
ஜஸ்டிஸ் கட்சி மாகாண மாநாடு 27.8.1944ஆம் தேதி சேலத்தில் விமரிசையாய் நடந்து வெற்றிகரமாய் பல தீர்மானங்களை நிறைவேற்றி இருக்கிறது.
சேலத்துக்கு மாநாட்டை அழைத்தவர்கள் எதிரிகள் வயப்பட்டு கட்சியின் பேரால் மக்களை மிரட்டியும், ஏமாற்றியும் பிழைக்கும் சில மக்களுக்கு ஆளாகி, மாநாடு நடத்தாமல் விட்டுவிட முயற்சித்தார்கள் என்றாலும், சேலம் மகாஜனங்களுக்கு இருந்த ஆர்வத்தால் மாநாடு நடத்தத் தீர்மானிக்கவும், வரவேற்புக் கழகம் அமைக்கவும், நிதி திரட்டவும் ஆன காரியம் செய்யப்பட்டு விட்டது. இக்காரியத்தை மாநாடு நடத்தப் பயன்படுத்தாமல் மாநாடே எங்கும் நடத்தாதிருக்கப் பயன்படுத்தி, அதாவது தானும் நடத்தாமல் வேறு ஒருவரையும் நடத்தவிடாமல் முட்டுக்கட்டை போட பயன்படுத்தப்பட்டு வந்தது.
தோழர் அண்ணாதுரை
இந்த நிலையில் கட்சித் தலைவர் வரவேற்புத் தலைவரைக் கண்டு மாநாட்டைப்பற்றி கேட்கும் போதெல்லாம் நடத்திவிடலாம் என்று சொல்லுவதும், கட்சி பொதுக் காரியதரிசி தோழர் அண்ணாதுரை வரவேற்புக் காரியதரிசியைக் கண்டு கேட்கும்போது “மாநாடு எதற்கு! ஜஸ்டிஸ் கட்சி எங்கே இருக்கிறது? நான் இராஜிநாமா கொடுத்துவிடுகிறேன்” என்று சொல்லியும் மாநாட்டை நடத்தாமல் இருக்க பல தந்திரங்கள் செய்தார்கள்!
கடைசியாக, 10.8.1944ஆம் தேதி பெரியார் சேலம் சென்று வரவேற்புக் கழக அங்கத்தினர் கூட்டம் ஒன்று கூட்டி, அதில் மக்கள் நிலை தெரிந்து வேறு சில காரியதரிசிகளை நியமித்து பணமும் சுமார் ரூ.2000 வசூலுக்கு ஏற்பாடு செய்து விட்டதை அறிந்த வரவேற்பு தலைவரும் காரியதரிசிகளும் பெரியார் ஜாகைக்கு வந்து, தாங்கள் அக்கூட்டத்திற்கு வராததற்கு ஒவ்வொருவரும் ஒரு சாக்குச் சொல்லி மாநாட்டை 20ஆம் தேதி நடத்தி விடுகிறோம் என்று உறுதி சொல்லி விட்டுச் சென்றார்கள். மறுநாள் பத்திரிகைகளில் மாநாடு 20ஆம் தேதி நடக்கிறது என்றும், தலைவர், திறப்பாளர், கொடியேற்றுபவர் இன்னார் இன்னார் என்றும் பத்திரிகைகளில் சேதிகள் காணப்பட்டன.
4000 பிரதிநிதிகள்
பிறகு, அத்தலைவர் தவிர கொடியேற்றுபவர், திறப்பவர் ஆனவர்கள் பெயரை மாற்றி வேறு பெயர்கள் வெளியாயின. இந்த நிலையில் அனேக காரியங்கள் திரைமறைவில் செய்யப்பட்டு, வேறு பல எண்ணங்களோடு பல இடம் சுற்றித் திரிந்தும் மாநாட்டை திடீரென்று 27ஆம் தேதி மாற்றி, எவ்வளவோ செய்து பார்த்தும், என்ன என்னமோ செய்யப்பட்டும் கடைசியாக மாநாடு 27ஆம் தேதி நடந்தே விட்டது. 4000 பிரதிநிதிகள் வெளியூர்களில் இருந்து மாத்திரம் ஏராளமாய் வந்து குவிந்துவிட்டார்கள்.
மாநாட்டை தங்கள் இஷ்டப்படி நடத்த தோழர் பாண்டியன் அவர்களை மலைபோல் நம்பி, மாநாட்டுக் கொட்டகைக்குள் யாரையும் விடாமல், தங்களுக்கு வேண்டியவர்களை மாத்திரம் விட்டுக் கொண்டு காரியம் நடத்த நேபாளத்து கூர்க்கர்களை மாநாட்டுப் பந்தலின் வாயில்களில் நிறுத்தி, அவர்களை இமயமலை போல் நம்பி கேட்டுக்கு காவல் வைத்து விட்டு, பிரதிநிதி டிக்கட் கொடுப்பதில் ஒவ்வொரு பிரதிநிதியும் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என்றும், அவ்விண்ணப்பத்தின்மீது டிக்கட் கொடுக்க யோசிக்கப்படும் என்றும், மற்றும் என்ன என்னவெல்லாம் செய்யப்பட்டது என்றாலும், தோழர் பாண்டியன் அவர்கள் இக்காரியங்களை வெறுத்து மாநாட்டுக் காரியதரிசி முதலியவர்களுக்கு கையை விரித்து விட்டதனாலும், கூர்க்காக்கள் விரட்டப்பட்டு விட்டதினாலும், டெலிகெட் டிக்கட்டுகள் வழக்கம் போல் கொடுக்க வேண்டியதாகிவிட்டன.
மக்கள் பல இடங்களில் இருந்து பதினாயிரக்கணக்கில் பெருகிய வண்ணம் இருந்ததால் மரியாதையாகவும், நாணயமாகவும், ஒழுங்கு முறைப்படியும் மாநாடு நடக்க வேண்டியதாகி விட்டது.
தலைவர் ஊர்வலத்தில் ஊர் முழுவதுமே கலந்து கொண்டது. பெரியார் துதியும் பெரியார் பிரார்த்தனையுமே கொடியேற்று விழா, திறப்பு விழா, வரவேற்பு சொற்பொழிவு, காரியதரிசி தலை நாட்டுதல் ஆகிய எவையிலும் தலைசிறந்து விளங்கின. அப்படி விளங்க வேண்டியதாகவும் ஏற்பட்டு விட்டது!
மேற்கண்ட விழாவாற்றுவோர் பேச நினைத்து வேறு, குறித்து வந்தது வேறு, பேச நேர்ந்தது வேறு என்றும் ஆகிவிட்டது.
தோழர் டி. சண்முகம்
இந்த நிலையில் பெரியாரை தலைமைப் பதவிக்கு ஆதரித்துப் பேசியவர்களில் தோழர் டி. சண்முகம் அவர்கள் இவர்கள் குட்டை உடைத்துவிட்டார். அதாவது, “இந்த பேச்சு மேடைவரையில்தானா வீட்டுக்கு போயும் இருக்குமா?” என்றார். பிறகு தலைவர் எழுந்து மக்கள் ஆரவாரத்தைப் பார்த்து, ஆனந்தக் கண்ணீர் சொரிந்து, யாவர் கண்களிலும் நீர் ஊற்றை தருவித்து விட்டு, “தோழர்களே!” என்றதும் யாவரும் ஸ்மரணை அற்றுப்போய் விட்டார்கள். பெரியாரும் தன்னை தேற்றிக் கொண்டு “என் அருமை இளைஞர்களே” என்றதும் யாவரும் உணர்ச்சி பெற்று ‘பெரியார் வாழ்க’, ‘பெரியார் எங்கள் தலைவர்’, ‘சூழ்ச்சியாளரும், சுயநலவாதிகளும், சமயசஞ்சீவிகளும் ஒழிக’ என்று ஒலித்தார்கள். பெரியார் கையை அமர்த்தினார். ஒலி மறைந்தது.
“எனது அன்பான பாண்டியன் அவர்களே!” என்று ஆரம்பித்ததும் தோழர் பாண்டியன் அவர் கண்களிலும் நீர் ஊற்றுக் கண்டு விட்டது.
தந்தை பெரியார்
பிறகு பெரியார் பேசியதாவது:
“நான் இந்த மாநாட்டிற்கு வருவதாக நேற்று மாலை 4 மணிக்கு தான் உறுதி செய்தேன். தலைமை உரை ஒன்றும் தயார் செய்யவில்லை; தலைமை உரையில் சொல்ல வேண்டியவைகளும் அதிகம் இல்லை. அதிலும் முக்கியமானது என்னவெனில் நான் தென் இந்திய நல உரிமைச் சங்க மாநாட்டு தலைவனாக தலைமை உரை நிகழ்த்துவது என்பது இது தான் கடைசித்தடவை. என்னைப் பலர் இக்கட்சியில் சர்வாதிகாரியாய் நடக்கிறேன் என்று கூறினார்கள். சிலர் சர்வாதிகாரியாய் இருக்க வேண்டும் என்றும் கூறினார்கள். சர்வாதிகாரத்தனம் குற்றமானது என்று நான் கருதுவதில்லை. பொறுப்பு உயர உயர அதிகாரம் உயர்ந்துதான் தீரும். அதிகப் பொறுப்பு ஏற்பட்டால் அதிக அதிகாரமும் எல்லாப் பொறுப்பும் நானே எடுத்துக் கொள்ள நேர்ந்தால் சர்வாதிகாரியாகத்தானே ஆகிவிட வேண்டியதாகும்.
நான் எந்த இயக்கத்தில் எந்த ஸ்தாபனத்தில் பங்கு எடுத்துக் கொண்டாலும், நானே பொறுப்பாளி என்றும், என் தலை மேலேயே எல்லாப் பாரமும் இருக்கிறது என்றும் கருதுவது என் இயற்கை. நான் வாலிப காலம் முதல் எந்தெந்த பொது வாழ்வில் ஈடுபட்டேனோ அனேகமாக அவைகள் எல்லாவற்றிலும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவனாக இருக்கும் போதும்கூட அப்படித்தான் நடந்து வந்திருக்கிறேன். ஆனால் அதனால் நான் யாரையும் அலட்சியம் செய்யவில்லை அவமதிக்கவில்லை. ஆகவே அதனால் ஸ்தாபனங்களுக்கு குற்றம் ஏற்பட்டு விடவில்லை.
5000 பேர்களை சிறைக்கனுப்பி…
நான் சீக்கிரம் ஓய்வு எடுத்துக் கொள்வேன். அதற்குள் “திராவிடர்கள் தியாகத்துக்கு பயந்தவர்கள், தனித்த சுயநலக்காரர்கள் சிறை செல்லப் பயப்படுபவர்கள்” என்று யாராலும் சொல்லுவதற்கு சிறிதுகூட இடமில்லாமல் இந்தி எதிர்ப்பைக் காட்டிலும் இன்னும் அதிகமாக 4000, 5000 பேர்களை சிறைக்கனுப்பி, நம் இயக்கத்திற்கு பல ஆயிரக்கணக்கான தொண்டர்களை முழு நேரத் தொண்டர்களாக இருக்கும்படி செய்துவிட்டுப் போக வேண்டுமென்பது என் ஆசை” என்பதாகச் சொல்லி அமர்ந்து, எழுந்து முக்கியமான தீர்மானங்கள் இம்மாநாட்டின் நடைபெற வேண்டி இருப்பதால் சீக்கிரம் உணவருந்தி விட்டு 3 மணிக்கு வர வேண்டுமென்று கேட்டுக் கொண்டு மாநாட்டுக்கு உண்டி ஓய்வு கொடுத்துவிட்டார்.
மாநாடு 3 மணிக்கு கூடிற்று. தலைவர் 3.15 க்கு வந்தார் வந்ததும் விஷயாலோசனை கமிட்டிக்கு பிரதிநிதிகள் தெரிந்தெடுப்பதா? பிரதிநிதியாவரும் விஷயாலோசனை கமிட்டியாக இருப்பதா என்ற பிரச்சினையின்பேரில் பிரதிநிதிகள் யாவரும் விஷயாலோசனை கமிட்டியாகக் கொள்ளலாம் என்ற முடிவு ஏற்பட்டது. உடனே தலைவர் எழுந்து பத்திரிகையாளர்களும், பிரதிநிதிகள் அல்லாதவர்களும் விலகி இருக்க வேண்டும் என்றும், நடைபெறும் விஷயங்களைப் பத்திரிகைகாரர்கள் பதிவு செய்யக் கூடாதென்றும் கண்டிப்பாக கேட்டுக் கொண்டு, தீர்மானங்களைப் பற்றி பேசுமுன், காரியதரிசி தோழர் அண்ணாதுரை வரவேற்புக் காரியதரிசி தோழர் நெட்டோவை மாநாட்டுக்கு வந்து தீர்மானங்களைக் கொடுக்கும்படி ஒன்றுக்கு மேற்பட்ட தடவை கேட்டார். தோழர் நெட்டோ, தோழர் பாண்டியனைக் கேட்டுவிட்டு தருவதாகச் சொல்லி கடைசியாக சில தீர்மானங்கள் மாத்திரம் மேஜைக்கு வந்தன.
மற்றும், முக்கிய தீர்மானங்கள் மாத்திரம்தான் “பாசாக்க” நேரமிருக்கிறது. மீதி நேரமிருந்தால் பார்க்கலாம் என்று கூறி கூட்டத்தில் அமர்ந்திருந்தார்.
இந்நிலையில் பல தீர்மானங்கள் விவாதிக்கப்பட்டன. முறைப்படி பிரரேபித்து ஆமோதித்து ஆதரித்து கைதூக்கிக் காட்டும்படி கேட்டு ஓட்டுக்கு விடப்பட்டு நிறைவேற்றப்பட்டன.
அவை முடிந்ததும் அக்கூட்டத்தை மாநாடு ஆக ஆக்கப்பட்டு முறைப்படி தீர்மானங்கள் பிரரேபிக்கப் பட்டு ஆமோதிக்கப்பட்டு ஆதரிக்கப் பட்டு எதிர்ப்புப் பேச்சாளர்களுக்கு இடம் கொடுத்து விளக்கி ஓட்டுக்கு விடப்பட்டு நிறைவேற்றப்பட்டன.
ராவ்சாகிப் துரைசாமி பிள்ளை
தீர்மானம் முடிந்ததும் தலைவர் முடிவுரையில் 6 மாத காலம் என்பதை மறுபடியும் 6 மாதத்திற்குள் என்பதாக விளக்கி, அதற்குள் ஒவ்வொருவர் நடந்து கொள்ள வேண்டியதைப்பற்றிப் பேசினார். பிறகு ராவ்சாகிப் துரைசாமி பிள்ளை அவர்கள் வந்தனோபசாரம் கூற மாநாடு இனிது முடிந்தது.
இப்படி இருக்க மாநாட்டிற்குப் பின் பத்திரிகைகளில் பல அறிக்கைகள் காணப்படுகின்றன. இதற்குக் காரணம் நம் எதிரிகளான ஆரியர்களும் மற்றும் யோக்கியப் பொறுப்பற்ற பத்திரிகைகளும் நம் கட்சியை இழித்துக் கூறி, நம் நிலையை உலக மக்கள் கேவலமாய்க் கருத வேண்டும் என்பவர்கள் தங்கள் பத்திரிகைகளில் இடம் கொடுத்து இவ் விழி செயல்களை வரவேற்பதும் அதற்கு ஆக்க மளிப்பதுமேயாகும்.
இவ்வறிக்கைகளுக்கு சமாதானமாக பெரியார் முதலாவதாக ஒரு அறிக்கை வெளிப்படுத்தி இருக்கிறார். அதுவேறு பக்கம் இருக்கிறது.
யார் யார் வயிற்றுப் பிழைப்புக்கு
வழி அடைத்து விடுமோ…
தீர்மானங்கள் அமலுக்கு வந்தால் யார் யார் நிலை குலைந்து விடுமோ, யார் யார் வயிற்றுப் பிழைப்புக்கு வழி அடைத்து விடுமோ அவர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள சகல காரியமும் செய்து விட்டுத்தான் அடங்குவார்கள். ஆதலால் அவர்கள் அறிக்கையை எவரும் லட்சியம் செய்ய வேண்டியதில்லை.
தோழர்கள் பி. பாலசுப்பிரமணியம், நெட்டோ ஆகியவர்களின் தன்மையைப்பற்றி நாம் சொல்லி யாரும் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை.
சர்க்காரிடம் பட்டம் சிபாரிசு செய்யவும், பப்ளிக் பிராசிகூட்டர் வேலை வாங்கிக் கொடுக்கவும் தோழர் பி. பாலசுப்பிரமணியத்திற்கு சக்தி இருக்கிறதென்று அவற்றில் ஆசையுள்ளவர்கள் கருதுகிறார்கள். அதற்கேற்ற வண்ணம் தோழர் பி.பாலசுப்பிரமணியம் காட்டிக்கொள்கிறார். கவர்னரும் அட்வைசரும் பாலசுப்பிரமணியத்தினிடம் அதிக சிநேகம் என்றும், அதிகாரிகள் பாலசுப்பிரமணியத்தைக் கண்டால் நடுங்குகிறார்கள் என்றும் ஒரு செட்டு பிரசாரம் செய்து, பாலசுப்பிரமணியத்துக்கு பணமும், பத்திரங்களும் வாங்கிக் கொடுத்து பங்கு பெறுகிறார்கள் என்பது யாருக்குத் தெரியாது! பட்டத்திலும் உத்தியோகத்திலும் மக்களுக்கு உள்ள ஆசை யார் காதிலும் விழுகும்படி செய்வதில் அதிசயமில்லை. ஆதலால் இதன் பயனாய் ஏற்படுகிற கூட்டு அமைப்பையும் அந்த அமைப்பை தோழர் பாலசுப்பிரமணியம் பயன்படுத்திக் கொள்ளுவதையும் கவனிக்க ஆரம்பித்தால், எந்தக் கட்சிக்கும் மதிப்போ மானமோ இருக்க முடியாது. நம்மில் சில பெரிய மனிதர்கள் என்பவர்களும் “சண்டே அப்சர்வர்” பத்திரிகையை “சினிமா தூது” பத்திரிகை போல் கண்டு நடுங்கி கப்பம் கட்டி வருகிறார்கள். இவர்களுடைய தொல்லைகளும் நமக்கு இருந்துதான் தீரும்.
நம் பெரியார் எதற்கும் அஞ்ச மாட்டார் என்பதோடு, தனது குரலும் காலும் இருக்கும் வரை திராவிடர் கட்சியை நிலை நிறுத்தி தொண்டாற்றச் செய்து திராவிடர்களுக்கு மனிதத் தன்மையும், மானமும், வீரமும், வெற்றியும் தேடிக் கொடுக்க தொண்டாற்றுவார் என்பதிலும், அதற்கு யாராலும் எந்தவிதமான தடையும் ஏற்பட்டு விடாது என்பதும் உறுதி. ஆகவே, சுயநலத் துருத்திகளின் வசைக்கும் விஷமத்துக்கும், காதும் கருத்தும் கொடுக்காமல் தீர்மானங்களுக்கு மதிப்பும், ஆக்கமும், வெற்றியும் தரப்பாடுபட வேண்டியது உண்மைத் திராவிடர், பரிசுத்தத் திராவிடர் கடமை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
– ‘குடிஅரசு’ – தலையங்கம் – 2.9.1944