சனி, 16 மே, 2020

திராவிடர் கழகத்தை மய்யப்படுத்தி பேராசிரியர் அருணன்!

தலைமை - தத்துவம் - இயக்கம்! - 1
May 16, 2020 • Viduthalai • மற்றவை

திராவிடர் கழகத்தை மய்யப்படுத்தி பேராசிரியர் அருணன்!

காங்கிரசிலிருந்து பெரியார் வெளியேறியது ஏன்? - "காங்கிரசிலிருந்த பார்ப்பனத் தலைவர்களின் வர்ணாசிரம வெறி!"

தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் மாநில தலைவரும், தமிழ்நாட்டின் சிறந்த சமூக வரலாற்று ஆய்வாளருமான எழுத்தாளர் பேராசிரியர் அருணன் அவர்களின் "காலந்தோறும் பிராமணியம்" எட்டு தொகுதிகளும் மிக அரிய சமூக வரலாற்றுப் பெட்டகங்கள் ஆகும்.

அதில் தந்தை பெரியார் - திராவிடர் கழகம் பற்றிய அவரது கண்ணோட்டம் கருத்துப் பதிவுகளாக வெளிவந்துள்ளன.

அவற்றை நாம் இங்கே தொடர் கட்டுரைகளாகத் தருவதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

சிலவிடங்களில் மாறுபட்ட கருத்துக்கள் கூறப்பட்டிருப்பினும் அத்தகைய அய்யங்களைப் போக்கி, தெளிவுபடுத்தி, புரிதலை ஏற்படுத்துதல் நமது கடமை என்ற உணர்வோடும், பெருமிதத்தோடும் இத்தொடரினை நமது வாசக நேயர்களுக்குப் பயன்பட வெளியிடுகிறோம் - வரலாற்று மீள் பார்வை இதன் மூலம் கிடைக்கிற ஒரு வாய்ப்பு நமக்குக் கிட்டுகிறது!

நன்றி...

- ஆசிரியர், 'விடுதலை'

 

தமிழகத்தின் ஈரோட்டில் 1879 செப்டம்பர் 17ல் பிறந்தார் ஈ.வெ. ராமசாமி. பின்னாளில் “பெரியார்” என்று பிரியமாக வும், மரியாதையாகவும் அழைக்கப்பட்டார்.. வசதியான வணிகக் குடும்பம். பள்ளிப் படிப்பு அதிகம் இல்லை யென்றாலும் பொது அறிவும், கூர்ந்த மதியும் உண்டு. கூடவே சகமனிதர்கள்பால் மட்டற்ற அன்பும் உண்டு. இது இவரைப் பொதுவாழ்வில் இறக்கியது.

1918இல் ஈரோடு நகரசபைத் தலைவரானார். அப்போதே காங்கிரசிலும் தீவிரமாக இருந்தார். அப்போது வரவிருந்த ராஜாங்கச் சீர்திருத்தங்கள் பற்றி ஆலோசிக்க ஒரு சிறப்பு மாநாடு - காங்கிரஸ் - கூடவிருந்தது. அந்த “விசேஷக் காங்கிரசின் அக்கிராசனத்திற்கு லோகமான்ய திலகரைத் தேர்ந்தெடுத்தால் தான் நமது தேசத்தின் ஷேமத்துக்குப் பொருந்தியதாகும்” என்று தமிழகத்தின் காங்கிரஸ் தலை வர்கள் பலரும் சேர்ந்து ஓர் அறிக்கை வெளியிட்டார்கள். அதில் கையெழுத்திட்டவர்களில் சி.இராஜகோபாலாச் சாரியார், வி.ஓ. சிதம்பரம்பிள்ளை போன்றோரோடு “இ.வி. ராமசாமி நாயக்கரும், ஈரோடு”ம் இருந்தார். அதாவது காங்கிரசின் மீது மட்டுமல்ல திலகர் மீதும் அவ்வளவு பற்று. பிரிட்டீஷ் ஆட்சியாளர்களை எதிர்ப்பதே பிரதான கடமை என்றிருந்தாரே தவிர, பிராமணிய எதிர்ப்பு எல்லாம் அப்போது வரவில்லை. திலகரின் பிராமணியச் சிந்தனைகள் இவரை எட்டியதாகத் தெரியவில்லை; அவரின் பிரிட்டீஷ் எதிர்ப்பு இவரைப் பிரமாதமாக ஈர்த்திருந்தது.

இதன் பொருள் பிராமணர் - பிராமணரல்லாதார் விவகாரம் இவருக்கு அப்போது தெரியாது என்பதல்ல, 1916லேயே “நீதிக்கட்சி” எனப் பிரபலமாக அறியப்பட்ட “தென்னிந்திய நல உரிமைச் சங்கம்“ உருவாகியிருந்தது. இதற்குப் போட்டியாகக் காங்கிரசிலிருந்த பிராமணரல்லாத தலைவர்கள் “சென்னை மாகாணச் சங்கம்‘ என்பதை 1917இல் உருவாக்கினார்கள். அதன் துணைத் தலைவர்களில் ஒருவ ராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார் பெரியார். அதன் இரண் டாவது மாநாடு 1919 செப்டம்பரில் ஈரோட்டில் நடந்தபோது அதன் வரவேற்புக்குழுத் தலைவராக இருந்தார். அந்த வரவேற்புரையில் இப்படிக் குறிப்பிட்டார் - “தேச முன் னேற்றத்தை நாட்டக் கிளர்ச்சி செய்யும் காலத்து, இந்தியா வில் பிறந்த எந்த சகோதரர்கள் மீதும் துவேஷங் காட்டலா காது. பிராமணத் துவேஷங்காட்டி தேசநலத்தை நாடுவது தேசத்திற்கு தீங்கு செய்வதையொக்கும்.’’ அன்று நடந்த பிராமணிய எதிர்ப்பு இயக்கத்தை பிராமணத் துவேஷமாகவே பெரியார் கருதினார். அது பிரிட்டீஷ் எதிர்ப்பு இயக்கத்திற்கு - தேச நலனுக்கு - கேடு பயப்பது என்றே நம்பினார்.

அதுமட்டுமல்ல, அந்த பிராமணிய எதிர்ப்பு இயக்கத்தார் பற்றி அன்று பிராமணியவாதிகள் சுட்டிக்காட்டிய ஒரு முக்கியமான, சரியான குற்றச்சாட்டை இவரும் திருப்பிச் சொன்னார். அது - “நாம் பிராமணர் மீது எவ்வகைக்குற்றம் குறைகளைச் சுமத்துகிறோமோ அவ்வகைக் குற்றங்குறை களைப் பஞ்சமர் முதலியோர் நம்மீது சுமத்துகின்றனர். பிராமணரோடு அமர்ந்து உணவு கொள்ள விரும்பும் வேளாளன் பஞ்சமனோடு அமர்ந்து உணவு கொள்ள விரும்புகிறானில்லை. பிராமணனோடு கலக்க விரும்புபவன் ஏன் பஞ்சமனோடு கலக்க விரும்பலாகாது? நம்மவருள் பலர் தாழ்த்தப்பட்டோருடன் சகோதரத்துவம் காட்டாது பிராமணனிடத்து சகோதரத்துவமில்லை என்று கூறுவது அறியாமையேயாகும்.” இதுதான் அன்றைய நிலைமை. ஆனால், இதற்காக பிராமணியத்தை எதிர்த்து பிராமண ரல்லாதார் போராடக்கூடாது என்பதில்லை. அந்தப் போராட்டமானது மேலும் கீழுமான தீண்டாமை ஒழிப்புப் போராட்டமாக ஒரு விரிந்த தளத்தில் நடத்தப்பட வேண்டும் என்பதே இதற்கான விடையாகும். அன்றைய பிராமணிய வாதிகளோ பிராமணரல்லாதார் பஞ்சமர்பால் கடைப் பிடிக்கும் தீண்டாமையைக் காட்டித் தாங்கள் சூத்திரர்கள் மற்றும் பஞ்சமர்பால் கடைப்பிடிக்கும் தீண்டாமையை நியாயப்படுத்தினார்கள், அதை எதிர்த்துப் போராட்டம் நடத்தக் கூடாது என்றார்கள். இதை அப்படியே அன்று அப்பாவித்தனமாக எதிரொலித்தார் பெரியார். இதைப் பின்னாளில் அவரே ஒப்புக் கொண்டிருக்கிறார். இத்தகைய புரிதலில் தான் திலகரின் பிராமணியச் சிந்தனைகள் அவரது மனதைத் தைக்கவில்லை அல்லது அன்று அவர் அளவுக்கு அவை எட்டவில்லை எனலாம்.

“1920இல் காந்தியாரின் திட்டப்படி ஒத்துழையாமை இயக் கம் தொடங்கப்பட்டது. தீண்டாமை விலக்கு, மதுவிலக்கு, கோர்ட்டு விலக்கு, பள்ளிக்கூட விலக்கு, உத்தியோக விடு தலை ஆகியவைகள் ஈவெரா. வின் மனத்தைக் கவர்ந்தன என்றாலும், தீண்டாமை ஒழிப்பு விஷயத்தைக் காரியத்தில் நிறைவேற்றுவதற்கு நல்ல சந்தர்ப்பம் ஒன்று ஏற்படப் போகிறது என்ற ஆசையாலும், ஜாதி வேற்றுமையை ஒழிக்க வேண்டிய காரியத்திற்கும் ஒரு அரிய சந்தர்ப்பம் கிடைக்கிறதே என்ற அவாவினாலும் சிறிதும் யோசிக்காமல் சட்டென்று காங்கிரசில் இறங்கிவிட்டார்” என்று 1939லேயே பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய சாமி.சிதம் பரனார் கூறுகிறார். பிரிட்டீஷ் எதிர்ப்போடு தீண்டாமை ஒழிப்பு, ஜாதி வேற்றுமை ஒழிப்பு என்பதும் காங்கிரசின் ஒத்துழையாமை இயக்கத்தில் அவர் இறங்கக் காரணமாக இருந்தது.

வைக்கம் போராட்டத்தில் கைது

இது சிறிது காலத்திலேயே வைக்கம் போராட்டத்தில் அவர் காட்டிய ஈடுபாட்டின் மூலம் தெளிவாக வெளிப் பட்டது. திருவாங்கூர் சமஸ்தானத்தில் இருந்தது வைக்கம் என்பதை அறிவோம். அதன் கோவிலைச் சுற்றிய சாலை களில் தீண்டப்படாதார் சென்றால் கோவில் தீட்டாகிவிடும் என்றும், பக்தர்கள் தீட்டாகிப் போவார்கள் என்றும் கூறி தடை விதித்திருந்தார்கள் பிராமணியவாதிகள். அங்கே தீண்டப்படாதார் என்போரில் ஈழவர், புலையர், சாணார், பறையர் உள்ளிட்ட சாதிகளைச் சேர்ந்த பல லட்சம் பேர் இருந்தார்கள். இவர்கள் யாரும் அந்தச் சாலைகளில் நடமாட முடியாது. வினோதம் என்னவென்றால் அவற்றில் செல்ல இந்து அல்லாதவருக்கு உரிமை உண்டு; ஆனால் இவர் களுக்கு மட்டும் இல்லை. இந்தத் தடையை எதிர்த்தே கோவிலை அல்ல, அதையொட்டிய சாலைகளைத் திறந்து விடச் சொல்லியே - 1924இல் போராட்டம் நடந்தது. கோவில் நுழைவுப் போராட்டம் அல்ல, சாலை நுழைவுப் போராட்டம்!

இந்தப் போராட்டத்திற்கு திருவாங்கூருக்கு வெளியே உள்ளவர்களையோ அல்லது பிற மதத்தவர்களையோ அழைக்கக் கூடாது என்றார் காந்திஜி. ஆனால் நடந்ததோ இதற்கு நேர்மாறானது. அங்கே சத்தியாக்கிரகம் நடத்திய அதன் தலைவர் மேனன் கைதானதும், போராட்டத்தை தொடர்ந்து நடத்தியவர் கிறிஸ்தவரான ஜார்ஜ் ஜோசப். இப்படி வரிசையாகப் பலரும் கைதானதும் என்ன நடந்தது? “சிறையிலிருந்தபடியே யோசித்துத் தோழர்கள் ஜார்ஜ் ஜோசப்பும், குரூர் நீலகண்ட நம்பூதிரியும் ஈ.வெ.ரா.வுக்கு ஒரு கடிதம் எழுதினார்கள்” என்கிறார் சாமி.சிதம்பரனார். அதற்கேற்பவே போராட்டத்தை நடத்த வைக்கம் போனார் பெரியார்.

“வெளி உதவியை நாட வேண்டாம்” என்று காந்திஜி “யங் இந்தியாவில்” எழுதியது 1924 ஏப்ரல் 24 அன்று. அதற்கு இரண்டு நாட்கள் முன்புதான் பெரியார் சிறைத்தண்டனை பெற்று அருவிக்குத்திச் சிறையிலிருந்தார். பெரியார் போன்ற வர்கள் இது விஷயத்தில் தலையிடக் கூடாது என்றே காந்திஜி அப்படி எழுதியதாகத் தெரிகிறது. ஆனால், பெரியார் பங்கேற்றது அந்த இயக்கத்திற்கு ஒரு பரந்த தளத்தைத் தந்தது. “இறுதியில் சத்தியாக்கிரகம் வெற்றி பெற்றது. தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தெருவில் நடக்கும் உரிமை வழங்கப்பட்டது. இந்தியாவிலேயே முதன்முதல் வெற்றி பெற்றது வைக்கம் சத்தியாக்கிரகம் ஒன்றேயாகும். இச்சத்தியாக்கிரகம் நாடெங்கும் புகழ்பெற்றுவிட்டது. இதனால் ஈ.வெ.ரா. ‘வைக்கம் வீரர்’ என்ற பெயர் பெற்றார். இன்றும் தமிழ்நாட்டார் இப்பெயரை மறக்கவில்லை” என்று 1939இல் சாமி.சிதம்பரனார் எழுதியதிலிருந்து 1925லேயே அத்தகைய புகழைப் பெரியார் பெற்றிருந்தார் என்பது தெளிவாகிறது. சமூக சீர்திருத்தத்தில் அப்போதே பெரியார் எவ்வளவு ஆர்வமாக இருந்தார் என்பதும் உறுதியாகிறது.

சேரன்மாதேவி குருகுல விவகாரம்

வ.வே.சு அய்யர் சாவர்க்கரின் சகபாடி, சரியான பிராம ணியவாதி என்பதைக் கண்டு வந்திருக்கிறோம். வாஞ்சி அய்யரைத் தயார் செய்தவர் என்பதையும் அறிவோம். இந்த மனிதர் வங்கப் பிரிவினை ரத்தானதும், திலகர் காலம் முடிந்து காந்தி காலம் பிறந்ததும் சாந்த சொரூபி ஆகிப் போனார். ஆனால், தனது பிராமணியச் சிந்தனையை விடவில்லை. அதேபோல சாவர்க்கர் மீது தான் கொண்ட பக்தியையும் விடவில்லை. “1925 ஜனவரி 2இல் மகாராஷ்டிர மாநிலத்தின் இரத்தினகிரியில் வீர சாவர்க்கரைச் சந்தித்தார்” வ.வே.சு. அய்யர் என்று கூறுகிறார் ஆய்வாளர் பெ.சு. மணி.

இப்படிப்பட்டவர்தான் தமிழ்நாட்டில் குருகுலம் ஒன்றை ஆரம்பித்தார். ஹரித்வாரில் லாலா முன்ஷிராம் (பின்னாளில் சிரத்தானந்தர்) பிராமணியம் வளர்க்க குருகுலம் ஒன்றை ஆரம்பித்ததை அறிவோம். “இந்தக் குருகுலத்தை வ.வே.சு. அய்யர் நேரில் கண்டது அவருடைய தேசியக் கல்விச் சிந்தனை செயல் வடிவம் பெறத் தூண்டியது” என்கிறார் பெ.சு. மணி. பிராமணியம் காக்க அன்று துப்பாக்கி ஏந்தியவர்கள் இப்போது அதே காரணத்துக்காகக் குருகுலம் துவக்கினார்கள். அவர்களது அகில இந்தியத் திட்டத்தின் ஒரு கிளைதான் அய்யரின் குருகுலம்.

1923 டிசம்பரில் கல்லிடைக்குறிச்சியில் முதலில் தனது குருகுலத்தைத் துவக்கியவர், பின்னர் அதை சேரன்மா தேவிக்கு மாற்றினார். 1924 அக்டோபர் முதல் அந்தக் குருகுலத்தின் சார்பில் “பால பாரதி” எனும் பத்திரிகையும் கொண்டு வந்தார். இந்தக் குருகுலத்திற்கு தனிப்பட்ட காங் கிரஸ்காரர்களிடமிருந்து ஆயிரக்கணக்கான ரூபாய் வசூல் செய்தது மட்டுமல்லாது, தமிழ்நாடு காங்கிரசிலிருந்தும் பணம் வாங்கியிருந்தவர். அப்படி வாங்கி நடத்திய குரு குலத்தில் பிராமணருக்கும் பிராமணரல்லாதாருக்கும் தனித் தனி பந்தி நடந்தது. சமபந்தி போஜனம் இல்லை. இதை தமி ழகக் காங்கிரசின் முப்பெரும் பிராமணரல்லாத தலைவர் களான பெரியார், திரு.வி.க., டாக்டர் வரதராஜூலு நாயுடு ஆகியோர் எதிர்த்தார்கள்.

வரதராஜூலு நாயுடு தனது “தமிழ்நாடு” பத்திரிகையில் இப்படி எழுதினார் - “குருகுலத்தில் இம்மாதிரி வித்தியாசம் கூடாது என்று நான் சொன்னேன். ஆனால் அந்த வேற்று மையை ஒழிக்க முடியாது என்று ஸ்ரீமான் அய்யர் கூறினார். இதைக் கேட்டதும் நானும் ஸ்ரீமான் ஈ.வி. ராமசாமி நாயக்கர் போன்ற பிராமணரல்லாதாரும் திடுக்கிட்டுப் போனோம். இது தெரிந்ததும் காங்கிரசிலிருந்து மறுபடியும் ரூ. 5,000 கொடுக்கவிருந்ததை, நிறுத்திவிட்டோம். நானும் ரூபா கொடுப்பதை நிறுத்தி விட்டேன்.”

காங்கிரஸ் தலைவர்கள் மட்டுமல்ல, கானாடுகாத்தான் வை.சண்முகம் செட்டியார் போன்ற பொது மனிதர்களும் இந்த அநீதியை எதிர்த்தார்கள். செட்டி நாட்டிலிருந்து வெளிவந்த “குமரன்” பத்திரிகையும் இது பற்றிக் கடுமையாக எழுதியது. அது - தமிழ் மக்களைப் பார்ப்பனருக்கு அடி மைப் படுத்தவும், தாய் மொழியைச் சித்திரவதை செய்ய வுமே அது தோன்றியிருக்கிறது என்பது குருகுலத்தின் தற்கால நடைமுறையில் விளங்குகின்றது.”

இப்படிப் பல முனைகளிலிருந்து எதிர்ப்புக் கிளம்பியும் வ.வே.சு. அய்யர் அசைந்து கொடுக்கவில்லை. காந்திஜி ஒரு சமரசத் திட்டம் தந்தார். அது நடைமுறையில் வருணா சிரமத்தைக் காப்பாற்றுவதாக இருந்தது. இதை பெரியார் உள்ளிட்ட தலைவர்கள் ஏற்கவில்லை. தமிழகக் காங்கிரசில் இது விஷயமாக நிறைவேற்றப்பட்ட ஒரு நியாயமான தீர்மானத்தை முடக்கிப் போட ராஜாஜி, டாக்டர் டி.எஸ்.எஸ். ராஜன், கே. சந்தானம், டாக்டர் டி.வி. ஸ்வாமிநாத சாஸ்திரி எனும் பிராமணர்கள் ஒட்டு மொத்தமாகத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியிலிருந்து ராஜினாமாச் செய்தார்கள். வ.வே.சு. அய்யரின் பிராமணிய நடைமுறைக்கு ஆதரவாக இவர்கள் எல்லாம் ஓரணியில் நிற்பதைக் கண்டு அதிர்ந்து போனார் பெரியார். காங்கிரஸ் மீது அவருக்கிருந்த நம்பிக்கை ஆட்டங்காண ஆரம்பித்தது.

(தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக