திங்கள், 25 மே, 2020

திரிக்காதே ‘தினமலரே!'


May 25, 2020 • Viduthalai •

‘தினமலர்' (23.5.2020) நாளேட்டில் ‘பட்டம்' என்ற பகுதியில் ஒரு பொய்யான தகவல் பதிவாகியுள்ளது. பாரதியாரின் பாடல்களை அன்றைய சென்னை மாகாணத்தை ஆட்சி செய்த நீதிக்கட்சி தடை செய்தது என்பதுதான் அந்தச் செய்தி.

திரிபுவாதம் செய்வதில் திரிநூல் ‘தினமலரை' ஜெயிக்க யார் இருக்கிறார்கள்?

அந்தக் காலகட்டத்திலும் இரட்டை ஆட்சி முறை செயல்பாட்டில் இருந்தது. சில துறைகள், சில உரிமைகள், அதிகாரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட அமைச்சரவைக்கு உண்டு.

முக்கிய பல துறைகள் வெள்ளக்கார கவர்னர் கவுன்சிலுக்கு உண்டு. அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தித்தான் பாரதியார் பாடல்களுக்குத் தடை விதிக்கப்பட்டது.

இதுகுறித்து அப்பொழுதே ‘குடிஅரசு' இதழில் (30.9.1928) தந்தை பெரியார் தலையங்கம் பகுதியில் தோலுரித்துக் காட்டினார்.

‘‘பழியோரிடம் பாவமோரிடம்'' என்பது அதன் தலைப் பாகும். சென்னை அரசு தடை செய்ததற்கு முன்பே பர்மா அரசு பாரதியார் பாடல்களைப் பறிமுதல் செய்தது என்று குறிப் பிட்டு விட்டு, அப்பொழுது ‘சுதேசமித்திரன்' ஏடு எழுதியிருந் ததையும் ‘குடிஅரசு' தலையங்கம் எடுத்துக்காட்டியிருந்தது.

‘‘பர்மா அரசு பறிமுதல் செய்த புத்தகத்தை சென்னை கவர்மெண்டாரும் பறிமுதல் செய்யவேண்டும் என்ற ஒரு அரசாங்க முறை இருந்து வருவதால், மேற்படி நூல்களை சென்னையில் பறிமுதல் செய்ததற்கு பர்மா கவர்மெண்டார்தான் காரணம் என்று ‘சுதேசமித்திரன்' பத்திரிகையும் கூட சொல்லி யிருக்கிறது! ஆகவே, இந்தப் பறிமுதலுக்கு ஜஸ்டிஸ் கட்சியார் எந்தவிதத்திலும் காரணமாயிருக்கவில்லை'' என்று ‘குடிஅரசு' இதழில் இன்றைக்கு 92 ஆண்டுகளுக்குமுன் தந்தை பெரி யாரால் மறுக்கப்பட்டது - ‘‘இதெல்லாம் யாருக்குத் தெரியப் போகிறது?'' என்ற மனக் கிறுக்கில், திமிரில் திராவிட இயக்கத் திற்கு எதிராக எதையும் கிறுக்கலாம் என்று மனப்பால் குடிக்கிறதா?  அந்த முகத்திரையைக் கிழிக்க என்றும் ‘‘கருஞ்சட்டைக் குத்தீட்டி'' உண்டு என்று எச்சரிக்கிறோம்.            - கருஞ்சட்டை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக