வெள்ளி, 5 ஜூலை, 2024

மதுரை மீனாட்சி அம்மன் ஆலயப் போராட்ட வெற்றியின் ஆதார சுருதி ஆர்.சேஷாச்சலம்!

 

வரலாற்றுச் சுவடு : மதுரை மீனாட்சி அம்மன் ஆலயப் போராட்ட வெற்றியின் ஆதார சுருதி ஆர்.சேஷாச்சலம்!

மே 16 - ஜுன் 15, 2020

1939ஆம் ஆண்டு ராஜாஜியின் ஆலோசனையின் பேரில் மதுரை வைத்தியநாத அய்யர்  அய்ந்து தாழ்த்தப்பட்டவர்களையும், ஒரு நாடார் ஜாதியைச் சார்ந்தவரையும் அழைத்துக் கொண்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் நுழைய முற்பட்டார். இதுவே தமிழகத்தின் முதல் கோயில் நுழைவுப்போராட்டம்!’’ என்று பார்ப்பனப் பத்திரிகைகள் தொடர்ந்து எழுதி வருகின்றன.

தாழ்த்தப்பட்டவர்களுக்கான கோயில் நுழைவுப் போராட்டம் என்பது சிறுசிறு கிளர்ச்சிகளாக 18ஆம் நூற்றாண்டின் இறுதியிலேயே தொடங்கி விட்டது. 1854இல் குமரி மாவட்டம் குமார கோயிலில் நாடார்கள் சிலர் கோயிலுக்குள் நுழைய முற்பட்டு கடும் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறார்கள். 1874, 1897 களில் இதே மீனாட்சி அம்மன் கோயிலிலேயே தீண்டப்படாதவர்கள் என்று சொல்லப்பட்டவர்கள் நுழைய முயற்சி செய்திருக்கிறார்கள். அவர்கள் மீது வழக்குகளும் போடப்பட்டிருக்கிறது. 1917 நவம்பர் மாதம் நெல்லையில் நடைபெற்ற நீதிக்கட்சி  தென்மண்டல மாநாட்டில், கோயிலுக்குள் நாடார்களை அனுமதிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்ககிறது.

1927ஆம் ஆண்டு தந்தை பெரியார் தலைமையிலான சுயமரியாதை இயக்கத் தோழர்கள், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கோயில் நுழைவுப் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

ஜே.என்.இராமநாதன், டி.வி.சுப்ரமணியம், ஜே.எஸ்.கண்ணப்பன் ஆகியோர் பார்ப்பனரல்லாதாரை அழைத்துக் கொண்டு மீனாட்சியம்மன் கோயிலுக்குள் நுழைய முயன்றபோது பெரும் கல்லடிக்கு ஆளாகியதோடு அவர்கள் மீது பல்வேறு வழக்குகளும் போடப்பட்டுள்ளது.

திருச்சி தாயுமானவர் மலைக்கோயிலுக்கு ஜே.என்.இராமநாதன் தாழ்த்தப்பட்டவர்களை அழைத்துக் கொண்டு சென்றபோது, ரவுடிகளால் தாக்கப்பட்டு மலையிலிருந்து அவர்கள் உருட்டிவிடப்பட்ட செய்தி ‘கேசரி’ இதழில் பதிவாகியிருக்கிறது.

திருவண்ணாமலை கோயிலில் நுழைந்த ஜே.எஸ்.கண்ணப்பரை கோயிலுக்குள்ளேயே பூட்டிவைத்தனர். அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில் நீதிபதிகள் அளித்த தீர்ப்பு சுவாரஸ்யமானது. கோயிலுக்குள் அவர்கள் சென்றதில் எந்தத் தவறும் இல்லை. அவர்களை தடுத்ததுதான் சட்டப்படி குற்றம் என்று சொல்லி அந்தச் செயலில் ஈடுபட்ட பார்ப்பனர்கள் இராமநாத சாஸ்திரி, குப்புசாமி குருக்கள் இருவருக்கும் தலா நூறு ரூபாய் அபராதம் விதித்து, அதை போராட்டத்திற்குத் தலைமை வகித்த ஜே.எஸ்.கண்ணப்பரிடம் வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார்கள். இந்தச் செய்தி 6.5.1928 ‘குடிஅரசில்’ வெளியாகி இருந்தது.

மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோயிலில் கி.ஆ.பெ.விசுவநாதம் ஆயிரம் பேருடன் கோயில் நுழைவுப் போராட்டத்தில் ஈடுபட்டார். கோயில் கதவுகளும், கருவறையும் முன் எச்சரிக்கையாக கோயில் நிர்வாகத்தால் பூட்டப்பட்ட நிலையில் பக்கவாட்டில் இருந்த சிறிய நுழைவாயில்கள் வழியாக உள்ளே நுழைந்து திருநாவுக்கரசரின் ‘மணிக்கதவம் தாழ்திறவாய்’ என்ற பாடலை உரக்கப் பாடியிருக்கிறார்கள்.

1928இல் திருவாணைக்காவல் கோயிலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதே ஆண்டு ஈரோடு ஈஸ்வரன் கோயிலுக்குள் குத்தூசி சா.குருசாமி தாழ்த்தப்பட்டவர்களை அழைத்துச்செல்ல முற்பட்டார். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக கோயில் நுழைவுப் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வந்தது நீதிக்கட்சியும், சுயமரியாதை இயக்கமும் தான்.

கோயில் நுழைவுக்கான நீண்ட நெடிய போராட்ட வரலாறு இருக்க 1939இல் வைத்தியநாதஅய்யர் தான் முதன்முதலாக கோயில் நுழைவுப் போராட்டத்தையே நடத்தியதாக தொடர்ந்து உண்மைக்கு மாறான ஒரு செய்தி பார்ப்பன ஊடகங்களால் பரப்பப்பட்டு வருகிறது.

யார் இந்த வைத்தியநாத அய்யர்? கோயில் நுழைவுப் போராட்டத்தை அவர் நடத்த வேண்டிய அவசியம் என்ன? தாழ்த்தப்பட்டவர்கள் மீது அவருக்கு திடீரென்று அக்கறை எப்படி வந்தது?

பெரியார்

1930இல் காந்தி மேற்கொண்ட தண்டி யாத்திரையை அப்படியே தமிழ்நாட்டிலும் நடத்த முயன்றார் ராஜாஜி. காந்தியின் உப்பு சத்தியாகிரகத்தின் மீது நம்பிக்கை இல்லை என்று சொன்ன பெரியார், அதில் கலந்து கொள்பவர்களில் சிலர், தங்கள் மதத்தின் ஆதிக்கத்தையும் வகுப்பின் ஆதிக்கத்தையும் பிரதானமாய் கருதியிருப்பவர்களாக இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

வெள்ளைக்கார சுயநல ஆட்சி ஒழிய வேண்டுமானால், முதலில் மத ஆதிக்கமும், அதன் குருட்டு நம்பிக்கைகளும் ஒழிய வேண்டும்! தீண்டாமை ஒழிய வேண்டும்! பார்ப்பனர் ஆதிக்கம் ஒழிய வேண்டும்! முதலாளித் தன்மை ஒழிய வேண்டும்! என்றார். இந்தச் சூழலில்தான் இராஜாஜி, வேதமந்திரங்கள் ஓத, பார்ப்பனப் பண்டாரங்களின் ஆசியுடன் வேதாரண்யத்திற்கு திருச்சியிலிருந்து சத்தியாகிரகப் பயணத்தைத் தொடங்கினார்.              பெரியார், காந்தியின் தண்டி யாத்திரையை குற்றம் சாட்டியதற்கும் மேலாக, இராஜாஜியின் உப்பு சத்தியாகிரகப் பயணத்தில் அதற்குத் தலைமையேற்க வழி நெடுக பார்ப்பனர்களையே ஏற்பாடு செய்தார் இராஜாஜி. டி.எஸ்.எஸ்.ராஜன், கே.சந்தானம், என முழுக்க முழுக்க பார்ப்பனர்களையே கொண்டிருந்த அந்தப் பட்டியலில் இடம் பெற்றவர்தான் மதுரை வைத்தியநாத அய்யர். .இராஜாஜியின் இந்த ஏற்பாட்டைக் கண்டு, “இன்றைய போராட்டத்தில் தமிழ்நாட்டில் தலைமை வகித்து நடத்துபவர்கள் எல்லாம் பார்ப்பனர்கள் அல்லவா? இந்தப் போராட்டம் ஜாதிக் கொடுமையை ஒழிக்கக் கூடியதாக இருந்தால் இவர்கள் இதில் கலந்து கொண்டிருப்பார்களா? அறிவுள்ள மக்களுக்கு இது விளங்க வேண்டாமா?’’ என்று கேட்டார் பெரியார்.

வைக்கம் போராட்டத்தில் பங்கேற்கச் சென்ற பெரியார், தான் வகித்த காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவியை இராஜாஜியை கவனித்துக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்து வைக்கம் சென்றார். ஆனால் ராஜாஜியோ உப்பு சத்தியாகிரகத்தில் கைதாக நேர்ந்த போது, தலைவர் பதவியை ஏற்க திரு.வி.க தயாராக இருந்த நிலையிலும், அதை சந்தான அய்யங்காரிடம் ஒப்படைத்து விட்டுப் போனார். ஒத்துழையாமைப் போராட்டம் நடைபெற்ற போது கூட தனது தலைமைப் பதவியை சீனிவாச அய்யங்காரிடமோ, ராஜனிடமோ ஒப்படைப்பதிலேயே குறியாக இருந்தார் என்று பெரியார் குறிப்பிட்டிருக்கிறார்.

1922ஆம் ஆண்டு திருப்பூரில் வாசுதேவ அய்யர் தலைமையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கூடியது. பெரியார் அப்போது, பார்ப்பனரல்லாதார் கோயில் நுழைவு தொடர்பாக ஒரு தீர்மானம் கொண்டு வர அது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. திரு.வி.க அந்தத் தீர்மானத்தை ஆதரித்தார். மதுரை வைத்தியநாத அய்யரும், கிருஷ்ணய்யங்காரும் அதைக் கடுமையாக எதிர்த்தனர்.

ஆர்.எஸ்.நாயுடு

1923இல் மதுரை மார்க்கெட் சதுக்கத்தில் ஒரு  காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது. உள்ளூர் பிரமுகரான வைத்தியநாத அய்யர், கூட்டத்திற்குத் தலைமை வகித்தார். சிறப்புரையாற்றிய பெரியார், தாழ்த்தப்பட்டோர் கோயில் நுழைவு பற்றி விரிவாகப் பேசினார்.

நாடார் சகோதரர்களையும், தாழ்த்தப்பட்டவர்களையும் உண்மையான காரணமின்றி ஆலயத்திற்குள் பிரவேசிக்கத் தடுப்பதானது முட்டாள் தனமான காரியம். அவர்கள் பாதம் பட்டதும் சுவாமி மறைந்து விடுமென்றால், சக்தியற்ற அக் கல்லைக் கட்டித் தொழுவதால் என்ன பிரயோஜனம் அடைவீர்கள்? அவர்கள் கொடுக்கும் காணிக்கையை, கட்டளையை வாங்கிக் கொள்கிறோம். அவர்கள் பணம் அக் கடவுளுக்கு ஆகும். அவர்கள் மட்டும் ஆகாதென்றால் என்ன நியாயம்? உங்களுக்கு சுயராஜ்ய தாகம் உண்டு என்றால், நாடு நல்ல நிலைமையை அடைய பிரியம் உண்டு என்றால், எல்லோரும் சமத்துவம் அடைய சம்பந்தம் உண்டு என்றால் இன்றே நாடார் சகோதரர்களை ஆலயத்திற்குள் அழைத்துச்செல்ல தயாராயிருக்க வேண்டும். எந்தத் தடை வரினும் நாம் எதிராடத் தயாராயிருக்க வேண்டும். இல்லாது போனால் நாடார் சகோதரர்கள் ஆலயத்தில் நுழையாதிருக்கும் வரை நாமும் செல்வதில்லை என்று கட்டுப்பாடாய் இருக்க வேண்டும் என்றார்.

இந்த செய்தியை வெளியிட்ட `நாடார் குல மித்திரன்’ பத்திரிகை, ”மாநாட்டில் இறுதியாக உரையாற்றிய வைத்தியநாத அய்யர் இது தொடர்பாக எந்த கருத்தும் தெரிவிக்காததோடு, நாடார் என்ற சொல்லையே உச்சரிக்காதது, நாடார் சமூகத்தினரிடையே பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியது!” என்று எழுதியது. இந்த செய்தி திரு.வி.க வின் வாழ்க்கைக் குறிப்புகள் நூலில் இடம்பெற்றுள்ளது.

ராஜாஜி

1939ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டம் தமிழகமெங்கும் வலுப்பெற்று இருந்த நிலையில், காங்கிரசின் செல்வாக்கு தமிழக மக்களிடம் வெகுவாக சரிந்திருந்தது. எம்.சி.ராஜா கொண்டு வந்த கோயில் நுழைவு மசோதாவை ராஜாஜியின் அமைச்சரவை ஏற்கனவே குழிதோண்டிப் புதைத்திருந்தது. அந்தக் காலச் சூழலில் நடைபெற்ற மதுரை, இராமநாதபுரம் ஜில்லா போர்டு தேர்தல் வெற்றியைக் கருத்தில் கொண்டுதான் இராஜாஜி, பெரியாரால் குள்ளநரி என்று விமர்சிக்கப்பட்ட வைத்தியநாத அய்யரை, மதுரை மீனாட்சி அம்மன் ஆலய நுழைவுப் போராட்டத்தில் இறக்கினார் என்கிறார் திராவிட இயக்க ஆய்வாளர் எஸ்.வி.ராஜதுரை.

வைத்தியநாத அய்யர்

இதில் இன்னொன்றையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. வைத்தியநாத அய்யர் கோயில் நுழைவுப் போராட்டம் நடத்த முயன்ற போது, ஆலய நிர்வாகம் நீதிக்கட்சியைச் சேர்ந்த ஆர்.எஸ்.நாயுடு வசம் இருந்திருக்கிறது. மதுரையில் பிரபலமாக இருந்த நீதிக்கட்சித் தலைவர் பி.டி.ராஜனால் நியமிக்கப்பட்டவர் ஆர்.சேஷாச்சலம் (நாயுடு). அவர் ஆர்.எஸ்.நாயுடு என்று பெரிதும் அழைக்கப்பட்டிருக்கிறார்.காங்கிரஸ்காரர்களால் ஆலய நுழைவுப் போராட்டம் நடத்தப்படும் பட்சத்தில் நிர்வாகம் நிச்சயம் எதிர் நடவடிக்கை எடுக்கும். அதையே தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்கிற தேர்தல் யுக்தியாகக் கூட இந்தப் போராட்டம் இராஜாஜியால் திட்டமிடப்பட்டிருக்குமோ என்று கூட நினைக்கத் தோன்றுகிறது.

ஆனால் அவர்கள் நினைத்தது போல் மீனாட்சி அம்மன் கோயிலில் நுழைந்த தாழ்த்தப்பட்டவர்கள் மீது, எந்த எதிர்ப்பு நடவடிக்கையும் எடுக்கப் படாதது அவர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தையே தந்திருக்க கூடும். நீதிக்கட்சித் தோழர்களும், சுயமரியாதை இயக்கத் தோழர்களும் ஆலய நுழைவுப் போராட்டம் நடத்திய போது கடுமையான தாக்குதலுக்கும் கல்லடிக்கும் ஆளாகி, மலையிலிருந்தெல்லாம் கீழே உருட்டிவிடப்பட்டது போன்று இவர்கள் நடத்தப்படவில்லை. மாறாக ஆர்.எஸ்.நாயுடுவால் அவர்கள் உள்ளே அழைத்துச் செல்லப்பட்டு அவர்களுக்காக பூஜையும் செய்யப்பட்டிருக்கிறது. 

இங்கிலாந்தில் ‘பார் அட் லா’ முடித்த ஆர்.சேஷாச்சலநாயுடு மதுரை திரும்பியதும் நீதிக்கட்சியில் சேர்ந்து பணியாற்ற துவங்குகிறார். தன் பெயரை ஆர்.எஸ்.நாயுடு என மாற்றிக் கொண்டவர், மதுரை நகர சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று 12 ஆண்டுகள் நகரசபைத் தலைவராக பணியாற்றுகிறார். பின் நீதிக்கட்சித் தலைவர் பி.டி.ராஜனால் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாக அதிகாரியாக 1937இல் நியமிக்கப்படுகிறார். அப்போது பார்ப்பனர்களின் ஏகபோக ஆதிக்கத்திலிருந்த நிர்வாகத்தைக் கட்டுக்குள் கொண்டுவர பல்வேறு முயற்சிகளைச் செய்கிறார்.

அர்ச்சகர்கள் கொடுத்து வந்த அர்ச்சனை அனுமதி டிக்கட்டுகளை அலுவலகம் மூலம் வினியோகிக்கச் செய்தார். கோயிலில் இரண்டு இடங்களில் மட்டுமே உண்டியல் வைக்கப்பட்டிருந்த நிலையில் பக்தர்கள் தங்கள் காணிக்கைகளை அர்ச்சகர்களிடம் கொடுப்பதும், சந்நிதியில் போடுவதுமாக இருந்தனர். கோயில் வளாகத்தில் உண்டியல்களை அதிகப்படுத்தி, காணிக்கை முழுதும் நிர்வாகத்திற்கு கிடைக்குமாறு செய்தார்.

கோயிலுக்கு வரும் முக்கியப் பிரமுகர்களை வரவேற்பதைப் பட்டர்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர். அதன் மூலம் தங்கள் செல்வாக்கை உயர்த்திக் கொண்டனர். அந்த வழிமுறை மாற்றி பிரமுகர்கள் வருகை தந்த போது கோயில் நிர்வாகத்தினரை வரவேற்கச் செய்தார்.

மீனாட்சிக்கும் சுந்தரேஸ்வரருக்கும் நடக்கும் பட்டாபிஷேக விழாவின் போது செங்கோல்களை முதன்மைப் பட்டர் எடுத்துச் செல்வதுதான் பழக்கமாக இருந்தது. அதனை மாற்றி அறங்காவலர் அல்லது நிர்வாக அதிகாரி எடுத்துச் செல்லும் முறையைக் கொண்டுவந்தார்.                           கோயில் பேஷ்காராக பார்ப்பனர்களே நியமிக்கப்பட்டு வந்ததற்கு மாறாக பார்ப்பனரல்லாத ஒருவரை பேஷ்காராக நியமித்தார். புதிய பட்டர்கள் தீட்சை பெறும் அதிகாரத்தைப் பட்டர்கள் கையிலிருந்து கோயில் நிர்வாகத்திற்கு மாற்றினார்.

இப்படி பல்வேறு சீர்திருத்தங்களை அவர் செய்து கொண்டிருந்த பொழுதுதான் 1939 ஆம் ஆண்டு ஜூலை 8 ஆம் தேதி சனிக்கிழமையன்று காலை 8.50 மணிக்கு தமிழ்நாடு ஹரிஜன சேவா சங்கத்தைச் சேர்ந்த வைத்தியநாத அய்யரும் அந்த அமைப்பின் செயலர் எல்.என். கோபாலசாமியும் அய்ந்து தாழ்த்தப்பட்டவர்களையும் ஒரு நாடார் இனத்தைச் சேர்ந்தவரையும் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் அழைத்துச் சென்றனர்.

மீனாட்சி அம்மன் கோயில் நுழைவுப் போராட்டத்தின் போது கோயிலில் என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்ள  லண்டன் பேராசிரியர் ஃபுல்லர் எழுதிய ‘தெய்வத்தின் ஊழியர்கள்’ (‘SERVANT OF THE GODDESS by C.J.FULLER) என்ற ஆங்கில நூல் நமக்குப் பேருதவியாக இருக்கிறது.

வரலாற்றில் ஆலயப் பிரவேச நிகழ்வு என்று குறிக்கப்படும் இந்த நிகழ்வில், பி. கக்கன், உசிலம்பட்டி வி. முத்து, மேலூர் பி.ஆர்.பூவலிங்கம், வி.எஸ்.சின்னய்யா, முருகானந்தம் ஆகிய அய்ந்து தாழ்த்தப்பட்டவர்களும் எஸ்.எஸ்.சண்முகம் நாடாரும் மீனாட்சியம்மன் கோயிலுக்குள் நுழைந்தனர். கோயில் நுழைவுக்காக வந்தவர்களை, கோயிலின் நிர்வாக அதிகாரியாக இருந்த ஆர்.சேஷாச்சலம் நாயுடு என்ற ஆர்.எஸ். நாயுடு வரவேற்றுக் கோயிலுக்குள் அழைத்துச் சென்றார்.

அம்மன் சன்னதியில் இருந்த பொன்னுசாமிப் பட்டர், அவர்களுக்கு மாலை அணிவித்துப் பிரசாதம் அளித்தார். அரை மணி நேரத்திற்குப் பிறகு அவர்கள் மீனாட்சி அம்மன் கோயிலை விட்டு வெளியேறினர்.

கோயிலுக்குள் அவர்கள் நுழைந்த அன்று அங்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை. அடுத்த நாள்  ஜூலை 9ஆம் தேதி பிரச்சினை பெரிதாக வெடித்தது. முத்து சுப்பர் என்ற பட்டர் அன்று காலை நேரத்திற்கான பூஜைகளை முடித்துவிட்டு, கோயில் கதவுகளை மூடியவர் பிறகு மாலையில் கோவிலைத் திறக்க வேண்டிய நேரத்தில் திறக்க வில்லை. தாழ்த்தப்பட்டவர்கள் கோயிலுக்குள் நுழைந்ததால் கோவில் தீட்டுப்பட்டுவிட்டதாகவும் அதற்கான சடங்குகளைச் செய்ய வேண்டுமென்றும் வலியுறுத்தினார். நிர்வாக அதிகாரியான ஆர்.எஸ். நாயுடு எவ்வளவோ வலியுறுத்தியும் அந்தப் பட்டர் கோயிலைத் திறக்க அடம் பிடித்தார்.

 

அன்று முறைப்படி வழிபாட்டில் கலந்துகொள்ள வேண்டிய மற்றொரு பட்டரான சாமிநாதப் பட்டரும் வெளியூர் சென்றிருந்தார். இரவு மதுரை திரும்பிய சாமிநாதப் பட்டரிடம் ஆர்.எஸ்.நாயுடு பேசி அவரை தன்வயப்படுத்தி கோயிலில் வழக்கம் போல பணிகளைத் தொடர அறிவுறுத்தினார். சாமிநாதப் பட்டரும் மற்ற பட்டர்களின் எதிர்ப்பைக் கண்டு கொள்ளாமல் ஆர்.எஸ். நாயுடுவுக்கு ஆதரவாகச் செயல்பட முடிவெடுத்தார்.

ஜூலை பத்தாம் தேதியன்று கோவில் கதவுகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு, நடை திறக்கப்பட்டது. முதல் நாள் பூஜைகளும் அன்றைக்கான பூஜைகளும் சாமிநாதப் பட்டரால் வழக்கம் போல் செய்யப்பட்டன. சக பார்ப்பனர்களை அவர் பகைத்துக் கொண்டதால் அவர்கள் தங்களிடமிருந்து சாந்துப் பட்டரை விலக்கி வைத்தனர்.

சாமிநாதப் பட்டர்

கோயில் வளாகத்தைப் பூட்டி, திறக்க மறுத்த முத்து சுப்பர் உள்ளிட்ட மூன்று பட்டர்கள் நிர்வாக அதிகாரியால் இடைநீக்கம் செய்யப்பட்டனர். அதற்குப் பிறகு, கோயிலுக்கு வர மறுத்த பட்டர்கள் படிப்படியாக இடைநீக்கம் செய்யப்பட்டனர். கோயில் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப் பட்டவர்களுக்கு ‘வர்ணாசிரம ஸ்வராஜ்ய சங்கம்` என்ற இந்து அமைப்பு ஆதரவு அளித்தது. இந்த சங்கத்தின் தலைவராக இருந்த என். நடேச அய்யர், ஆர்.எஸ். நாயுடுவின் செயலைக் கடுமையாகக் கண்டித்தார்.

மீனாட்சி அம்மன் கோயில் தீட்டுப் பட்டுவிட்டதாகவும், அதனால் தெய்வங்கள் ஆலயத்தை விட்டே சென்று விட்டது என்றும் கோயிலைச் சுத்தம் செய்து அதற்கான பரிகாரங்களைச் செய்தால் தான் தெய்வங்கள் திரும்ப எழுந்தருள்வார்கள் என்றும் நடேச அய்யர் வலியுறுத்தினார். அதற்காக வழக்கும் தொடரப்பட்டது.

ஜூலை 29ஆம் தேதியன்று காலை நடேச அய்யர் தலைமையில் மீனாட்சி அம்மன் கோவில் முன்பு கூடிய சனாதனிகள், கோயிலில் சுத்தீகரணச் சடங்கைச் செய்ய வேண்டுமென ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதனால், கோயில் கதவுகள் சாத்தப்பட்டதோடு, பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பட்டர்கள் கோயிலுக்குள் நுழையக்கூடாது என்றும் தடை விதிக்கப்பட்டது. தாழ்த்தப்பட்டவர்கள் கோயிலுக்குள் நுழைந்ததற்காக எந்தச் சுத்தீகரணச் சடங்கும் செய்யப்பட மாட்டாது என கோயிலின் நிர்வாக அதிகாரியான ஆர்.எஸ். நாயுடு உறுதியாக மறுத்தார்.  இதுதான் சாக்கென்று நடேசய்யர் வீட்டிலேயே மீனாட்சி கோயிலை அமைந்துள்ளதாகச் சொல்லிப் பட்டார்கள் சிலர் பூஜை செய்து வந்தனர். வசூலை தாங்கள் கைப்பற்றிக் கொள்ளலாம் என்ற எண்ணமாகயிருக்கும்.                     இதற்குப் பிறகு, மீனாட்சி அம்மன் கோயிலில் சுத்தீகரணச் சடங்குகளைச் செய்ய வேண்டுமெனக் கோரி பல வழக்குகள் தொடரப்பட்டன. அவை அனைத்துமே நீதிமன்றத்தால் தள்ளுபடிசெய்யப்பட்டன. 1942இல் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 19 பட்டர்கள் சேர்ந்து மதுரை முன்சீப் நீதிமன்றத்தில் ஒரு வழக்கைத் தொடர்ந்தனர். “கோயிலில் சுத்தீகரணச் சடங்குகளைச் செய்யும் வரை தாங்கள் கோயிலுக்கு வராமல் இருந்தது சரிதான் என்றும் அதற்காக தங்களைப் பணி நீக்கம் செய்தது தவறு என்றும் அவர்கள் வாதிட்டனர்.

1943இல் பட்டர்களுக்குச் சாதகமாக முன்சீப் நீதிமன்றம் ஒரு தீர்ப்பை அளித்தது. ஆனால், மேல் முறையீட்டில் நிர்வாக அதிகாரிக்குச் சாதகமாக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன் பிறகு 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிர்வாக அதிகாரியும் பட்டர்களும் ஒரு சமரச உடன்பாட்டிற்கு வந்தனர்.

அதன்படி, கோயிலில் எந்த சுத்தீகரணச் சடங்கும் செய்யாமல் வேலைக்கு வரவும் நிர்வாக அதிகாரியின் சட்டப்படியான உத்தரவுகளைப் பின்பற்றவும் பட்டர்கள் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நுழைவுப் போராட்டம் ஒரு முடிவுக்கு வந்ததாக அந்தப் புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.

மேற்படி வரலாற்றை அறியும் போது, மதுரை மீனாட்சி அம்மன் ஆலய நுழைவுப் போராட்ட வெற்றியில் வைத்தியநாத அய்யரின் பங்கு என்னவாக இருந்தது? இந்தி எதிர்ப்புப் போராட்டம், ஆலய நுழைவு மசோதா என்று சூடு பிடித்திருந்த சூழலில் அதனைத் தணிப்பதற்காக அரங்கேற்றப்பட்ட நாடகத்தின் ஒரு பாத்திரம் தான் வைத்திய நாதய்யர் ஆர்.எஸ்.நாயுடுவின் பங்கு என்னவாக இருந்தது என்பதை நம்மால் நன்றாகவே உணர முடிகிறது.

ஆலய நுழைவுத் தடை செய்யப்பட்டால் போராட்டம் நடத்தி  காரசாரமாக காட்சியைக் கொண்டு சென்று புகழ்பெற விரும்பிய ராஜாஜி கும்பலுக்கு, ஏமாற்றத்தைக் கொடுத்து கோயில் நுழைவைச் சாத்தியபடுத்தி, அதற்கெதிரானவர்களை நிர்வாக ரீதியாக ஒடுக்கி வெற்றி கண்டவர் என்ற வகையில் மதுரை கோயில் நுழைவு வெற்றியின் ஆதார சுருதியாக நீதிக்கட்சிப் பிரமுகர் ஆர்.எஸ்.நாயுடுவே இருந்திருக்கிறார் என்பதை இதன் மூலம் தெள்ளத் தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது.

நீட்’டை ஒழிக்க நெடும்பயணம்! (2020 ஜனவரி 20ஆம் தேதி நாகர்கோவிலில் தொடங்கி 2020 ஜனவரி 30 சென்னை வரை)

 

நிகழ்வுகள் : ’ நீட்’டை ஒழிக்க நெடும்பயணம்!

பிப்ரவரி 16-29 2020

– மஞ்சை வசந்தன்

‘நீட்’ தேர்வு மற்றும் புதியக்கல்விக் கொள்கையால் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட கிராமப்புற மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள _ ஏற்படவுள்ள பேராபத்துகளை விளக்கி தமிழக மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், பொதுமக்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் தமிழர் தலைவர் ஆசிரியர். பாசிச மத்திய அரசின் மனுதர்ம ஆட்சியின் மக்கள் விரோதச் செயல்பாடுகளையும் அதற்குத் துணைபோகும் அ.தி.மு.க அரசையும் கண்டித்தும், நீட்டை விரட்டியே தீருவோம் என்கிற முழக்கத்தோடு 2020 ஜனவரி 20ஆம் தேதி நாகர்கோவிலில் தொடங்கி 2020 ஜனவரி 30 சென்னை வரை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தொடர் நெடும் பயணத்தை மேற்கொண்டார்கள். அனைத்து இடங்களிலும் கழகத் தோழர்கள் தோழமைக் கட்சி நிருவாகிகள், பொதுமக்கள் பெருந்திரளாகத் திரண்டுவந்து தங்களது ஆதரவைத் தெரிவித்து உரை கேட்டு உணர்வு பெற்றனர்.

சமூக நீதிக்களத்தில் தமிழர் தலைவர் சாதனைகள்:

எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் இட ஒதுக்கீட்டுக்கு ரூ.9000 வருமான வரம்பு ஆணையை கொண்டுவந்த பொழுது அவற்றைத் தொடர்ந்து எதிர்த்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி தோல்வியே காணாத எம்.ஜி.ஆர். அவர்களை நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வியுறச் செய்து (2 தொகுதிகளில் மட்டும்தான் அ.இ.அ.தி.மு.க வெற்றி) எம்.ஜி.ஆரை உணரச் செய்து ரூ.9000 வருமான வரம்பு ஆணையை ரத்து செய்ய வைத்து இடஒதுக்கீட்டை 69 சதவிகிதமாக உயர்த்தக் காரணமான தலைவர், ஆசிரியர் அவர்கள். மத்திய அரசில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டும் இடஒதுக்கீடு இருந்த நிலையில், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு பெற மத்திய அரசால் நியமிக்கப்பட்ட மண்டல் கமிஷன் அறிக்கையை குழிதோண்டிப் புதைத்த நிலையில் தொடர்ந்து இந்தியா முழுவதும் சமூகநீதித் தலைவர்களை ஒருங்கிணைத்து, 42 மாநாடுகள், 16 போராட்டங்களை நடத்தி, சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் காலத்தில் மண்டல் கமிஷன் அறிக்கையை நிறைவேற்றச்செய்து, மத்திய அரசு வேலைவாய்ப்பில் 27% பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்கக் காரணமான சமூகநீதிக் காவலர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

தந்தை பெரியார் காலம் வரை தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 49 விழுக்காடாக இட ஒதுக்கீடு இருந்தது.  தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் காலத்தில் 69 விழுக்காடாக இட ஒதுக்கீடு உயர்வு பெற்றது.  69%  இட ஒதுக்கீட்டுக்கு தமிழகத்தில் ஆபத்து வந்த பொழுது 31சி என்னும் சட்டத்தை தமிழக அரசுக்கு எழுதிக்கொடுத்து சட்டமாக்கி இந்திய அரசியல் சட்டம் 9 ஆவது அட்டவணையில் சேர்ப்பதற்கு முதல்வர், பிரதமர், குடியரசுத்தலைவர் ஆகிய மூன்று பார்ப்பனர்களையும் பயன்படுத்தி தமிழகத்தில் 69% இடஒதுக்கீட்டுக்கு சட்டப் பாதுகாப்பை உருவாக்கிய தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

தந்தை பெரியார் காலத்தில் சமூக நீதிக்காக இந்திய அரசியல் சட்டம் முதல் திருத்தம் செய்யப்பட்டது.  ஆசிரியர் அய்யா அவர்களின் காலத்திலும் சமூக நீதியை பாதுகாக்க அரசியல் சட்டம் திருத்தப்பட்டது.

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட கிராமப்புற மாணவர்களுக்கு எதிராக எம்.ஜி.ஆர் அரசால் கொண்டு வரப்பட்ட நுழைவுத்தேர்வை தொடர்ந்து 21 ஆண்டுகள் எதிர்த்துப் போராடி, டாக்டர் கலைஞர் ஆட்சிக்காலத்தில் தனிச்சட்டத்தை நிறைவேற்றி, நுழைவுத்தேர்வை  ஒழித்து கட்டிய தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

சி.பி.எஸ்.சி பள்ளிகளில் மதிப்பெண் முறைகேடுகள் நடந்து அந்த மாணவர்களுக்கு 5 முதல் 15 வரை கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டதைக் கண்டுபிடித்து நீதிமன்றம் வரை சென்று வெற்றி பெற்று தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட கிராமப்புற மாணவர்களுக்கு ஏற்பட்ட சமூக அநீதியை தடுத்த தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்பட்டு வரும் சூழ்நிலையில் தனியார் துறையிலும் இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்றும், வளர்ச்சி பெற்ற அமெரிக்காவில் கூட தனியார் துறையில் இட ஒதுக்கீடு உள்ள நிலையில் இந்தியாவில் தனியார் துறையில் இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும் என்றும் பல ஆண்டுகளாகப் போராடிவரும் தலைவர் ஆசிரியர் அவர்கள்.

மத்திய அரசில் உயர்ஜாதி ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கப்பட்ட பொழுது இந்தியாவிலேயே முதல் எதிர்ப்புக் குரலைக் கொடுத்து மற்ற தலைவர்களுக்கு வழிகாட்டும் தலைவராகத் திகழ்பவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

நாகர்கோவிலில் நடைபெற்ற ‘நீட்’ தேர்வு எதிர்ப்பு நெடும்பயணம் வரவேற்புப் பொதுக்கூட்டத்தில்  ஆசிரியர் மற்றும் கழகத்தினர்

தூத்துக்குடி நெடும்பயணம்:

நாகர்கோவில் பொதுக்கூட்டம் (20.01.2020)

ஜனவரி 20ஆம் தேதி மாலை 5:30 மணிக்கு விடுதியிலிருந்து பயணக்குழு தோழர்களுடன் ஆசிரியர் அவர்கள் புறப்பட்டு நாகர்கோவில் அறிஞர் அண்ணா விளையாட்டுத்திடல் அருகில் நடைபெற்ற பொதுக்கூட்ட மேடைக்குச் சென்றார். காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவர் இராதாகிருஷ்ணன் சி.பி.அய்.எம் மாவட்டச் செயலாளர் செல்லசுவாமி, சி.பி.அய் மாவட்டச் செயலாளர் இசக்கிமுத்து, ம.தி.மு.க மாவட்டச் செயலாளர் வெற்றிவேல், வி.சி.க தொகுதி பொறுப்பாளர் பகலவன் ஆகியோர் ஆசிரியர் அவர்களுக்கு பயனாடை அணிவித்து வாழ்த்தி வழியனுப்பினார்கள். மாவட்டத் தலைவர் தலைமையேற்றார் மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன், நல்லபெருமாள், ஞா.பிரான்சிஸ், உ.சிவதாணு ஆகியோர் முன்னிலையேற்றார்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிறப்புரையாற்றினார். இளங்கோவன் நன்றி கூறினார். 6:40 மணிக்கு நெல்லை நோக்கிப் புறப்பட்டது பிரச்சாரப் பயணக்குழு.

திருநெல்வேலி பொதுக்கூட்டம் (20.01.2020)

நாகர்கோவிலில் புறப்பட்ட பரப்புரை பயணக்குழு இரவு 8:20 மணிக்கு திருநெல்வேலி சிந்துபூந்துறையில் அமைக்கப்பட்டிருந்த பொதுக்கூட்ட மேடையை வந்தடைந்தது. நீட் எதிர்ப்பு பெரும்பயண வரவேற்பு பொதுக் கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் காசி தலைமையேற்றார். மாவட்டச் செயலாளர்  இராஜேந்திரன் வரவேற்றார். ரெத்தினசாமி, அரியமுத்து, டேவிட் செல்லதுரை, வழக்குரைஞர் வீரன், பொன்ராசு, வேல்முருகன், அய்.ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலையேற்றனர். கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிறப்புரையாற்றினார். இரவு 9:50 மணிக்கு கூட்டம் நிறைவு பெற்றது. திருநெல்வேலி ஆரியாஸ் தங்கும் விடுதிக்கு இரவு 10:00 மணிக்குச் சென்று இரவு உணவுக்குப் பின் ஆசிரியர் ஓய்வெடுக்கச் சென்றார்.

கோவில்பட்டி பொதுக் கூட்டம் (21.01.2020)

21.1.2020 அன்று மாலை 5:30 மணிக்கு கோவில்பட்டி காமராஜர் சிலை அருகில் அமைக்கப்பட்டிருந்த பொதுக் கூட்ட மேடையை வந்தடைந்தார் தமிழர் தலைவர். பொதுக் குழு உறுப்பினர் தமிழரசி தலைமையேற்றார். மாவட்டத் தலைவர் பெரியாரடியான் முன்னிலையேற்றார். மண்டலத் தலைவர் மா.பால்ராசேந்திரம், வெற்றிவேந்தன் தூத்துக்குடி காசி, செல்வராசு ஆழ்வார் பூ.வசந்தகுமார் உள்ளிட்டோர் முன்னிலையேற்றனர். தோழமைக் கட்சித் தோழர்கள் ஆசிரியர் அவர்களை வரவேற்று சிறப்பு செய்தார்கள். மாலை 5:50க்கு உரையை தொடங்க 6:25 வரை  35 நிமிடம் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

செய்தியாளர் சந்திப்பு

கோவில்பட்டி பொதுக்கூட்டம் முடித்து புறப்பட்ட தமிழர் தலைவர் அவர்களை செய்தியாளர்கள் சூழ்ந்து நின்றனர். அவர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்து ‘நீட்’ பரப்புரைப் பயண வெற்றி குறித்து எடுத்துரைத்து 7:35க்கு தமிழர் தலைவர் வாகனம் சாத்தூர் நோக்கிப் புறப்பட்டது.

சாத்தூர் பொதுக்கூட்டம் (21.01.2020)

சாத்தூர் வடக்கு ரத வீதியில் அமைக்கப்பட்ட பொதுக் கூட்ட மேடைக்கு இரவு 7:00 மணிக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வருகை தந்தார்.  விருதுநகர் மாவட்டத் தலைவர் இல.திருப்பதி தலைமையில் பொதுக்குழு உறுப்பினர் வானவில் ம.மணி, ப.க.புரவலர், ந.ஆனந்தம், மாவட்டச் செயலாளர் விடுதலை ஆதவன், சாத்தூர் நகரத் தலைவர் கா.அ.நடராசன் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் பா.அசோக் அனைவரையும் வரவேற்றார்.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் 7:05 மணிக்கு தனது உரையை தொடங்கி 7:30 வரை  30 நிமிடம் சிறப்புரையாற்றினார். ‘நீட்’ தேர்வின் பேராபத்தை பொது மக்கள் உணர்ந்தனர்.

பெரியார் பெருந்தொண்டர்களுக்குப் பாராட்டு

சாத்தூர் பொதுக்கூட்ட மேடை எதிரே அமர்ந்து ஆசிரியர் உரையைக் கேட்டுக் கொண்டிருந்த முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர்கள் சாத்தூர் நடராஜன், அவரது வாழ்விணையர் மற்றும் செல்வம் ஆகியோரை நீண்ட நாள் கழித்து பார்ப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது என தனது உரையில் குறிப்பிட்ட ஆசிரியர் அவர்கள், மேடையை விட்டுக் கீழே இறங்கியதும் அவர்களுக்குப் பயனாடை அணிவித்து நலம் விசாரித்து அவர்களிடம் விடைபெற்று இரவு 7:40க்கு மதுரை நோக்கிப் புறப்பட்டார்; தமிழர் தலைவர்.

மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஆசிரியருடன், கழகத்தினர்

மதுரை பொதுக்கூட்டம் (21.1.2020)

மதுரை, முனிசாலை, ஒபுளா படித்துறையில் அமைக்கப்பட்டிருந்த பொதுக்கூட்ட மேடைக்கு இரவு 9:05 மணிக்கு வந்தடைந்தார் ஆசிரியர் அவர்கள். நிகழ்விற்கு மதுரை மாவட்டச் செயலாளர் முருகானந்தம் தலைமையேற்றார். முன்னாள் மாவட்டச் செயலாளர் க.அழகர் வரவேற்றார். மாவட்டத் தலைவர் முனியசாமி, தென்மாவட்டப் பிரச்சாரக்குழு தலைவர் தே.எடிசன்ராஜா, அமைப்புச் செயலாளர் வே.செல்வம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் தலைவர் வா.நேரு, மண்டலத் தலைவர் பவுன்ராசா, மண்டலச் செயலாளர் நா.முருகேசன், மாவட்ட துணை செயலாளர் சுப.முருகானந்தம், வழக்குரைஞர்கள் கணேசன், சித்தார்த்தன் ஆகியோர் முன்னிலையேற்றனர். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் இரவு 9.20 மணிக்கு தொடங்கி 10 மணி வரை 40 நிமிடங்கள் நீட் தேர்வின் அவலங்கள் பற்றி விளக்கவுரையாற்றினார். பெருந்திரளாக பொது மக்கள் கூடி நின்று ஆசிரியர் அவர்களின் உரையைக் கேட்டுத் தெளிவு பெற்றனர்.

22.01.2020 ஹார்விப்பட்டி இராமசாமி உடல்  மருத்துவக் கல்லூரிக்கு ஒப்படைப்பு

காலை உணவை முடித்து விடுதியிலிருந்து காலை 10:30 மணிக்குப் புறப்பட்டு மருத்துவக் கல்லூரிக்கு வருகை தந்தார் தமிழர் தலைவர். இயக்கத்தின் புரவலர், 60 ஆண்டு கால விடுதலை வாசகர் மதுரை ஹார்விப்பட்டி பெரியார் பெருந் தொண்டர் இராமசாமி அவர்கள் உடலை மருத்துவக் கல்லூரி மருத்துவர்களிடம் கொடையாக வழங்கினார். முன்னதாக நடை பெற்ற இரங்கல் கூட்டத்தில் தமிழர் தலைவர் அவர்கள் இரங்கலுரையாற்றினார். 21.1.2020 அன்று மறைவுற்ற பெரியார் பெருந்தொண்டர் இராமசாமி அவர்களுக்கு மதுரை பொதுக் கூட்ட மேடையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

 

காரைக்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மகளிரணி அமைப்பாளர்களுடன் ஆசிரியர்

காரைக்குடியில் பொதுக்கூட்டம் (22.01.2020)

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மாலை 6:45 மணிக்கு விடுதியிலிருந்து புறப்பட்டு 7:00 மணிக்கு காரைக்குடி அய்ந்து விளக்கு திடலில் அமைக்கப்பட்டிருந்த பொதுக்கூட்ட மேடைக்கு வருகை தந்தார்கள். மாவட்டச் செயலாளர் ம.கு.வைகறை அனைவரையும் வரவேற்றார்.  மாவட்டத் தலைவர் ச.அரங்கசாமி தலைமையேற்றார். மண்டலத் தலைவர் சாமி. திராவிடமணி, மாநில மகளிரணி அமைப்பாளர் மு.சு கண்மணி, மாநில மாணவர் கழகச் செயலாளர் ச.பிரின்ஸ் என்னாரெசு பெரியார், தலைமைக் கழகப் பேச்சாளர் தி.என்னாரெசு பிராட்லா, மண்டலச் செயலாளர் அ.மகேந்திரராசன், மாவட்ட துணைச் செயலாளர் பழனிவேல், சிவகங்கை வழக்குரைஞர் ச.இன்பலாதன், சுப்பையா, ராஜாராம், அனந்தவேல், மாவட்ட துணைத்தலைவர், கொ.மணிவண்ணன், நகரத்தலைவர் ஜெகதீசன் ஆகியோர் முன்னிலையேற்றனர். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் இரவு 7:20 மணி முதல் 8:05 மணி வரை 45 நிமிடங்கள் சிறப்புரையாற்றினார். நகரச் செயலாளர் தி.க.கலைமணி நன்றி கூறினார்.

புதுக்கோட்டை பொதுக்கூட்டம்  (22.01.2020)

இரவு 9:00 மணிக்கு புதுக்கோட்டை நகர எல்லையில் கழக இளைஞரணி தோழர்கள் இருசக்கர வாகனத்தில் ஏராளமானோர் வருகைதந்து பயணக் குழுவினரை வரவேற்று இரவு 9:05 மணிக்கு புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில் அமைக்கப்பட்ட பொதுக்கூட்ட மேடைக்கு வருகை தந்தனர்.  மாவட்டத் தலைவர் கு.அறிவொளி வரவேற்றார், மண்டலத் தலைவர் பெ.இராவணன் தலைமை வகித்தார். மண்டலச்செயலாளர் சு.தேன்மொழி, பொதுக்குழு உறுப்பினர்கள், இரா.புட்பநாதன், இரா.சரஸ்வதி, மாவட்டச் செயலாளர், ப.வீரப்பன், அறந்தாங்கி மாவட்டச் செயலாளர் இளங்கோ, மாவட்டத் தலைவர் க.மாரிமுத்து ஆகியோர் முன்னிலையேற்றனர்.  இரவு 9:20 மணி முதல் 10:00 மணிவரை 40 நிமிடங்கள் ஆசிரியர் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். பெருந்திரளாக பொதுமக்கள் கூடி நின்று தங்களின் ஆதரவை வெளிப்படுத்தினார்கள்.

‘நீட்’ தேர்வு எதிர்ப்பு நெடும் பயணத்தின் போது குழந்தைகளுடன் பேசி மகிழும் ஆசிரியர்.

இரவு  திருச்சி பெரியார் மாளிகை

22.1.2020 இரவு 10:00 மணிக்கு புதுக்கோட்டையில் புறப்பட்டு பயணக் குழுவினர் வரும் வழியில் சாலை ஓரத்தில் வாகனத்தை நிறுத்தி தமிழர் தலைவர் ஆசிரியர் உள்பட இரவு உணவை முடித்து இரவு சரியாக 11:30க்கு திருச்சி பெரியார் மாளிகை வருகை தந்து ஓய்வெடுக்கச் சென்றார் ஆசிரியர்.

கரூர் பொதுக்கூட்டம் (23.1.2020)

23.1.2020 மாலை 6:45 மணிக்கு நான்காவது நாள் பரப்புரைக்காக கரூர் அரசினர் விடுதியிலிருந்து புறப்பட்டு கரூர் குமரன் சிலை முன்பு அமைக்கப்பட்டிருந்த பொதுக்கூட்ட மேடைக்கு 6:55 மணிக்கு வருகை தந்தார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள், மாவட்டச் செயலாளர் ம.காளிமுத்து வரவேற்றார், மாவட்டத் தலைவர் ப.குமாரசாமி தலைமை தாங்கினார், சே.அன்பு, ம.பொம்மன், பொத்தனூர், க.சண்முகம், மு.க. இராஜசேகரன், க.நா.சதாசிவம் ஆகியோர் முன்னிலையேற்றனர். 7:20 மணிக்கு உரையை தொடங்கி தமிழர் தலைவர் 8:05 மணிக்கு நிறைவு செய்தார். மாணவர்கள், பெற்றோர்கள், இளைஞர்கள் பெருந்திரளாகக் கூடி உரையைக் கேட்டு மகிழ்ந்தனர்.  நகரச் செயலாளர் ம.சதாசிவம் நன்றி கூறினார். 8:10 மணிக்கு கரூரிலிருந்து ஈரோடு நோக்கிப் புறப்பட்டார் தமிழர் தலைவர் ஆசிரியர்.

ஈரோடு பொதுக்கூட்டம் (23.1.2020)

23.1.2020 ஈரோடு சூரம்பட்டி நால்ரோட்டில் அமைக்கப்பட்டிருந்த பொதுக்கூட்ட மேடைக்கு இரவு 9:40 மணிக்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மேடை ஏறியவுடன் நேரடியாக உரையைத் தொடங்கி இரவு 10:00 மணிக்கு நிறைவு செய்தார். மாவட்டச் செயலாளர் சிற்றரசு வரவேற்றார்.  மாவட்டத் தலைவர் நற்குணம் தலைமையேற்றார். கோபாலகிருஷ்ணன், த.சக்திவேல், இரா.சீனிவாசன், ந.சிவலிங்கம், ப.காளிமுத்து, த.சண்முகம், ப.பிரகலாதன், பெ.இராஜமாணிக்கம் ஆகியோர் முன்னிலையேற்றனர்.  மணிமாறன் நன்றி கூறினார்.    

                               (தொடரும்)

நிகழ்வு : ‘நீட்’டை ஒழிக்க நெடும்பயணம்

மார்ச் 1-15, 2020

மஞ்சை வசந்தன்

(சென்ற இதழின் தொடர்ச்சி…)

(23.1.2020) இரவு சேலத்தில் வரவேற்பு

ஈரோட்டிலிருந்து புறப்பட்டு வரும் வழியில் சாலை ஓரத்தில் இரவு உணவை முடித்து நள்ளிரவு 1:15 மணிக்கு சேலம் சிறீசாந்த் விடுதிக்கு வருகை தந்த ஆசிரியர் அவர்களை சேலம் தோழர்கள் வரவேற்றனர். பிறகு உறங்கச் சென்றார்கள்.

சேலம் செவ்வாய்ப்பேட்டை

சுயமரியாதை சங்க கூட்டம் சேலம் செவ்வாய்பேட்டை சுயமரியாதைச் சங்கம் உறுப்பினர்கள் கூட்டம் 24.1.2020 அன்று காலை 9:30 மணியளவில் சிறீசாந்த் விடுதி அரங்கில் பழனி புள்ளையண்ணன் அவர்கள் தலைமையில் நடை பெற்றது.  தமிழர் தலைவர் அவர்கள் வழிகாட்டுதல் உரையாடல்களுடன் 10:00 மணிக்கு கூட்டம் நிறைவுபெற்றது.

பெத்தநாயக்கன் பாளையத்தில் வரவேற்பு

10:15 மணிக்கு சேலத்தில் புறப்பட்டு 11:00 மணிக்கு பெத்தநாயக்கன் பாளையம் வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு மாநில இளைஞரணி துணைச் செயலாளர் அ.சுரேசு தலைமையில் அனைத்துக் கட்சியினர் பேண்ட் வாத்தியம் முழங்க வரவேற்றனர்.

கழகக் கொடியேற்றுதல்

பெத்தநாயக்கன் பாளையம் கடை வீதியில் அமைக்கப்பட்டிருந்த கழக இலட்சியக் கொடியை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் முற்பகல் 11:20 மணிக்கு ஏற்றிவைத்தார்கள். அங்கும் பொதுமக்கள் கூடி நின்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை வரவேற்று மகிழ்ந்தனர்.

 ஆத்தூர்

24.1.2020 நண்பகல் 12:30 மணிக்கு ஆத்தூர் ராமகிருஷ்ணா ரெசிடென்சிக்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை ஆத்தூர் கழக பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் குடும்பத்துடன் சந்தித்து உரையாடி மகிழ்ந்தனர்.

மாலை 6:10க்கு விடுதியிலிருந்து புறப்பட்ட தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பெரியார் பெருந்தொண்டர் ஆத்தூர் தங்கவேல் வாழ்விணையரைச் சந்தித்து உடல் நலம் விசாரித்து விடைபெற்றார்.

ஆத்தூர் பொதுக்கூட்டம் (24.1.2020)

ஆத்தூர் பழைய பேருந்து நிலையம் அருகில் அமைக்கப் பட்டிருந்த பொதுக்கூட்ட மேடைக்கு 6:20 க்கு வருகை தந்தார்.  தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை மாவட்டச் செயலாளர் நீ.சேகர் வரவேற்றார். மாவட்டத் தலைவர் த. வானவில் தலைமையேற்றார். பெ.சோமசுந்தரம், சி.சுப்ரமணியன், விடுதலை சந்திரன், வெ. அண்ணாத்துரை, திவாகர், வீராச்சாமி ஆகியோர் முன்னிலையேற்றனர். உ.செல்வன் நன்றி கூறினார். 7:10 மணி முதல் 8:05 வரை 55 நிமிடங்கள் தமிழர் தலைவர் ஆசிரியர்அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.  பல்வேறு ஆதாரங்களுடன் கூடிய ஆசிரியர் அவர்களின் உரையை பெருந்திரளாக பொது மக்கள் கூடி கேட்டனர்.

எடைக்கு எடை நாணயம்

நீட் எதிர்ப்புப் பரப்புரை மேற்கொண்டு ஆத்தூர் வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு ஆத்தூர் கழக இளைஞரணித் தோழர்களால் பொதுக்கூட்ட மேடையில் பொது மக்களின் வாழ்த்து-களிடையே எடைக்கு எடை நாணயம் வழங்கப்பட்டது. நாணயத்தைப் பெற்றுக்-கொண்ட ஆசிரியர் அவர்கள் எனது எடைக்கு மேலாக வழங்கப்பட்ட நாணயம் ரூ.16,000 திருச்சியில் இயங்கி வரும் நாகம்மையார் குழந்தைகள் காப்பகத்திற்கு வழங்கப்படும் என அறிவித்தார்.

இளைஞர்கள் கழகத்தில் இணைந்தனர்

ஆத்தூர் பொதுக்கூட்ட மேடையில் தோழர் இளமாறன் அவர்கள் தலைமையில் 20 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆசிரியர் அவர்கள் முன்னிலையில் இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். அவர்களிடத்தில் விடைபெற்று இரவு 8:10க்கு கல்லக்குறிச்சி நோக்கிப் புறப்பட்டார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.

கல்லக்குறிச்சியில் வரவேற்பு

ஆத்தூர் பொதுக்கூட்டம் முடிந்து கல்லக்குறிச்சிக்கு வருகை தந்த ஆசிரியர் அவர்களுக்கு இரவு 9:05க்கு மண்டலத் தலைவர் க.மு.தாஸ் அவர்கள் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.  தோழர்கள் பயனாடை அணிவித்து மகிழ்ந்தனர்.

கல்லக்குறிச்சி பொதுக்கூட்டம் (24.1.2020)

கல்லக்குறிச்சி மந்தவெளி பொதுக்கூட்ட மேடைக்கு 24.1.2020 இரவு 9:10 மணிக்கு வந்தடைந்தார் தமிழர் தலைவர் அவர்கள். மாவட்டச் செயலாளர் கோ.சா.பாஸ்கர் வரவேற்றார். மாவட்டத் தலைவர் ம.சுப்பராயன் தலைமையேற்றார். பொன்.ராமகிருஷ்ணன், க.மு.தாஸ், குழ.செல்வராசு, த.பெரியசாமி, து.சுந்தரராசன் உள்ளிட்டோர் முன்னிலை யேற்றனர். 9:15 மணி முதல் 10:00 மணி வரை தமிழர் ஆசிரியர் அவர்கள் 45 நிமிடங்கள் சிறப்புரையாற்றினார்கள். முத்துசாமி நன்றி கூறினார்.

பெரம்பலூரில் வரவேற்பு

6ஆவது நாள் பரப்புரைப் பயணம் மேற்கொண்டு 25.1.2020 மாலை 5:30 மணிக்கு திருச்சி பெரியார் மாளிகையிலிருந்து புறப்பட்டு பெரம்பலூர் வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு மாலை 6:50 மணியளவில் பெரம்பலூர் மூன்று ரோட்டில் தி.மு.க பொறுப்பாளர் முகுந்தன் தலைமையில் தி.மு.க, தி.க, வி.சி.க தோழர்கள் பயனாடை அணிவித்து உணர்ச்சி மிக்க வரவேற்பு அளித்து இருசக்கர வாகனங்களில் முன்னே அணிவகுத்து சென்றனர்.

பெரம்பலூர் பொதுக்கூட்டம் (25.1.2020)

பெரம்பலூர் தேரடியில் அமைக்கப்பட்டிருந்த பொதுக் கூட்ட மேடைக்கு மாலை 7:00 மணிக்கு வருகை தந்தார் ஆசிரியர் அவர்கள், நகரத் தலைவர்  ஆறுமுகம் வரவேற்றார். மாவட்டத் தலைவர் சி.தங்கராசு தலைமையேற்றார் மண்டலத் தலைவர் காமராஜ் தி.மு.க பொதுக்குழு உறுப்பினர் கி.முகுந்தன் கழக பொதுக்குழு உறுப்பினர்கள், ப.ஆறுமுகம், இரா.அரங்கராசன், சா.தங்கபிரகாசம், ஆதிசிவம், அண்ணாத்துரை, பெ.துரைசாமி ஆகியோர் முன்னிலையேற்றனர் 7:15 மணி முதல் 7:55 வரை 40 நிமிடங்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் “நீட்’’டின் அவலங்களை எடுத்துரைத்து உரையாற்றினார்-கள். அனைத்துக் கட்சித் தோழர்கள், பொதுமக்கள் பெருந்திரளாக கூடி நின்று உரையைக் கேட்டுத் தெளிவு பெற்றனர். மு.விசயேந்திரன் நன்றி கூறினார்.

செய்தியாளர்கள் சந்திப்பு

பெரம்பலூர் பொதுக்கூட்டம் முடிந்து புறப்பட்ட தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அங்குக் கூடியிருந்த செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்து நீட் பரப்புரைப் பயண நோக்கங்களை விளக்கி பேட்டியளித்தார். அனைவரிடமும் விடைபெற்று இரவு 8:00 மணிக்கு அரியலூர் நோக்கிப் புறப்பட்டார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.

அரியலூர் பொதுக்கூட்டம் (25.1.2020)

25.1.2020 இரண்டாவது கூட்டம் அரியலூர் ஆயிரங்கால் மண்டப வீதியில் அனிதா நினைவரங்கத்தில் எழுச்சியுடன் நடந்தது. மாவட்டச் செயலாளர் க.சிந்தனைச்செல்வன் அனைவரையும் வரவேற்றார். மாவட்டத் தலைவர் விடுதலை நீலமேகம் தலைமையேற்றார் மாநில இளைஞரணிச் செயலாளர் த.சீ.இளந்திரையன் மண்டலத் தலைவர் சி.காமராசு, மண்டலச் செயலாளர் சு.மணிவண்ணன், இரத்தின.இராமச்சந்திரன் தங்க.சிவமூர்த்தி, சி.சிவக்கொழுந்து, பேராசிரியர் தங்கவேலு பொறியாளர் இரா.கோவிந்தராசன் உள்ளிட்டோர் முன்னிலையேற்றனர் இரவு 8:50 மணிக்கு மேடைக்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் 9:05க்கு  தொடங்கி 9:55 வரை 50 நிமிடங்கள் உரையாற்றினார், நீட் என்ற தேர்வால் அனிதா உள்பட நமது பிள்ளைகளை எத்தனை பேரை இழந்துள்ளோம்; நீட்டை விரட்டும் வரை நமது போராட்டம் ஓயாது. பொதுமக்கள் வீதிக்கு வந்து போராடத் தயாராக வேண்டும் என அழைப்பு விடுத்து உரையாற்றினார். பெருந்திரளாக மக்கள் கூடிநின்று ஆசிரியர் உரையைக் கேட்டுத் தெளிவு பெற்றனர். ஒன்றியச் செயலாளர் மு.கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.

இரவு வல்லத்தில் ஓய்வு

அரியலூர் கூட்டம் முடித்து இரவு 10:00 மணிக்கு தோழர்களிடம் விடைபெற்று புறப்பட்ட தமிழர் தலைவர் ஆசிரியர் மற்றும் பயணக் குழுவினர் இரவு 11:15 மணிக்கு தஞ்சை வல்லம் வந்தடைந்தனர்.

தோழர்கள் சந்திப்பு (26.1.2020)

26.1.2020 அன்று காலை 10:00 மணியளவில் தஞ்சை மாவட்டம் உரத்தநாடு ஒன்றியம் ஒக்கநாடு மேலையூர் கிளைக்கழகத் தோழர்கள், பொறுப்பாளர்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களைச் சந்தித்து நலம் விசாரித்து ஒக்கநாடு மேலையூரில் நடைபெறும் மன்னை நாராயணசாமியின் 100ஆம் ஆண்டு விழா, நீட் எதிர்ப்பு கிராமப்புற வட்டார மாநாட்டு அழைப்பிதழ்களை வழங்கி மகிழ்ந்தனர். அனைவரிடமும் விடைபெற்று முற்பகல் 11:00 மணிக்கு மயிலாடுதுறை நோக்கிப் புறப்பட்டார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.

மயிலாடுதுறை பொதுக்கூட்டம் (26.1.2020)

மயிலாடுதுறை தங்கும் விடுதியிலிருந்து மாலை 6:30 மணிக்குப் புறப்பட்ட தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள், 6:40 மணிக்கு 7ஆவது நாள் முதல் கூட்டமான மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில் அமைக்கப்பட்ட கூட்ட மேடைக்கு வருகை தந்தார். மாவட்டச் செயலாளர் கி.தளபதிராஜ் வரவேற்றார்.  மாவட்டத் தலைவர் குடவாசல் குணசேகரன் தலைமையேற்றார்.  மண்டலத் தலைவர் ச.மு.ஜெகதீசன், மாவட்ட துணைச் செயலாளர் கட்பீஸ் கிருஷ்ணமூர்த்தி மாவட்ட அமைப்பாளர் நா.சாமிநாதன் நகரத் தலைவர் சீனிமுத்து, நகரச் செயலாளர் அரங்க. நாகரத்தினம் ஆகியோர் முன்னிலை யேற்றார்கள். கழகத் துணைத்தலைவர் கவிஞர். கலி.பூங்குன்றன் வருகை தந்து நீட் பரப்புரைப் பயணத்தை தமிழர் தலைவர் மேற்கொள்வதன் அவசியம் குறித்து உரையாற்றினார்.  இரவு 7:00 மணி முதல் 7:55 மணி வரை 55 நிமிடங்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் விளக்கவுரையாற்றினார்கள். பெருந்திரளாக பொதுமக்கள் கூடி நின்று உரையைக் கேட்டு விழிப்புணர்வு பெற்றனர். அனைவரிடமும் விடை பெற்று இரவு 8:00 மணிக்கு சிதம்பரம் நோக்கிப் புறப்பட்டார் ஆசிரியர். கா.அருள்தாஸ் நன்றி கூறினார்.

சிதம்பரம் பொதுக்கூட்டம் (26.1.2020)

சிதம்பரம் போல் நாராயணதெருவில் அமைக்கப்பட்டிருந்த பொதுக்கூட்ட மேடைக்கு இரவு 9:05 மணிக்கு தமிழர் தலைவர் வருகை தந்தார்கள். மாவட்டச் செயலாளர் அன்பு.  சித்தார்த்தன் வரவேற்றார்.  மாவட்டத் தலைவர் பேரா.பூ.சி.இளங்கோவன் தலைமையேற்றார். மண்டலத் தலைவர் அரங்க. பன்னீர்செல்வம், மண்டல செயலாளர் சொ.தண்டபாணி, மாவட்டத் துணைத்தலைவர் கோவி.பெரியார்தாசன் மாவட்ட இணைச் செயலாளர் சி.யாழ்திலீபன், மாநில இளைஞரணிச் செயலாளர் த.சீ.இளந்திரையன், விருத்தாசலம் மாவட்டத் தலைவர் அ.இளங்கோவன், கடலூர் மாவட்டச் செயலாளர்  நா.தாமோதரன், மாவட்ட துணைச் செயலாளர் கா. கண்ணன், மாவட்ட அமைப்பாளர் கு.தென்னவன் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ப.வெற்றிச்செல்வன் ஆகியோர் முன்னிலை யேற்றனர். தி.மு.க. மாவட்ட செயலாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நீட் பயணம் மேற்கொண்டுவரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை வாழ்த்திப் பேசினார். இரவு 9:20 மணி முதல் 10:00 மணி வரை 40 நிமிடங்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிறப்புரையாற்றினார். சிதம்பரம் நகர கழகத் தலைவர் கோவி.குணசேகரன் நன்றி கூறினார்.

இரவு புதுச்சேரியில் வரவேற்பு

26.1.2020 அன்று சிதம்பரம் கூட்டம் முடித்து பயணக் குழுவினருடன் புதுச்சேரி நோக்கி இரவு 10:05 மணிக்கு புறப்பட்டார் தமிழர் தலைவர், வழியில் கடலூரில் பெட்ரோல் பங்கில் வாகனத்தை நிறுத்தி இரவு உணவு முடித்து மீண்டும் பயணத்தைத் தொடர்ந்து நள்ளிரவு 12:30 மணிக்கு புதுச்சேரி அண்ணாமலை தங்கும் விடுதிக்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு புதுச்சேரி மண்டலத் தலைவர் இர.இராசு, மண்டலச் செயலாளர் கி. அறிவழகன், இளைஞரணித் தலைவர் தி. இராஜா உள்ளிட்ட கழகத் தோழர்கள் வரவேற்றனர். புதுச்சேரி மாநிலத் தலைவர் சிவ. வீரமணி சிதம்பரத்திற்கே வருகை தந்து தலைவரை வரவேற்று அழைத்துச் சென்றார்கள். இரவு 1:00 மணியளவில் ஓய்வெடுக்கச் சென்றார் தமிழர் தலைவர் அவர்கள்.

புதுச்சேரி பொதுக்கூட்டம் (27.1.2020)

27.1.2020 அன்று எட்டாம் நாள் பயணமாக மாலை 6:40க்கு அண்ணாமலை விடுதியில் இருந்து புறப்பட்டு புதுச்சேரி அவ்வைத்திடல் சாரம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பொதுக்கூட்ட மேடைக்கு 6:45க்கு வருகை தந்தார் தமிழர் தலைவர் ஆசிரியர். புதுச்சேரி மண்டலத் தலைவர் இர. இராசா வரவேற்றார்.  புதுச்சேரி மாநிலத் தலைவர் சிவ.வீரமணி தலைமையேற்றார்.  மண்டலச் செயலாளர் கி. அறிவழகன், பொதுக்குழு உறுப்பினர் கோ. கிருஷ்ணமூர்த்தி, இரா. சடகோபன், கு. ரஞ்சித் குமார், ந. நடராசன், வீர. இளங்கோவன், லோ. பழனி, இரா. விலாசினிராஜ், அ. எழிலரசி, மு. ஆறுமுகம் உள்ளிட்டோர் முன்னிலை-யேற்றனர்.  மாலை 7:00 மணிமுதல் 7:55 வரை 55 நிமிடங்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை நிகழ்த்தினார்கள்.  முதுகெலும்புள்ள புதுச்சேரி அரசையும் அதன் ஆற்றல்மிகு முதல்வர் மாண்புமிகு நாராயணசாமி அவர்களையும் பாராட்டிப் பேசினார். புதுச்சேரி மாண்புமிகு முதலமைச்சர் வே.நாராயணசாமி அவர்கள் இறுதியாக சிறப்புரையாற்றினார்.  இளைஞரணித் தலைவர் தி.இராசா நன்றி கூறினார்.

வியாழன், 4 ஜூலை, 2024

தியாகமே வடிவான திராவிடத்தாய் நூற்றாண்டு நிறைவு விழா!

 

முகப்புக் கட்டுரை : தியாகமே வடிவான திராவிடத்தாய் நூற்றாண்டு நிறைவு விழா!

மார்ச் 1-15, 2020

மஞ்சை வசந்தன்

திராவிட இயக்கத்தின் மாபெரும் தலைவர் தந்தை பெரியாரின் வாழ்வே அர்ப்பணிப்பு வாழ்வு! அவருக்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்தவர் அன்னை மணியம்மையார் அவர்கள்.

சராசரி பெண்ணின் கனவுகள் கற்பனைகளை-யெல்லாம் புறந்தள்ளி, உலகின் மாபெரும் தலைவர் தந்தை பெரியார் அவர்களுக்கு உற்ற துணையாய், பெற்றதாயினும் உற்ற தாயாய், பணிப் பெண்ணாய், தந்தை பெரியாருக்குப் பின் இயக்கத்துக்கு தலைமை-யேற்ற தலைவராய், தனக்குப் பின்னும் சரியான தலைவரை இந்த இயக்கத்திற்கு அளித்த தொலைநோக்குடைய ஆற்றலாளராய். இந்தியா சந்தித்த அவசர நிலை காலத்தில் அஞ்சாது, அயராது, நெஞ்சு நிமிர்த்தி இயக்கம் நடத்தி, இயக்கம் காத்து, இந்தியாவே அதிர்ந்து பார்க்க இராவணலீலா நடத்திய சுயமரியாதைச் சுடரொளியாய், இனமானம் காத்த இணையில்லா பெண்மணியாய் சரித்திரத்தில் சாதனைப் பதிவுகளைச் செய்தவர் அன்னை மணியம்மையார் அவர்கள்.

பெரியாருடன் சந்திப்பு

வேலூரைச் சேர்ந்த கனகசபை என்னும் ‘பெருந்தகையார்’ பெரியாரின் நல்ல நண்பர்களில் ஒருவர். இவருக்கும் பத்மாவதி அம்மையாருக்கும் மகளாக 1920ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10ஆம் நாள் பிறந்தவர்தான் மணியம்மையார். பெற்றோர் இட்ட பெயர் காந்திமதி. தனித்தமிழ் ஆர்வலர் கு.மு.அண்ணல் தங்கோ காந்திமதி என்னும் பெயரை, அரசியல்மணி என்று மாற்றம் செய்தார்.

அம்மையாரின் தந்தை கனகசபை பெரியாருக்கு நலம் விசாரித்து கடிதம் எழுதுவது உண்டு. ஒருமுறை பெரியாரிடம் இருந்து பதில் கடிதம் வந்தது. “எல்லோரும் தூர இருந்தபடி உடம்பை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளுங்கள் என்கிறார்கள். ஆனால், கூட இருந்து உதவி செய்ய யாருமில்லை. என்னமோ என் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறேன்’’ என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இதனைப் படித்த கனகசபை துடித்துப் போனார்.

அதன் விளைவு 1943ஆம் ஆண்டு முதல் அம்மையார், பெரியாரின் அணுக்கச் செயலாளராக, தொண்டராகப் பணியாற்றத் தொடங்கினார். ஏற்கெனவே பெரியாரின் கொள்கைகளாலும் பேராட்டம் நிறைந்த வாழ்க்கையாலும் ஈர்க்கப்பட்ட அவர் இந்தப் பணியினை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டார்.

பெரியார் மற்றும் இயக்கம் தொடர்பான வரவு _ செலவுக் கணக்குகளை கவனித்துக் கொள்வது, பெரியாரின் சொற்பொழிவுகளுக்குத் தேவையான குறிப்புகளை எடுத்துத் தருவது, பெரியாரின் சொற்பொழிவுகளைக் குறிப்பெடுப்பது, கூட்டங்களில் புத்தகங்கள் விற்பது – இதுதான் அம்மையாரின் பிரதான பணியாக இருந்தது.

இளம் வயதில் முதியவர்க்குத் தாயானவர்

பெரியாருக்கு உடல் நலம் குன்றியபோது, உணவு அளிப்பது, சரியான நேரத்தில் மருந்து மாத்திரைகளைக் கொடுப்பது போன்ற பணிகளைச் செய்தார். இதுபற்றி பின்னாளில் மணியம்மையார்,

“அவர் தொண்டுக்கு முழுக்க, முழுக்க என்னை ஆளாக்கி, அவர் நலத்தை கண்ணெனப் பாதுகாக்க ஒரு தாயாக என்னைப் பாவித்துக் கொண்டு, அவரை ஒரு சிறு குழந்தையாகவே மனதில் நிறுத்தி அந்தக் குழந்தைக்கு ஊறு நேராவண்ணம் பாதுகாப்பதிலேயே மகிழ்ச்சி கொண்டேன்” என்று குறிப்பிட்டார்கள்.

இளம்வயதில் ஒரு முதியவருக்குத் தாயானது அம்மையாரைத் தவிர, வேறு யாராக இருக்க முடியும்?

பெரியாருக்கு உதவியாளர் என்கிற வட்டத்துக்குள் நின்று விடாமல் மிகச்சிறந்த சொற்பொழிவாளராக, எழுத்தாளராக அம்மையார் விளங்கினார். நாகம்மையாருக்குப் பிறகு பெரியாருக்குப் பின்னால் பெண்களைத் திரட்டுவதில் பெரும்பங்கு கொண்டார். 1944ஆம் ஆண்டு ‘குடிஅரசு’ ஏட்டில் “இரண்டும் ஒன்றே’’ என்னும் தலைப்பில் கந்த புராண இராமாயண ஆராய்ச்சிக் கட்டுரை எழுதினார்.

மேலும், நாட்டு நடப்புகள் குறித்த தனது கருத்துகளை அவ்வப்போது “குடிஅரசு’’வில் வெளியிட்டு வந்தார். 1948ஆம் ஆண்டு மொழி உரிமைப் போர் நடந்தது. கும்பகோணத்தில் நடந்த போராட்டத்துக்கு அம்மையார் தலைமை தாங்கினார். தடையை மீறியதாகக் கைது செய்யப்பட்ட அம்மையார் பாபநாசம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் வேலூர் சிறையில் மூன்று மாதம் தண்டனை அனுபவித்தார். 1949ஆம் ஆண்டு சென்னையில் இந்தி எதிர்ப்பு மறியலை தலைமை தாங்கி நடத்தினார்.

பெரியார்-மணியம்மையார் திருமணம்

இதே ஆண்டில் ஜூலை 9ஆம் நாள் தந்தை பெரியார் மணியம்மையாரை பதிவுத் திருமணம் செய்துகொண்டார். இதுவரை அரசியல்மணி என்று அழைக்கப்பட்ட அம்மையாரை ஈ.வெ.ரா. மணியம்மை என்று பெயர் மாற்றினார் பெரியார்.

பெரியார், மணியம்மையாரைத் திருமணம் செய்து கொண்டது நாடு முழுவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. விமர்சனங்கள் எழுந்தன. பெரியார் எதிர்ப்பாளர்கள் இதனைக் கொச்சைப்படுத்தி எழுதியும், பேசியும் வந்தனர். ஆனால், பெரியார் இதைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. தான் எடுத்த முடிவில் மிகத் தெளிவாக இருந்தார். தனது திருமணம் பற்றி அவர் இப்படிக் கூறினார்.

“மனைவி வேண்டும் என்பதற்காக நான் திருமணம் செய்து கொள்ளவில்லை. இயக்க நலனை பொதுத் தொண்டைக் கருதி எனக்கொரு துணை வேண்டு மென்று என்னுடைய பாதுகாப்புக்காக, என்னுடைய வசதியை உத்தேசித்து, ஒரு ஸ்திரீயை சட்டப்படி எனக்கு உதவியாளராக, உற்ற நண்பராக இருக்க வசதி செய்துகொள்கிறேன்” என்றார்.

சில காலத்திற்குள் விமர்சனங்களும், சர்ச்சைகளும் ஓய்ந்து மறைந்து போயின.

திருமணத்திற்குப் பிறகு அம்மையார் தீவிர இயக்கப் பணியில் ஈடுபடத் தொடங்கினார். 1954ஆம் ஆண்டு பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் ஆயுள் செயலாளராக பெரியாரால் நியமிக்கப்பட்டார். அதோடு ‘விடுதலை’ இதழின் பதிப்பாசிரியராகவும்,  வெளியீட்டாளராகவும் பணியாற்றினார்.

1958ஆம் ஆண்டு “இளந்தமிழா புறப்படு போருக்கு’’ என்ற கட்டுரையைப் பிரசுரித்ததற்காக, அரசு வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கில் மணியம்மையாருக்கு பதிப்பாசிரியர் என்கிற வகையில் 100 ரூபாய் அபராதம் விதித்தது நீதிமன்றம். ஆனால், அம்மையார் அபராதத்தை கட்ட மறுத்து 15 நாள் சிறைத் தண்டனை அனுபவித்து, தான் ஒரு சிறந்த தன்மானமிக்க பத்திரிகையாசிரியர் என்பதை நிரூபித்தார்.

தந்தை பெரியார் சிறையில் இருந்த காலத்தில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, இயக்கத்தை வழிநடத்தினார். பெரியார் ஜாதி ஒழிப்பு போராட்டம் நடத்தியபோது, 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அப்போது இயக்கத்தை வெளியில் இருந்து நடத்தும் பொறுப்பை பெரியார் மணியம்மையாரிடம் ஒப்படைத்திருந்தார் .

இந்தப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்த பட்டுக்கோட்டை இராமசாமி, மணல்மேடு வெள்ளைச்சாமி என்னும் இரு தோழர்கள் சிறையிலேயே வீரமரணம் அடைந்தார்கள். இதில் ஒருவர் சடலத்தைக் கொடுத்த நிருவாகம், இன்னொருவர் சடலத்தைக் கொடுக்க மறுத்தது. இதனால் கோபம் கொண்ட அம்மையார் சென்னைக்குப் புறப்பட்டுச் சென்று அப்போதைய முதல்வர் காமராசர் மற்றும் உயர் அதிகாரிகளைச் சந்தித்துப்பேசி இருவர் சடலத்தையும் பெற்றார். ஒருவர் உடலை சிறைக்குள்ளேயே புதைத்து விட்டார்கள்.

இருந்தாலும் தோண்டியெடுத்து வாங்கி பிரமாண்ட ஊர்வலம் நடத்தி நல்லடக்கம் செய்தார்.

திருச்சியில் பெரியார் கல்வி நிலையங்-களையும், மகளிர் காப்பகத்தையும் தொடங்கி அதன் நிருவாகத்தை அம்மையார் கையில் ஒப்படைத்தார். அவர் ஆற்றிய பணிகளால் இன்று அந்த நிறுவனங்கள் ஆல்போல் வளர்ந்துள்ளன. காப்பகத்தில் சேர்க்கப்பட்ட அனாதைக் குழந்தைகளின் நல்வாழ்வுக்காக அக்காலத்திலேயே ஒரு பெருந்தொகையை வங்கியில் போட்டு வைத்தார்.

தந்தை பெரியாரின் இறப்புக்குப் பின்…

1974ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 6ஆம் நாள் மணியம்மையார் திராவிடர் கழகத்தின் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். ஒரு மிகப் பெரிய சமூக சீர்திருத்த இயக்கத்துக்கே ஒரு பெண் முதல் முறையாகத் தலைமையேற்றார். “அய்யா (பெரியார்) அவர்கள் ஒவ்வொன்றிற்கும் நல்ல வழிமுறைகள், செயல் திட்டங்கள், கொள்கை விளக்கங்கள், பயிற்சிகள் நமக்கு தந்து விட்டுச் சென்றிருக்கிறார்கள். அதன் படியே ஒரு நூலிழை கூடப் பிறழாமல் இயக்கம் நடக்கும்“ என்று மணியம்மை உறுதியளித்து அதன்படியே தனது பணியினைத் தொடர்ந்தார்.

கிடப்பில் போடப்பட்டிருந்த ‘அனைவரும் அர்ச்சகராகலாம்’ என்னும் சட்டமன்றத் தீர்மானத்தை நிறைவேற்றக்கோரி, தான் தலைமைப் பொறுப்பேற்ற மூன்றே மாதத்தில் மிகப்பெரிய மறியல் போராட்டத்தை நடத்தினார். இந்தப் போராட்டத்தின் தொடர்ச்சியாக, டெல்லி வந்த மத்திய அமைச்சர் ஒய். பி. சவானுக்கு கருப்புக் கொடி காட்டினார்.

மணியம்மையாரின் புகழ் இந்தியா முழுவதும் பரவ ஒரு மிகப்பெரிய போராட்டம் காரணமாக இருந்தது. வடநாடுகளில் ‘இராவண லீலா’ என்னும் மிகப்பெரிய நிகழ்ச்சி ஒன்று ஆண்டு தோறும் நடைபெறும். இராமாயண காவியப்படி, தீயவனான இராவணனின் உருவப் பொம்மைகளை எரித்து கொண்டாடுவார்கள். இராவணன் திராவிட மன்னன், மாவீரன் என்பது திராவிடர் கழகத்தின் கருத்து. எனவே, இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்று திராவிட கழகம் கோரி வந்தது. 1974ஆம் ஆண்டு இந்த நிகழ்ச்சியில் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியும், குடியரசு தலைவர் பக்ருதின் அலி அகமதுவும் கலந்து கொள்வதாக இருந்தது. இது அம்மையாருக்குக் கோபத்தை உண்டாக்கியது. இருவரும் இதில் கலந்து கொள்ளக்கூடாது என்று கடிதம் எழுதினார். மீறிக் கலந்து கொண்டால் திராவிட மக்கள் தமிழ்நாடு முழுவதும் இராமனின் உருவப் பொம்மைகளை தீயிட்டுக் கொளுத்துவார்கள் என்று எச்சரித்தார்.

மணியம்மையாரின் கோரிக்கையை அவர்கள் நிராகரித்து விட்டனர். போராட்டம் அறிவித்த நிலையில் மணியம்மையாருக்கு உடல்நலம் குன்றியது. மருத்துவமனையில் அனுமதிக்கப்-பட்டார். இருந்தாலும் தளராத மனத்தோடு 1974ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதி இராமன், சீதை லட்சுமணன் உருவ பொம்மைக்குத் தம் கைகளாலேயே தீ மூட்டினார். தடையை மீறி இந்தப் போராட்டம் நடைபெற்றதால் அம்மையார் கைது செய்யப்பட்டார். 6 மாதம் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.

நெருக்கடி காலத்தில், ஆசிரியர் உள்பட திராவிட இயக்கத்தவர் மிசா கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்ட நேரத்தில், அன்னையார் அவர்கள், இயக்கத்திற்குத் தலைமை தாங்கி, விடுதலைக்கு தரப்பட்ட நெருக்கடியையும் சமாளித்துக் கொண்டு, இயக்கத்தைக் காப்பாற்றினார்.

உள்துறை அமைச்சராக இருந்த பிரம்மானந்த ரெட்டியாரை நெருக்கடி நிலை காலத்தில் சந்தித்தார் அன்னை மணியம்மையார்.

‘‘எதற்காக எங்கள் தோழர்களை சிறையில் வைத்திருக்கிறீர்கள்; அவர்கள் என்ன குற்றம் செய்தார்கள்? அதற்கான காரணத்தைச் சொல்லுங்கள்’’ என்று உரிமையோடு கேட்கிறார்கள். அவர்களுடைய சந்திப்பு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது.

உள்துறை அமைச்சர், ஆளுநரைப் பார்க்கிறார். அன்றைய ஆளுநராக இருந்தவர்  மோகன்லால் சுக்காடியா, இராஜஸ்தானிலிருந்து வந்தவர். ஆளுநர் அவர்கள், ‘‘திராவிடர் கழகத் தோழர்களை விடுதலை செய்வதற்கு நாங்கள் உத்தரவு போடுகிறோம். ஆனால், ஒரு நிபந்தனை; அந்த நிபந்தனைக்கு நீங்கள் கட்டுப்பட்டால், அவர்களை அடுத்த நிமிடமே விடுதலை செய்கிறோம்’’ என்று சொல்கிறார்.

‘‘என்ன, சொல்லுங்கள்?’’ என்று அம்மா அவர்கள் கேட்கிறார்.

‘‘கலைஞர் கருணாநிதி தலைமையில் இருக்கின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆதரிக்கமாட்டோம், என்று ஒரு அறிக்கை விடுங்கள்; அதுபோதும்’’ என்றார்.

உடனே அம்மா அவர்கள் சிங்கம் போன்று எழுந்தார்; ‘‘நாங்கள் கொள்கையில் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ள மாட்டோம்; எங்கள் தோழர்கள் எத்தனை ஆண்டுகாலம் வேண்டுமானாலும் சிறையிலேயே இருக்கட்டும்; அங்கேயே மடிந்து போகட்டும்; எங்களுக்கு அதைப்பற்றிக் கவலையில்லை. எடுத்த நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வது எங்களுடைய வேலையல்ல’’ என்று சொல்லி, பெரியாரின் குரலாக அந்தக் குரல் ஒலித்தது; ஒரு வீர முழக்கம் ஒலித்தது. இது பல பேருக்குத் தெரியாத செய்தி!

ஒரு மாபெரும் தலைவனின், தத்துவ ஞானியின் உடலையும், உயிரையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும், அவர் உருவாக்கிய இயக்கத்தைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும், அவரது கொள்கையைப் பரப்ப வேண்டிய பணி, அவர் தொடங்கி வைத்த சமுதாயப் பணிகளைத் தொய்வின்றி நடத்த வேண்டிய கடமை, இதுதவிர உரிமைகளுக்கான போராட்டங்கள் என்று தன் வாழ்க்கையையே போராட்டமாக அமைத்துக்கொண்ட மணியம்மையார் 1978ஆம் ஆண்டு மார்ச் 16ஆம் நாள் காலமானார்.

மணியம்மையார் தந்தை பெரியாரைக் காத்தார். அவரது இயக்கத்தைக் காத்தார். தமிழ் இனத்தைக் காத்தார். சாதாரண உதவியாளராகத் தனது வாழ்வைத் தொடங்கி ஒரு இயக்கத்தின் தலைவியாக வாழ்ந்தபோதும் தனக்கென்று அவர் எதனையும் சேர்த்து வைத்துக் கொண்டதில்லை. தந்தை பெரியார் அவருக்குத் தனிப்பட்ட முறையில் எழுதி வைத்த சொத்துகளைக் கூட அவர் இயக்கத்தின் பொதுச் சொத்தாக மாற்றினார்.

அவரது மறைவுக்குப் பின் ஒவ்வோர் ஆண்டும் அன்னையார் பிறந்த நாளில் அவரது நினைவை நாம் போற்றி அவர் பெயரால் எத்தனையோ மக்கள் நலத் தொண்டுகளைச் செய்து வந்தாலும்,  10.3.2020 அன்று நடைபெறவுள்ள நூற்றாண்டு நிறைவு விழாவும் வரலாற்றுச் சிறப்புடையது ஆகும்.

எந்த வகையிலும் பிறவிப் பேதம் என்பது அழிக்கப்படவேண்டும் என்கிற நோக்கில் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கிய தந்தை பெரியார் அவர்கள், ஜாதி ஒழிப்பை மட்டும் மய்யப்படுத்தவில்லை. அதைவிட முக்கியமாக, ஆண் எஜமானன் _- பெண் அடிமை என்னும் பிறவிப் பேதத்தையும் நீக்கவேண்டும் என்று  பாடுபட்டார்கள். அதை தன் வாழ்நாள் முழுவதும் முதன்மைப் பணியாகக் கொண்டு செயல்பட்டவர் அன்னை மணியம்மையார் அவர்கள்.

உலகத்தில் அதிகமான இகழ்ச்சி; அதிகமான ஏளனம்; மிகக் கேவலப்படுத்தப்பட்ட சொற்கள்; இவை அத்தனையும் மிகப்பெரிய இடத்தில் இருந்துகூட இவரைநோக்கி வந்ததுண்டு.  அத்தனையையும் தந்தை பெரியார் அவர்கள் எப்படி ஏற்றுச் சந்தித்தாரோ _ சாதித்தாரோ  அதைப்போல, அத்தனையையும் அன்னை மணியம்மையார் அவர்கள் ஏற்றுக்கொண்டு, சாதனை புரிந்தார்கள்.

‘‘முப்பது ஆண்டுகளுக்கு முன்னால், அய்யாவிற்கு வயிற்று வலி ஏற்பட்டது; அய்யாவினால் சரியாக உணவு உண்ண முடியாமல் சங்கடப்படுவார்; அப்படிப்பட்ட அய்யாவை இவ்வளவு காலம் காத்தவர் மணியம்மையார்’’ என்று முதலமைச்சர் அண்ணா அவர்கள், ஆசிரியர் அவர்களிடம் கூறியுள்ளார்கள்.

‘‘இனிமேல் நான் ரொம்ப நாளைக்கு இருக்கமாட்டேன்’’ என்று “விடுதலை’’யில் தந்தை பெரியார் எழுதினார். ஆனால், அதற்குப் பிறகு அய்யா அவர்கள் 50 ஆண்டுகாலம் வாழ்ந்தார். காரணம், அன்னை மணியம்மையார் அவர்கள், தன்னுடைய வாழ்வையே அய்யாவுக்காக அர்ப்பணித்தார்கள். அதன் காரணமாகத்தான், அம்மா அவர்கள் 60 வயதைத் தாண்ட முடியாமல் மறைந்து போனார்கள்.

தன் உடல் நலிவுற்ற நிலையிலும் அய்யாவைப் பாதுகாக்கவேண்டும் என்று முயற்சி எடுத்தார்களே தவிர, தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டும் என்று நினைக்காதவர் அம்மா. அது சமுதாயத்திற்காக; தனக்காக அல்ல. எந்த நோக்கத்திற்காக அவரிடம் சென்றாரோ, அது நடைபெற-வேண்டும் என்பதற்காக.

இப்படிப்பட்ட சரித்திர சாதனைக்குரிய அன்னையாரின் நூற்றாண்டு நிறைவு விழாவை சிறப்புடன் கொண்டாட ஒன்று திரள வேண்டியதும், அவரது தொண்டுப் பணியைத் தொடர வேண்டியதும் திராவிட இனத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரின் கடமையாகும். குறிப்பாக இளைய தலைமுறையின் இன்றியமையாக் கடமையாகும்!