சனி, 23 மே, 2020

தலைமை - தத்துவம் - இயக்கம்! திராவிடர் கழகத்தை மய்யப்படுத்தி பேராசிரியர் அருணன்! - 4


May 19, 2020 • Viduthalai • மற்றவை

"மனுதர்மத்தை அறிந்த பார்ப்பனரல்லாத ஓர் இந்து பார்ப்பனர்களை

சகோதரர்களே என்று அழைக்க முடியுமா?" -  தந்தை பெரியார்

தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் மாநில தலைவரும், தமிழ்நாட்டின் சிறந்த சமூக வரலாற்று ஆய்வாளருமான எழுத்தாளர் பேராசிரியர் அருணன் அவர்களின் "காலந்தோறும் பிராமணியம்" எட்டு தொகுதிகளும் மிக அரிய சமூக வரலாற்றுப் பெட்டகங்கள் ஆகும்.

அதில் தந்தை பெரியார் - திராவிடர் கழகம் பற்றிய அவரது கண்ணோட்டம் கருத்துப் பதிவுகளாக வெளிவந்துள்ளன.

அவற்றை நாம் இங்கே தொடர் கட்டுரைகளாகத் தருவதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

சிலவிடங்களில் மாறுபட்ட கருத்துக்கள் கூறப்பட்டிருப்பினும் அத்தகைய அய்யங்களைப் போக்கி, தெளிவுபடுத்தி, புரிதலை ஏற்படுத்துதல் நமது கடமை என்ற உணர்வோடும், பெருமிதத்தோடும் இத்தொடரினை நமது வாசக நேயர்களுக்குப் பயன்பட வெளியிடுகிறோம் - வரலாற்று மீள் பார்வை இதன் மூலம் கிடைக்கிற ஒரு வாய்ப்பு நமக்குக் கிட்டுகிறது!

நன்றி...

- ஆசிரியர், 'விடுதலை'

 

மத-சாஸ்திர விமர்சனம்

“தனித் தமிழ்க் கட்டுரைகள்” என்று ஓர் அம்மையார் நூல் எழுதியிருந்தார். அதை அறிமுகப்படுத்தி ஒரு குறிப்பு வெளியிட்ட பெரியார் அதை இப்படி முடித்திருந் தார் - “இத்தகைய பல புத்தகங்களை வெளியிடுமாறு கடவுள் அநுக்கிரகம், இச்சகோதரிக்குக் கிடைக்குமாக.” இது 1926 ஜனவரியில் பெரியார் எழுதியது. வழமையான, சாதாரணமான கடவுள் நம்பிக்கை அப்போதிருந்தது. அந்த ஆண்டு மே மாதத்திலேயே இதிலொரு முக்கிய மாறுதல் ஏற்பட்டது. ஏழாயிரம் பண்ணை பாலிய நாடார் சங்கத்தின் இரண்டாம் ஆண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொண்டவர் அங்கே இப்படிப் பேசினார் - “மதத் திற்கொரு கடவுளா? ஜாதிக்கொரு கடவுளா? மதத்திற் கொரு புண்ணிய பாவமா? கடவுளுக்கும் மோட்சத்திற்கும் நகரத்திற்கும் வேறு ஒரு உலகமிருக்கிறதா? ஒருக்காலும் இருக்கவே முடியாது. பெரியவர்கள் கோவிலில் சுவாமி கும்பிடும்போது கட்கத்திலிருக்கும் குழந்தை எப்படி ஒன்றும் அறியாமலும், மனதில் ஒன்றும் நினைக்காமலும் தானும் கைகூப்பி கும்பிடுகிறதோ, அதுபோலவே நமக்கும் தெய்வம் - மதம் - தர்மம் என்கிற சொற்கள் மற்றவர்கள் சொல்லுவதைக் கேட்டு அர்த்தமில்லாமல் வழங்கப் படுகின்றன. யோசித்துப் பார்ப்போமேயானால் நம்மிடையில் உள்ள மக்களிடம் காட்டும் அன்புதான் நாம் பக்தி செய்யத்தக்க கடவுள்; அவர்களுக்குச் செய்யும் தொண்டுதான் கடவுள் தொண்டு; அம்மக்களின் விடு தலைதான் மோட்சம்; அச் ஜீவன்களிடம் கருணை காட்டு வதும் அவைகள் வேதனைப் படாமலிருப்பதும்தான் அஹிம்சை.”

ஒரு புதிய சிந்தனை இந்தக் கட்டத்தில் பெரியாருக்குள் மலர்ந்தது. வழமையான கடவுள் சிந்தனை விடைபெற்றுக் கொண்டது. “அன்பே சிவம்“, “மக்கள் தொண்டே மகேசன் தொண்டு’’ எனும் மனித சேவையையும் கடவுள் நம்பிக்கை யையும் இணைக்கிற ஒரு மனிதநேயக் கோட்பாடு வந்தது. சக மனிதர்களின் துன்பம் போக்கப் பாடுபடுமாறு அறைகூவல் விடுத்தார். இந்தத் துணிவு சமுகநீதிப் போராட்டத்தில் அவரை மேலும் நிலைநிறுத் தியது..

தர்மசாஸ்திரங்கள் பற்றிய விமர்சன பார்வையையும் இந்தக் கண்ணோட்டம் தந்தது. அவை கடவுளின் படைப் புகள் எனும் மாய்மாலம் காற்றாய்ப் பறந்தது. அவை மனி தனின் தயாரிப்புகள் என்பது உறுதியானது. அப்படி யெனில் அவை சக மனிதர்களுக்குச் சகாயமானதா அல்லது ஒடுக்கி வைப்பதா எனும் ஆராய்ச்சி மனப் பான்மை எழுந்தது. இதே மே மாதத்தில் இப்படி எழுதி னார் - “சுயமரியாதை உள்ள ஒரு இந்து பிராமணரல்லாத வன் மனுதர்ம சாஸ்திரத்தைப் படித்துப் பார்த்தால் பிராமணர்களை சகோதரர்கள் என்று சொல்ல மனம் வருமா? சூத்திரன் என்பவன் பிராமணனின் வைப்பாட்டி மகன்; பிராமணனுக்கு வேலை செய்யவே பிறந்தவன்; அவன் சொத்து வைத்திருக்க உரிமையில்லை; உரிமை மீறி வைத்திருந்தாலும் பிராமணர்கள் பலாத்காரமாய் பிடுங்கிக் கொள்ளலாம்; பிராமணரல்லாத இந்துக்கள் எல்லாம் சூத்திரர்கள்; சூத்திரஸ்திரீகள் பிராமணர்களுக்கு உரியவர்கள்; பிராமண ஸ்திரீகளை சூத்திரர்கள் மனதில் நினைத்தாலே அவனது உயிர்நிலையை அறுத்துவிட வேண்டும் என இம்மாதிரி இன்னும் பலவாறாக எழுதி வைத் திருப்பதுதான் இந்து மதத்திற்கு ஆதாரமாய் இருக்கிறது.”

பெரியார் கண்ட சுயமரியாதை இயக்கமானது வகுப்பு வாரி பிரதிநிதித்துவக் கோரிக்கை, தீண்டாமை ஒழிப்பு எனும் காரியார்த்தமான செயல்பாடுகளை மட்டுமல்லாது, மதசாஸ்திர விமர்சனம் என்று பிராமணியத்தை சித்தாந்த ரீதியாக அம்பலப்படுத்துவது என்பதையும் கொண்டிருந் தது. அதற்கான துவக்கம் அதன் ஆரம்ப காலத்திலேயே இப்படியாக எழுந்தது. பிறகு என்ன? வண்டி இதே தடத்திலேயே படுவேகமாகச் சென்றது. அவ்வப்போது சற்றே தயங்கி நின்றாலும், பாதை மாறவில்லை.

1927 ஜூலையில் “சமூகத் தொண்டும் அரசியல் தொண்டும்“ எனும் தலைப்பில் அவர் எழுதியது குடி மைச் சமுதாயத்தில் தீவிரமாக இயங்கவே அவர் ஆசைப் பட்டார் என்பதைப் புரிய வைக்கிறது. அரசியல் மீது அவருக்கு வெறுப்பு வந்திருந்தது. காங்கிரஸ், நீதிக்கட்சி இரண்டின் மீது ஓர் உள்ளார்ந்த வெறுப்பு உருவாகியிருந்தது. “அரசியல் தொண்டு என்பதாக ஒரு தொண்டே இல்லை என்பதும், அது அவ்வளவும் புரட்டு என்பதுமே நமது அபிப்பிராயம்... அதை விட்டுத் தொலைத்து சமூகத் தொண்டையே பிரமாதமாய்க் கருதி அதற்கென உழைத்தாலும், அடிக்கடி சறுக்கி அரசியல் சேற்றில் விழ வேண்டியதாக நேரிட்டு விடுகிறது. இது சகவாசதோஷமே அல்லாமல் வேறல்ல” - என எழுதியது இதைத் தெளிவாக உணர்த்துகிறது. அரசியல் தளமா, சமூகத் தளமா எனும் கேள்வி இது முதற்கொண்டு பெரியாரின் நெஞ்சில் விடாமல் எழுந்து வந்தது. பின்னர் ஒரு பெரும் பிளவிற்கு அது வழி வகுத்தது. அது பிந்தைய கால வரலாறு.

சுயமரியாதை இயக்கத்தின்

முதல் மாநாடு

இப்போதைக்கு அவர் இரண்டிலுமாகவே செயல் பட்டார். காங்கிரசை ஆதரிக்கிற பேச்சுக்கே அன்று இடமில்லை. ஆகவே நீதிக்கட்சியிடம் அனுதாபமாக இருந்தார். ஆனால் அதில் போய்ச் சேரவில்லை. மாறாக சுயமரியாதை இயக்கம் என்று தனித்த சமூக இயக்கத்தைத் துவக்கினார். 1926 நவம்பரில் இப்படிப் பேசினார் - “சென்ற வருஷம் காஞ்சிபுரத்தில் நடந்த தமிழ்நாடு அரசியல் மாநாட்டிலிருந்தே நமது சுயமரியாதையைக் காப்பாற்ற நமக்கு ஒரு தனி இயக்கம் வேண்டும் என்பதாகப் பலமுறை பேசியும் எழுதியம் வந்திருக்கிறேன்.” இப்படி ஒரு தனி இயக்கம் கண்டார். ஏற்கெனவே குறிப்பிட்டபடி அதன் ஆரம்ப கட்டத்திலேயே அந்த மூன்று தன்மை களையும் கொண்டு சுயமரியாதை இயக்கம் புறப்பட்டது. அதன் முதல் மாகாண மாநாடு செங்கற்பட்டில் 1929 பிப்ர வரியில் நடைபெற்றது.

இந்த மாநாட்டில் பல புதுமையான கோரிக்கைகள் எழுப்பப்பட்டன. அவற்றில் முக்கியமானவை இவை - “(1) இந்தியாவின் வருங்காலத்து அரசியல் திட்ட அமைப்பில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் ஒப்புக்கொள்ளப்பட வேண் டும் என்ற கொள்கையை வற்புறுத்துகிறது. (2) மக்கள் பிறவியினால் உயர்வு தாழ்வு உண்டென்ற கொள்கையை இம்மாநாடு அடியோடு மறுப்பதுடன் அதை ஆதரிக்கும் மதம், வேதம், சாஸ்திரம், புராணங்களை எல்லாம் பொது ஜனங்கள் பின்பற்றக்கூடாது என்றும், வருணாசிரமம் என்ற கொடுமையான கட்டுப்பாட்டையும், சமுதாய முறையில் காணப்படும் பிராமணர், ஷத்திரியர், வைசியர், சூத்திரர், பஞ்சமர் முதலிய ஆட்சேபகரமான பிரிவு களையும் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றும், மனித நாகரீகத்திற்கும் தேச முன்னேற்றத்திற்கும் தடையான தீண்டாமை என்பதை ஒழித்து, எல்லாப் பொது ரஸ் தாக்கள், குளங்கள், கிணறுகள், பாடசாலைகள், சத்திரங் கள், தண்ணீர்ப் பந்தல்கள் முதலிய பொது ஸ்தாபனங் களைத் தட்டுத் தடங்கலின்றி அனுபவிக்கச் சகல ஜனங் களுக்கும் சம உரிமை கொடுக்க வேண்டும் என்றும் தீர்மானிக்கிறது.’’

நாம் குறிப்பிட்ட அந்த மூன்று கூறுகளும் இந்த இரண்டு தீர்மானங்களில் அழுத்தமாக வெளிப்பட்டிருப் பதைக் காணலாம். வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை அகில இந்திய அளவில் கேட்டது மாநாடு. தீண்டாமையை ஒழிக்கச் சொன்னது. பிறவியினால் உயர்வு தாழ்வு கற்பிக்கும் வருணாசிரமத்தை ஆதரிக்கும் மதம், வேதம், சாஸ்திரம், புராணங்களை நிராகரிக்கச் சொன்னது துணி வோடு.

இந்த மாநாட்டிற்குப் பிறகுதான் “குடி அரசு” ஏட்டில் இது தொடர்பான எழுத்துக்கள் அதிகம் வெளிப்படத் துவங்கின. அந்த ஆண்டு ஆகஸ்டில் எழுதப்பட்ட ஒரு தலையங்கம் இப்படி முடிந்தது - “உலகத்தில் கடவுள் சம்பந்தமான குருட்டு நம்பிக்கைக்கு இருந்த மதிப்பு குறைந்து விட்டதால் கடவுள் உணர்ச்சியும் எப்படியும் மக்களுக்கு வரவரக் குறைந்து கொண்டுதான் போகும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், அவ்விதக் குருட்டு நம்பிக்கையும் மூடப் பிடிவாதமும் ஒழிந்த காலத்தில்தான் உலகத்தில் ஒழுக்கமும் சமத்துவமும் நிலைபெறும் என்பது மாத்திரம் உறுதி.” கடவுள் மறுப்பு நிலைக்கு - அதுவும் சமத்துவத்தை நிலைநாட்ட அந்த நம்பிக்கை இடையூறாக இருப்பதால் அதை மறுக்கும் நிலைக்கு - பெரியார் வந்து கொண்டிருந்தார்.

இதேபோல பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வு கற்பிக்கும் மதத்தை நிராகரிக்கும் இடத்திற்கும் அப் போதே வந்தார். இதே ஆண்டு மே மாதத்தில் பாலக் காட்டில் பேசும் போது முழங்கினார் - “பிறவியின் காரணமாக மனிதனுக்கு மனிதன் ஒரு நீதியும், ஆணுக்கு ஒரு நீதியும் பெண்ணுக்கு ஒரு நீதியும் உள்ள எந்த மதமானாலும்சரி - அது, கடவுளை நேரே கொண்டு வந்து காட்டி, மோட்சத்திற்கு அழைத்துச் செல்லச் செய்யும் மதமாயிருந்தாலும் சரி - அதை அழிக்க வேண்டியதும், அழிக்க முடியாவிட்டாலும் அந்த அழிக்கும் வேலையில் உயிரைவிட வேண்டியதும் உண்மையான மனிதனது கடமை என்றுதான் நான் தீர்மானித்துக் கொண்டிருக்கி றேன். இதில் சிறிதும் ராஜிக்கு இடமில்லை என்பதைக் கண்டிப்பாய்த் தெரிவித்துக் கொள்கிறேன்.” சாதிக்கொரு நீதியை மட்டுமல்ல பாலுக்கொரு நீதியைக் காக்கும் மதத்தை ஒழிப்பேன் எனச் சொன்னது கவனிக்கத் தக்கது. அப்படியென்றால் உலகின் எந்த மதமும் தப்பாது. எந்த மதமும் பெண்ணுக்குச் சமநீதி வழங்கியதில்லை. அத னால்தான் பெரியார் மத மறுப்பாளராக வளர்ந்தார்.

செங்கற்பட்டு மாநாடு முடிந்த கையோடு - அந்த ஆண்டு மார்ச் மாதத்தில் அவர் ராமாயணம் பற்றி எழு தினார். ஜைன ராமாயணம் பற்றியும், பவுத்த ராமாயணம் பற்றியும் எழுதினார். ராவணன் பக்கத்து நியாயத்தைச் சொல்லும் போக்கும், ராமன் தரப்பு அநீதியும் அடை யாளங் காட்டப்பட்டது. “தபசு செய்ததற்காகச் சம்புகன் வதைக்கப்பட்டது” பற்றிக் குறிப்பிட்டார். பள்ளிப் படிப்புக்கூட முடிக்காதவரின் அருமையான ஆராய்ச்சி மனப்பான்மை அப்போதே வெளிப்பட்டது. சமூக நீதிக்கான தாகம் அந்த ஆராய்ச்சி மனப்பான்மையை அவருக்குள் உற்பத்தி செய்திருந்தது. பெரியார் எழுதிய “இராமாயண ஆபாசம்” எனும் நூலும் இந்தக் காலத்தில் வெளியானது.

(தொடரும்)

விடுதலை நாளேடு 19 5 20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக