சனி, 23 மே, 2020

தலைமை - தத்துவம் - இயக்கம்! திராவிடர் கழகத்தை மய்யப்படுத்தி பேராசிரியர் அருணன்! - 6


May 21, 2020 • Viduthalai • மற்றவை

சுயமரியாதை இயக்க சமதர்ம கட்சியாரின் உத்தேச திட்டம்

தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் மாநில தலைவரும், தமிழ்நாட்டின் சிறந்த சமூக வரலாற்று ஆய்வாளருமான எழுத்தாளர் பேராசிரியர் அருணன் அவர்களின் "காலந்தோறும் பிராமணியம்" எட்டு தொகுதிகளும் மிக அரிய சமூக வரலாற்றுப் பெட்டகங்கள் ஆகும்.

அதில் தந்தை பெரியார் - திராவிடர் கழகம் பற்றிய அவரது கண்ணோட்டம் கருத்துப் பதிவுகளாக வெளிவந்துள்ளன.

அவற்றை நாம் இங்கே தொடர் கட்டுரைகளாகத் தருவதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

சிலவிடங்களில் மாறுபட்ட கருத்துக்கள் கூறப்பட்டிருப்பினும் அத்தகைய அய்யங்களைப் போக்கி, தெளிவுபடுத்தி, புரிதலை ஏற்படுத்துதல் நமது கடமை என்ற உணர்வோடும், பெருமிதத்தோடும் இத்தொடரினை நமது வாசக நேயர்களுக்குப் பயன்பட வெளியிடுகிறோம் - வரலாற்று மீள் பார்வை இதன் மூலம் கிடைக்கிற ஒரு வாய்ப்பு நமக்குக் கிட்டுகிறது!

நன்றி...

- ஆசிரியர், 'விடுதலை'

 

சுயமரியாதை இயக்கத்தின் மூன்றாவது மாகாண மாநாடு விருதுநகரில் 1931 ஆகஸ்டில் நடைபெற்றது. இதில் நிறைவேற்றப்பட்ட கீழ்வரும் தீர்மானங்கள் புது மையானவை - “(1) எல்லா மதங்களும் மறைந்து போக வேண்டும். மதம் வழியும் வரை சகோதரத்துவம் வளராது (2) வருணாசிரம தர்மத்தை ஆதரிக்கும் எந்த இயக் கத்தையும் இம்மாநாடு எதிர்க்கிறது. தீண்டாமை ஒழிய வேண்டுமானால் பிராமணியம் ஒழிய வேண்டும். (3) கலப்பு மணங்கள் பெருகிட வேண்டும். (4) தேசியத்தின் பெயரால் ஹிந்தி பாஷையைக் கற்றாக வேண்டும் என்பது வருணாசிரமத்திற்கு ஆதரவு கொடுப்பதாய் இருப்பதால் ஹிந்திக் கொள்கையைக் கண்டிக்கிறது.”

மத எதிர்ப்பு தீவிரமானதை முதல் தீர்மானம் உணர்த் துகிறது. கலப்புத் திருமணத்திற்குப் பெரும் ஊக்கம் கொடுக்க முடிவு செய்யப்பட்டது. இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்திற்கு அப்போதே கால்கோள்விழா எடுக்கப் பட்டது. இந்த மாநாட்டை ஒட்டியும் பெண்கள் மாநாடு தனியாக நடந்தேறியது. அதில் “பெண்களை போலிஸ் இலாகாவிலும் இராணுவத்திலும் எடுக்க வேண்டும்“ எனும் படு தீவிரமான தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. இளைஞர்கள் மாநாடும் அவ்வமயம் நடத்தப் பட்டது. அதில் “சமதர்ம தத்துவமும் பொதுவுடமைக் கொள்கையும் நாட்டில் ஓங்க வேண்டும் என்பதே நமது லட்சியமாய் இருக்கின்றபடியால் விதி, கடவுள் செயல் போன்ற உணர்ச்சிகள் மக்களை மனதிலிருந்து ஒழிக்கப் பட வேண்டும்“ எனும் பரபரப்பான தீர்மானமும் நிறை வேற்றப்பட்டது. அந்தக் காலத்தில் சமதர்மம் - பொது வுடமை என்று பேசுவது பிரிட்டீஷ் ஆட்சியாளர்களுக்கு ஆகாத விஷயம். அதை கடவுள் மற்றும் விதி மறுப்புக் கோட்பாட்டோடு சேர்த்து சாதுரியமாக போட்டார்கள் எனலாம். கம்யூனிஸ்டு தலைவர் சிங்காரவேலருடன் பெரியார் கொண்டிருந்த நட்பு இத்தகைய சிந்தனைகளின் ஊற்றுக்கண்ணாய் இருந்தது.

சத்தமில்லாமல் நடந்த சீர்திருத்தங்கள்

சுயமரியாதை இயக்கத்தின் இந்த மாநாட்டில் தாழ்த்தப் பட்டோர்கள் பிரச்சனைகளுக்குத் தனிக் கவனம் செலுத்தப்பட்டது. “ஆதி திராவிடர் துயரம் (இராமநாத புரம் - தேவகோட்டை) சம்பந்தமாக விசாரணை கமிஷன் நியமிக்க வேண்டும்“ என்று தீர்மானித்தது மாநாடு. 1930 டிசம்பரில் தேவகோட்டையில் நடந்த “கள்ளர்கள் சாதி மாநாட்டில்” தாழ்த்தப்பட்ட வகுப்பினரான பள்ளர்கள் மீது கொடுமையான சமூகத் தடைகள் விதிக்கப்பட்டன. இதை எதிர்த்தே இப்படித் தீர்மானம் போடப்பட்டது.

இதன் இளைஞர் மாநாட்டிலும் “ஸ்தல ஸ்தாபனங் களின் பொதுக்குளம், பொதுப்பள்ளி, பொதுவழி முதலிய வைகளில் சுயமரியாதை உணர்ச்சியுடைய இளைஞர்கள் அடைய வேண்டிய உரிமைக்காக திருச்சி பெரம்பலூரில் தாழ்த்தப் பட்ட மக்களால் ஆரம்பிக்கப்படப் போகும் சத்தியாக்கிரக இயக்கத்திற்கு வேண்டிய ஆதரவு கொடுக்க வேண்டுமாய் இம்மகாநாடு கேட்டுக் கொள் கிறது” என்கிற தீர்மானமும் நிறைவேறியது. சூத்திரர்-பஞ்சமர் ஒற்றுமையை வலியுறுத்தும் மனப்பான்மை விடாது வெளிப்பட்டு வந்தது.

சுயமரியாதை இயக்கம் பிறந்து ஆறாண்டுகளாகி விட்டன, மூன்று மாகாண மாநாடுகளும் நடந்து விட்டன. ஆனால் போராட்டங்கள் எதற்கும் அறைகூவல் விடவும் இல்லை, நடத்தவும் இல்லை . ஒரு பிரச்சார இயக்கமாகவே நடந்து வந்தது. எனினும், சத்தமில்லாமல் சில சமூகசீர் திருத்த செயல்கள் நடந்து வந்ததாக பெரியார் அழுத்த மாகக் கூறினார். 1931 செப்டம்பரில் அவர் எழுதியது - “ஈரோடு சுயமரியாதை மகாநாட்டிலும் ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே பந்தியில் சமமாக உட்கார்ந்து சாப்பிட்டதை இயக்க எதிரிகளும் கூட இருந்து பார்த்துக் கொண்டுதான் இருந்தார்கள். எவ்வித ஒளிவு மறைவும் இல்லாமல் பார்ப்பனரல்லாத - சைவர்களல்லாத நாடார்கள் சமையல் செய்தார்கள். ஈரோட்டில் பறையர்கள் முதல் எல்லா ஜாதியினரும் எல்லா மதக்காரரும் பரிமாறினார்கள்... எந்த அரசியல் மகாநாட்டிலும் பார்ப்பனரல்லாதார் சமையல் செய்ததோ, தீண்டா ஜாதியார் பரிமாறியதோ, பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் எல்லாரும் ஒரு பந்தியில் இருந்து சாப்பிட ஏற்பாடு செய்ததோ இது வரையில் நாம் அறிய நடந்ததே இல்லை. மற்றும் பெண்கள் ஆண்களுடன் சரிசமமாக தங்களைக் கருதிக் கொண்டதும் மற்றும் அவர்கள் நிர்ப்பந்தங்கள் ஒழிந்ததுமான சம்பவங்கள் இவ்வியக்கத்தின் பயனாய் காணப்பட்டது போல் வேறு எதிலாவது காணப்பட்டது என்று யாரும் சொல்ல மாட்டார்கள்.”

காங்கிரஸ் மாநாட்டில் இல்லாத சமபந்தி போஜனத்தை தங்கள் மாநாடு சர்வசாதாரணமாக நடத்திக் காட்டியதாகப் பெரியார் கூறினார். பெண்களுக்கு ஏற்பட்ட சமத்துவ உணர்ச்சியைக் குறிப்பிட்டார். காங்கிரஸ் நடத்திய சத்தியாக் கிரகப் போராட்டங்களைவிட இவை முக்கியம் என்றார். இந்தத் தலையங்கத்திற்குத் தலைப்பே “சத்தியாக் கிரகம்“ என்பது.

1931 டிசம்பரில் பெரியார் மேலை நாடுகளுக்குப் பயணமானார். 1932 பிப்ரவரி - மே மாதங்களில் சோவியத் நாட்டில் சுற்றுப்பயணம் செய்தார். அங்கிருந்து ஐரோப்பிய நாடுகள் பலவற்றுக்கும் சென்றார். இங்கிலாந்தில் கம்யூ னிஸ்டு தலைவர் சக்லத்வாலாவைக் கண்டு பேசினார். அப்படியெனில் கம்யூனிஸ்டு சிங்காரவேலரின் உதவி இந்தப் பயணங்களுக்கு இருந்திருக்க வேண்டும். பின்னர் இலங்கை வழியாக 1932 நவம்பரில் ஈரோடு வந்து சேர்ந்தார்.

கிட்டத்தட்ட ஓராண்டு காலம் பெரியார் இந்தியாவில் இல்லை. இந்தக் காலத்தில்தான் தாழ்த்தப்பட்டோருக்கான தனித்தொகுதி முறையை எதிர்த்து காந்திஜி உண்ணா விரதம் இருந்தார். “குடி அரசு” ஏடு “காந்தியின் வைதீக வெறி” எனச் சாடி தலையங்கம் எழுதியது. “தீண்டாதாருக் குத் தனித் தொகுதி கிடைத்துவிட்டால் அவர்களுக்காகத் தேர்ந்தெடுக் கப்படும் பிரதிநிதிகள் வேறு எந்த உயர்ந்த வகுப்பாருடைய தயவையும் எதிர்பாராமல் சட்ட சபைக்குத் தேர்ந்தெடுக்கப்படலாம். சட்டசபையிலும் அவர்கள் தங்கள் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு உண் மையாகவும் தைரியமாகவும் போராடலாம்“ என்று கூறியது. அதுமட்டுமல்ல, காந்திஜியின் உண்ணாவிரதத் தைக் கண்டித்தும் அம்பேத்கருக்கு ஆதரவாக வும் சுயமரியாதை இயக்கம் பெரியதொரு பொதுக்கூட்டத்தை ஈரோட்டில் நடத்தியது. முடிவில் பூனா ஒப்பந்தம் ஏற்பட்டதை அறிவோம். அது தொடர்பாக அம்பேத்கர் விடுத்த அறிக்கையை “அம்பேத்கரின் வெற்றி” என்ற தலைப்பில் “குடி. அரசு” வெளியிட்டது.

சுயமரியாதைச் சமதர்மக்கட்சித் திட்டம்

சோவியத் நாடு சென்று வந்த பெரியார் பொதுவுட மைச் சிந்தனையின்பால் மேலும் ஈர்க்கப்பட்டார். கம்யூனிஸ்டு சிங்காரவேலர் கொடுத்திருந்த “சுயமரியாதை இயக்க சமதர்ம கட்சியாரின் உத்தேச திட்டம்” என்பதை 1932 டிசம்பரில் “குடி அரசில்” வெளியிட்டார். அது பற்றி விவாதிக்க ஈரோட்டில் சுயமரியாதை இயக்கத்தின் முன்னணிச் செயல்வீரர்கள் சுமார் முந்நூறு பேர் கூடினார்கள். அந்த விவாதத்திற்குப் பிறகு ஏற்றுக் கொள்ள “சுய மரியாதை இயக்க லட்சியமும் சுயமரியாதை சமதர்மக்கட்சி வேலைத் திட்டமும்‘‘ ப்பட்டது 1933 ஜனவரியில் “குடி அரசில்” வெளியிடப்பட்டது. இதுவே “ஈரோடு திட்டம்” என்று பிரபலமானது.

இதைப் படித்துப் பார்த்தால், அதன் லட்சியமானது அன்றைய காலத்திற்குப் பொருந்தாத அதிதீவிரப் போக் குடையதாக இருந்தது புரிபடுகிறது. “எல்லா தொழிற் சாலைகளையும் பொது மக்களுக்கு உரிமை ஆக்குவது” போன்ற சோசலிச திட்டமெல்லாம் அதில் இருந்தது. அப்படியே “எந்தவிதமான பிரதிப் பிரயோஜனமும் கொடுபடாமல் தேசத்தில் உள்ள எல்லா விவசாய நிலங்க ளையும், காடுகளையும் மற்ற ஸ்தாவர சொத்துக்களையும் பொது ஜனங்களுக்கு உரிமை ஆக்குவது” என்றெல்லாம் இருந்தது. ஆனால், கட்சி வேலைத் திட்டமானது காரி யார்த்தமான தாகவும் காலத்திற்கேற்றதாகவும் இருந்தது. சுயமரியாதை இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றுகிற திட்டமே இது. குடிமைச் சமூகத்தில் தீவிரமாக இயங்குவது எனும் பெரியாரின் தாகத்திற்கு இது நேர்விரோதமானது. சோவியத் பயணத் திற்குப் பிறகு எழுந்த உணர்ச்சியிலும் உத்வேகத்திலும் தனது பழைய நிலைபாட்டிலிருந்து அவர் மாறியிருந்தார். இதுவொரு உள் முரண்பாடு என்றால், இது தெரிவித்த லட்சிய சமுதாயம் சுயமரியாதை இயக்கத்திலிருந்த நிலப்பிரபுத்துவ மற்றும் முதலாளித்துவ சக்திகளுக்கு சிறிதும் உடன்பாடான விஷயம் அல்ல. ஆகவே அவர்கள் வெளிப்படையாகவே எதிர்த்தார்கள். எனினும் தனது பத்திரிகைகளில் பொதுவுடமைப் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தினார் பெரியார்.

“இன்றைய ஆட்சி ஏன் ஒழிய வேண்டும்?” என்ற தலைப்பில் தலையங்கம் எழுதியதற்காகப் பெரியார் சிறையில் அடைக்கப்பட்டார் அந்த ஆண்டு இறுதியில். 1934 மே மாதத்தில்தான் அவர் விடுதலையானார். இப்படிச் சிறையில் இருந்த காலத்தில் ராஜாஜியைச் சந்திக்க நேர்ந்தது. பெரியாரைக் காங்கிரசில் மீண்டும் ஈர்க்க ஒரு முயற்சி செய்தார் அவர். அதற்குப் பெரியார் தன் தரப்பில் கடவுள் - மத எதிர்ப்பு விஷயங்களை தனது தனிப்பட்ட கொள்கையாக வைத்துக் கொள்ள ஒப்புக் கொண்டவர், காங்கிரஸ் தரப்பில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை ஒப்புக் கொள்ள வேண்டும் என்றார். காங்கிரசின் பிராமணியவாதிகள் இதை ஒப்புக் கொள்ளாத தால் அந்த முயற்சி அப்போதே செத்துப் போனது பிராம ணிய எதிர்ப்பிலும் சமூக நீதியிலும் பெரி.... உறுதியாக இருந்ததை இது காட்டுகிறது. இந்தக் கட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியை பிரிட்டீஷ் ஆட்சியாளர்கள் தடை செய்திருந்தார்கள். இது நடந்தது அந்த ஆண்டு ஜூலை யில்.

இப்போது பெரியாருக்கு ஓர் இக்கட்டான நிலைமை வந்தது. தொடர்ந்து கம்யூனிசப் பாதையில் சென்றால் அவரது சுயமரியாதை இயக்கமும் தடை செய்யப்படக் கூடிய ஆபத்து இருந்தது. பரவாயில்லை என்று அந்தப் பாதையில் செல்வதா அல்லது பிராமணிய எதிர்ப்போடு நிறுத்திக் கொள்வதா என்பதே அது. அவர் பின்னதைத் தேர்வு செய்தார். இதற்காக நீதிக் கட்சியை அணுகினார். அவர்களோ இவரது செயல்திட்டத்தை வெட்டிக் குறுக்கியே ஏற்றுக் கொண்டார்கள். இப்போது பெரியார் தனது பழைய நிலைக்குத் திரும்பி விட்டார். அதாவது சுயமரியாதை இயக்கம் எனும் சமூக சீர்திருத்த இயக் கத்தை நடத்திக் கொண்டே அரசியலைப் பொறுத்தவரை நீதிக் கட்சியை ஆதரிக்கிற அந்தப் பழைய நிலை.

(தொடரும்)

- விடுதலை நாளேடு 21 5 20 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக