சனி, 23 மே, 2020

தலைமை - தத்துவம் - இயக்கம்! திராவிடர் கழகத்தை மய்யப்படுத்தி பேராசிரியர் அருணன்! - 7


May 22, 2020 • Viduthalai • மற்றவை

"கீதையை நம்புகின்றவன் தீண்டாமையையும், ஜாதியையும் ஒழிக்க முடியுமா?"- பெரியார் தொடுக்கும் வினா

தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் மாநில தலைவரும், தமிழ்நாட்டின் சிறந்த சமூக வரலாற்று ஆய்வாளருமான எழுத்தாளர் பேராசிரியர் அருணன் அவர்களின் "காலந்தோறும் பிராமணியம்" எட்டு தொகுதிகளும் மிக அரிய சமூக வரலாற்றுப் பெட்டகங்கள் ஆகும்.

அதில் தந்தை பெரியார் - திராவிடர் கழகம் பற்றிய அவரது கண்ணோட்டம் கருத்துப் பதிவுகளாக வெளிவந்துள்ளன. அவற்றை நாம் இங்கே தொடர் கட்டுரைகளாகத் தருவதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

சிலவிடங்களில் மாறுபட்ட கருத்துக்கள் கூறப்பட்டிருப்பினும் அத்தகைய அய்யங்களைப் போக்கி, தெளிவுபடுத்தி, புரிதலை ஏற்படுத்துதல் நமது கடமை என்ற உணர்வோடும், பெருமிதத்தோடும் இத்தொடரினை நமது வாசக நேயர்களுக்குப் பயன்பட வெளியிடுகிறோம் - வரலாற்று மீள் பார்வை இதன் மூலம் கிடைக்கிற ஒரு வாய்ப்பு நமக்குக் கிட்டுகிறது! நன்றி...

- ஆசிரியர், 'விடுதலை'

 

“பெண் ஏன் அடிமையானாள்?”

இந்தக் காலத்தில் - குறிப்பாக 1934இல் - நிறைய சிறு நூல்களை வெளியிட ஆரம்பித்தார் பெரியார். மாதர் விடுதலை பற்றி அவர் எழுதியிருந்த கட்டுரைகளின் தொகுப்பு “பெண் ஏன் அடிமையானாள்?’’ எனும் தலைப்பில் வெளிவந்தது. பெரிதும் போற்றப்பட்ட திருக் குறளிலும் ஆணாதிக்கச் சிந்தனைகள் இருந்ததை அதில் வெளிப்படுத்தினார். கர்ப்பத்தடையின் அவசியம் பற்றி எடுத்துரைத்தார். இது விஷயத்தில் டாக்டர் முத்துலட்சுமி அம்மையாரே தடுமாறிப் போயிருந்ததை நாசூக்காக எடுத்துக் காட்டினார். முத்தாய்ப்பாகப் பெண்கள் விடு தலைக்கு “ஆண்மை” அழிய வேண்டும் என்றார். ஆண்மை என்கிற இட்டுக்கட்டப்பட்ட கருத்தியலையே தகர்க்க வேண்டும் என்றார். “பெண்களால் ஆண்மை‘ என்ற தத்துவம் அழிக்கப்பட்டால் அல்லாது பெண்க ளுக்கு விடுதலை இல்லை என்பது உறுதி. ‘ஆண்மை’யால் தான் பெண்கள் அடிமையாக்கப்பட்டிருக்கிறார்கள். சுதந் திரம், வீரம் முதலிய குணங்கள் உலகத்தில் ‘ஆண்மை‘க் குத்தான் உண்டென்று ஆண்மக்கள் முடிவு கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.” என்கிற வரலாற்று உண்மையை அம்பலப்படுத்திய ஆண்மகன் பெரியார்.

இந்தக் காலத்தில் சுயமரியாதை அல்லது சமூக சீர்திருத்தச் சங்கங்கள் எனப் பல ஊர்களில் உருவாயின. 1935 ஜூனில் கோபிச்செட்டிப்பாளையம் சமூகச் சீர்திருத் தச் சங்கத்தில் பெரியார் பேசிய பேச்சு முக்கியமானது. அதில் தனது சுயமரியாதை இயக்கத்தின் தனித்தன்மை பற்றியும் அதன் முக்கியத்துவம் பற்றியும் எடுத்துரைத்தார். அது - “இன்று இந்தியாவிலேயே சுயமரியாதை இயக்கம் ஒன்றுதான் ஜாதிமத பேதத்தால் ஏற்பட்டுள்ள கொடுமை களுக்கு அஸ்திவாரமான மதங்களையும் சாஸ்திரங்களை யும் கடவுள்களையும் அழிக்கவும் ஒழிக்கவும் தைரியமாய் வேலை செய்கிறது. இதனாலேயே இது இன்று இந்தி யாவில் எவருடைய ஆதரவையும் பெற முடியாமல் தன் காலிலேயே நின்று தள்ளாடிக் கொண்டிருக்க வேண்டிய தாகின்றது.’’ இந்த இரண்டு வாக்கியங்களும் உண்மையின் இரண்டு முகங்களைக் காட்டின. பிராமணியத்தை எதிர்க்க கடவுள் - மத நிராகரிப்பை யும் கைக் கொண்டவர் பெரியார். இதுவரையில் சுயமரியாதை இயக்கம் தனித்து வமானது. ஆனால், இதனாலேயே பிராமணிய எதிர்ப்புக் கான ஒரு விரிந்த அணிவகுப்பை உருவாக்குவதில் பெரும் சிரமங்களும் ஏற்பட்டன. இதையெல்லாம் தாண் டியே அவர் போராடினார்.

கீதையை, சங்கராச்சாரியாரை விமர்சித்தார்

இதே பேச்சில் பகவத் கீதையை அவர் கடுமையாக விமர்சிக்கவும் செய்தார். திலகர் காலத்திலிருந்து இந்த கீதையைப் பிராமணிய வாதிகள் எப்படித் தூக்கிவைத்துக் கொண்டாடினார்கள் என்பதை அறிவோம். காந்திஜியும் கூட இதைப் பயன்படுத்தினார். பெரியாரோ அந்த அடி மடியிலேயே கை வைத்தார். அது - “நாலு வருணம், சூத்திரன் என்பது கீதையிலேயே இருக்கிறதே. ‘நாலு வருணத்தையும் நான்தான் சிருஷ்டித்தேன்’ என்று ‘பகவானே’ கீதையில் திருவாய் மலர்ந்தருளுகிறாரே’ ஆகவே, இந்து மதத்தையும் பகவத் கீதையையும் கிருஷ்ண பகவானையும் உண்மை என நம்பிக்கொண்டு இருக்கும் ஒருவன் தீண்டாமையையும் சூத்திரப் பட்டத் தையும், பாதத்தில் இருந்து உற்பத்தியான வருணத்தையும் எப்படி ஒழிக்க முடியும் என்று கேட்கிறேன், இன்று காந்தியார் முதல் கொண்டு சத்தியமூர்த்தியார் ஈறாக உள்ள எந்த அரசியல்வாதியாவது இதை ஒப்புக்கொள்ள முடியுமா என்று கேட்கின்றேன். அதுபோலவே ஜஸ்டிஸ் கட்சியிலும் பொப்பிலிராஜா முதல் ஏ. ராமசாமி முதலியார் ஈறாக உள்ள தலைவர்கள் இவற்றை ஒப்புக் கொள்ளு வார்களா என்று கேட்கிறேன்.”

சுயமரியாதை இயக்கம் எப்படித் தனித்துவமானது, அது ஏன் சென்னை மாகாணத்தின் இரு பெரும் அரசியல் கட்சிகளின் ஆதரவையும் பெற முடியாமல் தனித்து நின்றது என்பதை இது புரிய வைக்கிறது. ஆனால், பிராமணியத்திற்கு மிகப் பெரிய சவாலையும் இதுவே தந்தது. மற்றவர்கள் தயங்கிய வேத-இதிகாச-புராண-கீதா விமர்சனத்தை இதுவே தந்தது. அதனாலேயே இந்த இயக்கத்தவரை “சூனாமானாக்கள்’’ என்று இளிவரலோடு பேசினார்கள் பிராமணியவாதிகள். சென்னை மாகாணத் தைப் பொறுத்தவரை பிராமணியம் தனது வாழ்வில் முதன்முதலாக ஒரு வலுவான பிரச்சார இயக்கத்தைச் சந்தித்தது. குடிமைச் சமுதாயத்தில் அதற்கிருந்த சித்தாந்த பலம் கேள்விக்குறியானது.

கீதையை மட்டுமல்ல சங்கராச்சாரியாரையும் ஒரு பிடி பிடித்தார். அவரை இப்படிக் காட்டமாக விமர்சித்த வேறு எந்த வெகுமக்கள் தலைவராவது அன்று இருந்திருக்க மாட்டார் எனலாம். சங்கராச்சாரியார் பற்றி அப்படியொரு புனித பிம்பம் உருவாக்கப்பட்டிருந்தது. இதே ஆண்டு ஜூலையில் “குடி அரசு” எழுதிய தலையங்கம் இது - “சங்கராச்சாரியார் என்னும் ஒரு பார்ப்பனர் ‘பார்ப்பன னுக்கும் பறையனுக்கும் பிறவியிலேயே சரீரத்தில் ரத்த பேதம் இருக்கிறது’ என்றும், ‘பறையன் ரத்தத்தையும் பார்ப்பனன் ரத்தத்தையும் வேறு வேறாய் பரீட்சித்துப் பார்த்தால் பறை ரத்தம் இன்னது என்றும், பார்ப்பனன் ரத்தம் இன்னது என்றும் தெரிவித்து விடலாம்‘ என்றும் அபிப்பிராயம் கொடுத்தார். இதைப் பற்றி எந்தக் காங் கிரஸ் பார்ப்பனராவது - தீண்டாமை விலக்குக் கமிட் டிக்குத் தலைவராய் இருந்து தீண்டாமைக் கமிட்டி நிதியை சுவாஹா- செய்கின்ற பார்ப்பனனாவது - ஒரு வார்த்தைகூட பேசவே இல்லை கழுதையோ குதிரையோ யாராய் இருந்தாலும், சங்கராச்சாரியார் வாயிலிருந்து வந்தது என்று சொன்னால் அது மதிக்கத்தக்க வார்த்தை யாகத்தானே மக்கள் நினைத்திருக்கிறார்கள்.”

இதுதான் அன்றிருந்த நிலைமை. இப்படி சங்கராச்சாரி யார்கள் போன்ற வைதீகத் தலைவர்களைக் கொண்டு - “நடமாடும் தெய்வங்கள்” எனச் சொல்லப்பட்டவர்களைக் கொண்டு - பிராமணியம் தனக்கான கருத்துருவாக்கத்தைக் கட்டியமைத்து வந்தது. இதை எதிர்கொண்டு தகர்க்கிற வேலையைப் பெரியார் செய்தார். சரியாகச் சொல்வ தென்றால் தென்னிந்தியாவில் அவரது இயக்கம் மட்டுமே செய்தது.

திகைக்க வைக்கும் செய்திகள்

இந்தக் காலத்தில் பெரியார் பேசிய பேச்சுக்கள் எழுதிய எழுத்துக்களிலிருந்து இந்தக் காலத் தலைமுறையினருக்கு அதிர்ச்சிதரத்தக்க சில செய்திகள் கிடைக்கின் றன. “எந்தக் காங்கிரஸ் கூட்டத்திலாவது பிராமணர்கள் வேறு மற்றவர்கள் வேறு என்கிற பிரிவு இல்லாமல் உட் கார்ந்து சாப்பிட்டிருக்கிறார்களா? சமீபத்தில் நடந்த காங் கிரஸ் கூட்டங்களில்கூட பார்ப்பனரல்லாதவர்களை வெளியில் வைத்து சாப்பாடு போடவில்லையா? காங்கி ரஸ் கான்பரன்ஸ் முதலிய எந்தக் கூட்டங்களிலும் பார்ப் பனர்களைக் கொண்டுதான் சமையல் செய்திருக்கிறார் களே ஒழிய மற்ற ஜாதிக்காரர்களைச் சமையல் வீட்டில் நுழைய விட்டிருக்கிறார்களா?’’ - இப்படி அவர் கேட்டது 1936 ஜனவரியில் சென்னை சுயமரியாதைச் சங்கம் விழாவில். 1936 பிறந்த பிறகும் கூட “இந்திய தேசிய காங்கிரஸ்’ எனப்பட்டதன் மாநாடுகளிலேயே சமபந்தி போஜனம் இல்லையென்றால் சமுதாயம் எவ்வளவு கேவலமாக இருந்தது, பிராமணியம் எவ்வளவு வலுவாக இருந்தது என்பதை உணர்ந்து கொள்ளலாம். இந்தக் காங்கிரசிடம் அரசியல் அதிகாரம் போனால் பிராமணரல் லாதாரின் நிலைமை இன்னும் மோசமாகப் போகாதா எனும் கேள்வி பெரியார் போன்றவர்களின் நெஞ்சில் எழுந்திருந்தால் அதில் ஆச்சரியம் என்ன?

மற்றொரு திகைக்க வைக்கும் செய்தி - “நம்மவன் பெரிய முதலாளியாக இருந்தாலும் அவன் காப்பி கடை கதவண்டை போய் வெளியே நின்று கொண்டு ‘சாமி! சாமி!’ என்று கையை ஏந்திக் கொண்டு ஆருத்ரா தரிசனத் தில் விபூதி வாங்குவது போல் கத்துகிறான்! இந்த முதலா ளியின் ஆளாக இருக்கக் கூடிய மோட்டார் ட்ரைவர் நேராக உள்ளே போய் சூடாக இட்லி தின்றுவிட்டு ராஜா மாதிரி வெளியே போகிறான் எப்பொழுது நம்முடைய நிலை உயர்வது? எப்போது நம் சுயமரியாதை காப்பாற்றப் படுவது? அவர்களுக்கு இந்த மாதிரி கஷ்டம் உண்டா? ஆகவே பார்ப்பன சுயராஜ்யமும் நம் சுயராஜ்யமும் ஒன்றாய் இருக்க முடியுமா?’’

(தொடரும்)

- விடுதலை நாளேடு 22 5 20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக