செவ்வாய், 19 மே, 2020

திராவிடத்தால் எழுந்தோம் தெரியுமா!

*உங்களுக்கு தெரியுமா?*

*தேசத்தின் தந்தை என்று அழைக்கப்பட்ட காந்தி அவர்கள் சென்னை வந்தால் மைலாப்பூரில் இருந்த சீனிவாச அய்யங்கார் வீட்டு திண்ணையில்தான் உட்கார்ந்திருப்பார்.
அய்யங்கார் வீடு என்பதால் உள்ளே அவரை அனுமதிக்கவில்லை.

*சூத்திரர்கள் படிக்க ஆசைப்படக்கூடாது,அப்படி படித்தாலும் ஐந்தாம் வகுப்புக்குமேல் படிக்கக்கூடாது,மீறி படித்தாலும் பிராமணர்களைப்போல அதிகாரத்திற்கு வர நினைக்கக்கூடாது* என்று அவர் நடத்திய *மஞ்சரி* பத்திரிக்கையில் பாலகங்காதர திலகர் எழுதினார்.

*1919-வரை அக்ரஹாரத்திலும்,கோவிலுக்கு சொந்தமான மடங்களிலும்,சத்திரங்களிலும்தான் பல  பள்ளிகள் செயல்பட்டன.அப்பள்ளிகளில் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படவில்லை.சேர்த்துக்கொண்ட சில பள்ளிகளும் அவர்களை தனி வரிசையில் உட்காரவைத்தன.

*சூத்திரர் மற்றும் பஞ்சமர்களின் நிழல்கூட தங்கள்மீது படக்கூடாது*என்பதால் வைக்கம் வீதிகளில் அவர்கள் நடக்கக்கூட அனுமதிக்கப்படவில்லை.

*சமஸ்கிருதம் படித்தவர்கள் மட்டுமே மருத்துவம் படிக்க முடியும்* என்று சட்டம் இருந்தது.

*பிராமணர்கள் எந்த குற்றமிழைத்தாலும் அவர்களை தண்டிக்கக்கூடாது* என்று சட்டமிருந்தது.

*பெண்களை தேவதாசிகளாக கோவிலுக்கு நேர்ந்துவிட வேண்டும்* என்று சட்டமிருந்தது.

*நான்கு வருண கோட்பாட்டை கொண்டதுதான் இந்தியா.பிராமணர்களே பிறப்பால் உயர்ந்தவர்கள்.மற்ற வருணத்தார் பிராமணர்களை தெய்வமாக வணங்கி நடக்கவேண்டும்* என்று கோல்வால்கர் எழுதினார்.

*திருமணம் என்றால் என்ன என்று தெரியாத சிறுமிகளுக்கும் திருமணம் நடந்தது.பச்சிளம் வயதில் கணவனை இழந்த சிறுமிகளுக்கு மொட்டையடித்து முக்காடு போட்டு வீட்டின் மூலையில் முடக்கி வைத்தனர்*.

*சேரன்மாதேவியில் ஒரு குருகுலப் பள்ளி இருந்தது.அங்கு பிராமண மாணவர்களுக்கு செம்புக்குடத்திலும் சூத்திர மாணவர்களுக்கு மண் குடத்திலும் குடி தண்ணீர் வைக்கப்பட்டது.அன்றைய முதல்வர் ஓமந்தூர் ராமசாமி அவர்களின் மகனும் அந்த குருகுலத்தில் படித்தான். மண் குடத்தில் தண்ணீர் தீர்ந்துவிட்டதால்
தாகத்திற்காக  பிராமண மாணவர்களுக்கு வைத்திருந்த செப்பு குடத்திலிருந்த தண்ணீரை குடித்துவிட்டான்.
அதற்காக அவன் தண்டிக்கப்பட்டு,படிப்பும் பாதியில் நின்றுபோனது.

*சுதந்திரம் பெற்ற பின்பும் ரயில்வே கேண்டின்களில் பிராமணரகளுக்கு தனி அறை இருந்தது.

*1937-ல் நீடாமங்கத்தில் நடந்த காங்கிரஸ் மாநாட்டின் பந்தியில் சரிசமமாக சாப்பிட உட்கார்ந்த தாழ்த்தப்பட வகுப்பினரை மரத்தில் கட்டிவைத்து உதைத்து மொட்டையடித்து அவமானப்படுத்தினார்கள்*

*இதெல்லாம் எதற்கு?* என்று கேட்கிறீர்களா?

*இப்போது அந்த பழைய கொடுமைகளும்,
அநீதியும் இருக்கிறதா என்று யோசித்து பாருங்கள்*

இந்த  கொடுமைகளை ஒழித்து  நமக்கு  உரிமைகளை பெற்றுத்  தந்த  தலைவர்  தான் 
*தந்தைபெரியார்*
- கட்செவி பதிவிலிருந்து..19.5.2019

திங்கள், 18 மே, 2020

திராவிடர் கழகத்தை மய்யப்படுத்தி பேராசிரியர் அருணன்! - 2 & 3

தலைமை - தத்துவம் - இயக்கம்! - 2
May 17, 2020 • Viduthalai • மற்றவை
திராவிடர் கழகத்தை மய்யப்படுத்தி பேராசிரியர் அருணன்!
பிறப்புரிமை: 'சுயராஜ்ஜியமா? சுயமரியாதையா?' - பெரியார் விளக்கம்!



தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் மாநில தலைவரும், தமிழ்நாட்டின் சிறந்த சமூக வரலாற்று ஆய்வாளருமான எழுத்தாளர் பேராசிரியர் அருணன் அவர்களின் "காலந்தோறும் பிராமணியம்" எட்டு தொகுதிகளும் மிக அரிய சமூக வரலாற்றுப் பெட்டகங்கள் ஆகும்.
அதில் தந்தை பெரியார் - திராவிடர் கழகம் பற்றிய அவரது கண்ணோட்டம் கருத்துப் பதிவுகளாக வெளிவந்துள்ளன.
அவற்றை நாம் இங்கே தொடர் கட்டுரைகளாகத் தருவதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
சிலவிடங்களில் மாறுபட்ட கருத்துக்கள் கூறப்பட்டிருப்பினும் அத்தகைய அய்யங்களைப் போக்கி, தெளிவுபடுத்தி, புரிதலை ஏற்படுத்துதல் நமது கடமை என்ற உணர்வோடும், பெருமிதத்தோடும் இத்தொடரினை நமது வாசக நேயர்களுக்குப் பயன்பட வெளியிடுகிறோம் - வரலாற்று மீள் பார்வை இதன் மூலம் கிடைக்கிற ஒரு வாய்ப்பு நமக்குக் கிட்டுகிறது!
நன்றி...
- ஆசிரியர், 'விடுதலை'

வகுப்புவாரி உரிமைக்காக....
இந்தக் கட்டத்தில்தான் நீதிக்கட்சியின் பனகல் அரசரால் இந்து மத அறநிலையச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இதை எதிர்த்து மடாதிபதிகள் கூச்சலிட்டார்கள். காங்கிரசிலிருந்த பிராமணத் தலைவர்களும் அவர்களுக்கு ஆதரவாக இருந்தார்கள், “மதத்திற்கு ஆபத்து” என்றார்கள், மத விவ காரங்களில் அரசாங்கம் தலையிடக் கூடாது என்றார்கள். பெரியாரோ இது அறநிலையங்களின் சொத்துகளைப் பாது காக்கிற சட்டம் என்பதால் காங்கிரஸ் ஆதரிக்க வேண்டும் என்றார். காங்கிரஸ் தலைவர்கள் ஏற்கவில்லை.
இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக வந்த விஷயம் வகுப்பு வாரி பிரதிநிதித்துவ உரிமை. “தேசியம்“ பேசிய காங்கிரஸ் தலைவர்கள் பிராமணரல்லாதார் நலனைப் பிரதிபலிக்கும் இந்த உரிமையை மட்டும் ஏற்கவில்லை. அவர்களது தேசியம் ஏற்கெனவே உள்ள பிராமணிய ஆதிக்கத்தைக் காத்து நிற்கிற கோட்பாடாகும். மற்றவர்களோ “தேசியம்“ என்றால் அனைத்துத் தரப்பாரின் நலனையும் ஏற்கும் கோட்பாடு என்று கருதினார்கள். தவிர்க்க முடியாதபடி மோதல் வந்தது.
1920இல் நடந்த திருநெல்வேலி காங்கிரஸ் மாநாட்டிலிருந்து ஒவ்வொரு மாநாட்டிற்கும் வகுப்புவாரி தீர்மானத்தைப் பெரியார் கொண்டு போவார். ஒவ்வொரு மாநாட்டிலும் ஏதேனும் காரணத்தைச் சொல்லி காங்கிரசின் பிராமணிய வாதிகள் தட்டிக் கழித்து விடுவார்கள். அவர்களை அன்றே இந்த இட ஒதுக்கீடு கோரிக்கை மிரட்டத் துவங்கியது. இதில் உச்சக்கட்டம் 1925 நவம்பரில் நடைபெற்ற காஞ்சிபுரம் தமிழ் மாகாண மாநாட்டில் நடந்தது. இங்கு இந்தத் தீர்மானத்திற்கு அனுமதி கிடைக்கவில்லை. “அப்பொழுதுதான் காங்கிரசால் பார்ப்பனரல்லாதார் நன்மை பெற முடியாது, 'காங்கிரசை ஒழிப்பதே இனி எனது வேலை’ என்று மாநாட்டிலேயே எழுந்து கூறிவிட்டு வெளியேறினார். உடனே ஒரு பெருங் கூட்டம் அவருடன் மாநாட்டை விட்டு வெளியேறிவிட்டது” என்கிறார் சாமி சிதம்பரனார்.
இதற்கிடையில் அந்த ஆண்டு மே மாதத்திலேயே “குடி அரசு” எனும் வாரப் பத்திரிகையை ஈரோட்டில் தொடங்கி யிருந்தார் பெரியார். அதனுடைய முதல் வெளியீட்டில் “ஒவ்வொரு வகுப்பும் முன்னேற வேண்டும். இதை அறவே விடுத்து வெறும் ‘தேசம்' என்று கூக்குரலிடுவது எமது பத்திரிகையின் நோக்கம் அன்று” என்று பிரகடனப்படுத்தப் பட்டிருந்தது. விரைவிலேயே "சுயமரியாதை இயக்கம்" என்று பெயர் பெற்ற பெரியாரின் இயக்கம் இப்படியாக ஆரம்பமானது எனலாம். காங்கிரசிலிருந்து விலகியது இப்போது இன்னும் வசதியாகிப் போனது. பிராமணிய எதிர்ப்பு இயக்கத்தைத் தனது போக்கில் கட்டி வளர்க்க ஆரம்பித்தார்.
காங்கிரசிலிருந்து பெரியார் விலகினார் என்பதைவிட அங்கிருந்த பிராமணியவாதிகளால் விலக்கப்பட்டார் என்பதே உண்மையாகும். நாம் இதுவரை பார்த்து வந்த சமூக சீர்திருத்தவாதிகள் யாரும் காங்கிரசில் தீவிரமாக இருந்து பின்னர் விலகி தனி இயக்கம் கண்டவர்கள் அல்ல. ஜோதிபா பூலே, அயோத்திதாசர், அம்பேத்கர் ஆகியோர் ஆரம்பத்திலிருந்த காங்கிரசை நம்பியவர்கள் அல்ல. ரானடே, கோகலே, காந்திஜியோ கடைசிவரை காங்கிரசைக் கைவிடாதவர்கள். இவர்தான் அதை நம்பியிருந்து, அதில் தீவிரமாக ஈடுபட்டு, அதன் மாகானத், தலைவர் - செயலாளர் பதவி வரை வந்து, பின்னர் அனுபவத்தால் அதன் பிராமணி யப் போக்கை, உணர்ந்து, வெறுத்துப் போய் வெளியேறியவர், தனக்கெனத் தனித்ததொரு இயக்கம் கண்டவர்.
சுயமரியாதைக் கொள்கைப் பிரகடனம்
1926 ஜனவரியில் - அதாவது காங்கிரசிலிருந்து விலகிய ஒரு சில மாதங்களில் - “குடிஅரசு” ஏட்டில் பெரியார் எழுதிய “பிறப்புரிமை - சுயராஜ்யமா? சுயமரியாதையா?” எனும் சிறு கட்டுரை சுயமரியாதை, இயக்கத்தின் கொள்கைப் பிரகடனமாக இருந்தது. அதில் இந்தப் பகுதி வருகிறது - “சுயராஜ்யம் எனது பிறப்புரிமை என்று சொல்லி ஜனங்களை ஏமாற்றிப் பிழைக்கின்ற அநேகர், சுயராஜ்யம் இன்னது என்பதைப் பற்றி ஒரு வார்த்தையாவது சொன்னவர்கள் அல்ல. அதை ஜனங்கள் அறியாதிருக்கும்படி எவ்வளவோ சூழ்ச்சிகள் செய்து வருகின்றார்கள், மகாத்மா காந்தி அவர் கள் சுமார் அய்ந்து வருஷங்களுக்கு முன்பாக, சென்னைக்கு வந்திருந்த சமயம். ஓர் கூட்டத்தில் பேசும்போது ‘என்னு டைய சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள யோக்கி யதை இல்லாமல் இருக்குமானால் நான் சுயராஜ்யத்தை விரும்புவதில் அர்த்தமே இல்லை’ என்று சொல்லியிருக் கிறார். மனிதனுக்கு அவனுடைய சுயமரியாதை என்னும் தன்மானத்தைக் காப்பாற்றிக் கொள்வதுதான் பிறப்புரி மையே அல்லாமல் அரசியலான ராஜியம் என்னும் ‘சுயராஜ் யம் ஒருக்காலும் பிறப்புரிமை ஆகமாட்டாது. ராஜிய பாரமானது ஒரு தொண்டு.”
இதுவொரு அசலான சிந்தனை. இது திலகர் தந்த கோஷத்தை கேள்விக்குள்ளாக்கியது. அந்த கோஷத்தைத் தான் காங்கிரசின் பிராமணியவாதிகள் குரல்வளையில் தேக்கி வைத்திருந்தார்கள். அவர்களுக்குப் பிரச்சனை ஆட்சியதிகாரம் இல்லாமலிருந்தது. ஆகவே அதை நாடினார்கள். மற்றவர்களுக்கோ அவர்களின் சுயமரியா தையே - தன்மானமே - மறுக்கப்பட்டிருந்தது. அவர்கள் அதை நாட வேண்டியது. அப்படி அவர்கள் நாடிவிடா மலிருக்க, சுயராஜியத்தைக் சகலருக்குமான பிறப்புரிமையாக முன் வைத்தார்கள். அதனால்தான் அதை விவரிக்காமல், மொட்டையாக அந்தச் சொல்லாடலைப் பயன்படுத்தி வந்தார்கள்.
இதிலே அடுத்த சுவையான விஷயம். சுயமரியாதை எனும், சொல்லாடலைப் பெரியார் காந்திஜியிடமிருந்து பெற்றார் என்பது. ஆனால், பெற்றதும் அதற்கு ஒரு புதிய அர்த்தத்தைக் கொடுத்தார். சுயராஜியம் எனும் பதத்தோடு அதை ஒப்பிட்டதில் அது கிடைத்தது. தொடர்ந்து அவர் எழுதியதை நோக்குங்கள் - “மனித உடல் தாங்கிய ஒருவன் அவனுடைய தெய்வத்தைக் காண, தரிசிக்க உரிமையற்ற ஒருவன் எப்படி சுயமரியாதை உள்ளவனாவான். அந்த சமூகத்திற்கு சுயராஜ்யம் எதற்கு? எந்த ராஜ்யம் இருந்தால் தான் அவர்களுக்கு கவலை என்ன? இம்மாதிரி ஒரு சமூகத்தாரை சுயமரியாதை அற்று ஒடுக்கி வைத்திருக்கும் ஒரு ராட்சஸ சமூகத்தார் சுயராஜ்யம் அடைவது மற்ற சமூகங்களுக்கு நன்மை தருமா? அல்லது ஒடுக்கப்பட்ட வகுப்பாருக்கும் சேர்ந்துதான் சுயராஜ்யம் தேடுவது என்று சொல்லுவோமானால் அவர்கள் தங்கள் தெய்வங்களைக் காணவும் தரிசிக்கவும் முடியாதபடியும், தெருவில் நடக்கவும் கண்ணில் தென்படவும் முடியாதபடியும் வைத்து இருப்ப தற்குக் காரணம் சுயராஜ்யம் இல்லாமை தானா?”
- - -
எல்லாருக்குமாகத்தான் சுயராஜியம் கேட்கிறோம் என்றார்கள். ஆனால், தாங்கள் பறித்து வைத்திருக்கிற உரிமைகளைத் தங்களது சகசுதேசிகளுக்குத் தர அவர்கள் தயாராக இல்லை. தீண்டாமைக் கொடுமை இருக்கிறதே, அதற்கு எது காரணம்? சுயராஜியம் இல்லாமைதானா? நறுக்கென்று கேட்டார். தீண்டாமை பிராமணியவாதிகளின் சுதேசித் தயாரிப்பு அல்லவா? இதை ஒழிக்காமல் சுயராஜியம் கேட்பது யாருக்காக? சுயமரியாதை பறிக்கப்பட்டவருக்கு சுயராஜியத்தால் என்ன பயன்? உண்மையில் இவர்கள் சுயராஜியம் கேட்பது சூத்திரர்கள் - பஞ்சமர்களை மேலும் ஒடுக்கத்தானோ எனும் சந்தேகம் பெரியாருக்கு வந்து விட்டது. இதிலே சுயமரியாதைப் பிரச்சனையை சூத்திரர்கள் நோக்கிலிருந்து வைக்காமல் பஞ்சமர்கள் நோக்கிலிருந்து வைத்ததும் கவனிக்கத்தக்கது.
“அந்நிய ராஜ்யம் நமது ஜனங்களை இம்மாதிரி கொடுமையாக நடத்தும்படி நமக்குச் சொல்லவே இல்லை. எந்தக் காரணத்தைக் கொண்டோ அந்நிய ராஜீயபாரங்கள் நமது நாட்டிற்கு ஏற்படாமல் இருக்குமேயானால் இந்த சுய மரியாதை இன்னதென்று உணர்வதற்குக்கூட நமக்குச் சௌகரியம் கிடைத்திருக்காது. நமது நாட்டு மக்களின் சுயமரியாதைக்கு விரோதமாயிருப்பது நம் நாட்டார் சிலரின் ஆதிக்கத்தினாலே அல்லாமல் அந்நிய அரசாங்கத்தின் ஆதிக்கத்தினால் அல்ல. ஆனால் நமது நாட்டில் பெரும் பாலோர் சுயமரியாதை அற்றிருக்கும் தன்மை அந்நிய அரசாங்கத்தாருக்கு அநுகூலமாயிருப்பதினால் இக் கொடுமைகளைப் போக்க அவர்களுக்கு அதிகக் கவலையில்லை” - மிகக் கவனமாக, கச்சிதமாக எழுதியிருக்கிறார் பெரியார்.
தீண்டாமைக் கொடுமைக்கு பிரிட்டீஷார்தான் காரணம் என்று எவரும் சொல்லமாட்டார். அவர்கள் மூலம் முதலாளித்துவ ஜனநாயகம் இங்கே வந்திராவிட்டால் இந்த சுயமரியாதை உணர்ச்சியும் வந்திருக்காது. அதே நேரத்தில் அது இன்னும் முழுமையாக வராமலிருப்பது அந்நிய ஆட்சியாளர்களுக்கு வசதியாக இருப்பதால் இது பற்றி பெரிதும் கவலைப்படவில்லை அவர்கள். ஆகவே, அது பற்றிக் கவலைப்பட்டு ஒரு சமூக சீர்திருத்த இயக்கத்தை நடத்த வேண்டிய வேலை சுதேசித் தலைவர்களுக்கு இருந்தது. இதைச் செய்யக் காங்கிரஸ் தலைவர்கள் தயாராக இல்லாத நிலையில்தான் பெரியார் களத்தில் இறங்கினார். சுயமரியாதை இயக்கம் பிறந்தது.
அமைப்புகளை அடையாளம் கண்டார்
இதிலே ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் இந்த இயக்கம் பிறந்த உடனேயே தனது எதிரி அமைப்புகளைத் தெளிவாக அடையாளம் கண்டு கொண்டிருந்தது. 1926 பிப்ரவரியில் எழுதிய ஒரு கட்டுரையில் “நாடக அதிகாரி பிராமணர் - வசூலிக்கும் அதிகாரிகள் பெரும்பாலும் பிராம ணர்கள் - இந்தப் பணத்தை அனுபவிப்பதும் ராமகிருஷ்ணா மடம் என்று சொல்லப்படும் பிராமண ஆதிக்கமுள்ள. பிராமண மடம்“ என்றார் பெரியார். பிராமணியம் காக்கப் புறப்பட்டதே ராமகிருஷ்ணா மடம் மற்றும் மிஷன் என்பதைக் கண்டு வந்தோம். அதைச் சட்டென்று புரிந்து கொண்டு தமிழர்களுக்கு அடையாளம் காட்டினார் பெரியார். “ராமகிருஷ்ணா ஹோம் நிதி” என்று பிராமணிய வாதிகள் வசூலித்தது யாருக்காக என்பதை எடுத்துக் காட்டினார்.
இதே ஆண்டு மார்ச்சில் எழுதிய ஒரு கட்டுரையில் “இந்து மகாசபை என்கிற பிராமண வர்ணாசிரம தர்மச் சபைக்கு நமது நாட்டில் யோக்கியதை சம்பாதிக்க ஸ்ரீமான் லாலா லஜபதிராயைக் கூட்டி வந்து ஏமாற்றினார்கள்” என்றார் பெரியார். இதே “குடிஅரசு” இதழில் “இந்து மகாசபையின் உண்மை நிறம்“ எனும் சிறு கட்டுரையும் எழுதினார். அதில் இப்படிக் குறிப்பிட்டார் - “நமது நாட்டில் இந்து மகாசபை என்னும் பேரால் ஒரு பிராமண வர்ணாஸ்ரம சபை ஏற்பட்டிருப்பதைப் பற்றி நாம் பலமுறை அது இந்தியாவை அந்நியருக்கு காட்டிக் கொடுப்பதற்கு ஆதர வாயிருந்த - இருக்கிற பிராமண வர்ணாஸ்ரமத்தை நிலை நிறுத்தவும், இந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றுபட முடியாதபடி மத்தியில் ஒரு தடைக்கல்லாய் இருக்கவும் (ஏனென்றால் இந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றாய் விட்டால் சர்க்காரைவிட வர்ணாஸ்ரமிகளுக்கு பெரிய ஆபத்து) ஏற்பட்டது என்றும், பிராமண சூழ்ச்சிகள் பல வற்றில் இது ஒன்று எனவும் பேசியும், எழுதியும் வந்திருக் கிறோம்.”
இந்து மகாசபையின் பிரதான நோக்கம் இந்து - முஸ்லிம் மாச்சரியத்தையும் - மோதலையும் தோற்றுவிப்பது, அதன் மூலம் பிராமணியத்தைக் காப்பது என்பதை அப்போதே பெரியார் புரிந்து வைத்திருந்தார். அதைப் பற்றித் தமிழர் களுக்குச் சொன்ன முதல் தலைவர் அனேகமாக இவராகத் தான் இருப்பார். அடைப்புக்குறிக்குள் உள்ள வார்த்தைகள் மிகவும் அர்த்தபாவம் மிக்கவை.
இந்து மகாசபையானது பிராமண வருணாசிரம சபையே எனும் தனது கணிப்பிற்குச் சில ஆதாரங்களையும் தந்தார் பெரியார். அதிலொன்று அன்றைய தமிழக பிராமணியவாதி களையும் புரிய வைக்கிறது. அது - “தமிழ் நாட்டில் உள்ள இந்து மகாசபைக்கு வடிகட்டின வர்ணாஸ்ரமியான ஸ்ரீமான் டிஆர். ராமச்சந்திரய்யர் அக்கிராசனராய் இருப்பதும், ஒரு வேளை சாப்பாடு ஒரு பிராமணக் குழந்தை சாப்பிடுவதை ஒரு பிராமணரல்லாத குழந்தை பார்த்துவிட்டால் ஒரு மாதம் பட்டினி கிடப்பேன் என்று சொன்ன ஸ்ரீமான் எம்.கே. ஆச்சாரியார் முதலியோர் முக்கியஸ்தர்களாகவும் இருப்ப தோடு அல்லாமல், தமிழ் நாட்டிலுள்ள கிளை இந்து மகாசபைகள் இரண்டொன்றில் தீண்டாமையை ஒழிப்பது தப்பு என்றும், இது விஷயத்தில் பிராமணர்கள் முயற்சியாய் இருந்து அதை எதிர்க்க வேண்டும் என்றும் தீர்மானித்திருப் பதையும் எடுத்துக் காட்டியிருக்கிறோம்.” கொடுமையைக் கவனியுங்கள், ஒரு பிராமணக் குழந்தை சாப்பிடுவதை ஒரு பிராமணரல்லாத குழந்தை பார்த்துவிட்டால் ஒரு மாதம் பட்டினி கிடப்பேன் எனச் சொன்ன பேர்வழிதான் இந்து மகாசபைக்கு இங்கே முக்கியஸ்தர்!
(தொடரும்)

தலைமை - தத்துவம் - இயக்கம்! திராவிடர் கழகத்தை மய்யப்படுத்தி பேராசிரியர் அருணன்! - 3
May 18, 2020 • Viduthalai • கழகம்
"ஜாதி முடிச்சுப் போட்டவன் 'பிராமணன்' அவன்தான் அதை அவிழ்க்க வேண்டும்!" - பெரியார்
தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் மாநில தலைவரும், தமிழ்நாட்டின் சிறந்த சமூக வரலாற்று ஆய்வாளருமான எழுத்தாளர் பேராசிரியர் அருணன் அவர்களின் "காலந்தோறும் பிராமணியம்" எட்டு தொகுதிகளும் மிக அரிய சமூக வரலாற்றுப் பெட்டகங்கள் ஆகும்.
அதில் தந்தை பெரியார் - திராவிடர் கழகம் பற்றிய அவரது கண்ணோட்டம் கருத்துப் பதிவுகளாக வெளிவந்துள்ளன.
அவற்றை நாம் இங்கே தொடர் கட்டுரைகளாகத் தருவதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
சிலவிடங்களில் மாறுபட்ட கருத்துக்கள் கூறப்பட்டிருப்பினும் அத்தகைய அய்யங்களைப் போக்கி, தெளிவுபடுத்தி, புரிதலை ஏற்படுத்துதல் நமது கடமை என்ற உணர்வோடும், பெருமிதத்தோடும் இத்தொடரினை நமது வாசக நேயர்களுக்குப் பயன்பட வெளியிடுகிறோம் - வரலாற்று மீள் பார்வை இதன் மூலம் கிடைக்கிற ஒரு வாய்ப்பு நமக்குக் கிட்டுகிறது!
நன்றி...
- ஆசிரியர், 'விடுதலை'

இப்படி உள்ளூர் உதாரணம் கொடுத்த பெரியார், அகில இந்திய உதாரணம் ஒன்றும் கொடுத்தார். அது - “இந்து மகா சபையின் ஒரு கூட்டத்தில் விதவைகள் புனர்விவாகம் செய்து கொள்ளலாம் என்பதாக ஒரு தீர்மானம் ஏகமனதாய் ஒரு பெரிய விஷயாலோசனைக் கமிட்டியில் நிறைவேற் றினார். இது விஷயத்தைப் பண்டித மாளவியா கேள்விப் பட்டதும் இவ்விஷயம் மகாநாட்டுக்கு கொண்டுவரப் பட்டால் மகாநாட்டுப் பந்தலைக்கூட நான் எட்டிப்பார்க்க மாட்டேன் என்று சொல்லி விட்டார்.’’ பிராமணியத்தின் மற்றொரு பிரதான கூறாகிய பெண்ணடிமைத் தனத்திலும் பிடிவாதமாக இருந்தது இந்துமகா சபை. அன்றே மாதர் குலத்திற்காகக் குரல் கொடுக்கிற மெய்யான ஆண்மகனாகக் கிளம்பிவிட்ட பெரியார் இது விஷயத்திலும் அந்தச் சபையை அம்பலப்படுத்தினார்.
லாலா லஜபதிராய், பண்டித மதன்மோகன் மாளவியா பற்றி கண்டு வந்திருக்கிறோம். இவர்கள் எத்தகைய மடிசஞ்சிப் பேர்வழிகள் என்பதை அறிவோம். காங்கிரசிலும் இந்து மகா சபையிலும் ஒருங்கே இருந்து கொண்டு அரசியலையும் சமுதாயத்தையும் ஒருங்கே பிராமணமயமாக்கத் துடித்த வர்கள் இந்த மகானுபாவர்கள். இவர்கள் அவ்வப்போது தீண்டாமை ஒழிப்புப் பற்றிப் பேசுவார்கள், அதுவும் ஊரை ஏமாற்ற. “ஸ்ரீமான் பண்டித மாளவியா அவர்கள் இந்து மகாசபையில் பேசும்போது தீண்டாமை ஒழிய வேண்டும் என்று பேசுவதும், வர்ணாஸ்ரம பரிபாலன சபையில் இருக்கும்போது தீண்டாமையை ஒழிக்கக் கூடாது என்கிற தீர்மானங்களை நிறைவேற்றுவதுமாய் இருக்கிற தந்திரங் களை எடுத்துக் காட்டியிருக்கிறோம்” என்று பெரியார் எழு தும்போது உண்மை புலப்படுகிறது. இந்த மனிதர் மாளவியா “வர்ணாஸ்ரம பரிபாலன சபை” என்பதிலும் இருந்திருக் கிறார்! இத்தகையவர்களை அடையாளம் காட்டிய அதி முக்கிய பணியையும் நிறைவேற்றினார் பெரியார்.
இதே ஆண்டு மே மாதம் மீண்டும் “இந்து மகாசபை” பற்றி எழுதினார். அதில் இப்படிக் குறிப்பிட்டார் - “இந் துக்களும் முஸ்லிம்களும் ஒன்றுபட்டு ஒற்றுமையாகிவிட் பால் நமது சர்க்காருக்கு எவ்வளவு சங்கடமோ, அதைவிட அதிக சங்கடம் நமது பிராமணர்களுக்கு ஏற்பட்டுவிடும். ஏனெனில் சிறு வகுப்பாயுள்ளவர்கள் வாழ வேண்டுமானால் பெரு வகுப்பாய் உள்ளவர்களை ஒருவருக்கொருவர் உதைத்துக் கொள்ளும்படி செய்து பிரித்து வைத்தால்தான் முடியும் என்பது ஒரு பழமொழி.’’ பிராமணியத்தின் இந்த உத்தியைக் காலந்தோறும் கண்டு வருகிறோம். அதை அன்றே தமிழர்களுக்குச் சொன்னவர் பெரியார். ‘
இன்னொன்றையும் சொன்னார். அது - “தற்காலம் தேசம் எங்கும் ஏற்பட்டிருக்கும் இந்து முஸ்லிம் கலவரத்திற்கு இந்து மகாசபையே காரணம் என்பது நாம் சொல்லாலே விளங்கும். தற்கால பிராமணியம் உள்ளவரை தேசம் உருப்படப் போவதில்லை என்பது நிதர்சனமாகி வருகிறது.” இந்துமுஸ்லிம் கலவரமானது பிராமணியத்தின் திட்டமிட்ட சதி என்பதையும், அதற்கான வேலையை இந்து மகாசபை செய்தது என்பதையும் பளிச்செனச் சொன்னவர் பெரியார்.
இந்து மகாசபையின் மதன்மோகன் மாளவியா லண் டனுக்குப் போக முடிவு செய்தார். ஆனால் கடல் தாண்டக் கூடாது எனும் சாஸ்திரத்தை மீறவும் அவருக்கு மனமில்லை. என்ன செய்தார் தெரியுமா? இந்திய மண்ணில் ஒரு உருண்டை யையும் கங்கா ஜலத்தில் சிறிதையும் கையோடு எடுத்துக் கொண்டு போனார். பிராமண சமையல்காரர் ஒருவரையும் கூடவே அழைத்துப் போனார். இந்த மடிசஞ்சித்தனத்தைக் கேலி செய்யும் வகையில் “மண்ணுருண்டை மாளவியா” என்றே அவரைக் குறிப்பிட்டு எழுதினார் பெரியார்.
ஆரிய சமாஜத்தையும் பெயர் சொல்லி விமர்சித்தார். அதன் “சுத்தி” எனப்பட்ட மதமாற்ற வேலையின்படி பிராமணிய மந்திரங்களையும் சடங்குகளையும் ஒருவர் ஏற்க வேண்டியிருப்பதைச் சுட்டிக் காட்டினார்.
மூன்று காரியங்களைச் செய்தார்
சுயமரியாதை இயக்கத்தின் துவக்கத்திலேயே மூன்று காரியங்களைச் செய்தார் பெரியார். ஒன்று, வகுப்புவாரி பிரதிநிதித்துவத்திற்காக விதவிதமாக வாள் சுழற்றியது. இரண்டு, தீண்டாமை ஒழிப்புக்கும் தனி முக்கியத்துவம் கொடுத்தது. மூன்று, பிராமணியத்தின் ஓர் அடிவேராக இருந்த மதம் - கடவுள் - சாஸ்திரங்களை விமர்சித்தது. 1926 முதல் ஆறு மாதங்களிலேயே இந்த மூன்றும் அவரது “குடி அரசு” எழுத்துக்கள் - பேச்சுக்களில் வெளிப்பட்டன.
அரசாங்கப் பதவிகளில் பிராமணர் - பிராமணரல்லாதார் நிலையை ஒப்பிட்டு எழுதினார். கலெக்டர் உத்தியோகத்தில் 11 இந்தியர்கள் இருப்பதில் 9 பேர் பிராமணர்கள். ரூ 250க்கு மேல்பட்ட உத்தியோகங்களில் பிராமணர்கள் 594 பேர் என்றால், பிராமணரல்லாதார் 280 பேர் மட்டுமே. ரூ 150க்கும் ரூ 250க்கும் இடைப்பட்ட உத்தியோகங்களில் பிராமணர்கள் 2,679 பேர் என்றால் பிராமணரல்லாதார் 1,666 பேர் மட்டுமே. 200 ஜில்லா முன்சீபுகளில் 150 பேர் பிராமணர்கள். 61 சப் ஜட்ஜுகளில் 45 பேர் பிராமணர்கள். ஜில்லா ஜட்ஜுகளில் 7 பேர் பிராமணர்கள். சென்னை மாகாணத்தில் பிராமணர் களின் எண்ணிக்கை 3 சதவீதத்திற்கும் குறைவே. ஆனால், பதவிகளில் மட்டும் அதைவிட பலப்பல மடங்கு அதிகம். அதனால் தான் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கேட்பதாக இப்படிப் புள்ளிவிபர ஆதாரத்துடன் வாதாடினார் பெரியார்.
வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை எதிர்த்து காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி பேசியிருந்தார். அவரது பேச்சின் சாரங்களை முதலில் பட்டியலிட்டவர், பின்னர் அதற்குப் பதிலும் கொடுத்தார். சத்தியமூர்த்தி செய்த விமர்சனத்தில் இப்படியொரு அம்சம் - “கோகலே ஒப்புக் கொள்ளாதிருந் தால் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் ஏற்பட்டிருக்காது.” இதற்குப் பெரியாரின் பதில் தர்க்கரீதியானதும் சுவாரஸ்ய மான தும் ஆகும். அது - “வகுப்புவாரி பிரதிநிதித் துவத்தின் நன்மை தீமைகளைப் பகுத்து உணர கோகலேயை விட இந்தியாவிலே வேறு ஒருவர் இருந்தார் என்று யாராலும் சொல்ல முடியாது. மகாத்மாவுக்கும் ஸ்ரீமான் ஈ.வெ. இராம சாமி நாயக்கருக்கும் இந்தியாவிலேயே யோக்கியமான பிராமணன் இல்லை என்கிற வாதம் நிகழ்ந்தபோது அது சமயம் மகாத்மா ஒருவர்கூட இல்லை என்று சொல்லக் கூடாது, நான் ஒரு யோக்கியமான பிராமணனைப் பார்த் திருக்கிறேன், அவர் தான் கோகலே’ என்று சொன்னதோடு அதற்குப் பல உதாரணங்களையும் சொல்லி ‘மனிதர்களில் அவருக்கு மேம்பட்ட மனிதரை நான் பார்த்ததில்லை’ என்று சொன்னார். இது சில தென்னாட்டு பிராமணர்களையும் வைத்துக் கொண்டுதான் சொன்னார். இப்பேர்ப்பட்ட ஓர் உத்தம பிராமணராலும், உத்தம தேசபக்த ராலும், கொஞ்சமும் சுயநலமற்ற தியாகியாலும் ஒப்புக் கொள்ளப்பட்டது தான் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்.”
“ஒரு யோக்கியமான பிராமணர்” என்று திலகரைச் சொல்லவில்லை காந்திஜி, கோகலேயைத்தான் சொன்னார். ஏன் சொன்னார் என்பது புரிந்து போகிறது. அவர் விரிந்த மனசுக்காரர். முஸ்லிம்கள் உள்ளிட்ட பிறரது உரிமையையும் நலனையும் அங்கீகரித்த பிராமணர். அவரே ஒப்புக் கொண்ட ஒன்று இந்த சத்தியமூர்த்தி எதிர்க்கிற காரணத்தால் தவறாகிப் போகாது என்றார் பெரியார். பிராமணியவாதிகள் திலகரை தூக்கிப் பிடித்து, கோகலேயை உதாசீனப்படுத் தினார்கள் என்பதை ஏற்கெனவே கண்டு வந்தோம். அதன் காரணத்தை சத்தியமூர்த்தியின் ஒப்புதல் வாக்குமூலம் வெளிப்படுத்தியது. பெரியார் அதை வசமாகப் பிடித்துக் கொண்டார்.
மலையாளம் ஜில்லாவைச் சேர்ந்த பாலக்காடு நகராட்சி எல்லைக்குள் உள்ள கல்பாத்தி என்கிற பகுதி பிராமணர்கள் முக்கியமாய் வகிக்கும் பாகம். அதிலுள்ள தெருக்கள் எல்லாம் நகராட்சியாரைச் சேர்ந்தது. அப்படியும் அத் தெருக்கள் வழியாகப் பஞ்சமர்களை நடமாட விடுவதில்லை பிராமணர் கள். அங்கு மட்டுமல்ல பாலக்காடு நகர பெரிய கடை வீதியி லும் அங்குள்ள வியாபாரிகள் இவர்களை அனுமதிப்பதில்லை. ஏதேனும் பொருள் வாங்க வேண்டும் என்றால் முகமதியர் அல்லது கிறிஸ்தவர் அல்லது சாதி இந்து மூலமாகத்தான் காசு கொடுத்து வாங்கிக் கொள்ள வேண்டும். இந்த அநியாயத்தைக் கண்டித்து வன்மையாக வும், உணர்வு பூர்வமாகவும் எழுதினார் பெரியார். “திருட்டு, கொலை, கொள்ளை, போர்ஜரி, விபசாரம் முதலிய வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளியாகவோ, தண்டித்த கைதியாகவோ இருந்தால் அந்த வீதி வழியாக போலீஸ் ஸ்டேஷனுக்கு போலீஸ்கார்கள் கைவிலங்கிட்டோ சங்கி லியில் பிணைத்துக் கட்டியோ கூட்டிக்கொண்டு போவதை அடிக்கடி பார்க்கலாம். யோக்கியமானவன்தான் அவ்வழி யில் நடக்கக் கூடாது” என்று அவருக்கே உரிய நயமான நையாண்டியோடு எழுதினார்.
தமிழ்நாட்டிலோ பிராமணரல்லாத சகலகர்கள்பாலும் ஒருவகைத் தீண்டாமை - பாராமை -இருந்தது - “தஞ்சாவூர் ரயில்வே ஸ்டேஷனில் உள்ள இந்தியர் சாப்பாட்டு விடு தியை நாம் இவ்வாரம் பார்க்க நேர்ந்தது. அங்கு மாடியின் மேல் கட்டப்பட்டுள்ள இடத்தில் சமையல் செய்யும் பாகம் போக பாக்கியிடத்தில் நாலில் மூன்று பாகத்தைத் தட்டி கட்டி மறைத்து பிராமணர்களுக்கு என்று ஒதுக்கி வைத்துவிட்டு, நாலில் ஒரு பாகத்தை ‘சூத்திரர்’, ‘பஞ்சமர்’, ‘மகமதியர்’, ‘கிறிஸ்தவர்’, ‘ஆங்கிலோ இந்தியர்’ என்கின்ற பிராமணரல் லாதவருக்கு என்று ஒதுக்கி வைத்து, அதிலேயே எச்சிலை போடுவதற்கும், கை கழுவுவதற்கும், வாய் கொப்பளிப்ப தற்கும், விளக்குமாறு சாணிச்சட்டி, கூடை, முறம் வைப்ப தற்கும், எச்சில் பாத்திரம் சமையல் பாத்திரம் கழுவுவதற்கு மாக ஏற்பாடு செய்யப்பட்டு, இவ்வளவு அசிங்கங்களுக்கும் இந்த இடமே உபயோகப் படுத்தப்பட்டு வருகிறது. இவை களைப் பற்றி யாராவது கேட்டால், கேட்பவர்களை வகுப்பு துவேஷத்தைக் கிளப்புகிறார்கள், இது மிகவும் அற்பத்தன மானது என்று நமது பிராமணர்கள் சொல்லுகிறார்கள், எழுதுகிறார்கள்.’’ மனிதர்களுக்குள் இவ்வளவு கேவலமான ஏற்றத்தாழ்வு காட்டுவது அற்பத்தனமான விஷயமாம்! ஒடுக்குமுறையாளர்களுக்கு ஒடுக்குமுறை எப்போதும் அற்பத்தனமாகத்தான் படும். ஒடுக்கப்பட்டவனுக்கல்லவா அந்த வலியும், ரணமும் தெரியும். அதை தனக்கே உரிய ஒரு எளிய இலக்கிய நடையில் எதிரொலித்தார் பெரியார்.
“தாழ்ந்த வகுப்பாருக்கும் தொழிலாளர்களுக்கும் தனிப் பிரதிநிதித்துவம் ஏற்படுத்த வேண்டும் என்பதை நமது பார்ப்பனர்கள் எவ்வளவேர் தங்கள் சூழ்ச்சியின் மூலம் எதிர்த்தும், சர்க்கார் அவ்வகுப்புகளுக்கென்று பிரதிநிதித் துவம் கொடுக்க பார்லிமெண்டில் சம்மதித்து விட்டார்கள்” என்று உற்சாகமாக வரவேற்றார் பெரியார். இதே கட்டுரை யில் இன்னொரு அபூர்வமான விஷயமும் உள்ளது. “எந்தக் காரணத்தைப் பற்றியும் சர்க்கார் நியமனத்திற்கோ, பொதுத் தேர்தலில் தங்களுக்கென்று ஸ்தானங்கள் ஒதுக்கி வைப் பதற்கோ கண்டிப்பாய் ஒப்புக் கொள்ளக் கூடாது. தங்கள் வகுப்பு தனித்தேர்தல் மூலமே தங்களுக்கு பிரதிநிதித்துவம் கிடைக்கும்படி பிரயத்தனப்பட வேண்டும்“ என்று தனித்தொகுதி முறையை அன்றைக்கே பரிந்துரைத்தார். இது விஷயத்தில் எல்லாம் அவர் தாழ்த்தப்பட்ட மக்களோடு சேர்ந்து நின்றார்.
“உயர்வு தாழ்வு வித்தியாசங்கள் பிராமணரிடத்தில் மாத்திரம் இல்லை. பிராமணரல்லாதாரிடத்திலும் இந்த வித்தியாசம் இருந்துதானிருக்கிறது. நாம் பிராமணர்களை மட்டும் ஏன் சொல்லுகிறோம் என்று நீங்கள் கேட்கலாம். அவர்கள் தான் வழிகாட்ட வேண்டும். முடிச்சுப் போட்டவன் அவிழ்த்தால் சீக்கிரம் அவிழ்க்கலாம். பிராமணர் பார்த்து விமோஜனம் செய்வதனால் சீக்கிரம் ஒழிந்து விடும். காரணம் இவர்களைப் பார்த்துத்தான் மற்ற ஜாதியார் காப்பியடித்தார் கள்” - என்றும் தனது வழிமுறையை விளக்கினார் பெரியார். “முடிச்சுப் போட்டவன் அவிழ்த்தால் சீக்கிரம் அவிழ்க்கலாம்“ என்பது வெறும் நயமான சொல வடை மட்டுமல்ல, அதில் வரலாற்று உண்மை இருக்கிறது. சாதியக் கட்டமைப்பைக் கொண்டு வந்ததில் பிராமண-ஷத்திரியர் எனும் இரு ஆளும் வர்ணங்களுக்கும் பங்கிருந் தது. ஆனால் சமூக ரீதியில் அதை நிலைநிறுத்தியதும், வழிகாட்டியதும் பிராமணப் பண்டிதர் களே என்பதைக் கண்டு வந்தோம். போலச் செய்தல் என்கிற முறையில் பிறரும் அந்தப் பாதையில் நடைபோட்டார்கள்.
(தொடரும்)

சனி, 16 மே, 2020

திராவிடர் கழகத்தை மய்யப்படுத்தி பேராசிரியர் அருணன்!

தலைமை - தத்துவம் - இயக்கம்! - 1
May 16, 2020 • Viduthalai • மற்றவை

திராவிடர் கழகத்தை மய்யப்படுத்தி பேராசிரியர் அருணன்!

காங்கிரசிலிருந்து பெரியார் வெளியேறியது ஏன்? - "காங்கிரசிலிருந்த பார்ப்பனத் தலைவர்களின் வர்ணாசிரம வெறி!"

தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் மாநில தலைவரும், தமிழ்நாட்டின் சிறந்த சமூக வரலாற்று ஆய்வாளருமான எழுத்தாளர் பேராசிரியர் அருணன் அவர்களின் "காலந்தோறும் பிராமணியம்" எட்டு தொகுதிகளும் மிக அரிய சமூக வரலாற்றுப் பெட்டகங்கள் ஆகும்.

அதில் தந்தை பெரியார் - திராவிடர் கழகம் பற்றிய அவரது கண்ணோட்டம் கருத்துப் பதிவுகளாக வெளிவந்துள்ளன.

அவற்றை நாம் இங்கே தொடர் கட்டுரைகளாகத் தருவதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

சிலவிடங்களில் மாறுபட்ட கருத்துக்கள் கூறப்பட்டிருப்பினும் அத்தகைய அய்யங்களைப் போக்கி, தெளிவுபடுத்தி, புரிதலை ஏற்படுத்துதல் நமது கடமை என்ற உணர்வோடும், பெருமிதத்தோடும் இத்தொடரினை நமது வாசக நேயர்களுக்குப் பயன்பட வெளியிடுகிறோம் - வரலாற்று மீள் பார்வை இதன் மூலம் கிடைக்கிற ஒரு வாய்ப்பு நமக்குக் கிட்டுகிறது!

நன்றி...

- ஆசிரியர், 'விடுதலை'

 

தமிழகத்தின் ஈரோட்டில் 1879 செப்டம்பர் 17ல் பிறந்தார் ஈ.வெ. ராமசாமி. பின்னாளில் “பெரியார்” என்று பிரியமாக வும், மரியாதையாகவும் அழைக்கப்பட்டார்.. வசதியான வணிகக் குடும்பம். பள்ளிப் படிப்பு அதிகம் இல்லை யென்றாலும் பொது அறிவும், கூர்ந்த மதியும் உண்டு. கூடவே சகமனிதர்கள்பால் மட்டற்ற அன்பும் உண்டு. இது இவரைப் பொதுவாழ்வில் இறக்கியது.

1918இல் ஈரோடு நகரசபைத் தலைவரானார். அப்போதே காங்கிரசிலும் தீவிரமாக இருந்தார். அப்போது வரவிருந்த ராஜாங்கச் சீர்திருத்தங்கள் பற்றி ஆலோசிக்க ஒரு சிறப்பு மாநாடு - காங்கிரஸ் - கூடவிருந்தது. அந்த “விசேஷக் காங்கிரசின் அக்கிராசனத்திற்கு லோகமான்ய திலகரைத் தேர்ந்தெடுத்தால் தான் நமது தேசத்தின் ஷேமத்துக்குப் பொருந்தியதாகும்” என்று தமிழகத்தின் காங்கிரஸ் தலை வர்கள் பலரும் சேர்ந்து ஓர் அறிக்கை வெளியிட்டார்கள். அதில் கையெழுத்திட்டவர்களில் சி.இராஜகோபாலாச் சாரியார், வி.ஓ. சிதம்பரம்பிள்ளை போன்றோரோடு “இ.வி. ராமசாமி நாயக்கரும், ஈரோடு”ம் இருந்தார். அதாவது காங்கிரசின் மீது மட்டுமல்ல திலகர் மீதும் அவ்வளவு பற்று. பிரிட்டீஷ் ஆட்சியாளர்களை எதிர்ப்பதே பிரதான கடமை என்றிருந்தாரே தவிர, பிராமணிய எதிர்ப்பு எல்லாம் அப்போது வரவில்லை. திலகரின் பிராமணியச் சிந்தனைகள் இவரை எட்டியதாகத் தெரியவில்லை; அவரின் பிரிட்டீஷ் எதிர்ப்பு இவரைப் பிரமாதமாக ஈர்த்திருந்தது.

இதன் பொருள் பிராமணர் - பிராமணரல்லாதார் விவகாரம் இவருக்கு அப்போது தெரியாது என்பதல்ல, 1916லேயே “நீதிக்கட்சி” எனப் பிரபலமாக அறியப்பட்ட “தென்னிந்திய நல உரிமைச் சங்கம்“ உருவாகியிருந்தது. இதற்குப் போட்டியாகக் காங்கிரசிலிருந்த பிராமணரல்லாத தலைவர்கள் “சென்னை மாகாணச் சங்கம்‘ என்பதை 1917இல் உருவாக்கினார்கள். அதன் துணைத் தலைவர்களில் ஒருவ ராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார் பெரியார். அதன் இரண் டாவது மாநாடு 1919 செப்டம்பரில் ஈரோட்டில் நடந்தபோது அதன் வரவேற்புக்குழுத் தலைவராக இருந்தார். அந்த வரவேற்புரையில் இப்படிக் குறிப்பிட்டார் - “தேச முன் னேற்றத்தை நாட்டக் கிளர்ச்சி செய்யும் காலத்து, இந்தியா வில் பிறந்த எந்த சகோதரர்கள் மீதும் துவேஷங் காட்டலா காது. பிராமணத் துவேஷங்காட்டி தேசநலத்தை நாடுவது தேசத்திற்கு தீங்கு செய்வதையொக்கும்.’’ அன்று நடந்த பிராமணிய எதிர்ப்பு இயக்கத்தை பிராமணத் துவேஷமாகவே பெரியார் கருதினார். அது பிரிட்டீஷ் எதிர்ப்பு இயக்கத்திற்கு - தேச நலனுக்கு - கேடு பயப்பது என்றே நம்பினார்.

அதுமட்டுமல்ல, அந்த பிராமணிய எதிர்ப்பு இயக்கத்தார் பற்றி அன்று பிராமணியவாதிகள் சுட்டிக்காட்டிய ஒரு முக்கியமான, சரியான குற்றச்சாட்டை இவரும் திருப்பிச் சொன்னார். அது - “நாம் பிராமணர் மீது எவ்வகைக்குற்றம் குறைகளைச் சுமத்துகிறோமோ அவ்வகைக் குற்றங்குறை களைப் பஞ்சமர் முதலியோர் நம்மீது சுமத்துகின்றனர். பிராமணரோடு அமர்ந்து உணவு கொள்ள விரும்பும் வேளாளன் பஞ்சமனோடு அமர்ந்து உணவு கொள்ள விரும்புகிறானில்லை. பிராமணனோடு கலக்க விரும்புபவன் ஏன் பஞ்சமனோடு கலக்க விரும்பலாகாது? நம்மவருள் பலர் தாழ்த்தப்பட்டோருடன் சகோதரத்துவம் காட்டாது பிராமணனிடத்து சகோதரத்துவமில்லை என்று கூறுவது அறியாமையேயாகும்.” இதுதான் அன்றைய நிலைமை. ஆனால், இதற்காக பிராமணியத்தை எதிர்த்து பிராமண ரல்லாதார் போராடக்கூடாது என்பதில்லை. அந்தப் போராட்டமானது மேலும் கீழுமான தீண்டாமை ஒழிப்புப் போராட்டமாக ஒரு விரிந்த தளத்தில் நடத்தப்பட வேண்டும் என்பதே இதற்கான விடையாகும். அன்றைய பிராமணிய வாதிகளோ பிராமணரல்லாதார் பஞ்சமர்பால் கடைப் பிடிக்கும் தீண்டாமையைக் காட்டித் தாங்கள் சூத்திரர்கள் மற்றும் பஞ்சமர்பால் கடைப்பிடிக்கும் தீண்டாமையை நியாயப்படுத்தினார்கள், அதை எதிர்த்துப் போராட்டம் நடத்தக் கூடாது என்றார்கள். இதை அப்படியே அன்று அப்பாவித்தனமாக எதிரொலித்தார் பெரியார். இதைப் பின்னாளில் அவரே ஒப்புக் கொண்டிருக்கிறார். இத்தகைய புரிதலில் தான் திலகரின் பிராமணியச் சிந்தனைகள் அவரது மனதைத் தைக்கவில்லை அல்லது அன்று அவர் அளவுக்கு அவை எட்டவில்லை எனலாம்.

“1920இல் காந்தியாரின் திட்டப்படி ஒத்துழையாமை இயக் கம் தொடங்கப்பட்டது. தீண்டாமை விலக்கு, மதுவிலக்கு, கோர்ட்டு விலக்கு, பள்ளிக்கூட விலக்கு, உத்தியோக விடு தலை ஆகியவைகள் ஈவெரா. வின் மனத்தைக் கவர்ந்தன என்றாலும், தீண்டாமை ஒழிப்பு விஷயத்தைக் காரியத்தில் நிறைவேற்றுவதற்கு நல்ல சந்தர்ப்பம் ஒன்று ஏற்படப் போகிறது என்ற ஆசையாலும், ஜாதி வேற்றுமையை ஒழிக்க வேண்டிய காரியத்திற்கும் ஒரு அரிய சந்தர்ப்பம் கிடைக்கிறதே என்ற அவாவினாலும் சிறிதும் யோசிக்காமல் சட்டென்று காங்கிரசில் இறங்கிவிட்டார்” என்று 1939லேயே பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய சாமி.சிதம் பரனார் கூறுகிறார். பிரிட்டீஷ் எதிர்ப்போடு தீண்டாமை ஒழிப்பு, ஜாதி வேற்றுமை ஒழிப்பு என்பதும் காங்கிரசின் ஒத்துழையாமை இயக்கத்தில் அவர் இறங்கக் காரணமாக இருந்தது.

வைக்கம் போராட்டத்தில் கைது

இது சிறிது காலத்திலேயே வைக்கம் போராட்டத்தில் அவர் காட்டிய ஈடுபாட்டின் மூலம் தெளிவாக வெளிப் பட்டது. திருவாங்கூர் சமஸ்தானத்தில் இருந்தது வைக்கம் என்பதை அறிவோம். அதன் கோவிலைச் சுற்றிய சாலை களில் தீண்டப்படாதார் சென்றால் கோவில் தீட்டாகிவிடும் என்றும், பக்தர்கள் தீட்டாகிப் போவார்கள் என்றும் கூறி தடை விதித்திருந்தார்கள் பிராமணியவாதிகள். அங்கே தீண்டப்படாதார் என்போரில் ஈழவர், புலையர், சாணார், பறையர் உள்ளிட்ட சாதிகளைச் சேர்ந்த பல லட்சம் பேர் இருந்தார்கள். இவர்கள் யாரும் அந்தச் சாலைகளில் நடமாட முடியாது. வினோதம் என்னவென்றால் அவற்றில் செல்ல இந்து அல்லாதவருக்கு உரிமை உண்டு; ஆனால் இவர் களுக்கு மட்டும் இல்லை. இந்தத் தடையை எதிர்த்தே கோவிலை அல்ல, அதையொட்டிய சாலைகளைத் திறந்து விடச் சொல்லியே - 1924இல் போராட்டம் நடந்தது. கோவில் நுழைவுப் போராட்டம் அல்ல, சாலை நுழைவுப் போராட்டம்!

இந்தப் போராட்டத்திற்கு திருவாங்கூருக்கு வெளியே உள்ளவர்களையோ அல்லது பிற மதத்தவர்களையோ அழைக்கக் கூடாது என்றார் காந்திஜி. ஆனால் நடந்ததோ இதற்கு நேர்மாறானது. அங்கே சத்தியாக்கிரகம் நடத்திய அதன் தலைவர் மேனன் கைதானதும், போராட்டத்தை தொடர்ந்து நடத்தியவர் கிறிஸ்தவரான ஜார்ஜ் ஜோசப். இப்படி வரிசையாகப் பலரும் கைதானதும் என்ன நடந்தது? “சிறையிலிருந்தபடியே யோசித்துத் தோழர்கள் ஜார்ஜ் ஜோசப்பும், குரூர் நீலகண்ட நம்பூதிரியும் ஈ.வெ.ரா.வுக்கு ஒரு கடிதம் எழுதினார்கள்” என்கிறார் சாமி.சிதம்பரனார். அதற்கேற்பவே போராட்டத்தை நடத்த வைக்கம் போனார் பெரியார்.

“வெளி உதவியை நாட வேண்டாம்” என்று காந்திஜி “யங் இந்தியாவில்” எழுதியது 1924 ஏப்ரல் 24 அன்று. அதற்கு இரண்டு நாட்கள் முன்புதான் பெரியார் சிறைத்தண்டனை பெற்று அருவிக்குத்திச் சிறையிலிருந்தார். பெரியார் போன்ற வர்கள் இது விஷயத்தில் தலையிடக் கூடாது என்றே காந்திஜி அப்படி எழுதியதாகத் தெரிகிறது. ஆனால், பெரியார் பங்கேற்றது அந்த இயக்கத்திற்கு ஒரு பரந்த தளத்தைத் தந்தது. “இறுதியில் சத்தியாக்கிரகம் வெற்றி பெற்றது. தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தெருவில் நடக்கும் உரிமை வழங்கப்பட்டது. இந்தியாவிலேயே முதன்முதல் வெற்றி பெற்றது வைக்கம் சத்தியாக்கிரகம் ஒன்றேயாகும். இச்சத்தியாக்கிரகம் நாடெங்கும் புகழ்பெற்றுவிட்டது. இதனால் ஈ.வெ.ரா. ‘வைக்கம் வீரர்’ என்ற பெயர் பெற்றார். இன்றும் தமிழ்நாட்டார் இப்பெயரை மறக்கவில்லை” என்று 1939இல் சாமி.சிதம்பரனார் எழுதியதிலிருந்து 1925லேயே அத்தகைய புகழைப் பெரியார் பெற்றிருந்தார் என்பது தெளிவாகிறது. சமூக சீர்திருத்தத்தில் அப்போதே பெரியார் எவ்வளவு ஆர்வமாக இருந்தார் என்பதும் உறுதியாகிறது.

சேரன்மாதேவி குருகுல விவகாரம்

வ.வே.சு அய்யர் சாவர்க்கரின் சகபாடி, சரியான பிராம ணியவாதி என்பதைக் கண்டு வந்திருக்கிறோம். வாஞ்சி அய்யரைத் தயார் செய்தவர் என்பதையும் அறிவோம். இந்த மனிதர் வங்கப் பிரிவினை ரத்தானதும், திலகர் காலம் முடிந்து காந்தி காலம் பிறந்ததும் சாந்த சொரூபி ஆகிப் போனார். ஆனால், தனது பிராமணியச் சிந்தனையை விடவில்லை. அதேபோல சாவர்க்கர் மீது தான் கொண்ட பக்தியையும் விடவில்லை. “1925 ஜனவரி 2இல் மகாராஷ்டிர மாநிலத்தின் இரத்தினகிரியில் வீர சாவர்க்கரைச் சந்தித்தார்” வ.வே.சு. அய்யர் என்று கூறுகிறார் ஆய்வாளர் பெ.சு. மணி.

இப்படிப்பட்டவர்தான் தமிழ்நாட்டில் குருகுலம் ஒன்றை ஆரம்பித்தார். ஹரித்வாரில் லாலா முன்ஷிராம் (பின்னாளில் சிரத்தானந்தர்) பிராமணியம் வளர்க்க குருகுலம் ஒன்றை ஆரம்பித்ததை அறிவோம். “இந்தக் குருகுலத்தை வ.வே.சு. அய்யர் நேரில் கண்டது அவருடைய தேசியக் கல்விச் சிந்தனை செயல் வடிவம் பெறத் தூண்டியது” என்கிறார் பெ.சு. மணி. பிராமணியம் காக்க அன்று துப்பாக்கி ஏந்தியவர்கள் இப்போது அதே காரணத்துக்காகக் குருகுலம் துவக்கினார்கள். அவர்களது அகில இந்தியத் திட்டத்தின் ஒரு கிளைதான் அய்யரின் குருகுலம்.

1923 டிசம்பரில் கல்லிடைக்குறிச்சியில் முதலில் தனது குருகுலத்தைத் துவக்கியவர், பின்னர் அதை சேரன்மா தேவிக்கு மாற்றினார். 1924 அக்டோபர் முதல் அந்தக் குருகுலத்தின் சார்பில் “பால பாரதி” எனும் பத்திரிகையும் கொண்டு வந்தார். இந்தக் குருகுலத்திற்கு தனிப்பட்ட காங் கிரஸ்காரர்களிடமிருந்து ஆயிரக்கணக்கான ரூபாய் வசூல் செய்தது மட்டுமல்லாது, தமிழ்நாடு காங்கிரசிலிருந்தும் பணம் வாங்கியிருந்தவர். அப்படி வாங்கி நடத்திய குரு குலத்தில் பிராமணருக்கும் பிராமணரல்லாதாருக்கும் தனித் தனி பந்தி நடந்தது. சமபந்தி போஜனம் இல்லை. இதை தமி ழகக் காங்கிரசின் முப்பெரும் பிராமணரல்லாத தலைவர் களான பெரியார், திரு.வி.க., டாக்டர் வரதராஜூலு நாயுடு ஆகியோர் எதிர்த்தார்கள்.

வரதராஜூலு நாயுடு தனது “தமிழ்நாடு” பத்திரிகையில் இப்படி எழுதினார் - “குருகுலத்தில் இம்மாதிரி வித்தியாசம் கூடாது என்று நான் சொன்னேன். ஆனால் அந்த வேற்று மையை ஒழிக்க முடியாது என்று ஸ்ரீமான் அய்யர் கூறினார். இதைக் கேட்டதும் நானும் ஸ்ரீமான் ஈ.வி. ராமசாமி நாயக்கர் போன்ற பிராமணரல்லாதாரும் திடுக்கிட்டுப் போனோம். இது தெரிந்ததும் காங்கிரசிலிருந்து மறுபடியும் ரூ. 5,000 கொடுக்கவிருந்ததை, நிறுத்திவிட்டோம். நானும் ரூபா கொடுப்பதை நிறுத்தி விட்டேன்.”

காங்கிரஸ் தலைவர்கள் மட்டுமல்ல, கானாடுகாத்தான் வை.சண்முகம் செட்டியார் போன்ற பொது மனிதர்களும் இந்த அநீதியை எதிர்த்தார்கள். செட்டி நாட்டிலிருந்து வெளிவந்த “குமரன்” பத்திரிகையும் இது பற்றிக் கடுமையாக எழுதியது. அது - தமிழ் மக்களைப் பார்ப்பனருக்கு அடி மைப் படுத்தவும், தாய் மொழியைச் சித்திரவதை செய்ய வுமே அது தோன்றியிருக்கிறது என்பது குருகுலத்தின் தற்கால நடைமுறையில் விளங்குகின்றது.”

இப்படிப் பல முனைகளிலிருந்து எதிர்ப்புக் கிளம்பியும் வ.வே.சு. அய்யர் அசைந்து கொடுக்கவில்லை. காந்திஜி ஒரு சமரசத் திட்டம் தந்தார். அது நடைமுறையில் வருணா சிரமத்தைக் காப்பாற்றுவதாக இருந்தது. இதை பெரியார் உள்ளிட்ட தலைவர்கள் ஏற்கவில்லை. தமிழகக் காங்கிரசில் இது விஷயமாக நிறைவேற்றப்பட்ட ஒரு நியாயமான தீர்மானத்தை முடக்கிப் போட ராஜாஜி, டாக்டர் டி.எஸ்.எஸ். ராஜன், கே. சந்தானம், டாக்டர் டி.வி. ஸ்வாமிநாத சாஸ்திரி எனும் பிராமணர்கள் ஒட்டு மொத்தமாகத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியிலிருந்து ராஜினாமாச் செய்தார்கள். வ.வே.சு. அய்யரின் பிராமணிய நடைமுறைக்கு ஆதரவாக இவர்கள் எல்லாம் ஓரணியில் நிற்பதைக் கண்டு அதிர்ந்து போனார் பெரியார். காங்கிரஸ் மீது அவருக்கிருந்த நம்பிக்கை ஆட்டங்காண ஆரம்பித்தது.

(தொடரும்)

செவ்வாய், 12 மே, 2020

இரட்டைமலை சீனிவாசன்!

ஞாயிறு, 16 ஜூலை, 2017



``ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை நாயகர் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்த நாள் இந்நாள் (7.7.1859).

தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ``ஆதிதிராவிடர் மகாஜன சபையைத் தொடங்கிய முன்னோடி இவர். 1893இல் `பறையன் என்ற பத்திரிகையைத் தொடங்கி நடத்தி வந்தார்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பல மாநாடுகளை நடத்தியவர். 1930, 1931 ஆகிய இரண்டு ஆண்டுகளிலும் இலண்டனில் நடைபெற்ற வட்டமேசை மாநாட்டில் பங்குகொண்டு இந்தியாவில் ஒடுக்கப்பட்ட மக்களின் அவல நிலையைப் படம் பிடித்துக் காட்டினார்.

ஒரு நிகழ்வை எடுத்துச் சொன்னால், அவரின் மதிநுட்பத்தை எளிதில் புரிந்துகொள்ளலாம்.

1930இல் இலண்டனில் நடை பெற்ற வட்டமேசை மாநாட்டுக்குச் சென்றிருந்த தலைவர்களுக்கு அய்ந்தாம் ஜார்ஜ் மன்னர் விருந்தளித்தார். டாக்டர் பாபா சாகெப் அம்பேத்கர், ஏ.டி. பன்னீர்செல்வம், டாக்டர் ஏ. இராமசாமி முதலியார் போன்றோரும் கலந்துகொண்டனர்.

அய்ந்தாம் ஜார்ஜ் மன்னர் அந்நாட்டு மரபுப்படி ஒவ்வொருவரையும் கைகுலுக்கி மகிழ்ச்சியைத் தெரிவித்தார்.

இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் இடம் வந்தபோது, தன் கையை நீட்டாமல் இழுத்துக் கொண்டார்.
மன்னருக்கு அதிர்ச்சி! காரணம் விளங்காமல் திகைத்தார். அந்தத் திகைப்பை வெகுநேரம் நீடிக்க விடாமல் காரணத்தைக் கூறினார் இரட்டைமலை சீனிவாசன்.

`நான் தீண்டத்தகாதவன், எங்கள் நாட்டில் எங்களைத் தொடமாட்டார்கள்  பறையன் என்று எங்களுக்குப் பெயர் என்று சொன்னார்.

அதிர்ச்சி கலந்த வார்த்தைகளில், `உங்கள் நாட்டில் பறையன் கீழே விழுந்தால்கூட தூக்கிவிட மாட்டார்களா? என்று மன்னர் கேட்டார்.

`ஆமாம். தூக்கிவிட மாட்டார்கள். உங்கள் ஆட்சியிலும் இந்தியாவில் இந்த நிலைதான்! என்று பக்குவமாகப் பதில் சொன்னார்.

இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் நீதிக்கட்சியுடன் நெருக்கமாகத் தொடர்பு கொண்டிருந்தவர்.

1924இல் சென்னை மாநில சட்டமன்ற உறுப்பினராக இருந்த இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் கீழ்க்கண்ட தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.

1(9) இந்தச் சட்டமன்றம் கீழ்க்கண்டவைகளை நிறைவேற்றி அதை அரசாங்கத்தின் கொள்கையாக அறிவிக்கப்பட்டது.

(ய) எந்தப் பொதுச்சாலையிலோ, தெருவிலே அது எந்தக் கிராமத்திலோ அல்லது நகரத்திலோ இருந்தாலும் அதில் எந்த இனத்தைச் சேர்ந்த மனிதனாய் இருந்தாலும் நடப்பதற்கு உள்ள உரிமையை யாரும் தடுக்க முடியாது என்பதையும்,

() எந்த அரசு அலுவலகமாக இருந்தாலும் அல்லது கிணறு, குளம் போன்றவைகளாய் இருந்தாலும், அல்லது பொது வர்த்தகம் நடை பெறும் இடமாக இருந்தாலும், இவைகளில் எல்லாம் ஜாதி இந்துக்களுக்கு என்னென்ன உரிமைகள் இருக்கின்றனவோ, அவ்வளவு உரிமைகளும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உண்டு என்பதையும் சென்னை அரசு ஒப்புக்கொண்டு அதைத் தீர்மானமாக நிறைவேற்றி, எல்லா மாநகராட்சி, நகராட்சி, பஞ்சாயத்து மற்றும் அரசாங்கத்தில் உள்ள எல்லா இலாக்காக்களுக்கும் அனுப்பப்பட்டது.

தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களும், நீதிக்கட்சியும் எந்த அளவுக்குக் கொள்கை பூர்வமாக நகமும்  சதையுமாக இணைந்திருந்தனர் என்பதற்கு இந்தச் சான்று ஒன்று போதாதா?
திராவிட இயக்கம் தாழ்த்தப்பட்டவர்களுக்கு என்ன செய்தது என்று பொறுப்பின்றிக் கதைக்கும் சிலர் சிந்திப்பார்களாக!


7.7.2005 (விடுதலை ஒற்றைப்பத்தி - 2) 

நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 2,
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

அயோத்தி தாசர்

ஞாயிறு, 16 ஜூலை, 2017


ஒடுக்கப்பட்ட மக்களின் தலை நாயகரும், பவுத்த நெறி பரப்புவதில் தனிமுத்திரை பொறித்தவருமான அயோத்திதாச பண்டிதரின் பிறந்த பெருமைக்குரிய நாள் இந்நாள் (20.5.1845).

சென்னை இராயப்பேட்டை சாக்கிய பவுத்த சங்கத் தலைவராக இருந்து அரும்பணி ஆற்றியவர். 1907 ஆம் ஆண்டில் தமிழ் என்ற வார இதழை நடத்திய பெருமையும் அவருக்கு உண்டு.

பார்ப்பன வேதாந்த விவரம், நந்தன் சரித்திர விளக்கம், நூதன ஜாதிகள் உற்பவ பீடிகை, திருவள்ளுவ நாயனார்  பறைச்சிக்கும், பார்ப்பானுக்கும் பிறந்தார் என்னும் பொய்க்கதை விவரம் முதலிய நூல்களை எழுதிய சிந்தனையாளர் இவர்.

தோழர் ஒளிச்செங்கோ (கண்கொடுத்தவனிதம்) இவர் குறித்து  விடுதலை தந்தை பெரியார் மலரில் (1967) தெரிவித்த தகவலும், கருத்தும் இக்கால இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை.

1892 இல் சென்னையில் மகாஜன சபைக் கூட்டம் திரு.சிவநாமசாஸ்திரி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் அவர் பேசும்போது, வள்ளுவர் பார்ப்பன விந்துக்குப் பிறந்ததனால்தான் சிறந்த திருக்குறளைப் பாடினார்; சுக்கல சுரோனிதம் கலப்பறியாது என்று குறிப்பிட்ட போது, அக்கூட்டத்தில் இருந்த அயோத்திதாச பண்டிதர் எழுந்து, நீங்கள் சொல்லியதை நான் ஏற்றுக் கொள்வதென்றால் நான் சில கேள்விகள் கேட்கவேண்டும் என்றார்.

அதற்கு சிவநாமசாஸ்திரி சரி, கேளும் என்றார்.

நமது நாட்டில் தீண்டாதவர்கள் என்று இழிவு-படுத்தப்படும் பறையர்கள் என்பவர்கள் கிறித்துவ சங்கத்தார்களின் கருணையால் எம்.ஏ., பி.ஏ., படித்துப் பட்டங்களைப் பெற்று உயர் பதவிகளில் அமர்ந்திருக்கிறார்களே, அவர்கள்யார் விந்துக்குப் பிறந்திருப்பார்கள் என்று எண்ணுகிறீர்? என்று கேட்டார் அயோத்திதாசர். அதற்கு சிவநாம சாஸ்திரி ஒன்றும் பதில் கூறாமல் நின்றுகொண்டிருந்தார்.

தொடர்ந்து, பெருங்குற்றங்களைச் செய்து சிறைச்சாலைகளில் அடைபட்டிருக்கும் பார்ப்பனர்கள் யார் விந்துக்குப் பிறந்திருப்பார்கள் என்று நீர் நினைக்கிறீர்? என்று அடுத்து வினாக்களைத் தொடுத்தார்.

திருதிருவென்று விழித்தார் சாஸ்திரிவாள். ஏன்பதில் சொல்லாமல் நிற்கிறீர்? சொல்லும் என்று சினந்து கேட்டுக் கொண்டிருந்தபோது கூட்டத்தில் இருந்த ஆனரபிள் திரு.பி. அரங்கையா நாயுடுவும், திரு.எம்.வீரராகவாச்சாரியாரும் அயோத்தி தாசரை அமைதிப்படுத்தினர்.  கூட்டத்தில் இருந்தவர்களும் சிவநாம சாஸ்திரியை இகழ்ந்து பேச ஆரம்பித்து விட்டனர். சாஸ்திரிவாள் நைசாக உட்கார்ந்து, சிறிது நேரத்தில் நடையைக் கட்டிவிட்டார்.

அதுமட்டுமல்ல இன்றும் பார்ப்பனர்கள் பெங்களூருவில் திருவள்ளுவர் சிலையைத் திறந்தால் மாதம் மும்மாரி பொழியுமா என்று கேட்கும் மனப்பான்மையில்தான் உள்ளனர்.

இன்றைக்கு 110 ஆண்டுகளுக்கு முன் தமிழினத் தன்மான உணர்வோடு உஞ்சவிருத்திக் கூட்டத்தை  உதைக்காமல் உதைத்த அயோத்தி தாசரை நினைவு கூர்வோம்!

20.5. 2010 விடுதலை ஒற்றைப்பத்தி - 3

நூல் : ஒற்றைப்பத்தி - 3

ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்

இரட்டைமலை சீனிவாசன்

(கி.பி.1859-1945)



1. பிராமணன், 2. க்ஷத்திரியன் 3. வைசியன் 4. சூத்திரன் என்று நான்கு வருணங்களை உண்டாக்கி, நாட்டைக் கெடுத்த ஆரியப் பார்ப்பனர்கள், சூத்திரர்களை மிக இழிவாகவும் கொடுமையாகவும் நடத்தினர்.

இந்தச் சூத்திரர்கள் பிரம்மாவின் காலில் பிறந்தவர்கள் என்று கதை எழுதி கடைக்கோடி மக்களாய்க் காட்டினர். உழைக்கின்ற உழைப்பாளிகளைக் கொச்சைப்படுத்தும் திட்டமாக இதைச் செய்தனர்.

இத்தகு கொடுமைக்கும், இழிவிற்கும், கேவலத்திற்கும் உள்ளாக்கப்பட்ட சூத்திரர்களைவிடவும் மோசமாக நடத்தப்பட்ட மக்கள் உண்டு. அவர்களைப் பஞ்சமர்கள் என்று அழைத்தனர். அதாவது  மேற்கண்ட நான்கு வருணத்திலும் சேராதவர்கள் பஞ்சமர்கள் - அய்ந்தாம் பிரிவினர் என்று அழைக்கப்பட்டனர்.

சூத்திரனுக்காவது பிரம்மாவின் காலில் பிறக்கின்ற தகுதியைக் கொடுத்துப் புராணம் எழுதினர். ஆனால், அந்த வாய்ப்புக்கூட பஞ்சமர்களுக்கு அளிக்கப்படவில்லை. காரணம், கடவுளிடமிருந்து வரும் தகுதி அவர்களுக்கு அறவே இல்லை. தீட்டு உடைய இழிமக்கள் அவர்கள். எனவே, கடவுளின் அங்கமாக அவர்கள் இருக்க முடியாது. எனவேதான், இந்த நான்கு வருணத்திலும் சேராத பஞ்சமர்களாக அவர்களால் ஒதுக்கப்பட்டுள்ளனர்.

தந்தை பெரியாரிடம் ஒருமுறை நான்கு வருணத்தாரும் பிரம்மாவிடம் பிறந்ததாகச் சொல்கிறார்களே, அப்படியானால், பஞ்சமர்கள் எப்படி பிறந்தார்கள்? என்று கேட்க -தந்தை பெரியார் அவர்கள் பட்டென்று, அவர்கள் தான் முறையாக அவர்கள் தாயிடம் பிறக்கவேண்டிய வழியில் பிறந்தார்கள்! என்று பதில் சொன்னார்கள்.

அப்படி வருணப் பிரிவில்கூட சேர்க்காமல் ஆரியப் பார்ப்பனர்களால் கேவலப்படுத்தப்பட்டு, கீழ்ஜாதியாக ஒதுக்கப்பட்டு, நிழல்கூட தங்கள்மீது படக்கூடாது என்று இழிவு செய்யப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்தவர்தான் இரட்டைமலை சீனிவாசன் அவர்கள்.

பிறப்பு

செங்கற்பட்டு மாவட்டத்தில் கோழிப்பாளையம் என்ற சிற்றூரில், 1859ஆம் ஆண்டு ஜூலை மாதம் 7 ஆம் நாள் பிறந்தார். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் சீனிவாசன். இவரது தந்தையின் பெயர் இரட்டைமலை. எனவே, இரட்டைமலை சீனிவாசன் என்று அழைக்கப்பட்டார். தாழ்த்தப்பட்ட சமுதாயமே, மிகவும் ஏழ்மையிலும், வறுமையிலும் வாடும் சமுதாயம்தான். அதிலும் இவரது குடும்பம் மிகவும் வறுமையில் வாடிய குடும்பம்.

எனவே, இவரது குடும்பம் பிழைப்புத் தேடி தஞ்சாவூருக்குச் சென்றது. தாழ்த்தப்பட்டவர்கள் அக்காலத்தில் படிப்பது என்பது நினைத்துக்கூடப் பார்க்க முடியாத ஒன்றாகும். என்றாலும், இவர் எப்படியாவது படிக்கவேண்டும் என்பதில் ஆர்வமும், முனைப்பும் காட்டினார். இதையறிந்த இவரது குடும்பத்தார் அவரைப் படிக்க வைக்க முயற்சி மேற்கொண்டனர்.

தாழ்த்தப்பட்டோர் மற்றவர்களோடு சேர்ந்து படிக்க இயலாது. தீண்டாமை உச்சத்திலிருந்த நேரம் அது. இவர்களுக்கென்று தனியே கல்விக்கூடமும் இல்லை. திண்ணைப் படிப்புதான் அன்றைக்கு நடப்பிலிருந்த கல்வி முறை.
உயர்ந்த ஜாதிக்காரர்களுக்காகத் திண்ணையில் நடத்தப்படும் பள்ளிக்கூடத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் அனுமதிக்கப்படவில்லை. இச்சூழலாலேதான் தாழ்த்தப்பட்டோரின் கல்வி மிகவும் பாதிக்கப்பட்டது.

கல்வி

இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் கல்வி முதலில் திண்ணையில்தான் தொடங்கியது. ஜாதி இந்துக்களுக்கான அத்திண்ணைப் பள்ளியில் பாடம் சொல்லிக் கொடுக்கப்பட்டபோது, இவர் பிற மாணவர்களிடம் சேராமல் தள்ளி உட்கார்ந்து பாடங்களைக் கேட்டார். இந்த அளவிற்கு வேறு எந்த ஊரிலும் அனுமதியில்லை. விதிவிலக்காக, அபூர்வமாக அந்த ஊரில் உள்ள சில நல்லவர்கள் இவருக்கு அந்த வாய்ப்பை அளித்தனர்.

அடுத்து, பள்ளிப்படிப்பை கோயம்புத்தூரில் தொடர்ந்தார் இவர். அதைப்பற்றி இவரே தம்முடைய ஜீவிய சரித்திர சுருக்கம் என்பதில் கூறியுள்ளார்.

கோயம்புத்தூர் கலாசாலையில் நான் வாசித்தபோது, சுமார் 400 பிள்ளைகளில் 10 பேர்கள் தவிர, மற்றவர்கள் பிராமணப் பிள்ளைகள். ஜாதி கோட்பாடுகள் மிகக் கடினமாய் கவனிக்கப்பட்டன. மற்ற பிள்ளைகளோடு சிநேகிதத்தால் (பழகினால்) ஜாதி, குடும்பம், இருப்பிடம் முதலானவை தெரிந்துகொண்டால், அவர்கள் தாழ்வாக என்னை நடத்துவார்கள் என்று பயந்து, பள்ளிக்கு வெளியே எங்கேனும் வாசித்துக் கொண்டிருந்துவிட்டு, பள்ளி ஆரம்ப மணி அடித்த பிறகு வகுப்புக்குள் போவேன். வகுப்பு கலையும்போது, என்னை மாணவர்கள் எட்டாதபடி வீட்டுக்குக் கடுகென நடந்து சேருவேன். மற்றப் பிள்ளைகளோடு விளையாடக் கூடாமையான கொடுமையை நினைத்து, மனங்கலங்கி எண்ணி எண்ணி இந்த இடுக்கத்தை எப்படி மேற்கொள்வதென்று யோசிப்பேன்... என்று தன் பள்ளிப் படிப்பின் அவலம்பற்றி அழாத குறையாகக் கூறியுள்ளார் சீனிவாசன்.

ஆக, தம்மை யார் என்று அறியாத வகையில், மற்ற மாணவர்கள் கண்டுபிடித்துவிடாத வகையில் அவர் ஒரு பள்ளியில் படித்து முடிப்பதென்பது என்ன சாதாரண காரியமா? நித்தம் நித்தம் அவர் செத்துப் பிழைப்பது போன்ற ஒரு கள்ள வாழ்க்கையே அவரது கல்வி வாழ்க்கையாக அமைந்தது என்றால், அந்தப் பிஞ்சு உள்ளம் என்ன பாடுபட்டிருக்கும்!

அக்காலத்தில், தாழ்த்தப்பட்டவர்களில் ஓரிருவர் கல்வி கற்றார்கள் என்றால், இப்படிப்பட்ட இன்னல்களையும், இழிவுகளையும், இடர்ப்பாடுகளையும் ஏற்றுத்தான்.

குடும்ப வறுமை காரணமாக, சீனிவாசன் எவ்வளவு முயன்றும் தொடர்ந்து படிக்க இயலவில்லை. இக்காலத்தில் எல்லா வசதிகளையும் செய்துகொடுத்து, சம வாய்ப்பு, சலுகை, உதவி, இலவச உணவு என பல வகை உதவிகளையும் செய்துகொடுத்த பின்பும் படிக்காமல், படிப்பதில் அக்கறை இல்லாமல் வாழ்வைப் பாழடிக்கும் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் இரட்டைமலை சீனிவாசன் அவர்களுடைய வாழ்வை மனதிற்கொண்டு படித்து முன்னுக்கு வரவேண்டும். சமுதாயத்தில் அக்கறையுள்ளவர்கள் இப்படிப்பட்ட மாணவர்களுக்கு நல்ல அறிவுரைகளை வழங்கி நல்வழிப்படுத்தவேண்டும்!

மனம் முழுக்கப் படிப்பில் சென்றாலும், பணம் இல்லையென்ற வறுமையால், குடும்பத்திற்கு வாழ்வளிக்க வருவாய் தேடும் முயற்சியில் இறங்கினார் இரட்டைமலை சீனிவாசன்.

பணி

1822-ஆம் ஆண்டு நீலகிரியில் இருந்த ஓர் ஆங்கிலேய வர்த்தக நிறுவனத்தில் கணக்கராக வேலைக்குச் சேர்ந்தார். இங்குதான் ஆழ்ந்து சிந்திக்கவேண்டும். இந்திய நாட்டு நிறுவனம் எதிலும் அவர் வேலைக்குச் சேர இயலவில்லை. ஜாதி பாராத ஆங்கிலேய நிறுவனத்தில்தான், அவரால் பணியில் சேர முடிந்திருக்கிறது. அந்த அளவிற்கு கல்வி வேலை வாய்ப்புகள் தாழ்த்தப்பட்டவர்களுக்கு அறவே மறுக்கப்பட்ட காலம் அது. என்றாலும், அவருக்கு அதில் ஒரு நன்மை இருந்தது.
இத்தனை காலமும் அஞ்சி, அஞ்சி, மறைந்து, ஒளிந்து இந்து சமுதாய அடக்குமுறையால் அல்லல் உற்றவருக்கு, ஆங்கில நிறுவனம் விடுதலைக் காற்றைச் சுவாசிக்கும் வாய்ப்பை அளித்தது. இதில் என்ன விந்தையென்றால், அடிமைப்படுத்திய ஆங்கில நிறுவனம் விடுதலை வாழ்வைக் கொடுத்தது, விடுதலை வேண்டிய இந்தியச் சமுதாயம் அடிமை வாழ்வைத் தந்தது. அதனால்தான், தந்தை பெரியார் அவர்கள், எம்மக்கள் அனைவரும் சமமாக வரும்வரை ஆங்கில ஆட்சியே நீடிக்கட்டும் என்றார். விடுதலை பெற்றால், ஆரியப் பார்ப்பன ஆதிக்கமே நிலவும். அது அடித்தட்டு மக்களுக்குப் பாதிப்பாக அமையும் என்றார். அம்பேத்கர் மட்டும் இருந்து, விழிப்போடு செயல்படவில்லையென்றால், பெரியார் சொன்னதுபோல் பெரும்பாதிப்பு ஒடுக்கப்பட்டோருக்கு வந்திருக்கும்.

ஆங்கில நிறுவனத்தில், மனித உரிமைகளோடு வாழும் ஒரு வாய்ப்பைப் பெற்றார். செயலும், சிந்தனைகளும் விடுதலை பெற்ற ஓர் உணர்வு அவருக்கு ஏற்பட்டது. தியோசாபிகல் சொசைட்டியை நிறுவிய பிளாவட்ஸ்கி அம்மையார் மற்றும் ஆல்காட் என்ற இருவரையும் சந்திக்கும் வாய்ப்பும் இங்கு இவருக்குக் கிடைத்தது.

1884 இல் சென்னை அடையாறில் இச்சொசைட்டியின் ஆண்டுவிழா நடைபெற்றபோது, இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் அதில் கலந்துகொண்டார். அதிலும் ஒரு சிறப்பு என்னவென்றால், அச்சங்கத்தில் அவர் ஓர் உறுப்பினராகவும் சேர்க்கப்பட்டார். அந்த விழாவிற்கு, இந்தியா முழுமையிலிருந்தும் வந்திருந்த முதன்மை மனிதர்களைச் சந்தித்துப் பேசும் வாய்ப்பு, அவருக்குக் கிடைத்தது. இந்தியாவில் அரசியல் இயக்கம் ஒன்றைத் தொடங்குவது குறித்து அப்போது கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
இதுபற்றி இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் -ஷெட்யூல்டு இன மக்கள் வேண்டுவது சமுதாய விடுதலை. மனிதனை மனிதனாக மதிக்கும் உரிமை. குறிப்பாக இந்திய நாட்டில், இந்தியனாய் வாழ்கின்ற மனிதர்களிடையே, அதே நாட்டில் வாழ்கின்ற இந்தியனைப் பார்த்துக் கேட்கும் விடுதலை. சமூகப் பொருளாதார தகுதியைப் பெறாத நாட்டில் அரசியல் விடுதலை தேவையா? காங்கிரஸ் தேவையா? எனவே, ஷெட்யூல்டு இன மக்களின் முன்னேற்றமான வாழ்விற்கு எவ்விதமான திட்டமும் இல்லாத இந்த அரசியல் அமைப்பில் எனக்கு நம்பிக்கையில்லை என்று ஆணியடித்தாற் போன்ற, முதன்மையான கருத்தை வெளியிட்டார்.

பின்னாளில் இதேபோன்ற கருத்தைத் தந்தை பெரியார் அவர்கள் வெளியிடுவதற்குக்கூட இரட்டைமலை சீனிவாசன் அவர்கள்தான் முன்னோடி என்பதை அறியும்போது வியப்பாகவும், பெருமையாகவும் உள்ளது.

1885 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் பம்பாயில் துவங்கப்படுவதற்கு முன்னே, இந்திய விடுதலையில், தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலையும் சேர்ந்திருக்குமா? அப்படியில்லாமல் ஒரு விடுதலை இந்த நாட்டிற்குத் தேவையா? என்று கேள்வி எழுப்பி எல்லோரையும் அக்கோணத்தில் சிந்திக்கச் செய்தவர் ஒரு தாழ்த்தப்பட்டவர். அதுவும் ஒரு தமிழர் என்கிறபோது, அவரது அறிவு நுட்பமும், விழிப்புணர்வும் மிகச் சிறப்பாக வெளிப்படுகின்றன.

உள்நாட்டிலுள்ளவர்களிடமிருந்தே விடுதலையை உறுதி செய்யாமல், அயலவரிடமிருந்து விடுதலைக்குப் போராடுவது எப்படிச் சரியாகும்? அப்படிப் பெறப்படும் விடுதலை எப்படி அனைவருக்கும் நிகராகும், உரியதாகும் என்ற ஆழமான உள்ளடக்கம் உள்ள கேள்விகளை அவர் முன்வைத்தது அனைவரின் சிந்தனையையும் கிளறியது.

இவரது நியாயமான கேள்விக்கு அப்போது தொடங்கப்பட்ட காங்கிரசில் சரியான பதில் இல்லை. இதனால் வெறுப்புற்ற இவர், காங்கிரஸ் கட்சியிலிருந்து ஒதுங்கினார். தந்தை பெரியார் அவர்கள் பிற்காலத்தில் செய்த முடிவுகள் இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் முடிவுகளைப் பின்பற்றியே வருவதை நம்மால் ஒப்பிட்டு அறிய முடிகிறது. அதுமட்டுமல்ல, தன்னலமில்லா தலைவர்களின் செயல்பாடுகளும், சிந்தனைகளும் ஒத்தே இருக்கும் என்பதும் இதன்மூலம் வெளிப்படுகிறது.

திருமணம்

1887-ஆம் ஆண்டு அரங்கநாயகி என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்ட இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் 1890 முதல் சென்னையிலேயே தங்கி வாழத் தொடங்கினார்.

திராவிட மகாசன சபை

1891இல் சென்னை மற்றும் செங்கற்பட்டு பகுதிகளில் வாழ்ந்த பறையர் (ஆதிதிராவிடர்) இன மக்களில் கல்வியும், அறிவும், வளர்ச்சியும் விழிப்புணர்வும் பெற்றவர்கள் ஒன்று சேர்ந்து, திராவிட மகாஜன சபை என்ற அமைப்பை  உருவாக்கினர். ஆதிதிராவிடர் மக்களுக்கென்று உருவாக்கப்பட்ட முதல் அமைப்பு இதுவாகும்.

1891ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த அமைப்பின் முதல் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டிற்குத் தேவையான முதன்மை முயற்சிகளை இரட்டைமலை சீனிவாசன் அவர்களும், பண்டிதமணி சி.அயோத்தியதாஸ் (அயோத்தி தாச பண்டிதர்) அவர்களும் மேற்கொண்டனர். இந்த மாநாட்டில் கீழ்க்கண்ட கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.

கல்வி கற்கக்கூடிய வாய்ப்புகளுக்கு உள்ள சமூகத் தடைகளை நீக்கவேண்டும். கிராம ஒன்றியங்கள், நகராட்சிகள் ஆகியவற்றில் பிரதிநிதித்துவம் தரவேண்டும். முன்சீப், மணியக்காரர் வேலைகள் தரப்படவேண்டும். இந்துக்கள் பணிபுரியும் நீதிமன்றங்களில் செல்வதற்குள்ள தடைகள் நீக்கப்படவேண்டும். பொதுநீர் நிலைகளில் தண்ணீர் எடுப்பதற்கு உள்ள தடைகளையும் நீக்கவேண்டும். பறையர் என்று கேவலப்படுத்தும் நோக்கில் சொல்வதோ, பறையர்க்கு இழிவான சிறு பணிகளைத் தருதலோ கூடாது.

இத்தீர்மானங்களை அக்காலத்தில் நிறைவேற்றுவது என்பது சிந்தித்துக்கூட பார்க்க முடியாத அரிய செயலாகும். அந்த அளவிற்குக் கொடுமைகளும், அடக்குமுறைகளும், ஆதிக்கமும் உச்சநிலையில் இருந்த காலம் அது. அது மாத்திரம் அல்ல, இப்படிப்பட்ட உரிமைகளைக் கேட்கவேண்டும் என்ற விழிப்பும், துணிவும் அக்காலத்தில் தாழ்த்தப்பட்டோர் மத்தியில் வந்ததே வியப்பிற்குரிய ஒன்றாகும்.

இருபதாம் நூற்றாண்டில் புரட்சிப் பணிகளாக, போராட்டங்களாகக் கருதப்பட்ட, செய்யப்பட்டவற்றை 19ஆம் நூற்றாண்டிலே செய்த இவரின் சாதனை வரலாற்றில் வலுவாகப் பதியப்படவேண்டிய முதன்மைப் பதிவாகும். தாழ்த்தப்பட்ட மக்களின் நெடுங்கால குமுறலுக்கும், அழுத்தத்திற்கும் ஒரு வடிகாலாக இவை அமைந்தன. இவைகள் தீர்மானங்கள் என்பதைவிட, உள்ளப் புழுக்கம் சிந்திய உணர்ச்சித் துளிகள் என்று கொள்வதே பொருத்தமுடையதாகும்.
இத்தீர்மானங்கள் அரசுக்கும், இந்திய தேசிய காங்கிரசுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. ஆம், உள்ளப் புழுக்கம் உலகறியச் செய்யப்பட்டது.

இந்தத் திராவிட மகாஜன சபை பின்னர் பறையர் மகாஜன சபை என்று பச்சையாகப் பெயர் மாற்றம் செய்து அழைக்கப்பட்டது. இச்சபையின் செயலராக இரட்டைமலை சீனிவாசன் அவர்களே பணியாற்றினார்.

1892 ஏப்ரல் மாதத்தில், மெட்ராஸ் மகாஜன சபை கூட்டத்தில் திராவிட மகாஜன சபை சார்பில் அயோத்திதாச பண்டிதர் கலந்துகொண்டார். அனைத்து ஊர்களிலும் தாழ்த்தப்பட்டோருக்குப் பள்ளிகள் அமைக்கவேண்டும் என்றும், புறம்போக்கு நிலங்களை அவர்களுக்கு வழங்கவேண்டும் என்றும் தீர்மானம் கொண்டு வந்தார்.

பறையன் பத்திரிகை

இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் 1893-இல் நான்கு பக்கங்களைக் கொண்ட பறையன் என்ற மாதாந்திரப் பத்திரிகையைத் தொடங்கினார். தாழ்த்தப்பட்ட மக்கள் அதை ஆவலோடு வாங்கிப் படித்தனர்; படிக்கச் சொல்லிக் கேட்டனர்.
அப்பத்திரிகைக்கு பறையன் என்று ஏன் பெயர் வைத்தார் என்ற காரணத்தையும் அவர் விளக்கினார்.

நான்! நான்! என்ற மகா மந்திரத்தை ஜெபித்துக் கொண்டிருப்பவன், தன்னை உணர்ந்து, சகலமும் அறியும் ஞானியாகி, தலைவனைக் காண்பதுபோல், நான்! நான் என்று எவன் ஒருவன் தன்னையும், தன் இனத்தையும் மறுக்காமல், அச்சமும், நாணமும் இல்லாமல் உண்மை பேசி தன் சுதந்திரத்தைப் பாராட்டுகின்றானோ அவன் மதிக்கப்பெற்று இல்வாழ்க்கையில் சம்பத்துள்ளவனாய் நித்திய சமாதானத்துடன் வாழ்வானாகையால், பறையன் இனத்தொருவன் பறையன் என்பவன் நான்தான் என்று முன்வந்தாலொழிய அவன் சுதந்திரம் பாராட்ட முடியாமல் தாழ்த்தப்பட்டு என்றைக்கும் தரித்திரனாய் இருப்பான். ஆகையால், பறையன் என்னும் மகுடம் சூட்டி ஒரு பத்திரிகையைப் பிரசுரித்தேன்!

பாமர மொழியில் இவர் இவற்றைச் சொல்லியிருந்தாலும், இதன் உள்ளடக்கமும், உணர்வுத் துடிப்புகளும் பலவாகும்; பலமாகும்!

ஜாதி கூடாது என்று சொல்லுகின்ற அரசு ஜாதியைக் கேட்பது ஏன்? என்று இன்றைக்குத் தங்களை அறிவு ஜீவிகளாக எண்ணிக்கொண்டு கேள்வி கேட்பவர்களுக்கு அன்றைக்கே இவர் பதில் சொல்லியுள்ளார்.

தன்னை அடையாளம் காட்டித்தான் தன் நிலையை அடையாளம் காட்ட முடியும். தன் நிலையை அடையாளம் காட்டுவதன்மூலம்தான் தனக்குள்ள உரிமைகளைப் பெற முடியும்; குறைகளை நீக்கிக் கொள்ள முடியும்.

நோயாளி தன்னை நோயின் பெயரால் அடையாளம் காட்டாமல், நோய்க்கு நிவாரணம் பெற முடியாதல்லவா? அதைத்தான் இவர் ஆழமாகச் சொன்னார்.
சமுதாயத்தின் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் தன்னை நோயாளிகள் என்பதை முதலில் அடையாளம் காட்டவேண்டும். அந்த அடையாளம்தான் பறையன் என்ற பெயர் என்ற உட்பொருளைத்தான் அவர் அந்த விளக்கத்தில் உரைத்தார்.

பறையடிக்கவும், பிணம் புதைக்கவும், கழிவு அகற்றவும், மாடு மேய்க்கவும் என்று என்னை இச்சமுதாயம், சமுதாயத்தின் ஆதிக்கவாதிகள், அதிலும் குறிப்பாக ஆரியப் பார்ப்பனர்கள் எங்களை முத்திரைக் குத்தி ஒதுக்கி வைத்தார்கள். அந்த முத்திரைதான் பறையன் என்பது. அந்த அடையாளத்தைக் காட்டித்தான், சொந்தக் கொடுமைகளை வெளிக்காட்ட முடியும்; விடிவு பெற முடியும் என்ற உண்மையினை உணர்ந்ததால்தான் இந்த விளக்கத்தை அவர் அளித்தார்.

ஒதுக்கி வைக்கப்பட்டவன் நான்தான். உரிமை மறுக்கப்பட்டவன் நான்தான். என் ஜாதிக்கு இடப்பட்ட பெயர்தான் பறையன் என்பது. எனவே, பறையனுக்கு நீதி வேண்டும், பறையனுக்கு உரிமை வேண்டும், பறையனும் சமமாக வேண்டும், பறையனும் மனிதனாக வேண்டும், பார்ப்பானுக்கு உள்ளது பறையனுக்கும் வேண்டும், எந்த அடையாளத்தால் நான் ஒடுக்கப்பட்டேனோ அந்த அடையாளத்தின் அடிப்படையிலே எனக்கு உரிமை வேண்டும். சலுகை வேண்டும், வாய்ப்பு வேண்டும், உயர்வு வேண்டும் என்று கேட்கின்ற உறுதியை ஒடுக்கப்பட்டவர்கள் பெறவேண்டும் என்ற உள்ளடக்கந்தான், அவர் அளித்த விளக்கத்தின் பொருள். அவமானத்தின் அடையாளமாக அச்சொல்லை எண்ணிக் கூனிக் குறுகுவதைவிட்டு, வாய்ப்புப் பெறும் அடையாளச் சீட்டாக அதைக் கொள்ளுகின்ற மனப்பக்குவமும், துணிவும் வேண்டும் என்று அவர் விரும்பினார்.
இழிசொல் என்ற எண்ணத்திலே இதுவரை கூனிக் குறுகி அவமானத்தோடு ஒதுங்கிய மக்களுக்கு, தன்னம்பிக்கையூட்டி, முன்னுக்குக் கொண்டு வருகின்ற உணர்ச்சியை இவரது விளக்கம், அச்சமுதாய மக்களுக்கு அளித்தது. ஆம், இது உளவியல் சார்ந்த அணுகுமுறை.

19 ஆம் நூற்றாண்டிலே பத்திரிகை நடத்துகின்ற துணிவும், ஆற்றலும் அவருக்கு இருந்ததோடு, அதற்கு விழிப்பூட்டும் ஒரு பெயரையும் இட்டு, அப்பத்திரிகையை, ஏழு ஆண்டுகள் நடத்திய பெருமையும் அவருக்குக் கிடைத்தது.

தம் இனத்தின் மேம்பாட்டுக்கு வழிகண்டு அதற்காக அயராது பாடுபட்டதோடு, எதிரிகளின் ஆதிக்கத்தை அவர்களின் சூழ்ச்சிகளை முறியடிப்பதிலும் இவர் விழிப்போடு இருந்தார்.

ஆரிய ஆதிக்க எதிர்ப்பு

அய்.ஏ.எஸ். என்று இன்றைக்கு அழைக்கப்படும் தேர்வுக்கு இணையான தேர்வு அக்காலத்தில் அய்.சி.எஸ். என்று அழைக்கப்பட்டது. அத்தேர்வு இலண்டனில் மட்டும்தான் நடத்தப்பட்டது.

ஆரியப் பார்ப்பனர்கள் தங்களின் சாஸ்திரப்படி கடல் தாண்டிச் செல்லக்கூடாது என்பதால், அத்தேர்வு எழுத முடியாமல் இருந்தனர். உயர் பதவிகளுக்குச் செல்ல அத்தேர்வு எழுதி தேறியிருக்கவேண்டும். எனவே, சாஸ்திரத்தையும்விடாமல், அய்.சி.எஸ். தேர்வையும் எழுதி உயர்பதவியில் உட்கார்ந்துவிடவேண்டும் என்று திட்டமிட்ட ஆரியப் பார்ப்பனர்கள், அய்.சி.எஸ். தேர்வை இந்தியாவிலும் நடத்தவேண்டும் என்று ஆங்கில ஆட்சியாளர்களிடம் கோரிக்கை வைத்தனர். ஆரியப் பார்ப்பன ஆதிக்கத்தின் பாதுகாப்பிடமாக விளங்கிய இந்திய தேசிய காங்கிரசும் இக்கோரிக்கையை ஆதரித்தது. இத்தேர்வு இந்தியாவில் நடந்தால், பார்ப்பன சூழ்ச்சியில் மற்றவர்கள் பலியாகிப் போவார்கள்; அவர்களோடு போட்டியிட்டு மற்றவர்கள் தேர்வு பெறுவது இயலாமல் போகும். எனவே, அத்தேர்வு தொடர்ந்து இலண்டனிலே நடத்தப்படவேண்டும் என்றார் இரட்டைமலை சீனிவாசன் அவர்கள்.

இவரது இந்த வேண்டுகோளில் நுட்பமான உள்நோக்கமும் இருந்தது. சாஸ்திரத்தைக் காட்டி, இந்தியாவில் எல்லா உயர்வையும் அடைகின்றவர்களுக்கு, சாஸ்திரத்தில் அவர்களுக்குப் பாதிப்பாக உள்ள ஒரே விதி கடல் தாண்டக்கூடாது என்பதுதான். எனவே, இந்தத் தடையிருந்தால்தான் பார்ப்பனர்கள் அதிகம் செல்லமாட்டார்கள். அய்.சி.எஸ். தேர்வில் வெற்றி பெறுகின்ற வாய்ப்பு மற்ற சமுதாயத்தினருக்கு அதிக அளவில் அதன்மூலம் கிடைக்கும் என்று உறுதியாய் நம்பினார்.

பறையர் மகாசன சபை

எனவே, பறையர் மகாசன சபை சார்பில் 1893 டிசம்பரில் சென்னையில் கூட்டம் ஒன்றைக் கூட்டி, அக்கூட்டத்தின் தீர்மானமாக, 3412 பேர் கையொப்பம் இட்ட மனு ஒன்றினை, ஜெனரல் சர்ஜாஜ் - செஸ்னி என்ற பாராளுமன்ற உறுப்பினர்மூலம் பிரிட்டிஷ் மக்களவையில் சமர்ப்பித்தார்.

அந்த மனுவில்,சிவில் சர்வீஸ் பரீட்சையானது ஏக காலத்தில் இந்தியாவிலும், இங்கிலாந்திலும் நடத்தப்படவேண்டும் என்னும் ஏற்பாடானது, இந்துக்களில் வங்காளிகள், பிராமணர்கள் என்னும் இரு வகுப்பினர்கள் கொள்ளும் உயர் பதவியான உத்தியோக அபேஷையை வெளியிடுவதாகவே தோன்றும். வெளி ஜில்லாக்களில் மேல் ஜாதியாரின் பிள்ளைகள் படிக்க இடமாற்றியிருக்கிறீர்கள். உயர்ந்த ஜாதியார் குடியிருந்து வரும் கிராமங்களில் வீதியில், கிராம கன்று காலிகள் நடமாட பாதை வழியிருந்தும், பறையர் நடமாட பாதை வழி கிடையாது. ஊரார் தண்ணீர் மொண்டு கொள்ளும் நீர்நிலைகளில் இவர்கள் தண்ணீர் மொள்ளக்கூடாது. கிராமக்குடிகள் பல விஷயங்களிலும் இவர்களை ஜனாங்கத்தினின்றும் அப்புறப்பட்டிருக்கும் குஷ்டரோகிகளைப்போல் எண்ணி வருகிறார்கள். சிவில் சர்வீஸ் பரிட்சையானது இவ்விதத் தன்மை  உள்ளவர்களால் நிரப்பப்படுவதைப் பறையர் பார்த்துப் பீதி கொள்வதுமின்றி அவர்கள் தங்களுக்கு இயல்பிலேயே விரோதிகளாக இருக்கிறார்கள் என்றும் காண்கிறார்கள் என்று அம்மனுவில் கூறியிருந்தார்.

அக்காலத்தில் சென்னை மயிலாப்பூரில் உயர்நீதிமன்ற நீதிபதியின் வீட்டிற்கு அருகில், இந்தத் தெருவுக்குள் பறையர் வரக்கூடாது என்று ஓர் அறிவிப்புப் பலகையே இருந்தது. பச்சையப்பன் கல்லூரியில் தாழ்த்தப்பட்ட மாணவர்களே சேர்க்கப்படுவதில்லை. இச்செய்திகளும் அம்மனுவில் இவரால் குறிக்கப்பட்டிருந்தது.

இக்கோரிக்கைக்குப் பலன் கிடைத்திருக்குமா? ஏழை சொல் அம்பலம் ஏறியிருக்குமா? என்ற கேள்வி கட்டாயம் எழும். அப்படியானால், அவர் மனதிலும் அது எழாமல் இருந்திருக்காது. என்றாலும், தன் நிலைப்பாட்டை, தன் இனத்திற்கு எது ஏற்றது என்ற கோரிக்கையை அவர் நன்கு சிந்தித்துத் தயாரித்த மனுவின்மூலம் ஆங்கில ஆட்சியாளர்களுக்குத் தெரிவித்தார். ஓர் உண்மையான சமுதாயத் தொண்டன் என்பவன் விளைவுகளைப்பற்றிக் கவலைப்படாமல், எது செய்யப்படவேண்டுமோ அதைத் தயக்கமின்றி செய்துகொண்டே இருப்பான். எனவே, உண்மையான சமுதாயத் தொண்டரான இவர், முடிவு என்ன என்பதைப்பற்றிக் கவலைப்படாமல் முயற்சியைத் தவறாது செய்தார்.

அந்தத் தூய தொண்டரின் மனிதநேய முயற்சிக்கு நல்ல பயன் கிடைத்தது. ஆம், இம்மனுவைக் கருணையுடன் பரிசீலித்த ஆங்கிலநாடாளுமன்றம், அய்.சி.எஸ். தேர்வினை இந்தியாவில் நடத்தினால் பிராமணர்கள் மட்டுமே தேர்வு பெற்று உயர்பதவிகளைப் பிடிக்க நேரிடும் என்ற முடிவிற்கு வந்தது. அதன்படி அய்.சி.எஸ். தேர்வு இலண்டனில் மட்டுமே, இந்தியாவில் இல்லை என்று அறிவிக்கப்பட்டது.

இச்செய்தி, பறையன் இதழில் (22.9.1894) வெளியிடப்பட்டிருந்தது. இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் இதன்மூலம் இரட்டைப் பலன் பெற்றார். ஒன்று தன் சமுதாயத்திற்குரிய உயர்பதவி வாய்ப்பு அதிகமாயிற்று. மற்றொன்று ஆரியப் பார்ப்பனர்களுக்கான வாய்ப்பு அடைக்கப்பட்டது.

தன் பலத்தை அதிகரிக்கின்ற அதேவேளையில் எதிரியைப் பலவீனப்படுத்துவதுதானே போர்த் தந்திரம். சமுதாயப் போராளியான அவர் அதையே செய்தார்.

தாழ்த்தப்பட்டவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் உயர் ஜாதியைச் சேர்ந்தவர்கள் வயிற்றெரிச்சலைக் கொட்டித் தீர்ப்பதுதான் வாடிக்கை. அதே வகையில் இவரை அவர்கள் திட்டித் தீர்த்தனர். ஆனால், தாழ்த்தப்பட்டவர்களோ, அடித்தளத்திலிருந்து சற்றே எட்டிப் பார்த்தனர்.

செங்கற்பட்டு மாவட்டத்தில் தர்காஸ் நிலத்தைத் தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தரவேண்டும் என்கின்ற கோரிக்கையை இவர் எழுப்பினார். 1894-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நிலப் போராட்டம் ஒன்றினை இவர் நடத்தினார். தாழ்த்தப்பட்டவர்களின் மேம்பாட்டிற்கு நிலச் சீர்திருத்தமும் தேவை என்ற சிந்தனையை இவர் முதன்முதலில் உருவாக்கினார். பிற்காலத்தில் வந்த நிலச் சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு இதுவே வழிகோலியது.

தாழ்த்தப்பட்டோர் மாநாடு

1895 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், சென்னை விக்டோரியா மண்டபத்தில், தாழ்த்தப்பட்ட மக்களின் மாநாடு ஒன்றினைக் கூட்டினார். வருவாய்த் துறை சார்ந்த அலுவலகங்கள், கலெக்டர் அலுவலகங்கள், கிராம அஞ்சல் நிலையங்கள் போன்றவற்றில் தாழ்த்தப்பட்டவர்களைப் புறக்கணிப்பதாகவும், தரம் தாழ்த்தி நடத்துவதாகவும் அம்மாநாட்டில் கண்டனம் தெரிவித்தார். மேல்ஜாதிக்காரர்கள், தாழ்த்தப்பட்டவர்களை இழிவாக நடத்துவதையும் கண்டித்தார்.

நாங்கள் கணக்கிட முடியாத வருடங்களாகக் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறோம். எங்களுடைய கோரிக்கைகள் நியாயமானவை. எதிர்காலத்தில் எங்கள் இனம் சமத்துவமாகவும், சமாதானமாகவும் வாழ எண்ணுகிறது. எங்களுடைய முன்னேற்றத்தில் மற்றவர்கள் குறுக்கிட்டால், நாங்கள் சகித்துக்கொள்ள மாட்டோம். இனிமேலும் நாங்கள் எல்லாவிதமான கொடுமைகளையும் ஏற்கமாட்டோம் என்று உயர்ஜாதிக்காரர்களுக்கு இறுதி எச்சரிக்கை கொடுத்தார்.

கவர்னர் மாளிகையில் காலடி வைத்தார்

1895-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6 ஆம் நாள் இந்தியாவின் அப்போதைய கவர்னர் ஜெனரல் எல்ஜின்பிரபு சென்னைக்கு வந்தார். அவர் கவர்னர் மாளிகையில் தங்கியிருந்தார். அதை அறிந்த இவர், பறையன் மகாஜன சபை சார்பில் அவரைச் சந்தித்துக் கோரிக்கை மனு கொடுத்தார்.

கவர்னர் ஜெனரல் மாளிகைக்குள் ஒரு தாழ்த்தப்பட்டவர் செல்வது என்பது கற்பனைக்குக்கூட வராத ஒன்றாக இருந்த காலத்தில், அதையும் செய்து காட்டினார். அந்த அனுபவத்தை அவரே விவரித்தும் இருந்தார்.

நாங்கள் நேராகக் கட்டடத்திற்கு முன்புறம் சென்று வண்டிகளை விட்டு இறங்கி, கவர்னர் மாளிகைக்குள் சென்றோம். அங்கே இதற்குமுன் இவ்வின மக்கள் செல்லாத காரணத்தால், தலைமைச் செயலாளர் அவர்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. இம்மாளிகையில் ஆங்கிலோ - இந்தியர்கள், முகம்மதியர்கள், கிறித்துவர்கள் எட்டு எட்டுப் பேர்கள் கும்பல் கும்பலாக நின்றுகொண்டு காத்திருந்தார்கள். நாங்களும் கும்பலாகச் சேர்ந்து நின்றோம். எங்களைக் கண்ட மற்றச் சமூகத்தைச் சார்ந்தவர்கள் வெறுப்பும், சினமும் கொண்டவர்களாகத் தோன்றினார்கள். அவர்களோடு எங்களையும் சமமாக, ஒரு சமூகத்தவராக அங்கீகரித்து தக்க சமாதான நல்மொழி கூறினார் எல்ஜின் பிரபு என்று அன்றைய நிகழ்வை உணர்வுப்பூர்வமாகப் படம் பிடித்தாற்போல் விளக்கினார்.

சமூக முன்னேற்றத்திற்குக் கல்வி அவசியம் என்ற உண்மையை இவர் நன்கு உணர்ந்திருந்தார். காரணம், இவர் இளம் வயது முதற்கொண்டே அவ்வாறு கல்வியின் கட்டாயம் கருதி பல்வேறு இடர்ப்பாடுகளைச் சமாளித்துக் கற்றவர்.
முன்னேற்றத்திற்குக் கல்வியே முக்கிய காரணம் என்று 1893 இல் பறையன் ஏட்டில் எழுதியிருந்தார். எனவே, தன் நோக்கப்படி, தாழ்த்தப்பட்டோரின் கல்வி வளர்ச்சியில் அதிகம் அக்கறைக் காட்டினார்.

1893-இல் வெளியிடப்பட்ட அரசாணையில் தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கல்வி வாய்ப்பு அளிக்கப்படவேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தும், அந்த ஆணையின்படி அந்த வாய்ப்பு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அளிக்கப்படவில்லை. குறிப்பாகச் சென்னை நகரில் பல பள்ளிகளில் தாழ்த்தப்பட்டோர் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. 1893 இல் இது சார்ந்து அரசிடம் இவர் கோரிக்கை வைத்து, அரசாணையைச் சரியாக நடைமுறைப்படுத்தும்படி கேட்டுக்கொண்டார். அதன் பலனாய், தாழ்த்தப்பட்டோருக்கான கல்வி தடையின்றி கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டது. ஆம், சென்னை நகராட்சியே பள்ளிக்கூடங்களை நடத்தும்படியும், அதில் தாழ்த்தப்பட்டவர்களைத் தடையின்றி சேர்த்துக் கொள்ளும்படியும் அரசு ஆணையிட்டது.

1900-இல் இரட்டை மலை சீனிவாசன் அவர்கள் வெளிநாடு சென்றார். தென்னாப்பிரிக்காவில் 20 ஆண்டுகள் தங்கியிருந்தார். அப்போது காந்தியாரோடு அவருக்குத் தொடர்பு ஏற்பட்டது. காந்தியாருக்கு இவர் திருக்குறள் கற்றுக் கொடுத்ததோடு, தமிழில் கையொப்பம் இடவும் கற்றுக்கொடுத்தார்.

1921-இல் மீண்டும் இவர் இந்தியாவிற்குத் திரும்பினார். மீண்டும் பொதுவாழ்வில் தீவிரமாக ஈடுபட்டார். தாழ்த்தப்பட்டோரின் மேம்பாட்டிற்கான தொண்டினைத் தொய்வின்றிச் செய்தார்.

சட்டமன்றச் சாதனை

1923-இல் சென்னை மாகாணத்தின் சட்டமன்ற உறுப்பினராக இவர் நியமிக்கப்பட்டார். அப்போது நீதிக்கட்சி ஆட்சி நடந்தது.

இவரது துணைவியார் ரங்கநாயகி அம்மையாரும் சமூகச் சீர்திருத்த செயல்பாடுகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டார். தீண்டாமையைத் தடை செய்து சட்டம் ஒன்று கொண்டுவர வேண்டும் என்று தனது கணவருக்கு ஆலோசனை கூறி, அதைக் கொண்டு வருவதற்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபடும்படி கணவரைத் தூண்டிக் கொண்டேயிருந்தார்.

இரட்டைமலை சீனிவாசன்அவர்கள், 1924 இல் சட்ட நிரூபனச் சபையில் இதுகுறித்து ஓர் தீர்மானம் கொண்டு வந்தார். நகரம் அல்லது கிராமத்திலுள்ள எந்தவொரு பொதுப் பாதையையும் எந்தவொரு சமூகத்தைச் சேர்ந்தவரும் பயன்படுத்தலாம் என்றும், அரசு அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களுக்குள் எந்தவொரு ஜாதியினரும் போகலாம் என்றும், பொது நீர் நிலைகளை எந்த ஜாதியினரும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் இந்தத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இத்தீர்மானத்தை அரசு ஏற்றுக்கொண்டு, 1925-இல் ஓர் அரசாணை வெளியிட்டது. ரங்கநாயகி அம்மையாரின் விருப்பம் நிறைவேறி தாழ்த்தப்பட்டோருக்கு இருந்த தடைகள் நீக்கப்பட்டன. இந்த ஆணை வருவதற்கு அடித்தளமிட்ட ரங்கநாயகி அம்மையார் 1928 இல் மரணமடைந்தார். அவரது கல்லறையில் கீழ்க்கண்டவாறு செதுக்கப்பட்டிருந்தது.

இவ்வம்மையாரின் கோரிக்கைக்கிணங்கி, தாழ்த்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்தவர்கள் பொது ரஸ்தாக்கள் (வீதிகள்), கிணறுகள், பொது இடங்கள், கட்டடங்கள் முதலியவற்றை உபயோகிக்க பின்வரும் கவர்ன்மெண்ட் உத்தரவை தங்கள் பக்தாவான (கணவரான) சீனிவாசன் பெற்றனர்.

இந்தக் கல்வெட்டு தாழ்த்தப்பட்டோரின் உரிமைப் போராட்ட வரலாற்றின் நினைவுச் சின்னமாக அமைந்தது.

அரசாணைகள் வந்துவிட்டாலே வாய்ப்புகள் வந்து விடுவதில்லை என்பதுதானே இந்தியாவின் வரலாறு. அதற்கேற்பவே, இப்படியொரு ஆணை பிறப்பிக்கப்பட்ட போதிலும் அது ஏட்டளவில்தான் இருந்ததேயன்றி செயல்முறைக்கு வரவில்லை. என்றாலும், இப்படியொரு உரிமையைப் பெற்றதே அன்றைக்கு அரும்பெரும் சாதனையாகும்.

வட்டமேஜை மாநாட்டில் இரட்டைமலை சீனிவாசன்

1928-1929-இல் லண்டனில் நடந்த வட்டமேஜை மாநாட்டிற்கு, இந்தியாவிலிருந்து தாழ்த்தப்பட்டோரின் பிரதிநிதியாக, டாக்டர் அம்பேத்கரையும், இவரையும் இந்திய அரசு தேர்வு செய்து அனுப்பியது. இந்த மாநாட்டில் கலந்துகொண்டதுபற்றியும், அங்கு நடந்த நிகழ்வுகள்பற்றியும் இரட்டைமலை சீனிவாசன் அவர்களே விளக்குகிறார்கள்.

சர்வ கட்சி மகாசபை என்னும் வட்டமேஜை மாநாட்டிற்கு என்னையும், டாக்டர் அம்பேத்கரையும் தேர்வு செய்து அழைத்திருந்தார்கள். நாங்கள் இருவரும் நகமும், சதையுமாக இருந்து உழைத்தோம். 1928-1929 ஆம் ஆண்டுகளில் நடந்த மகாசபைக்கு நாங்கள் இருவரும் சென்றிருந்தோம். 1930 ஆம் ஆண்டு டாக்டர் மட்டும் மகாசபைக்குப் போனார். என் ஆலோசனையைக் கேட்க இந்தியா இராஜப் பிரதிநிதி கமிட்டிக்கு (Viceroys Conssolative Committee)  என்னை அழைத்துக் கொண்டார்கள். என்று கூறும் அவர், அங்கு நடந்த நிகழ்வு ஒன்றையும் விளக்குகிறார்.
ஜார்ஜ் மன்னரையும், இராணியையும் காணும் பொருட்டு, வின்சர் காஸ்சல் (Windsor Castle)  என்னும் ராஜ மாளிகைச் சபைக்கு இந்தியப் பிரதிநிதிகள் அழைக்கப்பட்டார்கள். என்னுடன் சக்கரவர்த்தி, சக்கரவர்த்தினி இருவரும் கைகுலுக்கி உபசரித்தார்கள். இப்படியாக மூன்று தடவை நடந்தது. ராஜா மாளிகையில் சிற்றுண்டியும் பரிமாறப்பட்டது. பின்னுமோர் தடவை மன்னரிடம் சம்பாஷிக்க (பேச) நேர்ந்தது. தீண்டாமை என்றால் என்னவென்று மன்னர் வினவினார். மேல்ஜாதியான் என்போன்  கீழ்ஜாதியான் தெருவில் விழுந்துவிட்டால் மேல்ஜாதியான் தூக்கிவிடமாட்டான் என்று நான் கூறியபோது, மன்னர் திடுக்கிட்டு அசந்து நின்று, அவ்விதம் நடக்க என் ராஜ்ஜியத்தில் விடவே மாட்டேன் என்றார். மன்னர் மாளிகைக்குள் பிரவேசிக்கவும் மன்னரோடு கைகுலுக்கி பேசவுமுண்டான பாக்கியம் நமது சமூகத்தைப் பொருந்தியதல்லவா. இதர சமூகத்தோடு நம்மையும் சமமாக மன்னவர் நடத்தியதனால் ஆங்கிலேய அரசாட்சி எவ்வளவு அன்பும், அருமையானதென்றும் நம் இனம் முன்னேறவுஞ் செய்ததென்றும் விளங்குகிறது என்று வரலாற்று முக்கியம் வாய்ந்த நிகழ்வை பாமரத் தமிழில் விளக்கியுள்ளார்.
அந்த மாநாட்டில் இவர் கலந்துகொண்டபோது, ராவ் சாகிப் ஆர்.சீனிவாசன் பறையர். நான் ஒரு தீண்டப்படாதவன் என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அட்டையொன்றை தன் மேலாடையில் மாட்டியிருந்தார். இதைப் பார்த்துத்தான் மன்னர் அக்கேள்வியைக் கேட்டார்.
ஆங்கிலேயர்களின் ஏகாதிபத்திய ஆட்சியைவிட ஜாதி இந்துக்களின் கொடுமையான ஆதிக்கம்தான் தாழ்த்தப்பட்ட மக்களை வெகுவாகப் பாதித்திருக்கிறது என்ற உண்மையும், ஆங்கில ஆட்சி வந்திராவிட்டால், இந்த விடிவுகூட அவர்களுக்குக் கிடைத்திருக்காது என்ற உண்மையும் இவற்றால் விளங்குகின்றன.
தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு அரசியல் அதிகாரம் கொடுக்கப்பட்டால்தான் தீண்டாமை என்னும் கொடிய பழக்கம் ஒழியும். சட்டசபையில் எங்களுக்குப் பிரதிநிதித்துவம் அளித்தால்தான் எங்கள் இலட்சியங்களை அடைய நாங்கள் போராட முடியும். வயது வந்தோருக்கு வாக்குரிமை வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை என்று அந்த மாநாட்டில் தன் சமூகத்திற்குரிய கோரிக்கைகளை முன்வைத்தார்.
சொத்துள்ளவருக்கும், படிப்புள்ளவருக்கும் மட்டுமே வாக்குரிமை என்ற அந்தக் காலத்தில், தன் இனம் முன்னுக்கு வரவேண்டும் என்றால், வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை என்று ஆணையிடப்படவேண்டும் என்ற மிக முக்கியமான கோரிக்கையை அவர் முன் வைத்தார்.
தாழ்த்தப்பட்ட மக்களின் மேம்பாட்டிற்கு என்ன செய்யவேண்டும் என்பதை எவ்வளவு நுட்பமாகச் சிந்தித்து அவர் கோரிக்கைகளை வைத்திருந்தார் என்பது இதன்மூலம் விளங்குகிறது.
அரசியல் அதிகாரத்தைப் பெறாத எந்தச் சமுதாயமும் முன்னுக்கு வர இயலாது என்பது ஆழமான உண்மை. அதை நுட்பமாக அறிந்து, அதைக் கோரிக்கையாக வைத்தார். அக்காலத்தில் இந்த அளவிற்கு விழிப்போடு சிந்திப்பது என்பதும், சிந்தித்து எடுத்த முடிவுகளைச் செயல்படுத்துவது என்பதும், அதுவும் அயல்நாட்டிற்குச் சென்று உலகையே ஆண்டு கொண்டிருந்த ஆட்சியாளர்களிடம் அது குறித்துக் கோரிக்கை வைப்பது என்பதும் வியப்புக்குரிய அரிய செயல்களாகும். அவற்றை ஒரு எளிய குடும்பத்தில் பிறந்த, தாழ்த்தப்பட்ட தமிழர் செய்திருக்கிறார் என்பது தமிழர்க்குப் பெருமை, தாழ்த்தப்பட்டோர்க்கு அதனிலும் பெருமை.
காந்தியைக் கண்டித்தார்
1932-இல் ஏரவாடா சிறையில் காந்தியார் உண்ணாவிரதம் இருந்தபோது, அதை முடிவுக்குக் கொண்டுவர இவர் முயன்றார்.
சிறைச்சாலையில் (காந்திஜியை) மூன்று தரம் கண்டேன். வாதாடி வெற்றி பெறுவதை இவர் தவிர்த்து, உண்ணாவிரதமிருப்பது வீரத் தன்மையிழந்து இரக்கத்தைத் தேட வேண்டியவரானார் என்பதைக் கண்டு மனதிரங்கி புனா ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டேன் என்று இவர் கூறுவது இவரது நிலைப்பாட்டைத் தெளிவாக விளக்குகிறது.
ஆதிக்கவாதிகளிடம் உரிமைகள் பெற போராடவேண்டுமே ஒழிய உண்ணாவிரதம் இருந்து அவர்களின் இரக்கத்தைப் பெற முயல்வது வீரமும் அல்ல, நடைமுறைக்கு உகந்ததுமல்ல என்பதை அப்பொழுதே இவர் ஆணித்தரமாக அறிவித்திருக்கிறார். எனவே, இவர் ஒரு சரியான விடுதலைப் போராளி என்பதை இதன்மூலம் அடையாளம் காண முடிகிறது அதேபோல், இந்துமதக் கொடுமைகளைக் கண்டு, மனம் வெறுத்து அம்பேத்கர் 1935-இல் புத்த மதத்தைத்தழுவியபோதுகூட அதை இவர் எதிர்த்திருக்கிறார்.
தாங்களிருக்கும் மதத்தில் இருந்துகொண்டே ஆண்மையான வீரத்துடன் முன்னேற வேண்டுமென்று உடனே தந்தி மூலம் அம்பேத்கரிடம் பிரஸ்தாபித்தேன் (தெரிவித்தேன்) என்று அவரே குறிப்பிட்டுள்ளார்.
இழிவைப் போக்கிக்கொள்ள மத மாற்றம் சரியான தீர்வு அன்று. ஆதிக்கவாதிகளிடம் போராடி நமது உரிமைகளை மீட்டு எடுத்து, சரிநிகர் சமானமாய் வாழவேண்டும் என்பது இவரது கொள்கையாக இருந்தது.
1937 இல் இராஜாஜி ஆட்சியில் ஆலயப் பிரவேசம் நடத்தப்பட்டபோதுகூட, அதை முழுமையாக இவர் நம்பவில்லை. சட்டப்படியாகவும் நடைமுறையில் செயல்படுத்தும் விதமாகவும் அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இவர் விரும்பினார்.
ஏட்டளவில் சட்டங்கள் சாதகமாய் இருந்தால் மட்டும் போதாது. அதை நடைமுறைப்படுத்துவதில்தான், அதன் வெற்றியே உள்ளது என்றார். இவரைப் போன்றே தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பாடுபட்ட, எம்.சி.இராஜா அவர்கள், ஜாதி இந்துக்கள் தாழ்த்தப்பட்டோர் மீது செலுத்தும் ஆதிக்கம், செய்யும் கொடுமை, இழிவு ஆகியவற்றை அறவே ஒழிக்க ஒரு மசோதாவை இரு அவைகளிலும் கொண்டு வந்தார். இது பல்லில்லா பாம்பு போன்றது என்று கூறினார் இரட்டைமலை சீனிவாசன். இரு அவைகளிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்ட சட்டத்தை மீறுகின்றவர்கள் மீது சிவில் கோர்ட்டில் வழக்குத் தொடுக்கலாம் என்று சொல்லப்பட்டிருந்தது. இதைத்தான் இவர் கடுமையாக விமர்சித்தார். தாழ்த்தப்பட்டவன் நீதிமன்றத்தில் வழக்குத்தொடுத்து நியாயம் பெறும் நிலையிலா உள்ளான்? எனவே, இதுபோன்ற சட்டங்கள் நடைமுறையில் நல்ல விளைவுகளை ஏற்படுத்தாது என்றார்.
உப்புச் சத்தியாக்கிரகம்
காந்தியாரின் உப்புச் சத்தியாக்கிரகத்தை இவர் முதலில் எதிர்த்தார். உப்பு வரியின் வருவாயைத் தாழ்த்தப்பட்டோருக்குச் செலவிட்டு அவர்களின் நிலையை உயர்த்தவேண்டும் என்றார். ஆனால், ஆங்கில ஆட்சியாளர்கள் அந்த வருவாயைத் தாழ்த்தப்பட்டோருக்குப் பயன்படுத்த மாட்டார்கள் என்பதைப் பின்னாளில் உணர்ந்து காந்தியின் நிலைப்பாட்டை ஆதரித்தார்.
பட்டங்கள்
ஆங்கில ஆட்சியாளர்கள் இவருக்கு 1926-இல் ராவ்சாஹிப் பட்டமும், 1930-இல் ராவ்பகதூர் பட்டத்தையும், 1936-இல் திவான் பகதூர் பட்டத்தையும் வழங்கினர். இவர் ஆங்கில ஆட்சிக்கு ஆதரவாக நின்றது ஜாதி இந்துக்களின் கொடுமைகளைவிட, ஆங்கில ஆட்சியின் ஆதிக்கம் சிறப்பானது என்று எண்ணியே. மேலும், ஓரளவிற்காவது தாழ்த்தப்பட்டவர்களுக்குரிய நன்மைகளை ஆங்கில ஆட்சியாளர்களிடமிருந்தே பெற முடியும் என்று நம்பினார். அவரது எண்ணத்திலும் நம்பிக்கையிலும் உண்மையில்லாமல் இல்லை. இதைத்தான் தந்தை பெரியாரும் சொன்னார் என்பதை முன்னமே கூறினேன். இவரது ஆங்கில ஆட்சி ஆதரவு தன்னலத்தில் எழுந்தது அல்ல. தன் சமுதாய நலனை முன்னிறுத்தி எழுந்ததாகும். 19-ஆம் நூற்றாண்டில், தீண்டப்படாத சமுதாயத்தில் பிறந்து இவ்வளவு சாதித்தார் என்றால், அவரது திறமைக்கும், பெருமைக்கும் அளவே இல்லை. தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டுமல்ல, மனிதநேயம் விரும்பும் அனைவரும் இவரை என்றென்றும் மறக்கமாட்டார்கள்.
இத்தகு பெருமைக்குரிய இந்த மாமனிதரின் 80-ஆவது பிறந்த நாளில் எம்.சி.ராஜா, திரு.வி.க., ராஜாஜி போன்றோர் கலந்துகொண்டனர். விழிப்பும், எழுச்சியும், போர்க்குணமும், அறிவு நுட்பமும் நிறைந்த இரட்டைமலை சீனிவாசன் 1945 செப்டம்பர் 18-ஆம் நாள் தனது 85 ஆவது வயதில் இறந்துபட்டார்.
வாழ்க இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் புகழ்!

நூல் - மறைக்கப்பட்ட மாமனிதர்கள்  
ஆசிரியர் - மஞ்சை வசந்தன்