செவ்வாய், 3 ஜூன், 2025

பிள்ளையார் சிலை உடைப்புப் போராட்டம் (27.05.1953)

 Published May 27, 2025

விடுதலை நாளேடு

தமிழ்நாடு, திராவிடர் கழகம்

72 ஆண்டுகளுக்கு முன்பு தந்தை பெரியார் அவர்கள் நடத்திய பிள்ளையார் சிலை உடைப்புப் போராட்டம் (27.05.1953)
எல்லா கடவுள்களும் ஒழிந்தே தீரும்! – தந்தை பெரியார்

நாமும் இந்தக் கடவுள் உடைப்புத் திட்டத்தை விட்டுவிடாமல் உடைப்பதற்குப் பொருத்தமான நாளைப் பார்த்துக் கொண்டிருந்தோம்.

அதற்கேற்றாற் போலவே மே மாதம் 27ஆம் தேதி புத்தர் நாள் என்பதாகக் கொண்டாட வேண்டும் என்றிருந்தோம். அதற்காக சர்க்கார் விடுமுறையும் விட்டார்கள். புத்தர் நாள் தான் இந்த ஆரியக் கடவுள்கள் உடைப்புத் துவக்கத்திற்கு சரியான நாள் என்பதாக நாம் முடிவு செய்து முதலாவதாக எந்தச் சாமியை உடைப்பது என்று யோசித்து, எதற்கும் முதல் சாமியாக இழுத்துப்போட்டுக் கொள்கிறார்களே, அந்தச் சாமியாகிய கணபதி உருவத்தை முதலாவதாக உடைப்பது என்று முடிவு கொண்டு மே மாதம் 27ஆம் தேதியன்று உடைத்தோம்.

இந்தக் காரியமும், எப்படி ரயிலில் உள்ள ஹிந்தி எழுத்துக்களை 500- க்கு மேற்பட்ட ஊர்களில் ஆயிரக்கணக்கிலே, ஒருமித்து அழிக்கப்பட்டதோ அதைப் போலவே, இந்த விநாயகர் உடைப்பும் ரயில் இல்லாத ஊர்களிலும் சேர்த்து உடைக்கப்பட்டது! தமிழ் நாட்டின் எல்லாப் பாகங்களிலும், மூலை முடுக்கு களிலும்கூட விநாயகர் உருவங்கள் செய்யப்பட்டு உடைக்கப்பட்டன.

ஆனால், இந்தப்படி நாம் உடைத்த தால் விநாயகரே ஒழிந்து விட்டதா? இல்லை. இன்னும் சொன்னால் இப்போது கொஞ்சம் அதிகமாயிற்று.

சும்மா கிடந்த பிள்ளையாருக் கெல்லாம் பூஜை, புனஸ்காரம் நடத்தினார்கள்.

அதைப்பற்றி நமக்குக் கவலை இல்லை. ஏனென்றால் முன்பு இருந்த 2 லட்சத்தோடு இப்போது ஒரு 3,000 சேர்ந் திருக்கலாம். அதனால் என்ன பலன்? இந்த 2 லட்சம் பிள்ளையார் ஒழியும் போது, தானாக இந்த 3,000 பிள்ளையாரும் ஒழிந்துதானே போகும்? அல்லது இப் போது புதிதாக இந்த 3000 பிள்ளை யார்கள்போல் உற்பத்தி யானதால் இந்த 2 லட்சம் பிள்ளையார்கள் ஒழியாமல் இவைகளால் பாதுகாத்து விட முடியுமா? அது ஒன்றும் இல்லை!

சும்மா எதிர்ப்பு என்கிற பேரால் விளையாடுகிறார்கள். ஆமாம் விளை யாட்டுத்தான்; இதைப்பற்றி வேறு என்ன சொல்லுவது?

ஏன் இந்தப்படி சொல்லுகிறேன் என்றால், நாம் ஒன்றும் விளையாட்டுக் காரியத்துக்காக இந்தச் சாமிகள் என்பவைகளை உடைக்கவில்லை.

இந்தச் சாமிகள் என்று கொண்டாடப் படுபவைகள் ஆபாசமானவை, அசிங்க மானவை! அக்கிரமமானவை, நம்மை சூத்திரனாகவும், தாசி மகனாகவும், மற்றவர்களுக்கு உழைத்துப் போட்டு விட்டு ஒன்றும் இல்லாமல் கிடக்க வேண்டியவனாகவும் வைத்திருக்கின்றன. அன்னக்காவடிப் பார்ப்பானை, அழுக்குப் பிடித்த பார்ப்பானை, அயோக்கியப் பார்ப்பானை, மேல் ஜாதிக்காரனாகவும், பாடுபடாமல் ஊரார் உழைப்பிலேயே வயிறு வளர்ப்பவனாகவும், சுகபோக வாழ்வுக்காரனாகவும் ஆக்கி வைத் திருப்பது இந்தக் கடவுள்கள்தான்!

எனவே, நம்முடைய கீழ்நிலைமை – காட்டுமிராண்டித் தன்மை ஒழிய வேண் டும் என்றால், இக்கடவுள்கள் என்ப வைகள் ஒழிய வேண்டும் – என்று இப்படிப் பல காரணங்களை, தெளிவான உண்மைகளை எடுத்துச் சொல்லி நாம் இந்தக்கடவுள் என்பவைகளை உடைக் கிறோம்!

ஆனால், நமக்கு எதிர்ப்பாளர்கள், எதிரிகள் என்பவர்கள் இதற்குச் சரியான சமாதானம், தெளிவான பதில், நீ சொல்வது தப்பு, அப்படியல்ல, இப்படியல்ல என்று தெளிவான பதிலைச் சொன்னால் ஒப்புக் கொள்ள கொஞ்சம் கூட தயங்கமாட்டோம். அதை ஒருவருமே சொல்லவில்லையே! சொல்ல முடியவில்லையே! சும்மா! அதோ! அதோ! ராமசாமி நாயக்கன் சாமியை உடைக்கிறேன் என்கிறான். அதனால் நம்முடைய சாமி போச்சு, என்று வெற்றுக் கூச்சலிடுவதும், அதற்கு என்ன செய்வது என்றால் புதிய சாமிகளை உற்பத்தி செய் என்பதும்தான் அவர்களால் செய்ய முடிந்தது. சரி, புதிய சாமிகளை உண்டாக்குவது என்றால் யார் உண் டாக்குவார்கள்? ஏற்கெனவே பழைய சாமிகளுக்குக் கும்பிடு போடுகிறவன் தானே புதிய சாமிகளையும் உண்டாக்கு வான்! இது வரையிலே சாமி கும்பிடாத வன், அவைகள் எல்லாம் பித்தலாட்டம் என்று கருதி – சொல்லிக் கொண்டி ருப்பவன் அந்த சாமிகளையே உடைத்துத் தூள் தூளாக்கத் துணிந்தவன் எவனும் புதிய சாமிகளை உண்டாக்க மாட்டானே! அப்புறம் அதைப்பற்றி நமக்கென்ன கவலை. எப்போதும் முட்டிக் கொள்கிற முட்டாள்கள் முட்டிக் கொண்டு போகட்டுமே! இதில் புதுசென்ன? பழசென்ன?

இன்னும், நாம் பிள்ளையாரை உடைக்கிறோம் என்றவுடன், திராவிடர் கழகத்துக்காரனின் பிரச்சாரத்திற்கு எதிர்ப் பிரச்சாரமாக நமது புண்ணிய புராணங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்று ஏற்பாடு செய்து புராணப்பிரச்சாரம் செய்கிறார்கள். அதைப் பற்றியும் நமக்குக் கவலை இல்லை. நாமும் புராணங்களை எடுத்துச் சொல்லி அவைகளில் உள்ள ஆபாசங்களை, அநியா யங்களை, அக்கிரமங்களை, அறிவுக்குப் பொருந்தாத செயல்களை எடுத்துக்காட் டித்தானே அவைகள் ஒழிக்கப்பட வேண்டும் என்று சொல்லு கிறோம்.

விநாயகரை உடைக்க வேண்டும் என்றால், விநாயகரைப் பற்றிய கதைகள், அவரின் புராணங்கள் எல்லாவற்றையும் எடுத்துக் காட்டித் தானே உடைக்க வேண்டும் என்று கூறுகிறோம். அது போலவே, இராமயணத்தைக் கொளுத்த வேண்டும் என்றால், இராமாயணத்தை பக்கம் பக்கமாக கொளுத்த வேண்டும் என்றால் இராமாயணத்தை பக்கம், பக்கமாக, காண்டம், காண்டமாக எடுத்துக் காட்டித்தானே கொளுத்த வேண்டும் என்று கூறுகிறோம். நாம் ஒன்றும் சும்மா உடைக்க வேண்டும் – கொளுத்த வேண்டும் என்று சொல்லவில்லையே! இன்னும் சொல்லப் போனால் புராணங் களை அவர்கள் பிரச்சாரம் செய்வதன் மூலம், அந்தப் புராணங்கள் என்பவை களின் யோக்கியதை என்ன என்பதை எல்லா மக்களுக்கும் தெரிந்து கொள் வதற்கு வாய்ப்பு ஏற்படும். ஆதலால், இப்படிப் பட்ட எதிர்ப்புப் பிரச்சாரங்கள் பற்றியும், புதிய சாமிகள் உற்பத்தியைப் பற்றியும் நமக்குக் கவலையில்லை. அதனால் ஒன்றும் நட்டம் ஏற்படவே ஏற்படாது!

நாம் விநாயகரை உடைத்தோமே, அதோடு நின்று விடவா போகிறது? இல்லை. இனி மேலும் தொடர்ந்து வரிசையாக இந்தக் கடவுள்களை உடைத்துக் கொண்டே வருவோம்.

முதலில் விநாயகரை உடைத்தோம். அது ஒரு சைவ முக்கிய கடவுள் ஆகும். இனி அடுத்தபடியாக, ஒரு வைணவ முக்கிய கடவுளை உடைப்போம். இதைப்போலவே அல்லது வேறு அந்தச் சாமியின் விசேஷ நாளிலே உடைப்போம் – உடைக்கத்தான் போகிறோம். இப்போதே சொல்லி வைக்கிறேன். எல்லோரும் தயார் செய்து கொள்ளுங்கள்!

– “விடுதலை” நாளேடு 11-07-1953

சுக்கில நத்தத்தில் முதல் சுயமரியாதைத் திருமணம்

 Published May 28, 2025

விடுதலை நாளேடு

சுக்கில நத்தத்தில் முதல் சுயமரியாதைத் திருமணம்

அருப்புக்கோட்டைக்கு அருகில் உள்ள சுக்கிலநத்தம் கிராமத்தில், 1928 மே மாதம் 28 ஆம் தேதி முதல் சுயமரியாதைத் திருமணம் தந்தை பெரியார் தலைமையில் நடைபெற்றது.

இந்தத் திருமணம் அன்றைய காலகட்டத்தில் ஒரு சமூகப் புரட்சியாகக் கருதப்பட்டது, ஏனெனில் இது பாரம்பரிய சடங்குகள், புரோகிதர்கள் மற்றும் ஜாதி வேறுபாடுகள் இல்லாமல் நடந்தது. அந்த நிகழ்வில் ஒரே மேடையில் மூன்று சுயமரியாதைத் திருமணங்கள் நடந்தன.

ஊர் எல்லையிலிருந்து மாபெரும் வரவேற்புடன் தந்தை பெரியாரும், தலைவர்களும் ஊர்வலமாக 3 கி.மீ. வரை அழைத்து வரப்பட்டனர்.

விழா மேடையில் மணமகன் – மண மகள்கள் மேடைக்கு வந்த தலைவர்களை வணங்கினர். மணமக்கள் கதராடை அணிந்திருந்தனர்.

ஆடம்பரமான ஆடையோ, அணிகலன்களோ கிடையாது.

தந்தை பெரியார் அவர்கள் உறுதிமொழி கூற, மணமக்களும் உறுதி மொழியேற்று மாலை மாற்றி கொண்டனர்.

அப்போது, “சுயமரியாதை வெல்க! வைக்கம் வீரர் வாழ்க!!” என்ற முழக்கங்கள் கிராமத்தையே அதிரவைத்தன.

வரலாற்றுப் பெருமை வாய்ந்த முதல் சுயமரியாதைத் திருமணம் என்கிற சிறப்போடு தந்தை பெரியார் அவர்களால் அறிமுகம் செய்யப்பட்டது.

அன்று முதல் முறையாக மூன்று சுயமரியாதைத் திருமணங்கள் நடைபெற்றன.

மதச்சடங்கு திருமணங்கள் பெரும்பாலும் ஜாதியப் பாகுபாட்டோடு இழிவுபடுத்தும் நிலையிலும் நடத்தப் பட்டு கொண்டிருந்த காலகட்டத்தில் சுயமரியாதைத் திருமணம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது

இப்படியாக 28-5-1928 வரலாற்று சிறப்புமிக்க நாளாக மாறிப் போயிற்று. அதன்பிறகு பல்லாயிரக்கணக்கான சுயமரியாதைத் திருமணங்கள் தந்தை பெரியார் தலைமையில், திராவிட இயக்கத் தலைவர்கள் தலைமையில் நடைபெற்றன. கெடு வாய்ப்பாக, அப்போ திருந்த  அரசோ, நீதிமன்றங்களோ இந்தத் திருமண முறையை ஏற்றுக் கொள்ளவில்லை.

ஆனால், அன்றைய சுயமரியாதை இயக்கத் தோழர்களும், பிற்காலங்களில் திராவிடர் கழகத் தோழர்களும், சட்ட அங்கீகாரத்தைப் பற்றி கவலைப்படாமல் சுயமரியாதைத் திருமணங்களை செய்து கொண்டே இருந்தனர். இவர்களுக்குப் பிறந்த பிள்ளைகள் முறை தவறி (Illegitimate Child) பிறந்தவர்களாக சட்டம் கருதியது.

பின்னாளில், 1967 ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா தலைமையிலான திமுக ஆட்சிக்கு வந்ததும், சுயமரியாதைத் திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் அளிக்கும் வகையில் இந்து திருமணச் சட்டம் (தமிழ்நாடு திருத்தம்) சட்டம், 1967 (Hindu Marriage (Tamil Nadu Amendment) Act, 1967) நிறைவேற்றப்பட்டது. இது 1968 ஜனவரி 20 அன்று அரசிதழில் வெளியிடப்பட்டது.

உலகமெங்கிலும் இன்றளவும் பல்வேறு வகைகளில் திருமண முறைகள் உள்ளன. கிட்டத்தட்ட அனைத்துமே ஏதாவது ஒரு மதச்சடங்கு அல்லது அச்சமூகத்திற்கான அடையாளமாக ஏதாவது ஒரு சடங்கு நடத்தி முடிக்கின்றனர்.

ஆனால் முதல்முறையாக இணையர்கள் உறுதிமொழி ஏற்க புரட்சிகர சுயமரியாதைத் திருமணம் நடத்திய தந்தை பெரியார் மனிதகுலத்திற்கு மேலும் ஒரு நவீன பாதையினை அமைத்துகொடுத்த நாள் இன்று.