சனி, 23 மே, 2020

தலைமை - தத்துவம் - இயக்கம்! திராவிடர் கழகத்தை மய்யப்படுத்தி பேராசிரியர் அருணன்! - 5


May 20, 2020 • Viduthalai • மற்றவை

பெண்கள் சொத்துரிமைப் பற்றி செங்கல்பட்டு மாநாட்டு தீர்மானம்

தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் மாநில தலைவரும், தமிழ்நாட்டின் சிறந்த சமூக வரலாற்று ஆய்வாளருமான எழுத்தாளர் பேராசிரியர் அருணன் அவர்களின் "காலந்தோறும் பிராமணியம்" எட்டு தொகுதிகளும் மிக அரிய சமூக வரலாற்றுப் பெட்டகங்கள் ஆகும்.

அதில் தந்தை பெரியார் - திராவிடர் கழகம் பற்றிய அவரது கண்ணோட்டம் கருத்துப் பதிவுகளாக வெளிவந்துள்ளன.

அவற்றை நாம் இங்கே தொடர் கட்டுரைகளாகத் தருவதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

சிலவிடங்களில் மாறுபட்ட கருத்துக்கள் கூறப்பட்டிருப்பினும் அத்தகைய அய்யங்களைப் போக்கி, தெளிவுபடுத்தி, புரிதலை ஏற்படுத்துதல் நமது கடமை என்ற உணர்வோடும், பெருமிதத்தோடும் இத்தொடரினை நமது வாசக நேயர்களுக்குப் பயன்பட வெளியிடுகிறோம் - வரலாற்று மீள் பார்வை இதன் மூலம் கிடைக்கிற ஒரு வாய்ப்பு நமக்குக் கிட்டுகிறது!

நன்றி...

- ஆசிரியர், 'விடுதலை'

 

 

அப்போதே மாதர் விடுதலைக்காக.....

சுயமரியாதை இயக்கத்தின் முதல் மாகாண மாநாட்டி லேயே மாதர் விடுதலைக்கான தீர்மானங்களையும் நிறைவேற்றச் செய்தார் பெரியார். வருணாசிரம எதிர்ப்பு, ஆணாதிக்க எதிர்ப்பு எனும் சமூக சீர்திருத்தத்தின் இரு பிரதான கூறுகளும் தொடக்கத்திலிருந்தே அவரது சுயமரியாதை இயக்கத்தில் இடம் பெற்றன. “பெண்களின் கல்யாண வயது பதினாறுக்கு மேற்பட்டிருக்க வேண்டும் என்றும், மனைவி - புருஷன் இருவரில் ஒருவருக் கொருவர் ஒத்துவாழ இஷ்டமில்லாதபோது தம்முடைய கல்யாண ஒப்பந்தத்தை ரத்து செய்து கொள்ள உரிமை இருக்க வேண்டும் என்றும், விதவைகள் மறுவிவாகம் செய்து கொள்வதற்கு உதவி செய்ய வேண்டும் என்றும், கல்யாணம் செய்து கொள்ள விரும்பும் ஆண்களும் பெண்களும் ஜாதிமத பேதமின்றி தங்கள் தங்கள் மனைவி புருஷர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள பூரண உரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும், அதற்« கற்றவாறு கல்யாணச் சடங்குகள் திருத்தப்பட வேண்டும் என்றும்“ அந்த மாநாடு தீர்மானம் போட்டது. விதவா விவாகம் பற்றிப் பேசினால் இந்து மகாசபை மாநாட்டிற்கே வரமாட்டேன் எனச் சொன்ன மதன்மோகன் மாளவியா இருந்த காலத்தில் இப்படித் தீர்மானங்கள். சம்மத வயதுச் சட்டத்தை பத்திலிருந்து பனிரெண்டாக உயர்த்தியதற் காகப் பெரும் ரகளை செய்த திலகர் பெருமான் சிறிது காலத்திற்கு முன்புதான் காலமாயிருந்தார். அதற்குள் அந்தப் பிராமணியச் சிந்தனை களைக் காலாவதியாக்கு வேன் எனப் புறப் பட்டார் பெரியார்.

இதிலே குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விஷயம் பெண்களின் திருமண வயது பற்றியது. டில்லி மத்திய சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட சாரதா மசோதா வானது அந்த வயதை பதினாலு என ஆக்கச் சொன்னது. அதற்கே வைதீகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு. தமிழ் நாட்டிலிருந்து அங்கே சென்றிருந்த எம்.கே. ஆச்சாரியார் என்கிற புண்ணியவாளர் “பால்ய விவாகம் இல்லா விட்டால் உண்மையான கற்பு என்பது சாத்தியமில்லை” என்று பேசினார். இதே போன்றதொரு சட்டம் சென்னை மாகாண சட்டசபையில் முன் மொழியப்பட்டபோது நீதிக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஏ.பி. பாத்ரோ எதிர்த்தார். இந்த இருவரையும் தாக்கி 1928இல் “குடி அரசில்” எழுதினார் பெரியார். பெண் விடுதலைக்கு இடையூறாக எவர் வந்தாலும் - அவர் காங்கிரஸ் சனாத னியோ அல்லது நீதிக்கட்சி பிரமுகரோ - அவர்களைக் கண்டனம் செய்யாமல் விட்ட தில்லை பெரியார். இந்தச் சூழலில்தான் ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என அவர்கள் பதினாலை எதிர்த்தால் இவர் பதினாறு என்று முன்மொழிந்தார்.

இந்தியாவின் பிறபகுதிகளைப் போல சென்னை மாகாணத்திலும் தேவதாசிமுறை என்ற சட்டப்பூர்வமான, சமய அங்கீகாரம் பெற்ற விபச்சாரப் பழக்கம் இருந்தது. இதை ஒழித்துக்கட்ட டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டியார் மசோதா ஒன்றைக் கொண்டு வந்ததை அறிவோம். இதற்கு காந்திஜியின் ஆதரவு இருந்ததையும் கண்டு வந்தோம். ஆனால் சென்னை மாகாணக் காங்கிரஸ் தலைவர்களாகிய சத்தியமூர்த்தி அய்யரும், முத்துரங்க முதலியாரும் இந்த மசோதாவைக் கடுமையாக எதிர்த்தார் கள். பிராமணியத்தின் ஆணாதிக்கச் சிந்தனை இவர் களை ஆட்டிப் படைத்தது. ஆனால், பெரியாரோ இந்த மசோதாவை உற்சாகமாக வரவேற்றார். அப்போது ஆட் சியிலிருந்த நீதிக்கட்சி இந்த மசோதாவை பெரியாருக்கு அனுப்பி அவரின் கருத்தைக் கேட்டது.

இது தொடர்பாக 1930இல் பெரியார் எழுதினார். அதில் இது விஷயமாக முத்துலெட்சுமி ரெட்டியார் வெளியிட்டிருந்த ஒரு துண்டுப் பிரசுரத்தின் சுருக்கத்தைத் தந்தார். இதற்கான போராட்டம் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறு கிறது என்பதை விளக்கினார். அப்படியும் இந்த மசோதாவை நிறைவேற்றவிடவில்லை ஆணாதிக்கவாதிகள். பொதுஜன அபிப்பிராயத்திற்கு அனுப்புவது என்று விஷயத்தை ஒத்தி வைத்தார்கள். இப்படி “அபிப்பிராயம் கேட்பது கோமாளிக் தனம் என்பதே நமது அபிப்பிராயம்“ என்று பளிச்சென்று சொல்லவும் செய்தார். என்ன காரணம்? தொடர்ந்து எழுதினார் - “ஒரு நாட்டில் நாகரிகமுள்ள அரசாங்கமாவது அல்லது நாட்டின் சுயமரியாதையையோ, பிரஜைகளு டைய ஒழுக்கத்தையோ, நலத்தையோ கோரின அரசாங்க மாவது ஒன்றிருந்தால் இந்த இழிவான கெட்ட பழக்கம், கடவுள் பேராலும், மதத்தின் பேராலும், சமூகத்தின் பேராலும், தேசிய வழக்கத்தின் பேராலும் இருந்து வர ஒரு கண நேரமும் விட்டுக் கொண்டு வந்திருக்காது என்று சொல்லுவோம்.”

முதன்முதலாக “மாதர் மாநாடு”

இப்படி எழுதியது மட்டுமல்லாது அப்போது ஈரோட் டில் நடைபெற்ற இரண்டாவது மாகாண சுயமரியாதை மாநாட்டில் “மாதர் மாநாடு” என்று தனியாக நடத்தி அதில் கீழ்வரும் தீர்மானங்களையும் நிறைவேற்றச் செய்தார் - “(1) சிறு வயதுப் பெண் குழந்தைகளைத் தேவடியாள் களாகத் தயாரித்து பொதுவில் ஆடவும் பாடவும் விட்டுப் பொருள் சம்பாதிப்பதற்காகத் தயாரிக்கும் வழக்கத்தை இம்மாநாடு கண்டிப்பதோடு இந்திய சட்டசபையில் திரு. ஜெயகர் கொண்டு வந்திருக்கும் பொட்டுக்கட்டும் வழக் கம் (தேவதாசி முறை) மறுப்பு மசோதாவையும், சென்னை சட்டசபையில் இருக்கும் டாக்டர் முத்துலெட்சுமி அவர் களின் மசோதா வையும் முழுமனதாய் ஆதரித்து அவை சீக்கிரம் சட்டமாக ஆக்கப்பட வேண்டும் என்றும் வேண்டுகிறது. (2) கடவுளின் பேரால் பொட்டுக்கட்டியுள்ள தேவதாசி சகோதரிகள் தங்கள் பொட்டை அறுத்தெறிந்து விட்டு மனதிற்கிசைந்த ஒரு கணவனை மணந்து கொள்ள வேணுமாய் இம்மாநாடு தீர்மானிக்கிறது.”

அந்த இரண்டாவது தீர்மானம் அபாரம். இப்படி வேறு எந்த இயக்கமாவது அந்த 1930இல் தீர்மானம் போட்டிருக் குமா என்பது சந்தேகமே. தமிழ்நாட்டில் பெண்களுக்காகக் கூட்டப்பட்ட முதல் மாநாடும் அதுவாகவே இருக்கக் கூடும்.

இதே ஆண்டு “குடி அரசில்” அவர் எழுதிய ஒரு துணைத் தலையங்கம் குறிப்பிடத்தக்கது. செங்கற்பட்டு மாநாட்டிலேயே பெண்களுக்குச் “சமமாகச் சொத்துரிமை களும் வாரிசு பாத்தியதைகளும்“ கொடுக்கப்பட வேண் டும் என்று தீர்மானம் போட்டவர் பெரியார். உபன்யாசகர் நாராயண குரூப் மற்றும் மாஜி அட்வகேட் ஜெனரல் டி.ஆர். வெங்கிட்ராம சாஸ்திரியார் ஆகியோர் பெண் களுக்குச் சொத்துரிமை தருவதை வரவேற்றிருந்தார்கள். இது கண்டு பூரிப்போடு அவர்களை அந்தத் தலையங் கத்தில் பாராட்டியிருந்தார். மாதர் விடுதலைக்கு ஆதர வான கருத்து யாரிடமிருந்து வந்தாலும் அதைப் பெரியார் வரவேற்கத் தயங்கியதில்லை என்பது புலனாகிறது.

பெரியாரின் சுயமரியாதை இயக்கம் வேர் பிடிக்கத் துவங்கி விட்டதை முகர்ந்துவிட்ட பிராமணியவாதிகள் அவரை வளைத்துப் பிடிக்க முயற்சி செய்தார்கள். இதே 1930இல் சிருங்கேரி சங்கராச்சாரியார் இவருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் இந்தப் பகுதி சத்தானது - “உங்களை நேரில் பார்த்து உற்சாகப்படுத்தி, எங்கள் அபிப்பிராயங் களையும் உங்களுக்குச் சொல்லி நல்ல சஹாயஞ் செய்து அநுக்கிரகிக்க வேண்டு மென்று தேவதா பிரேரணை உண்டாக்கியிருப்பதால் விவேகியாகிய நீரும் உங்கள் தர்மபத்தினியும் இந்த சமஸ் தானத்திற்கு வந்து ஸ்ரீசாரதா சந்திர மௌளீதர சுவாமிகள் பிரசாத அநுக்ரகம் பெற்று, இப்போதிலும் அதிகமான சிரேயசை அடைவீர்கள்.’’

சங்கர மடங்களும் சங்கராச்சாரியார்களும் எதற்கு உருவாக்கப் பட்டிருந்தார்கள் என்பதை இது புரிய வைக் கிறது. பிரம்ம சமாஜத் தலைவர்களை ராமகிருஷ்ணர் வளைத்துப் போட்டு அந்த இயக்கத்தை சிதைத்ததை அறிவோம். அதே வேலையைத்தான் சிருங்கேரி மடாதி பதி செய்யத் துடித்தார். பெரியாரோ இந்தக் கடிதத்தைத் தனது பத்திரிகையில் அப்படியே வெளியிட்டு, நண்பர் களின் கருத்தைக் கேட்டு முடிவு செய்ய இருப்பதாக ஒரு குறிப்பும் எழுதினார். அவரைப் போய்ச் சந்திப்பது வீண் வேலை என்று நண்பர்கள் பலரும் கூறவும் பெரியார் அவ்விடம் செல்லவில்லை. சங்கராச்சாரி யாரின் முயற்சி பலிக்கவில்லை.

சுயமரியாதைத் திருமணம்

பிராமணிய எதிர்ப்பின் ஒரு வடிவமாக சுயமரியாதைத் திருமணங்கள் நடந்தன. ஆரம்பத்தில் சாதி வித்தியாசம் பாராட்டாத திருமணங்கள் என்பதைவிட பிராமண புரோகிதர்களை அழைத்து நடத்தாத திருமணங்கள் என்பதற்கே அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதன் மூலம் திருமணங்களிலிருந்த பிராமணியத் தன்மைக்கும், சமஸ்கிருத மந்திரங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்க முயற்சிக்கப்பட்டது. 1930களில் பிராமணியச் சடங்குகள் மட்டுமல்ல தாலிகூட இல்லாத திருமணங்கள் நடக்கத் துவங்கின. விருதுநகரில் மாணிக்கவாசகம் நாடாருக்கும், நாகரத்தினம்மாளுக்கும் இத்தகைய திருமணம் பெரியார் தலைமையில் நடைபெற்றது. தென்னிந்தியாவிலேயே முதன் முதலாக நடந்த முழுமையான சுயமரியாதைத் திருமணம் என்று பெரியார் இதை அழைத்தார்.

வெவ்வேறு விதமான மீறல்களுடன் திருமணங்கள் நடந்தன. நாயுடு வகுப்பைச் சேர்ந்த நீலாவதிக்கும், நாட்டுக்கோட்டை செட்டியார் வகுப்பைச் சேர்ந்த ராமசுப் பிரமணியத்திற்கும் திருமணம் நடந்தது. செட்டியார் சமூகத்திலிருந்து இதற்குக் கடும் எதிர்ப்பு. அவர்களது பத்திரிகையாகிய “சிவ நேசன்” இதைக் கண்டித்து எழுதியது.

பெரியாரின் வாழ்க்கை வரலாறை எழுதிய சாமி சிதம்பரனார் ஒரு விதவையான சிவகாமியை மணந்தார். பொன்னம்பலத்தை மணந்த சுலோசனாவின் முடிவு வித்தியாசமானது. சுலோசனா ஏற்கெனவே திருமணமான பெண்மணி. தனது முதல் கணவரிடமிருந்து விடுதலை பெற்றும், அவரது அனுமதியோடும் இந்த இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். 1931 மே மாதக் “குடி அரசு” இந்தச் செய்தியை உற்சாகத்தோடு வெளியிட்டது. சில ஜமீந்தார்களும் வியாபாரிகளும்கூட சுய மரியாதைத் திருமணம் செய்து கொண்டார்கள். 1932 ஜூலை “குடி அரசில்” வந்த ஒரு செய்தியின்படி சிங்கவனம் ஜமீந்தார் ஒரு தேவதாசி குடும்பத்துப் பெண்ணை மணந்தார்.

கட்டுப்பெட்டியாய் இருந்த தமிழ்ச் சமுதாயத்தில் இவையெல்லாம் தீர்மானமான கலகங்கள். “தேசபந்து” எனும் பத்திரிகை அந்நாளில் இந்தத் திருமணங்களைக் கடுமையாக எதிர்த்தது. நாட்டில் விபச்சாரத்தை வளர்ப்ப தாக அது மிகவும் வருத்தப்பட்டது. இதிலிருந்து எத்த கைய எதிர்ப்பு வந்திருக்கும் என்பதை ஊகித்துக் கொள் ளலாம். இது பற்றியெல்லாம் கவலைப்படாமல் சுயமரியா தைத் திருமணங்களை ஊக்கப்படுத்தி வந்தார் பெரியார்.

(தொடரும்)

- விடுதலை நாளேடு 20.5. 20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக