ஞாயிறு, 25 ஜூன், 2017

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் பகுத்தறிவாளர் இயக்கத்தின் நூற்றாண்டு விழா!

சகோதரத்துவ மாநாட்டை தமிழர் தலைவர் தொடங்கி வைத்த மாண்பு!

- ஒரு பயணத் தொகுப்பு -
நேற்றையத் தொடர்ச்சி....
சகோதரத்துவ மாநாட்டினைத்
தமிழர் தலைவர் தொடங்கி வைத்தார்
கேரள யுக்திவாதி சங்கத்தின் புரவலர் யு. கலாநாதன் ஆற்றிய முகவுரையினை அடுத்து தமிழர் தலைவர் சகோத ரத்துவ மாநாட்டினை தொடங்கி வைத்து நீண்டதோர் ஆய் வுரையினை வழங்கினார். ஜாதி முறை ஒழிப்பு  பெரியார் இயக்கத்தின் பங்களிப்புகள் (கிதீஷீறீவீtவீஷீஸீ ஷீயீ சிணீstமீ ஷிஹ்stமீனீ – சிஷீஸீtக்ஷீவீதீutவீஷீஸீs ஷீயீ றிமீக்ஷீவீஹ்ணீக்ஷீ விஷீஸ்மீனீமீஸீt) எனும் தலைப்பில் ஆங்கிலத்தில் தமிழர் தலைவர் உரையாற்றினார்.
“பகுத்தறிவாளர் அமைப்புகள் வெறும் கருத்தியல் அமைப்புகளாக மட்டுமல்லாமல், களப்பணி ஆற்றி சமூகத் தில் நிலவிடும் ஏற்றத் தாழ்வுகளை நீக்கிடப் போராடும் அமைப்புகளாக செயல்பட வேண்டும்.  இதற்கு எடுத்துக் காட்டாக, தந்தை பெரியார் மற்றும் சகோதரன் அய்யப்பன் நடத்திய பகுத்தறிவாளர் அமைப்புகளை பின்பற்றலாம்.  தந்தை பெரியாரும், சகோதரன் அய்யப்பனும் ஜாதியின் அடிப்படையில், பிறப்பின் அடிப்படையில் பாகுபாட்டை ஏற்படுத்திய மேல் ஜாதியினரான பார்ப்பனர்களை எதிர்த்து அவர்களின் தாக்கத்தினை தகர்த்துப் போராடிட இயக்கம் கண்டனர். ஜாதி ஒழிப்பு எனச் செயல்படும் பொழுது, ஜாதி வருண முறையினை ஏற்படுத்தி அதனைப் பிரகடனப்படுத் திய கடவுளையும் எதிர்க்க முற்பட்டனர். கடவுளை மறுக் காத ஜாதி ஒழிப்பு நடவடிக்கைகளால் நிலைத்த, நீடித்த பயன் விளையப் போவதில்லை. இதனை லட்சியமாகக் கொண்டு தந்தை பெரியாரும் சகோதரன் அய்யப்பனும் சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில்  ஒரே காலக் கட்டத்தில் இணைந்து சமுதாயப் பணியாற்றிய புரட்சியாளர்கள் ஆவர்.
வைக்கம் போராட்டம்
கோயில் நுழைவுக்கான உரிமை எனும் மத உரிமை யினைத் தாண்டி, கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களில் நடந்து செல்லும் மனித உரிமை மறுக்கப்பட்ட, சமூகத்தின் அடித்தள மக்களிடம் காட்டப்பட்ட பாகுபாட்டை ஒழித்திட 1924ஆம் ஆண்டில் கேரள மண்ணில் வைக்கத்தில் போராட்டம் தொடங்கப்பட்டது.  போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்களை அன்றைய சமஸ்தான நிருவாகம் கைது செய்து சிறையில் அடைத்த வேளையில், போராட்டத்தில் தொய்வு ஏற்பட்டு,  அன்றைய சென்னை மாகாணத்திலிருந்து தமிழ் நாடு காங்கிரசு கமிட்டியின் தலைவராக இருந்த தந்தை பெரியார், போராட்டத்தினை தொடர்ந்து நடத்திட அழைக்கப்பட்டார்.  போராட்டத்தினை நடத்திய தந்தை பெரியார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.  ஒரு மாதத்திற்குப் பின் விடுதலை ஆனபின்பும் தொடர்ந்து போராட்டத்தினை நடத்தியதால் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். தந்தை பெரியாரது முழுமையான ஈடுபாட்டால் வைக்கம் போராட்டம் வெற்றி பெற்று கோயில் தெருக்களை அனைத்து ஜாதி மக்களும் பாகுபாடு ஏதுமின்றி பயன்படுத்திடலாம் என சமஸ்தான நிருவாகம் அறிவித்தது. வெற்றிகரமாக போராட்டத்தினை நடத்திய தந்தை பெரியார் வைக்கம் வீரர் எனப் பாராட்டப்பட்டார். வைக்கத்தில் நடைபெற்ற இந்த மனித உரிமைக்கான போராட்டம் இந்தியாவின் சமூக நீதிக்கான முதல் போராட் டமாக அமைந்து பின்னர் நடைபெற்ற பல்வேறு சமூகப் பாகுபாட்டு எதிர்ப்புப் போராட்டங்களுக்கு உந்து தலாக விளங்கியது.
சேரன் மாதேவி குருகுலப் போராட்டம்
இதே காலக் கட்டத்தில் தமிழ்நாட்டின் தென்பகுதியில் சேரன்மாதேவியில் நடத்தப்பட்ட குருகுலத்தில் பார்ப்பன மாணவர்களுக்கும் பார்ப்பனர் அல்லாத மாணவர்களுக்கும் உணவு வகையிலும், உணவு பரிமாறப்படுவதிலும், பயிற்று விக்கப்படும் பாடத்திட்ட முறையிலும் பாகுபாடு காட்டப் பட்டது.  தமிழ்நாடு காங்கிரசு கட்சியின் நிதி உதவியில் நடைபெற்ற குருகுலத்தில் மாணவர்களிடையே காட்டப் பட்ட பாகுபாட்டினை நீக்கிட வலியுறுத்தப்பட்டது.  பாகு பாடு களையப்படாத நிலையில் காங்கிரசு கட்சியின் தலை வராக இருந்த தந்தை பெரியார் குருகுலத்திற்கு அளிக்கப் பட்டு வந்த நிதி உதவியினை நிறுத்தி விட்டார். குருகுலத்தில் கடைப் பிடிக்கப்பட்ட பாகுபாட்டை எதிர்த்து காங்கிரசு கட்சிக்குள்ளேயே நடைபெற்ற போராட்டத்தில் தந்தை பெரியார் காட்டிய உறுதிப்பாடு தீண்டாமை ஒழிப்பிற்கு அளப்பரிய பங்கினை அளித்தது.
அரசியலமைப்புச் சட்ட எரிப்பு
பின்னர் நாடு விடுதலை அடைந்து, அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த நிலையில்  அதன் விதிமுறை களும் ஜாதிமுறைக்கு பாதுகாப்பு தரும் வகையில் இருந் ததை எதிர்த்து 1957  ஆம் ஆண்டில் ஜாதி ஒழிப்புப் போர் எனும் அரசியலமைப்புச் சட்ட எரிப்புப் போரை நடத்தினார். பல்லாயிரக்கணக்கான தோழர்கள் சிறையில் அடைக்கப்பட் டனர். சட்ட எரிப்பிற்காக  மூன்று மாதம் முதல் மூன்றாண் டுகள் வரை என் தண்டனை அளிக்கபட்டதிலும் பாகுபாடு காட்டப்பட்டது. ஜாதி ஒழிப்புப் போராட்டத்தில், தந்தை பெரியார் நடத்திய அரசியலமைப்புச் சட்ட எரிப்பு முக்கியப் பங்கு வகித்தது.
ஜாதி முறை, தீண்டாமைக் கடைப்பிடிப்பு ஆகியவற் றிற்கு பாதுகாப்பு அரணாக இருப்பது மதம், கடவுள் நம் பிக்கை என பகுத்தறிந்து இறுதியில் கடவுள் மறுப்பினை நடைமுறைத் திட்டமாக தந்தை பெரியார் அறிவித்தார்.  கேரளாவிலும் கடவுளை மறுத்து பகுத்தறிவின் அடிப்படை யில் தீண்டாமை ஒழிப்புப் போரை சகோதரன் அய்யப்பன் நடத்தினார்.
பிறப்பின் அடிப்படையில், ஜாதி  ஜாதியின் அடிப்படை யில் ஏற்றத் தாழ்வு - பரம்பரைத் தொழில் கடைப்பிடிப்பு என பாகுபாடு நிறைந்த சமூகத்தில், அந்தப் பாகுபாட்டிற்கு பரிகாரம் கண்டு சமூகநீதி நிலை நாட்டப்பட வேண்டும். ‘முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும்’ எனும் முதுமொழிக்கு ஏற்ப ஜாதியின் அடிப்படையில் ஏற்படுத்தப் பட்ட பாகு பாட்டிற்கு ஜாதி அடிப்படையில்தான் பரிகாரம் காணப்பட வேண்டும். அந்தப் பரிகார நடவடிக்கை வழி முறைதான் இடஒதுக்கீடு கல்வி கற்பதில் வேலைவாய்ப்பினை பெறு வதில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு என்பது அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமையாகும். இந்த உரிமைக்கு நாடு விடுதலை அடைவதற்கு முன்பே பாடுபட்டு வந்த இயக்கம் திராவிடர் இயக்கம்  அதன் முதல் அரசியல் கட்சியான நீதிக்கட்சி என அழைக்கப்பட்ட தென்னிந்திய நல உரிமைச் சங்கம் ஆகும். 1928  ஆம் ஆண்டு வகுப்புரிமை அரசாணை(Communal G.O.)  சென்னை மாகாணத்தில் நீதிக் கட்சியின் ஆட்சியில் நடை முறைக்கு வந்தது. பின்னர் படிப்படியாக இட ஒதுக்கீட்டின் முறை, ஒடுக்கப்பட்ட மக்கள் தொகை விகிதத்திற்கு ஏற்ற வாறு வகுப்புவாரி பிரதிநிதித்துவம் (Communal Representation) என தொடர்ந்து குரல் எழுப்பி, போராட்டம் நடத்தி வகுப்புரிமையினை தந்தை பெரியார் பெற்றுத் தந்தார்.
நாடு விடுதலை அடைந்த நிலையில் வகுப்புரிமை ஆணை செல்லாது என உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்ற மும் தீர்ப்புகள் வழங்கிய நிலையில், தந்தை பெரியார் ஒடுக்கப்பட்ட மக்களைத் திரட்டி போராட்டம் கண்டார்.  இதன் விளைவாக அரசியலமைப்புச் சட்டம் முதன் முத லாக 1951 ஆம் ஆண்டில் திருத்தப்பட்டது. நாடு தழுவிய அளவில் வகுப்புரிமையிலான இடஒதுக்கீடு கல்வி கற்பதில் நடைமுறைக்கு வந்தது. பின்னர் திராவிடர் இயக்க ஆட்சியில் இட ஒதுக்கீடு விழுக்காடு படிப்படியாக உயர்ந்து தற்பொழுது மொத்த இடஒதுக்கீடு அளவு 69 விழுக்காடு என நாட்டிலேயே அதிக அளவில், உரிய அளவிற்கு நெருங்கிய அளவில் உள்ளது. இந்த 69 விழுக்காடு ஒதுக்கீட்டை பாதுகாத்திட, நீதிமன்ற நடவடிக்கைகளிலிருந்து விலக்கு அளித்திட இடஒதுக்கீட்டிற்காக நாட்டிலேயே முதன்முறையாக ஒரு தனிச்சட்டம் தமிழ்நாட்டில் உருவாக் கப்பட்டு அரசியலமைப்புச் சட்டத்தின் 76 ஆம் திருத்தத்தின் மூலம் ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டது. இதற்கு சட்ட ரீதியான, சமூக நீதி சார்ந்த ஆலோசனைகளை வழங்கி உரிய வகையில் நடைமுறைக்கு வந்திட தந்தை பெரியார் நிறுவிய திராவிடர் கழகம் முக்கிய காரணமாக இருந்தது.
ஓரளவிற்கு சமூகப் பாகுபாட்டை களைந்திட இட ஒதுக்கீடு சட்டரீதியான விதிமுறைகள் உருவாக்கப்பட் டாலும், நடைமுறையில் சட்ட ரீதியான அளவு இன்றும் எட்டப்படவில்லை என்பதுதான் உண்மை நிலை. இந்த நிலையினை மாற்றிட சமூக நீதிக்குப் பாடுபடும் அமைப்பு கள், பகுத்தறிவாளர் இயக்கங்கள் முன் வரவேண் டும்; முழுமையாக ஈடுபட வேண்டும்; களம் கண்டு போராட வேண்டும். சமூக ஏற்றத் தாழ்வினைக் களைந்திட நூறாண் டுகளுக்கு முன்பு தந்தைப் பெரியாரும் சகோதரன் அய்யப் பனும் தொடங்கி வைத்த பணிகளை இன்றைய பகுத்தறி வாளர் அமைப்புகள் தொடர்ந்து நடத்திட வேண்டும். மனித உரிமைகளான இட ஒதுக்கீட்டு உரிமைகள் முழுமையாக கிடைக்கும் நிலையில்தான் சமூகத்தில் சமன்மை நிலை உருவாகும்.  அந்த நிலையினை ஏற்படுத்திட பகுத்தறிவாளர் இயக்க நூற்றாண்டு விழாவில் நாம் அனைவரும் உறுதி எடுத்து செயல்படுவதே அவர்தம் புரட்சிப் பணிகளுக்காகப் பாடுபட்ட தந்தை பெரியாருக்கும், சகோதரன் அய்யப்ப னுக்கும் நாம் செலுத்தும் வீரவணக்கம் ஆகும்.
- இவ்வாறு தமிழர் தலைவரின் மாநாட்டு தொடக்க வுரையின் திரட்டு அமைந்தது.
தமிழர் தலைவரின் முழு உரை அடங்கிய ஆங்கிலப் புத்தகங்கள் மேடையில் இருந்தோருக்கும், பார்வையாளர்க ளுக்கும் வழங்கப்பட்டது.
நூற்றாண்டு சிறப்பு மலர் வெளியீடு
பகுத்தறிவாளர் இயக்க நூற்றாண்டு விழாவின் ‘100’ சிறப்பு மலரை தமிழர் தலைவர் அனைவரது கரவொலிக் கிடையே வெளியிட்டார். சிறப்பு மலரின் முதல் நகலினை தோழர் எம்.பாலகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார்.
நூற்றாண்டு விழா கண்காட்சி
பகுத்தறிவாளர் இயக்கத்தின் நூற்றாண்டு விழாவினை யொட்டி, விழா நடைபெற்ற கோழிக்கோடு நகர் மன்ற அரங்கினைச் சுற்றியுள்ள நடை பாதையில் ஓவியம், ஒளிப் படக் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது; வெகு சிறப்பாக, ஆவணப் பதிவாக இருந்தது.
கண்காட்சியில் கடந்த ஒரு நூற்றாண்டில் நடைபெற்ற சமூகப் புரட்சி நடவடிக்கைகளான, வைக்கம் போராட்டம், சமன்மை விருந்து, கோயில் நுழைவுப் போராட்டம், மார்பக வரி மறுப்புப் போராட்டம் என பல்வேறு எழுச்சிப் போராட் டங்கள் பற்றிய ஒளிப் படங்கள், ஓவியங்கள் பலவும் இடம் பெற்று, பார்வையாளர்கள், பொது மக்கள் கவனத்தை ஈர்த்தன.
மார்பக வரி மறுப்புப் போராட்டம்
ஒடுக்கப்பட்ட சமுதாயப்  பெண்களிடம் விதிக்கப்பட்ட மார்பக வரி  (Breast Tax) மறுப்பு அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நடைபெற்ற ஒரு மகத்தான சமூக நீதிப் போராட்டமாகும்.  அந்நாளில் வரிவிதிப்பின் மூலம் கருவூல வருவாயைப் பெருக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டன. சொத்து உள்ள மேல் தட்டு மக்களிடம் சொத்து வரி வசூலிக்கப்பட்டது. ஒடுக்கப்பட்ட மக்களிடம் வரி விதிப்பிற்கான வழி முறைகள் ஏதும் இல்லாத நிலையில்  ஒடுக்கப்பட்ட மக்களில் குறிப்பாக பெண்களுக்கு மார்பக வரி விதிக்கப்பட்டது. பெண்களின் கண்ணியத்தை சீர் குலைக்கும் வகையில் அன்றைய சமஸ்தான நிருவாகம் முலைவரி எனும் மார்பக வரி விதிப்பினை  கடுமையாக நடைமுறைப் படுத்தியது. ஒருவரது சொத்து அளவிற்கு ஏற்றவாறு வரி விதிப்பு அளவு வேறுபடுவது போல, ஒடுக்கப்பட்ட பெண்களின் மார்பக அளவிற்கு ஏற்றவாறு மார்பக வரி விதிக்கப்பட்டது. வரி விதிப்பு அதிகாரிகள் மார்பக அளவினை பார்த்து  மிகவும் கொடுமையான முறையில் தொட்டுப் பார்த்து மார்பக அளவினை கணக் கிட்டு வரி விதிப்பு மேற்கொள்ளப்பட்டது. நினைத்துப் பார்த்திடவே மனம் கொதிக்கும். இந்த மார்பக வரி விதிப்பு நடவடிக்கைகள் பற்றிய எதிர்ப்பு ஒடுக்கப்பட்ட மக்களி டையே நிலவி வந்தது. இந்த எதிர்ப்பின் வெளிப் பாடாக, நாஞ்செள்ளி எனும் ஒடுக்கப்பட்ட சமுதாயப் பெண்மணி தனது எதிர்ப்பினை நெஞ்சம் பதை பதைக்கின்ற வகையில் தெரிவித்தார். “மார்பகம் இருப்பதால்தானே வரி விதிக் கிறீர்கள்! மார்பகத்தை எடுத்து விட்டால் எப்படி வரி விதிப்பீர்கள்?” என எதிர்ப்புக் குரல் எழுப்பி தனது மார்ப கத்தை கத்தியின் மூலம் தானே அறுத்து எடுத்தார்; தன் உயிரையும் மாய்த்துக் கொண்டார். ஒடுக்கப்பட்ட மக்களி டையே ஒரு மாபெரும் எதிர்ப்பு எழுச்சி வெடித்தது. சமஸ் தான நிருவாகம் எதிர்ப்பினை, மக்கள் எழுச்சியினை எதிர்கொள்ள முடியாமல், மார்பக வரி விதிப்பை நீக்கியது.  இந்த மார்பக வரி விதிப்பு எதிர்ப்பினை வெளிப்படுத்தும் ஓவியங்கள் பல கண்காட்சியில் இடம் பெற்றன; அந்த ஓவியங்கள் பார்த்த பார்வையாளர்களைக் கண் கலங்கிட வைத்தது.  ஒடுக்கப்பட்ட மக்கள் இன்றுள்ள நிலையிலிருந்து பின்னோக்கி எப்படிப்பட்ட கொடுமையான வாழ்க்கை யினை நடத்தினார்கள் என்பதனை  அழுத்தமாக காட்டும் வகையில் நூற்றாண்டு கண்காட்சி அமைந்திருந்தது.
திராவிடர் கழக (இயக்க)
வெளியீடுகளுக்கு வரவேற்பு
சகோதரத்துவ மாநாடு நடைபெற்ற மூன்றாம் நாளில் திராவிடர் கழக (இயக்க) வெளியீடுகள் விற்பனைக்காக விழா நடைபெற்ற நகர் மன்ற வளாகத்தில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. பகுத்தறிவு, சமூகநீதி, இடஒதுக்கீடு, தந்தை பெரியார்தம் உரை  எழுத்து தொகுப்புகள், ஆசிரியர் கி. வீரமணி எழுதிய நூல்கள்  (பெரும்பாலும் ஆங்கில நூல் கள்) புத்தக அரங்கில் நிறைந்திருந்தன. மாநாட்டில் பங்கேற்ற பேராசிரியர்கள், பார்வையாளர்கள் பலர் புத்தக அரங்கி னைப் பார்வையிட்டு திராவிடர் கழக (இயக்க) வெளியீடு களைக் காசு கொடுத்து வாங்கிச் சென்றனர். கணிசமான அளவில் புத்தகங்கள் விற்பனையானது பகுத்தறிவாளர் மற்றும் பொதுமக்களின் வாசிப்பு வழக்கத்தினையும், இயக்க வெளியீடுகளில் உள்ள கருத்துச் செறிவையும் வெளிப்படுத் துவதாக இருந்தது.
மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றி அமர்ந்த தமிழர் தலைவருடன் மாநாடு ஏற்பாட்டு தலைவரும், பொது வுடைமைக் கட்சியின் தலைவரும்  மாநில மேனாள் அமைச்சருமான பினாய் விஸ்வம், விரிவாக உரையாடிக் கொண்டிருந்தார். சமூக நீதியை முன்னிறுத்திய செயல்பாடு கள் அதிகரிக்கப்பட வேண்டும் என தெரிவித்தார். தமிழக பொதுவுடைமைக் கட்சியின் தலைவர் தோழர் இரா. நல்லக் கண்ணு உட்பட பல தோழர்களுடன் அவருக்கு உள்ள தொடர்பினை தமிழர் தலைவரிடம் பகிர்ந்து கொண்டார். பின்னர் விழா அரங்கத்திலிருந்த அனைவரிடமும் நன்றி தெரிவித்து தமிழர் தலைவர் விடைபெற்றார்.
விடுதியில் வந்து நண்பகல் உணவு அருந்திவிட்டு, அறையில் ஓய்வு எடுத்த பின்னர், மாலையில் மாநாடு ஏற்பாட்டாளர்கள் தமிழர் தலைவரைச் சந்தித்து நன்றி கூறினர். இரவு 8.00 மணிக்கு கிளம்பிடும் சென்னை விரைவு ரயிலில் சென்னைக்கு கிளம்பிட தோழர்களுடன் சற்று நேரம் முன்னரே தமிழர் தலைவர் ரயில் நிலையத்திற்கு வந்துவிட்டார். பயணிகள் காத்திருப்பு அறையில் தமிழர் தலைவர் அமர்ந்திருந்த பொழுது, அவரை அடையாளம் அறிந்து, தோழர்களிடம் உறுதி செய்து கொண்டு வெளி மாநிலத் தமிழ்க் குடும்பத்தினர், பகுத்தறிவாளர் எனப் பலரும் தமிழர் தலைவரிடம் வந்து நலம் விசாரித்து, உரை யாடி ஒளிப்படம் எடுத்துக் கொண்டனர். சிறார்கள் பலரும் தமிழர் தலைவரிடம் நெருக்கமாக இருந்து ஒளிப் படம் எடுத்துக் கொண்டது நெகிழ்ச்சியாக இருந்தது.
மங்களூரிலிருந்து சரியான நேரத்தில் கோழிக்கோடு வந்தடைந்த ரயிலில் ஏறி, ரயில் புறப்பட்ட உடனே தமிழர் தலைவர் பாராட்டு அறிக்கை எழுத ஆரம்பித்துவிட்டார். ஆம்; திருச்சியில் மே  27 ஆம் நாள் நடைபெற்ற திராவிடர் கழக மகளிர் மாநாடு ஏற்பாட்டு மாண்பு, நடத்தப்பட்ட விதம், மாநாட்டு வெற்றிக்கு உழைத்திட்ட மகளிர் அணி, மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்களைப் பாராட்டி அறிக்கையினை எழுதி முடித்தார். இரவு உண வினை பயணத்தின் பொழுது அருந்தி விட்டு, நீண்ட நேரம் உரையாடிவிட்டு உறங்கச் சென்றரார். அடுத்தநாள் காலை 8.00 மணிக்கு சென்னைசென்ட்ரல் நிலையத்திற்கு ரயில் வந்தடைந்தது.
தஞ்சையில் பயிற்சி முகாம், திருமண நிகழ்வு, திருச்சியில் மகளிர் மாநாடு, விழுப்புரத்தில் பயிற்சி முகாம் என இடைவிடாமல் நிகழ்வுகளில் பங்கேற்று, தொடர்ந்து கேரளா  - கோழிக்கோடு பகுத்தறிவாளர் இயக்க நூற்றாண்டு விழா வில் பங்கேற்று சென்னை திரும்பி, வீடு சென்று பெரியார் திடலுக்கு வந்து வழமையான பணிகளில் தமிழர் தலைவர் ஈடுபட்டார். ஓய்வறியா தந்தை பெரியாரின் கொள்கை வழித் தோன்றலான தமிழர் தலைவர் பயணச் செறிவிலும், கொள்கைப் பரப்புரைப் பணியிலும் பகுத்தறிவுப் பகலவ னின் மறுபதிப்பாகவே இருக்கிறார். 1924  ஆம் ஆண்டு தந்தை பெரியார் கேரள மண்ணில் நடத்திய சமூகப் புரட்சித் தாக்கத் தினை ஏற்படுத்திய நிகழ்வுகளை கேரள மக்களிடம் நினைவு கூர்ந்து, அவை தொடர்பான புரட்சிப் பணிகளை வலியுறுத்திய தமிழர் தலைவரின் கோழிக்கோடு பயணம் ஒரு வரலாற்றுப் பதிவாக சிறப்புக்குரியதாக அமைந்துவிட்டது.
(Communal G.O.)

விடுதலை,25.6.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக