சனி, 23 மே, 2020

தலைமை - தத்துவம் - இயக்கம்! திராவிடர் கழகத்தை மய்யப்படுத்தி பேராசிரியர் அருணன்! - 8


May 23, 2020 • Viduthalai • மற்றவை

மூடநம்பிக்கைகளை எதிர்க்க “பகுத்தறிவு” இதழ் துவக்கம்

தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் மாநில தலைவரும், தமிழ்நாட்டின் சிறந்த சமூக வரலாற்று ஆய்வாளருமான எழுத்தாளர் பேராசிரியர் அருணன் அவர்களின் "காலந்தோறும் பிராமணியம்" எட்டு தொகுதிகளும் மிக அரிய சமூக வரலாற்றுப் பெட்டகங்கள் ஆகும்.

அதில் தந்தை பெரியார் - திராவிடர் கழகம் பற்றிய அவரது கண்ணோட்டம் கருத்துப் பதிவுகளாக வெளிவந்துள்ளன. அவற்றை நாம் இங்கே தொடர் கட்டுரைகளாகத் தருவதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

சிலவிடங்களில் மாறுபட்ட கருத்துக்கள் கூறப்பட்டிருப்பினும் அத்தகைய அய்யங்களைப் போக்கி, தெளிவுபடுத்தி, புரிதலை ஏற்படுத்துதல் நமது கடமை என்ற உணர்வோடும், பெருமிதத்தோடும் இத்தொடரினை நமது வாசக நேயர்களுக்குப் பயன்பட வெளியிடுகிறோம் - வரலாற்று மீள் பார்வை இதன் மூலம் கிடைக்கிற ஒரு வாய்ப்பு நமக்குக் கிட்டுகிறது! நன்றி...

- ஆசிரியர், 'விடுதலை'

 

பிராமணாள் காபி ஹோட்டலில் முதலாளியாய் இருந்தாலும் சூத்திரர் என்றால் வெளியிலிருந்துதான் காபி குடிக்க முடியும். அவரிடம் வேலைபார்ப்பவர் தொழிலாளி என்றாலும் பிராமணர் என்றால் உள்ளே போய் இட்லி சாப்பிடுவார். இதுதான் 1936 நவம்பர் மாதத்து நிலைமை. இங்கே இந்த இருதரப்பாரின் சுயராஜியம் எப்படி ஒன்றாக இருக்க முடியும்? நியாயமான கேள்விதான். முதலாளி - தொழிலாளி எனும் வர்க்கப் பிணக்கோடு இங்கே வருணப் பிணக்கும் தொடர்ந்தது. இரண்டையும் இணைத்து நடத்தும் போராட்டம் தேவையாக இருந்தது. பெரியாரைப் பொறுத்தவரை இரண்டையும் ஏக காலத்தில் நடத்த ஏதுவான காலமோ சக்தியோ இல்லை என்று நினைத்தார். அதை வெளிப் படையாகச் சொல்லவும் செய்தார். வருணப் பிணக்கிற்கே முக்கியத்துவம் கொடுத்து தனது இயக்கத்தைத் தொடர்ந்தார்.

மூடநம்பிக்கைகளை எதிர்க்க “பகுத்தறிவு”

இதே காலத்தில் - 1935 மே திங்களில் - “பகுத்தறிவு” எனும் மாத இதழைத் துவக்கினார் பெரியார். இதில் பிராமணியம் உருவாக்கியிருந்த விதவிதமான மூடநம்பிக் கைகளை எதிர்த்து விடாமல் எழுதினார். சோதிடத்தை எதிர்த்து அவர் எழுதியது குறிப்பிடத்தக்கது. பிராமணி யத்தை எதிர்த்துப் போராடிய பலரும் சாதிப் பிரச்சினை, மாதர் பிரச்சினை போன்றவற்றைத் தான் எடுத்துக் கொண்டார்களே தவிர சோதிடம், குறி சொல்லுவது, திதி கொடுப்பது, தீபாவளி கொண்டாடுவது போன்ற விஷயங் களை எதிர்த்துப் பேசியது, எழுதியது கிடையாது அல்லது மிக அபூர்வமாக இருக்கும். பெரியாரோ இதற்கும் சரி முக்கியத்துவம் கொடுத்து மக்கள் மத்தியில் விழிப்பு ணர்வை ஏற்படுத்தி வந்தார். மூடநம்பிக்கை எதிர்ப்புப் பிரச்சாரத்தை இவரைப் போலப் பரவலாக நடத்தியவர்கள் மிகமிக அரிது.

“பகுத்தறிவு” துவங்கப்பட்ட அதே ஆண்டில் சோதிடம் பற்றிப் பெரியார் எழுதியதில் அவரது அபார மான கூர்ந்த மதி வெளிப்பட்டது. “மனிதன் செய்யுங் காரியங்கள் எல்லாம் சாதகப் பலன்படியும், சாதகப் பலன் கள் எல்லாம் விதிப்படியும் விதி எல்லாம் முன்ஜென்ம கர்மத்தின் பலன்படியும் நடப்பதாய் இருக்கையில் பாவ புண்ணியம் என்ற பாகுபாடும், நற்செய்கை துர்ச் செய்கை என்கிற பெயரும் எப்படிப் பொருந்தும்? மோட்சத்திற்கும் நரகத்திற்கும் அவசியம்தான் ஏது?’’ என்று கேட்டார் பெரியார். இதுவொரு நுணுக்கமான வாதம். இவன் சாதகப்படி இவன் கொலை செய்வான் என்றும், அவன் சாதகப்படி. அவன் கொலையுண்டு போவான் என்றும் இருந்தால் இது எப்படிக் கொலைக் குற்றமாகும்? எல்லாம் சாதகப்படி நடப்பது! அந்தத் தனிமனிதனுக்குப் பங் கில்லை எல்லாம் கிரக பலன்களால் முன்கூட்டியே நிச்ச யிக்கப்பட்டது! அப்படியெனில் அவன் எப்படி பொறுப்பா வான்? அவனுக்கு ஏன் தர வேண்டும் தண்டனை? யோசித்தால் நற்செய்கை அல்லது துர்ச்செய்கை என்கிற பாகுபாடே அர்த்தமில்லாமல் போகத்தானே செய்கிறது! சோதிட நம்பிக்கை சமுதாய ஒழுங்குமுறைக் கோட்பாட் டையே அர்த்தமற்றதாக்கி விடுகிறது என்பதைப் பிரமாதமாகச் சுட்டிக் காட்டினார். இப்படி தர்க்கவாதத்தால் பல மூடநம்பிக்கைகளின் வெறுமைத்தனத்தை அடை யாளம் காட்டினார்.

ராஜாஜி அரசாங்க எதிர்ப்பு

1936-1937 தேர்தலில் நீதிக்கட்சியை ஆதரித்துப் பிரச்சாரம் செய்தார் பெரியார். பிராமணியத்தின் ஆளுமை தொடர்ந் திருந்த காலத்தில், அதே நேரத்தில் பிரிட்டீஷ் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஓங்கியிருந்த காலத்தில் சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. பிராமணிய எதிர்ப்பில் உறுதியில்லாத, அதே நேரத்தில் பிரிட்டீஷ் ஆட்சியை முழுமையாக ஆதரித்து வந்த நீதிக்கட்சி படுதோல்வி கண்டது. பிராமணிய எதிர்ப்பில் உறுதியாக இருந்த, அதே நேரத்தில் பிரிட்டீஷ் எதிர்ப்பை வெளிப்படுத்தாத பெரியார் ஆதரித்தும் தோல்வி கண்டது. அதன் பாடம் பிராமணிய எதிர்ப்பை யும் பிரிட்டீஷ் எதிர்ப்பையும் ஒருசேரச் செய்ய வேண்டும் என்பதுதான். இந்தப் படிப்பினையைப் பெரியார் எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் 1937 மத்தியில் ராஜாஜி தலை மையில் சென்னையில் காங்கிரஸ் மந்திரிசபை அமைந் தது வசதியாகிப் போனது. பிராமணிய எதிர்ப்பையும் அரசாங்க எதிர்ப்பையும் ஒரே புள்ளியில் இப்போது குவிக்க முடிந்தது.

ராஜாஜி அமைச்சரவை வெளிப்படுத்திய பிராமணி யப் போக்குகளைப் பெரியார் எதிர்க்கத் துவங்கினார். எட்டு மந்திரிகள், ஒரு மேலவைத் தலைவர், ஒரு சட்டசபைத் தலைவர் என மொத்தம் இருந்த பத்து பதவி களில் பிராமணர்களுக்கு ஆறு கொடுக்கப்பட்டிருந்தன. நீதிக்கட்சி ஆட்சியில் கிராமப்புறங்களில் ஏற்படுத்தப்பட் டிருந்த பள்ளிகளில் 2,200 அய் போதிய நிதி வசதி இல்லை என்று சொல்லி மூடினார் ராஜாஜி. அதே சமயம் 12 லட்ச ரூபாய் செலவில் வேதபாடசாலை ஒன்றைத் துவக் கினார். அதில் பிராமண ஆசிரியர்களுக்கு கொழுத்த சம்பளம் தரப்பட்டது. பொற்கொல்லர், கருமர் போன்ற வர்கள் தங்கள் பெயருக்குப் பின்னால் “ஆச்சாரி” என்று சேர்த்துக் கையெழுத்துப் போட்டால் பத்திரப் பதிவு செய்யக்கூடாது என்று உத்தரவு போட்டார். அதாவது அவர்கள் எல்லாம் ஆசாரிகளே தவிர, தம்மைப் போல ஆச்சாரிகள்-ஆச்சாரியார்கள்-அல்ல என்று கூசாமல் அறிவித்தார். இதற்கெல்லாம் உச்சமென சில பள்ளிகளில் இந்தி மொழியைக் கட்டாயப் பாடமாக்கினார்.

ஆங்கிலேய ஆட்சியாளர்கள் இந்தியாவிலிருந்த பல தேசிய மொழிகளுக்கு மாற்றாக தங்களது சொந்த மொழி யாம் ஆங்கிலத்தை ஆக்கி வந்தார்கள். பிராமணிய வாதிகளோ அதற்குப் பதிலாக இந்தியைக் கொண்டுவர முடிவு செய்தார்கள். மொழி பற்றிய சாவர்க்கரின் சிந்த னையை அறிவோம். காங்கிரசும் கிட்டத்தட்ட அந்த நிலையில்தான் இருந்தது. பல தேசிய இனங்களைக் கொண்ட இந்த மாபெரும் நாட்டிற்கு ஒற்றை மொழியைத் திணிப்பதில்தான் பிரிட்டீஷ் ஏகாதிபத்தியமும் காங்கிரஸ் பிராமணியமும் குறியாக இருந்தன. அந்த ஒற்றைமொழி எது என்பதில்தான் வித்தியாசமே தவிர, இந்த இருபெரும் சக்திகளும் தமிழ் உள்ளிட்ட அனைத்து தேசிய மொழி களையும் போற்றத் தயாராக இல்லை. இதிலே இந்தி என்பது சமஸ்கிருதத்திற்கு மிகவும் நெருங்கியது எனும் உண்மையும் இருந்தது.

இதுவரைப் பிரச்சார இயக்கமாக இருந்து வந்த சுயமரியாதை இயக்கம் ஒரு நேரடிப் போராட்டக்களத்தில் குதித்தது இந்தித் திணிப்பை எதிர்த்துத்தான். ராஜாஜி மந்திரி சபையானது அது அமைந்த ஒரே மாதத்தில் - 1937 ஆகஸ்டில் - தேர்ந்தெடுக்கப்பட்ட சில உயர்நிலைப் பள்ளிகளில் ஆங்கிலம், தாய்மொழியோடு 6,7,8ஆம் வகுப்புகளில் இந்தியையும் கட்டாயப்பாடமாக்கியது. அதாவது, மும்மொழித் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இரண்டு மொழிகள் படிக்கவே சூத்திர-பஞ்சமர் வீட்டுப் பிள்ளைகள் தடுமாறிக் கொண்டிருந்த நிலையில் மூன்று மொழி என்றால் அவர்கள் பள்ளிக்கூடம் பக்கமே ஒதுங் காமல் போய்விடக் கூடும். பிராமணர் வீட்டுப் பிள்ளை களுக்கே அது ஏகபோகமாகி விடக்கூடும். காரணம், இந்தியானது சமஸ்கிருதத்தோடு தொடர்புடையது என்பதால் அவர்களுக்கு அதில் சிரமம் அதிகமில்லை. ஆகவே இந்தியைக் கட்டாயமாக்கியதை பிராமணியத் தின் ஒரு சதிவேலையாகக் கணித்தார் பெரியார். “குடி அரசில்” இந்தித் திணிப்பை எதிர்த்து வன்மையாக எழுத ஆரம்பித்தார். இது பிராமணிய எதிர்ப்பாளர்களையும் தமிழ் ஆர்வலர்களையும் ஒருங்கே திரட்ட அவருக்கு உதவியது.

இந்தி எதிர்ப்பு போராட்டம்

பல ஊர்களில் இந்தி எதிர்ப்புக் கூட்டங்கள் நடந்தன. நீதிக்கட்சிக்காரரான கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவர் த.வே. உமாமகேசுவரம் பிள்ளை முதல் காங்கிரஸ்காரரான அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலை வர் நாவலர் சோமசுந்தர பாரதியார் வரை இந்த இயக் கத்தில் பங்கு கொண்டார்கள். மகத்தான தமிழறிஞரான உ.வே. சாமிநாதய்யர் இந்தித் திணிப்பை எதிர்த்தார். தமிழறிஞர் கா.சு. பிள்ளை எதிர்த்தார். பிற்காலத்தில் அண்ணா என்று அன்போடு அழைக்கப்பட்ட அண்ணா துரை, கி.ஆ.பெ. விசுவநாதம் போன்றோர் இந்த இயக்கத் தின்போது முன்னணிக்கு வந்தார்கள். பிராமணியத்திற்கு எதிரான ஒரு விரிவான அணிவகுப்பு தமிழகத்தில் முதன் முதலாக எழுந்தது. இதற்கான அஸ்திவாரத்தை ராஜாஜி மந்திரிசபை போட்டுக் கொடுத்தது என்றால், சத்திய மூர்த்தி-கல்கி-’தினமணி’ டி.எஸ். சொக்கலிங்கம் போன் றோர் அரசாங்கத்தை ஆதரித்துத் தங்களை அம்பலப் படுத்திக் கொண்டார்கள்.

(தொடரும்)

- விடுதலை நாளேடு 23 5 20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக