சுயமரியாதை இயக்கமும் கோயில் நுழைவும்!
- கி.தளபதிராஜ்
“சுயமரியாதை இயக்கம், நீதிக்கட்சி, திராவிடர் கழகம் என எந்த நிலையிலும் பெரியாரின் முதன்மையான கொள்கை -குறிக்கோள் என்பது, ஜாதி பேதமற்ற மானுட சமுதாயத்தைப் படைப்பதாகவே இருந்திருக்கிறது!”
“மனிதனுக்கு மனிதன் தொடக்கூடாது கண்ணில் படக்கூடாது! கோயிலுக்குள் போகக்கூடாது. குளத்தில் தண்ணீர் எடுக்கக்கூடாது! என்கின்றவை போன்ற கொள்கைத் தாண்டவம் ஆடும் ஒரு நாட்டை பூகம்பத்தால் அழிக்காமலோ எரிமலையின் நெருப்புக் குழம்பால் மூழ்கச் செய்யாமலோ பூமிப் பிளவில் அழியச் செய்யாமலோ சண்ட மாறுதத்தால் துகளாக்காமலோ விட்டிருப்பதைப் பார்த்த பிறகும் கூட கடவுள் ஒருவர் இருக்கிறார் என்றும், அவர் நீதிமான் என்றும், சர்வ தயாபரன் என்றும் யாராவது சொல்ல வந்தால் அவர்களை என்னவென்று நினைப்பது? என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். இம்மாதிரி கொடுமைப்படுத்தி, தாழ்த்தப்பட்ட ஒரு மாபெரும் மக்கள் சமூகம் இன்னும் எத்தனை நாளைக்குத்தான் பொறுமையோடும், சாந்தத்தோடும். அஹிம்சா தர்மத்தோடும் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றீர்கள்? இம்மாதிரியான மக்கள் இன்னும் ஒரு நாட்டில் இருந்து கொண்டு உயிர் வாழ்வதை விட, அவர்கள் இம்முயற்சியில் உயிர் துறப்பதை உண்மையிலேயே தப்பு என்று யாராவது நினைக்கின்றீர்களா?"
இது காங்கிரஸில் இருந்த போதே தீண்டாமைக்கு எதிராக ஒலித்த பெரியாரின் குரல்! 1920ஆம் ஆண்டு திருச்செங்கோட்டில் ஓர் ஆசிரமத்தைத் திறந்து வைக்கும்போது பேசியது.
சுயமரியாதை இயக்கம் - நீதிக்கட்சி- திராவிடர் கழகம் என எந்த நிலையிலும் பெரியாரின் முதன்மையான கொள்கை - குறிக்கோள் என்பது, ஜாதி பேதமற்ற மானுட சமுதாயத்தை படைப்பதாகவே இருந்திருக்கிறது!
கோயில் நுழைவானாலும் கோயிலைச்சுற்றிய வீதிகளானாலும் தாழ்த்தப்பட்டோர் நுழைய உரிமை மறுக்கப்பட்டபோது வெகுண்டெழுந்து போர்க்களம் கண்டவர் பெரியார்.
1924 இல் கேரள மாநிலம் வைக்கத்தில் வைக்கத்தப்பன் கோயிலைச் சுற்றியிருந்த வீதிகளில் ஒடுக்கப்பட்டோர் நுழைய விதிக்கப்பட்ட தடையை உடைத்தெறிந்தவர் பெரியார். போராட்டக் களத்திலும் சிறையிலுமாக வைக்கம் போராட்டத்தில் 174 நாட்கள் பங்கெடுத்தவர்.
குமரி மாவட்டம் சுசீந்திரத்திலுள்ள தாணுமாலய சுவாமி கோயிலைச் சுற்றியுள்ள சாலைகளிலும் இதே நிலைதான். தாழ்த்தப்பட்டோர் நடக்க விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து நடத்திய கிளர்ச்சியால் தடை தகர்க்கப்பட்டது.
1925ஆம் ஆண்டு காரைக்குடியில் காங்கிரஸ் நடத்திய இராமநாதபுரம் மாவட்டம் அரசியல் மாநாட்டில் பேசிய பெரியார்,
“நமது நாட்டில் தீண்டாமை, பார்க்காமை, பேசாமை, கிட்ட வராமை ஆகிய இவை ஒருவரையாவது விட்டவை அல்ல. ஒருவர். தனக்குக் கீழ் இருப்பவரை, தீண்டாதவர். பார்க்காதவர் என்று சொல்வது, அதே நபர் தனக்கு மேல் உள்ளவருக்கு, தான் தீண்டத்தகாதவராகவும், பார்க்கக்கூடாதவர் ஆகவும் இருப்பது மாத்திரமல்லாமல் இவர்கள் இத்தனை பேரும் சேர்ந்து நம்மை ஆளுகிற ஜாதியாய் இருக்கிற அய்ரோப்பியருக்குத் தீண்டத்தகாதவராகவும் கிட்ட வரக்கூடாதவர் ஆகவும் இருந்து வருவதையும் நாம் காண்கிறோம். இந்த முறையில் தீண்டாமை என்பதை ஒழிப்பது என்று சொல்வது பஞ்சமர்களை மாத்திரம் முன்னேற்ற வேண்டும் என்பதல்லாமல் நம் ஒவ்வொருவருக்குள்ளும்
இருக்கும் இழிவையும் கொடுமையையும் நீக்க வேண்டும் என்பதுதான் தீண்டாமை விலக்கின் தத்துவமாகும்!' என்றார்.
('' குடியரசு” 21.6.1925)
1926ஆம் ஆண்டு டிசம்பரில் மதுரையில் நடைபெற்ற பார்ப்பனரல்லாதார் மாநாட்டில், 'இந்துக் கோயில்களில் இந்துக்கள் என்று சொல்லப்படும் எல்லா வகுப்பாருக்கும் பிரவேசத்திலும், பூஜையிலும், தொழுகையிலும் சமவுரிமை உண்டு' என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
('குடிஅரசு' 06.01.1927)
1927 பிப்ரவரி 2ஆம் தேதி திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு சென்ற 'திராவிடன் இதழ் ஆசிரியர் ஜே.எஸ்.கண்ணப்பரை ராமநாதன், குப்புசாமி ஆகிய இரண்டு பார்ப்பனர்கள் கோயிலுக்குள் வைத்து பூட்டினர். மாலை வரை பலரும் வற்புறுத்தியும் கதவு திறக்கப்படவில்லை. நீதிமன்றத்தில் கதவை பூட்டிய பார்ப்பனர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
1927 மே 7,8 தேதிகளில் மயிலாடுதுறையில் நடைபெற்ற தஞ்சை மாவட்ட பார்ப்பனரல்லாதார் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமும் கோயில் நுழைவை வலியுறுத்துவதாக அமைந்தது.
‘பிறப்பினால் உயர்வு தாழ்வு என்று ஏற்படுத்திக் கொண்டிருக்கிற வழக்கமானது நாட்டின் முன்னேற்றத்திற்கும், சுயராஜ்யத்திற்கும் தடையாக இருப்பதால் அந்த ஜாதி வித்தியாசத்தை
விட்டுவிட வேண்டுமென்று பார்ப்பனரல்லாதாரைக் கேட்டுக் கொள்வதுடன், கல்யாணங்களிலும், மற்ற சடங்குகளிலும் பார்ப்பனக் குருக்களை வைத்து நடத்தக் கூடாதெனவும் தாழ்த்தப்பட்டவர்களுக்குச் சமுதாய உரிமை கொடுக்க வேண்டுமெனவும், கோயில்களில் சென்று கடவுள் வழிபாடு செய்யவும் பொது வீதிகளையும், குளம், கிணறுகளையும் எல்லா ஜனங்களும் உபயோகப்படுத்த அனுமதிக்க வேண்டுமென்றும் இம் மாநாடு கருதுகிறது' என்று தீர்மானம் இயற்றப்பட்டது.
(குடிஅரசு' 15.05.1927)
அதே ஆண்டில் மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோயிலில் கி.ஆ.பெ.விசுவநாதம் தலைமையில் ஆயிரம் பேருடன் கோயில் நுழைவுப் போராட்டம் நடைபெற்றது. போராட்டச் செய்தி அறிந்து கோயில் நிருவாகிகள் கோயில் நுழைவு வாயிலையும். கர்ப்பகிரகத்தையும் இழுத்து மூடிவிட்டனர். கதவடைபட்ட போதிலும் கலைந்துவிடவில்லை தோழர்கள்! கோயிலின் பக்கவாட்டுக் கதவுகள் வழியே நுழைந்து எடுத்த காரியத்தைச் செவ்வனே முடித்தனர்!
திருச்சி தாயுமானவர் மலைக்கோயிலில் ஜே.என்.இராமநாதன் தாழ்த்தப்பட்டவர்களுடன் படி ஏறியபோது குண்டர்களால் தாக்கப்பட்டு உருட்டிவிடப்பட்டார்.
('குடியரசு' 6.5.1928)
25.6.1928 இல் திருச்சி மலைக் கோயிலிலும், 20.8.1928இல் திருவாடானை கோயிலிலும் கோயில் நுழைவுப் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. ஈரோட்டில் ஈசுவரன் கோயிலில் தாழ்த்தப்பட்டவர்களோடு நுழைய முற்பட்ட சா.குருசாமி கோவிலுக்குள்ளேயே வைத்து பூட்டப்பட்டார்.
இந்த நிகழ்வுகள் குறித்து பெரியாரே பின்னாளில் ஆற்றிய உரை இன்றளவும் சமூக வலைத்தளங்களில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
'ஈரோட்டிலே நான் தேவஸ்தானக் கமிட்டித் தலைவனாக இருந்த போது, நான் ஊரில் இல்லாத ஒரு நாளில் தோழர்கள் பொன்னம்பலமும், குருசாமியும். இப்போது காங்கிரசுக்காரர்களாக இருக்கும் ஈசுவரனும், எங்கள் ஆபிசிலே வேலை செய்கிற இரு ஆதி திராவிடரை விபூதி பூச சொல்லிப் பூசி கோயில் உள்ளே அழைத்துச் சென்றவுடன் பக்தர்களெல்லோரும் சத்தம் போட்டுக் கோயிலுக்குள் இவர்கள் உள்ளே சென்றதும், அவர்களை உள்ளே விட்டு வெளி கதவுகளை பூட்டி விட்டார்கள். அது குறித்து வழக்கும் போட்டார்கள்! சாமி தீட்டாய்ப் போச்சு என்று வாதாடி தண்டிக்க செய்தார்கள்! பிறகு ஹைக்கோர்ட்டிலே அதற்கு எதிராக தீர்ப்பு கிடைத்தது.
இந்தியாவிலேயே முதன் முதலில் சுசீந்திரம் கோயிலில் தான் கோயில் நுழைவுக்கென்று கிளர்ச்சி தொடங்கப்பட்டது. அந்தக் காலத்திலே கோட்டயத்திலே என் தலைமையில் ஒரு சுயமரியாதை மகாநாடு போட்டார்கள். அதில் ஜாதி ஒழிப்பு சம்பந்தமாகவும், கோயில் நுழைவு உரிமை சம்பந்தமாகவும் பலவிதத் தீர்மானங்களையும் போட்டார்கள்.
அடுத்து, எர்ணாகுளத்தில் ஒரு மாநாடு என் தலைமையில் கூட்டப்பட்டது. அதில் ஜாதி ஒழிப்புக்காக ஜாதியில்லாத மதமாகிய இஸ்லாம் மதத்தில் இந்துக்கள் சேர்ந்து விடுவது என்று தீர்மானம் நிறைவேற்றிக் கொண்டு வரப்பட்டது. இஸ்லாத்தில் சேருவது என்ற தீர்மானம் வந்த அன்றைக்கே அய்ம்பது பேர்களாவது முஸ்லிமாகிவிட்டார்கள். பிறகு வெளியிலும் பலர் மதம் மாறி விட்டார்கள். இது ஒரு பெரிய கலக்கு கலக்கி விட்டது.
இப்படி முஸ்லிமான ஓர் ஆள் (அவர் புலையர் வகுப்பைச் சேர்ந்தவர்) ஆலப்புழையில் ஒரு நாயர் கடையில் கடை மீது ஏறிச் சாமான் கேட்டார் என்பதை வைத்துக் கொண்டு (கடைக்கார நாயர்) ஓங்கி அடித்தான்! அவர் சத்தம் போடவே நாயர்களும் ஓடி வந்தார்கள். சாயபுக்களும் ஓடி வந்து பலமான அடிதடி சண்டை நடந்தது. ஒருவர் செத்து விட்டார். இந்த மாதிரி இந்து-முஸ்லிம் கலவரம் வலுத்தவுடன் மேலே எல்லாம் தந்தி கொடுத்தார்கள். அப்போது திவானாக இருந்த சர் சி.பி.இராமசாமி அய்யர் இதை இந்து-முஸ்லிம் சச்சரவு என்று சொல்லிக் கொள்ளாமல், முதலாளி - தொழிலாளி சண்டை என்று சொல்லி அடக்கி விட்டார்கள்.
பிறகு, மன்னருக்கு சி.பி. இராமசாமி, ஈழவர் புலையர்களெல்லோரும் துலுக்கராக மாறிக் கொண்டிருக்கிறார்கள்; இதற்கு மருந்து கோயிலைத் திறந்து விட்டுவிட வேண்டியதுதான் என்று மனு போட்டார்கள். அப்போது ஆயுசு ஓமம் நடந்து கொண்டிருக்கிறது. ராஜாவும் இதைக் கேட்டு ஒப்புக் கொண்டு பிறந்த நாளுக்கு ஏதாவது நல்ல சேதி ஆண்டுதோறும் சொல்லுவதில் இந்த ஆண்டு ராஜா பிறந்தநாள் செய்தியாக கோயில் எல்லா இந்துக்களுக்கும் திறந்து விடப்படும் என்று அறிவித்தார். இப்படித்தான் அங்கு ஆலய பிரவேச உரிமை கிடைத்தது.
(மார்த்தாண்டம் உரை 8.1.1959)
திருப்பதியில் தாழ்த்தப்பட்டவர் ஒருவர் சாமி கும்பிட்டதற்காக அடித்து துன்புறுத்திய செய்தியை ‘தினமணி’ பதிவு செய்துள்ளது (2101938). அதற்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்பு மதுரை கள்ளழகர் கோயில் வாசலில் நின்று தரிசனம் செய்ததற்காக கனம் முனுசாமி பிள்ளை என்பவரை கோயிலைச் சுத்தம் செய்யச் சொல்லியிருக்கிறார் மதுரை வர்ணாசிரம சங்கத் தலைவர் நடேச சாஸ்திரியார். இது 'இந்து' ஆங்கில நாளேட்டில் வெளியான செய்தி பிள்ளைவாளுக்கே இந்தக் கதி என்றால் தாழ்த்தப்பட்டோர் நிலையைச் சொல்ல வேண்டுமா?
வைக்கம் போராட்டம் முடியும் தறுவாயில் மகாராணியோடு பேச்சுவார்த்தை நடத்த வந்தார் காந்தி. அப்போது ராணி, 'நாங்கள் ரோடுகளைத் திறந்து விடுகிறோம். ஆனால், அதை விட்டவுடன் நாயக்கர் கோயிலுக்குள் போக உரிமை வேண்டும் என்று கேட்டு ரகளை செய்தால் என்ன செய்வது?' என்று கேட்டார். அதற்குப் பதிலளித்த பெரியார்.
“பப்ளிக் ரோடு திறந்து விடுவது சரி! ஆனால், அதை வைத்துக் கொண்டு கோயிலைத் திறந்து விடும்படி கேட்க மாட்டோம் என்று எப்படி நாம் உறுதியளிப்பது? கோயில் பிரவேசம் என்பது காங்கிரசின் இலட்சியமாக இல்லாவிட்டாலும் எனது இலட்சியம் அதுதானே! அதை எப்படி விட்டுக் கொடுக்க முடியும்? வேண்டுமானால் ராணிக்கு ஒரு வார்த்தை சொல்லுங்கள், இப்போதைக்கு அது மாதிரி கிளர்ச்சி எதுவுமிருக்காது; கொஞ்ச நாள் அது பற்றி மக்களுக்கு விளங்கும்படி பிரச்சாரம் செய்து, கலவரத்திற்கு இடமிருக்காது என்று கண்டால்தான் கிளர்ச்சி ஆரம்பிக்கப்படலாம் என்று சொல்லுங்கள்!" என்றார்.
கோயில் நுழைவோடு மட்டுமா நின்றது அவரது போர்க்குரல்? அனைத்து ஜாதியினரையும்
அர்ச்சகராக்கு! என்று அடுத்த குண்டை போட்டார்.பெரியாரை நெஞ்சில் தைத்த முள்ளோடு புதைக்கிறோம்! என்ற முத்தமிழ் அறிஞர் கலைஞர் அதற்கான அசுரத்தை ஏவினார். ஆசிரியர் அவர்கள். சமூகநீதிக் காவலர் தளபதி மு.க.ஸ்டாலின் ஆட்சியில் இப்போது அனைத்துக் கோயில்களிலும் ஒடுக்கப்பட்டோர் நீக்கமற நிறைந்திருப்பதைக் காண்கிறோம்.
ஈராயிரம் ஆண்டு அடிமை வாழ்விலிருந்து மீள சுயமரியாத இயக்கம் கண்ட களங்கள் எத்தனை எத்தனை! சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழாவைச் சென்னையிலே தொடங்கி வைக்கிறார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.
வைக்கம் போராட்ட நூற்றாண்டைத் தொடர்ந்து சுயமரியாதை ஆட்சியில் இயக்க நூற்றாண்டு! வாழ்நாளில் கிடைத்தற்கரிய வாய்ப்புகள் தமிழ்நாட்டின் மூலை முடுக்கெங்கும் காண்கிறோம். சுயமரியாதைக் காற்று சூறாவளியாய்ச் சுழன்றடிக்கட்டும்!
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு தந்தை பெரியார் 146ஆம் ஆண்டு பிறந்த நாள் மலர் 17.09. 2024
விடுதலை மலர்
பக்கம் - (180 - 189)
