சனி, 1 ஜூலை, 2017

இராவண காவியம் படைத்த "புலவர் குழந்தை''

வரலாற்றில் இன்று
    ஜூலை 1
அறிவுலகம் ஒப்புமாறு இராவண காவியம் படைத்த "புலவர் குழந்தை "யின் பிறந்த நாள்.
அவர் பற்றிய சில தகவல்கள்
   _ சு.குமாரதேவன் -
*இராமாயணம் ஒரு கட்டுக்கதை என்று திராவிட இயக்கத்தவர் கூறும் முன்பே பல ஆய்வறிஞர்கள் நன்கு ஆராய்ந்து சொன்னார்கள்.14ம் நூற்றாண்டில் வாழ்ந்த திருவள்ளுவர் என்ற பெயர் கொண்ட புலவர் முதல் நேரு முதல் பல்வேறு தாப்பட்ட அறிஞர்கள் உறுதியாகத் தெரிவித்தார்கள்.
* தீ பரவட்டும், நீதி தேவன் மயக்கம், கம்ப ரசம், ராமாயணப் பாத்திரங்கள், இராமாயணம் நடந்ததா? என்று பல்வேறு நூல்கள் வெளிவந்தாலும், கம்பன் கவிநயம் பற்றியும் கம்பராமா யணம் பற்றியும் புகழ்ந்த நூல்கள் ஏராளம்.
* திராவிட இயக்கத்தவர் காவியச் சுவையறியாதவர்கள், இலக்கிய இன்பம் பற்றி தெரியாதவர்கள் என்று இகழ்ந்தவர்கள் முகத்தில் "இராவண காவியம் " என்ற அரிய நூலைப் படைத்துக் கரி பூசியவர் புலவர் குழந்தை.
* 1906ல் ஓலவலசு என்னும் சிற்றூரில் பிறந்தவர். இயல்பிலேயே கவிபுனையும் ஆற்றல் பெற்ற குழந்தை திராவிட இயக்கத்தில் ஈடுபட்டுப் பணியாற்றியவர்.
* 39 ஆண்டுகள் தமிழாசிரியராகவும், தலைமை ஆசிரியராகவும் பணியாற்றினார்.
* எழுத்தாற்றலுடன் பேச்சாற்றலும் கொண்ட புலவர் 1930ல் ஞானசூரியன் எழுதிய சிவானந்த சரஸ்வதியுடன் பொதுவில் 4 நாட்கள்வாதிட்டு கடவுள் இல்லை என்று  நிலை நாட்டினார்.
* 1946ல் மிகக் குறுகிய காலத்தில் இயற்றிய இராவண காவியம் 5 காண்டங்கள், 57 படலங்கள், 3100 பாடல்கள் கொண்ட அரிய காவியமாகும். தமிழின் சுவையை அறிய வேண்டுமாயின் இராவண காவியம் படித்தால் போதும்.
* பழமைக்குப் பயணச்சீட்டு புதுமைக்கு நுழைவுச் சீட்டு என்று அண்ணா தனது அணிந்துரையில் கூறுவார். கலைஞர் ஆராய்ச்சி முன்னுரை ஒரு சீரிய ஆய்வாளரின் நோக்கில் அமைந்துள்ள ஒன்று.
* இனியொரு கம்பன் வருவானா இப்படியும் கவி தருவானா என்றிருந்தேன். கம்பனே வந்தான் கவிதையும் தந்தான், ஆனால் கருத்து தான் மாறுபட்டது என்று பெரும் புலவர் அய்யம் பெருமாள், இராவண காவியம்பாடிய குழந்தை பற்றி போற்றிப் பாராட்டினார்.
* திருக்குறள், கம்பராமாயணம், பெரிய புராணம், சிலப்பதிகாரம் ஆகிய இலக்கியங்கள் "உலகு" என்று தொடங்குவது போல் இராவண காவியமும் "உலகம் ஊமையா உள்ள அக்காலையே" என்று தொடங்கினார்.
* 1946ல் எழுதிய இராவண காவியம் 1948ல் ஓமந்தூரார் தலைமையிலான காங்கிரஸ் அரசால் தடை செய்யப்பட்டது. 23 ஆண்டுகளுக்குப் பின் கலைஞர்17-05-1971
அன்று தடையை நீக்கினார். பின்பு புலவர் குழந்தையின் நூல்கள் அனைத்தையும் நாட்டுடமையாக்கினார்.
* முதல் முதலில் புரட்சிக் கவிஞரின் "இரணியன் அல்லது இணையற்ற வீரன்" என்ற நூல் தான் அரசினரால் தடை செய்யப்பட்டது. பின்னர் இராவண காவியம், ஆரிய மாயை, காந்தியார் சாந்தி யடைய என்று பல நூல்களும், M.R.ராதாவின் நாடகங்களும் தடை செய்யப்பட்டன.
* கருத்துரிமைக்கு அதிக விலை கொடுத்தது திராவிடர் இயக்கத்தவரே.
* 1948ல் பெரியார் நடத்திய திருக்குறள் மாநாட்டில் கலந்து கொண்டு அரிய ஆய்வுரை நிகழ்த்தியதோடல்லாமல் திருக்குறளுக்கு உரையெழுதினார். திருக்குறள் குழந்தையுரை ஆய்வாளர்களால் பெரிதும் மதிக்கப்படுவதாகும்.
* திருக்குறளும் பரிமேலழகரும் என்ற இவரது ஆய்வு நூல் போல் இன்னொரு ஆய்வு நூல் வருமா என்பது கேள்விக்குறியே.
* இராவண காவியம் தடை நீங்கிய பிறகு பல இடங்களில் இராவண காவிய மாநாடுகள் நடந்தது. அதில் பெரியார், கலைஞர், நாவலர், பேராசிரியர், மணியம்மையார் ஆசிரியர் வீரமணி ஆகியோர் கலந்து கொண்டு புலவரின் புகழ் பரப்பினர்.
* அரசியலரங்கம், யாப்பருங்கலக்காரிகை, உலகப் பெரியோன் கென்னடி என்று 60 நூல்களும் ஆய்வுக் கட்டுரைகளும் எழுதிய புலவர் இறுதி வரை கொள்கையில் சமரசம் செய்து கொள்ளாத திராவிடர் இயக்கப் பெருமகன்.
* சென்னை, திருச்சி . காரைக்குடி, தஞ்சை என்று பல்வேறு ஊர்களில் இராவண காவிய மாநாடுகள், தொடர் சொற்பொழிவுகளை திராவிடர் கழகம் இன்றளவும் நடத்தி புலவர் குழந்தைக்குப் பெருமை சேர்த்து வருகிறது.
வாழ்க புலவர் குழந்தை.
அறிவோம் இராவண காவியம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக