வெள்ளி, 9 ஆகஸ்ட், 2024

நீதிக்கட்சியும் தாழ்த்தப்பட்டோர் தலைவர்களும் - எதிர்வினை 28

 

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை 28

ஜனவரி 16-31 2019

 நீதிக்கட்சியும் தாழ்த்தப்பட்டோர் தலைவர்களும்

நேயன்

சென்னையில் பெரியார் தலைமையில் பார்ப்பனரல்லாதார் தலைவர்கள் கூட்டம் நடந்தது. 8.10.1939ஆம் நாள், ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு அந்தக் கூட்டம், சென்னை ராயல் தியேட்டரில் நடந்தது. அந்தக் கூட்ட மேடையில் கே.வி.ரெட்டி, சர்.பன்னீர்செல்வம், பெரியார் ஈ.வெ.ரா., எஸ்.முத்தையா முதலியார், திவான்பகதூர் ஆர்.இரட்டைமலை சீனிவாசன், குமாரராஜா முத்தையா செட்டியார், ராவ்பகதூர் எம்.சி.ராஜா, ராவ்சாகிப் என்.சிவராஜ், சோமசுந்தர பாரதியார், அருணகிரிநாதர், சண்முகானந்தா, அயப்பாக்கம் முத்துரங்க ரெட்டியார், டி.ஷண்முகம் பிள்ளை, ஏ.அப்பாதுரை பிள்ளை, பி.பாலசுப்பிரமணிய முதலியார் (சண்டே அப்சர்வர்), பாசுதேவ், தாமோதரம் நாயுடு, ஷ.கோதண்டராம முதலியார், சர்-.ஏ.பி.பாத்ரோ, கே.சி.சுப்பிரமணியம் செட்டியார், எஸ்.எஸ்.ஆனந்தம், பார்வதி அம்மாள், குஞ்சிதம் அம்மாள், குருசாமி, சுப்பிரமணிய பிள்ளை, சங்கரன் எம்.சி., டி.வி.நடராஜன், என்.வி.முருகேசன், ஜீவானந்தம், சிவஞானம், நாராயணியம்மாள், கணேசன், சித்தூர் கன்னையா நாயுடு ஆகியோர் கலந்து கொண்டார்கள் என்கிறது ‘குடிஅரசு’. இந்தப் பெயர் பட்டியல் ‘குடிஅரசு’ இதழில் உள்ளவாறு இங்கு தரப்பட்டுள்ளது. மிகக் குறுகிய காலத்தில் இக்கூட்டம் எற்பாடு செய்யப்பட்டாலும் எராளமானவர்கள் கலந்து கொண்டிருப்பதாக பெரியார் குறிப்பிடுகிறார். சரியாக விளம்பரம் செய்யாவிட்டாலும் 5 ஆயிரம் பேர் கூடியிருந்தார்கள். இவர்கள் சேர்ந்து ஒரு அறிக்கை வெளியிட்டார்கள். அதற்கு ‘தென்னாட்டுத் தலைவர்கள் அறிக்கை’ என்று தலைப்பிட்டுள்ளது ‘குடிஅரசு’.

இந்த நாட்டுக்கு எத்தகைய சட்டம் புகுத்தப்பட்டாலும் சரி… ஒரு வகுப்பார் மற்றொரு வகுப்பார் மீது ஆதிக்கம் செலுத்தாமல் பார்த்துக்கொள்ளத் தக்கதாயிருக்க வேண்டுமென்பதுதான் நமது ஆசை…

 

எம்.சி. ராஜா

தென்னாட்டுத் தலைவர்களாக இரட்டைமலை சீனிவாசன், எம்.சி.ராஜா, என்.சிவராஜ் ஆகியோர் கலந்து கொண்டுள்ளார்கள். இதனை, “நமது பார்ப்பனரல்லாதாரின் முன்னேற்றத்திற்கும் ஒற்றுமைக்கும் அறிகுறி” என்று தனது பேச்சில் குறிப்பிட்ட பெரியார்,

“காங்கிரஸ் கட்சி அனைவருக்குமான பிரதிநிதியாக முடியாது என்றும் அவர் தன் பேச்சில் குறிப்பிட்டுள்ளார். அந்தக் கூட்டத்தில், இரட்டைமலை சீனிவாசன், எம்.சி.ராஜா, என்.சிவராஜ் ஆகிய மூவரும் பேசினார்கள். இந்தத் தலைவர்கள் அனைவரும் சேர்ந்து வெளியிட்ட அறிக்கை, 15.10.1939ஆம் தேதி வெளியான ‘குடிஅரசு’ இதழில் இடம் பெற்றுள்ளது.

இரட்டைமலை சீனிவாசன்

“இம்மாகாணத்தின் தென்பாகத்தைப் பொறுத்தமட்டில் பல சமூகங்களைச் சேர்ந்த மெஜாரிட்டி மக்கள், காங்கிரஸின் கொள்கைகளையும் திட்டங்களையும் வெறுத்தது என்றும், அதில் சேராமலிருந்து வருகிறார்கள். இம்மாகாணத்தில் ஒரு சிறு சமூகம் பல சமூகங்களை அடக்கியாண்டு வர முடிந்தது. அரசியல் ஆதிக்கத்தையும், பதவிகளையும் ஒரு சிறு சமூகமாகிய… அதாவது நூற்றுக்கு 3 சதவிகிதமுள்ள ஒரு சமூகம் ஏகபோகமாக அனுபவித்து வந்தது. கடந்த 23 வருடங்களுக்கு முன்தான் டாக்டர் டி.எம்.நாயர், சர்.பி.டி.தியாகராய செட்டியார், பனகல் ராஜா போன்ற பிரபல தலைவர்களில் பார்ப்பனரல்லாத இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தத் திட்டம் புகுத்ததப்பட்ட காலத்தில், இம்மாகாணத்திலுள்ள மெஜாரிட்டி சமூகங்களின் மீது மைனாரிட்டிகள் ஆதிக்கம் செலுத்தாமலிருக்க வேண்டிய பாதுகாப்புகள் வேண்டுமென்றே இப்பார்ப்பனரல்லாத தலைவர்கள் கோரினார்கள்…

என்.சிவராஜ்

சட்டசபையில் காங்கிரஸ்காரர் புகுந்தபின் நமது தலைவர்கள் எதிர்பார்த்தது எல்லாம் பெரிய ஏமாற்றத்தை உண்டுபண்ணிவிட்டது. ஷெட்யூல்டு வகுப்பார் எதிர்பார்த்ததும் சீர்குலைந்துவிட்டது. பூனா ஒப்பந்தம் காங்கிரஸ்காரர்களினாலே கொலை செய்யப்பட்டுவிட்டது. ஆரம்பத் தேர்தலில் அதாவது, ‘பிரிலிமினரி’ தேர்தலில் காங்கிரஸ்காரர்கள் பிரவேசித்ததாலே தாழ்த்தப்பட்டோர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 30 ஸ்தானங்களில் 28 ஸ்தானங்களைக் கைப்பற்றினர். இதனால் தாழ்த்தப்பட்டோருக்கு தனி ஸ்தானங்கள் ஒதுக்கப்பட்டதின் நோக்கமே பாழாகிவிட்டது. ஒழுங்கு நடவடிக்கை என்ற பூதத்திற்குப் பயந்து தாங்கள் சமூக நலனை பலியிட்டு விடுகிறார்கள். இதற்கு உதாரணம் தாழ்த்தப்பட்டோருக்கு ஆலயப் பிரவேசம் அளிக்க வேண்டியது சம்பந்தமாக ராவ்பகதூர் எம்.-சி.ராஜா அவர்கள் கொண்டு வந்தபோது ஷெட்யூல்டு வகுப்பைச் சேர்ந்த இருவர்தான் ஆதரித்தார்கள் என்பதே போதுமானதாகும்…

இந்த நாட்டுக்கு எத்தகைய சட்டம் புகுத்தப்பட்டாலும் சரி… ஒரு வகுப்பார் மற்றொரு வகுப்பார் மீது ஆதிக்கம் செலுத்தாமல் பார்த்துக்கொள்ளத் தக்கதாயிருக்க வேண்டுமென்பதுதான் நமது ஆசை… இந்தியாவில் உள்ள பார்ப்பனரல்லாதார் கோரும் சுயராஜ்யம், சுயராஜ்யத்திலும் ஒரு சமூகத்தார் மற்றொரு சமூகத்தாரை அடிமை கொள்ளாமலும் அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தாமலும் இருக்க வேண்டுமென்பதே யாகும். (‘குடிஅரசு’ 15.10.1939)

இதில் கையெழுத்திட்டிருப்பவர்கள் இரட்டைமலை சீனிவாசன், எம்.சி.ராஜா, என்.சிவராஜ் ஆகியோர். இக்கூட்டம் நடந்தபோது, பெரியார் நீதிக்கட்சித் தலைவர். நீதிக்கட்சியின் துணைத் தலைவர் ஏ.பி.பாத்ரோ இதில் இருந்தார். இவர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தான் ஷெட்யூல்டு மக்களின் எண்ணங்கள் முழுமையான அறிக்கையாக வெளிவந்தன. ‘தாழ்த்தப்பட்டோருக்கு நீதிக்கட்சியும் பெரியாரும் செய்தது என்ன? என்று கேட்பவர்கள் இவற்றையெல்லாம் அறிந்து கொள்ள வேண்டும்.

இதே அறிக்கையில், நீதிக்கட்சி தலைவர்களான டி.எம்.நாயர், சர்.பி.டி.தியாகராயர், பனகல் அரசர் ஆகிய முவரும் புகழப்பட்டுள்ளார்கள். இதை ஏற்றுக் கொண்டுதான் இரட்டைமலை சீனிவாசனும், எம்.சி.ராஜாவும் கையெழுத்துப் போட்டிருப்பார்கள். எம்.சி.ராஜாவுக்கும் நீதிக்கட்சிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை’ என்பவர்களும் இதைக் கவனிக்க வேண்டும். 3 சதவிகித பார்ப்பன ஆதிக்கத்துக்கு எதிராக 97 சதவிகித மக்கள் திரள வேண்டும் என்பதை அப்போதைய தென்னாட்டுத் தலைவர்கள் விரும்பியதன் வெளிப்பாடே அந்தக் கூட்டம்.

இந்த அறிக்கையைக் கண்டித்து அன்றைய விளம்பர மந்திரி வெளியிட்ட அறிக்கைக்கு இரட்டைமலை சீனிவாசன் அளித்துள்ள பதிலும் 22.10.1939 ‘குடிஅரசு’வில் வெளியாகி உள்ளது. இந்த அறிக்கையை 25.10.1939 கூடிய நீதிக்கட்சி நிர்வாகக் கமிட்டி ஏற்றுக் கொண்டது.

நீதிக்கட்சித் தலைவர்களுடன் எம்.சி.ராஜாவும் இருக்கும் புகைப்படத்தை ‘குடிஅரசு’ வெளியிடப்பட்டுள்ளது. (‘குடிஅரசு’ 13.02.1940)

17.3.1940இல் பன்னீர்செல்வம் சென்ற விமானம் காணாமல்போய் அவர் மறைந்தார். இரட்டைமலை சீனிவாசன், எம்.சி.ராஜா ஆகியோரின் இரங்கல் செய்திகளை ‘குடிஅரசு’ வெளியிட்டது. “சர். ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்களின் மரணம் தாழ்த்தப்பட்டோருக்கும், பார்ப்பனரல்லாதாருக்கும், இம்மாகா ணத்திலுள்ள கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லீம்களுக்கும் பெருத்த நஷ்டம். மனம், வாக்கு, காரியத்தில் உறுதி உள்ளவர். தைரியமும் அஞ்சா நெஞ்சமும் படைத்தவர். அவருக்கு எதிரிகள் பலர் இருந்தனர். சமயம் கிடைத்தால் அவரை நசுக்கிவிடலாமென்று எண்ணியிருந்தனர். ஆனால், எல்லா எதிர்ப்பையும் தைரியமாக எதிர்த்து நின்று எதிரிகளின் வாயை தக்க பதில் சொல்லி அடைத்து வந்தார். ஒன்றல்ல… இரண்டல்ல… பல புயல்களையும் சமாளித்துச் சென்ற மாலுமி அவர். அவருடைய கட்சிப் பற்றை, உறுதியைக் குறித்து யாரும் குறை சொல்ல முடியாது. தன்னுடைய கட்சியினர் எதிரிகளிடம் சமரசப் பேச்சுப் பேசி வருகையில், இவர் மட்டும் தைரியமாக சர்க்காரையும் காங்கிரஸ் ஆட்சி¬யும் கண்டித்து வந்தார். அதனால்தான் சென்னை சர்க்கார் நிர்வாக சபையில் ஒரு மெம்பராக நியமனம் செய்யப்பட்டார். என்னுடைய சமூகம் உட்பட எல்லா சமூகத்தினருக்கும் சம நீதியையும் நியாயத்தையும் அளித்து வந்தார். எல்லா சமூகங்களுக்கும் அனுதாபத்தைக் காட்டி வந்தார். அதனால்தான் அவருடைய பிரிவால் வருந்தும் எல்லாருடனும் நாமும் சேர்ந்து துக்கப்படுகிறோம்’’ (‘குடிஅரசு’ 07.04.1940) என்று எம்.சி.ராஜாவும்…

“வட்டமேஜை மாநாட்டிற்கு நாங்கள் போய்வந்த பொழுது அவர் எனக்காக எடுத்துக்கொண்ட கஷ்டமும் என்னுடைய சவுகரியத்திற்காக அவர் எடுத்துக்கொண்ட கவலையும் கொஞ்சநெஞ்சமல்ல… அவர் இன்னமும் நம்மிடையே இருக்கிறார் என்றுதான் உணர்கிறேன்’’ என்று இரட்டைமலை சீனிவாசனும் இரங்கல் செய்தி வெளியிட்டனர். இது நீதிக்கட்சி, பெரியார் மீது தாழ்த்தப்பட்ட தலைவர்கள் கொண்டிருந்த பற்றையும், தாழ்த்தப்பட்ட தலைவர்களை பெரியார் மதித்த மாண்பையும் காட்டுவன அல்லவா?

(தொடரும்…)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக