ஆ.திராவிடமணியே என்னை ஆளாக்கிய ஆசிரியர்!

அண்ணாவின் ‘திராவிட நாடு’ இதழுக்கு நிதி அளித்த மேடைதான் என் முதல் மேடைப் பேச்சு!
அந்த மேடையில், தந்தை பெரியாருக்குமுன் எனது முதல் பேச்சு – அறிஞர் அண்ணா பாராட்டு!
1943 ஆம் ஆண்டுதான் தந்தை பெரியாரை முதன்முதலில் நேரில் சந்திக்கும் வாய்ப்பு!
அதனைத் தொடர்ந்து சிறுவன் வீரமணியாக வெளியூர்களில் பேசத் தொடங்கினேன்!
பெரியார் பன்னாட்டமைப்பின் சார்பில் அன்புடன் ஆனந்தி –
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணியிடம் நேர்காணல்!
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை, 7.12.2024 இல் பேட்டி கண்ட
திருமதி ‘அன்புடன் ஆனந்தி’ அவர்களைப்பற்றிய ஒரு சுருக்கமான அறிமுகம்:
திருநெல்வேலி தமிழர். 24 ஆண்டுகளுக்கு மேல் அமெரிக்காவில் உள்ள மிச்சிகனில் வாழ்கின்றார். தனியார் நிறுவனத்தில் அலுவலக மேலாளராகப் பணியாற்றுகின்றார். தமிழ் மேல் மிகவும் ஆர்வம் கொண்டவர். பல்வேறு தமிழ்ப் பணிகளை எழுத்து, ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, புத்தகங்கள், கவிதைகள், குழந்தை இலக்கிய பணிகள் என்று 15 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து பணியாற்றிப் பல விருதுகளைப் பெற்றுள்ளார். திருச்சி நாகம்மையார் இல்ல குழந்தைகள் கல்வியில் மிகவும் அக்கறை காட்டி வருபவர்.
சென்னை, பிப்.7 ஆ.திராவிடமணியே என்னை ஆளாக்கிய ஆசிரியர் என்றும், அண்ணாவின் ‘திராவிட நாடு’ இதழுக்கு நிதி அளித்த மேடைதான் என் முதல் மேடைப் பேச்சு என்றும், 1943 ஆம் ஆண்டுதான் தந்தை பெரியாரை முதன்முதலில் நேரில் சந்திக்கும் வாய்ப்பு என்றும் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கூறினார்.
பெரியார் பன்னாட்டமைப்பின் சார்பில்
கழகத் தலைவரிடம் நேர்காணல்!
அன்புடன் ஆனந்தி: அனைவருக்கும் அன்பின் வணக்கம்.
எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு!
அன்னைத் தமிழுக்கு முதல் வணக்கத்தைச் சொல்லி, பெரியார் பன்னாட்டமைப்பு, அமெ ரிக்கா நடத்தக்கூடிய இந்த சிறப்பான இணைய வழி நேர்காணல் நிகழ்ச்சிக்கு – எனக்கு இந்த வாய்ப்பினைக் கொடுத்த பெருமதிப்பிற்குரிய டாக்டர் சோம.இளங்கோவன் அவர்களுக்கும், நண்பர் இளமாறன் அவர்களுக்கும் என்னுடைய பணிவான வணக்கம்.
92 ஆம் ஆண்டு பிறந்த நாள் காணக்கூடிய வீரமணி அய்யா அவர்களுக்கு வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் நிறைய நிகழ்ச்சிகளைத் தொகுத்திருந்தாலும், நேர்காணல் செய்திருந்தாலும், இன்றைக்கு அய்யாவை நேர்காணல் செய்யப் போகிறோம் என்றதும் எனக்குள் ஒரு பதற்றம், ஓர் ஆர்வம், நெகிழ்ச்சி, மகிழ்ச்சிபற்றி வாய் வார்த்தைகளால் அவற்றைச் சொல்லிவிட முடியாது!
இன்றைக்கு ஒரு முக்கியமான நாள்!
நம் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு ஆசிரியர் கி.வீரமணி அய்யா அவர்களை அனைவரது சார்பிலும் வருக, வருக என வரவேற்று மகிழ்கின்றோம்.
இன்றைக்கு ஒரு முக்கியமான நாள் என்பதை எல்லோருக்கும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
கழகப் பணியிலும், கட்சிப் பணியிலும் கண்ணும் கருத்துமாய் காலமெல்லாம் களைப்பின்றி உழைத்துவரும் அய்யா அவர்களுக்கும், தொய்வின்றி அவர் பணியைத் தொடர தூணாய்த் துணை நிற்கும் மோகனா அம்மையாருக்கும் இணையர் தின வாழ்த்துகளை இன்பமாய்த் தெரிவித்து மகிழ்கின்றோம்.
இன்று (டிசம்பர் 7) ஆசிரியர் அய்யா அவர்களுடைய 66 ஆம் ஆண்டு மணநாளாகும். இந்த அற்புதமான நாளில் ஆசிரியர் அய்யாவை நேர்காணல் செய்வதில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. இன்றைக்கு என்னுடைய கணவருடைய பிறந்த நாளும்கூட! ‘‘ஹாட்ரிக் வெற்றி’’ என்று சொல்வதைப்போல, மூன்று விதத்தில் எனக்கு மகிழ்ச்சி.
ஒரு மைல்கல்லாக இந்த நாள் எனக்கு அமைந்தி ருக்கிறது.
மிக்க மகிழ்ச்சி அய்யா!
அய்யாவை அவருடைய மணநாளில் நேர்காணல் செய்வது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இங்கே குழந்தைகள் மிக அழகாகப் பாடினார்கள்! தமிழ் உச்சரிப்பும் மிக அழகாக இருந்தது!! ஆசிரியர் அய்யாவிற்குப் பொருத்தமான வரிகள், வார்த்தைகளுடன் பாடல் மிகச் சிறப்பாக அமைந்தது.
என் அன்பின் வாழ்த்துகள்!
நாம் நேர்காணலுக்குச் செல்வதற்கு முன்பாக, அண்மையில், டாக்டர் சரோஜா அம்மையார் அவர்கள் மூலமாக, பூண்டி இரா.கோபால்சாமி அய்யா அவர்களின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியைப் பார்த்தேன். அதை மிகவும் ரசித்துக் கேட்டேன்.
உங்களுடைய உச்சரிப்பு, சிம்மக் குரலில் நீங்கள் பேசியது; அதில் சில முத்தாய்ப்பான விஷயங்களை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்தவேண்டும் என்று நான் இங்கே சொல்கிறேன்.
நன்றி என்பதற்குத்
தந்தை பெரியார் சொல்லும் இலக்கணம்!
பெரியார் அடிக்கடி சொல்வார் என்று நீங்கள் சொன்னீர்கள், ‘‘பயனடைந்தவர்கள் காட்ட வேண்டிய பண்பே நன்றி; உதவி செய்தவர்கள் நன்றியை எதிர்பார்த்தல் சிறுமைக்குணம்” என்று மிக அழகாகச் சொன்னீர்கள்.
இன்றைக்கு அப்படித்தான் நடக்கிறது. ஏதோ ஒரு சிறிய உதவியைச் செய்துவிட்டு, அவன் என்னை மனதில் வைத்துக் கொள்ளவில்லை; அதற்குப் பதில் அவன் எதுவுமே செய்யவில்லை என்கிற காலகட்டத்தில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
இன்னொரு செய்தியையும் நீங்கள் சொன்னீர்கள், ‘‘ஒரு நூலைப் பெற்றுக்கொள்வதைவிட, அதைக் கற்றுக்கொள்வதே சிறப்பு” என்று.
‘‘ஆயிரம் பேர் நூல்கள் கொடுப்பார்கள்; அதை நீ வாங்கி, வாங்கி வீட்டில் அடுக்கி வைத்தால் மட்டும்போதாது; அதில் ஒரு நூலையாவது எடுத்து ஒழுங்காகக் கற்றுக்கொள்; உன்னை உயர்த்திக் கொள்’’ என்று சொன்னீர்கள். அதை நீங்கள் சொல்லும்பொழுது, உங்களையே பார்த்து நான் ரசித்துக் கொண்டிருந்தேன்.
இன்னொரு விஷயத்தையும் சொன்னீர்கள், ‘‘எங்கெங்கோ இருந்தோ ஆயிரம் ஆயிரம் வானவில் போல அமைப்புகள் வந்துகொண்டே இருக்கலாம். ஆனால், அவையெல்லாம் வந்த சுவடு தெரியாமல் போய்விடுகின்றன. ஆனால், நம்முடைய திராவிடர் அமைப்பு வந்தது மாறாமல், தொடக்கத்தில் எப்படி இருந்ததோ, அப்படியே வளர்ந்து இருக்கிறது’’ என்று சொன்னீர்கள். ஒரு பிரமிப்பை ஏற்படுத்தும்விதமாக, ஆட்சி நடத்தக்கூடிய தலைவரையும் சரி, மக்க ளைப்பற்றிப் பேசும்பொழுதும் சரி, ஓர் உதாரணம் சொன்னீர்கள் அய்யா, “பந்தயக் குதிரையைப்போல” என்று.
‘‘பந்தயக் குதிரைக்கு எந்தப் பதற்றமும் இருக்காது; அதன் மேல் பணத்தைக் கட்டியவனுக்குத்தான் பதற்றம் இருக்கும்” என்று ஒரு வார்த்தை சொன்னீர்கள். அது மிகவும் சிறப்பாக இருந்தது.
இயக்கத்தைப்பற்றி பேசும்பொழுது சொன்னீர்கள், ‘‘அரசியல் தர்மம் – அது ஒரு துறவறம் என்று சில பேர் சொல்வார்கள்; துறந்துவிட்டால் ஆபத்து, தொண்டறம் மக்களுக்கு வேண்டும். மக்களுக்குத் தொண்டு செய்யவேண்டும்’’ என்று சொன்னீர்கள். அவையெல்லாம் மிகச் சிறப்பாக இருந்தன அய்யா!
அய்யாவிடம் சில கேள்விகளைக் கேட்டு, இன்னும் நிறையத் தெரிந்துகொள்ள ஆவலோடு காத்திருக்கின்றோம்:
உங்கள் ஆசிரியர் ஆ.திராவிடமணிபற்றி…
அன்புடன் ஆனந்தி: உங்களுடைய ஆசிரியர் திராவிடமணி அவர்களைப்பற்றி ஒரு சில வார்த்தைகள் சொல்லுங்களேன்?
தமிழர் தலைவர்: உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி! உங்களை இதுவரையில் நேரிடையாக சந்தித்துப் பேசக்கூடிய வாய்ப்பு இல்லை. அய்யா (பெரியார்) அவர்களால், அம்மா (மணியம்மையார்) அவர்களால் தொடங்கப்பட்ட “ஆதரவற்ற குழந்தைகள் (அனாதை) இல்லம்” என்று முதலில் சொல்லப்பட்டது.
அதற்குப் பிறகு, தந்தை பெரியார் அவர்கள் கொடுத்த பகுத்தறிவு, அவர் தந்த புத்திப்படி, அவர்களுக்கு ஆதரவாக நாம் இருக்கும்பொழுது, உலகம் முழுவதும் நமக்குத் தோழர்கள் இருக்கும்பொழுது, நம் குடும்பம் ‘கொள்கைக் குடும்பமாக’ இருக்கும்பொழுது, கொள்கை உறவுகள் இருக்கும்பொழுது, அவர்கள் எப்படி ‘‘ஆதரவற்ற குழந்தைகளாக” இருப்பார்கள்?
ஆகவே, பேராதரவுப் பெற்றவர்களாகத்தான் இருக்கிறார்கள் என்பதற்கு அடையாளமாக- நாமெல்லாம் எங்கோ பிறந்து, எப்படியே வாழ்ந்து கொண்டிருந்தாலும், அந்தக் குழந்தைகள் நம்முடைய குழந்தைகள் – நம்முடைய இல்லத்துக் குழந்தைகள் என்று சொல்லக்கூடிய பெரும் உள்ளத்துக்குச் சொந்தக்காரர்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக நீங்கள் திகழ்கிறீர்கள்.
