின் மூலமாக இஞ்சக்‌ஷன் செய்ய முனைந்திருக்கின்றனர்.

நாம் ஒன்று மிகைப்படுத்தியோ, அல்லது அவர்களைப் போல் கற்பனை செய்தோ கூறுவதாக யாரும் கருதவேண்டிய தில்லை. நாம் சொல்வது எவ்வளவு ஆதாரமுடைய தென்பது இந்நாட்டில் பத்திரிகைகள் படிப்போர்களுக்கு நன்கு தெரியவரும். அவர்கள் ஒரு நாளும் நாம் சொல்வதை மறுக்க முன்வரார் என்றே கருதுகிறோம். உதாரணத்திற்காக இரண் டொருவர் பேசியதை மட்டும் எடுத்துக் காட்டினால் வாசகர்கள் உண்மையை உணர்ந்துகொள்ள முடியுமெனக் கருதுகிறோம். சென்ற 2ஆம் தேதி சென்னையில் பச்சை யப்பன் கல்லூரி சமஸ்கிருத மாணவர் சங்க ஆதரவில் நடை பெற்ற ஒரு கூட்டத்தில் சத்தியமூர்த்தி சாஸ்திரியார் பேசுகை யில், “தமிழுக்கு சமஸ்கிருத சம்பந்தம் ஏற்பட்டதினால்தான் வளர்ச்சியும் பெருமையும் ஏற்பட்டதென்று நான் கூறுவேன்” என்று கூறியிருக்கிறார்.

நியாயப்படி இவர் சொல்லியிருக்க வேண்டியது, “தமிழுக்கு சமஸ்கிருத சம்பந்தம் ஏற்பட்டதினால்தான் இழிவும், சிறுமையும் ஏற்பட்டிருக்கிறதென நான் கூறுவேன்” என்பதாகும். இதற்குத்தான் என்று கட்டாய இந்திப் போர் இந்நாட்டில்  துவக்கப்பட்டதோ அன்று முதல் நாளது வரை சமஸ்கிருத மொழியால், தமிழ் மொழி எந்தெந்த வகைகளில் வளர்ச்சி குன்றி பெருமையிழந்து சிறுமையுற்றிருக்கிறதென்று ஆதாரங்களுடன் தமிழ்ப் பேராசிரியர்கள் முதல் பண்டிதர்கள் ஈறாகக் கட்டுரைகள் வெளியிட்டும், பிரசுரங்கள் பிரசுரித்தும், வாதங்கள் நடத்தியும் வந்திருக்கின்றனர் என்பதை வாசகர் கள் இதற்குள் மறந்திருக்க மாட்டார்கள் என்றே கருதுகிறோம்.

சமஸ்கிருத சம்பந்தத்தினால்தான் தமிழ் மக்களை, ஒரு சாதாரண கலியாணப் பத்திரிகையைக் கூட சமஸ்கிருத மொழிக் கலப்பில்லாமல் எழுதமுடியாத நிலைக்குக் கொண்டு வந்து விட்டதென்றால், இதை யாரும் மறுக்க முன்வருவார் என்று நாம் நம்பவில்லை. இத்தகைய நிலைமை உலகில் வேறு எந்நாட்டிலேனும் இருப்பதாக இவர் சொல்ல முன் வருவாரா என்று கேட்கிறோம். ஒரு ஆங்கிலேயன் ஆங்கிலத்தில் கலியாணப் பத்திரிகையை எழுதவும், ஒரு பிரஞ்சுக்காரன் பிரஞ்சு மொழியில் எழுதவும், ஒரு ஜப்பானியன் ஜப்பானிய மொழியில் எழுதவும் முடியாத நிலையிலும் இருக்கிறானா என்று எடுத்துக்காட்ட முடியுமா என்று எண்ணிப்பாருங்கள்.

இன்று பள்ளிக் கூடங்களில், கணிதம். பூகோளம், சரித்திரம், ரசாயனம், பவுதிகம் ஆகியவைகளில் வழக்கி லிருந்து வரும் எண்ணற்ற சொற்கள் தமிழ்ச் சொற்கள் என்று எந்த தமிழ் மகனாவது  ஒப்புக்கொள்வானா என்று கேட் கிறோம். இவை களுக்கு தமிழ் மொழியில் சொற்கள் இல்லாது ஒழிந்துவிட்டனவா? இல்லை. எல்லாவற்றிற்கும் இருக் கின்றன. அப்படியிருந்தும் ஏன் சமஸ்கிருத மொழிச்சொற் களை உபயோகித்து வருகின்றனர் என்றால், சமஸ்கிருத மொழிக்கு உயிரைக் கொடுத்து தமிழ்ச் சொற்களை வழக்கிலி ருந்து மறையச் செய்ய வேண்டும் என்ற சூழ்ச்சியைத் தவிர, வேறு என்னவாயிருக்க முடியும் என்று கேட்கிறோம்.

இவ்வாறு தமிழ் மொழியின் சொற்களை சொல் வழக்கிலிருந்து மறையச் செய்து அவ்வெழுத்துக் கொண்ட சமஸ்கிருத மொழிச் சொற்களை வளர்ப்பதுதான் தமிழ் மொழி வளர்ச்சியடைவதும் பெருமையடைவதும் என்ப தற்கு அறிகுறியா என்று கேட்கிறோம்.

எனவே, சமஸ்கிருதமொழிக் கலப்பால் தமிழ்மொழி எவ்வகையிலும் வளர்ச்சி பெறவோ, பெருமையடையவோ இல்லையென்பதும் அதற்கு மாறாக தமிழ் மொழி சிதைவுற்று அதன் பண்டைய பெருமையெல்லாம் அழிவுற்றுமிருக்கிறது என்பதும் விளங்கும்.

ஒரு மொழி, மற்றொரு மொழியுடன் சம்பந்தம் கொள்வதால் சம்பந்தம் கொள்ளும் மொழி கேடுறாது, சிதைவுறாது என்று கூறும் மூர்த்தியாருக்கு இரண்டு மொழிகளைக் குறித்து எவ்வளவு ஞானம் - அறிவு இருக்கிறது என்று முதலில் ஒரு வினா எழும். அந்த வினாவுக்கு  அவரது பேச்சிலே விடையிருக்கிறது. அதாவது, “நான் தமிழில் ஒரு நூல்கூட வாசித்ததில்லை. சில நாவல்கள் மட்டுமே படித்திருக்கிறேன். சமஸ்கிருதத்தில் எனக்கு கொஞ்சம் பரிச்சயம் உண்டு” எனக் குறிப்பிட்டிருக்கிறார். இது செப்டம்பர் 3 ஆம் தேதிய சுதேசமித்திரன் 5 ஆம் பக்கம்  3 ஆம் கலம் தலைப்பிலிருந்து 9 ஆம் வரியிலிருந்து 4, 5 வரிகளில் காணக்கிடக்கிறது.

எனவே, ஒரு மொழியின் கலப்பால் மற்றொரு மொழி கெடாது என்று கூறும் - வாதிக்கும் வாதம் நியாயமானதா நியாயமற்றதா என்பது ஒரு புறமிருந்தாலும் வாதிக்க அவருக்கு அருகதையிருக்கிறதா என்பதை முடிவு கட்டும் பொறுப்பை வாசகர்களுக்கே விட்டுவிடுகிறோம். இவ்வாறு, முன்னுக்குப்பின் சம்பந்தமில்லாமல் பேசிவருகிறார்களே, அதையும்  பத்திரிகை களில் பிரசுரித்து வருகிறார்களே யென்றால், அது நம்மவர்களின் ஏமாளித்தனத்தை அல்லாது வேறு எதைக் காட்டுகிறதென்று கேட்கிறோம். ‘தட்டிக்கேட்க ஆள் இல்லையேல் தம்பி சண்டப்பிரசண்டன்தான்’ என்று நாட்டிலே சொல்லுவார்கள். அவ்வாக்கு இன்று இவர்களுக்குத் தான் பொருத்தமாயிருக்கிறது. இவ்வாறு முரணாகப் பேசிவருவதை இமைகொட்டாமல் மக்கள் கேட்டுக் கொண்டிருந்த தினால்தான் சிறிதும் சரித்திரத்திற்கும் உண்மைக்கும் மாறாக கம்பன் சமஸ்கிருதத்தில் சிறந்த பண்டிதர் எனக் கூறியிருக்கிறார்.

கம்பன் சிறந்த சமஸ்கிருத பண்டிதர் என்று எந்த ஆதாரத்தின் மீது மூர்த்தியார் கூறுகிறாரோ நாமறியோம். கம்பனுக்கு சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டிருந்த இராமாயணத்தை சமஸ்கிருத பண்டிதர்கள் வாசித்து விளக்க, அதைக் கேட்டு கம்பர் தமிழில் எழுதினார் என்று இராமாயணத்திலே சான்று இருக்கிறது. அதை மூர்த்தியார் பார்த்ததில்லையா? எவ்வாறு பார்த்திருக்க முடியும்? அவருக்குத்தான் தமிழில் சில நாவல்களைத் தவிர, வேறு எந்த நூலும் தெரியாதே, அப்படியிருக்க, அதை அவர் எப்படி பார்த்திருக்க முடியும்?

தொடரும்....

- விடுதலை நாளேடு, 12.3.20

செவ்வாய், 10 மார்ச், 2020

சமஸ்கிருத "சனியன்" (தேசியத் துரோகி) - 54

தேசியத் துரோகியாகிய நாம் கூறும் விஷயங்கள் முழுவதும், எழுதும் சங்கதிகள் எல் லாம், மக்களுக்குப் பயன்படாத பழைய காரியங்களில் ஆசையுடையவர் களுக்கு வெறுப்பாகத்தான் இருக்கும். ஆனால் அதைப் பற்றி அதாவது எவருடைய வெறுப்பைப் பற்றியும் எதிர்ப்பைப் பற்றியும் நாம் கவலைப் படுவது கிடையாது. ஆகவே இப்பொழுது ஒரு தேசியத்தைக் கண்டிக்கவே இந்த முகவுரையைக் கூறிக் கொண்டு முன்வந்தோம்.

சென்னை மாகாணத்தில் கல்வியிலாகாவில் சிக்கனம் செய்வதைப் பற்றி ஆலோசனைக் கூறிய சிக்கனக் கமிட்டியார் கூறியிருக்கும் யோசனைகளில் சென்னைப் பிரசிடென்சிக் கல்லூரியில் உள்ள சமஸ்கிருத ஆனர்ஸ் வகுப்பை எடுத்து விட வேண்டும் என்பதும் ஒரு யோசனையாகும்.

உண்மையிலேயே, தேசமக்கள் கல்வியினால் அறிவு பெறவேண்டும்; கல்வியினால் பகுத்தறிவு பெறவேண்டும் என்று விரும்புகின்றவர்கள் சமஸ்கிருதக் கல்வியை எடுத்து விடுவது பற்றிக் கொஞ்சமும் கவலையோ, வருத்தமோ அடையமாட்டார்கள். ஏனென் றால் இன்று இந்து மதம் என்று சொல்லும் ஒரு கொடுமையான மதம் இருப்பதற்கும், இந்த இந்து மதத்திலிருந்து பிறந்த ஜாதிக்கொடுமை, சடங்குக்கொள்ளை, கடவுள் முட்டாள் தனம் ஆகியவைகள் கற்றவர்கள் கூட்டத்திலும், கல்லாத வர்கள் கூட்டத்திலும், தலைவிரித்தாடி அவர்கள் உழைப் பையும், அறிவையும், சுதந்திரத்தையும் கொள்ளை கொண்டிருப்பதற்கும் காரணம் சமஸ்கிருதமேயாகும். இன்று வருணாசிரமக்காரர்கள் சனாதன தருமம் காப்பாற்றப்பட வேண்டும் என்று சொல்லுவதற்கும், சுயராஜ்யத்தைவிட சனாதன தருமமும், வருணாசிரம தருமமும் காப்பாற்றப்படுவதே முக்கியமானதென்று சொல்லுவதற்கும் சமஸ்கிருதப் பாஷைப் படிப்பும் அதில் உள்ள நூல்களுமே காரணமாகும்.

தீண்டத்தகாதவர்களைத் தெருவில் நடக்கக் கூடாது; கோயிலுக்குள் செல்லக்கூடாது; குளத்தில் குளிக்கக் கூடாது; பள்ளிக்கூடத்தில் சேர்ந்து படிக்கக்கூடாது என்று சொல்லுவதற்கும் காரணம் சமஸ்கிருத நூல்களேயாகும். சாரதா சட்டம் போன்ற சீர்திருத்தச் சட்டங்களைச் செய்யக்கூடாது என்று சொல்லுவதற்கும், பொட்டுக் கட்டு வதைத் தடுக்கும் சட்டம், பிரஜா உற்பத்தியைக் கட்டுபடுத்துவதற்கு உதவியளிக்கும் சட்டம், பெண்கள் சொத்துரிமைச் சட்டம், விவாக விடுதலைச் சட்டம் முதலியவைகளை மத விரோதமானவைகள் என்று கூறித் தடுப்ப தற்கும் திரு. சிவராஜ், பி.ஏ., பி.எல்., எம்.எல்.சி. அவர்களை எங்கும் எதையும் தின்னும் பார்ப் பனர், பார்ப்பனரல்லாதார் கூடிய சென்னை காஸ்மா பாலிட்டன் கிளப்பில் அங்கத்தினராகச் சேர்த்துக்கொள்ள மறுத்ததற்கும் காரணமாயிருப்பவை சமஸ்கிருத நூல்களேயாகும். சீர்திருத்தத்திற்கு விரோதமாகக் கிளர்ச்சி செய்து குரைத்துக் கொண்டு தொண்டை வீங்குகின்ற வர்ணாசிரமக் கூட்டத்தார்கள் எல்லோரும் தங்கள் கொள்கைகளுக்குச் சமஸ்கிருத, வேத, புராண, இதிகாச, ஸ்மிருதிகளையே பிரமாணங்களாகக் காட்டுகின்றனர். அவை என்ன சொல்லுகின்றனவென்று கவனிக்கின் றார்களே ஒழிய தங்கள் அறிவு என்ன சொல்லுகின்றது? உலகப் போக்கு என்ன சொல்லுகின்றது? என்று கொஞ்சங்கூடக் கவனிக்கின்றார்களில்லை. இவ்வாறு கவனிக்கக் கூடிய அறிவு அவர்களிடம் இல் லாதபடி அவர்கள் மூளையை அந்தச் சமஸ்கிருதப் பழங்குப்பைகளாகிய சாஸ்திரங்கள் என்பன உறிஞ்சி விட்டன. ஆகையால் இனி வருங்கால இளைஞர்களின் நல்ல தூய்மையான மூளைகளிலாவது கோளாறு ஏற்படாமல் இருக்க வேண்டுமானால் அவர்களிடம் மூட நம்பிக்கைகளும், சுயநலமும் உண்டாகாமல் பகுத்தறிவும், சமதர்ம நோக்கமும் உண்டாக வேண்டுமானால் சமஸ்கிருதக் கல்வியை அடியோடு ஒழிக்க வேண்டியதே முறையாகும்.

ஆனால் நமது நாட்டில் உள்ள சமஸ்கிருதப் புராணக் குப்பைகளாலும் அவைகளைப் பார்த்துச் செய்த தமிழ்ப்புராணக் கூளங்களாலும், குடிகொண்டிருக்கும் மூட நம்பிக் கைகள் போதாதென தேசிய ஆடைகளைப் புனைந்து இந்தி என்னும் பாஷையையும் கொண்டு வந்து நுழைத்துக் கொண்டு பார்ப்பனர்கள் நம் மக்களை ஏமாற்றுகிறார்கள்.

இந்தியைப் பரப்புவதற்காகப் பார்ப்பனர் பிரயாசைப்படுவதற்குக் காரணம் அதன் மூலம் மீண்டும் வருணாசிரம தருமத்தையும், புராண நம்பிக்கை, மத நம்பிக்கை, பிராமண பக்தி, சடங்கு பக்தி முதலியவைகளை விருத்தி செய்து தங்கள் பழைய கவுரவத்தையும், ஏமாற்று வயிற்றுப் பிழைப்பையும் புதுப்பித்துக் கொள்ளலாம் என்பதற்காகவே என்பது சுயமரி யாதைக்காரர்களுக்குத் தெரியாத விஷயமல்ல. ஆகையால் இத்தகைய பார்ப்பனர்கள் இந்த இந்தி பாஷை முதலானவை களுக்கெல்லாம் அடிப்படையாக இருக்கும் சமஸ்கிருதத் தைக் கைவிட சம்மதிப்பார்களா? ஒருக்காலும் சம்மதிக்க மாட்டார்கள்.

ஆகையால்தான் பார்ப்பனர்கள் ஊருக்கு ஊர் கூட்டங்கூடி சென்னை அரசாங்கச் சிக்கனக் கமிட்டியர் பிரசிடென்சி கல்லூரியில் உள்ள சமஸ்கிருத ஆனர்ஸ் வகுப்பை எடுக் கும்படி சிபாரிசு செய்ததைக் கண்டிக் கிறார்கள்.

பொருளாதார நிலையைப் பற்றிய கவலையும் அவர்களுக்கில்லை. எந்தப் பொருளாதாரம் எக்கேடு கெட்டாலும் தங்கள் சுயநலத்திற்குத் துணை செய்கின்ற மதமும் அதற்குச் சாதகமாய் இருப்பவைகளும் காப்பாற்றப்பட வேண்டும் என்பதே அவர்களின் கொள்கையாக இருந்து வருகின்றது.

காப்பி கிளப்பு பார்ப்பான், உத்தியோகப் பார்ப்பான், அரசியல் பார்ப்பான், சட்ட மறுப்புச் செய்து ஜெயிலுக்குப் போகும் பார்ப்பான் உள்பட எல்லோரும் இக்கொள் கையைக் கைவிடாமலே வைத்துக் கொண்டு வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் ஆகையால் இச்சமயத்தில் நாமும் கிளர்ச்சி செய்ய வேண்டும். பார்ப்பனர்களின் வெறுங் கூச்சல்களுக்குப் பயந்து கொண்டு அரசாங்கத்தார் சிக்கனக்கமிட்டியில் சிபாரிசைக் கைவிட்டு விடக் கூடாதென எச்சரிக்கை செய்யவேண்டும். சில பார்ப்பன ரல்லாதவர் வாலிபர் சங்கங்களிலும், சுயமரியாதைச் சங்கங்களிலும், சிக்கனக் கமிட்டியின் யோசனையைப் பாராட்டியும் இன்னும் சமஸ்கிருத கல்விக்காகக் கொடுக்கும் உபகாரத் தொகையை நிறுத்தும் படியும் தீர்மானங்கள் செய்து அரசாங்கத்திற்கு அனுப்பியிருக்கிறார்கள்.

இவ்வாறே நாடெங் கும் பலத்தீர்மானங்கள் செய்து அரசாங்கத் தாரை எச்சரிக்கை செய்ய வேண்டும். அப் பொழுதுதான் சமஸ்கிருதச் சனியன் ஒழியும்.

17. 01. 1932 - குடிஅரசு

- விடுதலை நாளேடு, 10.3.20

சனி, 1 பிப்ரவரி, 2020

சமுதாய வாழ்வும் சமற்கிருத மயமாக்கப்பட்ட கல்வி அறிவும் - 45

பேராசிரியர் கு.வெ.கி. ஆசான்

பெரியார் திறந்த பல்கலைக் கழகம் 9-3-1985, 10-3-1985 ஆகிய இருநாள்களிலும் சென்னையில் அறிஞர் பெருமக்கள் பங்கேற்ற சமஸ்கிருதமயம் - ஆதிக்கம் (Sanskritisation) பற்றிய ஒரு கருத்தரங்கத்தை நடத்தியது. அதில் ஆராய்ச்சி பூர்வமான கருத்துரைகள் எடுத்து வைக்கப்பட்டது.

சமுதாய வாழ்வும் சமற்கிருத மயமாக்கப்பட்ட கல்வி அறிவும் எனும் பொருள் பற்றிய கருத்தரங்கில் கு.வெ.கி. ஆசான் ஆற்றிய உரை வருமாறு:

1.            உரிமை வாழ்வே வாழ்வு; உரிமை வேட்கை மனிதனுக்கு இருக்கும் தனி இயல்பு; உரிமை விழைவின் விளைவு சமனியச் சமுதாயம்; நாணயம் ஒன்றின் இரு வேறு பக்கங்களைப் போல், உரிமையும் சமனியமும் ஒரு நிலையின் இரு அடிப்படைக் கூறுகள். உரிமையை வேண்டாதவர் சமனியத்தைப் பெறுவதில்லை; சமனியம் அற்ற இடத்தில் உரிமை நிலைப்பதில்லை.

2.            இயக்கம் உலக இயல்பு. இயக்கத்திற்குத் தக ஏற்படும் சமுதாய மாற்றத்திற்கு ஈடுகொடுப்பவர்களே சமனிய உரிமை வாழ்வைப் பெற முடியும்; மற்றவர்கள் பின்தங்கி விடுவர். முற்போக்கான மாற்றத்தை மேற்கொள்ள அறிவுத் தெளிவும் அதற்கான கல்வியும் தேவை.

3.            நாகரிக வாழ்வில் நாளும் மேன்மையடைய, உடலையும் உள்ளத்தையும் வளர்க்க வேண்டியிருப்பதால், அவ்வளர்ச்சிக்கு ஆதாரத் துணையாகும் கல்வியைப் போற்றிப் பெறவேண்டியது, இன்றியமையாதது ஆகிறது. கல்வியும் அறிவும் பெறாதவர்கள் மாறுதலுக்குத் தக முன்னேறாமல் பின்தங்கிவிடுகிறார்கள். பின்தங்கித் தேங்கியவர்களை, முன்னேறியவர்கள் ஒதுக்கவும் ஒடுக்கவும் முடிகிறது. இதனால் சமுதாயப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுகின்றன. ஏற்றம் பெற்றவர்கள் தாழ்ந்துவிட்டவர்களின் உரிமையைப் பறித்து சுரண்டுகிறார்கள். இதன் விளைவு என்ன? ஜெனிவாவில் பிறந்து பதினெட்டாம் நூற்றாண்டில் ஃபிரான்சு நாட்டில் வாழ்ந்த அறிஞன் ரூசோ சொன்னதுபோல், கட்டற்றதாகப் பிறப்பெடுத்த மனித இனம் இப்பொழுது எங்கும் கட்டுண்டு கிடக்கிறது. தன்னுடைய சமுதாய ஒப்பந்தம் எனும் நூலில் இக்கருத்தைக் கூறும் ரூசோ, இதற்குத் தீர்வு காணக் கல்வியின் தேவையை அறிந்த காரணத்தினாலோ என்னவோ, ஆய்மீல் (Emile) எனும் நூலில் புதுமைக் கல்வித் திட்டம் ஒன்றை 1762இல் வகுத்தளித்தான்.

4.            உரிமை, சமனியம், இயக்கம், மாற்றம், முன்னேற்றம், நாகரிக வளர்ச்சி எனும் வகையில் சுழலும் மனித வாழ்வில் அச்சாணியாக அமைவது கல்வி. ஏனென்றால் உரிமை முதலான அனைத்திற்கும் விளக்கம் தரும் அறிவு அதனால் பெறப்படுகிறது. இவ்வளவு முகாமையான கல்வியைப் பேணும் இனம் வாழும், உயரும்; பேணாத சமுதாயம் வீழும்; தாழும்! கடந்த சுமார் ஆயிரத்து அய்நூறு ஆண்டுகட்கு மேலாகத் தமிழர் தமக்குரிய கல்வியைத் துறந்ததால், இழந்ததால் வீழ்ச்சியுற்றனர். அப்படி அவர்கள் கல்வியைத் துறந்தது ஏன் எனும் வினாவிற்கு விடை காண, சமற்கிருத மயமாக்கம் எனும் போக்கினைத் தெரிவது பயன் தரும்.

5.            சமற்கிருத மயமாக்கம் எக்காலத்தில், ஏன் நிகழ்ந்தது? தமிழாக்கத்தைப் பொறுத்தவரை சங்க காலத்தில் சிறிதே தலைகாட்டிய சமற்கிருத மயமாக்கம், களப்பிரர் இடையீட்டிற்குப்பின், பல்லவர் காலம் முதல் அய்ரோப்பியர் ஆட்சி தொடங்கும் வரை மெல்ல மெல்லப் பரந்த அளவிலும் ஆழமான முறையிலும் இங்கு கால்கொள்ள முற்பட்டது. செல்வாக்கோடு நிலவியும் வந்தது. அய்ரோப்பிய - ஆங்கிலேய புதிய கல்வி நிருவாக சமூக அமைப்பின் தாக்கத்தாலும், இந்நாட்டில் தோன்றிய மறுமலர்ச்சி, தன்மானப் பகுத்தறிவு இயக்கங்களாலும் அதன் பிடி மெல்லத் தளர்ந்து வருகிறது. இன்னும் மறைந்து வரவில்லை.

6. ஆரியர், இந்தியாவிற்கு வருவதற்கு முன் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என வாழும் இடத்தின் அடிப்படையில் வாழ்க்கை முறையும், அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் எனத் தொழில் அடிப்படையில் சமூக அமைப்பும் பகுக்கப்பட்டிருந்தன. ஆனால், ஆரியர் வருகைக்குப்பின், வருண தருமத்தின் அடிப்படையில் பிரம்ம, சத்திரிய, வைசிய, சூத்திரப் பாகுபாடுகள் பிறப்பின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டன. ஆரிய, திராவிடர் இடையே நாளடைவில், குருதிக்கலப்பு ஏற்பட்டாலும், பிறப்பின் அடிப்படையில் சலுகைகள் அனுபவித்தவர்கள், பார்ப்பன ( பிராமண ) மேலாண்மையின் கீழ் அமைந்த ஜாதி ஏற்பாட்டின் மேல்-கீழ் படிநிலைகளை விட்டுவிடாமல் உறுதியாக நிலைப்படுத்துவதற்கான சமய, சமூக, அரசியல் ஏற்பாடுகளைச் செய்துவிட்டார்கள். சமற்கிருத மயமாக்கம் என்பது இந்த ஏற்பாடுகளின் ஒரு வடிவமே ஆகும்.

7. சமூகவியல் அறிஞர் எம்.என். சீனிவாசன் அவர்கள், சமற்கிருத மயமாக்கம் என்னும் பொருள்படும் Sanskritization என்னும் சொல்லை ஆக்கினார் என்பர். அவர் எப்பொருளில் அச்சொல்லை பயன்படுத்தியிருப்பினும், சமற்கிருத மய மாக்கம் எனும் சொற்றொடரை இக்கட்டுரையில் பயன் படுத்தும் பொருளை வரையறை செய்தல் முறையாகும். பண்டிதப் பார்ப்பனச் சிறுபான்மையர்கள் மதம், சாத்திரம், சடங்கு, பழக்க வழக்கம், கலை, இலக்கியம் போன்றவற்றைப் பயன்படுத்தி, உழைக்கும் மக்களின் மனங்களை நல்ல கல்வி அறிவு பெறாத, தெளிவற்ற மயக்க நிலையில் நிறுத்தி, அவர்களை என்றும் பாமரர்களாகவே வைத்து, சூத்திர பஞ்சமராகத் தாழ்த்தி, ஆட்சியாளரின் வலிமையைத் துணை கொண்டு, சமூகப் பொருளாதார மேலாண்மையை நிலைப் படுத்திக்கொள்ள உதவும் ஒரு பண்பாட்டு ஏற்பாடுதான் சமற்கிருத மயமாக்கம் ஆகும்.

8.            சமுதாயத்தின் ஒரு குறிப்பிட்ட வடிவமைப்பின் ( A particular frame -work) முகம் ஒன்றாகச் சமற்கிருத மயமாக்கம் அடைகிறது. உழைப்பிற்கு உரிய மதிப்பளிக் காமையும் பிறப்பின் அடிப்படையில் ஜாதி உயர்வு-தாழ்வு கற்பிப்பதும், வெகு மக்களின் கல்வியையும், மொழியையும் புறக்கணித்து அவர்களை ஒதுக்குவதும், கருத்தையும் காரியமாற்றுதலையும்,  (Theory and Practice) வெவ்வேறு பகுதியினருக்கு உரியனவாகப் பிரித்து அமைத்தலும் இந்துமதம் எனப்படுவதின் நடப்புக்கூறுகள் ஆகும். வருண தருமம், சதுர்வருணியம், பிராமணியம், சனாதன தருமம், வைதிக மதம், சண்மதம் போன்ற பெயர்களால் பல்வேறு காலங்களில், பல்வேறு இடங்களில் அழைக்கப்படும் இந்து மதத்திற்குத் தெளிவான கோட்பாடுகள் இல்லை என்பதோடு, முரண்பாடான கோட்பாடுகள் இருப்பினும், மேற்சொல்லப் பட்ட சமுதாயத் தாழ்வு நடைமுறைகள் அந்த மதத்துடன் அன்றும் இன்றும் பிணைந்தே இருக்கின்றன.

9.            இந்த நடைமுறைகளை நிலைப்படுத்திக்கொள்ளப் பின்பற்றப்படும் ஏற்பாடுகள் வெளிப்படையாகத் தெரிந்தவையாயினும், அவற்றின் உள்நோக்கத்தைப் பாமரர் பல காலம் புரிந்து கொள்ளாமலேயே இருந்துவிட்டனர். ஸ்மிருதிகளாகிய வேதங்களை இறையளிப்பு எனவும் ஆய்விற்கு அப்பாற்பட்ட ஆதார ஏற்புகள் எனவும் கொண்டு அவற்றை அடியொற்றி வந்தனவாகப் போற்றப்படும் ஸ்மிருதிகளாகிய தரும சாத்திர இதிகாசங்கள் புராணப் புனைவுகளின் மூலம், ஒரு குலத்திற்கு ஒரு நீதி எனும் கொள்கை, மாற்றமுடியா தெய்வீகத்தன்மைத்து என்ற வகையில் தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. உபநயனம் செய்து பூணூல் அணிவித்து சமற்கிருத மந்திரம் ஓதுவித்து, இருபிறப்பாளர் (துவிஜர்) ஆக்குதல், தீமூட்டி வேள்வி செய்தல், ஜாதித்தொழில் நிர்ணயித்தல், குடியிருப்புப் பகுதிகளை ஒதுக்குதல், தெருவில் செல்லுதல், கோயில் நுழைவு, ஏரி, குளம், கிணறு ஆகிய பொது இடங்களைப் பயன்படுத்துதல், ஆடை அணிகலன்கள் அணிதல், கல்வி பயிலுதல், பண்டிகை, திருவிழா, வழிபாடு, சடங்கு, சம்பிர தாயம், பழக்க வழக்கம் போன்றவற்றை வகைப்படுத்துதல், மேற்சொன்ன நடப்புகளிலும் அமைப்புகளிலும் காணப்படும் பிளவுத் தன்மைகளையும் வேறுபாடுகளையும் ஏற்றத் தாழ்வுகளையும் நியாயப்படுத்தக் கதைகளைப் புனைந்து நம்பவைத்தல், அதற்குத்தக ஆன்மா, மறுபிறப்புக் கோட்பாடுகளைத் திணித்தல் போன்ற எல்லாவற்றிலும் வேதியச் சதுர்வருணிய ஜாதிய வழிசார்ந்த பார்ப்பனிய மேலாண்மையும், பிறப்பினடிப்படை மேல் கீழ் சமூகப்படி நிலைகளும் கவனமாகப் பாதுகாக்கப்படுவதைக் காணலாம்.

10.         நாயம், சமனியம், விழுமிய மனித இயல்புகளுடன் இணக்கம் என ஆக்கம் சேர்க்கும் சீரிய சமூக நெறிமுறைகள் செழுமையடைந்து நிலைபெற்று உறுதிப்படுவதற்குக் கல்வி அறிவு அடிப்படைத் தேவையாகும். மாறாக, சீரிய சமூக நெறிமுறைகளை மறுத்து ஒதுக்கும் சதுர்வருணிய மனுதரும அமைப்புகளும் கொள்கைகளும் நீடிக்கவேண்டுமெனில் பொதுக் கல்வியை இல்லாமல் செய்து, பாமரர்கட்கு அறிவுத் தெளிவு வராமல் கவனித்துக்கொள்ள வேண்டும். சமற்கிருத மயமாக்கப்பட்ட முறையின் மூலம் வெகுமக்களை, உழைப்பாளர்களை, படிக்காத, தெளியாத மூடநம்பிக்கையா ளர்களாகப் பல நூற்றாண்டுக் காலம் வைத்திருக்க முடிந்தது.

11.         சமற்கிருத மயமாக்கம் கல்வியை எப்படி மறுத்தது? பாமரர்களை அறிவுத் தெளிவு அற்றவர்களாக எப்படி ஆக்கியது?

சிறு வயதிலும், இளமையிலும் சமுதாயத்தால் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட, அதற்குப் பழக்கப்பட்ட வகையில் குறிப்பிட்ட ஆசிரியர்களிடம் அதற்கான கூடங்களில் (இடங்களில் ) பயில்வது முறைசார் ((Eommal) கல்வியாகும். இத்தகைய வாய்ப்பினை விரும்பியோ, விரும்பாமலோ பெறாதவர்கள், அறிவை வளர்த்துக்கொள்ளும் வேட்கையில், ஏடுகளைக் கொண்டோ, கேள்வி ஞானத்தின் வழியோ, பட்டறிவின் மூலமாகவோ பயில்வது முறைசாராத (Non-Eommal) கல்வியாகும். இந்த இருவகைக் கல்வி வாய்ப்பு களும் சமற்கிருத மயமாக்க நெறியில் மறுக்கப்பட்டன.

12. பாட்டாளி மக்களாகிய சூத்திரரும் பஞ்சமரும் கற்கக்கூடாது என்பது வேதிய மனுதருமச் சமுதாயச் சட்டம். அதற்குத்தகவே இராமாயணத்தில் சம்புகனின் தலையை இராமன் கொய்து விடுகிறான். மகாபாரதத்தில் ஏகலைவன் கட்டைவிரலை துரோணன் கட்டணமாகப் (குரு தட்ச ணையாகப்) பெறுகிறான். ஆக உழைப்பாளிகளான வெகுமக்கள் கற்றுக்கொள்ள இந்துமத அரசு அனுமதிக்க வில்லை; ஆசிரியர்களும் கற்றுத்தர முன்வரவில்லை. ஆங்கிலேயர் ஆட்சி ஏற்பட்டபின், இந்தக் கொள்கை மாற்றப்பட்டதாயினும், அவர்களின் நேரடி ஆட்சிக்குட்படாத, இந்துமதக் கொள்கையின்படி ஆளப்பட்ட திருவிதாங்கூர், கொச்சி போன்ற சிற்றரசுகளில் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில்கூட தாழ்ந்த ஜாதியார் எனப்பட்டவர்கள் அனுமதிக்கப்படவில்லை என்பதையும், அனுமதிக்கப் பட்டாலும் தொல்லைகட்கு ஆட்படுத்தப்பட்டார்கள் என்பதையும் தற்கால வரலாறு தெரிவிக்கிறது.

13.         ஒரு இனத்தின் விலைமதிக்க முடியாத உளவியல் கருவியாக, ஆன்மீகச் செல்வமாக, மனங்களைப் பிணைக் கும் உணர்வுப் பசையின் கொள்கலனாக, அறிவுத் தேக்கத்தைப் புதுப்பித்து நிறைக்கும் கருத்து ஓடையாக இலங்குவது மொழியெனில் அது மிகையன்று. இவ்வளவு சிறப்பு வாய்ந்த மொழியை ஒவ்வொரு இனமும் போற்றிப் பாதுகாத்து உயர்த்தி, அதனால் தானும் உயர்வு பெறல்வேண்டும். அவ்வாறு செய்யாத இனம் நாகரிகப் பண்பாட்டு நிலையில் வளர்ச்சி குன்றியதாக அறிவுத் தெளிவு குறைந்ததாக நின்றுவிடும். இந்த உண்மையை நன்கு அறிந்த பார்ப்பனக்கூட்டம், பண்பாட்டு வழியான தங்களின் சமூகப் பொருளாதார மேலாண்மையை (ஆதிக்கத்தை) தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகச் சமற்கிருதத்திற்கு உயர்வான நிலையையும், மக்கள் புழங்கும் மொழிகட்கு அடுத்த நிலையையும் ஏற்படுத்தி வைப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தனர். இன்றும் இருக்கின்றனர்.

தொடரும்

- விடுதலை நாளேடு 30 1 20