வியாழன், 21 மே, 2020

பார்ப்பானுக்கு பயந்து, முஸ்லிம்களுக்கு அதிக இடம் கொடுத்து வந்தோம்

"பார்ப்பானுக்கு பயந்து, முஸ்லிம்களுக்கு அதிக இடம் கொடுத்து வந்தோம். அதன் பலனை இன்று அனுபவிக்கிறோம். இது சாணியை மிதிக்க அசிங்கப்பட்டு, மலத்தின் மீது கால் வைக்க நேர்ந்த பழமொழியாக முடிந்தது!"
என்று சொன்னாரா பெரியார்?
ஆமாம். சொன்னார்!
பி.ஜே.பி பிரமுகர் எச்.ராஜா போன்று ஒரு கருத்தை பதிவிட்டு பின்னர் அது அட்மின் வேலை என்று ஒளிந்துகொண்டவரில்லை பெரியார். இந்தக்கருத்தை வெளியிட்டபோது தார்மீகப் பொறுப்பேற்று தன் கையெழுத்துடன் வெளியிட்டார் பெரியார்.
ஒடுக்கப்பட்ட மக்களை இஸ்லாத்திற்கு மாறுங்கள் என்று சொன்னவர் பெரியார்.
அம்பேத்கர் இஸ்லாத்திற்கு மாறாலாமா என உத்தேசித்துக் கொண்டிருந்தபோது ஒரு லட்சம் பேரோடு செல்லுங்கள். நான் பத்து, இருபதாயிரம் பேர் தருகிறேன் என்று சொன்னவர் பெரியார்.
பாக்கிஸ்தான் பிரிவினை கோரிக்கை எழுந்தபோது ஜின்னாவுக்கு ஆதரவாக இருந்தவர் பெரியார்.
இஸ்லாமியருக்கு எதிராக அப்படி அவர் எழுத வேண்டிய அளவிற்கு என்ன நடந்தது? வரலாற்றை சற்று பின்னோக்கிப் பார்ப்போம்!
இஸ்லாமியர்களுக்கு எதிரானவரா பெரியார்?
1952 ம் ஆண்டு தமிழகத்தில் முதலமைச்சரான ராஜாஜி 'பகுதிநேரம் படிப்பு' 'பகுதி நேரம் தொழில்' என்ற புதிய நடைமுறையை புகுத்தியதோடு 6000 பள்ளிகளை இழுத்து மூடினார்.
இராஜாஜியின் இந்த திட்டத்தை பெரியார் குலக் கல்வித் திட்டம் என்று விமர்சித்து அவரது ஆட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார்.
தோழர்களே கையில் பெட்ரோலும் தீப்பந்தமும் தயாராக வைத்துக் கொள்ளுங்கள். அக்ரஹாரத்திற்கு நாள் குறிக்கிறேன் என்றார்.
நாகையிலிருந்து குலக்கல்வி எதிர்ப்புப்படை புறப்பட்டது. பெரியாரின் எதிர்ப்பை சமாளிக்க முடியாத இராஜாஜி ஆட்சியை விட்டே ஓடினார்.
முதலமைச்சர் பதவியை ஏற்க தயங்கிய காமராஜரை நேரில் சந்தித்து சமுக நலன் கருதி ஏற்றுக்கொள்ள வற்புறுத்தினார் பெரியார்.
பெரியாரின் ஆதரவோடு 1957ல் காமராஜர் ஆட்சிக்கு வந்தார். மூடிய பள்ளிகளைத் திறந்ததோடு மேலும் கிராமப் புறங்களில் பல ஆயிரம் பள்ளிகளைத் திறந்தார். அவர் கொண்டு வந்த பல்வேறு திட்டங்களுக்கும் காரணம் பெரியார்! காரியம் காமராஜர்! என பத்திரிக்கைகள் எழுதியது.
'கல்வி வள்ளல்' 'பச்சைத்தமிழர்' என காமராஜரை பலவாறு புகழ்ந்து அவர் ஆட்சிக்கு பாதுகாப்பு அரணாக விளங்கினார் பெரியார்.
அந்த காலகட்டத்தில், அரசியலில் ஈடுபட முடிவெடுத்து, திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து உதயமான திராவிட முன்னேற்றக் கழகம், காமராஜரை வீழ்த்தி ஆட்சியைப் பிடிக்க பல்வேறு அரசியல் யுத்திகளைக் கையாண்டது.
அப்போது காமராஜருக்கு எதிராக காங்கிரஸிலிருந்து விலகிய இராஜாஜி சுதந்திராக் கட்சியை நடத்திகொண்டிருந்தார். எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வகையில் அண்ணா இராஜாஜியோடு மறைமுகக் கூட்டுவைத்திருப்பதாக பத்திரிக்கைகளில் செய்தி வந்தது.
இந்த சதிவலையில் இந்திய முஸ்லீம் லீக்கும் விழுந்தது.
இதைக்கண்டு வெகுண்ட பெரியார் இஸ்லாமியர்களுக்கு எதிராக கடுமையான அறிக்கை விடுத்தார்.
பார்ப்பான் துரோகம் செய்ய அவனுக்குக் காரணம் உண்டு. அவனது பொய் பித்தலாட்ட உயர் வாழ்வு சரிந்து விழுகிறது. முஸ்லிம்கள் துரோகம் செய்யக் காரணம் என்ன? என்று கேட்டார்.
அந்த அறிக்கையின் சில வரிகளை உருவி எடுத்துத்தான் பெரியார் இஸ்லாமியர்களுக்கே எதிரானவர் என்று பொய்ப் பிரச்சாரம் செய்யப்படுகிறது.
இது தொடர்பாக மேலும் விரிவான செய்தியினை #விமர்சனங்களுக்குஅப்பாற்பட்டவராபெரியார்?" புத்தகத்தில் அறிந்துகொள்ளலாம்.
- தளபதிராஜ், முகநூல் பக்கம், 11.5.20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக