ஞாயிறு, 27 பிப்ரவரி, 2022

கழகத்தின் சமூகநீதி மாநாடு மற்றும் திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாடும் - ஈரோட்டில் மே 15, 16



கழகத்தின் சமூகநீதி மாநாடு மற்றும் திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாடும் ஈரோட்டில்  மே 15, 16 ஆகிய நாள்களில் மிகுந்த எழுச்சியுடனும், சிறப்புடனும் நடைபெற்றது. இம்மாநாட்டுக்கு இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் சமூகநீதித் தலைவர்கள் வந்திருந்தனர். ஈரோடு சி.எஸ்.அய் பள்ளித் திடலில் அமைக்கப்பட்டுள்ள மாபெரும் மாநாட்டுப் பந்தலை தோழர்களின் வேண்டு-கோளுக்கு இணங்க திறந்து வைத்து மாநாட்டைத் துவக்கி வைத்தேன். முதல் நிகழ்வில் ‘சமூகநீதிக் கருத்தரங்கம்’ என்னும் பொருள் பற்றி அறிஞர் பெருமக்கள் ஆய்வுரைகள் வழங்கினர். மாலை நடைபெற்ற தீர்மான அரங்கில் தமிழ்நாட்டின் நலனை மய்யப்படுத்தி முக்கியத் தீர்மானங்கள் இயற்றப்பட்டன. அவற்றுள் முக்கியமாக, அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்க வழிவகை செய்யும் வேண்டுகோள், மதச்சார்-பின்மையைக் காப்பாற்றுக! நீதிமன்றங்-களில் சத்தியப் பிரமாணம் கீதை மீது வாங்கக் கூடாது, சாமியார்களைக் கண்காணிக்க அதிரடிப்படை உள்ளிட்ட சில தீர்மானங்களாகும்.

இரவு நடைபெற்ற விழாவில் _ பெரியார் பன்னாட்டு மய்யம் சார்பில், ‘வீரமணி சமூகநீதி விருது’ வழங்கும் நிகழ்வில் _ அகில இந்திய காங்கிரஸ் மேனாள் தலைவர் சீதாராம் கேசரி அவர்கள் கலந்துகொண்டு அவ்விருதினை சமூகநீதித் தலைவர் சந்திரஜித் யாதவ் அவர்களுக்குக் கொடுத்தார். விருது நாயகர் சந்திரஜித் அவர்கள் உரையாற்றுகையில், “பெரியார் பிறந்த மண்ணிலிருந்து இந்த விருதினைப் பெறுவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். தந்தை பெரியார் உலகுக்குக் கொடுத்த செய்தியை நாலா திசைகளுக்கும் எடுத்துச் செல்வோம். நம் எதிரிகளின் சூழ்ச்சிகளை, வஞ்சகங்களை முறியடிப்போம்’’ என மாநாட்டில் கலந்துகொண்ட தோழர்-களுக்கு உற்சாகம் கொடுக்கும் வகையில் அமைந்திருந்தது.

சிறப்பு அழைப்பாளர் சீதாராம் கேசரி அவர்கள் நிறைவுரையாற்றுகையில், “நான் நினைத்துப் பார்க்கிறேன். இந்த நாட்டிலே இருக்கக்கூடிய ஒடுக்கப்பட்ட மக்களுடைய, அடக்கப்பட்ட மக்களுடைய உரிமைகளுக்காக, சமூகநீதிக்காக இந்தியாவில் பாடுபட்டவர்களில் தந்தை பெரியார் அவர்களைவிட யாரேனும் இருக்கிறார்களா! என்று எண்ணிப் பார்க்கிறேன். தந்தை பெரியார் அவர்களைவிட, வேறு யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. அதுபோல தந்தை பெரியார் அவர்களுடைய நிறுவனத்தைக் கட்டிக் காத்தும், சமூகநீதிக்காகப் போராடிக் கொண்டும் இருக்கிற ஒரே மனிதராக இந்தியாவில் ஒரு முன்னணி வீரராக நான் பார்ப்பது நண்பர் வீரமணி அவர்களைத்-தான்!

கடந்த மூவாயிரம் ஆண்டுகளாக ஜாதியின் கொடுமையால் நாம் பாதிக்கப் பட்டிருக்கின்-றோம். அந்த ஜாதி அமைப்பு முறையைத் தான் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் கட்டிக்காக்க விரும்பு-கின்றார்கள். நாமெல்லாம் இந்துக்களா? நான் ஓர் இந்துவே அல்ல; என்னைப் பொறுத்த-வரைக்கும் நான் இந்து என்று சொல்லிக்-கொள்ள மாட்டேன்’’ என பல்வேறு சமூகநீதிக் கருத்துகளை எடுத்துக் கூறினார்.

மாநாட்டில் எனது சிறப்புரையில், “வடபுலத் தலைவர்கள் எல்லாம் தந்தை பெரியார் அவர்களை விட்டால் சமூகநீதிக்கு நாதியே கிடையாது _ பெரியார் தத்துவம் ஒன்றுதான் நமக்கு விடியலைத் தரும் _ என்ற உணர்ச்சியைப்  பெற்றிருக்கின்றார்கள் என்று சொன்னால், அவர்கள் எல்லாம் இந்த இயக்கத்திற்கு கண்ணுக்குத் தெரியாத உறுப்பினர்களாக இருந்து பணியாற்றுகிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். இப்படி அனைத்துத் துறைகளிலும் இருக்கின்றார்கள். அனைத்துக் கட்சிகளிலும் இருக்கின்றார்கள்.

எங்களுடைய மாநாட்டுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். சங்கராச்சாரியாரே இங்கு வரலாம். எனக்கு ஒரு சால்வை போர்த்த வேண்டும் என்று சங்கராச்சாரியார் விரும்பினால், போர்த்துங்கள் என்று சொல்வோம். அதனால் கடவுள் உண்டு என்று  சொல்வோமா? கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை என்று அழுத்தமாகத் தானே சொல்லுவோம்! சமூகநீதிப் பணியில் கழகத்தின் பணி எப்போதும் நிலையாகத் தொடரும்’’ என கழகத்தின் நிலைப்பாட்டினை வலியுறுத்தி உரையாற்றினேன்.

முன்னதாக மாநாட்டு மேடையில் இரு இணையர் மணவிழா நடைபெற்றது. ஈரோடு மாவட்டம் தெய்வசிகாமணி _ டாக்டர் காளியம்மாள் ஆகியோரின் செல்வி மலர்விழிக்கும், வெள்ளரிப்பட்டி இராமசாமி _ பழனியம்மாள் ஆகியோரின் செல்வன் இரா.மணிக்கும், சோலையார்பேட்டையைச் சேர்ந்த குழந்தை _குழந்தையம்மாள் ஆகியோரின் செல்வன் இராசேந்திர-னுக்கும், பெங்களூரைச் சேர்ந்த மாணிக்கம் _இராணி ஆகியோரின் செல்வி இராணிக்கும், வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த உறுதிமொழியினைப் பின்பற்றிக் கூறச் செய்து, மணமக்களை மாலை மாற்றிக் கொள்ளச் செய்து மணவிழாவினை நடத்தி வைத்தேன். பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் 1000மாவது நிகழ்ச்சி நிறைவு விழா மலரை நான் வெளியிட மேனாள் மத்திய அமைச்சர் சீதாராம் கேசரி பெற்றுக்-கொண்டார்.

மாநாட்டின் இரண்டாம் நாள் திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாடாக நடைபெற்றது. அதில், “கீதையின் மறுபக்கம்’’ ஆய்வரங்கத்தில் வழக்குரைஞர்கள் அருள்மொழி, கீதாலயன் ஆகியோர் உரையாற்றினர். இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கான உரைவீச்சும் நடைபெற்றது. மாலை “பாலியல் நீதிக் கருத்தரங்கம்’’ அறிஞர் பெருமக்களின் உரை வீச்சுடன் சிறப்பாக நடைபெற்றது. மாநாட்டு மேடையில் பெரியார் பெருந்தொண்டர் ஈரோடு சி.நடேசனார், பெரியார் அவர்களின் தங்கை மகன் எஸ்.ஆர்.சாமி, தெற்கு மாவட்ட தி.க. துணைத் தலைவர் இல.பெருமாள், பெரியார் பெருந்தொண்டர் என்.இ.பாலகுரு, வெள்ளக்-கோவில் ரெங்கநாயகி அம்மாள் ஆகியோருக்கு கழகத்தின் சார்பில் சால்வை அணிவித்து, ‘பெரியார் விருது’ வழங்கி சிறப்பித்தோம்.

நூல் வெளியீட்டு நிகழ்வில் எழுத்தாளர் மஞ்சை வசந்தனின், ‘பெண்ணுக்கு வேண்டாம் பெண்மை’, ‘பார்ப்பனத் தந்திரங்கள்’ ஆகிய இரு நூல்கள் வெளியிடப்பட்டன. அதனை மகளிரணிச் செயலாளர் க.பார்வதியும், மேனாள் மாநிலங்களவை உறுப்பினர் நாராயணசாமி (புதுவை) அவர்களும் பெற்றுக்கொண்டனர். முதன்முதலில் சிறுவர்களுக்கான “பெரியார் பிஞ்சு’’ இதழை இரு மாதத்துக்கு ஒரு முறையென வெளியிட்டோம். அதனை குழந்தைகள் பெற்றுக் கொண்டனர்.

அடிமைத்தளையை நீக்கும் வகையில் சாமி.அய்யா _ செல்வி தம்பதிகளின் தாலி அகற்றும் நிகழ்வும் நடைபெற்றது. அவர்களைப் பாராட்டி சிறப்பித்தோம். நிறைவாக மாநாட்டுக்காக அரும்பணியாற்றிய கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்களைப் பாராட்டி கவுரவித்தோம். ஈரோடு சமூகநீதி மாநாடும், திராவிடர் கழக இளைஞரணி மாநாடும் கழகத்தின் பணியினை இன்னும் விரைவுபடுத்தும் வகையில் உத்வேகத்தையும், ஊக்கத்தையும் தோழர்களுக்கும் பொறுப்பாளர்-களுக்கும் வழங்கியது.

- அய்யாவின் அடிச்சுவட்டில் கட்டுரையின் ஒரு பகுதி

- உண்மை இதழ், 16-28.2.22

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக