சனி, 1 ஜனவரி, 2022

வேறு எந்த நாட்டிலாவது பிறவியை அடிப்படையாகக் கொண்ட ஜாதி உண்டா? -1

 

தந்தை பெரியார் கேட்ட நான்கு கேள்விகள்

ஜாதி ஒழிப்பு - சட்ட எரிப்புப் போராட்ட நாள் கருத்தரங்கில் தமிழர் தலைவர்

சென்னை, நவ.30  வேறு எந்த நாட்டிலாவது பிறவியை அடிப்படையாகக் கொண்ட ஜாதி உண்டா? என்றும், தந்தை பெரியார் கேட்ட நான்கு கேள்விகளை  எடுத்துக் காட்டியும்  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

ஜாதி - தீண்டாமை ஒழிப்புக் கருத்தரங்கம்

ஜாதி ஒழிப்பு -சட்ட எரிப்புப்  போராட்ட நாள்

26.11.2021  அன்று காணொலிமூலம்   நடைபெற்ற ‘‘ஜாதி - தீண்டாமை ஒழிப்பு- ஜாதி ஒழிப்பு-சட்ட எரிப்புப் போராட்ட நாள்’’ கருத்தரங்கத்தில்  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரை வருமாறு:

சிறப்போடு நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய ஜாதி - தீண்டாமை ஒழிப்புக் கருத்தரங்கமாக இன்றைக்கு நவம்பர் 26 - புதிய அரசமைப்புச் சட்டத்தை நமக்கு நாமே வழங்கிக் கொண்டதாகச் சொல்லிக் கொண்டு, நம்மில் மிகப்பெரும்பாலோர் இன்னமும் ஜாதியால் இழிவுபடுத்தப்பட்ட மக்கள், ஜாதியால் ஒடுக்கப்பட்ட மக்கள், ஜாதி காரணமாக இன்னமும் மிகப்பெரிய அள விற்கு அவலத்தை அனுபவித்துக் கொண்டிருக்கின்ற மக்களாக இருக்கின்ற நாம் - அதிலிருந்து விடுபடுவது எப்படி என்பதற்காக, நம்முடைய பங்களிப்பை நாம் சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

இங்கே உரையாற்றிய நம்முடைய பெருமைக்குரிய  அருமைத் தோழர்களே,

சிறப்பாக வரவேற்புரையாற்றிய கழகப் பொருளாளர் அவர்களே, நோக்க உரையை சிறப்பாக வழங்கிய கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி அவர்களே,

இந்நிகழ்ச்சிக்கு முன்னிலை ஏற்றிருக்கக்கூடிய மான மிகுவாளர்கள், கழகப் பொதுச்செயலாளர் அன்புராஜ் அவர்களே,  கழகத் துணைப் பொதுச்செயலாளர் பொறியாளர் இன்பக்கனி அவர்களே,  கழக வெளியுறவுச் செயலாளர் கோ.கருணாநிதி அவர்களே, பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன் அவர் களே, வழக்குரை ஞர் பா.மணியம்மை அவர்களே, வழக் குரைஞர் மதிவதனி அவர்களே,  தி.இரா.இரத்தினசாமி அவர்களே,  தே.செ.கோபால் அவர்களே, தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் அவர்களே,

சகோதரர் மானமிகு டி.கே.எஸ்.இளங்கோவன்

இந்த சிறப்பான கூட்டத்திற்கு நம்முடைய அழைப்பை ஏற்று, அருமையான ஓர் ஆய்வுரையை தெளிவான வகையில் வழங்கி, நமக்கெல்லாம் சிந்த னைக்கு விருந்தளித்திருக்கக் கூடிய திராவிட முன் னேற்றக் கழகத்தின் செய்தித் தொடர்பாளரும், மாநிலங் களவை உறுப்பினருமான அன்பிற்குரிய அருமை சகோ தரர் மானமிகு டி.கே.எஸ்.இளங்கோவன் அவர்களே,

எழுச்சித் தமிழர் சகோதரர் தொல்.திருமாவளவன் எம்.பி.,

எனக்கு முன்பு சிறப்பாக உரையாற்றிய, மூன்றாவது குழலாக எப்பொழுதும் நம்மோடு இணைந்திருக்கக்கூடிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர், நமது எழுச்சித் தமிழர் சகோதரர் தொல்.திருமாவளவன் எம்.பி., அவர்களே,

மானமிகு பேராசிரியர் சுப.வீ.

அதுபோல, நம்முடைய அங்கங்களில் ஒருவராக என்றைக்கும் பங்கேற்கக்கூடிய உரிமையாளர், திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் மானமிகு பேராசிரியர் சுப.வீ. அவர்களே,

இணைப்புரை வழங்கிக் கொண்டிருக்கக்கூடிய வழக் குரைஞர் அருமைச் சகோதரர் குமாரதேவன் அவர்களே,

கழகத் துணைத் தலைவர் மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,

இறுதியில் நன்றியுரை கூறவிருக்கக்கூடிய கழக அமைப்புச் செயலாளர் தோழர் பன்னீர்செல்வம் அவர்களே,

இந்தக் காணொலி மூலமாக கருத்துரைகளைப் பகிர்ந்துகொண்டு, இந்தக் கருத்தரங்கில் பங்கேற்கக்கூடிய பெருமைக்குரிய அருமைத் தோழர்களே, தாய்மார்களே, நண்பர்களே, சகோதரிகளே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நிகழ்ச்சி என்பது ஒரு வரலாற்றுப்பூர்வமானது என்பதை பல கோணங்களில் எனக்கு முன்பாக உரையாற்றிய அத்துணை நண்பர்களும் மிக அருமையாகச் சுட்டிக்காட்டினார்கள்.

ஜாதிக் கொடுமை எங்கே இருந்தாலும்....

நம்முடைய அறிவாசான் இந்தப் போராட்டங் களையெல்லாம் முன்னெடுத்து, நம்மைப் போன்றவர்கள் பலர் பிறக்காத காலத்திலே, ஜாதி ஒழிப்பையே முன்னி லைப்படுத்தி, எனக்குக் கட்சியில்லை, கொள்கைதான் உண்டு என்ற அடிப்படையில், காங்கிரஸ் பேரியக்கத்தில் தன்னை  இணைத்துக் கொண்டிருக்கின்ற காலத்தில்,

ஜாதிக் கொடுமை எங்கே இருந்தாலும் -  இந்த மண் ணிலே இருந்தால் என்ன? கேரளத்தில் இருந்தால் என்ன? என்று சொல்லி, திருவிதாங்கூர் பகுதியில் உள்ள வைக்கத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் தெருக்களில் நடக்கக்கூடாது என்ற கொடுமையை எதிர்த்து, அந்த உரிமையை நிலை நாட்டுவதற்காகப் போராடிய அந்த மக்களையெல்லாம் கைது செய்த நேரத்தில், எங்கே அந்தப் போராட்டம் பிசுபிசுத்துப் போய்விடுமோ, அனா தையாக்கப்பட்டு விடுமோ என்ற காலகட்டத்திலேதான், அவர்களுடைய கடிதத்தைப் பெற்று, உடனடியாக வைக்கத்திற்கு விரைந்தார் தந்தை பெரியார்.  ஓராண்டு அந்தப் போராட்டத்தைத் நடத்துவதற்கு அடித்தளம் வகுத்தவர் அவர் - அதனால் வைக்கம் வீரரானார்.

அன்றைக்குத் தொடங்கிய ஜாதி ஒழிப்புப் பணி என்பது -  அவர் இறுதி மூச்சு அடங்குகின்ற வரையில், களம் களமாக அவர் நின்றார் - பல களங்களில் வென்றார்கள்.

மிகப்பெரிய அடக்குமுறைகளைத் துணிவோடு சந்திக்கக்கூடிய தெம்பும், துணிவும் உள்ளவர்கள்

அருமைத் தோழர்களே, அதிலே மிக முக்கிய மான ஒரு பகுதி - இங்கே நண்பர்கள் சுட்டிக் காட்டியதைப்போல, இந்தியாவிலேயே இது போன்ற ஒரு போராட்டம் - அமைதியாகவும், அதேநேரத்தில், வன்முறைக்கு இடமில்லாமலும், மிகப்பெரிய அடக்குமுறைகளைத் துணிவோடு சந்திக்கக்கூடிய தெம்பும், துணிவும் உள்ள நம்மு டைய தோழர்களால் நடத்தப்பட்டது.

எளிய மக்களாக இருந்தாலும், அவர்கள் செய்த தியாகம் என்பது, தன்னலமறுப்பு - அது என்றென்றைக் கும், நம்முடைய போற்றுதலுக்கும், பின்பற்றுதலுக்கும் உரியது என்ற அளவில், நிலைநாட்டி இருக்கின்ற நம் முடைய கருப்பு மெழுகுவத்திகள் - அவர்களையெல்லாம் நினைக்கின்ற இந்தக் காலகட்டத்தில், தந்தை பெரியார் அவர்கள், ஏன் ஜாதி ஒழிப்பில் அவர்கள் அக்கறை எடுத்து, தொடக்கத்தில் 1924 ஆம் ஆண்டு தொடங்கி யதை, 1973 ஆம் ஆண்டு அவர்களுடைய இறுதிப் பயணத்திற்கு முன்புகூட, அந்தப் போராட்டக் களத்தில் நின்றார்கள் என்று பார்க்கும்பொழுது, தந்தை பெரியார் அவர்கள் நான்கு கேள்விகளைக் கேட்டார்கள்.

தந்தை பெரியார் அவர்கள் கேட்ட  நான்கு கேள்விகள்

அந்தக் கேள்விகளை நான் நினைவூட்டுவதுதான் - இன்றைக்கு மிக முக்கியமான அரசமைப்புச் சட்ட எரிப்புப் போராட்ட நாளாக இருக்கக்கூடிய நவம்பர் 26 - ஜாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு நாளில், தந்தை பெரியார் கேட்ட அந்த நான்கு கேள்விகளுக்கு இன் றைக்கும் பதில் கிடைத்திருக்கிறதா? என்று பார்க்க வேண்டும்.

நம்முடைய கழகத் துணைத் தலைவர் அதிலே ஒரு பகுதியை சுட்டிக்காட்டினார்.

பெரியார் கேட்டார், மாலை நேர பொதுக்கூட்டம் என்ற கல்லூரிப் போன்று நடத்திய அரசியல் வகுப்பிலே கேட்டார்.

‘‘சுதந்திர நாடு என்று சொல்லிக் கொள்கிறீர்களே, நாடு சுதந்திரம் அடைந்துவிட்டது என்று சொல்கிறீர்களே,

சுதந்திர நாட்டில், ‘சூத்திரன்' இருக்கலாமா?

‘பிராமணன்' இருக்கலாமா?

‘பார்ப்பான்' இருக்கலாமா?

‘பறையன்' இருக்கலாமா?

மேல்ஜாதிக்காரன் இருக்கலாமா?

கீழ்ஜாதிக்காரன் இருக்கலாமா?

தொடக்கூடியவன்- தொடக்கூடாதவன்

பார்க்கக் கூடியவன் - பார்க்கக் கூடாதவன்

நெருங்கக் கூடியவன் - நெருங்கக்கூடாதவன்

என்றெல்லாம் இருக்கலாமா?

மனிதர்களுக்குள்ளேயே இந்தப் பேதம் இருக்க லாமா?

இது காட்டுமிராண்டித்தனம் அல்லவா?

மனிதத்தை அவமதிக்கின்ற மிகப்பெரிய கொடுமை யல்லவா?’’ என்று கேட்டார்.

வேறு எந்த நாட்டிலாவது பிறவியை அடிப்படையாகக் கொண்ட ஜாதி உண்டா?

எனவேதான், உலகத்தில் எந்த நாட்டில் இந்த ஜாதி இருக்கிறது என்று சொல்லுங்கள்.

வேறு எந்த நாட்டிலாவது பிறவியை அடிப்படையாகக் கொண்ட ஜாதி உண்டா?

உலகத்திலுள்ள எந்த நாட்டிற்காவது சென்று, இந்தி யாவினுடைய ஜாதி முறையைப்பற்றி சொன்னால், அவர்களுக்கு அது புரியாத புதிராக இருக்கும்.

அவர்களுக்குப் புரிய வைப்பது என்பதே விசித்திர மாக இருக்கும். ஏனென்றால், இப்படி ஒன்று இருக்குமா? என்று கற்பனை செய்ய முடியாத அளவிற்கு, அந்தக் கொடுமை உச்சத்தைத் தொட்டுக் கொண்டிருக்கின்றது.

அந்தக் கேள்விக்கு, சுதந்திரமடைந்து இன்றைக்கு 75 ஆம் ஆண்டைக் கொண்டாடுகிறோம் என்று சொல் கின்ற இந்தக் காலகட்டத்தில் பதில் உண்டா?

கொடுமைக்கு மகுடம் வைத்ததுபோன்று இன்னொரு கொடுமை

அதேநேரத்தில், இந்தக் கொடுமையைவிட, இந்தக் கொடுமைக்கு மகுடம் வைத்ததுபோன்று இன்னொரு கொடுமை உண்டு.

இந்த ஜாதி முறையை, இந்த வருணாசிரம பேதத்தை நான்தான் உருவாக்கினேன் என்று கடவுள்கள் சொல் கிறார்கள். கடவுள்களால் உருவாக்கப்பட்டது  - அது மனிதர்களால் உருவாக்கப்பட்டதல்ல. எனவே, அதனை எளிதாக நீ அழித்துவிட முடியாது என்கிறார்கள்.

ஒரு பக்கம் பிரம்மா - மனுதர்மத்தில் -

இன்னொரு பக்கம் கீதையில், கிருஷ்ணன்

சதுர்வர்ணம் மயாசிருஷ்டம் -

நான்கு வருணங்களை நானே உருவாக்கினேன் - அதை நான் நினைத்தாலும் மாற்ற முடியாது என்கின்ற அந்த பகவான் கிருஷ்ணனை அவதாரம் என்று, பகவத் கீதையைப் பெருமையாகத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கின்றவர்கள் சொல்கிறார்கள்.

எந்த நாட்டிலாவது இந்தக் கொடுமை உண்டா என்று சொல்வதைவிட, இந்தக் கொடுமையை, வணங்கப் படுகின்ற கடவுள்களே ஏற்பாடு செய்திருக்கிறார்கள். ஆகவே, அதை கடவுள் என்று சொல்ல முடியுமா?

என்றைக்கோ அதை சொன்னார்கள், அதை ஏன் இன்றைக்கு நீங்கள் சொல்கிறீர்கள்? இப்போது மாறிவிடவில்லையா? என்று கேட்க முடியுமா?

ஜாதியை ஒருபோதும்

ஒழித்துவிடக் கூடாது என்று சொன்னவர் விவேகானந்தர்

விவேகானந்தருக்கு குமரி முனையில் சிலை அமைத்திருக்கின்றீர்களே, பெரிய வீரத் துறவி என்றெல்லாம் சொல்லப்படுகின்ற விவேகானந்தர், ஜாதி என்பதுதான் நம்முடைய நாட்டிற்கு மிகப் பெரிய தேவை - அந்த ஜாதியை ஒருபோதும் ஒழித்துவிடக் கூடாது; அது கடவுளால் உருவாக் கப்பட்டது என்று மிகத் தெளிவாக எழுதியும், பேசியும் இருக்கிறாரா, இல்லையா?

இந்த தகவல் பல பேருக்குத் தெரியாது.

விவேகானந்தர் ஏதோ முற்போக்குச் சிந்தனை முத்திரைக் குத்திக் கொண்டவர் என்று பல பேர் சொல்வார்கள்.

இன்றைய ஆர்.எஸ்.எசுக்கு அவர்தான் கரு கொடுத்தவர்களில் மிக முக்கியமானவர்.

ஹிந்துத்துவா என்ற தத்துவத்தில் இருக்கக்கூடிய அந்த ஹிந்து மதம் என்கின்ற பார்ப்பனீய மதம், சனாதன மதம், ஆரிய மதம், பிராமணீய மதம் இருக்கிறதே, அந்த மதத்திற்கு அடித்தளமாக இருக்கின்ற வருணாசிரம தர்மம் - அந்த வருணாசிரம தர்மத்திற்கு மிக முக்கியமாக இன்றைக்கும் அடிப்படையை வழங்கிக் கொண்டிருப் பவை எவை?

Vivekananda Complete Works

மிகப்பெரிய அளவிற்கு, ஆதாரத்தோடு சொல்கி றோம், வியப்படைய வேண்டாம் - இது Vivekananda Complete Works என்று விவேகானந்தருடைய அமைப் பில் போடப்பட்டு இருக்கின்ற  பல தொகுப்புகள் - Advaita Ashrama என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட புத்தகமாகும்.

அதிலே இருந்து நான் தெளிவாக எடுத்துச் சொல்கிறேன்.

விவேகானந்தர் சொல்கிறார்,

According to Vivekananda, the Indian caste system was one of the greatest social institutions the Lord gave to man.It was true that this great social institution had often been thwarted from performing its legitimate functions by foreign invaders as well as by ignorant and arrogant Brahmins, but despite these limitations it had already worked wonders for the land of Bharata’. It was this institution that was destined to lead Indians towards achieving their goals and aspirations. Going a step further, Vivekananda attributed the downfall of India to a thoughtless rejection of caste. The original idea of caste was premised on the notion of diversity. Creation stopped when there was no diversity-’unity is before creation, diversity is creationthis is how Vivekananda formulated the central axiom about caste.The original idea of caste, he said, was to give an individual the freedom to express his nature, his prakriti. It was not based on custom, privilege or inheritance. This crystallization of caste on the basis of privilege and heredity was a modern-day distortion. His exhortation to his countrymen was to regain the lost glory of this unique institution:

‘‘இந்த ஜாதி முறையே கடவுள் அருளியது; அதில் நீங்கள் கைவைக்காதீர்கள்; அதனை வெறுக்காதீர்கள். ஜாதியைப்பற்றி நீங்கள் கேவலமாகப் பேசியதினால்தான் இந்தியா வீழ்ந்திருக்கிறது.’’

என்ன அற்புதமான வியாக்கியானம்!

இதை அப்படியே பின்பற்றித்தான் ‘‘பஞ்ச் ஆஃப் தாட்ஸ்'' - ஞானகங்கை என்ற புத்தகத்தைத் தொகுத்த ஆர்.எஸ்.எஸ். கோல்வால்கர் புத்தகத்தில் இருக்கிறது.

ஜாதியை ஒழிப்பதற்கு இன்றைய ஒன்றிய ஆட்சி தயாராக இல்லை

நண்பர்களே, இன்றைக்கு அந்தக் கொள் கையைக் கொண்டிருக்கின்ற ஒன்றிய ஆட்சி, ஜாதியை ஒழிப்பதற்குத் தயாராக இல்லை.

ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே கலாச்சாரம், ஒரே ரேஷன் கார்டு, ஒரே சட்டம் என்று சொல்லுகின்ற ஒன்றிய ஆட்சியினர், ஒரே ஜாதி என்று ஏன் சொல்லவில்லை?

இந்தக் கேள்விக்குப் பதில் உண்டா?

அதுமட்டுமல்ல, பெரியார், அடுத்த கேள்வி கேட்டார்,

இந்தக் கடவுள்கள் உண்டாக்கிய ஜாதி முறையி னாலே, உயர்ஜாதிக்காரன் மட்டும்தான் படிக்க வேண்டும்; மீறி கீழ்ஜாதிக்காரன் படித்தாலோ, காதால் கேட்டாலோ, காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றவேண்டும்; நாக்கை அறுக்கவேண்டும் என்றெல்லாம் சொன்னார்களே, அப்படிப்பட்ட மனுதர்ம சட்டங்கள்தான், அரசமைப்புச் சட்டத் திற்குப் பதிலாக வந்திருக்கவேண்டிய ஒன்று என்று சொல்கிறார்களே!

அரசமைப்புச் சட்டத்தை எடுத்துவிட்டு, அந்த இடத்தில் மனுதர்மத்தை வைக்கவேண்டுமாம்

இதே அரசமைப்புச் சட்டம், இதே நாளில், 1949 இல் எழுதி வழங்கப்பட்டபொழுது, ‘ஆர்கனைசர்’ என்ற ஆர்.எஸ்.எஸ். அமைப்பினுடைய ஏட்டில், மிகப்பெரிய அளவிற்கு கட்டுரை எழுதப்பட்டது.

‘‘இந்த அரசமைப்புச் சட்டத்தை ஏற்க முடியாது; இது மேலைநாட்டு பாணியில் இருந்து எழுதப்பட்டு இருக்கிறது. அரசமைப்புச் சட்டமாக நம்முடைய பாரம்பரியமான மனுதர்மம் இருக்கவேண்டும்‘‘ என்று எழுதப்படவில்லையா?

எனவே, அவர்களுடைய கோரிக்கை என்ன?

அரசமைப்புச் சட்டத்தை எடுத்துவிட்டு, அந்த இடத்தில் மனுதர்மத்தை வைக்கவேண்டும் என்பது தானே!

இந்திய அரசமைப்புச் சட்டம் முழுமையாக மேலை நாட்டுக் கருத்தை சொல்கிறதா? என்றால், இல்லை.

அங்கேதான் முரண்பாட்டை ஆய்ந்துபார்க்க வேண்டும். இந்த இடத்தில் மிக ஆழமாக சிந்திக்க வேண்டும். எனக்கு முன்பாக உரையாற்றிய நம்முடைய தோழர்கள் மிக அற்புதமாக விளக்கிச் சொன்னார்கள்.

கழகப் பொருளாளரானாலும், பிரச்சார செயலாளர் அவர்களானாலும் நல்ல செய்திகளைச் சொன்னார்கள். பேராசிரியர் சுப.வீ. அவர்களும் சொன்னார்கள்.

(தொடரும்)

செவ்வாய், 21 டிசம்பர், 2021

திராவிடர் கழகத் தலைவர் - தமிழர் தலைவருக்குப் “பகுத்தறிவுப் போராளி” என்ற பட்டம்

“பகுத்தறிவுப் போராளிக்கு!” நம் வணக்கம்

கவிஞர் கலி.பூங்குன்றன்

பெரியார் பன்னாட்டு அமைப்பின் ஏற்பாட்டில் உலக திராவிடர் மகளிர் மாநாடு  - காணொலி மூலம் நமது அருமைத் தலைவர் - திராவிடர் கழகத் தலைவர் - தமிழர் தலைவருக்குப் “பகுத்தறிவுப் போராளி” என்ற பட்டத்தை அளித்து மகிழ்ந்தது.  (12.12.2021) இரவு 8.30க்குத் தொடங்கி 12.05 மணி வரை)

பட்டம் பெற்ற தலைவர் மகிழ்ந்ததைவிட உலகெங்கும் வாழும் தமிழர்கள் - திராவிடர்கள் சுயமரியாதைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், பகுத்தறிவாளர்கள், மனிதநேயர்கள், மனித உரிமை விரும்பிகள் ஒவ்வொருவரும் தங்களுக்குக் கிடைத்த பட்டமாக, விருதாகக் கருதி மகிழ்ச்சியின் உச்சியில் திளைத்தார்கள்.

என்ன காரணம்? தந்தை பெரியார் என்ற மேருமலை தன் மூச்சுக்கு நிரந்தர விடுப்பு அளித்த நிலையில், திராவிடர் கழகம் என்ற அமைப்பு இருக்குமா - துலங்குமா? என்ற நினைப்பில் இருந்தவர்கள்  - இருக்கக் கூடாது - தொலைந்து போகட்டும் என்று தம் இஷ்ட மித்திர தெய்வங்களை எல்லாம் நேர்த்திக் கடன் இருந்து கும்பிட்டுக் கிடந்தவர்கள் ஒரு பக்கம்.

‘அய்யோ, அய்யாவின் இயக்கம் மரணித்தால் நம் கெதி என்னாவது! நம் மக்களுக்குக் கழிப்பின்றி நமக்காகக் குரல் கொடுக்கும் இயக்கம் எது? இனத்தைப் பாதுகாத்திட இறப்பையும், இன்முகத்துடன் ஏந்தி வரவேற்கும் வலிமை மிக்க அளவில் வேறு இயக்கம் ஏது! ஏது?

அரசியல் அபிலாசை என்னும் மயக்கத்தின் வட்டத்திற்குள் சிக்கி வாய்பிழந்து நிற்காமல் “நின்ற சொல்லர்” என்பதற்கேற்ப இரும்பென உறுதியாகக் களத்தில் நிற்கும் கழகம் எது?

சமூகநீதிக்கு ஊறு என்றால் சாய்ந்து படுக்காமல், சடுதியில் சமர்க்களம் புகும் கழகம் எ(ஏ)து? என்ற எண்ணத்தில் அஞ்சியோர் உண்டு.

தந்தை பெரியார் மறைந்த நிலையிலும் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, “கழகம் கலையாது - இணையாது தனித்தன்மையுடன் இயங்கும் செயல்படும்” என்று செவிளில் அறைந்தது போல துப்பாக்கியிலிருந்து ரவை புறப்பட்டது போல பதில் கூறிய தலைவர் அன்றோ நம் தலைவர் வீரமணி.

திருச்சியிலே பொதுக்குழு கூடி (6.1.1974) எடுத்த தீர்மானத்தின் சூளுரை என்ன?

“தந்தை பெரியார் விட்டுச் சென்ற பணிகளை, அவர்கள் போட்டுத் தந்த பாதையில் எந்தவித சபலங்களுக்கும் ஆளாகாமல் வென்று முடிப்போம்!” என்று எடுத்த சூளுரை-

இன்று வரை, ஏன் நாளையும், எதிர் காலத்திலும் உயிர்த்துடிப்போடு நின்றதே - நிற்கிறதே - நிற்குமே!

அய்யாவின் ஓராண்டு நினைவையொட்டி (25.12.1974) ‘இராவணலீலா’ என்னும் இனமான விழாவை நடத்தி இந்தியாவையே திரும்பிப்பார்க்கச் செய்தாரே - தலைவர் அன்னை மணியம்யை£ர்.

அம்மா உடல்நலம் பாதிக்கப்பட்ட காலக்கட்டம்,  நெருக்கடி நிலைப் பிரகடனப்படுத்தப்பட்டு - கழகத்தின் பொதுச்செயலாளரான ஆசிரியரை மிசா கைதியாக ஓராண்டு சிறைக்கூடத்திலே பூட்டி, கழகத்தை கலகலக்கச் செய்யலாம் என்று காகப்பட்டர் பரம்பரையினர் செய்த சூழ்ச்சியும் சுக்கல் நூறாக ஆக்கப்பட வில்லையா?

தணிக்கை என்ற பெயரால் ‘விடுதலை’யின் விலா எலும்பைக் குத்தி - குடலைக் கிழித்து மாலையாகச் சூட்டிக்கொள்ளலாம் என்று மார்தட்டினார்களே - அவர்களின் வியூகத்தையும் வீழ்த்தி ‘விடுதலை’ தன் பெயருக்கேற்ப வீரநடை போடவில்லையா?

நெருக்கடி - தணிக்கையின் பெயரால் ‘விடுதலையை’ வீழ்த்தலாம் என்ற வீண்கனவைக் கண்டார்களே  - அந்தத் தலைவர் ஆசிரியர்  வீரமணி தலைமை சால் வலிமையால் அளப்பரிய ஆற்றலால் எட்டுப்பக்கத்தில் வண்ண வண்ணமாக எண்ணங்களை சுமந்து உலகத் தமிழர்கள் மத்தியில் வீர உலா நடத்தவில்லையா ‘விடுதலை’?

சென்னையில் ஒரு பதிப்பு என்றால் தந்தை பெரியாரின் தலைமையகமான திருச்சியில் இன்னொரு பதிப்பையும் விரிவாக்கம் செய்யவில்லையா? மளமளவென வெளியீடுகளை பல மொழிகளிலும் குவித்துக் கொண்டு இருக்கவில்லையா? முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்களே இந்த சாதனையை வெகுவாகப் பாராட்ட வில்லையா?

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், நமது தலைவர் வீரமணி அவர்கள் விடுதலைக்கு ஆசிரியர் பொறுப்பை ஏற்கவில்லை என்றால் ‘விடுதலை’ வார ஏடாக மாறி இருக்குமே! நினைத்தாலே நம் நெஞ்சமெல்லாம் நடுங்குகிறது. அதனைத் தடுத்தாட்கொண்டு தந்தை பெரியார் கட்டளையை ஏற்று 59 ஆண்டு காலம் ஆசிரியர் என்ற உலக கின்னஸ் சாதனையை நிகழ்த்திய ஒன்று போதுமே - தலை குனிந்து அவருக்கு நன்றியோடு வணக்கம் செலுத்துகிறோம்!

வருமான வரித்துறையின் மூலம் பெரியார் அறக்கட்டளையை நசுக்கி விடலாம் என்று நரியார்கள் திட்டமிட்ட நிலையில், நீதிமன்றத்தின் (Income tax apppelate tribunal) படிக்கட்டுகளில் ஏறி, நியாயத்தின் - நேர்மையின்  - உண்மையின் ஒளியை விளக்கி, முழுக்க முழுக்க ஆதிக்கக் கம்பி வேலியாக இருந்த அந்த அரணை உடைத்து - “எதிர்காலத்தில் இயக்கத்தை இவர் காப்பார்” என்று அய்யா வைத்த நம்பிக்கையை நாணயமாகக் காப்பாற்றிக் கம்பீரமாக வெற்றிப் புன்னகையுடன் வெளிவந்தாரே நமது தலைவர் ஆசிரியர்.

இந்த ஒன்றுக்காக எவ்வளவுப் பாராட்டுகளைக் குவித்தாலும் தகுமே! - தகுமே! நன்றி! நன்றி!!

எண்ணிக்கையில் அகல் விளக்காக இருந்த கல்வி நிறுவனங்கள் இன்று ... சூரியனாக வானளவு வளர்ந்து சுடர் விடவில்லையா?

சமூகநீதியின் சரித்திரம் தான் என்ன? தந்தை பெரியாரின் உழைப்பால் 49 விழுக்காடு தமிழ்நாட்டில் நிலவிய இடஒதுக்கீடு இன்று 69 விழுக்காடாக வலிமையான கூட்டப் பாதுகாப்போடு விண்மீனாக ஜொலிக்கிறதே!  தந்தை பெரியார் என்னும் தத்துவ ஆசான் தோள் உரத்தின் மீது நின்று சாதித்துக் காட்டிய சாதனைக்கு சொந்தக்காரர் இவர் இல்லையா?

1940இல் திருவாரூரில் நடைபெற்ற நீதிக்கட்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் - ஒன்றிய அரசின் துறைகளிலும் இடஒதுக்கீடு தேவை என்பது  - அரை நூற்றாண்டுக்குப் பிறகு அது செயல் மலராகப் பூத்துக் குலுங்குகிறதே! இதற்காக திராவிடர் கழக தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தலைமையில்  இந்தியத்துணைக் கண்டம் முழுவதும் 42 மாநாடுகள் என்பது சாதாரணமா?, 16 போராட்டங்களை - பிரதமர் வீட்டு முன் மறியல், நாடாளுமன்றத்தின் முன் மறியல் என்று முன்னுதாரணம் இல்லாத வகையில் நடத்திக் காட்டியது யார்?

‘வீரமணியைப் பார்க்கும் பொழுதெல்லாம் சமூகநீதி உணர்ச்சியைப் பெறுகிறேன்’ என்று சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அகம் மலர்ந்து புகழ்மாலை சூட்டியதை நேரில் கண்டு களித்த கருஞ்சட்டையினர் இன்னும் உண்டே! (1.10.1994)

எதைச் சொல்ல, எதை விட?

உலகத் திராவிட மகளிர் மாநாடு நமது தலைவருக்குப் “பகுத்தறிவுப் போராளி” என்ற பட்டம் அளித்தது - ஏதோ பாராட்ட வேண்டும் என்ற பாவனையால் அல்ல.

எத்தனை எத்தனைப் பெண்கள் விடுதலை மாநாடுகள்! விதவைப் பெண்களுக்கு பூச்சூட்டல் கண்டு உலகப் பூப்பாகமே அதிர்ந்ததே!

அம்பேத்கர் பிறந்த நாளில் தாலி நீக்கம் நாட்டையே குலுக்கியது (14.4.2015). வழக்கில் வெற்றியும் கண்டோமே!

‘இளைஞர்களே, நீங்கள் திருமணம் செய்து கொள்வதாக இருந்தால் விதவைகள் என்று சொல்லப்படும் பெண்களையே மணமுடிப்பீர்’ என்ற குரல் கொடுத்ததும், தீர்மானம் நிறைவேற்றியதும் திராவிடர் கழகம் அல்லாமல் வேறு எந்த அமைப்பு? தலைமையக பெரியார் திடலில் சுயமரியாதைத் திருமண நிலையம் மூலம் அன்றாடம் புரட்சிகரமாகத் திருமணங்கள் நடந்த வண்ணம் உள்ளதே!

விதவைப் பெண்கள் தரிசு நிலம் என்று கூறிய காஞ்சி சங்கராச்சாரியாரை எதிர்த்து காஞ்சி மடம் முன் கழக மகளிர் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் கண்டனக் குரலை எழுப்ப வில்லையா?

ஆண்களுக்கான உரிமை பெண்களுக்கும் வேண்டும். செல்வி, திருமதி என்ற சொற்களைத் தூக்கி எறிக! தன் பெயருக்குப் பின்னால் கணவன் பெயரை எதற்கு இணைக்க வேண்டும்?

துணைவரை இழந்த பெண்கள் திருமணத்திற்கு தலைமையேற்க வேண்டும் என்ற புரட்சித் தீர்மானங்கள் எல்லாம் நிறைவேற்றப்பட்டன, திராவிடர் கழக மாநாடு அல்லாமல் வேறு எங்கே, எங்கே?

ஜாதி மறுப்புத் திருமணம், மத மறுப்புத் திருமணம், காதல் திருமணம் பெருக வேண்டும்; தக்க வயதடைந்த ஆணும் பெண்ணும் இணைவதில் அடுத்தவர்கள் குறுக்கிட உரிமை ஏது? என்றெல்லாம் புரட்சிக் குரல் கொடுத்தவர்தான் எவர்?

பெண்களே தீக்குண்டத்தில் இறங்கி, கடவுள் மறுப்பை முழங்கி பூமியை அதிரச் செய்யவில்லையா?

கையில் தீச்சட்டி ஏந்தி ‘தீச்சட்டி இங்கே மாரியாத்தாள் எங்கே?’ என்று கருப்புடை தரித்த கழக மகளிர் உரக்கக் கொடுத்த முழக்கம், உறங்கியவர்களையும் திடுதிப்பென எழுந்து ஓடி வந்து பார்க்கச் செய்யவில்லையா?

சட்டப்பேரவை தேர்தலிலும், நாடாளுமன்ற தேர்தலிலும் பெண்களுக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கிடு என்பதற்காக தலைவர் வீரமணி தலைமையில் திராவிடர் கழகம் நடத்திய மாநாடுகள், கருத்தரங்கங்கள், பேரணிகள், போராட்டங்கள் கொஞ்சமா? நஞ்சமா?

சேலத்தில் 23, 24.1.1971 நாட்களில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட மாநாட்டில் ஒரு முக்கிய தீர்மானம்.

“ஒருவன் மனைவி மற்றவனை விரும்புவது என்பதைக் குற்றமாக்கக்கூடாது” என்ற தீர்மானத்தைத் திரித்து “ஒருவன் மனைவியை மற்றவன் அபகரித்துக் கொள்ளலாம்“ என்று வெளியிட்ட ‘இந்து’ ஏட்டை எதிர்த்து, ஆசிரியர் வீரமணி அவர்கள் வழக்குரைஞராக உயர்நீதிமன்றத்தில் வாதாடவில்லையா? இந்து ஏடு மன்னிப்புக் கேட்டதுண்டே!

1938இல் சென்னையில் மகளிர் மாநாடு நடத்தி “பெரியார்’ என்ற பட்டம் கொடுத்துப் பெருமை பெற்றார்கள்.

இன்று அவரது சீடருக்குப் “பகுத்தறிவுப் போராளி” என்ற பட்டம் தந்து பெருமைப் பெற்றுவிட்டனர்.

தமிழர் தலைவர் தலைமையேற்று இயக்கத்தை எழுச்சியுடன் நடத்துகிறார் என்பதற்கான அத்தாட்சிதான் உலக திராவிடர் மகளிர் மாநாட்டின் புகழ் பூத்த செயல்!

இதற்கு முன்பும் பல விருதுகள் இவரைத் தேடி வந்ததுண்டு.

“இனமானப் பேரொளி” இது நாகையில் பெண்கள் மாநாட்டில் அளிக்கப்பட்டது (1993).

“பாரத் ஜோதி” என்ற விருதைக் கொடுத்து பாராட்டியது. புதுடில்லி குளோபல் பொருளாதாரக் கவுன்சில் (2000 ஆண்டு). “பேரறிவாளர்” விருதினை வழங்கியது மியான்மர் சுயமரியாதை இயக்கம்.

“ஆக்ஸ்போர்டு தமிழ் விருது” வழங்கிக் குதூகலித்தது- ஆக்ஸ்போர்டு தமிழ்ச்சங்கம்.  “பெரியார் ஒளி” வழங்கியது கழகத்தின் மூன்றாவது துப்பாக்கியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (2010 ஆம் ஆண்டு)

கோவை கே.ஜி.அறக்கட்டளை “ஆயிரமாண்டில் செயலாற்றல் மிக்க தலைவர்” என்ற விருது வழங்கிப் பாராட்டியது.

“வாழ்நாள் சாதனையாளர்” விருது வழங்கியது சென்னை லயோலா கல்லூரி.

“கவுரவ டாக்டர்” பட்டம் வழங்கியது காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் (2003ஆம் ஆண்டு).

“கருத்துக்கனல்” என்ற விருது வழங்கி பெருமைப் பெற்றது மலேசிய திராவிடர் கழகம்.

2009 ஆம் ஆண்டிற்கான “கலைஞர் விருதினை” வழங்கிக் கவுரவித்தது ‘முரசொலி’ அறக்கட்டளை (2009 ஆம் ஆண்டு)

காஞ்சியில் திமுக சார்பில் அண்ணா நூற்றாண்டு விழாவில் “தந்தை பெரியார் விருது” வழங்கி உச்சி மோந்தது (2009).

“தந்தை பெரியார் சமூகநீதி விருது” வழங்கி கவுரவித்தது தமிழ்நாடு அரசு (1996ஆம் ஆண்டு).

“மனித நேய வாழ்நாள் சாதனையாளர் விருது” வழங்கியது அமெரிக்க மனித நேய அமைப்பு (Humanist Association)  வாசிங்டன் (22.9.2019).

தஞ்சையில் எடைக்கு எடை தங்கம் கொடுக்கப்பட்டது (1.2.1998). அதில் உருவானதுதான் திராவிடர் கழக அறக்கட்டளை (DK Trust).

புதுக்கோட்டையில் எடைக்கு எடை வெள்ளி - அது பெரியார் அறக்கட்டளைக்குச் சென்றது.

இவற்றை எல்லாம் அணி அணியாகப் பெற்ற - அறிஞர் அண்ணாவால் 11 வயதில் “திராவிடர் கழகத்தின் திருஞான சம்பந்தர்” என்று வருணிக்கப்பட்ட - ஆசிரியர் என்றாலே வீரமணி என்று உலகமறிந்த பெருமகனார் ஒவ்வொரு முறையும் என்ன சொன்னார்?

இந்த விருதுகள் எல்லாம் என் ஆசானுக்கு, அறிவுலகத் தந்தை அய்யாவுக்கு அளிக்கப்பட்டது என்று சொன்னது மேம்போக்கான சொற்கள் அல்ல, அவரின் ஒவ்வொரு அசைவையும் உணர்ந்தவர்கள் இதனை அறிவார்கள்.

இவற்றையெல்லாம் இயக்கமே உயிர் மூச்சு என்று எந்தவித எதிர்ப்பார்ப்புமின்றிப் பாடுபடும் இயக்கத் தொண்டர்களுக்கு அர்ப்பணம் என்று அடக்கமாகவே சொல்லி வந்திருக்கிறார். வாசிங்டனில் “வாழ்நாள் சாதனையாளர் விருது” வழங்கி சிறப்பிக்கப்பட்டபோது கூட, இயக்கப் பொறுப்பாளர்களை மேடைக்கு அழைத்து, அந்த விருதினைப் பெற்ற பெரும் பண்பை எங்கே தேடி அலைய முடியும்?

அடக்கமும், நேர்மையும், உழைப்பும் நெருக்கடியான ஒரு  காலகட்டத்தில் நிமிர்ந்த செயல்பாடும்தான் உண்மை மனிதன் என்பதற்கு அடையாளம்.

இந்த அணிகலன்கள் நம் தலைவருக்குப் பஞ்சமே இல்லை.

இன்னொன்றையும் தவறாது சொல்லுவார் - என்மீது “நீங்கள் சாற்றும் புகழுக்கான தகுதியை வளர்த்துக் கொள்வேன்” என்றும் கூறுவார்.

1944ஆம் ஆண்டிலேயே ‘ஜஸ்டிசைட்’ ஏடு இவரை அடையாளம் காட்டியது (“Self Respect Bombers).

எந்த ஒரு உரிமையையும் அதற்கான விலையைக் கொடுத்து பெற வேண்டும் என்ற இலக்கணத்துக்கு இலக்கியமும் இவரே, இதுவரை 55 முறை சிறையும்  - கைதும் நடந்துள்ளன.

உடலில் கத்தி படாத இடமில்லை (அறுவைச் சிகிச்சையில்)  - உயிர்க்குக் குறி வைக்கப்பட்டன பல முறை!

நெருப்பாற்றில் அல்ல - கந்தகக் கடலில் நீச்சல்போட்ட நிஜமான மனிதத்துவம் நிரம்பிய நிறைகுடம் இது!

“இந்த நிலையில் சுயநலமில்லது வீரமணியைப் போல் எத்தகைய பொருள் ஊதியத்தையும் கருதாமல், பொதுத் தொண்டு செய்ய ஒருவர் வந்தார், வருகிறார், வரக்கூடும் என்பது உவமை சொல்லக் கூடாத ஒரு மாபெரும் காரியம் என்றே சொல்ல வேண்டும்” (‘விடுதலை’, 6.6.1964) என்றாரே தந்தை பெரியார்! இதைவிட நமது தலைவர் ஆசிரியருக்கு எத்தனை விருதுகளும், கிரீடங்களும் தாவி வந்தாலும் ஈடாகாதே!

தந்தை பெரியாரே அவரது சீடர் வீரமணியின் தோளைப் பற்றி ‘விடுதலை’ ஆசிரியர் நாற்காலியில் அமர வைத்தாரே அடடே, இந்தப் பேறு யாருக்குக் கிட்டும்?

“யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும்!” என்ற தன்னம்பிக்கைத் தணலை கழகத்தோழர்களிடம் வழங்கிய தலைவர் மானமிகு வீரமணி.

“உலகத்தைப் பெரியார் மயம் ஆக்குவோம்“ என்ற சூளூரை உன்னதமானது! மத மாச்சரியத்தால் மனித ரத்தம் உடைப்பெடுத்து ஓடும் ஒரு காலகட்டத்தில், மதமற்ற ஓர் உலகு தேவைப்படுகிறது - அது பெரியார் என்ற தத்துவ மாமருந்தின் மூலம் தான் கிடைக்கும் என்பார்.

“உங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்ற இறுதி மூச்சுவரை உழைப்பேன்!” என்று தமது நன்றி அறிவிப்பில் ஓங்கி ஒலித்துள்ளார்.

அந்தப்பயணத்தில் நம்மை நாம் இணைத்துக் கொள்ளும் போது தான் நாமும் பெருமைப்பட முடியும்!

பெரியார் பன்னாட்டு அமைப்புக்கு நன்றி - பன்னாடுகளிலிருந்து பல மொழி பேசும் மகளிரால் நம் தலைவருக்கு அளிக்கப்பட்ட பட்டமளிப்பு விழாவில் அவர்கள் மழையெனப் பொழிந்த கருத்துக்களை வருணிக்க

வார்த்தைகளுக்குத் தெம்பு இல்லை - இல்லவே இல்லை!

நமது தலைவர் மூலம் “பெரியார் உலகம்” படைக்கப்பட வேண்டும் என்ற ஆதார கருதி அவர்களது உரையில் மிளிர்ந்தது. நன்றி! நன்றி!

சனி, 11 டிசம்பர், 2021

பாலக்காடு கல்பாத்திப் பொது ரோடுகளில் மலையாளத்து ஈழவ சகோதரர்களும், தீயர் சகோதரர்களும் நடக்கக் கூடாது என்று இருந்த தடைகள் நீக்கப்பட்டுவிட்டது.

சுயமரியாதை பிரச்சாரத்தின் வெற்றி

 27.11.1927- குடிஅரசிலிருந்து...

எவ்வளவோ காலமாய் பார்ப்பனர் களால் கொடுமைப்படுத்தப்பட்டிருந்த தான பாலக்காடு கல்பாத்திப் பொது ரோடுகளில் மலையாளத்து ஈழவ சகோதரர்களும், தீயர் சகோதரர்களும் நடக்கக் கூடாது என்று இருந்த தடைகள் இவ்வருஷம் நீக்கப்பட்டுவிட்டது. அதுவும் அய்கோர்ட்டாரால் நீக்கப்பட்டதே ஒழிய பார்ப்பனர்களுக்குப் புத்தியும், சமரச ஞானமும் உதயமாகி நீக்கப்பட்டது என்று சொல்லவே முடியாது என்றே சொல்லுவோம். இன்னமும் இதுபோல் மலையாளத்திலும், தமிழ்நாட்டிலும் நடக்கக் கூடாததும், கிட்டே அணுகக் கூடாததுமான எத்தனையோ தெருக்கள் இருந்து கொண்டு வருகின்றன. அவைகள் ஒவ்வொன்றுக்கும் வெள்ளைக்காரர்கள் வாய் மூலமாய்த் தீர்ப்பை எதிர் பார்க்கின்றார்களே ஒழிய, ஒரு பார்ப்பனருக்காவது புத்தி வந்து தாங்களாகவே அனுமதித்தார்களென்று சொல்லிக் கொள்ள முடியாமலேயே இருக்கின்றது.

இனியாவது, சுசீந்திரம் சத்தியாக்கிரகம் ஆரம்பித்த தலைவர்களுக்காவது திருவாங்கூர் அரசாங்கத்திற்காவது புத்தி வருமோ என்று கேட்கின்றோம்.