அதற்கு நான் ஒரு தொண்டன் என்ற முறையில், தந்தை பெரியாருக்குப் பிறகு, அன்னை மணியம்மை யார் அவர்களுக்குப் பிறகு, அந்தக் குழந்தைகளை – சகோதரக் குழந்தைகளாக, நம் குடும்பத்துப் பிள்ளைகளாக, அதன்மூலம் மகிழ்ச்சியை நாம் அடைகின்ற ஒரு சுயநலத்திற்கும் அவர்களைப் பயன்படுத்தக்கூடிய ஓர் அற்புதமான வாய்ப்பாகப் பார்க்கின்ற நேரத்தில்,
தொலைதூரத்தில் இருந்துகொண்டு எல்லைகள் நம்மைப் பிரித்தாலும், அன்பு நம்மை எப்போதும் இணைக்கும்.
‘‘அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே” என்பதற்கிணங்க, நீங்கள் எங்களுக்குச் செய்கின்ற உதவிகளுக்கு முதற்கண் நன்றி! பாராட்டு!! மகிழ்ச்சி!!!
‘‘நான் இந்த அளவு வளர்ந்ததற்குக் காரணமே என் ஆசிரியர் திராவிடமணி தான்!’’
நான் இந்த அளவிற்கு வளர்ந்ததற்குக் காரணமே, என்னுடைய ஆசிரியர் ஆ.திராவிடமணி அவர்கள்தான்.
சென்னைக்குப் பக்கத்தில் பொன்னேரி என்ற ஒரு பகுதி உண்டு. அங்கே ஆசானபுதூர் என்ற ஊரிலிருந்து வந்தவர் அவர்.
எட்டாம் வகுப்பு வரையில் உள்ள – தனியார் நடத்திய ஓர் இஸ்லாமியப் பள்ளிக்கூடத்தில் அவர் தலைமை ஆசிரியராக இருந்தார். அதற்கு முன்பு அவர் போர்ட்டிரஸ்ட் அதிகாரியாக ஒரு பொறுப்பில் இருந்தார். அன்றைய காலகட்டத்தில் நம்முடைய நாட்டில் இ.எஸ்.எஸ்.எல்.சி. பாடத் திட்டம் உண்டு. பிறகு அதனை மாற்றிவிட்டார்கள்.
ஊருக்கு எல்லையில் இருந்த அந்த இஸ்லாமிய பள்ளியில் அவர் தலைமையாசிரியாக இருந்தார்.
என்னுடைய தந்தையார் ஒரு தையற்காரர். அந்தப் பள்ளியின் உரிமையாளர்கள் ஜவுளிக்கடை வைத்திருப்பவர்கள் என்பதால், என் தந்தையாருக்கு அவர்களிடம் நெருங்கிய தொடர்பு உண்டு.
எனவே, அந்தப் பள்ளிக்கூடத்தில் என்னை சேர்த்துவிட்டனர். அப்பொழுதுதான் எனக்கு ஆசிரியர் திராவிடமணி அவர்களோடு அறிமுகம்.
‘பள்ளி நாடகத்தில் நடித்தேன்!’
நான் இரண்டாம் வகுப்புப் படிக்கும்பொழுது, பள்ளியின் ஆண்டு விழா நடைபெற்றது. அவ்விழாவில், ஒரு நாடகத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். ‘‘ஒரு குழந்தை யாருக்குச் சொந்தம்’’ என்ற கதையை நாடகமாக்கி இருந்தார்கள்.
குழந்தையை இரண்டாக வெட்டிக் கொடுங்கள் என்று அரசர் கட்டளையிட்டபொழுது, ‘‘அய்யோ, வேண்டாம்; அந்தக் குழந்தை அங்கேயே இருக்கட்டும்” என்று உண்மையான தாய்தான் சொல்வார்.
அதைக் கேட்டு, அரசர், அந்தக் குழந்தையின் தாய் யார் என்பதைக் கண்டுபிடித்தார்.
அந்த அரசரின் பாத்திரத்தை இரண்டாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்த எனக்குக் கொடுத்து, அந்த வசனங்களைப் பேசி நடிக்கச் சொன்னார். அப்படியே நான் நடித்தேன். அதற்காக எனக்குப் பரிசு கிடைத்தது.
குரல் வளம், துணிச்சல் இருக்கக்கூடிய பிள்ளைகளைத் தேர்ந்தெடுத்து, ஒவ்வொரு வியா ழக்கிழமையும், பள்ளிக்கூடம் முடிந்ததும், எங்களுக்குப் பயிற்சி அளிப்பார்.
அதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 10 பேரில், நான் உள்பட 5 பேரைத் தேர்ந்தெடுத்தார். அப்படி தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை வாரம் ஒருமுறை மாலையில் பயிற்சி – பாடப் பயிற்சி முதலில்; பிறகுதான் கொள்கைப் பயிற்சி.
ஆசிரியர் திராவிட மணி அவர்களுடைய குடும்பம் சென்னையில் இருக்கவில்லை, சொந்த ஊரில் இருந்தனர். இவர் தனியேதான் இருந்தார். கடலூரில், ராமலிங்க பக்த ஜனசபையில் உள்ள இடத்தில் இவர் மட்டும் தங்கியிருந்தார்.
ஆகவே, ஆசிரியர் திராவிடமணி அவர்கள் என் ‘வாழ்க்கையில் ஒரு பகுதியாகவே’ ஆகிவிட்டார்.
அந்தக் காலகட்டத்தில், என் பெற்றோர்களோ, மற்ற மாணவர்களது பெற்றோர்களோ படித்தவர்கள் அல்ல. நான்தான் என்னுடைய குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டதாரி! எஸ்.எஸ்.எல்.சி. தாண்டியதும் நான் ஒருவன்தான் எங்கள் குடும்பத்தில். என்னுடைய அண்ணன்கள் எட்டாம் வகுப்போடு நின்றுவிட்டார்கள்.
இலவசமாக அவர் படிப்பை மாலையிலும் (பிரை வேட் டியூசன்) சொல்லிக் கொடுக்கிறார் என்றதும், எங்களைப் போன்ற மாணவர்களை அவரிடத்தில் சேர்த்துவிட்டனர் – பெற்றோர்கள்!
பள்ளிப் பாடத்தோடு பகுத்தறிவுப் பாடத்தையும் ஊட்டி வளர்த்தார்!
பிள்ளைகள் நல்வழிப்படுத்தப்படுகிறார்கள் என்று எண்ணினார்கள். அதோடு படிப்பறிவுடன் பகுத்தறிவுப் பாடத்தையும் சேர்த்து ஊட்டிக் கொண்டிருந்தார் ஆசிரியர் திராவிடமணி அவர்கள். அதைப்பற்றி பெற்றோர்களும் கவலைப்படவில்லை.
‘குடிஅரசு’, ‘திராவிட நாடு’, ‘விடுதலை’ போன்ற ஏடுகளை எங்களிடம் கொடுத்துப் படிக்கச் சொல்வார். பெரியார், அண்ணா, புரட்சிக்கவிஞர் ஆகிய வர்களைப்பற்றி எடுத்துச் சொல்வார்.
‘அண்ணா கலந்துகொண்ட கூட்டத்தில் நானும் பேசினேன்!’
1943 இல், அண்ணா அவர்கள் ‘திராவிட நாடு’ இதழ் தொடங்கி ஓராண்டு ஆகியிருக்கும். அதற்காக நிதி உதவி கோரி வேண்டுகோள் விடுத்தார்கள்.
அந்தக் காலகட்டத்தில், எங்களுடைய ஆசிரியர் திராவிடமணி அவர்கள், நண்பர்கள் மற்றவர்களிடம் நிதி திரட்டி 106 ரூபாய் திரட்டினார். அந்த நிதியைக் கொடுப்பதற்காக கடலூர் முதுநகரில் ஒரு பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். அண்ணா அவர்கள் அந்தக் கூட்டத்திற்கு வந்தார். பொன்னம்பலனார் போன்றவர்களும் பங்கேற்றனர்.
அந்தப் பொதுக்கூட்டத்தில் மேசை மீது ஏறி நிற்க வைத்து, ஆசிரியர் திராவிடமணி அவர்கள் எழுதிக் கொடுத்ததை நான் மனப்பாடம் செய்து, உரையாற்றினேன். அதுதான் என்னுடைய முதல் அரங்கேற்றம் – 1943 ஆம் ஆண்டு.
அப்பொழுதுதான் நான் முதன்முதலாக அண்ணா அவர்களைப் பார்த்தேன். அதற்கடுத்து சில மாதங்களில், அய்யா, அண்ணா ஆகியோர் பங்கேற்ற தென்னார்க்காடு மாவட்ட திராவிட மாநாடு நடை பெற்றது.
ஆசிரியர் திராவிடமணி அவர்கள் வாங்குகின்ற சம்பளத்தையெல்லாம் இயக்கத்திற்காகவே செல வழிப்பார். பிள்ளைகளிடம் பொறுப்பை ஒப்படைப்பார்.
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்த நாவலர், பேராசிரியர் போன்றவர்களை எல்லாம் அழைத்துப் பொதுக்கூட்டத்திற்கு நாங்கள் ஏற்பாடு செய்வோம்.
சிதம்பரத்தில் இருந்து கடலூர் வருவதற்கு தொடர் வண்டி கட்டணம் (டிக்கெட்) எட்டணாதான். எல்லா பணிகளையும் நாங்கள் பார்த்துக் கொள்வோம். அதற்கு ஆசிரியர் திராவிடமணி அவர்கள்தான் காரணம்!
இப்படி எங்களுக்குப் பயிற்சி கொடுத்து, பயிற்சி கொடுத்து, பலவிதமான எதிர்ப்புகளைச் சந்தித்து, அவர் நேரிடையாக வராமல், நல்ல அடிக்கட்டுமானமாக இருந்தார்கள். அவருடைய பிறந்த நாளும் டிசம்பர் 2 ஆம் நாள்தான்!
திராவிடர் கழகத்திற்கு அண்ணாவும் – ஆ.திராவிடமணியும்
மாநில செயலாளர்கள் ஆனார்கள்!
எப்படி என்னுடைய மணநாளும் – உங்களுடைய வாழ்விணையரின் பிறந்த நாளும் எதிர்பாராமல் ஒரே நாளில் இருக்கின்றனவோ, அதுபோல, என்னுடைய பிறந்த நாளும், என்னை தயாரித்த ஆசிரியர் திராவிடமணி அவர்களுடைய பிறந்த நாளும்
டிசம்பர் 2 என்பது எதிர்பாராத ஒரு நிகழ்வு.
அவருடைய கடும் உழைப்பு, அவருடைய ஈடுபாடு, உறுதிப்பாடு இவற்றையெல்லாம் கண்டு, 1944 ஆம் ஆண்டு திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றப்பட்டவுடன், தந்தை பெரியார் அவர்களே, ‘‘உங்களுடைய ஆசிரியர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ‘குடிஅரசு’ அலுவலகம் அமைந்துள்ள ஈரோட்டிற்கு வாருங்கள்” என்று சொல்லி அழைத்துக் கொள்கிறார்.
நீதிக்கட்சி சேலத்தில் திராவிடர் கழகமாக மாறியபோது, திராவிடர் கழகத்திற்கு இரண்டு செய லாளர்களை நியமித்தார் அய்யா அவர்கள்.
ஒருவர் அறிஞர் அண்ணா அவர்கள்; இன்னொருவர் என்னுடைய ஆசிரியர் திராவிடமணி அவர்கள்.
‘மத்திய செயலாளர்களாக’ இருந்தார்கள். பொதுச்செயலாளர் என்ற வார்த்தையை அன்றைக்குப் பயன்படுத்தவில்லை.
அதற்குப் பிறகு அவர் சென்னையில் ‘விடுதலை’யி னுடைய மேலாளராகவும் இருந்தார். இப்படி நீண்ட வரலாற்றை உடையவர்.
நான் இன்றைக்கு இந்த அளவிற்கு வந்தி ருக்கின்றேன் என்றால், அந்த ஆசிரியர்தான் காரணம். தனித்தமிழ் உணர்வோடு இருக்கவேண்டும் என்ப தற்காக, சாரங்கபாணி என்ற என்னுடைய பெயரை, வீரமணியாக ஆக்கினார்.
பாலவேலாயுதம் என்பதை ‘இளவழகன்’ என்று பெயர் மாற்றினார்.
தோழர் ராமையா, ‘அன்பழகனாக’ ஆன காலகட்டம்; நாராயணசாமி ‘நெடுஞ்செழியன்’ ஆன காலகட்டம்; சோமசுந்தரம், ‘மதியழகன்’ ஆன காலகட்டம். ஆக, இப்படிப்பட்ட ஒரு பெரிய வரலாறு, ஒரு பண்பாட்டு அமைதிப் புரட்சி தமிழ்வழி நடந்துகொண்டிருக்கின்ற காலகட்டத்தில், நாங்கள் எல்லாம் ஒரு சிறு துரும்புகள் போன்று இருந்தாலும், அவருடைய பயிற்சியி னால்தான், இன்றைக்கு அந்த உணர்வோடு இருக்கி றோம்.
கடைசி வரையில், நான் வளர்ந்த பிறகும்கூட, ‘விடுதலை’யின் நிர்வாகியான பிறகு, அவர் ஒதுங்கி தனியே இருந்தபொழுதுகூட, பெருமைப்பட்டு, மகிழ்ச்சியடைந்து வந்து, என்னை வாழ்த்தினார்.
ஆசிரியர் திராவிடமணி அவர்களுடைய துணைவி யாரும் என்னைப் பாராட்டுவார்கள். எனது ‘குருபக்தி’ என்றும் மாறாதது!
ஆகவே, எனக்கு நல்லாசிரியர் திராவிடமணி அவர்கள் கல்வி அறிவு ஆசிரியர்; எனக்கு அறிவாசான் தந்தை பெரியார் அவர்கள்.
அந்தப் பெரியாரை, ஒரு பாடத் திட்டமாக வைத்து, முதலில் எனக்குப் பயிற்சி கொடுத்தவர் ஆ.திராவிடமணி.
ஆ என்பது அவருடைய தந்தையாருடைய பெயர் அல்ல. ஊர்ப் பெயரை முதலில் வைத்துக்கொள்வது அவர்களுடைய மரபு. ஆசானபுதூர் அவருடைய சொந்த ஊர்.
(ஆற்காடு) ஏ.ராமசாமி முதலியார் என்று அழைப்பதுபோல!
அன்புடன் ஆனந்தி : உங்களுடைய பதில் மிகவும் சிறப்பாக இருந்தது. அன்றைக்கு அவர் விதைத்த விதை, இன்றைக்கு ஒரு விருட்சமாக எங்கள்முன் எழுந்து நிற்கிறீர்கள். அழகாகச் சொன்னீர்கள், மேசை உயரம் கூட இல்லாத உங்களை, அதன்மீது ஏற்றி உங்களைப் பேச வைத்தார்கள் என்று சொன்னீர்கள். எத்தனையோ மாணவர்கள் இருந்தாலும், உங்களை அவர் தேர்ந்தெடுத்து அந்த நாடகத்தில் உங்களை நடிக்க வைத்தார் என்று சொன்னீர்கள்.
அவருடைய கண்டெடுப்பு, பட்டை தீட்டிய வைரமாக அய்யா அவர்கள் எங்கள்முன் இன்றைக்கு அமர்ந்திருக்கிறீர்கள். அதற்கு நன்றியோடு நீங்கள் அவரை நினைவு கூர்ந்து, நிறைய நிகழ்ச்சிகளைச் சொன்னீர்கள். தனித்தமிழில் அவர் பெயர் வைத்ததையும் சொன்னீர்கள்.
அய்யாவினுடைய இயற்பெயர் என்னவாக இருக்கும் என்று எல்லோரும் நினைப்பார்கள். எப்படி கி.வீரமணி என்று பெயர் வைத்தார்கள் என்று எனக்கே அந்தக் கேள்வி இருந்தது. அதற்கும் சேர்த்து இன்றைக்கு முத்தாய்ப்பாக நீங்கள் விடையைச் சொல்லிவிட்டீர்கள்.
மிக்க மகிழ்ச்சி அய்யா!
இந்த நேரத்தில், உங்களை எங்களுக்குத் தந்த, கழகத்திற்குத் தந்த ஆ.திராவிடமணி ஆசிரியர் அய்யா – ஏனென்றால், ‘‘ஆசிரியர் பணி அறப்பணி – அதற்கு உன்னை அர்ப்பணி” என்று சொல்வார்கள்.
ஏனென்றால், நம் பெற்றோர்களோடு இருக்கக்கூடிய நேரத்தைவிட, ஆசிரியர்களோடு நாம் பள்ளியில் இருக்கக்கூடிய நேரம்தான் அதி கம். அந்த நேரத்தில், நம்முடைய வாழ்க்கையில் என்னென்ன முன்னேற்றங்கள் நடக்குமோ, அதற்கு அத்துணைப் பெருமையும் அந்த ஆசிரியர்ப் பெருமக்களுக்கே என்றும் உண்டு!
உங்களுக்கு அமைந்த நல்லாசிரியர், சிறப்பாக உங்களை வடிமைத்திருக்கிறார். அது மிகவும் சிறப்பு.
அதற்கடுத்தபடியாக, நாம் எல்லோரும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கக் கூடிய நம் தந்தை பெரியாரை, முதன்முதலாய் நீங்கள்
சந்தித்த அனுபவத்தைப்பற்றி சொல்லுங்கள்?
தந்தை பெரியாருடன் முதல் சந்திப்பு!
தமிழர் தலைவர்: இந்தக் கேள்விக்கான பதிலை ஏற்கெனவே சில நேர்காணலில் சொல்லியிருக்கிறேன்.
1943 ஆம் ஆண்டு நிகழ்விற்குப் பிறகு, சில மாதங்களில் – முன் சொன்ன பதிலில் இதற்குத் தொடர்பு இருக்கிறது.
தென்னார்க்காடு மாவட்ட திராவிடர் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டிற்கு வந்த அய்யா அவர்கள் திருப்பாதிரிபுலியூரில் கடலூர் புதுநகர் (என்.டி.) சத்திரம் ஒன்றில் தங்கியிருக்கிறார்.
என்னுடைய அந்த சிறிய வயதில் அய்யாவைப்பற்றி ஏடுகளில் படித்திருக்கிறேன். அப்படிப்பட்ட பெரியாரை நாம் நேரில் பார்க்கப் போகிறோம் என்கிற பரபரப்பு என் மனதிற்குள்!
காலையிலேயே அய்யா தந்தை பெரியார் அவர்களை ரயில் நிலையத்திலிருந்து அழைத்து வந்தார்கள்.
‘டார்பிடோ’ ஏ.பி. ஜனார்த்தனம் எம்.ஏ. மிகச் சிறந்த பேச்சாளர். அவர் ஏற்கெனவே என்னுடைய ஆசிரியர் திராவிடமணி அவர்களால் எனக்கு அறிமுகமானவர். அவர், ‘‘வா, உன்னை பெரியார் அய்யாவிடம் அறிமுகப்படுத்துகிறேன்” என்று சொல்லி அழைத்துச் சென்றார்.
அன்னை மணியம்மையார் அவர்கள் தந்தை பெரியாரின் செயலாளராக அன்றைக்கு வந்திருந்தார் (1944, ஜூலை).
நான் அரைக்கால் சட்டை அணிந்திருந்தேன். அய்யாவை சந்தித்தோம்.
‘யார் இந்தப் பையன்?’ என்று அய்யா கேட்டார்.
அய்யா, இந்தப் பையன் நம் திராவிடமணியினு டைய மாணவர். இயக்கப் பணிகளைச் செய்து கொண்டிருக்கிறார் என்றார் டார்பிடோ ஜனார்த்தனம்.
அப்படியா? என்ன படிக்கிறீங்க? என்று அய்யா கேட்டார்.
அதைக் கேட்டவுடன், எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால், நான் சிறிய பையன்.
அய்யா கேட்ட அந்த முறையைப் பார்த்து என்னால் பேச முடியவில்லை.
அதுதான் அய்யாவுடனான முதல் சந்திப்பு.அதற்குப் பிறகு, மாலையில் மாநாடு நடைபெற்றது. ‘‘செருப்பொன்று போட்டால், சிலை ஒன்று முளைக்கும்” என்ற கவிஞர் கருணானந்தத்தின் அந்தக் கவிதை உருவாகக் காரணம். அந்த செருப்புப் போட்ட நிகழ்வு நடந்தது. அய்யா வந்த ரிக்ஷாவைப் பிடித்துக் கொண்டு வந்தது எனக்கு நன்றாக நினைவில் இருக்கின்றது.
அன்புடன் ஆனந்தி: மிகவும் அருமை அய்யா!
நீங்கள் சொன்னீர்கள், பெரியாரை சந்திக்கும்பொழுது பரபரப்பாக இருந்தது என்று.
இன்றைக்கு வீரமணி அய்யாவை நேர்காணல் செய்யப் போகிறோம் என்றவுடன், கடந்த ஒரு வாரமாகவே எனக்கு அந்தப் பரபரப்பு இருந்தது!
சிறிய வயதில், மேசைமீது ஏறி உங்களுடைய முதல் ‘அரங்கேற்றம்’ நடந்தது என்று.
இப்பொழுது நான் கேட்பது, பெரியார் அவர்களை சந்தித்த பிறகு, கழகம் சார்ந்து உங்களுடைய முதல் மேடை பேச்சு எந்த வயதில் தொடங்கியது? அதை யார் தொடங்கி வைத்தார்கள்?
தமிழர் தலைவர்: என்னுடைய சொந்த ஊரான கடலூரில், 1943 ஆம் ஆண்டு அண்ணாவின் திராவிட நாடு இதழுக்கு நிதி கொடுக்கின்ற பொதுக்கூட்டத்தில் மேசை மீது ஏறி உரையாற்றினேன், 3, 4 நிமிடங்கள். அவ்வளவுதான். எழுதித் தந்த உரை – வரப்படுத்திப் பேசினேன்.
அதற்குப் பிறகு நடைபெற்ற தென்னார்க்காடு மாவட்ட திராவிடர் கழக மாநாட்டில், அண்ணா அவர்கள் எனக்குப் பின் உரையாற்றுகிறார். இடையில் என்னை பேச விட்டார்கள்.
மாநாட்டில் அய்யாவிற்குப் பெரிய எதிர்ப்பு. அய்யா அவர்கள் அதனை எப்படி எதிர்கொண்டார்கள் என்று பார்த்தோம், மெய்சிலிர்த்தது!
அண்ணாவின் பாராட்டு!
மேசைமீது ஏறி நான் பேசினேன் – 5, 7 நிமிடங்கள்.
அதற்கடுத்தாகப் பேசிய அறிஞர் அண்ணா அவர்கள், என்னைப்பற்றி பேச ஆரம்பித்தார்:
‘‘எனக்கு முன் பேசிய இந்தச் சிறுவன் என்று ஆரம்பித்து, “இப்போது பேசிய இச்சிறுவன் காதிலே குண்டலம், நெற்றியிலே நீறு, கழுத்திலே ருத்திராட்சம் அணிந்து இப்படிப் பேசியிருந்தால், இவரை ‘இந்தக்கால ஞானப்பால் உண்ட திருஞானசம்பந்தராக’ ஆக்கியிருப்பார்கள்; இவர் பேசியதிலிருந்து இவர் உண்டதெல்லாம் ஞானப்பால் அல்ல பெரியாரின் பகுத்தறிவுப்பால்தான்” என்று பாராட்டிப் பேசினார்.
அன்றைக்குப் பேசியதுதான் அய்யா முன் பேசிய முதல் பேச்சு – மாநாட்டில் பல நூற்றுக்கணக்கானவர்கள் முன்!
அதற்குப் பிறகு தோழர்கள் என்னை பொதுக் கூட்டத்திற்கு அழைத்தார்கள். ‘‘10 வயது பகுத்தறிவுச் சிறுவன்” என்று போட்டு விளம்பரம் செய்தார்கள்.
‘வெளியூர்களில் பேச எனக்கு அழைப்பு!’
தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களுக்கெல்லாம் கூட்டத்தில் பங்கேற்க சென்றோம். அவரது விடுமுறை நாள்களில் மட்டும் என்னை அழைத்துச் செல்வார் என்னுடைய ஆசிரியர் திராவிடமணி அவர்கள்.
அவர் வர முடியவில்லை என்றால், என்னுடைய மூத்த சகோதரர் கோவிந்தராஜன் அவர்கள் இந்தக் கொள்கையில் ஊறியவர். அவர் என்னை அழைத்துச் செல்வார்.
(நாளை தொடரும்)
‘‘நான் பேசியது தவறுதான்; நீங்கள் சொன்னது சரிதான்’’ என்றார் தந்தை பெரியார்!

அன்புடன் ஆனந்தி – கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணியிடம் நேர்காணல்!
சென்னை, பிப்.8 ‘‘நான் பேசியது தவறுதான்; நீங்கள் சொன்னது சரிதான்’’ என்றார் தந்தை பெரியார். ‘‘அந்தப் பெருந்தன்மைக்குப் பெயர்தான் பெரியார்! அவர்தாம் பெரியார்! அதனால்தான் அவர் பெரியார்! என்னே மாண்பு – இவர்தான் பகுத்தறிவுப் பகலவன்’’ என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கூறினார்.
பெரியார் பன்னாட்டமைப்பின் சார்பில், தமிழர் தலைவர் ஆசிரியருடன் (7.12.2024), அன்புடன் ஆனந்தியின் நேர்காணலின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
அன்புடன் ஆனந்தி: மிகவும் சிறப்பு அய்யா.
உங்கள் ஆசிரியர் திராவிடமணி அவர்களிடம் தொடங்கி, 10 வயது பகுத்தறிவு பேச்சாளர் என்ற பெயர் பெற்றீர்கள்.
10 வயது சிறுவன் பகுத்தறிவுச் சிந்தனை களை எப்படி பேச முடியும்? என்று எல்லோரும் வியப்போடு வந்து பார்க்கின்ற நிலை ஏற்பட்டி ருக்கிறது அந்தக் காலகட்டத்தில்.
அந்த வயதில் உங்களுடைய உள்ளத்தில் ஊறியிருக்கிறது. பெரியாரைப் பார்த்தபொழுது எப்படி பேசினார் என்பதைப்பற்றியும் சொன்னீர்கள்.
அண்ணாவைப்பற்றி நீங்கள் சொன்னீர்கள். அறிஞர் அண்ணா அவர்கள் உங்கள்மேல் அபரிமிதமான அன்பு வைத்திருந்தார் என்று நிறைய இடங்களில் சொல்லியிருக்கிறீர்கள்.
அறிஞர் அண்ணாவுடன் உறவு
உங்களுக்கு எப்படி இருந்தது?
எங்களுக்காக அதை நீங்கள் சொல்லுங்கள். அறிஞர் அண்ணாவுடனான உறவு உங்களுக்கு எப்படி இருந்தது?
தமிழர் தலைவர்: அண்ணாவிற்கு எப்பொழுதுமே தன்னுடைய இயக்கத்தில் இளைஞர்கள் வரவேண்டும் என்று விரும்புவார்.
குறிப்பாக மாணவர்கள், இளைஞர்கள் வந்தால், அவர்களை உற்சாகப்படுத்துவார். அதில் வயது இடைவெளி என்பது இந்த இயக்கத்தில் கிடையாது!
பெரியாருக்கும், அண்ணாவிற்கும் 30 ஆண்டுகள் வேறுபாடு.
அதேபோன்றுதான் கலைஞர் வயதும் இடை வெளியும்!
அதேபோன்று, எனக்கும், அய்யா பெரியாருக்கும் 50 ஆண்டுகளுக்குமேல் வேறுபாடு.
அதற்கு அய்யா சொன்ன விளக்கம் மிகவும் அற்புத மான விளக்கமாகும்.
பெரியாரின் இளமையின்
இரகசியம் என்ன?
‘‘என்னுடைய வயதைப்பற்றி எல்லோரும் சொல்கி றார்கள். நான் என்னுடைய வயதைக் குறைப்பதற்காக, நான் ‘வயதானவர்களிடம்’ பழகுவதில்லை. இளை ஞர்களிடம்தான் பழகுவேன்’’ என்று சொன்னார்.
அதேபோன்று, அண்ணாபற்றி ஒரு சிறிய நிகழ்வை சொல்லவேண்டும்.
அண்ணா அவர்கள், திருப்பூரில் அய்யாவை சந்தித்தபோது அவரை இயக்கத்திற்கு வரச் சொன்னார்.
இயக்கத்திற்கு வந்த அண்ணாவின் திறமைக்கு மதிப்பு கொடுத்து, 1937, ஆகஸ்ட் 27 ஆம் தேதி துறையூரில் நடைபெற்ற சுயமரியாதை இளைஞர் மாநாட்டிற்கு அண்ணா அவர்களையே தலைமை தாங்கச் சொல்கிறார்:
அண்ணாவை உற்சாகப்படுத்திய அய்யா!
அம்மாநாட்டில் அண்ணா அவர்கள் உரை யாற்றும்பொழுது, ‘‘நான் ஒரு இளைஞன். என்னை இந்த மாநாட்டிற்கு தலைமை தாங்க வைத்திருக்கிறார் அய்யா பெரியார் என்றால், எனக்கு பயமாகவும் இருந்தது” என்றார்.
அதற்குப் பிறகு உரையாற்றிய அய்யா பெரியார் அவர்கள், ‘‘நான் யாரையும் சின்னப் பசங்கள் என்று கருதவில்லை. வயதான வாலிபர்கள் என்றுதான் நான் நினைக்கிறேன்.” என்றார்.
ஒரு புதிய சொல்லாக்கத்தை தந்தை பெரியார் அவர்கள் சொன்னார். ‘‘வயதான வாலிபர்கள்’’ அதிகமாகப் பயன்பட்டார்கள், செயலுக்கு. ஆகவேதான், நான் பழகுவது, பேசுவது, என்னை உற்சாகப்படுத்துவது, களமாடக் கூடியவர்கள் வாலிபர்கள்தான் என்று சொல்லி, அண்ணாவை உற்சாகப்படுத்தினார்.
அய்யா அவர்கள் எல்லோரிடமும் அன்பாக இருந்தாலும்கூட அய்யாவை தூரத்திலிருந்துதான் எல்லோரும் பார்ப்பார்கள். ஆனால், அண்ணா அவர்கள், எல்லோர்மீதும் தோள்மேல் கைகளைப் போட்டுப் பேசக்கூடியவர்.
அய்யா பெரியாரிடம்,
அண்ணா தெரிந்துகொண்டது என்ன?
அய்யா அவர்களிடமிருந்து, அண்ணா அவர்கள் என்னென்ன தெரிந்துகொண்டார் என்பதைப்பற்றி சில நிகழ்வுகளைச் சொல்வார்கள்.
‘‘எம்.என்.ராய் விருது’’ பெரியாருக்குக் கொடுத் தார்கள். இப்படி நடந்தது, அப்படி நடந்தது என்று சொல்லிச் சொல்லி சிரிப்பார்.
ஆகவே, அய்யா – அண்ணா உறவு என்பது வெறும் அரசியல் அமைப்பு முறையிலோ, தலைவர் – செயலாளர் என்ற முறையிலோ கிடையாது. ஒரு குடும்பப் பாசம். அதுதான் கொள்கைக் குடும்பம்!
அண்ணா அவர்கள், தி.மு.க. பிரிந்த பிறகு 18 ஆண்டுகளுக்குப் பிறகு, திருச்சியில் அய்யாவை சந்திக்கிறார். அய்யா அவர்களின் பிறந்த நாள் விழா நிகழ்ச்சியில் பேசுகிறார்.
‘‘படித்து முடித்தவுடன் என்ன செய்யப் போகிறீர்கள்? என்று அய்யா கேட்டார்” என்று பழைய நினைவுகளை நினைவுகூர்ந்து பேசினார்.
அப்படி பேசிக் கொண்டே வரும்பொழுது, ‘‘என்னுடைய தொத்தா அவர்களிடம், எங்கே உங்கள் பிள்ளை?” என்று கேட்டிருக்கிறார்கள்.
அப்பொழுது என்னுடைய தொத்தா, ‘‘யாரோ ஒருவர் ஈரோட்டிலிருந்து வந்தார். அவர் பிள்ளை பிடித்துக் கொண்டு போவதுபோன்று, என் பிள்ளை யைப் பிடித்துக் கொண்டு போய்விட்டார்” என்று சொன்னார்கள் என்பதைச் சொன்னார்.
அவர் எப்படி தயாரானார்; பெரியார் வழியில் எப்படி பயணித்தார். அய்யாவின் மேன்மை என்ன? இந்தக் கொள்கையின் தேவை என்ன? என்பதையெல்லாம் எடுத்துச் சொன்னார்.
எல்லோருக்கும் வாய்ப்பு கொடுத்து, எல்லோரையும் தட்டிக் கொடுத்து உற்சாகப்படுத்துவதுதான் இந்த இயக்கத்தின் தலைமையின் தனித்தன்மை!
அதேபோன்றுதான் தந்தை பெரியார் அவர்கள், அண்ணாவை முன்மொழிந்தார்.
எப்பொழுது?
1937 ஆகஸ்ட் மாதம் துறையூரில் நடைபெற்ற சுயமரியாதை இளைஞர்கள் மாநாட்டிற்கு. இது ஒன்றுபோதும், இந்த அமைப்பு எப்படி உருவாயிற்று என்பதற்கு.
தலைமுறை இடைவெளி இல்லாத இயக்கம்!
அதுதான் தலைமுறை இடைவெளி இல்லாத ஓர் இயக்கம் – அன்றும் – இன்றும் – என்றும்.
அன்புடன் ஆனந்தி: அருமை அய்யா. ‘வயதான வாலிபர்கள்’ என்ற சொல்லாட்சியே மிகவும் சிறப்பாக இருக்கிறது.
நேற்று நடந்ததே சில பேருக்கு ஞாபகத்தில் இருக்காது. ஆனால் நீங்கள், நடந்த ஆண்டு களைச் சுட்டிக்காட்டி, இவ்வளவு அழகாக நினைவு கூர்கிறீர்கள்.
நீங்கள் சொன்னதுபோல, பெரியார் பன்னாட்டமைப்பும் அதே கொள்கையைத்தான் பின்பற்றுகிறது. சிறிய குழந்தைகள்தான் வாழ்த்துப் பாடலை உங்களுக்குப் பாடினார்கள். நிகழ்ச்சியும் தொடங்கியது.
ஏனென்றால், இளைய தலைமுறையினரிடம் அதை நம்பி கொடுப்பது என்பது மிகவும் முக்கியமான விஷயம்.
பெரியார் செய்ததை அண்ணா அவர்களும் செய்திருக்கிறார்கள்.
அரசியல் சார்ந்து இல்லாமல், ஒரு குடும்ப உறவு போல பழகியிருக்கிறார்கள். அதில் நீங்களும் பாராட்டப்பட்டு, சீராட்டப்பட்டு, வளர்க்கப்பட்டு இருக்கிறீர்கள் என்பது எங்களுக்கெல்லாம் கூடுதல் மகிழ்ச்சி!
நாங்களும் இந்த வார்த்தையைப் பிடித்துக் கொள்கிறோம், ‘வயதான வாலிபர்கள்’ என்பதை.
நான் அடிக்கடி சொல்வது உண்டு; சின்ன சின்ன குழந்தைகளுடன் பிரண்ட்ஷிப் வைத்துக் கொள்ளவேண்டும். என் தாயார் சொல்வார்கள், உன் சேர்க்கை சரியில்லை என்று. அது என்னவென்றால், சின்ன சின்ன பிள்ளைகளோடுதான் நான் பழகுவேன். அதனால், நம் மனதிற்கு உற்சாகமாக இருக்கும். நாம் வேகமாக இயங்கக் கூடிய மனநிலையைக் கொடுக்கும்.
அதுபோன்று குழந்தைகளோடு, இளவய தினரோடு பழகவேண்டும் என்று நீங்கள் அழகாகச் சொன்னீர்கள், மகிழ்ச்சி அய்யா!
அடுத்ததாக, பகுத்தறிவு திருமணங்கள் நம்முடைய கழகத்தின் மிகவும் முக்கியமான வழிமுறையாகும். நிறைய சுயமரியாதைத் திருமணங்களை நடத்தி வைத்திருக்கிறீர்கள். அதிலும் குறிப்பாக, உங்களைவிட பெரியவர்க ளுக்கும்கூட மண விழாக்களை நடத்தி வைத்திருக்கிறீர்கள். அதில் ஏதாவது ஒன்றை நீங்கள் சொல்லுங்கள்?
ஆசிரியருக்கே திருமணத்தை நடத்தி வைத்த ஆசிரியர்
தமிழர் தலைவர்: நான் எழுதிய ‘அய்யாவின் அடிச்சுவட்டில்’ என்கிற புத்தகத்தில் தேதி வாரியாக பதிவு செய்திருப்பேன்.
கடலூரில் ராமச்சந்திரன் என்பவருடைய மண விழாவினை நடத்தி வைப்பவர் வரவில்லை. திருக்கு றளாரும் வரவில்லை. யாரும் இல்லை என்றவுடன், என்னை தலைமை தாங்கி நடத்தச் சொன்னார்கள். அந்த மணவிழாவினை நான் நடத்தி வைத்தேன். அன்று மணமகனான பிறகு, அவரே எனக்குப் பள்ளி ஆசிரியராக வந்தார்.
சடங்காச்சாரமாக இருந்தால், மந்திரம் சொல்லித்தான் மணவிழாவினை நடத்தி வைக்கவேண்டும்; மந்தி ரங்கள் தெரிந்திருக்கவேண்டும் என்று சொல்வார்கள்.
ஆனால், சுயமரியாதைத் திருமண முறை என்பது பிரச்சார முறையாகும். மணவிழாவில், இரண்டு பேரும் வாழ்க்கை இணையர்களாக ஆகிறார்கள்.
அது ஒரு கொள்கைப் பதிவு – வாழ்க்கை இணை யேற்பு – கொள்கையைப் பரப்பும் முறைதான்.
ஏன் பழைய மணமுறை மாற்றப்பட்டது என்பதைச் சொல்வதுதான் சுயமரியாதைத் திருமண முறையாகும்.
இதுபோன்ற பணிகளைச் செய்யவேண்டும் என்று என்னுடைய ஆசிரியர் திராவிடமணி அவர்கள் சொன்னார்.
எனக்கு 16 வயது இருக்கும்பொழுதே மூத்தவர்க ளுக்குக்கூட நான் திருமணம் செய்து வைத்திருக்கிறேன். காரணம், தொடர்வண்டியை தவறவிட்டதால், மணவிழாவினை நடத்தி வைப்பவர்கள் வரவில்லை.
நம்முடைய தோழர்கள் பகுத்தறிவுவாதிகள். அதனால், சடங்கு, சம்பிரதாயம், அவர்தான் மண விழாவினை நடத்தி வைக்கவேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. வைதீகர்கள் என்றால், மனதில் ஒரு சங்கிலியைப் பிணைத்திருப்பார்கள்; அவர் வரவில்லை என்றால், அது கெட்ட சகுனமாயிற்றே – ஆரம்பத்திலேயே தடங்கலாக இருக்கிறதே என்று நினைப்பார்கள்.
ஆனால், சுயமரியாதை மணமுறை என்பது அப்படியல்ல. யார் வந்திருக்கின்றார்களோ, அவர்களது தலைமையில் மணவிழாவினை நடத்தலாம். புதிதாக வருபவர்களுக்கு விளக்கம் சொல்லலாம் – பிரச்சாரம் – பரப்புரைதானே!
பகுத்தறிவு என்பது எல்லாத் துறையிலும் பகுத்தறிவு என்பதற்கு இதுவே ஓர் அடையாளம், அதுவே உற்சாகம், அதுவே ஒரு நல்ல பயிற்சியாகும்.
அன்புடன் ஆனந்தி: அருமையாகச் சொன்னீர்கள் அய்யா. வயது ஒரு பொருட்டல்ல; கொள்கை தான் அதற்கு முக்கியம். கொள்கைக்கு வயது ஒரு தடை இல்லை. 16 வயதிலேயே மணவிழாக்களை நடத்தி வைத்திருக்கிறீர்கள் என்பது பெருமையாக இருக்கிறது.
உங்கள் தலைமையில் மணவிழாவினை நடத்திக் கொண்டவர்கள் இன்றும் உங்களுடன் தொடர்பில் இருக்கிறார்கள்; உங்களைவிட வயதில் மூத்தவர்கள் என்பது கூடுதல் மகிழ்ச்சியாகும்.
அடுத்ததாக உங்களிடம் ஒரு கேள்வி. தகப்பன் – மகன் என்ற நிலையில் ஒரு கேள்வி.
தந்தை பெரியார் எதையாவது சொல்லி, அதனைத் தாங்கள் மறுத்தது உண்டா?
தந்தை பெரியார் ஏதாவது சொல்லி, அதை நீங்கள் மறுத்தது உண்டா? எதிர்த்துப் பேசியது உண்டா?
தமிழர் தலைவர்: இது ஒரு நல்ல கேள்வி. அய்யா அவர்கள் சொல்லி நான் மறுத்தது இல்லை. ஆனால், அய்யா அவர்கள் என்னை ‘விடுதலை’ ஆசிரியராக அமர்த்திய நேரத்தில், எனக்கு ஒரு தனி உரிமை கொடுத்தார்.
எனக்கு முன்பு ‘விடுதலை’ ஆசிரியராக இருந்த தோழர் குத்தூசி குருசாமி அவர்கள் நீண்ட அனுபவம் பெற்றவர். அவர் எழுத்துத் துறையில் சிறந்தவர். நான் எழுத்துத் துறையில் இருந்தவன் அல்ல. அவசியத்தை முன்னிட்டு, நெருக்கடியிலிருந்து பத்திரிகையைக் காப்பாற்றுவறத்காக இந்தத் துறைக்கு வழக்குரைஞர் தொழிலை விட்டுவிட்டு வந்தேன். சிற்சில நேரங்க ளில் முன்பு கட்டுரைகளை எழுதியுள்ளேன்.
அய்யா அழைத்தவுடன், அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டேன். அப்போது அய்யா அவர்களிடம் பணிவாக ஒரு வேண்டுகோள் வைத்தேன்.
அது என்னவென்றால், அய்யா இந்தப் பணியில் நான் எப்படி நடந்துகொள்ளவேண்டும்? இந்தத் துறையில் எனக்கு அனுபவம் இல்லையே என்றேன்.
அது ஒன்றும் பிரமாதம் இல்லை. இந்த இயக்கத்தி னுடைய கொள்கைகள் உங்களுக்கு நன்கு தெரியும். எழுதவும் தெரியும் உங்களுக்கு என்று சொல்லிவிட்டு, என்னை அழைத்து வந்து, ஆசிரியர் நாற்காலியில் அமர வைத்தார். என்னுடைய வாழ்நாளில் பெற முடியாத பேறு அது.
என்னுடைய உரை, நான் எழுதி அனுப்பும் அறிக்கைகள் வரும்பொழுது, உங்களுக்கு சந்தேகக் கருத்து இருந்தது என்றால், அதை நீங்கள் கேட்கலாம் திருத்தலாம்; ஏன், சிலவற்றை நிறுத்தலாம் என்று சொன்னார்.
அய்யா அவர்கள் எனக்குக் கொடுத்த உரிமை என்பது தாராளமான உரிமை. அது ஆழமானதாகும். மறக்க முடியாது.
ஒருவருக்கு அதிகமான உரிமையைக் கொடுத்தால், அதில் பொறுப்புணர்ச்சியோடு நடந்துகொள்வதற்கு அதிகமாகக் கவலைப்படவேண்டும் அல்லவா?
மிக விலையுள்ள ஒரு பொருளை, ஒருவரிடம் கொடுத்து, பத்திரமாகக் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும் என்று சொன்னால், அதிகமான கவலை எடுத்துக்கொண்டு, அதிகமான அக்கறை எடுத்துக்கொண்டு அந்தப் பொருளை உரியவரிடம் கொண்டுபோய்ச் சேர்க்கவேண்டும் அல்லவா?
அதுபோன்று, சரியாகச் செய்யவேண்டுமே என்ற அதிகமான பொறுப்புடன் செய்தேன். சந்தேகம் இருந்தால், கேட்பேன், அதை நிவர்த்தி செய்வார் அய்யா பெரியார்.
தந்தை பெரியாருடைய தனித்தன்மை என்ன வென்றால், மாறுபட்ட கருத்தை அவரிடம் தாராளமாக விவாதிக்கலாம். நல்ல உணர்வில் அதை எடுத்துக் கொள்வார்!
தந்தை பெரியாருக்கும், ஆசிரியருக்குமிடையே நடைபெற்ற ஒரு விவாதம்!
ஒருமுறை ஒரு குறிப்பிட்ட கருத்தை – திருச்சியில் அய்யா அவர்களின் உரையை வெளியிடும்பொழுது, அவருடைய உரையில் சட்டபூர்வமான விஷயம் வருகிறது. ஃபேக்சுவல் எரர் (Factual Error) என்று சொல்லக்கூடிய அளவிற்கு, இன்றைய சட்டம், அதற்கு முன்பிருந்த சட்டத்திற்கு விரோதமாக இருக்கிறது. அந்தச் சட்டத்தைப்பற்றி அய்யாவிடம் எடுத்துச் சொல்லவில்லை. அதனால், அவர் பழைய சட்டப்படி எதுவும் செய்ய முடியாது என்ற கருத்தில் பேசியிருக்கின்ற பகுதி அது.
அந்த உரையை நான் வெளியிடாமல் நிறுத்தி விட்டேன். ஏனென்றால், அய்யா அவர்கள் தவறாகப் பேசினார் என்று பிறகு வரக்கூடாது என்பதால்.
அடுத்த நாள் அய்யா பெரியார் அவர்கள் சென்னைக்கு வந்துவிட்டார். அவரிடம் நான், ‘‘அய்யா ஒரு சந்தேகம். நேற்று நீங்கள் ஆற்றிய உரையில் ஒரு சந்தேகம். அதற்குப் பிறகு அந்த சட்டம் மாறிவிட்டது’’ என்றேன்.
‘‘இல்லையே, எனக்கு சரியாகத்தான் சொன்னார்களே’’ என்றார்.
அய்யா அவர்கள் ஒரு கருத்தை உள்வாங்கிவிட்டார் என்றால், அதில் மிகவும் உறுதியாக இருப்பார்.
என்னிடம் சொல்கிறார், ‘‘என்னிடம் தெளிவாகச் சொன்னார்களே, நீங்கள் சொல்வது எனக்கு ஏற்புடையதாகத் தெரியவில்லையே” என்றார்.
‘‘இல்லீங்க அய்யா, அதற்குரிய ஆதாரம் என்னிடம் இருக்கிறது’’ என்றேன்.
‘அப்படியா?’ என்றார் அய்யா.
இரண்டு பேருக்கும் பெரிய விவாதமே நடை பெற்றது சில மணித்துளிகள்.
‘ஆதாரத்தோடுதான் நான் சொல்கிறேன்’ என்றேன்.
என்ன இப்படி சொல்கிறீர்கள்? ஒருவருடைய பெயரைக் குறிப்பிட்டு, அவர் சொன்னாரே என்றார்.
இரண்டு பேரும் சமதளத்தில் நின்று வாதம் செய்கி றோம்! அது எதிர்பாராத ஒன்று. என் வாழ்நாளிலேயே அது ஒரு நிகழ்வுதான்.
கொஞ்சம்கூட குரலை தாழ்த்தாமல் நான், ‘‘என்ன அய்யா நீங்கள், நான் திரும்பத் திரும்ப சொல்கிறேன். அவர் சொன்னார் என்று சொல்கிறீர்களே? அவர் வக்கீல் இல்லை அய்யா; நான் சட்டம் படித்தவன்” என்றேன்.
அப்படியா? என்றார் அய்யா.
அப்போதும் அய்யா விடவில்லை. ‘‘அதற்கு என்ன ஆதாரம் உங்களிடம் இருக்கிறது?’’ என்று கேட்கிறார்.
‘‘ஆதாரம் வீட்டில் இருக்கிறது. எனக்கு 24 மணி நேரம் அவகாசம் கொடுங்கள்’’ என்றேன்.
‘‘இப்பொழுது போய் நான் எடுத்து வரட்டுமா?’’ என்றேன்.
‘‘வேண்டாம், வேண்டாம். உங்களுடைய வேலை யைப் பாருங்கள்; நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம்’’ என்றார்.
அய்யா அவர்கள் ஒரு கருத்தை மனதிற்குள் பதிய வைத்துக் கொண்டார் என்றால், எந்தக் காரணத்தை முன்னிட்டும் அதிலிருந்து பின்வாங்கமாட்டார். அதே புத்தியை எனக்கும் அவர் தந்ததினால், நான் சொல்வதில் தவறு இல்லை என்றால், நான் வாதம் செய்வேன்.
அதனால்தான் அவர் பெரியார்!
ஒரு தலைவரிடம் தொண்டன் எதிர்த்துப் பேசி னால், மற்ற கட்சிகள், இயக்கங்களில் அவனை அந்தக் கட்சியிலிருந்து, இயக்கத்திலிருந்து நீக்கி விடுவார்கள்.
நான், பெரியாரிடம் பணியாற்றுகிறேன். அடுத்த நாள் அந்த ஆதாரத்தைக் கொண்டு வந்து காட்டினேன்.
‘‘ஆமாம், நான் பேசியது தவறுதான். நீங்கள் சொன்னது சரிதான்’’ என்றார். அந்தப் பெருந்தன்மைக்குப் பெயர்தான் பெரியார்!
அவர்தாம் பெரியார்!
அதனால்தான் அவர் பெரியார்!
என்னே மாண்பு – இவர்தான் பகுத்தறிவுப் பகலவன்!
(நாளை தொடரும்)
பெண் கல்வி என்பதற்கே முன்னுரிமை கொடுத்து கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறோம்! அன்புடன் ஆனந்தி – கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணியிடம் நேர்காணல்!

தந்தை பெரியாரின் இந்தக் கருத்து குடியரசுத் தலைவர்
அப்துல் கலாம் அவர்களை மிகவும் கவர்ந்தது!
சென்னை, பிப்.9 ‘‘கிராம – நகர பேதத்தை ஒழிக்க வேண்டும்’’ என்று சொன்ன தந்தை பெரியாரின் இந்தக் கருத்து குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களை மிகவும் கவர்ந்தது! பெண் கல்வி என்பதற்கே முன்னுரிமை கொடுத்து கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறோம் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கூறினார்.
பெரியார் பன்னாட்டமைப்பின் சார்பில், தமிழர் தலைவர் ஆசிரியருடன், அன்புடன் ஆனந்தியின் நேர்காணலின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
டாக்டர் சோம இளங்கோவன்: அய்யா உங்கள் மாமனார் மறைந்தபொழுது, அய்யாவிடம் நீங்கள் என்ன பேசினீர்கள்?
மாமனாருக்குக் கொள்ளி வைக்க மறுத்த மருமகன்!
தமிழர் தலைவர்: எங்கள் குடும்பத்தில் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டம். என்னுடைய மாமனார் – மாமியார் திருமணமே செல்லாது என்பது அந்த வழக்கு. என்னுடைய மாமனார் இறந்தபொழுது, அவருடைய இரண்டு மகன்களும் வெளிநாட்டில் இருந்தார்கள். அதனால், நீங்கள்தான் கொள்ளி வைக்கவேண்டும் என்று என்னிடம் சொல்லாமல், அய்யாவிடம் சொன்னார்கள்.
‘‘ஏம்பா, இதுபோன்று சொல்கிறார்களே, பின்னாளில் வழக்கு ஆகும் என்று சொல்கிறார்கள். ஏற்கெனவே சொத்துப் பிரச்சினைகள் இருக்கிறது. நீங்களே அதனை செய்துவிட்டுப் போகலாமே’’ என்றார்.
‘‘கொள்ளி வைக்கின்ற கொள்கையை நாம் இது வரையில் எதிர்த்துப் பேசியிருக்கின்றோம். அதை நான் செய்யமாட்டேன். அந்தக் கொள்கை சரி என்று நீங்கள் சொல்லுங்கள். நான் கொள்ளி வைக்கிறேன்’’ என்றேன்.
‘‘வேண்டாம், வேண்டாம், உங்களை நான் வற்புறுத்தவில்லை’’ என்றார் அய்யா.
அது ஒன்றும் பெரிய பிரச்சினையல்ல. அது சரியாக என்னுடைய நினைவில் இல்லை.
அன்புடன் ஆனந்தி: அருமை, அருமை அய்யா. நீங்கள் அழகாகச் சொன்னீர்கள். ஆசானிடமே, நான் ஒரு வழக்குரைஞர், நான் சொல்கிறேன், வீட்டில் ஆதாரம் இருக்கிறது, அதை எடுத்துக் கொண்டு வருகிறேன் என்று சொல்லியிருக்கிறீர்கள்.
ஏனென்றால், அந்த உரிமை கொடுக் கப்பட்டது என்று சொன்னீர்கள்.
ஓர் அரிய பொக்கிஷமாக ஒரு விஷயத்தைப் பொறுப்பை நம் கைகளில் கொடுக்கும்பொழுது, நமக்கு அந்த பயம்,பதற்றம், சரியாகக் கொண்டு போய்ச் சேர்க்கவேண்டுமே என்கிற எண்ணம் இருக்கும்.
அய்யா அவர்களே உங்களை ஆசிரியர் நாற்காலியில் அமர வைத்து, அந்தப் பொறுப்பை உங்கள் கைகளில் கொடுத்ததில் தொடங்கி, ஒரு சந்தர்ப்பத்தில் நீங்கள் இரண்டு பேரும் வாதம் செய்வதை நான் அப்படியே காட்சி செய்து பார்த்தேன்.
தமிழர் தலைவர்: முக்கியமான ஒரு செய்தி என்ன வென்றால், என்னுடைய உறுதி என்பது அதில் முக்கியமல்ல. அய்யா அவர்கள் அதனை எப்படி எடுத்துக்கொண்டார் என்பதுதான் முக்கியம். அவர் சொன்ன கருத்தில் எவ்வளவு உறுதியாக இருப்பார் என்றாலும், நான் சொன்ன கருத்தினை ஏற்று, அதற்கு அனுமதித்தார். தவறை, தவறு என்று சொன்னவுடன், அதற்கு அனுமதித்தார்.
அய்யாவின் சிறப்பு என்னவென்றால், ஒருவர் ஏதாவது தவறு செய்தால், அது எவ்வளவு பெரிய தவறாக இருந்தாலும், மன்னிக்கப்பட முடியாததாக இருந்தாலும், ‘‘அய்யா, அந்தத் தவறை நான்தான் செய்தேன்” என்று சொல்லிவிட்டால், அடுத்த நிமிடம் அந்தத் தவறைப்பற்றி பேசவே மாட்டார்.
‘‘அந்தத் தவறை நான்தான் செய்தேன் என்று ஒப்புக்கொண்டார் அல்லவா, அத்தோடு விட்டு விடுங்கள்’’ என்பார்!
பெரியாருடைய பெருந்தன்மை, பெரியாருடைய மனப்பக்குவம், பெரியாருடைய வழிகாட்டல் என்பது மிகவும் முக்கியம். அதனால்தான் அந்த நிகழ்வினை சொன்னேன்.
கரண்டி பிடிக்கும் கையில் கல்வி!
அன்புடன் ஆனந்தி: அதனால்தான் அவர் பெரியார். பெரியார் என்பவர்கள் எல்லாம் பெரியார் அல்ல. அவர்தான் பெரியார் என்பதற்கு அருமையான உதாரணம் சொன்னீர்கள்.
அடுத்ததாக, கல்வி நிறுவனங்கள் தொடங்கு வதில் உங்களுக்கு அதிகப்படியான ஈடுபாடு இருந்தது. அதிலும் குறிப்பாக பெண்கள் கல்விக்கு முனைப்பு காட்டியிருக்கிறீர்கள்.
ஏனென்றால், நீங்கள் அய்யா பெரியார் வழியில் வந்தவர். எல்லோருக்கும் தெரியும் ‘‘கரண்டி பிடித்த கரங்களில் கல்வி ஏட்டைக் கொடுக்கவேண்டும்’’ என்பதற்காகப் போரடிய வர் அவர்!
அவர் வழியில் வந்த நீங்கள் இயல்பாகவே, பெண்கள் கல்விக்காக முனைப்போடு நிறைய செய்திருக்கிறீர்கள். அதைப்பற்றி நீங்கள் சொல்லுங்களேன்?
தமிழர் தலைவர்: எங்களுடைய குடும்பத்தில் நான்தான் முதல் தலைமுறை பட்டதாரி. பள்ளிப் படிப்பை நான் முடித்ததும், கல்லூரி படிப்பைப் படிப்பதற்கு என்னுடைய குடும்பத்தார் உற்சாகப்படுத்தவில்லை. வேலைக்குப் போகலாம் என்றனர். நான் படிக்கக்கூடாது என்ற எண்ணத்தில் அல்ல; பண வசதி இல்லை, கல்லூரிக்குப் போய் எப்படி படிப்பது? என்கிற எண்ணத்தினால்தான்.
அண்ணாமலைப் பல்கலைக் கழகம் இருந்ததி னால்தான், எங்களைப் போன்றவர்கள் படிக்க முடிந்தது. அதற்கு நாங்கள் கடமைப்பட்டவர்கள்.
அய்யா அவர்களும் சொல்லியிருக்கிறார். ஒடுக்கப்பட்ட சமுதாயத்தவர்களும், தென்னார்க்காடு மாவட்டம், சுற்று மாவட்டத்தில் உள்ளவர்கள் எல்லாம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தினால் பயன்பட்ட வர்கள்.
எங்களுடைய வறுமையின் காரணமாக, இறுதித் தேர்வு கட்டணத்தைக்கூட கட்ட முடியாத நிலை; சக மாணவர்கள்தான் தேர்வுக் கட்டணத்தை கடைசி நேரத்தில் செலுத்தினார்கள் ஹானர்ஸ் படிப்பில்.
ஸ்காலர்ஸ் ஷிப் வாங்கித்தான் நான் படித்தேன். என்னுடைய அண்ணன் மிகவும் கஷ்டப்பட்டு மாதம் 10 ரூபாய் அனுப்புவார். அதில் ஒரு ரூபாய்க்கு நான் ‘விடுதலை’யை வாங்குவேன்.
நான் படிக்கும்பொழுது நண்பர்கள் உதவியிருக்கி றார்கள். இயக்கத்துக்காரர்கள் உதவியிருக்கிறார்கள். புத்தகங்களை வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள்.
பெண் கல்வியில்
பெரியாருக்கு இருந்த அக்கறை!
ஆகவே, எனக்கு வாய்ப்புகள் வந்தபொழுது, பெரியார் மணியம்மை அறக்கட்டளைகளை நிர்வ கிக்கின்ற வாய்ப்புகள் வந்தபொழுது, அய்யா பிறந்த நாள் விழாவினைக் கொண்டாடும்பொழுது, கல்வி யைப் பரப்பவேண்டும்; ஆண்களுக்குக் கல்வி கற்று தருவதைவிட, பெண்களுக்குக் கல்வியைக் கொடுக்க வேண்டும் என்கின்ற உறுதி ஏற்பட்டது.
அய்யா சொன்ன தத்துவத்தில் மிகவும் முக்கிய மானது, ஒரு குடும்பத்தில் ஒரே ஒருவர்தான் படிக்க வேண்டும் என்றால், அந்தக் குடும்பத்தில் உள்ள பெண்ணை படிக்கச் சொல்லவேண்டும். ஏனென்றால், தாய்தான் முதல் ஆசிரியர் எல்லோருக்கும். ஒரு பெண் படித்தால், அந்தக் குடும்பமே படிப்பதாகும் என்று.
அந்தக் கருத்தை நான் உள்வாங்கிக் கொண்டதால், வாய்ப்பு இருக்கும்பொழுது மகளிருக்குக் கல்வி கொடுக்கவேண்டும் என்று நினைத்தேன். கல்வி, ஒருவருடைய அறிவை வளர்க்கிறது. மகளிருக்குத் தன்னம்பிக்கை அதிகம். மகளிருக்குக் கல்வி கொடுத்தால்தான் இன்னும் சிறப்பாகும்.
நம்முடைய கல்லூரியில் படித்த பெண்கள், உலகம் முழுவதும் இருக்கிறார்கள். நான் வெளிநாடுகளுக்குச் செல்லும்பொழுது, விமான நிலையத்தில் என்னைப் பார்த்தவுடன், ‘‘அய்யா, நான் பெரியார் மணியம்மையார் கல்லூரியில்தான் படித்தேன். இப்பொழுது இந்த நாட்டில் பணியாற்றுகிறேன்” என்று மகிழ்ச்சியாக சொல்லும்பொழுது, அதைவிட வேறு மகிழ்ச்சி என்ன வேண்டும்?
பெண்கள் வீக்கர் செக்க்ஷனா?
ஆங்கிலத்தில் ஒரு தவறான மரபு இருக்கிறது. அது என்னவென்றால், ‘‘வீக்கர் செக்ஸ்” (Weaker Sex) என்று. வீக்கர் செக்ஸ் என்பது தவறான, ஒப்புக்கொள்ள முடியாத ஒரு வார்த்தையாகும்.
பொதுக்கூட்டங்களில் நான் வேடிக்கையாக சொல்வது உண்டு. வீக்கர் செக்ஸ் என்பதை ஒப்புக் கொள்ளவேண்டும் என்று நீங்கள் வலியுறுத்தினீர்கள் என்றால், ஒப்புக்கொள்ளலாம். எப்படி என்றால், ‘‘வீக்கஸ்ட் செக்ஸ்’’ ஆண்; அதனால், ‘வீக்கர் செக்ஸ்’ பெண் என்று வேண்டுமானாலும் ஒப்புக்கொள்ளலாம் என்பேன்!
ஒரு குடும்பத்தில் ஒரு பெண் படித்துவிட்டால், ‘‘தாயாக’’ இருந்து அந்தக் குடும்பத்தில் உள்ள மற்ற வர்களும் கல்வி கற்பதற்கு வாய்ப்புக் கிடைக்கும்.
மகளிர் பாலிடெக்னிக், மகளிர் பொறியில் கல்லூரி முதன்முதலாக தஞ்சாவூரில் தொடங்கினோம் முதலில். குறைவான பெண்கள்தான் சேர்ந்தார்கள். கல்வி அமைச்சர் கேட்டார், அவ்வளவு பணம் உங்களால் செலவழிக்க முடியுமா? என்றார்.
நான் உடனே அவருக்குப் பதில் சொன்னேன், பெரியார் நூற்றாண்டில் தொடங்குகிறோம். பணமுடை ஏற்பட்டால் அரசிடம் ஒப்படைத்துவிடுவோம்; அதனை நீங்கள் மூட முடியுமா?
மூட முடியாது அல்லவா! நாங்கள் தொடங்கிய பிறகு, அரசாங்கம் அதனை மூடிவிட்டால், மக்களே முன்வருவார்கள், அதனைத் திறப்பதற்கு.
பெரியார் பெயரில், பெண்கள் பாலிடெக்னிக் நடைபெறுகிறது. தனியார் துறையில் முதல் பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரி அதுதான்.
ஆகவே, எங்களால் நடத்த முடியவில்லை என்றால், அரசாங்கத்திடம் அதனைக் கொடுக்கப் போகிறோம். அரசாங்கம் அதனை நடத்தப் போகிறது. ஆக மொத்தம், அந்த நிறுவனம் தொடர்ந்து நடக்கும். அதுதான் எங்களுக்கு முக்கியமே தவிர, நாங்கள் நடத்தவேண்டும் என்பது முக்கியமல்ல.
மகளிர் பொறியியல் கல்லூரி – அமெரிக்கா, கனடா நாடுகளில் பெண்கள் அதிகமாக பொறியியல் படிப்பைப் படிப்பதில்லை. அதனால்தான், அந்த நாடுகளிலிருந்து வந்தவர்கள், தமிழ்நாட்டில் பெண்க ளுக்கு மட்டும் பொறியியல் கல்லூரியா என்று ஆச்சரியத்தோடு கேட்டார்கள்.
மகளிர் பொறியியல் கல்லூரியில் படித்தவர்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள்; குடும்பம் குடும்ப மாக இருக்கிறார்கள். அவர்களைப் பார்க்கும்பொழுது ஏற்படுகின்ற மகிழ்ச்சி இருக்கிறதே, அதைவிட ஊதி யம் வேறு இல்லை. அந்த மகிழ்ச்சி ஒன்றே போதும்.
பெரியாருடைய கொள்கையும் நிறைவேறியது. அடிமைத்தனமும் விடைபெற்றது.
இதுவே ஆண்களுக்கு இருந்தால், இன்னுங் கொஞ்சம் குறைந்திருக்கும். ஆனால், யாருக்கு வாய்ப்பு இல்லையோ, எந்த இடம் வறட்சியோ, எந்த இடம் கடைமடையோ அங்கே போய் இந்தத் தண்ணீர் சேரவேண்டும். அதுதான் நடந்திருக்கிறது.
அப்துல் கலாமுடன்
உங்கள் உறவு என்ன?
அன்புடன் ஆனந்தி: வறண்ட நிலத்திற்குத்தான் மழை தேவை என்று சொல்வார்கள். அதுபோல, எந்த இனத்திற்கு அதிகப்படியான தேவையோ அதை நீங்கள் செய்திருக்கிறீர்கள்.
ஒரு பெண் கல்வி அறிவு பெற்றால், அவளுடைய குடும்பம் மட்டுமல்ல; அவளுடைய தலைமுறை முழுக்க பயன் பெறுவார்கள். ஓர் ஆண் என்றால், அவனோடு முடிந்துவிடும். பெண் என்றால், தலைமுறை தலைமுறையாகத் தொடரும். அதுதான் பெரியார் அய்யாவினுடைய கனவு. அதனை நீங்கள் நனவாக மாற்றியிருக்கிறீர்கள். அதுதான் மிகவும் முக்கியம்.
எப்பொழுதும் உங்கள் பேச்சில் ஒரு உள்குத்து இருக்கிறது. நான், ஆரம்பித்துவிடுவேன்; பிரச்சினை வந்தால் என்ன, அந்தக் கல்லூரியை அரசாங்கமே எடுத்து நடத்தும். விதை போட்டது நான் என்று மிகவும் அழகாகச் சொன்னீர்கள். பொறியியல் கல்லூரி மட்டுமல்லாமல், பெண்களுக்காக பிரத்தியேகமாக நிறைய செய்திருக்கிறீர்கள். அதற்காக உங்களுக்கு வணக்கமும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அடுத்ததாக, அப்துல்கலாம் அவர்க ளைப்பற்றி நிறைய இடங்களில் நீங்கள் சொல்லக் கேட்டிருக்கின்றோம். அவருடனான உங்கள் உறவு – ஏனென்றால், இன்றைய தலைமுறையினர் அனைவரும் ஒரு கனவு நாயகனாகப் போற்றிப் பாராட்டக்கூடிய, கொண்டாடக்கூடிய
அப்துல்கலாம் அவர்களோடு உங்கள் உறவு எப்படி இருந்தது?
தமிழர் தலைவர்: கலாம் அய்யா அவர்கள், அண்ணா பல்கலைக் கழகத்தில் தங்கியிருந்தார். அதற்கு முன்பே நமக்கு மிகப்பெரிய வாய்ப்பு எப்படி வந்தது என்றால், நம்முடைய பெண்கள் பொறியியல் கல்லூரியை, அன்றைய இராணுவ அமைச்சராக இருந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் அவர்கள் சுற்றிப் பார்க்கும்பொழுது, ராணுவத்தில் பெண்களுக்கு சில இடங்களை நீங்கள் கொடுக்கலாம் என்று நாங்கள் சொன்னபொழுது, பொறியியல் படிப்பு படித்த பெண்களை ராணுவத்திற்கு எடுக்கலாமா? என்று வியப்போடு கேட்டு, உடனே அதற்குரிய நடவடிக்கையை எடுத்தார்.
ஒன்றிய அரசின் இராணுவ அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், ‘‘இப்படி ஒரு கல்லூரி இருக்கிறதா, Exclusively for Women பெண்களுக்காகவே?’’ என்று ஆச்சரிப்பட்டார்.
ஆமாம்! அந்தக் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவிற்கு நீங்கள் வரவேண்டும் என்று அவரை அழைத்திருந்தோம்.
டி.ஆர்.டி.ஓ. (டிபென்ஸ் ரிசர்ச் அன்ட் டெவ லப்மெண்ட் ஆர்கனைசேசன்) என்ற அமைப்புடன் ஒரு ஒப்பந்தம் போட்டார். அப்பொழுது அந்த அமைப்பிற்கு சேர்மெனாக அய்யா அப்துல் கலாம் அவர்கள் இருந்தார்!
நான் கல்லூரியின் தலைவர் என்ற முறையிலும், இராணுவ ஆராய்ச்சி அமைப்பின் தலைவர் அய்யா அப்துல்கலாம் அவர்களும் டில்லிக்குச் சென்றோம். ஒன்றிய ராணுவத் துறை அமைச்சரின் முன்னிலையில் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டோம்.
அப்பொழுதுதான் எனக்கு அய்யா அப்துல் கலாம் அவர்கள் அறிமுகமானார். அந்த அமைப்பின் சேர்மன் பொறுப்பு முடிந்தவுடன், அண்ணா பல்கலைக் கழகத்தில் தங்கியிருந்தார்.
அங்கே சென்று அவரை சந்திப்போம். அதற்குப் பிறகு அவர் குடியரசுத் தலைவராக ஆனார். அப்பொழுது அவரிடம், ‘‘அய்யா எங்கள் நிறுவனங்களுக்கு வந்து பார்வையிட்டு, அறிவுரை சொல்லுங்கள்” என்றோம்.
உடனே அவர் அதற்கு ஒப்புக்கொண்டு, எங்களு டைய கல்வி நிறுவனங்களைப் பார்வையிட்டார். பல்கலைக் கழகமாக ஆவதற்கு முன்பே, வல்லத்தைச் சுற்றியுள்ள 69 கிராமங்களைத் தத்தெடுத்திருந்தோம். அதற்கு மூலம் யார் என்றால், தந்தை பெரியார்தான்.
கிராமம் – நகர பேதம்பற்றி
பெரியார் கருத்து!
பெரியார்தான் சொல்வார், ‘‘கிராமம் – நகரம் என்பது இருக்கிறதே, அது வருணாசிரம தர்மம். எப்படி மேல்ஜாதிக்காரன் – கீழ்ஜாதிக்காரன்; தொடக்கூடியவன் – தொடக்கூடாதவன் என்று இருக்கி றதோ, அதுபோல, கிராமத்துக்காரன் உழைப்பை, நகரத்துக்காரன் சுரண்டி வாழ்வதுதான். நெய்யை கிராமத்தில் இருப்பவர் தயார் செய்வார்; நகரத்தில் இருப்பவர் அதை சாப்பிடுவார். இதுபோன்ற முறையை மாற்றவேண்டும். நகரம் – கிராமம் என்ற பேதமில்லாமல் செய்யவேண்டும். நகரங்களுக்கு என்னென்ன வசதிகள் இருக்கின்றனவோ, அதேபோன்று, அதே வசதிகள் கிராமங்களுக்கும் இருக்கவேண்டும்” என்று சொன்னார்.
‘‘கிராம சீர்திருத்தம்’’ எனும் தலைப்பில் 1946 ஆம் ஆண்டு தந்தை பெரியார் அவர்கள் ஈரோட்டில் பேசினார்.
அதை நடைமுறைப்படுத்த வேண்டும் கல்லூரியில் என்று நாங்கள் சொல்லி, சுற்றுவட்டாரங்களில் அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்தோம்.
கல்வி, சுகாதாரத்திற்காக தன்னார்வத் தொண்டர்களை அழைத்து, அவர்களுக்குப் பயிற்சி கொடுத்தோம். மாணவர்களுக்கும் ஒரு பொதுத் தொண்டறத்திற்கு வாய்ப்பாக இருக்கும் என்று அந்தப் பணியை மேற்கொள்ளச் செய்தோம்.
அய்யா அப்துல் கலாம் அவர்கள் எங்கள் கல்லூ ரிக்கு வந்தபொழுது, இதுபோன்ற திட்டத்தை நாங்கள் செய்கிறோம் என்று சொன்னவுடன், அவர் ஆச்சரியப்பட்டு, ‘‘நானும் இதே கருத்தை எழுதியி ருக்கிறேன் என்னுடைய அக்னி சிறகுகளில். அதில் ‘புரா’ என்ற ஒரு திட்டம். PURA என்றால் Providing Urban Amenities to Rural Area என்பதாகும்.
நகரத்தில் என்னென்ன வாய்ப்புகள் இருக்கின்றதோ, அதனை கிராமங்களுக்கும் கொண்டுவரவேண்டும் என்பதுதான் அதனுடைய முக்கிய நோக்கமாகும்.
இதை எப்படி நீங்கள் செய்திருக்கிறீர்கள்? என்று அய்யா அப்துல்கலாம் கேட்டார்.
பெரியார் அய்யா, ‘‘கிராம சீர்திருத்தம்’’ புத்தகத்தில் சொல்லியிருக்கிறார். இது பெரியாருடைய கல்லூரி; மகளிருக்கு அதனைச் சொல்கிறோம். பெரி யாருடைய சித்தாத்தங்களை, கொள்கைகளை நடை முறைப்படுத்தினால், மக்களுக்கு நலம் பயக்கும்.
இது வெறும் ஏட்டுச்சுரைக்காயை கற்றுக் கொடுப்பது மட்டும் அல்ல; மக்களை நேரிடையாகச் சந்திக்கவேண்டும் என்பதற்காகவும், மக்கள் நிறு வனமாக இருப்பதினால், சுற்றியுள்ள 69 கிராம மக்களுக்கும் பயன்படும். மாணவர்களுக்கும் படிக்கின்ற காலத்திலேயே தொண்டு செய்கின்ற மனப்பான்மை வரவேண்டும் என்பதற்காக இதனைச் செய்கிறோம் என்று நாங்கள் சொன்னோம்.
அப்படி சொன்னவுடன், அப்துல் கலாம் அய்யா அவர்கள் ஆச்சரியத்தோடு பார்த்தார்!
அவரை யார் சந்தித்தாலும், தஞ்சாவூருக்குச் செல்லுங்கள்; அங்கே என்னென்ன செய்கிறார்கள் என்று போய்ப் பாருங்கள் என்பார்!
எனக்கு முன்பாகவே பெரியார் சொல்லிவிட்டார். அது இப்பொழுதுதான் எனக்குத் தெரிந்தது. கிராம சீர்திருத்தம் புத்தகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து கொடுங்கள் என்று சொன்னார். அதுபோலவே நாங்களும் கொடுத்தோம்.
டில்லியிலிருந்து 30 அதிகாரிகளை அனுப்பி வைத்து தஞ்சை வல்லத்தில் உள்ள கல்லூரியைப் பார்க்கச் சொன்னார்!!
என்னுடைய கருத்து நடைமுறைக்கு வருமா? என்று சில அதிகாரிகள் அய்யத்தோடு கேட்டார்கள். நான் அவர்களுக்குச் சொன்னேன், ‘‘ஏற்கெனவே பல ஆண்டுகளாக நடைமுறையில் அதைச் செய்து கொண்டிருக்கிறார்கள்” என்றார் அப்துல் கலாம் அய்யா.
என்னை, அப்துல் கலாம் அய்யா அவர்கள், ‘‘சார்” என்று அன்போடு அழைப்பார்.
‘‘என்னை போய் சார் என்று ஏன் அழைக்கிறீர்கள்?’’ என்று கேட்பேன்.
இல்லை இல்லை, நீங்கள் முக்கியத் தலைவர் அல்லவா என்பார்.
கடைசியாக அவர்,‘‘I am your, international marketing Agent’’ என்று வேடிக்கையாகச் சொல்லிவிட்டு, என் கைகளைப் பிடித்துக் கொள்வார்.
வல்லம் பெரியார் – மணியம்மை கல்லூரிக்கு ஆறுமுறை வந்தவர் அப்துல் கலாம்!
வல்லம் கல்லூரிக்குக் கலாம் அவர்கள் ஆறு முறை வந்திருக்கிறார். மூங்கில் காடுகள் வையுங்கள், அது மிகவும் சிறப்பாக இருக்கும் என்று சொல்வார்.
இன்றைக்கு பெரியார் மணியம்மை பல்கலைக் கழ கத்தில் பார்த்தீர்கள் என்றால், மூங்கில் தோட்டத்தை ஒரு பெரிய ஆய்வுக்கூடம் போன்று வைத்திருக்கின்றோம். கலாம் பெயரிலேயே அதனை வைத்திருக்கின்றோம்.
ஆகவே, அவருடைய கல்வித் தொண்டும், மனித நேயமும் மிகச் சிறப்பானது.
அவரை நாங்கள், ‘‘பீப்பிள்ஸ் பிரசிடெண்ட்’’ என்று அழைத்தோம். மக்களுடைய அதிபர் என்பதாகும்.
அதேபோன்று, பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் என்பது மக்கள் பல்கலைக் கழகமாகும்.
அப்துல் கலாம் அய்யா அவர்கள், தஞ்சை வல்லத்தில் உள்ள மூலிகைச் செடிகள் மிகவும் அற்புதமாக இருக்கின்றன; அவற்றை ராஜ்டிரபதி பவன் என்று சொல்லக்கூடிய குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அனுப்புங்கள் என்று சொன்னார். அதேபோன்று அங்கே அந்த மூலிகைச் செடிகளை அனுப்பி வைத்தோம்.
ஒவ்வொரு முறையும் எங்களுடைய ‘மெண்டர்’ (Mentor) என்று சொல்லக்கூடிய ஒரு மதியுரைஞர் – எங்களுக்கு வழிகாட்டி.
ஆகவே, என்றைக்கும் அவரைப் போற்றக் கூடிய அளவில் அவர் நினைவைப் போற்றும் வகையில், அவருடைய பெயரை பல இடங்களுக்கு வைத்திருக்கின்றோம்.
அன்புடன் ஆனந்தி: இப்போது ‘திராவிட மாடல் ஆட்சி’ என்று சொல்கிறார்கள் அல்லவா – அதுபோன்று, மாடல் நிறுவனத்தைப் பார்க்கவேண்டும் என்றால், எல்லோரையும் தஞ்சாவூருக்குப் போய் பாருங்கள் என்று அப்துல் கலாம் அய்யா சொல்லக்கூடிய அளவிற்கு உங்கள் நிறுவனத்தை நடத்துகிறீர்கள். ஆறு முறை அங்கே அவர் வந்தார் என்று சொன்னீர்கள். இளைய தலைமுறையினரிடம் கனவு காணுங்கள் என்று சொன்னவுடன், உடனே நினைவுக்கு வருவது அப்துல் கலாம் அய்யா அவர்களைத்தான்.
அவருடைய கொள்கையும், நம்முடைய கொள்கையும் இணையாக இருப்பதால், அருமையான உறவாக அமைந்திருக்கிறது.
பல்கலைக் கழகத்திற்கு யார் வந்தாலும் ஒரு செடியை நடவேண்டும் என்று நீங்கள் ஒரு கொள்கையை வைத்திருந்தீர்கள். இன்றைக்கு அது ஒரு பெரிய சோலையாக இருக்கிறது. அதைப்பற்றிச் சொல்லுங்களேன்?
கரிமில வாயு இல்லாத இடம்!
தமிழர் தலைவர்: எங்களுக்கு ஒரு பெரிய அறைகூவல், சவால் என்னவென்றால், பல்கலைக் கழகம் இருக்கின்ற பகுதியில் உள்ள மண்ணில் ஒரு செடிகூட முளைக்காது என்று பல பேர் சொன்னார்கள் (Abandoned Quarry) முன்பு.
மறைந்த எங்கள் துணைவேந்தர் பேராசிரியர் நல்.இராமச்சந்திரன் மற்றும் பலருடைய கூட்டு முயற்சியால், பெரிய சோலையாக அந்தப் பகுதி ஆயிற்று.
கரிமில வாயு இல்லாத ஒரு மிகப்பெரிய இடம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, நிறைய மரங்கள் இருக்கின்றன. பல்கலைக் கழகத்திற்கு யார் வந்தாலும், ஒரு செடியை நடவேண்டும். அப்படி செடி நட்டவரின் பெயரைப் பொறித்து விடுவோம். அப்படி செய்ததினால், இன்றைக்கு ஒரு பெரிய அளவிற்கு ஒரு பாலைவனம், ஒரு சோலைவனம் போன்று ஆகியிருக்கிறது.
இதன்மூலம் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கக் கூடிய வாய்ப்புகள்; மழைநீர் சேகரிப்புத் திட்டம் – இயற்கையையொட்டி இருக்கக்கூடிய திட்டங்கள் எதுவாக இருந்தாலும், அதனை உடனடியாக செய்வோம். மழை நீர் வீணாகப் போகக்கூடாது என்பதற்காக செயற்கையாகவே ஒரு ஏரியை உரு வாக்கியிருக்கின்றோம்.
உங்களுக்கு வாய்ப்பு ஏற்படும்போது, அங்கே நீங்கள் வந்து பாருங்கள். எங்களால் முடிந்த அளவிற்கு செய்திருக்கின்றோம். இதற்கு அரசாங்க உதவி ஏதும் இல்லை.
பெரும்பாலும் மகளிருக்காகத்தான் வைத்திருந்தோம். பிறகு பல்கலைக் கழகமாக அதனை மாற்றும்பொழுது, அதற்கு அனுமதி கொடுக்கின்ற ஒன்றிய அரசு, இருபாலரும் படிக்கும் வகையில் மாற்றவேண்டும் என்று சொன்னது.
அதனால், 60 சதவிகிதம் பெண்களுக்கும்; 40 சதவிகிதம் ஆண்களுக்கும் என்று ஒதுக்கினோம்.
சுற்றுச்சூழலுக்குப் பெரியார் பல்கலைக் கழகம் அமைந்துள்ள பகுதி பெரிய வாய்ப்பாக அமைந்தி ருக்கிறது.
(நாளை தொடரும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக