வியாழன், 15 ஆகஸ்ட், 2019

முதல் புரட்டு - சமஸ்கிருதம் ஆதி (பொது) மொழியா? - 2

13.8.2019 (செவ்வாய்க்கிழமை) தொடர்ச்சி...


ஹிந்துஸ்தானி


இவ்விதம் சென்றவர்களில் இரானிய ஆரியர்கள் மீண்டும் இந்தியாவுக்குத் திரும்பினர். இது வேத சமஸ்கிருத மொழி இந்தியாவில் நுழைக்கப்படுவதற்குப் பல நூற்றாண்டு களுக்கு முன் நடந்தது. இந்தியா திரும்பிய இந்த ஈரானியர்கள் தாம், இப்போது மேற்கிந்தியாவில் பேசப்படும் ஹிந்தி (பிராக் கிருதி) (ஹிந்துஸ்தானி) மொழியைக் கொண்டு வந்தவர்கள். இவர்கள் வந்ததும், அவ்வட்டாரங்களில் வசித்து வந்த பழங் குடிகளான இந்தோனேஷியர்களைத் தெற்கில், தக்காணத் துக்கும் கிழக்கில் வங்காளக் குடாக்கடல் வட்டாரத்திற்கும் அதற்கப்பாலும் செல்லச் செய்தனர். இவ்வாறாக நெருக்கித் தள்ளப்பட்ட இந்திய - இந்தோனேஷியர்கள் பசிபிக் தீவுகள் வரையிலுள்ள வட்டாரங்களில் குடியேறினர்.

நார்டிக் இனத்தவரும் இந்தியா திரும்பியபோது தங்கள் மொழியையும் கொண்டு வந்தனர். ஆயினும் ஈரானிய, பர்மீரிய, பாரசீக, கிரேக்க மொழிப்பண்புகள் இம்மொழியில் கலந்திருந்தன. இந்தக் கலப்பு மொழிதான் பின்னர் சமஸ் கிருதமெனப்பட்டது.

இந்த சமஸ்கிருத மொழி, பரம்பரை அனாதிகால மொழி யென்றும் (தெய்வ மொழி என்பர் தென்னாட்டுப் பார்ப்பனர்) இலக்கிய வளமிக்கதென்றும் கூறி, அப்போதிருந்து வந்த ஹிந்தி (ஹிந்துஸ்தானி) மொழிகளின் மீது திணிக்கப்பட்டது. இந்தியாவிலிருந்து பழம்பெரும் மொழிகளான இந்தோனே ஷிய மொழியிலிருந்து அடிநாளில் பிறந்த ஹிந்தி (ஹிந்துஸ் தானி)யும், நார்டிக் மொழிகளும் பல்வேறு வட்டாரங்களில் நெடுகப் பேசப்பட்டு பாக்ட்ரியானாவில் சமஸ்கிருதமாக உருமாற்றமும் பெயரும் பெற்றது. மொழி வரலாறுகளில் அறியக் கிடக்கிறது. இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்ட இந்த சமஸ்கிருதமும், ஹிந்தி (ஹிந்துஸ்தானி)யும் அப்போ திருந்த பற்பல இந்திய மொழிகளில் ஊடுருவி முக்கியமாக வடஇந்தியாவில் வழங்கிய மொழிகளை ஆக்கிரமித்துத் தலைமையிடம் கொண்டன.

சமஸ்கிருத மொழிக்கும், நார்டிக் மொழிகளுக்கும் முக்கியமாக கோதிக் மொழிக்கும் நெருங்கிய தொடர்பு காணப்படுகிறது. ஏனெனில், இந்த சமஸ்கிருதமும் நார்டிக் மொழிகளில் ஒன்றேயாகும் என்று டாக்டர் பாப் சுட்டிக் காட்டுகிறார்.

மற்ற மொழிகளைவிட இந்த சமஸ்கிருத மொழிதான் அதிகமாக அயல் மொழிகளின் கலப்பைக் கொண்டு பெரும் உருமாற்றம் பெற்றிருக்கிறது; இருந்தாலும் இதுவும் நார்டிக் மொழிக் குழுவைச் சேர்ந்ததேயாகும்.

இன மனித உட்பிரிவுகள்


தென்கிழக்கு ஆசிய மக்களின் இனப்பிரிவைத் திட்ட வட்டமாகக் கணித்துக் காண்பது கடினமாகவிருந்தாலும் முக்கியமாக முப்பெரும் பிரிவுகளாக பிரிக்கலாம். அவை:-

1. இந்தாஃப்ரிக்கர் (கருப்பர்)

2. துரேனியர் (மஞ்சள் - சிவப்பு)

3. ஆரியர் (மாநிற - வெள்ளை)

இப்போது, இவர்களில் இந்தாஃப்ரிக்கர் முக்கியமாகத் தென்மேற்குப் பசிபிக் தீவுகளிலும், மத்தியாஃப்ரிக்காவிலும், தென்னாஃப்ரிக்காவிலும் (அமெரிக்காவில் இருப்பவர் தவிர்த்து, வசிக்கின்றனர்.

துரேனியர்கள் முக்கியமாக கிழக்கு ஆசியாவிலும், மத்திய ஆசியாவிலும், வடக்கு யூரேஷியாவிலும் (அமெ ரிக்க இந்தியர் தவிர்த்து) வசிக்கின்றனர்.

ஆரியர்கள் முக்கியமாக இந்தியாவிலும், ஈரானிலும் (பாரசீகம்), அய்ரோப்பாவிலும், வடக்காஃப்ரிக்காவிலும், தென்னாஃப்பிரிக்காவிலும் வசிக்கின்றனர்.

இந்தாஃப்ரிக்கன் மொழி, துரேனிய மொழி, ஆரிய மொழி, இந்த இனப்பிரிவினையின் அடிப்படையிலே வந்தவை. ஆயினும் பல்வேறு மாற்றங்களை அடைந்து உள்ளன; அடைந்து வருகின்றன. கெதேயில் குடியேறும் வரை அதாவது கி.மு. 2300 வரை நார்டிக் மக்களின் தெற்கிலே மேற்கு துருக்கிஸ்தானத்தில் துரேனியர்களும் (துருக்கியர்) (சுமேரியர்) (கி.மு.4300 வரை) பின்னர் ஹிட் டைட்சும் (கி.மு.2300 வரை) இருந்தனர். நார்டிக் மக்கள் துவக்க காலத்தில் எண்ணிக்கையில் குறைவாகவிருந்ததால், தங்களைவிட நாகரிக மக்களான சுமேரியர்களின் சம்பந்தத் தையும் கருத்துக்களையும், பழக்க வழக்கங்களையும் கைக் கொண்டனர்.

நார்டிக்குகளும் ஹிட்டைட்சுகளும் கலந்து வாழ்ந்ததன் விளைவாக துரேனிய மொழி, நார்டிக் மொழி சார்பினதாக மாற்றம் பெற்றது. ஹிட்டைட்ஸ் மொழியிலிருந்தும் பல சொற்கள் சுவீகரிக்கப்பட்டன.

நார்டிக்குகளின் படையெடுப்பு


துரேனியர்கள் தெற்கே பரவியபோது, நார்டிக்குகள் தங்கள் தாயகத்தை விட்டு வெளியேறி பாக்ட்ரியானாவில் குடியேறினர். இவ்வட்டார மக்களின் மொழிக்கிணங்க தங்கள் மொழியிலும் மாற்றம் செய்து கொண்டனர். இங்கு வசித்த மக்களின் கலாச்சாரம் இரானிய கலாச்சாரத்தைப் போன்றதே.

இவர்கள் தெற்கு நோக்கிப் படை எடுக்கத் தீர்மானித்த போது இவர்களுடைய மொழி வேதம் சமஸ்கிருதம். கி.மு.1400இல் வடமேற்கிலிருந்து இந்தியாவிற்குள் வந்த போது இந்த வேத சமஸ்கிருத மொழியைத்தான் தங்கள் இலக்கியங்களில் கையாண்டனர். இவர்கள் அடிநாளில் இனங்களாகவும், வகுப்புகளாகவும் பிரிந்திருந்ததாகவும் ஏழு ஆற்று நாட்டில் - (மத்திய ஆசியா) வசித்து வந்ததாகவும் திட்டவட்டமாக அறியக் கிடக்கிறது. இவர்கள் இரு குழுவினராக இருமுறை இந்தியாவில் நுழைந்தனர். இரு குழுவினரும் ஒரே மொழியை இந்தியாவுக்குக் கொண்டு வந்தனர். பின்னவர் மொழியில் பாரசீகம், கிரேக்கக் கலப்படம் அதிகம் இருந்தது. இரண்டாம் படையெடுப்பே பிற்கால வரலாற்றுக்கு முக்கியமானதாகிறது.

கி.மு. 750இல் இவர்கள் காஸ்பியன் கடல் நோக்கி நகர்ந் தனர். பாரசீகத்தில் தடை ஏற்பட்டது. பாரசீகர்கள் தாக்குதல் கள் வலுக்கவே, இவர்கள் தனித்தனிக் கும்பலாகப் பிரிந்து சென்று, தனித்தனித் தலைவர்கள் தலைமையில் தனி இனங் களாகி விட்டனர்.

இந்தப் பிரிவினர்களில் ஒருவரான காஸ்பி சாதியாரின் பெயரடியாகவே காஸ்பியன் கடல் எனப் பெயரிடப்பட்டது. இவர்களில் பெரும்பகுதி கிழக்கே பாமிர் மலைப்பகுதிகளை நோக்கி நகர்ந்தனர்; அங்கிருந்த பழங்குடிகளையும் சிதைத்து ஒடுக்கினர்.

வடகிழக்கு ஈரானில் குடியேறியவர்களில், குடியேறிய இந்த நார்டிக் சாதியார்களில் முக்கியமானவர்கள் ஆரீ-சோராங்மீ-பாஸியானி ஆகியோர்.

ஆரி சாதியார் முதலில் தங்கிய வட்டாரத்திலிருந்த ஆற்றுக்குத் தங்கள் பெயரடியாக ஆரியஸ் நதி என்று பெயரிட்டனர்.

ஆரியர் என்ற சமஸ்கிருத மொழியிலிருந்துதான் ஆரியன் என்ற சொல் தோன்றிற்று. ஆரியன் என்றால் மேல்மக்கள், ஆளும் இனம் என்று பொருள் ஆகியது.

சிதறிய நார்டிக்குகள்


இந்த நார்டிக் இனத்தார் பிற்காலத்தில் பல்வேறு குழு வினராகச் சிதைந்து பல்வேறு வட்டாரங்களில் பரவிய போது அவர்களுடைய அடிநாள் பொதுப் பெயரும் மறைந்தது! தனிப் பிரிவினராகத் தனித்தனிப் பெயர்களிட்டுக் கொண்டனர். பாமீர் வட்டாரத்தில் பாமிரியர்கள், குஷான்கள் என்று பெயர் கொண்டனர். இதுவே பாக்ட்ரியானா நாடு. இதில் புக்காராவும் சேர்ந்தது. இதன் தலைநகர், இப்போது வட ஆஃப்கானிஸ்தானத்திலுள்ள பால்க் என்பது.

தொக்காரி, குஷான்கள், எப்தாலைட்ஸ், சாக்கே, சாக்கி யர் ஊசன் ஆகிய சாதியார் (உட்பிரிவினர்) இணைந்து பெரும் சாம்ராஜ்யத்தை நிர்மாணித்துக்கொண்டனர். இவர் கள் அனைவரும் அடிப்படையில் நார்டிக் மக்களே. பாக்ட் ரியானாவில் குடியேறியவர் வெள்ளை ஹுனர்களெனச் சீனர்களால் அழைக்கப்பட்டனர். இவர்களும் நார்டிக்குகளில் ஒரு பிரிவினரான கோத்திக் இனத்தவர்களேயாவர். இந்தியா வுக்குள் வந்தவர்கள் ஆரிய மொழியினர் என்பதற்கு பல் வேறு சரித்திர ஆதாரங்கள் உள்ளன.

அலெக்சாண்டர் படைஎடுப்புக்குப் பின்னர், அதாவது கி.மு. 701ஆம் ஆண்டு வாக்கில் வடமேற்கு இந்தியாவில் வேத சமஸ்கிருத மொழி செல்வாக்கற்றுப் போயிற்று. இப் போதுள்ள சமஸ்கிருதமொழி அப்போது அங்குக் கிடையாது.

இப்போதைய சமஸ்கிருதம்


குஷான் வம்சத்தைச் சேர்ந்த கனிஷ்கரின் ஆட்சி கி.மு. 53இல் துவக்கமாகிறது. இந்தியாவில் விக்ரம சகாப்தத்தைத் தோற்றுவித்தவர் இந்த கனிஷ்கரே.

மற்றும், அக்காலத்தில் வடஇந்தியாவில் வழங்கி வந்த கிரேஷிய கலாச்சாரங்களையும், கிரேக்க மொழியையும் ஒழித்து, நார்டிக் மொழியை அடிப்படையாகக் கொண்ட இப்போதைய சமஸ்கிருத மொழியைத் தோற்றுவித்தார். இது பழங்குடியினர் சொற்களைக் (பிராக்கிருதம்) கொண்டது. எனவே, இப்போது வழங்கப்படும் சமஸ்கிருத மொழி கி.மு.58இல் தோன்றியதெனலாம்.

கி.பி. 123-153ஆம் ஆண்டுகளில் ஆண்ட இரண்டாவது கனிஷ்கர் பவுத்தர். இவர் காஷ்மீர் வட்டாரங்களில் பவுத்த மதக் கொள்கைகளை தற்கால சமஸ்கிருத மொழியில் எழுதிப் பழங்குடிகளிடையே பரப்பினார்.

இவற்றையெல்லாம் கவனிக்குமிடத்து சமஸ்கிருத மொழி எப்போது பிறந்தது? அதன் அடிப்படை மூலம் என்ன? எம்மொழிகளிலிருந்து பிறந்தது? இது இந்தியாவில் எப்போது எவ்விடம் நுழைக்கப்பட்டது? என்பன, சந்தேக மறத் தெளிவுபடுகின்றன.

இந்த சமஸ்கிருத மொழி பாக்ட்ரியானாவிலிருந்துதான் வந்தது என்று தற்கால அறிஞர்கள் பலர் திட்டமாகக் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

இந்திய சமஸ்கிருத மொழி வரலாறு


இந்தியாவில் நுழைக்கப்பட்ட சமஸ்கிருதமொழி வேதகால சமஸ்கிருதமென்றும், தற்கால சமஸ்கிருதமென்றும் இருவகைப்படும் என்பதும், இவற்றின் பிறப்பு வரலாறும் மேலே தெளிவுப்படுத்தப்பட்டது. அதாவது வெளிநாட்டி லிருந்து இந்தியாவுக்குள் வந்த நார்டிக் ஆரியரால் இறக்குமதி செய்யப்பட்ட மொழி என்பது விளக்கப்பட்டது.

சமஸ்கிருதம் என்ற சொல்லுக்கு, திரட்டித் தொகுத்தது, புதுப்பித்து அமைக்கப்பட்டது என்று பொருள். பழங்கால மொழிகளுக்கும் இந்தப் புதுமொழிக்கும் வேற்றுமை காணவே இப்பெயரிடப்பட்டது. பிராமணீய இந்தியா காலத் தில் வழங்கப்பட்ட சமஸ்கிருதத்திற்கும் அதற்கு முன்னைய கால சமஸ்கிருதத்திற்கும் பல வகைகளிலும் வேற்றுமை காணப்படுகிறது. வேதகால சமஸ்கிருதம், கலைக்கால சமஸ்கிருதத்திலிருந்து பல வகைகளிலும் மாறுபட்டது.

இந்த சமஸ்கிருத மொழி, இந்தோ ஜெர்மனிய அல்லது ஆரிய மொழியிலிருந்து பிறந்த கீழ்க்கோடி வட்டாரப் பிரிவாகும்.

இந்து ஆரியர்கள், வடமேற்கிலிருந்து தான் இந்தியா வுக்குள் வந்தனர் என்பது மக்கள் சரித்திரங்களால் உறுதிப் படுகிறது.

இந்து ஆரியர்கள் கிழக்கு கபூலிஸ்தான் மலை வட்டா ரங்களிலிருந்து பஞ்சாபுக்கும் அதன் பின் யமுனை கங்கை ஆற்று வட்டாரங்களுக்கும் வந்தனர் என்பது அவர்களு டைய பரம்பரை இலக்கிய ஏடுகளிலிருந்தே அறியக் கிடக் கிறது.

வேத ஆரியர்கள், ஈரானிய மக்கள் ஆகிய இரு இனத்தவர்களின் மொழி மத நூல்கள் ஆகியவற்றிற்குள்ள இந்த ஜெர்மனிய குடும்ப சந்ததிகளேயெனவும், இருவரும் முன்னர் சேர்ந்திருந்து பின்னர் பிரிந்தவர்களெனவும் தெளி வாகிறது.

சமஸ்கிருதத்தின் முக்கியத்துவம் பற்றிப் பெரும்பாலும் மிகைப்படுத்திக் கூறப்படுகின்றன. ஆதித் தாய்மொழியின் கலை மகள் இந்த சமஸ்கிருதம் என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம். ஏனெனில், இந்த இனத்தைச் சேர்ந்த மற்ற ஆறு மொழிகளான, ஈரானிய ஹெலினிக், இத்தாலிய - செல்டிக் - ட்யூடர்னிக், லெட்டோஸ்லாவிக் மொழிகளில் இலக்கிய வளமின்மையால் இந்த சமஸ்கிருதம் முக்கியமாகக் கருதப்படுகிறது. இந்த இலக்கியவளமும், ஆங்காங்குப் பல நாடுகளிலுள்ள, தொன்மை மொழிப் புலவர்களின் கூட்டுறவால் ஏற்பட்டதேயாகும். கிரேக்க மொழிக்கும் சமஸ்கிருத மொழிக்கும் அதிக ஒற்றுமை காணப்படுகிறது.

இந்திய எழுத்துக்களின் பிறப்புப் பற்றிய வரலாறு இன்னும் புலனாகவில்லை. அசோகர் காலத்தில் புத்தமத அறமொழிகள் பாலி மொழியிலே பாறைகளிலே செதுக்கப் பட்டிருக்கின்றன. மவுரிய - ஆந்திரா வரிவடிவங்களுக்கு முன்னைய வரிவடிவம் பற்றி விளக்கம் கிடைக்கவில்லை.

எனவே, பிராமணர்கள் எதையும் எழுதவில்லை என்றும், அவர்களுடைய மொழிக்கு அப்போது வரிவடிவம் (எழுத்து இல்லையென்றும், சமஸ்கிருத வரிவடிவம் பிற் காலத்தில் இந்திய மொழி வரிவடிவங்களிலிருந்து அமைத் துக் கொள்ளப்பட்டதே என்றும் தெளிவுபடுகிறது.

ராயல் ஏசியாடிக் சொசைட்டி ஜர்னலின் 14ஆவது பாகத்தில் இந்த மெய்மை தெளிவுறுத்தப்பட்டுள்ளது.

சமஸ்கிருதம் ஒரு மொழியென்றாலும்கூட இது இந்தியா வில் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் ஆட்சி மொழியாகவு மிருந்ததில்லை, பேச்சு மொழியாகவும் இருந்ததில்லை. அக்காலத்தில் ஆண்ட கிரேக்க பாக்ட்ரியானா மன்னர் கியூக்ராடைட்சின் சந்ததியார் நாட்டு மொழியான பிரம்மி மொழியில் தான் நாணயங்களை அச்சிட்டனர். இந்த பிரம்மி எழுத்துக்கள்தான் இப்போது வழங்கப்படும் நகரி - தேவ நகரி எழுத்துக்களுக்குத் தாயாகும். இந்த பிரம்மி மொழியின் அடிநாள் வரலாறு என்ன என்பது இன்னும் கலைஞர்களாலும் கண்டுபிடிக்க இயலவில்லை.

- செவ்வாய்க்கிழமை தொடரும்

-  விடுதலை நாளேடு, 15.8.19

செவ்வாய், 13 ஆகஸ்ட், 2019

முதல் புரட்டு - சமஸ்கிருதம் ஆதி (பொது) மொழியா? - 1

குறிப்பு : இன்று "இந்தியா" தேசம் என்பதிலும் நமது நாட்டிலும் நடந்து வரும் புரட்டு நீண்ட நாளாகப் பார்ப்பனர் கோடிக்கணக்கான மக்களை ஏமாற்றிவரும் இமாலயப்புரட்டும் இந்து மதம், மத ஆதார நூல்கள், மதக்கடவுள்கள், சமஸ்கிருதம், இந்திமொழி அவை பற்றிய பெருமைகள் ஆகியவைகளுமாகும். நீண்ட நாளாகவே நமது நாட்டில் இவை பற்றிய உண்மையை உண்மையாய் அறிந்தவர்கள் மிக அருமை. "அறிந்துள்ள சிலரும் கோழைகள் - சுயநலத்திற்கு எதையும் விற்பவர்கள் ஆக இருந்து வருகிறார்கள்.

எந்த ஒரு நாட்டிலும் இப்படிப்பட்ட புரட்டுகள் இத்தனை நாட்கள் நின்றதில்லை. எந்த ஒரு நாட்டு மக்களும் இப்படிக் காட்டுமிராண்டிகள் போல் ஏமாற்றப்பட்டதில்லை.

ஆகையால், இவைகளைப் பற்றி அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் சிந்தித்து இந்த ஏமாற்றத்திலிருந்து மக்களை வெளியாக்க வேண்டியது இன்றைக்கு அவசியமாகும்.

அரசியலையே முக்கிய காரியமாகக் கொள்வதில் பயனில்லை . முட்டாள்கள் உள்ளவரை அயோக்கியர்கள்தான் எல்லாத் துறையிலும் ஆதிக்கமும் ஆட்சியும் செலுத்துவார்கள். அதுதான் ஜனநாயகமாகும்.

என்ன சொல்லுகிறீர்கள்?

- ஈ.வெ.ரா.

புரிந்துகொள்வீர்!


பழங்காலத்தில் சமஸ்கிருதம் என்பதாக ஒரு மொழி இருந்திருக்கவில்லை. சமஸ்கிருதம் பழங்காலத்தில், பலர் பலவிதமாகப் பேசி வந்த பல மொழிகளிலிருந்த சொற்களைச் சேர்த்து உருவாக்கப்பட்ட ஒரு புது மொழியாகும். சமஸ்த்த ம் + கிருதம் = சமஸ்கிருதம் சமஸ்த்த ம் = யாவும் கிருதம் - சேர்த்துச் செய்தது என்பது பொருள்.

* பார்ப்பனர்கள் சமஸ்கிருத மொழியைப் பேசுவ தில்லை.

* அவர்களது லவுகீக வாழ்க்கையில் உலக வழக் கில் எந்த காரியத்திற்கும் அவர்கள் சமஸ்கிருதத்தைக் காரியத்தில் பயன்படுத்துவதும் இல்லை.

* சமஸ்கிருதம் பார்ப்பனர்களுக்கும், மற்றும் எவர்க்கும் எந்தக் காலத்திலும் தாய்மொழியாக, பேசும் மொழியாக இருந்ததும் இல்லை.

* இப்பார்ப்பனர்களின் மூதாதையர் என்பவர்கள் ஒரு குறிப்பிட்ட நாட்டில் வசித்தவர்கள் அல்ல; அவர்கள் ஒரு குறிப்பிட்ட ஏதாவது ஒரு மொழியையே பேசி வந்தவர்களும் அல்ல.

* அவர்கள் வாழ்ந்த நாடு பல நாடுகள்.

* அவர்கள் பேசிவந்த மொழிகள் பல மொழிகள்.

* இந்த உண்மைகளை ஒரு அளவுக்கு விளக் கவே சமஸ்கிருதம் பற்றிய கட்டுரையில் குறிப்பாகச் சிலவற்றை விளக்குவோம்.

* இதுபோலவேதான் அவர்கள் (பார்ப்பனர்) மத மான இந்துமதமும் ஆதாரமும் அடிப்படையும் இல்லா மல் எதை எதையோ சேர்த்து, கதம்பமாகக் கற்பித்துக் கொண்ட மதமாகும்.

* மற்றும் இது போலவேதான் அவர் (பார்ப்பனர்)களுடைய பல கடவுள்களும் பல நாட்டு மக்கள் காட்டுமிராண்டித் தன்மையில் அவரவர்கள் சவுகரி யத்திற்கு ஏற்ப சமயோசிதம்போல் கற்பித்துக் கொள்ளப் பட்டவைகளை, தாங்களும் அதே தன்மையில் தங்களுக்கும் ஏற்படுத்திக் கொண்டவை ஆகும். இவற்றைப் பற்றிப் பின்னால் விளக்குவோம்.

* பார்ப்பனர்களுக்கு அடிப்படை ஆதாரம் என்பது யாவற்றிற்கும் வேதமாகும். அந்த வேதம் ஒன்றல்ல; பல.

* அவை ஒருவரால் அல்ல; பல பேர்களால் சொல்லப்பட்டவை.

* அந்தப்படிச் சொல்லப்பட்டதும் ஒரு காலத்தில் அல்ல; பல காலங்களில்.

* அவை ஏதாவது ஒரு குறிப்பில் குறித்து வைக்கப்பட்டிருந்தவை அல்ல; வாய்ச் சொல்லில் வாக்கு ரூபமாக இருந்து, அடிக்கடிக் கூட்டியும் குறைத்தும் திருத்தியும் கூறிவந்தவையாகும்.

* அவைகளும் காலத்துக்கு ஏற்பப் பலரால், சமய சந்தர்ப்பங்களுக்கு ஏற்பப் பொருள் கூறப்பட்டு வந்தும், பிறகு அப்பொருளுக்கு ஏற்ப மூலம் மாற்றப்பட்டு வந்தும், இன்றைக்கும் விவாதத்திற்கு நிற்காத முறையில் உருவாக்கப்பட்டதாகும்.

* வேதத்தின் துவக்கமானது செல்வம், பொருள், சுகபோகம் பற்றிய பேராசை இலட்சியமேயாகும்.

* பிறகு, இந்நாட்டுப் பழங்குடி மக்கள் வாழ்க்கை யைப் பார்த்து பொறாமையும் ஆத்திரமும், கொண்டு அவர்களை எதிரிகளாகக் கருதி வசவு கூறிச் சாபம் இடுவதேயாகும்.

* இவைகளுக்கு ஏற்பக் கற்பித்துக் கொண்ட வைதான் வேதத்தில் காணப்படும் தேவர்கள் என்பவர் களுமாகும்.

* அவைகளும் காலத்துக்கு ஏற்பக் கற்பனையும் முக்கியத்துவமும் கொண்டவைதான்.

இவைகளைப் பற்றியும் பின்னால் விளக்குவோம்.

சமஸ்கிருதம்


சமஸ்கிருதம் ஒரு மூல மொழியல்ல;

அது அந்நிய பல நாட்டுக் கதம்ப மொழி

அடிநாளில் (நீண்டநாளுக்கு முன்) மேற்கு மத்திய ஆசியாவில் வாழ்ந்த நார்டிக் ஆரிய மக்கள் பேசிவந்த மொழியே, பலமொழிகள் கலந்து சமஸ்கிருதம் என்ப தாக ஆயிற்று. அதாவது, தங்கள் தாயகத்தின் சுற்று வட்டார எல்லை நாடுகளின் மொழிகளான டர்கிஸ் (Turkse) மொழி, ஈரானிய மொழி - பாக்ட்ரினியாவில் குடியேறிய பின் பர்மீனியன் மொழி ஆகியவற்றிலிருந்து தொகுத்த கதம்பமே சமஸ்கிருத மொழி.

மேற்கு மத்திய ஆசியாவில் வசித்த இந்த ஆரி யர்கள் பாக்ட்ரினியாவிலிருந்து இரு பிரிவாகப் பிரிந்து, கி.மு. 1350ஆம் ஆண்டு வாக்கில் வடமேற்கிந்தியாவில் குடியேறிய போது இந்த சமஸ்கிருத மொழியையும் வடமேற்கிந்தியாவில் புகுத்தினர்.

இவர்கள் வடமேற்கிந்தியாவில் இருமுறை நுழைந் தனர். முதலாவது கி.மு.1400 வேதகாலம்: இரண்டாவது கி.மு. 58இல் பாக்ட்ரினியா, சாக்டியானா நாடுகளில் கிரேக்க - பாரசீக மொழிக் கலைத் தொடர்புகளின் பலனாக இந்த சமஸ்கிருத மொழி மேற்கண்ட பாரசீக - கிரேக்க மொழிக்கலை இலக்கிய இலக்கணங்களையும் தழுவி மேற்கொண்டு திருத்தப்பெற்றது.

மற்றும், சமஸ்கிருத மொழி இந்தியாவின்... லத்தீன்... மொழி என்றும் அழைக்கப்பட்டது. ஆல்பன்கெல்ட் மக்கள் மத்திய தரைக்கடல் வட்டாரங்கள் மீது படை யெடுத்த போது, இத்தாலிய மக்களிடையே இந்த கெல்ட் மக்கள் திணித்த மொழியே லத்தீன்.

மொழிகளின் பிரிவு


மொழிகள், துரானிய மொழிகள் என்றும், ஆரிய மொழிகளென்றும் இருபெரும் பிரிவுகளைக் கொண்டு உள்ளன. சமஸ்கிருதம் ஆரிய மொழியினத்தைச் சேர்ந்தது.

சமஸ்கிருதம் என்ற சொல்லின் பொருள், சுத்தப் படுத்தப்பட்டது அல்லது பலவற்றைச் சேர்த்து உருவ கப்படுத்தப்பட்டது என்பதாகும்.

மேலும் விளக்க வேண்டுமானால், இது ஹிந்துஸ் தானியில் சான்ஸ் கி ரிட் என்று உச்சரிக்கப்படு கிறது. இந்த சமஸ்கிருத மொழியாக்கத்தின் பெரும் பகுதியும், அடிப்படை அமைப்பும் மேற்கு மத்திய ஆசியாவில் வழங்கிய ஆரிய மொழியிலிருந்து எடுத்துக் கொள்ளப் பட்டதாகும். மற்றும், பல நூற்றாண்டுகளாக பல்வேறு நாடுகளில் பல்வேறு மொழிகளுடன் தொடர்பு கொண் டதன் பலனாகப் பிறமொழி அம்சங்கள் பலவற்றை இந்த சமஸ்கிருத மொழியுடன் அவ்வப்போது சேர்த்துக் கொண்டு வந்தனர்.

பொருளுக்கேற்ற பெயர்


வடமேற்கு இந்தியாவில் குடியேறும் வரையில் இந்த ஆரியர்கள், இடைக்காலத்தில் திரிந்த பல்வேறு நாடுகளின் பல்வேறு மொழிக் கலைப்பகுதிகளையும் இச்சமஸ்கிருதத்தில் சேர்த்துக் கொண்டனர். சமஸ்த = எல்லாம்; கிருதி = தொகுக்கப்பட்டது

- என்பதே இதன் பொருள். "என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா" என்ற ஆங் கில மொழிப் பேரகராதியின் 13ஆவது தொகுதியில், சமஸ்கிருத மொழி பிறப்பு வரலாறு, டாக்டர் எச்.ஜுலி யஸ் எக்லிங் என்பவரால் தரப்பட்டுள்ளது.

"சமஸ்கிருத மொழி ஆரிய மொழிகளுடன் கொண் டுள்ள தொடர்பையும், பல அம்சங்களில் கிரேக்க மொழியைப் போன்றிருப்பதையும்" இவர் விளக்கி யுள்ளார்.

டாக்டர் பிரான்ஸ் பாப் என்பவர், கோதிக் மொழி யிலிருந்து பைபிளை வாசித்தபோது கோதிக் மொழியும் சமஸ்கிருத மொழி போன்றே இருப்பதைக் கண்டார்.

சர். மானியர் வில்லியம் என்பவர் தமது சமஸ்கிருத ஆங்கில அகராதியின் (அச்சிட்டது: காலண்டர் பிரஸ்; ஆக்ஸ்போர்டு - 1899) முகவுரையில், "சமஸ்கிருத மொழி; பாக்ட்ரியானா - சாக்டியானா வட்டாரங்களில் தோன்றியது; புக்காவிலோ, ஆக்ஸ்நதி துவக்க வட்டா ரத்திலோ தோன்றியதல்ல" என்று கருத்து வெளியிட் டிருக்கிறார்.

இந்தியாவினுள் நுழைந்த இந்த ஆரியர்கள் கோத்ஸ் (கிதாய்) என்ற நாட்டிலிருந்து வந்தவர்களென் பதும் கோதிக் மொழியைத் தம்முடன் கொண்டு வந்த வர்களென்பதும் பல சரித்திரச் சான்றுகளால் தெளிவு படுகிறது.

பிறந்த விதம்


இந்த கோதிக் மொழியே இடையில் பல்வேறு மாற் றங்கள் பெற்று சமஸ்கிருத மொழியாக உருவெடுத்தது. ஆரியர்கள் மேற்கிந்தியாவின் மீது படையெடுத்து வந்தபோது, இந்தக் கலப்பட சமஸ்கிருத மொழியையும் அங்கிருந்த மக்கள் (ஹிந்து) பால் திணித்தனர். வேத கால சமஸ்கிருதத்திற்கும் இக்கால சமஸ்கிருதத்திற்கும் அதிக வேற்றுமைகள் உள்ளன.

பொய்க் கூற்று


எனவே, இந்த சமஸ்கிருத மொழி அனாதிகால மொழியென்றும், இம்மொழியிலிருந்துதான், இந்தியா வின் பழங்கால மொழிகள் அனைத்தும் உற்பத்தியாயிற் றெனவும் சொல்வது ஆதாரமற்றதாகிறது. ஏனெனில், இந்த மொழி கி.மு. 1500லும் அதற்குப் பின்னரும்தான் உருவாயிற்றென்பது தெளிவாகிறது. இந்தியர்கள் மீது திணிக்கப்பட்ட மொழிகளில் இதுவே கடைசி மொழி. உண்மை இப்படியிருந்தும், தற்கால மொழிகளில் சிலவற்றை இந்த சமஸ்கிருத மொழியிலிருந்து பிறந்ததாகச் சிலர் கூறிக் கொள்கின்றனர்.

இந்த நார்டிக் ஆரியர்களும், ஈரானிய ஆரியர்களும் பல்வேறாகப் பிரிந்து, பல்வேறு திக்குகளில் படர்ந்தனர். இவ்விரு பிரிவினரும் இந்தியாவில் வசித்த இந்தோ னேஷியர் சந்ததிகளே என்றும், இவர்களே வடகிழக்கு நாடுகளில் பரவினர் என்றும் சிலர் கூறுகின்றனர்.

- புரட்டு இமாலயப்புரட்டு நூல்
- வியாழக்கிழமை தொடரும்

-  விடுதலை நாளேடு, 13.8.19

திங்கள், 12 ஆகஸ்ட், 2019

அரிஜனங்களுக்கு ஆலயப் பிரவேசம்! அய்யமார் வயிற்றில் அன்னப் பிரவேசம்!

18.01.1947 - குடிஅரசிலிருந்து...

திருவாங்கூர் மகாராஜாவுக்குப் பகிரங்கக் கடிதம்:

அரிஜனங்களுக்குப் பத்மநாபர் கோவிலைத் திறந்து விட்டதால் அசோக மகாராஜாவுக்குச் சமமானவர் என்று உலகம் முழுவதும் விளம்பரம் பெற்றுக் கொண்ட திருவாங்கூர் மகாராஜாவே, ஓர் விண்ணப்பம்.

சகல விஷயத்திலும் பரம ஏழைகளாகிய அரிஜனங்களுக்கு வெறும் கோயிலை மாத்திரம் திறந்து விட்டு விட்டு, அதே பத்மநாபர் கோவிலுக்குள் தினந்தோறும் இருமுறை ஆயிரக்கணக்கான பிராமணர்களுக்கு மாத்திரம் வடை பாயாசத்தோடு அன்னதானம் செய்து வருவது பத்மநாபரின் பக்தரென்னும் தங்களுக்கு நியாயமாகத் தோன்றுகிறதா?

பிராமணர்கள் அரிஜனங்களை விட ஏழைகளா?  பிராமணர்கள் பட்டினி கிடக்கும் கூட்டத்தைச் சேர்ந்தவர்களா?

தங்கள் ராஜ்யத்தில் திவான் முதலிய சகல உத்தியோகங்களிலும் பிராமணர்களல்லவா அமர்ந்து ஆளும் ஜாதியினராக இருக்கிறார்கள்! படிப்பில் குறைவா? பணத்தில் குறைவா? செல்வாக்கில் குறைவா? எவ்விதத்திலும் ஒரு குறைவுமில்லாத பிராமணர்களுக்கு இன்னும் இந்த அன்னதானம் ஏன்? பசியாயிருப்பவர் களுக்கு அன்னமிடுவதா? அல்லது பசி என்பதே இன்னதென்று தெரியாதவர்களுக்கு அன்ன மிடுவதா?

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தாழ்த்தப் பட்ட மக்களுக்கு திறக்கப்படாத கோவில்களை மகா தைரியத்துடன் அவர்களுக்குத் திறந்து விட்ட தங்களுக்கு அன்னதான விஷயத்திலும் ஒரு மாறுதலைச் செய்வது ஒரு பெரிய காரியமா?

தீண்டாதார்களுக்கு அரிஜனம் என்ற அழகிய பெயரிட்டு விட்டதால் மட்டும் அவர்களுடைய தரித்திரம் நீங்கி விடுமா?

அரிஜனம் என்றால் என்ன அர்த்தம்? கட வுளின் பிள்ளைகள் என்பதல்லவா அர்த்தம்? கடவுளின் பிள்ளைகளுக்கல்லவா பத்மநாபர் முதலிய ஆலயங்களிலும் சர்வ அனுகூலங் களுமிருக்க வேண்டும்? கடவுளின் பிள்ளைகளுக் கில்லாத அன்ன தானம், சைத்தான் (?) பிள்ளைகளுக்கு மாத்திரம் ஏன்?

இப்படிக்கு,

யார்  எழுதினாலென்ன?

 -  விடுதலை நாளேடு, 9.8.19

திராவிடர் கழகத்தின் அடிப்படைக் கொள்கை

அடிப்படைக் கொள்கை




எங்கள் நாட்டில் (திராவிட நாட்டில்) ஒரு பிராமணப் பூண்டோ, ஒரு பஞ்சமப் பூண்டோ , ஒரு சூத்திரப் பூண்டோ இருக்கக் கூடாது; மனிதப் பூண்டுதான் இருக்க வேண்டும். எங்கள் (தி.க.) அரசியல், பொதுவியல், சமுதாய இயல், பொருளாதார இயல் எல்லா வற்றிற்கும் இதுதான் அடிப்படைக் கொள்கை.

('விடுதலை ' 15.10.1947)

- விடுதலை நாளேடு, 12.8.19

வெள்ளி, 2 ஆகஸ்ட், 2019

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (34) : தாழ்த்தப்பட்டோர் உயர்வுக்காக தந்தை பெரியார் கூறியவை!



நேயன்


திரு.ஜெயகர் அவர்கள் தீண்டாமையை ஒழிக்கக்கூடிய ஒரு தீர்மானத்தை பம்பாய் சட்டசபையில் சமீபத்தில் கொண்டு வரப் போவதாகவும் அறிந்து மகிழ்கிறோம். அந்தத் தீர்மானத்திற்கு டாக்டர் அம்பேத்கர் போன்ற பிரமுகர்கள் உதவியாயிருந்து வேலை செய்வார்களெனவும் தெரிகிறது. இவர்களுடைய முயற்சி வெற்றி பெற்று சட்டமும் செய்யப்படுமேயானால், பெண்கள் சமூகத்திற்கு சாரதா சட்டம் எவ்வித பலத்தை அளிக்கின்றதோ அதே மாதிரி தாழ்த்தப்பட்ட மக்கள் விஷயத்தில், இந்தச் சட்டமும் பெரிய பலமாக இருக்கும் என்பதற்கு அய்யமில்லை.

                                                              (‘குடிஅரசு’ 22.12.1929)

இதனால்தான் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் சென்ற 4.1.1945ஆம் தேதி கல்கத்தாவில் தாழ்த்தப்பட்டோர் வாரப் பத்திரிகையான ‘பீப்பிள் ஹெரால்டை’ திறந்து வைக்கையில் ‘ஹிந்துக்கள் புல்லுருவிகள். நாம் உழைக்க அவர்கள் உறிஞ்சித் தின்கிறார்கள். இந்தச் சுரண்டலை நிலைநாட்டும் சுதந்திரம் வந்தாலும் ஒன்றுதான், வராதொழிந்தாலும் ஒன்றுதான்’ என்ற வயிறெரிந்து கூறியிருக்கிறார். இதைக் கண்டு பிறர் இரத்தத்தை உறிஞ்சி வந்த கூட்டம், நகத்தில் அழுக்குப்படாமல் வாழ்ந்து வந்த கூட்டம், கிழிச்ச பஞ்சாங்கத்தையும் காய்ந்த தர்ப்பைப் புல்லையும் கை முதலாகக் கொண்டு வாழ்க்கை நடத்திவரும் கூட்டம் வயிறு எரியத்தான் செய்யும். சீறி விழத்தான் செய்யும்.                                  

    (‘குடிஅரசு’ 6.1.1945)

டாக்டர் அம்பேத்கர் அவர்கள் சமீபத்தில் சென்னைக்கு வந்திருந்தபோது, ‘இன்றைய நிலையில் நமக்கு சுயராஜ்யம் வந்தால் இன்றைய ஆட்சிபோல ஆளும் ஜாதியார்தான் ஆளுவார்களே தவிர, நம் போன்ற அடிமை ஜாதியார் அடிமைகளாகவே ஆளப்படுபவர் களாகவேதான் இருப்போம். ஆதலால், சுயராஜ்ய ஆட்சி இன்றைய ஆட்சியைவிட மேலானதாக இருக்க முடியாது’ என்று சொன்னார். அதாவது, ஒற்றுமையும் கட்டுப்பாடும் உள்ள ஜாதிதான் எந்த சுயராஜ்யத்திலும் ஆட்சி புரியுமென்றும் அதில்லாத மக்கள் எப்படிப்பட்ட சுதந்திர ராஜ்யத்திலும் ஆளப்படும் அடிமை ஜாதியாகத்தான் இருக்க வேண்டியதாகும் என்றும் அருமையாகச் சொன்னார்.

                                                   (‘விடுதலை’ - 26.3.1950)

கோவில்கள் திறக்கப்படுவதாலும், ஓட்டல்கள் தடை நீக்கப்படுவதாலும் மாத்திரம் ஜாதி ஆணவமும், ஜாதி ஆதிக்கமும் ஒழிந்துபோகும் என்ற நினைப்பவர்கள் வடிகட்டிய பைத்தியக்காரர்களே ஆவார்கள். இது ஒரு பித்தலாட்டகரமான காரியம் என்பதோடு பெரிதும் டாக்டர் அம்பேத்கர் கூட்டமாகிய வாயில்லாப் பூச்சிகளை ஏமாற்றும் வித்தையாகும். 15 வருடத்துக்கு முன் ஏமாந்து தனித் தொகுதியை விட்டுக்கொடுத்த அம்பேத்கர் கோஷ்டி இப்போதும் ஏமாந்து போகக்கூடும் என்ற கருதி அம்பேத்கரை வசப்படுத்த வேறு என்ன என்னவோ சூழ்ச்சிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிகிறது. இவர்கள் சூழ்ச்சிகள் எல்லாம் இதுவரை முஸ்லீம்களை என்ன செய்ய முடிந்ததோ, அந்த அளவுக்கத்தான் திராவிடர்களையும், ஆதி திராவிடர்கள் என்பவர்களையும் செய்ய முடியுமே தவிர, ஏமாற்ற முடியும் என்பது இனி நடக்காத காரியமாகும். அம்பேத்கரை சரிப்படுத்திக் கொண்டாலும் அதனால் வடநாட்டு ஷெடியூல்டு வகுப்பார்தான் ஏமாறக்கூடுமே தவிர தென்னாட்டவரை ஏமாற்ற முடியாது.                                                              

    (‘குடிஅரசு’ 25.1.1947)

இந்து மதத்தைச் சாராதவர்களும் இந்து மதத்திற்கு எதிரானவர்களும், இந்து மதப் பற்றுடைய மக்களால் அந்நியர்கள், மிலேச்சர்கள் என்று இழித்துக் கூறக் கூடியவர்களுமாகிய வேற்று மதத்தினர்கள் உயர்சாதி இந்துக்களுடன் தீண்டாமையென்ற வேறுபாடின்றி நெருங்கிப் பழகிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், நீண்ட காலமாக இந்துக்கள் என்றே மதிக்கப்பட்டு வருகின்ற தாழ்த்தப்பட்ட மக்களோ உயர்சாதி இந்துக்களுடன் நெருங்கிப் பழக முடியாதவர்களாகவும் சண்டாளர்கள் என்றும் பலவாறு இகழ்ந்து ஒதுக்கப்பட்டு வருகின்றனர்.

(‘குடிஅரசு’, 8.5.1932)

நான் காங்கிரசிலிருக்கும் போதும்  தீண்டாதார் விஷயத்தைப் பற்றியே அதிகம் உழைத்திருக்கிறேன். வைக்கம் சத்தியாக்கிரகம் என்பதும் தீண்டாமை விலக்குக்காகத்தான் ஏற்பட்டதே தவிர வேறில்லை. 3 வருடத்திற்கு முன் நடந்த ஈரோடு கோவில் பிரவேசம் என்பதும் அது சம்பந்தமான வழக்கும் தீண்டாமை விலக்கு சம்பந்தமாக ஏற்பட்டதே தவிர வேறில்லை.

(‘குடிஅரசு’ 4.12.1932)

உலகம் ஒரு பெரும் புரட்சிக்குத் தயாராகிக் கொண்டு வருகின்றது. அப்புரட்சி வெற்றி பெற்றாலும் தோல்வியடைந்தாலும் தீண்டாமையும் தாழ்த்தப்பட்ட தன்மையும் சமீபத்தில் அழிந்துதான் தீரும்.

(‘குடிஅரசு’ 4.12.1932)

சென்னை சட்டசபைக்கு ஒரு ஆதிதிராவிடரைக்கூட காங்கிரஸ் நிறுத்தவே இல்லை என்பதையும் தானாக எந்தக் கட்சியையும் சேராமல் நிற்கிறவர்களையும் ஆதரிக்காமல், எதிர்த்து தோற்கடித்தார்கள் என்பதையும் முன்னமே எழுதி இருக்கிறோம். ஆகவே காங்கிரசுக்காரர்களை ஒன்று கேட்கிறோம். அதாவது சட்டசபைக்கு நின்ற ஆதிதிராவிடரைக் காங்கிரஸ் திட்டத்தில் கையொப்பமிடும்படியாக யாராவது கேட்டு அவர் மறுத்தாரா? அல்லது அவர் மறுத்திருந்தாலும் வேறு ஆதிதிராவிடர் கிடைக்கவில்லையா?

(‘குடிஅரசு’ 3.2.1935)

ஒரு பெருங்கூட்ட மக்கள் இன்று சமூக வாழ்வில் தீண்டப்படாதவர்களாகவும் மற்றொரு பெருங்கூட்ட மக்கள் சமூக வாழ்வில் சூத்திரர்கள், அடிமைகள், கூலிகள், தாசிமக்கள், இழிமக்கள் என்ற பெயருடன் இருந்து வருகிறார்கள் என்றால் இது மாறுவதற்கு அருகதை இல்லாத சுயராஜ்யம் யாருக்கு வேண்டும்?

(‘குடிஅரசு’ 23.6.1935)

உலகம் ஒரு பெரும் புரட்சிக்குத் தயாராகிக் கொண்டு வருகின்றது. அப்புரட்சி வெற்றி பெற்றாலும் தோல்வியடைந்தாலும் தீண்டாமையும் தாழ்த்தப்பட்ட தன்மையும் சமீபத்தில் அழிந்துதான் தீரும்.


திராவிடர் -_ ஆதிதிராவிடர், திராவிட நாட்டிலுள்ள முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் ஆகிய 4 கூட்டத்தினரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள். ஆதலால் இந்நால்வரும் ஒற்றுமையாய் இருந்து ஆரியத்தை எதிர்த்து நிற்க வேண்டும்.

(‘குடிஅரசு’ 8.9.1940)

திராவிட நாட்டில் திராவிடப் பெருங்குடி மக்கள் அறிவிலும் ஆண்மையிலும் வீரத்திலும் தலைசிறந்து இருந்த மக்கள் இன்று சமுதாயத்தில் நான்காம் ஜாதி, பஞ்சமர் என்றும் ஐந்தாம் ஜாதி என்றும் அதாவது சூத்திரர், அல்லது பிறவி அடிமை ஜாதி என்றும், சண்டாளர் அல்லது ஈகை ஜாதி என்றும் அழைக்கப்படுவதோடல்லாமல், அந்தப்படியே நடத்தப்படுகிற மக்களாகவும் இருந்து வருகிறோம்.

(‘குடிஅரசு’ 12.4.1941)

மதுரைக் கோவிலில் பறையர் முதலியவர்கள் செல்ல சட்டம் அனுமதிக்கப்படுகிறது. அக்கோயிலில் பறையர்களுக்குப் பள்ளிக்கூடம் வைத்தார்களா? பறையரை மேளக்காரராக, பூக்கட்டுபவர்களாக வெளித்துறை சிப்பந்திகளாக நியமித்தார்களா? அனுமதித்த கோவில்களுக்கெல்லாம் பறையர்களை டிரஸ்டியாகப் போட்டார்களா?

(‘விடுதலை’ 29.6.1943)

தீண்டப்படாதார், தாழ்ந்தவர்கள் என்று கொடுமையாக ஒதுக்கி ஒடுக்கப்பட்டுத் துன்புறும் மக்களுக்கும், உயர்ந்த ஜாதியார், கடவுள் முகத்தில் பிறந்தவர்களென்று சொல்லிக் கொள்பவர்களுக்கும் குணத்தினாலும் உருவத்தினாலும் அறிவினாலும் ஏதாவது வித்தியாசமிருக்கின்றதா என்று கேட்கிறேன்.

(‘குடிஅரசு’ 6.1.1945)

(தொடரும்...)

- உண்மை இதழ், ஏப்ரல் 16 -30 .2019